ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தேன்சுவை நீயடி- கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 1

இருள் சூழ்ந்த உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் பொருட்டு,
நிலவுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டு, செங்கதிரோன் மெல்ல மெல்ல மேல் எழும்பி தன் கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்..

இங்கோ, அறையில் தோட்டத்திற்கு செல்வதற்காக கிளம்பி, வெளியில் வந்தான் வெற்றி வேந்தன்..
அவனது அன்னை கற்பகமோ

"எய்யா.. வெற்றி.. நான் சொன்னதை பத்தி யோசிச்சு பார்த்தியாய்யா " என்று கேட்டதற்கு,

ஒரு பெருமூச்சுடன் " நான் யோசிச்சுட்டு சொல்றேன் ம்மா " என்றான்..

" நாள் வேற நெருங்கிருச்சு, சீக்கிரம் நல்ல முடிவா எடு சாமி.. அத்தை வேற போன் பண்ணி கண்டிப்பா வந்துரனும்னு சொல்லிருக்கு சாமி " என்றவர்க்கு,

" அத்தை மட்டும் வர சொன்னா போதுமா " எனக் கேக்க,

"நம்ம அத்தைக்காக அங்க போய் தான் ஆகணும்.. உங்க அப்பாரு இருந்தா, அவருதான்ய்யா இப்போ தாய்மாமனா முன்னாடி நிக்கணும். அவரு இல்லை, அதுக்கு பதில் நீதான சாமி மாமன் சீர் செய்யணும்.

உங்க மாமன் தான் சொந்த பந்தம் எதுவும் வேணாமும்னு உதறிட்டு பட்டணத்துல போய் தொழில் ஆரம்பிச்சுகிட்டாரு.

அந்த மனுசனுக்கு என்ன, நம்ம லட்சுமி தான் தவியாய் தவிக்குது. நம்மள எல்லாம் பாக்க முடியலனு.. மூத்தவ கல்யாணத்துக்கு தான் வரல. இதுக்காவது கண்டிப்பா வரணும். இதுக்கும் வரலைனா எனக்கு இருந்த ஒரு சொந்தமும் இல்லனு நெனச்சி நான் போய் சேருறேன்னு சொல்லி அழுகுறா..

மூத்தவ சாந்தவி கல்யாணத்தப்போ, உங்க அய்யன் போக கூடாதுனு விடாப்பிடியா சொல்லிட்டாரு. இப்பவாச்சும் நம்ம போகலேனா நல்லா இருக்காது சாமி. நாலு பேருக்கு முன்னாடி சபையில நம்ம நிக்கிறப்போ அவளுக்கும் மதிப்பா இருக்கும் " என்று நீண்டதொரு விளக்கத்தை குடுத்தார்..

அவ்ளோ நேரம் அதனை பொறுமையாக கேட்டவனுக்கு மனதில் கோவம் தான் ஏறிக்கொண்டே போனது..

"நான் இன்னைக்கு சாய்ந்திரத்துக்குள்ள என்னனு சொல்றேன்.. நீ ரொம்ப வெசனப் படாதம்மா..நான் தோட்டத்துக்கு போய்ட்டு வரேன் " என்று கிளம்பி விட்டான்..

கற்பகத்திற்கும் மகனின் கவலை புரியாமல் இல்லை... கை மீறி போன பிறகு நாம் என்ன செய்ய முடியும்.. நடப்பது நடக்கட்டும். எல்லாம் இறைவன் விட்ட வழி என்று அவன் மேல் பாரத்தை போட்டு விட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டார்..

வீட்டில் இருந்து கிளம்பி வந்த வெற்றிக்கோ மனதில் அவ்வளவு வலி. பின்னே, தன் மனதை ஆட்கொண்டவளின் திருமணத்திற்கு சென்று, அவளுக்கு தானே முன்ன நின்று அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால், யாரால் முடியும்...
தன் மனம் கவர்ந்தவள், அவள் எப்படி இருப்பாள் என்று தெரியாது..சிறு வயதில் இருந்து பூத்தக் காதல் அவளின் மீது. அப்படி இருக்கையில் தன் கண் முன்னே அவளை வேறு ஒருவனுக்கு விட்டுத் தர இயலுமா..

அவளுக்கு திருமணம் என்ற செய்தி வந்ததில் இருந்தே அவன் அவனாக இல்லை... ஏதோ போல தான் சுத்திக் கொண்டிருக்கின்றான்...அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும் அனைவரிடமும் கோவ பட்டுக்கொண்டு, சிடு சிடு என்று தான் இருந்தான்.. அவன் என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை...அம்மாவும் கூப்பிட்டு பல முறை சொல்லி விட்டார். போயாக வேண்டும் என்று.. இனிமேலும் முடியாது என்று மறுத்தால் மென்மேலும் வருத்தம் தான் தன் அம்மாவுக்கும் அத்தைக்கும்...

மனதை கல் ஆக்கிக் கொண்டு அனைத்தையும், தன் அம்மாவிற்காக, தன் அத்தைக்காக விட்டுத் தர தான் வேண்டும்.. காதலித்தவர்கள் எல்லாம் கை பிடித்தார்கள் என்று இருக்கிறதா என்ன.. அதில் நானும் ஒருவனாய் இருந்து கொள்ள வேண்டியது தான்.. என்று மனதின் உள்ளேயே நினைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான்..
வந்து சேர்ந்தவனை அவனது நண்பன் குமரன் எதிர்கொண்டான்..

"மச்சான்.. நீ சொன்ன மாதிரி, ஆர்டர் போட்ட பார்ட்டிக்கு எல்லாம் அனுப்பி வச்சாச்சு டா.. மிச்சம் இருக்கறதை தோப்பு வீட்டுல வச்சிருக்கேன்.. " எனக் கூற,

அவனின் சிந்தனை எல்லாம் இங்கே இருந்தால் தானே கவனிக்க.. அவன் சொன்னதை வெற்றி கவனிக்கவே இல்லை..

"டேய் மச்சான்," என்று அவனின் தோளைப் பிடித்து உலுக்கிய பிறகு தான் சுயத்திற்கு வந்தான்.

" ஹாங்.. சொல்லு " என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கேட்டான்..அவன் குரலும் சற்று காட்டமாகவே வந்தது..

வெற்றியின் முகமே காட்டிக் குடுத்து விட்டது. ஏதோ சரி இல்லை என்று. இல்லை என்றால் அவன் இப்படி இருக்கும் ரகம் இல்லையே..

" உன் முகமே சரி இல்லை.. ஏதாவது பிரச்சனையா.. " என நண்பனிடம் கேக்க,

" அம்மா, மதி கல்யாணத்துக்கு போகணும்னு விருப்ப படுறாங்க... தாய்மாமன் முறைய இவளுக்காவது செய்யணும்னு நெனைக்கிறாங்க..." என்றான் வெற்றி.

" ஓஹோ.. அதான்.. நீ மூஞ்ச கடு கடுனு வச்சிட்டு திரியிறியா.. " என்ற குமரனின் நக்கலுக்கு,
வெற்றியிடம் இருந்து முறைப்பு மட்டுமே வந்தது..

" இங்க பாரு.. வெற்றி.. அந்த புள்ளய சின்ன வயசுல இருந்து நெனச்சிட்டு இருக்க.. ஆனால் அப்படி நெனச்சி என்ன பிரயோஜனம்.. ஏன் டா நெனச்சா மட்டும் போதுமா... அவளை கல்யாணம் பண்ண, நீ என்ன ஸ்டெப் எடுத்த... அட்லீஸ்ட் உங்க அத்தைகிட்டயாவது உன் விருப்பத்தை சொல்லி இருக்கலாம் " என குமரன் ஆதங்கத்துடன் கேட்டான்.

அவனுக்கும் தான் தெரியுமே நண்பனின் காதல்.

" எங்களை கண்டாலே அந்த ஆளு ஆகாதுன்னு இருக்கிறாரு .. அவருகிட்ட போய், உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கனு கேட்டா, அப்படியே தூக்கி குடுத்துட்டு தான் மறுவேலை பாப்பாரு... அது மட்டும் இல்லை.. அத்தைக்கு நல்லாவே தெரியும் நான் மதி மேலே விருப்பபடுறது.. அம்மாவுக்கும் ஆசை மதிய எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் னு.. அத்தை பேசியே பார்த்துட்டாங்க, அந்த ஆளுகிட்ட, தாம் தூம் னு குதிக்கிறாராம். நம்ம எல்லாம் கிராமத்துல வாழ்ந்தா, ரொம்ப இளக்காரம் அந்த ஆளுக்கு.. மானம், மரியாதைய விட்டுட்டு அந்த ஆளு காலுல போய் விழுக முடியாது.. நடக்குறது நடக்கட்டும்.. " என்று கோவத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தான்..

குமரனுக்கும் ஏதோ போல் ஆகி விட்டது..

ஆம்!!! வெண்மதியின் தந்தை மூர்த்திக்கும் வெற்றியின் தந்தை கந்தவேலுக்கும் இன்று நேற்றல்ல பிரச்சனை. பல வருடமாக தொடரும் பிரச்சனை இது..

கந்தவேல் மற்றும் மூர்த்தி இருவரும் ஒரே ஊர்தான். நல்ல நண்பர்கள் இல்லை என்றாலும் ஒரே ஊர் என்பதால் ஓரளவுக்கு தெரியும்.. திரிச்சி பக்கத்தில் மணப்பாறை தான் சொந்த ஊர்..கந்தவேலுவிற்கு சொந்தமாக நிலம் இருந்தது. அதனால் விவசாயம் பார்த்து வந்தார் .

மூர்த்தியோ, சொந்த நிலம் இருந்தாலும் விவசாயம் செய்ய எல்லாம் விருப்பம் இல்லை. அவன் பெற்றோர் இருக்கும் வரை பார்த்துக்கொள்ளட்டும் என்ற முடிவில் இருந்தான். அதனால் அவன் ஆயில் மில் ஒன்றில் சூப்பர்வைசராக இருந்தான். போதுமான அளவுக்கு வருமானமும் வந்தது...

கந்தவேலுவின் தங்கை லட்சுமியை மூர்த்திக்கு தான் பேசி முடித்தனர்... நல்லவன், திறமைசாலி...லட்சுமியும் நமது அருகிலயே இருப்பாள். அவளை காண்பதற்கு தூர தேசம் பயணிக்க தேவை இல்லை என்று எண்ணி மணம் முடித்து வைத்தனர்.

பின்னர் கந்தவேலுக்கு பக்கத்து ஊரில் இருந்து கற்பகம் என பெண்ணை பார்த்து மணம் முடித்து வைத்தனர். கந்தவேல்- கற்பகம் தம்பதியினற்கு வெற்றியும், மூர்த்தி - லட்சுமி தம்பதியினற்கு சாந்தவியும் அடுத்தடுத்த மாதங்களில் பிறந்தனர். அடுத்த நான்கு வருடத்தில் சாந்தவிக்கு தங்கை வெண்மதி பிறந்தாள்.

சிறு வயதில் இருந்து வெற்றியும் சாந்தவியும் ஒன்று போல வளர்ந்து வந்ததில் பெரிதாக இருவருக்கும் ஆர்வம் இல்லை. ஆனால் வெற்றிக்கு தன்னை விட சிறு பிள்ளையை கண்டதும் அவனையும் அறியாமல் ஒரு ஆர்வம் ஒட்டிக்கொண்டது. அப்பொழுது இருந்து மதி என்றால் அவனுக்கு கொள்ளை பிரியும். மதியும் வளர வளர, தன் குடும்பத்துடன் அதிக நேரம் இருப்பதை விட, அவளது தாய்மாமன் வீட்டில் தான் இருப்பாள். வெற்றியின் கையை பிடித்துக்கொண்டு, அவன் கூடத் தான் சுற்றி வருவாள்.. அதுவரைக்கும் மாப்பிளை, மச்சான் என்று இருவருக்கும் சுமுகமாகதான் சென்றது..

மூர்த்தியின் நண்பன் சென்னையில் இருந்து வரும் வரை. அவன் நடராஜன்.

அவன் மூர்த்தியிடம் " நான் சென்னைல ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. எனக்கு சரியான பார்ட்னர்'ஐ தேடிட்டு இருக்கேன். இப்போ என்கிட்ட கொஞ்ச அமௌன்ட் இருக்கு. அதே அளவுக்கு நீயும் ரெடி பண்ணிட்டனா , நம்ம ரெண்டு பேரும் சேந்து ஆரம்பிச்சிரலாம். ஒரு வருஷத்துல நம்ம போட்ட காசை மீட்டுரலாம். அதுக்கு அப்புறம் நமக்கு வர்றது எல்லாமே லாபம் தான். இன்னும் எத்தனை காலம் தான் இந்த கிராமத்துல குப்பை கொட்ட போற. யோசிச்சு நல்ல முடிவா சொல்லு " என்றான்.

மூர்த்தியும் யோசனையுடனே இருந்தான். அந்த சமயம் வயது மூப்பு காரணமாக லட்சுமியின் பெற்றோர் அடுத்தடுத்து தவறி விட, அடுத்து சிறிது நாளுக்கு பின்னர் மீண்டும் நடராஜன் தொடர்பு கொண்டு கேக்க, ஒரு முடிவுடன் சரி என்று சொல்லி விட்டான்.

தன்னுடைய நிலத்தை விற்றால் இவ்வளவு பணம் வராது, மேலும் பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே அந்த யோசனை தோன்றியது. கந்தவேலுவிடம், லட்சுமிக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று சண்டையிட்டு பெற்றுகொண்டு சென்னைக்கு சென்று விட்டான் . அதற்கு அப்புறம் எல்லாமே தடை பட்டு போனது.

மூர்த்தியும் இங்கு வரவே இல்லை.
சாந்தவியின் விஷேசத்திற்கு கூட மூர்த்தி போனில் மட்டுமே அழைத்து விஷயத்தைக் கூறினார் . நேரில் வந்து அழைக்கவில்லை என்ற கோவத்தில் இவரும் செல்லவில்லை. யாரையும் அனுமதிக்கவில்லை.

அடுத்து எந்த நிகழ்ச்சிக்கும் மூர்த்தி அழைக்கவில்லை. லட்சுமி மட்டுமே சொல்லுவார். ஆனால் கந்தவேல்,தங்கைக்காக போய் நின்றால், நம்மை மதிக்க கூட மாட்டான் என்று செல்லாமல் விட்டு விடுவார். கந்தவேலு காலமாகி ஒரு வருடம் ஆகி விட்டது. அதற்கும் தங்கை என்ற உறவில் லட்சுமி மட்டுமே வந்தார். இப்பொழுது மகளின் திருமணத்திற்கு அழைப்பு வந்து இருக்கிறது...

" சரி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க " எனக் குமரன் கேட்டதற்கு,

" போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளை மறுநாள் கல்யாணம். நாளைக்கு சாய்ந்திரம் கெளம்பனும்.. நான் போய்ட்டு வர வரைக்கும் நீ பார்த்துக்கோ.. " என்றான் வெற்றி.

" சரி டா. நான் பார்த்துகிறேன். ஏதாவது சந்தேகம்னா உனக்கு போன் போடுறேன்.. " என்றான் குமரன்.

மேலும் சில விவரங்களை பற்றி இருவரும் பேசிக்கொண்டனர்... மதியம் சாப்பாட்டு நேரமும் தாண்டி விட்டது.

" டேய்!! நீ வீட்டுக்கு கெளம்பு. ரொம்ப நேரம் ஆச்சு. உனக்கு வேணும்னா சோகத்துல சோறு தண்ணி உள்ள போகாம இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. சோறு தான் முக்கியம்.. ஏதாவது பேசணும்னா போன் போடு.. சரி மச்சான் நான் கிளம்புறேன் " என்றதோடு நிற்காமல் ஓடியே விட்டான்..

ஓடிய அவனைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


தேன் இனிக்கும்....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2

சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான அந்த நகரின் மத்தியில் அமைந்து இருந்தது அந்த மண்டபம்.

RK திருமண மண்டபம். முக்கிய புள்ளிகளின் வீட்டு திருமணங்கள் நடைபெறும் மண்டபங்களில் இதுவும் ஒன்று.

அங்குதான் தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..

மூர்த்தி, அவரது நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனி நன்றாக வளர்ச்சி அடைந்து, இவர்களும் சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க நபர்களாக வளர்ந்து இருந்தனர்.

நண்பர்களாக இருந்தவர்கள் இன்று சம்பந்திகளாக மாற இருக்கின்றனர்.

ஆம்!!! மூர்த்தியின் மகன் ரவிக்கும் வெண்மதிக்கும் தான் இந்த திருமண ஏற்பாடு..

வெண்மதிக்கும், ரவிக்கும் காதல் எல்லாம் இல்லை. நடராஜனும், மூர்த்தியும் எடுத்த முடிவுதான். மூர்த்தி அதை மதியிடம் கூற...அவளோ, சிறு வயதில் இருந்து பார்த்தவன், தன்னை ஓரளவு புரிந்து கொண்டவன். அதனால் மறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதோ இன்று திருமணம் வரை வந்துவிட்டது..

அன்று, குமரனிடம் பேசிவிட்டு, வீட்டுக்குச் சென்ற வெற்றி, தன் தாயிடம் விஷயத்தை கூற, அவரும் சரி என்று, மறுநாள் மாலை திருச்சிக்கு வந்து அங்கு இருந்து ட்ரெயினில் கிளம்பி, சென்னையில் வந்து இறங்கியவுடன், அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, குளித்து முடித்து கிளம்பி, மண்டபத்தின் வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினர்..

மண்டபத்தை பார்த்தே, வியப்பின் உச்சிக்கு சென்று விட்டார் கற்பகம்.

" ஏய், வெற்றி.. பார்த்தியா.. மண்டபமே இவ்ளோ பெருசா இருக்கு. அப்போ கல்யாணம் நல்லா பெரிசா தான் பண்றாங்க போல.. அவ்ளோ பெரிய ஆளாவா இங்க இருக்காங்க " என்றார்.

" இருப்பாங்களா இருக்கும். நமக்கு என்ன.. நம்ம வந்த வேலைய பார்த்துட்டு கெளம்பிருவோம் " என்றான்

வெளியில் பெரிய சைஸ் ஃப்ளக்ஸ் போர்டு'ல், ரவி weds வெண்மதி என்று இருந்தது. அவர்கள் போட்டோவுடன்..

அதை பார்க்க பார்க்க, அவனுக்கு நெஞ்செல்லாம் வலித்தது.

சிறுவயதில் பார்த்த பிறகு இப்பொழுது தான் பார்க்கிறான். ரவி அவளது தோளில் கையை போட்டு அணைத்தபடி இருந்தது அந்த போஸ்டரில்...

அதை பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் தாயை உள்ளே அழைத்து செல்லலாம் என்று எண்ணி திரும்பிய வேளையில், லட்சுமி வேகமாக உள்ளிருந்து ஓடி வந்து கற்பகத்தை அணைத்துக் கொண்டார்.

" அண்ணி.... வாங்க அண்ணி.. வெற்றி... வாப்பா.. நீங்க வந்தது எவ்ளோ சந்தோசம் தெரியுமா. இங்க எத்தனையோ பேரு வந்தாலும், எனக்காக நீங்க இருக்குறது தான் எனக்கு பெருமை.. வாங்க வாங்க.. உள்ள போலாம் " என்று மகிழ்ச்சி பொங்க அவர்களை அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்றவர்கள் முன்னால், மூர்த்தி யாரிடமோ பேசிக்கோண்டிருப்பது தெரிய, அவரிடம் சென்று, மெல்ல அவருக்கு மட்டும் கேக்கும்படி " ஏங்க, எங்க அண்ணியும் வெற்றியும் ஊருல இருந்து வந்து இருக்காங்க " எனக் கூற,

மூர்த்தியோ திரும்பி பார்த்து, "வாங்க"
என்று மட்டும் முடித்துக் கொண்டார்.

வெற்றிக்கும், அவனது தாயிற்க்கும் தான் தெரியுமே, அவரது குணம். அதனால் ஒன்றும் நினைக்காமல் விட்டு விட்டனர்.

லட்சுமி அவர்களை, ஓரிடத்தில் அமரச்சொல்ல, அவர்களும் அங்கே அமர்ந்தனர்.. " ஹாம். வெற்றி இங்க இருங்க பா. மூகூர்த்தம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு. நான் வர்றவங்களை போய் பாக்குறேன். " என்று லட்சுமி சொல்லி விட்டு நகர்ந்தார்..

வெற்றியும் சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன், " ம்மா.. நான் அப்படியே சுத்தி பார்த்துட்டு வரேன் " என்று தாயிடம் கூறி விட்டு, மண்டபத்தின் பின் பக்கமாக சென்றான்.

பெரிய மண்டபமாக தான் இருந்தது.. ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்து வந்தவன், ஓரிடத்தில் நிற்க.. இருவர் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் காதை கூர்மையாக்கி அவர்கள் பேசுவதை உள்வாங்கி கொண்டவன், அப்படியே கிளம்பியும் விட்டான்.

பின்னர், தாயின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் ஐயர் "பொண்ணையும் மாப்பிளையும் அழைச்சிட்டு வாங்கோ " என்றார்.

மாப்பிள்ளை வந்து அமர, அடுத்ததாக மணப்பெண்ணும் வந்து அமர்ந்தாள்.

அடர் சிவப்பு நிற புடவையில் தங்க ஜரிகையுடன், மணபெண்ணுக்கே உரிய அலங்காரத்தில் தேவலோக மங்கை போல இருக்க, இங்கே ஒருத்தனுடைய முகம் கோவத்தில் ஜொலிஜொலித்தது.. கோவத்தை அடக்க பெரும்பாடுபட்டவனோ , கை முஷ்டியை இறுக்கிக் கொண்டான்...

இருவரும் ஐயர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே வர, பின்னர் கன்னிகாதானதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கன்னிகாதானம் முடிந்ததும், ஐயர் மாங்கல்யத்தை எடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வர சொல்ல, மதியின் அக்கா சாந்தவி தான் எடுத்துச் சென்றாள்.

வெற்றியோ அனைத்தையும் இறுகிய முகத்துடனேயே பார்த்துக் கொண்டு இருந்தான்.

சாந்தவி திருமணம் முடிந்து தன் கணவன் சம்பத் உடன் வெளிநாட்டில் வசிக்கிறாள்.அவளுக்கு இரண்டு வயதில் ஒரு பையன் மானவ்.

முதல் வரிசையில், ஒவ்வொருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டே வந்தவள், அவளது தாய்மாமன் குடும்பத்தினர் வந்து இருப்பது கண்டு அவளுக்கு வியப்பு தான்.

அவர்கள் ஒன்றும் எதிரி அல்லவே இவளுக்கு. சென்னை வந்த பிறகு, அவரது தந்தை எதற்கும் அனுப்பியது இல்லை. ஏன் அவளது திருமணத்திற்கு கூட அழைக்கவில்லையே.. தாய்மாமன் இறந்த விஷயம் கூட கேள்விபட்டாள் தான். ஆனாலும் என்ன செய்ய இயலும். இதுவரை பேசவில்லை. இதற்கு மட்டும் எப்படி என்று அவளும் விட்டுவிட்டாள்.

இப்பொழுது இவர்களை கண்டதும், சாந்தவி " வாங்க " என்று இருவரையும் பொதுவாக அழைத்தாளே தவிர உறவு முறை சொல்லி அழைக்க நா வரவில்லை. கிட்டதட்ட இருபது வருடங்கள் ஓடி விட்டன. அதனால் சட்டென்று வரவில்லை உறவுமுறை சொல்லி அழைக்க..

கற்பகமோ " கண்ணு.. எப்படிமா இருக்க.. சின்ன புள்ளையில பார்த்தது. புருஷன் புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா " என்று அன்புடன் நலம் விசாரிக்க,

அவளோ " ஹாங். நல்லா இருக்காங்க. " என்றதுடன் முடித்துக் கொண்டாள்.

வெற்றியோ எதுவும் பேசவில்லை. இறுகிய முகத்துடன் அழுத்தமான பார்வையை மட்டும் செலுத்தினான்..

அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கியவள், மாங்கல்யம் இருந்த தட்டை ஐயரிடம் நீட்ட, அவரும் பெற்றுக் கொண்டு,

கெட்டிமேளம்.. கெட்டிமேளம்.. என்ற ஐயர், மாங்கல்யத்தை மாப்பிள்ளையிடம் குடுக்க, அவனும் பெற்றுக் கொண்டு, மதியின் கழுத்தில் கட்டுவதற்கு கொண்டு செல்ல, " இந்த கல்யாணத்தை நிறுத்துங்க " என்று ஒரு பெண்ணின் குரல்.

ஒட்டுமொத்த மண்டபத்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்க்க, அங்கு ஒரு பெண் நின்று இருந்தாள்.

அந்த பெண்ணை பார்த்ததும் ரவிக்கு பதற்றம் வந்துவிட்டது. அதை முகத்தில் இருந்து மறைக்க மிகவும் பிரயத்தனப் பட்டான்..

" யாருமா நீ.. இங்க வந்து இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிட்டு இருக்க.. ஒழுங்கு மரியாதையா இடத்தை காலி பண்ணு " என்று மூர்த்தி வந்து சத்தம் போட,

அந்த பெண்ணோ.. " நான் போக முடியாது. நானும் அவரும் ரெண்டு வருஷமா காதலிச்சோம். இப்போ என்னை ஏமாத்திட்டு அவரு இந்த பொண்ண கல்யாணம் பண்ண பாக்குறாரு " என்று சொல்ல,

நடராஜனோ தன் மகனின் முகத்தை தான் பார்த்தார். அவருக்கு தான் தெரியுமே மகனின் லட்சணம். இப்படி மண்டபம் வரைக்கும் வந்து சபை ஏறும் என்று எதிர்பாக்கவில்லை.

தாய் இல்லாத பிள்ளை என்று செல்லம் குடுத்து வளர்க்க, மகன் எது செய்தாலும் கண்டிக்காமல் வளர்த்ததன் பயன் இன்று வந்து நிற்கிறது..

அங்கு இருந்தவர்களோ " நீ பாட்டுக்கு வந்து பழி போடுற.. நாங்க எல்லாம் எவ்ளோ பெரிய இடம் தெரியுமா.. நீ காதலிச்சன்னு சொன்னதுக்கு என்ன ஆதாரம் " என்று எல்லாரும் கேள்வி எழுப்ப,

அவள் கையில் இருந்த போனில் ஒரு வீடியோவை எடுத்து ஓட விட்டாள். அதில்,

ரவி " இங்க பாரு, கவிதா.. நான் உன்ன காதலிச்சேன் தான். இல்லேனு சொல்லல. இப்போ நானே எதிர்பாக்காத ஒன்னு. இந்த வாய்ப்பை எப்படி விட முடியும். அழகுக்கு அழகு.. பணத்துக்கு பணம்.. உன்ன காதலிச்ச பாவத்துக்கு உயிரோட விடுறேன். இதுக்கு மேலே பிரச்சனை பண்ணனும்னு நெனச்சா உயிரோட இருக்க முடியாது " என்று மிரட்டி விட்டு சென்று விட்டான்.

மேடை ஏறுவதற்கு முன், மண்டபதின் பின் பக்கம் அவளுடன் தான் பேசிக்கொண்டு இருந்தான். அதை தான் வெற்றி பார்த்தது.

வெண்மதி திரும்பி ரவியை பார்க்க, அவனோ அவளை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டான்.

வெண்மதி கோவமாக, மாலையை கழட்டி விட்டு, வேகமாக கீழே இறங்கி வந்தவள் " அப்பா.. இந்த கல்யாணத்தை நிறுத்துங்க. இன்னும் என்ன வேடிக்கை பார்த்துகிட்டு " என்ற வெண்மதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார். இதில் தன் மகளின் வாழ்க்கையும் சேர்ந்து தானே உள்ளது. இப்படி மணமேடை வரைக்கும் சென்று திருமணம் நின்று விட்டால் , ஊரார் பேசும் படி ஆகி விடுமே என்ற கவலை தான் அவருக்கு..

இதில் வெற்றியும் அவனது தாயும் வெறும் வேடிக்கையாளர் மட்டுமே..
ஆனால் வெற்றியின் முகத்தில் எவரும் அறியாத ஒருவித மர்மசிரிப்பு..


தேன் இனிக்கும்....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3

அங்கு நடந்த நிகழ்வுகளை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் கற்பகமும் வெற்றியும்..


வெற்றியின் முகத்தில் எவரும் அறியாத வண்ணம் மர்மச் சிரிப்பு..

அவனுடைய நினைவு, சற்று நேரத்திற்கு முன்னாள் சென்றது.

மண்டபத்தின் பின் பக்கமாக சென்ற வெற்றிக்கு யாரோ இருவர் பேசுவது கண்ணில் பட்டது.

அந்த ஆண் நபரை யோசனையுடன் பார்த்தவன், "எங்கயோ பார்த்தது போல இருக்கே இவனை " என்று யோசித்தவன் சட்டென்று மண்டபதின் வாசலில் வைக்கப்பட்ட பேணரில் பார்த்த முகம் நியாபகம் வர, " இவன் தான மாப்பிள்ளை.. இவன் எதுக்கு இங்க யாருக்கும் தெரியாம வேற ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்கான். இதுல ஏதோ இருக்கு " என்று நினைத்தவன்,

அவர்கள் பேசுவதை தன்னுடைய போனில் வீடியோவாக பதிவு செய்தான்.

ரவி கவிதாவை மிரட்டி விட்டு சென்றவுடன், அந்த பெண்ணும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே அங்கிருந்து செல்ல முற்படும் முன், வெற்றி வேகமாக அவளின் அருகில் சென்று நடந்ததை விசாரிக்க, அவளோ தடுமாற்றதுடன் தயங்கிக் கொண்டு இருந்தாள்.

"பயப்படாத மா.. உன் அண்ணன் மாதிரி நெனச்சிக்கோ. நடந்தது என்னனு முழுசா சொல்லு. உனக்கு நல்ல தீர்வா சொல்றேன் " என்று தைரியம் கொடுத்த பிறகு தான் முழு விஷயத்தையும் கூறினாள்.

"அண்ணா, நானும் அவரும் ரெண்டு வருஷமா காதலிச்சோம் . என்கிட்ட நல்லாத்தான் பழகுனாரு. இப்போ கொஞ்ச நாளாவே என்கிட்ட சரியா பேசுறது இல்லை. எதுக்குனு கேட்டா கூட, வேலை விஷயமா வெளியூர் வந்து இருக்கேன்.. நான் ஃப்ரியா இருக்கும் போது கூப்பிடுறேனு சொன்னாரு. ஆனால் அவரு கூப்பிடவே இல்லை. நேத்து நைட் தான் எனக்கு இவருக்கு கல்யாணம்னு தெரியும்.

அதான் அவசர அவசரமா அவரை பாக்க ஓடி வந்தேன். அவருகிட்ட கேட்டா.. என்னோட ஏழ்மை சூழ்நிலைய காரணம் காட்டி அவரு என்னைய மிரட்டிட்டு போறாரு..

காதல் மட்டும் இருந்தா கூட பரவா இல்லை.. ஆனால் அடுத்த கட்டத்துக்கு தாண்டி போய்ட்டோம். அதான் அவருகிட்ட வந்து காலுல விழுந்து கெஞ்சுனா கூட நாய் போல துரத்தி விடுறாரு.." என்று அழுகையுடன் சொல்லி முடிக்க..

வெற்றிக்கோ அவனை இழுத்து அடி வெளுத்து விட வேண்டும் என்று தான் தோன்றியது.

இது கோவப்பட வேண்டிய நேரம் இல்லை.. நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய தருணம் என்று உணர்ந்து,

"இங்கப்பாரு மா.. நான் உனக்கு உதவி செய்றேன். இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசுனதை நான் வீடியோவை எடுத்து வச்சிருக்கேன். உன் நம்பருக்கு அத நான் அனுப்பிருறேன்..நீ என்ன பண்ணு.. கரெக்ட்டா தாலி கட்டற டைம்க்கு உள்ள வந்து, இந்த கல்யாணத்தை நீ நிறுத்து. தைரியமா நீ வந்து பேசணும். பயப்படக் கூடாது. என்ன ஆதாரம் இருக்குனு எல்லாரும் கேப்பாங்க. அப்போ இந்த வீடியோவை நீ காட்டு. ஒருத்தனும் அதுக்கு அப்புறம் வாயை திறக்க மாட்டான். அடுத்து நான் பார்த்துகிறேன்." என்று அந்த பெண்ணிடம் தைரியம் கூறி விட்டு வந்தே தாயின் அருகில் அமர்ந்தான்.

அதை நினைத்து தான், அவன் உதட்டில் அந்த சிரிப்பு.

தனக்கு அவள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் ஒரு கேடுகெட்டவனுக்கு கிடைக்க கூடாது. அதிலும் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் அடங்கி உள்ளதால், அந்த பெண்ணிற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியே இந்த கல்யாணத்தை அவன் நிறுத்தியது.

வெற்றி " இவ்ளோ தூரம் அந்த பொண்ணு, ஆதராத்தோட நிரூபிச்சு இருக்கா... இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாது. இங்க கல்யாணம் நடக்கும். ஆனால் பொண்ணு இந்த பொண்ணு தான் "என்று கவிதவை அனைவரின் முன்னே கூறியவன்,

கவிதாவை பார்த்து போ என்று தலை அசைத்தான்.

அவளும் மேடையேறி வெண்மதி கழட்டிய மாலையை அவள் கழுத்தில் போட்டுக் கொண்டு ரவியின் அருகில் அமர்ந்தாள்.

வெண்மதியோ யாரடா இவன் என்ற ரீதியில் தான் வெற்றியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதி பார்ப்பது தெரிந்தாலும் வெற்றி கண்டு கொள்ளவில்லை அவளை.

நடராஜனுக்கோ இப்படி இக்கட்டான சூழ்நிலை வந்து விட்டதே என்று பெரும் சங்கடம். மகனின் செயலால் அவருக்கு தான் அவமானமாகி போனது. இவனை இப்படி வளர்த்ததற்கு தானும் அனுபவிக்க வேண்டும் என்று நடப்பதை ஏற்றுக் கொண்டார்.

ரவியோ " அவ்ளோ தூரம் சொல்லியும், எல்லார் முன்னாடியும் என்னை அவமான படுத்திட்டல.. இனி உனக்கு நரகம்னா என்னனு காட்டுறேன்டி " என்று மனதில் கவியின் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டே, அவளது கழுத்தில் மூன்று முடிச்சை போட்டான்.

பின்னர் ஐயர் அக்னியை சுற்றி வர சொல்ல, ரவியோ " அது ஒன்னு தான் குறைச்சல் " என்று கோபமுடன் மாலையை கழட்டி வீசி எரிந்து விட்டு, அவனது அறைக்கு சென்று விட்டான்.

கவிதா மட்டும் வெற்றியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள். அவனும் அவள் தலையில் கை வைத்து, "நல்லா இருமா.. உன்னோட வாழ்க்கை கண்டிப்பா சந்தோசமா உனக்கு அமையும் " என வாழ்த்த,

அவளும் கையெடுத்து கும்பிட்டு அவனுக்கு நன்றியை தெரிவித்தாள்..

இதை அனைத்தையும் மூர்த்தியின் குடும்பம் மேடையின் கீழே நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தது. என்ன செய்திட முடியும் இனி. சரி அந்த பெண்ணிற்கான வாழ்க்கை அது. அவள் வாழ்க்கையை அபகரித்து என் மகள் வாழ்வதா.. அப்படி வாழ்ந்தால் அவளது வாழ்வும் செழிக்குமா..

கண்டிப்பாக இருக்காது என்று உணர்ந்து அந்த பெண்ணிற்கு மனமார வாழ்த்தினர்..

இப்பொழுது அனைவரும், வெண்மைதியை பாவமாக பார்த்து கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டனர்.

"மேடை வரைக்கும் வந்து கல்யாணம் இப்படி நின்னு போச்சுன்னா, சாமானியமா கல்யாணம் நடக்காது அவ்ளோ சீக்கிரம்..."

" இனி மாப்பிள்ளை அமைஞ்சாலும் நல்ல மாப்பிள்ளையா கெடப்பான்.. இந்த பொண்ணுக்கு "

" இந்த பொண்ணோட ராசி.. என்ன ராசியோ.. இப்படி தட புடலா ஏற்பாடு பண்ணி கல்யாணம் நின்னு போயிருச்சு "

" இனிமே புதுசா வர்றவன்.. ஏன் எதுக்குனு சந்தேக பட்டுகிட்டே இருப்பான் "

என்று மாற்றி மாற்றி மாப்பிள்ளை வீட்டினர் பேச, இது எல்லாம் மூர்த்தி, லட்சுமி, சாந்தவி மற்றும் அவனது கணவன், கற்பகம், வெண்மதி மற்றும் வெற்றியின் காதுக்களுக்கு விழத்தான் செய்தது.

மதியோ தொய்ந்து போய், அங்கு இருந்த சேர்'ல் அமர்ந்து விட்டாள்.

அவளாள் எதிர்த்து பேச முடியும் தான். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அவளுக்கு வாதாட விருப்பம் இல்லை..

அவர்கள் பேசுவதை கேட்டு கோபமுற்ற வெற்றி, அவர்களிடம் வாயை திறக்கும் முன்னர், கற்பகம்

" நீங்க எல்லாம் கல்யாணத்துக்கு தானே வந்தீங்க. அதான் கல்யாணம் முடிஞ்சிருச்சுல.. வந்தோமா.. சாப்பிட்டோமா னு கிளம்புங்க.. கொஞ்ச கூட மனசாட்சி இல்லாம இந்த நேரத்துல இப்படி பேசிட்டு இருக்கீங்க " என்று சத்தம் போட, மாப்பிள்ளை வீட்டு சார்பில் வந்து இருந்த மக்கள் கிளம்பிச் சென்றனர்.

பெண்ணின் வீட்டு சார்பில் வந்து இருந்தவர்கள் செல்வோமா.. வேண்டாமா என்று ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி சல சலத்துக் கொண்டிருந்தனர்..

மூர்த்திக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை... இப்படி ஒரு சூழ்நிலையில் தள்ளி விட்டானே என்று ரவியின் மேல் தான் கோபமாக வந்தது..

கற்பகமோ மதியிடன் வந்து " நீ கவலைப்படாத கண்ணு. இவனை விட வேற நல்ல மாப்பிள்ளையா உனக்கு கெடப்பான் " என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.

அதை எல்லாம் அவள் கேக்கும் மனநிலையில் இல்லை. அமைதியாக மட்டுமே இருந்தாள்.

வெற்றி, தன் அன்னையிடம் வந்து " அம்மா, நம்ம கிளம்பலாம் " என்று சொல்ல.. அவருக்கும் சரி என்றே பட்டது.

லட்சுமியிடம் வந்து " லட்சுமி.. நாங்க கெளம்புறோம். புள்ளைக்கு ஆறுதலா இருங்க." என்றவர்,

மூர்த்தியிடம் சென்று எப்படி கூறுவது என்ற யோசனையுடன் இருந்தவர், சொல்லித்தானே ஆக வேண்டும் என்று ஒரு பெருமூச்சுடன் அவரது அருகில் சென்று " நாங்க கெளம்புறோம் ண்ணே " என்று மட்டும் சொல்லி, வெற்றியுடன் புறப்பட்டார்.

வெற்றி தன் அத்தையிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

லட்சுமிக்கு, இதை விட்டாள் இனி வேறு ஒரு சந்தர்ப்பம் அமையாது என்று சட்டென்று தோன்றிய யோசனையுடன் , வெற்றியை அழைத்தவர்..

"வெற்றி.. நில்லுப்பா "

யோசனையுடன் நின்ற வெற்றி திரும்பிப் பாக்க.. அவனிடம் சென்று "என் பொண்ண, உன் பொண்டாட்டியா ஏத்துக்கோ " என்று சொல்ல.. அவனுக்கோ அதிர்ச்சி.

அவனுக்கு மட்டும் அல்ல. வெண்மதிக்கும் அதிர்ச்சி தான். இதை இருவருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை..

சிறிது நேரத்திற்கு பிறகு வெற்றி தன் மனம் கவர்ந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்..

தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4

வெற்றியை லட்சுமி அழைத்ததும் என்னவென்று திரும்பி பார்க்க, " என் பொண்ண, உன் பொண்டாட்டியா ஏத்துக்கோ " என்று சொல்லவும்,

வெற்றி மற்றும் மதி இருவருக்குமே பலத்த அதிர்ச்சி தான்.

இதை இருவருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை..

மூர்த்தி யோசனையுடன் மனைவியை பார்க்க, அவரோ கணவனின் பார்வையை தைரியத்துடன் எதிர்கொண்டர்.

வெற்றியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல, பின்னாலேயே கற்பகமும் சென்றார். அவருக்கும் புரியவில்லை.

லட்சுமி வெற்றியை மூர்த்தியின் முன்னே நிப்பாட்டி "வெற்றி தான் மாப்பிளை இப்போ என் பொண்ணுக்கு. நீங்க ஒரு முடிவு எடுத்தீங்க. அது தப்பா போயிருச்சு. இப்போ நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். கண்டிப்பா அவ வாழ்க்கை ரொம்ப நல்லா அமையும் " என்று சொல்ல..

மூர்த்தி இன்னும் யோசனையுடன் தான் இருந்தார். "தன் அந்தஸ்து என்ன.. அவன் அந்தஸ்து என்ன.. அவன் கிராமத்தில் வளர்ந்தவன். என் மகளுக்கு பொருத்தமாக இருப்பானா.." என்று பலத்தரப்பட்ட யோசனையுடன் இருந்தார்..

வெற்றிக்கு புரிந்து விட்டது. இந்த சூழ்நிலையை விட்டால், தனக்கு என்றுமே மாமன் தன் மகளை மணம் முடித்து குடுக்க, சம்மதம் தர மாட்டார் என்று உணர்ந்து தான் அத்தை இந்த முடிவை இப்பொழுது எடுத்தார் என்று உணர்ந்து கொண்டான்.

அதுவரை தலை குனிந்து இருந்தவள், அப்போது தான், வெற்றியை முழுவதுமாக பார்த்தாள்.

வேஷ்டி சட்டை... அடர்த்தியான கேசம்... முறுக்கி விடப்பட்ட மீசை... கையில் காப்பு.. உரமேரிய உடம்பு.. பக்கா கிராமத்துக்காரன் என்று சொல்லாமலே தெரிந்தது.

இதே அவன் மீது காதல் இருந்து இருந்தால், அவளுடைய கண்களுக்கு நிச்சயம் அவன் அழகனாக தான் தெரிந்து இருப்பான்..

ஆனால் அவள் உள்ள இப்போதைய மனநிலையில் அவனை ரசிக்க, என்ன ஏற்றுக்கொள்ள கூட முடியவில்லை..

அவளுடைய வாழ்க்கையயை நினைத்து விரக்தியான சிரிப்பு தான் வந்தது..மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

வெற்றி அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் என்ன மாதிரி மன நிலையில் இருப்பாள் என்று அவனால் உணர முடிந்தது..

"அத்தை.. நீங்க அவசர படுறீங்க.. எதுக்கு இந்த முடிவு... கொஞ்சம் நிதானமா இருங்க.. மதிக்கு என்னை விட வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் " என்றான் வெற்றி..

லட்சுமி "எந்த மாதிரி மாப்பிள்ளை கிடைச்சாலும், உன்ன விட வேற எவனும் என் பொண்ண நல்லா பார்த்துக்க முடியாது.. அது எனக்கு நல்லாவே தெரியும். உன் மனசுல என்ன இருக்குனும் தெரியும் " என்றார்.

சபையில் அனைவரின் முன்னிலையில், எதுவும் உளறி விடுவாரோ என்று உணர்ந்து, " நீங்க எதுவும் உளராதீங்க.. பேசாம இருங்க " என்று சொல்ல..

லட்சுமி " வெற்றி.. நான் உன்கிட்ட கடைசியா கேக்குறேன். இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கணும். அது என்மேல ஆணை " என்று சொல்ல..

அவனோ அவரை அழுத்தமாக பார்த்தவன் " என் சம்மதம் மட்டும் இதுல இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா.. முதல்ல மாமாகிட்டயும் மதிகிட்டயும் சம்மதம் வாங்குங்க.. அப்புறம் நான் என் சம்மதத்தை சொல்றேன் " என்றான்..

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த, மூர்த்திக்கோ அவனை வித்தியாசமாக தான் பார்த்தார்.

வசதி வாய்ப்புள்ள இடம்.. சொத்து பத்துக்கள் ஏராளம். யாராக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தான் நினைப்பர்..

இவன் இவ்வளவு சொல்லியும் என் சம்மதம், என் மகளின் சம்மதம் வேண்டி நிற்கின்றானே... அவனின் நற்குணம் தான் அவர் கண்களுக்கு தெரிந்தது..

அவர்கள் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை வைத்தே பல வருடம் ஆகி விட்டது. ஆனால் இன்று வரை என்னை மதிக்கின்றானே.. அதுவே போதும்.. இவன் என் மகளை நல்ல படியாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

மூர்த்தி " எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் " என்று சொல்லியவுடன்..

வெற்றியோ அவரை யோசனையுடன் பார்த்தான்..

மூர்த்தி வெற்றியின் அருகில் வந்து, அவனது தோளில் தட்டி, "எனக்கு சம்மதம் தான் " என்று சிரிப்புடன் சொன்னார்.

இப்போது அவன் மதியை பார்க்க, மதியும் உணர்ந்தாளோ.. என்னவோ குனிந்த தலை நிமிராமல் "சம்மதம் " என்று மட்டும் கூறினாள்.

"தாய்க்கும் விருப்பம். தந்தைக்கும் விருப்பம். தன் சம்மததை கேட்கவா போகிறார்கள். எப்படியும் என்னை கட்டாயப்படுத்தியாவது சம்மதம் வாங்கதான் போகிறார்கள்.
அந்த சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்த விரும்பவில்லை" என்று உணர்ந்தவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சரி என்று சொல்லிவிட்டாள்..

இதில் சாந்தவியும், அவளது கணவன் சம்பத்தும் வேடிக்கையாளர் மட்டுமே..
இருவருக்குமே பெரிதாக எந்த விருப்பமும் இல்லை. வெற்றி வேண்டும் என்றும் நினைக்கவில்லை. வேண்டாம் என்றும் நினைக்கவில்லை. அது பெற்றோர் மற்றும் தங்கையின் விருப்பம் என்று எதுவும் பேசாமல் இருந்தனர்.

வெற்றிக்கு அவளது விருப்பமின்மை நன்றாகவே புரிகிறது.. இருந்தாலும் இப்போது எதுவும் பேச வேண்டாமென நினைத்தவன்,

தன் தாயை பார்க்க அவரும் சம்மதமாக தலையை அசைத்தார்..

பின்னே, மேடையின் மீது ஏறியவன் மாற்று மாலைக்கு வைத்து இருந்த இன்னொரு ஜோடி மாலையில் ஒரு மாலையை எடுத்து போட்டுக் கொண்டவன், மனையில் அமர்ந்தான்.

மதியும் மேடையேறி மாலையை போட்டுக் கொண்டவள், அவனது அருகில் அமர்ந்தாள்.

பெண் வீட்டு சார்பில் வந்தவர்கள் இன்னும் கொஞ்ச ஆட்கள் இருக்கவும், அவர்கள் திருமணம் முடிந்து பிறகு செல்லலாம் என்று நினைத்து இருந்து கொண்டனர்.

மாங்கல்யம் இல்லாததால், மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து, இருக்கும் ஆட்களிடம் மட்டும் ஆசீர்வாதம் வாங்கினர்..

முகூர்த்த நேரம் முடிய சிறிது நேரமே இருப்பதால், ஐயர் இறுதி மந்திரமான

"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா


கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

கெட்டி மேளம்... கெட்டி மேளம்.. என்ற ஐயர் மங்கள நாணை அவனிடம் கொடுக்க, அவனும் பெற்றுக்கொண்டு சபையின் முன்னே அனைவரிடமும் காட்டி, இறைவனிடம் வேண்டிக் கொண்டு, ஆத்மார்த்தமாக மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

அவளது கண்ணில் இருந்து வழிந்த இரு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெறித்தது.. அவளுடன் வாழ வேண்டும் என்று ஆசை பட்டவன் தான். ஆனால் இப்போது சந்தோசமான மனநிலை இல்லை அவனுக்கு.. தான் அவசர பட்டு விட்டோமோ என்று உணர்ந்தான்.

குங்குமத்தை மஞ்சளிலும் , அவளது வகுட்டிலும் ஐயர் வைக்க சொல்ல,
ஒரு பெருமூச்சுடன் நடப்பதை ஏற்று கொள்ளதான் வேண்டும் என்று உணர்ந்து மங்கள நாணில் குங்குமம் வைத்த பிறகு, அவளது நெற்றி வகுட்டில் வைக்கும் போது இருவரது உடலும் சிலிர்த்துது என்னவோ உண்மை...

பின்னர் அக்னியை சுற்றி வர சொல்ல, இருவரும் கை கோர்த்து சுற்றி வந்த பிறகு, அம்மி மிதித்து அவளது பிஞ்சு விரல்களுக்கு மெட்டி அணிவித்தான்..

மதியின் முகத்தில் மருந்துக்கும் கூட சிரிப்பு இல்லை. ஆனால் அவர்களின் பெற்றவர்களோ, பிள்ளைகளை மகிழ்ச்சியுடன் மனமார வாழ்த்தினர்..

பெற்றவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு, பந்திக்கு மணமக்களை சாப்பிட அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்வின் போது ரவியின் குடும்பத்தார் யாரும் இல்லை.அவர்கள் ஏற்கனவே கிளம்பி விட்டனர்.

திருமணம் முடிந்து, முதலில் மாப்பிள்ளை வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். ஆனால் இப்போதைக்கு அது முடியாது என்பதால் பெண்ணின் வீட்டிற்கே அழைத்துச் சென்றனர்.

பிரமாண்டமான வீடு.. அதை பார்த்ததும், இவ்வளவு பெரிய வீட்டில் வளர்ந்தவள்.. கிராமத்தில் வந்து என்னுடன் எப்படி இருப்பாள்.. என்ற சித்தனை தான் அவனை ஆகிராமத்து இருந்தது .

ஆரத்தி எடுத்து பெண்ணையும் மாப்பிளையும் உள்ளே அழைத்துச் சென்று, பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல, அவளும் சொன்னதை எல்லாம் செய்யும் இயந்திரமாகவே தெரிந்தாள் வெற்றியின் கண்ணுக்கு..

மதியோ " கடவுளே.. நான் ஒன்னு நெனச்சேன். நீங்க எனக்கு ஒன்னு குடுத்து இருக்கீங்க..இந்த கல்யாணத்தை என்னால இப்போ ஏத்துக்க முடியல.. ஏத்துகிற மனசை எனக்கு குடுங்க " என்று மட்டும் வேண்டிக்கொண்டாள்.

வெற்றியோ "மாப்பிளை மாறுனதுனால, மதிக்கு என்னை ஏத்துக்க முடியாம இருக்கலாம். எப்போயாவது மாறும்னு நம்பிக்கையோட இருப்பேன். அப்படி இல்லனாலும் பரவாயில்லை, அவளுக்கு எது விருப்பமோ அதை செய்ய நான் தயார் தான். என் மதி என்னைக்கும் சந்தோசமா இருக்கனும்." என்று வேண்டிக்கொண்டான்.

அடுத்து பால் பழம் சடங்கு ஆரம்பிக்கலாம் என்று பெரியவர்கள் ஏப்பாடு செய்ய,

வெற்றியோ" எந்த சடங்கும் இப்போதைக்கு வேண்டாம் அத்தை.. மதிக்கு இந்த கல்யாணத்தை ஏத்துகிறதுக்கே கொஞ்ச காலம் தேவைப்படும். அதுக்குள்ள எதுக்கு சடங்கு சாம்பிரதாயம் எல்லாம்.. நீங்க செய்ய சொன்னாலும் அவ இயந்திரத்தனமாதான் செய்வா.. உணர்ந்து செய்ய மாட்டா " என்று சொன்ன மருமகனை பெருமையுடன் பார்த்தனர் மூர்த்தியும் லட்சுமியும்.

கற்பகம் கூட தன் மகனை எண்ணி மெச்சிக் கொண்டார்.

இது எல்லாம் மதியின் காதில் விழத்தான் செய்தது.. தனக்காக யோசித்து செய்கிறான் என்று அவனை பற்றிய ஒரு நல்ல எண்ணம் முதன் முதலில் உருவானது.


தேன் இனிக்கும்...

 
Status
Not open for further replies.
Top