ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை செந்தமிழே - கதை திரி

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
14. அக்கறை இக்கரை

இரண்டு நாட்களாக அவன் எத்தனை முறை அழைத்தும் அவளிடமிருந்து பதில் இல்லை. ஓய்வு எடுக்கட்டும் என்ற முடிவில் இரண்டு நாள் பொறுத்துப் பார்த்துவிட்டான் ஒரு மாற்றமும் இல்லை. வேலை முடித்ததும் அவன் பதட்டமான உள்ளம் அவன் வண்டியை அவள் வீட்டுப்பக்கம் கொண்டு வந்து நிறுத்தியது. மௌனமான இரவு இரைந்து சிதறி கிடக்க அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அவள் வீட்டில் ஓர் அறையில் விளக்கு எறிவது அவனை உந்த, மாடியேறி வீட்டின் அழைப்புமணி அழுத்தினான்.

திறந்ததும் ஆச்சரியமாக பார்த்தாள், “இப்போது தான் உனக்கு போன் செய்ய நினைத்தேன். சில விஷயம் எனக்கு தெரியவேண்டும் வா வா ” தீவிரமாகப் பேசினாள். அந்த இரவிலும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். அவன் மௌனமான பார்வையை கவனித்தவள். இரண்டு நாளா பகலில் தூங்கி இரவில் வேலை செய்கிறேன் பதிலளித்தாள்.

கோபமாக அவன் மாறுவதற்குள் “பொறு, நான் மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கறேன்.பார்” என்று காட்டினாள். கூடவே என்னவெல்லாம் சாப்பிட்டாள் என்றும் லிஸ்ட் போட்டு சொன்னாள். அவன் கோபப்படக் கூடாது என்று அவள் பரபரப்பாக சமாதானம் பேசியது அவனுக்கு பிடித்திருந்தது.

அவள் சேகரித்த தகவல்களை காட்டினாள். அவன் சந்தேகம் சரிதான் என்று சொல்வதற்கு அவளிடமும் நிறைய ஆதாரம் இருக்கிறது என்று அவள் சொல்ல ஷ்யாமிற்கு பெருமை மிகுந்தது.

அவள் ஊகத்தை வெளிப்படுத்தினாள். முக்திக்குள் கருப்பு ஆடு கூட்டமே இருக்கிறது. அந்த ஆட்டுக்கூட்ட தலைவனை கண்டுபிடித்தால் இந்த பிரச்சனை முடியும். முக்தி நிறுவனம் இரண்டாம் நிலை பங்குகள் ஓர் இடத்தில் குவிகிறது என்றால் முதல் நிலை பங்குகளும் ஓர் இடத்தில் அடைகிறது, அது எங்கே சேர்கிறது என்று பார்க்க வேண்டும்.

அவள் எண்ணத்தை பேசிக்கொண்டே இருவருக்கும் டீ தயாரித்தாள்.

அவர்கள் நிறுவனத்தின் அடுத்த மாதம் வேல்யூ குறையும் முன் முக்தி சார்பாக எதாவது சமுதாய பணிக்கு செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கச் சொன்னாள். இத்தனை நாட்கள் இல்லாமல் முக்தி வெளிச்சத்திற்கு வருவது முக்தி முன்னேற அடுத்த நிலைக்குப் போகிறது என்றே பார்க்கப்படும். அப்போதேனும் வில்லன் வெளியே அடையாளம் தெரியக்கூடும் என்றாள்.

அவள் தயாரித்த தேநீர் பருகிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தான் ஷ்யாம்.

இதுவரை முக்திக்கு விளம்பரம் தேவைப்பட்டதே இல்லை.அவர்களென்ன சோப்பு,ஷாம்பூ விற்கும் நிறுவனமா என்ன? உலோகம் வியாபாரம் செய்பவர்கள்.வரிச் சலுகை கிடைக்கும் அரசு விளம்பரங்களுக்கு ஓர் மூலையில் அவர்கள் பெயரும் வருவது போல இருக்கும் விளம்பரமே தாராளம் அவர்களுக்கு. முக்தியின் வளர்ச்சி அந்த துறைக்கு மட்டுமே தெரியும், முக்தி வெகுஜன மக்களுக்கும் தெரிய ஆரம்பிக்கும் போது கவனம் ஈர்க்கும். முக்தியை கை மாற்றி விட நினைக்கும் கும்பலுக்கு இது ஒரு பதற்றத்தைக் கொடுக்க வாய்ப்பிருக்கும். சுந்தரியின் கருத்தை ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தவன் காலம் தாழ்ந்து அவள் முகம் பார்த்தான்.

தன் யோசனையை அவன் ஏற்பானோ என்கிற எதிர்பார்ப்பு நிறைந்த அவள் முகம் பார்க்க அவனுக்குள் மத்தாப்பூ. வெளிர்ந்த முகத்தில் சின்னதாகத் தெரியும் கண்களை மொத்தமாக விரித்துச் சிரித்த முகமாக, சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு கைகளை அழுத்திக்கொண்டு அவன் முகத்தை மட்டுமே பார்ப்பவள் உலகில் அத்தனை அழகையும் சுமந்திருந்தாள்.

உடைத்த கண்ணாடியை சரி செய்து வைத்திருந்தான்,அதை அவளிடம் கொடுத்தவன் “உனக்கொரு கிப்ட் இருக்கு என்னிடம்” என்றான்
“என்ன கிப்ட்? உன் வீட்டில் இருக்கும் போது விட்டு வந்தேனே அந்த நோட் புத்தகமா”
“இல்லை”
“போ..வேற எதுவும் எனக்கு வேண்டாம்”
“உன் முரளி மாமா கூடவா?”
இம்முறை ஆச்சரியமாகக் கண்களை விரித்துப் பார்த்தாள்.

ஆமாம், முரளியை பத்துநாளில் அந்தமான் அழைத்து வருகிறார்கள். நாம் அங்கேயே அவரை அழைத்துக்கொள்ளலாம் என்றவன் அவளை பார்த்தான். உற்சாகம் நிறைந்தவள் போகலாம் என்று மகிழ்ச்சியில் கூப்பாடு போட அவளை அணைத்து வாயை அடைத்தவன் அமைதி, நடுநிசி மற்ற எல்லோரும் தூக்கத்தில் இருப்பார்கள் என்றான்.

நெருக்கத்தில் வந்து நின்று அவள் வாயை பொத்தியிருக்கும் ஷ்யாம் பார்வையில் சுந்தரி உடல், ரத்தம், நகம், ஆவி மொத்தமும் செந்நிறம் கொண்டது.சட்டென்று விலகியவள் “வந்த விஷயம் முடிந்தது தானே..!” கேட்டாள்.

மாற்றம் உணர்ந்தவன் காற்று போன பலூன் போல சூம்பிப் போனாலும் குட் நைட் சொல்லிக் கிளம்பிவிட்டான்.

ஷ்யாம் போனதும் வெளியே வந்த சரயு “ஹே அது ஷ்யாம் முக்தி தானே. அவருக்கு என்னைத் தெரியாது தானே.என்னை பற்றி நீ எதுவும் சொல்லவில்லை தானே” படபடப்பாக கேட்க சுந்தரி குழம்பினாள்.

“ஐயோ ஷியாம் சார் என் அப்பாவிடம் எதுவும் சொல்லிவிட மாட்டார் தானே”
“என்ன அப்பா? என்ன சார், என்ன மோர்”
“ஓ, உனக்கு விஷயமே தெரியாது இல்லையா?”
தெரியாது என்று சுந்தரி தலையை ஆட்டவும். என் அப்பா முக்தியில் தான் வேலை பார்க்கிறார், அவருக்கு இந்த ஸ்டார்ட்-அப் ஐடியாவில் எல்லாம் இஷ்டம் இல்லை, காலை அலுவலகம் போனோமா மாலை வீடு வந்தோமா என்கிற எண்ணம். எதற்கெடுத்தாலும் முக்தியே அல்லல்படும்போது நம்மைப்போல பிஸ்னஸ் பின்னணி இல்லாதவர் எதற்கு அதைபற்றி யோசிக்க வேண்டுமென்பவர்.

ஷ்யாம் அவரிடம் உங்கள் பெண் சின்ன வீட்டிலிருந்து கொண்டு அல்லல்படுகிறாள் என்றுவிட்டால் எப்படியேனும் அவர் இவளை அழைத்துச் சென்று விடுவார். சரயு அவள் கவலையை சொன்னதும் சுந்தரிக்குள் கிலி பிடித்துக்கொண்டது இவனுக்கு இந்த எண்ணம் தோன்றக்கூடாதே...!

புலம்பிவிட்டு சரயு திரும்பவும் தூக்கத்திற்கு செல்ல , சுந்தரி அவள் வேலையை தொடர்ந்தாள்.

அதிகாலை ஐந்தரை மணி, பால்காரன் வாசலில் பால் பாட்டில் வைக்கும் சத்தம் கேட்க, அத்தனை நேரம் தொடர்ந்து வேலை செய்த களைப்பு காலை நேர தென்றல் வசந்தத்தை அனுபவிக்க தூண்டியது.

மாடியில் இருக்கும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பக்கம் இருக்கும் வெட்ட வெளியில் கைகள் விரித்து குளிர்ந்த தென்றலின் தீண்டல் அனுபவிக்க மனம் புத்துணர்வு கொண்டது.

யாரோ மாடி ஏறி வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். ஷ்யாம் வந்து கொண்டிருந்தான். "ஷ்யாம்...நீ எங்க ஷ்யாம் இங்க" கண்கள் விரித்து வியப்பாக கேட்டாள்

“ஜஸ்ட் சும்மா வந்தேன். வா, டீ போடு குடிக்கலாம்” சாதாரணமாக அழைத்தான்

அவன் டீ என்றதும் அவளுக்கு சூடாக தேநீர் குடிக்க வேண்டும் போல தோன்ற, கிட்சன் சென்று அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் ஒருபக்கம் பால் ஒருபக்கம் அடுப்பில் ஏற்றி வைத்தாள். புது காலை உற்சாகம் அவளிடம். அதை கவனித்துக்கொண்டே அவள் பக்கம் வந்து நின்றான்.

“ஸ்மோக் பண்ணியா”
அவள் கேள்வி கேட்டதும் பதில் சொல்லாமல் தலை குனிந்து மேடை மேல் சாய்ந்து நின்றான்.
“சொல்லு ஷ்யாம்”
“எஸ், ஐ ஸ்மோக்ட்.”
“ஏன். இப்படி உடம்பை கெடுத்துக்கற” அவள் வேலையை பார்த்துக்கொண்டே அவள் அக்கறையாக கேட்க, அவன் மனதில் வசந்தம் வீசியது.

டீபொடி எடுக்க திரும்பியவள் பக்கம் நெருங்கி நின்றவன் “என்னை ஏன் அப்படி பார்த்த சுந்தரி” கேட்டான்

அவன் கேட்கும் விஷயம் புரிந்தாலும் சாதாரணமாக கேட்டாள் “என்ன பார்த்தேன்.எப்போ பார்த்தேன்”

கிண்டலாக சிரித்தவன் “அதான் அப்போ, ராத்திரி நான் கிளம்புற நேரம்”

மைக்ரோ மில்லி செகண்ட் மனதில் தோன்றிய ‘பச் கெளம்புறானே” எண்ணம் அவள் கண்களில் தெரிந்ததா? அத்தனை வெளிப்படையாக இருந்திருக்காதே…

வேறு யாரேனும் இருந்தால் கண்டுபிடிப்பார்களோ ஷ்யாம் ஆயிற்றே காணாமல் விடுவானா?

நிலமை வெம்மை கூடுவது தெரிய இயல்பாக இருப்பதாக காட்டிக்கொண்டவள் “நான் எது மாதிரியும் பார்க்கல ஷ்யாம்.வழி விடு டீ போடலாம்”

வெந்நீர் கொதிக்க அதில் சுந்தரி டீ பொடி போட்டவள் கை நடுக்கம் காட்டியது.
“தள்ளி நில்லு ஷ்யாம்”
“முடியாது”
“எனக்கு மூச்சு முட்டுது”
“எனக்கும்” என்றவன் நொடிப்பொழுதில் அவளை இழுத்து கிட்சன் மேடை பக்கம் திருப்பி அவள் எதிரில் நின்றவன் வினாடியில் அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, பரபரப்பு இறுக்கி பிடித்து இதழ் அணைத்தான். திமிறியவள் அவன் தோளில் அடிக்க “ப்ளீஸ் சுந்தரி” என்றவன் மேலும் மேலும் அணைத்து முத்தத்தை நீடிக்க கொதித்த பால் பொங்கி மேடையிலிருந்து வழிந்து.

வழிந்த சூடான பால் கீழே விழுந்து துளிகள் வீழ்ந்து தெறிக்க அதன் தாக்கத்தில் சுயநினைவு வந்தவள், அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள். அணிந்திருந்த முக்கால் பாண்ட் ஒரு பக்கம் முழுக்க வழிந்திருத்த பால் ஒட்டியிருக்க அதன் கசகசப்பு, நூரையீரல் வெடித்து விடும் அளவிற்கு அழுத்தமாக முத்தம் கொடுத்தவன் மீது கோபம் என அந்த காலை நேர குளிரிலும் வியர்க்க நின்றிருந்தாள்.

அடுப்பை அணைத்து கொதிக்கும் டிகாஷனில் பால் ஊற்றி அதை மூடி வைத்துவிட்டு அவளையே கொஞ்சமும் மயக்கம் தெளியாமல் பார்க்கும் ஷ்யாமை முறைத்து பார்த்துவிட்டு இடத்தை சுத்தம் செய்ய துணி எடுக்க சென்றாள்.

ஷ்யாம் அவன் நிற்கும் இடத்திலுருந்து பார்த்தாலே தெரிந்தது சரயு தூங்கிகொண்டிருப்பது. சரயு இருக்கும் நினைவில்தான் அங்கே ‘பின் ட்ராப் அமைதி’ நிலவியது.
துணி வைத்து துடைத்துவிட்டு தேநீரை வடிகட்டி இரண்டு கப்பில் ஊற்றியவள் ஒன்றை காட்டி எடுத்துக்கொள் என்றுவிட்டு திரும்பி பாத்ரூம் பக்கம் சென்றாள். அவள் பின்னாலே சென்றவன் என் கைலயும் பால் சுந்தரி என்றான் அப்பாவியாக.

அழுக்கு துணியை தண்ணீரில் போட்டுவிட்டு அவள் கைகளை கழுவிய பின்னும் அங்கேயே நின்றிருந்தவனை பார்த்து “என்ன பண்ற” கேட்டாள் அடக்குரலில்.

அவனோ பதில் சொல்லாமல் அவளை சுவரோடு அழுத்தி அவன் வன்முறையை தொடர்ந்தான். இம்முறை தெளிவாக இருந்த சுந்தரி கால் தூக்கி எங்கே இடித்தால் வலிக்குமோ அங்கே ஒரே இடி.வலியில் அவளை விட்டு தள்ளி நின்றவன் “அடிப்பாவி, ராட்சசி” கம்மிய குரலில் “என்ன ஷ்யாம் செய்ற”அவள் கேட்க வலியின் பிடியில் “நாம பேசணும் சுந்தரி. பேச தயங்குற இந்த விஷயத்தை பற்றி பேசணும்” அவன் சொல்லிக்கொண்டிருக்க வெறுமனே சாத்தியிருக்கும் பாத்ரூம் கதவை தட்டினாள் சரயு. “சுந்தரி உள்ள இருக்கியா, வெளில வந்த பின்னாடி என்ன எழுப்பு” என்றவள் திரும்ப சென்று விட்டாள்.

சரயு குரல் கேட்ட நிமிடம் சுந்தரி முகம் வெட்கத்தில் சிவந்து போனது. ஆழ்மூச்சு இழுத்துவிட்டு சமநிலை வந்து, தாமதித்து வெளியே வந்தவள் அவனையும் வெளியே இழுத்து வாந்தவள் “கிளம்பு, என் கண்ணு முன்னாடி நிற்காத” கோபத்தில் சீற அப்பாவி ஷ்யாம் “டீ குடிக்கல சுந்தரி” என்றான் .

இங்கே வெளியே நில்லு வீட்டுக்குள்ள வராத என்றவள் உள்ளே சென்று கிளாஸ் பாட்டில் ஒன்றில் டீ ஊற்றி கொண்டு வந்து கொடுத்து “போ, போய் உன் கார்லே போய் குடி” அவனை விரட்டினாள்.

ஷ்யாமிடம் சொல்ல அவளிடம் ஏகப்பட்ட விஷயம் இருக்க, மனம் முழுக்க கோபம்,ஆத்திரம், ரணம் பொங்கி வழிகிறது. எதுவும் சொல்ல தோன்றாமல் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

பாழாய்ப்போன இந்த ஈர்ப்பும் அதன் சேட்டைகளும் அவளால் தாள முடியவில்லையே…

முக்தி ஸ்டீல்சில் ஷ்யாம் அவன் எண்ணத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நிறுவனத்தின் வாராந்திர கூட்டத்தில் முக்தி சார்பாக அரசு செயலில் எதிலேனும் உடன்பட்டு பொதுஜனம் கண்களில் படுமளவிற்கு விளம்பரம் செய்யலாம் என்று அவன் சொல்ல, ஒவ்வொருவர் ஒவ்வொரு கேள்வியில் நிறுத்தினார்கள். இளைய சமுதாயம் படாடோபமாக இருப்பதிலேயே காலத்தைச் செலவழிகிறது என்று அவன் சித்தப்பாவும் பேச ஷ்யாமிற்கு கோபம் வந்தது.

ஷ்யாம் இது முக்தி இதற்கு விளம்பரம் தேவை இல்லை, வேண்டுமென்றால் உன் முதலீட்டு நிறுவனத்திற்கு தேடு, முக்தி நஷ்டத்தில் சென்றாலும் அதன் பணியாளர்களை கவனிக்க முடியும்,முக்தி எப்போதும் இப்படியான சூழலில்தான் இருந்திருக்கிறது, நீ அதிகம் கவலைப்படுகிறாய் என்று ஒவ்வொருவர் பேச ஷ்யாம் ஆத்திரம் உச்சம் அடைந்தது.

சிறிதும் தயக்கமின்றி ஆதிக்க குரலில் “ஆமாம் இது விளம்பர காலம் தான், முக்தி அடுத்த நிலை செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன், என் நிறுவனம் உலக ப்ரசித்திப்பெற வேண்டும். இன்னமும் யாரும் வந்து அசைக்கக்கூட முடியாத அளவுக்கு வளர வேண்டும்.இத்தனை நாள் வளர்ச்சியை உலகிற்கு காட்ட வேண்டுமென்று நினைக்கிறேன்.செய்யத்தான் போகிறேன். முக்தி நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்றெல்லாம் இனி யாரும் இங்கே பேசக்கூடாது” என்றவன் விறுவிறுவென அறை விட்டும் வெளியே வந்துவிட்டான்.

யாரென்று சந்தேகப்படுவான் அங்கே இருப்பதில் பாதிபேர் அவன் ஒன்றுவிட்ட சித்தப்பாக்கள், சொந்தங்கள். அவன் அப்பா போல தலைமுறைகளாக முக்தியை வளர்ப்பவர்கள்.

ராஜப்பிரகாஷ் மகன் உணர்ச்சிவசப்பட்டு பேசி சென்றதை நினைத்து ஒரு தந்தையாக வருத்தப்பட்டாலும் என் மகன் முக்தியை காப்பற்ற நினைக்கிறான் என்று நினைத்து மகிழ்ச்சி கொண்டார்.

ராஜப்பிரகாஷ் முக்தி உணர்வு குழம்பில் தத்தளிக்க அவர் எப்போதும் போற்றி மதிக்கும் அண்ணன் சிவாஜி பிரகாஷ் தன் வீல் சேரில் அவர் பக்கம் வந்தவர் “ஷ்யாம் வளர்ந்துவிட்டான் ராஜ், அவன் பொறுப்புணர்ச்சி எனக்கு உன்னையே நினைவிற்கு கொண்டு வருகிறது” என்று சொல்ல ராஜ்பரகாஷ் கண்களில் கண்ணீர் திரையாக நின்றது.

ராஜ்பரகாஷ் முக்தி காதல் திருமணம் செய்தவர்.முக்தியில் வேலை பார்த்து கொண்டிருந்த தமிழ் பெண்ணை மணந்தார். நிறுவனத்தின் வளர்ச்சி பாதிப்பை காட்டி ஷ்யாம் தாயை விவகாரத்து செய்ய வைத்தது கூட இருந்த இந்த பங்குதாரர்கள் கூட்டம்.

சீமா என்கிற டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஒரே பெண் வாரிசை திருமணம் செய்துகொண்டார் ராஜ்பரகாஷ். ஷ்யாம் அதன்பின் ராஜ்பரகாஷுடன் நெருக்கத்தை குறைத்துக்கொண்டான். சீமா நிறுவனம் அவர் பெயரில் மாற அதன் லாபம் வைத்தே பேங்க் ஒன்றை தொடங்கினார். காலப்போக்கில் வங்கி விரிய சீமா நிறுவனம் அழிந்தது. சீமா நஷ்டத்தை மீட்டெடுக்க முடியாமல் போனதே என்பதில் ராஜ்பரகாஷிற்கு வருத்தம் அதிகம்.

தன்னை சுற்றி மாயவலை ஒன்று இருப்பதை ராஜ்பரகாஷ் அறிந்திருந்தார்.ஆனாலும் அவரால் சுற்றி இருக்கும் மக்களை சந்தேகப்பட முடியவில்லை, விதி என்று அதை ஏற்றுக்கொண்டார்.

அறைக்கு வந்தவன் கூட்டத்தில் அவன் பேச பேச யார் முகம் எப்படியெல்லாம் இருந்தது என்று எண்ணி பார்க்கலானான். அவன் தந்தையும் அவனக்கு எதிராக இருப்பது போலத் தோன்றியது.

சுந்தரிக்கு அலுவலகத்தில் ராகுல் அவள் கேட்கும் விதமாக வசதி எதுவும் செய்யாமல் இருக்க, அவள் கவனம் முழுக்க ஷ்யாம் விவகாரம் மீதே இருந்தது. ஷ்யாம் விளம்பரம் செய்ய ஏதுவாக இருக்கும் சிலதை தேர்ந்தெடுத்து வைத்தாள். மேற்கொண்டு பங்குச்சந்தை நிலவரத்தைக் கவனித்தாள். உற்சாகத்தில் ஷ்யாமின் முக்தி மெயில் ஐடிக்கு அவள் கண்டுபிடிப்பை மெயில் செய்தாள். அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எதிர்பார்த்தவள் சலித்துப்போனாள்.

வேலை முடித்து வீட்டிற்கு சோர்வாக நடந்து வந்தவள் வீட்டின் வாசலில் காத்திருந்தான் ஷ்யாம். அவனைப் பார்த்ததும் கோபம் கொந்தளித்தது.

“நான் எவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்தேன் தெரியுமா?” அவள் அப்படி எதிர்பார்ப்பு நிறைந்த கோபத்தில் கேள்வி கேட்கவும் அவனுக்குள் அவளிடம் சொல்ல இருந்த விஷயமெல்லாம் மறந்தது.
“சாரி ஆபிஸ் வர முடியலை”
“நான் எவ்வளவு நேரம் உன் போன் காலுக்கு காத்திருந்தேன் தெரியுமா?” சுந்தரி நியாயம் கேட்கும் தொனியில் கேட்க

நினைவடுக்குகள் முழுக்க இனிப்பான அவர்கள் முத்தம் மட்டுமே நினைவிருக்கு அவனோ ‘நானும்’ என்று முன்னேறி அவள் முன்னே குனிந்து அவள் கண்களைப் பார்த்தான். அந்த பார்வையில் இதயம் துள்ள மூச்சடைத்தவள் பல்லை கடித்துக்கொண்டு “ஷ்யாம்” என்றாள்

“ம்ம்”
“நான் அனுப்பிய மெயிலுக்கு பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்” என்றாள் அவன் அலைபாயும் கண்களையே பார்த்துக்கொண்டு.

உச்சந்தலையில் ஆணி இறங்கியது போல குழப்பத்தில் “எனக்கு எதுவும் மெயில் வரலையே.!” என்றான்

அவன் ஆசை பார்வை குழப்ப பார்வையாக மாறியதில் சின்ன வலி தாக்கினாலும் கண்டுபிடிப்பை சொல்லிவிடும் வேகம் அவளிடம். "உங்க இரண்டாம் நிலை பங்குகள் விரிவாக சென்றாலும் ஒரே இடம் தான் செல்கிறது.அது ஒரு அமெரிக்க நிறுவனம். அதே போல முதல் நிலை பங்குகள் உன் அம்மாவிடம் அதிகமாக இருக்கிறது”
“என் அம்மாவா” அவன் புருவம் முடிச்சுடன் கேட்க
சுந்தரி “ஆமா, திருமதி ராஜ்பரகாஷ் முக்தியிடம்” என்றாள்

ஷ்யாம் அதிர்ந்தான். “நான் வீட்டுக்கு போகவேண்டும்.பை நாளைக்கு மீட் பண்ணலாம்”
அவன் நிலை கண்டவள் தயங்காமல் அவனை தொடர்ந்து அவன் காரில் ஏறி அமர்ந்தாள்.
“நானும் வரேன்.நான் கண்டுபிடித்ததை எல்லாம் சொல்லவேண்டாமா?, நீ தெரிந்துகொண்டே ஆகணும் ”
“ஏன் அது காத்திருக்காதா?” சலிப்பாக கேட்டான்
“இருக்காது”
“சரி, ஏறு”
 

swwee

Active member
Wonderland writer
15. முக்தி குடும்பம்


சராசரி ஆண்பிள்ளை போல அம்மாவிடம் சண்டைபோட்டு விசாரிக்கப் போவதாக நினைத்துவிட்டாளா. அப்படியெல்லாம் அவன் ராணி சீமாவிடம் பேசிவிட முடியுமா? ராணி சீமா அவன் தாய் இல்லை என்பதை உலகம் அறியும் ஆனாலும் அதை பெரிய விஷயமாக யாரும் பேசமாட்டார்கள்.அவனுமே ராணி சீமா என் தாய் இல்லை என்று வெளியே சொன்னதாக வரலாறு இல்லையே.

ராணி சீமா திருமணம் ஆகி வந்த புதிதில் வீட்டு வேலைக்காரர் ஒருவர் அவன் அம்மா செண்பகத்தை உயர்வாகப் பேசிவிட்டார். இரக்கமில்லாமல் அவர் நாக்கை அறுத்தார் ராணி.அதிலிருந்து யாரும் செண்பகம் பெயரை உச்சரித்ததில்லை. அந்த ஆள் இன்னமும் வீட்டில் வேலை பார்க்கிறார். ராணி பெயருக்கேற்ற ஆள் தான். அவருக்கும் ஒரு மகன் உண்டு, உலகத்திற்குப் பொறுத்தவரை அவன் சஞ்சய் பிரகாஷ் முக்தி, ஆனால் உண்மையில் முக்தி குடும்பத்திற்கும் அவனுக்கும் எந்த பந்தமும் கிடையாது. ராணி, முக்தி பெயர் வேண்டுமென்று கூட கேட்டதில்லை.

ராஜ் பரகாஷ் முக்திக்கும் ராணி சீமாவிற்கும் அடுத்தவர் வாழ்க்கையில் கணவன் மனைவி பாத்திரம் அவ்வளவே.மேற்கொண்டு அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையொன்று இருக்கிறது. ராணி சீமா செயல்கள் ஒன்றுமே புரியாது. அவரை உளவு பார்த்த ஆட்கள் இதுவரை உயிருடன் இல்லை. ராஜ்பரகாஷ் முக்திக்கு நிறையப் பெண்கள் தொடர்பு என்று பரப்பும் வேலையைச் செய்வது மட்டும் தான் அவர் வேலை. அதை கச்சிதமாகச் செய்பவரும் கூட.

ஷ்யாமும் தந்தை விஷயத்தில் ராணி சீமாவை தான் நம்பினான். பின்னொரு நாளில் அவனாக கண்டுபிடிக்கும் வரையிலும் அவனுக்குமே ராஜ் பிரகாஷ் முக்தி பெண் பித்தர் தான்.கண்டுபிடித்த பின்னும் அவர் மீது கோபம் குறைந்ததா என்றால் குறையவில்லை, அது இன்னமும் கூடியது. ராணி சீமாவை அவர் வேலையை நிறுத்துக்கொள் என்று இவர் சொல்லவில்லை அவர் அப்படிப்பட்ட பெண் பித்தர் என்று பரவும் வதந்தியும் பொய் என்று எடுத்துச் சொல்ல முயலவில்லை. என்ன மனிதர் இவர்?

தன் குடும்ப கதை சொல்ல அவனுக்கு இஷ்டமில்லை,ஆனாலும் சொல்லித்தானே ஆக வேண்டும். ராணி சீமாவிற்கு அவர்கள் குடும்பத்தின் மேல் அப்படியென்ன பகையோ?

அன்பு அக்கறை எல்லாம் உணரும் சமாச்சாரம்.அது தன்னை பிரகடனப்படுத்த மெனக்கெடாது. மனித மனம் உணருமாயின் பிரதிபலிக்கும். அவள் உணவு,ஆரோக்கியம் மீது அவன் அக்கறைக்கு பிரதிபலிக்கிறாள் அவள். அதில் வேடிக்கை என்னவென்றால் அவளையும் அறியாமல் அதை செய்கிறாள் என்பதை அவள் உணரவில்லை.

ராணி சீமாவை நினைத்தால் அம்மாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.அம்மாவை நினைத்தால் அம்மா போலப் பேசும் சுந்தரியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்கு அம்மாவும், ராணி சீமாவும் இரண்டுபேரும் பரிதாபத்திற்குரிய ஜீவன் தான். சுந்தரி விஷயத்தில் அவனே பரிதாப ஜீவன். அழுத்தமான சூழலில் இருக்கிறாள் என்று தெரிந்தும் மடத்தனமாக நடந்துவிட்டான். அடுத்ததடுத்து அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு அவனை அடுத்த நிலைக்கு தள்ளுகிறது.

ராஜ்பரகாஷ் முக்தி பெண் பித்தர் என்றும் பெண் துணை இல்லாமல் இருக்க முடியாதவர் என்றெல்லாம் பரவியிருக்க ஷ்யாம் பெண்கள் விஷயத்தில் கண்ணியம் காப்பவனாக இருந்தான். ஆஷாவை ஊர் அறிய தங்கை என்று சொன்னவன் சுந்தரியிடம் அப்படி நடந்துகொள்வான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் சுந்தரிக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ அவ்வளவு பெரிய அதிர்ச்சி அவனுக்கும்.

சுந்தரியிடம் நடந்துகொண்டது போல எந்த பெண்ணிடமும் அவனால் நடந்துகொள்ள முடியாது. சுந்தரி என்கிற ஒரு புதையல் போதும் அவனுடைய இவ்வாழ்விற்கு. பணத்திற்க்கு பஞ்சமில்லாத வாழ்விலும் விசனப்படும் சூழல் தான் என்று அவன் சொன்னால் உலகம் நம்ப வேண்டுமே.

அவன் கெஸ்ட் அவுஸ் அழைத்துச் சென்றான்.
“ஏன் இங்கே வந்திருக்கிறோம்”
“நீ சில விஷயம் தெரிஞ்சிக்கணும்”
“சொல்லு கேட்கிறேன்”
ராணி சீமாவை பற்றி அவனுக்கு தெரிந்ததை அவன் சொல்ல, சுந்தரிக்கு அதில் சுவாரசியம் கூடியது.
“எனக்கு அவங்களை இன்னமும் தெரிஞ்சிக்க தோணுது ஷ்யாம்” அவள் ஆர்வம் கொஞ்சம் எரிச்சல் நிறைய மகிழ்ச்சி கொடுத்தது
“அப்படி என்ன ஆர்வம் அதில்? என் நல்லதுக்காகவா?”
“அப்படியும் இருக்கலாம் என் ஆரோக்கியம்,வேலை, மகிழ்ச்சி என்று நீ அக்கறை காட்டும் போது நானும் காட்டவேண்டாமா ?”
“நான் உன் மேல் இருக்கிற ஆசையில் காட்டுகிறேன்”
அதிர்ந்தாலும் “நான் உன்மேல் இருக்கிற வெறுப்பிலே, உன்கிட்ட இருந்து எந்த கடனுமில்லாத நிலைக்கு ஆசைப்பட்டு இதை செய்கிறேன் போதுமா விளக்கம்”
“ம். போதும்.இந்த தெளிவு போதும்” வாய் சொன்னாலும் மனம் வலித்தது.

அவன் சொன்னபடி அவன் மெயில் இன்பாக்ஸில், ட்ராஷில் எங்குமே அவள் அனுப்பிய தகவல்கள் இல்லை.ஆனாலும் சேகரித்ததை கொடுத்துவிட்டு இனி அவர்களுக்குள் எப்படி தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் முடிவு செய்துகொண்டார்கள்.

சுந்தரி அவள் மெயில் ஐ.டியிலிருந்து ஓர் இணையதள இணைப்பை அவன் மெயிலுக்கு அனுப்பினாள். ஷ்யாம் அதை அவன் போனில் திறந்து அவன் டீடைல்ஸ் சமர்ப்பித்தான். சுந்தரியின் தொலைப்பேசியில் கடைசியாக அவள் பேசிய ஆள், குறுஞ்செய்தி அனுப்பிய நபர், வாட்ஸ் அப் செய்த ஆள் என்று நிறையத் தகவல்களை அவனால் பார்க்க முடிந்தது. ஷ்யாம் தகவல்களை எதுவெல்லாம் அவளால் பார்க்க முடியும் என்பதையும், அந்த இணைப்பில் அவர்கள் எப்படி தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம் என்று அவள் அவனுக்கு சொல்லிக்கொடுக்க ஷ்யாம் ஆச்சரியத்தில் மூழ்கினான்.

நீ எங்கே இருக்கேன்னு இதை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டான். முடியும் ஆனால் சொல்லிக்கொடுக்கமாட்டேன் என்று பதில் சொன்னாள்.

“இதை கமர்ஷியல் செய்ய முடியுமா”
“ஐயோ ஷ்யாம், இது கமர்ஷியல் ப்ராடக்ட் தான்.இன்னமும் மக்கள் மத்தியில் பரவலை”
“ஏன்?”
“ஏன்னா இதன் தேவை சாமானிய மக்களுக்கு இல்லை”
“இது மாதிரி ஷெர்லாக் ஹோம்ஸ் வித்தை ஒன்று எனக்கும் செய்து கொடு” கிண்டலாக என்றாலும் அவளை பெருமையாக பேச எப்போதும் போல அவள் உள்ளத்தில் பூத்தூவல்.
“செய்து கொடுக்கிறேன், நீ என் அந்த நோட் புத்தகம் கொடுத்தால்”
“அப்படியா, சரி தேடி வைக்கிறேன்” பொய் சொன்னான்.அது எங்கு இருக்கிறது என்பது அவன் அறிந்தது தான்.

அடுத்த சந்திப்புகளுக்கு அவனுக்கு காரணம் வேண்டுமே.

ஷ்யாம் எப்போதுமே அடுத்தவர் நோட்டத்தில் இருப்பவன் தான். எப்போது அவனுக்கு நுணுக்கமான தகவல் வந்ததோ அப்போதே அவனுடன் சேர்ந்து சுந்தரியும் அவர்கள் பார்வை வட்டத்துள் விழுந்துவிட்டாள். ராகுல் நிறுவனத்தில் எங்கிருந்தோ வந்து வேலை பார்க்கும் பெண்ணுக்கு முக்தி மீது என்ன ஆர்வம்? ஷ்யாம் மீது என்ன ஆர்வம்?

சுந்தரிக்குத் தான் ஆபத்தான சூழலில் சிக்க போகிறோம் என்கிற எண்ணம் இருந்தாலும் அவள் மெயில் காணாமல் போனது இதோ வருகிறது பெண்ணே என்று அவளை எச்சரித்தது.

சுந்தரி ராகுலிடம் அனுமதி வாங்கி வீட்டிலிருந்த படி வேலை செய்யத் தொடங்கி விட்டாள். உள்ளம் ஷ்யாம் வசம் சாய்கிறதே, அது அவளுக்கு நல்லதில்லையே.

சனிக்கிழமை மாலை வேளை, தீவிரமாக நிறுவனத்தின் முன்னேற்றம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். ஷ்யாம் அவர்களின் தொடர்புகள் விரிவடைய என்னவெல்லாம் செய்யலாம், ஆறு மாதத்திற்கு மேல் தங்காமல் வேலை விட்டு போகும் கணினி சரி செய்யும் டெக்னீஷியன்ஸ்களை என்ன செய்யலாம், அவர்கள் நிறுவனம் நிலையாக லாபம் எதிலெல்லாம் ஈட்ட முடியுமென்று நிறைய விவாதித்துக்கொண்டிருந்தான். ராகுல் நிலை உயர்ந்திருந்தாலும், அவர்கள் குடும்பம் உயர்ந்திருந்தாலும் ஆஷாவை திருமணம் செய்ய அது போதாது. இதோ ராகுல் நிலையாக இருக்கிறான் என்று காட்ட வேண்டும்.

ஆஷா ராகுலையும், ஷ்யாமையும் அவள் போகவிருக்கும் யூத் பார்ட்டிக்கு அழைக்க வந்தாள்.

“எப்போது பார் வேலை. போதும் வாங்கப் போகலாம் டைம் ஆச்சு” பரபரப்பாக பேசினாள்.இரண்டு பேரும் சேர்ந்து "எங்கே ? என்று கேட்க ஆஷா ஆர்வமாக விளக்கத் தொடங்கினாள். பஞ்சாபி பாப் பாடகர் பூனே வந்திருப்பதாகவும் அவர்கள் செட் எல்லோரும் அவர் கான்செர்ட்க்கு புக் செய்திருக்கிறார்களாம். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக அழைத்தாள்.

ஆஷாவிற்கு ஷ்யாம் என்றால் எப்போதும் பெருமை தான். அவர்கள் தோழிகள் மத்தியில் ஷ்யாமை அழைத்து வருகிறேன் என்று சொல்லியிருப்பாள் அதனால் தான் இத்தனை அடமாக அழைக்கிறாள் என்பதை ராகுலால் புரிந்துகொள்ள முடிந்தது.

உண்மையை சொல்லு, ஷ்யாம் பைய்யாவை அழைத்து வருகிறேன் என்று தம்பட்டம் அடித்துவிட்டாயா? ராகுல் கேட்க

ஆஷா ஆவேசமாக “ஷ்யாம் பைய்யா லைப்லே கொஞ்சமாச்சும் பிரேக் வேண்டும். எப்போதும் அகௌண்ட்ஸ் தானா”
“இன்றைக்கு வேண்டாம் ஆஷா. நீங்க போயிட்டு வாங்க”
சமீப காலமாக ஷ்யாமிற்கு மூட் எப்போதும் அப்செட். சுந்தரி அவன் கண்ணில் படவே இல்லை. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறாள்.
மாலைகளில் சரயுவுடன் வெளியே போய்விடுகிறாள். கைபேசியில் அழைத்தால் அழைப்பை ஏற்பதில்லை. அவர்களுக்கென பிரத்யேக லிங்க்கில் எத்தனை மெசேஜ் போட்டும் பதில் இல்லை.

“ஐயோ..! ராகுல் கூட தனியாக என்னால் முடியாது. என் பிரெண்ட்ஸ் என்ன பேசினாலும், கிண்டல் செய்தாலும் என்னை முறைப்பான். நீ ராகுல் துணைக்கு வா”
ராகுல் “ஏய் நான் என்ன பண்ணேன் உன்னை”
ஆஷா “உஷ்... கொஞ்சமாச்சும் பொறுப்பாக நடந்துக்கோ, வாங்கப் போகலாம்”
ஷ்யாம் “சரி போகலாம்.இந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம்” என்றவன் அவனால் முடிந்த அளவு நேரம் கடத்தியும் ஆஷா அங்கேயே உட்கார்ந்திருந்தாள். இனியும் ஆஷா விடமாட்டாள் என்று அறிந்த பின்னே மூவரும் கிளம்பினார்கள்.

ஆஷா முகத்தில் உற்சாகம். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வாகன நிறுத்துமிடம் தேடி எல்லாம் நிறுத்தி உள்ளே போகும் போதே ஆஷா அவள் பாட்டை தொடங்கிவிட்டாள் “உங்களால் நான் முக்கியமான பாட்டெல்லாம் மிஸ் செய்துட்டேன். இப்படியா லேட் செய்வீர்கள். உங்களையெல்லாம் நான் நம்பிட்டு இருக்கிறேன் பாருங்க”
“ஏய் நாங்கள் தான் நீ போ சொன்னோமே”
“இப்படி பொறுப்பில்லாமல் இருக்காதே ராகுல். ஷியாம் பையாவும் கல்யாணம் செய்யணும் தானே.அதுக்கு அவனுக்குப் பெண் கிடைக்கவேண்டும் தானே. இப்படியே எங்கே பார்த்தாலும் சண்டை, சச்சரவு இழுத்து வந்தான் என்றால் யார் பெண் கொடுப்பார்கள்”
“ஓ... என் செல்லத்துக்குத் தான் எத்தனை அறிவு”

ஆஷாவை கொஞ்சி பேசிக்கொண்டே நடந்து வந்தவனுக்கு அதிர்ச்சி.அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை.
 
Last edited:

swwee

Active member
Wonderland writer
16. கண்ணே கலைமானே


நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் நடு பிரதான இடத்தில் பஞ்சாபி பாடகர் பாடிக்கொண்டிருக்க, போகும் வழியெல்லாம் சின்ன சின்ன ஸ்டால் அமைத்து விளையாட்டு, உபயோக பொருட்கள், சாப்பாடு என்று நிறைய இருந்தது.அதில் ஒரு கடையில் பஞ்சாபி பாடகரை விட அதிக கூட்டம்.

அந்த கூட்டம் நிறைந்த ஸ்டால் பெயர் பீர் ரேஸ். கருப்பு ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், நீல நிறத்தில் புடவை. கண்களில் ஒளி மின்ன ஒவ்வொரு முறை அந்த பெண் பீர் கிளாஸ் கையில் தூக்கி காட்டி ஒரே மடக்காகக் குடிப்பதைப் பார்க்கும் போதெல்லாம் அவனால் சரியாகச் சுவாசிக்கக் கூட முடியாமல் போனது.

கார் நிறுத்திவிட்டு கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும் இடத்தை அடைந்தவன், ராகுல் சிலை போல உறைந்து நிற்பதைப் பார்த்தவன் “என்ன இங்க நின்னுட்டிங்க?” என்று கேட்டான்
ஆஷா “ஆஹ் பைய்யா வா நாமும் அந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம்” என்று சொல்ல ராகுல் ஷ்யாம் முகத்தை திருப்பி காட்டி “அந்த பெண்ணை உனக்குத் தெரியுமா பார்” என்று கேட்டான்

பளிச் மேனி, விரிந்த கூந்தல், புடைவையிலும் கவர்ந்து இழுக்கும் பெண்ணை பார்த்தவனுக்கு நம்ப முடியவில்லை. சுந்தரி!விறுவிறுவென நடந்து சென்று பார்த்தவனுக்கு கோபம், எரிச்சல், சிரிப்பு, பூரிப்பு என்று எதைக் காட்ட என்று தெரியவில்லை.

சுந்தரியுடன் போட்டி போட்டு நிறைய பேர் குடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்க சுந்தரி அவள் 21ம் கிளாசையும் தூக்கிக் காட்டி குடித்துக்கொண்டிருந்தாள். ஷ்யாமை கவனித்து சிரித்தாள். அந்த கோபத்திலும் அவள் சிரிப்பு சிலிர்ப்பாக இருந்தது. நேரம் தவறாமல் சாப்பாடு, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் அவர்கள் ஊருக்கே உரிய மேக் -அப் அழகாக மிளிர்ந்தாள்.

மஞ்சள் விளக்குகளின் நடுவில் ஒப்பனையோடு அழகாக கவிதையாகத் தெரிபவள் கையிலிருக்கும் பீர் மட்டும் அவனை எரிச்சல் படுத்தியது. அந்த ஸ்டால் பக்கம் போகவும் புரிந்தது அது சரயுவின் ஸ்டால். சரயு பில்லங்கில் அமர்ந்திருக்க சுற்றிப் பார்த்தான். சுந்தரியை விட அதிகமாக பீர் குடிப்பவர்களுக்கு ஒரு ஸ்கூட்டி பரிசு. போட்டியில் பங்குகொள்ள எட்டு பீர் பாட்டிலுக்குப் பணம் கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு மேற்கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். அப்படி சுந்தரியுடன் போட்டிப் போட்டு யாருமே அதுவரை ஜெயிக்கவில்லை.

ஏனோ ஆஷாவுடன் இருப்பதால் கவனிக்காதவாறு மேற்கொண்டு நடந்து ஆஷா நட்பு கூட்டத்துடன் இணைந்துகொண்டார்கள். ஆஷா தோழிகள் நிறையப் பேர் அவரவர் பாய் பிரெண்ட்ஸ் கூட்டி வர அவர்களுக்குள் கொண்டாட்டம் தொடங்கியது. ஷ்யாம் கவனம் கவர அத்தனை பெண்களும் முயல அவன் பார்வை முழுவதும் சுந்தரி என்ன செய்கிறாள் என்பதில் தான்.

கூட்டம்,சத்தம், வெளிச்சம் எல்லாமே அவன் அமைதியைக் குலைக்க, உற்சாகமாக ஒவ்வொரு க்ளாஸையும் தூக்கிக் காட்டி குடிப்பவள் அவன் முகத்தில் புன்னகையை நிறுத்தினாள்.ஐந்தாறு கிளாசிலேயே எல்லோரும் சோர்வாக

இத்தனை குடித்தும் எப்படி இவள் நிலையாக இருக்கிறாள். மற்றவர் வேகவேகமாக குடிக்கச் சுந்தரி மெதுவாகக் குடித்து முடித்துப் பேசினாள்.

குறுந்தாடி வைத்திருந்த அரை கிழம் ஒன்று “நீ நான் சொல்லும் பீர் குடி. உன்னுடன் போட்டியிட வருகிறேன். என்னை விட ஒரு பாட்டில் அதிகமாக குடித்தால் போதும் நான் ஸ்கூட்டி வாங்கி தருகிறேன்” என்று வேடிக்கை பார்ப்பவர்கள் வாங்கவேண்டுமென்றே வைத்திருந்த பீர் கேன்கலிருந்து எடுத்து வைத்து போட்டிக்கு அழைத்தார்.

அதுவரை சிரித்த முகமாக இருந்தவள் அவரை பார்த்து “நான் இதுவரை நிறையக் குடித்துவிட்டேன்.அதனால் உங்கள் அளவிற்குக் குடித்தாலே நான் ஜெயித்தவள் தான். உங்கள் கையில் இருக்கும் அந்த வாட்ச் போதும் எங்களுக்கு.ஸ்கூட்டி வேண்டாம்” என்றாள்

ஜோராகச் சிரித்தவர் “சாரி வா போட்டி தொடங்கலாம்” சொல்லி மேஜை தயார் செய்து அமர்ந்தார்.

அங்கே இருப்பவர்களில் சிலருக்கு அவர் யாரென்று தெரிந்திருந்தது.அந்த கன்வென்ஷன் சென்டர் நடத்தும் முதலாளி. பணக்கார குடும்பத்தின் இரண்டாம் வாரிசு. இளமையான மனம், உற்சாகமான ஆள், புதுமைகளை வரவேற்பவர், ஷ்யாம் போல செழிப்பான வாரிசுகளுக்கு ஒரு ரோல் மாடல் போலத் திகழ்பவர். அவர் போட்டியில் பங்குகொள்ள மொத்த இளைஞர் கூட்டம் அவரை உற்சாகப்படுத்த அங்கே கூடியது.

“கமான் அங்கிள்” என்று எல்லோரும் கூவ ஷ்யாம் அமைதியாகக் கவனிக்க தொடங்கினான். மெது மெதுவாக ஒரு மணிநேரத்தில் அவர் ஆறு பீர் கேன்கள் காலி செய்ய சுந்தரியும் ஐந்து கேன்கள் காலி செய்து முழுதாக சோர்வானாள். அவளால் முடியவில்லை என்று எல்லோரும் அவளையே கவனிக்க ஆறாவது கேனும் பாதி வரை காலி செய்தாள்.

இனி முடியாது என்று அவர் கண்கள் சுருக்கி செய்கையில் சொல்லிச் சிரிக்க, சரிசரி என்பது போல தலையை ஆட்டியவள். கண்களுக்குத் தெரிந்த ஷ்யாமை அழைத்து மீதம் இருக்கும் பீரை கிளாஸில் கொட்டச் சொன்னாள். அப்படிக் கொட்டியதில் சுந்தரி குடித்த பீர் குறைவாக இருக்க சுந்தரி “வாட்ச் கழட்டுங்கள் சார்” என்று அவர் வாட்சை வாங்கிக்கொண்டாள்.

சுந்தரி கையிலிருக்கும் வாட்ச் வைத்து நூறு ஸ்கூட்டி வாங்க முடியும். மது போதையில் சுயம் இழத்தல் என்பது பொதுவானது. சுந்தரியைப் போதை ஆட்கொள்வது புலப்பட சரயுவிடம் ஸ்டால் வைத்ததற்கு பில் செட்டில்மென்ட் நாளை பார்த்துக்கொள்ளலாம் பத்திரமாக வீடு வந்து சேர் என்றவள் ஷ்யாம் பார்த்து “என்னை கூட்டிட்டு போ” என்று அவன் மீது சாய்ந்துகொண்டாள்.

அந்நேரம் கடையில் கூட்டம் இருக்க சரயுவால் சரி என்று மட்டுமே சொல்ல முடிந்தது. பத்திரமாக காருக்கு அழைத்துச்சென்று சீட்டில் அமர்த்தி சீட் பெல்ட் பொருத்தினான். எப்போதும் போல அவன் கெஸ்ட் அவுஸ்க்கு காரை செலுத்தினான். சின்ன தூக்கம் போட்டு எழுந்திறித்தவள், அனத்த தொடங்கினாள். “சூடா இருக்கிறது ஷ்யாம், தண்ணி வேணும் ஷியாம்”

“ம். இப்போ கேள். ஏன் அவரோடு போட்டிக்கு போனே? வீட்டுக்கு கூட்டிட்டு போ கேட்க தெரிந்தவளுக்கு எனக்காக குடியென்று கேட்கத் தெரியலை பார்”
“சாரி.உன்னை டிஸ்டர்ப் செய்துட்டேன்”
“ஏய் லூசு”
சிரித்தவள் “அவர் பேசிய தொனி எனக்கு பிடிக்கல ஷ்யாம்”
“அதுக்காக..?” கேள்வி கேட்க அவள் பக்கம் திரும்பியவன் சுந்தரி நெளிவதைக் கவனித்தான்.
“என்ன ஆகிறது சுந்தரி” பதறினான்
“ஷ்யாம் கிட்டத்தட்ட எட்டு லிட்டர் குடித்திருக்கிறேன். ரெஸ்ட் ரூம் போகணும்” மேலும் நெளிய வேகமாக காரை செலுத்தி வீட்டிற்குக் கூட்டிச் சென்றான்.

அந்த இரவு முழுக்க சுந்தரி அவளும் தூங்கவில்லை அவனையும் தூங்க விடவில்லை. தலைவலி, வாந்தி, கூடவே பாத்ரூம் பக்கமே உட்கார்ந்து கொண்டாள்.
“எதற்கு உனக்கு இந்த வேலை?”
“ஷ்..சரயுவிற்கு ஒரு ரெஸ்டாரண்ட் வாடகைக்கு எடுக்க வேண்டும்.எத்தனை நாள் இந்த வண்டியிலே காலம் கழிவது”
“ இப்படியா?”
“டி.ஜே நைட், அங்கே மது விற்பனைக்குத் தடையில்லை. வரும் கூட்டமும் இளைஞர் கூட்டம், அங்கே என்ன பிஸ்னஸ் செய்திட முடியும்?”
“ஆனாலும்..!”
“அட போ…”
“எப்படி அத்தனை குடித்தும் ஸ்ட்ராங்கா நின்னே”
“ஐயோ ஷ்யாம். நான் குடித்தது 4% ஆல்ககால் இருந்த பீர். போட்டிக்கு வந்தவர்கள் குடித்தது அவர்கள் இஷ்டம் பொருத்து.அதில் நிறையப்பேர் தேர்ந்தெடுத்து மார்க்கெட்டில் கிடைக்கும் 8% பீர்”
“பலே”
“அந்த அதிமேதாவி வந்து கெடுக்காமலிருந்திருக்கலாம்”
“உனக்கு ஏன் அவரை பிடிக்கவில்லையா. ரொம்ப நல்ல மனிதர். நல்ல ஊக்குவிப்பார்”
“பிடிக்கவில்லை, அவர் நடிக்கிறார். உற்சாகமாக இருப்பது போல நடிக்கிறார். அது என் கண்ணுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது”
“ஏன் நடிக்கவேண்டும்?”
“ஷ்யாம் நாம் எல்லோரும் ஒரு வகையில் தாழ்வுமனப்பான்மையுடன் போராடுபவர்தான்.சிலர் போராடும் பேர்வழி என்று இப்படி இருப்பார்கள்”
“இருக்கலாம். சரி சொல்லு நான் என்ன மாதிரியான மனிதன்”
“நீயா..? ஆள் மயக்கி”

அவள் பதிலில் ஷ்யாமிற்கு அதிர்ச்சி. அவன் பேச்சின்றி அவளையே பார்க்க “ஷ்யாம் நீ முக்தியைக் காப்பாற்ற நினைப்பது சரி. ஆனால் இப்படி சண்டை போட்டு, முட்டாள்தனமாக இதோ இந்த பெரிய தலைகளுக்கெல்லாம் நான் புத்திசாலி, பொறுப்பானவன், காப்பாற்றும் வல்லமை கொண்டவன் என்று நிரூபிக்கும் அவசியமில்லை. முக்தி போலவான நிறுவனத்தை ஆட்கொள்வதில் எல்லோருக்கும் ஆசை உண்டு. அதிலும் முக்தி முழுக்க சுயநலம் நிறைந்த கூட்டம் அதிகம். முதல் தலைமுறை மேல வர உழைத்த தலைமுறை, இரண்டாம் தலைமுறையிலேயே தொடங்கிவிட்ட பொறாமை, வஞ்சம் இப்போது முக்தி போலவே வளர்ந்து நிற்கிறது. ராஜ்பரகாஷ் முக்தி தொடங்கிய வங்கி எதற்குத் தெரியுமா? முக்தியை அவர் காலம் முழுக்க காப்பாற்ற வேண்டுமே என்று தான். உன்னை முக்தியைத் தவிர்த்து வேறு நிறுவனம் தொடங்க அவர் ஊக்குவிப்பது அதனால் தான். உன் குடும்பத்திற்கு முக்தியைக் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது என்பதால் அதன் தலைமை இடத்தில் இருக்கிறீர்கள்.உங்களைப் போல ஆள நினைக்கும் மற்றவர்க்கு உங்களால் என்ன கொடுக்க முடியும்? பார் முக்தியை விரிவாக்கம் செய்கிறேன் என்றெல்லாம் விட்டு, முக்தி சரிந்தால் எதைக் கொண்டு நிமிர்த்தலாம் என்றெண்ணி அதற்காக உழைப்பதே இங்கே நீ செய்ய முடிகிற காரியம்”

அவளுக்குத் தெரிந்தது அவள் பேச சிலை போல அமர்ந்திருந்தவன் பேசத் தொடங்கினான் “எப்படி சும்மா விட சொல்றே நீ? அந்த கெட்டவன் யாரென்று கண்டுபிடித்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டாமா”

“முட்டாள்” என்று சொல்லி அவள் சிரிக்க ஷ்யாமிற்கு கோபம் வந்தது.

சுந்தரி அவள் கண்டுபிடித்ததை முழுதாக விவரிக்கத் தொடங்கினாள். “ராஜ் பிரகாஷ் முக்தி எங்கே போனாலும் தனி அறையில் தனியாகத் தான் இருக்கிறார்.ஆனால் அவருக்கு பெண் பித்து என்ற பெயர் உண்டு. முக்தி லாபம் ஈட்டும் நிறுவனம் என்றாலும் ஆயிரம் சிக்கல்கள் தினம் தினம்,அதில் பாதி சின்ன சின்ன விஷயங்களால் வெடிக்கும் பெரிய பெரிய சண்டைகள்.சேதாரம் என்னவோ நிறுவனத்தின் தயாரிப்பு வேகம் குறைவதே.இந்த பாணி கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நிகழ்கிறது. ராஜ் பிரகாஷ் முக்தி அவ்வளவு முட்டாளா என்ன? ராணி சீமா அதாவது திருமதி ராஜ்பரகாஷ் முக்திக்கு முக்தி நிறுவனத்தின் மேல் ஆசை இல்லை. ஆனால் அவள் குழந்தையின் தகப்பனுக்கு முக்தி மேல் பெரும் மோகம். ராணி சீமாவிற்கே தெரியாமல் அவர்கள் பெயரில் சொத்து சேர்கிறது. ராணி சீமா ராஜ் பிரகாஷ் முக்தியை எங்குமே அவள் குழந்தைக்கு கார்டியன் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.இதெல்லாம் என்ன சொல்லுகிறது என்றால் ஷ்யாம் நீ அந்த வில்லனுக்கு இடைஞ்சல்.”

“எனக்கு ஆபத்து என்கிறாயா?”

“உன்னை நேரடியாகக் கொள்வதை விட, உன்னை முடமாக்க மட்டுமே எதிரிக்கூட்டம் நினைக்கும்.அப்படி கொல்ல வேண்டுமென்றால் இத்தனை வருடம் ஏன் விட்டு வைக்க வேண்டும். ராஜ் பிரகாஷ் முக்தியை பயமுறுத்தி பொம்மை போல வைத்துக்கொண்டு நடமாடும் ஆள் உன்னையும் அப்படி வைத்துக்கொள்ளத்தான் நினைப்பார்.பத்திரம். நீ எதிலும் நிதானமாக, பக்குவமாக செயல்படவேண்டும்” பேசியவள் அவன் மீது சாய்ந்தாள்.
 

swwee

Active member
Wonderland writer
17.நினைவுகள் கொல்லும் இரவு

ஷ்யாம் தூங்காமல் சுந்தரியின் பேச்சை மட்டுமே எண்ணி நினைவில் பின்னோக்கி சென்றான்.

ஓர் மத்தியான வேளை. இன்னமும் ஒரு வாரத்தில் ஷ்யாமிற்கு பத்தாவது பிறந்த நாள் வரப்போகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றி மட்டுமே அவனுக்கும் அவன் நட்பு கூட்டத்திற்கும் பேச்சு. ஷ்யாம் கிரிக்கெட் விளையாடிவிட்டு தாமதமாகப் போனால் அம்மா திட்டுவாளே என்று வேகமாக ஓடிச்சென்று வீட்டினுள் நுழைந்தான்.

நடு கூடத்தில் அவர்கள் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் அமர்த்திருந்தனர். அம்மா ஓர் ஓரமாக நின்றபடி தலைகுனிந்து அழுதுகொண்டிருக்க, கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்த அப்பா கண்களிலும் நீர் கோர்த்திருந்தது. அவனைப் பார்த்ததும் அப்பா அவனை அழைத்து மடியில் அமர்த்திக்கொண்டார். அவன் ஆண் மகனாக பிறந்துவிட்டான் என்று பெருமை பேசினார் எப்போதும் அவர்கள் வீட்டிற்கு வந்து காசு வாங்கிப் போகும் தாத்தா. கைத்தடியை ஊன்றி நடக்கும் தாத்தா ஒருவர் அவன் அப்பாவை மிரட்டினார்.அதற்கு அவன் அம்மா அங்கேயே அழுதுவிட்டார்.

அவர்கள் எல்லாம் கிளம்பிச் சென்றபின் அம்மா அவள் அறையினுள் சென்று பூட்டிக்கொண்டாள். எத்தனை முறை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. அவன் தந்தையோ அவனிடம் பேசவே இல்லை. அவன் பேச சென்ற போதும் வெளியே போய் விளையாடு கண்ணா என்றுவிட்டார். மேற்கொண்டு அவன் தலையைத் தடவி அழுதார். ஷெண்பா என்று அம்மா கதவைத் தட்டி அழுதும் பார்த்தார் அம்மா கதவை திறக்கவில்லை. எப்போதும் போல அவனை கவனித்துக்கொள்ளும் பாட்டிம்மா அவனை சாப்பிடவைத்து தூங்கவைத்தார்.அவன் பக்கம் படுத்துக்கொண்டு கட்டியிருக்கும் புடைவையால் கண்களைத் துடைத்துக்கொண்டே இருந்தார்.

அடுத்து இரண்டு நாட்களில் வீடு அமைதியாக இருந்தாலும் அம்மா அறை விட்டு வெளியே வந்தாலும் அவனை எப்போதும் பக்கமே வைத்துக்கொண்டு நிறைய அறிவுரை சொன்னாள். அப்பாவைத் தொல்லை செய்யக்கூடாது, அவன் காரியங்களை அவன் தான் பார்த்துகொள்ளவெண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், தாத்தா அப்பா போல முக்தி நிறுவனத்தை பார்த்துக்கொள்ள வேண்டும், மறக்காமல் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நிறைய பேசினார். அன்றைய அறிவுக்கு அம்மா விட்டு போகப் போகிறாள் என்று தெரிந்திருந்தால் உயிரைக் கொடுத்தேனும் தடுத்திருப்பான் அவன்.

அவன் பத்தாவது பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். அம்மா இடத்தில் ராணி சீமா நின்றிருந்தார். அவன் எத்தனை முறை அம்மா எங்கே என்று அவன் கேட்டும் அப்பா பதில் சொல்லவில்லை. அவன் பெரியப்பா விழா முடிந்ததும் அம்மா இனி வரமாட்டாள், இவள் தான் இனி உனக்கு அம்மா என்று ராணி சீமாவை காட்டினார்.

அவன் ஏன் என்ற கேள்விக்கு அது அப்படித்தான் நீ சின்ன பையன் பெரியவன் ஆனதும் புரியும் என்றார்.

ராணி சீமா வந்த பின் அந்த வீடு கலை இழந்தது. வீட்டில் வேலைபார்க்கும் எல்லோருமே ராணி சீமாவிற்கு பயந்தனர். அப்பாவின் இரண்டாம் மனைவி என்பது புரிந்திருந்தது, அம்மா இடத்தில் இனி இவர் தான் என்று சுலபமாக எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவித்தவன் அவன் மட்டும் தான்.இத்தனை குழப்பத்தில் அவன் ராணியிடம் பேசுவது அரிதிலும் அரிது. யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவளிடம் ஷ்யாம் எங்கே என்று கேட்டால் அவர்கள் எதிரில் இருவரும் சம்பிரதாய பேச்சுகள் பேசிக்கொள்வார்கள்.

ராணி சீமாவிற்கு மகன் பிறந்தான். அப்போது கொஞ்ச நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தான். குட்டி பையன் கூட விளையாடிக்கொண்டு, அவனை கொஞ்சிகொண்டு நாட்கள் நன்றாக போனது.

திடீரென்று ஒரு நாள் ராணி சீமா அப்பாவை நடுகூடத்தில் வைத்து திட்டி, அசிங்கமாக பேசி சண்டைபோட்டார். அதன் பின் தம்பி பையன் பிறந்த பின்னான ராணி சீமா முற்றிலுமாக மாறி போனார். தம்பி பையன் சஞ்சய் பிரகாஷ் முக்தியை அவன் தொடகூடாது என்று மிரட்டினார், மீறி அவனோடு விளையாடினால் இரக்கமே இல்லாமல் அடித்தார். ராணி சீமா அடித்தார் என்று கேள்விப்பட்டு சண்டைபோட்ட அப்பாவிடம் உன்னை அடிக்க முடியவில்லை, இனி உன் மகனை அடிப்பேன் என்றார்.

ஷ்யாமிற்கு அவன் செய்யும் தவறு என்ன ராணி சீமா ஏன் அரக்கி போல நடந்து கொள்கிறாள் என்ற குழப்பம் அதிகமானது. டீன் ஏஜ் பையன்களுக்கு உரிய துள்ளலான காலத்தில் தான் அவன் அப்பாவின் முதல் கூத்து வெளியானது. ராஜ் பிரகாஷ் முக்தி மும்பையில் ஸ்டார் ஹோட்டலில் தகாத உறவில் இருந்து மாட்டிக்கொண்டார். கேள்வி பட்டதும் உடைந்து போனான். நண்பர்கள் எல்லாம் கிண்டல் செய்ய அசிங்கமாக உணர்ந்தான்.

அதன் பின் ஒரு நாள் ஷ்யாம் அவன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அவர்கள் எதிரில் அவன் அப்பாவை தரக்குறைவாக ராணி சீமா பேச இன்னமும் குன்றி போனான். அவன் பள்ளி காலம் முடிந்து கல்லூரியில் சேரும்போது இருந்த அவன் அப்பாவின் மரியாதை மொத்தமாக உடைந்து சிதறி போனது. என்ன பணம் இருந்து என்ன! ஒழுக்கம் வேண்டுமல்லவா என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேச ஷ்யாம் நண்பர்களை குறைத்துக்கொண்டான்.

இயல்பிலேயே இருக்கும் வியாபாரம் செய்யும் எண்ணம் அவனை உந்த சின்னதாக கடன் கொடுக்கும் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றை தொடங்கினான்.அப்படி அவன் கடன் கொடுத்த நிறுவனம் திவாலக போன நேரம் அதை அவனே எடுத்து நடத்த தொடங்கினான். அப்படி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனதை நிறுவினான். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர ஷாமுக்தி என்று அதை விரிவு செய்து தக்க ஆட்களை வைத்து நடத்த தொடங்கிவிட்டான்.

அவன் வயது கூட கூட ராணி சீமாவுடன் நாடக சம்பாஷனை குறைந்து, நின்றே போனது. இதில் ராணி சீமா என்றாலே நிம்மதி குலைக்கும் நினைவுகள் வர அவரை கவனிக்காமல் இருந்துக்கொண்டான்.

அவனாக ஆர்வமாகச் செய்த விஷயம் என்றால் அது ஷாமுக்தி மட்டுமே. அதற்கு முன் பைனான்ஸ் திறந்தது கூட என்ன செய்வது என்று தெரியாமல் இதையேனும் செய்வோமே என்ற எண்ணத்தில் செய்தான். நன்றாக கவனித்துப் பார்த்தால் ஷாமுக்தி நிறுவ அவன் கஷ்டப்படவில்லை. முக்தியின் வாரிசு என்கிற பெயர் உதவியது.

அசைந்து எழுந்தவள் சுந்தரி தூங்கலையா ஷ்யாம் என்று கேட்டுவிட்டு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டாள். வெளியே வரும் போது முற்றிலுமாய் தெளிவாக தெரிந்தாள்.

“என்ன ஆச்சு? ஏன் தூங்கலை”
“தூக்கம் வரலை”
“ஏன் ஷ்யாம்? நான் பேசின விஷயம் பற்றி யோசனையா”

அவன் பதில் பேசாமல் இருக்க, “புரியுது. மெத்த அறிவும், அதிகப் பணமும் என்ன செய்யும் தெரியுமா? எதையுமே ஆராய்ந்து பார்க்கும். கேள்வி கேட்கச் சொல்லும். அதை பயம், அகங்காரம், திமிரென்று பெயரில் விதவிதமாக சொன்னாலும் உண்மையை உணரும் மனிதன் தணிந்து தான் போவான். அப்படி தணிந்து போவதில் என்ன கிடைக்கும் நினைக்கிற? நிம்மதி. உன் அப்பா அப்படித் தணிந்து போவது அந்த நிம்மதிக்காக என்பது என் எண்ணம்”

“அப்படியா? அவர் கோழை இல்லைன்னு சொல்ல வரியா?”

“என்னைப் பொறுத்த வரையில் அவர் உன்னையும் உன் அம்மாவையும் காப்பாற்ற அவரால் முடிந்தது செய்திருக்கிறார்”

சுந்தரி பேச்சை கேட்டவன் ஏளனமாகச் சிரிக்கச் சுந்தரி "ஷ்யாம் சில நேரம் முட்டாளாக இருப்பது தான் நல்லது" என்றுவிட்டு அவன் பக்கமே படுத்துக்கொண்டாள்.

“ஏன் அப்படி சொல்லுற. என்னை உலகம் முட்டாள் என்று நினைத்துப் பார்த்துச் சிரிக்கும் என்ற நினைப்பே எரிச்சலாக இருக்கிறது”

சுந்தரிக்கு ஷ்யாமை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. அவன் அப்பாவின் நிலைமை எடுத்து சொன்னதற்கு இப்பிடி கோபப்படுகிறானே அவன் தாய்க்கு நடந்திருக்கும் அநியாயம் தெரிந்தால் என்ன செய்வான்.
 

swwee

Active member
Wonderland writer
18. வரலாறு

முக்தி நிறுவனம் 60களில் இனி இந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்று தெரியவர அப்போது இருந்த ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து தொடங்கிய நிறுவனம். முக்தி குடும்பம் நிலம், பணம் கொடுக்க மற்றவர் அவர்கள் உழைப்பை கொடுக்க உருவானது. ராஜ் பிரகாஷ் முக்தி அவர் பால்ய காலத்திலிருந்து முக்தி ஸ்டீல்ஸ் எப்படி வளர்ந்தது என்று பார்த்துக்கொண்டே வந்தவர்.

ராஜ் பிரகாஷ் முக்தியிடம் தலைமை மாறிய போது அதைப் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காரணம் ராஜ் பிரகாஷ் விட சிவாஜி பிரகாஷ் புத்திசாலி, மக்களை அறிந்தவன் என்ற பெயர்.

சிவாஜி பிரகாஷ் முக்தி தத்தெடுக்கப் பட்ட வாரிசு என்பதால் அவரை நிராகரித்துவிட்டார் தந்தை என்கிற எண்ணம் எல்லோருக்கும். சிவாஜி பிரகாஷ் அந்நேரம் விபத்தில் சிக்கி தன் கால்களை இழந்திருந்தார். உடலும் சுகவீனமாக இருக்க, ராஜ் பிரகாஷ் முக்தி தான் முக்தி ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை ஆள் என்று அறிவிக்கப்பட்டார்.

ஆமாம் நான் தான் இனி என்று நிற்காமல் ராஜ் பிரகாஷ் முக்தியும் அண்ணன் மனம் கஷ்டப்படுமே என்று சிலது விட்டுக்கொடுக்கத் தொடங்க அது இப்போதுவரை விட்டுகொடுப்பதிலேயே செல்கிறது.

தனக்கு கீழ் வேலை பார்த்துக்கொண்டிருந்த செண்பாவை திருமணம் செய்து கொண்ட ராஜ் பிரகாஷ் முக்திக்கு மகன் பிறந்ததும் இன்னமும் சலசலப்பு கூடியது. ராஜ் பிரகாஷ் யாரையும் கண்டுகொள்ளாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் சின்னதாகத் தொடங்கியது பிரச்சினை. காலம் போகப் போக ஒரே சமயம் வெளிநாட்டு ஆர்டர் கை நழுவியது, யூனியன் ஸ்ட்ரைக், மற்றும் இரண்டு கோஷ்டி தகராறு எல்லாம் எழ நிறுவனம் ஆட்டம் கண்டது. ராஜ் பிரகாஷ் முக்தியின் இயலாமை மட்டுமே இதற்கு காரணம் என்று ஒரு கூட்டம் அவர் மீது அழுத்தம் கொடுக்க நிலை குலைந்தார் மனிதர்.

மொத்த கிராமமே சேர்ந்து கட்டிய கனவு இது, இதைப் பாதுகாக்க உனக்கு தெரியவில்லை, முக்தி உடைந்தால் கிராம மக்களுக்கு வேலை கிடைக்காது, வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் புனே மாநகரம் உயர உயர விலை வாசிகள் உயரும் முக்தி அதற்கு ஏற்றார் போல சம்பளம் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் மக்கள் தூற்ற தொடங்கி விட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில் சீமா நிறுவனத்தார் தங்கள் பெண்ணை ராஜ் பிரகாஷ் முக்தி திருமணம் செய்துகொண்டால் பணம் கொடுத்து உதவுகிறோம் என்று சொல்ல மற்றவர்கள் ஒன்று கூட நடத்தியதுதான் ஷ்யாமின் இந்நாள் வேதனை.

வேற்று இன, மொழி பெண்ணை கட்டிக்கொண்டான் என்கிற கோபம், ராஜ் பிரகாஷ் முக்தி இந்த அழுத்தத்தில் நிறுவனத்தை விற்றால் கூட நமக்கு லாபம் வரும் என்கிற சுயநலம், பதவி விலகி வேரால் வரட்டும் என்கிற வஞ்சம் அனைத்தும் சேர்த்து செண்பா, ராஜ் பிரகாஷ் முக்தியைப் பிரித்தது. இதெல்லாம் இயல்பாக நடந்ததா என்றால் கிடையவே கிடையாது. நடத்தப்பட்டது. இத்தனை பேரிடர்க்கும் காரணமான மனிதர் இது தான் தீர்வு வருந்தாதே தைரியமாக இரு என்று ராஜ் பிரகாஷ் முக்தியின் முதுகில் தடவி சமாதானம் செய்த சிவாஜி பிரகாஷ் முக்தி மட்டுமே.

சுயநலம் என்னும் பேய் மனிதனை என்ன செய்யும் என்பதற்கு சிவாஜி பிரகாஷ் முக்தியே உதாரணம். தந்தை, தாய் இறந்து போக சிவாஜியை தன் மகனாக சுவீகாரம் எடுத்து வளர்த்தார் ராஜ் பிரகாஷ் தந்தை.

முதல் மகன் என்று தூக்கி வளர்த்த மகன் அல்லவா, தந்தையுடன் சிறுவயது முதலே இருந்து முக்தியை எடுத்து நடத்துவது முற்றிலும் அறிந்திருந்தார்.அதில் ஆர்வமும் கொண்டிருந்தார். விபத்தில் பாதி உயிராக தப்பி பிழைத்தவர் அவர் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் ராஜ் பிரகாஷ் முக்தி நிறுவனத்தைக் கவனிக்கும்படி ஆனது.

அங்கே தொடங்கியது சிவாஜியின் பிடிவாதம். தந்தையும் மகனும் தெளிவாக பேசியிருக்கலாம். அப்படியும் பேச்சு வார்த்தை நடக்கவில்லை. பெரியவர் தானும் படுக்கையில் விழுந்தயிற்று, அண்ணனும் அவன் உடல் சுகவீனதில் கஷ்டபடுகிறான் நீ மட்டுமே முக்திக்கு எதிர்காலம் என்றுவிட்டு ஓய்விற்கு சென்றுவிட்டார்.

சிவாஜிக்கு அது பெரிய துரோகமாகத்தெரிந்தது. ராஜ் பிரகாஷ் அவர் காதலித்த பெண்ணை மணந்து கொண்டார். சிவாஜியால் அவர் காதலை காதலித்த பெண்ணுக்குச் சொல்ல கூட முடியவில்லை. அவர் ஊனம் அவரை மனதளவிலும் ஊனம் ஆக்கிவிட்டது. ஷ்யாம் பிறந்ததும் சிவாஜி எல்லோருக்கும் மறந்தே போனார்.

ராஜ் பிரகாஷ் முக்தி பெயரளவில் பதவியிலிருந்து கொண்டு அண்ணனை எல்லாம் கவனிக்க வைத்தார், ஆனாலும் சின்ன சின்ன விஷயங்கள் பெரிதாக வலித்தது சிவாஜிக்கு. ராஜ் பிரகாஷ் முக்த்தியின் அறியாமையும், வெகுளித் தனத்தையும் பயன்படுத்தி கொண்டார்.

சீமா குடும்பம் பெண்ணுக்கு வரன் தேடுகிறது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாதவர் ராணி சீமா மனதை வென்றிருந்தவர் சாதுரியமாக செய்த வினை ராணி சீமா ராஜ் பிரகாஷ் முகத்தியின் இரண்டாம் மனைவி.

அன்பான, வெகுளியான ராணியை அவர்வசம் இழுக்க அவர் செய்த காரியம் சீமா நிறுவனத்தின் லாபத்தை எடுத்து ராஜ் பிரகாஷை தனி நிறுவனம் தொடங்க வைத்து சீமா நிறுவனத்தை இழுத்து மூட வைத்தது.

சீமா பார்வையில் அது ராஜ் பிரகாஷ் முக்தி செய்தது. உண்மை என்னவென்றால் சீமா நிறுவனத்தைக் கவனிக்கும் பொறுப்பை சிவாஜி அவர் கையில் வைத்திருந்தார். நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கண்டறிந்து முதலீட்டு திரட்டுவத்ற்குள் முடிந்தது சீமா நிறுவனம். ராஜ்பரகாஷ் முக்தியால் எதுவும் செய்ய இயலவில்லை, அண்ணனை குறை சொல்லவும் முடியவில்லை.

அதுவரை இருந்த சீமா மாறி போனார். அவரால் எந்த விதத்தில் எல்லாம் ராஜ் பிரகாஷ் முக்தியை வருத்த முடியுமோ அதை செய்ய தொடங்கிவிட்டார். தூண்டுகோல் பின்னிருந்து தூண்டிக்கொண்டே இருக்க சீமா அடங்கவில்லை.

இந்த முக்தி குடும்ப சண்டையில் தீராமல் இந்த நொடி வரை வலிக்க வலிக்க தண்டனை அனுபவிக்கும் ஆள் என்றால் அது ஷெண்பா மட்டுமே. அவர் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியே!

சிவாஜி பிரகாஷ் முக்திக்கும் ராணி சீமாவிற்கும் உள்ள தொடர்பும், சுந்தரி அவள் அறிந்த தகவல் வைத்து சிவாஜி என்னவெல்லாம் செய்கிறார்,அதன் காரணம் என்னவாக இருக்க கூடும் என்று சொல்ல ஷ்யாம் வலுவிழந்து போனான். ஷென்பா இருக்கும் இடம் அவனுக்கு தெரியும். அவர்களைப் பார்க்க அவனுக்கு தெம்பில்லை.

“சுந்தரி, போதும்! இந்த நாளுக்கு இது போதும்” என்றவன் கண்களிலிருந்து நீர் வழிவதைப் பார்க்க அவளுக்கு பொறுக்கவில்லை.

சந்திர கிரணம் அந்த கண்ணாடி சுவரின் ஒளி வீச, அதன் ஒளியில் அவன் கண்ணீர் நிற்கும் கண்களைப் பார்க்க நேர்கையில் ஆமாம் போதும் என்றவள் கண்களை மூடிக்கொண்டாள். அத்தனை நேரம் வராத தூக்கம் வர, அவனும் கண் அயர்ந்தான். எப்போதும் போல அம்மா கனவில் வந்தாள், அவன் தலை கோதினாள்.
 
Status
Not open for further replies.
Top