3. ராட்சசன்
சீட்டு பணம் பத்திரமாக இருக்க, அத்தை வினிதாவின் உந்துதலில் சுந்தரியிடம் பொய் சொன்னவர், துயரத்தை நினைத்து அழுத கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டு “வந்து சேருவான் தானே என் மகன் ? ஒண்ணா அவ வீட்டை வித்து காசு கொடுக்கணும், இல்ல நீ ஏற்பாடு செய்த உதவிக்கு ஒத்துழைக்கணும். இத்தன நாள் என் சாப்பாட்ட தின்னு வளர்ந்தவ, கொஞ்சமாச்சும் அந்த நன்றி இருக்கும் நினைக்கறேன் பாக்கலாம் ” கறார் குரலில் பேசினார். கூடவே ஆர்வத்தை மறைக்காமல் வினிதாவை பார்த்து அப்படி என்ன உதவி வினி, சுந்தரி தான் செய்ய முடிகிற காரியம் என்று ஆச்சரியம் மறைக்காமல் கேட்டார்.
வினிதா சங்கடத்தை விழுங்கி கொண்டு உண்மை அடிநாக்கில் கசக்க “ஒன்னுமில்ல அத்த. சாதாரண விசயம்தான்” என்றாள்
“அப்போ நான் செய்றேன். எதுக்கு அந்த கூறுகெட்ட பொண்ணல்லாம் நம்பிக்கிட்டு..!”
அவர் பேசியதை கேட்டவள் விக்கித்து நின்று சுதாரித்து “அத்தை காலைலேயே கிளம்பி வந்துட்டேன்.இன்னமும் வீட்டுக்கு போகல, அம்மா தேடுவாங்க நான் வரேன்” உடனே அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.
எப்படி மண்டையை உலுக்கி சுந்தரி யோசித்தாலும் வீட்டை விற்கவேண்டும், இல்லை பணக்கார கிழவன் உதவி வேண்டும். மாமா வீட்டை விற்க தயாரில்லை, அவர் தான் அந்த சொத்தை பாதுக்காக்கும் அங்கீகாரம் பெற்ற நபர். அவருக்கு தெரியாமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது.
உதவி என்றால் அந்த உதவிக்கு அவள் செய்யவேண்டிய பணி நினைத்தால் வாந்தி வந்தது.
ஆசைக்கு ஏது வெட்கம்??? கிழட்டு நரிக்கு நாட்டாமை வேண்டுமாம்,அதற்க்கு இவளா சிக்கினாள்..!
நிறைய யோசித்தாள், முடிவு செய்துகொண்டாள். திட்டம் உருவானது. வினிதா கொடுத்த எண்ணுக்கு அவள் யார் என்பதும்,அவரை அவர் வீட்டில் சந்திப்பதாகவும். குறுஞ்செய்தி அனுப்பினாள். பதில் வந்தது "வரலாம்" என்று. கண நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தயார் ஆனாள்.
செஸ் ஃபோர்டு எடுத்துக்கொண்டாள், பையில் கத்தி ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டாள். தொலைபேசி மணி அடித்தது, சிறிது நேரம் முன் வரலாம் என்று பதில் அனுப்பிய எண். அந்த எண்ணை டெவில் என்ற பெயரில் பதிவு செய்துக்கொண்டாள்.
ஒரு வகையில் அவன் ராட்சசன் அல்ல ஏஞ்சல் என்றும் சொல்லலாம். வினிதா போல முகமூடி அணியவில்லை. நேராக அவன் கெட்ட நோக்கத்தை முன் வைத்தான். அந்த வகையில் ஐயோ பாவம் சிறகொடிந்து நரகத்தில் விழுந்த லூசிபர் என்றும் சொல்லலாம்.
அவள் எண்ண போக்கை நினைத்து சிரிப்பு வந்தது. யாருக்கு யார் வக்காலத்து. அவளை, அவள் மனத்திடத்தை அழிக்க நினைக்கும் அவனுக்கு அவள் மனமே ஆதரவாக நினைக்கிறது.
அவனுக்கு பரபரப்பு நெஞ்சில் குடிகொண்டது. என்ன சாப்பிடுவாள் இந்த பெண், என்ன செய்யலாம் அவளை ஈர்க்க. எண்ணம் ஓடியது.
துப்பறியும் நிறுவனத்தின் மூலமாக அவனுக்கு நண்பனான பிரபு சொல்லிய விஷயங்களை யோசித்தான்.
அந்த பெண்ணுக்கும் காட்டுக்குள்ள சுற்றுகிற மானுக்கும் வித்தியாசம் இல்லை. அவ்வளவு வேகமாக அவள் மூளை வேலை பார்க்கும். சுற்றி இருக்கும் ஆட்களின் எண்ணத்தை சட்டென்று அறிந்து அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்ளும் திறமை அதிகம். ஆங்கிலத்தில் survival instinct என்று சொல்லுவார்கள்.பார்க்க பாவமாக தெரிந்தாலும், அப்பாவியாக தெரிந்தாலும் சுந்தரி அப்பாவி கிடையாது. அது அவளது முகமூடி.
அவன் பிரபுவை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கையில் இருக்கும் விஸ்கியை சுழற்றிக்கொண்டிருந்தான்.
பிரபு “இந்த ஃபீல்ட்ல இருக்கிறதால சொல்றேன் சார் . ஒரு கொலைகாரன், திருடன் கூட திட்டம் போட்டு செய்தாலும் எங்கேனும் சின்ன துப்பு விடுவான். இந்த பொண்ண பத்தி என்ன விசாரிச்சும், எங்க நோண்டி பார்த்தும் என்னால கண்டுபிடிக்க முடியல. சோசியல் மீடியா ட்ரேஸ் கண்டுபுடிக்க முடியலன்ன கூட ஒரு அர்த்தம் இருக்கு. கம்ப்யூட்டர் என்ஜினீயர், சாஃப்ட்வேர் டெவலப்பர் அவளோட டேட்டா பாதுகாக்க அவளுக்கு தெரிஞ்சிருக்கும். அதெப்படி ஸ்கூல், காலேஜ்ல தெருல கூட அவளை பற்றி யாருக்கும் தெரியல?”
இப்போது அவன் ஆர்வம் கூடயது.
பிரபு அவனுக்கு தெரிந்த தகவல்களை சொல்ல தொடங்கினான். ஏழு வயதில் திருக்குறள் மனப்பாடமாக சொல்லி சாதனை படைத்த இந்த பெண், ஐந்து வயதில் மருத்துவ புத்தகங்களை மனபடமாக சொல்லவும் செய்திருக்கிறாள். அதை விடுங்க, வரிசையாக பத்து பெண்களை இடித்துக்கொண்டு வந்த பையன் இவள் பக்கத்தில் வந்ததும் எக்ஸ்களேட்டரிலிருந்து கீழே விழுந்து மண்டை ஒடிந்து பத்து நாள் ஹாஸ்பிடலில் கிடந்தான். அவள் அறிவுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும், ஆனால் அவள் ஏன் இந்த நிறுவனத்தில் இருக்கிறாள்? அவளுக்கென்று எதோ காரணம் வைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த நிறுவனமும் இயங்குவதற்கு ஒரே பெரிய பிராஜெக்ட் மட்டுமே காரணம். அந்த பிராஜெக்ட் செய்ததும் இந்த பெண் தான். ஆக இந்த பெண்ணுக்கு சுற்றி நடப்பதை தன் இஷ்டம் போல மாற்றி அமைக்கும் அறிவு இருக்கிறது.சைக்கோவா என்று கேட்டால் கிடையவே கிடையாது. கண் தெரியாதது போல நடிக்கும் பையன் கையில் நூறு ரூபாய் பணம் கொடுக்கும் அளவுக்கு கருணை நிறைந்தவள்.
“போதும் போதும் ,விட்டா பராசக்தி, மாயசக்தி என்று பூஜை செய்வீங்க போல” அவன் கிண்டலுக்கு சிரித்தவன் பிரபு, எங்கேயோ ஒரு நிமிஷம் பார்த்த பெண்ணை தேடி இவ்வளவு செலவு செய்றீங்க..! நான் ஒரு மாத காலமாக அந்த பெண்ணையே தான் பார்க்கிறேன், கவனிக்கிறேன், அவளை பற்றிதான் பேசுகிறேன். நுணுக்கமாக பார்ப்பது என் வேலை. அதில் இந்த பெண் புதிராகவே தெரிய, எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது என்று ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த பெண் பிறந்து பதிமூன்று வயது வரை மதுரையில் வளர்ந்திருக்கிறாள், அப்பா அம்மா கார் விபத்தில் இவளை காப்பாற்றி விட்டு இறந்து போக, இவள் மாமா இவளை சென்னை கூட்டி வந்து வளர்க்கிறார். எல்லோருக்கும் இருப்பது போல இவளுக்கு வீக் பாய்ண்ட் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் என்பது என் கண்டு பிடிப்பு. ஏன்னா முரளி காணாமல் போன விசயம் தெரிந்தும் அவனை திருமணம் செய்துகொள்ளும் பெண் கூட சாதாரணமாகத்தான் இருக்கிறாள் ஆனால் இவள் தினமும் அழுது அழுது அவனை காப்பற்ற துடிக்கிறாள் என்று அவருக்கு தெரிந்த தகவல் எல்லாம் சொல்லி தீர்த்தார் பிரபு.
அவனும் தான் மூன்று மாதமாக அவளை கவனித்தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெம்ஸ் மிட்டாய் வர்ணங்களில் அவள் டீ- ஷர்ட்கள் இருக்கும். கருப்பு, நீளம் வண்ணத்தில் ஜீன்ஸ் அணிந்திருப்பாள். கணினி முன் சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையில் கேரட், வெள்ளரி இல்லை ஏதேனும் ஒரு பழம் சாப்பிட்டு கொண்டு வேலை பார்ப்பாள். அவளை சுற்றி அத்தனை பரபரப்பு இருந்தாலும் அமைதியாக இருப்பாள்.
சிலசமயங்களில் சகலமும் அறிந்த ஞானி போல ஒரு பேரமைதி அவள் முகத்தில் தெரியும். சிலசமயம் கண்கள், மூக்கு எல்லாம் பிங்க் நிறத்தில் தெரியும். அழுதிருக்கிறாள் இந்த பெண் என்று நினைத்துக்கொள்வான்.
அவனுக்கு புரிந்தது, அறிவாளி இந்த பெண் என்பது. அப்படியே நிறைய சாக்லேட்டூம், பூக்களும் கொடுத்து அன்பே ஆருயிரே கண்ணே மணியே என்று அவளை கொஞ்சி,அவளுக்கு பிடித்தது எல்லாம் வாங்கி கொடுத்து கவர அவனால் முடியும். அப்படி அவன் செய்தாலும் அவளிடம் எதிர்வினை இருக்காது. அப்படியெல்லாம் செய்யவும் முதலில் அவள் கவனம் அவன் மீது திரும்ப வேண்டுமே..!
காதல் என்ன சாக்லேட், பூ, பீச் சினிமா தியேட்டர் என்றுதான் தொடங்கவேண்டுமென நிபந்தனை இருக்கிறதா என்ன?
அந்த பெரிய வெள்ளை நிற வீட்டின் முன் வந்து நின்றாள் சுந்தரி. அவள் பெயரை சொன்னதும் காவலாளி கதவைத் திறக்க, உள்ளே சென்றாள். வீட்டின் வெளிப்புற அழகை மறைத்த மரங்கள். வெளியே இருந்து கூர்ந்து கவனித்தால் மட்டுமே அங்கே ஒரு பெரிய வீடு இருப்பதை சொல்ல முடியும். உள்ளே செல்ல செல்ல வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றது போல வசதிகள் நிறைந்திருந்தது. பார்த்து சொக்கி போகாமல் இருக்க முடியவில்லை. . பணத்தை இரைத்திருக்கும் விதம் அவளுக்கு ஆச்சரியம் கொடுத்தது.
வெறுமையாக இருக்கும் இடத்தை அழகுபடுத்த ஒரு புத்தர் வாங்கி அதை மேஜை மீது வைத்து, பின்புறத்தில் செயற்கை தண்ணீர் ஊற்று கட்டி, அங்கே தினமும் காய்ந்த விழும் சருகுகளை சுத்தப்படுத்த ஆள் போட்டு என்று அழகை அழகாக வைக்க எத்தனை செலவு..!
இப்படி பணத்தில் புரளுபவருக்கு பொழுதுபோக்கு மட்டும் சாதாரணமாகவா இருக்கும்?
போயும் போயும் இந்த ஆளை பார்க்க செல்லுமுன் புத்தரையா பார்க்கவேண்டும்!
தேவைக்கு மீறி சம்பாதிக்கும் ஆளுக்கு , எதையும் வியாபாரமாக மாற்றும் பண்பு இயல்பு தானே.நொந்து கொள்ளும் விதமாக இந்த இயல்பான வியாபாரகாரன் வியாபாரத்தில் இவளை சேர்த்துவிட்டதே விதி.
அவளால் அந்த மனிதனை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது. தன் திட்டத்தை மனதில் யோசித்தாள். கொஞ்சமேனும் மனிதநேயம் இருக்கும் மனிதனாக இருக்கவேண்டுமே என்றெண்ணி கொண்டாள். அப்படி இரக்கமற்றவனாக இருந்தாலும் ஓகே. கையில் கத்தி இருக்கிறது. குடிகாரனாக இருந்தால் இரண்டு டோஸ் மெத்தடோன் மாத்திரை இருக்கிறது.ஒன்று கொடுத்தாலே ஆள் காலி.
அவள் எதிர்பார்த்தது போலவே தொண்டை வலி, தலை வலி ஆரம்பித்திருந்தது. லேசாக குளுரவும் தொடங்கி இருந்தது .
வீட்டின் கூடத்தில் நின்றவளை பணி பெண் “உட்காருங்க மேடம். சார் இப்போ வந்திருவார்” சொல்லிவிட்டு அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.
அமைதியாக நடந்து வந்து கூடத்தில் அமர்ந்திருக்கும் அவளை கவனித்தான்.
படியிறங்கி சோபா பக்கம் சென்று அவள் முன் நின்று கை நீட்டி “ஹை, ஷ்யாம் ஹியர்” என்றான்.அவன் முகம் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.
அவள் கண்களில் ஆச்சரியம். தன்னிச்சையாக கைகளை நீட்டி சுந்தரி என்றாள். பதிலுக்கு அவன் அழகான பெயர் என்றான்.
அவன் அழுத்தமான, மெதுவான குரல் கேட்டு உள்ளுக்குள் படபடப்பு. இன்னமும் கண்கள் விரிந்தது.
“என்ன ஆச்சரியம் சுந்தரி?”
மனதை மறையாமல் பேசினாள்,நான் யாரேனும் வயது முதிர்ந்த கிழமாக இருக்கும் என்று நினைத்தேன் என்றாள்.
அவன் ஆச்சரியமாகப் பார்க்க ‘உங்களுக்கு ஏதாச்சும் கோளாறா’ கேள்வியும் கேட்டாள்
அவனுக்குச் சிரிப்பு வந்தது. “ஏன் அப்படி கேட்கிறே?”
'பின்ன, இளமையா இருக்கீங்க. கல்யாண ஆகாத ஆள் போலத்தான் தெரியறீங்க..! எந்த சந்தோஷத்தையும் கல்யாணம் செய்து பொண்டாட்டி கூட அனுபவிக்கலாமே ஏன் இப்படி’ கொஞ்சமும் வார்த்தைகளில் ஃபில்டர் போடாமல் பேசினாள்.
வெளிப்படையான அவள் பேச்சுக்கு அவனால் பதில் பேச முடியவில்லை. அவளுடனான பேச்சில் சுவாரசியம் கூடியது. மேற்கொண்டு அவளை பேச வைக்கவே அவனுக்கு ஆவல் கூடியது.
அவள் கையில் இருக்கும் செஸ் போர்ட் பார்த்தவன். “இது என்ன செஸ் போர்டு” கேட்டான்
“ஒரு ராத்திரிக்கு கூப்பிட்ட தாத்தா கூட செஸ் விளையாடலாம்ன்னு எடுத்து வந்தேன்... பச்” சலித்தப்படி சொன்னாள்
சட்டென்று அவன் “ஏன் தாத்தா கூட மட்டும் தான் செஸ் விளையாடுவீங்களா?” அவள் கண்களை பார்த்து சிரித்துக் கொண்டே கேட்க.
அவன் பதில் பேச்சில் ஒளிந்து இருக்கும் அர்த்தம் புரிந்தது.
கிழவனாக இருந்தால் என்ன? குமரனாக இருந்தால் என்ன? வாங்க செஸ் விளையாடலாம், செஸ் விளையாட தெரியும் தானே நக்கலாக கேட்டாள்
‘செஸ் மட்டுமா தான் விளையாட போறோமா ?’ பதிலுக்கு அவனும் கேட்டான்
“எனக்கு அது மட்டும்தான் விளையாட வரும்” பல்லை கடித்துக்கொண்டு பதில் சொன்னாள்.
பொறுமை அவளை விட்டுகொஞ்சம் கொஞ்சமாக பறந்து போய்க்கொண்டிருந்தது.
“நான் சொல்லிக்கொடுக்கிறேன் மத்த விளையாட்ட” அவன் சாதாரணமாக சொல்ல
பதில் பேச முடியாமல் அவள் காது முகம் சிவந்து அவனை பார்க்க, “இந்த ரம்மி, பிரிட்ஜ், போக்கர் எல்லாம் விளையாடி போர் அடிச்சு போச்சு. வா! செஸ் விளையாடுவோம்” பேசியவன் இயல்பாக அவள் கையில் இருக்கும் அந்த மரத்தால் ஆன செஸ் போர்டை வாங்கிக்கொண்டு சாப்பாடு மேஜை மீது போய் அமர்ந்து கொண்டான்.
அவன் பின்னாடியே சென்று, அவனுக்கு எதிர்புறம் அவள் அமர்ந்து கொள்ள. அவன் அண்ணா என்று குரல் கொடுக்க,வந்த ஆளிடம் “ரெகுலர் ஒன்னு ” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து “என்ன சாப்பிடுற சுந்தரி” கேட்டான்.
அவள் முழிக்க அவனே “ஒரு கிரீன் டி” என்றான்.
நாற்பதுகளில், ஐம்பதுகளில் இருக்கும் மனிதனாக இருப்பான்,முரளி மாமாவை வெளியே கொண்டு வர என்ன ஏற்பாடு செய்ய போகிறார் என்று கேட்டு அவர் பேசி முடிக்க ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் ஆகும். அதன்பின் அவள் அழுது புரண்டு "ஐயோ எனக்கு ஜுரம், " என்று சென்டிமென்ட் கதை பேசி தப்பிக்கலாம். அப்படி தண்ணி வண்டியாக இருந்தால் பாட்டில் எடுத்து ஒரே போடு, அப்படியும் கொடுமைக்கார மனிதனாக இருந்தால் வர்ம இடங்களில் ஒரே குத்து திரும்பி சாதாரணமாக நடக்கவே முடியாதபடி என்று அவள் நிறைய யோசித்து இருந்தாலும் ஒரு இடத்திலும் அவளை விட ஐந்தே வயது பெரியவனாக இருக்கக் கூடியவன் என்று அவள் யோசிக்காமல் போனாளே.
அப்படியும் ஒன்னும் பிரச்சனை இல்லை கத்தி, குத்து, மாத்திரை, செண்டிமெண்ட் ஒர்க் ஆகவில்லை என்றாலும் இவன் வீக்னஸ் ஏதேனும் தெரிந்தால் கூட போதும். ஏதேனும் செய்யலாம். அவளை அவளே தேற்றிக்கொண்டே செஸ் காய்களை அடுக்கினாள்.
அதென்ன சுந்தரி பேக் இப்படி கட்டி புடிச்சிட்டு உட்கார்ந்திருக்க ரிலாக்ஸ்ஸாக உட்கார் என்று அவள் பையை வாங்கி பணியாளிடம் கொடுத்து ஹாலில் வைக்க சொன்னான்.
ஐயோ பேக் போச்சே!
தொண்டை வலி அதிகமானது. குளிர் தொடங்கியது. அவள் பக்கம் இப்போது இருக்கும் பலவீனம் எல்லாம் யோசிக்க மனக்கண்ணில் நிலைமை இன்னமும் பூதாகரமானது.
பேசி பார்ப்போம்…