ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை செந்தமிழே - கதை திரி

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
9.ராட்சதன் வந்தான்

அவனைக் கண்டு விட்டதாலோ என்னவோ பார்க்கும் முகத்தில் எல்லாம் அவன் முகம் தேடினாள். அவன் ஜாடையில் முகம் தெரிந்தால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அவனிருக்கும் ஊரிலிருப்பதே இத்தனை இம்சையாக இருக்கிறதே..!

அடுத்த நாள் சரயுவிற்கு அறிவுரை கூறினாள் “பார், குடி யார் உடம்பிற்கும் கேடுதான், பெண்களுக்கு அதிக பாதிப்பு கொடுக்கும். இப்படி நிறைய குடிக்காதே”

நான் ஜஸ்ட் வைன் தான் குடித்தேன் என்று சரயு வியாக்யானம் பேச, ‘அப்படி தெரியலையே’ சுந்தரி சந்தேகமாக பேசினாள்.

சரயு “சாரி சுந்தரி, குடிச்சிருக்ககூடாது. சமீப காலமாக அப்பா அம்மாவை மிஸ் பண்ணறேன். அதான் குடிச்சிட்டேன்”

“குடிச்சா எல்லாம் சரியாகிடுமா? குடிச்சு உன் உடம்ப கெடுத்துக்கிட்டு , என்ன பண்ண போற?”

சுந்தரிக்கு எப்போதுமே இந்த சந்தேகம் உண்டு.அது எப்படி ஒரு இலக்கை நோக்கி நகரும் போதும் கடந்ததை எண்ணி சோகத்தில் எதிர்காலத்தையும் வீண் செய்கின்றனர். கடந்ததை எண்ணி சோகத்தில் மூழ்குவதில் பயன் என்ன?

சரயுவிற்கு சட்டென்று மனம் லேசானது. “இனி அப்படி பார்ட்டிக்கு போகமாட்டேன். போனாலும் குடிக்கமாட்டேன் . எனக்காக அக்கறைப்பட ஒரு ஆள் இருக்கே இங்கே” சுந்தரியின் கண்ணங்களை பிடித்து இந்தப்புறம் அந்தப்புறம் ஆட்டி கொஞ்சலாக பேசி சிரித்தாள்.

சுந்தரிக்கு அவன் நினைவு வந்தது. அவன் கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. ‘குடிக்காத...அதன் பாதிப்பு அதிகம்’ என்றாள் அவன் நினைவில்.

இவள் குடிக்காமலிருந்திருந்தால்? நடுநிசியில் அவள் போகாமலிருந்திருந்தால்? அவனை பார்க்காமலிருந்திருந்தால்?அவன் ஆழ்குரல் கேட்காமலிருந்திருந்தால்? இந்த இதயம் எந்த கற்பனைக்கும்,ஆசைக்கும் போகாமல் இருக்குமே.

அவனை திரும்ப பார்த்த நொடியிலிருந்து இன்னொரு முறை பார்க்க, பேச ஏன்டா என்ன நம்ப வச்சு கழுத்தறுத்த என்று கேட்க தோன்றுகிறதே!!

அவளை காக்க வைக்காமல் அந்த வாரமே அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் இன்வெஸ்டர் மீட்டிங் வந்தான்.

நீள்வட்ட மேஜை அது. அவளை போல பிராஜெக்ட் தலைமைப்படுத்தும் நான்கு பிராஜெக்ட் ஹெட் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரில் முதலீடு செய்ய அழைத்திருக்கும் பெரும் பணம் படைத்த முதலாளிகள், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நீள்வட்ட மேஜையின் கூர் முனை இருக்கை மட்டுமே காலியாக இருக்க, சந்திப்பு தொடங்கும் நேரம் உயிர்கொண்ட செதுக்கிய சிற்பம்போல நடந்து வந்தமர்ந்தான். அவன் அமர்ந்த இடம் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ இருக்கை.

அமைதியான அறையில் அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவள் காதுகளில் சத்தமாக கேட்டது. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல தான் உன் நிலை என்று அன்றொரு நாள் சொன்னானே.

அந்த ஆச்சர்ய விழி அவனை கண்டதும் ஒரு கண நிமிடம் உறைந்து நின்று சட்டென்று சிவப்பதை கவனிக்க தவறவில்லை அவன்.

ஏ.சி ஓடும் அறையில் வியர்த்தது அவளுக்கு.

கூட்டத்தில் எப்போதும் தலை குனிந்து அடுத்தவர் பேச்சை உற்றுக் கவனிப்பவள் இம்முறை அவளையும் மீறி நிமிர்ந்து அவன் பக்கம் ஓர கண்ணால் பார்த்தாள். கண்டுகொண்டவன் ‘கண்டுகொண்டேன் பெண்ணே’ என்று கண்ணால் பேசினான். இலகுவான அவன் கொஞ்சல் பாவனை நிறைந்த முகம் பார்க்க மனம் படபடத்தது.

அந்த முக்கியமான இடத்திலும் முக்கியமான மனிதர்கள் அமர்ந்திருக்கும் தருணத்திலும் அவன் தீவிரமாக கவனிக்கும் முகத்தில் அவன் குறும்புத்தனம் அவளுக்கு மட்டுமே தெரிகிறதே..!

பஜார் தெருவில் நடக்கையில் பொம்மை கடை பொம்மைகள் அழகாக பார்த்துக்கொண்டு என்னை வாங்கேன் என்று அதன் அழகில் அழைப்பது போலவே அவன் முகமும் அவளை அழைப்பது போல இருந்தது.

“இவனை பார்க்கவே கூடாது..!” எண்ணிக்கொண்டாள்.

வரிசையாக மூன்று பேர் அவர்கள் பிராஜெக்ட் பற்றிப் பேசியாகி விட்டது. அவள் முறை அது. எழுந்து சென்று திரை பக்கம் நின்றாள். அவன் நேர் பார்வையை சந்தித்தாள்.

“தொடங்கலாம். ஆல் தி பெஸ்ட்” என்றவன் அவளை கவனிக்க தொடங்கினான். திக்கித் திணறித் தொடங்கியவள் அவன் முகம் பார்த்துப் பேசும் போது அவனின் அந்த ஆதரவான பார்வையில் மேலும் மேலும் நம்பிக்கையுடன் பேசி முடிக்க முதலீடு செய்ய வந்தவர்கள் முகத்தில் பிரகாசம்.

“ஹேக் செய்ய முடியுமா என்கிற கேள்வி இருக்கிறதே என்ன பதில் சொல்லப்போறீங்க ”

“முடியாது என்று சொல்லமாட்டேன். ஆனால் கஷ்டம்”

“நிறைய செக்யூரிட்டி சாப்ட்வேர் மார்க்கெட்டில் இருக்கு, இதன் லாபவிகிதம் என்னவாக இருக்கும் ”

‘பத்து வர்ஷன் வரை அப்டேட் செய்யும் அளவுக்கு டிசைன் செய்திருக்கு. தொடர்ந்து மார்கெட்டில் பத்து ஆண்டுகள் நிற்கும். ஹை-ரிஸ்க் டேட்டா பாதுகாப்பதற்கு செய்திருக்கும் சாப்ட்வேர், மெதுவாக தொடங்கினாலும் சீரான லாபம் கொடுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கு’ அவள் நினைத்தததை ஷார்ப்பாக சொல்லி முடித்தாள்.

‘இது தோல்வியில் முடிந்தால் சீர்படுத்த வேற ஐடியா இருக்கிறதா?’

அவள் சட்டென்று “இல்லை” என்று பதில் சொன்னாள். அந்த மாதிரியான கேள்விகள் வேற்று நிறுவனத்தார் கேட்கிறார் என்றால் பதில் சொல்லாமல் விடுவதில் தப்பில்லை.

ஷ்யாமிற்கு எரிச்சல் ஆனது. கேள்வி கேட்பவர் இந்தப் பெண்ணை நமது கம்பனிக்கு இழுத்து போகலாம் என்பது போல கேட்கிறார் என்று அவன் காதில் ராகுலும் கிசுகிசுக்க, படார் என்று எழுந்தவன் "எல்லோருக்கும் நன்றி. பிரேக் எடுத்துக்கலாம். முதலீடு செய்ய மேற்கொண்டு பேசலாம். பிராஜெக்ட் ஹெட் கிளம்பலாம்." சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனான்.

மற்றவர்கள் எல்லோரும் தேநீர் இடைவெளிக்கு சென்றனர். சுந்தரி அவள் இடத்திற்கு செல்ல, ஷ்யாம் உதவியாளர் வந்து அவளை சார் அழைக்கிறார் என்று சொல்லவும் திரும்பவும் இதயம் ஓட்டமெடுத்தது.

இவனை நினைத்தாலோ பார்த்தாலோ ஏன் இப்படியொரு அசௌகரியம்..! ஆண்டவா காப்பற்று..!

மெதுமெதுவாக நடந்தாலும் சி.இ.ஓ அறை சீக்கிரமே வந்தது. கதவை தட்டி உள்ளே சென்றாள். அவன் சிரித்த முகம் ஈர்த்தது.

அவன் எதிர்புறம் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவளிடம் மரியாதையுடன் அந்நியமாக “உட்காருங்க மிஸ் சுந்தரி”என்று சொல்ல சுந்தரி “நான் சுந்தரி ஷியாம். கண்ணு தெரியாம போய்டுச்சா, இல்லை நெட்டு போல்ட் ஏதாச்சும் லூஸ் ஆகிடுச்சா”

அவள் பேசி முடித்ததும் பின்னால் சிரிப்பு சத்தம் கேட்க திரும்பி பார்த்தவளுக்கு எங்கேனும் போய் முகத்தை மறைத்து கொள்ளலாமா என்பது போல வெட்கம் பிடுங்கி தின்றது. நின்றிருந்தது ராகுல். அவனக்கு பின்னால் கொஞ்ச தூரத்தில் சோபாவில் முதலீட்டாளர் ஒருவர் அமர்ந்துகொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தார். தர்மசங்கடமான நிலையில் பல்லை கடித்துக்கொண்டு கைகளால் முகம் பொத்தி “சாரி சாரி” என்று அவள் சொல்ல அவன் இதயத்தில் அந்த நொடி கவிதை ஆனது.

ராகுல் “பய்யா நான் அப்பறம் வரவா?”

சுந்தரி “இல்ல இல்ல... நீங்க இருங்க சார். நான் போறேன்”

சிலைபோல அமர்ந்திருந்தவன் அவர்களை பார்த்து “ரண்டு பேரும் இருங்க. மீட்டிங் ஆரம்பிக்கலாம்”

அவன் சொல்லியதும் தொடங்கியது கலந்துரையாடல். பக்கம் வைத்திருந்த தேநீர், ஸ்னேக்ஸை அவள் பக்கம் தள்ளி “சாப்பிடுங்க. வயித்துக்கு கொஞ்சம் போட்டா தான் மூளை சுறுசுறுப்பா வேலை பார்க்கும்” என்றான். அந்தக் குரலை நிராகரிக்க முடியவில்லை. அதட்டும் முதலாளி குரல் அது, சொல்வதை செய்ய வைக்கும் தொனி. கூடவே அந்த வாக்கியங்களுக்கு அவள் பழக்கப்பட்டவள் அல்லவா..!

அதிகம் பேசியது அவளும் ராகுலும் தான். கேட்டுக்கொண்டேயிருந்தவன் நடுநடுவே சில குறிப்புகளை பக்கம் இருக்கும் நோட்டில் பென்சிலில் குறித்துக்கொள்வான். அவன் சிரிப்பைவிட இந்த தீர்க்கமாக பார்த்து கவனமாக கேட்டு குறிப்பெடுக்கும் இந்த முகம் வசிகரித்தது.

மீட்டிங் முடிந்ததும் வந்த முதலீட்டாளர் “சரி ஷ்யாம். வாழ்த்துக்கள், வேலையே தொடங்கலாம்” கைகுலுக்கி ராகுல் தோளில் தட்டிவிட்டு கிளம்பினார்.

அவர் திரும்பியதும் கணநிமிடத்ததில் அவனை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் பய்யா” என்றவன் அவள் புறம் திரும்பி அவரை அனுப்பிவிட்டு வரேன் என்றவன் குதூகலமாக ஓடினான்.

யாருமில்லாத அறையில் மௌனம் இறைக்க திரும்பவும் அவள் இதயத்தின் ஓசை அவள் காதுகளில்.

சிரித்தபடி மேஜையை சுற்றி அவள் முன்னே வந்து நின்றவன் அவளை பார்க்க அவள் தலை குனிந்தாள். உற்சாகமாக பேசிய சுந்தரி எங்கே என்று நினைத்தவன் “அது ஏன் சுந்தரி என் கிட்ட மட்டும் பாரபட்சம்?.. ம்”

“அப்படியெல்லாம் இல்லை”

“இதோ... பேசும்போது என்னையே பார்த்துட்டு இருந்தே..! இப்போ பார்க்க கூட மாட்டேங்கிற”அவன் வெளிப்படையான கேள்வியில் திணறியவள் “நீ என்னை மறந்துட்டன்னு நெனச்சேன்”

சட்டென்று சிரித்தவன் “நான் தூங்கி நாள் ஆச்சு சுந்தரி” என்று இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவள் முன்னே வர அவளுக்கு அந்த இரவு நினைவுக்கு வந்தது.

சட்டென்று அவனை தள்ளிவிட்டவள் “சே ஷியாம் உனக்கு மட்டும் ஆண்டவன் மூளையை இடுப்பு கீழ வைச்சிட்டான்” அவள் பொருட்களை சேகரித்து அறைவிட்டு ஓடினாள்.

அவள் சென்றபின்பு தான் அவள் பேசிய வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது அவனுக்கு. அடப்பாவி..! என்று அவனுக்குள் சிரித்துக்கொள்ள

மேஜை மீது சாய்ந்திருந்த சிரித்த முகமான ஷ்யாமை பார்த்த ராகுல் “எங்க சுந்தரி ?”

“போயாச்சு”

“ ஸ்மார்ட் இல்ல, சேர்ந்து லன்ச் சாப்பிடலாம் நெனெச்சேனே ”

“ப்ச் இன்னொரு நாள் பெரிய விருந்தே சாப்பிடலாம்”

‘அந்த சென்னை பெண் இவள் தானே’ கேட்டான் ராகுல். ராகுலுக்கு சந்தேகம் இருந்தது. காயாவிலிருந்து யார் வந்திருக்கிறார் என்று அவன் விசாரித்து தெரிந்துகொண்ட நாளிலிருந்து சீக்கிரமாக அவன் வெளிநாடு பயணமெல்லாம் முடித்துக்கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறான்.

ராகுலுக்கு யூகம் இருந்தாலும் அதை அவன் நண்பன் ஒப்புக்கொண்டால் மட்டுமே நிம்மதி. ஷ்யாம் தலை மட்டும் அசைத்தான்.

ராகுலுக்கு மகிழ்ச்சியானது. “பலே பய்யா அப்போ சுந்தரி தான் எனக்கு அண்ணி”அவன் சிரிக்க,ஷியாம் முகத்திலும் சின்ன முறுவல் பூத்தது.

முரளி தப்பி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டது, அவன் இன்னமும் இந்தியா வந்து சேரவில்லை. வினிதாவிற்கு எரிச்சல் மண்டியது . அத்தை சுந்தரி வேறு ஊருக்கு சென்றுவிட்டாள் என்பதில் நிம்மதியாக இருக்கிறாள், அவளுக்கு தான் கோபமாக இருக்கிறது.

முரளி இந்தியா வரும் வரையாவது இந்த பெண் தமிழ்நாட்டிலிருந்திருக்க கூடாதா “பார் உன் முறைப்பெண் கொஞ்சம் கூட உன்னை பற்றி கவலைப்படாமல் எவனோடவோ காதல் செய்கிறாள்” என்று காட்டியிருப்பாள். இவள் தப்பி வேறு ஊருக்கு போய் விட்டாளே. ஆனாலும் வினிதாவிடம் போட்டோக்கள் இருக்கிறது அதை காட்டி பேசத்தான் போகிறாள்.

வினிதாவிற்கு எப்போது இந்த பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. அவள் அன்பை, பண்பை அழகை சுந்தரியோடு போட்டி போட்டு பார்ப்பதிலும் அதில் வெற்றியடைய நினைப்பதிலுமே காலம் கழித்தாள். வேடிக்கை என்னவென்றால் சுந்தரிக்கு இப்படியொரு போட்டி இருப்பதே தெரியாது. இந்த பித்து பிடிக்க முதல் காரணம் முரளி. அதனாலேயே முரளியை தண்டிப்பதற்கும் சுந்தரியை கஷ்டப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டாள் வினிதா.

ஆசையும் கோபமும் எங்கே நியாயம் தர்மம் பார்த்தது ?
 

swwee

Active member
Wonderland writer
10. சுந்தரியை பிடிக்குமா ?

பிடித்த வகையாக உணவுகள் மேஜை மீது பரவி இருந்தும் அதை உண்ணாமல் ராகுல் படபடவென பேசிக்கொண்டே இருந்தான்.

“சாப்பிடு ராகுல், அப்பறம் பேசுவோம்” ஷ்யாம் அதட்ட

“சாரி பய்யா, நீ சாப்பிடு" தணிந்தவன் ஷ்யாம் சொன்னான் என்று ஒரு ஸ்பூன் கீ ரைஸ் எடுத்து சாவலில் தொட்டு சாப்பிட்டான்.

எதிர்பாரா சமயம் ஷ்யாம் பின்னாலிருந்து கழுத்தில் கட்டி அணைத்து ப.... ய் யா... என்று கூவி அணைத்தது பெண் குரல். ஒரே கணம் இந்த மாதிரி சுந்தரி செய்வாளோ என்று தோன்றினாலும் திரும்பி “ஏய் வாலு, வா … வா…”என்று அவள் கையை இழுத்து முன் பக்கம் வரவைத்து வரவேற்றான்.

“ஆஹ் ஆஷா…” என்று ராகுல் கூவ

“எவ்வளவு ஈஸியா முடிகிற விசயம் நீ எவ்வளவு பயந்தே பார்” ஆஷா அவனை குறை சொன்னாள்.

ராகுல் அவன் பக்கம் நியாயம் பேச தொடங்கினான் “ஏய்... கஷ்டமாகத்தான் இருந்தது.ஏதோ நல்ல நேரம் சுந்தரி பாபி தான் நம்மை காப்பாற்றியது தெரியுமா?”

“அது என்னடா சுந்தரி பாபி?” ஆஷா சந்தேகமாக கேட்க ராகுல் ஷ்யாமை பார்த்தான்.

இந்த வாயாடியிடம் சொன்னால் கதை முடிந்ததே! ஷ்யாம் எண்ணி முடிப்பதற்குள் ராகுல் தன்னிலை விளக்கம் கொடுக்க தொடங்கிவிட்டான். “அது ஷ்யாம் பய்யா எதிரி. அந்த பெண்ணுக்கு பய்யாவ பிடிக்கவே இல்லை. அது தான் கிண்டல் செய்ய அப்படி பேர் வச்சேன்”

ஆஷா “சொல்லு ஷ்யாம் உனக்கு அந்த பொண்ணபிடிச்சிருக்கா?” முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டாள்.

ஆஷா இருக்கும் இடம் அமைதியாக இருக்காது. அவள் குரல், சுபாவம் இரண்டும் அப்படிப்பட்டது. கொஞ்சமும் விகற்பம் இல்லாத பெண், எந்நேரமும் கலகலப்பாக, உள்ளதை உள்ளபடி பேசும் பெண். ராகுல் போலத்தான் அவளும் அவனுடன் சிறுவயது முதலே இருக்கிறாள்.

ஆஷாவிற்கு பதினெட்டு வயது முடிந்ததும் ஷ்யாமிற்கு ஆஷாவை திருமணம் செய்து வைக்கலாம் என்று அவர்கள் குடும்பங்கள் முடிவு செய்தது. அந்நேரம் ராகுல் குடும்ப தொழிலில் பெருத்த நஷ்டம். ராகுல் குடும்பம் பணக்கார குடும்ப நிலையிலிருந்து கீழ் இறங்கிய நிலை.

ஆஷா அழுதுகொண்டே ஷ்யாமிடம் வந்து என்றைக்கும் நீ எனக்கு அண்ணனாக மட்டும் தான் இருக்க முடியும் பைய்யா. கல்யாணம் வேண்டாம் என்று சொல் என்று அழுது தீர்த்தாள்.

ஷ்யாமிற்கு அந்த காலகட்டத்தில் திருமணத்திலேயே நாட்டம் இல்லை. இதில் இவனாவது ஆஷாவை திருமணம் செய்வதாவது.ஆஷா எனக்கு தங்கை என்று திருமண பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். ஆஷா அடுத்து அவள் தொந்தரவை தொடங்கினாள்.பையா எனக்கு ராகுலை பிடித்திருக்கிறது. நான் அவனை தான் கல்யாணம் செய்துப்பேன் அவள் மனதைப் போட்டுடைத்தாள். நண்பர்கள் இருவரும் அதிர்ந்தனர்.

ஷ்யாம் அப்போது தொழில் தொடங்கி லாபம் ஈட்டிக்கொண்டிருந்த காலம். ராகுல் படித்துக்கொண்டிருந்தான். ஆஷா அப்படி பேசியதும் ராகுல் அந்த நொடியே முடிவு செய்தான் இவள் மட்டுமே தனக்கு மனைவி ஆக முடியுமென. ஷ்யாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனை தேர்ந்தெடுக்கும் பெண் காதல்,ஆசை இல்லாமலா அவனை தேர்ந்தேடுகிறாள். அவளுக்காக முன்னேற வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.அதுவரை ஒரு தோழியாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன் காதலியாக கண்டான்.

ஆஷா பெற்றோர்கள் பற்றி நன்கு அறிந்தவன் ஷ்யாம். ராகுலை மணப்பேன் என்று அவள் தெரிவித்தது மட்டும் தெரிந்தால் உடனே அவனுக்கும் அவளுக்கும் கட்டாய கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். நிலைமை புரிந்த பின்னர் மூவரும் கூட்டணியாக சேர்ந்து அடுத்த ஐந்து வருடத்தில் ராகுல் ஆஷா திருமணம் நடத்த என்ன முயற்சி எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் தொடங்கினர்.

அந்த முயற்சியில் தான் இந்த ஐ.டி நிறுவனம் தொடங்கினர். நஷ்டம் இல்லை, அதே போல் லாபமும் இல்லை என்கிற நிலை. ஷ்யாம் செல்வ நிலையை ஒப்பிட்டு பார்த்தால் ராகுல் கடுகளுவு, ஷ்யாம் மலை அளவு. பெரிதாக முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தேவை, அதற்கு சரியான பிராஜெக்ட் தேவை. அவர்கள் தேவை நேரம் சுந்தரி அவர்கள் பக்கம் சேர்ந்தது தெய்வச் செயலோ, ஷ்யாம் செயலோ..!

ஆஷாவின் பிடித்திருக்கா என்ற கேள்வியில் அதிர்ந்தாலும் கொஞ்சம் பிடிக்கும் என்று பதில் சொன்னான். ஆனாலும் ஆஷா விடாப்பிடியாக கொஞ்சமாகத் தான் பிடிக்குமா அண்ணா? அது என்ன கொஞ்சமாக பிடிக்கும்? பெண் தமிழ் பெண்ணா? அமைதியான பெண்ணோ? அவள் இஷ்டம் போல இருப்பவளா? உன் அக்கறையை கொஞ்சமும் சட்டை பண்ணாத பெண்ணா அண்ணா? அவள் கேள்விகளை தொடுத்துக் கொண்டே போனாள். அவன் எதுவும் பேசாமல் முனைப்பாக ரசித்து ருசித்துச் சாப்பிடுவது போல அந்த கேள்விகளுக்கு மனதிற்குள் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே போனான்.

ராகுல் “ஏய்.. அதை விடு... பய்யா நீ உனக்கு எப்போது அவளை பற்றி பேச நினைக்கிறாயோ அப்போ பேசு” நண்பனை சமாதானம் செய்தவன் “ம்... நீ வா வந்து சாப்பிடு” என்றும் அவளை அதட்டினான்

ஆஷா “போடா...லூசு...நான் வெளியே சொல்லி அவளை கஷ்டப்படுத்திடுவேனோ நினைக்கிறே தானே பய்யா”

“சாப்பிடு ஆஷா”

“ சொல்லு... அப்படி தானே”

நீ பதில் சொன்னால் மட்டுமே நான் சாப்பிடுவேன் என்றது அவள் பார்வை.

ஷ்யாம் சிறு சலனத்திற்குப்பின் சாப்பிடு ஆஷா... இந்த வெற்றியை கொண்டாடுவோம்... என் விஷயம் தொடங்கவே இல்லை. காதலா, வெறும் காமமா?தெளிவு வந்தபின் உன்னை தேடி வந்து பதில் சொல்கிறேன் என்று சமாதானம் பேசினான்.

“சரி பய்யா... நான் முடிவு செய்துட்டேன். நாளைக்கு அந்த சுந்தரியை ஆபிஸ் போய் பார்க்க போறேன்”

ராகுல் முழித்தான். ஐயோ! இவளால் ஏதேனும் சில்மிஷம் நடந்தால் ஷ்யாம் நம்மை சும்மா விடமாட்டானே! அடியே என் ஜிலேபி கூடி வருவதை கெடுக்காதே...

சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர் வேலைக்கு சென்றனர். ஷ்யாமிற்கு உள்மன கூச்சல் உடல்,மனம் மூளை எங்கும் பரவியது, நாளை இந்த வாயாடியிடமிருந்து சுந்தரியை காப்பாற்றவேண்டும். சுந்தரி மனம் நோகும்படி ஆஷா ஏதேனும் பேசிவிட்டால் என்ன ஆகும்? சுந்தரி மனம் நோகும்படி ஆஷா என்ன பேசிவிட முடியும்? ஆஷா அப்படி பேசும் விதமல்ல, ஆனாலும் என்னமோ உள்ளுக்குள் ஒரு பரபரப்பு அடுத்த நாள் ஆஷா சுந்தரியை சந்திக்கும் போது அவனும் இருக்க வேண்டுமென ஆஷாவிற்கு அவள் ஆபிஸ் போகும் முன் அவனிடம் சொல்லிவிட்டு போக வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.

ஆஷா சிரித்துக்கொண்டாள்.

சுந்தரி அவள் பேசிய திட்டப்படி புராஜக்ட் எப்படியெல்லாம் செய்யலாம் என்று தனியொரு வேலைத்திட்டம் செய்து கொண்டு வந்து ராகுலிடம் அறிக்கை கொடுத்தாள்.

“நீங்க வேகமாக வேலை செய்றீங்க.அருமை”

‘என் வேலைக்கு மல்டிபிள் ஸ்கிரீன் தேவைப்படும், தனி அறை வேண்டுமென்றேன். இன்னும் தயார் ஆகலை’ என்று கம்பளைண்ட் செய்தாள்.

‘அது தயார் ஆகிடும். உட்காருங்க பேசலாம்’

‘டிஸ்கஷன் செய்ய ஒண்ணுமில்ல சார். நான் கோட் எழுதி முடிக்க ஒரு மாதம் ஆகும்.அதன் பின் டெஸ்டிங் ஒரு மாதம். மற்ற வேலைகள் உங்க ஆபிஸ் ஆளுங்க பாரத்துப்பாங்க என்று அவள் பக்கம் இருக்கும் வேலையெல்லாம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

“பொறுமை மேடம்”

“பிஸ்னஸ் செய்றவங்க எல்லாம் உங்களை போல பொறுமையா இருந்தா என்ன ஆகுறது?”

அவன் கண்கள் விரித்து அவளையே பார்க்க அவள் தொடர்ந்தாள் ‘என் திட்டப்படி போனால் தான் உங்க கம்பனி அடுத்த வருடமும் தொடர்ந்து லாபம் கொடுக்கும்.கொஞ்சம் இடறினாலும் மொத்தமும் முடிந்து போகும். ஷ்யாமிற்கு உதவி செய்யும் பேர்வழி என எதிர்காலத்தை நாசம் செய்துக்காதீங்க’ பேசிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

இயல்பு நிலை திரும்பியவன் ஷ்யாமிற்கு அழைத்து நடந்ததை சொன்னான்.ஷ்யாம் சிரித்தான். கத்தி போல கூர்மையான நாக்கு ஷியாமிற்கு என்ற பேச்சு அவர்கள் நட்பு வட்டத்தில் உண்டு அப்படிப்பட்டவன் அவனே சுந்தரியின் பேச்சில் திணறி நிற்பான். ராகுல் எம்மாத்திரம்!

ராகுல் தொலைப்பேசியில் அழைத்து பேசியதிலிருந்து சுந்தரியை பார்க்க வேண்டும் போல எண்ணம் எழுந்தது. ஒரு வாரமாக சுந்தரியை பார்க்க முடியவில்லை.மதியம் வேலை இல்லையென்று தெரிந்தவன் ராகுல் அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

சுந்தரி அவள் இடத்தில் இல்லை. மேஜை மீது ஒரு நோட்டு புத்தகம் அதில் நிறைய எழுதி இருந்தாள். சாப்பாட்டு டப்பா திறக்கப்படாமல் இருந்தது. கணினி திரையும் அணைந்திருந்தது. சுற்றம் பார்க்க ஆபிஸ் கண்ணாடிக்கு வெளியே நடந்துகொண்டே படபடப்பாக தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.

முரளி சம்மந்தப்பட்ட விஷயமென்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.அதன் விவரமும் அவன் அறிந்ததே.பத்திரமாக கூட்டி வருகிறவரிடம் வாய் கொழுப்பை காட்டினால் என்ன ஆகும்? அரேபியா அரசு எல்லா பாதுகாப்பு படைக்கும் அவர்கள் குற்றவாளி ஒருவன் தப்பித்திருக்கிறான் என்று தெரிவித்திருக்கும். அவன் பேசினால் தமிழ் என்று தெரிந்துவிடும். இப்படியான நிலையில் முரளி அவர்களுடன் ஒத்துழைக்காமல் அவர்களிடமிருந்து தப்பிக்க பார்ப்பது முட்டாள்தனம்.

அது அவன் மனநிலைக்கு புரியவும் இல்லை.முரளி சிந்திக்கும் திறனை இழந்திருந்தான் என்றே சொல்லவேண்டும். அவன் கைது செய்யப்பட்டிருந்த விவகாரம் அப்படியானது. அவனை சிறைவாசம் கொண்டாடு என்று எவரும் விடவில்லை.பசி,தாகம்,அடி உதை, பூச்சிகளும் கொசுக்களும் மேயும் அறை என்று சித்திரவதைகளுக்கு பஞ்சம் இல்லை.எங்கே யார் அடிப்பாரோ,எந்த விஷப்பூச்சி கடிக்குமோ என்ற பயத்தில் சதா சர்வகாலமும் இருந்ததில் எதைக் கண்டாலும் பயம் தொற்றியது.யாரை கண்டாலும் அடிப்பாரோ.சித்திரவதை செய்வாரோ இவரிடமிருந்து தப்பி விடலாமா என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

அப்படி மனநிலை சரியில்லாத நிலையிலும் போதை வஸ்துக்கள் கடத்தல் அனுபவம் உள்ளவன் அல்லவா அவனைப் பயன்படுத்தி அந்த கும்பல் சம்பாதிக்க உத்தேசித்து எந்தெந்த நாட்டில்,ஊரில் என்ன கிடைக்கும் அந்த தகவல் சொன்னால் மட்டுமே அடுத்த ஊர் என்று மிரட்டி தகவல் திரட்டியது.

முரளி இந்தியா வராத தகவல் அறிந்து ஷ்யாம் அவன் பேசிய அபுவிடம் கேட்டதற்கு,சார் கவலைப்படாதீங்க ஆள் எப்படியும் இந்தியா வந்திருவான். இந்நேரம் அவனை காணலை என்றதும் பார்டர் பக்கமெல்லாம் செக்கிங் போகும், அதனால் இந்தியா வர தாமதமாகும் என்று நடைமுறை பிரச்சனைகளை எடுத்துப் பேசி முடித்துக்கொண்டான்.

ஷ்யாம் முயற்சி சுந்தரிக்காக மட்டுமே.அவள் மனதளவில் படும் துயரம் சகியாது அவன் எடுத்த முயற்சிகள். ஒரு நாள் முரளி வந்துவிடுவான் என்பதே போதுமானதாக இருக்க மேற்கொண்டு அவனுக்கு என்ன கவலை.

முரளி குடும்பம் அப்படி இருக்குமா என்ன? அவர்களால் கையாள முடியாத கோபத்தை சுந்தரியை வதைத்து அவர்கள் தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதைத் தான் புரிந்துகொள்ள முடியுமா?

கைப்பேசியில் வினிதா, ‘அத்தை சொல்வது போல நீ நன்றிகெட்டவள் காட்டிட்டே, முரளி என்ன கஷ்டபடறாரோ தெரியலை. நீ ஷ்யாமிற்கு அழைத்து , விவரம் கேள்’ என்று ஏவினாள்.

“அவர் போன் நம்பர் என்னிடம் இல்லை”

“பொய் சொல்லாதே. என்கென்னமோ அவங்க கேட்ட காசு கொடுக்காமல் ஷ்யாம் லேட் செய்வது போல இருக்கு .அதான் முரளி இன்னும் இந்தியா வரலை.அவர் பணம் கொடுத்தாரா மட்டும் கேளு "

“சரி வினிதா நான் விசாரிக்கிறேன்” அந்த பக்கம் அவள் பேச பேச இவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

முரளி மாமாவுக்கு என்ன ஆனதோ? சஞ்சலம் மனம் குடைந்துகொண்டே இருக்க ஷ்யாமை பார்த்தவளுக்கு எரிச்சல் கூடியது.

அவள் கோபத்தை காட்டினாள். “என்ன ஷ்யாம் சார் வேணும்? உங்களுக்குக் கொடுக்கிற மாதிரி என் கிட்ட எதுவும் இல்ல”

“சாப்பிடாம இருக்க்கியே சுந்தரி..!”

கோபம் தலைக்கு ஏறியது. “ஆமா எனக்கு இப்போ சாப்பிடறது தான் முக்கியம் பாருங்க. அங்க என் வீட்ல கஷ்டபடறாங்க.முரளி மாமாவும் ஆளுங்களும் இன்னமும் ஊர் ஊராக போயிகிட்டு இருக்காங்க. வினிதா பேச்சுக்கும் ஒழுங்கான பதில் இல்லை”

கோபத்தில் கை கால்கள் நடுங்கியது.

“நீ சாப்பிடாமல் இருந்தா, உன் மாமா இரண்டு நாள் முன்னாடி வந்திருவாரா? பார் எனக்கு வந்த தகவல், அவன் வர குறைந்தது இன்னமும் ஒரு மதம் அதிக பட்சம் மூன்று மாதம் ஆகலாம்”

ஷ்யாம் பேசியதை அதன் அர்த்தத்தை அவள் கவனிக்கவில்லை. அவள் மனத்தில் இருக்கும் சந்தேகத்தைக் கேட்டாள் “நீ அவங்களுக்கு காசு கொடுத்த தானே? எனக்கு நீ எதையோ திட்டம் போட்டு கொடுக்காம...அதனால... லேட் பண்றாங்க தோணுது "

திரும்பவும் ஷ்யாமை கண்ட நாளிலிருந்து அவள் புனே வாசம் அவனால் திட்டமிடபட்டது என்பதையும் ஷ்யாம் அவளை எங்கே கண்டிருக்ககூடும் என்பதை யூகிக்க முடிந்தது. அர்த்தம் பொதிந்த வசனமாகதான் சொல்லியிருக்கிறான் ‘சிலந்தி வலையில் மாட்டிய பூச்சி’ என.இவள் தான் ‘பெரிய்ய வில்லன் டயலாக் போடா’ என லேசாக நினைத்துவிட்டாள்.

சுந்தரி பேச்சில் ஷ்யாமிற்குக் கோபம் கொந்தளித்தது. இவளா அறிவாளி பெண்?இவளா முன்யோசனையுடன் செயல்படும் திறமை நிறைந்த பெண்? முட்டாள். நடைமுறை சிக்கல் யோசிக்காத அடி முட்டாள்.

இன்னமும் அவள் பக்கம் நின்று அவள் பேசுவதைக் கேட்டால் அவன் கோபம் என்ன செய்யுமோ…
 

swwee

Active member
Wonderland writer
11. இம்சைகள் பலவிதம்

ஷ்யாம் விலகி நடந்த சென்றுவிட்ட பின்னும் அவளால் அவளுக்குள் என்ன மாதிரியான உணர்ச்சிகள் எல்லாம் பொங்கி எழுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

வினிதாவும் அத்தையும் முரளியின் தவறை மன்னிக்க தயாராக இருக்கிறார்கள், அவள் சென்னை விட்டு வந்ததையோ, முரளி விஷயத்தை அவள் கவனிக்காமல் இருப்பதையோ குத்தி பேசி குதிக்கிறார்கள். அவர்கள் பார்வையில் சுந்தரி மட்டுமே தவறு.

முரளிக்காக அவள் செய்த காரியத்தை முன்னே வந்து நின்று நினைவிற்கு கொண்டுவரும் ஷ்யாம் அவள் பாஸ்க்கு எல்லாம் பாஸ். எதிர் கேள்வியே கேட்க முடியாது. அவன் குரலோ, கேள்விகேட்கும் தொனியோ நீ என் கைப்பொருள் என்பதை அழுத்தமாக சொல்வது போல இருக்க,அதை அவளால் ஏற்க முடியவில்லை. தன்மானம் வாட்டி வதைக்கிறது.எங்கே ஓடினாலும் நிம்மதியில்லை. அவளை வதைப்பது அவள் மனம் அல்லவா..! உள்ளிருந்து கொள்ளும் பேய்க்கு யார் வாள் வீசுவது.

அவள் கவலை,வருத்தம், பசி, தூக்கம் பற்றி யாருக்கிங்கே கவனம் இருக்க போகிறது.

ஆழ் மனதில் முரளி மாமாவிற்கு என்ன ஆனதோ என்கிற கவலையும்,அவன் மீது இருக்கும் பாசமும் அவளை அலைக்கழிக்கிறது. பெற்ற அம்மா அப்பா முகம் கூட எங்கேயோ பார்த்த ஞாபகம்.ஆனால் முரளி அப்படியா? கோபமாக அத்தை பேச வந்தால் குறுக்கே புகுந்து தடுப்பான். பாசம் என்பதை அவனிடம் மட்டும் தானே பார்த்திருக்கிறாள். அவன் நல்லவனா கெட்டவனா என்பதெல்லாம் இங்கே தேவையில்லாத ஆராய்ச்சி.அவள் இத்தனை நாள் உயிருடன் இருப்பதற்கு துணை நின்றவன்.உயிருடன் அவள் எதிரே அவன் வந்து நிற்கும் நொடி வரை இந்த பதைபதைப்பு குறையப்போவதில்லை.

உடல், உணவு பற்றிய அக்கறையை விட அவளுக்குள் இருக்கும் கவலை அதிகம், அதற்கு என்ன சமாதானம் சொல்வாள்.இந்த ஷ்யாம் தான் என்ன சொல்லி விட முடியும்.ருசி கண்ட பூனை அவன்,அவளை பயன்படுத்திக்கொள்ள தானே பார்ப்பான். எங்கே போனாலும் அவனிடமே நிற்பது போல இருக்கிறதே அவள் நிலை.

தொடர்ந்து நான்கு நாட்களாக அவள் புலம்பாத வகை இல்லை. கை அதன் போக்கில் அதன் வேலைகளை செய்தால் மனம் அதன் போக்கில் தறிகெட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆபிஸ் முடிந்து கீழே இறங்கி வந்தவள் கண்ணில் கேப் காணவில்லை. செக்யூரிட்டி கவனித்தவன் “ஐயோ மேடம், இவ்வளவு நேரம் உங்களுக்காக காத்திருந்துட்டு இப்போது தான் போகுது வண்டி” என்றான்.சுந்தரிக்கு சலிப்பு தட்டியது. நடந்து சென்று ஆட்டோ பிடிக்க எண்ணி அடி எடுத்து வைக்கும் முன் ஷ்யாம் குரல் கேட்டது. “வா நான் அழைச்சிட்டு போறேன்”

நெஞ்சில் படபடப்பு கூடியது. “வேணாம்.எனக்கு போக தெரியும்”

“நான் பேசணும்”

“என்ன பேசணும்?எனக்கு எதுவும் கேட்கிற மனநிலை இல்லை”

“இது..” என்று அவன் தொலைப்பேசியில் முரளியிடம் பேசிய ரிகார்டை ஓட விட்டான்.

சுந்தரி “வந்து தொலைக்கிறேன்”

காரில் ஏறி அமர்ந்தவளை கவனித்தவன் . “சாப்ட்டியா”

குத்தி கிழிக்கும் ஆத்திரம் வந்தாலும் பேச தெம்பில்லை அவளுக்கு.

“இல்ல”

“சரி எத்தனை நாளா தூங்கல”

“ஷ்யாம்..”

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்”

“பச்..மூணு நாளா”

“நீ சாப்பிடாம,தூங்காம இருந்தா உன் முரளி மாமா வந்திருவானா?”

அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

ஷ்யாம் அக்கறை பாலைவன நிலத்தில் சாரல் மழை போல சில்லென்று இருந்தாலும், கேட்பது அவனல்லவோ, பயம் காந்துகிறதே! எந்த மாதிரி எண்ணத்தில் இந்த மாதிரியான விசாரிப்பு?

பெரிய கட்டிடத்தின் முன் வாகனத்தை நிறுத்தியவன். அவளை அந்த கட்டிடத்தின் உச்சி தளத்திற்கு அழைத்து சென்றான். வெளியே இருந்து பார்க்க பெரிய கட்டிடமென்று தெரிந்த அது அவன் வீடு.அதுவும் கெஸ்ட் அவுஸ். அவன் இன்வெஸ்ட்மென்ட் செய்திருக்கும் ரியல் எஸ்டேட் கட்டி கொடுத்திருக்கும் ஐரோப்பிய வகை அடுக்குமாடிக்குடியிருப்பு.சகல வசதிகளும் நிறைந்த முற்றிலும் 'பிரைவசி' நிறைந்த வீடு. கைரேகை பதிந்து லிப்ட்டில் பயணம், வீட்டை திறக்கும் ஆடம்பர வசதி. ஐந்தடுக்கு கட்டிடம், வீட்டின் கூடத்திலிருந்து பார்த்தாலே மொத்த ஊரும் தெரிந்தது. அவன் வீட்டிற்கு கீழ் வீடுகள் எல்லாம் அவன் நண்பர்களது என்றான்.

அவன் தமிழ் பேசும் விதம், உடை, பாவனை எல்லாம் அவளுடன் கல்லூரியில் படித்த வடநாட்டு பணக்கார வீட்டு பிள்ளளைகள் போல இருக்க, பணக்கார வீட்டு வாரிசு என்று முடிவு செய்துகொண்டாள். பணம் செய்யும் தலைநகரங்களில் வசிப்பவன் என்று முடிவும் செய்திருந்தாள். நினைக்க கூடாத கெட்ட கனவாக மாறியிருந்தவன் பற்றி அதன் பின் அவள் யோசிக்கவே இல்லை.

“நீ யார்?”

அவள் கேள்வி இருவருக்கும் அதிர்ச்சியே. எதுவும் தெரியாமல் இவனோடா அவள் ஓர் இரவை கழித்தாள். இல்லை இவனை பற்றி தெரியும்.என்ன தெரியும்? பணக்காரன், தொழில் விஷயமாக சென்னை வந்தவன், டெல்லியோ மும்பையோ சேர்ந்தவன்.

யோசித்து பார்த்தால் ஷியாம் விஷயத்தில் குத்து மதிப்பாகவே இருந்திருக்கிறாள். இவ்வளவு பெரிய வீட்டை பார்த்ததும் தோன்றிய கேள்வி சட்டென அவளையும் அறியாமல் வெளியே வந்த விதம் அவளை ஆழமாக சிந்தித்து செயல்படு சுந்தரி என்று தலையில் கொட்டியது.

சுந்தரி கேட்ட கேள்விக்கு அதிர்ந்து அவன் பதில் சொல்ல எத்தனிக்கும் நொடியில் அவள் முகம் மாற்றத்தை கவனித்தவன் சிரித்துக்கொண்டான்.

“என் விஷயத்துல மூளை வேலை செய்யமாட்டேங்குது தானே சுந்தரி” கேட்டான்.

குற்றக் குறுகுறுப்பில் அவள் புருவம் சுருக்கவும் அவள் பக்கம் நின்றவன் கை நீட்டி சுருங்கிய நெற்றியை நீவி “யோசிக்காதே...நானே சொல்றேன்”

“நான் முக்தி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் வாரிசு ஷியாம் பிரகாஷ் முக்தி. என் அப்பா ராஜ் பிரகாஷ் முக்தி 'முக்' பைனான்ஸ் அண்ட் பேங்க்ஸ் நிறுவனத்தை தொடங்கியவர்,நான் ஷாமுக்தி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் தனியாக தொடங்கியிருக்கிறேன்.முக்தி ஸ்டீல் நிறுவனத்தில் ப்ரொடக்ஷன் டைரக்டராக வேலை செய்கிறேன்”

சுந்தரிக்கு ஆச்சரியம் பொங்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இடம்பிடிக்கும் நிறுவனத்தின் வாரிசா இவன்?இவனுக்கு இப்படி சின்ன புத்தியா?சில்லறை ஆசையா? கேட்டுவிட்டாள் ‘உனக்கு ஏன் இந்த ஆசை ஷ்யாம்? நீ நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? நீ கொடுமைப்படுத்த நானா கிடைத்தேன்!’அவளே சமாதானமும் பேசிக்கொண்டாள் ‘ஓ,ரைட்டு! எனக்குண்ணு யாரும் இல்ல தானே..! உன் சின்ன ஆசைய என்னை வச்சு தீர்த்துக்க பார்த்திருக்கே…’ மேற்கொண்டு கோபமாக “தெரிஞ்சிக்கோ.நான் அப்படியான பாவப்பட்ட புழு இல்லை. நான் நெனைச்சேன்னா உன் ஷாமுக்தி இன்வெஸ்ட்மென்ட் டீடெயில்ஸ் ஹேக் செய்து வெளியே சொல்ல முடியும்” ஆள் காட்டி விரல் நீட்டி மிரட்டினாள்.

அவள் மிரட்டல் கேட்டு சிரித்தவன். “உட்கார்,நான் பேசுறதை கேள்.அதற்கும் முன்ன இந்த ஜூஸ் குடி.கை நடுக்கம் நிற்கட்டும்” என்று நீண்டிருந்த ஒற்றை விரலுக்கு முத்தம் கொடுத்தான். விரல் தானாக சுருங்கிக்கொண்டது.

அவள் அவனை வினோதமாக பார்க்க, “குடி சுந்தரி. நான் பேசுறத கொஞ்சம் கேள். எனக்கு நீ எதிகள் ஹேக்கர் என்பதும் தெரியும் கூடவே பார்ன் ஜீனியஸ் என்பதும் தெரியும்” அவள் வாய் பிளந்து ஆச்சரியமாக பார்க்க அவன் “இன்னொன்னு சொல்லவா... என் விஷயத்தில் நீ அடிமுட்டாள் என்பதும் தெரியும்” அவள் கோபமானாள்.

“நானா உன் விஷயத்தில முட்டாளா? கிடையாது. எனக்கு முரளி மாமா இந்தியா வரணும்.என் நன்றிக்கடன் தீரணும்.அதுவர உன்னை நான் பொறுத்துத்தான் போகணும்”

“ம்...சரி....நீ அடிக்கடி மூட் ஆப் ஆகுறே ,அது என் கம்பெனிக்கு நஷ்டம் பார்.சோ, ஒரு தொல்லையை கழட்டி விடலாமா”

“என்ன செய்ய போற”

பொறுமை பெண்ணே பொறுமை என்றவன் யாருக்கோ அழைத்தான்.

“நான் வாட்ஸ் ஆப்பில் ஒரு போட்டோ அனுப்பறேன்.அதை வினிதாவிற்கு அனுப்பி போன் செய்து தொந்தரவு செய்தால் முரளிக்கு காட்டுவேன் என்று சொல்” என்றான். சுந்தரிக்கு அதிர்ச்சி ஆனது.

அவன் மீது தாவி அவன் போனை பிடுங்கி பார்த்தவளுக்கு அதிர்ச்சி. போட்டோவில் வினிதா எதோ பப் நடன மேடையில் இன்னொருவனுடன் ஆடிக்கொண்டிருந்தாள். சுந்தரி பார்க்கப் பார்க்கவே அதை சர்வேதச எண்ணிற்கு அனுப்பினான். “ஏய்..ஏய்”அவள் கத்தி கூப்பாடு போட இன்னமும் அவன் அவள் கைகளுக்கு எட்டாத தொலைவுக்கு போனை உயர்த்தினான். ஷ்யாம் முகத்திற்கு நேராக அவள் எம்பி பிடிக்க பருவம் உயர்த்தி “போன் வேணும்ன்னா முத்தம் கொடு” என்றான்.

“சீ..பொறுக்கி” தன் நிலை வந்தவள் நெஞ்சில் படபடப்பு மட்டும் குறையவில்லை.

அவள் கோபத்தை ரசித்து சிரித்தவன் கையில் போன் மணியடித்தது. திரையில் வினிதா என்றும் காட்டியது. சுந்தரி போன் பிடுங்க பார்க்க ஷ்..எதுவும் பேசாமல் நான் செய்யும் வேலை மட்டும் கவனி என்றான்.

அழைப்பை ஏற்றவன் “சொல்லுங்க வினிதா”

“...”

“அப்படியா”

“...”

“ஒன்னு செய்யுங்க அவன் சொல்லுற மாதிரி நடந்துக்கோங்க”

“...”

“இல்ல.நான் பிஸி பர்சன்.இப்படியெல்லாம் என் நேரத்தை வீண் செய்யாதீங்க.பெட்டர் சுந்தரியையும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்ண்ணும் சொல்லிடுங்க”

“...”

“பாருங்க.நான் டீல் பேசிய மாதிரி நான் செய்து கொடுத்துட்டேன். நீங்க உங்களால் முடிந்ததை செய்துட்டீங்க.நமக்குள்ள டீல் முடிஞ்சது =. முரளி இந்தியா வர டைம் எடுக்குது.அது வரை பொறுங்க.என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க. இப்படி என்ன தொந்தரவு செய்தா எனக்கு கோபம் வந்தா முரளி வராமலே போகவும் வாய்ப்பு இருக்கு”

இம்முறை வினிதா அழுது பேசுவது கேட்டது “என்ன சார் இப்படியெல்லாம் பேசுறீங்க.நான் சுந்தரியை திரும்ப உங்களுக்கு அனுப்புறேன் சார்” சுந்தரி தலையில் இடி விழுந்தது போல அதிர ஷியாம் பதில் சொன்னான்.

“கவனிங்க வினிதா, இனி சுந்தரியை தொந்தரவு செய்யாதீங்க. எனக்கு அவங்க போன் செய்தாலோ, என்னை பார்க்க முயற்சி செய்தாலோ கூட எனக்கு கோபம் வரலாம். அடுத்தவங்களை தொல்லை செய்றத நிறுத்திட்டு பெட்டர் பொறுமையா காத்திருங்க. இப்போதைக்கு அது மட்டுமே எல்லோருக்கும் நல்லது நினைக்கிறேன்” சட்டென அழைப்பை துண்டித்துவிட்டு சுந்தரியை பார்த்துச் சிரித்தான்.

சுந்தரி எதுவுமே பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவள் கண்கள் இருட்டியது.

அவள் பக்கம் வந்தவன் “ஒரே ஒரு முத்தம் சுந்தரி” தாபமாக கேட்டு அவள் முகம் நோக்கி குனிந்தான்.
 

swwee

Active member
Wonderland writer
12. திரும்பவுமா..!

குனிந்தவன் முகத்தை பார்க்க பார்க்க நின்ற இடத்தை விட்டு அகல முடியவில்லை. காத்திருந்த வேண்டுதல் நிறைவேறுவது போலொரு விடுதலையுணர்வு.

அதிர்ச்சி காதடைத்தது.

காது அடைப்பது போல இருக்கே என்ன இது என்று நினைக்க நினைக்க கண்கள் மூடிச் சரிந்தாள்.

திரும்ப கண் திறந்து பார்க்கும்போது சோபாவில் கால் நீட்டி படுத்திருந்தாள். ஷ்யாம் ஜூஸ் கையில் வைத்துக்கொண்டு “ இதைக் குடி, டாக்டர் இப்போ வந்திருவாங்க” ஆறுதலாக பேசினான்

“குளிர் அடிக்குது ஷ்யாம். ஏ.சி ஆப் பண்ணுங்க” இல்லாத ஏ.சியை அணைக்க சொல்ல அவள் தன்னுணர்வற்ற நிலை சகிக்க முடியவில்லை.

அடுத்தவருக்காக தன்னை இழக்கும் மனிதர்கள் வெறுத்து போனார்கள் அவனுக்கு.

“சரி” என்றவன் அரை மயக்கத்தில் இருப்பவளை எழுப்பி கட்டாயப்படுத்தி ஜூஸை அவள் காலி செய்யும்வரை வாயில் புகட்டினான்.

வந்த மருத்துவரிடமும் அவள் குளிர் பற்றியே பேச மருத்துவரும் “சாப்பிடாமல் இருந்ததால் மயங்கிருக்கீங்க. எதுவும் பயப்படாதீங்க.ஜஸ்ட் பசி மயக்கம் என்றவர், சலைன் ஏற்ற சொல்லி நர்ஸை பணித்துவிட்டு ஷியாமிடம் பேசினார்.

“இந்த பெண் எதையோ நினைத்துப் பயத்தில் இருக்கிறாள். அதனால் வந்த குளிர் ஜுரம் இது, நல்ல தூங்கட்டும். உடம்பிலும் சத்து இல்லாமல் இருக்கு.ரத்த அழுத்தம் குறைவாக இருக்கு, நாளைக்கும் ஜுரம் இருந்தால் இரத்த பரிசோதனை செய்யலாம்” என்றார்

“மூன்று மாதங்கள் முன்னே இப்படி ஆனது டாக்டர்” வருத்தமாக தெரிவித்தான்

“நல்லா சாப்பிடணும். உடலில் சத்து இருந்தால் தானே மனதில் தெம்பு இருக்கும்! இப்படி சாப்பிடாமல் இருந்தால் சின்ன சின்ன அதிர்ச்சிக்கும் மயக்கம் வரத்தான் செய்யும். நான் மல்டி வைட்டமின் மாத்திரை எழுதிக் கொடுக்கிறேன் சாப்பிட சொல்லுங்க.ஆனாலும் காய், பழம்,முட்டை எல்லாம் நிறைய சாப்பிட சொல்லுங்க."

“கண்டீப்பாக டாக்டர்.தேங்க்ஸ்”

வசதியாக சுந்தரியை படுக்க வைத்தவன். இது என்ன இப்படி பலவீனமாக இருக்கிறாள்? அப்படியென்ன யாரோ துன்பத்திற்கு இவள் மனதை, உடலை வதைத்துகொள்கிறாள் முணுமுணுத்துக்கொண்டே அவள் நெற்றி வருடி கொடுத்து முகம் பார்த்து அமர்ந்திருந்தான்.

அயர்ச்சி கலைந்து எழுந்தவள் “நான் வீட்டுக்குப் போறேன். சரயு தேடுவாள்”

“இன்னைக்கு இங்க இருக்கேன் என்று சொல்”

“நான் போறேன் உன்கூட எல்லாம் என்னால தங்க முடியாது” என்று எழுந்து அமர்ந்தாள்.

“நீ நாளைக்கு வரை அப்சர்வேஷனில் இருக்கணும் சுந்தரி, சொன்னால் கேள்”

"அதெல்லாம் இல்ல, சின்ன வயதிருந்தே நான் இப்படித்தான். காய்ச்சல் நிறைய வரும் போகும்”

“ஏன் அது?”

எரிச்சல் ஆனாள். என்ன கேள்வி கேட்கிறான் இவன்.அத்தை சாப்பிடக் கொடுப்பதைத் தான் சாப்பிட வேண்டும்.பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் வேறு செய்துதா என்றெல்லாம் கேட்க முடியாது. அத்தைக்கு அவளை பிடிக்கவில்லை, அதையும் மீறி மாமா அவளை அங்கு வீட்டில் இருக்க வைத்தார். பள்ளிக்கூடம், வீடு அதன் பின் ஹாஸ்டெல் கல்லூரி அது முடிந்ததும் எங்கும் போகாமல் சென்னையில் ஆபிஸ். அவள் மாமாவின் அதிகபட்ச அறிவுரை “கண்ட இடத்தில் சுற்றி, பிரெண்ட்ஸ் கூட சந்தோசமாக இருக்கிறேன் என்று போய் உடம்பை கெடுத்துக்கொள்ளத்தே. நிறைய படித்து நல்ல மதிப்பெண் வாங்கு” அத்தை “கழுத பள்ளிக்கூடம் போனோமா வந்தோமான்னு இருக்கணும்.போடுறத தின்னட்டு வீட்டுக்கு உபயோகமா இரு" என்பாள்.

“நான் உன்னைப் போலப் பணக்கார வீட்டு வாரிசாக வளரலை ஷ்யாம்.அத்தை செய்து கொடுப்பதை தான் சாப்பிட முடியும்.பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அப்படி நிறைய இருந்திருக்கிறேன்.இத்தனை நாள் நான் உயிரோடு இருப்பதும் இதே கோட்பாட்டில் தான். செய்ய முடிவதை செய்கிறேன் செய்ய முடியாத விஷயத்தை விட்டு விடுகிறேன்”

நேராக அவன் முகத்தை பார்த்துக்கொண்டே துக்கம் மறைத்து அவள் சொன்ன விதத்தில் அவள் பேச்சை கேட்டவன் அவளை இழுத்து அணைத்து “போதும் விடு அந்த கதை.நாளை வரை இங்கே இரு சுந்தரி. அதன் பின் உன் உடல்நிலை தேற்றலாம்.முரளி வந்தபின் நீ தமிழ்நாட்டுக்கு போ.அதுவரை இங்கேயே இரு”

சுந்தரிக்கு அவன் அணைத்த விதம் ஆறுதலாக இருந்தது. அவளாக விலகும் வரை அவன் அசையவில்லை. கரகரத்த குரலில் “வேண்டாம் ஷ்யாம் உன் அல்ப ஆசை,விளையாட்டுக்கு நான் ஆள் இல்லை.என்னை விட்று. நான் எனக்கு வந்தபடி வாழ்ந்துட்டு போறேன். எல்லாம் போன பின்னும் இந்த உயிர் இருக்குன்னா என்னால் இந்த பூமிக்கு பிரயோஜனமாக செய்ய எதோ இருக்கு அதை தேடி போறேன் ஷ்யாம்.ப்ளீஸ்…”

அவள் அழு குரல் அவனை உருக்கியது. அவன் மனநிலை சொன்னால் புரிந்துகொள்ள முடியுமா என்ன? என்ன விளக்கம் கொடுத்தாலும் அவன் என்ன, அவன் நோக்கம் என்ன என்பதை அவளாக புரிந்துகொண்டால் ஒழிய அது மாறப்போவதில்லை.

“ஷ்யாம் நீ முரளிக்காக பெரிய விஷயம் செய்திருக்கே. பொறு, பணம் உனக்கு பெரிய விஷயம் இல்லை.ஆனா எனக்கு அது பெரிசு தான்.இன்னொரு முறை இதோ இந்த உதவிக்கு அன்னைக்கு மாதிரி இன்றைக்கும் கூட இருண்ணு சொன்னா நான் செத்து தான் போகணும். என் மேல் எனக்கே அசுசியாக இருக்கு. அது ஏதேனும் தெரியுமா உனக்கு ?” அழுதுகொண்டே அவள் பேசவும் ஷியாம் விக்கித்து நின்றான்.

அவனும் தான் உள்ளுக்குள் தவிக்கிறான் என்பதை எப்படி சொல்வான். எனக்கு அப்பா அம்மா இல்லை,அத்தை கொடுமை செய்தாள், மாமா அமைதியாக இருந்தார் என்று அவள் சோகங்களை சொன்னாள் கேட்டுக்கொண்டான்.

அப்பா அம்மா சொந்தம் பந்தம் இருந்தும் அவன் பட்ட துன்பங்களை சொன்னால் புரியுமா?ஏற்றுக்கொள்வாளா? மற்றவர் போலவே ஆமா நீ உன் தந்தையைபோல இருப்பதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டுவிட்டால் என்ன ஆகும்? அவன் சோகங்களை, கோபத்தை மறைத்துக்கொள்ள எந்நேரமும் கடினமான ஆளாக இருப்பதிலே அவன் நாட்கள் போகுதே.அந்த வலி புரியுமா? அவளோடு இருந்த அந்த மூன்று நாட்கள் தான் அவனுக்கு மகிழ்ச்சியான நாட்கள். குழந்தை போல அவன் பாராட்டுக்குப் பூரிப்பாகும் அவள் முகம் என்றேனும் மறக்குமா? பொசுபொசு பூனைக்குட்டி சீறி பயமுறுத்துகிறேன் என்று முயற்சி செய்வது போல எந்நேரமும் அவனைக் கடுப்படிக்க பதில் பேசிய அவள் கோபம் அவனுக்குள் ரசனை போதை கொடுத்தது என்று சொன்னால் என்ன செய்வாளாம் இவள். அந்த இரவுக்குப் பின் அவனையே அவன் வெறுக்கிறான் என்றால் ஏற்பாளா? ஓர் பெண்ணுடன் உறவை வைத்து பிள்ளை கொடுத்து ஏமாற்றும் ஆண்களால் என்ன கொடுமையெல்லாம் நடக்க முடியும் என்பதை அவனை விடவும் யாருக்கு அதிகமாகத் தெரியுமாம்? க்ஷண நேர அற்ப மகிழ்ச்சிக்கு மொத்த குடும்ப கௌரவமும் கெடுத்த தந்தையின் மகன் அவன்.பெண் குலத்திற்கு எந்த பாவம் செய்யக் கூடாது என்று நினைத்தானோ அதைச் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கிறான் என்றா நினைக்கிறாள் இவள்.

அவள் மெத்தையில் அமர்ந்திருக்க எழுந்து நின்றவன் பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு அதிகாரமாக “தூங்கு சுந்தரி. காலையில உன்னை கவனிக்க ஆள் வரும்.மாலை நான் வந்த பின் முடிவெடுக்கலாம்” சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

சுந்தரி அயர்ச்சி ஆனாள். ஷ்யாமிற்கு என்ன தான் வேண்டும் அவளிடமிருந்து? சற்று நேரம் முன் அவள் கையில் சலைன் ஏற்ற ஊசி குத்தியிருக்க கவனமாக அழுத்தமாக கட்டிப்பிடித்திருந்தானே அந்த வெதுவெதுப்பு இன்னமும் வெம்மை பரவிக் கொண்டிருக்கிறது அவள் உள்ளத்தில். ஷியாம் அவளுக்கு தேவையில்லாத பாரம்.அவன் மீது காதலோ, நட்போ பந்தமோ பாசமோ வளர்த்துக்கொள்வது அவளுக்கு எந்த விதத்திலும் நன்மையில்லை. அவனை விட்டு தூரமாகப்போவது மட்டும் தான் அவளுக்கு நல்லது.

இதோ உடல்நிலை தேறியதும் அலுவலகம் சென்று ராகுலிடம் வர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன் கேட்டு வாங்கிக்கொண்டு திவ்யாவிடம் சென்றுவிட்டால் தற்காலிகமாக இந்த உணர்ச்சிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

இது தான் நமக்கான சூழ்நிலை,இது மாறாது நாம் அதற்கேற்றாற்போல மாறிக்கொள்ளவேண்டும் என்ற முதிர்ச்சியான மனநிலையிலிருந்து எப்போது அவள் மாறினாள் என்றே தெரியவில்லை. ஷ்யாமிடம் பேசும்போதெல்லாம் அத்தை.மாமா பற்றிக் குறை சொல்லி பேசுகிறாள்.அவள் மனகாயங்களுக்கு அவனிடம் ஆறுதல் தேடுகிறாள். அபத்தமான விஷயங்களுக்கு கவலை கொள்கிறாள். இந்த ஷ்யாம் அவளுக்கு நல்லதே இல்லை.இவன் பக்கம் இருந்தால் வேண்டாத எண்ணம் மேலோங்கி நிற்கிறது. என்னை கவனி, என் மனம் கேள், என் ஆசை இது தான் என்றெல்லாம் உளறிக்கொட்டி அவள் நிம்மதியை கெடுத்துக்கொள்ள நெஞ்சம் துடிக்கிறது.

வெளியே வந்தவன் ஹால் சோபாவில் படுத்துக்கொண்டான். எந்த பக்கம் திரும்பினாலும் கண்களை மூட கூட முடியவில்லை. சுந்தரி படுத்திருக்கும் அறை கண்களில் படும் விதம் படுத்துக்கொண்டு அவளைப் பற்றி யோசித்துக்கொண்டே உறங்கிப் போனான்.

அழகான பச்சை பசேலென்ற வனம்.சுற்றி மான்களும் முயல்களும் ஓட, அங்கே ஒரு மரம்.அதன் நிழலில் கால் நீட்டி உட்கார்ந்திருக்கும் ஷியாம் மீது சாய்ந்துகொண்டு சுந்தரி எதையோ வரைந்துகொண்டிருக்கிறாள். அவள் வலது கையில் சலைன் ஏற்றிய வெண்பிளான் ஒட்டியே இருக்கிறது.அவன் எதிரில் பெரிய குளம் இருக்க அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே சுந்தரியைத் தலையில் தடவிக்கொடுத்து ஆயாசமாக அமர்ந்திருக்கிறான், கொஞ்ச தூரத்தில் ஒரு புலியும் அமர்ந்துகொண்டு அதன் கால்களை சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறது.அடிக்கடி அவன் கவனம் அதன் பக்கம் திரும்ப சுந்தரி,ஷ்யாம் அங்க பார்க்காதே.இங்க பார் என்று அவள் நோட் புத்தகத்தைக் காட்டுகிறாள். அவன் திரும்ப முடியாமல் திணற 'ங்கிரீங்'என்ற சத்தம் தொலைதூரத்தில் எங்கோ கேட்கிறது. சற்றுநேரத்தில் மிகவும் அருகில் கேட்க முழிப்பு வந்து எழுந்தான். கனவு அது என்று புரிந்து எழ எத்தனித்தவன் எதன் மீதோ கால் வைக்க அது உடைந்தது. சுந்தரியின் கண்ணாடி அது.

சுந்தரியை பார்த்துக்கொள்ள ஆள் அனுப்பியிருந்தான் ராகுல். “மூன்று நேரமும் மாத்திரை கொடுங்க, ஜூஸ் குடிக்க சொல்லுங்க. நிறைய தண்ணீர் குடிக்க வையுங்க. நான் மாலை வரேன்” என்றவன் சென்றுவிட்டான் .

அவன் வீட்டுக்கு வந்தவன் குளித்து பிரஷ்-அப் ஆகி அலுவலகம் கிளம்பிவிட்டான். கவலை,சினம் வருத்தம் எல்லாவற்றிருக்கும் நிவாரணி வேலை மட்டுமே தானே.காலை ஸ்டாக் மார்க்கெட் திறந்ததும் வழக்கம் போல முக்தி ஸ்டீல் மார்க்கெட் வேல்யூ குறைய தொடங்கியது.
 

swwee

Active member
Wonderland writer
13. யாருடைய சதி?

கடந்த இரண்டு வருடங்களில் முக்தி ஏற்றுமதி விநியோகம் செய்ய வேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் டெலிவரி ஆகாமல் சொதப்பி அதனால் நஷ்டமடைந்திருக்கிறது. பிளான்ட்டில் விபத்து நடந்தது. அதனால் நஷ்டம் ஆனது. திருட்டு, லேபர் ஸ்ட்ரைக் அதன்பின் வெளிநாட்டு நிறுவனம் கூட்டு தொழில் செய்யக்கேட்டது என்று கொஞ்சமும் நிம்மதி கொடுக்காத வேலையாக தான் இருக்கிறது முக்தி ஸ்டீல் நிறுவனத்தில்.

ஷ்யாம் மட்டுமே இதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க மற்ற எல்லோரும் இது எப்போதும் நடப்பது தான்,இந்த மாதிரி நிறுவனத்தில் இது எல்லாம் சகஜம். நீ கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று அறிவுரை சொல்லிவிட்டு போகிறார்கள். கடந்த நான்கைந்து மாதங்களாக மாத தொடக்கத்தில் போகும் மார்கெட் வேல்யு திடீரென்று சரிந்து அதன் பின் சரிந்து கொண்டே போகிறது. இதையும் அவன் சந்தேகப்பட அவன் தந்தை இதுவும் சகஜம் ஒரு பெரிய அரசு கண்டிராக்ட் எடுத்தால் சட்டென உயர்ந்துவிடும் என்றார். முக்தி ஸ்டீல் நிறுவனம் அடைக்கப்பட்டாலும் அது ஈட்டி தந்த லாபம் அவர்கள் தொழிலாளர்களை சும்மா உட்காரவைத்து சோறு போடும் அளவுக்கு இருக்கிறது என்றும் பெருமை பேசினார். ஷ்யாமிற்கு முக்தி ஸ்டீல் மூடப்படும் என்பதே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைப் பொறுத்த வரை இதுவெல்லாம் சதி. அவர்கள் முதுகிற்குப் பின் ஏதோ நடக்கிறது.

அன்றைக்கு அவர்கள் மார்கெட் வேல்யூ குறையவும் அதை கவனித்தவனால் தாங்க முடியாமல் போனது. யாரை சந்தேகப்படுவது யாரை சும்மா விடுவது.

அவனால் முடிந்த மட்டும் இது அவன் ப்ரம்மையா? இல்லை அவன் சந்தேகப்படும் மாதிரி கூட்டு சதியா? என்பதை கண்டுகொள்ளப் போகிறான். அப்படி ஒரு முடிவெடுத்த பின் தான் அவனால் அடுத்த வேலையை கவனிக்க முடிந்தது.

மாலை ஆனதும் சுந்தரியை காண கெஸ்ட் அவுஸ் சென்றான். நல்லா இருக்கிறேன் எனக்கு ஒன்றுமில்ல, ஜஸ்ட் ஃபீவர் அவ்வளவு தான் என்றவள் வாடிய கீரை கட்டு போல சோஃபாவில் படுத்துக்கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதை பார்த்தான். அவன் வந்ததை கூட கவனிக்காமல் எதையோ மனதில் உழன்று கொண்டிருப்பவளை அவன் என்ன செய்வது ?

“க்கும்” அவன் வந்திருப்பதைக் காட்டிக்கொண்டான்
“நீயா?” கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள்.

கடல்களுக்குள்ளும் எரிமலைகள் உண்டாம். அவள் மனம் அந்த குளுகுளு தண்ணீர்க்குள் இருக்கும் எரிமலை போல குமைந்து கொண்டே இருந்தது. ஷ்யாம் அவளுக்கு அநியாயம் செய்தவன். ஆனாலும் அவன் பக்கம் அவள் ஈர்க்கப்படுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. சதாசர்வ காலமும் மண்டைக்குள் அவனைப்பற்றியான ஓடும் எண்ணங்களை நிறுத்த வழி தெரியவில்லை.

முரளி மாமா விஷயம் பேசவேண்டும் ஷ்யாம்.அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்றாள்.

“முரளி வர டைம் எடுக்கும்.அதை தவிர என்ன இருக்கு? முரளியை தவிர பேச வேறு எதுவுமே இல்லையா என்ன? ஆரோக்கியம், வேலை, வீடு, ஊர் சாப்பாடு எத்தனை இருக்கு..!” கேள்வியை கேட்டுவிட்டு அவளை பொறுமையாக பார்க்க அந்த நொடியை கலைக்கவே அவன் பர்சனல் போன் மணி அடித்தது.

அவன் விசாரித்திருந்த ஸ்டாக் மார்க்கெட் எக்ஸ்பெர்ட் அதன் ட்ரெண்ட்டில் எந்த குழப்பமும் இல்லை என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அவன் முகம் கருத்தது.

அழைப்பை ஏற்கும் போது இருந்த முகபாவமும் அதை துண்டிக்கும் போது அவன் கோபம்,எரிச்சல் நிறைந்த முகம் பார்த்து அவளையும் மீறி “என்ன ஆச்சு ?” கேள்வி வெளியே வந்து விழுந்தது.

பெருமூச்சு விட்டு சலித்துக்கொண்டவன் இவள் ஹேக்கர் என்பது நினைவுக்கு வந்தவன் “எனக்கு ஒரு உதவி செய்வியா?”

அவள் கண்கள் விரிந்து பார்க்க, சொல்லு என்று அவன் கண்களில் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக கேட்க “எனக்கு உடம்பு சரியில்லை” சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு அவனை ஓர கண்ணால் பார்த்தாள்.
“எனக்கு ஒரு சந்தேகம்.அது உன்னால தீர்க்க முடியும்”
“அப்படியா. பாருப்பா உதவி எல்லாம் கேட்கிறார் பணக்காரர்” கிண்டலாக பேசினாள் மனதிற்குள் இந்த பணக்காரன் தேவை மட்டமாக எதுவும் இருக்க கூடாதே சஞ்சலமடைந்தாள்.

“சுந்தரி நான் சீரியசா கேட்கிறேன்” என்று அவன் சொன்ன விதத்தில் அவளும் தீவிர முகபாவத்துடன் “சொன்னால் தானே தெரியும்”

அவன், அவன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான். பார் முக்தி ஸ்டீல்ஸ் எந்த வெளிநாட்டு நிறுவனத்தின் ஆதிக்கமும் இல்லாமல் இயங்கி வரும் நிறுவனம். இந்தியாவில் 90’களுக்கு மேல் பாரின் இன்வெஸ்ட்மென்ட் பாலிஸி வந்தும் முக்தி ஸ்டீல் அதன் முதலீட்டில் எந்த அந்நிய நிறுவனத்தையும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஏற்றுமதியில் மட்டுமே சேர்த்துக்கொண்டோம். நிறைய அந்நிய நிறுவனங்கள் பார்ட்னெர்ஷிப் வந்தும் வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தோம். முக்தி மீது நிறைய பேருக்கு ஆசை உண்டு,அதனால் தான் எனக்கு இந்த சந்தேகம் வலுக்கிறது. இரண்டு வருடங்களில் நிறைய சிக்கல்கள், மார்க்கெட் வேல்யூ குறைவாக வெளியே தெரிவதால் ஈட்டும் லாபமும் கணக்கில் காட்டாமலும் போகலாம் என்று ஆடிட்டர்கள் அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்கள். அப்படிச் செய்யும் போது பிற்காலத்தில் டேக்ஸ் பிரச்சினையும் வரும்.யாரோ நன்கு தெரிந்த ஆள் புத்திசாலித்தனமாக விழுந்தால் எழ முடியாதவாறு குழி தோண்டுகிறார்களோ?

இதுவெல்லாம் என் கற்பனையாக கூட இருக்கலாம் ஆனால் இதிலிருந்து எனக்கு ஒரு தெளிவு வேண்டும் சுந்தரி.

அவன் குழப்பமான முகத்தை பார்த்தவள் பேசினாள். வளர்ச்சியோ அழிவோ படிப்படியாக நிகழும் நிகழ்வு தான். உன் சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன். எனக்கு ஒரு வாரகால அவகாசம் கொடு என்று கேட்டாள்.

அவள் சமாதான பேச்சு இதம் கொடுத்தது. “உனக்கென்ன வேண்டுமோ கேள்,ஏற்பாடு செய்கிறேன்”
சுந்தரி “ஒரு கேப், நான் வீட்டுக்கு போக”
“அது முடியாது”
“ஏன்”
“நீ வீக்காக இருக்க,உன்னை கவனிக்க, சாப்பிட வைக்க ஆள் வேண்டும்”
“நான் குட்டிப்பாப்பா கிடையாது”
“ஆமா கிடையாது.ஆனா அப்படி இருந்தா நல்லா இருந்திருக்கும்”
“பார் எனக்கு பீவர் சரியா போச்சு”
“இல்ல சுந்தரி உனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கு ”
“ஹே...நீ என்ன பைத்தியமா? சொன்னா புரியாது? நான் எபபவும் இப்படித்தான்”

அவன் அக்கறை அவளுக்குக் கையாள தெரியவில்லை. எப்போதும்போல அவன் மேல் இருந்த ஈர்ப்பு உயிர் கொள்ள எரிச்சலாக எதிர்கொண்டாள் அதை. அவனுக்கு அவள் கோபம் வலித்தது.

அவன் அக்கறையை பேசி புரியவைக்கலாமென “சுந்தரி, நீயும் நானும் சந்திக்கும் போதெல்லாம் நீ உடல் பலவீனமாக இருக்கே நான் அதைக் கவனிக்கும்படி ஆகிறது”

“ஹே… மொத நாள் உன்னை பார்க்க வரதுக்கு முன்ன தலைக்குக் குளிச்சிட்டு , ஏ.சி கீழ நின்னு ஜலதோஷம் பிடிக்கட்டும்ன்னு நின்னுட்டு வந்தே.காய்ச்சலும் வந்தது. உன்ன அப்ப பார்க்க வந்தப்ப என்ன ஸ்ட்ரெஸ்ஸோ அதுவே தான் இப்போதும். அப்பறம் எப்படி எனக்கும் உடம்பு சரியா போகும்”

அவள் பேசிய விதம் சிரிப்பாக இருந்தது. ஜீனியஸ் பெண் என்ன செய்வாளோ எங்கின்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்தது. இத்தனை முட்டாள்தனமாகவா திட்டம் தீட்டி வந்தாள். முரளி அத்தனை முக்கியமா?

உடைந்தான் “சரி நீ போகலாம்” என்றவன் அவள் குளித்து தயாராகி வருவதற்குள் மருத்துவரை அழைத்து அவள் காய்ச்சல் குறைய மாத்திரை, உடல் தேற சத்து டானிக் வரவைத்தான். மருத்துவர் ஆலோசனையை அப்படியே மனப்பாடமாகக் கடத்தினான். “சாப்பிடும் அளவு உடல் பயிற்சி தேவை உனக்கு. தினமும் உடற்பயிற்சி செய், கீரை நிறைய சாப்பிடு” அவன் பேச்சுக்கு சரி சரி என்று பதில் சொல்லிவிட்டு கார் ஏறினாள்.

வழி முழுக்க அமைதியாக வந்தவன் சரியாக மாத்திரை சாப்பிடுவேன் என்று அவள் உறுதி அளித்த பின்னரே அவளை கார் விட்டு இறங்க விட்டான்.

சுந்தரி அவனை விட்டு தூரதூர போக அவனால் அவன் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவளை அவன் பக்கம் எப்படி இழுக்கலாம் என்று இப்போதே கணக்கு போட தொடங்கிவிட்டான்.

இத்தனைக்கும் தினமும் எக்காரணம் கொண்டும் அவளை நோகடிக்கக் கூடாது, மேலும் அவனை அவள் வெறுக்கும்படி நடக்க கூடாது என்றும் நினைத்துக்கொள்கிறான். ஆனாலும் முடியவில்லையே.

வீட்டின் வாசல்வரை சென்ற சுந்தரியை கவனித்தபடி காரில் அமர்ந்திருந்தான். கதவு திறக்காமல் இருக்க தயங்கி இங்கும் அங்கும் நடந்தவள் அவன் காரை நோக்கியே வந்தாள்.

“என்ன ஆச்சு?” சாதாரணமாக அவன் கேட்க திக்கி திணறி “ராகேஷும் சரயுவும் உள்ள இருக்காங்க, கதவை திறக்கலை மிழற்றினாள்.

ஷ்யாம் “ஓ… லவ் பேர்ட்ஸ்.அவங்க சந்தோஷமா இருக்கட்டும் நீ வா என் கூட”

“எதுக்கு ?”

“ம்ம்ம்… நீ என்ன நினைக்கிற”

“நான் எதுவும் நினைக்கல”

“நானும் எதுவும் நினைக்கல”

திரும்பவும் அந்த வீட்டிற்குள் அவளுக்கென ஒதுக்கிய அறைக்கு வந்து சேர்ந்தவளுக்கு ஷ்யாம் கலங்கிய முகம் நினைவில் நிழலாடியது.ஏனோ குறும்பு பார்வை பார்க்கும் ஷியாம் தான் அவளுக்கு பிடித்திருக்கிறது, இந்த முகம் அவளை வதைக்கிறது.சரயு போனில் அழைத்தாள். படபடப்பாக எங்கே போனாய், பாய் பிரென்ட் கிடைத்துவிட்டானா? சாப்பிட்டாயா என்று கேள்விகளும் அவள் கடை இந்த வாரம் அதிக லாபம் சம்பாதித்திருக்கிறது என்பதை ஆரவாரமாக பேசினாள்.அந்த லாப கொண்டாட்டத்தை ஸ்டார் பப் டிஜே நைட்டில் கொண்டாட டிக்கெட் வங்கியிருக்கிறாளாம் சுந்தரி அங்கே வந்தாகவேண்டும் என்று அதிகாரமாகப் பேசினாள்.

அடுத்த நாள் சுந்தரி அவர்கள் வீட்டுக்கு சென்றபின் அவள் உடல் நிலை சரியில்லை என்றதும் அவளுக்கு ஏற்றார் போலக் கஞ்சி செய்துகொடுத்து உண்ணவைத்தாள் சரயு. சரயுவின் இதமான உபசரிப்பும் ஷ்யாமை நினைவுபடுத்தியது.

முரளிக்கு போதையில் இருப்பது மட்டுமே சாத்தியமான நிலையாக இருக்க உடல்நிலை குன்ற தொடங்கிவிட்டது.அவன் அமைதியாக வரவேண்டுமென்றால் அவனுக்கு அதிக அளவு போதை வஸ்து கொடுப்பதற்கும் அவர்கள் தயார். அவனை இந்தியா அழைத்து வருவது தானே அவர்கள் வேலை..!

பின் வந்த நாட்களில் இரவுகளில் சரயு உறங்கிவிட சுந்தரி அவள் வேலையை தொடங்கினாள். முக்தி நிறுவனங்கள் அவர்களின் மேலாளர்கள் மெயில்கள் என்று சுலபமாக ஹேக் செய்ய முடிந்ததை
செய்து தகவல் திரட்ட தொடங்கினாள்.

முதல் முயற்சி அவளைத் திக்குமுக்காட வைத்தது. எதைத் தேட, என்ன தேட என்று தெரியாமல் முடிந்த அளவு தகவல் சேகரித்தாள். விடிந்தும் வேலை செய்தவள் அடுத்த நாள் பகல் முழுக்க தூங்கி இரவு வேலை பார்த்தாள்.

முக்தி நிறுவனம் சொந்தங்கள் சேர்த்துக்கொண்டு ஊர் பெரியவரால் தொடங்கிய நிறுவனம். எந்த வெளிநாட்டு நிறுவனத்தின் பார்ட்னர் ஷிப் இல்லாமல் நாங்கள் வளர்ந்தோம் என்று பெருமை பேசினான் ஷியாம் அது ஏன் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓர் ஊரே சேர்ந்து அந்த நிறுவனம் வளர உதவியிருக்கிறது.அதே போல அந்த நிறுவனமும் அவர்கள் குடும்பமும் கூட அவர்கள் மக்கள் வளர நிறையச் செய்திருக்கிறது. முக்தி தயாரிப்பு நிறுவனம் இருக்கும் ஊரில் முக்தி ஸ்கூல், முக்தி மருத்துவமனை என்று நிறையச் செய்திருக்கிறது.

முக்தி ஸ்டீல் மட்டுமே சம்பாதிக்கும் நிறுவனமாக இருக்க, மத்த அவர்கள் நிறுவனம் எல்லாமே சேவை செய்யும் நிறுவனங்கள். குறைந்த லாப மார்ஜின் கொண்டு இயங்குவது.

முக்தியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டே வந்தவளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு டச் நிறுவனம் இவர்களுடன் பார்ட்னர்ஷிப் கேட்டு வந்து அதனால் முதல் வட்ட டைரெக்டர்களுக்குள் பிரச்சினை வந்தது தெரிந்தது. அதன் பின் எந்த தகவலும் அந்த சண்டை பற்றித் தெரியவில்லை. சோர்ந்து போனாள். அடுத்த பகலும் தூங்கி எழுந்தால், கனவிலும் ஷியாம் வந்து நின்றான்.

அரை மயக்க நிலையில் அவள் இருந்த போது ஒரே முத்தம் என்று கேட்ட அவன் குரல் கேட்டது.சட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள்.

நிறுவன வேலை,தனியாக ஷ்யாமிற்கான வேலை என்று கணினிக்குள் தன்னை பொதிந்துகொண்டாள்.

மூன்றாம் நாள் இரவு உற்சாகமாக அவர்கள் மார்கெட் வேல்யூ குறைக்கும் காரணிகளை வகைப்படுத்தி கொண்டிருக்க காளிங் பெல் சத்தம் கேட்டது.

திறந்தவளுக்கு ஆச்சார்யம். மனதில் நினைத்தவுடன் கண்களுக்கு காட்சி கொடுக்கும் வித்தையை எங்கே கற்றான் இவன் ?
 
Status
Not open for further replies.
Top