ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை செந்தமிழே - கதை திரி

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
4.கிரேக்க சிற்பம்

பணக்கார அரை கிழவனாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? பரம்பரை பணக்கார வாரிசாகக் கூட இருக்கலாம் இல்லையா! யோசிக்காமல் விட்டாளே.

உடல் வெப்பம் கூடியது. சகித்துக்கொண்டு நம்மால் முடிந்தது செய்யலாம் என்று சமாதானம் செய்துகொண்டு தொடர்ந்தாள் அவள் திட்டத்தை.

அன்புக்கு ஏங்கி அவள் நிற்கையில் பாசமாக இருந்தவன் அல்லவா முரளி. அவன் விடுதலை ஆகி வர அவளால் முடிந்த அளவுக்கு அவள் போராட வேண்டுமல்லவா!

உணர்வுகளை புரிந்துகொள்ளும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதை இதோ இந்த கிரேக்க சிற்பம் எதிரில் அமர்ந்திருக்கிறதே! புரிந்து கொள்ள மாட்டானா என்ன?

செஸ் என்பது முழுக்க முழுக்க அறிவை பயன்படுத்தி விளையாட வேண்டியது. அவன் கவனம் முழுக்க அவள் முகம் மீது மட்டுமே.

அவன் கவனிக்கிறான் என்று தெரிந்தும் கொஞ்சமும் அசராமல் விளையாட்டு காய்கள் மீதே அவள் கவனம். உள்ளுக்குள் படபடப்பு தான் அவளுக்கு, காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தாள்.

நடுவில் டீ சுவைத்தால் அவள் முகம் மாறும், டீ விழுங்கும் வேளை சிரமப்பட்டு விழுங்கினாள்.

“டீ கசப்பாக இருந்தால் விடு, வேற டீ போட சொல்றேன். இல்லை பால் குடிக்கிறியா”

“வேண்டாம்”

“ஏன்”

“பால் பிடிக்காது”

“இன்றைக்கு ஒரு நாள் குடி”

பிடிக்காத விஷயத்தையே தொடர்ந்து செய்வது கஷ்டமாக இருக்கிறது மனதை மறைக்காமல் பேசினாள்.

“நல்லது என்றால் செய்யலாமே” பதிலுக்கு பேசினான்.

அது அவளை சீண்டியது

“எது நல்லது…” அவள் கோபமாகச் சீர...

அவன் சாந்தமாக “பால் உடம்புக்கு நல்லது. நல்ல தூக்கம் வரும்” என்றான்.

அவன் கண்களில் அத்தனை கிண்டல் கேலி. வார்த்தைகள் அக்கறையாக இருக்கலாம் அத்தனையும் இரட்டை அர்த்தம்.

ஐயோ.. நேருக்கு நேராக சண்டை போடும் ஆட்களை கூட சமாளித்து விடலாம் ஆனால் வார்த்தைகளை மாற்றி போட்டு பேசி நடிக்கும் ஆட்களை,அவள் கோபத்தை கிளறும் ஆட்களை என்ன செய்வது ??

கோபம் தாளாமல் முறைத்து பார்த்தாள். அவனும் நேராக அவள் கண்களையே பார்க்க சிறிது நேரத்தில் அவள் மூக்கிலிருந்து சூடாக ஏதோ வழிவது போல இருக்க தொட்டுப்பார்த்தால் இரத்தம்.

சுந்தரி மூக்கிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து பதறியவன் அவளை சேரில் அமர வைத்து, தலையை நிமிர்த்தி வைக்க சொல்லி துணி ஒன்றை ஈரமாக்கி கொண்டு வந்து அவள் மூக்கில் வைத்து தலையை தடவி கொடுத்து மருத்துவருக்கு அழைத்தான். நெற்றியை தொட்டு பார்த்ததுமே அவனுக்கு புரிந்துவிட்டது அவளுக்கு காய்ச்சல் இருப்பது.

வந்த மருத்துவர் சோதித்துவிட்டு காய்ச்சல் குறைய, அவள் தூங்க மருந்து கொடுத்துவிட்டு இரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்தார்.

மருத்துவர், இந்த பெண் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். சரியாக சாப்பிட காணம் போல!! பதற்றம் நிறைய, அதனால் தான் மூக்கிலிருந்து இரத்தம் வந்திருக்கு. எதற்கும் முழு உடல் பரிசோதனை தேவை என்று தீவிரமாக பேசுவது சுந்தரி காதுகளில் விழுந்தது.

உடம்பு வலி, தலை வலி, தொண்டை வலி என்று சோர்வு கூட ஈன ஒளியில் ‘முரளி மாமாவைக் காப்பாத்துங்க ப்ளீஸ்’ என்று அவன் கைப்பிடித்து அழுதாள்.

மனம் உருகி மெழுகு பாகாய் வழிந்தது ஷியாமிற்கு. அவளுக்காக என்று அவன் செய்வதை காதல் கொண்டு காணுவாளோ!! நன்றி என்று சொல்லி பிரிந்து போவாளோ தெரியாது. இந்த நிமிடம் அவன் மனதை கவர்ந்த பெண் அவள் என்பது அவனுக்கு உறுதி. அவனை அவள் ஏமாற்றி போடா என்று போவதை கூட அவன் ஏற்றுக்கொள்ளத் தயார். அவள் உதவி கேட்டுச் செய்யாமல் இருப்பானா என்ன?

அவள் எதிர்கவே யாருக்கோ கைப்பேசியில் அழைத்து பேசினான். எதிர்புறம் பேசுவதை ஸ்பீக்கரில் போட்டான். சார், ஆள் கண்டுபிடிசிட்டோம். தவறு அவர் மேல் தான். லீகளாக வெளியே எடுப்பது கஷ்டம் என்றார்.

விசயம் கேட்டதும் அவள் உடல் இன்னமும் குலுங்க “சரி, என்ன ஆனாலும் சரி. என்ன பண்ணுவீங்க தெரியாது. ஒரு மாதம் டைம் கொடுக்கிறேன். அந்த ஆள் இந்தியா வந்திரணும்” என்று அழைப்பை துண்டித்தான்.

அவள் அழுவதை காண சகியாது உன் முரளி மாமா இந்தியா வருவார், நீ தூங்கு என்றான். சிறிது நேரம் பேசாமல் இருந்தவள், நன்றி சொல்லி கண் அயர்ந்தாள்.

யாருக்கும் காத்திராமல் விடியல் தொடங்கியது. அந்த நாள் வரை அவன் பயன்படுத்திக்கொண்டிருந்த அறை அது. இரவெல்லாம் சுந்தரியை கவனித்து கொண்டும் தூக்கம் தொலைத்தும் இருந்தவன், நர்ஸ் இனி சலைன் போதும் என்று அதை நீக்கிவிட்டு போக, அங்கே இறுக்கம் தளர்ந்து ஷ்யாம் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.

கண் விழித்தாள். பளிச் வெளிர் அறை. நீள வண்ணத்தில் சோபா,ஸ்கிரீன் என்று வெள்ளையும் நீளமும் கலந்து மனதில் இதம் பரப்பியது.

ஜன்னல் வழி கதிரவன் ஒளி வீச சுற்றிலும் ஆடம்பரம் நிறைந்து தெரிந்தது. எழுந்து அமர்ந்தபோது தலை பாரமாக இருந்தது.

சுற்றிப் பார்த்தவள் கண்களுக்கு சோபா முன்னே இருக்கும் மேஜை மீது மடித்து வைத்திருந்த ஜீன்ஸ் பேன்ட் கண்களுக்குப் பட்டது அதிர்ந்து அவள் உடலைக் கவனித்தாள்.

இலகுவான நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். கைகளை கவனித்தாள் கைகளில் சலைன் ஏற்றிய ஊசி இருந்தது. கை வலி என்று நினைத்தாளே இதனால் தானா?

உடல் முழுக்க அசௌகரியமாக இருக்க, சட்டென்று பக்கம் இருக்கும் பிரிவு ஒன்றிலிருந்து குளித்து முடித்து ஈரம் நிறைந்த தலை முடியுடன் வந்தான் ஷ்யாம். கையில்லாத மேல் சட்டை அணிந்திருந்தான். கைகளில் பைசெப்ஸ் தெரிந்தது.

விக்கித்து போனாள். முன்தினம் கிரேக்க சிற்பம் என்று எண்ணியது நினைவுக்கு வந்தது. அவளை சுற்றி இருக்கும் ஆண்கள் எல்லாம் படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி உடலை பேணும் எண்ணம் இருப்பவர்களா என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது. ஆனால் இவன் போல கட்டுடல் உள்ளவர்கள் இல்லை. இறுக்கமான சதைபிடிப்பு கொண்டிருந்தவனை தன்னை மறந்து அவள் கவனிப்பது அவளுக்கே ஆச்சரியம் தான்.

ஷ்யாம் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழும், அவன் முகமும் சில பழக்கமும் தமிழ்நாட்டுகாரன் என்றாலும் இவன் இங்கே வாழ்பவன் இல்லை என்பதை தெளிவாக சொல்கிறது.அப்படியென்றால் இவன் ஊர் எது? எண்ணம் போக்கில் இருந்தவளை அவன் பேச்சு கலைத்தது.

“குட் மார்னிங். இப்போ எப்படி இருக்க..?”

கொஞ்சலாக அவன் பேசியது பிடிக்கவில்லை அவளுக்கு.

“என் பேன்ட்டை யார் கழட்டியது” சிரமப்பட்டு கோபமாக பேசமுடியாமல் அவள் கேட்க

அவனுக்கு அது சிரிப்பாக இருந்தது. நான் தான் என்றவன் தலை துவட்டி கொண்டு கப்போர்ட் திறந்து மாற்று துணிகளை எடுத்து பக்கம் இருக்கும் உடை மாற்றும் அறைக்கு சென்றான்.

எரிச்சல் கூடியது. எப்படி இவன் என் அனுமதி இல்லாமல் என்னை தொடலாம் எண்ணி கோபத்தில் கை இறுக மூட சுருக்கென்று கை வலித்தது.

வெளியே போவதர்க்காக உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவனிடம் “எப்படி நீ என்னை தொடலாம்”

அவள் கேள்வியில் திரும்பி பார்த்தவன். சிரித்துக்கொண்டே “போய் ப்ரஷ் பண்ணு போ. கீழ வா. டிஃபன் சாப்பிடு ப்ளட் டெஸ்டுக்கு ஆள் வரும்”

“நான் ஹாஸ்டல் போகணும்”

“முடியாது”

“என் போன் வேணும்”

“ கொடுக்கமுடியாது”

“நான் பேசமாட்டேன்”

“சரி” என்றவன் விலகி நடக்க

“ஏய் நான் பாத்ரூம் போகணும்”

“வரவா... வந்து ஹெல்ப் பண்ணவா ” அறை விட்டு வெளியே நடக்க தொடங்கியவன் திரும்பி அவளை நோக்கி கைவிரித்துக்கொண்டு வர “ஐயோ வேண்டாம்” என்றவள் வேகமாக எழுந்து குளியலறை பக்கம் ஓடினாள்.

“ஹே பாத்து போ! இரு, கீழ இருக்கும் சமையல்காரம்மாவை அனுப்புறேன்” என்று வெளியே போனான்.

அவள் நெஞ்சம் படபடவென மத்தளம் போல உள்ளிருந்து அடித்தது. புது ப்ரஷ்,சோப் என்று அவளுக்கு தேவையானது எல்லாம் அங்கே இருக்க பிரஷ் செய்து முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.

பசிக்கிறதே என்று அவள் எண்ணவும் சூடான இட்லியை தட்டில் வைத்து எடுத்துவந்து கொடுத்தார் ஒரு பாட்டி.

இட்லியை சக்கரை தொட்டு சாப்பிட்டும் அந்த இட்லி பிடித்தது. “நல்லா சாப்பிடு” என்று இன்னமும் அவர் அவள் தட்டில் போட “இல்ல எனக்கு சக்கரை தொட்டு சாப்பிட பிடிக்கல்ல, கொஞ்சமாக சாம்பார் போடுங்க பாட்டி”

“இல்லமா, காய்ச்சல் கண்ட உடம்பு, என்ன காய்ச்சல்ன்னும் தெரியலை, காரம் வேண்டாம்”

“ஐயோ இத இப்படி சாப்பிட எனக்கு பிடிக்கல”

“அப்போ ரொட்டி சப்பிடறியா?”

“இல்ல இல்ல”

அவள் மெதுவாக இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்ததும் வெந்நீர் கூட நிறைய வண்ணங்களில் மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்னார். அவள் முகம் சுழிக்கவும். “சாப்பிட்டுடூ கண்ணு. இல்லை, தம்பி திட்டும்” பயமுறுத்தும் விதமாக அவர் பேச சுந்தரிக்கு சிரிப்பு வந்தது.

‘நமக்கு மட்டுமில்லை சார் இந்த பாட்டிக்கும் அரக்கன் போலத்தான் தெரியுராரு’

இரத்த பரிசோதனை, அதன் பின் முழு உடல் பரிசோதனை என்று வரிசையாக வந்து அவரவர் அவள் உடலில் சாம்பிள் எடுக்க, உயிர் கொண்டு நடமாடும் சிற்பம்போல இருப்பவன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்து நின்றான்.

“பணம் இருந்தா என்ன வேணுமானாலும் செய்யலாம்ல்ல”

“இல்ல” சின்னதாக அவன் பதில் பேச.அவள் நக்கலாகச் சிரித்தாள்.

மனிதனுக்கு அவன் உடல் தான் சொத்து. அதை நோயில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று பிரசங்கம் தொடங்கினான்.

அவள் பதில் பேசாமல் பார்க்க அந்த நேரம் அவள் இரத்த அழுத்தம் அறிக்கை வந்தது. “பார் குறைவாக இரத்த அழுத்தம் உனக்கு” என்றான்.

உன்னால் தான் என்று பதில் சொல்ல முடியாதே..!

“உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை”

“பின்ன. என் வீட்டுக்கு வந்தில்ல உடம்பு சரியில்லாமல் போன” அவன் எரிச்சலாகப் பேச

“என்ன விடு நான் ஹாஸ்டல் போறேன்”

“ஏன் உன் மாமா இந்தியா வரதுல இஷ்டம் இல்லையா உனக்கு” மிரட்டினான்.அமைதி ஆனாள்.

இவன் என்ன லூசா..! எதற்காக இப்படி மருத்துவம் பார்க்கிறான். என்ன யோசித்தாலும் அவளை அவள் உடலை பயன்பப்படுத்த என்றால் எதற்கு இத்தனை களேபரம்.

“ஒரு ராத்திரி முடிந்தது, என்னை என் வீட்டுக்கு அனுப்பு”

“அது இன்னமும் ஆரம்பிக்கல”

அவள் ஆச்சரியமாகப் பார்க்க “வீக்கான ஆள் கிட்ட வீரம் காட்றது என் பாணி இல்ல”

“நான் வீக்கா இல்ல”

அவள் பேச்சு கேட்டு சத்தமாகச் சிரித்தான். ‘ஜஸ்ட் ஒரு பார்வை, அதற்கே மூக்கில் ரத்தம் வழிந்தது இங்கு’ என்று அவளைப் பக்கம் இழுத்து கன்னத்தில் கண்ணம் வைத்து உரசினான்.

உடல் நடுங்கிப் போனது சுந்தரிக்கு.
 

swwee

Active member
Wonderland writer
5 மதனுமில்லை மிருகமும் இல்லை

‘விடு என்னை’ அவனிடமிருந்து உதறிக்கொண்டு ஓடிச் சென்று அறைக்குள் மறைந்துகொண்டாள்.இதய துடிப்பு காதடைத்தது. பலவீனமான உடல் அல்லவா தலை சுற்றியது.

பறந்து விரிந்து கிடந்த மெத்தை ஓரத்தில் அமர்ந்து படபடப்பை ஆழ் மூச்சு எடுத்துவிட்டு ஆசுவாசமானாள். கன்னத்தில், இன்னமும் அந்த கூசும் உணர்வு குறையவில்லை.

அதிகப்படியாக நடந்து கொண்டோமோ என்கிற சந்தேகம் வேறு எழுந்தது. ஓங்கி அறைந்துவிட்டு வந்திருக்க வேண்டாமா என்றும் ஒரு பக்கம் மனம் வெதும்பியது.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கை,கால்களை சுருக்கி கொண்டு தாய் வயிற்றில் இருக்கும் சிசுவை போல படுத்துக்கொண்டாள்.கண் அயர்ந்தாள். விழித்திருந்தால் நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே அவளுக்கு பயம் கொடுப்பதாக இருக்க, உறங்கினால் தேவலை என்கிற பாணியிலிருந்தது போல அவள் உடல்.

ஷ்யாம் அவள் அறையில் சென்று பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு, கைகளை, கால்களை சுருக்கிக்கொண்டு குழந்தை போலப் படுத்திருந்தாள். தளர்வான உடல், சீரான மூச்சு தூங்குகிறாள் என்பதைக் காட்டியது.

அவள் வீட்டுக்கு வந்ததிலிருந்து கவனித்ததில் பிடிக்காதவற்றுக்கு அவள் உடல், மனம் கொடுக்கும் எதிர்வினையை கவனித்திருந்தான்.

செஸ் விளையாடும் போது, அவன் அணைத்தபோது அதிவேகமாக எதிர்வினையாற்றுகிறாள் என்பது தெரிந்தது. ஆழ்நித்திரையில் இருக்கிறாள். அதனால் தான் அவன் வந்தது தெரியாமல் உறங்குகிறாள் என்பதும் புரிந்தது அவனுக்கு.

சிறிது நேரம் அவள் முகமே பார்த்து நின்றான். அவன், அவன் பக்கம் அவளை இழுத்து அணைத்தபோது அவள் சிலிர்த்ததும், அதிர்ச்சியாக அவள் பார்த்ததும் நினைவில் நிழலாடிக்கொண்டே இருந்தது. சிரித்துக்கொண்டான். அவளுக்கு மட்டுமா அது சிலிர்த்தது,அவனுக்கும் தானே. அவனாக ஒரு பெண்ணிடம் வம்பிழுப்பது இதுதான் முதல் முறை. சுவாரசியமாக இருப்பதை அனுபவிக்க ஆர்வம் கூடியது.

மாலை எழுந்தவளுக்கு பயங்கர பசி. கூடத்தில் வந்து சோர்வாக அமர்ந்தாள். உள்ளிருந்து வந்த பாட்டி “பசிக்கலையை கண்ணு” என்று கேட்டுகொண்டே சூடாக சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினாள்.

“உனக்கு இரத்தம் குறைவா இருக்கிறதாம், நல்லா காய் எல்லாம் நிறைய சாப்பிடணும். கண்ணு நிரம்பு பலவீனமாக இருக்கிறதாம், கேரட் சாப்பிடணும், வயித்துல புண்ணு இருக்கிறதாம் கண்டிப்பா காலையிலே நல்லா சாப்பிடணும். டாக்டர் சொல்லிருக்கார்” கூடவே அவளை பார்த்தவர் “ஒரு மாசம் என் சாப்பாடு சாப்பிடு. எப்படி தெம்பா ஆகுற பார்” பெருமையாக பேசினார்.

திக்கென்றது சுந்தரிக்கு. ஒரு மாதமா? இவனோடு இவன் பேச்சு, பார்வை, செய்கைகளோடு அவளால் அடுத்த ஒரு நாள் கூட இருக்க முடியாது.

பேச வேண்டும் அவனிடம் தெளிவாக பேசவேண்டும். அவளால் அவனோடு இருக்க முடியாது என்பதை முகத்தில் அறைந்து சொல்லவேண்டும். மீறி மிரட்டினான் என்றால் போடா என்று கிளம்பி விடவேண்டும். முடிவு செய்து கொண்டு சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றாள்.

பின்னோடு வந்த பாட்டி புது துணிகளை எடுத்து கொடுத்து முகம், கை, கால் கழுவி உடை மாற்றிக்கொள் என்று அவர் கடமையை செய்து முடித்துப் போனார்.

சுட்டெரிக்கும் சென்னை மாநகர வெயிலிலும் குளிரடித்தது அவளுக்கு. அவள் அறிவு சுந்தரி நிஜமாகவே உடம்பு பலவீனமாகிவிட்டது. கவனித்தாக வேண்டும் என்று அறிவுரைத்தது.

பாட்டி கொடுத்த துணிகளை பார்த்தவள் அதிர்ந்தாள். பணத்தில் புரளும் ஆசாமிக்கு பெண்கள் உடை பற்றித் தெரியாமலா இருக்கும்?

அவள் எப்போதும் வாங்கும் பிராண்டில் டி- ஷர்ட், உள்ளாடைகள் மற்றும் காட்டன் நைட்பேன்ட். அவன் முகம் நினைவில் வந்து நின்றது. இதை அவன் தான் வாங்கியிருப்பான் என்ற எண்ணமே எரிச்சலாக இருந்தது.

சுந்தரிக்கு உடைகளை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் அதிகம். கல்லூரிக்குச் சேர்ந்தவுடன் தினம் ஒரு உடை என்பதும் அதன் மீது ஒரு நாளின் மகிழ்ச்சியை ஏற்றி வைப்பதும் அபத்தமாக தெரிய, அவள் படித்த அவ்வளவு பெரிய கல்லூரி வளாகத்தில் உள்ளேயே இருந்த ஜாக்கி பிராண்டில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி அணிந்து கொள்ள பழகிவிட்டாள்.

அந்த உடைகளும் அவளுக்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

நான்கு வண்ணங்களில் ஜீன்ஸ் பேன்ட், அதற்கு ஏற்றார் போல அந்த கடையில் கிடைக்கும் அத்தனை வண்ணங்களிலும் டி- ஷர்ட். இரவு உடைகளும் அந்த துணி கடையில் கிடைக்கும் உடைகள் தான். பிரத்தியேக பெண்கள் உடைகள் சுடிதார், ஸ்கர்ட், புடவை என்றால், அவள் தோழி திவ்யா தேர்வு செய்து தருபவற்றை வாங்கி அணிந்து கொள்வாள். ஆனாலும் அவைகளை அணிவதை தவிர்க்கவே செய்வாள்.

திவ்யா அவளுடன் கல்லூரியில் படித்தவள். வெவ்வேறு துறை என்றாலும் திவ்யா மட்டும் தான் சுந்தரிக்கு தோழி. திவ்யா பேச்சை மட்டுமே சுந்தரி நம்புவாள். திவ்யா சொன்னால் சரியாக இருக்கும் என்று எண்ணம் அவளுக்கு. திவ்யாவும் சுந்தரி மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருப்பவள். அவள் மட்டும் இந்தியாவிலிருந்திருந்தால் சுந்தரிக்கு இந்த சங்கடமெல்லாம் நேர்ந்திருக்காது. அயர்லாந்து சென்றிருக்கிறாள்.

ஆர்கிடெக்ட் அவள், அவள் பணிபுரியும் நிறுவனத்தில் அவளை அங்கே அனுப்பியிருக்க நல்ல வாய்ப்பு என்று சென்றுவிட்டாள்.

திவ்யா சொல்லித்தான் இந்திய தூதரகம் மூலம் அவள் முரளியுடன் பேசியது. அந்நாட்டு தூதரக மனிதர்கள் பேசிய விதத்தில் முரளி மாமா மீதுதான் குற்றமோ என்ற சந்தேகம் இருந்தது. பாசம் அதிகம் அல்லவா மாமாமீது. அந்த பாசம் அவன் குற்றம் செய்திருக்கமாட்டான், மற்றவர்களால் மாட்டிவிடப்பட்டிருக்கலாம் என்றே எண்ண தோன்றியது.

எண்ணங்கள் தறிகெட்டு ஓட வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தமர்ந்தாள், ஷ்யாம் வந்தான்.

“எப்படி இருக்க சுந்தரி?” இரக்கம், அக்கறை, ஆதிக்கம், காதல், கொஞ்சம் காமம் தூண்டும் பாவம் அத்தனையும் அந்த குரலில் கண்டாள்.

“இப்போ வரை நல்லா இருந்தேன்” பதில் சொல்லி மேஜை மீது வைத்திருந்த பத்திரிகை எடுத்து படிக்க தொடங்கினாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன். பேசத் தொடங்கினான். ‘முரளி இருப்பது தோஹா சிறையில், தூக்கு தண்டனை கைதியை அடிக்கடி சிறை மாற்றுவார்கள். இன்னமும் மூன்று நாட்களில் அவனை சிறை மாற்றுவார்கள். அப்போது நாம் ஏற்பாடு செய்த ஆட்கள் அவனை கடத்தி இந்திய பெருங்கடலில் பயணித்து தமிழ்நாட்டில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். அப்படி அவனை கொண்டு வந்து சேர்க்க ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடிவரை செலவாகும்’ என்றான்.

அவன் பேச்சை கேட்டவளுக்கு அதிர்ச்சி. முரளி மாமாவுக்கு தூக்கு தண்டனையா? அவனை காப்பாற்ற ஒரு கோடிவரை ஆகுமா? முரளி, அத்தை மாமாவுக்கு ஒரே பையன். அவர்களின் குலவிளக்கு என்று அத்தை அவனை சொல்வதுண்டு. அவளை அப்பனை, ஆத்தாளை, ஒரு குடும்பத்தையே முழுங்கின பாவி என்று வைவதும் உண்டு. அது என்ன ஒரு குடும்பத்தையே குலைத்த பாவியோ? முரளி மாமா இந்தியா திரும்பி வந்தாகவேண்டும். அவனுக்காக அவனை காதலித்த பெண் இருக்கிறாள், அவனை பெற்ற அம்மா அப்பா இருக்கிறார்கள். அவனுக்கு கடமை இருக்கிறது. அவனை காப்பாற்றும் வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது, செய்துதானே ஆக வேண்டும். இப்போது அவள் முரளி மாமாவை காப்பற்றவில்லை என்றால் அத்தை சொல்வது போல குடும்பத்தை குலைத்த பாவி தானே அவள்.

“அப்படி மாமாவை போலீசை ஏமாற்றி கூட்டி வர முடியுமா?” சந்தேகம், ஏக்கம், பயம் அத்தனையும் அவள் குரலில் கண்டான் அவன்.

முடியும். அதற்கான ஆளைத்தான் போய் பார்த்து விட்டு வருகிறேன். பார்,என்று அவன் கொடுத்த சீட்டை வாங்கி பார்த்தாள். அதில் அப்பு என்ற பெயருக்கு நேராக ஒரு கைப்பேசி அழைப்பு எண்ணும் அதற்கு கீழே “டுவென்டி ரிசிவிட்” என்று எழுதியிருந்தது.

மனதில் கேள்வி சராமரியாக எழுந்தது. கேட்டாள் “இருபது ஆயிரமா?”

“இல்ல. இருபது லட்சம்”

அவ்வளவு பெரிய தொகையா? அதிர்ச்சியாக கேட்டாள்.

‘ஆமா. அது ரொம்ப பெரிய டீம். ஒரு பொருள் கை மாறி மாறி வந்து சேர்வது போல முரளி துணைக்கு ஒவ்வொரு இடத்திலும் மாறி மாறி ஆட்கள் சேர்ந்து வந்து இந்தியாவில் சேர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு எல்லாருக்கும் பணம் வேண்டுமல்லவா? குறைந்த பட்சம் ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் வரை ஆகும்’ என்றான்.

‘எப்படி நம்புவது’ அதி பயங்கர புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டாள்

ஃபோன் நம்பர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நாடு விட்டு நாடு மாறும்போது குறுஞ்செய்தி வரும். முரளியிடம் பேச முடியாது. முரளி துணைக்கு வரும் ஆளிடம் பேசலாம்.இன்டர்போல் அவன் குரலை வைத்து கூட அவனை கண்டுபிடித்து விடலாம்.அவனுக்கு தெரிந்த தகவல்களை சொல்லி தெளிவுப்படுத்தினான்.

அவள் கவலையாக தலை குனிந்து அமர்ந்திருக்க. ஷ்யாம் அவளுக்கு நடந்ததை விவரித்தான்.

முரளி உலக நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் அத்தனை வகையான போதை பொருட்களையும் பிடிபடும்போது தன்னுடன் வைத்திருந்தானாம். அரபு நாடுகளில் சாராயமே தடை செய்யப்பட்ட வஸ்து, இதில் கஞ்சா, ஓபியம், கொகைன், மற்றும் அப்ரோடிசிய வகை போதை வஸ்து வைத்திருந்திருக்கிறான் முரளி.

கேளிக்கையில் கலந்து கொண்ட உயர் அரசு அதிகாரியின் மனைவியை அப்ரோடிசிய போதை மருந்து கொடுத்து கெட்ட காரியம் செய்திருக்கிறார்கள் யாரோ ஒரு கூட்டம். உயர் அதிகாரி அல்லவா துரித விசாரணையில் அப்ரோடிசிய வியாபாரம் செய்யும் ஆட்களை பிடித்து உடனுக்குடன் தூக்குத் தண்டனை வாங்கி கொடுத்துவிட்டார். அதில் வெளிநாட்டு ஆட்களுக்கு ஆறு வருடம் சிறை அதன் பின்புதான் தூக்கு. அப்படி நூலிழையில் தப்பித்திருக்கிறான் முரளி.

சுந்தரிக்கு அசிங்கமாகிப்போனது. முரளி இவ்வளவு கீழ்நிலை போனானே. அப்ரோடிசியக் போதை மருந்து மனிதன் காம உணர்வுகளை தூண்டும் போதைபொருள். "ரேப் டிரக்" என்றே அதற்கு பெயர்.

போதை பொருட்கள் மனிதனுக்குள் இருக்கும் மிருக குணத்தை தூண்டும் பொருட்கள் என்று போதை பொருட்கள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், போதை பொருட்கள் எதுவும் எடுக்காமலே சில மனிதர்கள் மிருகமாக தான் இருக்கிறார்கள்..!

காசுக்காக இந்த மாதிரி பொருட்களை எல்லாம் விற்க வேண்டுமா இந்த முரளி அத்தான். கலங்கி போய் செயலற்று அமர்ந்திருந்தாள்.

“கூல், பயப்படாத.. உன் முரளி அத்தான் பத்திரமா இந்தியா வர நான் கியாரண்டி” என்று அவள் முதுகில் தட்டியவன் அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

சுந்தரி அறிவு, அனுபவம் இரண்டும் இலவசம் என்பது இந்த உலகில் எதுவுமே இல்லையே சுந்தரி, இவன் எதிர்பார்ப்பு தான் என்ன? என்று கேட்டது.

இரவு உணவின்போது திரும்ப அவனை பார்க்க நேர்ந்தது. அத்தனை நேரம் பேசலாமா வேண்டாமா என்று அவள் யோசித்ததை பேச தொடங்கினாள்.

‘மாமாவை காப்பாற்றி கொடுக்கறீங்க அதுக்கு தேங்க்ஸ். இந்த ஃபோன் நம்பரை வினிதா கிட்ட கொடுத்தா அவங்க டிராக் செய்வாங்க. அத்தைக்கு மாமாக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என் ஃபோன் கொடுத்தா ஆபிஸ்க்கு வர முடியாது லீவ்ண்ணு சொல்லிருவேன்” மனப்பாடம் செய்தது போல அவள் பேச

அவன், ‘நீ ரெஸ்ட் எடுக்கவேண்டும்.அது தான் உன் உடம்புக்கு நல்லது, அதனால் நோ போன், நோ லேப்டாப். உன் ஆபீஸ்ல சொல்லிடலாம், அது பிரச்சனை இல்லை. இந்த போன் நம்பர் ஏற்கனவே வினிதா கிட்ட கொடுத்துட்டேன்” பேசியவன் அமைதியாக, மெதுவாக தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு சாப்பிட்டான். கோபம் வந்தது அவளுக்கு.

சரி லேப்டாப் போன் வேண்டாம். ஒரு பேனா , நோட்டு புத்தகம் அதையேனும் கொடு. இல்லை அது கூட இல்லையா இந்த வீட்டில்? கோபமாக அவள் கேட்க

சரி கொடுக்கச் சொல்கிறேன். ஆனால் இரவில் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். பகலில் மட்டும் தான் நோட்டு புத்தகம் கொடுப்பேன் ரூல்ஸ் பேசினான் அவன்.

எரிச்சலாக அவள் “ஏய்... நீ என்ன முட்டாளா? இது என்ன புது வகையான சித்திரவதையா இருக்கு..! நான் மட்டும் வெளியே போனேன்... உன்னை போலீஸ்ல சொல்வேன்” சீரி விட்டு சாப்பிடாமல் எழுந்தாள்.

அவன் அவள் கோபத்தை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தெளிவாக மெதுவாக பேசினான். ‘தாராளமாக சொல்லு. நானும் அப்பு கிட்ட சொல்வேன், முரளியை தப்பிக்க வைத்து மாட்டிவிட சொல்வேன். கொடுத்த இருபது லட்சம் திருப்ப வாங்க முடியாது. அதுக்கு இது வசதி தானே. அன்றைக்கே போய்ச் சேர்ந்து விடுவான் உன் மாமன்’ எள்ளலாக பேசினான் ஷியாம்.

அவன் பேசி முடித்த நிமிடம் அதிர்ச்சியில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் தானாக வரத் தொடங்கியது. சாப்பிட்டு முடித்தவன் கைகழுவி கொண்டே பாட்டியை அழைத்து சூடான தோசையை அவளுக்கு போட சொன்னான்.அவள் அதை அழுது கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

அவள் தலையைத் தடவி கொடுத்து “போ, போய்த் தூங்கு” என்று குட் நைட் சொல்லி அறைக்கு அனுப்பினான்.

ஆண்டவா.... இந்த வில்லன்கிட்டயிருந்து எப்போதான் விடுதலை..?
 

swwee

Active member
Wonderland writer
6.யார் இவன்?
தனியாக அமர்ந்துகொண்டு மது கோப்பையை கையில் சுழற்றி பார்த்து கொண்டு குடிக்காமல் யோசித்த படியே அமர்ந்திருந்தான் ஷ்யாம்.

ஒயிலாக நடந்து வந்த அழகி ஒருத்தி அவன் பின் கழுத்தை தடவிய படி “ஷ்யாம்.... தனியாக இருக்கியே கம்பனி கொடுக்கவா?”
யாரென தெரிந்துகொள்ள கூட எத்தனிக்காமல் “வேண்டாம்” என்றான்.

‘இந்த தனிமை இருக்கே இது ரொம்ப போர் ஷ்யாம்’ அவன் பக்கம் அமர்ந்துகொண்டு கன்னத்தில் விரலால் கோலம் போட்டாள்.

‘ப்ச் வேண்டாம் சொல்றேன் தானே. எனக்கு பேச இஷ்டமில்லை.போ’ என்று அருகில் அமர்ந்தவளை துரத்தினான். அவளும் அவள் செய்கைகளை நிறுத்திவிட்டு நிதானமாக கேட்டாள்
‘என்ன ஷ்யாம்ஆச்சு. பிரச்சனையா? பேசு கேட்கிறேன்’

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்.

“யாருக்கு நாம் நல்லவங்களா தெரியணுமோ அவங்களுக்கு கெட்டவங்களா தெரியுறோம் ஏன் அது”

இப்படியான கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. “டிசைன் அப்படி ஷ்யாம்”

“அந்தப் பெண் அப்படியே என் அம்மா மாதிரி..!”
“அப்ப நீ உன் அப்பா மாதிரி” என்று சிரித்தாள்.
“இல்ல நான் என் அப்பா மாதிரி இருக்கமாட்டேன்”
“சரி அப்பா மாதிரி இருக்காத. எப்படி இருக்க இருக்கணுமோ அப்படி இரு”
“அதனால் தான் இங்க வந்தேன்”

சுற்றிப் பார்த்தாள். இருள் சூழ்ந்த வண்ண விளக்குகள் கொடுக்கும் வெளிச்சத்தில் கோப்பைகளையும் பெண்களையும் தனதாக்கிக்கொண்டு நிஜம் மறந்த ஆண்கள். இதில் என்ன தேட வந்தான் இவன்..?

“இம்.... இங்க எதுவும் தேறாது... நான் போறேன்”
‘உட்கார்... சோர்வாக தெரிகிறாய். நான் கொடுக்கிறேன் இன்றைய இரவுக்கு’ அவன் சொல்லவும் அவள் சிரித்தாள்.

எதையோ யோசித்தான். ‘அந்தப் பெண் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்று தயார் செய்கிறாள். தூக்கம் தவிர்த்து வேலை செய்கிறாள். அதனால் லேப்டாப், ஃபோன் கொடுக்கமாட்டேன் சொன்னதும் அத்தனை கோபம். எழுத நோட் புத்தகம் கொடு என்று கேட்டாள். இரவில் தரமாட்டேன் என்றதும் அதற்கும் கோபம். என்னை என்னமோ அவளை அனுபவிக்க நினைப்பவன் போலப் பார்க்கிறாள்’ தானாக வாய் பேச தொடங்கியது.

விவரம் அறிந்துகொள்ளவெல்லாம் அவளுக்கு இஷ்டமில்லை. ஆனாலும் கேட்டாள் “ஏன் உனக்கு அந்த நினைப்பு இல்லையா?” அவள் கேட்டதும் ஆசை பிரவாகம் வயிற்றில் உருண்டது. மனதில் ஒரு நிமிடம் கிரக்கம் உண்டானது. அவள்மீது ஆசை இருக்கிறது ஆனால் அது காதல் கலந்தேயிருக்கு. தானாக முகத்தில் புன்னகை அரும்பியது.

“இருக்கு .ஆனா போர்ஸ் பண்ணல்லாம் இஷ்டம் இல்ல. லவ் வேற லஸ்ட் வேற. எனக்கு இங்க லவ் தான் இருக்கு ” பதில் சொன்னான்.

“ஷ்யாம், கரெக்ட்தான் வற்புறுத்தி எல்லாம் காதலை வர வைக்க முடியாது. ஆனா காதலுக்கு சுதந்திரம் ரொம்ப முக்கியம்.நீ எதோ பொண்ண வற்புறுத்த ட்ரை பண்ற நினைக்கிறேன்.அது உன்ன தப்பான மனிதனாத்தான் காட்டும். பிடிச்சிருக்குன்னு உண்மை சொல்லி உறவை தொடங்க பாரு” என்று அவளுக்கு தெரிந்த அறிவுரையை கூறினாள்.

ஷ்யாம் அதை கேட்டுக்கொண்டது போல தெரியவில்லை. நகர்ந்து சென்றாள்.ஆனாலும் அவள் கணக்கில் காசு விழுந்திருக்கு என்று குறுஞ்செய்தி வந்தது.

ஷ்யாம் அவன் காதலை வற்புறுத்தவில்லை. அவன் மீது அவள் கவனம் விழ வேண்டுமென மட்டும்தான் நினைத்தான்.அது இப்படி வந்து நிற்கிறது.

வீட்டுக்கு வந்தவன் சுந்தரி அறைக்கு போனான். அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள். புருவங்கள் இரண்டும் சுருங்கி இருந்தது. நெற்றியை நீவி விட்டான். உளறினாள். “டாடி... டாடி... மாமா போகாத…”

சமாதானம் பேசினான். “யாருக்கும் எதுவும் ஆகாது சுந்தரி. தூங்கு…”
“ஷ்யாம்…”
அவள் அவன் பெயர் சொல்ல இவனுக்குள் ஒரு துள்ளல்.

தூக்கத்தில் கூட அவனை அவள் மறக்கவில்லை.

ஒரு முடிவு செய்துகொண்டு அவன் புது அறைக்கு சென்று உறங்கிப்போனான்.

அடுத்த நாள் காலை
“ரெண்டு பேரும் கொஞ்சம் பேசலாமா?” கொஞ்சலாக கேட்டான்
“நீ பேசு நான் கேக்குறேன் ” எகத்தாளம் காட்டினாள்

“உன் கோவம் நியாயம்தான்” என்றவன் உதவி செய்யுங்கள் என்று ஒரு பெண் தன்னிடம் வந்து அழுததையும் அவள் நசை தாங்காமல் அவளை விரட்டி விட அவனுக்கு பிடித்தது போல ஒரு பெண் கூட்டிவா என்று கேட்டிருக்கிறான். அது அவளாக போனாள் என்று கதை சொன்னான் .

அவனை விரிந்த கண்களுடன் பார்த்தவள் “இப்படியெல்லாம் கேட்க வெட்கமாக இல்ல உனக்கு”
“இதுல என்ன வெட்கம் சுந்தரி?” புரியாதது போல கேட்டான்
“புரியர்து கஷ்டம் தான்”
“ஆமா கஷ்டம் தான்” அவனும் எகத்தாளம் கட்டினான்.

சுந்தரியை பற்றி விசாரித்து தெரிந்துகொண்டபின் எப்படி அணுகலாம் என்ற யோசனையில் இருந்தவனிடம் தானாக வந்து மாட்டிக்கொண்டாள் வினிதா. கணநிமிடத்தில் அவளை உபயோகித்து சுந்தரியை அவன் பக்கம் இழுக்கும் ஐடியா தோன்றிவிட்டது. ஆள் வைத்து அவளை மிரட்டி சுந்தரியை அவனை பார்க்க வருமாறுதான் சொல்ல சொன்னான். கதை வேறு விதமாக சென்றது.
ஆனாலும் அவன் மனம் “என்னமோ சுந்தரியுடன் பழக சான்ஸ் கிடைக்கிறதே” என்ற கண்ணோட்டத்திலேயே அதை கண்டது.
சுந்தரி தன் எண்ணத்தை சொன்னாள் ‘நேர்மை, விசுவாசம், காதல், அன்பு, பாசம் என்பதெல்லாம் மனித குலத்துக்குத் தேவையானது. ஒரு மனிதன் உறவில் கூட நேர்மை இல்லாமல் இருக்கிறான் என்றால் எதில் தான் நேர்மையாக இருப்பான்.என்னை பொருத்த வரை உறவில் நேர்மை முக்கியம். அது உங்கட்ட இல்ல, உங்களோடு எனக்கு எந்த உறவும் வேண்டாம். நீங்க உங்களுக்கு தேவையான பெண்ணை வேற எங்கேனும் தேடிக்கோங்க’

“ஓ... நேர்மை முக்கியம் இல்லையா? ஏன் சுந்தரி முரளி செய்தது நேர்மையான காரியமா?”

அவன் கேள்வியில் குறுகி போனாள் அவள்.

“அவனுக்காக என்று உன்னை அனுப்பினாளே வினிதா நான் அவளை பார்த்தது பார்க் ஹோட்டல் பப்பில் அவளிடம் நேர்மை இருந்ததா? அவர்கள் சொந்தம் நீ மட்டும் நேர்மை, உண்மை ஒழுக்கம் எல்லாம் பேசுவது நம்பும் போல இல்லையே”

“உங்க வீடு தான் பெருசு. உங்க புத்தி ரொம்ப சின்னது” அவனை தாக்கிப் பேசினாள். அவன் சிரித்தான்.

“உங்களோட எல்லாம் என்னால் இருக்க முடியாது. நான் கிளம்புறேன்”
இன்னமும் பெரிதாக சிரித்தான். “தாராளமா போலாம். போ. வினிதா உன்ன கை, கால் கட்டி போட்டு தூக்கி கொண்டு வந்து இங்கே போடுவா”

அவள் அவனை முறைக்க “நீ என்னோட இங்க இருப்பது தான் உனக்கு இப்போ பாதுகாப்பு. அதை தெரிஞ்சிக்கோ” என்றான்
அவள் எதையோ யோசித்து கொண்டிருக்க மேலும் அழுத்தமாக “பார்!! எனக்கும் மூணு நாள் டைம் பாஸ் ஆகணும். நாம ப்ரெண்ட்ஸா இருப்போம். பழகுவோம்”
“நான் அப்படி யாரையும் நம்ப மாட்டேன்.எனக்கு உன் மேல் நம்பிக்கையே இல்லை”
“சரி நம்பாத. நான் நானா இருக்கிறேன்.நீ நீயாக இரு”
சுந்தரி அவள் விசாரணையை தொடங்கினாள்.
“நீ குடிப்பியா?”
“குடிப்பேன். பார்டிக்கு போனால் குடிப்பேன்”
“ட்ரக்ஸ்?”
சின்னதாக சிரித்தான் “இல்ல. பழக்கம் இல்ல. அது பழகினா பிஸ்னஸ் பண்ண முடியாது”
“ம்ம்…கேர்ள்ஸ் ”
அவளை நேராக பார்த்துக்கொண்டு “இல்ல. இதுவரை அப்படி ஆசை வரல. பிஸ்னஸ் பார்ட்டில நிறைய பார்த்திருக்கேன். அனுபவிக்க தோணல ” உண்மையைப பேசினான்.
“எப்படி நம்புறது?”
“நீ குடிப்பியா”
“இல்ல”
“நீ ட்ரக்ஸ் யூஸ் பண்ணிருக்கியா”
“ச்சீ... இல்ல!! ட்ரக்ஸ் உடம்ப கெடுக்கும்”
“எப்படி நம்புறது. சரி அதை விடு... ரிலேசன்ஷிப்?” என்று அவளை பார்த்தான்.

“ட்ரக்ஸ் எப்போது எடுதுக்கனும்ன்னு தோணும் ஏதாச்சும் சலிப்பு வந்தா தானே. எனக்கு அப்படி சலிப்பு வந்ததே இல்ல. அடுத்து என்ன அடுத்து என்னன்னு ஒரு ஆர்வம் எனக்குள் எப்பவும் இருக்கும். எப்பவும் ஆராய்ச்சி, புத்தகம், கோடிங்ன்னே எண்ணம் போகும். இந்த காதல் எல்லாம் யார்மேலும் வரலை” என்றாள்

“முரளி மேல் கூடவா?” அவன் கேட்க

தன்னிச்சையாகப் பதில் சொன்னாள். “இருந்தது முரளி அத்தான் மேல ஆசை இருந்தது.முரளி மாமா மட்டும்தான் என்னை மனுஷியாக பார்த்தாங்க. அத்தை எத்தனை திட்டினாலும் என்ன பேசுனாலும் என் ஆசையை பூர்த்தி செய்வாக. அப்பா அம்மா அண்ணன் மாமான்னு எல்லா பந்தமுமா அவங்க ஒருத்தங்களே இருந்தாக. அப்படியானவங்க மேல அன்பு பாசம்ல்லாம் வர்றது தப்பில்லை தானே. விடு. உனக்கு புரியாது. இந்த சொசைட்டி தப்புன்னு சொல்ற விசயத்தை செஞ்சிட்டு காசை வச்சு அத மறைக்க பார்க்கிற கும்பலுக்கு எல்லாம் இருக்கும் இது புரியவே புரியாது”

அவள் எத்தனை முரணாக பேசுகிறாள் என்பது அவளுக்கு எங்கே புரியப்போகிறது. சிரித்துக்கொண்டான்.

சுந்தரியின் நன்றியுணர்வும், பாசமும் அவள் சிந்திக்கும் திறனை மழுங்கடித்திருக்கிறது. என் அத்தான் என்ன செய்தாலும் நல்லவன். அதுவே அடுத்தவன் நல்லெண்ணம் கொண்டு செய்தாலும் தப்புதான். இவளா அறிவாளி?

“வாயேன்... செஸ் விளையாடலாம்” அழைத்தான்
தான் வென்றால் லேப்டாப் கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டாள்
“சரி வா”
விளையாடினார்கள். ஆட்டம் டிராவில் முடிந்தது. அவளால் நம்பவே முடியவில்லை இந்த வில்லனுக்கு செஸ் விளையாட தெரிந்திருக்கே…

ஷ்யாமோ ஐயோ கிராதகி... என்னால் முடியலையே... இப்படி குழப்பி அடிக்கறாளே !! புலம்பிக்கொண்டே விளையாடினான்.

“அது எப்படி என் மாமா கெட்டவங்க, வினிதா கெட்டவ நீ மட்டும் நல்லவனா?” திரும்பவும் அவள் பக்கம் ஆர்க்யூமென்ட் தொடங்கினாள்

“இருக்கலாம். நானும் கெட்டவனாகவே இருக்கலாம். இப்போ எனக்கு நல்ல எண்ணம்தான் இருக்கு” என்றான்

“அப்போ இந்த நல்ல எண்ணத்துல என்னை விடேன். நான் போறேன்”

“திரும்பவும் சொல்றேன் சுந்தரிகுட்டி . முரளி வெளியே வர்ர வரை வினிதா உன்னை என் பக்கம் அனுப்பத்தான் பார்ப்பா. அவ ஆள் ஒருத்தன் இந்த வீட்ட நோட்டம் விட்டுட்டே இருக்கான் வெளில போன நீ திரும்ப இங்க தான் வந்தாகனும்”

“வினிதாக்கு அவ்வளவு கொடூரமா யோசிக்கும் புத்தி இல்லை”

“அப்படியா சரி. மேலே இருக்கும் பால்கனி போய் ரோட்டுக்கு அந்த பக்கம் இருக்கும் ஏ.டி.எம் வாசல்ல பார். இந்த வீட்டை நோட்டம் விடுற ஆள் இருப்பான்” என்றான்.
அவளும் ஓடிச் சென்று பார்த்தாள். ஆள் இருந்தான். அவளை பார்த்ததும், உற்று கவனிக்க தொடங்கினான். கீழே வந்து அவன் எதிரில் அமர்ந்தாள். ஆப்பிள் தட்டை நகர்த்தி அவளை சாப்பிட சொன்னான்.

‘வினிதாவின் திறன் குறைவு தான். வினதா கூட இருக்கும் ஆளுக்குத் திறன் இருந்தால் போதாதா?’ ஸ்ரத்தையே இல்லாமல் இலகுவாக அவன் கேட்க அவளுக்குதான் சொல்லமுடியாத வலி.

சுந்தரி அயர்ந்தாள். அவளை சுற்றியிருக்கும் அத்தனை பேரும் அவளை உபயோகித்துக்கொள்ள நினைப்பதும், அவர்கள் செய்த தப்பை அவள் மீது சுமத்துவதும் அவளுக்கு நன்றாகவே புரியும். சில சமயம் அதிலிருந்து தன்னை தானே காத்து மீண்டு வருவாள். சில சமயம் முடியாது என்று தோன்றினால் ஏற்றுக்கொள்வாள். வினிதாவிடம் எப்போதும் ஜாக்கிரதையாகத்தான் இருப்பாள். வினிதா அவளை எதிலாவது சிக்கவைத்தால் அவளால் தப்பிக்க முடியாது. அவளுடன் அத்தை இருக்கிறார்கள்.

‘நன்றியில்லாத நாயே, நான் வளர்த்த பெண் என்னை எதிர்த்துப் பேசுறியா’ என்று கீழ்மை படுத்தி பேசுவார்கள். அந்த வலி கொடியதிலும் கொடியது.

சுந்தரிக்கு வினிதாவிற்கு தன்னை ஏன் பிடிக்கவில்லை என்பது புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் அவளிடம் ஒரு இரக்கம், மனித தன்மை இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க கூடாது.

“இப்போ என்ன செய்ய சொல்றே?”
“இந்த வீட்லயே இரு. முரளி வெளியே வந்ததும் உன் ஹாஸ்டல் போ ”
“சரி” ஒப்புக்கொண்டாள்.

அதன்பின் அவன், அவன் வேலையை பார்க்க, கொடுத்த நோட்புத்தகத்தில் புரோகிராம் ஒன்றை எழுதி கொண்டிருந்தாள். நிறைய எண்களாக இருந்தது. கீப்போர்டில் இருக்கும் அத்தனை சின்னங்களும் இருந்தன. நிறைய எழுதியிருந்தாள்.
கண்களை மூடிக்கொண்டு சில நேரம் அமைதியாக இருப்பதுவும் பின் அதை புத்தகத்தில் எழுதுவதுமாக இருந்தாள்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பழம், சுண்டல் என்று வரவைத்து சாப்பிட வைத்தான். அவள் பக்கமே அமர்ந்துகொண்டு அவன் வேலை தொடர்பான விஷயங்களை தொலைப்பேசியில் பேசினான், அவன் லேப்டாப்பில் வேலைப்பார்த்தான். அவள் கிண்டல் செய்தால் பதிலுக்கு பேசினான்.

‘ஷார்ப் டங்’ என்பார்களே அப்படியான கூர் நாக்கு சுந்தரிக்கு. பொதுவாக யாரிடமும் பதிலுக்கு பதில் பேசமாட்டாள். சொல்லப்போனால் பதிலே பேசமாட்டாள். கேட்கும் கேள்விக்கு எந்தவகையிலும் பின்னால் வந்து குத்தக்கூடாது என்றவகையில் பாதுகாப்பாக சிந்தித்து பேசுவாள். ஆனால் ஷ்யாமிடம் மட்டும் அந்த ஜாக்கிரதைத்தனம் விட்டு மனதில் தோன்றும் வார்த்தை வெளியே வந்து விழும். அது அவளுக்கே ஆச்சரியம் தான், இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த வில்லனை நான் என்ன மதிப்பது என்கிற மனோநிலையில் கையாள தொடங்கிவிட்டாள்.அது அப்படியே தொடர்ந்தது.

அவள் சீரியசாக பேசினால் கூட ‘ஹொவ் க்யூட்’ என்ற பார்வையிலே ஷ்யாம் இருந்தான்.
அவள் எண்ணமோ தன்னலம் கருதாது உதவும் பணக்காரன் இருப்பானா என்ன? அது அரிதிலும் அரிதல்லவா..!

அடுத்த நாள் மென்பொருள் கோட் எழுத ஆர்வம் வரவில்லை. பக்கம் அமர்ந்திருக்கும் அவன் முகத்தை வரைந்தாள். அளவுகோல் வைத்து அளவு எடுத்து வரைந்தது போல இருந்தது. அத்தனை நேர்த்தி. பார்த்தவன் பிரமித்துப் போனான்.

“உனக்கு நல்ல கவனிக்கும் திறன்” என்று பாராட்டினான். பூத்தூவல் போல ஒரு குளுமை பரவியது. உடல் சோர்வு நீங்கியது போல எண்ணம் எழுந்தது.அந்த வீட்டில் பார்க்கும் பொருள் எல்லாம் வரைந்து காண்பித்தாள். அவனும் பாராட்டிக்கொண்டேயிருந்தான்.

ஒரு நாளில் நெருக்கம் கூடியது. சுந்தரிக்கு ஆச்சரியம் யார் என்ன என்று தெரியாத ஆள்மீது அக்கறை பாசம் எல்லாம் வருமா..? அவளுக்கு அவனை பற்றி ஒன்றுமே தெரியாது,அது பெரிய பிரச்சனையும் இல்லை, முயற்சி செய்தால் அவளால் தெரிந்து கொள்ள முடியும்.

அவன் சமூக வலைதளபக்கம், அவன் அஞ்சல் ஐடி, அவன் அழைப்பு எண் எது கிடைத்தாலும் அவனை பற்றி முழுமையாக அவளால் தெரிந்து கொள்ள முடியும். என்னமோ தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

மூன்றாம் நாள் “என் ஃபோன் கொடு. என் ஃப்ரெண்ட் திவ்யா நான் ஃபோன் எடுக்கலைன்ன கோச்சிக்குவா” அடம்பிடித்து அவனிடமிருந்து அவள் தொலைப்பேசியை வாங்கினாள்.

தொலைப்பேசி உயிர்ப்பித்ததும் திவ்யா அழைத்தாள். “சுந்த்... எங்க போன!!என்ன ஆன!! நான் இந்தியா வரேன் இப்போவே”
“ஹே ஹே... எனக்கு ஒன்னும் ஆகல நான் நலலாயிருக்கிறேன். ஃபோன் வொர்க் ஆகலை இப்போ சரி ஆகிடுச்சு”
“நான் பயந்துட்டேன். பத்திரம் என்ன? அப்பறம் பேசுறேன்” அழைப்பை துண்டித்தாள்.

கொஞ்ச நேரத்தில் வினிதாவின் குறுஞ்செய்தி வந்தது “நன்றி” என்று.

மனம் கனத்து போனது. முரளி மீட்டாகிவிட்டது என்று தகவல் கிடைத்தது.

முதல் முறை முரளியை பிடிக்காமல் போனது. முதல் முறை தப்பு செய்கிறோம் என்ற எண்ணம் உருவானது.அநியாயமாக நடக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலோங்கியது. ஞானிகள் எல்லாம் பந்தம் பாசம் என்பதை துறக்க வேண்டுமென்று ஏன் சொல்கிறார்கள் என்பது புரிந்தது.

மீண்டும் திவ்யா அழைத்தாள். பதட்டமாக பேசினாள். “சுந்தரி.... என்ன பண்ணிருக்க நீ... முதல அந்த வீட்டை விட்டு வெளியே வா” கோபமாக கத்தி தீர்த்தாள்.

அவள் படபடப்பில் பேசுவது ஷ்யாம் காதுகளிலும் விழுந்தது. சுந்தரி அமைதியாக கூல் திவ்யா... ஷ்யாம் நல்லவர். நான் நல்லத்தான் இருக்கேன் நாளைக்கு ஹாஸ்டல் போய்விடுவேன். கோபப்படாத… என்று சமாதானம் சொன்னாள்

ஷ்யாம் நெஞ்சில் எதையோ இழக்கப் போகும் வெறுமை படர்ந்தது.
 

swwee

Active member
Wonderland writer
7. களவு போன காதல்
பொதுவாக அவன்மீது வைக்கப்படும் விமர்சனத்தையோ அல்லது கடுஞ்சொல்லையோ அவனால் எளிதாக கையாள முடியும். சுந்தரிக்கு அவனுக்காக என்று பேசியது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருக்க அவள் பிரிந்து செல்கிறாள் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் இல்லாமல் போவாள் என்கிற எண்ணமே சித்திரவதையாக இருந்தது. உள்ளிருந்து குடைய தொடங்கியது.

என்ன செய்தால் இவன் வட்டத்தினுள்ளேயே அவளை வைத்துக்கொள்ள முடியுமென்கிற எண்ணம் எங்கேயோ ஆழ்மனம் தொடங்கி மனம் முழுக்க அதுவே வியாபித்தது.

மாலை வேளை ஷ்யாம் வாங்கி கொடுத்த கலர் பென்சில்கள் வைத்து அவள் அழகான மேகத்தில் மறையும் சூரியனை வரைந்து கொண்டிருக்க வினிதா அழைத்தாள். ‘சுந்தரி..! முரளி கூட வரும் ஆள் திடீர் என்று அழைப்பை ஏற்காமல் துண்டிக்கிறான்.என்னவாக இருக்கும்?’ என்று கேட்டாள்.

மனதில் திக்கென்றாலும் “சிக்னல் பிரச்சினையாக இருக்கும்” என்று பதிலளித்தாள் இவள்.

“இல்ல, எனக்கு அப்படி தோணல”

கலங்கியவள் கேட்டாள் “வேற என்னவா இருக்கும்”

“நீ ஷ்யாமை நல்லபடியாக கவனிச்சுக்கிறியா?, கூட்டி வர்ற ஆளுக்கு காசு கரெக்ட்டா போகுதா” கேட்டாள் வினிதா

அவள் பேச்சில் சுந்தரிக்கு சிலிர்த்தது “அவருக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நல்ல நண்பர்களாக இருப்போம் என்று அவரே சொன்னார். நல்லவர் அவர்”

அதெப்படி சுந்தரி மட்டும் இவர்களுக்கெல்லாம் தலையில் வைத்து கொஞ்சும் ராணியாகவும் அவளெல்லாம் தேவைக்கு பயப்படுத்திக்கொள்ளும் கைப்பாவையாக தெரிகிறாள்? அப்படியென்ன இருக்கிறது அவளிடம் இவளிடம் இல்லாதது. வினிதாவிற்குள் வன்மம் துளிர்த்தது.

“நினைச்சேன்... ஏன் சுந்தரி இப்படி மக்கா இருக்கே. அப்படி பிரெண்ட்ஸா இருக்கத்தான் உன்னை வீட்ல அடைச்சு வச்சிருக்கிறாரா அவர். யோசி பிளீஸ் முரளிய காப்பாத்து. என்னால முடிஞ்ச வேலைன்ன நானே செஞ்சிருப்பேன். உங்க அத்த மாமாவ யோசி.” அழுகை குரலில் பேசினாள் வினிதா.

சுந்தரிக்கு வினிதாவை நம்ப முடியவில்லை. “இப்படியெல்லாம் பேசாதீங்க வினிதா. முரளி அத்தான் வருவார்”

“அப்படி அவர் வரலை உன்னை உண்டில்லை ஆக்கிடுவேன் பார்த்துக்கோ"

சுயநலமாக அவள் பேசினாலும், முரளி மாமா திரும்புவது சுந்தரியின் நன்றிக்கடன் ஆயிற்றே. அவள் பேச்சில் கோபம் வந்தாலும் ஷ்யாமிடம் சென்றாள். “வினிதா, முரளி அத்தான் ஆளிடம் பேச முடியவில்லையாம்”

தீவிரமாகக் கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவன் இரண்டு மணி நேரம் பொருத்து பார்ப்போம் என்றான்.

காத்திருந்தாள்.

ஷ்யாம் நல்லவனா கெட்டவனா? என்கிற கேள்வியில் ஊசலாடிக்கொண்டிருந்த அவள் மனது அவன் கெட்டவனாக இருக்கக்கூடும் என்கிற புள்ளியில் நின்றது.

எந்த கோடீசுவர பிஸ்னஸ்மேன் தானாக முன் வந்து யாரோ ஒருத்திக்கு தன் வீட்டில் மருத்துவம் பார்ப்பான்..! எங்கேயோ திரும்பி வரவே முடியாத இடத்தில் மாட்டியிருக்கும் சொந்தக்காரரை வெளியே எடுக்க உதவுவான்? இவனுக்கு ஏதோ நோக்கம் இருக்கிறது, என்னவென்றுதான் தெரியவில்லை. அவன் தப்பானவன் என்றே முடிவுக்கு வரத் தோன்றியது. தானாக மனது வினிதா பேசிய விசயத்தில் லயித்தது. மனதில் சந்தேகம் துளிர்த்தது.

சுந்தரியால் அவள் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை,அவன் நல்லவன் என்ற எண்ணத்திற்கு துணை நிற்க அவளிடம் போதிய ஆதாரம் இல்லை. தப்பவைத்து பிடித்து கொடுப்பேன் என்று பயமுறுத்தியவன் தானே.

வினிதா மிரட்டிவிட்டு அழைப்பை துண்டித்தாலும் மெசேஜ் செய்து பயமுறுத்திக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அவர்கள் காதல் பெரிதென கட்டிக்கொள்ளும் வெறி. ஆனால் இவளுக்கோ அது வேறு வகையில் அழுத்தம் கொடுத்து. வினிதா கிள்ளி போட்ட விதை விருட்சமென வளர்ந்தது.

பொறுமை எல்லை கடந்து போயிருந்தது. அவன் கணினியில் மூழ்கியிருந்தான். "ஷ்யாம் மாமாவை அணுக முடியல" உரக்க சொன்னாள்.

"பொறு பேசுவோம். இப்போ எனக்கு வேலை இருக்கு. "

"ஷ்யாம் ரண்டு மணிநேரம் ஆகிடுச்சு ஷ்யாம்"

அவள் அழுகுரலில் பேச எரிச்சல் கூடியது இவனுக்கு "பச்... அது உன் மாமா மட்டும் தானே!! கடவுள் இல்லையே"

"கடவுளா இருந்திருந்தா அவரே தப்பி வந்திருக்கமாட்டாரா "

"மாட்டார். செய்த தப்புக்கு தண்டனைய அனுபவிப்பார்"

"அநியாயம் பண்றவனெல்லாம் வெளியே இருக்கும்போது என் மாமா மட்டும் ஏன் உள்ள இருக்கனும்"

“யாரை அநியாயம் செய்றவன்னு சொல்றே? என்னையா? உன் மனசாட்சியை கேள் சொல்லும்"

அவனுடன் மூன்று நாட்கள் பழகிய பின்னும் அவள் அப்படி பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை. எரிச்சலானான்.

"நீதான்... நீதான் கெட்டவன். நானே வந்து உன் கால்ல வந்து விழனும் அதுக்காகத் தானே இந்த நாடகம் "

"என்ன டிராமா..! என்ன பேசுற நீ?"

“ஆமா நீ பொல்லாதவன் தான். உனக்கு எந்த ஹராஸ்மென்ட் கேஸ்லயும் மாட்ட கூடாது. நீ மிரட்டுன மாதிரியும் தெரியக்கூடாது. அதுக்குத்தான் இதெல்லாம் பண்ற நீ”

“பைத்தியம் போல ஒளராத சுந்தரி. போய் வேற வேல இருந்தா பார். நான் என் வேல முடிஞ்சதும் வந்து பேசுறேன்”

"நான் நீ எதிர் பார்க்கிறதை செய்கிறேன் ஷ்யாம். என் மாமாவைக் காப்பாற்றிக் கொடு" கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவள் செய்கை அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் உள்ளத்தின் ஓரத்தில் ‘ஐ நம் ஆசை இவளுக்கு புரிந்து விட்டதே, திருமணம் செய்துகொள்ளலாமா’ என்ற ஆசை எண்ணம் எழ, கலங்கிய முகமாக பதற்றமாக இருப்பவள் என்ன செய்கிறாள் என்பதே அவனுக்குப் புரியவில்லை.

சின்ன விஷயம் ஆனால் பெரிதுபடுத்திப் பேசுகிறாள். தெளிவாக பேசி பிரச்சனையை தீர்க்கலாம் என்று அவன் யோசித்து பேச...

"என்ன பிரச்சனை சுந்த....." அவனை அவள் பேச விடவில்லை. அவன் அருகில் அமர்ந்து அவள் இதழால் அவன் இதழை ஒற்றினாள்.

“உனக்கு கன்ஷெசுவல் அக்ரிமெண்ட் தானே வேணும். இதோ இனி இத நான் உன் தப்புன்னு சொல்லவே மாட்டேன் என் இஷ்டத்துக்கு தான் நடந்துக்கறேன் ”என்றவள் இன்னமும் வேகமாக அவன் முகத்தை ஏந்தி முத்தம் கொடுத்தாள்.

அவள் போகிறாள் என்கிற வருத்தம் ஒரு பக்கம், ஸ்டாக் மார்கெட்டில் அவர்கள் முக்தி ஸ்டீல் நிறுவன மதிப்பு சட்டென்று ஒரு காரணமும் இல்லாமல் குறைந்திருக்கு என்று கோபம் ஒரு பக்கம், அவன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் உள்கட்சி பூசல், பிரச்சனை அதையெல்லாம் இங்கிருந்தே அவன் டீம்ஸ் கால் செய்தும் ஃபோன் செய்தும் பேசிபேசி கட்டுக்குள் கொண்டு வரப் பாடுப்பட்டுகொடிருக்கிறான். இதுவெல்லாம் இந்த மூன்று நாட்கள் சுந்தரியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படிப்பட்டவனுக்கு அவள் முத்தம் அதிர்ச்சி என்றாலும் கிளர்ச்சியாகவும் இருந்தது.

எப்போது அமர்ந்திருந்தவனை நெருங்கி அவன் மீதே அமர்ந்துகொண்டு அவனை கடித்து தின்றுவிடுமளவுக்கு அசுரத்தனமாக முத்தமிட தொடங்கினாள் என்றே தெரியவில்லை.

அவனை அவள் ஆள தொடங்கியிருந்தாள். அவனும் அதை அனுமதித்திருந்தான்.

அவளுக்கு நடுக்கம் பயம் மட்டுமே இருக்க, முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்க வைக்குமாம்.
அவனுக்குள் அத்தனை மகிழ்ச்சி. சுந்தரி மீது இருக்கும் ஈர்ப்பு நாளுக்கு நாள் அவனுக்குள் கூடிக்கொண்டே போனது. அவனுக்கு அவள் மீது இருக்கும் ஈர்ப்பு, ஆசை போல அவளுக்கு அவன் மீது வரதா என்ற ஏக்கம் பூக்க தொடங்கி இருந்தது. இதோ இப்போது கூட திருமணம் வரை கணநிமிடத்தில் ஓடியதே மனம்.

தப்பு செய்கிறாய் ஷ்யாம் என்று அறிவு சொல்லியும் அந்த சூழல் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. தப்பு தான் என்ன இப்போ? கேட்டு மனதை கட்டுப்படுத்தினான்.

எல்லாம் எழுதி வைத்த ரூல்ஸ் படித்தான் நடக்கணுமா என்ன? இது அவர்கள் வாழ்க்கை. முன்னபின்ன போனால் என்ன?


அவன் முகத்தை கையில் ஏந்தி திகட்ட திகட்ட முத்தம் கொடுத்தவள் “இவ்வளவு தான் எனக்கு தெரியும்" என்று கரகரக்கும் குரலில் சொல்ல

"அது போதும்" என்றவன் அவளை இறுக அணைத்து தூக்கி அவன் அறைக்கு சென்றான்.

ஷ்யாம் அழைத்தது இந்த மாதிரியான உறவிற்கு தானே..! என்கிற புள்ளியில் நின்று பார்க்கும்போது இப்படியாக இது முடிந்தால்தான் எல்லோருக்குமே விடுதலை என்ற எண்ணமே அவளை அங்கே தள்ளியது.

கொஞ்ச நாட்களுக்கு முன் யாரேனும் வந்து "சுந்தரி நீயாக சென்று ஒருவனை காதல் செய்ய அழைப்பாய் உனக்கும் காமம் பழகும்" என்று சொல்லியிருந்தால் சுந்தரி பைத்தியம் என்றே எண்ணியிருப்பாள்.

உயிர்களை உருவாக்கும் ஆண் பெண் கூடல் ஒழுக்கத்துடன் பிணைத்திருக்கும் இந்த சமூகத்தை அவள் பார்க்கும் விதத்தில் இதிலெல்லாம் அவளுக்கு ஆர்வம் இல்லை. அவள் அறிவு உலகில் உருவாகும் ஜீவன் அதன் போக்கில் இன்னோர் உயிர் வாழ, பிறக்க, இறக்க காரணமாக அமைந்தே தீரும் என்பதை நம்புகிறது. சுழலும் உலக பந்து அதன் போக்கில் சூழல்கிறது அது போல ஆண் பெண் காதலுற்று இன்னோரு ஜீவனை பிறப்பித்து மடிந்து போகிறார்கள். பிறப்பிக்க முடியலையா கூட வாழும் உயிர்களுக்கு பயன்படும் உதவியாக இருப்போமே,அது ஈஸிதானே என்றிருப்பவள் அவள்.

திவ்யா வருடத்திற்கு ஒரு முறை அவளிடம் வந்து ‘என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாற்றிவிட்டான் சுந்தரி’ என்று அழுவாள். சுந்தரியும் அவளை சமாதானம் செய்வாள். அடுத்த மூன்று மாதத்தில் திவ்யா ‘அவன் எவ்வளவு கூயூட் தெரியுமா?’ யாரை பற்றியாவது ரசித்து பேசுவாள். இவளுக்கோ அப்போ அழுதது என்ன என்கிற கேள்விதான் எழும்.

காதல், முத்தம், இதோ இந்த படுக்கையறை காவியமெல்லாம் அவள் வகை கிடையாது. அதற்கும் அவளுக்கு ரொம்ப தூரம். முரளி மாமாவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த காலம் ஒன்று உண்டு, அது அன்பு பாசம் என்றே வைத்துக்கொள்ளலாம்.

வயதாக, காலம் செல்ல, ரிலேஷன்ஷிப் எல்லாம் நமக்கு செட்டாகாது என்ற எண்ணத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத விஷயம் இதுவெல்லாம்.

அப்படி பல காதல் கதை கொண்ட திவ்யா கூட இப்படி செய்திருப்பாளா என்பது அவள் அறியாள்.

விடியற்காலை முழிப்பு வந்ததும் இரவு நடந்தது எல்லாமே நினைவுக்கு வந்தது. அசைந்து எழுந்தாள்.அவள் அசைவிற்கு அவனுக்கும் முழிப்பு வந்தது. அவளுக்கே கேட்காத அளவில் “நான் போறேன் ஷ்யாம் ப்ளீஸ்” என்றாள்.

“ம்ம்” என்று சொல்லி அசைந்து திரும்பி படுத்தான்.

அவன் அறை விட்டு வெளியே வந்தவள் அவளுக்கென்று கொடுத்திருந்த அறைக்கு சென்று மறைந்து கொண்டாள்.

குட்டிம்மா, பட்டுக்குட்டி என் ஜாமுன் அழகே என்று அவளை கனவில் கொஞ்சி கொண்டிருந்தான். கொஞ்சியவன் கன்னம் பிடித்து எனக்கு எப்பவும் உன்கூடவே இருக்கணும் ஷ்யாம் என்றாள். இவன் அவளை முடித்தமிட்டு எப்பவும் ஒன்னாதான் இருப்போம் சுந்தரி என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

நிஜத்தில் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த சுந்தரிக்கு நம்மை அவன் என்ன நினைப்பான் என்கிற எண்ணமே அவளை சித்திரவதை செய்தது. உலகம் இந்த நிமிடம் நின்றுவிடாதா என்கிற ஏக்கம் மிகுந்தது. அழுகை மட்டுமே துணை. அழுது இன்னமும் சக்தி வடிய... கண் அயர்ந்தாள்.

கணக்கு பாடத்தில் ஒன்று சேர்த்து, மன்றொன்றை அடித்து ஈக்குவேஷன் சால்வ் செய்வது போல இவனோடு சேர்ந்து இப்படியா பிரச்சனையை அவள் சால்வ் செய்யவேண்டும்.

அவள் உடலுக்கு , அவள் மனதிற்கு, அவள் ஒழுக்கத்திற்கு அவளே துரோகம் செய்துவிட்டாள். இனி அவளால் அவனைநேர்பார்வை பார்க்க முடியாது.

சூரிய ஒளி அறைக்குள் வர விழித்தவள் தயாராகி கீழே சென்றாள். கூடத்தில் அவளுக்கென்று காத்திருந்த ஷ்யாம் முகம் பார்க்காமல் "உங்க இஷ்டம் போல நான் நடந்துக்கிட்டேன். பிளீஸ், முரளி மாமாவை காப்பாற்றி கொடுங்க." என்றவள் "இன்னொரு விசயமும் சொல்லிக்கிறேன். நீங்க செய்தது தப்பு. இப்படி கார்னர் செய்வதுல்லாம் உங்களுக்கு வேணும்ன்னா விளையாட்டா தெரியலாம். ஆனா மத்தவங்களுக்கு அது உயிர் போகும் சித்திரவதை" பேசியவள் நடந்து வெளியே சென்றாள்.

அவன் தடுக்கவில்லை. எந்த அநியாயம் அவன் செய்யமாட்டான் என்று நினைத்தானோ அதை அவன் செய்தேவிட்டான். அவள் மனதை அல்லவா ஈர்க்க வேண்டும் என்று நினைத்தான். இந்த எண்ணம் நேற்று அவன் முகம் நோக்கி வந்து குனிந்து அவள் முத்தம் கொடுத்த க்ஷணம் நினைவில் இல்லாமல் போனதே.

அவள் பாய்ண்ட் ஆப் வியூ முற்றிலும் வேறாக இருக்கிறது என்று தெரிந்தும் ஆரம்பத்தில் இருந்து அதை மாற்ற முயற்சிக்காமல் அவளை சீண்டுவதில் நேரம் போக்கினானே! அவனை விட்டு போகிறாளே! கனவில் அவனை ஏற்றிக்கொண்டவள் நிஜத்தில் விட்டு செல்கிறாள்.எதுவும் செய்யமுடியாத தவிப்பு மட்டுமே…

எப்போதும் பிரச்சனைக்கு தீர்வுதேடும் அறிவோ அடுத்து என்னவென்று பார் என்றே அறிவுறித்தியது.

அழுதுகொண்டே விடுதி அறை வந்தவள் காய்ச்சலில் விழுந்தாள்.

இன்னமும் மெலிந்து போனாள். எதுவுமே பிடிக்காமல் போனது.எதை பற்றியும் யோசிக்க பிடிக்கவில்லை, அதே சமயம் வாழவும் பிடிக்கவில்லை.

அலுவலகம் சென்றாள். "ஐயோ... சுந்தரி!! எப்படி மெலிஞ்சு போயிட்ட!!" எல்லோரும் அவளை விசாரிக்க சங்கடமாக இருந்தது.

மனோகர் அக்கறையாக விசாரித்தான். "என்ன சுந்தரி என்ன உடம்புக்கு".

"வெறும் காய்ச்சல் தான் சார் "

"சரி. அந்த செக்யூரிட்டி பிராஜெக்ட் நீயே தயார் செய் "

கொஞ்சம் ஆர்வம் கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமா!! நீ டிசைன் செய்த சாப்ட்வேர் பார்த்துதான் அவங்க வந்திருக்காங்க. அதனால் இதையும் நீயே செய்"

"கிளைன்ட் அவங்க இடத்துக்கு வர சொல்றாங்க. எல்லா வசதியும் செய்து கொடுக்கிறாங்கலாம் "

"நீயும் முருகன் சாரும் தான் இதுக்கு நல்ல ரிசோர்ஸ். முருகன் சார் இல்லைன்னா கஷ்டம். நீ மட்டு அங்கே போய் வேலை பார்க்க முடியுமா?" கேட்டான் மேலும் இங்கிருந்து ஒரு டீம் சப்போர்ட் செய்வதாகவும் அவர்கள் கம்பெனியில் ஒரு டீம் சப்போர்ட்

சஞ்சலமான மனது கொஞ்சம் தளருவது போல உணர்ந்தாள். "எங்கே?"

"பூனே"

கேட்ட நிமிடம். அத்தனை நிம்மதி. இந்த சென்னை மாநகரம், அத்தை, மாமா, வினிதா அவளின் கொடிய நினைவுகளிலிருந்து தப்பி ஓடுவது போல இருக்க உடனே சம்மதம் சொன்னாள்.

"சரி. நான் மத்ததை தயார் செய்துட்டு உனக்கு சொல்றேன்"

பூனாவில் சந்திப்போம்.
 

swwee

Active member
Wonderland writer
8.வெல்கம் சுந்தரி

சென்னையிலிருந்து இரண்டு மணிநேரத்தில் புனே வந்து இறங்கிவிட்டாள் சுந்தரி . மனோகர் அவள் எவ்வித கஷ்டமுமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்துக்கொடுத்தான்.

அவள் வேலை பார்க்க போகும் நிறுவனமே அவளுக்கு போகவர செலவு, தங்கும் விடுதி செலவு என்று எல்லா வகையான வசதிகளையும் உறுதி செய்து கொடுத்தது.

வருமானம் அளவில் மகிழ்ச்சிதான் அவளுக்கு. இனி அத்தைக்குக் காசு கொடுத்து, கூடவே மாமாவின் கடன் கட்டி மேலும் பணம் நிற்கும் அவள் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கு அது உதவும்.

திவ்யா தோழிக்கு தோழியின் வீட்டில் தாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துக்கொண்டாள். அந்த பெண் தனியாக இருக்கிறாளாம், மொபைல் ரெஸ்டாரன்ட் நடத்துகிறாளாம். சுந்தரி வீட்டு வாடகை கட்ட வேண்டும். சுந்தரி சாப்பாடு, வீட்டின் சுத்தம் அவள் பார்த்துக் கொள்வாள். அந்த டீல் சுந்தரிக்கு நூறு சதவீதம் திருப்தி.

அவள் பெயர் சரயு. விமான நிலையம் வந்து அவளை அழைத்துக்கொண்டாள். பையன் போல கத்தரித்த கூந்தல், அதில் கொஞ்சம் அங்கங்கே பர்பிள் வண்ணம் , பளிர் வெளிர் முகம், எடுப்பான மூக்கு, பெண்ணுக்கே உரிய நளினம் மட்டும் இல்லையென்றால் அவளை ஆண் என்றும் சொல்லலாம்.

"வெல்கம் சுந்தரி" கைகளை விரித்து அவளை கட்டி அணைத்தாள்.

சுந்தரியும் அவளை அணைத்து நன்றி சொல்ல.

சுந்தரி தோளில் கைபோட்டு கொண்டு, அவள் ஒரே கைப்பெட்டியைத் தள்ளி அழைத்துக் கொண்டே வந்தவள் "இனி நீ என் பொறுப்பு" சொல்லி சிரித்தாள்.

“வெல்கம் சுந்தரி பேபி”

“ஐயோ பேபியெல்லாம் சொல்லாத”

“ஆங்.. சொன்னாங்க நீ கொஞ்சம் சென்சிடிவ்ன்னு..ம்ம் இனி சொல்லமாட்டேன்” மேலும் அவளை பற்றி தெரிவித்தாள் .

“நான் பெரிய ஆளா வருவேன்ணு வீட்ல சண்டை போட்டு வெளியே வந்துட்டேன். பிஸ்னெஸ் செய்றேன், கொஞ்சம் போதாம இருக்கு. இப்படி ஜஸ்ட் பணத்துக்காக நான் உன்ன யூஸ் பண்ணிக்கிறேன் என்று நினைக்காதே. எந்த உதவின்னாலும் தயங்காம கேளு " உண்மையாகப் பேசினாள்.

அந்த உண்மை தன்மை சுந்தரிக்கு ஆறுதலாக இருந்தது. சமீப காலத்தில் பட்ட காயங்களுக்கு அது ஆறுதலாக இருந்தது. கெட்டதை எல்லாம் விட்டு வந்துவிட்டோம் இனி நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

அபார்ட்மெண்ட் வகையில் கட்டிய வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் பென்ட் ஹவுஸ் தான் இவர்கள் வீடு. ஒரே ஒரு பெட்ரூம் இருக்கும் வீடு. தாராளமாக இரண்டுபேர் தங்கும் அளவிற்கு இருந்தது. காலை பரபரப்பிற்கு தகுந்தது போல வீட்டுக்குள் ஒரு குளியல் அறை, வீட்டிற்கு வெளியே ஒன்றும் இருந்தது.

அந்த கட்டிடத்தில் மொத்தம் எட்டு வீடு. மொத்த கட்டிடத்திற்கு ஒரே ஓனர். ஓனர் வாடகை விஷயத்தில் மட்டுமே ஸ்ட்ரிக்ட். மத்தபடி தொந்தரவு கொடுக்காத மனுஷன். அங்கு யாருமே யாரையுமே கண்டுகொள்ளாமல் வாழும் விதம் பழகியிருந்தனர். அது சுந்தரிக்கு மிகவும் வசிதியாக இருந்தது. புது முகங்கள், சம்பிரதாயமாக முகாந்திரம் காட்ட வேண்டும் என்பதெல்லாம் சலிப்பாக இருந்தது. எவர்க்குள் என்ன ஷ்யாம்தனம் இருக்குமோ? எதற்குமே அவன்தான் அளவீடாக இருந்தான்.

அவள் புது முயற்சியை தொடங்கினாள். அவள் ஆரோக்கியம், மனநலம், பணம் விஷயத்தில் இனி சுயநலமாக இருக்க போகிறாள்.

தினம் காலை முட்டை, ரொட்டி, பால் சாப்பிடுவாள், நிறுவன கேப் வரும் அதில் செல்வாள், அலுவலகத்தில் அவள் வேலையை செய்வாள், மதியம் சரயு கட்டி கொடுத்த சாப்பாட்டை சாப்பிடுவாள், மாலை அறை திரும்புவாள்.

சரயு அவள் புத்துணர்ச்சியை சுந்தரி மீதும் அடிக்கடி கொஞ்சம் தெளித்தாள். அது அவளை சிலநேரத்தில் அவன் நினைவிலுருந்து மீட்டது எனலாம்.தினம்தினம் அவன் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதும் திரும்பவும் அதற்குள் சிக்கிக்கொள்வதும் ஏக்கம், பரிதவிப்பென அமைதி தேடிக்கொண்டிருந்தாள்.

இருந்தும் அலுவலகத்தில் அவள் வேலையை அவள் கவனித்துக்கொண்டாள். வேண்டுமென்ற அளவுக்கு பேசுவாள், முகத்தில் அமைதி இருக்கும். மொழி பிரச்சனை என்று மற்றவர் நினைக்க அதது அதன் போக்கில் சென்றது.

உதவி கேட்டால் செய்பவள் அதிகம் பேசமாட்டாள் என்று முடிவு செய்து கொண்டார்கள்.

வார இறுதி நாட்களில் சரயுவிற்கு உதவி செய்தாள். பார்க், கார்டன் பக்கம் அவர்கள் வண்டியை நிறுத்தினால் அடுத்த ஒரு வார முதலீட்டை அந்த இரண்டு நாட்களில் எடுத்து விடலாம்.

சுந்தரி, சரயு, சரயுவின் பாய் ஃப்ரெண்ட் மற்றும் அவர்கள் செஃப் நகரத்தில் பொழுதுபோக்கான இடத்தில் வண்டியை நிறுத்தி கடை நடத்த, சுந்தரிக்கு சரயுவின் எதையுமே முற்போக்கான மனநிலையில் பார்க்கும் குணம் பிடித்து போக அவர்களுக்குள் நல்ல நட்பும் உருவானது.

சரயு கூட சேர்ந்து அவளும் பக்கம் இருக்கும் அகடமியில் சேர்ந்து கைவினை பொருட்கள் செய்யும் வகுப்புக்கு செல்ல தொடங்கினாள்.

புது அனுபவம் மனதை இலகுவாக்கியது.

சுந்தரி சாப்பிடாமல் வீண் செய்தாலும் சரயு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வகையான உணவை செய்து கொடுப்பது நிறுத்தவில்லை. சரயு எத்தனை தாமதமாக வீடு திரும்பினாலும் சுந்தரி அவளுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தான் படுத்துரங்குவாள்.

சரயு “நீ பலவீனமா இருக்க சுந்தரி. சாப்பிடாம இருக்காதே” என்று அதட்டுவாள். மொத்தத்தில் சுந்தரி மனதிற்குள் அத்தனை ரணம் இருந்தாலும் அவள் இடம் மாற்றம் அவளுக்கு நிறைய ஆறுதல் கொடுத்தது.

சில சமயம் அவன் நினைவுகள் வரும். இதயம் படபடவென்று அடித்துக்கொள்ளும். அவன் சிரிப்பு, அவன் கோபம் அவன் அக்கறை நினைவில் வந்து நிற்கும் கூடவே அந்த இரவின் நினைவுகளும் வரும், சட்டென்று எண்ணங்களை ஒதுக்கிவிட்டு கைவேலை ஏதாவது செய்வாள். ஆனாலும் மனம் அதிலேயே உழலும்.

ஆண்டவா இதென்ன ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறதே! இதிலிருந்து மீள வழியே இல்லையா?

சரயு சட்டென்று மாறும் அவள் முகமும் அவள் மன குழப்பத்தையும் பார்த்து எத்தனையோ முறை கேட்டு பார்த்தும் சுந்தரிக்கு அதை சொல்ல விருப்பமில்லை. சரயு அவளாக சுந்தரிக்கு காதல் பிரச்சனை என்று முடிவு செய்துகொண்டாள்.

குளிர் காலம் தொடங்கியது. தொடர்ந்து விழாகள் வரத்தொடங்கியது. நகரத்தில் அங்கங்கே பார்ட்டிகள் தொடங்கின.

மும்பைக்கு அடுத்து அதிக ஜனத்தொகை கொண்ட நகரம் புனே. விஸ்தாரமான தொழில்பேட்டை கொண்டதால் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகம் கொண்ட நகரம் அது. அதே போல் அந்த ஊருக்கென்ற தனித்துவமான கலாச்சாரமும் இருந்தது. நவராத்திரி தொடங்கியதும் மக்கள் குடும்பமாக சேர்ந்து பார்டி வைத்து கொண்டாடுவது பழக்கமாக வைத்திருந்தனர். அது புத்தாண்டு பிறப்பு அடுத்து பொங்கல் வரை தொடரும்.

அப்படியான பார்டி ஒன்றிற்கு சென்ற சரயு கைப்பேசியிலிருந்து நடுநிசியில் சுந்தரிக்கு அழைப்பு வந்தது

ஆண் குரல் "தீதி... சரயு வந்து கூட்டி போ...இங்கே பாதுகாப்பு இல்லை" என்றது குழறலாக. சுந்தரிக்கு அந்தக் குரல் அடையாளம் தெரிந்தது. அது சரயுவின் பாய் ஃப்ரெண்ட் ராகேஷ் குரல்.

உடனே எழுந்து கிளம்பி பார்டி நடக்கும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றாள். பெரிய திருமண மண்டபம் போல இருக்க, வெளியே அங்கங்கே புல்தரையில் சிலர் படுத்து உருண்டு கொண்டிருந்தனர். ராகேஷ் வாசலில் நின்று அவளை எதிர்பார்த்தவன் சரயு இருக்கும் இடம் கூட்டிச்சென்றான்.

அவனும் நிதானத்தில் இல்லையென்பது அவன் கண்களும், கால்களும் சுழல்வதில் தெரிந்தது. அத்தனை போதையிலும் அவன் பொறுப்பை அவன் மறக்கவில்லை தானே!! சரயு போலவே நிறைய எண்ண சிதறல் கொண்டவன் ராகேஷ். எப்போதும் ‘என்ன பையன் இவன், பொறுப்பற்ற லூசு’ என்ற எண்ணம் எழும். அது மாறி மரியாதை பெருகியது.

சேரில் அமர்ந்தபடியே தூங்கி விழுந்தவள் தட்டி எழுப்பியும் எழவில்லை. அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு விழித்திருந்தவன் போல "தேங்க்ஸ் தீதி" என்றவன் அங்கேயே தரையில் சுருண்டு படுத்துக்கொண்டான். தலையில் அடித்துக்கொண்டாள் சுந்தரி இவனைப் போய் நல்லதா நினைத்து விட்டோமே!

அந்த அரங்கின் இன்னொரு மூலையில் வண்ண விளக்குகள் சுற்றி சுற்றி மின்ன சிலர் குடித்து கொண்டு நடனமாடிக்கொண்டிருந்தனர். என்னமோ அவர்களை கவனித்துவிட்டு சுந்தரி உள்ளுணர்வு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நகர வேண்டுமென்றுது.

சரயுவும் சுந்தரி குரல் கேட்டு அவள் கூட சேர்ந்து நடக்க தொடங்கினாள். உளறியபடி தள்ளாடி தள்ளாடி நடந்து ரோட்டுக்கு சென்றால் வந்த ஆட்டோவை காணவில்லை.

அவர்களுக்கு பின்னால் நடந்த வந்த கும்பல் நெருங்கி வர சுந்தரிக்கு பயம் தொடங்கியது. ஒருவன் "ஹை பியூட்டி... இந்தா குடி" என்று அவனிடம் இருந்த பாட்டிலை அவள் புறம் நீட்ட, நான்சென்ஸ் என்று சுந்தரி தட்டிவிட அவனுக்கு கோபம் வந்தது.

தகராறு தொடங்கியது. என்ன நடக்கிறது என்று புரியாமல் சரயுவும் கூச்சல் போட சுந்தரிக்கு நிலமை சமாளிக்க முடியாமல் பயம் பற்றியது. அவர்கள் இவளை குடி என்பது இவளும் அவர்களை நகர்ந்துபோ, தொந்தரவு செய்யாதே, போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டுவதுமாக இருக்க… அதில் ஒருவன் எங்கே கூப்பிடு பார்க்கலாம் என்று அவள் கைப்பிடித்து முறுக்க, சட்டென்று அந்த கையை தள்ளிவிட்டு அவளை மறைத்து வந்து நின்றான் அவன்.

சுந்தரி பக்கம் திரும்பி “ஹை சுந்தரி ஷ்யாம் ஹியர்” என்றான்.

சுந்தரிக்கு ஆச்சரியம் தாண்டி நிம்மதி பரவியது. என்னமோ அப்போது தான் உயிர் வந்தது போல சீராக மூச்சு விட முடிந்தது.என்னமோ அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு தேங்க்ஸ் சொல்லி அழவேண்டும் போல இருந்தது.

இதென்ன இத்தூன்னூண்டு விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு ரியாக்ட் செய்கிறாள் இவள்!

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் காருக்கு சரயுவை அழைத்து சென்றனர் இருவரும். இதய ஓட்டம் குறையவில்லை அவளுக்கு. இவன் எங்கே இங்க!! இந்த நாற்பத்தைந்து நாட்காளாக இவனை பார்க்காமல் நிம்மதியாக இருந்தோமே நினைத்து கொண்டாள்.

பின்சீட்டில் சரயு கால் நீட்டிப்படுத்துக்கொள்ள, சுந்தரி முன் சீட்டில் அவன் பக்கம் அமர்ந்து கொள்ள வேண்டியதானது. டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் திரும்பி அவளை நேர் பார்வையாக பார்க்க "இல்ல.... நான் குடிக்கல... சரயு மட்டும் தான்" வேகமாக விளக்கினாள்.

அவர்களுக்குள் நடந்த எந்த சம்பாஷனைகளையும் அவள் மறக்கவில்லை.

சின்னதாக சிரித்தான். "இனி இந்த மாதிரி சீப்பான பார்டிக்கு எல்லாம் வராதே. உனக்கு பார்ட்டி போகணும்ன்னா சொல்லு நான் கூட்டிட்டு போறேன்" என்றான்.

இதயம் இன்னமும் வேகமாக ஓட்டம் எடுத்தது. அவள் வீடு இருக்கும் இடம் அவள் சொன்னதும் அவன் காரை ஓட்டி சென்ற விதம் அவனுக்கு இந்த ஊர் தெரியும் என்பதை சொல்லாமல் சொல்லியது.

சரயுவை அவர்கள் வீட்டினுள் அழைத்து வந்து படுக்க உதவி செய்துவிட்டு வீட்டை கவனித்தான். அழகான சின்ன வீடு. ஸ்டூடியோ அபார்ட்மெண்ட் நடுக்கூடத்தில் நின்று பார்த்தாலே மொத்த வீடும் தெரியும்.

படுக்கை அறை சுந்தரி பாகம் என்பது அந்த அறை முழுக்க அவள் பொருட்களாக இருக்க கண்டுகொண்டான். சமையல் அறையில் அவள் அலுவலகம் எடுத்து போகும் பாக்ஸ் கழுவி கவிழ்த்திருந்தது, அங்கங்கே சிதறியிருக்கும் பொருட்களை பார்த்தவன். இரண்டு பெண்களும் மட்டுமே இருக்கிறார்கள் என்று கணித்தான்.

ஆழ் குரலில் "சரியா சப்பிடுறியா?" கேட்க

அவள் தலை மட்டும் ஆட்ட "இந்த ஊர் சாப்பாடு பிடிச்சிருக்கா?" அதற்கும் பதிலாக தலையாட்டி பதில் சொன்னாள்.

"தலை மட்டும் ஆட்டாதே சுந்தரி, பதில் சொல்லு"

"ம். சாப்பிடறன், பிடிச்சிருக்கு" அவள் தலை குனிந்து கொண்டே பதில் சொல்ல

"என்ன பார்க்கமாட்டியா?"

அந்தக் கேள்வியில் இதயம் கணத்தது அவளுக்கு...

மாட்டேன் என்று தலை ஆட்டினாள். இனி எக்காரணத்திலும் இவனை பார்க்க கூடாது எங்கிற அவள் மனஉறுதி உடைகிறதே..!

“நான் கிளம்புறேன் பத்திரம்” என்றவன் அவளை இழுத்து அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் வந்த சுவடும் இல்லை, போன சுவடும் இல்லை.

கனவாகத்தான் இருக்கும்…, இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டாள்.

அவனிடமிருந்து, அவன் நினைவுகளிலிடமிருந்து அவளுக்கு எங்கிருந்து பத்திரம்..!

Ps : என்னமோ கதை ஒரே இடத்துல தேங்கி நின்னுட்ட மாதிரி இருக்கு. அப்படி தான் இருக்கா? எப்படி இருக்க்க்கு?
 
Status
Not open for further replies.
Top