ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14



“ப்பாஆஆஆஸ்… யோவ் சிங்கரு… மொடா குடிகாரா எழுந்திரியா” என்று வித விதமாக அவனை அழைத்து பார்த்தாள்,


உசுப்பி பார்த்தாள், ஏன் அடித்து கூட பார்த்தாள்.


ஆனால் ஆள் அசைவிலாமல் கிடக்க, இங்கே கதி கலங்கி போனாள் பெண்ணவள்.


இதற்கு நடுவே தூரத்தில் வந்து கொண்டிருந்த கொரிலா கூட்டமோ காரை நெருங்கி இருந்தது.


“என்ன டா இன்னைக்கு ஒரு பீஸ்ஸையும் காணோம். அந்த சரோசாக்கு போனை போட்டு வர சொல்லுடா” என்று ஒருவன் சொல்ல,


இன்னொருவனோ, “அஞ்சி பேர் இருக்கிறது தெரிஞ்சா வர மாட்டா” என்றான்.


“நீ மட்டும் இருக்கதா சொல்லி வர வை. அப்புறம் பாத்துக்கலாம்” என்று அவர்கள் சிறிது தொலைவில் நின்று பேசியது, இருளின் அமைதியில் விஷ்ணுவுக்கும் கேட்டிட,


ஏற்கனவே பயத்தில் அரண்டு இருந்தவளுக்கு நெஞ்சு குழியில் நீர்வற்றி போனது.


எச்சில் விழுங்கி கொண்டே, காருக்குள் பதுங்கியபடி அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“த்தோ பாருடா. ஒரு கார் நிற்குது. எவனாவது ஐட்டம் எதுனா இழுத்துனு வந்துருந்தா நாமளும் ரேட் பேசுவோம்” என்று சொல்லிக் கொண்டே காரை நோக்கி அந்த கூட்டம் வர,


அவ்வளவு தான் இதயம் தனியே கழண்டு ஓடிய உணர்வு தான் விஷ்ணுவுக்கு.


வேகமாக கார் கண்ணாடிகளை மூடிட முயன்றாள்.


கார் செயல்பாட்டில் இல்லாது கண்ணாடியை எப்படி இயக்கிட முடியும்?


ச்ச என்று அதனோடு போராடி சோர்ந்து போனவள்,


வெளியே நோட்டம் விட, அந்த கூட்டமோ காரை நெருங்கி இருந்தது.


முன்னிருக்கையில் இருந்து பின்னிருக்கைக்கு தாவி வந்தவள், சீட்டுக்கு அடியில் அந்த குறுகிய இடத்தில் உடலை குறுக்கி ஒளிந்து கொண்டாள்.


பயத்தில் உடல் முழுவதும் வியர்த்து, உடல் நடுங்க, மூச்சை உள்ளே இழுத்து பிடித்து கொண்டே, கண்களை இறுக மூடி கொண்டிருந்தாள்.


ஒருவன் காருக்குள் டார்ச் லைட் அடித்து பார்க்க,


சரண் உருவம் தாண்டி எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. அவனும் கவுந்து கிடக்க, அவன் முகமும் தெரியவில்லை.


“எவனோ குடிகாரன் போல” என்று கூட்டத்தில் ஒருவன் சொல்ல,


“அவன் குடிகாரன், சார்வால் குலத்தை வாழ வைக்க வந்த தெய்வமோ, வாடா” என்று அவர்களுக்குள்ளே கலாய்த்து கொண்டவர்கள்,


“காருக்குள்ள எதுனா தேறுமா?” என்று காரை திறக்க முயல, கெட்டதிலும் நல்லது என்றால், சரண் சாவியை தூக்கி போடும் முன் காரை லாக் செய்தது தான். வெளியே நின்று தடவி பார்த்தவர்கள், இறுதியில் காரிலிருந்த கார் ஸ்ப்ரேயை தான் பிடுங்கி எடுத்து சென்றார்கள்.


அவர்கள் சென்ற பிறகும் மூச்சை பிடித்து கொண்டு கிடந்தவள் சில நிமிடங்கள் கழித்தே இயல்புக்கு திரும்பினாள்.


மறைந்து இருந்த இடத்தில் இருந்து மெதுவாக வெளியே வர,


பட படவென அடித்து கொண்ட இதய துடிப்பு அவள் பயத்தை பறைசாற்றியது.


கண்களை இறுக மூடிக் கொண்டு எச்சில் விழுங்கி கொண்டவள், தொண்டை குழி ஏறி, இறங்க, கண்களில் இருந்து அவளை அறியாமலே கண்ணீர் வழிந்தது.


இதற்கு முன்பு அவள் எப்போது அழுதாள்? என்று நினைவிலேயே இல்லை.


தைரியமான பெண் தான். என்ன இருந்தாலும் அவளும் பெண் தானே. இக்கட்டான சூழ்நிலையில் அந்த தைரியம் உடன் வரவில்லை போலும். பயம் தான் ஆழியென சூழ்ந்து கொண்டது.


கண்ணீர் கடலில் மூழ்கி கிடந்தவள் மேல், சட்டென்று விழுந்த கரத்தில் பதறி அலறியே விட்டாள்.


அதிர்ந்து கண்களை திறந்து பார்க்க,


சீட்டில் கிடந்தவன் கை தான் அது. இயலாமையுடனான கோபத்தில் ஆதங்கமாக அவன் கையை தூக்கி போட்டிட, மீண்டும் அவள் கழுத்தில் தான் வந்து விழுந்தது.


வாய் விட்டே அழுதவள் இப்போதைய கோபமெல்லாம் சரண் மீது தான்.


அவன் மட்டும் சாவியை தூக்கி போடாமல் இருந்திருந்தால் எப்போதோ இங்கிருந்து சென்றிருப்பாலே.


அவனும் இப்படியெல்லாம் ஆகும் என்று நினைத்திருக்க மாட்டேனே. பெண் என்று அவளை நினைத்திருந்தால் இந்த நேரம் உடன் வைத்திருக்க மாட்டானே. யாரை குற்றம் சொல்ல? (எழுத்தர தான் வேற யார?)


நாள் முழுவதும் சிட்டாக பறந்து வேலை பார்ப்பவள், முதல் முறை சோர்ந்து போனாள்.


கண்ணீர் மட்டுமே அந்த இரவுக்கு அவளின் துணையாக மாறிட, எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரியாது.


காலையில் சூரியன் தன் பணிக்கு வந்துவிட்டதை உணர்த்திய நேரம், முகத்தில் பட்ட சுள்ளென்ற சூட்டில் தான் கண்களை திறந்தான் சரண்.


அவன் சீட்டுக்கு அடியில் விஷ்ணு கிடக்க,


பாதி மங்கிய விழி திரையில் அவள் உருவம் தான் முதலில் பதிந்தது.


விழிகளை முழுதாக திறந்து பார்த்தான். விழித்திரையை நிறைத்திருந்த முகம் இதய அறையையும் முழுதாக அடைத்து கொண்டதோ,


மெல்லிய புன்னகை சரண் இதழ்களில் தவழ,


மாயவள் மதிமுகத்தை தான் பார்த்து கொண்டிருந்தான்.


கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு பதுங்கி கிடந்தாள்.


விரல் நீட்டி, அவள் நெற்றியில் உறவாடிய கற்றை முடிகளை நுனி விரல் கொண்டு விலக்கி விட்டவன், விரலோ மெய் தீண்டாது அவள் மேனியில் ஊர்வலம் வர அவா கொண்டது.


அடர்ந்த புருவங்களை உரசி சென்ற நுனி விரலோ, நூலளவு இடைவெளியில் நாசி வழி ஊர்வலம் நடத்தி, சிவந்த அதரங்களை வருட வரம் கேட்டிட, எண்ண அலைகளோ, நேற்று இரவு இதழ் குவித்து ஊதிய காட்சியை நினைவில் கொண்டு, இரு விரலில் கீழ் அதரங்களை நோகாமல் நசுக்கி பிடித்து தன் அதரங்களுக்கு இணையாக்கிடும் கற்பனை விரிய,


தன் எண்ணம் போன திசையை கண்டு அதிர்ந்தவன், காருக்குள் இருக்கும் எண்ணம் இல்லாது, சட்டென்று எழ முயல,


காரின் மேற்பரப்பில் தலையை இடித்து கொண்டு மீண்டும் இருக்கையில் அமார்ந்தவன், காலுக்கு அடியில் கிடந்தவளையும் மிதித்து இருந்தான்.


அவன் கால் பட்டவுடன் ‘“அம்மா” என்று அலறிக் கொண்டே கண்களை விழித்தவள்,


நெளிந்து எழுந்து அமர,


“இங்க ஏன் தூங்கிட்டு இருக்க? சீட்லையே படுத்து இருக்கலாமே” என்று கேட்டதும் தான் தாமதம்,


இரவு முழுவதும் நெஞ்சை அழுத்திய பயத்தில் இப்போதும் அவள் விழிகள் நீரை சுரக்க ஆரம்பித்து விட்டது.


இரவு அவன் தூக்கி எறிந்த சாவியும் அவள் கால் ஓரத்தில் கிடக்க,


அவன் காலை தள்ளி விட்டு

அதை எடுத்து காரை ஆன் செய்தவள்,


இறங்கி வெளியே ஓடியே வந்து விட்டாள்.


அவள் செயல்களை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சரண், அவள் வெளரிய முகம் கண்டு ஏதோ சரியில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டவன்,


“என்னாச்சி” என்று கேட்டுக் கொண்டே அவனும் காரிலிருந்து இறங்கி அவள் அருகே வந்தான்.


எவ்வளவு தடுத்தும் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.


இருகைகளால் முகத்தை மூடிக் சிறு பிள்ளை போல் அழும் அவன் சில்வண்டின் அழுகை அவன் இதயத்தையும் அசைத்தது.


“ஏய்… என்னாச்சி? ஏன் அழுவுற?’” என்று சரண் பதறி கேட்க,


விஷ்ணுவிடம் பதில் இல்லை.


மேலும் மேலும் அழுகை தான் கூடியது.


“டேய் சின்ன குழந்தை மாதிரி அழாதடா. என்னாச்சி சொல்லு?” என்று முகத்தை மூடியிருந்த கைகளை அவன் விலக்கி கேட்க,


“இனிமேல் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் தனியா கூட்டிட்டு வராதீங்க. நேத்து ரொம்ப பயந்துட்டேன்” என்றவள் அழுகையை அவனால் உதாசீனப்படுத்த முடியவில்லை.


“என்னாச்சி?” பொறுமையான குரலில், பெருவிரல் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டடு, அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி மீண்டும் கேட்டான்.


நேத்து நாலைஞ்சு பேர் வந்தாங்க, என்றதும்,


தீவிரமான முகத்துடன் உன்னை ஏதாவது அடிச்சாங்களா? என்று கேட்டவன் அவள் உடலை ஆராய,


இல்லை என்று தலையாட்டியவள்,


“நான் உங்களை எழுப்பி பாத்தேன். நீங்க எந்திக்கவே இல்லை. கார்ல இருந்த திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க” என்று மட்டும் அழுது கொண்டே சொல்ல,


திங்ஸ் போனா போகுது உனக்கு எதுவும் ஆகலல. உன்னை அடிச்சான்களா என்று மீண்டும் இரு கைகளால் கன்னங்களை ஏந்தி அவள் சிவந்த விழிகளை பார்த்து கேட்டான்.


இல்லை என்று தலையாட்டியவள் நேற்றைய இரவின் தாக்கத்தில் மீண்டும் பெருங்குரல் எடுத்து அழ,


“சாரி டா” என்று சொல்லி கொண்டே, ஆறுதலாக அவளை அணைத்து இருந்தது சரண் கரங்கள் இரண்டும்.


இரவின் நினைவில் உடல் நடுங்கி நின்றிருந்தவளும், ரொம்ப பயந்துட்டேன் என்று அழுகையூடே சொல்லிக் கொண்டு அவன் முதுகில் விரல் பதித்து இருந்தாள்.


அவள் உடல் நடுக்கமும், இதயத்தின் அதிவேக துடிப்பும் அவன் தேகம் உணர,


சாரி டா இனிமேல் இப்படி நடக்காது என்று சொல்லிக் கொண்டே நெற்றியில் முத்தமிட்டவன் மீண்டும் அணைத்து கொள்ள,


அவள் இருந்த நிலையில் எதையும் உணரவில்லை.


ஆறுதலான இந்த அணைப்பு அவளுக்கும் தேவை படவே, கரங்களை நெருக்கி, அவன் மார்பில் முகம் புதைத்துக் இன்னமும் நெருங்கி கொண்டாள்.


இருவரும் அணைத்தபடி மெளனமாக சில நிமிடங்கள் கழிய,


விஷ்ணுவும் உடல் நடுக்கம் குறைந்து இயல்புக்கு திரும்பியவளுக்கு அப்போது தான் சரணை அணைத்து கொண்டு நிற்பது புரிய,


சட்டென்று அவனை தள்ளி விட்டு விலகி நின்றவள் விழிகளிலோ குற்றவுணர்வு தான்.


நான் எப்படி அவரை கட்டிப்பிடிக்கலாம் என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள் வேகமாக வந்து காரில் ஏறிட,


தலையை கோதி, ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே சரணும் அவள் அருகே ஏறிக் கொள்ள,


இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


எப்போதும் வாய் ஓயாது பேசிக் கொண்டே வருபவள், இப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


அமைதியாக காரை மட்டும் ஓட்டி வர, அவள் அமைதியும், மெளனமும் இவன் மனதை தான் பதை பதைக்க வைத்தது.


அதான் சாரி சொன்னேன்ல, ஏதாவது பேசுடா என்று வழி நெடுக சரண் மட்டுமே பேசிக் கொண்டிருக்க,


பசை வைத்து ஒட்டுயது போல் வாயை திறக்கவே இல்லை அவள்.


அவனை வீட்டில் விட்டு, இறங்கி நடந்து சென்றவள் கையில் கார் சாவியை தினித்தவன், "கார் எடுத்துட்டு போய்ட்டு கொண்டு வா" என்று சொல்ல,


அவன் மீதே சாவியை தூக்கி போட்டு சென்றவள் கோபத்தை உணர முடிந்த அவனால், அதை சமாளிக்கும் வழியை தான் அறிய முடியாமல் போனது.


ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ற, அதான் சாரி கேட்டேன் ல என்று கேட்டவன்,


இப்போ மட்டும் நீ வந்து சாவியை எடுத்துட்டு போகல, திரும்பி வரவே கூடாது என்று கோபத்தில் கத்தியவ்ன் குரல் காதில் விழுந்தாலும், அவனும் வேண்டாம் அவன் வேலையும் வேண்டாம் என்று நிற்காமல் சென்று விட்டாள்.


அவள் உருவம் மறையும் வரை செல்லும் அவள் முதுகை வெறித்து பார்த்த சரணோ,


திமிர் பிடிச்சவன் என்று திட்டிக் கொண்டே, கீழே விழுந்து கிடந்த சாவியை எடுத்து கொண்டு உள்ளே செல்ல,


அங்கே அவன் குடும்பம் மொத்தமும் அவனுக்காக தான் காத்திருந்தது
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 15


சரண் வீட்டிற்குள் நுழைந்த சமயம் அவன் மொத்த குடும்பமும் ஹாலில் தான் கூடியிருந்தது, நட்சத்திரா தவிர்த்து.

“நேத்து நைட் எங்க போயிருந்த சரண்?” என்று அவன் தந்தை சௌந்தர் கேட்க,

“ஸ்டூடியோல வேலை இருந்துச்சு” என்றான் யார் முகத்தையும் பார்க்காது, எங்கோ வெறித்தபடி.

“பொய் சொல்ற, வாட்ச்மென் நீ எட்டு மணிக்கே கிளம்பிட்டதா சொன்னானே” என்று அவர் மகன் முகத்தை ஆராய்ந்து கொண்டே கேட்க,

“வெளிய லொகேஷன் பார்க்க போய் இருந்தேன்” அடுத்த பொய் சொன்ன மகனை நெஞ்சு வெதும்பி பார்த்து கொண்டிருந்தார் அவன் அன்னை இசைமலர்.

“பாருங்க அண்ணி எத்தனை பொய் சொல்றான்” என்று அவர் மேகலாவிடம் புலம்பிட,

மேகலாவோ, “அண்ணா எதுக்கு இப்போ வீட்டுக்கு வந்ததும் வராததுமா அவனை குறுக்கு விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க” என்று சரணுக்காக பரிந்து பேசிக் கொண்டு அவர்கள் அருகே வந்தார்.

“நீ போடா. போய் குளிச்சிட்டு வா” என்று அவனை அனுப்பி வைக்க முனைந்தவரை தடுத்திருந்தார் சௌந்தர்.

“ நீ அமைதியா இரு மா” என்று தங்கையை அடக்கியவர்,

“சரண் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.

“சொல்லுங்க” என்று அவன் அங்கேயே நின்றிட,

“எதுக்கு கல்யாணம் வேணாம் சொல்ற? எங்களுக்கு காரணம் சொல்லு” என்று தான் கேட்டார்.

“வேணாம்னா விடுங்களேன்” என்று அவன் அமைதியாக சொல்ல,

“அப்படியெல்லாம் விட முடியாது. உன்கிட்ட கேட்டுட்டு தானே ஏற்பாடு பண்ணோம். மண்டபம் பார்த்து, பத்திரிகை அடிச்சி சொந்த பந்தங்களுக்கெல்லாம் கொடுத்தாச்சி. இப்போ வந்து வேணாம் நிறுத்துங்க சொன்னா என்ன அர்த்தம்? வாலிட் ரீசன் சொல்லு” என்று நடு வீட்டில் நிறுத்தி அவன் கழுத்தை பிடிக்காத குறையாக கேட்டார்.

“என்னையே கேட்டுட்டு இருக்கீங்களே, நட்சுவுக்கு இதுல சம்மதமா? இல்லையானு கேட்டீங்களா?” என்று அவன் தப்பிக்க, அவளை மாட்டி விட,

“அவ என்ன சொல்ல போறா?” என்று தான் திருப்பி கேட்டார் மேகலா.

“முதல்ல கேளுங்க” என்று மட்டும் சொன்னவன் ஐவரையும் தீர்க்கமாக பார்க்க,

அடுத்த நொடி “நட்சத்திரா” என்று வீடே அதிரும் படி தான் கத்தி அழைத்திருந்தார் நட்சத்திராவின் தந்தை சந்திரன்.

முகத்தில் கருப்பு நிறத்தில் பேஸ்பேக் போட்டபடி போனோடு வந்து நின்ற மகளை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை அவளை பெற்றவர்களுக்கு.

அவள் வாழ்க்கையே இங்கே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, ‘எனக்கு என்ன வந்துச்சி?’ என்பது போல் எந்நேரமும் போனும் கையுமாக சுற்றும் பெண்ணை வேதனையாக பார்த்துக் கொண்டார்கள்.

வந்தவள் ‘எல்லாரும் எதுக்கு காலையிலேயே மீட்டிங் போட்டு இருக்காங்க?’' என்று அங்கிருந்தவர்கள் மீது விழிகளை அலையவிட்டவள் பார்வை இறுதியில் சரண் மீது படிந்தது.

அவனோ, ‘எப்படியும் கல்யாணம் வேணாம்னு தான் சொல்ல போறா’ என்று மலையளவு நம்பிக்கையில் தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“உனக்கும் சரணுக்கும் கல்யாணம் முடிவாகி இருக்கிறது உனக்கு தெரியும் தானே?” என்று சௌந்தர் கேட்க,

அவளோ அன்று சரணிடம் சொன்னது போல, “ஓ தெரியுமே மாமா” என்று தான் சொன்னாள் எந்த அலட்டலும் இல்லாமல்.

“இந்த கல்யாணத்துல உனக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா?” என்று அவர் கேட்க,

“ஆட்சேபனை” என்று உதட்டை சுழித்து யோசித்தபடி நின்றிருந்தவளை தன்னை நோக்கி திருப்பிய சரண்,

“இங்க பாரு. இது உன் லைப். உனக்கு பிடிச்சவங்களோட வாழ உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. யார பார்த்தும் பயப்படாத. உன் மனசுல என்ன இருக்குன்னு தைரியமா சொல்லு. நான் இருக்கேன்” என்று உரிமை குரல் கொடுத்துக் கொண்டிருந்தவனை,

வித்தியாசமாக பார்த்து வைத்தவள்,

“யார் என்ன சொல்வாங்க? நான் எதுக்கு பயப்படனும்? எனக்கு கல்யாணம் பத்தி எந்த பிளானும் இல்லை. உங்களை கல்யாணம் பண்றதுல எந்த பிரச்சனையும் இல்லை” என்ற சொல்லில் வானம் இடிந்து தலையில் விழுந்த உணர்வு தான் அவனுக்கு.

நொடியில் தன்னை நிலை கொண்டு, “இங்க பாரு நீ யார பார்த்ததும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு யாரையாவது பிடிச்சு இருந்தா தைரியமா சொல்லு?” என்று அவள் தோளை பற்றி கேட்டவனை மொத்த குடும்பமும் சலிப்பாக தான் பார்த்து வைத்தது.

“எனக்கு ஆக்டர் துருவ் கூட தான் பிடிக்கும். அவரை கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?” என்று நக்கலாக கேட்ட அத்தை மகளை உச்சக்கட்ட கோபத்தில் பார்த்தவன்,

“அடிச்சி மண்டைய பிளந்துடுவேன். உன் லைஃப்க்காக பேசிட்டு இருக்கேன். நக்கல் ம**று பண்ணிட்டு இருக்க” என்று கோபத்தில் கையை ஓங்கியவனை பார்த்து பயந்து அவள் கோழி குஞ்சாய் சௌந்தர் மார்பில் பதுங்கி கொள்ள,

“போதும் நிறுத்து சரண்” என்று அவன் கையை தட்டி விட்டார் சௌந்தர்.

“அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க எந்த ஆட்சேபனையும் இல்ல. அவகிட்ட கேட்க சொன்ன கேட்டாச்சி. வீணா மனச போட்டு குழப்பிக்காம கல்யாணத்துக்கு ரெடி ஆகுற வழிய பாரு. குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கும்” என்று இறுதி தீர்ப்பு சொல்லி விட்டு விறு விறுவெனா அங்கிருந்து அவர் சென்று விட,

“ஏன் டா வினோதமா நடந்துக்கிற?” என்று கேட்டுக் கொண்டே அவன் தலையை வருட வந்த அன்னை கையை தட்டி விட்டு இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறி தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.

அவளுக்காக தான் அவன் திருமணம் வேண்டாம் என்றான். ஆனால் இன்று அவளே அதில் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லி விட அவனாலும் என்ன தான் செய்ய முடியும்?

அவன் விரும்பிய பெண். அவன் எதிர்பார்த்த திருமண வாழ்க்கை. ஆனால் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையே.

“அவ காதலுக்காக பேசினா என்னையே வில்லன் ஆக்குறா. எனக்கு என்ன வந்துச்சு. பேசாம கல்யாணம் பண்ணிக்கலாமா? அவ காதல் தெரியாம இருந்தா கூட பரவாயில்லை. இப்போ எல்லாம் தெரிஞ்சும் அவளை கல்யாணம் பண்றது சரியா? கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவளை சந்தேகபட்டா? அப்புறம் நட்சு தான் கஸ்டபடுவா. என்ன பண்றது? ம்ஹ் ஆ” என்று தலையை பிடித்து கொண்டு மெத்தையில் மல்லாக்க விழுந்தான்.

மதுவின் தாக்கம், தேவையில்லா சிந்தனை தலையை பாரமாக்கிட, கண்களை மூடி கிடந்தவன் விழிதிரைக்குள் ஆட்சி செய்தது என்னவோ விஷ்ணு தான்.

அவளை அணைத்து நின்ற தருணம் தான் இதமாக நினைவை நிறைத்து நின்றது.

அவள் தேகம் உணர்ந்த கத கதப்பு இப்போதும் நெஞ்சில் உறைந்து நின்று உடலை சிலிர்க்க வைத்தது.

இன்னும் இன்னும் வேண்டும் என்ற தவிப்பு வந்தது. எல்லை மீறி எரிதழலாய் தேகம் இணைத்து கொள்ள ஏக்கம் சூழ்ந்தது.

அவள் நினைவில் இவன் இதழ்கள் மெலிதாக புன்னகைக்க,

பிடித்து போன அந்த உணர்வில் கண்ட கண்ட கற்பனைகள் விரிந்தது மனக்கண்ணில்.

காலையில் அவள் இதழ்களை ஆளும் வரம் கேட்டு விலகி நின்ற விரல்கள் மெத்தை விரிப்பை கசக்கி பிடித்திட, முத்தத்தின் சுவை அறிய ஆசைக் கொண்டான் அவன் கோட்டானிடம்.

எண்ணத்தில் விரிந்த காட்சியை மூளை கிரகித்த சமயம் சட்டென்று கண்களை திறந்து கொண்டவன்,

“என்ன இவ்வளவு கேவலமான எண்ணமெல்லாம் வருது? நீ சரியில்ல சரண் தேவ். அந்த கோளாறு கோட்டான் ரொம்ப டிஸ்டர்ப் பண்றான்” என்று புலம்பிக் கொண்டே எழுந்து அமர்ந்தான்.

ஆனாலும் பிடிக்கிறதே இந்த கேவலமான எண்ணங்கள்.

நட்சத்திரா விசயத்திற்கு முடிவு கட்டும் முன் தனக்கு தானே தெளிவுற எண்ணினான்.

“அந்த கோட்டான் நட்சுவ பிடிக்காது சொன்னானே. அது உண்மையா இருக்குமா?” என்று முந்தைய நாள் இரவு அவன் போதையில் இருந்த போது அவள் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து பார்த்தான்.

“வேற இன்னொன்னு கூட சொன்னானே. பொண்ணுங்களை பிடிக்காது பசங்களை தான் பிடிக்கும்னு” என்று ஒவ்வொன்றாக நினைவு படுத்தி பார்த்துக் கொண்டிருந்தவன்,

“அதான் எனக்கு அவன் மேல ஃபீல் ஆகுது போல” என்று எண்ணிக் கொண்டான்.

“அவன் அந்த மாதிரி பையனா இருந்தா? எனக்கு ஏன் ஒரு பையன் மேல ஃபீலிங் வரணும்? அப்போ நானும்?” என்று யோசித்தவனுக்கு மூளை சொன்ன பதிலில் அவன் இதயமே நின்று விட்டது.

“இல்லை இல்லை… நான் அப்படி இல்லை. எனக்கு அந்த மாதிரி ஒரு லைப் வேணாம்.” என்று தனக்கு தானே சுய பரிசீலனை செய்தவன் உடைந்தே போய் விட்டான்.

இங்கே சோர்வாக வீடு வந்து சேர்ந்த விஷ்ணுவிடம்,

“ராத்திரி முழுக்க எங்க டி போன? போன் போட்டாலும் எடுக்கல?” என்று பொரிந்து தள்ளினார் அன்னம்மா.

“போன் சுவிட்ச் ஆப் மா” என்றவள் “இந்த போனுக்கு சார்ஜ் போட்டுடு” என்று அன்னை கையில் போனை கொடுத்து விட்டு, உள்ளே சென்று பிளாஸ்டிக் ஒயர் கட்டிலில் பொத்தென்று விழ,

அவள் முதுகில் ஒரு அடியை போட்டார் அன்னம்மா.

“அம்மொய்… எதுக்கு மா அடிக்கிற?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர,

“இது சரியில்ல டி. நேரம் கெட்ட நேரத்துல பார்க்கிற வேலையெல்லாம் வேண்டா. உண்மையை சொல்லு டி. ரேஸ்க்கு தான போன?” என்று அவளை பிடித்து உழுப்பினார்.

“இல்ல மா. என் கிங் இங்க இருக்கும் போது நான் எப்படி ரேஸ்க்கு போவேன் சொல்லு?” என்று வீட்டுக்குள்ளே ஓரமாக மூடி வைத்திருந்த பைக்கை காட்டி அவள் சொல்ல,

அந்த பைக்கையும், அவளையும் மாறி மாறி பார்த்த அன்னம்மாவோ,

“அதை நல்லாக்கா காசு இல்லாம அடக்கிட்டு இருக்கனு சொல்லு டி” என்று மகளை திட்டினார்

‘அய்யயோ கண்டுபிடிச்சி ட்டாங்களே! இவ்வளவு நாள் நடிச்ச நடிப்பெல்லம் வேஸ்ட் ஆ’ என்று திரு திருவென முழித்தவள்,

“அதான் ரேஸ்க்கு போகலல விடு” என்று சொல்லிக் கொண்டே போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து கொண்டாள்.

“நேத்து எங்க போன? இப்போ அதுக்கு பதில் சொல்லு டி?” என்று போர்வையை உருவி, அவளை இழுத்து அமர வைத்து கேட்க,

சற்று யோசித்தவள், “என் பாஸ்க்கு அர்ஜெண்டா வெளியூர் போக வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு, அவரை தான் மா கூட்டு போய்ட்டு வாரேன்” என்று ரீல் சுத்திய மகளை உறுத்து விழித்தார் அன்னம்மா.

அவர் நம்பிக்கை இல்லா பார்வை இவள் நெஞ்சில் கிலியை பரப்ப,

“நம்புமா” என்று தான் உள்ளே சென்று விட்ட குரலில் திருட்டு முழியுடன் சொன்னாள்.

“நம்பனும்னு தாண்டி நானும் நினைக்றேன். ஆனா உன் சேர்க்கை சரியில்லையே. உன் பாஸ்க்கு புத்தியில்லையா? பொம்பள புள்ளைய ராத்திரி புல்லா கூட வச்சி சுத்துறான்” என்று அவர் சரணை திட்ட, ஏனோ இவள் மனம் வலித்தது.

“அம்மா அவரை திட்டாதமா” ஒரு சொல் தாங்காது அவனுக்காக பரிந்து பேசியது மனம்.

“அவர் என்னை பொண்ணா கூட மதிக்க மாட்றார். மாரி அண்ணே போல தம்பி மாதிரி தான் பார்க்கிறார்” என்றவளை சந்தேகமாக பார்த்தவர்,

“அதுவும் நல்லதுக்கு தான். ஆனாலும் இந்த வேலை” என்று அவர் இழுக்க,

“உனக்கு பிடிக்கலைனா இந்த வேலைக்கும் நான் போகல” என்ற மகளை திரும்பி நம்பிக்கை இல்லா பார்வை பார்த்தவர்,

“இதையும் என்னால நம்ப முடியல டி. நான் சொன்னதும் உடனே சரி சொல்ற? முதல் நாளே நான் பிடிக்கல சொன்னேன். அப்போ என்னை தாஜா பண்ணி போய்ட்டு, இப்போ வந்து தியாகி மாதிரி பேசுறியா?” என்று கேட்க,

அதற்கு அவளிடம் பதில் இல்லை.

“போ மா எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்” என்று விட்டு மீண்டும் படுத்துக் கொண்ட மகளை இருநொடிகள் சந்தேகமாக பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றார் அன்னம்மா.

அவரிடம் பொய் சொல்லும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை. ஆனால் நடந்தவைகளை சொன்னால் அவர் மனம் சங்கடம் கொள்ளுமே என்ற அக்கறை தான் அவளுக்கு.

பெற்றவர்களிடமே பொய்யுறைப்பது தான் காதலின் முதல் நிலையோ!

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
கதை வாசிக்கிறாவாலாம் ஏதாவது சொல்லிட்டு போனா நானும் எனர்ஜியா எபி போடுவேன்.

கொட்டுங்க கொட்டுங்க... உங்க பாரத்தை எல்லாம் கொட்டுங்க... 😉😉😉😉😉




Thread 'காதல் கொண்டேனடி கண்ணம்மா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/காதல்-கொண்டேனடி-கண்ணம்மா-கருத்து-திரி.1786/
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16



வெகு நேரம் ஷவரின் அடியில் நின்றிருந்த சரணுக்கு விஷ்ணு மீது தோன்றும் உணர்வுகளை அடக்கவும் முடியவில்லை. அவள் வசம் சாயும் மனதை தடுக்கவும் வழி தெரியவில்லை.


கடல் மணலில் எழுதிய எழுத்துகள் போல் நீரால் அவள் நினைவுகளை அழித்திட முயன்றால் அது முடியும் காரியமா என்ன?


சில்லென்ற நீர் உடலில் குளிரை பரப்ப, தேகம் மொத்தமும் தீயாக எரிந்து அவளை தான் அணைத்திட ஏக்கம் கொண்டது.


அவன் முதல் முயற்சி வீணாகிட டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்த சரணால் நிலைக் கொள்ளவே முடியவில்லை.


ஒரு ஆணாக இருந்து கொண்டு இன்னொரு ஆண் மீது உருவாகும் ஈர்ப்பை அவனால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.


“நோ… நோ… நான் அந்த மாதிரி கிடையாது. நார்மல் பெர்சன் தான். நட்சு… ஐ லைக் நட்சு. ஆமா நட்சத்திராவ எனக்கு பிடிக்கும்” என்று கண்களை மூடிக் கொண்டு தனக்கு தானே கட்டாயமாக அவள் மேல் ஈர்ப்பை திணிக்க முயன்றான்.


ஆனால் அதுவும் முடியவில்லையே. கண்களை மூடினாளே அவன் கோட்டான் தானே வந்து நிற்கிறாள்.


மனம் சோர்ந்து இயலாமையாக கண்களை திறந்தவன் எதிரே இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தான்.


தினமும் பார்க்கும் முகம், ரசித்து ரசித்து செதுக்கிய உடற்கட்டு, சில நேரங்களில் கர்வம் கொண்ட அழகு, ஆளுமையான தோற்றம். ஆனால் அத்தனையையும் வெறுக்க வைத்தது விஷ்ணு மீது தோன்றிய காதல்.


உலகம் ஏற்க மறுக்கும் காதல். சமூகத்தில் இருந்து ஓடி ஒளிய வைக்கும் காதல். அத்தனை பேராலும் எள்ளி நகையாடப்படும் காதல்.


எங்கோ தூர தேசத்தில் வெறும் செய்தியாக கேட்ட போதே அவன் அறுவருத்த காதல். இன்று அவனே அப்படி ஒரு காதலில்… நினைத்து கூட பார்க்க முடியவில்லை.


வேண்டாம் இப்படி காதல் என்று மனம் அரற்ற அவனை அவனே வெறுத்த தருணம் அது.


நெஞ்சில் விஷ்ணுவின் நினைவுகள் முள்ளாய் தைத்திட, நிதர்சனத்தை உரக்க சொல்லும் மூளையின் சொற்கள் மேலும் ரணத்தை கூட்டியது.


“இல்ல நான் நார்மல் பெர்ஷன் தான். அந்த பையனை எனக்கு பிடிக்காது” என்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டு இதயத்தில் குத்தி குத்தியே அவளை தன் நெஞ்சு கூட்டில் இருந்து வெளியே தூக்கி போட நினைத்தவன் விழிகளில் இருந்து உலையாய் கொதிக்கும் உணர்வு துளிகள் கண்ணீராய் வெளி வந்தது.


மொத்தமாக உடைந்து போனவன் உடலே பாரமாகிட, பொத்தென்று மெத்தையில் அமர்ந்தவன் கதறியே அழுது விட்டான்.


“நோ… ஐ ஹேட் யூ… ஹேட் யூ…” என்று அந்த அறையே அதிரும் அளவுக்கு அவன் கத்தியது கீழே இருந்தவர்கள் செவியிலும் விழுந்தது.


“சரண்” என்று இசை மலர் திடுகிட்டு மகனை காண ஓட,


“அவனை கொஞ்சம் தனியா விடு இசை” என்று தடுத்திருந்தார் சௌந்தர்.


“இல்லைங்க… “என்று மகன் கதறலலில் தாயுள்ளம் பரபரக்க,


“அவனே சரி ஆவான். நீ வா” என்று தோளோடு அணைத்து அவரை சௌந்தர் அழைத்து வர,


மகன், மனம் உடைந்து அழும் அலறல் கேட்டு அன்னையால் எப்படி நிலைக் கொள்ள முடியும்?


“இல்லைங்க…” என்று கணவனை உதறி விட்டு அவனை காண ஓடினார்.


அவன் கதறல் அவருக்கு மட்டுமல்ல, மற்றவர்கள் இதயத்தையும் பத பதைக்க வைத்ததே.


இன்னமும் முகத்திற்கு போட்டிருந்த பேஸ் பேக்கை அகற்றாது, ஆப்பிள் துண்டுகளை மெதுவாக வாயை திறந்து மென்றுக் கொண்டிருந்த நட்சத்திரா தோளில் கிள்ளி வைத்த மேகலாவோ,


“என்ன கிறுக்கு தனம் டி பண்ண? அவன் ஏன் கல்யாணம் வேண்டாம் சொன்னான்?” என்று மகளை தான் கடிந்து கொண்டார்.


“நான் என்ன பண்ணினேன்? நான் ஒன்னும் பண்ணல” என்று அவர் கிள்ளிய கையை தடவிக் கொண்டவள், ஆப்பிள் பவுலோடு தன் அறைக்கு நடையை கட்டி விட்டாள்.


எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜானகி பாட்டிக்கோ, இத்தனை நாட்கள் எந்த மனஸ்தாபமும் இல்லாமல் நலமாக சென்று கொண்டிருந்த தங்கள் குடும்பத்திற்கு யார் கண் பட்டதோ! என்ற சிந்தனையே அவர் நிம்மதியை நிலைக்குலைய செய்தது.


இதயத்தை உருக்கிய பேரனின் கதறல் குரலில் அவருமே நெஞ்சை பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.


‘என் பேர புள்ளைங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டினு சந்தோசமா இருக்கணும்’' என்று தான் அந்த நொடி அவர் மனம் இறைவனை வேண்டிக் கொண்டது.


இங்கே மாடியில் மகன் அறைக்கு ஓடி வந்த இசைமலர், “சரண்…” என்று அழைத்துக் கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தவர் கண்டது என்னவோ,


உடல் முழுவதும் நீர் சொட்ட சொட்ட உயிர்பில்லா விழிகளுடன், இலக்கு இன்றி சோர்வாக வெறித்துக் கொண்டிருந்த மகனை தான்.


“என்னாச்சு ப்பா” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் பேனை போட்டு விட்டுக் கொண்டே அவனை நெருங்கி இருந்தார்.


“தலையை கூட சரியா துவட்டல” என்று சொல்லிக் கொண்டே டவலால் அவன் தலையை துவட்டி விட,


அவரை இடையோடு அணைத்து கொண்டான் சரண்.


“அம்மா” என்று அழைத்த மகன் குரல் உடைந்து ஒலிக்க,


அந்த தாயுள்ளம் பதறி போனது.


“என்னாச்சு ப்பா?” விழிகளை தாழ்த்தி மீண்டும் அவனிடம் கேட்டார்.


“எந்த சூழ்நிலையிலயும் என்னை வெறுத்திட மாட்டீங்கல்ல ம்மா” என்று தான் குரல் கம்ம கேட்டான்.


பின் இருபதின் முடிவில் கூட தாயின் அன்பும், அரவணைப்பும் தேவைப்பட்டது அந்த முழு ஆண் மகனுக்கு.


உலகத்தை விட உறவுகளை எதிர்கொள்வதில் தானே சிரமம் அதிகம்.


“நான் எதுக்கு ப்பா உன்னை வெறுக்க போறேன். அம்மாவால அது முடியும்னு நீ நினைக்கிறியா? நீ இந்த பூமிக்கு வர்றதுக்கு முன்னாடியே உன் மேல பாசம் வச்சவ டா. என்னால என் மகனை எப்பவும் வெறுக்க முடியாது” என்றவரை இன்னமும் இறுக்கி அணைத்துக் கொண்டவன் கண்ணீர் துளிகள் தவம் இருந்து வரமாக அவனை தாங்கிய மணி வயிற்றில் கரைந்து போனது.


தோளை தாண்டி வளர்ந்து நிற்கும் மகனின் இந்த கண்ணீர் துளிகள் அவர் பாலூட்டிய நெஞ்சை பத பதைக்க வைத்தது.


“உனக்கு பிடிக்கலைனா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் பா. நீ எதுக்கும் வருத்தப்படாத” என்று காரணம் தேடி ஆறுதல் சொல்லும் அன்னையை விழி உயர்த்தி பார்த்தான்.


தீப்பிழம்புகளாய் சிவந்து இருந்த விழிகளை துடைத்து விட்டவர்,


“இதுக்காக சின்ன குழந்தை மாதிரி அழுவியா? உனக்கு பிடிக்காத எதையும் அம்மா நடக்க விட மாட்டேன்” என்று ஆறுதல் சொன்ன அன்னையை விரக்தியாக பார்த்துக் கொண்டிருந்தான்.


“நான் அப்பாகிட்ட பேசுறேன். நீ எப்பவும் போல இரு. ட்ரஸ் மாத்திட்டு வா சாப்பிடலாம்” என்று சொல்லி அவன் தலையை ஆதுரமாக வருடி சென்றார்.


சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவன் மனமோ,


‘இத்தனை நாள் நான், நானா தானே இருந்தேன். ஒரு மூனு நாள்ல என்னை மொத்தமா நொறுக்கிட்டல்ல. இருபத்தி எட்டு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையை என்னால தொடர முடியாதா என்ன? உன்னால முடியும் சரண். அந்த கோட்டான் நினைப்ப நீ அழிச்சி தான் ஆகணும்” என்று பொறுமையாக தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.


உடை அணிந்து உடலை மறைத்திடும் மனிதனால் உள்ளத்தை மறைத்திட முடியுமா என்ன?


அவன் அன்னை அவனிடம் சொன்னது போலவே கல்யாணத்தை நிறுத்தி விடும்படி சௌந்தரிடம் சொல்லிக் கொண்டிருக்க,


“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்ற அமைதியான குரலில் மொத்த குடும்பமும் திரும்பி பார்த்தது.


தன்னை தானே தேற்றிக் கொண்டு நின்றிருந்தான் சரண்.


“இல்ல ப்பா உனக்கு விருப்பம் இல்லைனா” என்று இசைமலர் மகன் மனம் நோகும் என்று மறுத்து பேச,


“நான் பண்ணிகிறேன் மா” என்று மட்டும் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் சொல்லிக் கொண்டே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அவரை பார்க்க,


அவன் சம்மதம் சொன்னாலும், உயிர்ப்பை தொலைத்த விழிகளின் வலியை அந்த அன்னையால் உணர முடிந்தது.


கவலையாக அவனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தவர் தோளில் கரம் பத்தித்த சௌந்தர், போ என்று கண்ணை காட்டிட,


அவரும் தலையை ஆட்டிக் கொண்டே அவனுக்கு உணவை எடுத்து வைக்க ஆர்மபித்தார்.


பெயருக்கு சிறிதை கொறித்து விட்டு கை கழுவிய மகனிடம்,


“இன்னைக்கு வேலை இருக்கா ப்பா? ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” என்று தான் சொன்னார் அவர்.


அவனை வெளியே அனுப்பவே பயமாக இருந்தது அவருக்கு.


“நான் நல்லா தான் மா இருக்கேன்” என்று சொல்லி கொண்டே கார் சாவியை எடுத்தவன் வெளியேற முனைய,


“விஷ்ணு வரலையா? நீ தனியா ட்ரைவ் பண்ண வேண்டாம். இரு நான் கால் பண்றேன்” என்று மேஜை மீது கிடந்த அவர் போனை எடுக்க போக,


அவர் கைகளை பிடித்து தடுத்த சரண்,


“நான் பார்த்துக்கிறேன் மா” என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறி இருந்தான்.


அந்த கோளாறு கோட்டானை நினைக்க கூடாது, காண கூடாது என்று பயணம் முழுவதும் அவள் நினைவுகளை மட்டுமே சுமந்து மனதை திடமாக வைக்க முயன்றவன் தோற்று போயே ஸ்டுடியோவும் வந்து சேர்ந்தான்.


ஆனால் உள்ளே நுழைந்த சமயம் அவனை மீறி அவன் கண்கள் வாட்ச்மெனை நோக்க,


அவரோடு நின்று கதையடித்து சிரிக்கும் விஷ்ணு உருவம் தான் மனக்கண்ணில் வந்து போனது.


ஸ்டியரிங் வீலை பிடித்திருந்தவன் கரங்கள் அழுத்தமாக அதில் பதிய, மனதின் எண்ணங்களுக்கு அணைப் போட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.


ரெக்கார்டிங் ரூமில் நுழைந்து கொண்டவன், நான்கு மணி நேரம் உள்ளே யாரையும் அனுமதிக்கவும் இல்லை. யாரையும் பார்க்கவும் விரும்பவில்லை.


பிடித்த வேலையை வெறுக்க வைத்தது பிடித்த உறவினை பிடித்து தள்ளும் பிடிவாத குணம்.


இசையை நாடியவனை இன்னும் இன்னும் இம்சித்தாள் அவள்.


இருக்கையில் தளர்ந்து அமர்ந்திருந்தவன் இடது கையில் இருந்த கித்தார் தரையோடு உறவாடுக் கொண்டிருக்க, நாற்காலியில் பின் தலையை அடித்து கொண்டிருந்தவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் அவன் அனுமதியின்றி வெளியேறி கொண்டிருந்தது.


காதலை உணர்ந்த நொடியே அதற்கு சவக்குழி தோண்டினானே. முதல் காதல் தோல்வியை அவனால் கடந்து வரவே முடியவில்லை.


நட்சத்திராவை பிடிக்கும். அவன் பொற்றி பாதுக்காக்க துடிக்கும் பொக்கிஷம் அவள். அவள் புன்னகையையும், சந்தோசத்தையும் யாரும் பறித்திட கூடாது என்றே தன் கைக்குள் வைக்க நினைத்தான்.


அவளுக்காக உள்ளம் பதறும். உடல் உருகாதே.


ஆனால் இந்த கோட்டான்… அவன் உடலையும், உள்ளத்தையும் ஒவ்வொரு நொடியும் தீயிலிட்டு பொசுக்குகிறாளே.


அடுத்த கட்டம் நோக்கி நகர மறுத்தது அவளில்லா அவன் உலகம்.


அவன் நிலை அதுவாக இருக்க,


மதியம் கடந்த பிறகும் விஷ்ணுவும் இன்னும் வேலைக்கு வரவில்லை. உள்ளே சென்று பூட்டிக் கொண்டவனும் கதவை திறக்கவில்லை.


ரெக்கார்டிங் ரூம் வாசலில் நின்று, அறை கதவையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த வேலவன்,


“அவனையும் இன்னும் காணோம். இவரும் என்னவோ போல இருக்கார். ஒருவேளை நேத்து நைட்டே ஆள தீர்த்து கட்டி எங்கேயாவது பொட்டலம் கட்டிட்டாரா?” என்று கண்டமேனிக்கு யோசித்தவன்,


தன் செல் போனில் கொலைகுற்ற செய்திகளை தான் தடவிக் கொண்டிருந்தான்.


‘எந்த நியூஸ்ம் இன்னும் வரலயே’ என்று மாரிக்கே போன் போட்டு, “நீ சேர்த்துவிட்டு ஆள் இன்னும் வேலைக்கு வரல’ என்று புகார் சொன்னான்.


மதியம் மூன்று மணி கடந்த பிறகும் சரண் இன்னமும் அறையை விட்டு வெளியே வராது இருக்க,


வேலவன் தான் “சார் வீட்ல இருந்து சாப்பாடு அனுப்பி இருக்காங்க. கொஞ்சமாவது சாப்பிடுங்க” என்று உள்ளே சென்றான்.


உள்ளே நுழைந்த வேலவனிடம் அவன் கேட்டது என்னவோ,


“விஷ்ணு வந்துட்டானா?” என்று தான்.


“இல்ல சார் உடம்பு சரியில்லையாம்” என்று சொன்னதும் பதறியே போனான்.


“ஏன் என்னாச்சி?” என்று கேட்டுக் கொண்டே மனதிற்கு போட்டு வைத்த கட்டுப்பாடுகளை உடைத்து, அவன் கைகள் தானாக அவள் எண்ணிற்கு அழைத்து இருந்தது.


“பெரிசா ஒண்ணுமில்ல சார். காய்ச்சல் தான்” என்றாலும் இவன் மனம் நிலைக் கொள்ளவில்லை.


இரண்டு மூன்று முறை அழைத்தான். அழைப்பு முழுதாக சென்று அணைந்தது.


“இருங்க சார் நான் போன் அடிச்சி பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே வேலவன் அழைக்க,


முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்று இருந்தாள்.


அவனை தவிர்க்க நினைக்கிறாளா? அவனால் நம்பவே முடியவில்லை.


இங்கே அவளுக்காக ஒருவன் உருகி கொண்டிருக்கிறான். அவன் அழைப்பையே உதாசீன படுத்துகிறாள்.


விஷ்ணுவின் நலன் பற்றி விசாரித்துக் கொண்டே, சார் பேசணும் சொன்னார் என்று போனை சரணிடம் நீட்ட,


வாங்க மறுத்து தலையை அசைத்தவன் மனமோ அவன் கோட்டான் மீது கொலை காண்டில் தான் இருந்தது.


வேலவனே பேசிவிட்டு அணைத்திருக்க,


“ஹி இக்னோர் மை போன் கால்” என்று தான் கோபமாக கேட்டான் சரண்.


“அப்படி இருக்காது சார்” என்ற வேலவன் வார்த்தைகளை அவன் மனம் ஏற்க தயாராகயில்லை.


“அது எப்படி அவன் என் போன் எடுக்காம இருக்கலாம்? திமிரு பிடிச்சவன்” என்று தான் திட்டிக் கொண்டான்.


அன்றைய தினம் அப்படியே கழிய, கடினப்பட்டு தன் மனதுக்கு வேலியிட்டவன், விஷ்ணுவின் நினைவை அழிக்கவே, நட்சத்திராவோடு நெருக்கம் காட்ட முயன்றான்.


அடுத்த நாளே நட்சத்திரா முன்னே வந்து நின்றவன்,


“நட்சு வெளிய போலாமா?” என்று கேட்டான்.


கண்கள் மின்ன பார்த்தவள்,


“ஷாப்பிங் போலாமா? நீங்க தான் செலவு பண்ணனும்” என்று தான் சொன்னாள் அவள்.


“சரி” என்று அவன் தலையாட்டிட உற்சாகமாக அவனோடு கிளம்பி சென்றாள்.


வண்ண வண்ண சித்திரங்களாக அவள் எண்ணங்கள் மட்டுமே இதய அறை முழுவதும் அலங்கரித்திருக்க,


வந்தவர் போனவர் தங்கி செல்ல இதயம் என்ன சத்திரமா?


அவளே துடிப்பான பிறகு வேறொரு உறவை ஏற்க துணியுமா காதல் உள்ளம்?


 
Status
Not open for further replies.
Top