இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமொர் தெய்வமுண்டோ?
அத்தியாயம் 4
ஐந்தரை அடி உயரத்தில், அதே ஒல்லியான உடல்வாகு, அதே கோதுமை நிறம். ஒரு மாதம் முன்பு பார்த்ததை விட மாற்றம் என்றால் அந்த கரையான் கரம்பிய மண்டையாக தான் இருக்கும்.
மண்டையை சுற்றி ஒட்ட வெட்டியிருந்த முடியோ, முன்னுச்சி முடிகளை வாரி இழுத்து குட்டி கொண்டை போடும் அளவிற்கு இப்போது தாராளமாக வளர்ந்திருந்தது.
தன் அறையில் அமர்ந்திருந்து, சிசிடிவியை ஆராய்ந்து கொண்டிருந்த சரண் விழிகளில் மாரியுடன் பைக்கில் இருந்து இறங்கிய விஷ்ணு பதிய,
ஏன்? எதற்கு? என்று சிந்திக்க கூட அனுமதிக்காத மூளை கோபத்தை தான் முதலில் கொட்டியது.
அதன் பிறகே ‘இவன் எதுக்கு இங்க வந்தான்? இவனை தான் என் கண்ணுலயே படக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல, எதுக்கு திரும்ப திரும்ப வந்து நிற்கிறான்?’'
ஏதோ விஷ்ணுவை நேரில் பார்த்து எச்சரித்த பிறகும், அடமாக விஷ்ணு வந்து அவன் எதிரே நிற்பது போல் பிதற்றிக் கொண்டிருந்தான்.
வெளியே விஷ்ணுவை பார்த்த வேலவன் எண்ணமும் இதுவாகவே இருக்க,
அவனுக்கும் கொஞ்சம் அல்லல் தான். ‘இவனை பார்த்தா சார் கோபப்படுவாரே” என்று அரண்டு தான் சரண் அறையை நோக்கி ஓடி வந்தான்.
“சார்…” என்று தயக்கமாக சரணை அழைத்தபடி உள்ளே நுழைந்த சமயம், சரண் விழிகளோ அழுத்தமாக மானிடரில் விஷ்ணு பிம்பத்தில் தான் பதிந்து இருந்தது.
எஜமானுக்கு ஏற்ற சேவகனாக, “நானே ஏதாவது காரணம் சொல்லி அனுப்பி வச்சிடுறேன் சார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று அவனே முடிவெடுத்து வெளியேற முனைய,
“அவனை உள்ள வர சொல்லு” என்றான் சரண் அழுத்தமான குரலில்.
“சார்…” என்று வேலு அதிர்ந்து திரும்பி பார்க்க,
ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து கொண்டே விழிகளை வேலவன் பக்கம் திருப்பிய சரண்,
“ஐ ஃபேஸ் டூ மை ஃபியர்” என்றான் அழுத்தமாக.
“இன்னும் ஒரு மாசத்துல எனக்கும், நட்சுவுக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க. இந்த நிமிஷம் வரை நட்சு எந்த மறுப்பும் சொல்லல. இப்போ இவன் எங்கிட்டயே வேலை கேட்டு வந்திருக்கான். என்னை முட்டாள்னு நினைச்சாங்களா ரெண்டு பேரும்?” என்றவன் குரலில் அத்தனை கோபம் இழையோடியது.
தான் ஏமாற்றபடுவதாக எண்ணியவன் கோபம் பெருக்கெடுத்தது என்னவோ விஷ்ணு மீது தான்.
“இந்த மனசு இருக்கே அது குரங்கு மாதிரி. ஒரு இடத்தில நிலையா நிற்காது, தாவிகிட்டே தான் இருக்கும்.
அவனை விட நான் எல்லா வகையிலும் பெஸ்ட்னு நட்சுக்கு புரிய வைக்க போறேன். அதுக்கு அவன் என் பக்கத்துல இருக்கணும். அவ முழு சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கணும். இல்லை எனக்கும் ஒரு கில்டி ஃபீல் இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் கணினி திரையில் விழிகளை பதிய விட்டவன்,
“அவனை உள்ள வர சொல்லு. என்ன பண்ணி நட்சுவ மயக்குனானு நானும் தெரிஞ்சுகிறேன்” என்றான் அதே அழுத்தமான பார்வையில்.
தன் தலைவனே சொன்ன பிறகு மறுபேச்சின்றி வேலவனும் வெளியே சென்று விஷ்ணுவை அழைத்து வர,
பளிச்சென்ற புன்னகையுடன் உள்ளே நுழைந்த விஷ்ணுவை பார்த்து கடமைக்கு கூட விரியவில்லை சரணின் இதழ்கள்.
“வணக்கம் சார்” நெற்றியில் ஒரு கையை வைத்து ஸ்கூல் பிள்ளை போல் சலியுட் அடித்து கொண்டே சொல்ல,
தூரத்தில் பார்த்தாலே தொற்றி கொள்ளும் கோபம், ஏனோ இந்த செய்கையில் சற்று தணிந்து தான் போனது.
‘உட்காரு’ என்று தனக்கு முன்னால் கிடந்த இருக்கையை விழிகளால் சுட்டிக் காட்டி அமர சொன்னான்.
விஷ்ணுவும் வந்து அமர,
“ரெசுயூம்” என்று சரண் கையை நீட்டிட,
வெறுங்கையை வீசிக் கொண்டு வந்த வேலையாலோ பேந்த பேந்த விழித்தது.
“சாரி சார் வர்ற அவசரத்துல எடுத்துட்டு வரல” என்று சொல்லவும்,
‘ஏன் டா ஒரு வேலைக்கு இன்டர்வியூ வந்தா ஒரு ரெசியும் கூட எடுத்துட்டு வர மாட்டியா? அது கூட இல்லாம என்ன டேஷ்க்கு வேலை கேட்டு வர்ற?’ என்று சரண் மனமோ விஷ்ணுவை திட்டிக் கொண்டிருக்க,
விஷ்ணுவுக்கு அதெல்லாம் ஒரு விசயமாகவே தெரியவில்லை.
முன்ன பின்ன ஏதாவது வேலைக்கு போய் இருந்தா தெரிஞ்சி இருக்கும். பைக் ரேஸ், மெக்கானிக் செட் என்று சுத்தி திரிந்ததால் வேறு பழக்க வழக்கம் தெரியாமல் தான் போனதோ என்னவோ..
“என்ன படிச்சு இருக்க?”
“மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இன்னும் எட்டு அரியர் தான் இருக்கு, அடுத்த செமஸ்டர்ல கிளியர் பண்ணிருவேன்” ஏதோ அவார்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருப்பது போல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு விஷ்ணு சொல்ல,
‘மக்கு பிளாஸ்டர்’ என்று உள்ளுக்குள் திட்டி கொண்ட சரண்,
“பேங்க் பேலன்ஸ் எவ்வளவு வச்சிருக்க?” என்று தான் அடுத்த கேள்வி கேட்டான்.
“அய்யோ பாஸ் இனி தான் அக்கவுண்டே ஓபன் பண்ணனும்.” என்மீது குற்றவியல் வழக்கு எதுவும் இல்லை ரேஞ்சில் சொல்ல,
ஏளனமாக இதழ்களை வளைத்துக் கொண்ட சரண், ‘நாலு பேங்க்ல நாற்பது கோடிக்கும் மேல வச்சிருக்கேன் டா’ என்றவன் மனமோ தன்னை உயர்த்தி விஷ்ணுவை மட்டம் தட்டி கொண்டது.
“சொந்த ஊர்?” என்று அடுத்த கேள்வி வர,
“அய்யோ சொந்தமா ஊர் வாங்குற அளவுக்கு அம்மாம் பெரிய ஆள் இல்லை பாஸ்” என்று சட்டென அவனையே கலாய்த்த முட்டைகோஸ் மண்டையை பார்த்து சரண் முறைக்க,
ஆள் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டது.
“இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்கிட்ட வச்சிக்காத, நான் ரொம்ப ஸ்ட்ரிட்” என்றவனை பார்த்து வேலவனுக்கே சிரிப்பு வந்து விட்டது.
‘டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்கிறாரா? கல்யாணம் பண்ண கேட்கிறாரா?’ என்ற சந்தேகத்தில் வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தான்.
“சொந்த வீடாவது இருக்கா?” என்று சரண் அல்பமாக பார்த்துக் கொண்டே கேட்க,
“சொந்த வீடு மாதிரி…” என்றவனை புரியாமல் பார்த்து வைத்தான் சரண்.
“பொறம்போக்கு இடம் பாஸ். காலத்துக்கும் இருந்துக்கலாம். அனுபவிச்சிக்கலாம், ஆன உரிமை கொண்டாட முடியாது” என்று உள்ளதை சொன்ன நல்லுள்ளத்தையும்,
காதல் கொண்ட மனது ‘இந்த லட்சணத்தில உனக்கு லவ்வு கேட்குது’ என்று தான் திட்டியது.
“சரி, வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?”
“நானும் அம்மாவும் மட்டும் தான். ஏன் பாஸ் ரேசன் கார்டு ஏதும் வாங்கி தர போறீங்களா?” என்று மீண்டும் கலாய்த்த விஷ்ணுவை சரண் விழிகளை சுருக்கி முறைக்க,
“சாரி பாஸ். நீங்க என் இஸ்டிடி கேட்டுட்டு இருந்தீங்களா, அதான் ஒரு சந்தேகத்தில கேட்டுட்டேன்” என்று விளக்கம் வேறு கொடுக்க,
“சும்மா உன்ன வேலைக்கு எடுப்பாங்களா? என் உயிரையே உன்னை நம்பி தான் ஒப்படைக்க போறேன். நீ எப்படினு நான் தெரிஞ்சிக்க வேணாம்” என்றான் சரண் சிடுசிடு குரலில்.
“வேலை தருவீங்கன்னா என்ன வேணா கேளுங்க பாஸ். உங்களுக்கு உரிமை இருக்கு” என்று கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த விஷ்ணுவிடம் அதற்கு பிறகு என்ன கேட்க என்ற மனநிலையில்,
“நாளைக்கு காலையில வந்து ஜாயின் பண்ணிக்க” என்று முடித்து விட்டான்.
வேலை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் முகம் கொள்ளா புன்னகையுடன் விஷ்ணு சரணை ஏறிட்டு பார்க்க,
இப்போதும் அவன் முகத்தில் புன்னகை கிலோ என்ன விலை? என்ற பாவம் தான்.
உம்மென்று இருந்தவன்,
“உன்னை டெம்ரவரியா தான் வேலைக்கு எடுக்கிறேன். எனக்கு எப்போ பிடிக்கலைனாலும், ஏன்? எதுக்குனு கேட்காம இடத்தை காலி பண்ணனும்” என்று கட்டளையிட்டே வேலைக்கு எடுத்தான்.
வேலை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் விஷ்ணுவும், அவன் சொன்னதற்கெல்லம் மண்டையை ஆட்டி வைக்க,
சரணோ, ‘நட்சுவே ச்சீனு சொல்லி உன்னை விரட்டுற அளவுக்கு பண்றேன் பாருடா’ என்று வீண் சபதம் வேறு எடுத்துக் கொண்டான்.
விலை கொடுத்து எலியை வாங்கி வீட்டுக்குள் விட்டு விட்டு, எலி பிடிக்க பிளான் பண்ணினானாம் ஒரு புத்திசாலி, அந்த கணக்கில் ஏதேதோ செய்து கொண்டிருந்தான் சரண்.
‘எது எப்படியோ எனக்கு வேலை கிடைச்சிடுச்சி’ என்ற கொண்டாட்டத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் தான் வேலை செய்ய போகும் ஆள் பற்றி தெரியாமல் போனது தான் விதியின் திருவிளையாடல்.