ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 19

“விஷு… பேட்லி ஐ மிஸ் யூ” என்று சொல்லிக் கொண்டே நட்சத்திரா மீண்டும் விஷ்ணுவின் கன்னத்தில் முத்தம் கொடுக்க,

அவள் அடியில் கிடந்தவளுக்கு கதிகலங்கி போனது. தலையை தூக்கி எட்டி சரணை தான் பார்த்தாள்.

ஆள் அனலாக கொதித்துக் கொண்டிருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.

‘அய்யோ! சும்மாவே அந்த ஆளு கார் வச்சி ஏத்த நினைச்சான். இவ என் உயிரை எடுக்காம விட மாட்டா போலவே!’ என்று கதறிய மனதை தட்டி சமாதானம் செய்தப்படி,

“முதல்ல மேல இருந்து எந்திரி, வாட்டர் பெட்டாட்டம் சொகுசா கிடக்க, மூச்சு முட்டுது” என்று அவளை தள்ளி விட்டுக் கொண்டே விஷ்ணு எழுந்து நின்றாள்.

பார்வையெல்லாம் அல்லளுடன் சரண் மேல் தான் இருந்தது.

அந்த பயம் தான் அருகே நின்றிருந்த புள்ளப்பூச்சி மீது கோபமாக திரும்பியது,“அறிவில்ல இப்படி தான் மேல வந்து விழுவியா?” என்று நட்சத்திராவை கடிந்து கொள்ள,

அவளோ, “ஏன் திட்டுற? பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல அதான் ஒரு எமோஷன்ல கட்டிப்பிடிச்சுட்டேன்” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்லிக் கொண்டே விஷ்ணு உடையையும், குனிந்து தன் உடையையும் பார்த்தாள்.

நாய்களோடு கொஞ்சி குலாவி குளிப்பாட்டி கொண்டிருந்தவள் உடை எப்படி இருக்கும்?

“ச்சைக்… அழுக்கு பண்ணிட்ட” என்று நட்சத்திரா முகம் சுழிக்க,

“யாரு? நானு?” என்று தான் கேட்டாள் விஷ்ணு.

“ஆமா. பாரு நல்ல ட்ரஸ் நாசம் ஆகிடிச்சி” என்று புலம்பிக் கொண்டே,

“வாஷ் ரூம் எங்க இருக்கு?” என்று அவள் பார்வையை சுழல விட்டு பின்னால் நின்றிருந்த அகிலனிடம் கேட்க,

அவனும் அனிச்சையாக வீட்டை நோக்கி கையை காட்டி இருந்தான்.

“நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன். எங்கேயும் ஓடிடாத உங்கிட்ட நிறைய பேசணும்” என்று சொல்லி கொண்டே வீட்டை நோக்கி சென்றவளை,

‘அப்படியே போய்டு திரும்பி வந்துடாத’ என்று தான் மனதில் திட்டிக் கொண்டாள் விஷ்ணு துர்கா.

நட்சத்திரா சென்றதும் தன்னை நோக்கி அடியெடுத்து வைத்து வரும் சரணை அல்லலுடன் பார்த்தவள்,

“அம்மா மேல சத்தியமா நானும் அவளும் வெறும் ப்ரெண்ட் மட்டும் தான் பாஸ்” என்று பகிரங்கமாக சொல்லிக் கொண்டே அப்ருவராக மாறி விட்டாள்.

அவளை நெருங்கியவனோ,

அதை விடுத்து “வேலைக்கு ஏன் வரல? சேரும் போதே நான் சொல்லாம வேலையை விட்டு நிற்க கூடாதுனு அகிரீமென்ட் போட்டு தானே சேர்த்தேன்” என்று மிரட்டலாக கேட்க,

“எல்லாம் உங்க நல்லதுக்காக தான் பாஸ். என்னால தானே நீங்க கல்யாணம் வேணாம் சொல்லியிருக்கீங்க. பாட்டி வேற ரொம்ப வருத்தபட்டாங்க. அதான் எதுக்கு வம்புனு நின்னுட்டேன். சத்தியமா எனக்கும் அந்த நட்டுவுக்கும் நடுவுல நீங்க நினைக்கிற போல எதுவும் இல்ல. நம்புங்க” என்றவளை நம்பிக்கை இல்லா பார்வை பார்த்தவன்,

“அப்போ ஏன் நான் போன் பண்ணா எடுக்கல?” என்று அடுத்த கேள்வி கேட்க,

“கடன்காரன் போன் போட்டா யாராவது எடுப்பாங்கலா?” என்று தான் திருப்பி கேட்டிருந்தாள் விஷ்ணு.

“எத! நான் உனக்கு கடன்காரனா டா?” என்று சட்டையை பிடிக்காத குறையாக சீறிக் கொண்டே அவளை நெருங்கி நின்று சரண் கேட்டிட,

“பின்ன யாராம்? அன்னைக்கு ஓட்டல்ல சாப்டதுக்கு காசு திருப்பி கேட்டா நான் எங்க போறது?” என்றவளை ஏக கடுப்பில் பார்த்தான் சரண்.

“என்னை பத்தி இப்படி தான் நினைச்சிட்டு இருக்கியா? நான் உன்னை அப்படியா பார்த்துக்கிறேன் சொல்லு?” என்று கடுப்பு பாதி காதல் மீதி கலந்த குரலில் அவன் கேட்க,

“வேற எப்படி பார்க்கிறீங்க?” என்று தான் கேட்டாள் விஷ்ணு.

அவன் எதுவும் பேசாது இரு நொடிகள் அவளை ஆழப் பார்வை பார்க்க,

அவளும் அவன் பதில் சொல்வான் என்று அவனையே குறு குறுவென பார்த்திருந்தாள்.

அவன் கண்களில் என் காதல் உனக்கு புரியவில்லையா என்ற தவிப்பு இருக்க, அவளோ இப்போ இவரு காசு கேட்டா எப்படி சமாளிக்கிறது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அந்த கவலையை கொடுக்காது, “ஓகே லீவ் இட்” என்று சொல்லி அந்த பேச்சுக்கு அவனே முற்றுப் புள்ளி வைத்தவன்,

“சரி திரும்ப வேலைக்கு வா” என்று அழைத்தான்.

“அய்யோ வோணவே வோணாம்” என்று பதறியது பச்சக்கிளி.

“ஏன்?” என்று சரண் வார்த்தைகள் அவசரமாக தடித்து வர,

“சரிப்பட்டு வராது பாஸ்” என்றவள் கண்களில் பயத்தை பார்த்தவன்,

நான் அவளை நம்புறேனோ இல்லையோ, உன்னை முழுசா நம்புறேன் என்றான்.

“இல்ல பாஸ் நமக்குள்ள ஒத்துவராது” என்று உறுதியாக மறுத்தவளை குண்டு கட்டாக தூக்கி கொண்டு போக ஆசை தான். ஆனால் இப்போதைய சூழ்நிலைக்கு அது முடியாதே.

“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன்” என்றான் அவளை தன்னோடு அழைத்து செல்ல வேண்டியே.

“மெய்யாலுமா” என்று விஷ்ணு அவனை சந்தேகமாக பார்த்து கேட்க,

“நம்பிக்கை இல்லைனா வீட்டுக்கு வந்து பாரு. எல்லா வேலையும் தடபுடலாக நடந்துட்டு இருக்கு” என்றான் சரண் கடுப்பை மறைத்த குரலில்.

“அப்போ நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என்று அவள் ஏக சந்தோசத்தில் கேட்க,

“நான் கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன அவ்வளவு சந்தோசம்?” என்று தான் கேட்டான் சரண் வேதனையான குரலில்.

“இல்லையா பின்ன, ஒரே நேரத்துல ரெண்டு பிரச்சனையை தலை முழுக போறேன்ல்ல” என்று அவள் சட்டென்று வாய் உளறிவிட,

“என்ன?” என்று தான் அதிர்ந்து கேட்டான் சரண்.

“ஹி… ஹி… நீங்களும், நட்சுவும் நிறைய பிள்ளை பெத்து சந்தோசமா இருக்கணும்னு சொன்னேன் பாஸ்” என்று சமாளித்தாள்.

‘அதுக்கு தான் இனி வாய்ப்பே இல்லைனு ஆகிப்போச்சே’ என்று மெதுவாக அவன் புலம்பியது அவளுக்கு கேட்கவே இல்லை.

அதை விடுத்து, “சரி இப்போவாது வேலைக்கு வருவ தானே” என்று சரண் கேட்க,

“ஹாங்… ஹாங்… சோரா கல்யாண வேலை கூட செய்திடலாம் பாஸ்” என்று துள்ளலாக சொல்லிக் கொண்டே காரை நோக்கி நடந்தவளை பார்த்து சரணுக்கு இதயமே வலித்தது.

அவனே நொந்து நூடுல்ஸ் ஆகி, உருகி, மருகி அவளை தேடி ஓடி வந்து நின்றால், ‘நீ கல்யாணம் பண்ணி ஒளிஞ்சா நிம்மதி’ என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருப்பவளை பார்த்து பார்த்து நெஞ்சு வெதும்பியது.

“ஏய் நில்லு” என்று அவள் கையை பிடித்து தடுத்தவன், “தலையெல்லாம் ஈரமா இருக்கு பாரு, இப்படியே வா வர போற? கொஞ்சம் கூட உன்னை கவனிக்கிறதே இல்ல நீ” என்று சொல்லிக் கொண்டே,

அங்கே அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கையில் இருந்து டவலை உருவி எடுத்தவன், “தேங்க்ஸ் ப்ரோ” என்று சொல்லிக் கொண்டே விஷ்ணுவின் தலையை துவட்டி விட ஆரம்பித்திருந்தான்.

அவன் செயல் அவளுக்குமே சங்கோஜமாக இருக்க,

“நானே துடைச்சிக்கிறேன் பாஸ்” என்று அவனிடம் இருந்து நழுவியபடி அவள் சொல்ல,

“பேசாம நில்லு” என்று அவளை பிடித்து நேராக நிறுத்தியவன், அவள் விழிகளை பார்த்துக் கொண்டே தலையை துவட்ட,

‘என்னாச்சி இந்த மனுஷனுக்கு? பேய் ஏதும் புடிச்சிடுச்சா? ஐயோ பயமா இருக்கே’ என்று அவன் அக்கறையில் அடிவயிற்றில் பிரளயமே வெடித்தது விஷ்ணுவுக்கு.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அகிலனுக்கும் சரணின் இந்த அக்கறையான கவனிப்பும், சற்று முன் விஷ்ணு அவனை பற்றி சொன்னதும் முன்னுக்கு பின் முரணாக தான் இருந்தது.

‘ஏதோ தப்பா இருக்கே!’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே,

“விஷுஷுஊஊஊ… என்னை காப்பாத்து” என்ற நட்சத்திராவின் அலறல் குரலில் மூவரும் அவ்விடம் விரைந்தார்கள்.

நான்கைந்து நாய்கள் ஒரு மரத்தை சுற்றி நின்று குரைத்து கொண்டிருக்க, நட்சத்திராவோ பயந்து போய் மரத்தின் மேல் கிளையில் நடுங்கிய படி கிளையை கட்டிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த தொனியை பார்த்து சத்தமாக சிரித்த விஷ்ணுவோ, “நட்டே அங்க இன்னா பண்ற? கீழ வா” என்று அழைக்க,

“முதல்ல இதுங்களை துரத்தி விடு” என்றாள் அவள்.

அவள் நிலை கண்டு பரிதாபம் கொண்ட அகிலனும் அங்கிருந்த நாய்களை துரத்தி விட்டு, “இப்போ கீழ வாங்க” என்று அழைத்தான்.

பயத்தில் ஒரு வேகத்தில் மரத்தின் மீது ஏறி விட்டாள். இப்போது அதன் உயரம் கண்டு அரண்ட மனமோ கீழே இறங்க முரண்டு பிடித்தது.

“இல்ல எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே இன்னும் இறுக்கமாக அந்த கிளையை கட்டிக் கொண்டிருந்தவளை பார்த்து வெடித்து சிரித்த விஷ்ணுவோ,

“அதுக்குனு அங்கேயே இருக்க போறியா? என் கையை பிடிச்சிட்டு கீழ இறங்கி வா” என்று அவளை நோக்கி கையை நீட்டியவள் கையை வேகமாக மடக்கி விட்டபடி இருவருக்கும் நடுவே வந்து நின்றான் சரண்.

விஷ்ணு மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொன்ன நம்பிக்கை நம்பியோ, அவளை யாரும் தீண்டுவதை கூட பார்க்க முடியாது குறுக்கே வந்து விழுந்து தடுத்தான்.

“நட்சு… என் கையை பிடிச்சிட்டு மெதுவா இறங்கி வா” என்று அவன் கை கொடுக்க,

“ம்ஹிம் எனக்கு பயமா இருக்கு மாமா” என்று அவள் உதட்டை பிதுக்கி அழுவதற்கே தயாராகி விட்டாள்.

அவள் மேல் ஈர்ப்பு இல்லை, காதல் இல்லை தான். ஆனால் அளவுகடந்த பாசம் இருக்கிறதே. அவள் முகம் சுணங்கினாள் கூட இவன் இதயம் வலிக்குமே.

“ஒன்னுமில்ல டா, பயப்படாத இட்ஸ் ஈஸி, முதல்ல அந்த கிளையில இருந்து எழுந்து கீழ இருக்கிற கிளைல கால வை, அப்புறம் என் கையை பிடிச்சுக்கோ, நான் உன்னை கீழ விழாம பிடிச்சிப்பேன். என்னை நம்பு” என்று அவன் சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்ல,

அவன் மீது நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் சிலநேரங்களில் மனிதனின் பயம் நம்பிக்கையை புறம் தள்ளி விடுகிறதே.

“இல்ல…” என்று அழவே ஆரம்பித்து விட்டாள்.

“ஏய் நட்டே இன்னாத்துக்கு சின்ன புள்ளையாட்டம் ஒப்பாரி வச்சினு இருக்க, நீயா தான மேல ஏறின கீழ இறங்க தெரியாத உனக்கு?” என்று விஷ்ணு அவளை கடிந்து கொள்ள,

“அவங்களே பயந்து போய் இருக்காங்க நீ வேற ஏன் திட்டுற?” என்று நட்சத்திரவுக்காக வக்காலத்து வாங்கியது என்னவோ அகிலன் தான்.

“இருங்க நான் ஏணி எடுத்துட்டு வரேன்” என்றவன் ஏணி எடுத்து வந்து மரத்தில் சாய்த்து நிறுத்தி, “இப்போ வாங்க” என்று அழைக்க,

அதற்கும் உடன்பட்டாளில்லை அவள்.

“இல்லை. ஏணியோட சரிஞ்சி கீழ விழுந்துடுவேன்” என்று அவள் அழ,

“இருங்க நான் மேல வரேன்” என்று சொல்லிக் கொண்டே ஏணியில் ஏற இருந்த அகிலன் நெஞ்சில் கையை வைத்து தடுத்த சரணோ,

“நானே போய் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி அவனே மேலே ஏறி நட்சத்திரா இடையை பற்றி தூக்கி கொண்டே கீழே இறங்கினான்.

சரணுக்கு அவள் வேண்டாம் தான். அதற்காக எவனிடமோ அவளை விட்டு விட்டு கை கட்டி வேடிக்கை பார்க்க அவன் மனம் அனுமதிக்காதே.

சரண், நட்சத்திராவை கல்யாணம் செய்து கொண்டாலும், இல்லை என்றாலும் அவர்கள் உறவு எப்போதும் மாறா ஒன்றே. அவள் மீது அவன் காட்டும் அன்பும், அக்கறையும் எப்போதும் மாறாது. எப்போதும் அவள் அவன் பொறுப்பானவள் தான்.

அகிலன் கூட சரண் அவனை தள்ளி நிறுத்தியதை எண்ணி அலட்டி கொள்ளவில்லை. மனிதாபிமானத்துடன் உதவ முயன்றான். அவன் உதவி அவ்விடம் தேவையில்லை என்றதும் மரியாதையாக ஒதுங்கி கொண்டான்.

நட்சத்திராவோடு கீழே இறங்கிய சரண், “ஆர் யூ ஓகே” என்று கேட்க,

அவள் இருந்த பயத்தில் அவனுக்கு பதில் கூட சொல்லாது, தாயிடம் ஆறுதல் தேடும் சேயாக அவனை அணைத்து கொள்ள, அந்த நிமிடம் அவனுக்கு அந்த அணைப்பு தவறாக தோன்றவில்லை. சரண் கரங்களும் மேலெழும்பி, “ஒண்ணுமில்ல டா. நீ நல்ல இருக்க” என்று சொல்லி ஆதுரமாக அவள் தலையை வருடி தான் விட்டது.

அவர்கள் இருவரையும் மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவோ,

“கப்புள்ஸ் நடுவில நாம எதுக்கு நந்தி மாதிரி நின்னுட்டு, நீ வா டாக்டரே நாம போவோம்” என்று செல்ல முயன்றவள் கையை பற்றி கொண்ட சரணோ,

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல” என்று அவளை முறைத்து கொண்டே சொன்னவன், ஒரு கையில் நட்சத்திராவையும், மறுகையில் விஷ்ணுவையும் பிடித்து கொண்டே அங்கிருந்து சென்றான்.

மூவரையும் கவனித்துக் கொண்டிருந்த அகிலனோ, சரணின் செயல்களை யோசனையாக பார்த்தபடியே அவர்கள் பின்னால் வந்தான்.

சிறிது நேரத்தில் இயல்புக்கு திரும்பி இருந்த நட்சத்திரா, “விஷு இந்த இடம் சூப்பரா இருக்கு. நாம ரீல்ஸ் ஷூட் பண்ண நிறைய இடம் கூட பார்த்து வச்சிருக்கேன். இன்னைக்கு ஒரு நாலைஞ்சி வீடியோ ஷூட் பண்றோம்” என்று சொல்லிக் கொண்டே வந்தவளை சலிப்பாக பார்த்தவள்,

“ஏற்கனவே எடுத்த வீடியோக்கே நீ காசு தரல” என்று அவள் நினைவு படுத்த,

“அதுக்கு தான் வியூஸ்சே போகலையே அப்புறம் எங்க இருந்து காசு வரும்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ கேட்டபடி செஞ்சி கொடுத்தேன். அத்தோட என் வேலை முடிஞ்சி போச்சி. பேசின படி காசு கொடு” என்று விஷ்ணு கறாராக கேட்க,

இருவருக்கும் நடுவே நடந்து வந்த சரணுக்கு இருவரின் பேச்சும் சலிப்பாக தான் இருந்தது.

“இது நியாயமே இல்ல. இன்னும் ஒரு நாலு வீடியோ பண்ணி கொடு இந்த முறை ஏமாத்தாம காசு கொடுக்கிறேன்” என்றவள் சரணை ஓரம் தள்ளி, நடுவே நுழைந்து விஷ்ணு கையை பிடிக்க போக,

ஆள் கவனமாக அலேக்காக அவளை தூக்கி தனக்கு மறுபுறம் விட்டிருந்தான்.

“டிஸ்டர்ப் பண்ணாத கொஞ்சம் நகரு மாமா” என்று சொல்லி கொண்டே அவள் மீண்டும் விஷ்ணு அருகே வர முயல,

“எதுவா இருந்தாலும் இந்த பக்கமே நின்னு பேசு” என்றவன் கறார் பேச்சில் ஆள் பொஸசிவ்னஸில் புகைவது தெரிந்த விஷ்ணுவுக்கு அந்த பொஸசிவ் நட்சத்திரா மீது இல்லை அவள் மீது தான் என்பது புரியாமல் போனது.

சரணின் தவிப்பை கண்டு பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முயன்றபடி வந்துக் கொண்டிருந்தாள் விஷ்ணு.

பேசிக் கொண்டே வந்த நட்சத்திராவும் அப்போது தான் யோசனை வந்தவளாக,

“விஷு… உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே காரை நோக்கி ஓடிட,

அவளை புருவம் சுருக்கி பார்த்த சரணும், அவள் நோக்கம் புரிந்து கொண்டு, “நானும் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு முன்னாள் வேகமாக காரை நோக்கி சென்றிருந்தான்.

இருவரையும் வித்தியாசமாக பார்த்துக் கொண்டே நின்றிருந்த விஷ்ணு அருகே வந்து நின்ற அகிலன்,

“ரெண்டு பேரும் உன்மேல ரொம்ப பாசமா இருக்காங்க போல?” என்று கேட்டான்.

அவன் பக்கம் விழியை கூட திருப்பாது, சரணையும், நட்சத்திராவையுமே பார்த்துக் கொண்டிருந்தவள்,

“அது தான் எனக்கு பீதியாவுது டாக்டரே. இந்த நட்டு எப்பவும் இப்படி தான் நட்டு கழண்ட போல சுத்தும். ஆனா இந்த பாஸ் ஏன் இன்னைக்கு இப்படி நடந்துக்கிறார்னு புரியமாட்டேங்குதே” என்று அவள் யோசனையாக சொல்லிக் கொண்டே திரும்பி அகிலனை பார்க்க,

அவனோ கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ இன்னாத்துக்கு இப்போ சிரிக்கிற” என்று விஷ்ணு சீற,

“ஒருவேளை உன்னை லவ் பண்றாரோ என்னவோ?” என்றவன் வார்த்தையில் விழி பிதுங்கி வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“வாய கழுவு டாக்டரே, உன்ன எவ்வளவு நல்லவன்னு ஊருக்குள்ள சொல்லி வச்சிருக்கேன். நீயே இப்படி புரளிய கெளப்பி விடுற? சந்தேகமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாம். அதுங்க ரெண்டையும் பாரு, ஜோடினா அப்படி இருக்கணும். நட்டு கொஞ்சம் லூசா இருந்தாலும், ரொம்ப நல்ல பொண்ணு டாக்டரே. எவனாவது கிளியாட்டம் பொண்ணு பக்கத்துல இருக்கும் போது, கீரிப்பிள்ளையாட்டம் யாரையாவது பார்ப்பானா சொல்லு?” என்று தான் கேட்டாள்.

“உன்னை நீயே குறைச்சு மதிப்பிடுற. நீ பொண்ணுங்கிறதையே சில நேரம் மறந்துடுற, எனக்கு என்னமோ உன் பாஸ்க்கு கிளியை விட கீரிப்பிள்ளைய தான் பிடிச்சு இருக்குனு தோணுது” என்று சொல்ல,

“சைக்கிள் கேப்ல நீயே என்னை கீரிப்பிள்ள சொல்ற பார்த்தியா?” என்று அவள் அவனை குறை சொல்ல,

அவள் குற்றச்சாட்டு பார்வையில் அட்டகாசமாக சிரித்துக் கொண்டவன்,

“எனக்கும் இந்த கீரிப்பிள்ளைய பிடிக்குமே” என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தை பிடித்து கிள்ள,

“ஹே என்ன பண்றீங்க?” மூக்கு வியர்த்து ஓடி வந்தான் சரண்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20

விஷ்ணுவை அகிலனிடம் இருந்து விலக்கி நிறுத்திய சரண், அவன் கிள்ளிய கன்னத்தை தடவி விட்டபடி,

“தொடாம பேசுங்க ப்ரோ” என்று தான் அவன் மீது கோபத்தை வெளிப்படுத்த முடியாது அமைதியான குரலில் சொன்னான்.

“சாரி” என்ற அகிலனும், அடக்கப்பட்ட சிரிப்புடன், ‘பார்த்தியா?’ என்பது போல் விஷ்ணுவுக்கு கண்ணை காட்ட,

அவளோ ‘சும்மா இரு டாக்டரோ… நீ வேற அடுத்த ஏழரைய கூட்டாத’ என்று தான் முறைக்க முயன்று தோற்று போய் பாவமாக பார்த்து வைத்தாள்.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த நட்சத்திராவோ, “விஷு… இது உனக்காக தான்” என்று சொல்லிக் கொண்டே அவளுக்காக வாங்கி வந்த சாக்லேட்களை அவளிடம் கொடுத்தாள்.

“ஐ! எனக்கா?” என்று கண்களை விரித்து கேட்டு கொண்டே விஷ்ணுவும் அதை வாங்கி கொள்ள, அடுத்த நொடி, “அப்படி என்ன வாங்கி இருக்கா?” என்று அவள் கையில் இருந்து அதை பறித்து இருந்தான் சரண்.

கவரை பிரித்து பார்த்த சரண், “எனக்கும் இந்த சாக்லேட்ஸ் ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லிக் கொண்டே சிலதை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்து கொண்டவன்,

“நீங்களும் கொஞ்சம் எடுத்துக்கோங்க ப்ரோ” என்று அகிலனிடம் நீட்ட,

அவனோ “நான் சாக்லேட் சாப்பிடுறது இல்ல” என்று சொல்லி சரண் சதி திட்டத்தில் கொல்லி வைத்தான்.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது. நீங்க சாப்பிடலைனா என்ன? ஹாஸ்பிடலுக்கு வர்ற நாய், பூனைக்கு கொடுங்க” என்று சொல்லி அவன் கையில் சிலதை திணித்தவனை பார்த்து பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முயன்ற படி அகிலன் நின்றிருக்க,

“மாமா குடுங்க. நீங்களும் தானே வாங்கினீங்க. அதை எடுத்து சாப்பிடுங்க” என்று திட்டிக் கொண்டே நட்சத்திரா சரணிடம் இருந்து அந்த கவரை பறிக்க முயல,

அவள் வாயில் ஒரு துண்டு சாக்லெட்டை திணித்தவன்,

“ஷேரிங் இஸ் கேரிங் ஆஃப் அவர் லைஃப்” என்று அடித்து விட்டான்.

“அதுக்கு நீங்க வாங்கிட்டு வந்தத பங்கு வைங்க. எதுக்கு நான் விஷுக்காக வாங்கிட்டு வந்ததை பங்கு வைக்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவனோடு சண்டையிட,

“அது அப்படி தான்” என்று சொல்லி கொண்டவன்,

“இப்போ எனக்கு ஒரு துண்டு சாக்லெட்டாவது கொடுப்பீங்களா? மாட்டீங்களா” என்று இருவரின் சண்டையில் காண்டாகி விஷ்ணு கத்த,

“இது உனக்காக மட்டும் தான்” என்று புன்னகை முகமாக தான் வாங்கி வந்த சாக்லேட்களை அவளிடம் கொடுத்தான் சரண்.

‘இன்னாயா நடக்குது இங்க? டைகர் எதுக்கு டைரிமில்க்கு விளம்பரம் ஓட்டுது தெரிலயே’ என்று அல்லலுடனே அதை வாங்கி கொண்டாள் விஷ்ணு துர்கா.

“இது உனக்கு” என்று சொல்லி நட்சத்திரா வாங்கி வந்த சாக்லேட்டில் ஒன்றை அவளுக்கே பிய்த்து வாயில் கொடுக்க,

அனலாக அவனை முறைத்து கொண்டே தங்தங்கென்று பூமி குலுங்க அங்கிருந்து சென்றாள் அவன் அத்தை மகள்.

“அப்புறம் நாங்களும் கிளம்புறோம் ப்ரோ” என்று சொல்லி கொண்டே சரண், விஷ்ணு கையை பிடித்தபடி அங்கிருந்து செல்ல,

“ஒரு நிமிஷம் பாஸ்” என்று அவனை நிறுத்தியவள், பின்னால் திரும்பி

“டாக்டரே… கிளினிக் போகணும் சொன்னீங்கல்ல, வாங்க நான் ட்ராப் பண்றேன்” என்று அகிலனிடம் சொன்னவள், முன்னால் திரும்பி

“போற வழியில அவரையும் இறக்கி விட்டு போயிடலாம்” என்று சரணிடம் அதன் பிறகு தான் அனுமதி கேட்டாள்.

அவனோ “நான் என்ன கால் டாக்சியா வச்சி இருக்கேன்” என்று மெதுவான குரலில் திட்ட,

விஷ்ணு முகம் சூம்பி போனது.

முன்னால் நடக்க இருந்தவன், அவள் தன்னுடன் வராததை உணர்ந்து திரும்பி அவள் முகத்தை பார்த்தான்.

அதற்குள் அகிலனே “பரவாயில்லை நான் டாக்சி புக் பண்ணிக்கிறேன்” என்று அங்கிருந்தே குரல் கொடுக்க,

அவள் முகத்தை பார்த்துக் கொண்டே, வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் திரும்பி அகிலனை பார்த்தவன்,

“போற வழி தானே. டிராப் பண்ணிட்டே போறோம் வாங்க” என்று பெருந்தன்மையாக அழைத்தவன், போதுமா? என்பது போல் விஷ்ணுவை பார்த்தான்.

அவளும் முகம் மலர சிரித்து கொண்டே “தாங்க்ஸ் பாஸ்” என்று சொல்லி விட்டு துள்ளல் நடையுடன் காரை நோக்கி சொல்ல,

சரணும்,வேண்டா வெறுப்பாக “நாங்க வெயிட் பண்றோம் வாங்க” என்று அகிலனிடம் சொல்லி விட்டே சென்றான்.

இங்கே நட்சத்திராவோ, நாய்களை பார்த்து பயம் இருந்தாலும், ஓரக்கண்ணால் அவைகளை நோட்டம் விட்டபடி, அவளுக்கு பிடித்த இடங்களில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டவள் விஷ்ணு வந்ததும்,

“வா ரீல்ஸ் பண்ணலாம்” என்று போனில் சில வீடியோகளை எடுத்து காட்டினாள்.

சலிப்பாக அதை பார்த்த விஷ்ணுவோ,

“இப்போ தான் புரியுது உனக்கு ஏன் வியூஸ் போக மாட்டேங்குதுனு. ஆல்ரெடி மக்கள் பார்த்து பழகி சலிச்சு போன விசயத்தை இந்த மாதிரி காப்பி பண்ணி போட்டா? எப்படி பார்ப்பாங்க. ஏதாவது புதுசா யோசி நட்டே” என்று சொல்லி கழண்டு கொள்ள,

“புதுசா வா?” என்று கண்களை உருட்டி யோசித்த நட்சத்திரா,

“புதுசா என்ன பண்ணலாம்? நீயே சொல்லேன்” என்று அவளிடமே ஓடி வர,

“ஹாங்… எல்லாத்தையும் நானே யோசிச்சு, நானே செய்றதுக்கு, நீ இன்னாத்த்துக்கு இருக்க? உனக்கு வேணும்னா நீ தான் கஷ்டபடனும். நோகாம நொங்கு தின்ன நினைச்சா, நோ என்ட்ரீ ஆகிடுவ” என்று பெரிதொரு கருத்து கணிப்பு சொல்லி விட்டே என்னை தொந்தரவு பண்ணாத என்ற ரேஞ்சில் ஓடி விட்டாள்.

“புதுசா என்ன பண்ணலாம்?” என்று தாடையை தட்டி யோசித்து கொண்டிருந்தவள் கண்களில் அங்கே உடல் ஊனமுற்ற நிலையில் சுத்தி திரியும் நாய்கள் கண்ணில் பட,

‘காமெடி வீடியோ போட்டேன் கண்டுக்கல, காபி கேட் வீடியோ போட்டேன் ஏறெடுத்தும் பார்க்கல, இனி சென்டிமென்ட்ல இறங்கிட வேண்டியது தான்’ என்று வாயெல்லாம் புன்னகையுடன் அவைகளை பார்த்தவள், பாவமாக முகத்தை வைத்துக் கொண்டே, அவைகளை வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.

கிளினிக் போக கிளம்பி வந்த அகிலன், நட்சத்திரா வீடியோ எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து,

“என்ன பண்றீங்க? இவங்களை வீடியோ எடுக்க அனுமதி கிடையாது” என்று சொல்லி அவள் கையில் போனை பிடுங்கி அதை டெலிட் செய்து மீண்டும் அவள் கையிலேயே கொடுத்தான்.

இத்தனை நேரம் அம்பியாக இருந்தவன், திடீரென அந்நியன் அவதாரம் எடுக்க, மிரண்டு போன மங்கையோ,

“ஏன் கூடாது? அதுங்க என்ன பெர்மிஷன் இல்லாம வீடியோ எடுத்தாங்கனு கோர்ட்ல கேஸா போட போகுது?” என்று நக்கலாக கேட்க,

“அவங்க சார்பா நான் போடுவேன். பிளீஸ் உங்க சுயநலத்துக்காக அடுத்தவங்க அவலத்தை காட்சி பொருளா மாத்தாதீங்க” என்று விட்டு அவன் சென்று விட,

“ம்கும்… ஓவர் சீன் போடுறார். ஒரு வீடியோ தானே எடுத்தேன்” என்று இதழை சுழித்து அவனை திட்டிக் கொண்டே அவளும் கார் அருகே வந்தவள் முன்னிருக்கையில் விஷ்ணு அருகே அமர கதவை திறக்க,

“நீ பின்னாடி ஏறிக்கோ நட்சு” என்று வந்து நின்றான் சரண்.

“நான் ஏன் பின்னாடி ஏறனும்? நீங்க பின்னாடி உட்காருங்க. எனக்கு விஷு கூட பேசணும்” என்றாள் அவள்.

“பின்னாடி உட்கார்ந்து கூட பேசலாம்” என்று சரண் சொல்ல,

“ம்ஹிம்… நீங்க பின்னாடி உட்காருங்க மாமா” என்று இருவரும் சிறு பிள்ளைகள் போல சண்டை போடுவதை மார்க்கமாக பார்த்து வைத்த விஷ்ணுவோ,

“ரெண்டு பேரும் நல்ல கம்பர்டபுளா பின்னாடி உட்கார்ந்து வாங்க” என்று சொல்லிக் கொண்டே, பின்னிருக்கை கதவை திறந்து இருவரையும் பிடித்து உள்ளே தள்ளியவள்,

“நீ முன்னாடி உட்காரு டாக்டரே” என்று அகிலனுக்கு முன்னிருக்கை கதவை திறந்து விட,

இங்கே பின்னிருக்கையில் இருந்த இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே அமர்ந்திருந்தார்கள்.

அகிலனை அவன் கிளினிக்கில் இறக்கி விட்டு, மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் விஷ்ணு முதலில் பாட்டியை தான் தேடி ஓடி வந்தாள்.

“டார்லீ ஈஈஈ” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவரை அணைத்து கொள்ள,

அவருக்கும் அவள் மீண்டும் வந்ததில் சந்தோசமே.

“அடே பையா… நீ வங்துட்டியா? அன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டல்ல” என்று கேட்டுக் கொண்டே அவள் காதை பிடித்து திருக,

“ஆ ஆ ஆ வலிக்குது விடுங்க” என்று அவரிடம் இருந்து விலகி நின்றவள்,

“எப்படி நான் சொன்ன போல கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வச்சிட்டேனா?” என்று கெத்தாக காலரை தூக்கி விட்டு கேட்க,

“பெரிசா பெருமை பட்டுக்காத, அவன் சந்தோசமா ஒன்னும் ஓகே சொல்லல. ஏதோ கட்டாயத்துல தான் ஓகே சொல்லி இருக்கான். இப்போ கொஞ்ச நாளா அவன் அவனாவே இல்லை. ஏதோ பறிகொடுத்தவன் போல தான் சுத்திட்டு இருக்கான். எல்லார்கிட்டயும் பேசுறான், சிரிக்கிறான். ஆனா அதுல ஒரு உயிர்ப்பு இல்லை. அவன் சந்தோசமா இருக்கணும். இந்த கல்யாணத்துல அவனுக்கு விருப்பம் இல்லைனு தான் தோணுது” என்று ஜானகி பாட்டி தான் யூகித்த விசயங்களை சொன்னார்.

“இன்னா டார்லீ? அவரே கல்யாணத்துக்கு ஓகே சொன்ன பிறகு நீங்க ஏன் ஏதேதோ கற்பனை பண்ணி மனச போட்டு குழப்பிக்கிறீங்க? உங்க பேரனுக்கு நட்சுவ ரொம்ப பிடிக்கும். நானும் அவளும் லவ் பண்றோம் நினைச்சு தான் வேணாம் சொல்லி இருக்கார்” என்று அவள் அவன் மனவோட்டத்தை பட்டென்று சொல்லி விட,

“ நீங்க ரெண்டு பேரா?” என்று பெரிதாக அதிர்ந்து கேட்டார் ஜானகி பாட்டி.

“ஹ்ம்ம்… இந்த பொம்பளை பிள்ளைங்க லவ்” என்று விஷ்ணு பாவமாக முகத்தை வைத்து சொல்ல,

“அவன் ஏன் டி அப்படி நினைக்க போறான்?” என்று கேட்டவர்,

“அவன் அப்படி நினைக்கிறானு உனக்கு எப்படி தெரியும்?” என்று அடுத்த கேள்வி கேட்க,

“அவரே தண்ணியடிசிட்டு ஒளரினார்” யோசிக்காமல் அவனை மாட்டியும் விட்டு விட்டாள்.

“சரண் தண்ணி அடிப்பானா?” என்று ஜானகி மீண்டும் அதிர,

“ஆமா… யாருக்கும் தெரியாம” என்று கையை வாய் அருகே வைத்து அவள் ரகசியமாக சொல்ல,

பாட்டிக்கு அவள் சொல்லும் எதையும் நம்ப முடியவில்லை.

பொய் சொல்ல அவளுக்கு தேவையும் இல்லை என்று புரிந்து கொண்டவர்,

ஓ என்று மட்டும் சொல்லி கொண்டார்.

“நான் தெளிவா அவர்கிட்ட சொல்லிட்டேன். அந்த மாதிரி லவ்வெல்லம் இல்லைனு. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க. எப்பாடு பட்டாவது உங்க பேரன் கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டியது என் பொறுப்பு” என்று அவள் நம்பிக்கையாக சொல்ல,

இன்னும் பாட்டி முகம் தெளியவில்லை.

“இன்னும் என்ன? அதான் நான் இருக்கேன்ல எப்படி ரெண்டு பேரையும் கோர்த்து விடுறேன் மட்டும் பாருங்க” என்று சொல்லி அவரை சிரிக்க வைத்தாள்.

“அட நீ திரும்பி வந்துட்டியா மா? நீ இருந்தா கல்யாண வேலைக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்னு நினைச்சுட்டே இருந்தேன்” என்று மேகலா சொல்லிக் கொண்டே வர,

விஷ்ணுவும், “அதுக்காக தானே திரும்பி வந்து இருக்கேன்” என்றாள் உற்சாகமாக.

“சொல்லுங்க ம்மா என்ன பண்ணனும்?” என்று கேட்டவள் அவர்கள் குடும்பத்திற்கு அலாவுதீன் பூதமாகவே மாறி விட்டாள்.

அன்றிலிருந்து தனக்காக உருகும் காதலனின் கல்யாண வேலைகளில் பிஸியாகி போனாள் விஷ்ணு துர்கா.

விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இன்றி காலம் தன் கடமைகளை சிறப்பாக செய்திட,

திருமண நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.

இதற்கு நடுவே சரண் தெளிவான முடிவு ஒன்றையும் எடுத்து விட்டான்.

“சரியோ? தவறோ? விஷ்ணு தான் என் துணை. இங்கே வாழ முடியாது என்றால், அன்று மருத்துவர் சொன்னது போல் அவனை கண் காணா தேசம் கடத்தி சென்று விட வேண்டியது தான்” என்று தீர்மானித்தவன்,

“எந்த நாட்டுக்கு போகலாம்?” என்று கூட திட்டம் தீட்டி விட்டான்.

“இந்த மாதிரி உறவு நார்மலைஸ் ஆ இருக்கிற இடத்துக்கு போனா நாங்க வித்தியாசமா தெரியமாட்டோம். சோ எங்க போகலாம்? நம்ம ஆளு வேற நாலு வேலை சோறு தான் கேட்பான். சோத்துக்கு பஞ்சம் இல்லாத இடமா இருக்கணும்” என்று உலக உருண்டையை சுழற்றி அவன் இறுதியில் கண்டு பிடித்த இடம் தான் தாய்லாந்து.

“ஹாங் அது தான் கரெக்ட்டா இருக்கும். பாங்காக் போகலாம். அப்போ நான் தாய் லாங்குவேஜ் கத்துக்கணும். அங்க போய் பாடி பொழச்சிக்களாம்” என்று சரண் தேவையில்லாத ஆணிகளை தான் பல இரவுகள் புடுங்கி கொண்டிருந்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அன்று அனைவரும் திருமணத்திற்கு உடை எடுக்க பிரபல ஜவுளி கடைக்கு வந்திருந்தார்கள். வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தன் எஜமானிகளின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்து வந்திருந்தார்கள்.

முதலில் நட்சத்திராவுக்கு முகூர்த்த பட்டு எடுத்து விடலாம் என்று அனைவரும் அவளுக்கு புடவை தேர்ந்தெடுக்க குழுமி இருந்தார்கள்.

“விஷு… இந்த சாரி எப்படி இருக்கு?” என்று நட்சத்திரா அடர் நீல நிற பட்டு ஒன்றை தன் மீது போட்டு கொண்டே கேட்க,

“அய்யோ நட்டே! இதெல்லாம் நீ என்னான்டா இல்ல, அவரான்ட தான் கேட்கணும். இரு அவர இழுத்துனு வரேன்” என்றவள்,

ஓரமாக சேரில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்த சரண் அருகே வந்தவள்,

“இங்க என்ன பண்றீங்க? வந்து உங்க பொண்டாட்டிக்கு சாரி செலக்ட் பண்ணி கொடுங்க பாஸ்” என்று அவனை இழுத்துக் கொண்டு நட்சத்திரா அருகே விட்டாள்.

அவள் இழுத்து கொண்டு விட்ட ஒரே காரணத்திற்காகவே சரணும் கடமையே என அங்கே நின்றிருந்தான்.

“மாமா இது ரெண்டுல எது நல்லா இருக்கு?” என்று இருப்புற தோளிலும் இரண்டு சாரிகளை தூக்கி போட்டு அவன் விருப்பம் கேட்க,

அவனோ, “உனக்கு பிடிச்சுருந்தா ரெண்டையும் எடுத்துக்கோ” என்று தான் சொன்னான்.

“எப்படி? முகூர்த்தத்துக்கு ரெண்டு சாரி கட்டிட்டு வந்து உட்காருவாளா? தள்ளு டா என் மருமகளுக்கு நானே செலக்ட் பண்றேன்” என்று இசைமலர் மகனை தள்ளி விட்டு இடைபுகுந்து கொள்ள,

ரொம்ப நல்லது என்று எண்ணிக் கொண்டே எதிரே ரேக்கில் அடுக்கி வைத்திருந்த பட்டு புடவைகளில் அவன் விழிகள் பதிந்தது.

புடவை அணிந்து, தலையில் மல்லிகை சரம் சூடி, நாணம் கொண்டு தன்னை பார்க்கும் விஷ்ணுவின் பெண் உருவம் மனதில் தோன்றி மறைந்தது.

அவன் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? சரணால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

விழிகளை உயர்த்தி தன் முன் இருந்த கண்ணாடி வழியே தனக்கு பின்னால் நின்றிருந்த விஷ்ணுவை பார்த்தான்.

ஜவுளி கடை பொம்மை முன்னால் நின்றிருந்தாள். அந்த பொம்மைக்கு அணிந்திருந்த செயற்கை முடி அவள் தோளில் உறவாடுவது போன்றதொரு பிம்பம் அவனுக்கு.

அதிலும் அந்த கண்ணாடியில் படிந்திருந்த சிறு கரை வேறு அவள் நெற்றியில் குட்டி கருப்பு நிற பொட்டாக தெரிய,

மாயலோக மங்கையாக தான் அந்த நொடி அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

“அந்த சாரி எடுங்க” என்று கை நீட்டி மயில் கழுத்து நிறத்தில் நீலமும், பச்சையும் கலந்திருந்த புடவையை எடுக்க சொன்னவன், விஷ்ணுவுக்கு தான் புடவை தேர்ந்தெடுத்தான்.

மனநிறைவாக அந்த புடவையை வருடிக் கொண்டவன் இதழ்கள் மெலிதாக விரிந்து கொள்ள,

சாத்தான் மனமோ, “உன் வாழ்க்கையில லே-ஹிப் சாரி, ஜாக்கெட் ரோப் ரொமான்ஸ்க்கு எல்லாம் வாய்ப்பே இல்ல. எதுக்கு தேவை இல்லாம ஆசையை வளர்த்துக்கிற” என்று அவனை வாரி விட்டது.

ஏக்க பெரு மூச்சுடன் அந்த புடவையை ஓரம் போட்டவன்,

“நான் இங்க எதுக்கு தேவையில்லாம நிற்கணும். எனக்கு ட்ரஸ் எடுக்க போறேன்” என்று சொல்லி விட்டு, விஷ்ணுவையும் தள்ளிக் கொண்டே ஆண்கள் பிரிவிற்கு வந்து விட்டான்.

“பாஸ் உங்களுக்கு ட்ரஸ் எடுக்க என்னை எதுக்கு இழுத்துட்டு வறீங்க?” என்று அவள் கடுப்பாக கேட்க,

“அங்க பொம்பளைங்க கூட உனக்கு என்ன வேலை?” என்று தான் திருப்பி கேட்டான் அவன்.

‘ஏன் நானும் பொண்ணு தானே!’ என்று மனதில் எண்ணிக் கொண்டவள், “ஒரு சப்போட்டுக்கு” என்று இழுக்க,

“உனக்கு சாரி பத்தி ஏதாவது தெரியுமா?” என்று அவன் கோபமாக கேட்க,

ம்ஹிம் என்று தான் மண்டையை வேகமாக ஆட்டினாள் விஷ்ணு.

“அப்போ மூடிட்டு என்கூட வா. உனக்கும் ட்ரஸ் எடுத்து தரேன்” என்று இருவருக்கும் உடை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டான்.

இங்கே ஜானகி பாட்டியோ தன் பேரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து கொண்டு தான் இருந்தார்.

நட்சத்திராவை அவன் பார்க்கும் பார்வையில் கள்ளம் இல்லை வெறும் அன்பு மட்டும் தான் இருந்தது.

அதுவே கண்ணாடி வழியே விஷ்ணுவை அவன் பார்த்த கள்ள பார்வையில் காதலை கண்டு கொண்டவர் உள்ளம் பதறி தான் போனது.

அவன் எடுத்து பார்த்த புடவையை அவர் கைகள் இப்போது வருடிக் கொண்டிருக்க,

தன் குடும்பத்தை ஒருமுறை திரும்பி பார்த்தார். அத்தனை பேர் முகத்திலும் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது.

அவன் சந்தோசம் அவள் தான் என்றால், அந்த சந்தோசம் மற்றவர்கள் புன்னகையை பறித்து விடுமோ என்ற பயமும் வந்தது.

அதை பற்றி யாரிடமும் அவர் எதுவும் சொல்லவில்லை. உறுதியாக தெரியாத ஒரு விசயத்தை பூகம்பமாக்க அவருக்கு விருப்பமில்லை.

அந்த நொடி தன் மனதை சமாதானம் செய்து கொண்டே பேத்திக்கு உடை தேர்வு செய்ய அவர்களோடு இணைந்து கொண்டார்.

இங்கே ஒரு டஜன் சட்டைகளை அள்ளி விஷ்ணு கையில் கொடுத்திருந்த சரண், அவளோடு டிரயல் ரூமில் நுழைந்திருந்தான்.

குறுகலான அந்த குட்டி அறையில் அவனோடு தனியாக நிற்பதே அவளுக்கு சங்கடமாக தான் இருந்தது.

“பாஸ் நீங்க போட்டு பாருங்க நான் எதுக்கு இங்க நிற்கனும்?” அவன் கொடுத்திருந்த சட்டைகளை வாரி சுருட்டி பிடித்தபடி அவள் கேட்க,

“ஹாங்கர் இல்ல. புது டிரஸ் கீழ வச்சி அழுக்காகிட கூடாதுல, சட்டை தான மாத்த போறேன். உன்கிட்ட இல்லாததா என்கிட்ட இருக்க போகுது? ஓவரா பண்ற” என்று அவளை திட்டிக் கொண்டே, தான் அணிந்திருந்த சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக திறக்க,

இங்கே விஷ்ணுவுக்கு இதயம் பட படவென அடிக்க ஆரம்பித்து விட்டது.

சட்டென்று கண்களை மூடி திரும்பி நின்று கொண்டாள்.

அவள் செயலை புருவம் சுருக்கி வித்தியாசமாக பார்த்தவன்,

“ரொம்ப தான் வெட்க படுறான்” என்று இதழ் கடையில் ஒளித்த புன்னகையுடன் சொல்ல,

“நான் நட்ட வர சொல்றேன்” என்று அங்கிருந்து ஓட இருந்தவள் இடையை பற்றி தூக்கி கண்ணாடியில் சாய்த்தவன், வெற்று மார்பு அவள் நெஞ்சோடு உடைகளை அள்ளி சுருட்டி பிடித்திருந்த கரத்தில் உரசி நிற்க,


வியர்த்து போனாள் பெண்ணவள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21



வெற்று தேகத்தொடு தன்னை நெருங்கி நின்றவன் நெருக்கத்தில் பெண்ணவள் விதிர்வித்து போய் நிற்க,


தடுமாறிய அவள் விழிகளையும், நெற்றி ஓரத்தில் பூத்து நின்ற வியர்வை துளிகளையும் ரசனையாக பார்த்தவன்,


தான் கழட்டி வைத்திருந்த சட்டையை அவள் கையில் இருந்த உடை குவியல் மீது வைத்து விட்டு, புது சட்டையை எடுத்து போட்டான்.


அவன் சும்மா இருந்தாலும், இது வாய் சும்மா இருக்காது போல,


“இந்த உள் பனியன்லாம் போடுற பழக்கம் இல்லையா பாஸ்” என்று அவன் மேனியை தயக்கமாக பார்த்துக் கொண்டே விஷ்ணு கேட்க,


விழி சுருக்கி அவளை பார்த்தவன்,


“தேவையில்லனு தோணுச்சு. ஜிம் போய் எவ்வளவு மெனக்கெட்டு உடம்ப மெயின்டெய்ன் பண்ணி வச்சிருக்கேன். எதுக்கு அத போட்டு பாடி ஸ்டிரட்ச்சர் மறைக்கணும்?” என்று தான் திருப்பி கேட்டான்.


‘ம்கும்… அதுவும் சரி தான். ஒரு நிமிஷத்துல எனக்கே மூச்சடைக்க வச்சிட்டார்’ என்று முணு முணுத்து கொண்டவள்,


“அப்புறம் இத மட்டும் ஏன் போட்டுக்கிட்டு, இதையும் கழட்டி போட்டு, பிரீ ஷோ காட்டிட்டு சுத்த வேண்டியது தானே” என்று அவள் சட்டையை சொல்ல, வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவன்,


“அப்படி எல்லாம் எல்லாருக்கும் காட்ட முடியாது. உனக்கு மட்டும் வேணா பிரீ ஷோ காட்டுறேன்” என்றதும்,


எத? என்று அரண்டு தான் விழிகளை விரித்து அவனை பார்த்தாள்.


அவள் விரிந்திருந்த விழிகளை கள்ள சிரிப்புடன் பார்த்து கொண்டே,


“உன்கூட இருக்கும் போது வேணா ஷர்ட் போடுறது அவாய்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்” என்றான்.


அதில் இன்னும் பெரிதாக விரிந்து கொண்டது மையிடாத மையல் விழிகள் இரண்டும்.


அவளை ரசித்த அவன் விழிகள் இப்போது அவளை ஆராய்ந்து கொண்டே,


“ஆமா நீ ஏன் எப்பவும் செக்ட் ஷர்ட் மட்டுமே போடுற? பிளேன் ஷர்ட் போடுறது இல்லையே ஏன்?” என்று கேட்க,


“ஹ்ம்ம்… அது என் ஸ்ரச்சர நான் மறைக்க பாஸ்” என்றாள் இயல்பான குரலில்.


“எத மறைக்கணும்?” என்று விழிகளை சுருக்கி அவளை கீழிருந்து மேல் பார்த்தவன்,


“கரெக்ட் தான். நீ கொஞ்சம் அன் ஷேப்ட்ஆ தான் இருக்க. ஒல்லியா இருக்க. ஆன உடம்புல ஒருசில இடங்கள்ல எக்ஸ்ட்ரா சதை போட்டு இருக்கு. அது மட்டுமில்ல கையை நீட்டு” என்று சொன்னவன்,


அவனே அவள் கையை பிடித்து உள்ளங்கையை தொட்டு காட்டி, “கை ஹார்டா தான் இருக்கு. கையில இருக்கிற திடம் உடம்புல இல்லையே. ஒருசில இடங்கள் சாப்ட்டா இன்னும் சின்ன குழந்தை ஸ்கின் போல தான் இருக்கு” என்று அவன் உணர்ந்த மென் அங்கங்களை திருட்டு தனமாக பார்த்துக் கொண்டே சொல்ல,


அவன் விழிகள் மேயும் திசை உணர்ந்து இறக்கி பிடித்திருந்த உடை குவியலை சற்று மேலே தூக்கி பிடித்து தன்னை மறைத்து அவன் பாவைகளுக்கு தடைப் போட்டாள் பாவையவள்.


குரலை செருமி விழியை திருப்பி கொண்டவன், “யூ ஆர் 22. அதுக்கு ஏத்த போல இருக்க வேணாமா?” என்று கேட்டு கொண்டே,


“என் கைய பிடி” என்று சொல்ல,


அவளும் வாரி சுருட்டி வைத்திருந்த உடைகளோடு, விரல் நீட்டி அவன் கையை பிடித்தாள்.


“ஹார்டா இருக்கா?” என்று கேட்க,


“ஹ்ம்ம்” என்று மண்டையை ஆட்டிக் கொண்டாள்.


“இங்க தொட்டு பாரு” என்று உரமேறிய தன் நெஞ்சை காட்டிட,


“அய்யயோ அதெல்லாம் வேணாம். நான் ஒத்துக்கிறேன் நீங்க ஹல்க் தான். நான் நமத்து போன அப்பளம் தான்” என்று ஜகா வாங்கியவள் கையை அவனே வம்படியாக பிடித்து மேல் இரு பட்டன்கள் திறந்திருந்த ஷர்ட் நடுவே தெரிந்த தன் வெண்ணிற மேனியில் விரல்களை அழுத்தி பதிய வைத்தவன்,


“இது எப்படி இருக்கு?” என்று கேட்டான்.


அவன் செயல்களில் பட படத்து நின்றவள்,


அவன் மார்பில் இருந்து விழிகளை நிமிர்த்தி சரண் விழிகளை பார்த்துக் கொண்டே,


“கொஞ்சம் இருப்பு போல தான் இருக்கு” என்றாள்.


திருப்திகரமாக புன்னகைத்துக் கொண்டவன்,


“உனக்கும் இது போல ஆகனும்னு ஆசை இல்லையா?” என்று கேட்க,


“எனக்கு எதுக்கு அப்படி ஆகணும்” என்று தான் யூ டர்ன் போட்டது சில்வண்டு.


“இப்போலாம் ஹீரோயின்ஸே சிக்ஸ் பேக் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீ என்னடானா?” என்று முகத்தை சுழித்தவனை விழியை தாழ்த்தி பார்த்தவள் முகமோ சூம்பி போனது.


“ஏன் இப்படி இருந்தா ஆகாதாமா?” என்று அவள் முகத்தை இறக்கி கொண்டு கேட்க,


“பிட்டா நல்லா இருந்தா ஒரு காண்பிடண்ஸ் வரும்ல” என்று சொன்னவன்,


சுருங்கிய அவள் முகத்தை பார்த்து, “உடனே ஏன் முகத்தை தொங்க போடுற? அதான் நான் இருக்கேன்ல, ஜிம் கூட்டிட்டு போய் உன்னை எப்படி மாத்துறேன்னு மட்டும் பாரு” என்று சொல்ல,


“ஏன் பாஸ் ஓவர் சதை போட்ட போலவா இருக்கு? எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே” என்று ஆராய்ச்சியாக தன்னை பார்த்துக் கொண்டே மெல்லிய குரலில் அவன் பக்கம் சரிந்து எம்பி அவன் காதில் கேட்டாள் விஷ்ணு துர்கா.


அவள் குரல் பேதம் அவன் உடலை சிலிர்க்க வைத்தது.


அவள் அருகாமையை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே, “உனக்கு எப்படி தெரியும்? பார்க்கிற எனக்கு தான் தெரியும்” என்றவன் பேச்சும், பார்வையும் எல்லை மீறுவதை உணர்ந்து கொண்டவள்,


“சரி பாஸ் அது அப்புறம் பார்த்துக்கலாம். நீங்க ட்ரெஸ் செலக்ட் பண்ணிட்டீங்கனா வெளிய போலாமா?” என்று அவன் பார்வையில் இருந்து எஸ்கேப் ஆக கேட்டாள்.


“அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். இந்த ஷர்ட் எப்படி இருக்கு?” என்று சரண் கையை விரித்து தான் போட்டிருந்த சட்டையை கேட்க,


“நல்லா இருக்கு பாஸ்” என்று உடனே பதில் வந்தது அவளிடம் இருந்து.


அதை கழட்டி விட்டு அடுத்ததை எடுத்து அவன் போட, இருவருக்கும் நாணம் தூரம் போனதோ என்னவோ! அவனும் இயல்பாக அவள் முன் உடை மாற்றினான். அவளும் அலட்டி கொள்ளாமல் தான் நின்றிருந்தாள் வெறும் உதவியாளினியாக மட்டும்.


இது என்று அவன் ஒவ்வொன்றாக போட்டு காட்டி கேட்க,


எல்லாவற்றுக்கும் மண்டையை ஆட்டி வைத்தது அவன் கோட்டான்.


“என்ன? எதையாவது ஒன்ன எடுத்து தொலனு எல்லாமே நல்லா இருக்குனு சொல்றியா?” என்று அவன் கோபம் கொள்ள,


“நீங்க எதை போட்டாலும் உங்களுக்கு அழகா தான் இருக்கு. அப்போ நல்லா இருக்குனு தானே சொல்வேன்” என்றவள் வார்த்தையில் கோபம் தணிந்து வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.


கீழ் இதழை பற்களுக்கு நடுவே மென்மையாக கடித்து வெட்க புன்னகையை மறைக்க முயன்றவன், அவள் முகம் காண்பதை முதல் முறை தவிர்த்தான் வெட்கத்தில்.


“சரி இதெல்லாம் எடுத்துக்கலாம்” என்று ஒரு சிலதை எடுத்துக் கொண்டவன், அவள் அளவுக்கு எடுத்து வைத்திருந்த சட்டைகளை விழியால் காட்டி, “இனி நீ போட்டு காட்டு” என்று சொல்ல தூக்கி வாரி போட்டது விஷ்ணுவுக்கு.


“எதெய்… போயா யோவ். நீ எனக்கு துணியே எடுத்து தர வோணாம்” என்று கதி கலங்கி சரணை இடித்து தள்ளிவிட்டு வெளியே ஓடியே வந்துவிட்டாள் விஷ்ணு துர்கா.


அவள் பதறியடித்து ஆள விடு டா சாமி ரேஞ்சில் ஓடியதை பார்த்தவன்,


“ஆம்பளைய கூட ஏன் டா இப்படி வெறிச்சி வெறிச்சி பார்க்கிற? அதான் பயந்து ஓடிட்டான்” என்று தன் பின் தலையை கலைத்து விட்டபடி வெட்க புன்னகையுடன் சரணும் வெளியே வந்தான்.


நட்சத்திராவுக்கு புடவை எடுத்து முடிய, சரணுக்கும் முகூர்த்ததிற்கு பட்டு வேஷ்டி சட்டை எடுத்த பிறகே மற்றவர்களுக்கு எடுத்தார்கள்.


அப்படி சரணின் தந்தை சௌந்தர் தன் மனைவியுடன் சேர்ந்து உடை தெரிவு செய்து கொண்டிருந்த சமயம், அவர் எடுத்த ஆடை மீது இன்னொரு கரம் வந்து பதிந்தது.


“யார் அது?” சற்று சலிப்பாக திரும்பி பார்த்தவர் விழிகள் ஆனந்தத்தில் விரிந்து தான் போனது.


“முரளி நீயா?” என்று அவர் வாயெல்லாம் புன்னகையுடன் கேட்க எதிரே நின்றிருந்த நபரை பார்த்து கேட்க,


அந்த நபரும், “உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? எப்படி டா இருக்க?” என்று தான் பாசமழையை பொழிந்தார்.


கல்லூரி நண்பர்கள் இருவரும். பலவருடங்கள் கழித்து நிகழ்ந்த எதிர்பாரா சந்திப்பில் குடும்பத்தை மறந்து தங்கள் பாலிய காலத்திற்கே சென்று விட்டார்கள்.


இருவரும் கழட்டிவிட்டு சென்ற அவர்கள் மனைவிமார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சினேகமாக புன்னகைத்து கொண்டு, தனி தனியாக தங்கள் இணைகளுக்கு உடை தெரிவு செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.


இங்கே நண்பர்கள் இருவரும் பழைய நண்பர்கள் பற்றிய நலன் விசாரிப்பு முடிந்து, மற்றவர்கள் தொழில் பற்றி விசாரித்து கொண்டே இறுதியில் அவரவர் குடும்பம் பற்றிய நலன் விசாரிப்பில் வந்து நின்றார்கள்.


“எனக்கு ஒரே ஒரு பையன் தான் டா. அவன் கல்யாணத்துக்கு ட்ரஸ் எடுக்க தான் ஃபேமிலியோட வந்து இருக்கேன்” என்று சௌந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,


இசைமலர், “ஏங்க ரிசப்ஷனுக்கு இந்த சூட் உங்களுக்கு ஓகே வா?” என்று கேட்டு கொண்டே அவர் அருகே வர,


“முரளி, அகில்க்கு இந்த ட்ரஸ் நல்லா இருக்கும்ல” என்று கேட்டுக் கொண்டே அவர் மனைவியும் அவர்கள் அருகே வந்தார்.


“நீ என்ன எடுத்து கொடுத்தாலும் எதுக்கு வீண் செலவு பண்றீங்கனு தான் கேட்க போறான். பேசாம பிளாட்பாரம்ல போட்டுருக்க நூறு ரூபா சட்டையில ரெண்டு எடுத்து கொடு மா. அது போதும் அவனுக்கு” என்று அவர் சலிப்பாக சொல்ல,


முகம் சுருங்கி போனது அவர் மனைவி கீதாவுக்கு.


“ஏன் டா அப்படி சொல்ற? பாரு தங்கச்சி முகமே வாடி போச்சு” என்று சௌந்தர் புதிதாக உறவாகி போன நண்பன் மனைவிக்கு வக்காலத்து வாங்கி வர,


“பின்ன என்ன டா. ஒரே ஒரு மகன். பரம்பரை சொத்து, நான் சம்பாதிக்கிறது எல்லாம் அவனுக்கு தான். ஆசைபட்டான்னு வெட்னரி டாக்டருக்கு படிக்க வச்சா, பிச்சைக்காரன் மாதிரி ரோடு ரோடா நாய் பிடிச்சிட்டு சுத்த்திட்டு இருக்கான். அவனோட பேஷன், ஆசைக்கு படிக்க வச்சாச்சி, கொஞ்சம் பிஸினஸ்ல உதவியா இருந்தா எனக்கும் பாரம் குறையும்ல” என்று அவர் தன் மன வேதனையை நண்பனுடன் பகிர்ந்து கொள்ள,


“சும்மா என் மகனை குறை சொல்லாதீங்க. அவன் நேர்மையா இருக்க நினைக்கிறான். நியாயம நடந்துக்கிறான். அது உங்களுக்கு பிடிக்கல. உங்க பிசினஸ் ஸ்டிரட்டஜி அவனுக்கு பிடிக்கல. அதான் விலகிட்டான்” என்று மகனுக்கு சப்போட் பண்ணி பேசினார் கீதா.


“நீ என்னைக்கு உன் மகனை விட்டு கொடுத்து இருக்க? ஊருக்கு நல்லவனா இருந்தா பத்தாது, பெத்தவங்களை மதிக்கிற புள்ளையாவும் இருக்கணும்” என்று முரளி மகனை திட்ட,


“என்ன டா பிரச்சனை?” என்று தான் கேட்டார் சௌந்தர்.


“இவர் பண்றது அவனுக்கு பிடிக்காது, அவன் நியாயம இருக்கணும்னு நினைக்கிறது இவருக்கு பிடிக்காது. பிழைக்க தெரியாதவன்னு சொல்லி எப்பவும் அவனை மட்டம் தட்டிட்டு இருந்தா? அவன் என்ன பண்ணுவான். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் சொல்லி வீட்ட விட்டு போய்ட்டான்” என்று கீதா வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல,


“நாங்க வாழ்றதே அவனுக்காக தானே டா. கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம தனியா காட்டுக்குள்ள அகோரி போல வாழ்றான்” என்று முரளியும் மகனை எண்ணி வருந்தினார்.


“ஒருநாள் அவனை எனக்கு அறிமுக படுத்தி வை. பையன் என்ன மைண்ட் செட்ல இருக்கான்னு நான் பேசி பார்க்கிறேன். நீ டென்ஷன் ஆகாத” என்று நண்பனுக்கு நம்பிக்கை அளித்தவர்,


“இசை கல்யாண பத்திரிக்கை ஏதாவது எடுத்துட்டு வந்தியா மா” என்று மனைவியிடம் கேட்டார்.


அவரோ, “அய்யோ இப்போ எதுவும் எடுத்துட்டு வரலையேங்க” என்று சொல்ல,


நமக்குள்ள எதுக்கு டா இந்த பார்மாலிட்டீஸ் என்று பெருந்தன்மையாக நண்பனிடம் சொன்னார் முரளி.


“அதெப்படி உன்ன விடுவேன். நாளைக்கே வீட்டுக்கு வந்து முறையா பத்திரிக்கை வச்சி அழைக்கிறேன்” என்றவர்,


“வர்ற பதினாறாம் தேதி என் பையனுக்கு கல்யாணம். கட்டாயம் இவனை கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு மா” என்று கீதாவிடம் சொல்ல,


அவரும், “கண்டிப்பா வர்றோம் அண்ணா” என்றார் புன்னகை முகமாக.


சௌந்தர் தன் குடும்பத்தை அவர்களுக்கு அறிமுகபடுத்தி வைக்க,


இனியதொரு சந்திப்பு நடுவே,


“நீ ரொம்ப அழகா இருக்கமா” என்று நட்சத்திராவை பாராட்டியவர்,


“வாழ்த்துக்கள் ப்பா” என்று சரணிடம் திருமண வாழ்த்து தெரிவித்துவிட்டே முரளி, கீதா தம்பதியர்கள் அங்கிருந்து விடை பெற்றிருந்தார்கள்.


அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, சரண் குடும்பமும் உடை எடுத்து கொண்டு கிளம்பி இருந்தார்கள்.


“நீங்க வீட்டுக்கு போங்கப்பா. எனக்கு ஸ்டூடியோல கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்த சரண், விஷ்ணுவோடு ரெக்கார்டிங் ஸடுடியோ வந்து சேர்ந்தான்.


அன்று அவன் முடித்து கொடுக்க வேண்டிய பாடல் ஒன்றை பாடி கொடுத்து விட்டு வெளியே வந்தவன், விழிகள் தன் வேலையாட்களை கூட்டு சேர்த்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த விஷ்ணு மீது தான் பதிந்தது.


இப்போதெல்லாம் சலிக்காமல் அவளை சைட் அடிக்கிறான். யார் என்ன நினைப்பார்கள் என்ற பயம் காதல் மயக்கத்தில் தூரம் போய் இருந்தது.


மூன்று மாதங்கள் முன்பு முதல் முறை அவளை பார்த்த போது இருந்த சரண் இப்போது இல்லையே. முற்றாக விஷ்ணு பித்தன் ஆக மாறி இருந்தானே.


அவள் வெளிப்புற தோற்றத்தில் கூட சிறிது மாற்றம் இருப்பது அவனுக்கும் தெரிந்தது.


முன்பை விட தலைமுடி கூட நன்றாக வளர்ந்து தான் இருந்தது. வாரி இழுத்து குட்டி குடுமி போடும் அளவுக்கு தோளுக்கு மேலே தான் பஃபென்று நின்றது.


“வர வர இந்த விஷ்ணுவை பார்க்கும் போது எனக்கு ஏன் பொண்ணு மாதிரியே ஃபீல் ஆகுது?” முதல் முறை அவளை பற்றி இதயம் சரியாக கணித்தது.


அதையும் சாத்தான் மனம்,


“நீ அவனை லவ் பண்ற. பொண்ணுன்னு நினைச்சு பார்க்கிற, அதான் பொண்ணு போல தெரியுறான். தப்பு உன்மேல தான். அவன் நார்மலா தான் இருக்கான்” என்று அவனை தான் குறை சொல்லி விட்டு உள்ளே சென்று மறைந்து கொண்டது.


“அப்படிங்கிற?” மனதின் பேச்சை கேட்டு அவனே பாதி முட்டாள் நிலையில் நின்றிருக்க,


அவனை முழு பைத்தியம் ஆக்கவே வந்து சேர்ந்தான் வேலவன்.


“என்ன சார் இங்கேயே நின்னுட்டீங்க? வீட்டுக்கு கிளம்பல?” என்று கேட்டுக் கொண்டே அவன் அருகே வந்தான் வேலவன்.


அவன் அருகே வந்ததும்,


“வேலு சட்டைய கழட்டு” என்று திடுதிப்புனு சரண் சொல்ல,


“எதுக்கு சார்” என்று அரண்டு போன வேலுவோ, இரண்டு கையையும் மார்புக்கு குறுக்கே வைத்து தன்னை மறைத்து கொள்ள,


“இது நார்மல் தான் ல்ல. திடீர்னு சட்டைய கழட்ட சொன்னா யாரா இருந்தாலும் பதற தான் செய்வாங்க ல்ல” என்று தான் சம்மந்தமே இல்லாமல் கேட்டான் சரண்.


“என்ன சார் ஆச்சி உங்களுக்கு? ஏன் ஏதேதோ உலறிட்டு இருக்கீங்க? கல்யாணம் நிச்சயம் ஆனா பிறகு ராத்திரி நேரம் அதிகமா வெளிய சுத்தாதீங்கனு சொன்னா கேட்டீங்களா? எந்த மோகினி அடிச்சிதுனு தெரியலையே! ஒரு மார்க்கமா பேசுறீங்க? நடந்துகிறீங்க” என்று வேலவன் பீதியாகி புலம்ப,


“அதெல்லாம் எதுவும் இல்ல டா” என்று சொல்லிக் கொண்டே அவன் தோளில் கை முட்டியை மடக்கி வைத்தபடி விஷ்ணுவை பார்த்தவன்,


“இப்போலாம் விஷ்ணுவ பார்த்தா எனக்கு பொண்ணு ஃபீல் வருது டா என்னவா இருக்கும்?” என்று வேற ஆளே கிடைக்காமல் அவசரத்திற்கு பிறந்த அணில் குட்டியிடம் சரண் சந்தேகம் கேட்க,


குபூக் என சத்தமாக சிரித்த வேலவன்,


“எந்த ஆங்கில்ல அவன் பொண்ணு போல உங்களுக்கு தெரியுறான்? கொஞ்சம் இருங்க” என்று கேட்டுக் கொண்டே,


“ஏய் விஷ்ணு” என்று வேலவன் கத்தி அழைக்க,


“இன்னா ண்னோ” என்று தான் அங்கிருந்து குரல் வந்தது.


“இந்த குரல்ல பெண்மைக்கான மென்மை உங்களுக்கு தெரியுதா?” என்று அவளை பார்த்துக் கொண்டே மெதுவாக சரணிடம் கேட்டவன்,


“இங்க வா” என்று அவளை அழைக்க,


அவளும் வீர நடை போட்டு அவர்களை நோக்கி வந்தாள்.


“இந்த நடையில உங்களுக்கு பொண்ணு ஃபீல் வருதா?” என்று அவன் மறுபடியும் கேட்க,


“சத்தியமா இல்ல” என்று தான் பதில் வந்தது சரணிடம் இருந்து.


“அப்புறம் என்ன சார” என்று அவன் சலிப்பாக கேட்க,


“இல்ல டா ஐ ஃபீல் தட்” என்று ஏதோ சொல்ல வந்தவன் குறுக்கே விழுந்து கண்ணை கட்டி தடுத்த வேலுவோ,


“தேவை இல்லாம எதையாவது யோசிச்சு மண்டையை குழப்பிக்காம போய் கல்யாணத்துக்கு ரெடியாகுற வேலைய பாருங்க சார். இனி கல்யாணம் முடிஞ்சா பிறகு தான் நீங்க ஸ்டூடியோ பக்கம் வரணும்” என்று அன்பு கட்டளை போட்டு அவனை அவனை அனுப்பி வைக்க முயன்றான்.


விஷ்ணு அருகே வந்ததும்.


“சார வீட்ல விட்டுரு” என்று சொல்ல


அவளும், “ஹ்ம்ம்… ஓகே” என்று தோளை குலுக்கி சொல்லிக் கொண்டே காரை நோக்கி செல்ல,


சரணும் அவளை ஆராய்ந்து கொண்டே அவள் பின்னால் சென்றான்.


காரில் ஏறியதும்,


“ஏன் ஹேர்கட் பண்ணல? முடி நல்லா வளர்ந்து இருச்சி” என்று தான் கேட்டான் சரண்.


“அம்மா வளர்க்க சொல்லுச்சு பாஸ் அதான் வளர்கிறேன்” என்றால் அவள் சாதாரணமாக.


“ஏன் உங்க அம்மாவுக்கு முடி நிறைய வச்சிருந்தா தான் பிடிக்குமா?” என்று அவன் அடுத்த கேள்வி கேட்க,


அவளும் ஆம் என்று தலையாட்டினாள்.


அவளை பற்றிய ஆராய்ச்சியை விடுத்து, அக்கறையில் இறங்கி இருந்தான் அன்பு காதலன்.


டாஷ் போர்டை திறந்து மருந்து பாட்டில் ஒன்றை எடுத்தவன், “இது உனக்கு தான்” என்று சொல்லி அவளிடம் கொடுக்க,


“இன்னாது இது?” என்று தான் அதை சந்தேகமாக பார்த்து கேட்டாள் விஷ்ணு.


“சத்து டானிக். நீ கொஞ்சம் வீக்கா இருக்க. ஹார்மோன் பிராப்ளம் கூட இருக்கும்னு தோணுது. அதான் எனக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்” என்று சரண் அவளுக்கு மீசை முளைக்கவில்லை என்பதை பற்றி சொல்ல,


விஷ்ணுவோ, “ஹக்காங் பாஸ். ஏ அம்மா கூட இத தான் சொல்லும். நல்ல சோத்து மூட்ட போல எவ்வளவு தின்னாலும் உடம்புல எதுவும் ஒட்டலனு” என்று அவள் தன் உடல் எடை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தாள்.


“இந்த டானிக் குடிச்சு பாரு. சரியாகலைனா டாக்டர் கிட்ட போகலாம்” என்று சரண் அதி யோசனையில் அம்மன் சல்லிக்கு பிரயோஜனம் இல்லாத தன் அக்கறையை அவள் மீது திணிக்க, அவளும் அவன் எண்ணம் புரியாது எல்லாவற்றிற்கும் மண்டையை ஆட்டி வைத்தாள்.


(இது எங்க போய் முடிய போகுதோ? ஆத்தருக்கே வெளிச்சம்… 😜😜😜🤭🤭🤭)
 
Last edited:
Status
Not open for further replies.
Top