ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்

பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

அத்தியாயம் : 5

ஒரு மாதம் முன்பு நடந்த அந்த பைக் ஆக்சிடன்ட்டிற்கு பிறகு விஷ்ணுவின் தாய் அன்னம்மா, “இனி ரேசு, மெக்கானிக் செட் பக்கம் போன நான் எங்கயாவது கண் காணாம போயிடுவேன்” என்று மிரட்டியே, நிம்மதியாக சுத்திட்டு இருந்த பிள்ளையை இம்மா பெரிய பிக்கல்ல இழுத்து விட்டிடுச்சு.

அது எதுவும் தெரியாத பச்ச மண்ணும் புது வேலை ஜோரில்,

“ம்மோய் எனக்கு வேலை கிடைச்சிடுச்சி” என்று காலரை தூக்கி விட்டு அன்னையிடம் சொல்ல,

“ஆஹ்… நிஜமா தான் சொல்றியா?” என்று கேட்டு கொண்டே விஷ்ணு அருகே வந்தார் அன்னம்மா.

“என்ன வேலை தங்கம்? மாசம் எவ்வளவு சம்பளம்?” என்று வாயெல்லாம் புன்னகையுடன் அவர் கேட்க,

“சிங்கர் சரண் தேவ் இருக்கார்ல ம்மா” என்ற விஷ்ணுவிடம்,

“அது யாரு?” என்று தான் தாடையில் கை வைத்து யோசனையாக முகத்தை சுருக்கி பார்த்தார்.

“அம்மோ… ***** பாட்டு பாடினாரே அவர் தான் மா. நம்ம மாரி அண்ணேல்ல, மாரி அண்ணே அந்த சார்கிட்ட தான் வேலைக்கு நிற்குது. அது தான் எனக்கும் வேலை வாங்கி கொடுத்திச்சி” என்று விஷ்ணு சொல்ல,

“பாட்டு பாடுரவன்கிட்ட உனக்கு என்ன வேலை?” என்று அன்னம்மா விழியை சுருக்க,

“அவர் டிரைவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்”

“அதுக்கு?” என்று அவர் முகத்தில் அனல் காற்று வீச,

அதை அறியா அப்பாவியோ,

“அவர் திரும்பி வர்ற வரை அந்த கார் ஐயா கண்ட்ரோல் தான்” என்று மடக்கி விட்டிருந்த ஷர்ட் காலரை தூக்கி விட்டு கொண்டே விஷ்ணு சொல்ல,

“எடு அந்த விளக்கமாத்த, எங்க சுத்தினாலும் பைக்கு, காருனு வந்து நிற்கிற. பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லி நானும் உயிரை உட்டுட்டு இருக்கேன். எதுவும் உன் காதுல ஏற மாட்டேங்குது ல்ல. முதல்ல இந்த சட்டை பேண்டை கழட்டி போட்டுட்டு சுடிதார் போடுற” என்று அவர் திட்டிக் கொண்டு மூலையில் கிடந்த விளக்கமாற்றை எடுக்க,

“அய்யோ அம்மா… ரேஸ்க்கு போக கூடாது சொன்ன, நானும் சரி சொன்னேன். எனக்கு தெரிஞ்ச வேலைக்கு தானே போக முடியும். தெரியாத வேலைக்கு போய் எவன்கிட்டயும் என்னால திட்டு வாங்க முடியாது” என்று கத்திக் கொண்டே விஷ்ணு வெளியே ஓடி வந்தாள்.

“கார் டிரைவரா போகவா டி உன்னை காலேஜ் அனுப்பி படிக்க வைச்சேன்?” என்று கேட்டுக் கொண்டே அன்னம்மாவும் மகளை துரத்த,

வீதிக்கே ஓடி வந்து விட்டாள்.

“யக்கா கப்பாத்துக்கா? என் அம்மா என்னை அடிக்க வருது” என்று வீதியில் இருந்து துணி துவைத்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு அக்கா பின்னால் வந்து ஒளிந்து கொள்ள,

“உனக்கும் வேலை இல்ல, உங்கொம்மாவுக்கும் வேலை இல்ல” என்று சலித்து கொண்டாலும்

“அன்னம்மா அக்கா எதுக்கு வயசு பிள்ளையா அடிக்கிற?” என்று விஷ்ணுவுக்காக கேட்கவும் செய்தார்.

“இதையெல்லாம் கொல்லாம இன்னும் உயிரோட வச்சிருக்கேன் பாரு, என்னை நானே செருப்பால அடிச்சிக்கணும். இதால ஒருநாள் கூட எனக்கு நிம்மதி இல்ல. பொண்ணா வளருனு சொன்னா பொறுக்கியா வளர்ந்து வந்து நிற்குது. நீ விலகு ராணி.” என்று அவரை தள்ளி விட்டு விஷ்ணு தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வர,

“அய்யோ அம்மா கொலை, கொலை… யாராவது என்னை காப்பாத்துங்க” என்று கத்தி ஆர்ப்பாட்டமே செய்து விட்டாள்.

அவள் கதறல் கேட்டு ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏரியா மக்கள் எல்லாம் வந்து ஆஜராகி விட்டார்கள்.

“இன்னா விஷ்ணே இன்னா பிரச்சின?” என்று கேட்டுக் கொண்டே சுருள் மண்டை ஒன்று அவர்கள் அருகே வர,

“ஏதெய் விஷ்ணு வா? அவளுக்கு துர்கானு ஒரு பேரு வச்சிருக்கேன் டா. அதை சொல்லி கூப்பிட்டா என்ன கொல்லையாம்?”

“நீ தெனம் ஒரு பேரு மாத்தினு இருந்தா நாங்க என்ன பண்றது? எங்களுக்கு வர்றது சொல்லி தான் கூப்பிட முடியும். அதுவும் நீ வச்ச பேரு தானே க்கோவ்” என்று பதில் சொல்லிக் கொண்டே,

“இன்னா டா தம்பி உங்கொம்மாவுக்கு என்னாச்சி ஏன் சாமி ஆடிட்டு இருக்கிது?” என்று விஷ்ணுவிடம் கேட்டான்.

“டேய் மூஞ்சூரு உன்னை இங்க பஞ்சாயத்து தீர்க்க யாராவது கூப்டாங்களா? மூடினு போய்ரு” என்று கண் கலங்கிய அன்னம்மா கவலை எல்லாம் ஆண் பிள்ளை போல் வளர்ந்து நிற்கும் மகளை எப்படி கரை சேர்க்க போகிறோம் என்பது மட்டும் தான்.

முந்தானை சேலையில் மூக்கை உறிஞ்சி, சேலையை உதறி இடுப்பில் சொருகி கொண்டே அவர் அழ,

இங்கே நிலை கொள்ளாது அன்னையிடம் வந்தாள் விஷ்ணு துர்கா.

“அம்மோய்… எதுக்கு இப்போ கண்ண கசக்கினு இருக்குற? நீ பிடிக்கலைனு சொல்லி ரேச விட்டேன் தான. எனக்கு இப்படி துணி போட தான் பிடிக்குது, இப்படி இருக்க தான் பிடிச்சு இருக்கு. மொத்தமா ஆளையே மாத்துனு சொன்னா? எவ்வளவு நாள் பழக்கத்தை மாத்த முடியல” என்று அவளும் தன்னிலை விளக்கம் சொல்லி அன்னையை சமாதானம் செய்ய முயன்றாள்.

“அன்னம்மா அக்கா… இப்போ என்ன ஆகி போச்சினு மூக்க சிந்தினு இருக்க?” என்று ராணியும் கேட்க,

“என் கவலை உங்க யாருக்கும் புரியாது ராணி. பயமா இருக்கு டி. அப்பன் இல்லா புள்ளை எவங்கிட்டயும் ஏமாந்துட கூடாதுனு தைரியமா வளர்க்க நினைச்சேன். இது இப்படி வளர்ந்து நிற்குது. என் கவலை எல்லாம் இது எவளையும் இழுத்துட்டு வந்திட கூடாதுனு தான். கடையாண்ட வந்து நிற்கும் போது அத்தனை பொண்ணு கண்ணும் இவ மேல தான். அவளுகளை சொல்லி என்ன தப்பு, இது பார்க்க ஆம்பள போல முடியை வெட்டிட்டு ரேசு அது இதுனு சுத்தினா வயசு புள்ளைங்க பார்க்க தானே செய்யும். போதும் சாமி இவளோட என்னால மாரடிக்க முடியல, சீக்கிரமே எவனையாவது பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பினா தான் எனக்கு நிம்மதி.”

“அது தான் உன் பிரச்சனையா ஊர்ல மாப்பிள்ளைக்கா பஞ்சம்? அதெல்லாம் பார்த்து எடுத்து முடிச்சு விடலாம்” என்று ராணி அவரை சமாதானம் செய்தார்.

“எந்த ஆம்பளையும் ஒரு பொண்ண தான் கல்யாணம் கட்டிக்க ஆசை படுவான். இன்னொரு ஆம்பளைய இல்ல” என்று மகளின் உருவ வெளிப்பாட்டை நொந்து கொண்டே அன்னம்மா சொல்ல,

“நான் கட்டிகிறேன் க்கா. இதுக்கு போய் எதுக்கு ஊரை கூட்டி வயசு புள்ளைய நடுவுல நிற்க விட்டு ஒப்பாரி வச்சினு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தான் மாரி.

“இன்னா டா தம்பி என்னை கட்டிப்ப தானே” என்று விஷ்ணு தோளில் மாரி கை போட,

அவன் கையை தட்டி விட்ட விஷ்ணுவோ,

“உன்ன கட்டிகிறதுக்கு நான் தண்டவாளத்துல கொண்டு தலையை வைக்கலாம்.”

“என்ன டா தம்பி உனக்கு வேலையெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன். இப்டி சொல்ற?” என்று மாரி அவள் மறுத்ததால் சோக கீதம் வாசிக்க,

அன்னம்மாவோ “அந்த டிரைவர் வேலையில அவளை சேர்த்து விட்ட மகாபிரபு நீ தானோ?” என்று கேட்டுக் கொண்டே கையில் இருந்த விளக்க மாற்றை சீராக தட்டிக் கொண்டவர்,

“பொம்பளை பிள்ளைய வண்டி ஓட்ட கொண்டு போய் விட்டிருக்க” என்று அவனுக்கும் நாலு அடியை போட்டார்.

“எக்கா இப்போலாம் பொம்பளை புள்ளைங்க ஏரோ பிளேனே ஓட்டுது, நம்ம விஷ்ணு தம்மா தூண்டு கார ஓட்டாதா” என்று கேட்டுக் கொண்டே அவரிடம் இருந்து வாரியலை பிடுங்கி போட்டான்.

“அம்மா… ஒரு மாசம் தான். அப்புறம் சத்தியமா வேற வேலைக்கு போய்டுறேன். நாளையில இருந்து வர்றேனு சொல்லிட்டு வந்துட்டேன். வாக்கு கொடுத்துட்டு அதை காப்பாத்தலைனா நல்லாவா இருக்கும். பிளீஸ் மா… இந்த ஒரு மாசம் மட்டும். என் செல்ல அம்மா ல்ல” என்று கெஞ்சி கொஞ்சியே அவள் செயலுக்கு தலையாட்ட வைத்து விட்டாள்.

அவரும், “என்னவோ பண்ணு போ” என்று பிடித்தம் இல்லை என்றாலும் மகளை அடக்கும் வழியறியாது அவள் போக்கிலே விட்டது தான் அவர் இப்போது வரை செய்துக் கொண்டிருக்கும் ஒரே தவறு.

இங்கே இரவு சரண் வீட்டிற்கு வந்த நேரம், நட்சத்திரா தோட்டத்தில் நின்று ரீல்ஸ்க்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள்.

காரை விட்டு இறங்கிய சரண் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தவன், பிறகு என்ன நினைத்தானோ அவளை நோக்கி கால்களை திருப்பினான்.

வேலைக்கார பெண்மணி ஒருவர் அவளை வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, அம்மணி நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு,

“சக்தியை நோக்க சரவண பவன” என்ற சாமி பாட்டுக்கு முக பாவனை செய்து கொண்டிருந்தாள்.

சரண் வந்து நின்றதும், வேலைக்கார பெண்மணி “அம்மா ஐயா” என்று போனை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிட,

“மீதி வீடியோவும் எடுத்து கொடுத்துட்டு போ” என்றவள் கையில் இருந்து போனை பிடிங்கினான் சரண்.

“என்ன கோலம் இது?” என்று கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் இருந்த திருநீர் பட்டையை தன் கைக்குட்டையால் துடைக்க,

“இது தான் இப்போ ட்ரெண்ட் மாமா. இப்படி வீடியோ போட்டு தான் இப்போ ஒரு பொண்ணு நிறைய விஸ் வாங்கிட்டு இருக்கு” என்ற ட்ரேண்டிங் பைத்தியத்தை வைத்து கொண்டு அவனுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“லைஃப் ஆஹ் கொஞ்சமாவது சீரியஸா பாரு நட்சு. போலீஸ் ஸ்டேஷன் போனத கூட வீடியோ எடுத்து போட்டு வச்சிருக்க” என்று அவன் நொந்து கொள்ள,

“அதுக்கு எவ்வளவு லைக்ஸ் கமெண்ட்ஸ் வந்துச்சு தெரியுமா மாமா?” என்றவள் பதிலில் தலையில் அடித்து கொண்டான் சரண்.

இவளை இப்படியே விட்டால் சரி வராது. அவளோடு சேர்த்து என்னையும் பைத்தியம் ஆக்கிவிடுவாள் என்று எண்ணியவன், அவளிடம் சில விஷயங்களுக்கு தெளிவு பெற வேண்டி இருக்கிறதே.

“இங்க வந்து உட்காரு கொஞ்சம் பேசணும்” என்று அவள் கையை பிடித்து அன்று உட்கார வைத்த பெஞ்சில் உட்கார வைக்க, எப்போதும் போல் சமத்து பிள்ளையாக உட்கார்ந்து கொண்டாள்.

“வீட்ல நமக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றாங்க” அவளுக்கு தெரியுமா தெரியாதா? என்ற குழப்பத்தில் தான் கேட்டான்.

“தெரியும் மாமா” பட்டென்று பதில் வந்தது நட்சத்திராவிடம் இருந்து.

‘தெரியுமா? இவ்வளவு கூலா பதில் சொல்றா, அந்த பையன் மேல இருந்த காதல் எல்லாம் மறந்துட்டாளா?’ சந்தேகித்தபடியே,

“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா” என்று சரண் கேட்க,

“தெரியலயே மாமா” என்று தான் பதில் அளித்தாள்.

“இல்ல எனக்கு புரியல, பிடிச்சிருக்கு பிடிக்கலை சொல்லு. அதென்ன தெரியல” என்று குழம்பி போய் சரண் கேட்க,

“சத்தியமா எனக்கு எந்த ஐடியாவும் இல்ல மாமா” என்றவள் கழுத்தில் கத்தியைவா வைக்க முடியும்,

கேட்கும் கேள்விகளை மாற்றி கேட்க முடிவு செய்தான்.

“உனக்கு வேற யாரையாவது பிடிக்குமா?” என்று சரண் கேட்க,

“ஹ்ம்ம் பிடிக்கும் மாமா” என்று முகம் மலர சொன்னவள்,

“ஆனா அவனுக்கு என்னை பிடிக்காது. அவன் மட்டும் ஓகே சொல்லிட்டான் அப்புறம் என் ரேன்ஜே வேற” என்று அவள் யாரை சொல்கிறாள் என்று அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் ஏற்று கொள்ள தானே மனம் தடுமாறுகிறது.

“சரி போ” என்று அவளை அனுப்பி வைத்தவன் மனதிலோ பெரும் குழப்பம்.

தன் காதலை தக்க வைத்துக் கொள்ள முயல்வதா?
இல்லை அவள் காதலுக்கு வழி விட்டு விலகுவதா? என்று.


ஆனால் அவள் பிடித்தம் காதலுக்காகவா? இல்லை கானலாக மறைந்து போகும் ரீல்ஸ் மோகத்திற்காகவா? என்பதை அறியாமல் போனான் பாடகன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலால் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய் என்மனம் வருந்த

நடந்திடல் கண்டேன்;


அத்தியாயம் : 6


“அம்மோய்… எப்படி இருக்கேன்? சும்மா மாஸா இருக்கேனா?”

வெண்ணிற டி-ஷர்ட், அதன் மேலே முன்னிரு பட்டன்கள் திறந்து விட்டிருந்த கருப்பு நிற சட்டை, ப்ளூ ஜீன், நெற்றியில் குட்டி சந்தன பொட்டு என கிளம்பி வந்து நின்ற மகளை மேலிருந்து கீழ் அலசிய அன்னம்மா,

“ஒரு சுடிதார் போட்டு, பொட்டு வைச்சா எவ்வளவு அழகா இருக்கும்” என்று ஆரம்பிக்க,

“அய்யய்ய உன்னோட ரோதனையா போச்சு. போ மா” என்று வேலைக்கு கிளம்பிய மகளை பிடித்து கொண்டார்.

“கொஞ்சம் இரு டி” என்று சொல்லி கொண்டே, முன்னால் கண்ணை மறைத்துக் கொண்டிருந்த முடிகளை கைகளால் வாரி இழுத்து உச்சியில் ரப்பர் பேண்ட் போட்டு விட்டவர்,

மகளை ரசித்தபடியே “ஹாங்… இப்போ போ” என்று சொல்ல,

விழி சுருக்கி அன்னையை முறைத்தாள் விஷ்ணு துர்கா.

அவரை முறைத்துக் கொண்டே கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்க்க,

நடு மண்டையில் தென்னை மரத்தை நட்டு வைத்தது போல், நாலா பக்கமும் விரிந்து நின்றது அன்னம்மா போட்டு விட்ட உச்சி குடுமி.

“என்ன மா இது? நான் என்ன சின்ன பிள்ளையா? உச்சி குடுமி போட்டு விட்டிருக்க” என்று கேட்டுக் கொண்டே ஒரே இழுப்பில் அதை கலைத்து விட்ட விஷ்ணுவோ, கைகளால் தலைமுடியை சரி செய்து கொண்டே,

“நான் போய்ட்டு வரேன் மா” என்று கிளம்பி விட்டாள்.

“ஏன் டி அதை எடுத்த? நல்லா தானே இருந்துச்சு” என்று அன்னை குரல் பின்னால் துரத்த,

“அப்படியே போன ஊரே என்னை பார்த்து சிரிக்கும்”

“இப்போ மட்டும் சிரிக்காது பாரு” என்று முணு முணுத்து கொண்ட அன்னமாவும், “பாத்து பத்திரமா போ டி” என்று மகளை வழியனுப்பி வைத்தார்.

டான்னு ஏழு மணிக்கு சரண் வீட்டு வாசலில் கடமை சிகாமணியாக வந்து நின்னாச்சி.

காலையில் வாக்கிங் முடித்து விட்டு சரணின் பாட்டி உள்ளே நுழைந்த சமயம்,

ஏற்கனவே பளபளனு இருந்த காரை கடமை கண்ணாயிரமாக துடைத்து கொண்டிருந்த நூடுல்ஸ் மண்டை அவர் கவனத்தை ஈர்த்தது.

“யாரு இது? புதுசா இருக்கு” என்று கண்களை சுருக்கி விஷ்ணுவை பார்த்துக் கொண்டே “எம்மா இங்க வா” என்று அழைத்தார்.

லேடீஸ் பாய் கட் அளவிற்கு முடி வளர்ந்திருக்க, அவருக்கு பாலின குழப்பம் ஏதும் இல்லை.

“நானா பாட்டி?” என்று கேட்டுக் கொண்டே, விஷ்ணுவும் அவர் அருகே வந்தாள்.

“ஆமா யாரு நீ? கார்கிட்ட நின்னு என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவர் கேட்க,

“புதுசா வேலைக்கு சேர்ந்திருக்க டிரைவர் பாட்டி” என்றாள்.

“டிரைவரா?” என்று அவளை மேலிருந்து கீழ் அலசியவருக்கு, மென்மை தொலைத்த அந்த கணீர் குரல் இப்போது தான் பாலின சந்தேகத்தை அவருக்குள் புகுத்தியது.

‘டிரைவர்னா பையனா?’ என்று யோசித்துக் கொண்டே,

“பேரு என்ன?” என்று அவர் கேட்க,

அவளும் “விஷ்ணு துர்கா” என்றாள்.

“துர்கா வா?” என்று கேட்டவருக்கு மார்க்கமாக எதிரே நிற்கும் உருவம் ஆணா? பெண்ணா? என்ற குழப்பமே வந்து விட்டது.

“துர்கானா? பொண்ணா நீ?” என்று அவர் தன் சந்தேகத்தை கேட்டிட,

அவளும் “ஆமா பாட்டி” என்றாள்.

“ஆனா ஆளையும் மண்டையையும் பார்த்தா பொண்ணு போல தெரியலையே” என்று அவர் அவளை சந்தேகமாக பார்த்து வைக்க,

அவளோ, “ஆணோ? பொண்ணோ? உங்களுக்கு வேலைக்கு ஆள் வேணும். எனக்கு வேலை வேணும். சார் கூப்பிட்டார் வந்துட்டேன். என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன் பாட்டி” என்றவள் துள்ளல் பேச்சு அவருக்கும் பிடித்து போனது.

“என்ன வேலை கொடுத்தாலும் செய்வியா?” என்று நக்கலாக கேட்டுக் கொண்டே “எங்க என்ன தூக்கி வீட்டுக்குள்ள கொண்டு விடு பார்ப்போம்” என்று அவர் அவளுக்கு டெஸ்ட் வைக்க,

“என்ன பாட்டி என்னால முடியாதுனு நினைக்கிறீங்களா?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணுவும், அலேக்காக அவரை தூக்கி விட்டாள்.

பெண் தானே என்று சாதாரணமாக எண்ணி அவர் சொல்லியிருக்க, அவள் தூக்கவும், அவருக்கு மூளை கழண்டு மூக்கு வழியே வெளியே வருவது போல் தலை கிறு கிறுவென சுற்ற ஆரம்பித்து விட்டது.

“அடேய் என்னை கீழ இறக்கி விடு டா” என்று அவர் அலற,

“முடியாது பாட்டி. நீங்க எனக்கு கொடுத்த முதல் வேலை நடுவுல விட்டு போக மாட்டேன்” என்றவள் வீட்டுக்குள் சோபாவில் தான் பதமாக இறக்கி அமர வைத்தாள்.

“ஐயோ படுபாவி, அந்த தண்ணிய எடுத்துக் கொடு” என்று அவளிடமே அவர் அடுத்த வேலை ஏவ,

ஹா ஹா என்று சிரித்துக் கொண்டே அவளும் அவருக்கு உணவு மேஜையில் இருந்த தண்ணீரை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்து கொடுத்தாள்.

அவள் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டே,

“எனக்கு இன்னும் சந்தேகமா தான் இருக்கு. நிஜமா நீ பொண்ணு தானா?” என்று கேட்டிட,

“நீங்க சந்தேகபடுறீங்கன்னு சட்டையவா கழட்டி காட்ட முடியும்?” என்றவள் நக்கல் பேச்சில் அவரும் சட்டென்று சிரித்து விட்டார்.

“கழட்டி தான் பார்க்கணும் போல” என்று அவரும் அவளை வாரி விட,

“ஆஹா! உங்ககிட்ட உசாரா இருக்கணும் போலவே” என்று அவள் பயந்தது போல் பாவளா செய்ய,

இன்னும் சத்தமாக சிரித்தார் அந்த மூதாட்டி.

‘“இங்க வந்து உட்காரு” என்று விஷ்ணுவை தன் அருகே அழைத்து அமர வைத்தவர்,

அவள் குலம், கோத்திரம் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

அவருக்கு விஷ்ணுவின் பேச்சும், கள்ளமில்லா சிரிப்பும் பிடித்து போனது.

அவள் சிகையும், உடையும் கூட அவருக்கு உறுத்தவில்லை.

பெண் என்ற பார்வையில் அவளை மனதில் பதிய வைத்துக் கொண்டார். அதனாலோ என்னவோ வெளி தோற்றம் அவருக்கு பெரிதாக தெரியவில்லை.

ஜானகி பாட்டி அவளிடம் கேட்ட முதல் கேள்வி, அவள் பெயர் தான். அதை சரண் தேவ்வும் கேட்டிருந்தால், அவன் வாழ்வின் பல சிக்கல்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

‘எல்லாம் அறிந்தவன் நான்’ என்ற மிதப்பு சிறு விடயத்தில் அவனை சறுக்கி விட்டது.

ஜானகி பாட்டியும், விஷ்ணுவும் பேசிக் கொண்டிருப்பதை கிச்சனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சரணின் அன்னை இசைமலர், “அத்தை யார் கூட பேசிட்டு இருக்காங்க?” என்று தன் நாத்தனாரிடம் கேட்க,

கிச்சனில் இருந்து எட்டி வெளியே பார்த்த மேகலாவும், “தெரியலயே அண்ணி. வாங்க போய் கேட்போம்” என்று முன்னே வர, ஜானகிக்கு டீ எடுத்துக் கொண்டே மேகலாவை தொடர்ந்து வந்தார் இசைமலர்.

“யாரு மா இது?” என்று கேட்டுக் கொண்டே மேகலா, ஜானகி அருகே அமர,

‘'சரணோட டிரைவர் மா” என்றார் பாட்டி.

“டிரைவர எதுக்கு வீட்டுக்குள்ள உட்கார வச்சி பேசிட்டு இருக்கீங்க? அதுவும் வயசு பொண்ணு இருக்கிற வீட்டுல, இந்த மாதிரி ஆட்களை எல்லாம் ஒரு எல்லையில தான் நிறுத்தனும்” என்று மேகலா தன் அன்னை காதில் குசு குசுக்க,

மகளை நக்கலாக பார்த்து கொண்டார் வைத்தார் ஜானகி.

அப்போது தான் தூங்கி எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டே வந்த நட்சத்திரா கண்ணில் விஷ்ணு பட,

அவள் கண்ணை அவளாலேயே நம்ப முடியாத ஆனந்தம் தான்.

“விஷு…” என்று அழைத்துக் கொண்டே தட தடவென படிகளில் தாவி ஓடி வந்தவள்,

விஷ்ணு கையை பிடித்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்து,

“எப்படி இருக்க? எவ்வளவு நாள் ஆச்சு உன்ன பார்த்து? நீ எப்பவும் போற ரேஸ் டீம்ல கூட உன்ன பத்தி கேட்டேன். இப்போலாம் நீ அங்க போறது இல்லைனு சொல்லிட்டாங்க. என்னாச்சு, கை சரியாகிடிச்சா?” என்று அவள் பாச மழையை பொழிய,

எல்லை கோடு பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த அவள் அன்னை முகத்தில் ஈ ஆடவில்லை.

‘விட்டால் அந்த பையன் மடி மேல ஏறி உட்காருவா போல’ என்று கறுவி கொண்டே,

‘“நட்சு” என்று மகளை அதட்டினார்.

அதன் பிறகே விஷ்ணு தாண்டி அங்கே இருக்கும் தன் வீட்டு பெண்கள் அவள் கண்களுக்கு தெரிந்தார்கள்.

“அம்மா நான் உங்கிட்ட சொல்லி இருக்கேன்ல விஷ்ணு. இவ தான்.

எங்க காலேஜ் ஹீரோ. எந்த பொண்ணுக்கு பிரச்சனைனாலும் முன்னாடி நிற்பா. பார்க்க பாய் போல இருக்கிறதால, ஏதாவது பசங்க லவ் டார்ச்சர் பண்ணா கூட இவளை கூட்டிட்டு போய் டிராமா பண்ணி ஓட விட்டுடுவோம்” என்று அவள் கெக்க பெக்கவென சிரித்துக் கொண்டே விஷ்ணு மானத்தை வாங்க,

‘இதெல்லாம் அவங்க கேட்டாங்களா? அய்யோ இந்த பைத்த்தியம் இங்க இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, பின் வாசல் வழிய ஓடி போய் இருப்பேனே’ என்று தான் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள் விஷ்ணு.

“என்ன? பொண்ணா?” என்று அன்னையர்கள் இருவரும் விளக்கம் கேட்க,

நட்சுவோ தன் தோழிகளின் பிக்கப், பிரேக் அப் லிஸ்ட்களை சொல்லி, விஷ்ணுவின் சமூக சேவையையும் சொல்லிட,

‘அப்போ இது பொண்ணா? நல்லவேளை பையன் இல்லை’ என்று நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார் மேகலா.

“பார்க்க அழகா இருக்க, ஒரு சுடிதாரோ இல்ல பாவாடை தாவணி போட்டா அழகா இருக்கும்ல” என்று இசை மலர் மென்மையாக கூறிட,

“ஏன் அத்தை? விஷு இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சு இருக்கு” என்று அவள் கையை கட்டிக் கொண்டு நட்சுவை உதறிவிட ஆசை தான். ஆனால் அவள் வீட்டு ஆட்கள் முன் அது அநாகரீகம் என்று சகித்து கொண்டு அமர்ந்திருந்தாள் விஷ்ணு.

“அப்படி இல்ல டி. பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம் குழப்பம் வருது ல்ல” என்று மேகலா சொல்ல,

“ஏன் இப்படி இருந்தா என்ன தப்பு? நீ இந்த மாதிரி பொண்ணுங்களை இதுக்கு முன்ன பார்த்ததே இல்லையா?” என்று விஷ்ணுவுக்கு சாதகமாக பேசி,

அவளை பற்றிய ஆராய்ச்சிகளுக்கும், வீண் விவாதங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்திருந்தார் ஜானகி பாட்டி.

‘அந்த பொண்ணு எப்படி இருந்தா எங்களுக்கு என்ன? எங்க வீட்டு பொண்ண அவ கெடுக்காம இருந்தா போதும்’ என்ற மனநிலையில் மலரும், மேகலாவும் அமைதியாகி விட்டார்கள்.

ஜானகி பாட்டியோ, “நீ சரியான நேரத்துக்கு தான் இங்க வந்து சேர்ந்து இருக்க, வீட்ல கல்யாண எல்லாம் நிறைய இருக்கும். எல்லாம் செய்வ தானே” உன்னால முடியுமா என்ற தொனியில் அவர் கேட்க,

“பாட்டி இந்த விஷ்ணு கெட்டப் மட்டுமில்ல, செய்ற செயலும் ஆம்பளைக்கு ஈக்குவலா இருக்கும்” என்று பெண்கள் நால்வரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விஷ்ணுவை கொலைக் காண்டில் பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தான் சரண் தேவ்.

வழமை போல் ஸ்டுடியோ செல்ல ஆயத்தமாகி வந்தவன், கண்களில் கீழே தன் வீட்டு பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த விஷ்ணு பட,

‘இவனை யாரு வீட்டுக்குள்ள விட்டது? வந்ததுமே வேலையை ஆரம்பிச்சிட்டான். பாட்டியில இருந்து பியூட்டி வரை எல்லாரையும் மயக்கிடுறான்’ என்று விஷ்ணுவை திட்டிக் கொண்டே, அவர்கள் அருகே வந்த சரண்,

தொண்டையை கனைத்து அவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

தன் முதலாளியை பார்த்த விஷ்ணுவும் எழுந்து நின்று,

“குட் மார்னிங் பாஸ்” என்று மலர்ந்த முகத்துடன் சொல்ல,

“உன்னை யாரு வீட்டுக்குள்ள விட்டது? தொறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற போல நடு வீடுவரை வந்திருக்க. வெளிய போ” என்று அதிகாரமாக அவளை விரட்டிட,

அவன் பேச்சு எல்லாருக்கும் சங்கடமாகி போனது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பித்துப் பிடித்தது போல் - பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் - பிற

வாஞ்சை யுண்டோ?

அத்தியாயம் : 7

சரண் இதுவரை யாரையும் அவமதித்து கிடையாது. தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை கூட நல்ல மாதிரியாக தான் நடத்துவான்.

ஆனால் சட்டென்று விஷ்ணுவை அவன் அவமரியாதையாக வெளியே விரட்டவும், சற்று முன் இருந்த இயல்பு நிலை எல்லாருக்கும் மாறி போனது.

“டேய்… நான் தான் வர சொன்னேன்” என்று பாட்டி விஷ்ணுவுக்கு சப்போர்டுக்கு வர,

“உன்ன வெளிய போ னு சொன்னேன்” என்று விஷ்ணுவை பார்த்து பல்லை கடித்தான் சரண்.

அவன் பேச்சு விஷ்ணுவுக்கும் வலிக்க தான் செய்தது. ஆனால் அவள் வேலைக்காக வந்தவள் தானே, அதுவும் அவன் டிரைவராக, கொஞ்சம் அதிகப்படியாக உரிமை எடுத்து கொண்டோமோ என்று அவளுக்கும் தோன்றவே,

“பாட்டி வேலை சொன்னாங்க அதான் உள்ள வந்தேன். இப்போ வேலை முடிஞ்சது நான் வெளிய வெயிட் பண்றேன்” என்று புன்னகை முகமாகவே சொல்லி விட்டு வெளியேறியவளை பார்த்து பெண்கள் நால்வருக்கும் கோபம் தான் வந்தது சரண் மேல்.

“மாமா நீங்க விஷுகிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது” என்று நட்சு அவனை முறைத்துக் கொண்டு சொல்ல,

“ஆமா சரண். பாவம் முகமே வாடி போச்சு” என்று மலரும் விஷ்ணு மீது பரிதாபம் கொண்டு சொன்னார்.

நால்வரையும் புருவம் இடுக்கி பார்த்த சரண், “இதுக்கு முன்னாடி எந்த டிரைவரையும் நீங்க இப்படி கூப்பிட்டு வச்சி பேசினது இல்லையே” என்று அவன் கேட்க,

“அது என் ப்ரெண்ட் மாமா” என்றாள் நட்சத்திரா முகத்தை சுருக்கி கொண்டே.

தெரிந்தே தானே ஆள் வேலைக்கு போட்டது.

“ஓ… சாரி நட்சு உன் ப்ரெண்ட்னு தெரியாம டிரைவர் வேலை கொடுத்துட்டேன். நான் வேணா அப்பாகிட்ட சொல்லி நம்ம கம்பெனியில ஏதாவது நல்ல வேலை போட்டு கொடுக்க சொல்லவா?” என்று கேட்க,

“அய்யோ வேணாம் வேணாம்” என்று அவசர அவசரமாக மறுத்தாள் நட்சத்திரா.

விஷ்ணு இங்கே இருந்தால் தானே காலை மாலை இரண்டு வேளையாவது அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆபீஸ் போனா நான் எப்படி பார்க்கிறது? சுயநல உலகம், தன் விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி சரண் வலையில் அப்பாவி பெண்ணை சிக்க வைத்தது.

அவள் எண்ணவோட்டத்தை அனுதாணித்து கொண்ட சரணும் ஏளனமாக இதழ்களை வளைத்து சிரித்து கொண்டே,

உணவு மேஜையில் சென்று அமர்ந்து அன்னையை பார்க்க,

அவரும் அவனுக்கு பரிமாற சென்று விட்டார்.

இங்கே நட்சுவும், விஷ்ணுவை தேடி வெளியே வந்தாள்.

காரில் சாய்ந்து நின்று தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு அருகே வந்தவள்,

‘“சாரி விஷு. மாமா அப்படி பேசியிருக்க கூடாது* என்று வழிந்து கொண்டே சாரி கேட்க,

“நீ இங்க இருப்பனு தெரிஞ்சிருந்தா நான் இந்த பக்கமே வந்து இருக்க மாட்டேன்” என்று அவள் மொத்தமாக அவளை ஒதுக்கி தள்ளினாள்.

“உன்ன பார்த்ததும் நான் எவ்வளவு ஆசையா வந்தேன். நீ ஏன் இப்படி பேசுற?” என்று நட்சு சிணுங்க,

‘இதுக்கிட்ட இருந்து எனக்கு ஒரு விடிவு காலம் இல்லையா?’ என்பது போல் சலிப்பாக தான் பார்த்தாள் விஷ்ணு.

“இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் தகவல் சொல்ல,

“சந்தோசம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு போ. அப்போ தான் நான் நிம்மதியா இருக்க முடியும்” என்று பெரிய கும்பிடு ஒன்றை போட்டாள் விஷ்ணு.

‘“இப்போவாது நான் கேட்டதுக்கு ஓகே சொல்லேன்” என்று நட்சு, தங்கள் பெண்டிங் பைலை ஓபன் செய்ய,

“நீ இன்னும் அத விடலய? அதான் கல்யாணம் பண்ணிக்க போறல்ல அவர் கூட போய் வீடியோ எடுத்து போடு. என் உயிர ஏன் எடுக்கிற?” எரிந்து விழுந்தாள்.

“அதெல்லாம் நார்மல் கப்பில் பண்றது. எனக்கு ஏதாவது வித்தியாசமா பண்ணி, ட்ரெண்ட் ஆகணும். லைக் டோரா புச்சி போல” என்று அவள் இன்ஸ்டா பிரபலங்கள் பெயரை சொல்ல,

“என் வாயில எதுனாச்சி வண்ண வண்ணமா வந்துடும், இப்படியே ஓடி போய் ரு” என்று அடித்து விரட்டாத குறையாக தான் அவள் வீட்டில் நின்று கொண்டே அவளை விரட்டினாள் விஷ்ணு.

“காசு தரேன்” என்று நட்சத்திரா அவளுக்கு ஆசை காட்ட,

முன்பு சொல்லி இருந்தாள், ‘தக்காளி நீ திருந்த மாட்ட’ என்று சொல்லி கல்லை கொண்டு எரிந்து இருப்பாள்.

ஆனால் இப்போது அவளுக்கு பண தேவை இருக்கவும் தானே கிடைத்த வேலையெல்லாம் செய்ய ஆள் தயாரானது.

“காசா?” என்று நட்சத்திராவை ஆராயும் பார்வை பார்த்தவள்,

“ஆமா ஆயிரம் வியுஸ் போனா ஐநூறு ரூபா தரேன்” என்று அவள் டீலிங் பேச,

“ஐநூறு இல்ல ஒரு வியுக்கு ஒரு ரூபா. ஒகேனா சொல்லு யோசிக்கிறேன்” என்று விஷ்ணுவும் பேரம் பேசினாள்.

“நீ ஒத்துகிட்ட மட்டும் போதும். எனக்கு இந்த பணம் எல்லாம் மேட்டரே இல்ல, நான் ட்ரெண்ட் ஆகணும்” என்று பினாத்தும் பெண்ணை,

எப்போதும் போல் அரலூசு பார்வை பார்த்தாள் விஷ்ணு.

இவர்கள் டீலிங் இங்கே போய் கொண்டிருக்க,

நட்சத்திராவை வீட்டுக்குள் காணவில்லை என்றதும், அரக்க பறக்க சாப்பாட்டை கொறித்து விட்டு வெளியே ஓடி வந்தான் சரண்.

அவன் வந்த நேரம்,

“ஹே… அப்போ உனக்கும் ஓகே வா? ஐ ஆம் சோ ஹேப்பி” என்று துள்ளிக் குதித்து நட்சத்திரா விஷ்ணுவை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்க,

அதை பார்த்த சரணுக்கு இதயமே நின்று விட்டது.

“நட்சு” என்று அதிர்ந்து அவளை அழைத்தவன்,

அவளின் “என்ன மாமா” என்ற அரட்டல் இல்லா கேள்விக்கு,

“அம்மா உன்னை கூப்பிட்டாங்க” என்று சொல்லி உள்ளே அனுப்ப முயன்றான்.

அவளோ “எதுக்கு மாமா?” என்று அவனிடமே விளக்கம் கேட்க,

“அதை நீயே போய் கேட்டுக்க” என்று விரட்டி விட்டவன்,

கார் அருகே வந்து நிற்க,

விஷ்ணுவும் வேகமாக காருக்குள் ஏறி அமர்ந்தாள்.

அவள் காரை ஸ்டார்ட் செய்த பிறகும் கூட சரண் வெளியே நிற்க,

“இன்னா பாஸ் வரலையா?” என்று கார் ஜன்னல் கண்ணாடி வழியே குனிந்து வெளியே பார்த்து விஷ்ணு கேட்க,

“கதவு யாரு உங்கப்பன் வந்து திறந்து விடுவானா?”

‘ஏன் உங்களுக்கு கை இல்லையா?’' சட்டென்று கேட்டு விட விஷ்ணுவுக்கும் ஆசை தான். ஆனால் இந்த நிமிடம் இந்த வேலை ரொம்ப ரொம்ப அவசியம் அடக்கிவாசி என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்,

“செத்து போன அந்த மனுஷனை ஏன் சார் இழுக்கிரீங்க” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு கதவை திறந்து விட்டவள், அவன் ஏறியதும் அதை அடைத்து விட்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“எங்க போகணும் பாஸ்?” முதல் நாள் வேலை களிப்பில் அவள் உற்சாகமாக கேட்டிட,

“போகும் போது எங்க போறீங்கனு கேட்க கூடாதுனு உனக்கு தெரியாது?”

‘அப்புறம் இன்னா கேட்கணுமாம்?’ முனங்கி கொண்டே விஷ்ணு காரை கேட்டை தாண்டி வெளியே கொண்டு வந்தவள், இடது பக்கமாக திருப்ப,

“இங்க யாரு உன் பூட்டனா இருக்கான்? ஸ்டூடியோக்கு போகணும்” என்று சிடு சிடுவென விழுந்தான்.

அப்போ ஸ்டுடியோவுக்கு போகணுமா? என்று புரிந்து கொண்டவள், சரண் ஸ்டூடியோ நோக்கி காரை செலுத்தினாள்.

“இது ஒரு பொன் மாலை பொழுது…
வான மகள் தூவுகிறாள்”

பிளேயரில் பாட்டை ஓட விட்டவள், அதனுடன் சேர்ந்து தன் கட்டை குரலில் பாடிட,

அவள் குரல் கேட்டு ‘இது வேறயா?’ என்று எரிச்சலுற்றான் சரண்.

சட்டென்று பாட்டை சரண் அணைத்து விட,

“ஏன் பாஸ் நீங்களே பாட போறீங்களா?” என்று கேட்டவளை என்ன செய்தால் தகும் என்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தவன், எதுவும் சொல்லாமல் சாலையை வெறித்தப் படி அமைதியாக அமர்ந்திருந்தான்.

‘ஏதோ மூட் ஆஃப்ல இருக்கார் போல’ என்று எண்ணி கொண்ட விஷ்ணுவும், கொஞ்சம் கூலாக்குவோம் என்று ஏசியை ஆன் பண்ணி விட,

அவள் போட்ட வேகத்தில் ஒரு கரம் நீண்டு கொண்டு வந்து அதை அணைத்திருந்தது.

“பெட்ரோல் விக்கிற விலைக்கு துறைக்கு ஏசி கேட்க்குதோ?” என்று திட்டிய சரணை,

பிறகு எதுக்கு ஏசி வச்சிருக்கார்? என்று மனதில் கவுண்டர் கொடுத்து கொண்டே, ஜன்னல் கண்ணாடிகளை இறக்கி விட,

“ஏய் வெயில் விழுது” என்று அதற்கும் திட்டினான்.

பிடிக்காத மருமக, கைப்பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் ரேஞ்சில் விஷ்ணு ப்ரேக் போட்டால் கூட ஆள் எரிந்து விழுந்தது.

“டிராஃபிக்ல ப்ரேக் போடாமா போன நம்ம மேல பைன் போடுவாங்க சார்” என்று ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி மாளவில்லை விஷ்ணுவுக்கு.

ஸ்டூடியோவில் கொண்டு அவனை இறக்கி விட்டு அக்கடா என்று இவள் காரில் சாய்ந்து கிடக்க,

அழைத்து வர ஆள் அனுப்பினான் அக்கினி பூச்சி.

அப்போதும், “சொல்லுங்க பாஸ்” என்று சோர்வுறா குரலில் உற்சாகமாக கேட்டபடி அவன் முன் வந்து நிற்க,

அவளை ஆராய்ந்த சரண் விழிகள், “கொண்டு வந்து விட்டுட்டு சொகுசா இருக்கலாம்னு நினைச்சியா? அது இங்க நடக்காது. போய் டீ வாங்கிட்டு வா?” என்று வேலை ஏவி அனுப்பி வைத்தான்.

“சரி பாஸ்” துள்ளல் குறையாத குரலில் சொல்லிக் கொண்டே அவளும் டீ வாங்கி வந்து கொடுத்தாள்.

ஒரு மிடறு குடித்தவன் அதை துப்பிவிட்டு, “அறிவில்லை சுகர் போட்டு வாங்கிட்டு வந்திருக்க” என்று அவளை திட்ட,

“சாரி பாஸ். உங்களுக்கு சுகர் வியாதி இருக்குனு எனக்கு தெரியாது. வித்தவுட் சுகர்ல பால் வாங்கிட்டு வர்றேன் பாஸ். அது தான் உடம்புக்கு நல்லது” என்று ஓட இருந்தவளை பிடித்துக் கொண்டவன்,

“இரு இரு எனக்கு சுகர்னு நான் எப்போ உங்கிட்ட சொன்னேன்? நான் சொல்ற வேலையை மட்டும் செய்யணும், இந்த அதிக பிரசங்கி வேலை செஞ்ச, தோலை உரிச்சிடுவேன்” என்று கண்களை உருட்டி மிரட்டல் விடுத்தான் சரண் தேவ்.

ஏனோ அவன் அதிர்ந்து பேசினால் கூட சிரிப்பு தான் வருகிறது விஷ்ணுவுக்கு.

இதழுக்குள் மறைக்க முயன்ற புன்னகையுடன், “சரி பாஸ்” என்றவள் வெளியேற,

அவனுக்கு என்ன மனநிலை என்றே தெரியவில்லை.

எடுபுடி வேலைக்கு தனியே ஆள் இருக்கு. ஆனாலும் அந்த நூடுல்ஸ் மண்டையை ஏதாவது செய்தாக வேண்டும் என்று மனம் பிராண்டிக் கொண்டிருந்தது.

அதிகாரம் காட்டி பழக்கமில்லை அவனுக்கு, ஆனாலும் தன்னை புறக்கணித்த உறவுக்காக அவளை வாட்டி வதைக்க இவன் திட்டம் தீட்ட,

‘சொல்லிட்டு கோபப்படுங்க, பயந்த போலவாது முகத்தை வச்சிக்கிறேன்’ என்பது போல் அவள் செயல் இருக்க,

மண்டை சூடாகியது, மந்திர குரல் சொந்தகாரனுக்கு.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 8

வேலை செய்து விஷ்ணு சோர்ந்தாளோ! இல்லையோ! வேலை கொடுத்து சரண் நொந்து போனான்.

பள பளவென இருந்த காரை காலையிலேயே ஆள் ஒருமூச்சி துடைச்சு பெயிண்டை பாதி உரிச்சு எடுத்தாச்சு. மீண்டும் மீண்டும் அதை துடைக்க சொல்லி, கார் மேட் எல்லாம் அலசி காய வைக்க சொன்னவன், பியூன் வேலையை கூட அவள் தலையில் தான் கட்டியிருந்தான்.

ஒரே நாளில் சோர்ந்து ஆள் ஓடி விடும் என்பது அவன் எண்ணம். ஆனால் அவளோ எதற்கும் அசராது “அவ்வளவு தான ரெண்டே நிமிசத்துல வேலையை முடிச்சிடுறேன்” என்று சொன்னதோடு நில்லாமல் சொன்னது போல் வேலையை முடித்துவிட்டு, அடுத்த நொடி “வேற பாஸ்” ஏற்றுக் கேட்டபடி அவன் முன் வந்து நின்றாள்.

காயிலாங்கடையில் போடலாம் என்று ஒதுக்கி வைத்திருந்த துருப்பிடித்த பழைய இசை கருவிகளை கூட துடைக்க சொல்லி கொடுத்தான்.

துளி கூட முகத்தில் சோர்வும், சலிப்பும் இல்லை. இதை விட அதிகமாக மெக்கானிக் செட்டில் உடல் நொந்து இருக்கிறாளே. இந்த வேலைகள் எதுவும் அவளை சோர்வாக்கவில்லை என்பது தான் உண்மை.

“கொஞ்சம் உடம்பு நோவுற போல வேலை கொடுங்க பாஸ்” என்று அவளே வாய் திறந்து கேட்கும் அளவிற்கு ஆகி விட்டது.

அவளுக்கு வேலை திட்டமிட்டே, இவன் வேலையை கோட்டைவிட்டான். காலையில் இருந்து ஸ்டூடியோவில் தான் உருண்டுக் கொண்டிருக்கிறான் ஒரு டியூன் கூட செட் ஆகவில்லை.

புதிய ஆல்பம் ஒன்றிக்காக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டிருந்தவனை இவள் மனதளவில் பெரிதும் பாதித்திருக்க, ‘அந்த நூடுல்ஸ் மண்டை விஷ்ணுவை தவிர வேறு சிந்தனையும் வர மாட்டேங்குதே!’ என்று புலம்பியே செத்தான். ஒருநாள் முழுவதும் வீணானது தான் மிச்சம்..

நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இரவு வேலவனை அனுப்பி விட்டு சரணும் வெளியே வர, எதிரில் இருந்த டீ கடையில் நின்று டீ மாஸ்டருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் விஷ்ணு.

“இவனால என் வேலையே ஓட மாட்டேங்குது. இவன் மட்டும் சிரிச்சி சந்தோஷமா இருக்கான்” கொஞ்சம் அல்ல நிறையவே வயிறேரிந்தது.

“ஏய்…” என்று சரண், விஷ்ணுவை கத்தி அழைக்க,

“முடிஞ்சா பாஸ். போலாமா?” என்று கேட்டுக் கொண்டே அவன் அருகே ஓடி வந்தாள்.

“வேல நேரத்துல என்ன வெட்டி பேச்சு, வண்டிய எடு” என்று சிடு சிடுத்த படி சரண் காரில் ஏறி அமர,

“வேலை எதுவும் இல்லனு தான் பாஸ் போனேன்” என்று பதிலுக்கு பதில் சொல்லிக் கொண்டே அவன் அருகே ஏறி அமர்ந்தாள் விஷ்ணு.

“வீட்டுக்கு தன பாஸ்?”

‘எங்க போகணும்?’ என்று கேட்டால் கடித்து குதறுவான் என்று கேள்வியை வேறு விதமாக கேட்டிருக்க,

“ஏன் வேற எங்கயாவது ஊர் சுத்தணுமா உனக்கு?” என்று அதற்கும் அவளை திட்டிக் கொண்டே தலையில் கையை வைத்து, கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தவனை,

‘சரியான டென்ஷன் பார்ட்டியா இருப்பார் போல’ என்று திரும்பி பார்த்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தாள்.

அந்த டென்ஷன் முழுவதும் அவளால் தான் என்பது அவள் அறியா ஒன்றே.

அவன் நல்ல மனநிலையில் இல்லை என்பது அவளுக்கும் புரிந்தது. ஏன்? எதற்கு? என்று அக்கறை கொள்ளும் அளவிற்கு இருவரும் பழகவில்லையே.

சும்மாவே அவள் மீது எரிந்து விழுகிறான். இதில் அவள் ஏதாவது கேட்க போய், வெறி பிடித்து கத்தவா? எதுக்கு வம்பு? என்று அமைதியாக வந்தவள் ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டே ஏசியை போட்டு விட,

ஆள் சுயநினைவில் இல்லை போல, எதிர்ப்பு எதுவும் அவன் பக்கம் இருந்து வரவில்லை.

அதை அவதானித்து கொண்டவள், கையை வைத்து கொண்டு சும்மா இல்லாது அடுத்து இளையராஜாவின் மெல்லிசை பாடல் ஒன்றை போட்டு விட்டு கொண்டே அவன் முகத்தை ஆராய்ந்தாள்.

மனசோர்வு எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை. கண்கள் மூடி அமர்ந்திருந்தவன் ஏசியின் இதத்திலும், இனிமையான இசையிலும் சற்று நேரத்தில் கண்ணயர்ந்து விட, அவன் நிம்மதியை நிலைகுலைய செய்யவே பிறப்பெடுத்து வந்தாளே கோதையவள்.

நடு ரோட்டில் சட்டென்று அவள் போட்ட ஸ்பீட் பிரேக்கரில், முன்னால் இருந்த டாஷ்போர்டில் நெற்றி மோதி, ஆ ஆ ஆ என்று அலறியபடி சரண் கண்களை விழிக்க,

“பொறம்போக்கு நாரபயலே… உன் அப்பன் வீட்டு ரோடா? நீயெல்லாம் ஏதாவது குப்பை லாரில தான் அடிபட்டு சாவ” என்று உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே,
நடு ரோட்டில் கேட்பாரற்று காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடினாள் விஷ்ணு.

நெற்றி மோதிய வலியை விட அவள் கத்தல் தான் செவிப்பறையை கிழித்து வலியை அதிகரித்தது.

“இடியட் எங்க போற?” என்று காருக்குள் இருந்து கொண்டே சரண் கத்த,

அவளோ வீதியில் இருந்து எதையோ தூக்கி கொண்டு மீண்டும் காருக்குள் ஏறினாள்.

“ச்சோ… சோ… வலிக்குதா? இப்போ ஹாஸ்பிடல் போய்டலாம்” என்று ரத்த வெள்ளத்தில் கிடந்த நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தவளை வினோதமான ஜந்துவை போல தான் பார்த்து வைத்தான் சரண்.

இவள் காரை சீறி கொண்டு கடந்து சென்ற வாகனம் ஒன்று, சாலையை கடக்க முயன்ற நாய்குட்டி ஒன்றை அடித்து தூக்கி வீசியிருக்க,

அதை தான் தூக்கிட்டு வந்து அவள் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள்.

கால் நசுங்கி, தாடை உடைந்து தொங்கி இரத்தம் சொட்டிக் கொண்டிருந்த அந்த நாய்குட்டியை பார்த்ததும் அருவருப்பாக முகத்தை சுழுத்த சரணுக்கோ அந்த வாடையில் குமட்டிக் கொண்டு வந்தது.

குடலை பிரட்டிய அந்த நாற்றத்தில் குவாக் என்று சத்தம் தான் வந்தது சரணிடம் இருந்து.

அய்யோ என்று பதறிய விஷ்ணுவோ, நாய்க்குட்டியை மடியில் வைத்து கொண்டே அவன் பக்க கதவை திறந்து விட்டவள்,

“வாந்தி வந்தா வெளிய எடுங்க பாஸ்” என்ற சொல்ல,

“நீ முதல்ல அதை வெளிய தூக்கி போடு. அதை பார்த்தாலே அருவருப்பா இருக்கு” என்று தான் முகத்தை சுழித்தான் சரண்.

அதுவோ அவ் அவ் என்று பம்மியபடி அவள் மடியில் சுருண்டு கிடக்க,

“பாவம் பாஸ். அடி பட்டிருக்கு, போற வழில விட்டு போயிடலாம்” என்றவள், அதற்கு மேல் அவன் பேச்சை கேட்கவே இல்லை.

“ஏய்… கார் புல்லா பிளட் ஆகுது. அதை பார்த்தாலே வாந்தி வருது. அதோட சேர்ந்து நீயும் கீழ இறங்கு” என்று விரட்டியவன் காட்டு கத்தலுக்கு ஆள் மசியவில்லை.

“பிளீஸ் பாஸ்… போற வழில கொடுத்துட்டு போயிடலாம்” என்றவள் காரை நிறுத்தாது உயர் வேகத்தில் ஓட்டிட,

“என்ன டா திமிரா? இப்போ மட்டும் நீ அதை வெளிய விடல? உன்னை வேலைய விட்டே தூக்கிடுவேன்” என்று மிரட்டி கூட பார்த்தான்.

“நீங்க என்னை வேலைய விட்டு தூக்கினாலும் பரவாயில்லை பாஸ். இதை விட முடியாது” என்று உறுதியாக பதில் சொல்லும் அந்த சில்வண்டை கையாளும் வழியறியாது திணறி தான் போனான் பாடகன்.

அவள் கையில் இருந்து காரை பிடுங்கி, அவளையும், அவள் மடியில் இருக்கும் நாய்க்குட்டியையும் அடித்து துரத்த அரை நொடி போதாது. ஆனால் சுத்த பத்தம் பார்க்கும் சூறாவளிக்கு அவளை தொடவே அருவருப்பாக தான் இருந்தது.

அதனால் தான் சரண் கத்திக் கொண்டிருக்க,

‘நீ கத்தினா உன் தொண்டை தான் வலிக்கும். எனக்கு என்ன வந்துச்சு?’ என்ற தொனியில் உயர் வேகத்தில் காரை ஓட்டி வந்த விஷ்ணுவோ அவள் நினைத்த இடத்தில் தான் காரை நிறுத்தினாள்.

மனித வாசம் முற்றிலும் தடைசெய்யபட்டது போல் நகருக்கு வெளியே அமைந்திருந்த காட்டு பாதையில் அமைந்திருந்தது அந்த பண்ணை வீடு.

அந்த இரவு வேளையில் கூகைகளின் கூவல் சத்தம் நடுவே அந்த பெரிய கேட்டை திறந்து கொண்டு விஷ்ணுவின் கார் உள்ளே நுழைய,

“ என்ன இடம் இது?”

ஆங்காங்கே ஒற்றை மின்கம்பத்தில் மின்னிக் கொண்டிருந்த விளக்கின் உதவியால் அமானுஷ்யமாக காட்சியளித்த அந்த இடத்தை பார்த்துக் கொண்டே சரண் கேட்டான்.

“சொல்றேன் பாஸ்” என்று சொல்லி கொண்டே, உயர்ந்து வளர்ந்து நின்ற மரங்களை தாண்டி உள்ளே வந்தவள், வீட்டு வாசலில் காரை நிறுத்தினாள்.

கார் சத்தம் கேட்டு, வெளியே கூண்டு அருகே நின்றிருந்த உருவம் ஒன்று அவளை நோக்கி வர,

விஷ்ணுவும் அடிப்பட்டிருந்த நாய்க்குட்டியை தூக்கி கொண்டு இறங்கியவள்,

“டாக்டர் சார்…” என்று அழைத்து கொண்டே அவன் அருகே சென்றாள்.

“என்னாச்சி விஷ்ணு?” என்று கேட்டுக் கொண்டே அவள் கையில் இருந்த நாய்க்குட்டியை வாங்கி வீட்டிற்குள் கொண்டு செல்ல,

“கார்காரன் ஏத்திட்டான்.” என்று சொல்லி கொண்டே அவளும் பின்னால் ஓடினாள்.

“ஏய்…” என்று இங்கே காருக்குள் இருந்து கத்திய ஜீவனை இருவரும் கண்டுக் கொள்ளவே இல்லை.

“மெண்டல். எங்க கொண்டு வந்து நிப்பாட்டி வச்சிருக்கான்” என்று விஷ்ணுவை திட்டியபடியே சரண் கீழே இறங்க,

வெளவ்… வெளவ்… என்று குரைத்துக் கொண்டே மட மடவென நாய்கள் பட்டாளமே அவனை சூழ்ந்து கொண்டது.

இறங்கிய வேகத்தில் மீண்டும் காருக்குள்ளே ஏறி அமர்ந்து கொண்டான் பத்திரமாக.

‘இன்னைக்கு நாளே எனக்கு சரியில்லை போல’ என்று புலம்பிக் கொண்டே ஜன்னல் கண்ணாடி வழியே வெளியே பார்க்க,

அவனை வரவேற்க வந்த பட்டாளமோ இம்மியும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

கொர்… என்று உருமிய படி காரை பார்த்து குரைக்க,

இப்படியே காரை திரும்பி சென்று விடலாம் என்று தான் அவன் மூளை அவனுக்கு யோசனை வழங்கியது.

ஆனால் விஷ்ணு அமர்ந்திருந்த இடத்திலும், ஸ்டியரிங்கிலும் இரத்தக்கரை படிந்திருக்க, கிளினிங்க் கிளியரன்ஸ் எப்படி அதில் அமருவான்.

“எல்லாம் என் நேரம். இவனை வேலைக்கு சேர்த்து பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று விஷ்ணுவை திட்டுயவனுக்கு, கரை படிந்த இருக்கையை பார்க்க பார்க்க கோபம் தான் அதிகரித்தது.

“காரையே நாசம் பண்ணிட்டான்” என்று திட்டிக் கொண்டே வெளியே பார்வையை திரும்பினான்.

பல வகையான வாயில்லா ஜீவன்கள். ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் தான் இருந்தது.

ஊனம் மனிதர்களுள் மட்டுமல்ல, மண்ணில் பிறந்த அத்தனை ஜீவராசிகளிலும் உண்டே.

இறைவன் படைப்பில் குறைவில்லை எனினும், இடையில் மனிதன் எனும் அரக்கன் குறையின்றி வாழவிடுவதில்லை போலும்.

கண்கள் பிதுங்கி வெளிய தள்ளிய நாய் துவக்கம், ஒரு பக்கம் முழுவதும் முகம் சிதைந்திருந்த நாய் என ஒவ்வொன்றும் அருவருக்கதக்க வகையில் இருக்க, அவைகளை பார்த்ததும் மீண்டும் குமட்டி கொண்டு தான் வந்தது சரணுக்கு.

அதுமட்டுமின்றி ஒரு காலை இழந்த நாய்கள் முதல் மொத்தமாக நான்கு கால்களும் முடமான நாய் வரை அந்த கூட்டத்தில் இருந்தது. அதற்கும் செயற்கை கால்கள் பொறுத்தபட்டு நடக்க வைத்திருந்தான் அந்த மனிதநேயன்.

விஷ்ணு டாக்டர் என்று அழைத்தாலே, மெய்யாலும் சிறந்த மருத்துவன் தான் அவன். மனிதர்களை கூட மதிக்காத அகிலத்தில், ஐந்தறிவு ஜீவராசியை கூட செலவு செய்து பார்த்துக் கொள்கிறான் இந்த அகிலன்.

மக்கள் மத்தியில் வாழ்ந்திருந்தால் இந்நேரம் இவைகள் உயிர் நிச்சயம் அதன் உடலை பிரிந்திருக்கும்.

இந்த அகிலத்தில் அவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒருவன் கண்ணில்பட்டதாலோ என்னவோ நலமாக வாழ்ந்து வருகிறது.

அருவருப்பு தாண்டி அதையே பார்த்துக் கொண்டிருந்த சரண் இதயம் கனத்து தான் போனது.

யாவும் இறைவன் படைத்த உயிர் தானே.

சரண் இதயத்திலும் இரக்கம் வந்தது.

கனத்த மனதுடன் அவன் பார்வை அவைகள் மீது படிந்திருக்க,

“நான் கிளம்புறேன் டாக்டர் சார். லீவ் நாள் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி கொண்டே விஷ்ணு வெளியே வந்தாள்.

அகிலனும் அவளுடன் வந்தான்.

சரண் காரை சுற்று நின்றிருந்த நாய்களை துரத்தி விட்டவன்,

சரண் அருகே வர,

சரணும் காரிலிருந்து கீழே இறங்கி நின்றான்.

“இவரு?” என்று அகிலன் விஷ்ணுவை பார்க்க,

“இவராண்ட தான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன் சார்” என்றாள்.

“ரொம்ப நன்றி சார். நிற்க கூட நேரமில்லாம ஓடுற மனுஷங்க மத்தியில ஒரு உயிரை காப்பாத்தி கொண்டு வந்து இருக்கீங்க” என்று அவன் சினேக புன்னகையுடன் நன்றி கூற,

“நானா?” என்று தான் கேட்டான் சரண்.

“ஆமா நீங்க தான். கார் கூட நாஸ்தியாகிடிச்சு. சாருக்கு ரொம்ப பெரிய மனசு” என்று விஷ்ணு சொல்ல,

காரில் வைத்து விஷ்ணுவை திட்டியதை நினைத்தவனுக்கு புறையேரியது.

க்கும்.. என்று இருமி கொண்டவன், “கிளம்பலாமா?” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே காருக்குள் ஏறிட,

“பை டாக்டர் சார்” என்று உற்சாகமாக அகிலனுக்கு டாட்டா காட்டிக் கொண்டே விஷ்ணுவும் ஏறினாள்.

அகிலனும் கையசைத்து விலகி நிற்க, சரணும் சினேக புன்னகையுடன், மெலிதாக தலையசைத்து கொண்டான்.

கார் நகரவும், நாய்களும் விலகி நின்று குரைக்க, “பை” என்று காருக்கு வெளியே கையை தூக்கி ஆட்டி கொண்டே சென்றிருந்தாள் விஷ்ணு துர்கா.

இப்போதும் அவள் முகத்தில் சோர்வு இல்லை. இன்னும் உற்சாகமாக தான் இருந்தாள்.

அவள் மேல் அனலை வீசும் விழிகள் இரண்டும், அலட்டல் இல்லாது அவளை தான் பார்த்துக் கொண்டே வந்தது.

“தீ எங்க தளபதி…
பேர கேட்டா விசிலடி…” என்று பாடல் ஒன்றை ஹம்ப் பண்ணிக் கொண்டு ஸ்டியரிங்கில் தாளம் தட்டி கொண்டே விஷ்ணு வண்டி ஓட்ட,

முதல் முறை சரண் விழிகள் அவளை மனிதனாக பார்க்கிறது.

“அவர் யாரு?” அகிலன் பற்றி விசாரித்தான்.

“மாட்டு டாக்டர் பாஸ்” என்றதும் அவனையும் மீறி அவன் இதழ்கள் விரிந்து கொள்ள,

அவன் சிரிப்பதை பார்த்த விஷ்ணுவோ

“அதான் இந்த மிருகங்களுக்கு எல்லாம் வைத்தியம் பாக்குற டாக்டரு” என்று அவள் விளக்கம் சொல்ல,

இதழ்களில் உறைந்த புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான் சரண்.

“உனக்கு எப்படி தெரியும்?”

“ஒரு நாள்… ரோட்ல அடிபட்டு கிடந்த நாய் ஒன்ன கையில வச்சிட்டு லிஃப்ட் கேட்டார். ஆட்டோ எதுவும் ஏத்த மாட்டேன் சொல்லிட்டான். நான் இங்க கொண்டு வந்து விட்டேன். ரொம்ப நல்ல மனுஷன் பாஸ்.

நாமெல்லாம் எல்லாம் இருந்தும் எதையோ தேடி நிம்மதியே இல்லாம ஓடினே இருக்கோம்ல. ஆனா வாழ்றதே போராட்டமா இருக்கிற நிலையில கூட இதுகளாம் வாழ்ந்துட்டு தானே இருக்கு. இந்த மாதிரி பார்க்கும் போது நமக்கு கிடைச்சு இருக்கிற வாழ்க்கை எல்லாம் ஆயிரம் மடங்கு பெட்டர்னு தோணும் பாஸ். நம்மள மாதிரி மனுஷங்க தான் அடுத்தவனை பார்த்து பொறாமைபட்டு, வயிறெஞ்சி, நாமளும் வாழாம, அடுத்தவனையும் வாழ விடாம, நிம்மதி இழந்து அலையுறோம்.

முன்னெல்லாம் நானும் கூட யோசிச்சு இருக்கேன். கடவுள் என்னையும் அம்பானி ஊட்ல பொறக்க வச்சியிருந்தா சும்மா ஜம்முனு வாழ்ந்து இருக்கலாம். நல்ல சோறு கிடைச்சு இருக்கும்னு.

நல்ல சோறுக்கு ஆசை பட்டேன். ஆனா ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமா இங்க நிறைய பிள்ளைங்க இருக்காங்க. அவங்களை பார்க்கும் போது கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கை தானே கொடுத்து இருக்கார்னு புரிய வச்ச மனுஷன் பாஸ் அவரு.

இப்போலாம் கடவுள் கூட சண்டை போட தோனினா இங்க தான் வருவேன். அந்த இடம், அங்க இருக்கிற வாயில்லா ஜீவன்களை பார்க்கும் போது இத விட உனக்கு பெட்டர் லைஃப் கிடைக்குமானு? கடவுள் கேட்கிற போல இருக்கும்.

கண் இல்லாத மனுஷன் கூட சந்தோசமா வாழ்றான். ரெண்டு கண்ணு இருக்கிற நாம தான் கண்ணை மூடிட்டு வாழ்க்கையை தொலைக்கிறோம்.

கடைசியாக ஒன்னு சொல்லவா பாஸ்? நாம வாழ்ற இந்த வாழ்க்கை நமக்கானது. அடுத்தவனை கெடுக்காம சந்தோசமா இருக்க என்னவோனா பண்ணிக்கலாம்.

அவ்வளவு தான்” என்று பெரிய மனுஷி போல பேசிக் கொண்டு வந்தவளை அவனும் இமைக்காது பார்த்து கொண்டே வந்தான்.

காரும் சரண் வீட்டை அடைந்து இருக்க,

எதுவும் பேசாமல் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றவன் எதிரே,

“விஷு” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் நட்சத்திரா.

மனமோ, அவளுக்கு வழிவிட்டு விலகி செல்ல, ஆணாதிக்க காதலனோ கைமுஷ்டியை மடக்கி தன்னை அடக்கிய கொண்டே தன் அறைக்கு சென்றிருந்தான்.

விஷ்ணு மேல் சரணுக்கு இருந்த கோபம் எல்லாம் தன் வீட்டு பெண்ணிற்காக தானே.

சிறு பெண் அவள். அவளை யாரும் தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்ள கூடாது என்ற அக்கறையும், பாசமும் அவள் மீது அதிகமாகவே இருக்கிறது.

காதல் தாண்டிய பாசம் அது. அவள் வளமான வாழ்க்கை வாழ ஆசை கொண்டானே தவிர, அவள் உடலை ஆளும் ஆசைகள் இதுவரை வந்ததே இல்லை.

விஷ்ணு பற்றி அவன் அறிந்தது எதுவும் நலமாக இல்லை. ஏழை பையன். பைக் ரேசர். டிகிரி கூட இன்னும் முடிக்கவில்லை. நிலையான வேலை இல்லை. அவனை மணமுடித்து இவள் எப்படி நலமாக வாழமுடியும்? என்ற கோபம் தான் அவனுக்கு.

ஆனால் அத்தனை குறைகளையும் ஒரே செயலில் நிறைகளாக மாற்றி விட்டானே அந்த விஷ்ணு.

ஆம். இரவு வரை விஷ்ணு மீது உள்ள கோபத்தை தலைமேல் தூக்கி வைத்து சுற்றி கொண்டிருந்தவனால், அந்த பண்ணைக்கு சென்று வந்த பிறகு தன் கோபத்தை தொடரமுடியவில்லை என்பது தான் உண்மை.

நட்சத்திரா அவனை நோக்கி ஓடிய போதும் ஏனோ அவளை தடுக்க மனமில்லை.

விலகி சென்றான். விஷ்ணுவின் நல்ல மனதிற்கு தன் நேசத்தை உதறி சென்றான்.

ஆனால் அவன் காதலை தியாகம் செய்யும் அளவிற்கு அவள் காதல் மதிப்பானதா? என்பதை அறிய மறந்தான் தியாக செம்மல்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 9

“விஷு” என்று நட்சத்திரா விஷ்ணு அருகே ஓடி வர,

அவளும் கைகளால் தலையை கோதி கொண்டே நட்சுவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் டே. ஸ்டார்ட் பண்ணலாமா? இடம் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டேன். வா…” என்று விஷ்ணு கையை பிடித்து இழுத்துக் கொண்டே தோட்டத்தில் அலங்கரித்து இருந்த வண்ண விளக்குகள் அருகே அழைத்து சென்றாள்.

“அய்யோ! என்று அவள் செய்து வைத்திருந்த அலங்காரங்களை மெச்சும் பார்வை பார்த்தவள்,

“நட்டே உன்ன என்னமோ நினைச்சேன். ஆனா ரசனைகாரி தான் நீ” என்று முதல்முறை நட்சத்திராவை புகழ்ந்தாள்.

சும்மாவே அவள் பின்னால் நாய்க்குட்டி போல் சுற்றும் பெண்ணை இப்போது சொல்லவா வேண்டும்?

“நிஜமா உனக்கு பிடிச்சு இருக்கா? தோட்டக்காரர் தான் இதெல்லாம் பண்ண உதவி பண்ணினார்” என்று உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தவள் அப்போது தான் விஷ்ணுவின் உடையில் படிந்து இருந்த இரத்த கரையை பார்த்தாள்.

“அச்சோ! என்ன இது?” என்று பதறி கேட்க,

“இது ஒண்ணுமில்ல. வர்ற வழியில ஒரு ஆக்சிடென்ட்” என்றாள் அவள் சாதாரனமாக..

“ஆக்சிடென்ட்டா?” என்று வாயை பிளந்த நட்சத்திராவோ,

“உனக்கு எதுவும் ஆகளையே” என்று அவசர அவசரமாக அவளை சோதிக்க,

“எனக்கு ஒன்னும் இல்ல, ஒரு நாய்க்கு தான் அடி பட்டுடிச்சு” என்றதும்,

“நாயா?” என்று நட்சுவின் ஸ்ருதி குறைய,

“என்ன நாயா? ஏன் அதெல்லாம் உயிரா உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று வேதாளம் சட்டென்று முருங்கை மரம் ஏற தயாராகவும்,

அவள் முகம் மாற்றம் கண்டு பேந்த விழித்த பெண்ணும்,

“ஹி… ஹி… ஆமா அதுவும் ஒரு உயிர் தானே. ஐ லவ் டாக்ஸ் ஆல்சோ” என்று அடித்து விட்டு கொண்டே தன் காரியத்துக்கு அவளை தயார்படுத்த முயன்றாள்.

“இந்த ட்ரஸ்ல எப்படி ரீல் ஷூட் பண்றது?” என்று முகத்தை சுருக்கி விஷ்ணுவை அவள் பார்க்க,

“முடியாதா? அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் கிளம்புறேன்” என்று முறுக்கி கொண்டு சென்றவளை,

“அய்யோ போயிடாத” என்று அவள் ஷர்ட் காலரை பிடித்து தன் பக்கம் திரும்பிய நட்சத்திராவோ,

“நீ இந்த ட்ரஸ்லயே பண்ணு. நான் ஏதாவது ஃபோட்டோ எடிட் பண்ணிக்கிறேன்” என்றவள், தான் எடுக்க போகும் வீடியோ பற்றி அவளுக்கு சொன்னாள்.

பல முறை முயன்றும் நட்சத்திரா எதிர்பார்த்தது போல் காட்சி வரவில்லை.

“என்ன விஷு… இதுல இருக்க போல பண்ணு” என்று வீடியோ ஒன்றை எடுத்து காட்டியவள், கொட்டும் பனி இரவில், இரண்டு பாக்கெட் தண்ணீரை காலி செய்து, இருவரும் தொப்பலாக நனைந்து உடல் நடுங்கிய பிறகும் விட்டாளில்லை.

“இந்தா பாரு நட்டே… நான் ஒழுங்கா தான் தூக்கி சுத்துறேன். நீ தான் சரியா பண்ணல. இந்த மாதிரி என்னை குறை சொல்லிட்டு இருந்தேனுவை அப்புறம் சரி தான் போடினு போய்கினே இருப்பேன்” என்று விஷ்ணு மிரட்ட,

மாடி வீட்டு மாடபுறாவும் “ஹி… ஹி… அடுத்த முறை சரியா பண்றேன்” என்று தரையிறங்கி வந்தாள்.

அடிபணிய ஆள் இருந்தாள், ஆமை குஞ்சு கூட அனகோண்டா என்று தன்னை நினைத்து கொள்ளும் போல.

சரணிடம் வேலை பார்க்கிறாள். அதனால் அவன் சொல்லுக்கு மரியாதை கொடுக்கிறாள்.

ஆனால் நட்சு இவள் அடிமை அல்லவா! அதான் ஆள் அவள் இஷ்டத்துக்கு மிரட்டுகிறாள்.

மீண்டும் தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்து கொண்டு தயார் நிலையில் நின்றிருந்த நட்சத்திராவை விஷ்ணு ஓடி வந்து தூக்கி சுற்ற, தன் கையில் வைத்திருந்த பாட்டிலை அழுத்தினாள் நட்சத்திரா.

பாட்டிலில் போடப்பட்டிருந்த சிறு சிறு துவாரங்களிலிருந்து பீறிட்டு சிதறிய நீர் துளிகள் வண்ண விளக்குகளின் உதவியால் அழகாக ஒளிசிதறல் மழையாகிட, நட்சுவின் அடிமையான வேலைக்கார பெண் கமலா அதை அழகாக படம் பிடித்தார்.

அவள் ரீல்ஸ் என்று சுற்றியதில் உருப்படியாக செய்த ஒரே விசயம் என்றால் அது சமையல்காரி கமலாவை ஷங்கர் பட பிலிமோகிரபர் அளவுக்கு வளர்த்து விட்டது தான்.

“வாவ்… பெர்பெக்ட் ஷாட்” என்று சொல்லிக் கொண்டே கை முட்டியை மடக்கி விஷ்ணு தோளில் வைத்து சாய்ந்து நிற்க, பட்டென்று அவள் கையை தட்டி விட்ட விஷ்ணுவோ,

“இங்க பாரு. ஷூட் டைம் தாண்டி, என்மேல அட்வான்டேஜ் எடுத்து தொடுற வேலையெல்லாம் வச்சிக்க கூடாது” என்று கறாராக சொல்ல,

“சரி சரி கோபப்படாத. இன்னும் நிறைய வேலை இருக்கு. உனக்கு ட்ரஸ் மாத்தணும். எஃபெக்ட்ஸ், வீடியோவுக்கு சாங் செட் பண்ணி வீடியோ அப்லோட் பண்ணனும்” என்று படபடத்த நட்சத்திராவும், விஷ்ணுவுக்கு தலை துவட்ட டவலை கொடுத்தவள், மற்றொரு டவலால் தன் தலையை துவட்டிய படி வீட்டிற்குள் சென்றிருந்தாள்.

இதையெல்லாம் தன் அறையில் இருந்து நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சரண் தேவ்.

நட்சத்திரா முகத்தில் இருந்த புன்னகை அவனை ஏதோ செய்தது. அந்த பொடியனுடன் தான் அவளால் சந்தோசமாக வாழ முடியும் என்றால் நடுவில் நான் எதற்கு தடையாக இருக்க வேண்டும்? என்று எண்ணிக் கொண்டே விழியகற்றாது அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இங்கே வெளியே நின்று தலையை துவட்டி கொண்டிருந்த விஷ்ணு, முன் நெற்றியில் புரண்ட முடிகளை கைகளால் சிலுப்பி விட்டுக் கொண்டே வீட்டிற்கு செல்ல எத்தனித்தவள் பார்வை அவள் செட்டில் விட்டு வந்த கார் மீது படிந்தது.

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டவள் ஒரு பக்கெட் தண்ணீரோடு காரை நோக்கி சென்றாள்.

அவளால் தானே கார் அழுக்கானது அதை சுத்தம் செய்யும் பொறுப்பும் அவளுடையது தானே என்று எண்ணி அவள் காரை சுத்தம் செய்து கொண்டிருக்க,

மணி பத்தை கடந்து விட்டது.

“வீட்டிற்கு செல்லாமல் இன்னும் இவன் இங்க என்ன பண்றான்?” என்று யோசித்துக் கொண்டே, அந்த இடத்தில் நட்சத்திராவை தேட,

அவள் தான் என் வேலை முடிந்தது என்று எப்போதோ வீட்டிற்குள் வந்திருந்தால் அல்லவா.

“அம்மா… போதும். நிறைய சாப்பிட்டா குண்டாகிடுவேன். அப்புறம் வீடியோ எடுக்கும் போது நல்லா இருக்கக் மாட்டேன்” என்று அவள் குரல் வீட்டுக்குள் இருந்து வந்தது.

விஷ்ணு மட்டும் தனியே இருப்பதை கண்ட சரண் அவளை நோக்கி வந்தான்.

“நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா”

என்று பாடிக் கொண்டே காரை சுத்தம் செய்து கொண்டிருந்தவள்,

“இன்னும் இங்க பண்ற? வீட்டுக்கு போகல” என்று கேட்ட சரண் குரலில் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“போனும் பாஸ். என்னால தானே கார் நாஸ்தி ஆகிடிச்சி. அதான் கழுவினு இருக்கேன்.”

“நாளைக்கு வந்து பார்த்துக்கலாம் கிளம்பு” என்று அவன் சொல்ல,

“நாளைக்குனா இந்த கரை காஞ்சிடும், அப்புறம் தொடைக்க கஷ்டமா இருக்கும். இப்பவே தேச்சு விட்டா போய்டும்” என்றாள் பிரஷால் அழுத்தி தேய்த்துக் கொண்டே.

“வாட்டர் சர்வீஸ் விட்டுக்கலாம்” மாற்றுவழி அவன் சொல்ல,

“என்னால ஆனா சேதாரத்துக்கு நான் தான் பொறுப்பு” என்ற பொறுப்பு பொக்கிஷத்தை கையை கட்டி பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.

விஷ்ணுவும் எல்லாம் சுத்தம் செய்து, பக்கெட்டையும் எடுத்த இடத்தில் வைத்து விட்டு வர,

அப்போதும் அதே இடத்தில் நின்று அவள் செயல்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வேலை செய்ய சாக்கு சொல்லவில்லை. எந்த வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்கிறான். கொஞ்சம் பொறுப்பான பையன் தான். இறுதியாக அவளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினான் சரண்.

“சரி பாஸ். நான் கிளம்புறேன். காலையில வர்றேன்” என்று சொல்லி கொண்டு சென்றவளை,

“ஏய்…” என்று அழைத்தான்.

“இன்னா பாஸ்” என்று விஷ்ணும் அவன் அருகே வர,

“வா” என்று அழைத்தபடி அவன் முன்னே செல்ல,

“எதுக்கு கூப்புடுறார். இன்னும் ஏதாவது வேலை இருக்கா? பசி வேற வயித்த கிள்ளுதே. தீனி போடாது கால் ஓடாதே” என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே விஷ்ணுவும் அவன் பின்னால் சென்றாள்.

சரண் வீட்டுக்குள் நுழைய, வாசலிலேயே நின்றுக் கொண்டாள் விஷ்ணு.

“என்ன?” என்பது போல் அவன் திரும்பி அவளை பார்க்க,

“இல்ல ட்ரஸ் எல்லாம் ஈரமா இருக்கு. அதுவும் இல்லாம நானும் அழுக்கா இருக்கேன். நீங்க வேற பளபளனு வெள்ளை கலர்ல மொசைக் போட்டு வச்சி இருக்கீங்க தரை அழுக்காகிடும்” என்று அவள் இழுக்க,

“பரவாயில்லை. அதான் துடைக்க நீ இருக்கியே” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றவன்,

தன் அறைக்கு சென்று, அவன் பழைய உடை ஒன்றை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்.

“ரொம்ப நேரம் ஈரத்தோட இருந்தா சளி பிடிக்கும். அப்புறம் சப்ஸ்டிடியுட் டிரைவருக்கு இன்னொரு சப்ஸ்டிடியுட் நான் தேடணும்” என்று உர்ரென முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,

அதை வாங்கி கொண்டவள், வெளியே இருந்த வேலைக்காரர்களுக்கான கழிவறையில் சென்று ஆடையை மாற்றி வந்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ் பாஸ். ஒரு கவர் கிடைக்குமா” என்று கேட்க,

“எதுக்கு?” என்று தான் விழி சுருக்கினான் சரண்.

“ஈர துணிய எடுத்துட்டு போக” என்று கையில் இருந்த தன் உடைகளை அவள் காட்டிட,

ஹ்ம்ம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே இருந்து பிளாஸ்டிக் கவர் ஒன்றையும் எடுத்து வந்து கொடுத்தான்.

“மறுபடியும் தாங்க்ஸ் பாஸ்” என்று சொல்லி விட்டு செல்ல இருந்தவளை மீண்டும் அழைத்தான்.

“ஏய்… இங்க வா” என்று சொல்லி கொண்டே டைனிங் டேபிள் நோக்கி அவன் போக,

அவனை விநோதமாக பார்த்துக் கொண்டே விஷ்ணுவும் அவன் பின்னால் சென்றாள்.

“சாப்பிடு” என்று சொல்லி, அவனே அவளுக்கு உணவை எடுத்து வைக்க,

“இங்க உட்கார்ந்தா” என்று தான் கண்கள் விரிய கேட்டாள்.

காலையில் வீட்டுக்குள்ளேயே வர கூடாது என்று திட்டியவன், இரவு நடு வீட்டிற்குள் வைத்து அவளுக்கு சோறு போட்டால் அவளும் ஆச்சர்யப்பட தானே செய்வாள்.

“பின்ன நிலாவுலயா?” என்றவன் அவள் எதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள,

அவளும் அவன் எதிரே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

வீட்டில் எல்லாரும் தூங்க சென்றிருந்தார்கள். அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் ஹாலில் இல்லை. வீடே அமைதியாக இருந்தது.

மேஜையில் இருந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் விஷ்ணு திறந்து பார்க்க, அவளை விழிகள் இடுக்கி பார்த்துக் கொண்டிருந்த சரணோ “என்ன தேடுற?” என்று தான் கேட்டான்.

பாத்திரங்களை அலசியபடி “சோறு இல்ல?” என்று கேட்டவளை பார்த்து சரண் முறைக்க,

“இல்லனா இல்லை சொல்லுங்க, அதுக்கு ஏன் முறைக்கிறீங்க?” என்று சொல்லிக் கொண்டே அவன் வைத்த இட்லிகளை வயித்துக்குள் தள்ளியவள்,

“எப்படி தான் இதையெல்லாம் தின்னு உயிர் வாழறீங்களோ? நமக்கு நாலு வேலையும் சோறு தின்னா தான் சாப்பிட்ட பீல் வரும்” என்று சலித்து கொண்டே சாப்பிட்டு முடிக்க,

‘பாவம் பார்த்து சாப்பாடு போட்டா ஓவரா பண்றான்’ என்று முணுமுணுத்து கொண்டான் சரண்.

கையை கழுவி தான் போட்டிருந்த சரணின் பேண்டில் கைகளை துடைத்து கொண்டவள், வலது கையை தூக்கி வழக்கமாக துடைப்பது போல் டிஷர்ட்டில் வாயையும் துடைத்துக் கொண்டாள்.

அவன் உடையின் வாசம் நாசி உணர, கண்களை மூடி மீண்டும் வாசம் பிடித்து கொண்டவள்,

“செம ஸ்மெல் என்ன டிடர்ஜென்ட் யூஸ் பண்றீங்க?” என்று கேட்க,

இங்கே சரணுக்கு தான் அவன் உடையின் வாசத்தை அவள் நாசி நுகர உள்ளுக்குள் சில்லிட்ட உணர்வு. ஏதோ அவனையே நுகர்ந்து பார்த்த உணர்வு.

“அப்படி பண்ணாத” என்று சொல்லி கொண்டே அவள் துணி கவரை எடுத்து அவள் கையில் கொடுத்தவன், “கிளம்பு” என்று அவள் முதுகை பிடித்து தள்ளினான்.

விஷ்ணுவும் நல்லாதானே இருந்தார். திடீர்னு என்னாச்சி இருவருக்கு? என்று அவனை யோசனையாக பார்த்துக் கொண்டே வெளியே வர,

மீண்டும் அவளை அழைத்தான்.

“ஏய்…” என்று.

“இங்கேயே தூங்கிக்கவா பாஸ்?” என்று முகம் மலர கேட்டவள், அடுத்த நொடியே “வீட்ல அம்மா தேடும்” என்று மறுக்க,

‘உன்மேல எல்லாம் பாவமே பார்க்க கூடாது. விட்டா நட்சு ரூம்ல தங்குறேன் சொல்வான் போல’ என்று உள்ளுக்குள் சிடு சிடுத்துக் கொண்ட சரணோ,

“இந்நேரத்துல தனியா எப்படி போவ? ஆட்டோ கூட கிடைக்காது. கார் எடுத்துட்டு போ. காலையில எடுத்துட்டு வா” என்று சாவி தூக்கி போட, கண்கள் மின்ன பார்த்தாள் விஷ்ணு.

“பாஸ் நிஜமா உங்களுக்கு தங்கமான மனசு பாஸ். மாரி அண்ணே எப்பவும் உங்களை புகழ்ந்துகிட்டே இருக்கும். அப்போல்லாம் ஓவர் உருட்டாலா இருக்கேனு நினைச்சு இருக்கேன். ஆனா நீங்க மனிதர் குல மாணிக்கம் பாஸ்” என்று துள்ளலாக சொல்லி கொண்டே காரை எடுத்துக் கொண்டு அவள் செல்ல,

செல்லும் அவளை தான் விழியாகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான் சரண் தேவ்.

மனதை அழுத்திய பாரம் நீங்கிய உணர்வு அவனுக்கு. அறைக்கு சென்றவன் நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் நிம்மதியாக உறங்கினான்.

அவன் யார் வாழ்வையும் கெடுக்கவில்லை. யார் சந்தோஷத்துக்கு குறுக்கே நிற்கவில்லை என்ற நிதர்சனமே நிம்மதியை கொடுத்தது.

அவன் மனம் நிம்மதி அடைந்து விட்டது.

ஆனால் அடுத்த நாள் காலையிலேயே அத்தனை பேர் நிம்மதியையும் குழைத்து விட்டானே.
 
Status
Not open for further replies.
Top