ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே - கதை திரி

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 22

குமரனுக்கோ தன் கண்களில் கோளாறோ, இல்லை பிரபஞ்சனது முகத்தினை பார்த்து பார்த்து, தற்போது யாரை பார்த்தாலும் அவனைப் போல் தோன்றுகிறதோ! என்று அவன் மனதிற்குள் ஆயிரத்தெட்டு கேள்வி கணைகள் உருவாகியிருக்க தன் வாயை ஆவென பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்னையா இங்க நடக்குது. வெளியே இருந்தவன் அதுக்குள்ள உள்ள எப்படி வந்தான்? அய்யய்யோ இப்போவே கண்ணைக்கட்டுதே!" என்று அவன் மனசாட்சி ஏகத்துக்கும் புலம்ப, குமரனோ திருதிருவென விழித்தான்.

"டேய் பிரபா, வேணும்னே விளையாடுறியா? என்னை குழப்புறதுக்காகவே, வரமாட்டேனு சொல்லி வந்து நிக்குறியாடா." என்று தலையை சொறிந்துக் கொண்டே யோசனையோடு அவனை நெருங்கினான்.

ஏற்கனவே சதாசிவத்தின் பேச்சில் கடுப்பில் இருந்தவன், இவனை கண்டு ஏகத்துக்கும் முறைக்க, அதை அறியாத சிறுபாலகன் குமரனோ, ' அடியாத்தி அதே காமப் பார்வையால்ல இருக்கு. கண்டிப்பா பிரபாவே தான். வேணும்னே நம்மளை குழப்ப பார்க்குறான் போலயே.' என்று நினைத்துக் கொண்டே "என்னடா லுக்கு. டேய் உண்மை சொல்லு மச்சான். என்னை குழப்புறதுல உனக்கு என்ன அம்புட்டு சந்தோசம்." என்று கூறிக்கொண்டே மாலையினை சதாசிவத்தின் கைகளில் ஒப்படைத்தான்.

சதாசிவமோ சற்று முன்பு அவனிடம் நன்கு திட்டு வாங்கியிருந்தார். ஆம் பெரியவர் என்றும் கூட பாராமல் "யோவ் பெருசு. மென்டல் ஆஸ்பிடல்ல இருந்து நேரா வந்துட்டியா? வந்ததுல இருந்து அறிவுகெட்டதனமா பேசுற?" என்று கோபத்தில் பேசியிருந்ததில் ஆடிப்போனவர், அப்போதே தெரிந்துக் கொண்டார் இவன் பிரபஞ்சன் அல்ல, பிரபஞ்சனது நகலை போன்ற உருவம் கொண்ட வேறு ஒருவன் என்று.

சதாசிவமோ "ஸ்சு... ஸ்சு" என்று உதடுகளை குவித்து சத்தம் எழுப்பியபடி குமரனை அழைக்க, அதை பெருதாக அலட்டிக் கொள்ளாத குமரனோ,

"என்ன பாஸ். இவன் தான் என்னை ஏமாத்துறானா? நீங்களும் சேர்ந்து நல்லா பண்றீங்க? இந்த அஞ்சுகாசுக்கு பெறாத மேஜிக் ட்ரிக்குக்கெல்லாம் பயப்படுற ஆளா நானு.... என்னை உள்ள அனுப்பிட்டு, ஒன்னுமே தெரியாதவன் மாதிரி இங்க வந்து நிற்பான், அதை பார்த்து அப்படியே நான் சாக் ஆகிடுவேனாக்கும். நாங்க எல்லாம் யாரு?" என்று இருக்கும் காலரினை தூக்கிவிட்டவன் சற்று முன்பு அதிர்ச்சியுற்றதை மறைத்தபடி, அகிலனது தோளில் கைப்போட, குமரனையே பாவமாக பார்த்தார் சதாசிவம்.

'குமரா எனக்காவது திட்டுதான் விழுந்துச்சு. உன்நிலைமையை நினைச்சா கவலையா இருக்கேபா.... அந்த முருகன்தான் துணையா இருக்கனும்.' என்று பெருமூச்சொன்றை விட்டவர் அகிலனது முகத்தை பார்க்க, அதுவோ கோபத்தில் சிவந்து போய் இருந்தது.

"அது எப்படி திமிங்கலம் சோகமான மூட்லயும், என்னைக் கடுப்பேத்த உன்னால பிளான் பண்ண முடியுது?" என்று கேட்டுக்கொண்டே அவனது சட்டைக்காலரை தனது இருகைகளாலும் பிடித்து இழுத்தபடி, கைகளை எடுக்க அதுவரை கட்டிக்காத்திருந்த கோபம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் தொடங்கியிருந்தது அகிலனுக்கு.

அவனோ அவனது கன்னங்களை பிடித்து, "என்ன செல்லம் கன்னம் சிவக்குது. மச்சி நீ என்ன ட்ரை பண்றேனு சுத்தமா புரியலைடா. ஆனால் ஒன்னு என்னை யாராலையும் அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது." என்று கூறும் போதே அவனது கைகளை வெடுக்கென்று உதறித்தள்ளிய அகிலனோ, அவனது கன்னத்தினை அறைவதற்காக கைகளை ஓங்க, அவனது திடிர் அதிரடியில் கண்கள் விரித்துக்கொண்டு மலுங்கும் பார்வையினை அவன் மீது செலுத்தியிருந்த குமரனோ அன்னிச்சையாக கண்களை மூட, அடிக்க வந்த அகிலனது கைகளோ அந்தரத்தில் அப்படியே அசையாது நின்றது.

காரணம் அவனது கைகளை மிக இறுக்கமாக பிடித்தபடி குமரனுக்கும் அகிலனுக்கு நடுவில் நின்றிருந்தான் பிரபஞ்சன். சென்ற நண்பனை நேரமாகியும் வராததால் அங்கு வந்தவனுக்கு குமரன் யாரோட பேசியபடி நின்றிருந்த காட்சி துள்ளியமாக கண்களில்பட, அவனை நோக்கி வந்திருந்தான் பிரபஞ்சன். அதற்குள் அவனை அடிப்பதற்காக அகிலன் கை ஓங்கியிருக்க, நொடிப் பொழுதுகூட தாமதிக்காமல் அவனது கைகளை இறுக பிடித்து தடுத்திருந்தான்.

தனது கைகளையே பற்றும் தைரியம் எவனுக்கு வந்தது? என்ற கோபத்தில் அவனை ஏறிட்ட அகிலனது கண்கள் அதிர்ச்சியில் விரிய, அவனுக்கு நேரெதிரே இருந்த பிரபஞ்சனுக்கு சொல்லவா வேண்டும்? அப்படி ஒரு அதிர்ச்சி.

"என்ன பொசுக்குனு கையை ஓங்கிட்டான்." என்று அதிர்ச்சி விலகாமல் தன் மூடியிருந்த கண்களை திறந்த குமரனுக்கு, இந்த இருவரின் காட்சி கண்ணில் பட மயக்கம் வந்து விழாத குறைதான்.

"என்னடா இங்க நடக்குது. அடிக்காமலே இரண்டு இரண்டா தெரியுதே?" என்று அப்பட்டமாக புலம்பிக் கொண்டே தன் கண்களை கசக்கினான் குமரன்.

சதாசிவம் இருவரையும் கண் இமைக்காமல் பார்த்தவர், "எப்படிபா இப்படி ஒரே மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டே விட்டார்.

ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையிலா இருந்தனர் இருவரும். அகிலனுக்கு நன்கு தெரிந்துவிட்டது. கிருபாகரன் சொன்ன விசயத்தாலிருந்தே, இவன் தான் தன்னுடன் பிறந்த மற்றவன் என்பதை உணர்ந்துக் கொண்டவனது, கோபம் படிபடியாக குறைந்து, முகத்தில் புன்னகையை படரச் செய்திருந்தது.

ஆனால் பிரபஞ்சனோ தன்னை அளவெடுத்து செய்ததுபோல இருந்தவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்தது எல்லாம் சிலவினாடிகளே. அவனைக் கண்டதும் ஏற்பட்ட அதிர்ச்சி, ஒரு இனம் புரியாத உணர்வு என அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொள்ள அந்த காரணம் ஒன்றே காரணியாக அமைந்திருந்தது.

தன் நண்பனை அடிக்க கை ஓங்கியவனும், நேற்று தன் மனைவியை அடித்தவனும் இவன்தானே என்று புத்தியில் உரைக்க, அவனது கைகளை வெடுக்கென்று விடுவித்தவன்,

"என்ன மாதிரியே, எப்படி நீ இருக்கேனு புரியலை. ஆனால் நான்தான் நீ என்று நினைச்சுட்டு பேசுறவங்களை அடிக்குறதை இத்தோட நிப்பாட்டிக்கோ. கோபம் இருக்கலாம் அது நியாயமா வரனும். ஓவரா கோபப்பட்டு உன் உடம்பை கெடுத்துக்காத. உன்னால எனக்கு மட்டும் தான் கெட்டப்பேரு." என்று அவனை உச்சி முதல் பாதம்வரை அழுத்தமான பார்வை பார்த்தான் பிரபஞ்சன்.

அகிலனோ அவன் திட்டுவதில் தெரிந்த உரிமையைகூட புன்னகையோடு பார்த்தவன், 'பார்ரா குரல் கூட என்ன மாதிரிதான் இருக்கு. அதே திமிரு அதே கோபம்.' என்று தன் உடன் பிறந்தவனை ரசித்தவரே, "இந்த அகிலனோட கைகளை பிடிக்கனும்னா அதுக்கு தகுதி வேணும். அது உனக்கு மட்டுமே இருக்கு. அதுவும் நீ என்ன மாதிரி இருக்குறதுனால. ஆனால் அதுக்காக நான் எது பண்ணனும், பண்ணக்கூடாதுனு நீ சொல்ல வேண்டாம் தம்பி." என்று அழுத்தமாக கூறியவனது இதழ்களில் அந்த ஆனந்த முறுவல் அப்பட்டமாக தெரிந்தது.

குமரனோ நேருக்கு நேராக பேசிக்கொள்ளும் இருவரையும் டபுள் ஆக்சன் படம் பார்ப்பது போல இமை மூடாமல் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பார்ரா குரல் கூட ஒரே மாதிரில இருக்கு. என்ன ஒரு அதிசயம்." என்று வியப்பாக பார்க்க, சதாசிவமும் "ஆமாடா குமரா இது எப்படிடா சாத்தியம்." என்று புரியாமல் பார்த்தார்.

"பாஸ் பேசாமல் இந்த டவுட்ட நம்ம ஏன் பிரபா அப்பாகிட்ட கேட்கக்கூடாது." என்று காதோரம் முணுமுணுக்க, "கொஞ்சம் அமைதியா இருடா. என்ன பண்றாங்கனு பார்ப்போம்." என்று இருவரையும் பார்ப்பதிலேயே கவனம் செலுத்தியிருந்தார்.

"விளங்கும்... பாஸ் இப்போ உங்க மனசுல இரட்டை கதிரே அந்தப் பாட்டுதானே ஓடுது." என்று சரியாகக் கூற,

"பராவயில்லையே குமரா உனக்கு கொஞ்சம் மூளை எல்லாம் இருக்கு." என்று கூறியதில் "பொசுக்குனு இன்சல்ட் படுத்துவாரே இவரு." என்று புலம்பிக் கொண்டே இருவரையும் பார்ப்பதை செவ்வெனச் செய்தான்.

'தப்பு பண்ணா எமனா இருந்தாலும் தட்டிக் கேட்பேன். நீ எல்லாம் எம்மாத்திரம்.' என்ற தோரணையில் பிரபஞ்சன் பார்க்க,

'பராவயில்லையே. நம்மகூட பிறந்தவன்னு, அந்த பார்வையிலேயே நிரூபிக்குறான். ஐ லைக் இட்.' என்றவன் இதழ்களில் மென் புன்னகை அப்பட்டமாக தெரிந்தது.

'என்னடா இவனுங்க கண்ணாலயே போர் பண்றானுங்க. டேய் ஆக்சன் பிளாக்க இறக்குங்கடா.' என்று மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான் குமரன்.

"இங்க பாரு இவன் என் நண்பன். இவன் மேலே நீ கை வெச்சிருந்தால் நடக்குறதே வேற, ஏற்கனவே நீ பண்ணக்கூடாத ஒன்னை பண்ணிட்ட. என்னை மாதிரியே இருக்கங்குற ஒரே காரணத்துக்காக உன்னை மன்னிச்சி விடுறேன்." என்று விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தவன் குமரனது கைகளை பற்றி அழைத்துக் கொண்டு போக,

" ஆமா இவரு பெரிய ஹீரோ. கொஞ்சமாச்சு நான் யாருனு கேட்கத் தோணுதா பாரு உனக்கு? சரி எங்கப் போகப் போற, திரும்ப எங்கிட்ட நீ வந்துதான் ஆகனும் பிரபஞ்சா." என்று அழுத்தமாக கூறியவனுக்கு அவனது பெயரை சதாசிவம் உரைத்திருந்த நியாபகம் மனதில் தோன்றியிருந்தது.

'பிரபஞ்சன் அகிலன் இரண்டு பேருக்கும் ஒரே பொருள் தான்.' என்று தனக்குள்ளே நினைத்தவனது வலி கூட அவனைக்கண்ட நொடி மறைந்திருந்தது என்னவோ உண்மைதான்.

சதாசிவமும் அவனது கைகளில் மாலையை ஒப்படைத்தவர், "என் பிரபஞ்சன் நீயில்லைபா தம்பி. அதோ அங்க போறான் பாரு அவன்தான். பிரபா என்னைக்குமே பெரியவங்களை அவமதிக்க மாட்டான்." என்று கூறிக்கொண்டே செல்ல,

'அப்போ அவனுக்கு முன்னாடி வெளிய வந்த என்னை மட்டும் அவமாதிக்குறானே பெரிசு.' என்று சொல்லத் துடித்ததை மனதிலேயே கூறிக்கொண்டான் அகிலன்.

கல்லூரியில் தன் தோழிகளின் மத்தியில் அமர்ந்திருந்த யாழினியின் மனமோ தனியே தவிக்க, மனம் முழுவதும் ஒரே பாராமாகவே இருந்தது. அகிலனை சந்தித்ததிலிருந்தே அவள் அவளாகவே இல்லை. அவள் சிந்தனை முழுவதையும் தொலைத்திருந்தாள்.

"ஏய் யாழி. என்னடி அமைதியா இருக்க? இந்த சாரு எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு இருக்கா?" என்று அவளை உலுக்கினாள் பிரியா.

"என்ன விசயம்டி?" என்று எதையுமே கவனிக்காமல் அவள் கேட்க,

"நீ இந்த லோகத்துலதான இருக்க?" என்றாள் பிரியா.

"இருக்கேன் இருக்கேன். என்னடி அவ பிரச்சினை?"

"அது ஒன்னுமில்லை பேபி. நம்ம சாரு காதல் வசனமா பேசுறாடி."

"அப்படி என்னடி பேசுனா?" என்று சாருவை நோக்க, அவளோ, "காதல் புனிதம்னு சொன்னது குத்தமா யாழி. என்னை போட்டு வறுத்தெடுக்குறாங்க." என்று வாய்விட்டு புலம்பியவளை சினேகப் பார்வைப் பார்த்தாள் யாழினி.

பிரியாவோ, "இவ மணிரத்னம் பட டயலாக் விடுறாடி. என்னடி சாரு நேத்து ஆயுத எழுத்து படம் பார்த்தியா?" என்று வாய்விட்டே சிரிக்க,

"படம் பார்த்தால் தான் தெரியனும்னு இல்லை. காதல் புனிதம் தான். ஆனால் அதை குழப்பாமல் பார்த்துக்கனும்." என்று கூறிய யாழினிக்கோ அகிலனது நினைவு தான் கண்முன் தோன்றியது. பின் தன் தமக்கையை நினைத்தவளுக்கு நொடி பொழுதில் அவள் முகமே மாறியது.

'நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்குறேன். ஒன்னு இல்லை யாழி.' என்று தன்னைத்தானே தேற்றியவள் தன் தோழிகளோடு பேசத் தொடங்கினாள்.

பிரபஞ்சனிடம் பேசிய குமரனோ, "டேய் பிரபா இது எப்படிடா சாத்தியம்? உன்னை மாதிரியே எப்படி இருக்கான். அதுவும் அச்சு பிசங்காமல் அப்படியே இருக்கான்டா." என்றவனை முறைத்தவனோ,

"இதோட ஐம்பதாவது தடவை இதே டயலாக் சொல்ற? எனக்கு மட்டும் எப்படிடா தெரியும்?"

"ரைட்டு விடு. ஆனால் ஒன்னுடா நீங்க இரண்டு பேரும் ஒன்னா இருந்தது பார்க்க செம விசுவல் ட்ரீட்டா இருந்துச்சு."

"இருக்குமில்ல உனக்கு. சரியான காட்டான் மாதிரி கோபப்படுறான். என் பூவினியை நேத்து அடிச்சது இவன்தான்டா. இவனால நான் அசிங்கப்பட்டேன். அப்போவே சட்டையை பிடிச்சு நாலு வார்த்தை நறுக்குனு கேட்ருப்பேன். ஆனால் எதையும் பார்க்காமல் பேசக்கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக விட்டுட்டு வந்தேன்."

"எனக்கு என்னமோ அது மட்டும் காரணமா தெரியலையே. அவன் உன்னை மாதிரியே இருக்கானு பீல் ஆகிட்டதானே மச்சான்." என்று கண்ணடிக்க, ஏனோ அவன் உள்ளோரம் அவனைப் பார்த்ததும் துடித்த இதயத்தின் துடிப்பினையும், இனம்புரிய பரவசத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு மனதில் எதோ ஒரு இன்பம் தோன்றத்தான் செய்தது.

"ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒன்னுமில்லை. அவனை இனி பார்க்கவே கூடாதுனு நினைக்குறேன்." என்று மனதில் இருப்பதை மறைத்துக் கொண்டு கூறியவன் அறியவில்லை நாளை அவனைத் தேடி ஓடி வருவான் என்று.

"டேய் அவன் யாருடா? அவனை பத்தி கேட்க சொன்னேன்ல." என்றான் குமரனைப் பார்த்து.

"ம்ம்ம் கேட்டேன்டா. நம்ம ரூட்டு தலைகிட்ட. அவன் தான் அகிலன் கிருபாகரன். கல்யாணி இன்டஸ்ட்ரிஸோட ஒரே வாரிசு. அது மட்டுமில்லை இவன் டாக்டராமாம். இந்த மூஞ்சியை பார்த்தால் டாக்டர் மாதிரியா இருக்கு?" என்று வாய்விட்டே சிரித்தவனை பிரபஞ்சன் முறைக்க, 'அய்யய்யோ முறைக்கிறானே' என்று கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

"டேய் நீ அவன் மூஞ்சியை கிண்டல் பண்றேங்குற பேர்ல என்ன ஓட்டுறியா? நான் தப்பு பண்ணிட்டேன். நீ அடி வாங்குனதுக்கு அப்புறம் வந்து பேசியிருக்கனும்." என்றவனை 'ஙே' வென பார்த்தவன்,

"அடப்பாவி பிரபா. என்னை காப்பாற்றிய ஆபத்பாண்டவன்னு நினைச்சா இப்படி அவனைவிட மோசமா இருக்கியேடா. பேசாமல் அந்த அகில் பையலோட சேர்ந்திட வேண்டியதுதான்" என்று வாய்விட்டே புலம்பியிருந்தான் குமரன்.

ஆனால் பிரபஞ்சனோ அதைக் கண்டுக் கொள்ளும் நிலைமையிலேயே இல்லை. அவன் நினைப்பு முழுவதும் அகிலனை பற்றியே இருந்தது.

மாலை ஆறு மணியளவில் வீட்டிற்கு வந்தவன், நேராகச் சென்றது வீட்டிற்கு வெளியே இருந்த குளியலறைக்குதான். வெளியில் காயப்போட்டிருந்த கைலியை எடுத்துக்கொண்டு குளித்து முடித்தவன், அகிலனைப் பற்றி வீட்டில் சொல்ல வேண்டாம் என்ற முடிவினை எடுத்திருந்தான்.

தற்போது உள்ள சூழலில் அவனைப் பற்றி கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்வதை அவன் விரும்பவில்லை. வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு வீடே அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமாகவே இருந்தது.

தனது அறைக்குள் சென்றவன், டீசர்ட் ஒன்றினை எடுத்து அணிந்துக் கொண்டான். அவனது சத்தம் கேட்டு தாமரையின் அறையிலிருந்து வந்த பூவினியோ, "காபி வைக்கட்டுமா?" என்று கேட்க,

என்றும் இல்லாத திருநாளாக அவள் பேசுவதைக் கண்டு ஆச்சரியமாக பார்த்தான் பிரபஞ்சன்.

"அம்மா எங்க? இன்னும் கோபமாகதான் இருக்காங்களா?" என்று அவன் பேசியதுமே அவனை இமை மூடாமல் பார்த்தாள் பூவினி.
அவன் கோபத்தை விடுத்து பேசக்காரணம் ஒன்று தான், அவளை அறைந்தது அகிலன் என்பதால் அவள் நான் என்று நினைத்துவிட்டாள் என்ற நியாயம் புரிய கோபத்தை விடுத்தவன் அவளோடு பேசியிருந்தான். ஆனாலும் அவள் மீதிருந்த வருத்தம் மட்டும் மறையவே இல்லை.

"அதுவந்து உங்ககிட்ட முக்கியமான விசயம் சொல்லனும்." என்று தயங்கிய மனைவியை ஆச்சரியமாகதான் பார்த்தான்.

'இவ இப்படி எல்லாம் அமைதியாக பேசமாட்டாளே. என்னவா இருக்கும்?' என்ற யோசனையோடு ஏறிட்டவனோ " ம்ம்ம் சொல்லு?" என்றான் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி.

அவளோ, இன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, அதைக் கேட்டவனோ மின்சாரம் பாய்ந்தால் உண்டாகும் நிலையில் இருந்தான். இவ்வளவு பெரிய விசயத்தை ஏற்றுக்கொள்ளவே அவன் மனம் சிறிது நேரம் பிடித்தது. தற்போதுதான் அகிலனை வேறு பார்த்திருக்கிறான் என்பதால் நம்பாமலும் இருக்க இயலாது. நமக்கே இவ்வாறு என்றால் தன் தாயின் நிலை என்னவாகும் என்று சிந்தித்தவன் அதிர்ச்சிகளை புதைத்து, கேட்ட முதல் கேள்வி "அம்மா எங்கே?" என்று தான்.

"அழுது அழுது மயங்கிட்டாங்க. அப்பா தான் டாக்டர் கூப்பிட்டு வந்தாங்க. அவங்க அதிர்ச்சியில மயங்கிருக்காங்க. தூங்கி எழுந்ததும் சரியாகிடுவாங்கனு டாக்டர் சொன்னாங்க." என்று கூறி அவள் முடிக்கும் முன்னரே தன் தாயின் அறைக்கு சென்றிருந்தான் பிரபஞ்சன்.

அங்கு கட்டிலில் படுத்துக்கிடந்த தன் அன்னையைக் கண்டதுமே துடித்துவிட்டான். அவரது அருகே ஆறுதலாக தலையை வருடிக் கொண்டிருந்த தன் தந்தையை கேள்வியாய் பார்த்தவன், "ஏன் பா என்கிட்ட கூட சொல்லலை?" என்ற ஒற்றைக் கேள்வியால் அவரை சாய்க்க பதில் கூற முடியாமல் தவித்துப் போனார் தனஞ்செயன்.

"அம்மா" என்று கூறிக்கொண்டே அவரது தலையினை வருடினான் பிரபஞ்சன். தன் மகனது தொடுகையில் கண்விழித்தவர், மெதுவாக கண்களை திறக்க, பிரபஞ்சனைக் கண்டதும் அழுது துவண்டக் கண்கள் மீண்டும் அழ தயாராகியது.

"வந்துட்டியாப்பா.. என்னோட இன்னொரு மகனும் உன்னை மாதிரியே இருப்பான்லப்பா..." என்று கூறிக்கொண்டே அவனது கன்னத்தை வாஞ்சையோடு பற்ற, அவரது துடிப்பை ஒரு மகனாக உணர்ந்தவன், ஆறுதலாக தன் தாயை அணைத்திருந்தான்.

"பிரபா அவனும் உன்னை மாதிரி என் மேல பாசமா இருப்பானாப்பா. எனக்கு அவனை பார்க்கனும். கூப்பிட்டு போறியா? உங்க அப்பா கூப்பிட்டு போக மாட்டீங்குறாருடா" என்று கூறும்போதே அவரது கண்களிலிருந்த கண்ணீர் பிரபஞ்சனது உடையை நனைத்திருந்தது.

"அம்மா அவனை நான் இங்க கூப்பிட்டு வரேன்மா. அவனுக்கு எப்படி உன்னை பிடிக்காமல் போகும்." என்று சமாதானம் செய்தவன் வாக்கினை கொடுத்திருக்க, அவன் மனமோ, 'இவன் என்னோட பொறந்தவன்னு தெரியாமல் ஓவரா பேசிட்டனே. இனி எப்படி அவனை போய் கூப்பிடுவேன்.' என்று மனதிற்குள்ளே குழம்பினான்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 23

தன் தாயை சமாதானம் செய்தவன் தன் கைகளாலே, தாமரைக்கு உணவினையும் ஊட்டி விட்டான். அதன் பின் மாடிக்கு வந்தவனுக்கோ, அகிலனைப் பற்றிய நினைவு தான். எத்தகைய அதிர்ச்சி அது, அகிலன் தன் உடன்பிறப்பு என்பதனை உடனே அவனால் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. தன்னைப்போல் ஒருவனை பார்த்த பிரம்மிப்பே குறையாமல் இருக்க, அவன் தன்னோடு ஒரே கருவில் உதித்தவன் என்ற உண்மை தெரிந்தபின், அந்த அதிர்ச்சி இன்பமாக இருந்தாலும், ஒருபுறம் பேரதிர்ச்சியாகவும் இருந்தது.

இதில் எவ்வாறு அவனிடம் இந்த உண்மையினை கூறி அழைத்து வருவது என்ற யோசனை வேறு. வளர்ப்பு தந்தை என்றாலும் கிருபாகரன் அவனை பொறுத்தவரை பெற்றத்தந்தைக்கு நிகர்தானே. தந்தையின் இழப்பில் தன் சகோதரன் படும் துயரத்தை எண்ணியும் அவன் மனம் வருந்தியது.

பூவினிக்கோ பிரபஞ்சனை பற்றிய கவலைதான். செய்யாத தவறிற்காக அவனை அடிவாங்க வைத்துவிட்டோமே என்று முதன்முதலாகக் கவலைக் கொண்டாள் அவனுக்காக. வெகு நேரம் ஆகியும் அவன் கீழே வராததால், தயங்கியபடி அவனை தேடி வந்தாள் பூவினி.

"எவ்வளவு நேரம்தான் இங்கயே இருப்பீங்க. சாப்பிட வாங்க." என்று தயக்கத்தை விடுத்து தன்மையாக கூறினாள்.

மாடியின் விளிம்பில் தன் கைகளை ஊன்றி பிடித்திருந்தவன், ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க, அந்த பார்வையில் தெரிந்தது என்னவோ குழப்பங்களும் வலிகளும் மட்டுமே.

"பசிக்கலை." என்றவன் அவளைப் பார்த்த பார்வையில் அத்தனை வலி.

தான் அவளை அடிக்கவில்லை என்று ஏன் அவள் உணரவில்லை. உணராத அளவிற்கு தன்னை வெறுக்கிறாளா? என்ற பல்வேறு கேள்விகள் அவனது கண்கள் அவளைப் பார்த்து கேட்டது. ஏற்கனவே தர்மசங்கடமாக இருந்தவளுக்கோ அவனது பார்வையின் வீச்சினை தாங்க இயலவில்லை.

"பா.. பால் குடிக்குறீங்களா? எடுத்துட்டு வரவா?" என்றவளை பார்த்து விரக்தியாக சிரித்தவன்,
"வேண்டாம்." என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

மெல்ல அவனது அருகில் சென்றவள், அவனது கைகளை பற்றினாள் இதமாக. ஏன் இவ்வாறு செய்கிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை. ஏனோ அவனது கவலைக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது.

அவனுக்கும் அந்நேரம் அவளது அரவணைப்பு அவசியமானதாக இருந்ததால் அவனையும் மீறி அவளது தோள் மீது சாய்ந்துக் கொண்டான். இருவருக்கும் இடையில் இருந்த மௌனம் ஆறுதலாக இருந்தது.

"ஏன் பூவி என்னை புரிஞ்சுக்காமலே போய்ட்ட?" என்ற அவனது ஒற்றைக் கேள்வியில் அவனிடமிருந்து விலகியவள் தலைக் குனிந்துக் கொண்டாள்.

"சாரி. நீ பரிதாபப்பட்டு, பேச வந்தும் நான் அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன்." என்று கூறிக்கொண்டே அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்றுக் கொண்டான் பிரபஞ்சன். அவனுக்கோ அவளின் அதிர்ந்த விழிகள் தான் அவள் மீது சாய்ந்ததால் ஏற்பட்டதோ என்ற எண்ணம் ஆதலால் ஒன்றைக் கவனிக்க தவறியிருந்தான் அவ்வாறு அவள் நினைத்திருந்தால் அந்த நொடியே அவனிடமிருந்து விலகி வந்திருப்பாள் அல்லவா.

அவனையே சங்கடப் பார்வை ஒன்றை பார்த்தவள், எதுவும் பேசாமல் கீழே இறங்கினாள். பிரபஞ்சனது விலகலே, எந்த அளவிற்கு தான் அவனைக் காயப்படுத்தி இருப்போம் என்ற உண்மையை அப்பட்டமாக உணர்த்தியது பெண்ணவளுக்கு. சற்று நேரம் அங்கு நின்று தன்னை நிதானப்படுத்திய பிரபஞ்சனோ, கீழே இறங்கி வர, அவனுக்காக முகப்பு அறையிலேயே காத்திருந்தாள் பூவினி.

இன்று அவளது பேச்சும் செயலும் ஆச்சர்யமாகவே இருந்தது. ஒருவேளை தன்மீது பரிதாபம் கொள்கிறாளோ என்று ஒருமுறை நின்று யோசித்தவன், தனது அறைக்கு செல்வதற்காக எத்தனித்தான்.

"பிரபா" என்று தந்தை அழைக்க, அப்படியே நின்றவன் "என்ன அப்பா?" என்ற கேள்வியினை மட்டும் கேட்டான்.

"டேய் பிரபா. சாப்பிடாமல் எங்க போற?"

"பசிக்கலைப்பா. நீங்க சாப்பிட்டீங்களா?"

"இப்போதான் சாப்டேன். அது எப்படிடா பசிக்காமல் இருக்கும். நீ சாப்பிடாதனால பூவினியும் இன்னும் சாப்பிடல. முதல்ல சாப்பிடுங்க இரண்டு பேரும்." என்று தனஞ்செயன் கூறியதுமே, ஆச்சரியமாக பார்த்தான் பூவினியை.

ஒரு கணவனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறு ஏது. தன் மனைவி தனக்காக உணவு உண்ணாமல் காத்திருக்கிறாள் என்ற செய்தியே அவனது வலியினை மறக்கச் செய்தது. புன்னகையோடு சாப்பிட அமர்ந்தான் பிரபஞ்சன்.

அவன் வந்ததும், எழுந்தவள் அவனுக்காக உணவினை எடுத்துக் கொண்டு வர, அவளுக்கே அவளின் செயல் ஆச்சர்யம் தான்.

"உனக்கும் எடுத்துட்டு வா." என்று மட்டும் கூறியவன் அவளிடம் இருந்து தட்டைப் பெற்றுக்கொண்டான்.

தலை கவிழ்ந்துக்கொண்டே உணவினை உண்ணும் தன் மனையாளை ஆர்வமாக பார்த்தது அவனது விழிகள்.

அவன் தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்தவள் நிமிர்ந்து, புருவத்தினை தூக்கியபடி கண்களாலே என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்பது போல் மறுப்பாக தலையசைத்தவனோ தலைகவிழ்ந்துக் கொண்டு உணவினை உண்டான். இருவரது இதழ் ஓரத்திலும் சிறு முறுவல் அப்பட்டமாக தெரிந்தது. இருவருக்கு நடுவிலும் மொட்டாக தோன்றியிருந்த, சிறு இணக்கம் மலருமா? இல்லை அகிலனது சந்திப்பு அனைத்தையும் சுக்குநூறாக்குமா? என்று விதி தன்பாட்டிற்கு தனது கடமையினை செய்திட ஆயத்தமானது.

அடுத்தநாள் காலை அழகாக மலர்ந்திருக்க, தாமரைக்கு வாக்குறுதியினை அளித்தவனோ, அகிலனை பார்ப்பதற்காக குமரனையும் தன்னோடு அழைத்து கொண்டு வந்திருந்தான். ஏற்கனவே ட்வின்ஸ் என்ற செய்தியில் குமரன் வாயை பிளந்தவன் தான். இன்னுமும் அவன் திறந்த வாயினை மூடவில்லை.

"எனக்கு அப்போவே உங்க அப்பா மேல சந்தேகம் வந்துச்சுடா. பார்த்தா உங்க டாடி இப்படி ஒரு கேடி வேலை பண்ணிருப்பாருனு இப்போ தானே தெரியுது."

"வாயை மூடுடா குமரா." என்று அவனது பேச்சில் கோபம் கொண்டான் பிரபஞ்சன்.

"டேய் கோபப்படாதடா. இவ்வளவு பெரிய விசயத்தை இத்தனை வருசமா சொல்லாமல் மறைச்சிருக்காருல, அதுக்கே தனி தில்லு வேணும்டா. அதான் அப்படி சொன்னேன்." என்று கூறுபவனை ஏகத்துக்கும் முறைக்க, வாயை மூடிக்கொண்டான் குமரன்.

அகிலனோ, குமரனும், பிரபஞ்சனும் வந்திருப்பதை அறிந்தவனோ, பால்கனி வழியாக இருவரையுமே ஆச்சரியமாகதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் மச்சான் உன் ட்வின் பிரதர் நம்புவானாடா. இல்லை நேத்து மாதிரி அடிக்க வந்திட மாட்டானே."

"எதுக்கு நீ இருக்க. அடிச்சா வாங்கிக்கோ. முதல்ல உள்ள போவோம்."

"அடேய் நான் ஏன்டா தேவையில்லாமல் அடி வாங்கனும்? உன் ட்வின் பிரதர்தானே...நீ போடா." என்றவனை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றான் பிரபஞ்சன்.

அங்கு வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களோ, தங்களது முதலாளியை உருவெடுத்து செய்ததுபோல இருந்த பிரபஞ்சனையே ஆச்சரியமாக பார்த்தனர்.

"டேய் பிரபா. உன் ட்வின் வாழ்க்கையை சிறப்பாக வாழ்றான்டா. வீட்டைப்பாரு எம்புட்டு பெருசாக இருக்கு.." என்றான் வாயை ஆவென திறந்தபடி.

"பணக்காரனா இருந்தால் சிறப்பான வாழ்க்கை வாழ்றதா அர்த்தமா? அந்த வாழ்க்கையில எத்தனை பிரச்சினை இருக்கும்னு வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்." என்றவன் திரும்ப, அவனை நோக்கி வந்தான் ஒருவன்.

"சார் உங்களை மட்டும் மேல வரச் சொன்னாரு? தேவையில்லாத லாக்கேஜை இங்கயே நிக்கச் சொன்னாரு" என்று பிரபஞ்சனிடம் கூறினான்.

"ஹலோ தம்பி இங்க தேவை இல்லாத லக்கேஜ்னு எதுவும் கொண்டு வரலை." என்றான் குமரன் தெனாவெட்டாய்.

"அகிலன் சார் தேவையில்லாத லக்கேஜ்னு சொன்னதே உங்களை தான்." என்று மேலிருந்து கீழ்வரை அழுத்தமானப் பார்வை ஒன்றை பார்த்தான்.

"வாட். நான் யாரு தெரியுமா? நீ என்னை இப்படி சொன்னது மட்டும் என் பிரபாக்கு தெரிஞ்சுது. உன்னை செஞ்சுடுவான். உன் முதலாளியோட ட்வின்ஸ் அவன். டேய் பிரபஞ்சா என்னென்னு கேளுடா." என்று அவனைத் திட்டிக் கொண்டே தன் நண்பனிடம் முடித்திருந்தான்.

"உங்க நண்பன் இங்க இருந்து போய் இரண்டு நிமிசம் ஆச்சு." என்று வாயைப் பொத்தியபடி அவன் எள்ளி நகையாட, குமரனை சுற்றி பல்புகளாக தெரிந்தது.

"உன்னை வந்து கவனிச்சுக்குறேன். டேய் பிரபா இந்த வளராதவன் எல்லாம் என்னை கலாய்க்குற மாதிரி பண்ணிட்டு போறியாடா. உன்னோட வந்தேன் பாரு என்ன சொல்லனும்." என்று தலையில் அடிக்காத குறையாக அவன் பின்னே ஓடினான்.

அதற்குள் அகிலனது அறைக்குள் நுழைந்திருந்த, பிரபஞ்சனோ அந்த அறையில் நாலாபுறமும் அவனைத் தேட, அங்கிருந்த அவனது ஆளுயுர புகைப்படம் அவனை பிரம்மிக்க வைத்தது.

அவன் அந்த புகைப்படத்தில் கவனம் செலுத்தியிருக்க, அவ்விடம் வந்தான் அகிலன் அவனுக்கே உரிய கம்பீரத்தோடு.

"யாரோ என் கண்ணு முன்னாடி வந்திடாதனு வீண் சவால் எல்லாம் விட்டுட்டு, இப்போ அவனைப் பார்க்கவே வந்திருக்காங்க போல" என்று நக்கலாக கேட்டுக் கொண்டே வந்தவன் அங்கிருந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்தான்.

"அது யாருனு தெரியாதப்போ... இப்போதான் நீ எவ்வளவு வேண்டப்பட்டவனு தெரிஞ்சிருச்சே அகிலன்." என்றவன் அவனுக்கு தான் சளைத்தவன் அல்ல என்ற தோரணையில் அங்கிருந்த சோப்பாவில் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்தான்.

"நான் உன்னை உட்காரவே சொல்லலையே." என்று வெளியே கூறினாலும் மனமோ, 'தனக்கு ஏத்தவன் தான்." என்று மெச்சுதலாக பார்த்தது.

"நீ உட்கார சொல்லிட்டு உட்காருவதற்கு, நான் ஒன்னும் இன்ட்ர்வியூக்கு வரலை. என் உடன்பிறப்பை பார்க்க வந்திருக்கேன்." என்றவனின் பதிலே உரைத்தது அனைத்தையும் அறிந்துக் கொண்டான் என்று.

"ஒரே மாதிரி இருந்தால் உடன்பிறப்பாகிடுமா? என்ன நான் பணக்காரன்னு தெரிஞ்சதும் உறவுகொண்டாட வந்திருக்கியா?" என்று வேண்டும் என்றே சீறியதில் அவனது வார்த்தைகள் பிரபஞ்சனுக்கு கோபத்தை கிளப்பியது. இருந்தும் தன் தாயின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டவன்,

"அகிலன் தேவை இல்லாமல் பேசாத. உனக்கு உண்மை தெரியாததுனால இப்படி பேசுற." என்றவன் நடந்தவற்றை விளக்கினான்.

அனைத்தையும் கேட்டவனது முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. ஏற்கனவே அனைத்தையும் அறிந்தவன் அல்லவா? இருந்தும் பிரபஞ்சனை கடுப்பேற்றி விளையாட நினைத்தது அவன் மனம்.

"நீ சொல்றதுலாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. அதுக்குனு நான் நம்புவேனு மட்டும் நினைச்சிடாத?"

"நம்ம ஒரேமாதிரி இருக்கோம். அது பார்த்துக் கூட உனக்கு நம்ப தோணலையா?" என்றவன் ஆதங்கமாக பார்க்க,

தோள்பட்டடையை உலுக்கியவனோ, "இல்லையே. அப்படியே இருந்தாலும் இந்த அகிலன் கிருபாகரனோட பையன்தான் எப்போதுமே." என்றான் ஆணித்தரமாக.

"அகிலன். எனக்கு புரியுது. உன்னால மாத்திக்க முடியாது தான். ஆனால் இந்த விசயம் பத்தி தெரிஞ்சுதுல இருந்து அம்மா நல்லா இல்லைடா. அம்மாக்காக ஒரு தடவை வந்துப் பாரு." என்று இறைஞ்சினான் அவனது அன்னைத் தாமரைக்காக.

ஒரு நிமிடம் தாமரையை பற்றி யோசித்தவன், "இங்க பாரு பிரபஞ்சா. இத்தனை வருசம் பார்த்துடாத பையனுக்காக உங்க அம்மா ஏன் இப்படி துடிக்கனும். அதான் என்ன மாதிரியே நீ இருக்கல்ல." என்று கூறியவனது பதிலில் வெடுக்கென்று எழுந்தவனோ, அவனை முறைத்தான்.

"தாய்ப்பாசத்தை பத்தி உனக்கு தெரியலைனா சொல்லு. அதவிட்டுட்டு ரொம்ப பேசாத. இந்த விசயம் அன்னைக்கே தெரிஞ்சுருந்தா அம்மா உன்னை இங்க விட்ருக்கவே மாட்டாங்க. நம்ம எவ்வளவு வளர்ந்தாலும் அம்மாக்கு என்னைக்குமே நம்ம குழந்தைங்க தான். அதுல ஒரு குழந்தை பெருசு, இன்னொரு குழந்தை சின்னதுங்குற எண்ணம் எந்த தாய்க்குமே வராது." என்றவன் மேலும், "இறுதியாக கேட்குறேன். அம்மாவை பார்க்க வரியா? இல்லையா?" என்றான் அழுத்தமாக.

தெனவெட்டான பார்வை பார்த்த அகிலனோ, "சரி சொல்ல வந்தது சொல்லிட்டல்ல. நீ கிளம்பலாம்." என்பது போல கதவை கைக்காட்ட, எதையாவது எடுத்து அவனது மூஞ்சியின் மீதே எறிந்து விடலாமா என்றளவிற்கு கோபம் வந்ததது பிரபஞ்சனிற்கு.

முகம் கோபத்தில் சிவந்திருக்க, "ச்சே. இடியட்." என்று திட்டிக்கொண்டே அங்கிருந்து விறுவிறுவென வெளியேற, அவனுக்காக காத்திருந்த குமரனோ, "டேய் என்னடா அடி பலமோ, மூஞ்சியே சரியில்லையே." என்றான் அவனது முகத்தை ஆராய்ந்தபடி.

"வாயை மூடிட்டு வண்டில ஏறு. போலாம்." என்று மட்டும் கூறியவன் நேராக சென்றது என்னவோ வீட்டிற்கு தான்.

தன் மகன் வருகைக்காக காத்திருந்த தாமரையோ, ஓடி வெளியே வந்தவர், "டேய் பிரபா எங்கடா என் பிள்ளை. அவன் எங்க இருக்கானு தெரியும். கையோட கூப்பிட்டு வரதா சொல்லிட்டு போனியே?" என்று வாசலையே பார்த்தபடி கூறினார்.

"அம்மா முதல்ல உள்ள வாங்க பேசிக்கலாம்." என்று கூறியவன் அழைத்துச் செல்ல,

"நீ பார்த்தியா பிரபா? அவன் வந்ததும் உன் அக்காகிட்ட சொல்லனும். அப்புறம் வட பாயசத்தோட என் கையாலேயே சமைச்சு போடனும்." என்று ஆர்வத்தோடு கூறுபவரைக் காணும்போதே மனது கணத்தது பிரபாவிற்கும், குமரனிற்கும்.

"அம்மா எங்க யாரையுமே காணோம். தம்பி எங்க? பூவினி எங்க?" என்று அவரது கவனத்தை கலைக்கும் வண்ணம் கேள்விகளைக் கேட்டான்.

"பூவினி கோவிலுக்கு போயிருக்காப்பா. நம்ம அகிலன் நம்ம கூட வந்திடனும்னு அர்ச்சனை பண்ண. தென்னவன் கடைக்கு போயிருக்கான். அவனுக்கு காலே நிக்கலை. அகிலனுக்காக சுவீட் வாங்க போயிருக்கான். பிரபஞ்சன் அகிலன் நல்ல பேர் பொருத்தமா இருக்குல்ல பிரபா." என்று மலர்ந்த முகத்தோடு கூறும் அன்னையிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் மனதிற்குள்ளே கலங்கினான்.

தனஞ்செயனோ, "உங்க அம்மா காலையிலே இருந்து ஒரு இடத்துல நிக்கலைடா. அகிலன் எப்படி இருக்கான் பிரபா. கிருபா சார் இழப்பு கேள்வி பட்டதுல இருந்து நெஞ்சே பாரமா இருக்கு."

தன் பெற்றோரை மாறி மாறி பார்த்தவன் ஒரேமுடிவாக கூறிவிடலாம் என்ற தீர்மானத்தை எடுத்தான். "அப்பா அம்மா. இன்னைக்கு அகிலனால வர மு...." என்று அவன் கூறி முடிக்கும் முன்னரே "உள்ள வரலாமா?" என்ற குரல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அங்கு வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற கால்சட்டையும் அணிந்தபடி கம்பீரமாக நின்றிருந்த அகிலனைக் கண்டதும் அனைவரும் பிரம்மிப்பாய் பார்க்க, தாமரை அழுதுக் கொண்டே தன் மகனை நோக்கி ஓடி வந்தவர் அவனது முகத்தை தொட்டுப் பார்த்தார்.

"என் பையன் வந்துட்டான். அம்மாவை பார்க்க வந்துட்டான். என்னங்க என் பையன்." என்று விழிநீர் வழிய அவனது முகத்தினை தொட்டுப் பார்த்தார்.

அவரது நாவோ தழுதழுத்தது. "அ...அகிலா... என் மகன்.நான் உன் அ...அம்மா." என்று கூறியவரது பாசம் அவனது மனதை நனைத்தது.

அகிலனுக்கும் அவரைக் கண்டதும் இழந்த சொந்தம் மீண்டது போன்ற உணர்வு எழுந்தது. கல்யாணி இறந்த பிறகு தன் தாயை பிரித்த கடவுளிடம் அவன் மன்றாடாத நாள் இல்லை. இன்று தன்னை பெற்றெடுத்த தாயின் அன்பில் கரைந்து போனான் அகிலன்.

பிரபஞ்சனும் குமரனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர். அகிலனுக்கோ அம்மாவின் ஆனந்த கண்ணீர் அவனது கண்களை கலங்கிட செய்தது. தனஞ்செயனும் அவனை அன்போடு பார்த்தவர், அவனிடம் செல்ல சங்கடப்பட்டார். எங்கு தன் மீது அவனுக்கு கோபம் வந்திருக்குமோ என்ற பயத்தில் தள்ளியே நின்று பார்த்தார்.

தாமரையின் கண்ணீரை தன் விரல் கொண்டு துடைத்து விட்ட அகிலனோ, "அம்மா இனி நீங்க அழவே கூடாது." என்று உரைக்க, அவனது அம்மா என்ற அழைப்பில் பெரும் உவகைக் கொண்டவரது கண்கள் மேலும் கலங்கியது.

"என்னப்பா சொன்ன? இன்னொரு முறை சொல்லுப்பா...
அம்மானு..."

"அம்மா..." என்றான் ஆத்மார்த்தமாக.

"என்னங்க என் மகன் என்ன அம்மானு சொல்றாங்க. நான் சொன்னேன்ல. என் பையன் என்னை ஏத்துப்பானு." என்று உணர்ச்சிவசப்பட்டவரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

தன் மகனது அணைப்பில் இருபத்தி ஒன்பது வருட பிரிவும் அழுகையாய் வெடித்திருக்க, தேம்பி தேம்பி அழுதார் தாமரை.
தன் தாய் வெடித்து அழுவதை முதல்முறையாக பார்த்த பிரபஞ்சனிற்கு இருப்புக் கொள்ளவில்லை.

அம்மா என்று அவரை பிடிக்கச் செல்ல, ஒற்றை கரம் நீட்டி தடுத்த அகிலனோ, தான் பார்த்துக் கொள்வதாக கண்களாலே தெரிவித்தான்.

"அம்மா நான் வந்துட்டேன். இப்படி தான் அழுதே என்னை வரவேற்பிங்களா." என்று கூறிக்கொண்டே அவரது முதுகை ஆறுதலாக நீவினான்.

அவனது பதிலில் தெளிந்தவரோ, "இல்லை அகிலா. பிரபா ஆரத்தி கரைச்சு வெச்சிருக்கேன் எடுத்துட்டு வாடா." என்று பிரபஞ்சனிடம் கூற,

'ஆமா இவனுக்கு ஆரத்தி ஒன்னுதான் குறைச்சல். வேணும்னே என்ன கடுப்பேத்திட்டான். இப்போ பெரிய இவனாட்டம் வந்திருக்கான்.' என்று மனதில் திட்டிக்கொண்டே, ஆரத்தி எடுத்து கொடுத்தான்.

அகிலனோ அவனது மனவோட்டத்தை சரியாக உணர்ந்தவாறு, அவனைப் பார்த்து நக்கல் புன்னகை உதிர்த்துக் கொண்டே கண்ணடித்தான்.

தாமரையே தன் கைகளாலே ஆரத்தி எடுத்தவர், குமரனிடம் வந்து, "ரோட்டுல கொட்டிடுப்பா" என்று கூறிக்கொண்டே அகிலனிடம் வந்துவிட்டடவர், தனது கைககுள்ள தன் மகனைபிடித்திருந்தவருக்கு அவரை பிரிய கூட மனம் ஒப்பவில்லை.

"டேய் குமரா உன்னை எல்லாரும் வேலை வாங்குறதுலேயே குறியா இருக்காங்கடா. பிரபா அகில் இரண்டும் ஏன் நம்மளை இப்படி வெச்சு செய்யுதுனு இப்போதானே புரியுது." என்று புலம்பிக் கொண்டே சாலையின் ஓரத்தில் கற்பூரத்தை கொட்டினான்.

கோவிலுக்கு சென்ற பூவினி, வீட்டிற்கு திரும்பியிருக்க, அதே சமயம் விடுமுறை என்பதால் இன்று எப்படியாவது அகிலனை பற்றி பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பூவினியை பார்க்க, வீட்டிற்கு வந்திருந்தாள் யாழினி.

"ஏய் யாழி வாடி. லீவ்வா அம்மா வரலையா?"

"இல்லைக்கா லீவ் தான். உன்னை பார்க்கத்தான் வந்தேன்." என்றாள் புன்னகையோடு.

குமரனோ, " அக்காவும் தங்கச்சியும் ஒன்னா வீட்டுக்கு வரீங்க. உள்ளப் போங்க உங்களுக்கு சிறப்பான சர்பிரைஸ் காத்திருக்கு." என்றான்.

"அண்ணா நீங்க ஆரத்தி தட்டோடு நிக்குறதைப் பார்க்கும் போதே தெரியுது. யாரு வந்திருக்காங்க?" என்று யாழினி கேட்க,

"போய் பாரு அசந்து போய்டுவ இம்சை." என்றான் சிரித்தபடி.

யாழினியும் பூவினியின் பின்னே சென்றவள் எட்டி எட்டிப்பார்க்க, அங்கு வீட்டின் முகப்பறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த அகிலனையும், ஒரு ஓரமாக நின்றிருந்த பிரபஞ்சனையும் ஒரே நேரத்தில் கண்டவள், அதிர்ந்துதான் போனாள்.

எதேச்சையாக திரும்பிய அகிலனோ, அக்கா தங்கை என்று இருவரையும் பார்த்து பேரதிர்ச்சி அடைந்தவனது, உள்ளம் கோபத்தால் தகதகவென கொளுந்துவிட்டு எறிந்தது....
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 24

தனக்குள் இருக்கும் ஆத்திரத்தினை கடினப்பட்டே, கட்டுப்படுத்தினான் அகிலன். யாழினி அகிலனைக் கண்ட அதிர்ச்சியில் கண்களை விரிக்க, பூவினியோ அவனைக் கண்டதுமே அவன் அறைந்த நிகழ்வு மனக்கண்ணில் தோன்ற, பயம் கலந்த முகத்தோடு வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள். அவன் மட்டும் யாரென்று அறிந்திருந்தால் அந்த புன்னகைகூட அவள் முகத்தில் இருந்திருக்காது என்பதே உண்மை.

அகிலன் அதிர்ச்சியில் எழுந்து நிற்க, அவனோடு சேர்ந்து எழுந்து நின்ற தாமரையோ குழப்பமாக பார்த்தவர், பூவினியைக் கண்டதும் அவன் எழுந்துநின்றது எதனால் என்று புரிந்துக் கொண்டார்.

"அகில் கண்ணா.... உன் அதிர்ச்சி என்னென்னு எனக்கு நல்லாவே புரியுது."

'அம்மாக்கு எப்படி தெரியும்? இவ எப்படி இங்க இருக்கா?' என்று உள்ளுக்குள் தோன்றிய கேள்விகளை ஒதுக்கியவன், "அம்மா.." என்றான் படு அதிர்ச்சியாக.

"என் மருமகளை நீ தான அடிச்ச? சொல்லுடா? நீ எதுக்காக அப்படி பண்ண?" என்றார் தாமரை ஆதங்கமாக.

தாமரை கூறிய செய்தியை கேட்ட யாழியோ, 'இவரு நம்ம அக்காவையும் விட்டு வைக்கலையா?' என்று நினைத்துக் கொண்டே தன் அக்காவினை கண்களாலே உண்மையா என்று கேட்க, பூவினியோ ஆம் என்ற ரீதியில் மேலும் கீழுமாக தலையை ஆட்ட, யாழினியோ அதிர்ச்சியில் வாயில் கைவைத்துக் கொண்டாள்.

"நல்லா கேளுங்க அம்மா. எதுக்கு அப்படி பண்ணான்? கேட்க யாரும் இல்லைங்குற தைரியத்துலயா?" என்றான் பிரபஞ்சன் முறைத்துக்கொண்டே.

"அதான் நான் கேட்குறேன்ல. அமைதியா இருடா கொஞ்சம்." என்ற தாமரையோ அகிலனைப் பார்த்து, "ஏன் அகிலா அப்படி பண்ண? பூவினி நம்ம பிரபாவோட மனைவிபா. அவன்தான் அடிச்சுட்டானு நான் அவனை கைநீட்டிட்டேன்." என்று ஆதங்கம் கலந்த கவலையோடு கூறினார்.

பூவினியை பிரபஞ்சனது மனைவியாக துளிக்கூட எதிர்பார்க்காதவனோ அதிர்ந்தது சில வினாடிகளே, தன் தாயைப் பார்த்தவன், "சாரிமா அப்போ தான் என் அப்பா இறந்துட்டாரு... அந்த டென்ஷன்ல அப்படி பண்ணிட்டேன்." என்று வெளியே கூறினாலும் மனமோ, அவன் செய்தது தவறே இல்லை என்று கூறிக்கொண்டது.

"அதுனால தானாப்பா.... நான் கூட பயந்துட்டேன்." என்று அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள,

பிரபஞ்சனோ ஙேவென விழித்தவன், 'எனக்கு மட்டும் அடி. அவனுக்கு மட்டும் அவ்வளவுதானாவா.... இது அநியாயாமா இல்லை?' என்று மனதிற்குள்ளே மருக,
குமரனோ, அவனை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தான்.

அதற்குள் தென்னவனும் இனிப்போடு வீட்டிற்குள் நுழைந்தவன், முதலில் பிரம்மிப்பாய் அகிலனைப் பார்த்தான். பின் தன் அண்ணன்கள் இருவரையும் சேர்த்து நிற்க வைத்தபடி கட்டி அணைத்துக் கொண்டான்.

"கனவு மாதிரி இருக்கு. இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க. ப்பா... சான்சே இல்லை." என்று புன்னகைக்க, அவன் கூறும்போதே பிரபஞ்சனும் அகிலனது கண்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டது.

"நம்ம மூன்று பேரும் ஒரு போட்டோ எடுப்போமா?" என்று ஆவல் மின்ன கேட்பவனுக்காக, சரியென ஒரே நேரத்தில் தலையாட்டினர் பிரபஞ்சனும் அகிலனும். தாமரையோ, தனது மூன்று மகன்களையும் கண்களாலே நிரப்பியபடி தன் கணவனை பார்த்து புன்னகைத்தார்.

பிரபஞ்சனோ யாழினியை அழைத்தவன் தென்னவனின் போனை வாங்கி அவளது கைகளில் கொடுத்தான்.
"யாழிமா போட்டோ எடுத்துருடா. நீதான் நல்லா எடுப்பியே. சிலர் சிரிக்க மட்டும் தான் லாய்க்கு." என்று குமரனை முறைத்துக் கொண்டே கொடுக்க, குமரனோ 'சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு முடிச்சிடலாம். நெஞ்சு கிழிஞ்சிடுத்து எங்க முறையிடலாம்' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்தவன்,

"போடா டேய்... உடன்பிறப்பு வந்ததும் மறந்துட்டல்ல? போ நான் கோபமாக போறேன்." என்று வேகமாக வெளியேற,

"டேய் குமரா....." என்ற பிரபஞ்சனது அழைப்பு அவனைத் தடுத்து நிறுத்தியது.

"மச்சான். என்னடா சாரியா.... சாரிலாம் எதுக்கு?.. விடுவிடு நான் போகல." என்றான் புன்னகையாக.

"அடேய் என் வண்டி சாவி உன் சட்டை பையில இருக்கு அதை வெச்சுட்டு போனு சொல்ல வந்தேன்." என்று கண்ணடிக்க, குமரனது இதயம் சில்லுசில்லாய் நொறுங்கியது என்றால், பிரபஞ்சன் கூறியதைக் கண்டு அனைவரும் வாய்விட்டே சிரித்தனர். அகிலனுக்கே அந்த சூழ்நிலை வெகுநாட்கள் கழித்து ஒரு வித இதத்தினை அளித்திருந்தது. ஆனாலும் பூவினி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதை ரசித்திருப்பான் என்ற எண்ணம் அவனுள் எழாமலும் இல்லை.

அதன்பின் அவர்கள் இருவரையும், தென்னவனோடு சேர்த்து பேந்த பேந்த விழித்தப்படி புகைப்படம் எடுத்த யாழினியை பார்த்த, தென்னவனது கண்களிலோ காதல் அப்பட்டமாக வழிந்தது. அதை அகிலனும் பார்த்துவிட, தீயாய் முறைத்தான் யாழினியை பார்த்து.

அவன் முறைப்பதைக் கண்ட யாழினிக்கோ ஒரு விதத்தில் பயமாக இருந்தாலும், முகத்தை பளிப்புக் காட்டுவது போல செய்தவள், "இரண்டு அத்தானும் சைடுல வாங்க. நடுவுல நீங்க வாங்க." என்று மூவரையும் நிற்க வைத்தவள் சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்தாள்.

இத்தனை நாள் எவ்வாறு இருவரும் ஒரே போல் இருக்கின்றார்கள் என்று தோன்றிய எண்ணத்திற்கு விடை கிடைத்திருக்க, அவள் மனமோ "இனி இந்த யாழியோட ஆட்டத்தை பார்க்கப் போறீங்க அகில் அத்தான்." என்று பயங்கரமாக சவால் விட்டுக் கொண்டது.

அந்த இடைப்பட்ட நேரத்தில் பூவினியோ அனைவருக்கும் பாயாசத்தைக் கொண்டு வந்துக் கொடுத்தாள். ஏற்கனவே அவன் வருகைக்காக தாமரை அம்மா செய்து வைத்திருக்க, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை அழகானதாக மாற்றிட எண்ணி பாயசத்தை எடுத்து வந்தவள் ஒவ்வொருவருக்காக கொண்டு வந்துக் கொடுக்க, இறுதியில் அகிலனிடம் நீட்ட, அவனோ அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

"நம்பிக் குடிக்கலாமா?" என்பது போல கேட்க, அவனது கேள்வியில் திகைத்தாள் பூவினி.

யாழினியோ, அவன் கேட்கும் தோரணை புரிந்தவளாக, "அக்கா எனக்கு ஒரு பாயாசம் எடுத்துட்டு வாங்க." என்று அவளது கவனத்தை திசைதிருப்பியபடி அகிலனது அருகில் வந்தவள், "அக்காக்கு நீங்க தான் அவருனு தெரியாது. நீங்க ஏன் இப்படி பண்றீங்க அத்தான்?" என்றவள் ஆதங்கமாக பார்த்தாள்.

அவனோ பதில் ஏதும் கூறாதவன் அவளை முறைக்க மட்டுமே செய்திருந்தான். யாழினி அகிலன் பேசுவதை கண்ட பிரபஞ்சனுக்கோ, 'ஒருவேளை யாழினிக்கு அகிலனை முன்பே தெரியுமா?' என்ற யோசனை நொடிப் பொழுதில் தோன்றிட, அதற்குள் குழந்தைகள் மற்றும் கணவனோடு வருகை புரிந்திருந்தாள் மாதுளா.

வந்தவள் அதிர்ச்சியில் எவ்வளவு நேரம் அசையாமல் நின்றாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. ஆனந்த கண்ணீரோடு அகிலனது தாடையை பிடித்தவள், "அம்மா அப்படியே நம்ம பிரபா மாதிரியே இருக்கான்ல தம்பி." என்று கூற,

"அடி கூறுகெட்டவளே ஐடென்டிக்கல் ட்வின்ஸ்னா அப்படிதான் இருப்பாங்க." என்று மிடுக்காக விதுரன் கூறினாலும் அவனது கண்களிலும் அதே பிரம்மிப்பு.

"ஐ ரெண்டு மாமா." என்று ஆரூ துள்ள, தென்னவனோ, "இரண்டு இல்லை மூணு மாமா." என்று தன்னை நிலை நாட்டினான்.

"ஐயோ தென்னா மாமா. பிரபா மாமா மாதிரியே இரண்டு மாமா அது சொன்னேன்." என்று இடுப்பில் கைவைத்து கூறும் ஆரூவை தூக்கிக் கொண்ட தென்னவனோ "சரிங்க பெரியமனுசி" என்று மூக்கினை ஆட்ட,

'என்னடா இது அமுத சுரபி மாதிரி ஒரே சொந்தங்களா வந்துட்டே இருக்காங்க.' என்று பிரம்மிப்பாய் பார்த்த அகிலனுக்கு அனைத்துமே புதியதாக தெரிந்தது. அப்பா அம்மா அவன் என மூவரை சார்ந்து மட்டுமே அவன் உலகம் சுழன்றிருக்க, தனக்கு இத்தனை உறவுகளா என்று பிரம்மிப்பாய் பார்த்தான்.

அவனது பிரம்மிப்பை உணர்ந்தவனாக அவனின் கைகளைப் பற்றிய தாமரையோ, அனைவரையும் அறிமுகப்படுத்தினார். புன்னகையோடு அனைவரிடமும் பேசினான் அகிலன்.

"இவன் நம்மகிட்ட மட்டும் தான் முறைக்குறான். மத்த எல்லாரோடையும் சிரிக்குறான்." என்று நினைத்த பிரபஞ்சனுக்கு தெரியவில்லை அவளது மனைவி மற்றும் மச்சினிச்சியை கண்டாலே அடிக்கும் அளவிற்கு அனலைக் கக்குவான் என்று.

"அம்மா நம்ம ஆருக்கு காது குத்துறது இந்த வருசம் வைக்கலாம்னு இருந்தோமே. ஏன் இந்த மாசமே பண்ணக்கூடாது. அகிலன் தம்பியும் கிடைச்சுட்டானே." என்ற மாதுளாவின் யோசனையும் சரியெனவேப்பட்டது தாமரைக்கு.

சிறிது நேரம் அனைவரிடமும் பேசியவன், வீட்டிற்கு செல்ல தயாராகினான். அவனுக்கோ பூவினியை காணும்போதே கோபம் தலைக்கேறியது. கடினப்பட்டே தன்னைக் கட்டுப்படுத்தி இருந்தவனுக்கு எப்போதுடா இங்கிருந்து செல்வோம் என்றிருந்தது.

அப்போதுதான் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தனஞ்செயனைப் பார்த்தான். அவரது தயக்கமும், அன்பும் அப்பட்டமாக தெரிய அவரை நோக்கி சென்றவன்,

"நீங்க ஏன் அப்படி பண்ணீங்கனு நான் கேட்க மாட்டேன். ஆனால் நீங்க அப்படி பண்ணலனா எனக்கு டாட் கிடைச்சிருக்க மாட்டாரு. தாங்ஸ் அ.. அப்பா." என்றவனது அந்த ஒற்றை அப்பா என்ற வார்த்தையே இத்தனை நாள் வலியையும் மறக்கச் செய்திருக்க, கண்கள் கலங்கிப் போனார் தனஞ்செயன்.

"இதுப் போதும்பா.நீ என்னை புருஞ்சுகிட்ட.... இ..இது போதும்." என்று அவனது கைகளை பற்றிக் கூறியவரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அகிலன்.

' பார்ரா எல்லாரையும் நல்லாவே கவுக்குறான். இனி கொஞ்ச நாளைக்கு நம்மளை யாருமே கண்டுக்கவே மாட்டாங்க.' என்று ஏக்கப் பெருமூச்சொன்றை விடுபவனது கைகளை பற்றியிருந்தாள் பூவினி.

அவளது தொடுகையில் பெரும் உவகைக் கொண்டவனோ காதலோடு பார்க்க, அவளோ " மேல கோதுமை மாவு இருக்கு எடுத்துக் கொடுக்குறீங்களா?" என்றவளை பார்த்து ஏக்கமாக பார்த்தவன், "எடுத்துத்தரேன் வா." என்று கூறிக்கொண்டே சென்றவனது பின்னே சென்றவளது இதழ்களில் புன்னகை அரும்பியிருந்தது.

இந்த மகிழ்வான சூழலில் பூவினியிடம் அகிலனைப் பற்றி கூறுவது சரி வராது என்று மனதில் நினைத்துக் கொண்ட யாழியோ அமைதியாக அமர்ந்திருக்க, அவளையே வந்ததிலிருந்து, கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தென்னவனுக்கு கூட, அவளின் அமைதி, அவனை யோசிக்கச் செய்தது.

'என்ன இவ, எப்போதும் லொடலொடனு பேசுவா. இன்னைக்கு வாய்ல பசை போட்டு ஒட்டுன மாதிரி அமைதியா இருக்காளே' என்று சிந்தித்தவன், மெதுவாக அவளை அழைத்தான்.

"பாப்பா.." என்றவனின் குரலில் ஆரூவோ "என்ன தென்னா மாமா." என்று கேட்க, "அச்சோ பேபி. மாமாக்கு தாகம் அடிக்குது தண்ணீர் கொண்டு வா செல்லம்." என்றவன் ஒரு வழியாக சமாளித்தபடி, அங்கு பார்க்க, அங்கிருந்து எங்கோ சென்றிருந்தாள் யாழினி.

"இவ எங்க போனா?" என்று நாலாபுறமும் கண்களை சுழலவிட, அவளோ, யோசனையாக கிச்சனிற்கு சென்றவள் பூவினியைப் பார்த்து, "அக்கா நான் கிளம்புறேன். நீ பார்த்து இரு. அக்கா இரண்டு பேருமே ட்வின்ஸ்ல, உனக்கு இந்த செய்தி அதிர்ச்சியா இருக்கா?" என்றாள் அவளின் பதிலை அறியும் ஆவலோடு.

"முதல்ல அதிர்ச்சி தான். ஆனால் இப்போ எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆமா ஏன் இப்போ கிளம்புற நீ?"

"அதுவிடுக்கா, உனக்கு வேற எதுவுமே தோணலையா? நம்ம ரூபி..." என்று அவள் முடிக்கும் முன் தன் ஒற்றைக் கரம் கொண்டு தடுத்தவள் அனல் தெறிக்கும் பார்வையைப் பார்த்தாள்.

"முதல்ல இங்கிருந்து கிளம்பு யாழி." என்றவளது வார்த்தையே அவளின் கோபத்தைக் காட்ட, கண்கள் கலங்கிய யாழியோ தன் கண்களை அழுந்த துடைத்துவிட்டு, யாரிடமும் எதுவும் கூறாமல் சென்றுவிட, அவளைத் தேடி வந்த தென்னவனுக்கோ அந்தக் காட்சி கண்களில் பட்டது.

அதே சமயம் முக்கியமான அழைப்பு வர, அகிலனும் தன் அன்னையைப் பார்த்தவன்,

"அம்மா. டாட் இறந்தது உங்களுக்கே தெரியும். நிறைய பொறுப்புகள் என்கிட்ட இருக்கு. நான் முடிச்சுட்டு சீக்கிரம் வந்திடுறேன்." என்றவனது கைகளைப் பற்றிக் கொண்ட தாமரையோ,

"சீக்கிரம் வந்திடனும் அகிலா. அம்மா எதிர் பார்த்துட்டே இருப்பேன்." என்று கண்கள் கலங்க வழியனுப்பினார்.

பூவினியோ சத்தமின்றி தன் அறைக்குள் சென்றவள் மெத்தையின் மீதே பொத்தென்று அமர்ந்தாள்.

"ஏன் யாழி. ஏன் இப்படி பேசுன?" என்று கலங்கியவளுக்கு அந்த பெயரே காதில் ஒலிப்பது போன்ற உணர்வு.

தன் கண்களை மூடியவளுக்கு, வெகு நாட்களுக்கு பின் அவளின் முகம் கண்களில் தோன்றியிருக்க, அந்நொடி அவளுக்கே அவளை நினைத்து கோபமாக வந்தது.

"ரூபி ரூபி... உன்னால தான்டி நான் இவ்ளோ கஷ்டப்படுறேன். நீ இருந்தப்போ பண்ண ஒரே விசயம் என் வாழ்க்கையை மொத்தமா மாத்திருச்சு." என்றவளது கண்களில் கோபமும் வெறியும் ஆதங்கம் என அனைத்து உணர்வுகளும் தென்பட்டது.

இங்கு வீட்டிற்கு வந்த யாழியோ, தன் அன்னையிடம் எதுவும் பேசாமல் தனது அறைக்கு சென்று முடங்கியிருந்தாள்.

"ஏய் யாழி என்னடி உம்முனு வர்ற? ஆமா அக்கா வீட்டுக்கு போனியே என்ன ஆச்சு?" என்று கேட்கும் அன்னையின் குரல் அவளது செவிகளில் நுழைந்தால் தானே.

"அம்மா எங்கிட்ட எதுவும் கேட்காத. உன் பெரிய பொண்ணு இருக்காளே அவகிட்ட கேளு." என்று கதவை பட்டென்று சாத்தியவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

"ஏன் ஏன்டி என்ன இப்படி பண்ற? உன் பிரச்சினை தான் என்ன?"

"ஹான் உன் பொண்ணு. அவ பிடிவாதம் மட்டும் தான் பிரச்சினை. ஏம்மா நீயும் கூடவா ரூபி அக்காவை மறந்துட்ட?" என்று உள்ளிருந்தபடி யாழினி கேட்டதும் அந்த பெயரைக் கேட்டதுமே அதிர்ந்தார் தனலட்சுமி.

"என் ரூபி அக்காவை பார்க்கனும்." என்று தேம்பி அழுதவளுக்கு அன்றைய நியாபகங்கள் பசுமரத்தாணிப் போன்று நினைவில் தோன்றியது.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 25

ரோஸ்மேரி பள்ளிக்குழு முப்பத்தி ஐந்து புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளனர். வி. கே. எஸ் பள்ளிக்குழு முப்பத்தி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், களத்தில் இறங்குகிறார் எதிரெணியின் கேப்டன் பிரியங்கா.

விறுவிறுப்பாக செல்லும் போட்டியின் முடிவு பிரியங்கா கைகளில் உள்ளது. எதிரணியில் தன் மொத்த தைரியத்தின் இருப்பிடமாக நின்றிருக்கிறார் வி. கே.எஸ் மாணவிக் குழுவின் தலைவி பூவினி. ஒரே ரைடில் ஆறு பேரை வெற்றிகரமாக தொட்டுவிட்டு வந்ததன் விளைவே முப்பத்தி நான்கு புள்ளிகள் அவரது அணி பெறுவதற்கு காரணமாகிப் போனது. இரண்டு கேப்டன்களும் நேரெதிரே மோதும் கண்கொள்ளாக் காட்சியினைப் பார்க்கின்றோம். வெற்றி யாருக்கு? என்று ஒலிப்பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது வர்ணனையாளர்களின் பேச்சுக்கள்.

பூவினியின் நெற்றியில் இருந்து சொட்டு சொட்டாக வியர்வை துளிகள் மண்ணில் விழ, வாழ்வா! சாவா என்ற சூழல். பிரியங்காவை அவள் பிடித்துவிட்டால் அனைவரும் ஆல் அவுட் என்பதால் மூன்று புள்ளிகள் கிடைக்கும். அதுவே பிரியங்கா வெறும் களத்தில் இறங்கிப் போக்குக் காட்டி விட்டு வந்தால் கூட ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவாள்.

கபடி.. கபடி... கபடி... என்று வெற்றியின் விளிம்பில் பிரியங்கா கூறிக் கொண்டிருந்தபடி உள்ளே நுழைந்திருக்க, பூவினியும் அவளது வருகைக்காக காத்திருந்தாள்.

தனது அணி வீரர்களை கண்களாலே திறம்பட வழி நடத்தியவள், தனது சக தோழியின் கைகளை பற்றிக் கொண்டபடி பிரியாங்கவை பிடிப்பதற்காக காத்திருந்தாள். அங்கு போட்டியைக் கண்டுக் கொண்டிருந்த சரவணனுக்கோ பதட்டம் எகிறியிருந்தது.

"ஆல் தி பெஸ்ட் பூவினிமா." என்று தன் மகளின் வெற்றிக்காக வெளியில் இருந்தபடி கூறியவரது வார்த்தைகள், அனைத்து சத்தங்களுக்கும் இடையில் இவளது செவிகளில் நன்கு விழுந்ததில், "அப்பா..." என்று உதடுகள் விரித்து அவள் கூறும்போதே, பிரியங்கா அவளைத் தொட வர, பின்னோக்கி சாய்ந்தவள் நூலிழையில் தப்பித்திருந்தாள்.

"எனக்கேவா.... கபடி..." என்று தொடையில் தட்டியவள், கண்களாலே தனது அணியை சுற்றி வளைக்கச் சொல்லியவள், கண்ணிமைக்கும் நொடியில் பிரியங்காவினை பிடித்து அவளின் மீதே விழுந்திருந்தாள்.

கோட்டை தொட பிரியங்கா செய்த முயற்சிகள் ஒவ்வொன்றும், அவளது உடும்பு பிடியில் தவிடு பொடியாக, அந்த ஆட்டத்தினை வென்றிருந்தனர் பூவினியின் அணியினர்.

மேடையேறியவள், ஆட்டநாயகி விருதோடு, முதல் பரிசுக்கான கோப்பையும் கையில் ஏந்தியவள் தன் அணியிடம் பகிர்ந்துக் கொண்டவள், விரைவாக ஓடி வந்தது தன் தந்தையிடம் தான். "அப்பா" என்று அவள் துள்ளிக் குதிக்க தன் மகளது உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் பதித்தார் சரவணன்.

பன்னிரண்டு வயது யாழியோ, "அக்கா செமையா விளையாடுன." என்று அவளை ஆரத்தழுவிக் கொண்டாள்.

"பூவிமா கிளம்பு, ரூபி பாட ஆரம்பிச்சிருப்பா." என்று சரவணன் அவசரப்படுத்த, அவரோடு கிளம்பி நேராக அரங்கத்திற்கு சென்றனர் மூவரும்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...... இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி..... காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்.......

என்ற பாடலினை சுருதி சுத்தத்தோடு பாடிக் கொண்டிருந்தாள் ரூபினி. அபிநயம் பிடிக்கும் கண்களை மூடிக்கொண்டு, பட்டு தாவணியில் அளவான நாசி, காதோரம் அசைந்தாடும் ஜிமிக்கி, புன்னகையோடு பாடும் சிவந்த அதரங்கள் என மானின் நிற தேகத்தில் தங்க சிலையென பாடிக் கொண்டிருந்தவளின் குரலில் அங்கிருந்த அனைவரும் மதி மயங்கித் தான் போயினர். ஏற்கனவே தன் மகளது குரலில் லயித்திருந்த தனலட்சுமியின் அருகே இருந்த, மூன்று இருக்கையில் வந்தமர்ந்துக் கொண்டனர் பூவினி, யாழினி மற்றும் சரவணன்.

அவள் பாடி முடித்ததும் அந்த அரங்கமே கரகோஷம் எழுப்ப, சரவணனோ எழுந்து நின்று, "கலக்கிட்டா மயிலு." என்று விசலடித்துக் கொண்டாடினார்.
தன் தந்தையைக் கண்ட ரூபியோ தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தாள். அதன்பின்னர் பள்ளியின் சிறந்த பாடகி என்ற விருதினை ரூபினி பெற, அகம்மகிழ்ந்து போனார் சரவணன்.

அவரது இரட்டை மகள்களான பூவினியும், ரூபினியும் வெவ்வேறு திறமைகளை தங்களுக்குள் வைத்துள்ளார்கள் என்ற பெருமையே அவரை கர்வம் கொள்ளச் செய்தது.

வீட்டிற்கு வந்ததும் தனது இரு மகள்களுக்கும் திருஷ்டியை கழித்தார் சரவணன்.

"ஆரம்பிச்சுட்டீங்களா.... ஆனாலும் உங்க அழிச்சாட்டியம் தாங்கலைங்க." என்றார் தனலட்சுமி முகத்தை வெட்டிக்கொண்டே.

"யாருக்கோ பொறாமை அதிகமா இருக்குது போல. போடி போய் ஸ்வீட் செய்." என் பொண்ணுங்களுக்கு கொடுக்கனும்."

"ஏங்க பன்னிரண்டாவது படிக்குறாங்க. படிப்புல கனத்தை செலுத்த சொல்லாமல் நல்லா சப்போர்ட் பண்றீங்க. ஒன்னு கபடி கபடினு திரியுது. இன்னொன்னு சங்கீதம்னு சுத்திட்டு இருக்கு. இது எல்லாம் எங்க போய் காலேஜ் போய் படிக்குமோ." என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.

"பாருங்கப்பா இந்த அம்மாவை." என்று ஒரே போல் ரூபியும் பூவியும் கூற, யாழினியோ சிரித்தாள்.

"அவ கிடக்குறாட கண்ணுங்களா. அந்த கோப்பை எல்லாம் எங்க வைக்கலாம்னு பார்க்கலாம்." என்று தனது மகள்களை அழைத்துச் சென்றார்.

"அம்மா சங்கீதரூபினி... உனக்கு வேற சினிமா பாட்டு எல்லாம் பாட மாட்டியா? எப்போபாரு சரீகமா பதநீதானா"

"அடியே பூவி ரொம்ப பேசாத. பார்த்தியா அப்பா கூட எந்திரிச்சு நின்னு விசிலடிச்சாரு" என்று உதட்டை சுழிக்க,

"அய்யோ அப்பா ரொம்ப தான். எனக்குலாம் அப்பா எல்லா நேரமும் எந்திரிச்சுக் கை தட்டுனாருடி." என்றாள் பூவினி மிடுக்காக.

"அடியே ஓவரா பேசாதடி."

"நீ தான் ஓவரா பேசுற..." என்று மாறிமாறி பேச இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழித்தாள் யாழினி.

"அப்பா அக்கா இரண்டு பேரும் சண்டை போடுறாங்க" என்று தன் தந்தையிடம் ஓட,

தனலட்சுமியோ, "இதுங்க சண்டை போடலனா தான் ஆச்சரியம். இவங்க இரண்டு பேரும் ட்வின்ஸ்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? வேற வேற மாதிரி இருக்காங்கனு பார்த்தா... குணமும் எலியும் பூனையுமா தான் இருக்கு." என்று சலித்துக் கொண்டார்.

"என் புலியும் மயிலும் வாங்க இங்க." என்ற சரவணது அழைப்பில் தன் தந்தை நோக்கி வந்தனர் பூவினியும் ரூபினியும்.

"இரண்டு பேருக்கும் என்ன சண்டை?"

"அப்பா... சண்டை எல்லாம் இல்லை. சொல்லுங்கப்பா உங்களுக்கு யாரு பிடிக்கும்? என்னயவா? ரூபியவா?"

"என்ன புலிக்குட்டி கேள்வி இது? எனக்கு இந்த மூன்று தேவதையையும் பிடிக்கும். வாங்க இங்க இரண்டு பேரும்." என்று அழைக்க தன் தந்தையின் முன் வந்து நின்றனர் பூவினியும் ரூபினியும் "இனி சண்டை போடக்கூடாது. சரியா?" என்றதும் சரியென தலையாட்டினர் இருவரும்.

கடைக்குட்டி யாழியோ, சிரித்துக் கொண்டே இருந்தவள் தன் தமக்கைகளை கண்டு எப்புடி! என்று பளிப்புக் காட்ட,

"சின்னகுட்டி சிரிக்கவா செய்யுற. வந்து வெச்சுக்குறேன்." என்று பூவியும் ரூபியும் ஒன்றாகவே முணுமுணுத்தனர்.

இவ்வாறே நாட்கள் அழகாக கடந்திருக்க, அடுத்த நாள் காலை நால்வரும் நகை கடைக்குச சென்று பூவி ஆசைப்பட்டது போல வைர மூக்குத்தியும், ரூபி ஆசைப்பட்டது போல காதில் அசைந்தாடும் குட்டி ஜிமிக்கியும், யாழிக்கு கால் கொலுசும் வாங்கிக் கொடுத்திருந்தார் சரவணன்.

அன்றொரு நாள் பள்ளியிலிருந்து வந்துக் கொண்டிருந்தாள் யாழினியோ, சாலையை கடக்கப் பார்க்க, அவ்விடம் வந்த ஆட்டோவானது அவளை இடித்துவிடக் கூடாது என்பதில் முயற்சி செய்து குப்புறக் கவிழ்ந்துவிட, இவளோ நிலைத்தடுமாறியவள் கீழே விழுந்திருந்தாள். காலில் அடிப்பட்ட காயம் வேறு. விழுந்த அதிர்ச்சியில் மயக்கம் வேறு.

ஆபத்து என்று வந்துவிட்டால் சூப்பர் ஹீரோ வந்து காப்பாற்றும் படங்களை எல்லாம் கண்டு வளர்ந்தவளுக்கோ, அந்த மயங்கிய நிலையிலேயே கண்களை திறக்க, தன்னை இரு கைகளால் ஏந்திக்கொண்டு ஒருவர் செல்வது மட்டும் நன்கு தெரிந்தது.

அவளது உதடுகள் அன்னிச்சையாக "நீங்க என் ஹீரோவா?" என்று மொழிந்திட, சிறியவளை கையில் ஏந்தியவனோ இதழ் பிரிக்காமல் சிரித்தான்.

அவனது கன்னக்குழி பளிச்சென்று காட்ட, அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞன் அவளுக்கு ஹீரோவாக தான் தெரிந்தான். அப்படியே அவனது கைகளிலேயே மயங்கியநிலையில் சரிந்தாள் யாழினி.

அவன் யாழினியை தான் வந்த மருத்துவமுகாமில் சேர்த்து இருந்தான்.. மயக்கம் தெளிந்தவள், கண்களை திறந்து பார்க்க, பஞ்சினைக் கொண்டு அவளது காயத்திற்கு இதமாக மருந்து இட்டவனோ, "சின்ன காயம் தான் பேபி. தண்ணீர் மட்டும் காயத்துல படாம பார்த்துக்கோ." என்று இதமாக கூறியவன் அவளது தலையை அழுத்தமாக வருடியபடி, அங்கிருந்து செல்ல,

ரூபினிக்கோ தகவல் வேறு ஒரு சிறுமியின் மூலம் தெரியவந்ததில், மூச்சிறைக்க ஓடிவந்தவள், அவனின் மீதே மோதி நின்றாள். அவளது கண்களோ படபடத்துக் கொண்டது. தன் மீது மோதியவளை வாகாக வளைத்துப் பிடித்திருந்தான் அவன். தன் கண்களை மெல்லப் பிரித்தவள் அவனைக் கண்ட நொடி "அய்யய்யோ" என்று கத்த, அவனோ அவளது வாயினை பொத்தியவன், "கத்தாதடி பட்டர்ஸ்காட்ச்" என்றவளைத் தன்னோடு இழுத்துச் செல்ல, அதிர்ந்த யாழியோ "அக்கா.... அக்கா..." என்று கூறிக்கொண்டே பின்னே சென்றாள்.

அன்றைய நினைவுகளை நினைத்த யாழினியோ அழுது கரைந்துக் கொண்டிருந்தாள் என்றால், இங்கு பூவினி ஒருபுறம் அழுதுக் கொண்டிருந்தாள். அப்போது கதவை திறந்துக் கொண்டு, உள்ளே நுழைந்திருந்தான் பிரபஞ்சன்.

அவன் வந்ததை அறிந்த நொடி தன் கண்களை துடைத்துக் கொண்டவள் தன் கலங்கிய முகத்தை மறைக்க அரும்பாடு பட்டாள்.

"ஏய் பாப்பு என்னாச்சு?" என்று அவளது முகத்தைப் பற்றியவன் கேட்க, கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டவள் அவனது நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.

"என்னாச்சு பாப்பு. ஏன் அழுற?" என்றவன் பதட்டத்தோடு அவளை அணைத்திருந்தான்.

"எனக்கு எங்க அப்பா நியாபகம் வந்திடுச்சு. என் அப்பாகூட இருந்தப்போ ரொம்ப ஜாலியா இருக்கும். என் அப்பா வேணும்." என்று குழந்தைப் போல் அழுதவளை முதன்முறையாக கண்டவன் துடித்துதான் போனான்.

"நான் இருக்கேன் பூவி உனக்கு. உனக்கு எல்லாமுமாக நான் இருக்கேன்." என்றவனின் பதிலில் திகைத்தவளுக்கு அப்போது தான் அவனிடம் ஒன்றியிருந்தது புரிந்தது.

'இவரைப் போய் வார்த்தைகளால் நோகடித்துவிட்டோமே. எல்லாமே ரூபியால் தானே.' என்று நினைத்தவள் வருத்தத்தோடு அவனது முகத்தினை ஏறிட்டாள்.

"உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட கோபம் இல்லையா? என்னை ஏன் தான் கல்யாணம் பண்ணோம்னு தோணலையா?"

"எதுக்கு கோபப்படனும். என் வாழ்க்கையில கிடைச்ச தேவதை நீ. அதுக்காக நீ ஹர்ட் பண்றது வலிக்கவே இல்லைனு சொல்ல மாட்டேன், வலிக்கும். ஆனால் உனக்காக தாங்கிப்பேன்." என்றவனது பதிலில் மேலும் அழுதவள் அவன் மார்போடு சாய்ந்துக் கொண்டாள்.

*****

வீட்டிற்கு வந்த அகிலனோ தனது அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். பூவினியை பிரபஞ்சனின் மனைவியாக சற்றும் எதிர்பார்க்கவே இல்லை அவன். அந்த கோபத்தை எல்லாம் அங்கிருந்த பொருட்களை உடைப்பதில் காட்டினான். இறுதியாக ஒரு புகைப்படத்தை எடுத்தவன் தனது மார்பில் வைத்து அணைத்தபடி, காதலில் கசிந்துருக, அவனையும் மீறி கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

"பட்டர்ஸ்காட்ச்" என்று காதலோடு கூறியவனது கண்ணீர் அந்த புகைப்படத்தை நனைத்திருக்க, அன்று யாழினியை கடத்தி வந்தப்போது, நடந்த நிகழ்வுகளை யோசிக்கத் தொடங்கியிருந்தான்.

யாழினி தன்னை முதலில் அத்தான் என்று சொல்லியக் காரணம் பிரபஞ்சன் என்று இப்போது தான் புரிந்துக் கொண்டான். அதன்பின் அவளது காயத்திற்கு மருந்திட்ட நொடி அவள் தன்னை யாரென்று உணர்ந்தது மட்டும் அல்லாமல், அவள் கேட்ட கேள்வியே "என் ரூபி அக்கா எப்படி இருக்கா அத்தான்." என்று தான்.

அந்த நொடி கோபத்தில் அவளது கன்னத்தினை அறைந்திருந்த நிகழ்வுகள் என ஒவ்வொன்றையும் நினைத்தவனுக்கு அவனது பட்டர்ஸ்காட்ச்சின் முகமே இதயத்தை நிரப்பியிருக்க, பழைய நியாபகங்கள் கண் முன் நிழலாக தோன்றியது.

ரூபினியின் இதழ்களை தனது கைகளால் மூடியவன், அவளை அங்கிருந்த மறைவான அறைக்குள் இழுத்துச் சென்றான்.
மெல்லமாக அவனது கைகளை எடுக்க, அவனையே மலுங்க மலுங்கப் பார்த்தாள்.

"அகில் நீங்க எப்போ வந்தீங்க? என் தங்கச்சி யாழினிக்கு என்னாச்சு? நான் அவளை பார்க்கனும்."

"அந்த குட்டிப் பொண்ணு உன் தங்கச்சியா?"

"ஆமா அவ என்னோட தங்கச்சி யாழினி. நீங்க எப்படி இங்க?"

"நான் டாக்டர்டி கடைசி வருசம் வேற... அதான் இந்த ஊருக்கு கேம்ப் வந்தோம். அப்புறம் உன் தங்கச்சிக்கு ஒன்னும் இல்லை. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். எவ்வளவு நாள் கழிச்சு பார்த்திருக்கேன். எதுவும் ஸ்பெஷலா தர மாட்டியா?" என்றவனின் பார்வை அவளது இதழில் வந்து முடிந்தது.

"அடி கிடைக்கும் உங்களுக்கு." என்றவள் அவனது கன்னத்தினைக் கிள்ள, "ஆ... வலிக்குதுடி." என்று கூறியவனது முகம் சுணங்கியது.

"அய்யய்யோ நிஜமா வலிக்குதா அகில்" என்று அவனது கன்னத்தினை தடவிக் கொடுக்க,

அவளது தளிர் விரல்களை பிடித்தவனோ, "கொஞ்சம் வலிக்குது. முத்தம் கொடு சரியாகிடும்." என்று கிசுகிசுப்பான குரலில் கூறியதும் சிவந்துதான் போனாள்.

அதற்குள் யாழியோ, "அக்கா அக்கா.." என்று அழைத்த வண்ணம் நொண்டிக் கொண்டே வர,

"யாழினி.." என்று பதறியவள் "நான் அப்புறம் வரேன். போங்கோ." என்றபடி அவனை தன்னிடமிருந்து விலக்கிவிட்டவளோ, யாழினியை நோக்கி ஓடி வந்தாள்.

"எங்க போனக்கா? அந்த டாக்டர் ஏன் உன்னை இழுத்துட்டு போனாரு."

"அதுவந்து அக்காக்கு உடம்பு சரியில்லைனு நினைச்சிட்டாரு அது தான்." என்று ஒருவாறு சமாளித்தவளது மனமோ, 'இவளை சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் போலயே.' என்று பெருமூச்சொன்றை விடுத்தது. அகிலனோ செல்பவளையே காதலோடு பார்க்க, அவனது இதழ்களோ குறும்பால் மலர்ந்திருந்தது.

அவன் பார்ப்பதை உணர்ந்து திரும்பியவள் "என்ன" என்பது போல் கேட்க, அவனோ இதழ்களை குவித்து முத்தம் கொடுக்க, வெட்கத்தில் சிவந்தவள் பட்டென்று முகத்தை முன்னோக்கி திருப்பிக் கொண்டாள்.

சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக தன் தோழிகளோடு கொடிசியா சென்றிருந்தாள் ரூபினி. பாடி முடித்ததும், தன் நண்பிகளோடு சேர்ந்து பனிக்கூலினை வாங்கி பருகிக் கொண்டிருக்க, பட்டர்ஸ்காட்சினை ரசித்தவள் உண்டுக் கொண்டிருந்த சமயம் அவளது துப்பட்டா அவளுக்கு எதிர்புறமாக அமர்ந்திருந்த அகிலனின் மீதே மோதிய வண்ணம் இருந்தது. முதலில் தட்டி தட்டி விட்டுக் கொண்டே இருக்க, துப்பட்டோவோ அவனை விடுவேனா என்ற தோரணையில் அவன் மீதே பட்டு பட்டுச் சென்றது.

ஒருகட்டத்தில் அவனோ துப்பட்டாவினை இழுக்க, அவளது கழுத்தை சுற்றியிருந்த துப்பட்டாவுடன் நிலைத்தடுமாறியவள் அவனது கைகளின் மீதே பின்புறமாக சரிந்தாள்.

அவனோ நொடிப்பொழுதில் அவளைப் பிடித்து நிறுத்தியிருக்க, அவள் கைகளில் இருந்த பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரிமோ அவனது உடையை அலங்கரித்தது.

அவளது மையிட்ட கண்களும், தேன் சிந்தும் அதரங்களும், அவனை கிறங்க வைக்க அவளயே பார்த்தான் கண்கள் அகற்றாமல். சற்று முன்பு மேடையில் கேட்ட அவளின் இசையில் மயங்கியவனோ தற்போது கொடி இடையாளின் கண்களில் தன் மனதினை பறிக் கொடுத்திருந்தான்.

பாவையவளோ தன் நயனம் காட்டும் கண்களால் மலுங்க திருதிருவென விழித்தது சில நொடிகளே, அவனது நெஞ்சை பிடித்து தள்ளியவள், அவனைவிட்டு பிரிந்து நின்றாள்.

அவனோ அவளது முகத்தையே தான் பார்த்திருந்தான். எத்தனை நேரம் பார்த்திருப்பான் என்று அவன் அறியவில்லை. அவனையும் அறியாமல் அவளை "பட்டர்ஸ்காட்ச்" என்று அழைக்க, அவளோ அங்கிருந்தால் தானே அவனின் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்து அடங்கியவள், அங்கு நிற்க இயலாமல் தன் தோழிகளோடு அங்கிருந்து விறுவிறுவென சென்றிருந்தாள்.

பதினேழு வயது நிரம்பிய பாவைக்கோ உணர்வுகளை கட்டுப்படுத்த இயலவில்லை. நெஞ்சுக்குள் ஒருவித குறுகுறுப்பு இருக்க, அவளது தோழிகள் அவளை வேண்டும் என்றே ஓட்டித் தள்ளியதில், அவனது முகம் அவளின் மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்திருந்தது.

இப்படியே நாட்கள் கழிய, பூவினியும் கபடி டோர்னமென்டிற்காக ஈரோடு சென்றிருந்த நேரம், ரூபினியோ பயிற்சி வகுப்புகள் முடிந்தபின்னர், வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள். வரும் வழியில் எதேச்சையாக அகிலனைப் பார்த்தவள், ஆச்சர்யத்தில் தன் கண்களை விரித்தாள்.

"ரூபி இவரை பார்க்காத மாதிரியே ஓடிடு." என்று எங்கோ பார்ப்பது போல சென்றவள் அவன் மீதே மோதியிருக்க,

"ஏய் நீ ஸ்கூல் போற சின்ன பொண்ணா?" என்று கேட்டவன் அவளை மேலிருந்து கீழ் பார்க்க,

"ஹலோ ரொம்ப குட்டி பொண்ணு இல்லை. பன்னிரண்டாவது படிக்குறேன்." என்றாள் மிடுக்காக.

"சரி விடு அடுத்த வருசம் காலேஜ் தான. பரவாயில்லை நல்லா படி. யாராவது லவ் பண்றனு சுத்துறாங்கனா. அவங்ககிட்ட உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குனு சொல்லு." என்றவனை புரியாமல் பார்த்தவள்,

"எனக்கு தான் அப்படி யாரும் இல்லையே? நான் ஏன் அப்படி சொல்லனும்?" என்றாள் படுமிடுக்காக.

"யார் சொன்னா உனக்கு ஆள் இல்லைனு. பிளாக் டீசர்ட்ல, ப்ளூ ஜீன்ஸ் போட்டு உன் முன்னாடி கம்பீரமா நின்னுமா உனக்கு கண்ணு தெரியலை." என்று அவன் கூறிய நொடி அதிர்ந்தவள், அவனைத் தாண்டி செல்ல முற்பட, அவளது கைகளைப் பற்றியவனோ, "பொறுமையா உன் பதிலை சொல்லு. நாளைக்கு இதே நேரம் இங்க இருப்பேன். பிடிச்சிருக்குனா பிடிச்சிருக்குனு சொல்லு, பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லு. சோ சாய்ஸ் இஸ் யுவர்ஸ். பட் ஒரு தடவை எது சொன்னாலும் அதுல இருந்து நீ மாறக்கூடாது." என்றான் அழுத்தமாக.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
வீட்டிற்கு வந்தவளுக்கோ அவனது நினைவுகளே இம்சைக் கொள்ளச் செய்தது. எதையும் ஆராய்ந்து யோசிக்கும் பக்குவம் அற்ற அவளது வயதே காதலில் விழ காரணமாக அமைந்திருக்க, நாளையே அவள் அவனின் காதலுக்கு சம்மதம் கூற அதே இடத்தில் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் வராததால் வீட்டிற்கு வந்தவள் சத்தமின்றி அழுதுக் கரைந்தாள்.



இவ்வாறு இரண்டு நாட்கள் ஓடியிருக்க மூன்றாம் நாள் அவளின் கண்முன்னே வந்திருந்தான் அகிலன். அவனைக் கண்டதும் கோபத்தில் பேசாமல் அவள் செல்ல அவன் தான் குழம்பிப் போனான்.



அவனோ அவள் பின்னே சென்றபடி, அவளது கரத்தினைப் பற்றியிருந்தான். அவனது தொடுகை அவளை சிலிர்க்கச் செய்ய பதட்டத்தோடு திரும்பினாள் பாவையவள்.



"என்னாச்சு ஏன் பேசமாட்டீங்குற? உனக்கு என்னை பிடிக்கலைனா சொல்லு. உன் முன்னாடி வர மாட்டேன்." என்றவனை கண்கள் கலங்க பார்த்தவளோ,



"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு. ஏன் இரண்டு நாளா வரலை. நான் ரொம்ப பயந்துட்டேன்." என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு அழ, அவளது முகத்தினை, தனது இருகைகளாலும் ஏந்தியவன் அவளது நெற்றியில் முத்தமிட்ட நொடி, அவளது உள்ளமோ படபடவென அடித்துக் கொள்ள, வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வினை உணர்ந்தாள் பெண்ணவள்.



"உனக்கு என் மேல இவ்வளவு லவ்வா பட்டர்ஸ்காட்ச்? உனக்கு ஒன்னு தெரியுமா? நான் வந்தேன். ஆனால் நீ படிக்குற பொண்ணு உன் மனசை கெடுக்க வேண்டாம்னு ஒரு எண்ணம் அதுனால கிளம்பிட்டேன். ஆனால் இன்னைக்கு என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியல பேபி அதான், என்ன ஆனாலும் பரவாயில்லைனு வந்துட்டேன்." என்பவனது அன்பில் நெகிழ்ந்தவள் தான் அதன் பின் அவள் அழவே இல்லை.



காதலோடு நாட்களை அழகாய் மாற்றியிருந்தான் அவன்.



நாட்கள் அதன் போக்கில் நகர, அன்றொரு நாள் அவன் கொடுத்த கருப்புநிற சேலையில் வந்து நின்றவளைக் காதலோடு பார்த்தவன்,



"கல்யாணம் பண்ணிப்போமா?" என்று கேட்டிருக்க சரியென தலையாட்டியிருந்தாள் ரூபினி. என்றும் போல அவளது கண்மூடித்தனமான அன்பில் கரைந்துதான் போனான் அகிலன்.



அன்றைய நாட்களை நினைத்தவனுக்கு, அவளது அன்பு இன்றளவும் பிரம்மிப்பாய் இருந்தது.



"ஐ லவ் யூ பட்டர்ஸ்காட்ச். ஐ லவ் யூ டி." என்று அழுது கரைந்தவன் அவளது எழில் முகத்தினையே காதலோடு பார்த்தான்.



அவன் கட்டிய மங்கள நாணோடு, நெற்றியில் அவன் இட்டிருந்த குங்குமத்தை சுமந்தபடி காதலோடு அகிலனைப் பார்ப்பது போன்ற புகைப்படம் அவனது கண்களை நிரப்பியது.
 
Status
Not open for further replies.
Top