அத்தியாயம் 2
பவித்ராவை கண்டதுமே அதிர்ந்த அவனது விழிகளை ஒருநொடியில் மாற்றிக் கொண்டபடி அவளின் பெற்றோரை பார்த்தவன், "நான் பவித்ரா கூட கொஞ்சம் தனியா பேசனும்" என்றதும் அனைவரும் அவனையே சிறு வியப்புடன் பார்த்தனர்.
குமரனோ, "டேய் மச்சான் செம ஸ்பீடா தான் இருக்க?" என்று கண்ணடிக்க, பதிலுக்கு முறைத்தவனோ,"
வாயை மூடு குமரா" என்று பல்லைக் கடித்தான்.
"ஏன்டா நான் அப்படி என்ன சொல்லிட்டனு இவன் இப்படி கோபப்படுறான்?" என்று அவன் முணுமுணுக்கும் போதே பவித்ராவின் தந்தை "சரி பேசிட்டு வாங்க மாப்பிள்ளை." என்றவர் மேலும் தன் மகளை பார்த்து, "பவிமா பால்கனிக்கு அழைச்சுட்டு போய் பேசிட்டு வாடா" என்று கூறியதில் 'இவரல்லவோ நல்ல தந்தை, எனக்கு வாய்ச்சிருக்கே மாமனாருனு பேர்ல சூனியக்காரன்' என்று குமரன் அவரையே பார்த்தான் பெருமையாக.
பவித்ராவும் அவனை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு செல்ல, அங்கு சென்றதும் அவளது முகத்திலோ ஒரு வித பதட்டம் இருந்துக் கொண்டே இருப்பதையும் அவளது முக மாற்றத்தையுமே கவனித்துக் கொண்டே இருந்தான் பிரபஞ்சன்.
"உண்மையிலே உங்க சம்மதத்தோட தான் இந்த கல்யாண பேச்சு நடக்குதா பவித்ரா" என்று கேட்பவனை அதிர்ந்த விழிகளோடு பார்த்தாள் அவள்.
"அமைதியா இருந்தால் எப்படி பவித்ரா?" என்று சாதாரணமாக அவன் கூறினாலும் அவனது அந்த அழுத்தம் இவளை பதறச் செய்தது.
"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை." என்று தலை கவிழ்ந்துக்கொண்டே கூறும் அவளது பதிலைக் கேட்டவனது முகத்தில் எந்த அதிர்ச்சியுமே இல்லை. அவள் இதை தான் கூறுவாள் என்று நன்கு உணர்ந்திருந்தான் அவளைப் பார்த்த நொடியே.
சரியாக ஒரு வாரம் முன்பு தான் அவளை ஒரு காபி ஷாப்பில் பார்த்தான். அங்கு அவளோடு ஒருவன் இருக்க, அவனது தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அவள். அவனோ தன் தோளில் சாய்த்து இவளை ஆறுதல் படுத்தியவன், இவளது நெற்றியில் முத்தம் பதிக்க அங்கு எதேச்சையாக வந்த பிரபஞ்சனோ இருவரின் அன்பையும் கண்டு சிரித்துக் கொண்டே கடந்துச் சென்றான்.
அவனை பொறுத்தவரை காதல் மிகவும் அழகான ஒன்று, இருவரின் கண்களில் தெரிந்த காதலே இருவரையும் காதலர்கள் என்று பறைச் சாற்றியிருக்க, பெண்ணின் புகைப்படத்தை கண்ணில் கூட காணாது நேரடியாக பெண் பார்க்க வந்தவனுக்கு இங்கு இவளைக் கண்டதும் அதிர்ச்சி தான். இருந்தும் அத்தனை பேரின் முன்பு கேட்க விரும்பாதவன் அவளை தனியாக அழைத்து வந்து பேசத் தொடங்கியிருந்தான்.
"அதை தாராளமா உங்க அப்பாகிட்ட சொல்லிருக்கலாமே. ஏன் சொல்லலை?"என்றான் கேள்வியாக.
"அது வந்து.. அப்பாகிட்ட சொல்லலாம்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள அப்பா எல்லாமே பேசி முடிச்சுட்டாரு." என்று நலிந்த குரலில் கூறினாள் அவள்.
"அப்போ நீ காதலிக்குற விசயமே அப்பாகிட்ட சொல்லலை அப்படி தான?" என்பவனது கேள்வியில் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் 'இது எப்படி இவருக்கு தெரியும்' என்று திருதிருவென விழித்தாள்.
"எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறியா பவித்ரா?" என்ற அவன் கேட்டதுமே தலையை மேலும் கீழுமாக ஆட்டியவள் "ம்ம்ம்" என்றாள் அதிர்ச்சி விலகாமல்.
நடந்தவற்றை அவன் கூறியதுமே, கண்களில் நீர் திரள, "ப்ளீஸ்ங்க என்னை பிடிக்கலைனு அப்பாகிட்ட சொல்லிடுங்க. அப்போ தான் இந்த கல்யாண பேச்சு வார்த்தை நின்னுடும். இப்போ நான் எப்படி உங்ககிட்ட தனியா பேசி உண்மையை சொல்றதுனு யோசிச்சுகிட்டே தான் வந்தேன். நல்லவேளை நீங்களே தனியா பேசனும்னு சொல்லிட்டீங்க" என்று பெருமூச்சொன்றை அவள் விட,
"நீ உன்னோட விருப்பத்தை தைரியமா உங்க அப்பாகிட்ட சொல்லாத வரைக்கும் அடுத்தடுத்து மாப்பிள்ளைனு பார்த்துகிட்டே தான் இருப்பாங்க. இவ்ளோ தூரம் ஒரு விசயம் நடந்தும் நீயும் சரி அந்த பையனும் சரி எந்த ஸ்டெப்பும் எடுக்காமல் எப்படி சாதாரணமாக இருக்கீங்க?"
"இல்லை நான் உங்ககிட்ட பேசி வேண்டாம்னு சொல்ல வெச்சிடலாம்னு நினைச்சேன். நாங்க இரண்டு பேருமே ஒரே காலேஜ். இப்போ அவன் எம்.காம் பண்றான். இன்னைக்கு அவனுக்கு எக்சாம் அதான் அவனால வர முடியலை" என்று கண்கள் கலங்கியபடி கூறினாள்.
"90ஸ் கிட்ஸ் நாங்க எல்லாம் செட்டில் ஆகிட்டு மேரெஜ் பண்ண நினைச்சா, அதுகுள்ள இந்த 2கே கிட்ஸ் மேரெஜ் பண்ணிட்டு தான் செட்டில் ஆவோம்னு இருக்காங்க" என்று முணுமுணுத்தவன் தலையை கோதியபடியே, "சரி சரி அழுது எதுவும் மாறப் போறதில்லை. போய் அப்பாகிட்ட சொல்லுங்க. இப்படி அவனுக்காக வெயிட் பண்ணுறேன்னு உறுதியாக நில்லுங்க." என்று சொன்னவன் அங்கிருந்து முகப்பு அறையை நோக்கி சென்றான். செல்லும் அவனையே பார்த்தபடி நின்றவளுக்கு அவனது வார்த்தைகள் கொடுத்த தைரியமே போதுமானதாக இருக்க கண்களை துடைத்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள்.
"என்ன மாப்பிள்ளை என் பொண்ணு என்ன சொல்றா?" என்று சிரித்துக் கொண்டே கூறுபவரை பார்க்கவும் அவனுக்கு பாவமாக தான் இருந்தது.
இருந்தும், "உங்க மாப்பிள்ளை நான் இல்லைனு சொல்றாங்க" என்று கூறிக்கொண்டே பவித்ராவை பார்க்க, அவளும் தன் விருப்பத்தை கூற, அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
கோபத்தில் தன் மகளை அடிக்க அவர் கை ஓங்க, தடுத்தவனோ, " அவ ஒன்னும் பெரிய தப்பு பண்ணல. உங்க பொண்ணோட விருப்பத்தை புரிஞ்சு நடந்துக்கோங்க." என்று அவன் கூறவும் அவரோ கண்கள் கலங்க "என்னை மன்னிச்சிடுங்க" என்று மனதார கைகளை கூப்பி கூறும் முன்பே அவரை தடுத்து நிறுத்தினான்.
" மன்னிப்பு கேட்க அவசியம் இல்லைங்க. தாலி கட்டுற நேரத்துல இல்லை கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சா தான் தப்பாகியிருக்கும். இப்போ அப்படி இல்லை முன்னாடியே தெரிஞ்சிடுச்சு, அதுவரைக்கும் சந்தோசம் தான். அப்புறம் நாங்க வரோம்." என்றவன் தன் அம்மா அப்பா, அக்கா, மாமா என அனைவரையும் பார்த்து, "கிளம்பலாம் வாங்க" என்று எதுவுமே நடக்காதது போல கூறிக் கொண்டு வெளியேற ஒவ்வொருவரும் அவனை நினைத்து வருத்தத்தோடு அங்கிருந்து சென்றனர்.
தாமரை தன் மகனின் தோள் தொடவும், அவரை திரும்பி பார்த்த பிரபஞ்சனோ, "என்னம்மா. எல்லாரும் ஏன் இப்படி மூஞ்சியை தொங்கப் போட்டு இருக்கீங்க. வீட்டுக்கு போலாம். எல்லாரும் வண்டில ஏறுங்க" என்று அனைவரையும் காரில் ஏற வைத்தான்.
மாதுளாவோ, "டேய் பிரபா வருத்தமில்லையேடா. எங்களுக்கே அவ்ளோ கஷ்டமா இருக்கு" என்று கூறுபவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன்,
"அக்கா நடப்பது அனைத்தும் நன்மைக்கே. இதுல சந்தோசம் தான் படனும் முன்கூட்டியே தெரிஞ்சுடுச்சுல. சரி குமரன் கூட வெளியே போய்ட்டு வரேன். மாமா எல்லாரையும் பார்த்து கூப்பிட்டு போங்க." என்றவன் ஆரூவை பார்த்து, "ஏய் புஜ்ஜி மாமா உனக்கு கடலைமிட்டாய் வாங்கிட்டு வரேன்." என்று உற்சாகமாக கூறி வழியனுப்பி வைத்தான்.
அதுவரை சிலை போல் வருத்தத்தோடு குமரன் நிற்க, அவனருகில் வந்தவன், "டேய் டேய் போதும்டா.. இந்த சோக மூஞ்சி எல்லாம் செட்டே ஆகலை. வண்டியை எடு போவோம்." என்று அவனை உலுக்கியதில் நிமிர்ந்து அவனை பார்த்தவன்,
"டேய் உண்மையை சொல்லுடா உனக்கு வருத்தமா இல்லை." என்க.
அவனோ "இல்லைடா" என்று தோள்பட்டையை சாதாரணமாக தூக்கிக்காட்ட, "நீ மனுசனே இல்லைடா" என்றான் குமரன்.
அவனது கூற்றில் இதழ் வளைத்து சிரித்தவன், "டேய் குமரா எனக்கானவ எங்கயோ பொறந்துட்டா. அவளை பார்க்குறதுக்காக தான் இது மாதிரி தடங்கல் வருது." என்று கூறிக்கொண்டே அவனே வண்டியை எடுத்தவன் குமரனை பின்னே அமரச் சொல்ல,
பின்னால் ஏறியவன், "அதுவும் சரி தான் மச்சி." என்று அவனது தோள்களை தட்டி பெருமூச்சொன்றை விட்டான்.
அவனும் தன் நண்பனை நன்கு அறிந்தவன் தான். நிச்சயம் அவனுக்காக வருத்தப்படுவானோ இல்லையோ தன் குடும்பம் வருத்தப்பட்டு சென்றதை நினைத்து கண்டிப்பாக கவலைக் கொள்வான் என்பதை உணர்ந்திருந்தான் குமரன்.
அதே சமயம் தன் அம்மா தங்கையோடு இருக்கும் போது காலை நடந்த விடயங்கள் கூட பூவினியின் மனதை பாதிக்கவில்லை. எப்போதும் போல யாழினியை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றுக் கொண்டிருந்தாள் பூவினி.
"இன்னைக்கு என்ன சமைக்கலாம் யாழி?"
" அக்கா எனக்கு பீட்சா செஞ்சு தரியா?" என்று நாக்கை வெளியே நீட்டிக் கொண்டே எச்சில் ஊற கேட்கும் அவளது கைகளிலே நறுக்கென கிள்ளி வைத்தாள் பூவினி.
"ஏன்டி ஏன். சாப்பிடுற மாதிரி ஒரு உணவு சொல்ல சொன்னால் ஜீரணமாகாத சாப்பாடு சொல்ற நீ" என்று கடியும் தன் அக்காவை முறைத்துக் கொண்டே தன் கைகளை நீவினாள் இளையவள்.
"என்கிட்ட கேட்டா எனக்கு பிடிச்சது தானே சொல்ல முடியும்." என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்களை நோக்கி ஓடி வந்தான் அவர்களது பக்கத்து வீட்டு சிறுவன் தருண்.
"யாழிக்கா கிரிக்கெட் விளையாட போறோம். ஒரு ஆள் குறையுது வரியா?" என்று புருவம் தூக்கிக் கேட்க,
"இதோ வரேனே" என்று கண்கள் மின்ன கூறியவளுக்கு அப்போது தான் தன் அக்கா அருகில் இருப்பது நினைவுக்கு வர, 'அய்யய்யோ இவ இருக்குறத மறந்துட்டு நம்ம வேற ஆர்வத்துல கத்திட்டோமே. சரி சமாளிப்போம்.' என்று நினைத்துக் கொண்டே தன் அக்காவை பார்த்தவள் முப்பத்திரண்டு பல்லையும் காட்டினாள்.
"என்னடி இப்படி சிரிச்சா விளையாட அனுப்பிடுவேனு பார்க்குறியா? ஏழு கழுதை வயசாகுது இன்னும் இந்த சில்வண்டுங்க கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடுறியா நீ?"
"அக்கா ப்ளீஸ். நீ மட்டும் பப்ளிக் எக்சாம் வெச்சுட்டே கபடி விளையாடலயா." என்று உதட்டை பிதுக்கிக்கொண்டு கூற தன் தலையில் அடித்துக் கொண்டவள், "அது அப்போ யாழி" என்றாள்.
"இது இப்போக்கா. வருங்கால மித்தாலி ராஜை தடுக்குறது ரொம்ப தப்புக்கா" என்று ரைமிங்கோடு கூற, தருணோ "ஏ டண்டணக்கா ஏ டனக்குனக்கா" என்று கோரஸ் வாசித்ததில் இருவரது செயலிலும் இதழ் பிரித்து சிரித்தவள்,
"சரி இந்த முறை விடுறேன். எங்கேயாவது அடிபட்டு வலிக்கிதுனு வந்த மவளே இன்னைக்கு சாப்பாடு கட்டு" என்று பிடிவாதமாக கூறியே அனுப்பி வைத்தாள் அறியவில்லை இவளால் தான் இரண்டு பாவப்பட்ட ஜீவன் பலத்த அடிகளை பெறப் போகின்றனர் என்பதை.
அவளுக்கு பறக்கும் முத்தங்களை பரிசாக அளித்த வளர்ந்த குழந்தை யாழினியோ, பொடியன் தருணோடு சேர்ந்து பூங்காவின் அருகில் உள்ள காலி இடத்திற்குச் சென்றாள்.
தன் தங்கையின் செயலில் அவளது முகத்தில் புன்னகை அரும்புகள் துளிர்க்க, புன்னகை முகம் மாறாமல் அங்கிருந்த கடைக்கு சென்றாள் பூவினி.
அவள் கடைக்கு வந்ததும், "அண்ணா தக்காளி கிலோ எவ்வளவு?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே தன் வண்டியை அந்த கடையின் முன்பு நிறுத்தியிருந்தான் பிரபஞ்சன்.
"டேய் எதுக்குடா இங்க நிறுத்தியிருக்க?" என்று குமரன் கேட்க, "நீ இறங்கு சொல்றேன்" என்றவன் அவன் இறங்கியதும் தானும் வண்டியிலிருந்து இறங்கியவன் தது முழுக்கை சட்டையை கைமுட்டி வரை ஏற்றியவன் கண்ணாடியை பார்த்து தலை மூடியை சிலுப்பியபடி,
"ஆரூக்கு கடலை மிட்டாய் வாங்கிட்டு, அப்படியே தம் வாங்கிட்டு வரேன். உனக்கு தம் வேணுமா?"என்க.
"டேய் நீ தம்மடிக்குறத நிறுத்திட்டல்ல? இப்போ என்னாடா தீடிர்னு? அப்புறம் புகை பிடித்தல் உடல் நலத்தை கெடுக்கும்டா" என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்கும் தன் நண்பனை கண்டுக்காமல் "தெரியும்டா." என்று கூறிக்கொண்டே கடைக்குச் சென்றான்.
"ஒரு கிங்ஸ், அப்புறம் கடலை பருப்பி பாக்கெட் கொடுங்க" என்று கூறிக்கொண்டே தன் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் தாளை நீட்டினான்.
அதே சமயம் கீழே இருந்த தக்காளிகளை கூடையில் போட்டு எடுத்த பூவினியோ, தரையில் விழச் சென்ற துப்பாட்டாவினை தூக்கி தன்தோள்பட்டையில் போட, துப்பாட்டாவின் முனை அவனது முகத்தின் மீதே பட்டுச் சென்றது. அவளது செயலில் தன் கண்களை ஒரு முறை மூடித் திறந்தவன் அதை பெரிதுபடுத்தாமல் நிற்க. அதை அறிந்திடாதவளோ, கூடையை கடைக்காரரிடம் நீட்டினாள். அவளிடம் கூடையை பெற்றுக் கொண்டவர்,
"இருங்க தம்பி" என்று கூறிக்கொண்டே சிகரெட்டை எடுத்து கொடுத்துவிட்டு, "இவங்களுக்கு கொடுத்துட்டு சேஞ்சு தரேன்" என்று அவர் கூறிவிட்டு தக்காளியை எடைபோட சென்றார்.
பிரபஞ்சனோ சரி என்று தலையாட்டிபடி, தன் சிகரெட்டை அங்கிருந்த தீப்பெட்டிக் கொண்டு பற்ற வைத்தவன் நீண்ட நாட்கள் கழித்து புகைக்க, அது அவனுக்கே இருமலை தோற்றுவித்தது.
தன் நண்பனது செயலை நினைத்து வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். அவன் நன்கு அறிவான் அவனது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு அவன் செய்வான் என்பது புரிந்து தான் மேலும் கவலைக் கொண்டான் உயிர் நண்பனாக.
"ஆண்டவா சீக்கிரமே இவனுக்கான பொண்ணை இவன் கண்ணுல காட்டிடு. அந்த பொண்ணு இவன் சிகரெட் பிடிக்குற வாயிலயே நாலு அறை விடனும்" என்று வானத்தை பார்த்து குமரன் வேண்டிக் கொள்ள, அந்த வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்த்தது போல
அவன் விடும் புகை அங்கு நின்றிருந்த பூவினியின் நாசிதணில் நுழைய, அவளும் சேர்ந்து இருமியவள் அதன் நாற்றம் தாங்காமல் மூக்கை தன் இரு கைகளால் பொத்திக் கொண்டாள்.
"ச்சா என்ன மனுசன் இவன் லேடிஸ், குழந்தைங்க நிக்குற இடத்துல புகைபிடிக்குறான்." என்று சிடுசிடுத்தவள்
கோபத்தோடு அவன் புறம் திரும்பியபடி, "ஹலோ எஸ்க்யூஸ்மீ. நீங்க பார்க்க படிச்சவரு மாதிரி தான இருக்கீங்க? கொஞ்சம் தள்ளி போய் பிடிக்கலாம்ல. நீங்க பாதிக்கப்படுறது மட்டும் இல்லாமல் அந்த புகையால பக்கத்தில இருக்க நாங்களும் தான் பாதிக்கப்படுறோம்." என்று படபடவென கூறுபவளையே ஆச்சரியம் நிறைந்த பார்வை பார்த்தான் பிரபஞ்சன்.
ஏனோ யார்ரென்று தெரியாத தன்னை திட்டும் ஒரு பெண்ணை பார்க்கும் போதே ஒருவித குறுகுறுப்பு அவனுள் தொற்றிக் கொண்டது. "ஐ அம் ரியலி சாரிங்க" என்று சிகரெட்டை பிடித்துக் கொண்டே கூறினான்.
"உங்க சாரி எல்லாம் தேவையில்லை" என்று கூறிக்கொண்டே அவன் இரண்டு விரல்களால் இறுக பற்றியிருந்த சிகரெட்டை எறித்துவிடுவது போல ஒரு பார்வை பார்க்க, அவளது பார்வை செல்லும் இடத்தை பார்த்து, என்ன நினைத்தானோ அடக்கப்பட்ட சிரிப்புடனே கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டவன் தன் செருப்புக்காலால் நன்கு தேய்த்து விட்டான்.
அவனது செயலைக் கண்டு நிம்மதியோடு திரும்பியவள் கடைக்காரரிடம் பணத்தை செலுத்திவிட்டு தக்காளியை பெற்றுக்கொண்டே அங்கிருந்து சென்றாள் சாதாரணமாக.
அவள் வந்ததும் , இவனை திட்டியதையுமே கண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த குமரனோ, "ஆண்டவா அதுகுள்ள நான் சொன்னதை செஞ்சுட்டியா?" என்று புன்னகையோடு கூறிக்கொண்டே தன் நண்பனிடம் வந்தவன்,
"டேய் மச்சான் நீ சொன்னது உண்மை தான்டா." என்று கூறும் தன் நண்பனை புரியாமல் பார்த்தான் பிரபஞ்சன்.
"என்னடா உண்மை?" என்பவனை பார்த்து, "உனக்கான பொண்ணு இவங்க தான் போலயே. இவங்களை பார்க்க தான் இப்படி ஒன்னு நடந்திருக்கும் போலயே" என்று கண்ணடிக்கும் குமரனை பார்த்து முறைத்தான் பிரபஞ்சன்.
"தேவையில்லாமல் கற்பனை பண்ணி பேசாதடா இடியட்." என்று அவன் வார்த்தைக்கு சொல்லியிருந்தாலும் அவன் மனமோ ஏன் அப்படி இருக்கக்கூடாது என்று கேட்காமல் இல்லை. இருந்தும் வீண் கனவுகள் வேண்டாம் என்று நினைத்தவன், கடைக்காரரிடம் கடலை மிட்டாயையும் மீதி காசையும் பெற்றவன் தன் நண்பனிடம் சாவியை கொடுத்து ஓட்டச் சொன்னான்.
இம்முறை பின்னே அமர்ந்துக்கொண்ட பிரபஞ்சனது இதழ்கள் சிரித்த நிலையிலேயே இருந்தது. ஏனோ அவளது கோபம் நிறைந்த முகம், தன்றை ஒற்றை விரல் நீட்டி சுட்டெறிக்கும் பார்வையோடு பேசிய அவளது கூர் கண்கள் என அனைத்தும் மீண்டும் ஒரு முறை அவன் கண்முன் வந்துச் சென்றதில் தன் தாடிக்குள் மறைத்த கன்னக்குழி தெரியும் அளவிற்கு சத்தமின்றி சிரித்தான் பிரபஞ்சன்.
இதை எதுவும் அறியா குமரன் வண்டியை எடுத்து சிறிது தூரம் கூட சென்றிருக்க மாட்டான் எங்கிருந்தோ வந்த பந்து அவனது கண்களுக்கு சற்று மேல் பகுதியில் பலமாக அடிக்க, நிலைத்தடுமாறிய குமரன் வண்டியிலிருந்து கீழே விழ அவனோடு சேர்ந்து விழுந்தான் பிரபஞ்சன். தலையிலும் கைகளிலும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டிருந்தது இருவருக்குமே, வண்டியோ இவர்கள் இருவரின் மீதே விழுந்திருந்தது.
"அய்யோ யாழிக்கா ஒரு சாட்ல இரண்டு பேர்த்த கொன்னுட்டியேகா" என்று தருண் கத்த, அவனது நண்பர்களும் சேர்ந்து கத்தியதில் ஏற்கனவே மிரண்டிருந்தவள், "டேய் வாயை மூடுங்கடா. எல்லாரும் சேர்ந்து தான விளையாடுனோம். இதுல எல்லாருக்குமே பங்கு இருக்கு. வாங்க போய் என்னாச்சுனு பார்க்கலாம்" என்று கூறிக் கொண்டே அவள் சாலைக்கு செல்ல, தருணும் அவனது நண்பர்களும் ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடியேவிட்டனர்.
"உங்களை நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லனும். என் அக்கா அப்போவே சொன்னா. இந்த சில்வண்டுங்க கூட சேராதனு. கேட்டேனா..." என்று புலம்பிக் கொண்டே என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அவர்களை நோக்கி வந்தாள்.
அவர்கள் கிடக்கும் நிலையைக் கண்டு பதறினாலும், அவர்கள் விழுந்திருந்த காட்சி சிரிப்பை வரவழைக்காமல் இல்லை யாழினிக்கு. தனது சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் "அய்யய்யோ" என்று ஓடிச் சென்று பார்க்க, இருவரும் வலியில் கத்தியபடி தங்களின் மீதிருந்த வண்டியை எடுக்க முயற்சி செய்வதைப் பார்த்தவள் விரைந்து சென்று அவர்களுக்கு உதவியும் செய்தாள்.
இருவரும் ஒரு வழியாக எழுந்து நிற்க, அதைக் கண்டதுமே நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தவள், "ரோட்டுல பார்த்து போறது இல்லையா?. நான் வந்ததுனால உங்களுக்கு உதவி பண்ணிருக்கேன்." என்று தன் தவறை மறைத்து அந்தர்பல்டி அடித்திருக்க, அவளை நம்பும் விதமாக பார்த்தனர் பிரபஞ்சனும் குமரனும்.
"தாங்ஸ்மா. நீயாவது வந்து உதவி பண்ணியே. எந்த பேமானியோ எங்க மேல கொலை முயற்சி பண்ணிருக்கான்மா" என்று குமரன் நன்றிகளை கூறி பந்து எறிந்தவனை சரமாரியாக திட்டி தீர்த்திருந்தான்.
"நல்லவேளை நம்பிட்டாங்க. நம்ம அடிச்சது தெரிஞ்சா யாழி உனக்கு ஆப்பு தான்டியோவ். அப்படியே சத்தமில்லாமல் எஸ்கேப் ஆகிடுவோம்" என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் "இருக்கட்டும் அண்ணா. அதான் உங்க இரண்டு பேருக்கும் ஒன்னும் ஆகலையே" என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர பார்க்க,
அதுவரை ஒளிந்திருந்த தருணோ, "பரவாயில்லையே அக்கா நீ இவ்ளோ ஃபோர்ஸ்ல அடிச்சும் இவங்களுக்கு ஒன்னும் ஆகலை" என்று கத்தினான் சத்தமாக.
"ஆமாடா ஆமாடா" என்று பதிலுக்கு சிரித்தவள் அப்போது தான் அவர்கள் நிற்பது சட்டென்று நினைவுவர, "அடேய் சில்வண்டு கோர்த்து விட்டுட்டியேடா. செத்தடி யாழினி" என்று மிரட்சியோடு திரும்ப, அங்கே இருவரும் இவளையே கோபம் கொந்தளிக்க பார்த்துக் கொண்டிருந்தனர்.