ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே - கதை திரி

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 26

அவனது பட்டர்ஸ்காட்ச்சின் புகைப்படத்தில் இதழ் அழுந்த முத்தமிட்டவனுக்கு, அவளது கழுத்தில் தாலிக்கட்டிய நினைவு கண் முன் வந்தோடியது.

"வரவர உன் போக்கே சரியில்லை ரூபி. இப்போ எல்லாம் உன் கவனம் எங்க இருக்கு?" என்றாள் பூவினி சற்று காட்டமாகவே.

"அப்படி எல்லாம் ஒன்னு இல்லை. நீ பேசாமல் போடி."

"ரூபி. எதாவது மறைக்குறியா? அன்னைக்கு என்னடானா ஸ்கூல் கல்சுரல்ஸ்க்கு பிளாக் சாரி கட்டிருந்த? யாரு எடுத்து தந்தாங்கனு கேட்டால், சுமதியோடதுனு பொய் சொல்ற. முன்ன மாதிரி எல்லாம் என்னோட சரியா பேசுறதே இல்லை. என்ன தான் ஆச்சு உனக்கு."

"நான் நல்லா தான் இருக்கேன். நீயும்தான் கபடி, கபடினு சுத்துற நான் எதாவது சொன்னேனா. பேசாம இருடி." என்றாள் சலிப்பாக.

"நான் அப்பாகிட்ட சொல்ல போறேன் ரூபி. கெமிஸ்ட்ரியில ஃபெயில் வேற ஆகியிருக்க. சம்திங் இஸ் ராங்."

"படுத்தாத பூவினி. ச்சே இன்னும் எல்.கே.ஜி குழந்தை மாதிரி சொல்லித் தரேன், மாட்டித்தரேனு." என்று சலித்துக் கொண்டவள், பாட்டுக் கிளாசிற்கு செல்வதாகக் கூறி அகிலனைக் காண வந்திருந்தாள்.

"அத்தான்.. அத்தான்..." என்று அவளின் செல்லக் குரலில் அழைக்க,

"சொல்லு மை டியர் பட்டர்ஸ்காட்ச். அது என்ன அடிக்கடி அத்தான் சொல்ற?" என்று மகிழுந்தை ஓட்டிக் கொண்டே கேட்பவனைக் காதலோடு பார்த்தவள்,

"எங்க அம்மா நாங்க யாரும் இல்லாதப்போ, அப்பாவை அத்தானு கூப்பிடுவாங்க. நான் கேட்ருக்கேன். அதுனால நானும் என் வருங்கால கணவரை அத்தானு சொல்றேன்." என்று புன்னகைத்தவளைக் கண்ணாடி வழியாக கண்டு ரசித்தான்.

"அத்தான்.... நம்ம பேசாமல் கல்யாணம் பண்ணிப்போமா?"

"ஏன். இப்போ என்ன அவசரம்?"

"ப்ச்... நேத்து நீங்க தானே சொன்னீங்க கல்யாணம் பண்ணிப்போமானு.. போங்க அகில்... என் இரட்டை பிறவி அந்த இரட்டைவால் குருவி இருக்காளே அவளுக்கு லேசா டவுட் வந்திடுச்சு.எனக்கு பயமா இருக்கு."

"ஹாஹா உன் சிஸ்டர் பார்த்து பயப்படுறியா? பார்த்துக்கலாம் விடு." என்றவன், அவளது வீட்டின் தெருமுனையில் காரினை நிறுத்தியிருக்க, அங்கு விளையாடிக் கொண்டிருந்த யாழியோ ரூபியினையைப் பார்த்துவிட்டாள்.

"ரூபிக்கா. இது யார் காரு?" என்று துள்ளிக்கொண்டே வந்தவள் கேட்க, ஒரு நிமிடம் திகைத்தவள், பின்னர் அவளிடம் நம்பும்படியான பொய்யினை உரைத்தவள் சமாளித்தபடி, உடன் அழைத்துச் சென்றாள்.

அன்று இரவு தன் மகள்களுக்காக இனிப்புகளை வாங்கி வந்திருந்தார் சரவணன்.

"யாழிக்கு பிடிச்ச ஜாமுன், பூவிக்கு பிடிச்ச பால்கோவா, அப்புறம் நம்ம ரூபிக்கு பிடிச்ச ரசமலாய்." என்று மூவருக்கும் பிடித்ததை அவரவர் கைகளில் கொடுக்க, மூவருமே மகிழ்ச்சியோடு உண்டனர்.

தனலட்சுமியிடம் வந்த சரவணனோ, "லட்சுமி, எனக்கு ஆபிஸ்ல பிரோமோஷன் கிடைச்சிருக்கு. நம்ம கேரளா போகப் போறோம். இந்த வருசம் பிள்ளைங்க படிப்பு மட்டும் முடியட்டும். அப்புறம் கிளம்பிட வேண்டியது தான்."

"மொழி தெரியாத ஊருக்காங்க...? எப்படி சமாளிப்பேன்."

"மலையாளம் அவ்வளவு கஷ்டமா இருக்காது. கத்துக்கலாம் விடு. ரூபி, பூவினியை அங்க காலேஜ்ல சேர்த்துடலாம். யாழியை ஆங்கில வழி கல்வி தான சேர்க்க போறோம். அதுனால பிரச்சினை இருக்காது."

"சரிங்க. இதை பசங்ககிட்ட ஏன் சொல்லலை நீங்க?சொல்லியிருந்தால், ரொம்ப சந்தோசப்படுவாங்க."

" இப்போவே சொன்னால் சந்தோசத்துல படிக்குறதுல கோட்டை விட்ருவாங்க. எக்சாம் முடியட்டும் சொல்லிக்கலாம். லட்சுமி அங்க இன்னும் பத்தாயிரம் சம்பளம் அதிகம் வருதுடா. அது எல்லாம் நம்ம பொண்ணுங்க கல்யாணத்துக்காக இப்போ இருந்தே சேர்த்து வைக்கனும்." என்றார் புன்னகைத்தபடி.

"கண்டிப்பா அத்தான்." என்று தன் கணவரது தோளில் சாய்ந்துக் கொண்டார் தனலட்சுமி.

தண்ணீர் குடிப்பதற்காக அவ்விடம் வந்த ரூபினி அனைத்தையும் கேட்டுவிட, அகிலனை பிரிந்துவிடுவோமோ என்ற பயமே அவளுக்கு அதிகரித்தது.

இங்கு தனது நண்பர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் அகிலன்.

"ஆமா இந்த விகாஷ் ஏன்டா? தாடியோட சுத்துறான்."

"அது ஒன்னு இல்லைடா அகில். அவன் லவ் பண்ணிட்டு இருந்தான்ல சாலினி. அவ டாட்டா சொல்லிட்டு, அவங்க அப்பா பார்த்த பையனை கட்டிகிட்டு போய்ட்டா."

"ஓ... இது என்னாட நான்சென்ஸா இருக்கு. அவ போய்ட்டா இவன் தேவதாசா மாறிடனுமா என்ன? சுத்த பைத்தியகாரத்தனம்."

" அதுதான் மச்சி நாங்களும் சொல்றோம். யார நம்புறோமோ இல்லையோ இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா."

"எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லை."

"முற்றும் அறிந்தவர் சொல்லிட்டாங்க. டேய் அகில் டைம்பாஸ்க்கு லவ் பண்ற உனக்கு எப்படிடா பொண்ணுங்களை பத்தி தெரியும்?" என்றவனின் பதிலில் கோபமுற்றவனோ அவனது சட்டையை பிடித்திருந்தான்.

"வாயைமூடு. தேவையில்லாமல் பேசுன அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன்." என்றவன் கோபத்தில் கர்ஜிக்க, அவனது மற்ற நண்பர்களோ அவனை அவனிடமிருந்து பிரித்து தள்ளினர்.

"அவன் குடி போதையில பேசுறான்னா? நீயும் என்னடா கோபப்படுற" என்று இன்னொரு நண்பன் சமாதானம் செய்ய,

"நான் உண்மையை தானே சொல்றேன். நீ வேனா பாருடா பிரசாந்த் ஒன்னு இவன் கழட்டி விடப்போறான். இல்லை அந்த பொண்ணு இவனை கழட்டி விடப் போகுது. இதுதான் நடக்கும்." என்று சிரிக்க,

அகிலனோ அவனது கன்னத்தை பதம் பார்த்திருந்தான்.

"இன்னொரு தடவை தப்பா பேசுன அவ்வளவு தான்.. நான் என்ன சொன்னாலும் கேட்குற பொண்ணு அவ. சும்மா சைட் அடிச்சுட்டு ஜாலியா இருந்தவன்தான், நான். ஆனால், எப்போ அவ என் லைஃப்ல வந்தாளோ அப்போவே முடிவு பண்ணிட்டேன். சி இஸ் மைன், மை லவ், மை எவ்ரிதிங்." என்றவன் கர்ஜிக்க அங்கிருந்த அனைவருமே அவனது கோபத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

அடுத்தநாள் மாலை ரூபினிக்காக பாடச்சாலையின் முன்பு காத்திருந்தான் அகிலன். ரூபினியும், பூவினியும் சேர்ந்துவர, அவளோட பேச இயலாமல் போனது அவனுக்கு.

இருந்தும், சற்று தள்ளியிருந்தவன் செய்கை செய்ய, பதிலுக்கு செய்கை செய்தவளோ, நாளை காலையில் கோவிலுக்கு வரச் சொல்லியிருந்தாள்.

பூவினியோ முன்னே சென்றவள், தன் பின்னே மெதுவாக வந்துக்கொண்டிருந்த ரூபினியயை திரும்பிப் பார்க்க, அவளோ எதுவும் தெரியாதது போல கையினை தலையில் கைவைத்தபடி எதையோ யோசிப்பது போல முகத்தினை வைத்துக்கொண்டாள்.

"என்னாச்சு ரூபிக்கு கிறுக்கு முத்திப் போச்சோ?" என்றவளைப் பார்த்து அசடு வழிய சிரித்தவளோ,

"இல்லை பூவி நம்ம மேத்ஸ் மிஸ் சொன்ன கணக்கு யோசித்துப் பார்த்துட்டே வந்தேன்." என்றாள் சமாளிப்பாக.

"நீ மேத்ஸ் பத்தி யோசிக்குற ஆளா...! நம்பிட்டேன்! உனக்கு அம்மாகிட்ட சொல்லி மந்திரிச்சு போட சொல்லனும். உன் போக்கே சரியில்லை." என்று முறைத்துக் கொண்டே நடந்தாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை காலை, விரைவாகவே கோவிலுக்கு வந்திருந்தாள் ரூபினி. அவள் வந்த ஐந்தே நிமிடத்தில் அவனும் வந்திருக்க, சுற்றியும் யாராவது பார்க்கிறார்களா என்று கண்களை சுழலவிட்டவாறே, அவனது அருகே ஓடிச் சென்றவள் திருநீறை அவனது நெற்றியில் இட்டாள்.

"ஏய் பட்டர்ஸ்காட்ச் இந்த தாவணியில ரொம்ப அழகா இருக்க." என்றவனது பார்வை அவளை ரசிக்கத் தொடங்கியிருந்தது. அவனது பார்வை வீச்சை தாளாமல் தலைகவிழ்ந்துக் கொண்டாள் ரூபினி.

"இப்படி எல்லாம் வெட்கப்படாதடி, சத்தியமா கன்ட்ரோல் பண்ண முடியலை." என்றவன் விசமமாக பார்க்க, அவனது கைகளிலே அடித்தவள்,

"போங்க அகில். நீங்க ரொம்ப பேட். அப்புறம் உங்ககிட்ட முக்கியமான விசயம் சொல்ல வந்தேன். நீங்க பார்க்குற பார்வையில வந்த விசயத்தையே மறந்துட்டேன். போங்க." என்று செல்லமாய் சிணுங்கினாள்.

"அச்சோ சொல்லுங்க பட்டர் என்ன விசயம்?"

"அதுவந்து..." என்று அவள் தந்தை தாயிடம் கூறிய விசயத்தை ஒன்று விடாமல் கூறி முடித்திருந்தாள் அவள்.

"இப்போ சொல்லுங்க அகில். நான் தூரமா போயிட்டால் உங்களை பார்க்கவே முடியாதுல." என்று கண்கள் கலங்க அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

ஏற்கனவே குழப்பத்தில் சூழ்ந்திருந்த அவன் மனமோ, பல்வேறு சிந்தனைகளை யோசிக்கத் தொடங்கியிருந்தது.

"பட்டர்ஸ்காட்ச் நான் என்ன சொன்னாலும் கேட்பியா?"

"கண்டிப்பா கேட்பேன். அப்பாக்கு அப்புறம் எனக்கு நீங்கதானே எல்லாம்." என்று அவனது தோளை இறுக பற்றிக் கொண்டு கூறுபவளது தலையை வருடியவனோ,

"ம்ம்ம். அப்போ வா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவும் இப்போவே...." என்றவனது பதிலில் அதிர்ந்தவள் நிமிர்ந்து அவனது முகத்தைக் காண, அவனது முகத்தில் தெரிந்த உறுதியைக் கண்டு சிலையென அசையாமல் பார்த்தாள் ரூபினி.

"இப்போவேவா. நீங்க விளையாடலையே அகில்."

"என்ன பார்த்தால், விளையாடுற மாதிரி தெரியுதா?" என்றான் அழுத்தமாக.

"இல்லை." என்றவள் புதிதாக பிறந்தப் பூனைப்போல் பார்த்தாள்.

"அப்போ என்ன? கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? சம்மதம் இல்லையா?"

"ம்ம்ம் சம்மதம்தான். ஆனால் வீட்டுல பிரச்சினை ஆகிடும்." என்றவள் உதட்டைப் பிதுக்க,

தன் தலையை கோதியவனோ, பெருமூச்சொன்றை விடுத்து, "அப்போ உனக்கு என்னவிட, உங்க வீடு தான முக்கியம்? அப்புறம் கேரளா போனதும் என்ன மறந்திடுவ... அப்படிதானே.... சரி போ... உங்க அப்பா சொல்றதையே கேளு." என்றவனது வார்த்தைகளில் தெரிந்தது எரிச்சலின் சாயல்.

"அகில்.." என்று கண்கள் கலங்கியவள் அவனது கைகளைப் பற்ற, உதறியவனோ நகர்ந்து செல்ல, அழுதுக்கொண்டே அவனிடம் சென்றாள் ரூபினி.

"அகில் கல்யாணம் பண்ணிப்போம்." என்றவள் ஏக்கமாக அவனைப் பார்க்க, அவனோ இன்ப அதிர்ச்சி அடைந்தவன், "நிஜமாவா" என்க, அவளோ ஆம் என தலையை ஆட்டினாள்.

அதன் பின் தன் நண்பன் பிரசாத்தை அழைத்தவன் விவரம் கூற, அவனோ அவன் சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்திருந்தான்.

அந்த கடவுளின் சன்னதியில் ரூபினியின் கழுத்தில் மாலையிட, அவளும் அவனுக்கு மாலையிட்டிருந்தாள்.

"என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே ரூபினி." என்று தாலியை கட்டும் முன்பு கேட்டவனை, பார்த்து முறைத்துக்கொண்டே,"அது எல்லாம் சம்மதம் சம்மதம்." என்று கூறியவளது இதழோரம் சிறு புன்னகை மிளிர்ந்தது.

அவனும் புன்னகைத்துக் கொண்டே, அவளது வெண்சங்கு கழுத்தில் தாலியினைக் கட்டியிருந்தான். பின் அவளது நெற்றியில் குங்குமம் இட, அந்த ஒவ்வொரு காட்சிகளையும் தன்னிடம் உள்ள கேமிராவினால் பதிவு செய்திருந்தான் பிரசாத்.

"வீட்டுக்கு போலாமா?" என்றவனை அதிர்ந்தவள் பார்க்க, அவளது அதிர்ச்சியை புரிந்துக் கொண்டவனோ, "உங்கவீட்டுக்கு இல்லை. என்னோட வீட்டுக்கு..." என்று சிரித்தான்.

கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்து வந்தவனோ, "இப்போதைக்கு இங்கதான் இருக்கப் போறோம் பட்டர்ஸ்காட்ச். நான் எங்க அப்பாகிட்ட சொல்லிட்டு உன்னை சென்னை கூப்பிட்டு போறேன் சரியா?" என்றவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள் ரூபினி.

"அகில் பயமா இருக்கு. வீட்டில என்ன தேடுவாங்கல. நான் எதுவுமே சொல்லாமல் வந்திட்டேன். கஷ்டமா இருக்கு." என்பவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன் ஆறுதலாக தலையை நீவியபடி,

"ஒரு வாரம்தான் பேபி அப்புறம் நம்ம உங்க வீட்டுக்கு போய் உண்மையை சொல்லிடுவோம். உங்க அப்பா கோபத்துல அடிச்சாலும் நான் வாங்கிக்குறேன்." என்றவனை காதலோடு பார்த்தவளுக்கு அந்த கலக்கம் இருந்துக் கொண்டேதான் இருந்தது.

பதினெட்டு வயது கூட நிரம்பிடாதப் பெண்ணவளுக்கு அவன் மட்டுமே உலகமாக தெரிந்திருந்தான். அகிலனுக்கும் பக்குவமில்லா இருபத்தி இரண்டு வயது இளைஞன் என்பதால், எங்கு அவள் தன்னைவிட்டு போய்விடுவாளோ என்ற பயமும், அவனது நண்பன் பேசிய பேச்சும் தவறான முடிவினை எடுக்க வைத்திருக்க, திருமணம் என்னும் அடுத்த அடியினை எடுத்து வைத்திருந்தனர் இருவரும். அதன் பின்விளைவினை அன்று யோசித்திருந்தால் கூட பெரும் இழப்பினை தவிர்த்திருப்பார்களோ என்னவோ.

பின்னர் அவளுக்காக பார்த்து பார்த்து உணவினை செய்து வந்தவன் ஊட்டிவிட்டிருந்தான். இரவு மழை வேறு பெய்திட, வெளியே சென்றவள் நனையத் தொடங்கி இருந்தாள்.

"அகில் அத்தான். ஆலங்கட்டி மழை. வாங்க விளையாடலாம்." என்று மழையில் துள்ளிக் குதிப்பவளது உற்சாகம் அவனையும் தொற்றிக்கொண்டது.

அவளோடு சேர்ந்து மழையில் நனைய, அவளோ ஒவ்வொரு ஐஸ்கட்டிகளையும் கைகளில் பிடிப்பதற்காக துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.

"போதும் பட்டர்ஸ்காட்ச் அப்புறம் காய்ச்சல் வந்திடும்.உள்ள வா." என்றவன் அவளை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தான்.

"நல்லாருக்குல அகில். நான் பூவி யாழி எல்லாரும் ஜாலியா விளையாடுவோம் இந்த மழையில." என்றவள் ஆர்வமாக பேசினாலும் நிதர்சனத்தை உணர்ந்த நொடி அவளையும் மீறி கண்கள் கலங்கியது.

"ஏய் பட்டர் என்னடி இது. நான் இருக்கேன் உனக்கு. மொதல்ல துணி மாத்து போ." என்றவன் உள்ளே அனுப்ப,

"அகில் எங்கிட்டதான் வேற துணி இல்லையே." என்று உதட்டை பிதுக்கியபடி கூறினாள்.

"மறந்துட்டேன்டி. இரு." என்றவன் அவனது டீசர்ட்டையும், சார்ட்ஸையும் கொடுத்து அனுப்பினான்.

அதற்குள் இவனோ அவனது பனியனை கழற்றியிருந்தான். பூந்துவலைக் கொண்டு தன் தலையை துவட்டியபடி திரும்ப, அவளோ அவனது தொலதொல உடையில் பாவமாக முகத்தை வைத்தபடி வந்து நின்றாள்.

"கொஞ்சம் காமெடியாதான் இருக்க பட்டர்ஸ்காட்ச்." என்றவன் கூறியநொடி அவனருகே வந்தவள் சரமாரியாக அவனை அடிக்க,

"உன் கை தான் வலிக்கும் பேபி. மொதல்ல தலை துவட்டலாம் வா." என்று கூறிக்கொண்டே அவளை கட்டிலில் அமர்த்தியவன், ஈரத்தலையினை துவட்டிவிட்டான்.

அவளோ அமர்ந்துக்கொண்டே அவனது வயிற்றை கிள்ள, கூச்சத்தில் நெளிந்தவனோ, "ரூபி சும்மா இருடி." என்றான் சிணுங்களாக.

"அச்சோ இது தான் அத்தான் உங்க வீக்னஸா." என்றவள் மீண்டும் மீண்டும் கிள்ளியதில் நெளிந்தவன் அவள் மீதே சரிந்திருந்தான்.

இருவரது நெருக்கமும் அவனது உணர்வினை இழக்கச் செய்திட, அவளது இதழ்கள் நோக்கி நெறுங்கினான் அவன். அவளுக்கோ அவனது நெருக்கம் ஒரு வித கலக்கத்தைக் கொடுக்க,
வார்த்தைகளோ எழ மறந்திருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவளது இதழ்களை நெருங்கிய நொடி, அவளோ தன் கண்களை மூடியிருக்க, பின் என்ன நினைத்தானோ, அவளை விட்டு விலகியவன் எழுந்து சென்றான்.

"என்னாச்சு அகில்." என்றவள் புரியாமல் கேட்க,

"இல்லை ரூபி நான் ரொம்பதப்பு பண்றேன்டி. நீ தூங்கு. நான் வெளிய தூங்குறேன்." என்றவனது கரத்தினை பற்றினாள்.

"எனக்கு பயமா இருக்கும் அகில். இங்கயே இருங்க."

"நான் இங்க இருந்தா உனக்கு பாதுகாப்பு இல்லடி. புருஞ்சுக்கோ."

"அதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே. நீங்க என்னோடவே இருங்க."

"சொன்னா நீ கேட்க மாட்ட. அப்புறம் விபரீதம் நடந்தால் நான் பொறுப்பில்ல பார்த்துக்கோ."

"என்ன விபரீதம் நடக்கும். அப்படியே நடந்தால் அப்புறம் பார்த்துக்கலாம்." என்றவள் எழுந்து வந்து அவனது கால்மீது நிற்க, கைகளைக் கொண்டு அவனது கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டாள்.

"ஐ லவ் யூ அத்தான். நான் உங்களோட விளையாடுனாலும் நீங்கதான் கன்ட்ரோலாக இருக்கனும்."

"படுத்துறடி என்னை. இப்படிலாம் பக்கத்துல வராத. அப்புறம் என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது." என்றவன் கூறி முடிக்கும் முன் இடி முழங்கியிருக்க, இடிசத்தத்தில் அவனை இறுக பற்றிக்கொண்டாள் ரூபினி. அவளது அணைப்பில் அவனது ஹார்மோன்கள் முழுவதும் செயலிழக்கச் செய்ததில் அங்கு மோகம் குடிக்கொள்ளத் தொடங்கியிருந்தது.

மெல்லமாக தன் கண்கள் திறந்தவளோ இமை மூடாமல் அவனைப் பார்க்க,
தன் கால் மீது நின்றவளது மெல்லிடையை தன் இரு கரம் கொண்டு இழுத்து பிடித்தவன், மொத்தமுமாய் அவளது விழியில் விழுந்திருக்க, பாவையவளோ அவனது நெருக்கம் தந்த மயக்கத்தில் அவனது வெற்று மார்பின் மீதே தலையைப் புதைத்துக் கொண்டாள்.
மலரவளது மெல்லிய உடலை பூப்போல் தன் கைகளில் மென்மையாக ஏந்தியவனோ, காதலோடு அவளை பார்த்தான்.

அந்த பார்வையை தாளாமல் விழிகளை மூடியவள் தனது தலையை பக்கவாட்டில் சாய்க்க, அவளது கன்னத்தினை முத்தத்தால் ஆக்கிரமித்ததில், மொத்தமுமாய் தன்னிலை இழந்தவளது விரல்நகங்கள் அவனது வெற்று முதுகில் கோலமிடத் தொடங்கியது.

தென்றலுக்கு போட்டியாக அவனது மூச்சுக்காற்று இவளை விடாமல் தீண்ட,
மழைத்துளிகளுக்கு சவால் விடுவது போன்று வியர்வை துளிகள் இருவரின் மீதும் துளிர்க்க, என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிழையாகவும், பின் திருத்திக்கொண்டும் தங்களுக்குள் தங்களை தொலைத்துக் கொண்டனர் இருவரும்.

அன்றைய நினைவில் மூழ்கியவனது கண்களிலிருந்து கண்ணீர் வந்தவண்ணமே இருந்தது.

"எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்டி. என் அவசர புத்தியால, பக்குவமில்லா என் வயசுக் கோளாறுனால ச்சே." என்று தன்னையும் நொந்துக் கொள்ள தவறவில்லை அவன்.

********

இங்கு பூவினியோ தன்னவனின் நெஞ்சில் சாய்ந்தபடி இருந்ததை உணர்ந்தநொடி, அவனிடமிருந்து விலகினாள் பட்டென்று.

அப்பா நியாபகம் வந்தது என்று அவனது நெஞ்சில் தன் பாரத்தை அழுகையாக காட்டியிருந்ததை எண்ணி தன்னைத்தானே நொந்துக் கொண்டாள்.

'அய்யோ பூவி உணர்ச்சிவசப்பட்டு என்ன பண்ணிருக்க?' என்றுதன்னைத்தானே கடிந்தவள், "நீங்க என்ன பண்றீங்க..நான் என்ன சொன்னேன், என்ன பேசுனேன், என்ன பண்ணேன் எல்லாத்தையுமே மறந்துடுங்க." என்று கூறிக்கொண்டே அவனது முகம் பார்க்காமல் தலைக் குனிந்தவாறு சென்றவளது கண்களில் தென்பட்டது அந்தமான் செல்வதற்கான பயணச்சீட்டு.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 27

பயணச்சீட்டை கையில் எடுத்தவள், என்ன என்று புரியாமல் பார்க்க, "என்ன இவ என்னத்த இப்படி பார்க்குறா?" என்று எட்டிப் பார்த்தவனோ அதிர்ந்துதான் போனான்.

'அய்யய்யோ சும்மாவே ஆடுவாளே. இப்போதான் எதோ நம்மளை பார்த்து சிரிக்குற அளவுக்கு வந்திருக்கா. இப்போ அதுக்கும் ஆப்பா?' என்று உறுத்து விழித்தான் பிரபஞ்சன்.

'அப்படியே தெரியாத மாதிரியே சமாளிப்போம்.' என்று மனதில் நினைத்துக்கொண்டே, "அடே இதுவா! இது நம்ம குமரனோட டிக்கெட். எங்க பாஸ் கொடுத்தாரு. அதுவும் அவனுக்காக.. கொடு பூவி நான் அவன்கிட்ட கொடுத்திடுறேன்." என்றபடி கைகளை நீட்ட, அவனது திருட்டு முழியும், ஒரு வித பதட்டமும் சந்தேகத்தை கிளப்பியிருந்தது பெண்ணவளுக்கு.

"குமரன் அண்ணாவோடது இங்க எதுக்குங்க வரப் போகுது?" என்றவள் கேள்வியாக பார்க்க,

"அது நான் தான் வாங்கி பார்த்துட்டு இருந்தேனா.... மறந்தாப்புல எடுத்துட்டு வந்துட்டேன்."

"ஓ... ஓகே. இந்தாங்க." என்றவள் அவனது கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

"அப்பாடா தப்புச்சோம்." என்றவன் பெருமூச்சொன்றை விடுத்து, வெளியே வர, அவனது ஆரூயிர் நண்பனோ உணவினை, ரசித்து, பின் ருசித்து உண்டுக் கொண்டிருந்தான்.

"அம்மா இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க." என்று வயிறார உண்பவனைக் கண்டு திகைத்தவனோ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டபடி,

"க்கூம்... யாரோ கோபமா போறேனு சொன்னமாதிரி இருந்துச்சு."

"எந்த பைத்தியக்காரன் அப்படி சொன்னதுடா பிரபஞ்சா. டேய் வாடா அம்மா வேற லெவல்ல சமையல் செஞ்சுருக்காங்க. சீக்கிரம் வந்து சாப்டு இல்லைனா நான் காலிப் பண்ணிடுவேன்." என்பவனைக் கண்டு முறைத்தவனோ,

'நீ எல்லாம் திருந்தவே மாட்ட?' என்று தலையில் அடித்துக் கொண்டவாறு, "சாப்பிடுடா நல்லா வயிறு முட்ட சாப்டு." என்றுக் கூறிக்கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

"அம்மா தங்கச்சி, அந்த பாயசம் கொண்டுவாமா." என்று குமரன் கூறியதும், பாயசத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுத்தாள் பூவினி.

"என்ன அண்ணா அந்தமான் போறது பத்தி ஒரு வார்த்தை சொல்லலை." என்றவள் கேட்டதுமே அங்கிருந்த பிரபஞ்சனுக்கு திக்கென்று ஆனது. தன் நண்பனை பார்த்து 'சொல்லிடாதடா' என்று செய்கை எல்லாம் செய்ய, அதை கவனிக்காமல் போயிருந்தான் குமரன்.

"பிரபா சொல்லலையா? நான் நேத்தே சொல்லியிருப்பேன்மா. இங்க ட்வின்ஸ் பஞ்சாயத்தே பெரும் பஞ்சாயத்தா போயிட்டு இருக்கு. இதுல நான் எங்க வந்து சொல்ல. ஆமா நாளைக்கு பிளைட்ல, இரண்டு பேரும் துணி எல்லாம் எடுத்து வெச்சுட்டீங்களா?" என்று அவன் கேட்டதும் ஒருபுறம் பூவினி திருதிருவென விழிக்க, தாமரையம்மாவும் குழம்பிதான் போனார்.

பிரபஞ்சனோ, 'அடச் சண்டாளா? உன் நாரதர் கழகத்தை சிறப்பா அரங்கேற்றம் பண்ணிட்டியேடா' என்று மனக்குமறலுடன், குமரனை மனதில் வைத்து கழுவி ஊத்திக் கொண்டிருந்தான்.

"என்ன குமரா சொல்லுற? பிளைட் டிக்கெட்டா எங்கிட்ட எதுவும் சொல்லலையே." என்ற தாமரை தன் மகனையும் மருமகளையும், மாறிமாறி பார்த்துக் கொண்டே கேட்டார்.

"அகிலன் வந்த சந்தோசத்துல சொல்ல மறந்திருப்பான் போல. இல்லடா பிரபா." என்றவனை அவன் தீப்பார்வை பார்க்க, 'இவன் பார்க்குற பார்வையே சரியில்லையே' என்று நினைத்தவனுக்கோ, 'ஒருவேளை நம்ம உளறிட்டோமோ.' என்ற யோசனை துளிர்த்தது. இருந்தும் அதை பெரிதாக அவன் அலட்டிக் கொள்ளவில்லை.

"புரியலை எதுக்கு டிக்கெட்?" என்று அவர் கேட்ட நொடி அனைத்தையும் அவன் கூற, பூவினியே பிரபஞ்சனை பார்த்து முறைக்க, அவன் மனமோ 'செத்தடா பிரபா.' என்று தனக்கு தானே நொந்துக் கொண்டது.

"அட நல்ல விசயம் ஆச்சே! அப்போ, பிரபா பூவினி இரண்டு பேரும் போய்ட்டு வந்துடுங்க."

"இல்லைமா எதுக்கு போயிட்டு... இப்போதானே அகில் வந்திருக்கான்."

"இனி எப்போதும் நம்ம கூடவே தான் இருக்கப் போறான் பிரபா. சிவம் சார் எவ்வளவு காசு செலவு பண்ணி பரிசாக தந்திருக்காரு. அவரோட அன்புக்காகவாது போகனும் பிரபா. போயிட்டு வாங்க. என்னை பார்த்துக்கதான் அகிலன் இருக்கான்ல"

"பார்த்தீங்களா. அகிலன் வந்ததும் பிரபஞ்சனை மறந்துட்டீங்க." என்றவனது கைகளில் செல்லமாக அடிப்போட்டவரோ, "என்ன பேச்சு இது. என் இரண்டு பசங்களுமே எனக்கு ஒன்னுதான். அதான் ஒரே மாதிரி இருக்கீங்க பாரு."

"அம்மா பார்த்துமா? இரண்டு பசங்கனு சொல்லிட்டீங்க... இதை மட்டும் நம்ம தென்னவன் கேட்ருந்தான் கொந்தளிச்சிருப்பான்." என்றான் குமரன் சிரித்துக்கொண்டே.

"குமரா.... உனக்கு பேரு தப்பா வெச்சுட்டாங்கடா. வா நம்ம வெளிய போய் பேசுவோம்." என்று குமரனது தோள்பட்டையை வளைத்து பிடித்து பிரபஞ்சன் அழைத்துச் செல்ல,

"மச்சான் இன்னொரு டம்ளர் பாயசம் வாங்கிட்டு வந்துடுறேன்டா."

"பாயசம் தான, வா உனக்கு சிவப்பு பாயசம் தரேன்." என்று தரதரவென இழுத்துச் சென்றான்.

"விளையாட்டு பசங்க இரண்டும். பூவிமா, நீயே தேவையான டிரஸ்லாம் எடுத்து வெச்சிடுமா. நாளைக்கு போய்ட்டு வாங்க. சரியா..." என்று கூறும் அத்தையின் பேச்சை மறுக்க மனமில்லாமல் "சரிங்க அத்தைமா." என்றாள் புன்னகையோடு.

தனது அறைக்குள் நுழைந்தவளுக்கோ, கோபம் கோபமாக வந்தது.

"என்ன நினைச்சுட்டு இருக்காரு. வாயைத் திறந்தாலே பொய். என்கிட்ட சொல்றதுக்கு என்னவாம்? நான் என்ன கடிச்சா விழுங்கப் போறேன் அவரை...." என்றவளது மனசாட்சியோ, 'மனசை தொட்டு சொல்லு? இந்த விசயத்தை சொன்னா நீ என்ன பண்ணிருப்பேனு?' என்ற கேள்வியைக் கேட்காமலும் இல்லை.

"அது வந்து, கடிக்க எல்லாம் செஞ்சு இருக்க மாட்டேனே." என்று ஒருபுறம் கூறினாலும் மனமோ, 'அடிக்க செஞ்சிருப்பல... நல்லா அவரை வெச்சு செஞ்சுருப்ப' என்று நினைத்துக் கொள்ள, சிரித்தேவிட்டாள் அவள்.

"அட இவ்ளோ நாளும் அவரை கஷ்டப்படுத்திட்டு இருந்திருக்கேனா. ரொம்ப பாவம் தான் அவரு." என்று கூறிக்கொண்டே, மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றவளது, முகத்தில் ஒருவித புன்னகை படர்ந்துதான் இருந்தது.

"என்னடா நினைச்சுட்டு இருக்க? உன் ஓட்ட வாயை வெச்சிட்டு கம்முனு இருக்கமாட்ட." என்று அவனை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

"டேய் அநியாயம் பண்றடா. உண்மை தானேடா சொன்னேன்? இது நல்ல விசயம் தானே."

"எனக்குதான்டா தெரியும் அது நல்லதா? கெட்டதானு. நான் அப்படியே அந்த டிக்கெட் விசயத்தை மறைச்சிடலாம். போக வேண்டாம்னு நினைச்சேன்."

"இது என்னடா வம்பா இருக்கு? ஜாலியா தேனிலவு போய்ட்டு வர்றத விட்டுட்டு, இப்படி சலிச்சுக்குற?"

"போடாங்கு.." என்று வாய் வரை திட்ட நினைத்த வார்த்தைகளை தனக்குள் முழுங்கியவனோ, "வீட்டுலயே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து ஓடுறப்போ இதுக்கென்ன அவசியம்?"

"ஒய் அதுதான் இடியாப்ப சிக்கலை, நூடுல்ஸ் மாதிரி தனிதனியா பிரிச்சாச்சே. என்ஜாய் பண்ணுடா."

"உனக்கு சொன்னால் புரியாது. ஒருத்தர் சந்தோசத்துக்காக போறது இல்லை. போனால் இரண்டு பேரோட விருப்பத்தோட போகனும். இல்லைனா போகமலே இருக்கனும். சோ நாங்க போகப் போறதில்லை." என்று அவன் கூறும்போதே அவ்விடம் வந்தாள் பூவினி.

"வாம்மா தங்கச்சி. சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன். அப்புறம் யோசிச்சு முடிவெடுடா பிரபா." என்று விடைபெற்று சென்றிருக்க,

பிரபஞ்சனோ, 'பண்றது எல்லாம் பண்ணிட்டு நீ பாட்டுக்கு ஓடவா செய்யுற? அய்யோ வராலே. திட்டுவாளா? முறைப்பாளா? இல்லை மாடியில இருந்து தள்ளிவிட்ருவாளானே தெரியலையே?' என்று, அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்ற பதட்டத்தோடு அவளைப் ஏறிட்டான்.

அவளோ தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி நின்றவள், அவனையே பார்க்க, அவளது கேள்விப் பார்வைக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றான்.

அவளோ அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, எதுவும் பேசவும் இல்லை, காய்ந்த துணிகளை எடுக்கவும் இல்லை.

அவன் பேசுவதை அனைத்தையும் கேட்டவளுக்கு, அப்போது தான் ஒன்று புரிந்தது. தனக்காகதான் அவன் அவ்வாறு செய்கிறான் என்று. அந்த நொடி அவன் மீதிருந்த சிறு கோபம் கூட மறைந்திருந்தது அவள் மனதில்.

"துணி எடுக்க ஹெல்ப் பண்றீங்களா?" என்றாள் முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல்.

"ம்ம்ம். சரி." என்று கூறினாலும், உள்ளுக்குள் அவன் மனமோ புலம்பிக் கொண்டே இருந்தது.
'என்ன இவ பார்க்குற தோரணையே திமிரா இருக்கு. சரி எதாவது திட்டுவானு பார்த்தால், துணி எடுக்கச் சொல்லுறா? ஒருவேளை இதுல எதாவது உள்குத்து இருக்குமோ.' என்று யோசித்துக் கொண்டே வந்தவன் அவளது ரவிக்கையை எடுக்கவர, அவன் எடுப்பதற்கு முன்பு எடுத்துக் கொண்டவள்,

"இந்தப் பக்கம் நான் பார்த்துக்குறேன். உங்க துணி எல்லாம் எடுங்க." என்று திசைதிருப்பியவளுக்கு வெட்கம் சற்று எட்டிப் பார்க்கதான் செய்தது.

"துணில கூட பிரிச்சு பார்க்குறா?" என்று புலம்பிக் கொண்டே அவனது உடைகளை எடுத்து வந்தவன் அறியவில்லை அவளது கூச்சத்தினை.

"சரி எடுத்துட்டு ரூம்க்கு வாங்க." என்றவள் முன்னே செல்ல, அவன் மனமோ, 'ரூம்ல வெச்சு உன்னை வெளுக்கப் போறா.' என்று புலம்பிக்கொண்டே அவள் பின்னே சென்றவன் தங்களது அறைக்குள் நுழைந்திருந்தான்.

"அந்த ட்ராவல் பேக் எடுத்து தரீங்களா?" என்று அவள் கேட்டதும் எடுத்து தந்திருந்தான் பிரபஞ்சன்.

"எங்க, உங்க அம்மா வீட்டுக்கு போறீயா பாப்பு." என்றவனின் கேள்விக்கு பதில் பேசாதவளோ,

"உங்களுக்கு பிடிச்ச டிரஸ் எல்லாம் எடுத்துக் கொடுங்க." என்று அவள் பாட்டுக்கு துணிகளை எடுத்து வைப்பதிலே கருத்தாக இருந்தாள்.

'என்ன இவ நம்மளை. இப்படி வேலை வாங்குறாள்.' என்று புலம்பிக் கொண்டே ஒரு சில உடைகளை எடுத்துக் கொடுக்க, அதோடு சேர்ந்து அவளும் சில உடைகளை எடுத்து வைத்தாள்.

"எதுக்கு பூவி இது எல்லாம் எடுத்து வைக்குற? எங்க போறோம்." என்றவன் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்க,

அவனையே புருவம் தூக்கிப் பார்த்தவளோ, "ஹான்.... அந்தமான் போறோம்." என்றாள் எள்ளலாக.

"நிஜமாவா சொல்ற?" என்றவன் நம்பாமல் பார்க்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவளோ,

"நிஜமாக தான் போயா. போய் உனக்கு தேவையானது எல்லாம் எடுத்துவை." என்றவள் அவனைத் தாண்டிச் செல்ல,

அவளது கைபற்றி நிறுத்தியவனோ, "போயாவா? என்னடி மரியாதை குறையுது." என்றவனது திடிர் தீண்டலில் திடுக்கிட்டவளோ, அவனது டி என்ற அழைப்பில் கோபத்தில் சிவந்தபடி "என்னது?" என்று புருவம் தூக்க,

"அது எதோ ப்ளோவில வந்துடுச்சு மேடம். நீங்க மட்டும் போயா சொல்லலாமா?" என்றவன் அவளையே அழுத்தமாக பார்க்க,

'என்ன பார்வை இது. ஆளையே முழுங்குற மாதிரி.' என்று நினைத்தவளோ அவனுக்கு சலிக்காமல் பதில் பார்வை பார்த்தவள்,

"அப்படி தான் சொல்லுவேன். என்ன பண்ணுவீங்க ஹான்.. தைரியம் இருந்தால் இப்போ சொல்லுங்க டி." என்று எகிறியவள் அவனது சட்டையை கெத்தாக பிடித்திருக்க, அவளது அதிரடியை எதிர்பாராதவன் மிரண்டு தான் போனான். அவளது நெருக்கம் என்றும் போல அவனை தட்டித்தூக்க, ஆர்பறித்து ஓடும் உணர்வுகளை கட்டுப்படுத்தியவனோ, அவளுக்கு பிடிக்காது என்கின்ற ஒற்றைக் காரணத்தினால் அவளை தொடாமல் நின்றிருந்தவனோ,

"ஏய் பூவினி ரொம்ப பண்ற? கையை எடுடி." என்றான் சீற்றமாக.

"திரும்பவும் டி போட்டா பேசுறீங்க? கையை எடுக்க மாட்டேன்." என்றாள் தெனாவெட்டாய்.

"அப்படியா. சரி சாரி பாப்பு." என்று மட்டும் கூறி பிரச்சினை செய்யாமால் முடித்துக் கொள்ள சப்பென்று ஆனது அவளுக்கு. அவனோடு சண்டை போட்டுக் கொண்டே இருந்தவளுக்கு, இந்த மூன்று நாட்களாக வாய்ப்பின்றி போனதாள் ஒரே கவலையாகிப் போனது. முன்பை போல தன்னிடம் அவன் பேசவில்லை என்ற கவலையா? இல்லை அவனிடம் வம்பு இழுக்க முடியவில்லையே என்கின்ற கவலையா என்று அவள் அறியவில்லை. ஆனாலும் அவள் மனதில் அவனுக்கான ஒரு ஏக்கம் உருவாகி இருந்தது.

'எப்படிபட்ட மனுசனை இப்படி ஆக்கிட்டியேடி.' என்று அவளது மனசாட்சி கேள்வி கேட்க, அவளோ, அவனைப் பிடித்திருந்த தனது கரத்தினை விடுத்தபடி, சலிப்புடன் அங்கிருந்து, முகத்தை தொங்கப் போட்டபடி சென்றாள்.

இங்கு அழுது கரைந்த யாழியோ ஒரு முடிவினை எடுத்தவளாக, கதவினை திறந்து வெளியே வந்தாள்.

"அம்மா பசிக்குது. சாப்பாடு போடு." என்றவள் முகம், கை கால்களை அலம்பியபடி, வந்தமர்ந்துக் கொள்ள, சாதத்தை எடுத்து வந்தார் தனலட்சுமி.

"சாப்பிடுடி. கண்ணுல்லாம் பாரு அழுது வீங்கி இருக்கு." என்றவர் தனது கண்ணீரை மறைத்தபடி கூறினார் ஆதங்கமாக.

"அங்க மட்டும் என்ன வாழுதாம். கண்ணு பாருங்க எப்படி சிவந்திருக்குனு. அப்புறம் நீ சாப்பிட்டியாமா. நீ எங்க சாப்பிட்டுருப்ப..." என்று கேள்வியும் கேட்டு பதிலும் அவளே
கூறிக் கொண்டவாறே உணவினை பிசைந்து ஊட்டி விட்டாள். அவளது செயலில் கண்கள் கலங்கியவரோ,

"யாழி உனக்கு நாங்க செஞ்சது தப்பா படுதாமா? என்னதான் அவளை வெறுத்தாலும் அவ மேல பாசம் இல்லாமல் போய்டுச்சுன்னு நினைக்குறியா?"

"நிச்சயம் இல்லைமா. சாரி ரொம்ப சாரி. என்னதான் இருந்தாலும் அவளும் என் அக்கா தானே. உனக்கு ஒன்னு தெரியுமா பிரபஞ்சன் அத்தானுக்கு ட்வின் பிரதர் இருக்காங்க."

"ம்ம்ம் சம்மந்தி சொன்னாங்கடா. எனக்கு புரிஞ்சது, உனக்கு ரூபி நியாபகம் வந்ததை நான் தப்புனு சொல்ல மாட்டேன். ஆனால் பூவினிகிட்ட ரூபி பத்தி பேசாத யாழி."

"ம்ம்ம் சரிம்மா." என்றாலும் மனமோ, 'பூவி, ரூபியை மிஸ் பண்றாமா. அவ கண்ணுல ஒரு வெறுமையை பார்த்தேன். ஆதங்கம் தான் ஏன் ரூபி இப்படி பண்ணானு ஆதங்கம் அது.' என்று நினைத்தவளோ ஒரு முடிவினை எடுத்திருந்தாள். அதன்படி நாளையே அகிலனை சந்தித்து ரூபினியை பற்றியும், தங்களின் மீது அவன் காட்டும் வெறுப்பிற்கான காரணம் பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டாள்.

அன்று இரவே பூவினி யாழியை அழைத்திருந்தவள், முகத்தில் அடித்தாற் போல் பேசியதற்கு மன்னிப்பை யாசித்திருந்தது மட்டும் அல்லாது நாளை அந்தமான் செல்லவிருப்பதையும் கூறியிருந்தாள். யாழி மகிழ்ச்சியோடு பேச, அதன்பின்னரே பூவினிக்கு நிம்மதியாக இருந்தது.

அடுத்த நாள் காலை அழகானதாக மலர்ந்திருக்க, தாமரையின் ஆணைக்கிணங்க அகிலன், வேண்டா வெறுப்பாக பிரபஞ்சனையும், பூவினியையும் விமான நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திறங்கினான். அவர்களோடு தாமரையும் உடன்வர, தன் அத்தையிடம் விடைபெற்றவள் அவனோடு விமான நிலையத்திற்குள் சென்றிருந்தாள். இருவருக்குமே விமானத்தில் செல்வது முதல்முறை என்பதால், ஒரு வித பயம் கலந்த உற்சாகம் இருந்துக் கொண்டே இருந்தது.

விமானம் தரை இறங்கும் வரை பிரபஞ்சனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள் விடவே இல்லை. ஸ்நேகமான பார்வை பரிமாற்றம், சில மணித்துளிகள் கேலியும், சில நேர அக்கறைகள் என இருவருக்குள்ளும் அந்த விமானப் பயணம் ஒருவித இலகுவான சூழலை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மையே.

விமானம் தரையிறங்கும் நொடிகளில், அழகாக காட்சியளித்த அந்தமானை பார்க்கும் போதே கண்களில் பதிந்தது இருவருக்கும். சேர்ந்திடாத இரு ஜோடிகளின் வாழ்வினை மாற்றிப் அமைக்கும் இந்தப் பயணத்தினை இருவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 28


அந்தமானில் உள்ள போர்ட் பிளையர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர்களை, அழைத்துச் செல்வதற்காக தயாராக நின்றிருந்தார் சதாசிவத்திற்கு நன்கு வேண்டப்பட்ட பழனியின் மகன் சக்திசரவணன். இருவரையும் கண்டதுமே அடையாளம் கண்டுக் கொண்ட சக்தியோ, இருவரை நோக்கி புன்னகை முகத்தோடு சென்றான்.

"வாங்க வாங்க. பயணம் எல்லாம் சுகம் தானுங்களா?" என்று புன்னகையோடு கேட்பவனைக் கண்டு யோசனையோடு பிரபஞ்சன் பார்க்க,

"நான் தானுங்க சக்திசரவணன். சதா ஐயாவோட பிரண்டோட பையன்." என்றவனது கைகளை பற்றிய பிரபாவோ,

" வாவ் பிரதர். உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்." என்று புன்னகையோடு கூற, பூவினியோ அவனது பெயர் கேட்ட நொடி தனது அப்பாவின் நியாபகம் துளிர்த்ததும், முகம் எல்லாம் வாடியபடி நின்றாள்.

"என்னாச்சுங்க தங்கச்சி உம்முனு ஆகிட்டாப்புல." என்று சக்தி கேட்டதுமே, அவளைக் கண்ட பிரபாவோ, "என்னாச்சு பாப்பு?" என்றான் தன்மையாக.

"அப்பா பேரு சரவணன் தான். அதான் அப்பா நியாபகம் வந்திருச்சு." என்றவளது கரத்தினை ஆறுதலாக பிரபஞ்சன் பற்றிக்கொள்ள, அவனையே விழி மூடாமல் பார்த்தாள் பூவினி.

பின் இருவரையும் சில்வர் ஸ்டேண்ட் பீச் ரெசார்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான் சக்தி.
சுற்றிலும் தென்னைமரங்கள் நிறைந்திருக்க, பீச்சோரம் வடிவமைக்கப்பட்ட ஆடம்பரமான ஹோட்டல் என்றால் மிகையாகாது.
அவ்விடத்திற்கு வந்ததிலிருந்து பூவினியின் கண்களில் பிரம்மிப்பு பூத்திருந்தது. அந்த எழில் கொஞ்சும் அழகினைக் காண காண திகட்டவில்லை அவளுக்கு.

"ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலயே?" என்று பிரபா கேட்க, சக்தியோ மென்னகை உதிர்த்தவன்,

"இரண்டு நாள் நீங்க இங்க தான் இருக்கப் போறீங்க. சதா ஐயா சொல்லிட்டாரு. அப்புறம் ஒவ்வொரு இடத்துக்கும் சுத்தி காட்ட கூப்பிட்டு போறேன். அதுக்கு அப்புறம் எங்க வீட்ல தங்கிக்கலாம்." என்றான் புன்னகை முகமாக.

பூவினிக்கும் சரவணனைக் கண்டதுமே பிடித்துவிட்டது. தன் தந்தையின் பெயர் என்பதாலும், அவனது சிரித்த முகமும், ஒவ்வொரு முறையும் தந்தையை நினைவுப்படுத்த, "கண்டிப்பா அண்ணா." என்றாள் புன்னகையோடு.

பின் அவன் சென்றுவிட, அவர்களுக்கான பிரேத்யேக அறைக்கு வந்தவர்கள், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலினைக் கண்டு ஒரே நேரத்தில் அதிர்ந்துதான் போனார்கள். பின் ஒருவரை ஒருவர் பார்த்த நொடி, சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டனர்.

"இது எல்லாம் உங்க வேலையா?" என்றவளது குரல் அழுத்தமாக ஒலிக்க, 'போச்சு. வந்த முதல் நாளே நமக்கு ஆப்பா.' என்று நினைத்தவனோ,

"பாப்பு எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் எங்க பாஸ் செஞ்ச திட்டமிட்ட சதி..." என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னரே முறைத்தவள்,

"நான் குளிக்கப் போறேன். நான் வரதுகுள்ள பெட்டை நீட் பண்ணிடுங்க." என்று கட்டளையை பிறப்பித்தவாறே, குளியலறைக்குள் நுழைந்திருந்தாள் பூவினி.

கதவை அடைத்தவளுக்கு ஒரு புறம் வெட்கம் தான். அதுவரை கட்டுப்படுத்தி வைத்த புன்னகையை உதிர்த்தவாரே, "ஆனாலும் இவர் க்யூட்டா பயப்படுறாரு." என்று சொல்லிக் கொண்டே குளிக்க ஆரம்பித்திருக்க, அந்த இளம்சூடான தண்ணீர் மேனியில் பட்டதும் பயணத்தில் தோன்றிய அவளின் அலுப்பு காற்றோடு காற்றாக பறந்திருக்க, "ஆஹா என்ன சுகம். சுடு தண்ணீல குளிக்குறது எம்புட்டு சுகமா இருக்கு." என்று மகிழ்வோடு நீராடினாள்.

குளித்து முடித்தவள் அங்கிருந்த பூந்துவலையால் தன்னை ஒற்றியெடுத்துக் கொள்ள, அப்போதுதான் உடை எடுக்காமல் குளிக்க வந்திருப்பதை உணர்ந்தாள் பூவினி.

"ஐய்யோ அவசரத்தில டிரஸ் எடுக்காமலே வந்துட்டோமே. என்ன பண்றது? வேற வழியே இல்லை, அவருகிட்ட உதவி கேட்டுத்தான் ஆகனும்." என்று தனக்கு தானே நொந்துக் கொண்டவள்,

கதவினை லேசாக திறந்து, தன் கண்களை நாலாபுறமும் சுழலவிட்டாள். பிரபஞ்சனோ அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ரோஜாக்களையும், அலங்காரப் பூக்களையும் கைகளால் எடுத்துக் கொண்டிருக்க, அவனைக் கண்டதுமே ஒரு வகை நிம்மதி தோன்றியது பெண்ணவளுக்கு.

"என்னங்க... ஹலோ... இங்க பாருங்க." என்றபடி மெல்லமாக அழைக்க, அது எல்லாம் அவனது காதுகளில் விழுந்தால் தானே. அவன் பாட்டிற்கு படுசிரத்தையுடன் பூக்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

"அய்யோ இந்த மனுசன் திரும்ப மாட்டேங்குறாரே. பேசாமல் நம்மளே போய் டிரஸ் எடுத்துட்டு, குடுகுடுனு ஓடி வந்திடுவோமா." என்ற யோசனையில் உழன்றவள், பூந்துவலையால் தன்னை சுற்றிக்கொண்டு, அவன் பார்க்கும் முன்பு சென்று வர தயாராகினாள்.

அதற்குள் பிரபஞ்சனது அலைபேசி சிணுங்க, கைகளில் எடுத்தவனோ,

"சொல்லுடா நல்லவனே." என்றதும், மறுபுறம் இருந்த குமரனோ, "சொல்லுடா கெட்டவனே... ஹனிமூன் ட்ரிப் எப்படி போகுது." என்றவனது குரலில் அப்பட்டமாக தெரிந்தது குறுகுறுப்பு.

"வெட்கமா இல்லை. இப்படி கேட்க. போனை வைடா இடியட்." என்றான் சீற்றமாக.

"என்ன மச்சி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"குமரா வந்தேன்னா, மூக்கு மேல குத்துவேன். நானே இந்த ராட்சசி கிட்ட மாட்டிகிட்டு தவிக்குறேன். நீ வேற ஏன்டா காண்டு கிளப்புற?" என்று கோபத்தில் தொடங்கி, சோகமே உருவாய் முடித்திருக்க, இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளோ, நிஜமாகவே ராட்சசியாக மாறத் தொடங்கினாள்.

"எவ்வளவு தைரியம் நான் ராட்சசியா?" என்று மேல் மூச்சு இறைக்க, மூக்கு புடைக்க, கண்கள் சிவக்க கேட்டவள், அடுத்த நொடியே அவனை நோக்கி சென்றிருக்க,

"என்ன சொன்னீங்க. நான் ராட்சசியா?" என்று அவனை தன் புறம் திருப்பிக்கொண்டு கேட்டதில், அவள் குரலைக் கேட்டு அதிர்ந்தானோ இல்லையோ, அவளது தோற்றத்தை கண்டு மயக்கம் வராத குறையாக வாயைப் பிளந்தான்.

மறுபுறம் இருந்த குமரனுக்கு பூவினியின் குரல் கேட்க, "வந்த வேலையை நல்லபடியாக முடிச்சாச்சு." என்று கூறிக்கொண்டே கைபேசியை அணைத்திருந்தான் குமரன்.

"அது இல்லைமா." என்று பிரபஞ்சன் இழுத்தது எல்லாம் காற்றில் கரைந்துதான் போனது. அவள் நிற்கும் கோலம் கண்டு கண்களை அகல விரித்தவனோ, "பா....ப்பு." என்று அழைக்க, அவளோ, "என்ன தைரியத்துல சொன்னீங்க? அதுவும் அப்படி... என்கிட்ட பாப்புனு கொஞ்சுறது. மத்தவங்ககிட்ட ராட்சசினு சொல்லி மட்டம் தட்டுறதா?" என்றவளது ஆவேசத்தை கவனிக்கும் நிலையிலேயே பிரபஞ்சன் இருக்கவில்லை.

"பா...ப்பு" என்று பேச நினைத்தவனுக்கோ அதற்குமேல் பேச்சு தடைப்பட்டிருக்க, வெறும் காற்று தான் வந்தது. என்ன தான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இருந்தாலும் அவனும் ஆண்தானே தனக்கே உரிய தன் மனையாளின் மீது உணர்வுகளும், உணர்ச்சிகளும் காட்டாமல் இருக்க அவன் ஒன்றும் சிலை இல்லையே. அவனையும் மீறி அவன் பார்வை அவள் மீது படிய,

'அய்யே பிரபா கன்ட்ரோல் பண்ணுடா.' என்று எவ்வளவு முயற்சிகளை செய்தும் அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போக, செய்வதறியாமல் நின்றான்.

அவன் தடுமாறும் பார்வையைக் கண்டவள், அப்போதுதான் தன்னைப் பார்க்க, "அய்யய்யோ..." என்று அலறியவள் பட்டென்று திரும்பிக் கொள்ள, அவனும் தன் தலையை தட்டிக்கொண்டே திரும்பி நின்றான்.

"பூவி நீ போய் டிரஸ் மாத்து. நான் திரும்பிட்டேன்." என்றவன் கூறியதும், அவன் திரும்பி விட்டதை உறுதி செய்தவாரே, தன் துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடிச் சென்றிருந்தாள் பூவினி.

"அய்யோ மானம் போச்சே, மரியாதைப் போச்சே, உன் கெத்து போச்சே.பூவி" என்று தனக்குத்தானே புலம்பியவளுக்கு வெட்கம் பிடிங்கி திண்ண, எங்கேயாவது போய் தலையை முட்டிக் கொள்ளலாம் போன்று தோன்றியது பெண்ணவளுக்கு.

இங்கு பிரபஞ்சனுக்கோ, அவளது அந்த தோற்றமே கண்களில் தோன்ற, தன் கன்னக்குழி விழ சிரித்தவனுக்கு, அவளிடம் பார்த்திருந்த ஒரு மச்சம் நினைவில் வர, விசமமாய் சிரித்தவன், தன் தலையை ஆழ்ந்துக் கோதிக் கொண்டான்.

உடை மாற்றி வந்தவளோ, தலை கவிழ்ந்தபடி வெளியே வர, அவளையே கண்டு மென்னகை ஒன்றை புரிந்திருந்தான் பிரபஞ்சன்.

"க்கூம். நீங்க எதுவுமே பார்க்கலை. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்ததை மறந்திடனும்." என்றாள் தயங்கியவாறே.

அவனோ அடி மேல் அடியெடுத்து அவளை நோக்கி வர, அவளுக்கோ ஒருவித பதட்டம் சூழ்ந்தது.

"தள்ளி நின்னே பேசலாம்." என்றவள் அவனையே பார்க்க,

அவனோ, அவளது அருகில் வந்தபடி, "தள்ளி நின்னு சொன்னால் நீதான் கூச்சப்படுவ." என்றான் அழுத்தமான பார்வை பார்த்தபடி.

"அப்படி என்ன சொல்லனும்?"

"நான் எல்லா மறந்துடுறேன். ஆனால் ஒரு விசயம் மட்டும் மறக்காமல் மனசுகுள்ளயே சுத்திட்டு இருக்கு." என்றான் காதல் கலந்த கேலியோடு.

"அப்படி என்ன விசயம்?" என்றவள் கேள்வியாய் பார்க்க, அவளது காதோரம் குனிந்தவனோ, ரகசியத்தை கூறியிருக்க, வெட்கம் கலந்த அதிர்ச்சியில் சிணுங்கியவள், "அய்யய்யோ உங்களை யாரு பார்க்க சொன்னாங்க. ச்சீ போங்க." என்று கூச்சத்தில் நெளிந்த பூவினியை, அடக்கப்பட்ட புன்னகையோடு பார்த்தான் பிரபஞ்சனுக்கோ அவளிடம் கண்ட இந்த வெட்கம் புதிதாக தெரிந்ததில் ரசனையோடு பார்த்தான் தன் மனையாளை.

*******

பிரபஞ்சனையும் பூவினியையும் கடமைக்கென வழியனுப்பியவனோ, தன் தாயிடம் வருவதாக சொல்லிவிட்டு அவனது வீட்டிற்கு வந்திருந்தான். மாடமாளிகை போன்ற வீட்டினுள், தனிமரமாக நின்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு நினைவெல்லாம் அவளது ரூபினியே. அவளோடு வாழ்ந்த நாட்கள் ஒவ்வொன்றுமே அவனின் பொன் நினைவுகளாகும்.."ஹே பட்டர்ஸ்காட்ச்" என்று ஒருநாளில் ஆயிரம் முறையாவது அழைத்திருப்பான்.

இளமையின் வேகத்தில் திருமணம் நடந்திருந்தாலும், அவளை மனதார நேசித்து அவளோடு நேரங்களைக் கழிக்க, எவர் கண் பட்டதோ தெரியவில்லை. அன்றொருநாள் மட்டும் அவள் தன் தந்தையைக் காண செல்லாமல் இருந்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது. இன்று பிரபஞ்சன் பூவினியைப் போல் தன்னவளோடு உண்டான வாழ்வினை ரசித்து வாழ்ந்திருப்போமே என்ற ஆதங்கம் அப்பட்டமாக தெரிந்தது அவன் முகத்தில்.

அவளது நினைவில் உழன்றவனை கலைக்கும் வண்ணம், புயலென வந்திருந்த யாழினியோ, காலிங் பெல்லினை பிடித்து அழுத்திய வண்ணம் இருந்தாள்.

அன்று ஞாயிறு கிழமை என்பதால், வேலையாட்கள் யாருமின்றி இருக்க, அகிலனே கீழே இறங்கி வந்தவன் கதவினை திறந்தான். யாழினியைக் கண்டதும் அவனது நெற்றியில் எரிச்சல் கோடுகள் தெரிய, அவளும் அவனை முறைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவள்,
எதுவும் பேசாமல் சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

"வீட்டுக்கு வந்திருக்க கொளுந்தியாளுக்கு, எதாவது சாப்பிட கொடுக்கனும்னு எல்லாம் தெரியுமா? தெரியாதா?" என்றவள் அவனை உற்றுப் பார்க்க, சலிப்பான பார்வைப் பார்த்தான் அகிலன்.

"எதுக்கு வந்த? ப்ச்... நீ எதுக்கு வந்திருந்தாலும் அதை பத்தி கேட்குற அவசியம் எனக்கு இல்லை. கிளம்பு." என்று அதிகாரமாக வந்தது வார்த்தைகள்.

"நான் எதுக்கு கிளம்பனும் அத்தான்... ரூபிகாவோட வூட்டுகாரர்னு அன்னைக்கே சரியா கெஸ் பண்ணாலும், உங்க முகவெட்டு எப்படி பிரபா அத்தான் மாதிரி இருக்குனு ஒரே கன்ஃபியூசன்.... அதுக்கு எல்லா நல்ல சொல்யூசன் தான் நேத்தே தெரிஞ்சிடுச்சே. இப்போ இரண்டு விதத்துலயும் நீங்க எனக்கு அத்தான் தான்..." என்றாள் பரவசமாக.

"கடுப்ப கிளப்பாத? பன்னிரண்டு வயசுல எதோ ஒரு இரண்டு முறை பார்த்திருந்தாலும், ஆறு வருசம் கழிச்சும் நியாபகம் வெச்சிருக்க. ஆனால் ஒன்னை மட்டும் மறந்திடாத, எனக்கு உங்க குடும்பத்தை கண்டாலே பிடிக்காது."

"ஆஹான்... எங்க குடும்பத்தை பிடிக்காதாம் ஆனால் எங்க குடும்பத்துல உள்ள ரூபியை மட்டும் பிடிக்குமா அத்தா....ன்." என்றாள் இழுவையாக.

"என்னடி இப்போ மட்டும் ரூபி உங்க குடும்பத்து ஆளா தெரியுதோ? அவ உங்க வீட்டுக்கு வந்தப்போ பிள்ளையே இல்லைனு உங்க அம்மா தலை முழுக, உங்க அக்காகாரி அவளை எவ்வளவு கேவலமா பேசியிருப்பா...? அவ தான் உங்க அப்பா சாவுக்கு காரணம்னு எப்படி அழ வெச்சிருப்பீங்க." என்றவனது கண்கள் சிவப்பேறி, முகம் முழுவதும் கோப ரேகைகள் துளிர்த்தது.

"என்ன இப்போ சொல்லுடி? உங்க வீட்டில பேசுன பேச்சு கொஞ்ச நஞ்சமா? ஹான். இப்போ மட்டும் உங்க வீட்டுபொண்ணுனு சொல்ற? அந்த நாள்அன்னைக்கு என் ரூபி பட்ட வலி கொஞ்சம் நஞ்சமில்லை. அப்போ அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட நான் இல்லாமல் போயிட்டேன். நான் இருந்திருந்தா அவளை தனியா விட்ருக்க மாட்டேன். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை கிட்டத்தட்ட ஆறு வருசமா அவளை தேடிட்டு இருக்கேன்டி. அது எல்லாத்துக்கும் காரணம் உன் அக்கா பூவினி தான். அவளை கொல்லுற அளவுக்கு ஆத்திரம் வந்துச்சு. ஆனால் அதுகுள்ள நீங்க வீடு காலி பண்ணி போயிட்டீங்க. இத்தனை வருசம் கழிச்சு, உங்களை பார்த்ததுமே அவ்வளவு வெறி. அந்த பூவினிக்கு வலியை
கொடுக்கத்தான், உன்னை கடத்துனேன். உனக்கு என்னடானா என்ன பார்த்தால் கொஞ்சம் கூட பயம் வரலை. நான் உனக்கு வலுக்கட்டாயமா தாலிகட்டுறேனு சொல்லியும் பயம் வரலை. இப்போ என்னடானா என் முன்னாடியே தைரியமா வந்து பேச வந்திருக்க." என்று மனதில் இருந்த அத்தனை துயரத்தையும் அவன் கொட்டியிருக்க, அதைக் கேட்டவளோ திக் பிரம்மை பிடித்தது போல் நின்றாள்.

குடும்பத்தை எல்லாம் விட்டு சென்றவள், அவனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தாள் யாழினி. ஆனால் ஆறு வருடமாக அவள் அவனோடு இல்லை என்று தெரிந்த நொடி அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றவளுக்கு, அகிலன் மீது கோபம் கோபமாக வந்தது.

"என் அக்காவை தொலைச்சுட்டியா? நான் தெரியாம தான் கேட்குறேன், பூவினி அக்கா , அம்மா பேசுனதுல என்ன தப்பு இருக்கு? உயிருக்கு உயிரா எங்களை நேசித்து வளர்த்த எங்க அப்பாவை நாங்க இழந்தோம்... எல்லாம் யாரால....? உங்களால தான். நீங்க மட்டும் எங்க வாழ்க்கையில வரலைனா, என் இரண்டு அக்காவோட அப்பா , அம்மானு அழகான வாழ்க்கையை வாழ்ந்திருப்போம். ரூபி அக்கா காணாமல் போனப்போ அப்பா எப்படி துடிச்சாரு தெரியுமா? போலிஷ் ஸ்டேசன், ஊர் ஊராக அவர் போகாத இடமில்லை. அப்பா அழுது அன்னைக்கு தான் பார்த்தோம்." என்று கூறும்போதே அழுகை பீறிட்டு வந்தது பெண்ணவளுக்கு.

தன் கண்களை அழுந்த துடைத்தவள் மீண்டும் பேசத் தொடங்கினாள். " ஓடி போயிருக்க வாய்பிருக்குனு அக்கம்பக்கத்துல அரசல் புரசலாக பேசினாலும், எங்க வீட்டுல யாருமே நம்பலை. அதுவும் அப்பா, என் பொண்ணு அப்படி பண்ண மாட்டானு நெஞ்சை நிமிர்த்தி சொன்னாரு. அவ காணாம போன அன்னைக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க, ரூபினி கழுத்துல தாலியோட ஒரு பையன் கூட போறதை சொன்ன அந்த நொடி அப்பா இடிஞ்சு போய்ட்டாரு. அவ சின்ன பொண்ணு, என் பொண்ணு அப்படி பண்ணமாட்டானு, அவரு வாய் சொன்னாலும், மனசோ நிதர்சனத்தை புருஞ்சுகிட்ட அந்த நொடி நெஞ்சை பிடிச்சு சாஞ்சவரு தான். அம்மா தண்ணீலாம் கொடுத்து சமாதானம் படுத்தி அவரை நார்மலாக்குனாங்க.

அன்னைக்கு எங்க வீடே துக்க வீடு மாதிரி தான் இருந்தது. பூவினிக்கா அப்பா கையை பிடிச்சு, நான் இருக்கேன்ப்பா உங்களுக்கு. அழுகாதீங்கப்பானு, அழுதது இன்னும் கண்ணுல நிக்குது. எனக்கு புரிதல் இல்லாத வயசு அப்போ. ஆனாலும் எல்லாரும் அழுறத பார்த்து நானும் அழுதேன். என் ரூபிக்கா வரமாட்டாளானு அழுதேன்." என்றவளது விசும்பல் சத்தம் அவ்விடத்தையே நிசப்தமாக்க அவளது அழுகை அகிலனது மனதையும் பிசைந்தது.

"இப்போ எதுக்கு எமோஷ்னல் ஆகுற. புரியுது உங்க இழப்பு. ஆனால் என் ரூபினியோட பிரிவுக்கு காரணம் நீங்க தானே. உங்களால அவ போயிட்டா.. எங்கேனு தெரியாத இடத்துக்கு. உயிரோட இருக்காளானே தெரியாமல் என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டா." என்றவனை அனல் பார்வை பார்த்தாள் யாழினி.

"எப்படிங்க உங்களால எங்க மேல பழி போட முடியுது. இங்க பாருங்க அகிலன் அத்தான் உங்க மேல எனக்கு தனி பிரியம் இருந்தது. ஆனால் அது இப்போ இல்லை. அன்னைக்கு இராத்திரி தூங்குன அப்பா காலையில மாராடைப்பால இறந்துக் கிடந்தாரு. பதினாறவது நாள் காரியம் முடிஞ்ச அப்புறம் ரூபினி அக்கா வந்தாள், ஆனால் அவ முகத்தை பார்த்தப்போவே தெரிஞ்சிது அவ அப்பாக்கு இப்படி ஆகும்னு நினைக்கலைனு. அப்பா இறப்புக்கு காரணமா இருந்த அக்காவை பூவிக்கா தங்க கம்பளம் விரிச்சு வரவேற்பானு நினைச்சீங்கனா அது உங்க தப்பு. அவ மேல இருந்த கோபத்துல அக்கா பேசுனது எனக்கு தப்பா தெரியல. ஆனால் எனக்கு இங்க இடிக்குற ஒரே விசயம் ரூபினிக்கா அழுதுட்டே உங்களை தானே பார்க்க வந்திருக்கனும்? எதுனால உங்களை பார்க்க வரலை. அவ உங்க தோள்ல சாஞ்சுதானே ஆறுதல் தேடியிருக்கனும். அப்படி அவ உங்ககிட்ட வரலைனா உங்க மேல தானே எதோ தப்பு இருந்திருக்கும்? சொல்லுங்க அத்தான்." என்று அவனது சட்டையை பற்றி கேட்டதில் ஒரு நிமிடம் திகைத்துதான் போனான் அகிலன்.

ஆம் அவன் அந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை. அப்பா இறந்ததற்கு தான் காரணம் என்று அவள் எங்கோ சென்று விட்டாள் என்று நினைத்தவனுக்கு, இப்போதுதான் புத்தியில் உரைத்தது எதுக்காக அவள் தன்னிடம் ஆறுதல் தேடவில்லை. ஒரு வார்த்தைக் கூட கூறாமல், அதுவும் அவனது முகத்தைக்கூட பார்க்காமல் எவ்வாறு சென்றிருப்பாள் என்ற எண்ணம் மேலோங்க, யாழினியை பார்க்க இயலாது பார்வையை கவிழ்த்துக் கொண்டான் அகிலன்.

"உங்களோட அவ சந்தோசமா வாழ்றாங்குற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு. அதான் நான் இத்தனை நாளும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துட்டேன். உங்க மேல எனக்கு எப்போதும் தனி பிரியம் இருந்துச்சு. ஆனால் அந்த பிரியம் இப்போ கொஞ்சம் கூட இல்லை. இனியும் உங்களை பத்தி, ரூபி பத்தி சொல்லாமல் இருந்தேன்னா, ரூபிக்கா மேல எனக்கிருந்த பாசத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்டும். நான் இப்போவே போறேன்." என்று வெறுமையான பார்வை ஒன்றை பதித்தவள், அவனது சட்டையை பற்றியிருந்த கைகளைவிடுத்து, கோபமாக சென்றவள் கதவினை திறக்க, அங்கு நின்றிருந்தவரைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 29

யாழினியின் அதிர்ச்சிக்கு காரணம் அங்கு நின்றிருந்த தென்னவனே. தென்னவனுக்கோ அவளைக் கண்டு அதிர்ச்சி என்றால், இவளுக்கோ, எங்கு அவன் அனைத்தையும் கேட்டிருப்பானோ என்ற அதிர்ச்சியில் விழி அகலாமல் பார்த்தாள். செல்வதாகச் கூறியவள், ஸ்தம்பித்து நிற்பதைக் கண்டு அகிலன் அவ்விடம் வர, அங்கு நிற்பவனைக் கண்டு, முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டிடாத பார்வை பார்த்தான்.

"யாழ் நீ எங்க, இங்க?" என்றவன் புருவம் சுருக்கியபடி "ஏன் இரண்டு பேரும் இப்படி அதிர்ச்சியா இருக்கீங்க?" என்றவனது பார்வை ஒரு நிமிடம் யாழினியிடம் படிந்து மீண்டது.

அவன் எதையும் கேட்கவில்லை என்பது அவனது கேள்வியிலேயே தெரிந்துவிட, நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தவள், "நான் இந்த வழியா வந்தேன்னா. அதான், அகில் அத்தானை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்." என்றாள் சமாளிப்பாக.

'அகில் அத்தானா... நேத்து வந்தவரை கூட அத்தானு சொல்லுறாள்! என்னை மட்டும் தென்னைமரம், பனைமரம்னு கூப்பிடுற.... என்னக் கொடுமை தென்னவா இது.' என்று மனதளவில் புலம்பியவனோ, "ஓ..." என்று மட்டும் கூறியிருக்க, அவன் முகமே காட்டியது அவனது குழப்பத்தை.

"நான் கிளம்புறேன்." என்று அவ்விடமிருந்து யாழினி நழுவப் பார்க்க,

"வீட்டுக்கு தானே போற. நான் கொண்டு வந்து விடுறேன்." என்றான் தென்னவன்.

அகிலனுக்கோ, தென்னவனது பார்வை கண்டே அவனுக்கு யாழினியை பிடித்திருப்பதை நேற்றே அறிந்தவன், எங்கு தன்னைப்போல் இவனும் காதலில் சிந்தையை இழந்திடுவானோ என்ற யோசனை இருக்கத்தான் செய்தது. இருந்தும் யாழினியின் குழந்தை தனத்தையும் மீறி, அவளுள் தெரிந்த பக்குவம் நிச்சயம் அடுத்தக்கட்டத்திற்கு அவளை நகர்த்தாது என்பதும் அறிந்திருந்தான்.

"தென்னவா, என்னை பார்க்கதானே வந்த... வா நம்ம மாடிக்கு போய் பேசலாம்." என்று தோள்பட்டையில் கைப்போட்டுக் கொண்டு அழைக்க, வேறுவழியின்றி அவனோடு சென்றவன், திரும்பி ஒருபுறம் யாழினியைக் காண, அவளோ அங்கிருந்து சென்றிருந்தாள்.

காணும் இடம் யாவும் நீல அலைகள், வெண்ணிற மணல்களின் மீது, பட்டுச் செல்ல, பூவினியோ இயற்கையின் அழகினை கண்களால் ரசித்துக் கொண்டிருந்தாள். நடுநடுவே உள்ள தென்னமரங்களின் காற்று அவளைத் தழுவிச் செல்ல, அவள் மனமோ, சற்று முன்பு அவளது காதுகளில் அவன் பேசிய வார்த்தைகளில் நிலைத்து நின்றது.

"ஆனாலும் ரொம்ப மோசம் இவரு." என்றவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்போதே கையில் அவளுக்காக எலுமிச்சை சாற்றைக் கொண்டு வந்து நீட்டினான் பிரபஞ்சன்.

அவனைக் கண்டதும், வெட்கம் துளிர்க்க, அதை அவன் முன்பு வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியவள், முறைத்துக்கொண்டே, எலுமிச்சை சாற்றை பெற்றுக் கொண்டாள்.

எலுமிச்சை சாற்றை ஒரு மிடறு அருந்தியவள், புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில், முகத்தை சுருக்கியபடி, நாவினைக் கொண்டு கீழ் உதட்டை ஈரமாக்க, பிரபஞ்சனது பார்வையோ அவளின் உதட்டின் மீது படிந்தது.

'அய்யய்யோ கொல்றாளே. இப்படி எல்லாம் எக்ஸ்பிரஷன் பண்ணி நம்மளை ஒருவழி பண்ணிடுவா போல.' என்றவனது பார்வை ரசனையாக படிய, மிக கடினப்பட்டே அவள் மீதிருந்த தன் பார்வையினை திசைதிருப்பி இருந்தான் ஆடவன்.

பூவினியோ, மீண்டும் ஒரு மிடறு அருந்திக் கொண்டே, அவனை ஓரப்பார்வை பார்த்தாள். அவளுக்காகவே தாடி எல்லாம் எடுத்திருந்தவனது கன்னத்தில், சிரித்தால் மட்டுமே விழக்கூடிய கன்னக்குழி அழகாய் மிளிர, இமை மூடாமல் அவனையே இவளது விழிகள் பார்க்க, 'பூவி நீ என்ன பண்ற. அய்யய்யோ நீ அப்பட்டமா சைட் அடிக்குறடி' என்று மனதில் தோன்றிய நொடி அதிர்ந்தவள் பட்டென்று திரும்பிக் கொண்டாள்.

"பூவி நீ ரெடி தானே. நம்ம அடுத்து ராதா நகர் பீச்க்கு போகப் போறோம்." என்று கூறிக்கொண்டே அவளைப்பார்க்க, அவளோ "ம்ம்ம்."என்று தலையசைத்தாள்.

போர்ட் பிளையரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில், "ஃபெர்ரி படகின்" மூலம் சவாரி செய்தபடி ஹேவ்லாக் தீவிற்கு வந்தடைந்தனர் மூவரும்.

"ரொம்ப அழகான தீவு இதுதானுங்க. இங்க ஸ்கூபா டைவிங் ரொம்ப பிரபலமானது. நம்ம கண்ணுக்கு கிளாஸ் போட்டு, ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுத்து, கடலுக்கு அடியில கூப்பிட்டு போவாங்க பாருங்க. அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது." என்று சக்தி கூறும்போதே ஆச்சரியமாக கேட்டாள் பூவினி.

"வாவ் தண்ணீருகுள்ளயா அண்ணா. நீங்க சொல்றத கேட்கும் போதே பிரம்மிப்பா இருக்கு." என்று விழி விரித்தவளை ஆர்வத்தோடு பார்த்தான் பிரபஞ்சன்.

சக்தியோ, "இதுக்கே பிரம்மிப்பா பார்த்த எப்படிங்க அம்முனி. இரண்டு பேரும் அந்த அனுபவத்தை கண்டுகளிச்சுட்டு வாங்க." என்றவன் இரண்டு டிக்கெட்டுகளை நீட்டியிருந்தான்.

"என்ன சக்தி, ஸ்கூபா டைவிங் டிக்கெட்டா? இது ரொம்ப காஸ்ட்லி தானே."

"அது பார்த்துக்கலாம் பிரபா. லைஃப்ல ஒரு தடவை வரீங்க. இது எல்லாம் அனுபவிக்காமல் போனால் எப்படி?"

"ரொம்ப தாங்ஸ் சக்தி. எங்களுக்காக ஒவ்வொன்னையும், பார்த்து பார்த்து பண்றீங்க." என்றவன் கூற, அதை ஆமோதிக்கும் வண்ணம் தலையாட்டியபடி புன்னகைத்தாள் பூவினி.

பின், பூவினிக்கும் பிரபஞ்சனுக்கும் மருத்துவ கேள்விகள் கேட்டபடி சீட்டு ஒன்று வழங்கப்பட, ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற எந்த வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின்பே இருவரையும் அனுமதித்தனர் ஸ்கூபா குழு. அதன்பின் தண்ணீர் புகா வண்ணம் இருவருக்கும், உடலை இறுக்கிய ஸ்விம்சூட் வழங்கப்பட, அதனை உடைமாற்றும் அறைக்கு சென்று அணிந்தபடி வந்தனர் இருவரும். அதன் பின் பதினைந்து நிமிட பயிற்சி வழங்கப்பட்டது.

வழியில் மூச்சுதடைப்பட்டால் செய்கை செய்திட, சில உடல் சைகை மொழிகளையும் பயிற்றுவித்தனர் இருவருக்கும். பயிற்சியின் போது கண்களில் அணியும் கண்ணாடி மூக்கினையும் அடைத்துவிடும் என்பதால், வாய் வழியே மட்டுமே மூச்சினை விட வேண்டிய சூழல். முதலில் பூவினிக்கு கஷ்டமாக இருந்தாலும், கடலுக்குள் செல்லும் ஆவலில் சமாளித்துக் கொண்டாள்.

அதன்படி இருவருக்கும் ஆக்ஸிஜன், ஹீலியம் கலந்த வாயு சிலிண்டரினை பொறுத்தியிருந்தனர் ஸ்கூபா பயிற்சியாளர்கள். பின் இருவரையும் கடலுக்குள் அழைத்துச் செல்ல, பிரபஞ்சனோ தன்னவளது கைகளை விடாமல் பிடித்திருந்தான். அவன் கவனம் முழுவதும் அவள்மீதே இருக்க, அவள் சீராக சுவாசிக்கின்றாளா என்பதிலேயே சிரத்தையாக இருந்தான் பிரபஞ்சன்.

இருவரையும் சுற்றிலும் வண்ணமீன்கள், இருவரோடு பயிற்சியாளர்களும் உடன் வந்திருக்க, கடலில் எடுக்கும் புகைப்படக்கருவியின் மூலம் இருவரது அனுபவத்தையும் பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

பூவினியோ நீமோ படத்தில் வரும் வண்ண மீனைக் கண்டதும், மகிழ்ச்சியில் குதிக்க நினைக்க கடலுக்குள் அவளால் செய்ய இயலாது போனதில், தண்ணீரில் மீனைபோல திரிந்தாள். ஸ்கூபா டைவிங்கை பொறுத்தவரை நீந்தக்கூடாது என்பது ஒருவிதிமுறை என்பதால் பிரபஞ்சனது துணையோடு நீரினுள் வந்தாள் பூவினி.

பொதுவாக நிமோ மீன்கள் ஆண் இன மீன்களே, இனப்பெருக்கத்திற்காக ஆண் மீனே, பெண் மீனாக தன்னை மாற்றிக் கொள்ளுமாம். அந்த மீன் இறந்ததும், அதிலுள்ள அடுத்த பெரிய மீன் பெண் மீனாக மாறிவிட்டு முட்டைகளை பாதுகாக்குமாம். அந்த கண்கவர் மீன்கள் மட்டும் அல்லாது பல்வேறு வண்ண மீன்கள், கடல் பாம்புகள், ஆமைகள், கடல்வாழ் தாவரங்கள் என அனைத்தையுமே கண்களில் நிரப்பிக் கொண்டவளை, காதலோடு பார்த்தான் பிரபஞ்சன்.

அவளது கைகளை பற்றி, அவளையே விழிகள் அகலாமல் பார்க்க அந்த காட்சியினை அழகாக படம் பிடித்திருந்தனர் பயிற்சியாளர்கள்.

பின் இருவரையும் மேல அழைத்து வர, ஆக்ஸிஜன் மாஸ்க், கண்களை மூடியிருந்த கிளாஸ் என அனைத்தையும் கழற்றிய நொடி, தனது மூக்கினால் ஆழ்ந்து சுவாசித்தவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பிரபஞ்சனை பார்த்தாள்.

"ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருந்துச்சுல....." என்று கூற, அவளது மகிழ்ச்சியை கண்டு ரசித்தவனோ, "ஆமா ரொம்ப ரொம்ப நல்லாருந்துச்சு." என்று புன்னகையோடு கூற, இருவரது பார்வையும் ஒரு நொடி கலந்துவிட்டு சென்றது.

பின் இருவரும் உடை மாற்றிவிட்டு சக்தி இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

"எப்படி இருந்துச்சு?" என்று புன்னகையோடு அவன் கேட்க, "வேற லெவல்" என்று இருவருமே ஒரே போல சொன்னதில் வாய்விட்டே சிரித்தான் சக்தி சரவணன்.

"இன்னும் இங்க பார்க்குறதுக்கு எக்கச்சக்க இடம் இருக்குதுங்க. நீங்க இரண்டு பேரும் இன்னைக்கு முன்ஜோ ரிசார்ட்ல தங்கிக்கோங்க. இன்னைக்கு சாயிங்காலமா எலிபெண்ட் பீச் போயிட்டு ஃபுல் மூன் கஃபே போய்ட்டு சாப்பிட்டு நாளைக்கு ஹோட்டல் போயிடலாம். சரி நான் போய் ரிசார்ட்ல ரூம் புக் பண்ணிட்டு வரேன்." என்றவன் இருவருக்கும் தனிமையை கொடுத்த வண்ணம் அங்கிருந்து கிளம்பினான்.

பூவினியும் பிரபஞ்சனும் அங்கிருந்த மரத்தடியில் வந்து அமர்ந்துக் கொண்டனர். இதமான கடல்காற்று இருவரையும் தொட்டு செல்ல, கடலுக்குள் கண்ட பிரமிப்பு மாறாமல், புன்னகைத்தாள் பூவினி.

" நம்ம வீடியோஸ், போட்டோஸ் எல்லாம் அனுப்பிருக்காங்க பார்க்குறியா?" என்றவன் கேட்கும்போதே ஆவலாக, "எங்க, காட்டுங்க" என்றபடி அவனருகே ஒன்றி அமர்ந்தவள் பார்க்க, போனை அவளிடம் நீட்டிய பிரபஞ்சனோக்கோ சொல்லப்படாத உணர்வுகள் வந்துச் சென்றது.

"வாவ் ரொம்ப நல்லாருக்கு. இந்த போட்டோவில நான் அந்த மீனை தொட்டுருக்கேன்." என்று ஆர்வத்தோடு கண்டவள், ஒவ்வொரு புகைப்படத்தையும் காண, அதில் ஒரு புகைப்படத்தில், அவளை அரணாக பிடித்தபடி பிரபஞ்சன் நிற்க, அவள் மீனை பிரம்மிப்பாய் பார்க்க, அவனோ அவளையே பிரம்மிப்பாய் பார்க்கும் காட்சியினை விழி விரித்து பார்த்தாள் பூவினி.

அவளது அமைதியைக் கண்டு, அவனும் புகைப்படம் பார்க்க, அந்த காட்சி அவனது காதலை அல்லவா பறைச்சாற்றியிருந்தது. பெருமூச்சொன்றை விடுத்தவன்,

" எதோ ஆர்வத்துல உன்னை பார்த்துட்டேன். அதுக்காக திட்டிடாத மா." என்றவனது வெறுமையான வார்த்தைகளை கேட்டவளுக்கோ சுருக்கென்று இருந்தது. அவ்வளவு தூரமா அவனைக் காயப் படுத்தியிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தாலும், அவன் அவ்வாறு சொன்னதில் கோபம் துளிர்க்காமலும் இல்லை.

"இங்க பாருங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஹான் ரொம்ப பண்ணாதீங்க, எதோ நான் உங்களை கொடுமைபடுத்துற மாதிரில்ல பேசுறீங்க... எனக்கு கடுப்பா இருக்கு." என்றவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

"நானும் பார்க்குறேன் ஓவரா பேசுறாரு. எதோ சின்னதா பேசியிருப்பேன். அத மனசுல வெச்சுகிட்டு ஒவ்வொரு தடவையும் குத்திக் காட்டனுமா?" என்று புலம்பிக் கொண்டே சென்றவள் மனமோ, எப்படி இருந்தாலும் தன்னை சமாதனப்படுத்த அவர் வருவார். என்று நினைத்துக் கொண்டே தான் இருந்தது. அவன் வரும் அரவமே கேட்காததால், சட்டென்று திரும்பிப் பார்க்க, அவன் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள் பூவினி.

"எங்க இவரைக் காணோம். கையில ஃபோன் வேற இல்லை. அவரு போனை அவரு கையில கொடுத்துட்டேனே. நான் திட்டுனதுல கோபப்பட்டுட்டாரா?" என்று அவள் மனம் பல்வேறு கேள்விகளில் உழன்றிருக்க, இருவரும் அமர்ந்திருந்த இடத்திற்கே விரைந்துச் சென்றாள். அங்கும் அவன் இல்லாததால் தன் கண்களை நாலாபுறமும் சுழலவிட, பெயர் தெரிய ஊரில் வழி தெரியாத பெண்ணிவளின் கண்கள் கலங்கித் தான் போனது.

"பிரபா எங்க இருக்கீங்க? பிளீஸ் எங்க இருந்தாலும் வந்திடுங்க. இல்லை வேணும்னே விளையாடுறீங்களா?" என்று கத்திக்கொண்டே சுற்றியும் அவள் பார்க்க, அவன் கண்களில் தட்டுப்படாததால், அய்யோ என்றானது.

"பிரபா... பிரபா....." என்றவள் குழந்தையை தொலைத்து விட்டு தேடும் தாயைப் போல தேடினாள்.

ஒரு நிமிடம் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போல உணர்ந்தவள் கடற்கரை மணலில் தன்னந்தனியாக தனித்துவிட்டபடி நின்றாள் பாவமாக.

"பிரபா பயமா இருக்கு. நான் உங்களை எங்கேனு தேடுவேன்." என்று உள்ளங்கைகளால் கண்களைப் பொத்திக்கொண்டு அழ, அவளது தோளினை அழுந்தப் பிடித்திருந்தான் பிரபஞ்சன்.

சற்று நேரம் முன்பு.... அவள் எழுந்ததும் உடன் எழுந்தவனோ, அவளை சமாதானம் படுத்தும் பொருட்டு கைகளை நீட்ட, கையிலிருந்த நிச்சயதார்த்த மோதிரம் இல்லாமல் இருப்பதை கவனித்தவனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. உடைகளை கழற்றி வைத்தபோது, மோதிரம் தொலையாமல் இருக்க, அங்கிருந்த லாக்கரில் வைத்திருந்தது. உடனே விரைந்தவன் எடுக்கச் சென்றிருக்க அவள் தான் அவனைக் காணாததால் பரிதவித்து போயிருந்தாள்.

கையில் இருக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரியாது என்பது போல, தன்னவன் தன்னோடு இருக்கும் வரை அவனை படுத்தி எடுத்தவள், அவன் இல்லாத நொடி வாழ்வையே தொலைத்துவிட்டது போல உணர்ந்தவளுக்கு, அவனது தொடுதலில், அழுத விழிகளோடு திரும்பியவள், அவனைக் கண்ட நொடி, தன்னையும் மறந்து தாவி அணைத்துக் கொண்டாள். அவளது விசும்பல்கள் ஒவ்வொன்றும் கண்ணீராக வழிந்து, அவனது ஆடையை நனைத்திருக்க, அவளது தவிப்பே பறைசாற்றியது பெண்ணவளின் காதலினை.

அவள் அவ்வாறு செய்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்தாலும், அவளது அழுகை அவன் மனதை பிசைந்திட, ஆறுதலாக அவளின் முதுகை நீவியவன்,

"பாப்பு... அழாதடி. எதுக்கு இப்படி அழுற? என்னாச்சு உனக்கு? மோதிரத்தை வெச்சிட்டு வந்துட்டேன்டி, அதான் நான் எடுக்கப் போனேன் பாப்பு." என்றவன் கூறிய நொடி அவனை விட்டு பிரிந்தவள், அவனது வயிற்றில் சரமாரியாக குத்தினாள்.

"என்னடா சொன்ன. இங்க ஒருத்தி உன்னை காணோம்னு தவிச்சு தேடிட்டு இருந்தால், நீ பாட்டுக்கு சொல்லாமல் கொல்லாமல் மோதிரம் எடுக்க போயிருக்க? ஹான் என்ன பார்த்தால் உனக்கு லூசு மாதிரி தெரியுதா? ஏன்டா இப்படி பண்ண?" என்று நெஞ்சிலும் வயிற்றுலும் மாறி மாறி அடிக்க,

'என்னது என்னைய தேடுனியா?' என்ற வலி கலந்த பிரம்மிப்பில் திகைத்தவன், "அய்யோ வலிக்குதுடி. ஏன் இப்படி குத்துற. முன்னொரு காலத்துல ஜாக்கிசானுக்கு தங்கச்சியா இருந்திருப்பா போல." என்றவன் வலிப்பது போல நடிக்க, அவன் மனமோ உள்ளுக்குள் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டுதான் இருந்தது.

"அப்படி தான் அடிப்பேன்டா. எதுக்குடா சொல்லாமல் போன?" என்றவள் வயிற்றில் ஓங்கி அடிக்க,

"என்னது டாவா. என்னடி பூவினி புருசனுக்கு மரியாதைக் குறையுது." என்றவனது டீசர்டை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள்,

"பின்ன, நீ பண்ண காரியத்துக்கு உன்ன கொஞ்சுவாங்களாக்கும்?" என்றவள் எகிறிக் கொண்டு வர,

"நான் காணாமல் போனா நீ எதுக்கு அழுகுற பாப்பு...? எதுக்கு உனக்கு கோபம் வருது? " என்றவனது கேள்வியில் ஸ்தம்பித்து போய் நின்றவள், அவனது டீசர்டை பற்றியிருந்த கைகளை விடுத்தாள்.

"ஏன்னு நான் சொல்லட்டுமா?" என்றவன் அவளையே ஊடுருவும் பார்வை பார்க்க, வெட்கத்தில் தலை கவிழ்ந்துக் கொண்டாள் பாவையவள்.

"ஏன்னா. உனக்கு" என்றவன் அவளது முகத்தை நோக்கி குனிந்தபடி கூறவர, அவனது நெருக்கமும், அவன் கூறவிருக்கும் செய்தியும் அன்னிச்சையாக வெட்கமடையச் செய்ய, அவனது கண்களையே ஆர்வமாக பார்த்தபடி நின்றவளுக்கு, உள்ளுக்குள் சொல்லப்படாத உணர்வுகள் தோன்றத்தான் செய்தது.

"ஏன்னா உனக்கு, இது தெரியாத இடம் தானே. எங்க தனியா விட்டுட்டு போய்டுவனோனு, பயந்துட்ட... அதுனால தான் மேடம் அழுதீங்க, இப்போ கோபமும் படுறீங்க சரியா." என்றவன் இதழ் பிரித்து சிரிக்க, அவனது பதிலைக் கேட்டவளது முகமோ ஒருநொடியில் வாடியது.

அவன் மீது அவளுக்கே தெரியாமல் இருந்த காதலை, அவனை காணாத இந்த நொடி உணர்ந்திருந்தவளுக்கு, அவன் பேச்சு வலிக்கச் செய்ய, தவிப்போடு பார்த்தாள் பூவினி.
'என் மனசு உனக்கு புரியலையா? சரியான டியூப்லைட்டா நீ' என்று அவள் பார்வைக் கேட்டாலும் , குரல்வளையோ வாய் திறந்து கேட்க மறுத்தது.

"சரி வா போலாம்." என்றவன் முன்னே செல்ல, பொங்கி வரும் அழுகையை கண்ணுக்குள் அடக்கியவள், என்ன நினைத்தாளோ, அவனை ஓடிச் சென்று பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.

"ஐ லவ் யூ.... ஐ லவ் யூ.... ஐ லவ் யூ இது தான் நினைச்சேன் போடா." என்று கத்த, அவளது வாய்மொழிந்த வார்த்தைகளில் உடல் சிலிர்க்க, ஸ்தம்பித்து போய் நின்றவனது இதழ் கடையோரம் புன்னகை அப்பட்டமாக பூத்திருந்தது.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 30

பின்னிருந்து அணைத்தவளது கரம் அவனது வயிற்றினை இறுகப்பற்றி இருக்க, அவளது இதயம் துடிக்கும் நுண்ணிய சத்தத்தை மட்டும் அவன் உணராமல், அதனோடு சேர்ந்து காதலை சொல்லிய பின்பு உண்டான அவளது பதட்டமும், வெட்கமும், தயக்கமும் என சொல்லப்படாத உணர்வுக் குவியல்களை உணர்ந்தவனோ, சிறிது நேரம் அந்த உணர்வினை தனக்குள்ளே புதைத்துக் கொள்வதற்காகவே அமைதியாக இருந்தவன், ரசித்தான்! அந்த நொடி தன்னவள் காதலை வெளிப்படுத்தியதை நினைத்து உருகினான்! அவளது உணர்வுகளால் மருகினான்!

இந்த காதலுக்காக தானே அவன் காத்திருந்தான். அவள் உதடுகள் வழி கேட்க வேண்டும் என்ற ஆவலில் வேண்டும் என்றே விளையாடியும் இருந்தான். ஆம்! அவனைக் காணாமல் தவித்தவள், அவனைக் கண்டதும் அழுத விழிகளோடு அவனை ஆரத்தழுவியிருந்தாளே, அந்தநொடியும், அவளது தவிப்புகள் நிறைந்த கண்ணீரும் காதலை பறைச்சாற்றியிருக்க, பெரும் உவகைக் கொண்டான் பிரபஞ்சன். இருந்தும் அவளது வாய்மொழியை, எதிர்பார்த்தவன் வேண்டும் என்றே சீண்ட, அவளும் காதலை கூறியிருந்தாள் அவனை ஆரத்தழுவியபடி.

மெல்ல அவளது கைகளை பிரித்தவன், தன்புறம் அவளைத் திருப்பியிருக்க, அவளோ அவனது முகத்தினை காணமுடியாமல், வெட்கப்பட்டு தலை கவிழ்ந்திருக்க, அவளையே காதலோடு பார்த்தவன் தன் குரலை செருமியபடி,

"ஹே பாரு பாப்பு. ஏய் பாருடி என்னை." என்றான் புன்னகை கலந்த அழுத்தத்தோடு.

மெல்ல தன் கண்களை உயர்த்தியவள்,, அவனது ஊடுருவும் பார்வைக்குள் தன் பார்வையை செலுத்தியிருந்தாள்.

"அதுவந்து நான்... சொன்னதை நீங்க மறந்திடுங்க. அது எதோ.." என்ற பழைய பஞ்சாங்கத்தை மீண்டும் வாசித்தவளை, புருவம் உயர்த்தி முறைத்தவனோ,

"எங்க திரும்ப சொல்லு பார்ப்போம்." என்றவனின் பதில் வார்த்தையில் தான் எத்தனை கோபம்.

"அது மறந்துடுங்கனு..." என்று அவள் முடிக்கும் முன்னரே, அவன் தன் இதழ்கள் கொண்டு முடித்ததில், எதிர்பாராத இதழ் ஒற்றலில் அவளையும் மீறி அவனது சட்டையினை அவள் இறுக பற்றியிருக்க, மக்கள் நடமாட்டம் இன்றிய அவ்விடத்தில் அலைகளது சத்தம் மட்டுமே இருவரது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

தன் மொத்த காதலையும் மென்மையாக அவளோடு அவன் சேர்க்க, அவளோ இம்முறை அவனை விலக்கவில்லை. மாறாக அவனது உள்ளார்ந்த காதலை ரசித்திருந்தாள்.

மெல்ல அவளது இதழ்களை விடுவித்தவனோ, "திரும்ப சொல்லு பாப்பு." என்றான் கிறக்கமாக.

அவனது முத்தம் தந்த, மயக்கத்தில் இருந்து, கடினப்பட்டே வெளியே வந்தவள், அவனது பேச்சைக் கேட்டு பொய் கோபத்தோடு, அவன் முதுகில் நான்கு அடிப் போட்டாள்.

"ஆளப்பாரு. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா வாயை கடிச்சு வைக்குற.. சரியான கேடி..இதுல சாருக்கு திரும்பவும் வேணுமோ , போடா..." என்றாள் திமிராக.

"இந்த திமிரு தான்டி பிடிச்சுருக்கு உன்கிட்ட. என்ன பண்றது உங்கிட்ட திட்டு வாங்காமல் என் நாளே ஓடாது. அதுக்காகதான் அப்படி பண்ணேன்." என்றான் தோள்களை உலுக்கிக் கொண்டு.

அவனது செயலும், பேச்சையுமே தன்னை அறியாமல் ரசனையோடு பார்க்க, சும்மாவே அவளை கண்களால் களவாடுபவன், சொல்லவா வேண்டும் அவளையே பார்த்தான் உரிமையாகவும், கர்வத்தோடும்.

அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த சக்தி சரவணனோ, "இங்க இருக்கீங்களா? உங்களை அங்க எல்லாம் தேடிட்டு வரேன். ரெசார்ட் புக் பண்ணிட்டேன். வாங்க சாப்டே, எலிஃபண்ட் பீச்சுக்கு போய்ட்டு வருவோம்." என்றான்.

அதன்படி மூவரும் உணவு உண்பதற்காக, ஃபுல் மூன் கஃபே
உணவகத்திற்கு வந்திருந்தனர். ஹேவ்லாக் தீவில் கிடைக்கக்கூடிய பரக்கூடா எனப்படும் ஒருவகை மீன் மிகவும் சுவையானதாக இருக்குமாம். அந்த மீனையே வாங்கினான் சக்தி.

"பரக்கூடா மீனு இங்க ரொம்ப பிரசித்தி பெற்றது. இது ஒருதடவை சாப்பிட்டு பாருங்க மறக்கவே மாட்டிங்க." என்றவனது பேச்சில் ஆர்வப்பட்ட பிரபஞ்சனும் பூவினியும், மீனை ருசித்து உண்டனர்.

பூவினிக்கோ அதில் உள்ள முள்ளை, நீக்க சிரமமாக இருக்க, பிரபஞ்சனோ அவன் கைகளாலே நீக்கியபடி, மாமிசத்தை அவளுக்கு கொடுத்திருந்தான். முன்பு இருந்ததை விட இருவரது கண்களிலும் அன்புக் கூடியிருப்பதைக் கண்ட சக்திக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

பின் மூவரும் எலிஃபண்ட் கடற்கரைக்கு சென்றிருந்தனர்.

"இங்க யானை சவாரி செய்யலாம். இரண்டுபேருக்கும் டிக்கெட் வாங்கிட்டு வரவா?" என்று சக்தி ஆர்வத்தோடு கேட்க,

"எதுக்கு சக்தி. ரொம்ப செலவு பண்ணிட்டு. விடுங்க..." என்று மறுப்பாக பிரபா கூறும்போதே,

"ஆமா ஆமா. இவரும் செலவு பண்ண மாட்டாரு. பண்றவரையும் விட மாட்டாரு. அதான் இவரு இருக்காரே யானை மாதிரி. இவரு மேல சவாரி பண்ணி மனச தேத்திக்க வேண்டியது தான்." என்றவள் முணுமுணுக்க, அது தெள்ளத் தெளிவாக கேட்டது பிரபஞ்சனுக்கு.

"ஓய் பாப்பு என்னை பார்த்தா யானை மாதிரியா இருக்கேன்?" என்றான் முறைப்போடு.

"ச்சே ச்சே... உங்களை யானைனு சொல்வேணா."

"அதுதானே பார்த்தேன்." என்றவன் மிடுக்காக பார்க்க,

"அது யானைக்கு தானுங்க அசிங்கம்." என்றவள் ஒரே வாறாக வாரியிருந்தாள் தன் கணவன் என்றும் பாராமல்.

சக்தியோ குபீரென்று சிரித்துவிட்டான் என்றால், பிரபஞ்சனோ பூவினியை தீயாக முறைத்தான்.

'அடியேய் புருசனையவே இன்சல்ட் பண்றியா..? வந்து வெச்சுக்குறேன்.' என்றவன் மனதில் நினைத்தவாறு முறைக்க.

'கொஞ்சம் ஓவராதான் பேசிட்டமோ! பரவாயில்லை இவரு தானே. பார்த்துக்கலாம்.' என்று நினைத்தாள் அடக்கப்பட்ட சிரிப்போடு.

சக்தியும் சிரித்துக் கொண்டே இருவருக்கும் சேர்த்து, யானை சவாரி செய்வதற்காக சீட்டினை பெற்றுக் கொண்டு வர, படுத்திருந்த யானையை மலைப்பாய் பார்த்தவாறே, பிரபஞ்சனது தோளினைப் பற்றியபடி, யானை மீது ஏறி அமர்ந்தாள் பூவினி.

பின் அவனும் அவளோடு ஏறி அமர்ந்தவன், காற்றுக்கூட புகாத வண்ணம் இறுக்கமாக அமர்ந்திருக்க, யானையை பார்த்து மலைத்தவளுக்கு, அவனது சூடான மூச்சுக்காற்று பட்ட நொடி, அவனது நெருக்கம் உணர்ந்திருக்க, சிவந்துதான் போனாள் பெண்ணவள்.

அசைந்து அசைந்து மென்னடை புரியும் யானை மீது அமர்ந்தவள் அவனது கைகளை இடைவிடாது பிடித்துக் கொண்டாள்.

"ஏங்க இந்த யானை நம்மளை கீழ போட்ருசுனா...! என்ன ஆகும்?"

"அது அப்படி எல்லாம் பண்ணாது பாப்பு. ஆனால் ஒன்னு நீ அதை நோண்டாம இருந்தால் சரி." என்றான் சீண்டலாக.

"சரியான கொழுப்பு உங்களுக்கு." என்றவள் முகத்தை வெட்டிக்கொண்டு திருப்ப, அவளது இடையோடே கைக்கொண்டு சென்றவன் தன் மார்ப்போடு அவளை சாய்த்துக் கொண்டான்.

"உன்ன விடவா எனக்கு கொழுப்பு கூடி போச்சு?" என்றவன் ஆர்வமாக கேட்க,

"பப்ளிக் ப்ளேஸ்ல நீங்க பண்ற காரியமே சரியில்லை. கையை எடுங்க." என்றாள் சிணுங்களாக.

அதே நொடி வெளிநாட்டு ஜோடிகள் யானை சவாரி செய்தபடி இருவரையும் கடக்க, பிரபா பூவினி இருவருக்கும், "ஹாய்" என்றபடி கைகளை ஆட்ட, பிரபஞ்சனும் பூவினியும் "ஹாய்" என்று பதிலுக்கு கையசைத்தனர்.

"சீ இஸ் மை ஃவைப்" என்றவன் சவாரி செய்துக் கொண்டே அறிமுகப் படுத்தியிருந்ததில் மலங்க விழித்தாள் பூவினி.

"யூ போத் ஆர் மேட் ஃபார் ஈச் அதர்." என்று அந்த ஜோடிகளோ புன்னகையோடு சொல்லிவிட்டு செல்ல, பூவினிக்கு தான் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

பின் யானை சவாரி முடிந்ததும், முன்ஜோ ரிசார்டிற்கு வந்தனர் மூவரும். சுற்றிலும் தென்னைமரங்கள், கண்கவர் செடிகள் குழுமியிருக்க, நடுநடுவே குடில் போன்று காட்சியளித்த, ரெசார்டை காணும்போதே அழகாக இருந்தது .

"சரிங்க இரண்டு பேரும் இங்க தங்கிக்கோங்க. நாளைக்கு காலையில வரேன். உங்க லக்கேஜ்லாம் உள்ளதான் இருக்கு. எதாவது தேவைபட்டா போன் பண்ணுங்க." என்று கூறிக்கொண்டே சக்தி விடைபெற்று சென்றிருந்தான்.

தங்களது அறைக்குள் சென்றவளுக்கு பிரம்மிப்பில் கண்கள் விரிந்தது. உள்ளே கட்டிலில் இருந்து, சிறு சிறு விளக்குகள் வரைக்கும் அத்தனை நேர்த்தியாக இருக்க, நிச்சயம் தேன்நிலவு ஜோடிகளுக்கு இவ்விடம் மனதினை பறிக்காமல் இருக்காது என்று நினைத்துக் கொண்டாள் பாவையவள்.

அங்கிருந்த பெரிய கண்ணாடி சாளரத்தை திறந்து பார்த்தாள் பூவினி. சிலுசிலுவென்ற காற்றும், செவ்வானமது தன் வெட்கத்தை இருளில் தொலைத்த காட்சிகள் ஒவ்வொன்றும், கண்களில் நிரம்ப, இமை மூடாமல் பார்த்து திளைத்தாள் பெண்ணவள்.

செவ்வானம் கூட நாணுகின்றது
என் பாவையவளின் பார்வையில்...
என்றபடி பின்னிருந்து அவளை அணைத்தவன், அவளது காதோரம் கூற, அவனது செயலில் நாணம் கொண்டாள் காரிகை.

"கவிதை கூட வருமா?" என்றவள் குரலில் தெரிந்தது ஆர்வம்.

"மனசுல பதிஞ்ச வார்த்தைகள், மனசுக்கு பிடிச்சவங்களை நினைக்குறப்போ, தானகவே வருதே." என்றவனது பார்வை அவளின் விழிகளிலே பதிந்திருந்தது.

"அந்த பார்வை..." என்றவள் முணுமுணுத்துக் கொண்டே தனது பார்வையை தாழ்த்தினாள்.
எப்போதும் போல, அவனது ஊடுருவும் பார்வை அவளை துளைக்கும் அம்பைப் போல தாக்க, அந்த பார்வையில் நாணம் கொண்டவளோ விழிகளை தாழ்த்தியிருக்க,

"அந்த பார்வையில என்ன பாப்பு." என்றவன் அவளது தாடையை மெதுவாக தூக்கியபடி கேட்டான்.

"அதுல ஒரு இது இருக்குங்க." என்றாள் மென் புன்னகையோடு.

"அப்படினா?" என்றவனது குரலில் ஆர்வமும், இதழில் குறுகுறுப்பும் தொக்கி நின்றது.

"அது எப்படி சொல்லுவேன்."

"வாயாலதான் பாப்பு சொல்லனும்."

"எப்படிங்க. இப்படி மொக்கை போடுறீங்க. சரியான மொக்க மன்னன்." என்றாள் முறைத்துக் கொண்டே.

"சரி விடுங்க பாப்பு. சொல்லுங்க அந்த இதுனா என்னங்க...." என்றான் எள்ளலாக.

"இதுனா இது தான்." என்று அவனது பார்வையை சுட்டிக்காட்டியவள், "சும்மா கட்டி இழுக்குது." என்று ஒற்றை கண்ணடித்துக் கொண்டே, புன்னகைக்க, அவளது செயலில் மலர்ந்தான் பிரபஞ்சன்.

"அய்யோ என்னங்க வெட்கப்படுறீங்க?" என்றவள் உற்சாகத்தோடு கூற, அவளது மனமோ அவனின் வெட்கத்தில் மலரத்தான் செய்தது.

ஆண்கள் வெட்கப்படும் தருணம் தன் இணையிடம் மட்டுமே. சின்னதாக இருந்தாலும் அது பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும். அந்த அழகிய தருணங்களை ரசித்தாள் பெண்ணவள்.

"ஹே பாப்பு. நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? இந்த ஒரு நாளுக்காக தான் இத்தனை வருசம் காத்துகிட்டு இருந்தேன்."

"இத்தனை வருசமா? ஏன் அப்படி?"

"நடுத்தர வர்க்கத்து பசங்களுக்கு படிக்கும் போதே, பொறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமா கூடிடும். நம்ம குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரனும்னு வைராக்கியம் வரப்போ, உழைக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்படிதான் நானும்... ஓடிட்டே இருந்தேன். இதுக்கு நடுவுல காதலுக்கு நேரமே இல்லை. ஆனால் மனசுல ஆசைகள் இருந்துச்சு. என் வருங்கால மனைவியை உயிருக்கு உயிரா காதலிக்கனும். என் வாழ்க்கையில உணாராத காதலை அவள் மூலமா உணரனும்னு. அப்படி இருக்கப்போ முதன் முதலாக பார்த்தப்போவே பெரிய தாக்கத்தை கொடுத்தவள் நீதான் பாப்பு. நீ அன்னைக்கு சொன்னதுக்கு அப்புறம் சிகரெட்டே பிடிக்குறதை விட்டுட்டேன் தெரியுமா? என்றவனை வியப்பாக பார்த்தாள் பெண்ணவள்.

"பெயர் தெரியாத என் மேல நீ வெச்சிருந்த அந்த அக்கறை, ஏன் காலம் பூரா அனுபவிக்க கூடாதுனு தோணுனது எப்போனா... நீ ஆரூவை காப்பாற்றி அடிபட்டு இருந்தியே அப்போதான். உன் கையில அடிபட்டது பார்த்ததுமே துடிச்சு போயிட்டேன். அப்புறம் கடவுள் வசத்துல நம்ம கல்யாணம் இரண்டு வீட்டு சம்மதத்தோட நடந்தப்போ, மணவறையில நீ கல்யாணத்தை நிறுத்த சொன்னபாரு அந்த நொடி, என்னை உயிரோட கொல்ற மாதிரி இருந்துச்சு. இருந்தும் என் மனசு உன்னை விட்டுக் கொடுக்கலைடா. அதுனால தான் உரிமையோட தாலிக்கட்டுனேன். எப்படியும் என்னை நீ புருஞ்சுப்ப, என்னை நேசிப்பனு தான் ஒவ்வொரு நொடியும் காத்திருந்தேன். அது இன்னைக்கு நடந்திடுச்சு. இப்போ சொல்லு... என்னவிட சந்தோசமானவங்க இன்னைக்கு யாராவது இருப்பாங்காளா?" என்றவன் காதலோடு கூற, அவனது பூரிப்பைக் கண்டு அகம் மகிழ்ந்தவளோ, தாவி அவனை அணைத்துக் கொண்டாள்.

"நானும் இருக்கேனே. உங்களைவிட சந்தோசமா?" என்றவளது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிய, அதை உணர்ந்தவனோ, அவளது முகம் தாங்கி, கண்ணீர் வழியும் கண்களின் மீதே முத்தமிட்டான்.

"பாப்பு உனக்கு எப்படி என் பார்வை பிடிக்குமோ, எனக்கும் இந்த கண்களை ரொம்ப பிடிக்கும். அதுல பாசம், கோபம், அழுகை எல்லாமே பார்த்திருக்கேன். ஆனால் ஒன்னு மட்டும் எனக்கே எனக்கானதை பார்த்திருக்கேன்." என்றவனை ஆர்வமாக ஏறிட்டவளோ,

"அது என்னதுங்க?" என்றாள் சிரித்தமுகத்தோடு.

"அது என்னனா திமிர். என்னை ஆட்டிப்படைக்குற அந்த திமிர். அது எங்கிட்ட மட்டும் தான் நீ காட்டுவ. அதுனால எப்போதும் அந்த திமிர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் பாப்பு." என்றான் வசிகரிக்கும் புன்னகையை உதிர்த்தபடி.

"போங்க. திமிர ரசிக்குற ஒரே ஆள் நீங்க தான்." என்றவள் கடினப்பட்டே தன் முக சிவப்பினை மறைத்தாள்.

"கடலுக்குள்ள போயிட்டு வந்தனால ஒரு மாதிரி இருக்கு. நான்போய் குளிச்சிட்டு வரவா?" என்றவளுக்கு, வெட்கம் வேறு வந்த வண்ணமே இருந்தது.

"நானும் வரவா" என்றவனின் கேள்வியில் மேலும் சிவந்தவள்,

"அடி பின்னிடுவேன். ஒழுங்கா சமத்தா வெளிய இருங்க." என்றவள் முறைத்துக் கொண்டே செல்ல,

அவளது கைகளை பற்றியவனோ, "ப்ளீஸ்டி நானும் வரேன்." என்றவனது கெஞ்சலைக் கண்டு, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் பூவினி.

"அப்போ சரி முதல்ல நீங்க போங்க. நீங்க குளிச்சிட்டு வந்ததும் நான் போறேன்." என்றவள் அவனை இழுத்துக்கொண்டே குளியலறையில் விட்டவள், கதவினை வெளிப்புறம் தாழிட்டிருந்தாள்.

"இது எல்லாம் அநியாயம் பாப்பு."

"குளிக்குற வழிய பாருங்க." என்றவள் அடக்கப்பட்ட சிரிப்போடு வந்து மெத்தையின் மீது அமர்ந்துக்கொண்டாள்.

"காதல் இவ்வளவு அழகா இருக்குமா? என்னை உயிருக்கு உயிரா நேசிக்குறவரை எவ்வளவு கஷ்டபடுத்திட்டேன்ல. இனி அவரை எப்போதும் கஷ்டப்படுத்தக் கூடாது." என்று மனதில் உறுதி கொண்டாள்.

பின் அவன் வெளியே வந்ததும், அவனை ஏமாற்றி உள்ளே சென்றவள், குளித்து முடித்த பின்னரே வெளியே வந்தாள்.

சிவப்பு வண்ண பிளைன் சாரியில் தேவதையாக அவள் தலையை துவட்டிக்கொண்டு வர, இமை அகலாமல் பார்த்தான் பிரபஞ்சன்.

"ஏய் பாப்பு புடவையில கலக்குற?" என்றவனுக்கு பார்வை இம்மியளவு கூட அவளை விட்டு நகரவில்லை.

பதில் புன்னகை புரிந்தவள், எதுவும் பேசாமல் தலையை துவட்டிக் கொண்டிருக்க, மெல்ல அவளின் அருகில் வந்தவன், பூந்துவலையை வாங்கி, இதமாக துடைத்துவிட்டான்.

"யாழிக்கு இப்படி தான் நான் துடைச்சு விடுவேன்." என்றவள் புன்னகையோடு கூற, அவனோ பதில் புன்னகை பூத்திருந்தான்.

"என்ன ஸ்பெஷல் தூங்குற நேரத்துல சாரி?"

"அதுவா. கட்டனும்னு தோணுச்சு அதான்." என்றவளின் பதிலில் பெருமூச்சொன்றை விடுத்தான் பிரபா.

அவனுக்கும் அவள் மீது ஆசைகள் இருந்தாலும், காதலை தெரிவித்ததும் வலுக்கட்டாயமாக தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கவில்லை அவன். அவளது சம்மதத்தோடு தான் தாம்பத்ய வாழ்வினை தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் பிரபஞ்சன்.

"சரி பாப்பு தூங்குவோமா." என்றவன் கேட்க, அவளையே காதலோடு பார்த்தவள், "அதுக்குள்ளையா?" என்றாள் தவிப்பாக.

"உனக்கு டயர்டா இல்லையா பாப்பு?"

"இல்லை. இன்னைக்கு ரொம்ப நிறைவா இருக்கு. அங்கு தெரியுற முழு பௌர்ணமி மாதிரி." என்றவள் சாளரத்தின் வழியே தெரிந்த நிலாவினைக் காட்ட, அவனோ அவளை ரசனையோடு பார்த்தான்.

"அந்த நிலாவைவிட நீ ரொம்ப அழகா இருக்க பாப்பு. எங்க என்னையும் மீறி, உன் மேல பாஞ்சுடுவேனோனு பயமா இருக்குடி. அதான் தூங்கப் போகலாம்."

"நிச்சயமா மாட்டீங்க. அதுவும் நான் சொல்லாமல்." என்றவள் அவனது கழுத்தை வளைத்து பிடித்திருந்தாள்.

"அவ்ளோ நம்பிக்கையா?"

"ரொம்ப நம்பிக்கை. சோ எங்கிட்ட இருந்து உங்களை காப்பாற்றிக்கோங்க." என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டிருக்க, எதிர்பாராமல் அவளிடமிருந்து கிடைத்த முதல் முத்ததில் லயித்தவன், அவள் கூறும் பொருள் உணர்ந்த நொடி,

"அடியே... ரவுடி என்ன பேச்சு பேசுற நீ." என்றவாறே தன் புறம் அவளை இழுக்க, அவன் மார்பின் மீதே மோதினாள் பாவையவள்.

"இதுக்கு மேலயும் பேசுவேன். என்ன ரெடியா?" என்றவாறு அவனது காதோரம் கிசுகிசுக்க,

"அடிப்பாவி" என்று வாயை ஆவென பிளந்தவன், அதிர்ந்து நிற்க, அவனது மறு கன்னத்தில் முத்தமிட்டாள் பூவினி.

அதில் தெளிந்தவன் அவளை விழுங்கும் பார்வைப் பார்க்க,

"இது என்ன பார்வை?" என்றவள் சிணுங்க, அவளின் கரம் பற்றியவனோ,

"இது கா...." என்று இழுக்கும் முன்பே வாயை பொத்தியவள், "ஸ்சு. அமைதியா இருங்க." என்றாள் வெட்கத்தோடு.

"அடியே. அது இல்லைடி." என்றவன் அவளது கைகளை எடுத்துவிட்டு, "காதல் பார்வை." என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு.

"நீ என்ன நினைச்ச பாப்பு?" என்றவன் வேண்டும் என்றே சீண்ட, அவனது சீண்டலில் சிணுங்கியவளோ, "ஒன்னுமே நினைக்கலை. போங்க" என்றபடி அவனை தன்னிடமிருந்து பிரிக்கப் பார்த்தாள்.
 
Status
Not open for further replies.
Top