ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே - கதை திரி

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 7

பகலவன் தன் செங்கதிர்களை மெல்ல மெல்ல தனக்குள்ளே வாங்கிக் கொண்டபடி, நாளையப் பொழுதில் வருவதாய் மானசீகமாக கூறிக்கொண்டே பூமிதாயிடம் விடைபெற்று சென்றுக் கொண்டிருந்த மாலை வேளை அது. மாக்கோலமிட்ட வாசலில் வரிசையாய் உறவுகள் தத்தமது வண்டிகளிலும், மகிழுந்துகளிலும் வந்துக் கொண்டிருந்தனர். மண்டபத்திற்குள்ளே சுற்றி சுற்றி குழந்தைகள் அனைவரும் ஓட்டமும், ஆட்டமுமாக துள்ளித்திரிந்துக் கொண்டிருக்க, பெரிசுகள் அனைவரும் சுற்றி அமர்ந்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். பெரிதும் அல்லாமல் சிறிதும் இல்லாமல் நடுத்தரமான மண்டபம் அது.

வரும் சொந்தங்கள் அனைவரையுமே இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர் தாமரையும், தனலட்சுமியும். மாதுளாவும் விதுரனும் வரும் உறவினர்களை நலம் விசாரித்தபடி, நலங்கிற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

பச்சை நிற தாவணியில், தலை நிறைய மல்லிகை பூவோடு தன் தோழிகளோடு வலம் வந்துக் கொண்டிருந்தாள் யாழினி. முகம் முழுவதும் புன்னகையாய் இருக்க, புதிதாக பூத்த ரோஜா மலரை போன்றே காட்சியளித்தாள் அவள். தான் ஆசைப்பட்டது நடக்க போகின்ற ஆவல் ஒன்றே போதுமானதாக இருந்தது அவளது எல்லையற்ற மகிழ்ச்சிக்கு.

தங்கையவளோ எண்ணற்ற மகிழ்ச்சியில் இருக்க மணப்பெண் அறையிலிருந்த பூவினியின் நிலையோ வேறாக இருந்தது. நிலைக்கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தவளது எண்ணம், நடந்த ஒவ்வொன்றையுமே சிந்தித்துக் கொண்டிருந்தது. இளம் பச்சைநிற ரவிக்கை, அதில் கற்கள் பதிந்திருக்க இளஞ்சிவப்பு நிற பட்டுச்சேலையில் எளிமையான நகைகள் மட்டுமே அணிந்து பேரழகியாய் ஜொலித்திருந்தாள் பெண்ணவள்.

அந்நொடி சரியாக இரண்டு மாதம் முன்பு நடந்த நிகழ்வு அவள் கண்முன் வந்துச் சென்றது. "நான் மட்டும் விடாப்பிடியாக சொல்லியிருந்தால் இப்போ இது நடந்திருக்காதோ?" என்று உள்ளுக்குள் நினைத்தவளின் நினைவை ஆட்கொண்டிருந்தது அன்றைய நாள்.

சரியாக இரண்டு மாதத்திற்கு முன்பு,

"ப்ளீஸ் இந்த பேச்சை இத்தோட நிறுத்துறீங்களா?" என்று இரு கைகளையும் கூப்பிக் கொண்டு அவள் கேட்க அனைவரும் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தனர்.

தனலட்சுமியின் முகத்திலோ கவலை அப்பட்டமாக தெரிந்தது.
இடையில் குறுக்கிட்டவரோ, "அவ பதட்டத்தில இப்படி பேசுற. நீங்க யாரும் தப்பா எடுத்துக்காதீங்க." என்று கூறிக்கொண்டே தன் மகளை பார்த்தவர் "என்ன பூவினி? என்ன இது எல்லாம்?" என்னும் தாயின் குரலே காட்டியது அவரின் வருத்தத்தை.

ஒரு நொடியில் அவர்களது மகிழ்ச்சி காற்றோடு கரைந்து விட, அனைவரின் பார்வையும் ஏன் என்பது போல இவளைத் துளைத்தெடுக்க, அம்மாவின் கேள்வியில், சட்டென்று தான் முகத்தில் அடித்தார் போன்று கூறியது அவளது புத்திக்கு உரைத்தது. அடுத்த நொடியே மன்னிப்பை கேட்டாள் பூவினி.

"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்களை கஷ்டபடுத்தனும்னு அப்படி சொல்லலை. எல்லாமே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. ஒரு பக்கம் கை வலி என்ன. அதுலயும் எல்லாருமே கல்யாணத்தை பற்றி இவ்ளோ சீக்கிரமா பேசுறப்போ ரொம்ப குழப்பமாக இருக்கு. அது மட்டும் இல்லாமல் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லியே ஆகணும்." என்று தன் மென்குரலில் கேட்டாள்.

"புரியுதுமா. என்னடா இது நம்ம கைவலியோடு வந்திருக்கோம். ஆனால் எல்லாரும் கல்யாணம் அது இதுனு பேசிகிட்டே போறாங்க. நம்ம மனசுல என்ன இருக்குன்னு கேட்க கூட இல்லைனு நிறைய யோசனை உனக்குள்ள இப்போ தோன்றுதுனு மட்டும் தெரியுதுடாமா. உன் மனசுல இருக்கிறதை தாராளமா சொல்லுமா. உன் விருப்பத்தை தாண்டி நாங்க எதுவுமே பண்ண போறதில்லை." என்று உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் வெளியே அதைக்காட்டிக் கொள்ளாது தன்மையாகக் கூறினார் தாமரை.

"அப்பா போனதுக்கு அப்புறம், என் சந்தோசம் என் நிம்மதி எல்லாமே என் அம்மாவும் தங்கச்சியும் தான். யாழினி இப்போ காலேஜ் முதல் வருசம் படிக்குறாள். இப்போ என் சம்பளத்துல என் குடும்பத்தை என்னால பார்த்துக்க முடியுது. ஆனால் கல்யாணத்துக்கு பிறகும் என் குடும்பத்தை பார்த்துக்கனும்னு நினைக்குறேன். யாழினி தன் சொந்தக்கால்ல நிக்குற வரைக்கும் அவ படிப்பு செலவு பார்த்துக்குற பொறுப்பு எனக்கு இருக்கு. அதுக்கு அப்புறம் அம்மாவை பார்த்துக்கணும். இதுல உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருந்தால் இப்போவே சொல்லுங்க அம்மா." என்று தன் மனதில் இருந்த சந்தேகத்தை தெளிவு படுத்தும் விதமாக கேட்டே விட்டாள் பூவினி.

மாதுளாவும், தாமரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தனலட்சுமிக்குதான் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற கவலை அப்பட்டமாக தெரிந்தது அவரின் முகத்தில்.

பூவினியின் அருகில் வந்த தாமரையோ, " பையன் மட்டும் தான் தன்னோட குடும்பத்தை பார்த்துக்கணும்னு விதிக்கப்படாத சட்டம் எதுவும் இருக்கா என்ன? நீ வேலைக்கு போறது உன்னோட விருப்பம்மா. அதுல என்னைக்கும் நான் குறுக்க வர மாட்டேன். அதே மாதிரி அம்மா தங்கைச்சியே நீ பார்த்துக்காமல் யாரு பார்த்துப்பா. உனக்கு ஒரு உறுதி மட்டும் என்னால சொல்ல முடியும். பிரபா மருமகனா இல்லாமல் இந்த வீட்டு பையனா இருப்பான்" என்று புன்னகையோடு அவளது கைகளைப் பற்றிக் கொண்டு கூறியதில் தன் கண்களை ஆச்சர்யத்தில் விரித்தே விட்டாள் பூவினி.

இதுவரை வந்த வரன்கள் அனைத்துமே எந்த காரணத்தை இவள் கூறியதும், வேண்டாம் என்று ஒதுங்கினார்களோ, இங்கு அந்த காரணத்தை வரவேற்று தாமரைக் கூறும் போது ஒரு புறம் அதிர்ச்சியில் வாயடைத்து போய் தான் நின்றாள் பூவினி.

தாமரையின் அன்பில் கரைந்தவளுக்கு அவரிடம் கோபமாக சொல்லித் தவிர்க்கவும் மனம் வரவில்லை. எப்படியும் இந்த ஒரு காரணமே அவர் வேண்டாம் என்று கூறிவிடுவார் என்று நினைத்தவளை வாயடைக்கச் செய்து விட்டார் தாமரை. தனலட்சுமியின் மனமோ மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

பூவினியோ தாமரையைப் பார்த்து "திடீருனு சொல்லிட்டீங்க அம்மா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். வீட்டுல பேசிட்டு என் முடிவு சொல்றேன்" என்க.

'இவ்ளோ நல்லவிதமா அவங்க சொல்லியும் இவ இருக்காளே' என்று தலையில் அடிக்காத குறையாக ஒரு பார்வை பார்த்தார் தனலட்சுமி.

தாமரையோ, " தாராளமா யோசிச்சு சொல்லு பூவிமா. அப்புறம் ஒரு சின்ன திருத்தம், அடுத்த முறை பார்க்கும் போது அத்தைனு உரிமையா கூப்பிடனும். அதுலயே தெரிஞ்சுப்பேன் உனக்கு இதுல பரிபூரண சம்மதம்னு." என்று புன்னகையோடு கூறினார்.

அவரை பொறுத்தவரை தன் மகனுக்கு இவளை விட சிறந்த ஜோடி அமையாது என்ற எண்ணம் அவளை பார்த்ததுமே தோன்றிவிட்டது. தனக்காக யோசிக்காமல் தன் குடும்பத்திற்காக யோசிப்பவள் நிச்சயம் தன் புகுந்த வீட்டையும் நல்முறையில் வழி நடத்திச் செல்வாள் என்று ஆணித்தரமாக நம்பியது இந்த தாயின் உள்ளம்.

பின் அனைவரும் விடைப்பெற்று சென்று விட, சலிப்போடு தன் அறைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டாள் பூவினி.

"ஏன்டி உனக்கு என்ன தான் பிரச்சினை. அதான் நீ சொன்னதுக்குலாம் சம்மதம்னு சொல்லிட்டு போனாங்களே. இதுக்கு அப்புறம் உனக்கு என்ன கஷ்டம்?"

"அம்மா புரியாமல் பேசாத. முதல்ல எதுக்கு இந்த அவசரம். கல்யாணம்குறது யோசுச்சு பொறுமையாக பண்ண வேண்டிய விசயம். கொஞ்சம் அமைதியா இருமா நான் போய் படுக்குறேன் ரொம்ப தலைவலிக்குது." என்று கூறிக்கொண்டே சென்றவளுக்கு பிரபஞ்சனது முகமே கண்முன்பு தோன்றியது.

"அவன் மூஞ்சியும் அவனும். சிகரெட் பிடிக்குறான். ரொம்ப ஓவரா வழியுறான். இவனை போய் எப்படி கட்டிக்க முடியும்?" என்று தனக்கு தானேக் கேட்டுக் கொண்டவள் அதற்கு பதிலாக "நிச்சயமா முடியாது பூவினி. அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான். தாமரை அம்மாகிட்ட தன்மையா எடுத்து சொல்லிட வேண்டியது தான்" என்று கூறிக் கொண்டே தன் கண்களை மூடியவள் அவள் அறியாமல் உறங்கியே விட்டாள்.

"அக்கா செம அழகா இருக்க.. என் கண்ணே பட்டிடும்" என்று நிலைக்கண்ணாடி முன்பு அமர்ந்தவளது தோளை அவள் பிடித்து உலுக்கியதில் மீண்டு நிஜத்திற்கு வந்தவள் யாழியை பார்த்தாள்.

அவளது முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டு, ஒரு தமக்கையாய் மகிழ்ந்து தான் போனாள். "வாடி வாயாடி.... என்ன ஒரு சந்தோசம் என் யாழிக் குட்டிக்கு?" என்று கேள்வியாய் கேட்பவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தாள் யாழினி.

"இருக்காதா பின்ன என் அக்கா கல்யாணம் அதுவும் என் அத்தானோட."

'பொல்லாத அத்தான்' என்று மனதில் கடுகடுத்துக் கொண்டவள்,"போதும்டி யாழி உன் அத்தான் புராணம்" என்று முறைத்தே விட்டாள்.

"என்னக்கா பொசசிவ்னஸ் ஓவர் லோடட் போல." என்று கண்சிமிட்டியவளை முறைத்தவளோ, "வாய் ரொம்ப ஓவர் ஆகிடுச்சு உன்னை" என்று அடிக்க எழுந்ததுமே ஓடிச் சென்றவள் கதவோரம் நின்றபடி,

"நான் போய் அத்தானை பார்க்கப் போறேன். இப்போ என்ன பண்ணுவ?" என்று கண்ணடித்துக் கொண்டே வெளியே ஓடியேவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்த பூவினியோ " பிடிவாதக்காரி எப்படியோ அழுதே காரியம் சாதிச்சுட்டா" என்று சொல்லும் போதே அன்றைய நாள் நினைவு மீண்டும் கண் முன்பு வந்தது.

கல்லூரி முடிந்து வந்த யாழினியோ, "என்னமா அக்கா சீக்கிரம் வந்துட்டா போல?" என்று வெளியே கிடக்கும் அவளது காலணியை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கு கையில் கட்டோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பூவினி கண்ணில் பட, "அக்கா என்னாச்சு?" என்று தவிப்போடு ஓடிச் சென்றாள்.

முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டே அவளிடம் வந்த தனலட்சுமியோ நடந்தவற்றை சொல்ல, விழி விரித்து பார்த்தவள், "என்னமா சொல்ற? அக்கா இப்போ எப்படி இருக்கு? வலி எதுவும் இல்லையே?" என்று அவளது நிலையைக் கண்டதும் அழுதே விட்டாள்.

"ஏய் யாழி எதுக்குடி இப்படி அழுகுற ஒரு வாரத்தில சரியாகிடும். இப்போ வலி எதுவும் இல்லை. சரியா" என்று அவளது கண்ணீரை துடைத்துவிட்டு அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டாள் பூவினி.

"யாழினி அழுதது போதும். கல்யாணத்துக்கு சம்மதிக்க, உங்க அக்காக்கு எடுத்து சொல்லு?" என்று தனலட்சுமி கூறினார்.

"அம்மா அக்கா இப்படி அடிபட்டு வந்திருக்கா. இப்போ எதுக்கு கல்யாணம் அது இதுனு பேசிட்டு இருக்க? இதுக்கு தான் மூஞ்சியை தொங்கப் போட்டுட்டு இருக்கியா?" என்று யாழினி கேட்டதுமே பூவினியோ "அப்படி கேளுடா யாழிமா. அம்மா சொன்ன புருஞ்சுக்க மாட்டிங்குறாங்க". என்றாள்.

"ஏன்டி சின்ன கழுதை உங்க அக்காக்கு நல்லது நடக்கனும்னு எண்ணம் இருக்காடி உனக்கு. அவளே எப்படிடா இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லலாம்னு காத்துட்டு இருக்கா." என்று தனலட்சுமி கூறியதிலே தெரிந்தது அவரது ஆதங்கம்.

"அப்படி எல்லாம் இல்லைமா. நம்ம விசாரிச்சு பண்ணனும். இவ்ளோ அவசரமா முடிவு எடுக்கக் கூடாது. ஆமா அந்த மாப்பிள்ளை போட்டோ இருக்கா?"

"அது எதுக்குடி யாழி கேட்குற? சொல்ற அளவுக்கு வொர்த் இல்லை" என்று பூவினி கூற,

"ஏன்டி வாய்க்கூசாமல் சொல்ற?" என்று மூத்தவளை முறைத்து இளையவளைப் பார்த்தவர், "யாழினி, அந்த டேபிள் மேல மாப்பிள்ளை போட்டோ இருக்கு பாரு. நல்லா இருக்காருடி உங்க அக்காக்கு ரொம்ப பொருத்தமாக இருப்பாரு" என்றார் தனலட்சுமி பெருமிதமாக.

"அம்மா நான் பார்த்து ஓகே சொன்னா தான் கல்யாணமே." என்று கூறிக்கொண்டே அன்னநடை போட்டு சென்றவள் டேபிளின் மீதிருந்த பிரபஞ்சனது போட்டோவினை எடுக்க, அதைக் கண்டதுமே வாயடைத்து போனவளின் மனமோ, 'அய்யய்யோ ஹேண்ட்சம் சார் தான் மாப்பிள்ளைனு தெரியாமல் ரொம்ப ஓவரா பேசிட்டேனே. இப்போ எப்படி அக்காவை சம்மதிக்க வைக்குறது' என்று திருதிருவென விழித்தவள் நேராக சென்று தன் அக்காவின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்தே விட்டாள்.

"என்னடி பண்ற? இப்படிலாம் பண்ண மாட்டியே? என்னடி புதுசுபுதுசா பண்ற?"

"அய்யோ அக்கா எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. அவரைக் கட்டிக்கோ அக்கா"

"இப்போ தானடி எனக்கு சப்போர்ட் பண்ணுன? அதுகுள்ள எப்படி யாழி மாறுனா?"

"அக்கா அப்போ இவருனு தெரியாதுல. அப்புறம் நேத்து நான் சொன்னேன்ல ஹேண்ட்சம் சார் அது இவரு தான். இன்னைக்கு கூட எங்க சீனியர்கிட்ட இருந்து காப்பாற்றி உதவி எல்லாம் பண்ணாரு."

"அதுக்கு நான் என்ன யாழி பண்ண முடியும்?" என்று அவள் சொல்லும் போதே இடையில் குறுக்கிட்டார் தனலட்சுமி.

"என்ன யாழி சொல்ற ? மாப்பிள்ளையை முன்னமே தெரியுமா?" என்று ஆச்சர்யத்தில் விழி விரித்தார்.

பட்டென்று எழுந்தவள் நடந்தவற்றை மிகைப்படுத்திக் கூற, தனலட்சுமிக்கு பிரபஞ்சனின் மீது மேலும் நன்மதிப்புக் கூடியது.

மூத்தவளைப் பார்த்தவர், "உன் கூடப் பிறந்தவளே சொல்றா? இதுக்கு மேல உனக்கு என்ன விசாரிக்கணும் பூவினி. காலையில சொன்னல்ல நல்ல பையனா இருந்தால் கல்யாணம் பண்றனு. பார்த்துட்டேன்டி நல்ல பையனை. இப்போ சொல்லு?" என்றார் தனலட்சுமி மிக தீவிரமாக.

"அம்மா உங்க எல்லாருக்குமே பிடிச்சிருக்கு ஆனால் எனக்கு பிடிக்கணும்லம்மா. என்னை பத்தி கொஞ்சம் யோசிங்க" என்று சொல்லியவள் கோபமாக தன் அறைக்குள் சென்றாள்.

"பேசிபேசியே எல்லாரையும் நம்ப வைப்பான் போல." என்று தன் மொத்த கோபத்தையும் பிரபஞ்சன் மீதே திசைதிருப்பியிருந்தாள் பூவினி. அடுத்தடுத்த நாட்களில் யாழியும் தனலட்சுமியும் தங்களது விருப்பத்திலிருந்து கீழ் இறங்கி வராமலே போக, கடைசியாக தனலட்சுமி கலங்கியதைக் கண்டவள் தன் மனதை மாற்றிக் கொண்டு திருமணத்திற்கும் சம்மதித்திருந்தாள். தாய் பாசமும், தங்கை பாசமும் அவளது இரும்பு இதயத்தை அசைத்துவிட்டு சென்றது.

அன்றைய நினைவைக் கலைத்தவள் நிஜத்திற்கு திரும்பி, இனி இது தான் தன் வாழ்க்கை, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று நினைத்திருக்கும் போதே வெளியே பிரபஞ்சனின் நண்பர்களது பேச்சு சத்தம் தெளிவாய் கேட்டது.

"ஏய் மச்சி. நேத்து பிரபா வெச்ச ட்ரீட் செமடா. இதோ இவன் இருக்கான்ல போதையில ஒரே புலம்பல் பொண்டாட்டி தொல்லை தாங்கலைனு ஒரே அழுகை."

"டேய் அடுத்து பிரபாவுக்கு இது தான்டா நடக்கப் போகுது. அவனும் நம்மகிட்ட புலம்ப போறான்." என்று மற்றொருவன் கூறிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்தான் மூன்றாமவன்,

"டேய் டேய் உனக்கு அப்படி ஆச்சுனா அவனுக்கு அப்படி ஆகுமா. அவன் கல்யாணத்துக்கு அப்புறம் துபாய் போய்டுவான். நம்மளை பார்க்கக் கூட நேரமிருக்காது. இதுல வந்து புலம்பிட்டு தான் மறு வேலை பார்ப்பான் போங்கடா டேய்" என்று கூறினான்.

அதற்குள் அங்கு வந்திருந்த குமரனோ, "டேய் இங்க என்ன பண்றீங்க? அங்க ஏகப்பட்ட வேலையிருக்கு. வாங்கடா" என்று கூறிக்கொண்டே அழைத்துச் சென்றான்.

அவர்களது உரையாடல் அனைத்தும் சன்னலின் வழியே நன்கு கேட்க, அதைக் கேட்ட பூவினியோ அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றவள், "அப்போ இவனுக்கு குடிக்குற பழக்கமும் இருக்கா? அதைவிட கல்யாணத்துக்கு அப்புறம் துபாய் போறது பத்தி யாருமே எங்கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லலை. அப்போ பிளான் பண்ணி சம்மதிக்க வெச்சிருக்காங்க போல இவங்க வீட்ல. இந்த கல்யாணம் நடந்தால் என் குடும்பத்தை என்னால பார்த்துக்க முடியாது. அதே சமயம் நானே நேரடியா இந்த கல்யாணத்தை நிறுத்தவும் முடியாது. அவருகிட்ட பேசி நிறுத்த சொல்லுவோம். இந்த கல்யாணம் நடக்கக் கூடாது" என்று தனக்கு தானே முடிவை எடுத்திருந்தாள் பூவினி.

அதே சமயம் மணமகன் அறையை நோக்கி சென்றிருந்தாள் யாழினி. "மணமகனின் அறை." என்று சத்தமாக உச்சரித்த யாழினியோ , "அத்தான் உங்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க இதோ வரேன்" என்று கூறிக்கொண்டே மெதுவாக கதவை திறந்து பார்த்தாள். அங்கு முதுகைக் காட்டிக்கொண்டு நிற்பவனைக் கண்டவள், 'நல்லவேளை அத்தான் மட்டும் தான் இருக்காரு. போய் பயப்படுத்திடுவோம்.' என்று சத்தமே இன்றி மெல்ல பூனைப்போல அடியெடுத்து வைத்தாள்.

"ப்பே..." என்று அவனருகே சென்று அவள் கத்தியதும், பெண்ணவளின் செயலில் வெடுக்கென்று திரும்பியவன் கையை ஓங்கியபடி படாரென்று அறைந்திருந்தான் யாழினியை.

அதை சற்றும் எதிர்பார்க்காதவள் ஒரு நிமிடம் பொறிக்கலங்கி போய் கண்களில் இப்பவோ அப்பவோ விழக் காத்திருந்த விழி நீரோடு தன் கண்களை அகல விரித்து பார்த்தவள் அங்கு நின்றவன் பிரபஞ்சன் இல்லை என்று தெரிந்தநொடி அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றிருந்தாள்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
🍃 8🍃

அவனோ சட்டென்று கோபத்தில் தன் நண்பர்கள் என நினைத்திருக்க, தன் முன்பு நின்றிருந்த யாழினியைக் கண்டதும் அவளது அழகில் மெய்மறந்து தான் போயிருந்தவன், தான் அடித்ததால் சிவந்திருந்த அவளது கன்னத்தை பார்த்து, " ஐ அம் ரியலி சாரி" என்று கூறிக்கொண்டே தொடச் செல்ல அவனது கைகளை பட்டென்று தள்ளிவிட்டிருந்தாள் யாழினி.

"யார் நீ? எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்னை அடிச்சிருப்ப? இரு எங்க அத்தான்கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றனு மட்டும் பாரு." என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.

கோபத்தில் மூக்கு சிவக்க, தன் மையிட்ட கண்களை உருட்டிக் கொண்டு பேசுபவளை வெகுவாக இரசித்தவனோ, "ஏய் பாப்பா எதுக்கு இவ்ளோ கோபம்? அடிச்சதுக்கு மருந்து வேனா வெச்சு விடட்டா?" என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.

"ஏய் என்ன பாப்பா? மணமகன் ரூம்ல நீ என்ன பண்ற? எங்க மாப்பிள்ளை?" என்று தைரியத்தின் மறுஉருவமாய் அவள் கேட்க, அவளது தைரியத்தை ரசித்தவனோ,

"அதே தான் நானும் கேட்குறேன். நீ இங்க என்ன பண்ற?" என்று அவளை போலவே கேட்டான்.

"இது என் அத்தான் ரூம்" என்றாள் வீராப்பாய்.

"இது என் அண்ணன் ரூம்" என்றான் அவனும் சலிக்காமல். அவன் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே அறைக்கதவை திறந்துக் கொண்டு பிரபஞ்சன் வர, ஏற்கனவே அவன் கூறியதில் அதிர்ச்சியில் இருந்தவள் பிரபஞ்சனைக் கண்டதும் "அத்தான்." என்று கூறிக்கொண்டே அவனிடம் சென்றாள்.

"ஏய் யாழிமா. இங்க என்ன பண்ற?" என்று வாஞ்சையோடு கேட்டான் பிரபஞ்சன்.

"அத்தான் உங்களை பார்க்கத் தான் வந்தேன். ஆமா இவரு யாரு? நிஜமாவே உங்க தம்பியா?"

"ஆமா யாழிமா. என் தம்பி. நிச்சயத்தப்போ இவனுக்கு லாஸ்ட் எக்சாம் இருந்துச்சு அதுனால தான் வரலை. தென்னவா இவ தான் யாழினி பூவினியோட தங்கச்சி. என் செல்ல மச்சினிச்சி" என்று பெருமையாக அறிமுகம் செய்து வைத்தான் அவன்.

'பேரை பாரு தென்னமரம் பனைமரம்னு' என்று மனதிற்குள் கடிந்துக்கொண்டே அவனை உருத்து விழித்தாள் பெண்ணவள்.

"நைஸ் டூ மீட் யூ யாழினி." என்று அழுத்தமாக கூறியவன் கைகளை அவள் புறம் நீட்ட, ஒரு முறைப்பை பரிசளித்தவள், பதிலுக்கு கைகளை நீட்டாது, "எனக்கு நேரமாச்சு அத்தான் நான் கிளம்புறேன்." என்று பிரபஞ்சனைப் பார்த்து இன்முகமாய் கூறியவள் தென்னவனைப் பார்த்து முகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டேச் சென்றாள்.

"சூப்பர் அத்தானுக்கு, எப்படி இப்படி திமிரு பிடித்த தம்பி கிடைச்சான்? பச்சை புள்ளை என்னை போய் பளார்னு அறையுறான் பாரு, பைத்தியக்காரன்." என்று புலம்பித் திட்டிக் கொண்டே இவள் சென்றதில், தண்ணீர் அருந்திய தென்னவனுக்கு மூக்கில் தண்ணீர் ஏறி பொறை ஏறியது.

"ஏய் பார்த்து தண்ணீ குடி. யாரோ உன்னை நினைக்குறாங்க போலடா." என்று பிரபஞ்சன் கூறும்போதே, "திட்டுறாங்க அண்ணா" என்றவாறு, அவளை அடித்த தன் கைகளை ஒரு முறை பார்த்துக் கொண்டவனது முகத்தில் ஒரு வித பரவசம் தோன்றி மறைந்தது.

தென்னவன், நல்ல உயரம், தன் அண்ணனை போன்றே கூர்மையான பார்வை, மாநிற தேகம் உடையவன். பொறியியல் இறுதியாண்டிற்காக எழுத்துத் தேர்வை முடித்துக் கொண்டு நேரடியாக தன் அண்ணாவின் திருமணத்திற்காக வந்திருப்பவனை முதன் முறையாக பார்க்கிறாள் யாழினி. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல இருவருக்கும் இடையில் தோன்றிய பனிப்போரின் தாக்கம் உயருமா வீழுமா என்பது அந்த கடவுளுக்ககே வெளிச்சம்.

மணமகள் அறையில் அமர்ந்திருந்த பூவினிக்கோ பல யோசனைகள் தோன்றியது. விருப்பமின்றி சம்மதித்த பூவினிக்கு வகையாக கிடைத்த இந்த காரணம், ஒன்றே போதுமானதாக இருந்தது இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக. அவனிடம் தனிமையில் பேசிவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள் அவள்.

இரவு ஏழு மணியளவில் மணமகனுக்கும் மணப்பெண்ணிற்கும் உண்டான நலங்கு வைக்கும் சம்பிரதாயம் நடக்கவிருந்தது. பட்டு வேஸ்டி சட்டையில் தனக்கே உரிய கம்பீரத்தோடு வந்தமர்ந்திருந்தான் பிரபஞ்சன். அவனது பெற்றோர் தொடங்கி வரிசையாக அவனுக்கு நலங்கை வைத்துக் கொண்டிருந்தனர்.

குழைத்த சந்தனத்தை மூன்று விரல்களால் எடுத்து கன்னத்திலும், கைகளிலும் தடவி, பின் அதன் மீதே குங்குமத்தை தடவி, அதன்பின்னர் மஞ்சள் கலந்த அரிசியை அவனது கைகள், தோள்பட்டை தலையில் என மூன்று முறை அட்சதைப் போல தூவினர். பின் வெற்றிலையில் காசினை வைத்து மணமகனது கைகளில் கொடுத்துவிட்டு சென்றனர். இதே போல் வரிசையாக நடக்க,

துள்ளிச் சென்ற யாழியோ "இப்போ நானு" என்று கூறிக்கொண்டே சந்தனத்தை அழகாய் எடுத்து வைத்துவிட, அவளது செய்கையைக் கண்டு கண்களை சிமிட்டினான் பிரபஞ்சன்.

"அத்தான் செம க்யூட்டா இருக்கீங்க." என்று கன்னகுழி விழ அவள் சிரித்ததில் "நீயும் செம க்யூட்டா இருக்க யாழிமா." என்று அவன் கூறியதுமே,

"எனக்கு இது போதும், எனக்கு இது போதும்." என்று சிவாங்கியைப் போல கூறியவள் சிரித்துக் கொண்டே செல்ல, அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தென்னவன். தென்னவனைக் கண்டதும் முறைத்தவள் உதட்டை சுளித்துக் கொண்டு அவனைத் தாண்டி வேகவேகமாக சென்றிருந்தாள்.

செல்லும் போதே அவளது மனதில் ஒரு யோசனை எழ, திரும்பி வந்தவள் தென்னவனுக்கே தெரியாமல் அவனது சட்டையிலேயே தன் கைகளை நன்கு துடைக்க எண்ணியவள், 'என்னையவா அடிக்குற? இப்போ பாரு.' என்றவாறு கைகளில் ஒட்டியிருந்த மொத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் துடைத்து ஒரு வழி செய்துவிட்டே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

அவனைப் பார்த்துக் கொண்டே சென்றவள் எதிரேவந்த குமரனை கவனிக்க தவறியிருக்க,
அவனைக் கண்டதும் அதிர்ந்த யாழியோ, 'ஒருவேளை இவங்க பார்த்திருப்பாங்களோ' என்ற சந்தேகத்தோடு திருதிருவென விழித்தாள்.

"ஏய் இம்சை இங்க என்ன பண்ணிட்டு இருக்க? நீ முழிக்குற முழியே சரியில்லையே." என்று அவன் கூறியதும் தான் நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தாள்.

அவள் மனமோ 'நல்லவேளை தப்பிச்சடி யாழி' என்று நினைத்துக்கொண்டே
"அண்ணா உங்களைத் தேடி தான் வந்தேன். அத்தான் உங்களை கூப்பிட்டாங்க நலங்கு வைக்க.. சீக்கிரம் போங்க. " என்று பொய் சொல்லி சமாளித்தவள் குடுகுடுவென்று ஓடியே விட்டாள்.

"என்னது என் பிரபா என்னை கூப்பிட்டானா! இதோ போறேன்." என்று சிட்டாய் பறந்தபடி, பிரபஞ்சன் முன்பு சென்று நின்றிருந்தான் குமரன்.

"டேய் பிரபஞ்சா. நான் உனக்கு நலங்கு வைக்கணும்னு அவ்ளோ ஆசையாடா மச்சான் உனக்கு. இதோ வந்துட்டேன்." என்றவனை வினோதமாக பார்த்தவன்,

"நீ வெக்கலைணு யாருடா இங்க அழுதா? சந்தனம் தீர்ந்திருச்சு போய் எடுத்துட்டுவா" என்றான் நலங்கு வைத்த பாட்டிக்கு வணக்கம் வைத்துக் கொண்டே.

தன் நண்பன் சொன்னதைக் கேட்டதுமே நெஞ்சில் கைவைத்துக் கொண்டவன் "பிரபஞ்சா" என்று அடி நெஞ்சிலிருந்து கூற,

"டேய் குமரா இங்க என்னடா பண்ற? பாத்ரூம் அங்க இருக்கு போ" என்று சொன்னதும்,

"எது பாத்ரூமா. என் எமோஷன் எப்போ உனக்கு லூஸ்மோஷனா தெரிஞ்சுதோ இன்னையோட நம்ம பிரண்ட்சிப் கட்டு கட்டு கட்டு...." என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே,

"யாரு பெத்த புள்ளையோ இப்படி தனியா புலம்பிக்கிட்டு இருக்கு." என்று அந்த பாட்டிக் கூற அப்போது தான் பார்த்தான் அங்கிருந்த பிரபஞ்சன் எப்போதோ சென்று விட்டான் என்று.

"கிரேட் இன்சல்ட்." என்று கூறிக்கொண்டே அங்கிருந்து சென்றிருந்தான் குமரன்.

அதன்பின்னர் மணப்பெண்ணை அழைத்து அவளுக்கான நலங்கு வைக்கப்பட்டுக் கொண்டிருக்க, மாடியிலிருந்தே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன். வெள்ளைக் கல் பதித்த நகைகளில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் பூவினி.

வில்லாக வளைந்த புருவம் நடுவே கல் பொட்டு. அழகிய அவளது சிறு மூக்கில் அழகாய் வீற்றிருக்கும் மூக்குத்தி, சிவந்த தேனூறும் அவளது அதரங்கள், அதில் சிறு புன்னகை என மிளிர்ந்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு. அந்த கன்னங்களில் பூசப்பட்ட சந்தனமாய் மாறிவிடக்கூடாதா என்று துடித்தது அவனின் இதயம். மிகவும் கடினப்பட்டே அவள் மீதிருந்த தன் பார்வையை அகற்றியிருந்தான் பிரபஞ்சன்.

"கொல்றடி பூவி. உன்னை இப்போவே தூக்கிட்டு போய்டலாம்னு இருக்கேன்" என்று வாய்விட்டு கூறியவன் தனக்கே உரிய வசீகர புன்னகையை உதிர்த்துக் கொண்டே தலையைக் கோதினான்.

பின் நலங்கு வைத்து முடிந்ததுமே, அவர்களது குடும்பத்தில் மூத்த பெண்மணி ஒருவர் அவளது கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அணிவித்துவிட்டார். அதன்பின்னர் மஞ்சள் கயிறுகள் ஒரு கொத்தாய் சேர்த்து அவளது கழுத்தில் போட்டு விட்டனர் இந்த சம்பிரதாயம் ஒன்றே பறைச்சாற்றியது பாதி திருமணம் நடந்துவிட்டதை. பின் தாமரையும் தன் மருமகளுக்காக வாங்கி வந்திருந்த தங்க சங்கிலியை பரிசாக போட்டு விட்டவர் அவளது தலையை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தார்.

அதன்பின்னர் அவளை மாடியில் உள்ள மணப்பெண்ணின் அறைக்கு அழைத்து வந்திருந்தாள் யாழினி. அங்கு சென்றதிலிருந்து பூவினியின் கண்கள் பிரபஞ்சனைத் தேடிக்கொண்டே தான் இருந்தது. சம்பிரதாயப்படி இருவரும் பார்க்கக் கூடாது என்பதற்காக அவனை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டனர் என்பது அவள் அறியவில்லை. ஆனால் அவனோ அங்கிருந்து எட்டி எட்டி இவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் என்பதையும் இவள் அறியவில்லை. அறிந்திருந்தாலாவது அவனின் காதல் புரிந்திருக்குமோ என்னவோ?

இனிமேல் திருமணத்தை நிறுத்துவது என்பது நடக்காத ஒன்று என்ற நிதர்சனம் அவளுக்கு புரிந்தாலும் கூட ஏனோ விருப்பம் இன்றியே அமர்ந்திருந்தாள். இரவு உணவு கூட விருப்பம் இல்லாமல் உண்டவளின் தூக்கம் எங்கோ ஓடி விட, அனைவரும் உறங்கிய பின்பு, மணமகள் அறையிலிருந்து வெளியே வந்தாள் பெண்ணவள்.

"பேசாமல் அவங்ககிட்ட எல்லாம் சொல்லலாமா? சொன்னா எதாவது பிரச்சினை நடக்குமா?" என்ற கேள்வியில் உலாவிக் கொண்டிருந்தவளது எண்ணவோட்டத்தைக் கலைத்தது அந்த குரல். அது அவனின் குரல். அவனது குரலைக் கேட்டதுமே பட்டென்று திரும்பியவள் அந்த இருளிலும் அவனையே பார்த்தாள் இமைகளை இமைக்காமல்.

"இங்க என்ன பண்றீங்க பூவினி. தூங்கலையா?"

"அது தூங்கணும். நீங்க தூங்கலையா?"

"தூங்கணும். ஏனோ உங்களை பார்க்கணும் போல இருந்தது. உங்க நம்பர் கூட என்கிட்ட இல்லை. இதுவரை நம்ம சரியா பேசுனது கூட இல்லையா? அதான் இன்னைக்காவது பேசலாம்னு தோணுச்சு."

"ம்ம்ம் ஆமா. நானும் பேசணும். சொல்லுங்க நீங்க என்ன சொல்ல வந்தீங்க?"

"உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? என்னடா இவன் இப்போ கேட்குறானேனு நினைக்க வேண்டாம். அம்மா சொன்னாங்க நீங்க அத்தைனு கூப்பிட்டு உங்க சம்மதத்தை மறைமுகமாக சொல்லிட்டீங்கனு. நிச்சயத்தப்போ கேட்கனும்னு நினைச்சேன். ஆனால் தனியா பேசுறதுக்கான சந்தர்ப்பம் அமையவே இல்லை. அதான் இப்போ கேட்கிறேன்."

'நல்ல சந்தர்ப்பம் பூவினி, மனசுல இருக்கிறதை சொல்லிடு.' என்று தீவரமாக யோசித்தவள் தன் முடிவைக் கூற நினைக்கும் போதே யாரோ வரும் சப்தம் கேட்க, பட்டென்று அவனது கைகளை பற்றியவள் அங்கிருந்த தூணிற்கு பின்னே அவனை இழுத்துச் சென்றாள்.

அவளது தீண்டல் அவனை மோனநிலைக்கே எடுத்துச் செல்ல மெய்மறந்து தான் போனான் இந்த ஆடவன்.

"யாரோ வராங்க." என்று கிசுகிசுப்பாய் வந்தது அவளின் வார்த்தைகள். சத்தம் கேட்கக்கூடாது என்று அவள் மெதுவாக கூறியது இவனுக்கு தான் கிசுகிசுப்பாய் தோன்றியது.

'அதுவும் நல்லது தான்.' என்று நினைத்தவனது கைகள் பட்டும் படாமல் அவள் மீது உரசிக் கொண்டிருந்தது. அவர்கள் கடந்து சென்றதும் தான் தன் மூச்சை விடுத்தவள் அவனைப் பார்க்க, அவனோடு நெருக்கமாக நிற்கிறோம் என்பதை உணர்ந்த நொடி மூச்சு முட்டி தான் போனது அவளிற்கு.

எச்சிலை விழுங்கியவள் "அது வந்து நான் உங்ககிட்ட" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தனலட்சுமி தண்ணீர் குடிக்க எழுந்தவர் மகளை காணாததால் பதட்டத்தோடு "பூவினி.." என்று அழைக்க, அவரது அழைப்பு வந்த சப்தம் கேட்ட நொடி "அம்மா" என்று கூறிக்கொண்டே அவனிடமிருந்து விடைபெற்று அறைக்கு சென்று விட்டாள் பூவினி.

அவளின் அந்த நெருக்கம், அவளுடன் பேசிய இந்த தருணங்கள் ஒவ்வொன்றையும் இரசித்தவன், அதே மகிழ்ச்சியில் தனது அறைக்கு சென்று உறங்கிவிட்டான்.

பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படும் அதிகாலை வேளைதனில் அனைவரும் பரபரப்பாய் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தனர். மாதுளா ஆரூவை எழுப்பி பட்டுப்பாவடை சட்டை போட்டுவிட்டுக் கொண்டிருந்தாள்.

விதுரனோ, "டேய் மகனே எழுந்திரிடா" என்று அகனியனை எழுப்ப போராடிக் கொண்டிருக்க,

மாதுளாவோ, "என்னங்க இன்னுமா அவனை எழுப்பல. பாருங்க ஆரூக்குட்டி கூட தயாராகிட்டா" என்று கூறிக்கொண்டே மல்லிப்பூவை சிறிது வெட்டி ஆரூவின் தலையில் வைத்துவிட்டாள்.

யாழினியோ மூன்று மணிக்கே எழுந்தவள் நீல நிற ரவிக்கை பாவடை, இளஞ்சிவப்பு நிற தாவணி என வேலைப்பாடுகள் நிறைந்த தாவணி பாவடையில் தேவதை போல் இருந்தாள். தன் நீண்ட கூந்தலை வலது புறமாக எடுத்து பின்னலிட்டுக் கொண்டவள், முகத்தில் சிறு ஒப்பனைகளுடன், உடைக்கு ஏற்றவாறு கல் பதித்த ஆபரணங்களை அணிந்திருந்தபடி தன் அக்காவை நோக்கிச் சென்றாள்.

"அக்காக்கு நல்லா மேக்கப் போட்டு விடுங்க" என்று கூறிக்கொண்டே தன் அக்காவிடம் வர, நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தை பார்த்து வாயடைத்துதான் போனாள் யாழி.

"பூவே என் அக்காவே அட அட இது தான் கல்யாண கலையா? ரொம்ப அழகா இருக்க. நிச்சயம் உன்னை பார்க்குற என் அத்தான் பிளாட் தான் இன்னைக்கு" என்று கூறிக்கொண்டே கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள் பூவினியின் கன்னத்தில்.

அதில் இதழ் வளைத்து புன்னகைத்தவள், "என் யாழியை விடவா?" என்று கண்ணடிக்கும் தன் அக்காவை பார்த்து, "ஒத்துக்குறேன் பேபிமா. ஆனால் இன்னைக்கு நீ தான் அழகு. அதுவும் பேரழகு." என்று தன் கன்னக்குழி விழ சிரித்தாள் யாழினி.

மாம்பழ நிற பட்டுபுடவை முழுவதும் தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருக்க, பச்சை நிற ரவிக்கையில் மயில் ஜரிகை என அவளுக்கே பொருந்தி இருந்தது அந்தப் புடவை. அதற்கு ஏற்றார் போல் பச்சைக்கல் பதித்த ஆபரணங்கள் நெற்றியில் தொடங்கி, கழுத்து, கைகள் இடுப்பில் ஒட்டியாணம் என பாந்தமாக பொருந்தியிருந்தது. மல்லிகை பூச்சரம் பல அடுக்குகளாக தலையை அலங்கரிக்க தேவதையாய் ஜொலித்தவள் யாழினி சொன்னதைப் போல பேரழகியாகத் தான் மிளிர்ந்தாள்.

அவளைக் கண்டதும் தாயின் உள்ளம் ஆனந்த கண்ணீரில் நிறைந்தே விட்டது. தன் இரு மகள்களுக்கும் திருஷ்டி கழித்தவர் இருவரையும் தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.

அதே சமயம், அய்யர் மணமகனை அழைத்து வரச் சொல்ல, பட்டு வேஸ்டிச் சட்டையில், கழுத்தில் விதுரன் அணிவித்த மாலையை சுமந்துக் கொண்டு முறுக்கிவிடப்பட்ட மீசையில், கம்பீரமாக மணவறைக்கு வந்தமர்ந்தவன், வந்திருந்த உறவுகளைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்திருந்திருந்தான் பிரபஞ்சன். அவனது மீசைக்குள் மறைக்கப்பட்ட மேல் உதட்டை வளைத்து அவன் சிரிக்க அந்த சிரிப்பினைக் கண்டு மயங்காதவர்களே அங்கு இல்லை.

குமரனோ மணமேடையில் அமர்ந்திருந்தவனை விளையாடும் விதமாக சீண்டிக் கொண்டிருந்தான் "அப்புறம் மச்சான் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டே, இப்போ கல்யாணம் பண்ண போற? அடுத்து என்ன பிளான்?" என்று அவனது காதோரம் கேலி செய்ய, அவனது தொடையை நறுக்கென்று கிள்ளினான் பிரபஞ்சன்.

"இப்படி ஓவரா பேசுன மவனே உன்னை போட்டுத் தள்ளுறது தான் என்னோட அடுத்த பிளான்." என்றவன் "வசதி எப்படி?" என்ற தோரணையில் புருவத்தை தூக்கி கேட்டதில் தன் கைகளால் தன் வாயை மூடிக் கொண்டவன். "இனி பேசுனா என்னை என்னென்னு கேளு?" என்று செய்கை செய்தபடி அங்கிருந்து எழுந்துச் சென்றான்.

அவனது செயலை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன், எதேச்சையாக திரும்ப அவனது கண்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்காகவே மஞ்சள் வண்ண பட்டுச்சேலையில் தங்கச்சிலை போல வந்துக் கொண்டிருந்தாள் பூவினி.
அவளது அழகில் மெய்மறந்து லய்த்திருந்தவனை அவனது முதுகில் ஒரு போடு போட்டபடி சரிசெய்தார் அவனது அக்கா மாதுளா.

"டேய் பிரபா என்னடா பண்ற? ஐயரை பாரு உன்னை மந்திரம் சொல்ல சொல்லிட்டு இருக்காரு. நீ என்னடானா இப்படி அசடு வழிஞ்சிட்டு இருக்க?" என்று அவனுக்கு கேட்கும் வண்ணம் குனிந்தவள் கூறினாள்.

"சாரிக்கா." என்றவன் தலையை கோதியபடி ஐயர் சொன்ன மந்திரங்களை புயல் வேகத்தில் கூற, பொறுமை இழந்த ஐயரோ "மாப்பிள்ளைக்கு அப்படி என்ன அவசரம்? பிளைட் எதாவது காத்துண்டு இருக்கா?" என்று கூறியதில் மணமேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

' இந்த ஐயர் நக்கல் பண்ணி கடுப்பேத்துறானே' என்று சிடுசிடுத்தவன் அவரை பார்த்து, "என்ன ஐயரே சட்டுபுட்டுனு எங்களுக்கு முடிச்சுட்டு போனால் தானே எதிர்த்த வீட்டு அம்புஜம் மாமி பையன் கல்யாணத்துக்கு போவேள்." என்று அவர் கூறிய தோரணையிலே இவனும் கூறியதில் "ஆமாண்டா அம்பி. நல்லவேளை நியாபகபடுத்தினேள்." என்று கூறிக்கொண்டே மந்திரங்களை விரைவாக கூறத் தொடங்கினார்.

அதற்குள் மணப்பெண்ணவள் அவனது அருகில் வந்தமர்ந்துக் கொண்டாள். கடைக்கண்ணால் அவளையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன். தன்னை ஒருவன் பார்க்கிறான் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, தலையை கவிழ்ந்தவள் நிமிர்ந்துக் கூட அவனைப் பார்க்கவில்லை. அவள் மனம் தான் ஒரு நிலையிலேயே இல்லை. கற்களைக் கொண்டு எறியபட்ட நீரோடை போன்று தான் அவள் மனம் குழப்பத்தால் கலங்கிப் போய் இருந்தது.

பின் அனைவரும் அட்சதை எடுத்தப்படி தயாராக அமர்ந்திருக்க, "அய்யர் கெட்டிமேளம் கெட்டிமேளம்." என்று தன் பழமையான வசனத்தை கூறினார்.

பிரபஞ்சனோ தன் கன்னக்குழி அழகை சிரிப்பினால் வெளிக்கொண்டு வந்தவன் மங்கள நாணைத் தன் இரு கைகளால் ஏந்தியபடி பெண்ணவளின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களை இட செல்லும் வேளையில்,

"இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லை. ப்ளீஸ் தாலி கட்டாதீங்க." என்று அவனுக்கே கேட்கும் வண்ணம் சொன்னவளது கண்கள் கெஞ்சுதலாக பார்க்க, முதலில் அதிர்ந்தவன், கடைசி நிமிடத்தில் இவ்வாறு கூறுபவள் மீது கோபம் துளிர்த்ததில், "யூ டூ லேட் பாப்பு." என்றவன் அவளது கண்களையே அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவளின் கழுத்தில் மூன்றாவது முடிச்சையும் சேர்த்தே போட்டுவிட்டிருந்தான் பிரபஞ்சன். இருந்தும் அவனது உள்ளமோ உலையில் கொதித்துக் கொண்டிருந்த நெல்மணியை போன்று கொதித்துக் கொண்டிருந்தது என்பதே திண்ணம்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9

அந்த அக்னி சாட்சியாய், உற்றார் உறவினர் முன்னிலையில் அவளைத் தன் துணைவியாக்கிக் கொண்டிருந்தான் பிரபஞ்சன். மங்கள நாண் அவளது சங்கு கழுத்தில் ஏறும்போதே கண்களில் அச்சம் சூழ அவனையே ஏறிட்டாள். அவன் கண்களில் தெரிந்த கோபமே பறைச்சாற்றியது அவள் கூறிய வார்த்தைகளினால் உண்டான ஆணவனின் கோபத்தை. அவளுக்காக அன்று கலங்கிய கண்கள் தான் ஆனால் இன்றோ அதில் தெரிந்தது முற்றிலும் கோபமே. அவன் முன்பு அழக்கூடாது என்று நினைத்தவள் கண்ணீரை தனக்குள் புதைத்தபடி வைத்த கண் விலகாமல் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த அனைவரும் அட்சதை தூவி வாழ்த்திக் கொண்டிருந்தனர் இருவரின் மீதும்.

தனலட்சுமி, தாமரையின் கண்கள் ஆனந்த கண்ணீரால் நிரம்பியது. அம்மாவிற்கே உண்டான ஆனந்த கண்ணீர் அது. தனஞ்செயனுக்கும் தன் மகனது திருமணம் சிறப்பாய் நடந்து விட்டதென்ற நிம்மதி அவரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

யாழினியோ தன் கன்னக்குழி விழ, மகிழ்ச்சியில் அட்சதையை தூவிக் கொண்டு இருந்தாள். இருந்தும் அவளது விழியோரத்தில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. யாருக்கும் தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே மகிழ்ச்சியோடு தன் தமக்கையின் திருமணத்தைக் கண்டு களித்தவள் அறியவில்லை அவளது செய்கைகளையே ஓரக்கண்ணால் ஒருவன் இரசித்தப்படி இருக்கிறான் என்பதை. ஆம் தென்னவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் பிரபா நாத்தனார் முடிச்சு போட விடாமல் நீயே போட்டுடியேடா." என்ற மாதுளாவின் குரலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் பிரபஞ்சன்.

"சாரிக்கா. அதான் நல்லபடியா முடிஞ்சுதே" என்று கூறிக்கொண்டே அழுத்தமான பார்வை ஒன்றை பூவினியின் மீது பார்த்தான்.

அய்யரோ, "குங்குமத்தை நெத்தியிலே வெச்சுவிடுங்கோ." என்றதும்,

குங்குமத்தை பெற்றவன் அவளது கழுத்தை பின்புறமாக சுற்றி, தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறே நெற்றி வகுட்டில் அழுத்தமாக வைத்தான்.

"வாழ்த்துகள் மிஸ்சஸ் பூவினி பிரபஞ்சன்." என்றவனது அழுத்தமான வார்த்தைகள் ஒவ்வொன்றும், சூடான அவனின் மூச்சுக்காற்றோடு அவளது கன்னங்களின் மீது பட, தன் கண்களை இறுக மூடித் திறந்தாள் பூவினி.

பின் தன்னவளின் சுண்டு விரலை பற்றிக் கொண்டு அக்னியை வலம் வந்தவன், அவளது காலில் மெட்டியை மாட்டும் போதும் சற்று அழுத்தம் கொடுத்து மாட்டி விட்டான். இவ்வாறு ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் அவன் கொடுத்த அழுத்தமே அவனின் கோபத்தை கூறிக்கொண்டிருந்தது.

அதன் பின்னர், அங்குள்ள மேடையிலேயே வரவேற்பு நடந்தது. அனைவரும் இன்முகத்தோடு மணமகன் மற்றும் மணமகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சிரிக்க வேண்டிய விழாவின் நாயகன் நாயகி மட்டும் சிரிப்பை தொலைத்தபடி நின்றிருந்தனர்.

"அத்தானுக்கு அக்காக்கு நடுவுல நிக்குற மாதிரி ஒரு போட்டோ எடுங்க." என்று புகைப்படக்காரரிடம் கூறிக்கொண்டே வந்த யாழி இருவருக்கும் நடுவில் வந்து நின்றாள்.

அவளது குறும்பு தனத்தை ரசித்தவனோ, இதழ் பிரித்து சிரித்தப்படி, " யாழிமா இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க... எப்போதுமே இப்படியே ஸ்மைலோட இருக்கனும். சிலர் மாதிரி தானும் சிரிக்காமல் மத்தவங்களையும் சிரிக்கவிடாமல் பண்ணக்கூடாது சரியா?" என்று யாருக்கு கேட்க வேண்டும் என்று நினைத்தானோ அவளுக்கு கேட்குமாறு கூறினான்.

குடும்ப புகைப்படம் என அனைத்தும் எடுத்த பின்னர், மணமக்கள் இருவரையும் வைத்து எடுக்கப்பட வேண்டிய புகைப்படங்களை எடுக்க தயாராகி இருந்த நேரம் அது. மண்டபத்தின் வெளியே உள்ள அலங்கார பூக்கள் முன்பு நிற்க வைத்தபடி எடுத்துக் கொண்டிருந்தனர்.

பூவினியோ, "எதுக்கு இது எல்லாம்?" என்றதும் ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவளை பார்த்த பார்வையிலேயே அமைதியாகிப் போனாள் பெண்ணவள்.

அவளது இடையை வளைத்து பிடித்தவன் அவளது உடலோடு ஒன்றி நின்றபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க, அவள் தான் வாயடைத்துப் போனாள்.

"கொஞ்சம் தள்ளி நின்னும் போஸ் கொடுக்கலாம்." என்றாள் சங்கடத்தில் நெளிந்துக்கொண்டே.

"எதுக்கு, இனி உன்னை விட்டு தள்ளிப் போற ஐடியாவே இல்லை. அதே மாதிரி நீயும் என்னை விட்டு தள்ளிப்போகணும்னு நினைச்சிடவே நினைச்சிடாதா மை டியர் பாப்பு." என்றவன் அவளது கண்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தப்படி அவளது வெற்றிடையில் அழுத்தம் கொடுத்திருந்தான்.

"ஏன் இப்படி பண்றீங்க?"

"நீ ஏன் அப்படி சொன்ன?"

என்று இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் தூரத்தில் பார்ப்பவர்களுக்கோ இருவரும் எவ்வளவு அழகான ஜோடி என்று கூறும் அளவிற்கு சிரித்துக் கொண்டே, முறைத்துக் கொண்டிருந்தனர் தங்களுக்குள்.

இவையாவும் அறிந்திடாத யாழினியோ பொறுப்பாக, வரவேற்புக்காக மேசையின் மீது வைத்திருந்த பூத்தட்டு, பழத்தட்டு, கற்கண்டு தட்டு என ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு போய் அந்தந்த இடத்தில் வைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாக குங்குமச்சிமிழ், சந்தனக்கிண்ணம் வைக்கப்பட்ட வெள்ளித் தட்டு அவளது கண்களில் பட்டது.

"அம்மாக்கு பொறுப்பே இல்லை. வெள்ளி தட்டு, வெள்ளி குங்குமச் சிமிழை இப்படி தான் அஜாக்கிரதையாக வெச்சுட்டு வருவாங்களா?" என்று தனலட்சுமியின் கவனக்குறைவை நினைத்து புலம்பியபடி மணமகளின் அறையை நோக்கிச் சென்றாள் யாழினி.

அறைக்கு வந்ததும் அந்த தட்டினை அங்கிருந்த கட்டிலின் மீது வைத்தவள், எதேச்சையாக திரும்ப அவ்வழியை மறைத்தபடி இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, நின்றிருந்தான் தென்னவன்.

அவனை சற்றும் எதிர்பார்க்காதவள், 'இந்த தென்னமரம் இங்க என்ன பண்ணுது. அவன் முழியே சரியில்லையே' என்று நினைத்துக் கொண்டே 'பேசுனாதான வம்பு, நாம எதுவும் பேசாம கிளம்பிடுவோம்' என்று நினைத்துக் கொண்டே அவள் வெளியேற பார்க்க, அவனோ தன் இடது கைகளை முட்டுக்கட்டையாக பயன்படுத்தியவன் வழியை மறைத்திருந்தான்.

"வழியை விடுங்க. நான் போகணும்."

"அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பதில் தெரிஞ்சாகணும்."

"என்ன பதில்?" என்று அவளது வாய் கேட்டாலும் அவளது மனமோ 'இவன் ஒருத்தன்... சரியான இம்சை பிடிச்சவனா இருக்கான். ஆளும் மூஞ்சியும்.' என்று வசைப்பாடியது.

அவளது முக மாற்றத்தைக் கண்டே, அவளின் உணர்வை புரிந்தவன், " போதும் பாப்பா திட்டுனது." என்று ஒற்றை புருவத்தை தூக்கிக் கொண்டே கேட்டதில்,

'அடப்படுபாவி எப்படி சரியா நம்ம மைண்ட் வாய்சை கேட்ச் பண்றான்' என்று வாயை ஆவென பிளந்தாள்.

"பார்த்து பாப்பா வாய்க்குள்ள கொசு போய்ட போகுது" என்று அவன் சிரித்ததும் தன் வாயை பட்டென்று மூடிக் கொண்டவள்,

"என்ன உண்மை உங்களுக்கு வேணும்?" என்றாள் சலித்துக் கொண்டே.

"நேத்து என் சட்டையில எதுக்கு அப்படி கறை பண்ண? ஐ வாண்ட் ரீசன்"

"கறையா அப்படினா?" என்று தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது போன்று முகத்தை வைத்துக் கொள்ள,

'இந்த புளுகு புளுகுற எந்த ஊர்காரியா இருப்பா?' என்று நினைத்துக் கொண்டே, "பொய் சொல்லாத பாப்பா. அப்புறம் கோபத்துல இன்னொரு முறை அறைவாங்கிடாத."

"எவ்வளவு தைரியம். என்ன அடிக்க நீங்க யாரு ஹான்? நேத்து தெரியாமல் நீங்க அடிச்சதுக்கே உங்க சட்டை காலி, இன்னைக்கு தெரிஞ்சே அடிப்பனு சொல்றீங்க அப்புறம் மண்டை பத்திரம். இல்லைனா அடிச்சு உடைச்சுடுவேன்." என்று கோபத்தில் சிவந்தவள் எதை பேசுகிறோம் என்று தெரியாமல் அனைத்தையும் ஒப்புக்கொண்டிருக்க, ஒரு நொடி அதிர்ந்தவள் தன் வாயை பொத்திக்கொண்டாள்.

அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன், "இதை தான் எதிர்பார்த்தேன். மாட்டுனியா?" என்று நகைக்க,

'அய்யய்யோ கோபத்துல கன்ட்ரோல் இழந்துட்டியேடி யாழி' என்று மிரட்சியுடன் பார்த்தவள், "நீங்க என்ன அடிச்சதுக்கு கறை பண்ணது சரியா போச்சு. கிளம்புங்க இங்க இருந்து." என்று வாசல் கதவை கைக் காட்ட அவனோ கதவை அடைத்தவன் அவளை நோக்கி நடந்து வந்தான்.

'சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டோமோ' என்று மிரட்சியோடு பார்த்தவள் பின்னோக்கி நகர்ந்தாள்.

"எதுக்கு இப்போ கதவை அடைச்சீங்க? மரியாதையா வெளிய போங்க"

"தெரிஞ்சு பண்ண தப்புக்கு தண்டனைக் கொடுக்க வேண்டாமா?" என்று அவன் இதழ் மொழிந்துக் கொண்டிருக்கும் போதே அவனின் விரல்களோ அவள் கொண்டு வந்து வைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும், எடுத்துக் கொண்டிருந்தது

"அய்யய்யோ அதுக்குனு இப்போ என்ன பண்ண போறீங்க. இது என் புது டிரஸ்... இத வீண் பண்ணிடாதீங்க ப்ளீஸ்" என்றாள் குழந்தை போல்.

"அப்போ நேத்து நான் போட்டிருந்தது மட்டும் புது டிரஸ் இல்லையா?" என்று கேள்வியாய் கேட்பவனுக்கு என்ன விடையளிப்பது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள் பெண்ணவள்.

அதற்குள் அவளது அருகே வந்தவன் விரலில் இருந்த சந்தனத்தை மூக்கின் நுனியில் பட்டும் படாமல் வைக்க, அதிர்ந்தவள் "அத்தான் பாருங்க... உங்க தம்பி பண்ற காரியத்தை." என்று படபடவென கூறியதில், தன் அண்ணன் வந்துவிட்டானோ என்ற பதட்டத்தில், அவன் திரும்பி பார்க்கும் அந்நேரம் அவனது கைகளை தட்டிவிட்டவள், அவனைக் கடந்து ஓடிச் சென்றாள்.

அவளது சாதுர்யத்தை வெகுவாக ரசித்தவன், "சரியான கேடி" என்று முணுமுணுக்கும் போதே கதவோரம் எட்டிப் பார்த்தவள்,

"ஓய் தென்னமரம் சாத்தியிருக்குற கதவு திறந்தா சத்தம் வரும்னு கூடவா தெரியாது. இப்படி அப்பாவி புள்ளையா இருக்கியே?"

"அடிங்கு யார பார்த்து தென்னமரம்னு சொன்ன? உன்னை..." என்று அவளை நோக்கி வேக எட்டுக்களை வைக்க, அவளோ பளிப்புக் காட்டியவள்,

"முடிஞ்ச என்னை பிடிங்க பார்க்கலாம்." என்று கூறிக்கொண்டே சிட்டாய் பறந்தாள்.

இங்கு பூவினியும், பிரபஞ்சனும் உணவு உண்பதற்காக சென்றிருக்க, அவர்களோடு சென்று அமர்ந்துக் கொண்டாள் யாழினி.

புகைப்படக்காரர்களோ தங்களது வேலையை செவ்வென செய்தபடி இருவரையும் புகைப்படம் எடுத்துத் தள்ளியிருந்தனர்.

அதில் கடுப்படைந்த பூவினியோ 'இவனுங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?' என்பது போல் முறைத்துக் கொண்டிருந்தாள்.

"இரண்டு பேரும் ஸ்வீட் எடுத்து மாறி மாறி ஊட்டி விடுங்க." என்று அந்த புகைப்படக்காரர் கூறியதும் அதிர்ந்து விழித்தவள் முடியாது என்பது போல முகத்தில் பாவனைக் காட்டினாள்.

"அக்கா அத்தானுக்கு ஊட்டி விடுக்கா"

"பேசாமல் சாப்பிடுற வேலை மட்டும் பாரு யாழி." என்று சிடுசிடுத்தாள்.

"இப்போ எதுக்கு அவளை திட்டுற?" என்று பிரபஞ்சன் கூறவே அவனைக் கண்டுக் கொள்ளாமல் உணவை மட்டும் உண்டுக் கொண்டிருந்தாள் பூவினி.

"ஏய் உன்னை தான் சொல்றேன். நீயே பார்க்குறியா, இல்லை உன்னை பார்க்க வைக்கட்ட."என்று அவளின் காதோரம் கூறியும் அவள் வேண்டுமென்றே அவனை பார்க்காமல் இருக்க,

அதில் கடுப்படைந்தவன், அவளது இடையில் பட்டென்று கிள்ளினான். ஒரு விசம புன்னகையை உதிர்த்துக் கொண்டே.

விழுக்கென்று அவனை அவள் பார்த்த அந்நேரம் ஜிலேபியை எடுத்தவன் அவளது வாயில் திணித்திருக்க, புகைப்படக்காரர் அழகாக அந்த காட்சியினை படம் பிடித்திருக்கவும் சரியாக இருந்தது.

"ஐ சூப்பர். அக்கா அப்படியே நீயும் அத்தானுக்கு ஊட்டிவிடு." என்று உற்சாகமாய் யாழினி கூறவும், வேறுவழியின்றி கடமைக்கென ஜிலேபியை எடுத்தவள் அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அவனோ அதற்காகவே காத்துக் கொண்டிருப்பது போல ஜிலேபியோடு அவளது விரல்களையும் சேர்த்து சுவைக்க பட்டென்று தன் கைகளை உருவிக் கொண்டவளது முகத்தில் டன்கணக்கில் கோபம் தெறிக்க, அவன் முகமோ காதலால் திளைத்திருந்தது.

"ஆஹா இது மாதிரி டேஸ்டான ஜிலேபி இதுவரை சாப்பிட்டதே இல்லை." என்பவனை பார்க்க பிடிக்காமல் தலையை கவிழ்ந்துக் கொண்டாள் பெண்ணவள்.

அவன் வேண்டுமென்றே தன்னை சீண்டுகிறான் என்பதை உணர்ந்தவள் அப்போது கூட ஒன்றை மறந்திருந்தாள் கடைசி நிமிடங்களில் அவள் கூறிய அந்த வார்த்தைகள் அவனை ரணப்படுத்தி இருந்ததை.

மண்டபத்திலிருந்து கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. அதுவரை துள்ளி திரிந்த இளையவளுக்கு தன் அக்கா இனி தன்னோடு இருக்கப் போவதில்லை என்ற நிதர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய, அவளது கண்களில் கண்ணீர் திரண்டு இருந்தது.
பிறந்ததிலிருந்து தன்னோடு இருப்பவள் தன்னை தாய் போல் காத்தவள், தந்தைக்கு பின் தனக்கு அரணாக மாறியவள் ஆயிற்றே. அவளை பிரிய போகும் வலியை உணர்ந்தாள் யாழினி.

அவளிடம் செல்ல சண்டைகள் போட்டது, அடுப்புத்திட்டில் அமர்ந்து அவள் வெட்டி வைத்த காய்கறிகளை அசைப் போடுவது, அவளிடம் வம்பு இழுப்பது, அவள் அடிக்க துரத்தினால் வீட்டைச் சுற்றி ஓடுவது என கண்களில் முன் தோன்றும் நினைவுகள் ஒவ்வொன்றும் இனி நடக்கப் போவதில்லை என்று தெரிந்த நொடி அவளது அழுகையை அடக்க இயலவில்லை. அதுவரை அவள் அழுவதை பார்க்காத பூவினியோ தன் தாயோடு பேசிக் கொண்டிருந்தாள்.

"பூவினிமா பொறந்த வீட்டு பெருமையை நீ காப்பாற்றணும்டா. அம்மாக்கு நல்ல பேரை வாங்கி கொடுப்பனு எனக்கு தெரியும். அதே மாதிரி எல்லாரையும் நல்ல பார்த்துக்கணும், மாப்பிள்ளையோடு நீ சந்தோசமாக இருக்கணும்." என்று வழக்கமான அறிவுரைகளை வழங்கிய தனலட்சுமி அவளது நெற்றி வகுட்டில் முத்தம் பதித்தார்.

"சரிம்மா" என்று அவளது வாய் மொழிந்தாலும் உள்ளமோ ஒரு வித தயக்கத்தை சுமந்துக் கொண்டே இருந்தது. யாழினியின் விசும்பல் சத்தம் இவளது காதில் தெளிவாய் விழ, தன் தங்கையை பார்த்தவள் அவள் அழுகையைக் கண்டதும் அவளை தாவி அணைத்திருந்தாள்.

"என்னாச்சு யாழிமா. ஏன் தங்கம் அழுகுற? நான் இங்க தானடி இருக்கேன், அப்புறம் ஏன் அழுற யாழிமா" என்று அவளது முதுகை வருடிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தியவளுக்கும் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

"அக்கா இனி நான் யாரோட சண்டை போடுவேன். எனக்கு நீ வேணும். என்னோடவே இரு." என்று சிறு பிள்ளை தன் தாயை விட்டு பிரிந்தால் எவ்வாறு அழுமோ அவ்வாறு அழுதாள் யாழினி.

அவளது கன்னங்களை ஏந்தியவள், "என் செல்லம் எதுக்கு இப்போ அழுகுறீங்க. பாரு மூக்குலாம் சிவந்திடுச்சு. கண் மை எல்லாம் கலைஞ்சிடுச்சு." என்று கூறிக்கொண்டே அவளது கண்ணீரை துடைத்து விட்டவள், அவளது நெற்றியில் முத்தம் பதித்திருந்தாள்.

"பரவாயில்லைகா. நீ என்னோட இருப்பேனு சொல்லு."

"சரி யாழிமா உன்னோடவே இருக்கிறேன். உன் அத்தான் அவரு வீட்டுக்கு போகட்டும். நானும் நீ அம்மா மட்டும் எப்போதும் போல இருப்போம்." என்று சிரிக்க.

தனலட்சுமி தான் இருவரது பேச்சைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார்.
"ஏய் என்னடி விளையாடுறீங்களா இரண்டு பேரும்." என்றார் ஆவேசமாக.

"மா.... காமெடி பண்ற மாதிரி கோபப்படாதமா... சிரிப்பா வருது." என்று யாழி கூறியதும் தன் தாயைக் கண்டு சிரித்தே விட்டாள் பூவினி.

"அடிக்கழுதை..." என்று தனலட்சுமி துரத்த பூவினியை சுற்றி சுற்றி ஓடியவள் தன் அன்னைக்கு பளிப்புக் காட்டிக் கொண்டிருந்தாள், ஏனோ அந்த சூழல் அழுகையை மறைத்து புன்னகையை பரவச் செய்திருந்தது மூவருக்கும்.

அதன் பின் தன் அக்காவிடம் வந்தவள், "சாரி பூவே கொஞ்சம் எமோஷ்னல் ஆகிட்டேன். நீ அத்தானோட வீட்டுக்கு போ. பக்கத்துல தான இருக்க, உன்னை அடிக்கடி பார்க்க வரேன். ஐ மிஸ் யூ சோ மச்." என்று கூறிக்கொண்டே மீண்டும் கட்டியணைத்துக் கொண்டாள்.

அங்கு வந்த தாமரையோ, "நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பலாம் பூவிமா." என்று கூறிக்கொண்டே தன் மருமகளை அழைத்துச் சென்றார். செல்லும் போது கூட யாழினியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேதான் இருந்தாள் பூவினி.

"நீயும் பிரபாவும் அந்த கார்ல வந்திருங்கடா" என்று கூறிக்கொண்டே அவர் பின்னாடி இருந்த வேனில் ஏறிக் கொண்டிருக்க, தயக்கத்தோடு ஏறி அமர்ந்திருந்தாள் பூவினி.

குமரனோடு பேசிக்கொண்டிருந்த பிரபஞ்சனை நோக்கி வந்திருந்த யாழியோ, "அத்தான் உங்களோட தனியா பேசணும்." என்று அழைக்க,

"வந்துட்டியா இம்சை. அத்தான் ஆகுறதுக்கு முன்னாடியே அத்தான் அத்தான்னு ஏலம் விடுவ.. இப்போ சொல்லவே வேண்டாம். போடா பிரபா போய் பேசிட்டு வா." என்று தன் நண்பனை வழியனுப்பி வைத்தான் குமரன்.

"சொல்லு யாழிமா. கண்ணு எல்லாம் சிவந்திருக்கு அழுதியா யாழிமா?"

"ஆமா அத்தான். அது விடுங்க. நான் முக்கியமான விசயம் சொல்லணும்."

"சொல்லு யாழிமா."

"அத்தான் என் அக்காவை உங்க கையில ஒப்படைச்சுட்டோம். இனி அவளை கண்கலங்காமல் பார்த்துக்கணும். அவ அழுதானு தெரிஞ்சா கூட கேட்க நான் இருக்கேன். நீங்க அப்படி பண்ண மாட்டீங்க. இருந்தாலும் இப்போவே சொல்லி வெச்சிடுறேன்."

"ஓகேங்க பெரியமனுசி.." என்று புன்னகையோடு அவளது தலையை தட்டிக் கொண்டு கூறினாலும் அவன் மனமோ, 'உங்க அக்கா என்ன அழ வைக்காமல் இருந்தால் சரி' என்று அப்பட்டமாக புலம்பியது.

பின் பிரபஞ்சனும் காரில் ஏற, பூவினிக்கும் பிரபஞ்சனுக்கும் நடுவில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் ஆராதனா.

யாழியோ 'நானும் குட்டியா இருந்திருந்தால் அங்க வந்து அமர்ந்திருப்பேனே' என்பது போல ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்க அவளது அருகில் வந்த தென்னவனோ, "பாப்பா என் பைக்ல வரியா? அங்க தான் இடம் இல்லையில்ல" என்று கேட்டதும் விழுக்கென்று திரும்பி பார்த்தாள்.

"தென்னமரம் கூட எல்லாம் வர முடியாது." என்று சிரித்துக் கொண்டே, தனலட்சுமியின் பின் சென்று நின்றுக் கொண்டாள்.

"இவ ஒருத்தி நம்ம பேரை டேமேஜ் பண்றதுக்குனே பொறந்து வந்திருக்கா போல" என்று சிடுசிடுத்தவன் அவளையே முறைத்து பார்த்தான்.

மணமக்களது மகிழுந்து புறப்பட்டு சென்றிருக்க, விழி நீரோடு விடை பெற்ற பூவினியோ, தனது அருகில் இருந்த பிரபஞ்சனை திரும்பிக் கூட பார்க்காமல் அமர்ந்திருக்க, அவளையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த பிரபஞ்சனது மனதிலோ பல்வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

"அவள் ஏன் அவ்வாறு சொன்னாள்?" என்ற கேள்வியே மண்டையைக் குடைந்தெடுக்க உள்ளுக்குள் அடக்கி வைத்த கோபமும் மீண்டும் எழுந்துக் கொண்டே இருந்தது. இதற்கு பின் நடக்கும் விபரீதங்களுக்கு அந்த கோபமும் அந்த கோபத்தை உருவாக்கியவளுமே முழு முதல் காரணமாகவும் மாறலாம் என்பதே எழுதப்படாத விதியின் செயலோ....
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 10

பிரபஞ்சனது வீட்டிற்கு தனது வலது காலை எடுத்து வைத்து வந்தவளுக்கு அனைத்தும் புதிதாகவே இருந்தது. இத்தனை நாள் அம்மா தங்கை என்ற இரண்டு உறவுகள் மட்டுமே வாழ்க்கை என இருந்தவளுக்கு புதுபுது சொந்தங்களும், புகுந்த வீடும் பிரம்மிப்பை தோற்றுவிக்காமல் இல்லை. தீபம் ஏற்றும் போதும் கூட ஏனோ அவளுக்கு தான் ஒரு வித அந்நியதன்மை இருந்துக் கொண்டே இருந்தது.

பொதுவாகவே புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு முதலில் அனைத்துமே புதிதாக தான் தெரியும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வு கண்டிப்பாக இருக்கும். நாளடைவில் தான் அந்த எண்ணங்கள் மறைந்து அது தன் வீடு தன் குடும்பம் என்ற மனப்பான்மை வரும். அந்த எண்ணம் சற்று அதிகமாகவே இருந்தது பூவினிக்கு.

பிரபஞ்சன் தான் தன் கோபத்தை மட்டுப்படுத்தி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது அமைதி, யாரிடமும் சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருப்பது என்று ஆரம்பத்தில் தோன்றும் இயல்பான விசயங்கள் கூட அவனுக்கு உறுத்தலாகவே இருந்தது. கல்யாணம் வேண்டாம் என்று தாலி கட்டும் கடைசி நிமிடத்தில் அவள் சொன்ன வார்த்தைகள் தான் இந்த உறுத்தலுக்கு முதல் படியும் கூட.

பாலும் பழமும் கொடுப்பதற்காக இருவரையும் வரவேற்பு அறையில் அமர வைத்திருந்தனர். மாதுளா தான் பாலும் பழமும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

"என்ன மாதுமா நம்மளும் குடிப்போமா?" என்று பாலைக் கண்காட்டிக் கொண்டு விதுரன் கூறவும்...

"வாயை கொஞ்சம் மூடுங்க. இரண்டு குழந்தைக்கு அப்பன் மாதிரி பொறுப்பா நடந்துக்க பாருங்க" என்று முறைத்து விட்டு அவள் சென்றாள்.

"நான் என்ன சொன்னேன்னு இவ பாட்டுக்கு மூஞ்சியை திருப்பிட்டு போற. விதுரா நீ பாவம்டா" என்று புலம்பிக் கொண்டு அங்கு வந்து நின்றான்.

இருவருக்கும் பாலில் வாழைப்பழம் சேர்த்து கொடுத்தாள். முதலில் குடித்த பிரபஞ்சனோ அதை தன்னவளோடு நீட்ட, அவனைப் பார்க்காமலே வாங்கியவள் பட்டும் படாமல் அருந்தினாள்.

'நான் குடிச்சதை குடிச்சா கொறைஞ்சுடுவாங்களோ. இருடி பாப்பு உனக்கு இருக்கு.' என்றவன் நோக்க,

அவளோ, 'இவரு பார்க்குற பார்வையே சரியில்லையே. ஆண்டவா இனி என்னல்லாம் நடக்கப் போகுதோ.' என்று மனதிற்குள்ளே புலம்பினாள்.

அடுத்த சம்பிரதாய விளையாட்டான பானை நீரில் மோதிரம் போட்டு தேடும் சம்பிரதாயமும் நடந்தது.

"இதுல யாரு ஜெய்க்குறீங்களோ அவங்க ராஜாங்கம் தான் வீட்டுல நடக்குமாம். பார்க்கலாம் மோதிரத்தை எடுக்கப் போறது என் தம்பியா? இல்லை என் நாத்தனாரானு?" என்று சிரித்துக் கொண்டே இருவருக்கும் நடுவில் வெள்ளிக் குடத்தை வைத்தார்.

ஆரூவோ "அத்தை தான் வின் பண்ணுவாங்க." என்று துள்ளிக் குதிக்க, "இல்லை மாமா தான்." என்று அகனியன் குதிக்க,

"இரண்டு பேரும் நகருங்கடா அங்குட்டு ,வா மாது நீயும் நானும் மோதிரத்தை எடுப்போம்." என்று விதுரன் கூறவும் சுற்றியிருந்த அனைவரும் நகைக்க, மாதுளாவோ தலையில் அடித்துக் கொண்டாள்.

"என்ன மாமா. நீங்க போற போக்கே சரியில்லையே. அக்கா என்னென்னு கேளு."

"கேட்குறேன்டா பிரபா. வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு."

"டேய் பிரபா இப்படி தான் மாமாவை கோர்த்து விடுவியாடா. அவ சும்மாவே ஆடுவா. இனி சொல்லவா வேணும்." என்று பயந்தது போல் அவர் கூறவும் அதுவரை அமைதியாக இருந்த பூவினிக்கே இவர்களது அலும்பில், சிரிப்பு தன்னாலே வந்தது.

அவளது சிரிப்பை வெகுவாக ரசித்தவனோ, 'சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கா. ஆனால் சிரிக்க மாட்டா.' என்று மனதில் நினைத்துக் கொண்டே அப்பட்டமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

குடத்தில் இருவரும் சேர்ந்து கைவிட, அவனோ வேண்டும் என்றே அவளது கைகளைச் சுரண்டியதில் விழுக்கென்று அவனை ஒரு பார்வை பார்த்தாள் பூவினி.

அவனோ பட்டென்று கண்ணடிக்க, தனது சிறு கண்களை பெரிதாக விரித்தவள், 'வெக்கம் கெட்ட மனசா...?' என்று மனதில் திட்டிக்கொண்டே அவனை முறைத்தாள்.

முறைக்கவா செய்ற? என்பது போல் அவன் அவளது கைகளோடு விளையாட ஒரு வழியாகி போனவள் பாவமாக அவளைப் பார்த்தான்.

"டேய் இன்னுமாடா மோதிரத்தை தேடுறீங்க?" என்று தாமரையின் குரலில் அவன் விளையாட்டை நிறுத்த அந்த நேரத்தை பயன்படுத்தியவள் சட்டென்று மோதிரத்தை எடுத்தப்படி, வெளியே கைகளை எடுத்துக் காட்டினாள்.

'அடிப்பாவி சந்தடி சாக்குல எடுத்துட்டாளே.' என்று நினைத்தவன், "அடுத்த முறை நான் தான் எடுப்பேன் பாருங்க." என்று இல்லாத காலரை தூக்கி விட்டான்.

"அதையும் பார்ப்போம்." என்று மாதுளா கூறிக்கொண்டே மோதிரத்தை போட, இம்முறை விளையாடமல் தீவிரமாக தேடியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

"யக்கோவ் மோதிரத்தையே காணமே."

"போட்டத் தானாடா இருக்கும். மோதிரம் தான் என் கையில இருக்கே." என்று சிரிக்க, விதுரனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

"வடை போச்சே..." என்றவன் பெருமூச்சொன்றை விட பூவினியோ குலுங்கிச் சிரித்தாள்.

"குடும்பம் தான் என்ன மொக்க பண்ணுதுனா? வாச்சவளும் சேர்ந்து மொக்க பண்றாளே" என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டவனிடம் வந்த விதுரனோ,

"வெல்கம் டூ மை வோர்ல்ட் பிரபஞ்சா... குடும்பஸ்தனாகி நீயும் எங்களோட கலந்துகிட்டு கலாய் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்." என்று கைக்கொடுத்தான்.

"என்ன மாமா நீங்களுமா?"

"யான் பெற்ற இன்பத்தை நீயும் பெற வேண்டும் அல்லவோ" என்று கூறிக் கொண்டே சென்றார்.

இங்கு அனைவரும் கலகலப்பாக இருப்பதை கண்டு வியப்பாக பார்த்தாள் பூவினி. அந்நேரம் தங்கையின் நியாபகம் வர ஒரு நிமிடம் அவளது கண்கள் கலங்கியே விட்டது.

அதே சமயம் வீட்டிற்கு வந்த யாழினியோ கண்கள் கலங்கி போய் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அக்காவின் நியாபகம் அவளை திணறடிக்க, "பூவே உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். லவ் யூ அக்கா." என்று அவளது புகைப்படத்தை பார்த்துக் கொண்டே அழுத விழிகளோடு கூறினாள்.

அந்நேரம், வீட்டின் காலிங் பெல் அடிக்கப்பட, யாரென்று சென்று பார்த்தார் தனலட்சுமி.

"வாங்க தம்பி. சம்மந்திமா இப்போ தான் சொன்னாங்க. நானே வரலாம்னு தான் இருந்தேன்." என்று சிரித்த முகமாக வரவேற்றார் தென்னவனை.

"உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான் அம்மா என்னை அனுப்புனாங்க. " என்று கூறிக்கொண்டே அவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாலும் அவனது கண்களோ யாழினியை அன்னிச்சையாக தேடியது.

"இருங்க தம்பி. நான் போய் உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வரேன்." என்றவர் "யாழி.. அக்காவோட துணி எல்லாம் எடுத்து வைடா. தம்பி வந்திருக்காங்க கொடுத்து அனுப்பணும்." என்று கூறிக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

"என்னது அத்தான் வந்திருக்காராமா." என்று துள்ளிக் குதித்து வந்தவளுக்கு, "ஹாய்" என்று கைகளை காட்டிக் கொண்டிருந்த தென்னவன் கண்ணில் பட, "இவருக்கு தான் இந்த பில்டப்பா." என்று ஒரே நொடியில் மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டாள் யாழினி.

"இவ என்ன நம்மளை எளக்காரமா பார்க்குற." என்று முணுமுணுத்தவன், "ஹாய் யாழ்? என்ன முகமே வாட்டமா இருக்கு." என்றான் தன்மையாக.

'பாப்பா போய் இப்போ யாழ்னு கூப்பிடுற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா. விடக்கூடாது யாழி.' என்று நினைத்துக் கொண்டே, "அது ஒன்னும் இல்லை தென்னமரம்..." என்று ராகமாக இழுக்கவும், அவன் முறைக்கவும் சரியாக இருந்தது.

"அது எங்க வீட்டு தென்னமரத்துல தேங்காய் வரலையா. அதான் வாட்டமா இருக்கேன்." என்றாள் பெண்ணவள்.

அவள் தன்னைத்தான் அப்பட்டமாக கலாய்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அறிந்தும், அமைதியாகவே இருந்தான் தென்னவன். அவன் அமைதிக்கு பின்னாடி பெரிய பூகம்பமே இருக்கும் என்று தோரணையில் அவன் பார்க்க, அவளோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

'என்னது இவ இப்படி பார்க்குறாள்' என்று அவன் யோசிக்கும் போதே காபியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருந்தார் தனலட்சுமி.

"துணிய எடுத்து வெச்சியாடி" என்று யாழினியை கேள்வியாய் தனலட்சுமி பார்க்க,

"இல்லைமா, எந்த டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கனும்னு தெரியலை"

" ஏழு கழுதை வயசாகியும் இது கூடவா தெரியாது." என்று தலையில் அடித்துக் கொண்டே தனலட்சுமி செல்ல, அவர் அவ்வாறு கூறியதைக் கேட்டதுமே சத்தமின்றி நமட்டு சிரிப்பை சிரித்தான் தென்னவன்.

அதில் கடுப்படைந்தவள், 'பெத்த பொண்ணை இந்த தென்னமரம் முன்னாடியே இன்சல்ட் படுத்துறோமேனு கொஞ்சமாவது கவலை இருக்கா இந்த தனலட்சுமிக்கு. டேய் தென்னமரம் நீ சிரிக்கவா செய்ற உனக்கு இருக்குடா.' என்று முகத்தை திருப்பிக் கொண்டே தன் தாயிடம் சென்றாள்.

"ஏம்மா கொஞ்சமாவது அறிவிருக்கா, அந்த பையன் முன்னாடியே திட்டுற?"

"ஏன்டி நீ திட்டுற மாதிரில்ல நடந்துக்குற. அப்புறம் அது என்ன பையனு சொல்ற. அந்த தம்பியும் அத்தான் தான். ஒன்னு அத்தான்னு சொல்லு இல்லை மாமானு சொல்லு. உன்னை விட மூனு வயசு பெரியவன் தான."

"இந்த புள்ளி விவர வயசு கணக்கெல்லாம் ரொம்ப முக்கியம் தனலட்சுமி... நான் என் பிரபா அத்தானை தவிர வேற யாரையும் அத்தான்னு சொல்ல மாட்டேன். அது எவனா இருந்தாலும் சரி." என்று சத்தமாக கூறியதில் வெளியே இருந்த தென்னவனுக்கு நன்கு கேட்டு விட, குடித்துக் கொண்டிருந்த காபி பொறை ஏறிக் கொண்டது அவனுக்கு.

"அடிப்பாவி. என் அண்ணன் மட்டும் அத்தான். நான் மட்டும் உனக்கு தக்காளி தொக்கா... உன்னை உரிமையா மாமானு கூப்பிட வைக்கல நான் தென்னமரம் இல்லை... அடச்சீ அவ சொல்லி சொல்லி தென்னமரம்னு என் வாயில வருது தென்னவன் இல்லை." என்று தட்டித்தடுமாறி உறுதி பூண்டான்.

அதன்பின்னர் துணிப்பையை எடுத்துக் கொண்டு வந்து அவனது கைகளில் கொடுக்க, அவளது கைகளை பற்றிக் கொண்டே வாங்கியவன், "அப்புறம் அத்தான் கிளம்புறேன் பாப்பா." என்று கண்ணடிக்க, பட்டென்று கைகளை உருவிக் கொண்டாள்.

"யாரு அத்தான்?" என்று அவனுக்கு கேட்கும் வண்ணம் பல்லைக் கடித்தாள் யாழினி.

"சரி விடு, மாமன் கிளம்புறேன்." என்றான் அவனும் சலிக்காமல்.

அதற்குள் தனலட்சுமி அங்கு வந்துவிட அவரிடமிருந்து விடை பெற்றவன். "வரேன் அத்தை. அப்புறம் போய்ட்டு வரேன் பாப்பா." என்று அழுத்தமாக கூறிக்கொண்டே அவன் செல்ல, அவனது இதழ்களோ புன்முறுவல் பூத்திருந்தது.

'போடா டேய் தென்னமரம் உனக்கு இருக்கு.' என்றவள், செல்லும் அவனையே சீற்றத்தோடு பார்த்தாள்.

பிரபஞ்சனது வீட்டில் அனைவரும் இரவு உணவினை உண்டு முடித்திருந்தனர். முதலிரவு சம்பிரதாயத்திற்காக மாதுளா, பூவினியை தயாராக்கிக் கொண்டிருந்தாள்.

பூவினிக்கு தான் திக்திக் நிமிடங்கள் அது. பருத்தி சேலையில் ஆங்காங்கே தங்க நிற ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த குங்கும நிற புடவையில், புது மஞ்சள் சரடு கழுத்தில் மின்ன, எந்த வகையான ஒப்பனைகளும் இன்றி தேவதையென ஜொலித்தாள் பூவினி.

மாதுளா நகைகள் அணிவிக்கும் போதே, "போதும் அண்ணி. எதுக்கு இத்தனை நகை." என்றாள் சங்கடமாக.

"அதுவும் சரி தான். நகை போட்டா அதை கழட்டவே நேரம் சரியாக இருக்கும்ல." என்று அவர் விசமமாக சிரித்ததும்,

'நான் எதுக்கு சொன்னால், இவங்க என்ன நினைச்சு சொல்றாங்க.' என்று கடுப்போடு பார்த்தாள் பூவினி.

பின் தாமரை அவளது கைகளில் பால் சொம்பைக் கொடுத்தபடி, "நீங்க இரண்டு பேரும் சந்தோசமா, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழனும்." என்று கூறினார்.

மாதுளாவோ, "ஆசிர்வாதம் வாங்கு" என்று பூவினியின் காதுகளில் கூறவும், தன் அத்தையிடம் ஆசிகளை பெற்றவள், நெஞ்சில் படபடப்போடு பிரபஞ்சனது அறைக்குள் நுழைந்திருக்க, அங்கு அவன் இல்லாததைக் கண்டு சற்று ஆசுவாசம் அடைந்தாள் பூவினி.

நடுத்தரமான அறை அது. இருவர் உறங்குவதற்கு அளவான கட்டில், சிறிய மேசை அதோடு நாற்காலி, துணிகளை வைப்பதற்கு சற்று பெரிதான கபோர்டு, அதனருகே, குளியலறை என்று பார்க்கவே அழகாக தான் இருந்தது அந்த அறை.

மஞ்சத்தின் மீது வந்தமர்ந்தவள், "கட்டில் கொஞ்சம் சின்னதாக இருக்கே. பேசாமல் நம்ம கீழ படுத்துப்போமா." என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அறைக்கதவை திறந்துக் கொண்டு வந்தான் பிரபஞ்சன்.

அவன் வரும் சத்தம் கேட்டதுமே எழுந்து நின்றவள், அவனை பார்க்க இயலாமல் தலையை கவிழ்ந்துக் கொண்டாள். நிச்சயம் பயத்தினால் அல்ல, தான் கெஞ்சியும் தன் கழுத்தில் தாலிக்கட்டி விட்டவனின் முகம் பார்க்கக்கூட அவள் விரும்பவில்லை.

அவனோ கதவை தாழ்ப்பாள் இட்டவன், அவளையே மேலிருந்து கீழ் வரை உரிமையாக பார்த்தான்.
சிறிய குடை ஜிமிக்கி அவளது காதோரம் அழகாய் பொருந்தி இருக்க, லேசாக மை தீட்டிய கண்கள் தரையை பார்த்துக் கொண்டிருக்க, அவளது தலையில் சூடிய மல்லிகைப்பூவின் மணம் அவனது நாசியில் நுழைந்து திக்குமுக்காடச் செய்தது. அவள் மீது கோபம் தான் அதுவும் அவள் மீதுள்ள உரிமையில் வந்த கோபம்.

ஆனாலும் அந்த நொடி அவளைக் கண்டதும் அனைத்துமே மறைந்தது போன்ற உணர்வு மேல் எழும்பியதை அவன் மட்டுமே அறிவான். இருந்தும் அவன் அழுத்தமான பார்வை பார்த்தபடி அவளருகே வந்தான். என்ன தான் கோபம் மட்டுபட்டாலும் அவள் கொடுத்த வலி அது ஆறுவது கடினம் தானே.

"என்னை பார்த்துமே எழுந்து எல்லாம் நிக்குற பயமா? இல்லை பதட்டமா?" என்ற அவனது கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளது பார்வையே கூறியது தனக்கு பயம் எதுவும் இல்லையென்று.

'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை' என்று நினைத்துக் கொண்டே "சரி உட்காருங்க மிஸ்சஸ் பூவினி பிரபஞ்சன்." என்றான் உரிமையாக.

அவனும் அமர்ந்துக் கொள்ள, அவளோ சற்று இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்துக் கொண்டாள். அதில் சற்று கடுப்படைந்தவனோ,

"நான் ஒன்னும் உன்னை கடிச்சு திண்ணுட மாட்டேன்." என்றான் காட்டமாகவே.

அவன் அவ்வாறு கூறியதும் ஓர விழியில் அவனை முறைத்தவளோ, 'ரொம்ப தான்' என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டாள்.

" நிறைய கேள்வி இருக்கு பூவி. ஏன் அப்படி அறிவே இல்லாமல் சொன்ன?" என்ற அவனது கேள்விக்கு பதில் கூறாமல் எங்கயோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பூவினி.

"உன்னை தான் கேட்டேன்." என்று மீண்டும் அவன் கேட்டும் பதில் அளிக்காமல் இருக்க,

" முதல்ல என்னை பாருடி" என்று அவளது தோள்பட்டையை பிடித்து அழுத்தமாக அவன் கூறியதும் பட்டென்று அவனை திரும்பி பார்த்தாள் பூவினி.

"நீங்க ஏன் நான் அப்படி சொல்லியும், அறிவில்லாமல் தாலி கட்டினீங்க." என்று முகத்தில் சிறு சலனமின்றி அவளது மெல்லிய குரலில் கேட்டதுமே, அதுவரை அவன் அடக்கி வைத்த கோபம் மீண்டும் எழுச்சியோடு எழுந்தது.

கட்டிலிலிருந்து பட்டென்று எழுந்தவன் தன் தலையை ஆழ்ந்துக் கோதியபடி தன் கோபத்தை உள்ளடக்கிக் கொண்டான். அவளும் உடன் எழுந்தவள் மௌனியாக நின்றாள்.

"வார்ரே வா....ரொம்ப நல்லா பேசுறடி. உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைனா அப்போவே சொல்ல வேண்டியது தானா? ஏன் தாலிக்கட்டுற நேரத்துல வந்து சொல்லுற? ஒருவேளை நீ வேற யாரையாவது விரும்புறியா?" என்ற கடைசி கேள்வியை கேட்கும் போதே ஒரு வித ரணம் அவனுள் தோன்றியது.

"காதல்னாலே வெறுப்புனு இருக்கப்போ நான் ஏன் காதலிக்க போறேன்." என்றவளது பதில் தான் மீண்டும் அவனை உயிர்பித்து கொள்ளச் செய்தது.

"அப்புறம் என்ன தான் உன் பிரச்சனை?"

"அம்மாக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனால் இது சரி வராதுனு தோணுச்சு." என்று பட்டும் படாமல் கூறியவளை நெருங்கியவன்,

"ஏன் பூவி உனக்கு அப்படி தோணுச்சு?என்னை நிஜமாவே பிடிக்கலையா? இல்லை வேற எதாவது காரணமா?"

"சிகரெட் பிடிக்குறவங்க, தண்ணீ அடிக்குறவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது."

"ஏய் இது தானா உன் பிரச்சனை. இந்த நொண்டி சாக்குக்காகவா கல்யாணம் வேண்டாம்னு நினைச்ச. தண்ணி எல்லாம் நான் அடிச்சதில்லைடி. சிகரெட் அன்னைக்கு அடிச்சேன். அதுக்கு அப்புறம் நீ சொன்னதுல இருந்து தொடுறது இல்லை. " என்றான் தன்மையாக.

'எவ்வளவு அழகா பொய் சொல்றான்.' என்று நினைத்தவளோ "எனக்கு தூக்கம் வருது." என்று கூறிக் கொண்டே நகர்ந்து சென்றவளின் கரத்தை பற்றினான் பிரபஞ்சன்.

அவனது திடிர் செயலில் அவளது இதயம் தாறுமாறாக துடிக்க, அதைக் கட்டுப்படுத்திக் கொண்டே என்ன என்பது போல அவனைப் பார்த்தாள் பூவினி.

"இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கு பாப்பு." என்று கூறிக்கொண்டே அவளது அருகில் வந்தவன், அவளுக்கு மிக நெருக்கமாக நின்றான்.

அவனது பார்வை அப்பப்பா அவளது கண்களை அங்குலம் அங்குலமாய் ரசித்து காதலால் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது.

"முதல் பார்வையிலேயே அப்படி ஒரு தாக்கம்டி . அந்த தாக்கத்துல இருந்து இன்னும் நான் வெளி வரவே இல்லை பூவி. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், அந்த காதல் மாறாமல் நம்ம வாழ்க்கையை வாழனும்னு நினைக்குறேன். காலையில நடந்த விசயத்தை இன்னையோட மறந்திடுவோம். இனி நீயும் நானும் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையை அழகானதாக மாற்றுவோம். ஐ லவ் யூ பாப்பு. " என்று கூறிக்கொண்டே அவளது நெற்றியில் இதழ் பதித்ததில் அவனது நெருக்கமும், அவனது தீண்டலும் அவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்தது.

அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலக நினைத்தவனது மனமோ காட்டிப்போட்டது போன்று அவளை விட்டு விலக மறுத்திருக்க, அவளது அதிர்ந்த விழிகளையே இரசித்தவன், "பாப்பு பயங்கரமா இருக்கேடி. உன்னைவிட்டு நகரவே முடியலைடி." என்றான் காதலோடு.

அவளது கருவிழி கண்களோ படபடத்துக் கொள்ள, அவனது ஸ்பரிசம் அவளை சில்லிடச் செய்ய, தன் எச்சிலை விழுங்கியபடி தன் அதரங்களை நாவினால் ஈரப்படுத்திக் கொண்டாள் பயத்தில்.

அவளது செயல் அவனது ஹார்மோன்களை தாறுமாறாக எகுற வைத்திருக்க, அவளது ஈர இதழ்களை பருக வேண்டிய தாபம் அவனுள் எழுந்தது. ஏனோ தனக்கே உரியவள், தனக்கே உரிமையானவள் என்று காதல் மனம் கர்வத்தோடு பிதற்றல் நடத்திக் கொண்டிருந்தது அவனது மனதில்.

"எதோ ஒரு தயக்கம் என்கிட்ட உனக்கு இருக்கு பூவி. அது மாறனும். அது மாறனும்னா நீ எனக்கு வேணும்." என்று அழுத்தமாக தொடங்கிய வார்த்தைகள் இறுதியில் கிசுகிசுப்பான குரலில் முடிய, அதிர்ந்தது என்னவோ பூவினி தான்.

"இல்லை இப்போவே வேண்டாம்." என்று பயத்தில் வந்தது அவளின் வார்த்தைகள்.

வேண்டும் என்று நினைக்கும் மனதை, வேண்டாம் என்ற வார்த்தைக் கொண்டு தடைபோட்டாலும், வேண்டும் என்ற மனம், மேலும் மேலும் வேண்டும் என்று நினைக்குமாம். அது தான் அவனுக்கும் தோன்றியது போல, அவளது முகத்தை தன் இரு கைகளால் ஏந்தியவன் அவளின் மென்மையான இதழ்களில் முத்தம் பதிக்கச் சென்றான்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 11

சடுதியில் சுதாரித்தவள் தன்விரல் கொண்டு அவனது உதடுகளை தடுக்க மெல்லிய இதழ் ஒற்றலை அவளின் பூவிரல்களுக்கு பரிசளித்திருந்தான் பிரபஞ்சன்.

அவனது இதழ்பட்ட நொடி பட்டென்று கைகளை அவள் எடுக்க, வசீகர சிரிப்பொன்றை உதிர்த்தான் அவளின் காந்தன். அந்த நொடி பதட்டத்தோடு அவளின் கருவிழிகள் அவனையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தது.

"போடி போய் தூங்கு." என்று கூறிக்கொண்டே அவளிடமிருந்து பிரிந்தவன், கட்டிலின் மறுப்பக்கத்தில் வந்து படுத்துக் கொள்ள, அவனைப் புரிந்துக் கொள்ள முடியாத பார்வை பார்த்தபடி நின்றாள் பூவினி.

"போதும் பாப்பு. எவ்வளவு நேரம் தான் சைட் அடிப்ப. தூக்கம் வருதுனு சொன்னல்ல வந்து தூங்கு" என்றவனது கண்களில் தெரிந்தது குறும்பு.

அவன் அவ்வாறு சொன்னதும் முறைத்துக் கொண்டே வந்தவள் கட்டிலில் இருந்த போர்வையையும் தலையணையும் எடுக்க, அவளது கைகளை பிடித்து நிறுத்தியவன்,

"நிறைய படம் பார்த்து கெட்டு போய்ட்ட. வந்து மேல படுடி." என்று அவன் கண்டிக்கவும், வேண்டா வெறுப்பாக கட்டிலின் மறுபுறத்தில் வந்துப் படுத்துக் கொண்டாள்.

கையளவு இடைவெளி தான் இருவருக்கும் இடையில், இருந்தும் இணைய மறுத்திருந்தது இருவரின் மனமும்.

'இவன் என்ன வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு பேசுறான். கிட்ட வரான். அவனே விலகியும் போறான். இவன் நல்லவனா கெட்டவனா?' என்று நினைத்துக் கொண்டே திரும்பி படுத்துக் கொண்டவளது மனதில் ஓராயிரம் கேள்விகள் தோன்றாமல் இல்லை.

தனக்கு முதுகு காட்டிப் படுத்தவளை, திரும்பி ஓரக்கண்ணால் பார்த்தவன், 'தாலிக்கட்டுன பொண்டாட்டி பக்கத்துல இருந்தும், திருட்டு தனமா சைட் அடிக்குறவன், நானா தான் இருப்பேன். ஹேய் பாப்பு நாளையில இருந்து இந்த பிரபாவோட வேற ஒரு ரூபத்தை பார்க்கப் போற' என்று மனதிற்குள் கூறும்போதே அவனது மனசாட்சியோ 'கால்ல விழுந்துட போற அதான்ன?' என்று வாறிவிட, 'இல்லை காதலிக்க வைக்கப் போறேன்' என்று மனசாட்சியின் மண்டையிலேயே ஒரே போடு போட்டவன், நாளைக்கான விடியலை எதிர்ப்பார்த்து, தன் கண்களை மூடினான்.

விடியலுக்கான நேரம் பிரபஞ்சத்தில் தொடங்கி இருக்க, இலைகளின் மீதிருக்கும் பனித்துளிகள் ஒவ்வொன்றாய் கரைந்து பின் மறைந்து போக, அவளின் கூந்தல் நுனியில் சொட்டு சொட்டாய் விழும் நீர்துளிகள் ஒவ்வொன்றும் மறையாமல் கரைந்திடாமல் பிரபஞ்சனின் முகத்தில் மீதே விழுந்து சிதறியது.

அதில் கண் விழித்தவனை சிரித்த முகத்தோடு வரவேற்றாள் பூவினி. தன் கண்களை கசிக்கியவன் அவளது அழகில் விழித்து பட்டென்று எழுந்தான். உதடுகளோடு கண்களும் சிரிக்குமா? சிரிக்கின்றதே அவளது வதனத்தில். அவளது பூமுகத்தில் லய்த்தவன் தன் வசீகர புன்னகையை அவளுக்கென சமர்பித்தான்.

அவளோ, தன் செந்தாமரை இதழ்களை விரித்து, முத்துப்பற்கள் தெறிக்க "எழுந்துட்டீங்களா மாமா. இந்தாங்க காபி." என்று அவன் புறம் நீட்ட, குழம்பியை(காபி) வாங்கி மேசையில் வைத்தவன் எட்டிச் சென்று அவளின் இடையினை வளைத்து இழுத்து, நொடி பொழுதில் தன் மடியில் கிடத்தியிருந்தான் பெண்ணவளை.

"ஹே பாப்பு... இன்னொரு முறை சொல்லுடி மாமானு." என்று ஆவலோடு கேட்கும் அவனது உதடுகள் அவளது செவிமடலினைத் தீண்ட, அதில் நெளிந்தவள்,

"விடுங்க மாமா. அத்தை தேடுவாங்க" என்று சிணுங்குபவளை தன் புறம் வளைத்து தன்னை நோக்கி திருப்பினான்.

"ஏன்டி காலங்காத்தாலையே, உன் மாமனை இப்படி உசுப்பேத்திட்டு, இப்படி சொன்னா எப்படி?"

"மாமா விடுங்க. நிறைய வேலை இருக்கு."

"மாமனை கவனிக்குறது தவிர உனக்கு என்ன வேலைடி பாப்பு." என்று கூறிக்கொண்டே அவளின் இதழ்களை நெருங்கிச் சென்றான்.

அவனது நெஞ்சினை தன் இரு கைகளால் பலம் கொண்டு அவள் பிடித்து தள்ளியிருக்க, பொத்தென்று கட்டிலிலிருந்து விழுந்திருந்தான் பிரபஞ்சன்.

பின் அடித்து பிடித்து எழுந்தவனுக்கு, அதுவரை தான் கண்டது உண்மை என்று நம்பியவனுக்கு, அது கனவு என்று புரியவே சில வினாடிகள் எடுத்தது.
மங்களாக தெரிந்த தன் கண்களை உற்று பார்க்க, அங்கு பத்ரகாளி போல் கைகளில் சூலத்தோடு, முறைத்தபடி நின்றிருந்தாள் பூவினி. தன் கண்களை நன்கு கசக்கியவன், தெளிவாக அவளைப் பார்க்க அப்போது தான் நேற்று இரவு பார்த்த அதே சேலையில் இருப்பதைக் கண்டான்.

"என்னாச்சுடி, எங்க என் காபி, ஆமா நீ வேற சேலை தானா கட்டியிருந்த?" என்று தலையை பிடித்துக் கொண்டே கேட்டான் அதிர்ச்சி விலகாமல்.

"பண்றது எல்லாம் பண்ணிட்டு, கேட்குற கேள்வியை பாருங்க?"

"நான் என்னடி பண்ண? நீ எங்க என்ன பண்ணவிட்ட? ஒரு நிமிசம் அப்போ நான் கண்டது எல்லாம் கனவா?" என்று கேட்பவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது ஏமாற்றம்.

சற்று முன்பு, அதிகாலை நான்கு மணி அளவில் அவன் கண்ட கனவில் பூவினி அவ்வாறு தோன்ற, அவளை பிடிப்பதாக நினைத்துக் கொண்டே அருகில் படுத்திருந்தவளை பிடித்தவனது கைகள் அவளது தேகத்தை தீண்டி விளையாடிக் கொண்டே அவளின் இதழில் விளையாடச் செல்ல, அதில் பட்டென்று எழுந்தவள் அவனது செயலில் இருந்து தப்பிக்கும் பொருட்டு அவனை ஓங்கி தள்ளியதில் தான் பிரபஞ்சன் கட்டிலிலிருந்து விழுந்தான். அவள் நடந்தவற்றை கூற அதைக் கேட்டவனோ, அதிர்ச்சியில் பட்டென்று எழுந்தான்.

"அடியேய் தூக்கத்துல எதோ தெரியாம பண்ணதுக்கு இப்படி தான் தள்ளிவிடுவியா?" என்று அவளை முறைக்கவும் தவறவில்லை.

"தூக்கத்துல பண்ணதுனால தள்ளி விடுறதோட போச்சு. நிஜத்தில பண்ணியிருந்தால் இவ்வளவு சாதாரணமால்லாம் விழுந்திருக்க மாட்டிங்க மிஸ்டர் பிரபஞ்சன், பிரபஞ்சத்துக்கு அப்பால போய் விழுந்திருப்பீங்க." என்று சொல்லும் போதே அவளது இதழில் குறுநகை படர்ந்திருக்க,

"எது... அடிங்கு என்ன பேச்சு பேசுற நீ? உன்னை...." என்று அவளை நோக்கி நகர்ந்து வர, அதுக்குள் குளியலறைக்குள் ஓடிச் சென்றாள் பூவினி.

குளியலறைக்கு சென்றவளுக்கு தன்னை நினைத்தே வினோதமாக தான் இருந்தது. அவன் மீது கோபமும் வருகிறது, அதே சமயம் அவனோடு பேசவும் பிடிக்குறது. நேற்று தன்னை நெருங்காமல் சென்று படுத்துக் கொண்டதனால் அவன் மீது சிறு நல்லெண்ணம் தோன்றிவிட்டதோ? என்றெல்லாம் பல்வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தது பெண்ணவளின் மனதில்.

அதுவும் உண்மைதான். நேற்று அவன் மட்டும் உரிமை எடுத்திருந்தால் நிச்சயம் அங்கு ஒரு பிரளயமே நடந்திருக்கும். ஏற்கனவே கோபத்தில் இருந்தவள், சுனாமியாய் பொங்கியிருப்பாள். அவன் அவ்வாறு செய்யாமல் இருந்ததாலே அவன் மீது சிறு நன்மதிப்பு தோன்றியிருந்தது பூவினிக்கு.

"என்ன தள்ளு தள்ளிட்டா இந்த இராட்சசி. அடேய் பிரபஞ்சா இவ உன்னை மாமானு எல்லாம் கூப்பிடுவானு கனவுல மட்டும் தான், நீ எதிர் பார்க்கனும் போலயே. இதுல மேடம் நம்மளை கலாய்க்க வேற செய்யுது. இருடி பூவி உனக்கு இருக்கு." என்று புலம்பிக் கொண்டு மீண்டும் கட்டிலின் மீது படுத்துக் கொண்டான்.

"ஆனால் அந்த கனவு செம...." என்று கூறும் போதே அவனது இதழ்களில் புன்முறுவல் பூத்திருந்தது.

குளித்து முடித்து வந்தவள் அடர் பச்சை நிற சேலையில், அதற்கு ஏற்ப அதே நிற பொட்டும் இட்டு, தன் தலையை துடைத்துக் கொண்டே வந்தாள். சிறிய குளியலறை என்பதால், சேலையை ஒழுங்காக கட்ட இயலவில்லை. வெளியே வந்து கட்டலாம் என்றால் பிரபஞ்சன் வேறு இருப்பான். என்று நினைத்துக் கொண்டே சரியாக மடிப்பு எடுக்காமல் கட்டிக்கொண்டு வந்தவளுக்கு, கட்டிலின் மீது உறங்கும் தன் கணவன் கண்களில் பட, நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தவள், சேலையினை கலைத்து சரியாக மடிப்பை எடுத்துக் கொண்டிருந்தாள்.

'ஏன்டி பூவினி. அவனை பார்த்து நீ பயப்படுற மாதிரில தெரியுது?' என்று அவளுக்குள் இருக்கும் மனசாட்சி கேட்க, " பயமா... எனக்கா.. அவன் தான் என்ன பார்த்து பயப்படனும்." என்று திமிராக கூறினாள் பூவினி.

அவள் கதவை திறந்த சப்தம் கேட்டதுமே கண்களை திறந்தவன் வேண்டும் என்றே உறங்குவது போல நடித்தபடி அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் கண்கள் இமைக்காமல்.

"என் பொண்டாட்டி சேலை கட்டுறது கூட அழகு தான்." என்று ரசித்தவன் பார்க்க, அவன் மனமோ, ' கட்டுன மனைவிய திருட்டு தனமா சைட் அடிக்குறியே வெக்கமா இல்லை.' என்று மீண்டும் கேட்காமல் இல்லை.

"மனைவிகிட்ட, வெட்கம், கூச்சப்பட்டவன் எல்லாம், நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லைடா." என்று கூறிக்கொண்டே அவளைப் பார்ப்பதைச் செவ்வென செய்தான் பிரபஞ்சன்.

சேலையை ஒழுங்காக கட்டியதும் அவள் திரும்பி ஒருமுறை பார்க்க, அவனோ கண்களை மூடியபடி உறங்கிக் கொண்டிருந்தான்.

"தூங்கு போது பார்க்குறப்போ குழந்தை மாதிரி தான் இருக்காரு. ஆனால் இவரு நல்லவரா? கெட்டவரா? ஆனாலும் இவருகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்." என்று மீண்டும் தனக்கு தானேக் கேட்டுக் கொண்டே வெளியேச் சென்றாள்.

தாமரை வாசல் கூட்டும் சப்தம் கேட்கவும், விரைந்து சென்றவள், "கொடுங்க அம்மா. நான் பெருக்குறேன்." என்க

" பரவாயில்லைடா பூவிமா. ஆனால் நீ இந்த அம்மா சொல்ற பழக்கம் மட்டும் மாத்த மாட்ட அப்படி தானே"

"சாரிங்க அத்தை. உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் அத்தைமானு சொல்லுறேன்." என்று சிரித்த முகத்தோடு கூறிக்கொண்டே அவரின் கைகளில் இருக்கும் துடப்பத்தை வாங்கியவள், பெருக்க ஆரம்பித்தாள்.

தாமரையும் அவளது உரிமையான பேச்சில் அகம் மகிழ்ந்து புன்னகையோடு அடுப்பங்கறைக்குச் சென்றார்.

பல்லைத் துலக்கிக் கொண்டே வெளியில் வந்த பிரபஞ்சனோ தன் மனையாள் கோலம் போடும் அழகினையே ரசித்துக் கொண்டிருக்க, தன்னை யாரோ கவனிக்கும் உள்ளுணர்வு தோன்றியதில் எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு, "குட்மார்னிங் பாப்பு" என்று கண்ணடித்தான் பிரபஞ்சன்.

அவனை முறைத்தவள், கோலமிடுவதில் கவனம் செலுத்த "இவளுக்கு ஏன் நம்மளை பிடிக்கவே மாட்டிங்குது?" என்ற யோசனையோடு குளியலறைக்கு சென்றான் பிரபஞ்சன்.

அதன் பின் தன் மாமியாரிடம் சென்றவள் பார்க்க, " அத்தைமா காபியும் போட்டீங்களா? இனி நாளையிலிருந்து நான் தான் போடுவேன்." என்று ஆச்சரியம் தொடங்கி இறுதியில் உரிமையோடு கூறினாள்.

" வந்ததுமே மருமகளை வேலை வாங்குறனு எல்லாரும் சொல்றதுக்கா கண்ணு." என்றார் தாமரை பரிவோடு.

"மத்தவங்க ஆயிரம் சொல்வாங்க அத்தைமா. ஏன் மாமியாரை வேலை வாங்குறானு கூட சொல்வாங்க. ஆனால் எனக்கு உங்க கூட வேலை செய்யுறது சந்தோசமா இருக்குதாமரைமா." என்று அவள் கூறியதுமே அவளை பெருமிதமாக பார்த்தார் தாமரை.

"அண்ணி , அண்ணன், பாப்பா எல்லாரும் காணமே அத்தைமா"

"அவங்க நேத்து ராத்திரியே கிளம்பிட்டாங்க பூவிமா." என்று கூறிக்கொண்டே காபியை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார்.

"சரிங்க அத்தைமா." என்றவள் அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

"அப்புறம் பூவிமா. இன்னைக்கு பிரபா கூட காரமடை கோவிலுக்கு போய்ட்டு அப்படியே குல தெய்வ கோவிலுக்கு போய்ட்டு வரணும். பிரபாகிட்ட நேத்தே சொல்லிட்டேன். நீயும் ஒரு தடவை சொல்லிடு கண்ணு."

"சரிங்க அத்தைமா" என்றவளது மனமோ, 'தனியா கோவிலுக்கு போகனுமா?' என்று அடித்துக் கொள்ள தவறவில்லை.
அனைவருக்கும் குழம்பியை எடுத்துக் கொண்டு போய் கொடுத்தாள்.

காபியை வாங்கிக் கொண்ட தென்னவனோ, "தாங்ஸ் அண்ணி." என்று புன்னகையோடு கூறினான்.

"என்ன படிக்குறீங்க தென்னவா?"

"நான் ஈ.சி.ஈ முடிச்சுருக்கேன் அண்ணி. பைனல் செமஸ்டர் எழுதிட்டேன்." என்று புன்னகையோடு கூறினான்.

"ஓ சூப்பர். அடுத்து பிளான்?"

'உங்க தங்கச்சியை மாமானு கூப்பிட வைக்கனும் அண்ணி.' என்று சொல்ல துடித்த நாவினை அடக்கியவன், "வேலை தேடனும் அண்ணி." என்று புன்னகைத்தான்.

" பொறுமையா தேடுங்க. ஆல் தி பெஸ்ட்." என்று புன்னகைத்துக் கொண்டே பிரபஞ்சனுக்கு கொடுப்பதற்காக அறைக்குச் சென்றவள், சுற்றியும் அவனைத் தேட, குளியலறைக் கதவை திறந்து, இடுப்பில் துண்டோடு வந்து நின்றான் பிரபஞ்சன்.

கட்டுக்கோப்பான உடலில் ஆங்காங்கே நீர்துளிகள் படர்ந்திருக்க, தனது தலை முடியினை சிலுப்பிக் கொண்டபடி, வந்து நின்றவனை பார்க்கும் போதே மயக்கம் வராத குறை தான் பூவினிக்கு.

அவனை அக்கோலத்தில் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது அவளின் முகத்தில். அவன் பார்க்கும் முன்னரே வெளியேற துடித்தவள், சட்டென்று தலையை திருப்பிக் கொண்டு அறையிலிருந்து செல்ல,

" எங்க ஓடுற பாப்பு. காபி கொடுக்க தான வந்த? கொடுத்துட்டு போ" என்று அவனின் கம்பீரக்குரலில் கேட்டதுமே, ஒரு நிமிடம் தயங்கியவள், பின் தலையை குனிந்துக்கொண்டே அவனைக் நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
அவள் தலையை குனிந்து வரக் காரணம் அவனின் அந்த தோற்றம் தவிர, வேறு எதுவும் அல்ல என்பதை அவளது வேக எட்டுக்களே காட்டியது.

"காபி" என்று சன்னமான குரலில் அவன் புறம் நீட்ட,

"அதை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து சொல்லலாமே. பயமா என் மேல..."

" பயம் எதுக்கு உங்க மேல?" என்று முறைத்துக் கொண்டே அவனைப் பார்க்க, அவனோ அவளது கண்களை ஊடுருவும் காந்தப்பார்வை பார்த்தான்.

'பார்க்குற பார்வையே சரியில்லையே.' என்று நினைத்தவள், "பிடிங்க காபியை" என்று அவனின் கைகளில் பட்டென்று வைத்தவள் வேகமாக அங்கிருந்து செல்வதற்காக திரும்பியதில், காலிடறி பின்னோக்கி விழுகச் சென்றவளை சடுதியில் தடுத்துப் பிடித்திருந்தான் பிரபஞ்சன்.

இங்கு யாழினியோ கண்விழித்தவள், "அக்கா காபி." என்று கேட்டுக் கொண்டே எழ, "இன்னும் என்ன பண்ற பூவே" என்று எழுந்தவள் சோம்பல் முறிக்க, அவ்விடம் வந்தார் தனலட்சுமி.

அவரைக் கண்டதுமே நிதர்சனம் புரிந்திட, பாவமான பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் எழுந்துச் சென்றாள்.

என்றும் துறுதுறுவென பேசும் மகள், பேசாமல் போவதைக் கண்டு மனம் வருந்திய தனலட்சுமியோ, "யாழி இது தான் மறுக்கப்படாத விதி. பெண்களுக்கான விதி. நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனாலும் நீயும் உங்க மாமியார் வீட்டுக்கு போய்தான் ஆகனும்." என்றார் பெருமூச்சொன்றைவிடுத்து.

"அம்மா. இது விதியில்லைமா சதி. ஏன் பொண்ணு மட்டும் தான் மாமியார் வீட்டுக்கு போகனுமா என்ன? நீ வேணா பாரு, நான் கல்யாணம் பண்ணிட்டு வரவனை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்து காட்டுறேன்." என்று பெருமையாக கூறிக்கொண்டாள்.

"வாய் கொழுப்பு ஜாஸ்திடி உனக்கு. போய் ரெடியாகு. ஏற்கனவே மூனு நாள் காலேஜ்க்கு லீவ் போட்டாச்சு." என்று அதட்டிக் கொண்டே தனது வேலைகளை பார்க்கச் சென்றார்.

குளித்து முடித்து கல்லூரிக்கு தயாராணவள், தனலட்சுமி கொடுத்த உணவினைக் கையோடு எடுத்தவள், "எப்போ மறுவீடு சம்பிரதாயம்மா?" என்று தன் சந்தேகத்தையும் கேட்டாள்.

"நாளைக்கு வரச்சொல்ல வேண்டியது தான். இன்னைக்கு கோவிலுக்கு எல்லாம் போவாங்க."

"அப்போ நானு. நான் லீவ் போட்டு அத்தான் அக்காகூட கிளம்புறேன்."

"நீ எதுக்குடி அங்க போகனும். போ ஒழுங்க காலேஜ் போற வழியை பாரு." என்று முறைத்துக் கொண்டே அவளை வழியனுப்பிய அன்னை அறியவில்லை இன்று தன் மகளுக்கு நேர இருக்கும் ஆபத்தினை. அறிந்திருந்தால் அவளை செல்லவிடாமல் தடுத்திருப்பாரோ என்னவோ.

யாழினியும், "நான் கோபமா போறேன்." என்று நடக்கவிருக்கும் விபரீதம் அறியாது சலித்துக்கொண்டே சென்றாள்.
 
Status
Not open for further replies.
Top