அத்தியாயம் 4
சூரியனின் செங்கதிர்கள் நிர்மலமான காலை வேளையை அலங்கரிக்கும் பொருட்டு அழகாய் மலர்ந்திருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் கந்த சஷ்டி பாடல் வீடு முழுவதும் ஒலிக்க, சாம்பிராணியின் நறுமணம் வீட்டை சுற்றிலும் பரவியிருந்தது.
தனலட்சுமியோ சமயலறையில் மூழ்கியிருந்தவர் காலை உணவினை சமைத்துக் கொண்டிருந்தார். பூவினியோ ஈரமான தன் கூந்தலை உலர்த்துவதன் பொருட்டு துண்டினால் சுற்றிக் கட்டியிருந்தவளது நெற்றியிலிருந்து சொட்டு சொட்டாய் நீர்த்திவலைகள் தேங்கியிருந்தது. மடிப்பு கலையாது பருத்தி புடவையை அணிந்து வந்தவள், முகப்பு அறையில் மாட்டப்பட்டிருந்த சாமி புகைப்படங்களுக்கு தீபாரதனை காட்டிக் கொண்டிருந்தாள்.
தீபத்தின் வெளிச்சம் அவளது மாநிற தேகத்தை பளபளக்கச் செய்திட, தெய்வீக கடாட்சத்தோடு மிளிர்ந்தவள் தன் பூ விரல்களைக் கொண்டு அங்கிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் சிறு கீற்றாய் இட்டாள்.
அதேநேரம் குளித்து முடித்து ஈரம் சொட்டும் தலையுடன் யாழினி வர, "இவ இருக்காளே.." என்று தலையில் அடித்துக்கொண்டவள் துண்டினை வாங்கி அவளது தலையை துடைத்து விடவும் தவறவில்லை.
"ஆஹா என்ன சுகம் என்ன சுகம். அப்படியே தூங்குனா நல்லாயிருக்குமே" என்று கண்களை மூடி கூறும் தன் தங்கையின் கைகளிலே ஒரு போடு போட்டவள்,
"இருக்கும்டி இருக்கும். ஏன் இருக்காது, தலையை ஒழுங்கா துடைக்காமல் உனக்கு சேர்த்து நான் துடைச்சு விடுறேன்ல." என்று அவள் சிடுசிடுக்கும் போதே அங்கு வந்தார் தனலட்சுமி.
"ஏன்டி யாழி இப்போ அக்கா இருக்கனால அவ துவட்டி விடுறா? நாளை பின்ன கல்யாணம் ஆகி போனா என்னடி பண்ணுவ?" என்று கேட்கும் தன் தாயை திரும்பி பார்த்தவள்,
"அதுக்கு உன் தவப்புதல்வி கல்யாணம் பண்ணனுமே தனலட்சுமி. நீயும் நானும் கனவு கண்டுகிட்டே இருக்க வேண்டியது தான்" என்று விளையாட்டாய் யாழி கூறினாலும் தனலட்சுமியின் மனம் காயப்பட்டது என்னவோ உண்மை தான்.
சட்டென்று கண் கலங்கியவர், " வெள்ளிக்கிழமை அதுவுமா பேசுற பேச்சு பாரு. நான் சந்தோசமாகவே இருக்கக்கூடாதுனு, என் பொண்ணுங்க இரண்டும் கங்கனம் கட்டிகிட்டு இருந்தால் நான் என்ன தான் பண்ணப்போறனு தெரியலை" என்று மனம் நொந்து அவர் அழுகவும் தன் தாயிடம் சென்ற பூவினி அவரது கைகளை வாஞ்சையோடு பிடித்துக் கொண்டாள்.
"அம்மா எதுக்குமா அழுகுற. அவ சும்மா சொல்றானு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். பின்ன ஏம்மா?" என்று அடிக்குரலில் கேட்க,
யாழினியோ, "சாரிம்மா. இனி நான் அப்படி சொல்ல மாட்டேன்." என்று அம்மாவை தாவி அணைத்துக் கொண்டாள்.
ஒரு மகள் யாழினி தோளில் சாய்ந்திருக்க, பூவினியின் கரங்களை பிடித்திருந்த தாயுள்ளமோ விரக்தியில் மேலும் கண்கலங்கியது.
"அவ சொல்ற மாதிரி தான பூவினி நீயும் நடந்துக்கிற? ஆனால் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதடிம்மா. அம்மா எவ்வளவு கவலைப்பட்டாலும் பரவாயில்லை நான் கல்யாணம் பண்ண மாட்டேனு ஒத்த கால்ல நிக்குற பார்த்தியா? உங்க அப்பா இருந்திருந்தால் இன்னேரம் உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சு சந்தோசப்பட்டிருக்க மாட்டாரா சொல்லு? இல்லை நான் தான் சரியான அம்மாவா நடந்துக்கலை போல" என்று அவரே கேள்வியும் கேட்டுக் கொண்டு, பதில்களையும் அழுத்தமாக கூறியபடி தனது இயலாமையை எண்ணி விசும்பினார்.
"அம்மா என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. உனக்கு என்ன கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே. நம்ம குடும்பத்துக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளையா பாரு. நான் கல்யாணம் பண்ணிக்குறேன்." என்று அவள் கூறியதுமே நிஜமாவா சொல்ற? என்பது போல தனலட்சுமி ஒரு பார்வை பார்க்க, அதை புரிந்துக் கொண்டவள், "என்னை நம்புமா?" என்று ஆழ்ந்து பதில் பார்வை பார்த்ததில் தன் மகளை வாஞ்சையோடு கட்டிக் கொண்டார்.
ஒரு புறம் யாழினியும் புன்னகையோடு, "ஐ ஜாலி அக்கா கல்யாணத்துல ஒரு கலக்கு கலக்கிட வேண்டியது தான்" என்று புன்னகைக்க, பூவினியின் மனமோ கலங்கி தான் போயிருந்தது.
'சாரிமா. இப்போதைக்கு உன் மனச சரி பண்றதுக்காக அப்படி சொன்னேன். ஆனால் அந்த மாதிரி நல்லவர் எல்லாம் கிடைக்குறது கஷ்டம்மா.' என்று நினைத்து தன் தாயை சமாதானம் செய்து வைத்த நிம்மதியோடு வேலைக்கு சென்றவள் அறியவில்லை அவள் கூறிய வார்த்தைகள் எத்தகைய தாக்கத்தை அவள் வாழ்வில் ஏற்படுத்தும் என்று.
பூவினி வேலைக்கும், யாழினி கல்லூரிக்கும் சென்று விட, தனலட்சுமி வீட்டில் உள்ள வேலைகளை பார்க்கத் தொடங்கினர். தன் மகள் அவ்வாறு கூறியதிலிருந்தே அவரின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. துணிகளை துவைத்தவர் அதை வரிசையாக வெளியே காயப்போட்டுக் கொண்டிருக்க,
அவ்விடம் தன் கணவனை அழைத்துக் கொண்டு வந்திறங்கினாள் மாதுளா.
"என்னங்க இதுல எந்த வீடுனு உங்களுக்கு தெரியுமா?"
" முன்ன பின்ன வந்திருந்தா தானடி மாது தெரியறதுக்கு? அக்கம்பக்கத்துல விசாரிப்போம். அவங்க பேரு எதோ லட்சுமினு முடியும். வா கேட்டு பார்ப்போம்." என்று விதுரன் கூற, அவனோடு சேர்ந்து சென்று விசாரிக்கத் தொடங்கினாள்.
அங்கிருந்த பெட்டிக்கடைக்கு சென்றவள், " இங்க லட்சுமி அம்மா வீடு எங்க இருக்குனு தெரியுமாங்க அக்கா." என்று மொட்டையாக கேட்க, அவளை கேள்வியாய் பார்த்தார் கடைக்காரப் பெண்மணி.
"எந்த லட்சுமி இப்படி மொட்டையா சொன்னா எப்படிமா சொல்லுறது. என் பேரு கூட மகாலட்சுமி தான். ஒரு வேளை என்ன தான் தேடுறீகளோ?" என்று அவர் கேட்டதும் திருதிருவென விழித்தவள்,
"என்னங்க இங்க கொஞ்சம் வாங்க... இவங்க பேரு லட்சுமி தானாமாங்க" என்று தன் கணவனை அழைத்தாள்.
விதுரனோ சந்தேகமாக பார்த்தவன், "எனக்கு என்னமோ இவங்க இல்லைனு தோணுது மாது" என்று தன் மனைவியின் காதோரம் கூற,
"எப்படிங்க சொல்றீங்க?" என்று வியப்பாக அவள் கேட்க, அவனோ " எனக்கு அப்படி தான் தோணுது. எங்க சொந்தகாரங்க முகத்தில ஒரு சாந்த கலை தெரியும். இவங்களை பாரேன் பார்த்தாலே அர்னால்டுக்கு அண்ணன் பொண்ணு மாதிரியில்ல இருக்காங்க" என்றான்.
" யாருங்க அர்னால்டு உங்க பிரண்டா?" என்று வெகுளித்தனமாக அவள் கேட்க, தன் தலையில் அடிக்காத குறையாய் பார்த்தவன் "இல்லடி உங்க சொந்த ஊருல இருக்க பொன்னுசாமி மகன் ராமசாமியோடு அம்மா மாதிரியே இருக்காங்க பாரு."
"ஓ ஓ... இதை முன்னாடியே தெளிவா சொல்ல வேண்டி தானே" என்றவள் மேலும் "ஆமாங்க அப்படி தான் இருக்காங்க" என்று ஆமோதித்தாள்.
இருவரின் சம்பாஷணைகளை கண்டு குழப்பம் கொண்ட கடைக்கார பெண் லட்சுமிக்கோ சந்தேகம் துளிர்க்காமல் இல்லை. 'இதுங்க முழிக்குற முழியே சரியில்லையே' என்று மனதில் நினைத்துக் கொண்டே, "நீங்க இரண்டு பேரும் பேசிக்கிறது பார்த்தாலே தப்பால்ல தெரியுது. யாரு நீங்க? இந்த ஏரியால உங்களை பார்த்தது இல்லையே?" என்றாள் அதட்டலான குரலில்.
"அக்கா நாங்க லட்சுமி அம்மாவை தேடி தான் வந்தோம். என் தம்பிக்கு பொண்ணு பார்க்க, அவங்களுக்கு பொண்ணு இருக்காமே. அதான் விசாரிச்சுட்டு போவோம்னு வந்தோம். அவங்க எங்க தூரத்து சொந்தம் தான் " என்று பதட்டம் குறையாமல் மாதுளா கூற விதுரனும் தலையை ஆட்டினான்.
அவர்களது பேச்சில் தெரிந்த நம்பகத்தன்மையின் காரணமாக, நம்பிய கடைக்காரப் பெண் லட்சுமியோ " தனலட்சுமியை தேடி வந்திருக்கீகளா? அவக வீடு அங்க இருக்க பச்சை கலர் வீடு தான்." என்று புன்னகை முகமாக கூறினாள்.
பதிலுக்கு புன்னகையோடு விதுரனும் மாதுளாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மாதுளாவோ தன் கணவனை பார்த்து, "அவங்க பேரு தனலட்சுமி ஒரு பேரு சரியா தெரியாமல் இருக்கீங்க பாருங்க" என்று கடிந்தாள்.
" ஒரு பேருக்கு போய் இப்படி திட்றியே மாதுமா இது உனக்கு படுதா நியாயமா?" என்றவனை ஓரக்கண்ணால் முறைத்தவள் மகாலட்சுமியை பார்த்து,
"ரொம்ப நன்றிங்க அக்கா. அப்புறம் அவங்க பொண்ணு எப்படிக்கா. நல்ல அமைதியான பொண்ணா?" என்று விசாரிக்கும் பொருட்டு கேட்டாள் மாதுளா.
'எங்க விசாரிக்கலையோனு நினைச்சேன். இதோ ஆரம்பிச்சுட்டாடா.' என்று மெச்சுதலாக தன் மனையாளை ஒரு பார்வை பார்த்தான் விதுரன்.
"தனத்தோட இரண்டு பொண்ணுங்களுமே தங்கக்கட்டிங்க தான். மூத்தவ பூவினி ரொம்ப பொறுப்பு. எங்க தேடுனாலும் இந்த மாதிரியான பொண்ணு உங்களுக்கு கிடைக்க மாட்டா" என்று பாராட்டு பத்திரம் அவர் வாசித்தில் வாய் நிறைய பற்களை காட்டி சிரித்தவள்,
"ரொம்ப சந்தோசம் அக்கா. நாங்க போய் பார்க்குறோம்" என்று கூறிக்கொண்டே தன் கணவனை அழைத்துக் கொண்டு தனலட்சுமியின் வீட்டை நோக்கி சென்றாள்.
"என்ன மாது வாய் நிறையா பல்லாக இருக்கு? பொண்ணு தான பார்க்கப் போறோம். எதுவும் டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்குறதுக்கு போலயே?" என்று விதுரன் வாறியதில், அவனது வயிற்றிலேயே முழங்கைகளால் ஒரு இடி இடித்தாள் மாதுளா.
அந்த ஒரு இடியோ நங்கூரம் போல் பாய்ந்ததில் சத்தமே இல்லாமல் மனதில் அழுத விதுரனது மனமோ, 'அடிப்பாவி உன்னை கட்டிக்கிட்டதுக்கு இன்னும் என்னென்ன அடியெல்லாம் வாங்கப்போறேனோ' என்று இரத்த கண்ணீர் வடித்தது.
"நான் நல்ல மூடுல இருக்கப்போ என்னை கடுப்பேத்துறதையே வேலையாக வெச்சுட்டு இருக்கீங்க" என்றவள் முகத்தை ஒரு வெட்டுவெட்ட.
"சரி சாரிடி மாதுமா மாமன் காமெடிக்கு சொன்னதை இவ்ளோ சீரியஸாக எடுத்துக்கிட்டா எப்படிடி செல்லம்" என்று அவளை செல்லம் என்று சொல்லி சமாதானம் செய்ய, அதற்குள் தனலட்சுமியின் வீட்டை அடைந்தனர் இருவரும்.
'எப்படி எல்லாம் சொல்லி இவளை சமாளிக்க வேண்டியதாக இருக்கு. தப்பே பண்ணாட்டியும் சாரி கேட்குறது தான் புருச லட்சனம்" என்று மனதில் சலித்துக் கொண்டபடி வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியிருந்தான் விதுரன்.
துணிகளை துவைத்து முடித்து உள்ளே சென்றிருந்த தனலட்சுமியோ, கதைவை திறந்து வந்தவர், "யாருங்க வேணும்?" என்று கேட்டார் சாந்தமாக.
"நான் விதுரன் இவங்க என் மனைவி மாதுளா, குளத்துக்கரை ராமலிங்கம் அவங்க என் பெரியப்பா. அவங்க சொல்லி தான் இங்க வந்தோம். உங்க தூரத்து சொந்தம் தான் நாங்க." என்று கூறி முடித்தான்.
வீட்டிற்கு வந்தவர்களை வெளியே நிற்க வைத்து பேச மனம் இல்லாமல் தனமும் இருவரையும் உள்ளே அழைத்து அமர வைக்க, மாதுளாவின் கண்கள் தன் அம்மாவின் தோள் மீது சாய்ந்து இருப்பது போன்ற பூவினி யாழினியின் புகைப்படம் கண்ணில் படவும், 'இரண்டு பொண்ணுங்களுமே நல்ல லட்சனமாக தான் இருக்காங்க' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
தனலட்சுமியோ, " நீங்க சொன்ன ஊரையே நான் இப்போ தான் கேள்வியேப்படுறேன். தப்பா எடுத்துக்காதீங்க என் கணவர் இறந்ததுல இருந்து அதிகமாக எந்த சொந்தக் காரர்களோடையும் பேச்சு வார்த்தையே இல்லை. அதுனால தான் நீங்க யாருனு எனக்கு தெரியலை" என்று தனலட்சுமி கூறியதுமே யோசனையில் திளைத்தவனுக்கு அப்போது தான் லட்சுமியின் கணவர் பெயர் நியாபகம் வந்தது.
"அம்மா உங்க கணவர் பெயர் சத்யராஜ் தானம்மா?" என்று தன் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் விதமாக கேட்டான்.
"இல்லைங்க. என் கணவர் பெயர் சரவணன்." என்று தனலட்சுமி சொன்னது தான் தாமதம் தன் நெற்றியை நீவியவன் தன் மனைவியின் காதருகே சென்று, "மாது நம்ம மாறி வந்துட்டோம்டி" என்று கிசுகிசுக்க,
அதில் அதிர்ந்தவளோ, "என்னங்க சொல்றீங்க?" என்று வாயை பிளக்க, இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
எங்கும் பரபரப்பாக கல்லுரிகள் இயங்கிக் கொண்டிருக்கும் சாலை தான் சரவணம்பட்டி, அங்குள்ள எஸ்.என்.எஸ் கலைக்கல்லூரியில் தான் யாழினி முதலாம் ஆண்டு கணிதம் பயின்றுக் கொண்டிருக்கிறாள். பேருந்தில் இறங்கியவள் தன் கல்லூரிக்குள் செல்வதற்கு முன் தன் தோழி பிரியாவுடன் அருகில் இருந்த பேக்கரிக்கு சென்றிருந்தாள்.
"ஏன்டி எத்தனை தடவை சொல்றது. எதுவுமே சாப்பிடாமல் வராதனு. இப்போ பாரு பஸ்ல மயக்கம் போடுற அளவுக்கு வந்துட்ட" என்று திட்டிக் கொண்டே பிரியாவிற்கு தேநீரும், தேங்காய் பன்னும் வாங்கி வந்தாள் யாழினி.
"இல்லடி வீட்டுல அப்பா திட்டிட்டாரு. அதான் கோபத்துல சாப்பிடாம வந்துட்டேன்."
"ஆயிரம் சண்டைகள் வந்தாலும் சாப்பாட்டுல கோபத்தைக் காட்டக்கூடாதுடி. என்ன புரியுதா. நமக்கு எப்போதும் சோறு தான் முக்கியம்." என்று அறிவுரையை அள்ளி வழங்கியவளது மனமோ, 'தத்துவங்கள் வழங்குறதுல உன்னை அடிச்சுக்க முடியாது யாழி' என்று இல்லாத கூலிங் கிளாசை போடுவது போல ஆக்சன் செய்தாள்.
இவள் இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கும் போதே அவளது சீனியர் மாணவன் அவளை பார்த்து கைகாட்ட,
"அய்யோ இவனா? இவன் தொல்லை பெருந்தொல்லையா இருக்கே" என்று தலையை கவிழ்ந்தவள், தன் தோழியை பார்த்து "அடியே சீக்கிரம் சாப்டுடி. இல்லைனா என் ஆவி போய்டும்டி" என்று முணுமுணுத்தாள்.
" ஹாய் யாழ்? வாட்ஸ் ஹேப்பினிங்?" என்று அதற்குள் அவன் இவளிடம் வந்து பேச,
'வந்துட்டான்டா இந்த சூனாபானா சைத்தன்யா.' என்று வாய்க்குள்ளே வசப்பாடியவள், "நத்திங் அண்ணா" என்றதும்
"வாட் அண்ணாவா?. உன்கிட்ட எவ்வளவு தடவை சொல்றது அப்படி கூப்பிடாதனு" என்று அவன் அனல் பார்வை பார்த்தான்.
"அது தெரியாமா வந்திருச்சு சீனியர்." என்று சொன்னாலும் அவளது மனமோ 'அரே சைத்தான் எனக்கு ஒரு காலம் வரும் அப்போ உனக்கு இருக்கு.' என்று அவளது மைண்ட் வாய்சோ மங்கள வாழ்த்தை பாடியது.
"ஓகே அதான்னே பார்த்தேன். நீ எதுவும் சாப்பிடுறியா?" என்று அவன் கேட்க தன் தலையை நீவியவள், இவனிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்தபடியே சுற்றியும் வேடிக்கை பார்க்க, அந்த பேக்கரிக்கு தன் நண்பனோடு வந்திறங்கினான் பிரபஞ்சன்.
கருப்பு நிற சர்ட், வானத்து நிற ஜீன்ஸ், கண்களில் கருப்பு கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக அவன் நிற்க, அவனருகே நின்று குமரனோ எதையோ பேசிக்கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் ஆயிரம் வாட்ஸ் பல்பை போல அவளின் முகம் பிரகாசமாக, "சீனியர் என் அத்தான் வந்திருக்காரு. கொஞ்சம் தள்ளுங்க" என்று கூறிக்கொண்டே ஓடிச் சென்றாள்.
" ஹலோ மிஸ்டர் ஹேண்ட்சம்" என்று அவள் கூறியதுமே, சட்டென்று திரும்பி பார்த்த குமரனும் பிரபஞ்சனும் "நீயா?" என்று ஒரு சேரக் கேட்டனர்.
அதே சமயம் மனதில் இருக்கும் பாரத்தை, கடவுளிடம் இறக்கி வைப்பதற்காக ஆருவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருந்தார் தாமரை. வடமதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான கோவில் தான் விருந்தீசுவரர் கோவில். அங்கு ஈசனை மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார் தாமரை.
"கடவுளே என் பையனுக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்கனும் நீங்க தான் அருள் புரியனும்" என்று மனதார வேண்டியவர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டு வந்தார்.
ஆருவோ, " பாட்டி பொம்மை வேணும்" என்று அடம்பிடித்தக் குழந்தையின் கைகளை பற்றியவர்,
"ஆரு குட்டி. பாட்டி காசு கொண்டு வரலைடா தங்கம். இன்னொரு நாள் வாங்கித் தரேன். சரியா?" என்க.
"போங்க பாட்டி உங்க கூட பேச மாட்டேன். எனக்கு பொம்மை வேணும். இப்போவே." என்று அடம்பிடித்தாள் குழந்தை.
மூன்று வயது குழந்தை ஆரூவை எப்படி தேற்றுவது என்று அறியாமல் அவர் இருந்த மனநிலையில் திட்டிவிட்டார் தாமரை.
தன் பாட்டி அதட்டியதும் உதட்டை பிதுக்கியபடி அழுகையை நிறுத்திய ஆருவோ, "உங்க கூட பேசவே மாட்டேன் டூ." என்று கூறியவள் தன் பாட்டியிடம் கோபித்துக் கொண்டு, கோவிலை விட்டு வெளியில் ஓட,
"ஆரு எங்கம்மா ஓடுற. இப்படி ஓடக்கூடாதுடா பாப்பா" என்று அவரும் ஓட, குழந்தையோ அவர் பேச்சு கேட்காமல் ஓடியதில் எதிரே வந்த காரினை கவனிக்க தவறியிருந்தது.
தாமரையோ , "ஆரு" என்று கத்தவும் அங்கிருந்தவர்கள் "அய்யோ குழந்தையை பிடிங்க" என்று மாறி மாறி கத்திய அனைவரும் அங்கு நடந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.