ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 08(i)


"வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் திரு.யாழ் வேந்தன் மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டு போலியென ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது" சமூக வலைத்தளங்களில் பரவலாய் செய்திகள் ஓடிக் கொண்டிருக்க இசையவளோ பூஜையறையில் நின்று மனமுருக கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தாள்.

ஏனோ பையனின் மீதிருந்த அவப்பெயர் இப்போது முற்றாய் துடைத்தெறியப்பட்டது அவளுக்குள் விதைத்த நிம்மதிக்கு அளவே இல்லை.அவன் காட்டிக் கொள்ளா விடினும் அவனுக்குள் அந்த பொய்ப்பழி சிறு காயத்தையேனும் தந்திருக்காது என்பது நிச்சயம் இல்லையே.

கடவுளிடம் வேண்டி விட்டு கலங்கியிருந்த விழிகளின் ஈரத்தை ஒளித்து வைத்தவளோ நிறைவான புன்னகையுடன் வெளியே வர அங்கு கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து இருந்த ராமநாதனின் மனதில் நிறைவான எண்ணம்.

"அம்மாடி வேந்தன் வந்துட்டானா..?"

"இல்ல மாமா..இப்போ வந்துருவாரு.." பொய்யாய் சமாளித்ததை உண்மையாக்கும் விதமாய் வழமைக்கு மாறாய் சற்றே குறைந்திருந்த இறுக்கத்துடன் உள் நுழைந்தான்,பையன்.

ஏனோ அவனைக் கண்டதும் அவளுக்கு புன்னகைக்கத் தோன்றிற்று.மெதுவாய் யாழவனைப் பார்த்து இசையவள் இதழ் விரிக்க அவனின் இதழ்களுமே மெல்லிய முறுவலை நெளிய விட்டது.

சிறிய தந்தை இருப்பதால் கடமைக்காக புன்னகைத்திடவில்லை,அவன்.மனதின் அழுத்தம் தளர்ந்து குறைந்திருக்க அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றால் ஆழ் மனம் உந்த அவளிடம் முகம் திருப்பிக் கொள்ள முடியாமல் போனது என்பது தான் உண்மை.

எப்போதும் இருக்கும் துள்ளலுடன் இருந்திருந்தால் பாவையவளும் அவன் புன்னைகயைக் கண்டு துள்ளி குதித்திருப்பாள்.மனதில் இருந்த நிர்மலம் அவளின் கற்பனை இறக்கைகளை சற்று மட்டுப்படுத்தியதோ என்னவோ...?

தந்தைக்கும் மகனுக்கும் தனிமை கொடுத்து விட்டு அவள் விலகிச் சென்றிட முதலில் பேச்சைத் துவங்கியது,ராமநாதன் தான்.

நேற்று இருவருக்கும் ஆறுதலாய் பேசிட நேரம் இருக்கவில்லை.ராமநாதனுக்கு பயணக் களைப்பு என்றால் பையனுக்கு வழக்கின் தீர்ப்பை பற்றிய அழுத்தம்.அதனால் சுக நல விசாரிப்போடு இருவரின் உரையாடலும் முற்றுப் பெற மீண்டும் நேரம் கிடைத்தது,இப்பொழுது தான்.

"எப்டி இருக்கடா..? நல்லா இருக்கியா..?"

"ஆமா சித்தப்பா..நா நல்லா இருக்கேன்..நீங்க எப்டி இருக்கீங்க..?"

"நா நல்லா இருக்கேன்..என்னடா என்னோட பொண்ணு கிட்ட நல்லா நடந்துக்குற தான..இல்ல எப்பவும் மாதிரு உர்ருன்னு இருக்கியா..?" அவர் இசையைக் குறிப்பிட்டு கேட்டிட அவரின் உரிமையான அழைப்பில் அவனுக்கு சிறு கோபம்.

தன் மருமகள் என்று சொல்லியிருந்தால் இலகுவாய் கடந்திருப்பான்.தன் மகள் என்று கூறிக் கொண்டு தன்னையே அதட்டுவது அவர் மீதான பையனின் உரிமையுணர்வை தூண்டி விட்டதே.

"அதெல்லாம் நல்லா தான் பாத்துக்கறேன் சித்தப்பா.." வார்த்தைகளை உதிர்க்கும் போதே அவளுடன் காட்டும் கடின முகம் தான் கண் முன்னே வந்து சென்றது.

"இங்க பாரு டா..நா ஒன்னு சொல்லிக்கறேன்..பன்ச் பேசறேன்னு சலிச்சுக்காத..எல்லாருக்கும் பர்ஸ்ட் லவ் வாழ்க்கைல வரும்..ஆனா கொஞ்சம் பேருக்கு தான் செகண்ட் லவ் வாழ்க்கயா வரும்..உனக்கு அப்டி தான்..அந்தப் பொண்ணு உனக்கு வாழ்க்கயா வந்துருக்கு..பத்திரமா பாத்துக்கோ.." மகனின் முகத்தை வைத்தே ஏதோ கணித்து விட்டு அவர் கூறிட ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் எண்ணப்போக்கும் முழுதாய் மாறுபட்டதாய்..
முற்றிலும் வேறுபட்டதாய்..

"நீங்க என்ன சொன்னீங்கன்னாலும் இன்னும் கொஞ்ச நாள்ல நானும் அவளும் ட்வோர்ஸ் பண்ணிப்போம்..நீங்களே வேணாம்னு சொன்னாலும் கண்டிப்பா நடக்கும்.." மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டவனுக்குத் தெரியாதே காலம் விதைத்து வைத்திருப்பது..?

விதி வலியது!

பொழுதுகள் கடந்து இரவும் வந்தது.

தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்த நைட்டியின் மேல் ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு கண்ணாடியின் முன்னே நின்று தன் உருவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்,பாவையவள்.

முகத்தில் இருந்த நீர்த்துளிகளை துப்பட்டாவின் நுனியைக் கொண்டு ஒற்றி எடுத்தவளுக்கு ஏனோ மனதில் ஒரு படபடப்பு.

நேற்று பையன் வெளியே சென்று வரும் பொழுது இரவு பத்து மணியைத் தாண்டியிருக்க காத்து காத்து விழித்திருந்தவளோ அப்படியே கண்ணயர்ந்திருக்க அவன் வந்ததும் சோபாவில் படுத்துறங்கியதும் தெரியாது.ஆனால்,இன்று அப்படியல்லவே.

"சோபலா படுக்கறதா..?கட்டில்ல படுக்கறதா..?சோபால படுக்கறா..?" தனக்குள் வினாத்தொடுத்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்,பையன்.

கண்ணாடி முன்னே நின்றிருந்தவளை ஒரு கணம் பார்வையால் ஸ்பரிசித்து விட்டு துவாயையும் மாற்றுடைகளையும் எடுத்துக் கொண்டு அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொள்ள இசையவளுக்கோ அவன் பார்வையே பெரும் பீதியைக் கிளப்பியது.

"இந்த மனுஷன் லவ் பண்ணியிருக்குன்னு நம்பக் கூட முடியல..பாத்தாலே எரிக்கற மாதிரில இருக்கு.." முணுமுணுத்துக் கொண்டவளோ தாமரையிடம் பேச அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றிருந்தாள்,தேகத்தை தழுவும் காற்றின் குளிரை வசைபாடிய படி.

குளித்து விட்டு தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தவனுக்கு பால்கனியில் இருந்து வந்த பேச்சுக்குரலின் உரப்பே போதுமாய் இருந்தது,பாவையின் இருப்பிடத்தை உணர்த்த.

"தொண்டைல மைக்க செருகி வச்சிருக்கா போல.." உள்ளுக்குள் நினைத்தவனோ அப்படியே கட்டிலில் குறுக்காக விழ பாதங்கள் மெத்தைக்கு வெளியே நீண்டிருந்தன.

ஒரு கையால் தலையணைத் தன்னோடு சேர்த்தணைத்தவாறு மறு கையால் எஞ்சியை தலையணையால் காதைப் பொத்திக் கொண்டு படுத்திருந்தவனுக்கு சிறு ஒ(ளி)லி இருந்தால் கூட உறக்கம் எட்டாது என்பது வேறு விடயம்.

பாவையின் கட்டைக்குரல் தெளிவாகவே பையனின் செவியில் மோதிட அவனிதழ்கள் அலுப்பான புன்னகையொன்றை ஏந்தி நின்றன.

அவளின் சத்தம் மட்டும் இல்லையென்றால் அவன் விழுந்த நொடியே உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான்,மனதில் இருந்த பெரும் பாரம் விலகிச் சென்றிருப்பதால்.ஆனால்,அவள் இதற்கு இடம் தர வேண்டுமே.

தாழ்ந்து சென்று கொண்டிருக்கும் குரல் திடீரென உயர்வதும் உச்ச ஸ்தானியில் சென்று கொண்டிருந்த குரல் சடுதியாய் தேய்வதும் அவனுக்கு எரிச்சலை கிளப்பியது.

"தூங்க விட மாட்டா போல.." தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவோ புரண்டு புரண்டு பார்த்தாலும் உறக்கம் வரவில்லை.

அவளை அதட்டினாலே..
ம்ஹும்,அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாலே சர்வமும் அடங்கிப் போக முழி பிதுங்கி நிற்பாள் என்று தெரிந்தும் ஏனோ அதை செய்யத் தான் மனம் வரவில்லை.

எப்போதும் போல் அவளுக்கான இடத்தை அவளுக்கென விட்டிருந்தது,மனம்.அவளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட பையன் விரும்பவில்லை.அது தான் யாழவனின் குணமும் கூட.

பாவைக்கு பேச சொல்லித் தரவா வேண்டும்..?
அதுவும் நெருங்கிய தோழியுடன்..
ஒரு நாள் முழுக்க நடந்தவற்றை விலாவாரியாக அவள் விவரித்துக் கொண்டிருக்க யாழவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது.

அரை மணி நேரம் கடந்திருந்தது.அதற்கு மேலும் பொறுமை காத்தால் அது யாழ் வேந்தன் இல்லையென்று ஆகிவிடாதா..?

துளியென துளிர்த்த கோபத்தை அடக்கியவனோ படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு அவளை நோக்கிச் சென்றான்,சத்தத்தை குறைக்கச் சொல்லிச் சொல்லிட.

தோழியுடன் சம்பாஷணையில் மூழ்கி இருந்தவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த தன் பின்னே கதவு நிலையில் சாய்ந்தவாறு பையன் நின்றதை உணர்ந்திடும் சாத்தியம் ஏது..?

"ஆமா இப்பொ செகண்ட் லவ் தான்..அதுக்கென்ன ஆகும்..? செகண்ட் மேரேஜே இருக்குறப்போ செகண்ட் லவ்வா இருக்குறதுல என்ன தப்பு..? சும்மா சும்மா பர்ஸ்ட் லவ் தான் ஒசத்தின்னு பேசாத..நாக்க அறுத்துருவேன்.." கடுப்புடன் தாமரையுடன் பேசிக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் ஏனோ பையனை நின்று செவிமடுக்கச் செய்தன.

"பர்ஸ்ட்டு லவ் தான் பெஸ்ட்னு எவன் தான் பொரளிய கெளப்பி விட்டானோ..அதெல்லாம் பொய் தாமர..செகண்ட் லவ் அழகு தாமர..அதுவும் செகண்ட் லவ்வா இருக்குறது இன்னும் அழகு.." தன்னை மறந்து பேசிக் கொண்டிருப்பவளின் குரலில் இழையோடிய ஏதோ ஒன்று பையனுக்கு அபிஷேக்குடன் நடந்த உரையாடலை நினைவில் எழ வைத்தது.

"ஃபீல் பண்ணி பாத்தா ரொம்ப அழகா இருக்கும் டி.." அவள் எதேச்சையாய் கூறியது,அவனை ஏதோ செய்திருக்க வேண்டும்.

இத்தனை நேரம் அவளின் பேச்சுக்கு செவிசாய்த்து நின்றது போதுமென மனம் வாதிட்டது போலும்.
"க்கும்.." பின்னால் நின்றிருந்தவாறு அவன் தொண்டையைச் செருமிட தூக்கி வாரிப் போட்டது,பாவையவளுக்கு.

"ஐயோ சாமி.." பதறியவளோ திரும்பி வேகத்தில் அருகே இருந்த பூச்சாடியில் இடித்துக் கொண்டு நிலை தடுமாறி கீழே விழுந்திட கணுக்காலை இடித்துக் கொண்ட வேகத்தில் உயிர் போனது.

"அம்மா.." காலைப் பிடித்துக் கொண்டு விழுந்திருந்தவளை அழுத்தமாய்ப் பார்த்தவனோ தன்னாலே நீண்ட தன் கரங்களை பின்னே இழுத்துக் கொண்டது சிக்கவில்லை,பாவையின் பார்வையில்.

அவ்விடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் கூட நிச்சயம் அவனின் கரம் நீண்டிருக்கும்,மனிதாபிமானத்தினால்.அதில் ஐயமேதும் இல்லை.

ஆனால்,அவளை நோக்கி கரங்கள் நீண்டாலும் அதில் சிறு பதட்டமும் கலந்திருந்தது.

ஆம்,பதட்டம் தான்.
பதட்டத்தின் காரணம்..?
வேறொன்றுமில்லை,அக்கறை தான்.

உண்மை தான்,
பையனுக்கு அவள் மீது தனிப்பட்ட அக்கறை இருக்கத் தான் செய்கிறது.என்னவொன்று இதுவரை அவளிடம் அதை வெளிப்படுத்திக் காட்டியதில்லை.

அவனின் மனைவியென்றானதால் உண்டாகிற்ற அக்கறை அல்ல அது.ஏனோ பாவையின் குணங்கள் மீது அவனுக்கு தனிப்பட்ட ப்ரியம்.ப்ரியம் என்பத்றாக அதை காதலென்றும் வரையறை செய்ய முடியாது.

அதுவும் தன்னுடன் இருக்கும் பெண்ணென்பதால் அவள் மீது கரிசனமும் உண்டு.இசையவளின் காதல் மட்டும் அவனுக்கு தெரியாது இருப்பின் நிச்சயம் அவனின் நெருங்கிய தோழியாகக் கூட அவள் மாறியிருக்கக் கூடும்.

அவள் தன்னிடம் காதல் என்று பிதற்றிக் கொண்டு திரிவதில் தான் அவனுக்கு பிடித்தமில்லை.எங்கே தான் அவளிடம் கொஞ்சமேனும் அக்கறை எடுத்துக் கொண்டால் அவள் இன்னும் தன் பிடியில் நிற்பாள் என்று பயந்து தான் ஒதுக்கம் காட்டுகிறான்;வெறுப்பாய் நடக்கிறான்;திட்டியும் விடுகிறான்.

அவள் செய்யும் கிறுக்குத் தனங்களுக்கு கோபம் வராமல் இல்லை.ஆனால்,கோபம் வருவதால் அக்கறை இல்லையென்று ஆகிவிடாதே.

கணுக்காலை பிடித்துக் கொண்டு வலியோடு அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் விழிகளில் எந்த வித உணர்வும் இல்லை,வழமை போல்.
காட்ட விழைந்த அக்கறையை மறைத்துக் கொண்டான்,மனதுக்குள்.

"என்ன அடிபட்டிருச்சா..?"
அவனின் இயந்திரக் குரலில் அவளுக்கு கோபம் முட்டிக் கொண்டு வந்தது.

ஏற்கனேவ வலியில் விழிகள் கலங்கியிருக்க அவனின் அக்கறையில்லா குரலில் இன்னும் கோபம் ஏறியது.

"இருக்காதா பின்ன..?" முணகியவளோ கணுக்காலை தேய்த்து விட்டுக் கொண்டிருக்க அவனுக்கும் அதற்கு மேல் பேசாமல் இருக்க மனிதாபிமானம் இடம் கொடுத்திடவில்லை,போலும்.

"எங்க கால காட்டு.." அவளை நெருங்கி தரையில் குனிந்தவனோ அவளின் கால்களை ஆராய முயல பட்டென உள்ளிழுத்துக் கொண்டவளின் பார்வை அதிர்ச்சியுடன் பையனின் மீது பதி(டி)ந்தது.

"காலக் காட்டுங்குறேன்ல.." அவளை அடக்கும் வழி தெரிந்தவனாய் அதட்டிட அவளோ வழி விடவில்லை.

"இல்ல நா பாக்கறேன்.." கூறிய படி பால்கனிக் கம்பியை பற்றிக் கொண்டே கடினப்பட்டு எழுந்து நின்றவளின் முகமோ வலியில் சுருங்கிப் போயிருக்கவே பையன் ஊகித்துக் கொண்டான்,பலமான அடிதான் என்பதை.

"எதுக்கு இப்ப எந்திரிச்சிட்டு இருக்க..? கால் வலிக்கிதுல.." சிடுசிடுப்புடன் தன் அக்கறையை வெளிப்படுத்தி நின்றவனுக்கு அவளின் நிலையைக் கண்டு தானாய் கனிவு பிறக்கத் தான் செய்தது.

"இல்ல ஏதாச்சும் பூசுனா சரியாய்டும்.." அவனுக்கு கேட்கும் படி தலை தாழ்த்திச் சொல்லி விட்டு முதலடியை எடுத்து வைக்கையிலே சுரீரென்று வலியெடுத்திட "ஆ" தன்னாலே அலறிவிட்டிருந்தாள்,மெதுவாய்.

மீண்டும் பால்கனியின் ஹேன்ட் ட்ரில் கம்பியை இறுகப்பிடித்து தன்னை சமப்படுத்த முயன்றவளை பையனின் கரங்கள் பிடித்துத் தாங்கிட நீள சட்டென தன் தேகத்தை உள்ளிழுத்துக் கொண்டு ஒடுங்கி நின்றாள்,பாவையவள்.

அவனின் அருகாமையே அவளை வெகுவாய் திணறடித்திட ஸ்பரிசம் மூச்சடைக்க வைத்திடும் வேறு யாரும் அவளிடம் சொல்லத் தான் வேண்டுமா என்ன..?

"என்ன பண்ற சொல்ற நீ..? இப்டி கால வச்சிகிட்டு நடக்க முடியுமா உன்னால..?"
அவள் நிலை அவனுக்கு கொஞ்சம் புரிந்திட ஏனோ எப்போதும் போல் இல்லாமல் தன்மையாய் வந்து விழுந்தன,பையனின் வார்த்தைகள்.

யாழவனின் இதழ்கள் இசையவளுக்காய் இசைத்ததோ,அத்தனை மென்மையாய்..?
யாருக்குத் தெரியும்..?

அவளுக்கோ அவன் தன் மீது எரிந்து விழுந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனப்போக்கு.கடுகடுப்பாய் வெளிவந்த வார்த்தைகள் என்றாலும் அதில் இருந்த அக்கறை அத்தனை தித்திப்பை தர அது இன்னுமே அவளை தடுமாற வைத்து தடம் மாறிய இதயத்தில் இன்னும் ஆழமாய் அவனின் தடம் பதிக்க விழைந்திடுதே!

"இல்ல சாரே..நீங்க போங்க நா வர்ரேன்.." அவள் பிடிவாதமாய் மறுத்திட அழுத்தமாய் ஒரு வினாடிப் பார்வையால் உரசி விட்டு அவன் நகர்ந்திடவுமே தான் பாவையின் மனம் சமப்பட்டது.

"எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகற..? டென்ஷன கம்மி பண்ணு இசை..டென்ஷன கம்மி பண்ணு.." தனக்குத் தானே கூறிக் கொண்டவள் பால்கனிக் கம்பியை பற்றிய படி கெந்திக் கெந்தி இரு அடிகளை எடுத்து வைத்திருக்க கதவருகே நின்று அவளைப் பார்த்திருந்த பையனின் மனதில் என்ன தோன்றியதோ..?

சட்டென அவளை நோக்கி நடந்து வந்து அவள் சுதாரிக்கும் முன்னே பாவையவளை கரங்களில் ஏந்திக் கொள்ள அவள் நெஞ்சம் வெடித்தது.

யாழவனை இசையவள் கொஞ்சம் மாற்றித் தான் வைக்கிறாளோ..?
காதல் இல்லாமல்,அக்கறை எனும் பெயராலே.

இசையவளின் ரிதமாய் யாழவன் மாறியிருக்க யாழவனின் இசையாய் இசையவள் மாறுவது எப்போழுதோ..?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உயிர்த்தொடும்.

2024.08.26
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 08(ii)


பையன் அவளை எதிர்பாராமல் தன் கையிலேந்திக் கொண்டதும் பெண்ணவளின் இதயத்தில் எக்கச்சக்கமாய் அணுகுண்டுகள் வெடித்தன.

"சார்ர்ர்ர்ர்.." அவனில் நிலைகுத்தி நின்ற பார்வையை விலக்க மறந்தவளின் இதழ்கள் ஒப்புவித்த வார்த்தையை சட்டை செய்யவில்லை,பையன் அவனும்.

சரியாகப் பார்த்தால் தாமதியாமல் அவளுக்கு வெட்கம் வந்திருக்க வேண்டும்.சிறு வெட்கத்துடன் தயக்கம் எட்டிப் பார்த்திருக்க வேண்டும்.அவளுக்கோ அதற்கெல்லாம் பதிலாக பையனின் செயலில் மயக்கம் தான் வரும் போல் இருந்தது.அவள் ரகமும் அப்படியல்லவா...?

விரிந்த விழிகளுடன் பேயறைந்தது போல் முழித்துக் கொண்டிருந்தவளை பார்க்கவில்லை,அவன்.
அவனுக்கு அதற்குண்டான தேவையும் இருக்கவில்லை.உள்ளுக்குள் அப்படித் தோன்றவுமில்லை.அப்படித் தோன்றின் அவள் மீதான உணர்வுக்கு வெறும் அக்கறையென்று பெயருமில்லை.

ஈரடிகளை யாழவன் எடுத்து வைக்கையில் தான் இசையவளுக்கு நிகழ் உரைத்திட கையில் இருந்து கீழே குதிக்கப் பார்த்தவளின் செயலில் அவனில் சிறுகோபம்.

"ஆடாம இரு..ரெண்டு பேரும் சேந்து விழுந்து அடிச்சிக்க போறோம்.." கறாரான குரலில் பையன் தீர்க்கமாய் உரைத்திட பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கொண்டவளுக்கு இப்போது உள்ளுக்குள் குறுகுறுக்கத் துவங்கிற்று.

தந்தையிடம் கூட சகஜமாய் உரையாடும் ரகத்தில் உள்ளடங்கும் பெண்ணல்ல,அவள்.
எப்போதும் அவருக்கும் அவளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும்.ஏன் இப்போதும் இருக்கத் தான் செய்கிறது.

பாசத்தை வெளிக்காட்டத் தெரியாத தந்தையவர்.அவருக்கும் அவரின் அக்கறையும் பாசமும் புரிந்தாலும் இருவருக்கிடையில் இருந்த இடைவெளியை உடைத்திடத் தான் இயலவில்லை.

ப்ரித்வியைத் தவிர ஆண் தோழர்களும் அவ்வளவாய் இல்லை.
வெறும் சுக நல விசாரிப்புடன் கடந்து விடுபவளுக்கு ஏனோ யாரிடமும் நெருங்கி நட்பு பாராட்டி முடியாதிருக்க அவளின் கோட்பாடுகளை முற்றிலுமாய் உடைத்து அவன் மீது காதல் கொள்ள வைத்தது,என்னவோ பையன் தான்.தாலி கட்டியவன் என்றாலும் அவனின் நெருக்கத்தை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை,அவளால்.

"என்னடா அது அடி வயித்துல பட்டாம் பூச்சி பறக்குது.." யோசித்த படி அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தவளுக்கு வாந்தி வருவதற்கு அறிகுறியாய் குமட்டுவது போன்ற பிரம்மை.

அவ்வப்போது தற்செயலாய் முட்டி மோதிக்கொள்ளுகையில் தீண்டல்கள் நடந்திருந்தாலும் அது எதிர்பாராததே.அதுவும் நொடி நேரம் தான் நீடிக்கும்.

இப்போது முதன்முதலாய் தெரிந்தும் விலகாமல் இருப்பது அவளை வெகுவாய் இம்சித்தது.
யாழவனின் அருகாமை இசையவளின் இதயத்தில் இ(ம்)சை மீட்டியது.

இயல்பான வெட்கத்தின் சிறிது எட்டிப் பார்த்திட விழிகளை தாழ்த்தி தரையில் பார்த்திருந்தவளுக்கு பையனை ஏறிட்டிட ஏனோ அத்தனை கூச்சம்.

"நமக்கு இவ்ளோ வெக்கம் வருமா..?" தன்னைப் பற்றியே ஆராய்ந்து நினைத்துக் கொண்டவளுக்குள் இனம் புரியா படபடப்பு வேறு.

சலனத்தின் துளியும் இன்றி பையனோ அவளை அள்ளிக் கொண்டு சென்று கட்டிலில் வைத்திட அப்போது தான் மூச்சே மீண்டது போல் இருந்தது,பாவையவளுக்கு.

"இங்க பாரு..உன்னோட எடத்துல வேறு எந்த பொண்ணு இருந்தாலும் நா அப்டி தான் பண்ணி இருப்பேன்..ரொம்ப ஓவரா கற்பன பண்ணிக்காத.." அவளின் தடுமாற்றம் புரிந்தவனோ அழுத்தி எச்சரித்து விட்டு முதலுதவிப் பெட்டியை எடுத்து வர பெண்ணவளின் முகம் சுருங்கிற்று.

"இப்டி சொல்றது தெரிஞ்சா நா உருண்டாச்சும் கட்டிலுக்கு வந்திருப்பேனே கோபால்.." சுணக்கத்துடன் அவனுக்கு கேட்காமல் முணுமுணுத்திட அது தப்பாமல் விழுந்தது,பையனின் செவிகளில்.

"ரொம்பத் தான் வாய் இவளுக்கு.." உள்ளுக்குள் நினைத்தவனோ மறந்தும் தான் கவனித்ததை வெளிப்படுத்தி நிற்கவில்லை.

"உனக்குத் தான் தெரியும்ல இந்த ரோபோ இப்டி தான்னு..அலட்டிக்காத இசை.." தனக்குத் தானே மானசீகமாய் ஆறுதல் சொன்னவளை பையன் நீட்டிய மருந்தை வாங்கிப் பூசிக் கொண்டு எழுந்திட முயல அவளை நிறுத்தினான்,பையன்.

"நீ கட்டில்ல படு..நா சோபால படுத்துக்குறேன்.." அவளின் எண்ணப் போக்கை கணித்தவனாய் மொழிந்து விட்டு பதில் மொழி எதிர்பாராமல் விளக்கை அணைத்து இரவு விளக்கை ஒளிர விட்டவனோ சோபாவில் சரிந்து கொள்ள இமைக்காமல் அவனை உரசியது,பாவையின் பேராழி விழிகள்.

அவனுக்கும் அவள் பார்வை புரிந்தது போலும்.உறக்கத்தில் புரள்வது போல் அவளுக்கு முதுகு காட்டி திரும்பியவனின் செயலில் அவளிதழ்களில் புன்னகை.

அவனின் குணம் அது தான் என்று தெரிந்தவளின் இதழ்கள் சுளிப்புடன் அசைந்து கொடுத்தது.

போர்வையை எடுத்து இடை வரை போர்த்திக் கொண்டவளின் விழிகளோ பையனை தான் உரசி நின்றன.தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்துக்குள் விழுந்தவனோ தற்செயலாய் திரும்பிப் படுத்திட அந்த மெல்லி வெளிச்சத்திலும் பையனின் முகம் தெளிவாய்த் தெரிந்தது.

உறக்கத்தில் கூட அந்த இறுக்கத்தையும் அழுத்தத்தையும் அவன் விட்டு விடவில்லை,போலும்.
முரட்டுக் குணம் கொண்ட குழந்தையைப் போன்ற அவனின் தோற்றத்தில் அவளிதழ்களில் இரசனை தோய்ந்த புன்னகை.

அந்த அழுத்தத்துக்கும் இறுக்கத்துக்கும் பின்னால் இருக்கும் காரணமது பாவையவளுக்குத் தெரிந்தாலும் அதை போக்கிட சற்றும் இடம் கொடுத்திடாவனை எண்ணி பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை,அவளுக்கு.

அறையில் மின் விசிறி ஓடிக் கொண்டிருக்க பையனின் முன்னுச்சி முடியும் அவ்வப்போது அசைந்து கொண்டிருந்தது அத்தனை அழகு.ஒற்றைக் கையால் பின்னந்தலையை தாங்கியவனின் மறு கரமோ இரு விழிகளுக்கும் குறுக்கே வந்து வெளிச்சத்தை தடுத்து நின்றது.

இமைகொட்டாமல் பையனின் வதனத்தை பார்வையால் வருடிக் கொண்டிருந்தவளோ அவனைப் பார்த்தவாறே கண்ணயர சுகமான நிம்மதியான உறக்கம்,
யாழவனுக்கும் யாழவனின் இசையவளுக்கும்.

அதிகாலையிலே விழித்து விட்டான்,பையன்.
ஐந்தரை மணிக்கு எழுந்து கொள்வது அவன் தவற விடாத பழக்கம்.

சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தவனுக்கு கை கால்களை குறுக்கிக் கொண்டு போர்வையை கழுத்து வரை போர்த்திய படி உறங்கிக் கொண்டிருந்த பாவையவளைக் கண்டதும் தான் அவள் இங்கிருப்பதே நினைவில் வந்தது.

"இன்னிக்கி என்னனென்ன பண்ண போறாளோ..?" அலுப்பாய் எண்ணியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டிட அரை மணி நேரம் கடந்த பின்னும் விழிப்புத் தட்டவில்லை,அவனின் சரிபாதியானவளுக்கு.

தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தவனுக்கு அவளை எழுப்பத் தோன்றாதிருக்க வெளியேறி தன் உடற் பயிற்சி செய்யும் அறைக்குள் நுழைந்திடவும் இசையவளின் அலைபேசி ஒலிக்கவும் சரியாய் இருந்தது.

முதலில் உறக்க கலக்கத்துடன் அழைப்பை ஏற்றாலும் செவியில் நுழைந்த ப்ரித்வியின் குரல் அவளின் மொத்த உறக்கத்தையும் விட்டழித்திருந்தது.

●●●●●●●●

"எதுக்குடா இப்போ இங்க வர சொன்ன..நானே பக்கு பக்குனு பயந்துகிட்டு இருக்கேன்..நீ வேற ஏன்டா.."

"தங்கச்சி இங்க பாருமா..உன்னோட புருஷனுக்கு நீ இவ்ளோ பயந்து கிட்ட இருக்க வேண்டிய அவசியமே இல்ல..அவன் ஒன்னும் அவ்ளோ சீக்கிரமா கண்டு புடிச்சிர மாட்டான்.."

இசையவளின் புலம்பல் தாளாது ப்ரித்வியின் அருகே அமர்ந்திருந்த அரவிந்த் அவளை ஆறுதல் படுத்த முயல பாவையின் முகம் தெளிந்தபாடில்லை.

"அண்ணா நீங்க வேணா அவர அப்டி நெனச்சிகிட்டு இருக்கலாம்..ஆனா அவரு ரொம்ப ஷார்ப்பு..இன்னும் ஒரு தடவ நா உங்கள மீட் பண்றத பாத்தார்னு வச்சிக்கோங்க கண்டிப்பா எல்லா உண்மயயும் கறக்காம விட மாட்டாரு.." கூறியவளின் குரலில் பீதி நிரம்பி வழிந்தது.

"உன் புருஷனுக்கு இவ்ளோ பயமாடி நீ..?" தோழியைப் பற்றி தெரிந்தும் அவளை அடுத்து அமர்ந்திருந்த தாமரை கேட்டிட முறைப்பொன்றை வீசின,அவளின் விழிகள்.

"ஆமா பின்ன உன்ன மாதிரி லவ் பண்ற பையனுக்கு பயப்டாம எல்லாரும் இருப்பாங்களா என்ன...?"

"லவ் பண்ற பொண்ணுக்கும் பயந்துகிட்டு அந்த லவ்வு பெஸ்ட் ப்ரெண்ட்கு தெரியக் கூடாதுன்னும் வேண்டிகிட்டு இருக்குற நீங்கலாம் என்ன கலாய்க்க லாயக்கில்லாத ஆளுங்க" தன்னை கேல் செய்த காதலனின் காலை வாரி விட்டவளை முறைக்க முயன்று தோற்றுப் போனான்,அரவிந்த்.

"ஐயோ எப்ப பாரு ரெண்டு பேரும் மாறி மாறி கொத்தி கிட்டு..ஷு..அமைதியா இருங்க..சரி இப்போ எதுக்கு என்ன வர சொன்னீங்க..?"

"அது ஒன்னுல்ல அரசி..இன்னும் ரெண்டு மூனு நாள்ல நா ஊருக்கு கெளம்புறதா இருந்தேன்ல.."

"ஆமா.."

"இப்போ என்னன்னா என் கம்பனி எம் டி ஒரு பிஸினஸ் டீலிங்காக ஃபாரின் போறாராம்.."

"உங்க கம்பனி எம் டி பாரின் போறதயெல்லாம் எதுக்குடா என் கிட்ட சொல்லிகிட்டு இருக்க..?"

"ஐயோ பச்சரிசி நா சொல்றத அமைதியா கேளு..அவரு ஃபாரின் போறதால நா தான் கம்பனி விஷயங்கள முழுசா கவனிச்சிக்கனும்.."

"சரி டா இப்போ அதுக்கென்ன..?"

"இப்போ கன்டினியூவஸா ஒரு அஞ்சாறு பிஸினஸ் மீட்டிங் இங்க அர்ரேன்ஜ் பண்ணியிருக்காங்க..ஸோ கண்டிப்பா நா இங்க வந்து தான் ஆகனும் அப்போலாம்..அது மட்டுல்லாம முக்கியமான விஷயம் என்னன்னு தெரியுமா..? உன்னோட புருஷன் கூடவும் ஒரு பிஸினஸ் மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ணியிருக்காங்க..அதுக்கு நா தான் கண்டிப்பா வரனும்.."

"டேய் என்னடா சொல்ற..?இதெல்லாம் எப்போடா நடந்துச்சு..?" திகைப்புடன் கேட்ட பாவையின் விழிகளில் அப்பட்டமான அதிர்வு.

"ஐயோ எல்லாம் சரியாகி வர்ர நேரத்துல முழுசா கவுந்துரப் பாக்குதே.." முணகியவளுக்கு அவன் கூறியதை முற்றாய் கிரகித்து உள்வாங்கிக் கொண்டிடவே சிறிது நேரம் எடுத்தது என்னவோ உண்மை தான்.

"ம்ம்க்கும்..ஏற்கனவே ஏகப்பட்ட பொய்ய சொல்லி தான் உன்ன கல்யாணமே பண்ணி வச்சிருக்கோம்..அது எப்போ உன்னோட ஹஸ்பன்ட் கிட்ட மாட்டும்னு நெனச்சு பாக்கும் போதே பக்குன்னு இருக்கு..இதுல நீ மாட்டுனா எங்க லவ் மேட்டரும் கண்டிப்பா மாட்டிரும்..அத நெனச்சு பாத்தா இன்னும் பயமா இருக்கு..மொத்தமா சொன்னா நாம எல்லாரும் உன்னோட ரோபோ சார் கிட்ட மாட்டிக்கிட்டு ரோலர் கோஸ்டர்ல போன மாதிரி ஆகப் போறோம்..அது மட்டும் உண்ம.."

"சும்மா சும்மா வேந்தன பத்தி ஒன்னும் சொல்லாத தாமர.." பையனைப் பற்றி விளையாட்டுக்கேனும் கலாய்த்துப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சற்றே அதட்டினான்,அரவிந்த்.

தோழனின் வாழ்வில் கடந்து வந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் முழுதாய் அறிந்தவனுக்கு யாரிடமும் அவனை விட்டுக் கொடுக்க முடியவில்லை என்பது தான் அவர்களின் உயிர்த்தோழமைக்கு சான்று.

"ஆமா அவரு ப்ரெண்ட பத்தி பேசுனா மட்டும் கோவம் வந்துரும்.." மெதுவாய் முணகியவளுக்கு தன் தோழியை அலைக்கழிக்கும் பையனின் மீது கோபம் இருக்கத் தான் செய்கிறது.

"ஐயோ திரும்ப அடிச்சுகாதீங்க..இப்போ என்னோட ப்ரச்சனக்கு சொல்யூஷன் சொல்லுங்க..அதுக்கப்றமா உங்க சண்டய வச்சுக்கலாம்.."

"நா ஒன்னு சொல்லவா..?" ஆர்வத்துடன் கேட்ட ப்ரித்வியை விழிகள் மின்னப் பார்த்தாள்,பாவையவள்.

"இப்டி மட்டும் நீ பண்ணுனன்னு வை கண்டிப்பா உன்னோட ஹஸ்பண்ட் நீ சொன்ன பொய் எல்லாத்தயும் மன்னிச்சுருவாரு.."

"என்னாட சீக்கிரம் சொல்லு.."

"ஒன்னுல்ல பேசாம நீ சொன்ன பொய் பண்ணுன தில்லுமுல்லு எல்லாத்தயும் சொல்லி அவரு கால்ல விழுந்துரு..அழுகற மாதிரி நடி..உன் கண்ணீர பாத்தாச்சும் அவரு மன்னிச்சு விட்ருவாரு.."

"உன் வாயில வசம்ப வச்சு தேக்க..வாய மூடுடா கழுத..கரெக்ட் பண்ண ஐடியா கேட்டா காலி பண்ண ஐடியா தர்ரான்..வாயாடா இது..நாரவாயி.." இசையவளின் கோபத்தில் பீறிட்ட சிரிப்பை அடக்க பெரும் சிரமப்பட்டான்,ப்ரித்வி.

"நீயும் ஏன்டா சும்மா தங்கச்சிய சீண்டிட்டு இருக்க..? அந்த பொண்ணே பாவம் டென்ஷன்ல இருக்கு.." அரவிந்த் ப்ரித்வியை கடிந்து கொண்டிட அவனோ சிறு சிரிப்புடன் எழுந்து ஓய்வறைக்குச் சென்றான்.

"ஏதாச்சும் பண்ணலாம் மா..நீ அலட்டிக்காத.." பாவையவளை ஆற்றுப்படுத்தும் விதமாய் அரவிந்த் பேசும் போதே அலைபேசி ஒலித்தது.

அலைபேசியின் தொடுதிரையில் ஒளிர்ந்த பையனின் எண்ணைக் கண்டதுமே மூவருக்கும் பயமும் பதட்டமும் துளிர்க்கத் தொடங்கிட தன்னை இயல்பாகிக் கொண்டு அழைப்பை ஏற்றான்,பையனின் தோழன்.

"ஹலோ சொல்லு மச்சான்.."

"எங்கடா இருக்க..?"

"இ..இங்க வெளில வந்துருக்கேன் டா.."

"ஆமா கணேஷ் சொன்னாரு நீ வந்துருக்குற ஹோட்டலோட பேர..பிஸினஸ் விஷயமா நானும் க்ளையன்ட் மீட்டிங்காக அங்க தான் வந்துருக்கேன்.."

"டேய் என்னடா சொல்ற..?"

"எதுக்குடா இவ்ளோ ஷாக் ஆகற..?" ஆராயும் தொனியில் கேட்டவனுக்கு தோழனின் குரலில் இருந்த பதட்டம் யோசிக்க வைத்தது.

"இல்ல..இல்லடா எங்க இருக்க நீ..? உள்ள வந்துட்டியா..?" அவசர கதியில் சுழன்றி விழிகளோ தோழனின் விம்பம் எங்கேனும் தெரிகிறதா என மின்னல் வேகத்தில் அலசிக் கொண்டிருந்தன.

"இல்ல டா இப்போ தான் பார்க்கிங்ல இருக்கேன்..என்ன விஷயம்..?"

"ம்ஹும் நீ உள்ள வா பர்ஸ்டு.." அழைப்பை துண்டித்தவனோ இருவரையும் பார்த்திட அவர்களுக்கு தாமதியாமல் விடயம் புரிந்தது.

"அண்ணா நாங்க அவரு வந்ததுக்கு அப்றம் வெளில போயிர்ரோம்.." மெதுவாய் கூறிய பாவையோ தோழியை இழுத்துக் கொண்டு ஓய்வறைக்குள் ஓடினாள்.

பெண்கள் இருவரும் நுழைந்து மறையவும் பையன் உள்ளே வரவும் சரியாய் இருக்க பையனின் விழிகளில் பெண்கள் சிக்கவில்லை என்றதும் தான் ஆசுவாசப் பட்டுக்கொண்டது,பாவப்பட்ட தோழனின் மனது.

உயிர்த்தொடும்.

2024.08.27
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 09(i)


ஓய்வறைக்குள் நுழைந்து நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமாய் சுவாசித்த தோழியை கேவலமாய்ப் பார்த்தாள்,தாமரை.

"இவளுக்கு வாய் மட்டுந்தான்.." மெதுவாக கடிந்து கொண்டவளுக்கு ஏனோ இப்போதெல்லாம் தோழியின் மீது அதிகமாய் கோபம் வருவது புரியாமல் இல்லை.

"இப்டி ஒரு லவ் உனக்கு தேவ தானா..?" ஆதங்கமாய் கேட்டவளின் வாய் தோழியவளின் அழுத்தமான பார்வையில் மூடிக் கொள்ள திட்டத் தோன்றிய வார்த்தைகளை விழுங்கிய படி உறுத்து விழித்த இசையவளின் பார்வையில் கோபம் தளும்பி வழிந்தது.

கோபத்துடனேயே ப்ரித்விக்கு அழைப்பெடுத்து விடயத்தை சொல்லிட அவனும் நிலமையில் தீவிரம் புரிந்து அவளை ஆற்றுப்படுத்தினான்,தான் எதுவும் மாட்டிக் கொள்ளும் விதமாய் நடந்து கொள்ள மாட்டேன் என்று.

இங்கோ,
பையனின் எதிர்பாரா வரவில் திகைத்து திணறி தன்னை சமப்படுத்தி அவனை சமாளித்திட அசடு வழிய சிரித்த தோழனின் செயலில் பையனின் புருவங்கள் சுருங்கி மீண்டன.

"இவன கவனிச்சிக்கனும்.." ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்தாற் போல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு நடந்தவனின் பாதங்கள் தோழனின் அருகே வந்து தரித்தது.

"ஆமா என்ன ஒரு மாதிரி திருட்டு முழி முழிக்கிற..?"

"ஆங்..என்ன திருட்டு முழியா..? உன் கண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருச்சாடா..என் முழி எப்பவும் போல தான் இருக்கு.." தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்ற படி கூறியவனின் உள்ளுக்குள் தடதடத்துக் கொண்டு தான் இருந்தது.

"ம்ம்ம்ம்ம்ம்.." சற்றே நக்கல் தொனித்த குரலில் பையன் இழுத்த ராகமே போதும்,அவன் நம்பவில்லை என்பதை பறைசாற்றிட.

"நம்புடா..நா நெஜமா தான் சொல்றேன்.."

"ம்ம்ம்ம்ம்ம்.." மீண்டும் ராகம் மாறாத தொனியில் உச்சரித்தவனுக்கோ தோழன் சொன்னதை நம்பும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

"டேய் நம்புடா.." இறுதியில் கெஞ்சும் குரலில் மன்றாடிட அப்போதும் அதே மாறா "ம்ம்ம்ம்ம்ம்" தான்.கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை,கல்லுளி மங்கன்.

"இவன் ஒருத்தன் ம்ம் சொல்லியே நம்மள சாகடிச்சிடுவான்.." அரற்றிக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் கலவரம்.

முதுகு காட்டி அமர்ந்திருந்த பையனை ஓர விழிகளால் நோட்டமிட்டவாறு பதுங்கி பதுங்கி அடியெடுத்து வைத்த ப்ரித்விக்கு பாவையின் வேண்டுகோள் தான் மனதில் வந்து போனது.

அவனுக்கோ பையன் எங்கே திரும்பி தன்னை கண்டு விடுவானே என்கின்ற பயம்.

முகக்கவசம் அணிந்திருந்தவனோ தொப்பியை சற்றே கீழிறக்கப் போட்டு நெற்றிக்கு கவசமாய் ஆக்கியிருக்க அதற்கு மேலும் ஆதரவு தருவதாய் ஒற்றைக் கரமும் முகத்தை மறைத்திருந்தது.

"கடவுளே பாத்துரக் கூடாதுடா சாமி.." மனதுக்குள்ளால் கடவுளிடம் வேண்டியவனுக்கு பையனைக் கடந்து தான் வெளியேறிச் சென்றிட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம்.

வாயிலுக்கு அருகே இருந்த மேசையில் பையனும் தோழனும் அமர்ந்திருக்க அவர்களை கடந்தல்லவா வாயிலைக் கடந்திட வேண்டும்..?

இன்னும் சற்று நேரம் பதுங்கி இருக்கலாம்.முதலாளியிடம் இருந்த வந்த அழைப்பில் தாமதியாமல் அவனுக்கு தங்கியிருக்கும் விடுதிக்கு வர வேண்டும் என்கின்ற கட்டளை இருந்ததே.

பதுங்கி பதுங்கி நடந்து கொண்டிருந்த ப்ரித்வியைக் கண்டதுமே அரவிந்துக்கு முகம் வெளுக்கத் தொடங்கி விட அவனின் முகமாற்றம் தப்பவில்லை,பையனின் கூர் விழிகளில் இருந்து.

புருவத்தை ஏற்றி இறக்கி அவனை சிறு சந்தேகத்துடன் பார்த்தவனோ தோழனின் பார்வை பதிந்திருந்த திசையில் தலையைத் திருப்பிட பையனின் செயலை முன்பே கணித்தவனாய் அப்படியே மடங்கி குனிந்திருந்தான்,ப்ரித்வி.

"பைத்தியக்கார அரவிந்த்..இவனே நம்மள காட்டிக் கொடுத்துருவான்.." இதழ்களுக்குள்ளால் திட்டித் தீர்த்தவனோ அப்படியே மட்ங்கி அமர்ந்த வாக்கிலேயே நகர்ந்திட சுற்றி இருந்த அனைவரும் விசித்திரமாய் பார்த்தனர்.

பையனுக்கோ திரும்பிய கணம் யாரும் அகப்படாதிருக்க மேலும் அவன் அலசும் முன் தோழனின் கவனத்தை தன்வசம் திருப்பி இருந்தான்,அரவிந்த்.

●●●●●●●●●

"மச்சீ எனக்குன்னா பயமா இருக்குடா..நீ எதுக்கும் ஒரு தடவ ஃபோன் பண்ணி அவ கிட்ட பேசிரு..அதான் சரியா இருக்கும்.." அரவிந்த் எச்சரிக்கையாய் சொல்லிட அதை பெரிதாய் சட்டை செய்யவில்லை,பையன்.

அந்த பொருட்படுத்தாமையின் காரணம் அவன் காத(லி)ல் மீதான அளவு கடந்த நம்பிக்கை என்பதில் ஐயம் எழ அவசியமே இல்லை.

"மச்சீஈஈஈஈஈஈஈஈஈ"

"அரவிந்த்..நீ எதுக்குடா இவ்ளோ டென்ஷன் ஆகற..? அபிய பத்தி உன்ன விட எனக்கு நல்லா தெர்யும்..மத்தவங்க எப்டி போனாலும் அவ கண்டிப்பா என்ன நம்புவா..அவ மேல எனக்கு நம்பிக்க இருக்கு.." தீர்க்கமாய் உரைத்திட்ட யாழவனின் விழிகளில் அவள் மீதான நம்பிக்கை சுடர் விட்டு எறிந்தது.

இருந்தாலும் அரவிந்துக்கு அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.சில நாட்களாய் அவன் செவி சேர்ந்த விடயங்கள் தோழனின் வார்த்தைகளை நம்புவதற்கு முட்டுக்கட்டையாய் இருந்தது.

தன் மீது சுமத்தப்பட்ட பழி மொத்தமும் தெரிந்து கொண்ட பையனுக்கு இருந்த முதல் வேலை வீட்டினரிடம் தன்னை தெளிவு படுத்துவது தான்.ஆனால்,ஏனோ அவர்கள் தன்னை முழுதாய் நம்பிடுவார்கள் என்று ஆழ்மனதில் அசைத்திட முடியா நம்பிக்கை வேரூன்றி இருந்திடவே அது அவனுக்கு அவ்வளவு அழுத்தத்தை தந்திடவில்லை.

வழமையான தன் வேக நடையுடன் வீட்டை நெருங்கியவனோ சப்பாத்துக்களை கழற்றி விட்டு கூடத்துக்குள் நுழைய அங்கு வீற்றிருந்த அனைவரையும் கண்டதும் அவன் நடை ஒரு கணம் நின்றது.

அழுது வீங்கிய கண்களுடன் சோபாவின் ஒரு மூலையில் அமர்ந்து இருந்த தாயையும் அவருக்கு பக்கத்தில் இருந்த தங்கையையும் நோக்கியவனுக்கோ மனம் பிசைந்தது.

அதிலும் மூலையில் நின்று வந்ததில் இருந்து தன்னைத் தொட்ட பார்வையை விலத்தாது அழுது வீங்கிய விழிகளுடன் நின்றிருந்த அபிராமியைக் கண்டதும் பார்வையில் இன்னும் கனிவேறிற்று.

ஏதோ அவர்கள் தனக்காக அழுதான் என்று பையன் நினைத்துக் கொண்டான் போலும்.அவர்களும் தன்னை சந்தேகப்படக் கூடும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.ஏன் அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கக் கூடவில்லை.

முதலில் யாரை அணுகுவது என்று தயங்கிவனோ தாயை நோக்கி எட்டு வைத்திட அவன் நெருங்கி மண்டியிட்டு அமர முகத்தை திருப்பிக் கொண்ட தாயாரின் செயல் அவன் விழிகள் இடுங்கின.

"அம்மா.." அவர்களிடம் மட்டுமே வந்திடும் மென்மையான குரலில் அவனின் அழைப்பு.

"எதுக்குடா வீட்டுக்கு வந்த..? எதுக்கு வந்த நீ..? இப்டி ஒரு காரியத்த செஞ்சிட்டு எப்டிடா வர முடிஞ்சுது உன்னால..? உனக்கு ஒரு தங்கச்சியும் தோ பொண்டாட்டியா வரப் போற ஒருத்தியும் இருக்குற மறந்துட்டியா நீ..?" சட்டையை உலுக்கி ஆவேசமாய் அவர் பேசிட பையனின் விழிகள் அளவுக்கு மீறிய வலி பரவிட முகமோ இறுகிப் போய் நின்றது.

தங்கையும் அதே குற்றம் சாட்டும் பார்வையை தன்னை நோக்கி வீசிட பையனின் ஆத்திரம் எல்லை கடக்க விருட்டென எழுந்து நின்றாலும் அந்த விழிகளில் தெரிந்த வலியில் மட்டும் மாற்றமில்லை;மாற்றமேயில்லை.

அதீத நம்பிக்கை வைத்து வந்தவனுக்கோ அவர்களின் வார்த்தைகளும் பார்வையும் பெருத்த அடியைத் தந்திட அதை விழுங்கிக் கொண்டே எழுந்தவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

இருவரில் யாரேனும் ஒருவரின் விழிகளில் நம்பிக்கையின் சிறு துளியாவது தெரிந்திருந்தாலும் பையன் இத்தனை உடைந்து போயிருக்க மாட்டான் என்பது சர்வ நிச்சயம்.

எழுந்து நின்றவனின் நிலையை ஊகித்த தோழனோ அவன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க வந்திட கையமர்த்தி தடுத்தவனுக்கு அவர்கள் தன்னை நம்பவில்லையே என்கின்ற ஆற்றாமை விரவிக் கிடக்க உரைத்திட மறுத்தான்,தனது தரப்பை.உரைக்காமலே புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தானே.அதனால் விளைந்த ஏமாற்றமோ இந்த செயலின் அடித்தளம்..?

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனின் பார்வை காதல் கொண்டவளின் மீது திரும்பிட ஏனோ அவளாவது தன்னை புரிந்து நம்பியிருக்க வேண்டும் என்கின்ற எதிர்ப்பார்ப்பு மனதோரம் நிறைந்து கிடந்தது மறுப்பதற்கல்ல.

மெல்ல அவளருகே நெருங்கி நின்றவனை அசையாது பார்த்தவளின் பார்வையில் இருந்த வெறுமையில் புரிந்து போனது,அவள் விழிகளில் தனக்கான காதல் இல்லையென்பது.

"அபி.." தன்னை நிதானபப்டுத்திக் கொண்டு பையன் அழைத்தது தான் தாமதம்,எகிறி விட்டாள் அவள்.

"என்ன..? என்னன்னு சொல்ல வர்ரீங்க வேந்தன்..? ஹான் என்னன்னு சொல்ல வர்ரீங்க..? நா எந்த தப்பும் பண்ணல..என்ன நம்புன்னா..? இல்ல நா தப்பே பண்ணாத நல்லன்னா..? எல்லா ஆதாரமும் பக்காவா இருக்கு..அதுவும் அந்த பொண்ணு இப்போ இருக்குறத பாக்கறப்போ.."

".................."

"என்ன ஒன்னும் பேச முடிலியா வேந்தன்..? உண்ம இருந்தா தான பேச வரும்..? உங்க பக்கத்த சொல்றதுக்கு கூட உங்க கிட்ட எந்த சாட்சியும் இல்ல..ஏன்னா நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க..அதான் வார்த்த வர்ல.." ஆவேசமாய் அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் மொத்தமாய் சிதறியது,அவன் மனது.

பையனுக்கோ எதுவும் பேசத் தோன்றவில்லை.ஒட்டு மொத்த நம்பிக்கையும் வடிந்து போயிருந்த பின் வார்த்தைகளால் மீண்டும் துளிர்க்க வைத்திட முடியாது என்று எண்ணி விட்டானோ என்னவோ..?

"சொல்லுங்க வேந்தன்.. பதில் சொல்லுங்க..எதுவும் பேசாம கல்லு முழுங்குன மாதிரி நின்னா என்ன அர்த்தம்..? ஹான்..?உங்கள தான் கேக்கறேன் வேந்தன்.?நீங்க தப்பு பண்ணலனு உங்களால சொல்ல முடியுமா..?"

"நா தப்பு பண்ணிட்டேன்னு தோணுதா..?" அவளின் விழிகளை அழுத்தமாய் பார்த்த படி கேட்டிட அவளுக்கோ சிறு சங்கடம்.இருப்பினும் தகுந்த ஆதாரங்கள் இருப்பது அவளை நம்ப வைத்தது.

"ஆமா..அப்டி தான் தோணுது..அதுக்கு ஏத்த மாதிரி ஆதாரம் இருக்கே..அத என்ன பண்றது..? அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க வேந்தன்..?" மீண்டுன் அவள் தன் பிடியிலேயே நின்றிட தன் சட்டைக் காலரைப் பற்றியிருந்த கரங்களை தீர்க்கமாய் அவன் பார்த்த பார்வையில் தன்னாலே அகன்றிருந்தன,அவள் கரங்கள்.

அவளுக்கோ ஆற்றாமை தாளவில்லை.அவனின் மீதான பொய்ப்பழியை முழுதாய் நம்பியவளுக்கு அவன் தன்னை ஏமாற்றியிருப்பதாய் உண்டாகிய கழிவிரக்கமும் சூழ்ந்து கொண்டிட மொத்தமாய் வெடித்தாள்,அவ்விடத்தில்.

"யூ ஆர் சீட்டர் வேந்தன்..நீங்க என்ன ரொம்ப ஏமாத்திட்டீங்க..நா உங்கள எவ்ளோ லவ் பண்ணேன் தெரியுமா..? ஆனா நீங்க எனக்கு கொஞ்சம் கூட உண்மயா இல்ல.."விம்மிய படி பேசியவளின் செயலில் ஏறிய கோபத்தை அடக்கிய படி நின்றிருந்தவனின் விழிகளில் அப்படி ஒரு அனல்.

அவர்களைப் போல் வார்த்தைகளை வாரியிறைக்காமல் நிதானத்தை பையன் கடைபிடிக்க அது அவளுக்கு திமிராகத் தான் தோன்றியது.ஏமாற்றப்பட்டதாய் நினைத்தவளுக்கு புத்தி மழுங்கிப் போயிருந்தது,ஆத்திரத்தின் மிகுதியால்.

"நா இவ்ளோ பேசறேன் பதில் எதுவும் சொல்லாம நிக்கறீங்க..? ஹான்..? ஐ ஹேட் யூ..ஐ ஹேட் யூ அ லாட்..உங்கள மாதிரி ஒரு தேர்ட் ரேட் பொம்பள பொறுக்கிய லவ் பண்ணதுக்கு எனக்கு தேவ தான்.."

"ஸ்டாப் இட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.." அவள் கூறி முடிக்கும் முன்னமே அவ்விடம் அதிர கத்தியவனோ கை முஷ்டியை இறுக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள தோழனை வார்த்தைகளால் வதம் செய்யும் அவனின் காதலியை எதுவும் செய்ய இயலா கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்,அரவிந்த்.

யாழவனுக்கோ அவளின் வார்த்தைகள் உயிரின் ஆழம் வரை அனல் பரப்பியது.காதலி என்றிருப்பவளை கண் தாண்டி பார்க்காமல் கண்ணியம் காப்பவனால் அவள் கூறிய இழிச்சொல்லை அத்தனை எளிதாய் ஏற்றுக் கொண்டிட இயலவில்லை.அதை ஏற்றுக் கொண்டால் அது பையனின் குணமும் இல்லை.

"என்ன என்ன சும்மா கத்துனா நீங்க சொன்னது இல்லன்னு ஆயிடுமா..? அப்போலாம் நீங்க என்னோட லவ்வர்னு சொல்லிக்க ரொம்ப பெருமயா இருக்கும்..ஆனா இப்போலாம் ரொம்ப கேவலமா இருக்கு..ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு..இதுக்கு முன்னாடி எத்தன பேரோட இது மாதிரி டைம் பாஸ்கு பழகி இருக்கீங்களோ...?நா உங்க கூட இருந்தப்போலாம் உங்க எண்ணம் எப்டி.." அதற்கு மேலும் பேசிட பையனின் சிவப்பேறிய விழிகள் விடவில்லை.
கோபத்தின் உச்சியில் கையில் கிடைத்த பூச்சாடியை நிலத்தில் போட்டு உடைத்து அவளின் வார்த்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தான்,உச்சமேறிய சினத்துடன்.

அவள் கூற விழைந்த வார்த்தைகள் அவனுக்கு தெளிவாகப் புரிய ஒரே வார்த்தையில் தன் ஒட்டு மொத்த நடத்தையின் மீதும் கரும்புள்ளி வைத்தவளின் செயலில் மொத்தமாய் உடைந்து போனான்,உள்ளுக்குள்ளால்.

தம்பியும் தந்தையும் வீட்டில் இருக்கவில்லை.இருந்திருந்தால் இன்னும் காயப்பட்டிருக்கக் கூடும் என்று விரக்தியாய் நினைத்தவனோ அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினானே தவிர ஒற்றை வார்த்தை உதிர்த்திடவில்லை.

கோர்த்த கரங்களால் பின்னந்தலையை தாங்கிய படி அண்ணாந்து பார்த்தவாறு பழைய நினைவுகளை அசைபோட்ட படி அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் பூங்கா பகுதியில் உள்ள கல் இருக்கையில் அமர்ந்து இருந்தான்,பையன்.

ஏனோ இப்போது நடந்தவற்றை நினைக்கும் போதும் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் சிறு வலி எழுவது மறுப்பதற்கல்ல.யாரேனும் தன்னை நம்பி இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே தான் இருக்கிறது,இன்று வரை.

அவனின் தாய் ஒரு வார்த்தையேனும் ஆறுதல் கூறியிருந்தாள் அவரை காலம் முழுக்க கொண்டாடித் தீர்த்திருப்பான்.தங்கை யாழினி ஆதுரமாய் ஒரு புன்னகை சிந்தியிருந்தால் வாழும் வரை அவளை தாங்கியிருப்பான்.அபிராமி நம்பிக்கையின் சாயலை விழிகளிலேனும் காட்டியிருந்தால் கூட ஜீவன் முழுதும் அவளிடம் மண்டியிட்டுத் தொலைத்திருப்பான்.

அவனைப் பொருத்த வரை அவனை யாரேனும் அந்த தருணத்தில் நம்பித் தொலைத்திருந்தாள் அதை விட அவன் வாழ்வில் வரமேதும் இருந்திப் போவதில்லை என்கின்ற எண்ணம் தான் மனதோரம்.

இப்போதும் கூட அந்த தருணமதில் தன்னை நம்பிய அரவிந்தையும் ராமநாதனையும் நினைத்து சிறு கர்வப் புன்னகை இதழ்களில்.

அவர்கள் இருவரையும் தன் வாழ்வில் விலை மதிக்க முடியா பொக்கிஷமென நினைத்தவனுக்கு தெரியாது,அவனுக்கென வரமாய் ஒருத்தி அவள் வாழ்வில் வந்திருப்பதை.

அவன் மீது நம்பிக்கை வைக்கத் தவறிய மொத்தப் பேரினதும் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் கொஞ்சமும் பழக்கம் இல்லா அவன் மீது வைத்து அவனுக்காக போராடியிருப்பதை அறிந்தால் பையனின் நிலை..?

காதல் செய்தே தனை தொலைத்திடுவானோ..?
தனை தொலைத்தே காதல் செய்திடுவானோ..?

மீண்டும் காதல் மலர்ந்திடாது என இறுக்கம் கொண்கு திரிபவனுக்குள்ளும் மாற்றம் தரத் தானே அவள் அவன் வாழ்வில் வம்படியாய் அவள் நுழைந்ததே.

அவன் ஒன்றும் இறுக்கமானவன் அல்லவே,இறுகிப் போனவன் தானே.

இறுகிய இதயத்தை இளக்கி இதம் பரப்பி இசை மீட்டிட, அவள் காதல் யாழின் இசையாய் அவன் உயிர்த்தொடும் நாள் வெகுதூரமில்லை என்று பையனுக்கு தெரிந்திட வாய்ப்பில்லை.

இசையவளின் இதயம் மீட்டும் காதல் யாழவனின் உயிர்த்தொடும்,இன்னிசையாய்.

உயிர்த்தொடும்.

2023.08.28
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 09(ii)

வீசிச்சென்ற தென்றலின் இதத்தை கூட உணர விடாமல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த பையனின் விழிகளோ இன்னும் அந்த இருள் சூழ்ந்த வானைத் தான் மேய்ந்து கொண்டிருந்தன.

நினைவுகளை அசை போட்டவனுக்கு மனதின் வலி கூடிப் போனது தான் மிச்சம்.நினைத்துப் பயனில்லை என்று தெரிந்தும் நினைவுகளை அத்தனை எளிதில் புறந்தள்ளிட முடியவில்லை,அவனால்.

பையனின் மனதில் ஆழமாய் கீறப்பட்டு ஆறாமல் இருக்கும் காயமே அந்த நினைவுகள்.அத்தனை எளிதில் கடந்திட இயலாததாய்.

விழிகளை சிமிட்டிய படி அண்ணாந்து வானத்தைப் பார்த்தவனுக்கு விண்மீன் கூட்டம் கூட இல்லா அக்கருவானம் தன் வாழ்க்கையின் பிம்பமாய் இருப்பது போன்றதோர் மாயை.

அவன் வாழ்வும் அப்படித் தானே.அவன் வானின் நிலவென நினைத்தவளும் அவனுடன் இல்லை.விட்டுச் செல்லா விண்மீன் கூட்டம் என நினைத்த பெற்றோரும் உடன் பிறப்புக்களும் கூட அருகில் இல்லை.

ஆங்காங்கே அரிதாய் சில இடங்களில் இருந்த விண்மீன்களைக் கண்டவனுக்கு அரவிந்தும் ராமநாதனும் தான் நினைவில் வந்தனர்.இந்த விண்மீன்கள் வானை விட்டு அகலாதது போல் அவனை விட்டு அவர்கள் ஒரு போதும் தள்ளி நின்றதில்லை என நினைத்தவனுக்கு ஏனோ சிறு நிம்மதி.

"இந்த வானம் மாதிரி நம்ம வாழ்க்கயும் வெறுமயா இருக்கு.." நினைத்தவனுக்கோ தன் வாழ்க்கையில் விளையாடிய விதி மீது கோபம் வந்தாலும் முன்பு போல் கொந்தளித்து நின்றிடும் நிலையில் இல்லை,பையன்.

ஏற்கப் பழகியிருந்தான்.ஏற்று அப்படியே கடந்திட முயன்று நின்றான்.இப்போதெல்லாம் வாழ்வதற்கு எந்த ஆசையும் இல்லை,அவனுக்கு.மனம் மொத்தமாய் வெறுத்து விட்டிருந்தது என்னவோ சத்தியமான உண்மை.

நேரம் இரவு ஒரு மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது.

கூடத்தில் நில்லாது குறுக்கும் நெடுக்குமாய் கெந்திக் கெந்தி சற்றே தடுமாற்றத்துடன் நடந்து கொண்டிருந்தவளுக்கு மனம் சற்றும் சமப்படவில்லை.நேற்றைய வலியில் சிறு துளி மீதமிருக்கத் தான் செய்தது.

ஒரு வித பயத்துடன் கூடிய படபடப்பு இதயமதை நிறைத்திருப்பதை உணர்ந்தவளால் நிலை கொண்டிடவே முடியாமல் போக மனதின் சிந்தனை வேறு பல்வேறு திசைகளில் இறக்க விரித்திட அத்தனை பதட்டம்.

"எங்க போனாரு இவரு..? இன்னும் காணோம்.." இதழ்களோ தன்பாட்டில் பையனுக்கு அர்ச்சிக்க மனதோ உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தது.

"ச்சே..ஃபோன வேற அட்டன்ட் பண்ண மாட்டேங்குறாரே.." கடுப்பில் முணுமுணுத்தவளுக்கோ இத்தனை முறை முயன்றும் அரவிந்தும் அழைப்பை ஏற்காதது கடுப்பை கிளப்பியது.

"ச்சே.." சற்று சத்தமாகவே கூறிக் கொண்டு அலைபேசியை தூக்கி சோபாவில் போடவும் அலைபேசி ஒலிக்கவும் சரியாய் இருக்க எதிர்ப்பார்ப்புடன் பார்த்து எடுத்தவளுக்கு தெரியும்,பையன் தன்னை மீள அழைத்திட மாட்டான் என்பது.

இருப்பினும் காதல் கொண்ட நெஞ்சமதில் தஞ்சம் கொண்ட சிறு எதிர்ப்பார்ப்பும் திரையில் மின்னிய அரவிந்தின் பெயரைக் கண்டதும் அவை அமிழ்ந்து புதைந்து போனாலும் அரவிந்தின் அழைப்பைக் கண்டு பரவிய நிம்மதிக்கு அளவே இல்லை.

வினாடியொன்றைக் கூட விரயம் செய்யாது அழைப்பை ஏற்றிட மறுமுறையில் உறக்கக் கலக்கத்துடன் ஒலித்தது,அரவிந்தின் குரல்.

"ஹலோ சொல்லு தங்கச்சி..எதுக்கு ஃபோன் பண்ணுன..?" கேட்டவன் கொட்டாவி விடும் சத்தம் அவளின் செவியிலும் நுழைந்தது.

"அண்ணா எங்க இருக்கீங்க..?"

"நா வீட்ல தான் மா..என்னம்மா என்னாச்சு..?" சற்றே தாழ்ந்து ஒலித்த அவளின் குரலைக் கேட்டதும் அவனுக்குள் பதட்டத்துளிகளின் தூறல்.

"இல்லண்ணாஆஆஆஆஆ..அவர இன்னும் காணோம்.." இழுவையுடன் சொன்னவளுக்கு அரவிந்தைத் தொந்தரவு செய்யவும் தயக்கமாய் இருந்தது.

"அவன் பக்கத்துல பீச்கு போய் இருப்பான்னு தோணுது மா..நா பாத்துட்டு என்னன்னு சொல்றேன்.." உறக்கத்தை துரத்தி விட்டு எழுந்தவனுக்கு தோழனை எண்ணி அத்தனை கோபமாய் வந்தது.

பாவையவளுக்கு பையன் அரவிந்துடன் இல்லாதது இன்னும் கலவரத்தை தந்திட விழிகளுடன் மனமும் சோர்ந்து போயிற்று.

"கடவுளே ரோபோ பத்ரமா வீடு வந்து சேந்துரனும்.." பூஜையறையில் நின்று மனமுருக வேண்டிக் கொண்டவளின் மனம் மட்டும் சமப்படவே மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது,வேண்டுமென்றே.

பாவையின் வார்த்தைகள் கோபத்தை கிளப்பிட அதே கோபத்துடன் வண்டியைக் விரட்டிய அரவிந்துக்கு பையனின் நிலை புரிந்தாலும் அவளின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பையனின் பிடிவாதத்தை நினைத்து பெரும் ஆற்றாமை.

இசையவளின் குரலே உணர்த்தி விடப் போதுமாய் இருந்தது,பையனுக்கான தேடலையும் அவள் மனம் சுமக்கும் துடிப்புடனான தவிப்பையும்.

"ச்சே.." குரல் உயர உச்சுக் கொட்டியவனோ அதீத வேகத்துடன் வண்டியை செலுத்தி கடற்கரையை வந்தடைய அவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் அங்கு அலைகளில் கால் நனைத்த படி நின்றிருந்தான்,பையன்.

இரு கரத்தையும் பேன்ட் பாக்கெட்டில் நுழைத்த வண்ணம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ஆழியை ஆழமாய் விழியால் உரசிக் கொண்டிருந்தவனின் முதுகிலேயே ஓங்கி ஒன்று வைக்க பரபரத்த கரத்தை அடக்கிய படி வந்தவனின் முகத்தில் கோபத்தின் குளியல்.

"எங்கடா போய்த்தொலஞ்ச..ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா நீ..? எதுக்கு அப்போ ஃபோன வச்சிகிட்டு இருக்க..தூக்கி போட்டு ஒடச்சிட வேண்டியது தான.." தோழனை தோற்பட்டையை அழுத்தமாய் பிடித்து தன் திருப்பியவனோ அவனுக்கு பேச சந்தர்ப்பம் கூட கொடுத்திடாமல் பேச பையனோ சலிப்பாய் இதழ் வளைத்தான்.

"ப்ச்ச்ச்ச்ச்..நா அடிக்கடி இப்டி வந்து நிப்பேன்னு உனக்கு தெரியாதா என்ன..? என்ன இன்னிக்கி திடீர்னு தேடி வந்துருக்க..அதுவும் இவ்ளோ லேட்டா..ஏன் யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா என்ன..?" புருவக்கத்திகளை வளைத்து விழிகளால் கொக்கி போட்டவனின் சைகையே சொன்னது,அவன் விடயத்தை கண்டு பிடித்து விட்டான் என்பதை.

தீயென பற்றி எரிந்த கோபம் இப்போது அணைந்து போய் விட மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது தான் சிறந்த வழி என வாதிட்டது,தோழனின் மனது.

"இல்ல..ரொம்ப நேரமா ஃபோன் பண்ணேன்..அபிஷேக் பேசனும்னு சொன்னாரு.." பாவையவள் மாட்டிக் கொள்ளாதிருக்க வாய்க்கு வந்ததை உரைத்தவனுக்கு தான் சொன்னது தான் அவளை மாட்டி விடப் போகிறதென்பது உரைத்திட அவசியப்பட்டன,சில நொடிகள்.

"இருபத்தேழு மிஸ்ட் கால்ஸ்.." சலிப்புடன் விழி மூடித் திறந்த பையனுக்கோ பாவையவளின் மீது கோபமாய் வந்தது.அவளின் அக்கறை மனதில் ஒரு ஓரத்தில் துளியும் துளியாய் இனித்தாலும் அந்த அக்கறைக்கான காரணம் அந்த இனித்தலை உணர விடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா..?

"இவ்வ்வ்வள்ள்ள்ள்ள்ள அஅஅஅஅஅஅ" பற்களை நறநறத்துக் கொண்டவனின் அலைபேசியில் அவளின் எண் சேமிக்கப்பட்டுக் கூட இருக்கவில்லை என்பது வேறு கதை.ஆனால்,அவளென்று ஊகித்து விட்டான் தோழனின் வார்த்தைகளிலும் வந்திருந்த தொடரான அழைப்புக்களிலும்.

தோழன் பலமுறை மறுத்து சொல்லியும் கேளாமல் விருட்டென வண்டியை கிளப்பிச் சென்றவனை இயலாமையுடன் பார்த்தவனுக்கு இசையவளை நினைத்து பரிதாபம் ஊறியது.

சரி அவளுக்கு அழைப்பு விடுத்தாவது விடயத்தைச் சொல்வோம் என்று எண்ணியவாறு பாக்கெட்டில் இருந்த அலைபேசியை கையில் எடுக்க சார்ஜ் தீர்ந்து அது எப்போதோ அணைந்து போயிருந்தது.

அரவிந்தின் அழைப்புக்காக அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தவளுக்கு நிமிடங்கள் கரைந்திட பயம் கூடிக் கொண்டிருந்தது.

"என்ன அரவிந்த் அண்ணா ஃபோன் பண்ண மாட்டேங்குறாரு.." நினைத்த படி உலாத்தியவளுக்கு மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ராமநாதனின் அறைக்கதவை தட்டவும் மனம் வரவில்லை.

இருமுறை அரவிந்துக்கு அழைத்துப் பார்த்தும் பலன் கிடைக்காதிருக்க மனமோ எதைப் பற்றியும் யோசித்திடவில்லை.கீழே சென்றாவது பார்த்திடலாம் என்கின்ற குருட்டு நம்பிக்கை மனதில் எழுந்திட கதவை வெளிப்பக்கமாய் பூட்டிக் கொண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்துக்கு வரவும்
அவளை புருவம் சுருக்கி பார்த்தார்,அந்த வயதான வாயிற் காவலாளி.

"என்னம்மா இந்த நேரத்துல இங்க வந்து நிக்கற..?"

"இல்ல தாத்தா..சின்ன ஒரு வேல தான்.." மழுப்பி சமாளிக்கவும்
பையனின் வண்டி வந்து நிற்கவும் சரியாய் இருக்க அப்பொழுது தான் நிம்மதியாய் மூச்சு விட்டாள்,பாவையவள்.

கொடுஞ்சினத்துடன் வண்டியோட்டிக் கொண்டு வந்தவனுக்கோ ஏனோ அவளை அவ்விடத்தில் தனியாய் கண்டதும் இன்னும் சினமேறிற்று.

அதுவும் அர்த்த ராத்திரியில் வாயிலில் அருகே நிற்பதைக் கண்டவனுக்கு ஏன் அத்தனை கோபம் எழுந்தது என்று தெரியவேயில்லை.அவள் மீதிருக்கும் அக்கறை அத்தனை சினத்தை கிளப்பி விட்டதோ என்னவோ..?

வண்டியில் இருந்து இறங்கியனோ வண்டிக் கதவை அடித்துச் சாற்றிட பாதங்களோ அவளை நோக்கி வேகமாய் அடியெடுத்து வைத்தன.

"என்ன தம்பி வர லேட்டாயிடுச்சா..? பொண்ணு நீங்க வர்ரீங்களான்னு பாக்க தான் கீழ வந்துருக்கு போல..போங்க கூட்டிட்டு போங்க தம்பி.." பாவையின் நிலமை தெரியாது அவளின் செயலை வைத்து அவளின் வருகைக்கான காரணத்தை கணித்து கூறியவரின் செயலில் கடினப்பட்டு இதழ் பிரித்தவனுக்கு அவர் முன்னே அவளை திட்டவும் மனம் வரவில்லை.

மனதால் அவளை மனைவியாய் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மனைவி எனும் அந்தஸ்தை தான் சமூகத்தின் பார்வைக்கு கொடுத்திருக்கிறோம் என்பது புரிந்தவனுக்கு எங்கனம் அவளை மற்றவரின் முன் அவமதிக்க மனம் வரும்..?

அரவிந்திக்கும் தாமரைக்கும் இவர்களிடையிலான உறவு நன்றகாவே தெரியும் என்பதால் அவர்களின் முன்னே தன்னை மீறி நடந்து கொண்டாலும் மற்றவர்களின் முன் பாவையவளை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை,பையன்.

அவளின் கரத்தை இறுகப் பற்றி வாயிற் காவலாளிக்கு சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்தவனோ அவளுடன் நடப்பது போன்று தோன்றினாலும் அந்த பிடியின் அழுத்தமே போதும்,அவள் அவனின் பிடிக்குள் என்பதை எடுத்துரைத்திட.

காவலாளியின் பார்வை வீச்சில் இருந்து மறையும் வரை அவளுடன் நடந்து வந்தவனோ அடுத்த நொடி அவளை இழுத்துப் பிடித்த படி தன் வேகத்தில் நடந்திட அவன் பின்னே ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை,அவளுக்கு.

பையனின் பிடியிற்கேற்ப இழுபட்டு போவனளுக்கு விழுந்து தொலைத்திடுவோமோ என்கின்ற பயம் எழாமல் இருந்தால் அது அதிசயமென்று ஆகி விடாதா..?

"மெதுவா போங்க சார்.." அவள் பயத்தில் சற்று சத்தமாகே கூறிட அதற்கேற்ப அவனின் நடை தளர்ந்து போயிருந்தால் அது யாழ்வேந்தன் இல்லையென்று ஆகி விடாதா..?

"வாய மூடிட்டு இருந்துருக்கலாம் மட சாம்பராணி.." தன்னையே திட்டிக் கொள்ளும் விதமாய் அவனின் நடை இன்னும் வேகமெடுத்திட இழுத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்தவனோ தாமதியாது அறைக்குள் தள்ளி தானும் உள் நுழைந்து கதவை சாற்றிட அவளுக்கோ இன்னும் பயம்.

மார்புக்கு குறுக்கே கரத்தை கட்டி விழி மூடித் திறந்து அழுத்தமாய் பெருமூச்சு விட்டவனுக்கோ அவளுக்கு அடிக்கத் தான் தோன்றிற்று.பின்னே அவனைப் பொறுத்த வரை அவள் செய்வதும் செய்து கொண்டிருப்பதும் அத்தனை தவனறானவை அல்லவா..?

"உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா..? எத்தன தடவ தான் நானும் சொல்றது..?எதுவுமே புரியாத மாதிரி நடந்துகிட்டு இருக்க..இல்லன்னா புரிஞ்சும் வேணும்னே இப்டி நடந்துக்குறியா..?"

"................"

"அப்டியே பளார்னு ஒன்னு விடத் தான் தோணுது..பொண்ணுங்குறதால கைய நீட்டக் கூடாதுன்னு பாக்கறேன்..இப்போ எதுக்கு நா வர்ர வர காத்துகிட்டு இருந்த..? எதுக்கு அரவிந்துக்கு ஃபோன் பண்ணி அவனயும் டார்ச்சர் பண்ற..? நானா உனக்கு நா வர்ர வர வாசல்லயே தவம் கெடக்க சொன்னது..?"

பற்களை கடித்த படி விழிகளிலும் கோபத்தை படரவிட்டு நீளமாய்ப் பேசிட்ட யாழவனின் மனசாட்சிக்குத் தெரியும்,அது அவனின் இயல்பே இல்லை என்பது.

உச்சமாய் கோபம் வந்தால் பேசாமல் கடந்திடுவானே தவிர இப்படி திட்டுவதும் அதட்டுவதும் அவனின் அகராதியிலேயே இருந்ததில்லை.

அழுத்தமான பார்வையும் இறுக்கம் கொட்டும் மௌனமும் பார்வை கூட படர்ந்திடா பாராமுகமுமே அவனின் கோபத்தின் வடிவங்களாகி இருக்க இப்போது அவள் முன்னே மட்டும் முரணாய் நடந்து கொள்வதன் காரணம் தான் என்ன..?

காதலா..?
ம்ஹும்,நிச்சயமாய் இல்லை.பின்னே வெறும் அக்கறையா..?
அப்படித் போலும்.ஆனாலும்,உறுதியாய் கூற முடியவில்லை.அப்படியென்றால் என்ன தான் காரணம் என்று கேட்டால் பையன் தான் பதில் மொழிய வேண்டும்.

"சீன் க்ரியேட் பண்றியா நீ..? சீன் க்ரியேட் பண்ணி என்ன இம்ப்ரஸ் பண்ணலாம்னு பாக்கறியா..?"

"ம்ம்கும் அப்டியே இவர் இம்ப்ரஸ் ஆகி கிழிச்சிருவாரு..நானும் இம்ப்ரஸ் பண்ணி கிழிச்சுருவேன்.."

"என்ன என்ன யோசிக்கற நீ..? உன்ன தான் கேக்கறேன்..நீ தலகீழா நின்னு கெஞ்சுனாலும் கண்டிப்பா நா உன்ன லவ் பண்ண மாட்டேன்..ஒன்னு சொல்றேன் நல்லா புரிஞ்சிக்கோ..நீ என்ன தான் ட்ரை பண்ணாலும் கண்டிப்பா நா உன்ன லவ் பண்ண போறதில்ல..சித்தப்பா ஃபாரின் போனதுக்கு அப்றம் கண்டிப்பா உனக்கு டைவோர்ஸ் தரத் தான் போறேன்..இதுக்கப்றமும் இப்டி நடந்து கிட்டன்னு வை நா மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.." கத்தி விட்டு குளியலறைக்குள் நுழைந்தவனுக்கு இன்னுமே அவள் மீதான கோபம் அடங்கிய பாடில்லை.

பையனின் திட்டலில் பயந்தாலும் அவன் விலகிச் சென்ற பின் தானே இயல்பாகிக் கொண்டாள்,பாவையவள்.

"டயலாக மாத்தி கூட திட்ட மாட்டேங்குது இந்த ரோபோ..ஆனா இன்னிக்கு அந்த மெய்ன் டயலாக் மிஸ் ஆயிடுச்சு.." தனக்குள் நினைத்து உள்ளுக்குள்ளால் அவனுக்கு பழிப்பு காட்டிய படி சோபாவை தட்டி ஒழுங்கி செய்து கொண்டிருந்தவளின் முன்னே வந்து நின்றான்,தலையில் ஈரம் சொட்ட.

"இங்க பாரு...இந்த உலகம் அழிஞ்சா கூட இதுக்கப்றம் நா உன்ன லவ் பண்ண மாட்டேன்..புரிஞ்சிக்க.." அழுத்தமாய் எச்சரித்து விட்டு நகர்ந்தவனின் விழிகளில் இருந்து தப்பிடவில்லை,பாவையவளின் அலுப்பான முகபாவம்.

உயிர்த்தொடும்.

2024.08.29
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 10(i)


இதழ் சுளிப்புடன் அலட்சியமான முகபாவம் காட்டி விட்டு திரும்பி நின்றவளின் செயலில் பையனின் விழிகள் இடுங்கின.

"நாம நெனக்கிற மாதிரி இவ ஒன்னும் லேசுபட்ட ஆள் கெடயாது.." மனசாட்சி எடுத்துரைத்திட கட்டிலில் சரிந்தவனுக்கு இத்தனை நாள் இல்லாமல் இசையவளை ஊன்றி கவனிக்கச் சொன்னது,மனம்.

முன்பிருந்த இசையவளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாய் உணர்ந்து கொண்டவனுக்கு இனி அவளை அதட்டி மட்டும் போதாது என்கின்ற எண்ணம்.

தன் அதட்டலும் திட்டுக்களும் அவளுக்கு பழகிப் போய் விட்டது என தாமதமாய் புரிந்து கொண்டவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

பையனைப் பொறுத்தவரையில் இசையவளுக்கு தன் மீது இருக்கும் உணர்வு காணாமல் போய் விட வேண்டும்.அந்த உணர்வு அவனைப் பொறுத்தை வரையில் ஈர்ப்பாக இருக்க அது மறைந்தே போனால் போதும் அவனுக்கு.

ஆனால்,அது காதலென்று அறிந்தால்..?
அவன் உயிரை அப்படியே உருக்கிக் குடிக்கும் என்று தெரிந்தால்..?
ஆழம் காண முடியா அவள் காதலில் விழுந்தால் எழவே முடியாது என பையனுக்கு புரிந்தால்..?
காதல் செய்திடுவானா அவன்..?
இல்லை,அறிந்து தெரிந்து புரியும் முன்னே காதல் வலையில் வீழ்ந்திடுவானா..?
பொறுத்திருந்து தான் பார்த்திட வேண்டும்,யாழவனின் காதல் அதிகாரத்தை.

அவனிருக்கு நிலையில் அவள் மீது காதல் வராது என ஆணித்தரமாய் நம்பியவனுக்கோ தன் மீது அவளுக்கு விருப்பம் வருவதில் விருப்பமில்லை;விருப்பமேயில்லை.

தன்னை காதலித்துத் தொலைத்து பின் மனமுடைந்து அவள் வாழ்வு வீணாகிடக் கூடாது என்று நினைத்தவனுக்கு பாவையவளை சரி கட்டும் வழி தான் தெரியாது போக முதன் முதலாய் யாழவனின் எண்ணம் முழுக்க ஆக்கிரமித்து நின்றிருந்தான்,இசையவள்!

இரண்டு நாட்கள் கடந்திருந்தது.

ராமநாதனின் முன்னே கலகலத்து இயல்பாய் காட்டிக் கொள்ளும் பையனோ தனிமையில் அவளைக் கண்டு கொள்வதேயில்லை.

அவளொருத்தி இருப்பதை மறந்தவன் போல் நடந்து கொள்பவனைக் காண்கையில் அவளுக்கு எரிச்சலும் கோபமும் ஒரு சேர கிளர்ந்தெழுந்தாலும் அவனிடம் அத்தனை எளிதில் மாற்றத்தை எதிர்பார்த்திட முடியாது என்கின்ற நிதர்சனம் உரைக்க அமைதியாகிப் போவாள்,பாவை.

காலையில் அவளை அலுவகத்துக்குள் கொண்டு விடுவதும் வரும் போது அழைத்து வருவதும் தொடர்கதையாகி இருந்தது,ராமநாதன் இருப்பதால்.

அன்றும் அப்படித் தான்.
அறக்க பறக்க தயாராகிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தவளோ அமராமலே இட்லி இரண்டை விழுங்கிக் கொண்டிருக்க அவளைப் பிடித்து தன்னருகே அமர வைத்தவனின் செயலில் அவளிதயத்தாளம் சீரின்றிப் போனது.

விழிகளை விரித்து பேய் முழி முழித்தவளைக் கண்டவனுக்கோ அவளே தம் வாழ்க்கையை வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டி விடுவாள் என்கின்ற எண்ணம் தோன்ற மானசீகமாய் நெற்றியில் அறைந்து கொண்டான்,பையன்.

"சித்தப்பா இருக்காரு..காட்டிக் கொடுத்துடா.." புன்னகைத்தவாறே அடிக்குரலில் எச்சரித்தவனோ அவளுக்கு சைகை செய்திட புரியத் தாமதமாகினும் புரிந்த கணம் அவள் மனமோ அவனின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

"நடிகன்டா.."மனதுக்குள் சிலாகித்துக் கொண்டவளோ அவனின் கைப்பிடியில் சிக்கியிருந்த தன் கரத்தை உருவிட அவள் முயற்சி புரிந்தாற் போல் விலகிக் கொண்டது,அவன் கரம்.

"என்ன இசை..எதுக்கு இப்டி அவரசமா சாப்டற.?.. பொறுமயா உக்காந்து மெதுவா சாப்டுமா.." என்றும் இல்லாமல் மென்மையாய் தன்மையாய் கனிவாய் பரிவோடு கூறிய படி அவனின் கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருந்த இட்லித் துகளை அப்புறப்படுத்தி விட தலை சுற்றிப் போனது,பாவையவளுக்கு.

வாய்க்குள் இருந்ததை விழுங்கும் முன்னே புரையேறிட நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமியவளோ அவரச அவரசமாக மென்று விழுங்கப் பார்த்திட முடியாமல் போக துப்பிட ஓய்வறைக்குள் நுழைந்தவளின் பின்னே எழுந்து சென்றான் பையன்,நிஜமான அக்கறையுடன்.

"த்தூஊ..த்தூஊ..துத்தூஊஊஊஊ..தூ..தூஊ"வாயில் இருந்ததை துப்பியவளுக்கு தொடரான இருமலில் போதுமென்று ஆகி விட்டது.

"யப்பா இந்த ரோபோ நடிக்கிறதுன்னாலும் நமக்கு ரொம்ப ஆபத்தா இருக்கே..காப்பாத்துடா சாமி.." சற்று சத்தமாக முணுமுணுத்து விட்டு திரும்பிட வாசற்கதவில் சாய்ந்து நின்ற பையனுக்கு அவளின் வார்த்தைகள் செவிகளில் விழ கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தாலும் தன்னைக் காட்டிக் கொண்டான்,எதுவும் கேட்காதது போல்.

கதவருகே வந்தவளுக்கோ அங்கு நின்றிருந்த பையனைக் கண்டதும் பயம் எழுந்தாலும் அதை களைந்து விட்டிருந்தன,பையனின் சாதாரணமான வார்த்தைகள்.

"என்ன இப்போ ஓகேவா..?"

"ம்ம்.." என்றவளின் விழிகளில் தற்செயலாய் அவர்களை கடந்து சென்ற ராமநாதன் விழுந்திட மனமோ சுணங்கிப் போனது.

"மாமா பாக்கறாருங்குறதுக்காக இன்னும் எவ்ளோ தான் நடிக்கனுமோ..?" தனக்குள் கூறிக் கொண்டு கடந்தவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை வைத்தே அவளின் எண்ணப் போக்கை கணித்தவனுக்கு அதை மாற்றிடும் எண்ணமில்லை.முக்கியமாய் அதற்கான தேவையும் இல்லையே.

சத்தியமாய் அவன் எழுந்து வந்தது அவள் மீதிருந்த அக்கறையினால் உண்டாகிய பதட்டத்தினாலே ஒழிய ராமநாதனுக்காக அல்ல.அந்த உண்மை அவன் மட்டுமே அறிந்ததாய்.

"அவ அப்டியே நெனச்சுக்கட்டும்..அப்போ தான் நம்ம மேல இருக்குற இன்பாக்ஷுவேஷன் காணாம போயிரும்.." தனக்கு அறிவுரை கூறிக் கொண்டவனின் மனமோ அவள் மீது அக்கறை கொண்டு துடிக்கக் கூடாது என தனக்குத் தானே கட்டளையிட்டு அடக்கியது.

●●●●●●●

அலைபேசியை கையில் வைத்த படி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ராமநாதனை புரியாது பார்த்தன,பாவையின் விழிகள்.

நேரம் இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பையன் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவுமில்லை.

ராமநாதனிடம் ஏனென்று கேட்டிட மனம் உந்தினாலும் நாகரிகம் கருதி அமைதி காத்தவளிடம் தானாய் வந்து பேசினார்,மனிதர்.

"அம்மாடி.."

"ஆ..சொல்லுங்க மாமா.." மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தவளோ கேட்டுக் கொண்டு அதை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தெழுந்தாள்.

"ஒரு மனுஷன் இவ்ளோ பதட்டமா நடந்துகிட்டு இருக்கேன்..நீ என்னன்னா எதுவும் கேக்காம லொட்டு லொட்டுன்னு தட்டிட்டு இருக்க.." என்றவரின் வார்த்தைகளே போதும்,அவளின் மன எண்ணத்தை மனிதர் அறிந்து கொண்டதை உணர்த்திட.

"அவ்ளோ கண்ணாடி மாதிரியா இருக்கு நம்ம மொகர.." ஆயாசமாய் நினைத்தவளை மேலும் ஆழ்ந்து போகவிடாது கலைத்தன,அவரின் வார்த்தைகள்.

"வேந்தனோட அம்மா அப்பா குடும்பம் ஊர்ல இருக்குறது உனக்கு தெர்யும் தான..?"

"ஆமா மாமா சொல்லி..சொல்லியிருக்காரு.."

"அவங்களுக்கு உங்க ரெண்டு பேரோட கல்யாண விஷயம் தெரியாது..அது உனக்கு தெர்யும்ல..?"

"ஆமா மாமா..ஏன் மாமா திடீர்னு இப்டி கேக்கறீங்க..?"

"எங்க அண்ணி என்னோட நம்பருக்கு ஃபோன் பண்ணுனாங்க...கண்டிப்பா அது வேந்தன பத்தி கேக்கறதுக்காக தான் இருக்கும்..வேந்தன் பேசற வர என்னால அவங்க கூட பேச முடியாது..கண்டிப்பா அவங்க சீக்கிரமா அவன் கூட பேச வருவாங்க..அதான் மாமியார் மாமனரா ஃபேஸ் பண்ண தாயாராகிக்கோ.." சிறு புன்னகையுடன் கூறிட சம்மதமாய் தலையசைத்த இசையவளுக்கு பையன் சீக்கிரம் தன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்தது.

குடும்பத்தினர் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை அறிந்தவளுக்கு தெரியாதா பையனுக்கு இந்த வருடக் கணக்கான பிரிவு எத்தனை தூரம் வலிக்கும் என்பது..?

"அம்மாடி எனக்கு கொஞ்சம் சுடு தண்ணி தாம்மா.."

"தோ தர்ரேன் மாமா.." கூறியவளின் பாதங்களோ சமையலறையை நோக்கி நீண்டன.

அவள் சமயலறைக்குள் நுழைந்ததும் மீண்டும் ராமநாதனின் அலைபேசி ஒலிக்கவும் பையன் உள்ளே வரவும் சரியாய் இருக்க உள்ளே ஓரடியை எடுத்து வைத்ததும் தான் ராமநாதனின் இருப்பே அவனின் கவனத்தை கவர்ந்தது.

"இசைமா.." இல்லாத மென்மையில் தோய்ந்தெடுத்த துள்ளல் மிகுந்த குரல் இசையவளின் செவியை அடைந்திட உண்டாகிய அதிர்வலைகளால் மிதமான சூட்டில் இருந்த வெந்நீர் நிரம்பிய குவளை சற்றே சரிந்து அவள் மீதும் நீர் தெறித்தது.

"ஆத்தாடி..நல்ல வேள கொதிக்கற தண்ணி இல்ல.." கடவுளுக்கு நன்றி கூறியவளுக்கு பையனை நினைத்து சிரிப்பு வேறு.அதுவும் தானும் நடிக்க வேண்டும் என்பது நினைவில் வர அவளின் புன்னகை இன்னும் விரிந்தது.

"தோ வந்துட்டேங்க.." குரல் கொடுத்த படி வெளியே வந்தவளோ ராமநாதனிடம் மீள நிரப்பிய குவளையை நீட்டிட வாங்கிக் கொண்டவரோ " என்னமா களச்சு போய் வந்துருக்குற பையனுக்கு தண்ணி கொடுக்க மாட்டியா..?" புன்னகை மாறாது கேட்டிட இசையவளுக்கோ மாட்டிக் கொண்ட நிலை தான்.

"அ..அது.."

"அது சித்தப்பா நா வந்ததும் எப்பவுமே தண்ணி குடிக்க மாட்டேன்..டயர்டாகி வர்ரதுல அதான்..நா குடிக்க மாட்டேன்னு தெர்யும்ல அதான் அவ எடுத்துட்டு வர்ல..அப்டி தான இசைமா..?" மொழிந்தவனின் விழிகளோ பாவையவளின் மீது அழுத்தமாய் படிந்தன.

"ஆமா மாமா..இவரு வந்ததும் தண்ணி குடிக்க மாட்டாரு.." சமாளித்தவளுக்கு உளறிக் கொட்டி விடுவோமோ என்கின்ற பயம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது என்னவோ,மறுக்க இயலாத உண்மை.

கழுத்துப் பட்டியை தளர்த்தியவாறு அறைக்குள் நுழைந்தவனோ சமயலறைக்குள் நுழையப்பார்த்தவளின் பெயரை மீண்டும் ஏலம் விட்டான்.

"இசைமா..என்னோட டவல் எங்க..?"

"அது எப்புர்ரா எனக்கு தெர்யும்..? நீ தான் கப்போர்ட தெறந்து கூட பாக்க விட மாட்டேங்குற.." மனதுக்குள்ளால் குமுறியவளோ "இருங்கங்க வந்து எடுத்து தர்ரேன்.." பொறுப்பான மனைவி போல் பதில் கூறிக் கொண்டு அறைக்குள் நுழைய அவர்கள் இருவரையும் பார்த்து நின்ற ராமநாதனின் இதழ்களில் மெல்லிய புன்னகை,நிறைவும் நிம்மதியுமாய்.

அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்,பையன்.

"ஐயோ இப்ப எதுக்கு மொறக்கிறார்னு தெரிலியே..?"

"ஒரு தடவ சொன்னா புரியாதா ஒனக்கு..? நாம ரெண்டு பேரும் நல்ல அந்யோன்னியமான புருஷன் பொண்டாட்டி மாதிரி நடிக்கனும்னு சொல்லியிருந்தேன்ல.."

"அ..அ..ஆமா.."

"அப்றம் எதுக்கு ஒன்னும் தெரியாத தத்தி மாதிரி நடந்துகிட்டு இருக்க..? சித்தப்பாவுக்கு டவுட் வந்துதுன்னு வை நா மனுஷனாவே இருக்க மாட்டேன்.."

"இப்ப மட்டும் மனுஷனா இருந்து கிழிச்சிட்டு இருக்காரு..ஐயோ ஐயோ.."

"என்ன சொல்றது புரியுதா..?"

"ஆமா.." கூறிக் கொண்டு மேலும் கீழும் சிரசசைத்தவளின் வேகமே போதும்,பையனின் மீதான பயத்தை ஒப்பித்திட.

குளித்துக் கொண்டு வந்தவனுக்கோ வாய் ஓயவில்லை.

"இசைமா சாப்பாடு என்னது..?"

"இசை என்னோட க்ரீன் கலர் ஷர்ட் எங்க..?"

"இசை இங்க கொஞ்சம் வந்துட்டு போயேன்.."

"இசை என்னோட க்ரெடிட் கார்ட எங்க வச்சிருக்க..?"

"இசை உன்னோட ஃபோன கொடு..என்னோட ஃபோன்ல சார்ஜ் தீந்து போச்சு.."

இசை..இசை..இசை..
என யாழவனின் இதழ்கள் இசைத்ததை மனம் இரசித்தாலும் அவளுக்கே ஒரு கட்டத்தில் கோபம் வந்து விட்டது.

"சாதாரணமா இருந்தாலே மாமாவுக்கு டவுட் வராது..இந்த ரோபோ பண்ற அட்டகாசத்த பாத்து தான் அவருக்கு டவுட்டே வரப் போகுது.." மனதுக்குள் கருவி முடிக்கும் முன்னமே மீண்டும் பையனின் குரல்.

"இசைமா உன்னோட ஃபோன் சார்ஜர கொஞ்சம் கொடு..என்னோடத காணோம்.."

"அடேய்..உன் ஃபோனும் என் ஃபோனும் வேற வேற மாடல்டா.." அழுகுரலில் முணகியவளுக்கோ அவனின் அலப்பறைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

கதவை மூடிக் கொண்டு அறைக்குள் நுழையும் போது மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டு கட்டிலில் முதுகுக்கு முட்டுக் கொடுத்தவாறு சரிந்தமர்ந்திருந்தான்,பையன்.

அவள் வந்தது தெரிந்தும் விழி நிமிர்த்தி பாராதவனின் செயல் அவளுக்குள் எந்த வித பாதிப்பையும் உண்டு பண்ணவில்லை.

தன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவளோ சிறு குளியலை போட்டு விட்டு வந்திட தொண்டையைச் செருமினான்,பையன்.

"இசை.." இன்று பலமுறை அழைத்துப் பழகியாதலோ என்னமோ வழமையான "அரசி" எனும் அழைப்பு பின்னே போயிருந்தது.

"என்ன சார்..?" உள்ளத்து மகிழ்ச்சியை காட்டாத குரலில் கேட்டவளுக்கு பழக்க தோஷத்தில் வந்திட்ட அவனின் "இசை" எனும் அழைப்பு தித்திப்பை தருவதாய்.

"இங்க பாரு..நா சித்தப்பா முன்னாடி நடந்துக்குறதெல்லாம் வெறும் நடிப்பு தான்..அத வச்சு வீணா கற்பன ஏதும் பண்ணிக்காத..அவரு போற வர நா இப்டி தான் இருப்பேன்..நம்ம இப்டி தான் இருந்தாகனும்..அதுக்கப்றம் கண்டிப்பா நம்மா டைவோர்ஸ் பண்ண தான் போறோம்..ஸோ வீணா எந்த ஆசயும் வளத்துக்காத..புரியுதா இசை..? சாரி சாரி அரசி.." உள்ளுக்குள் பெருகிய மகிழ்ச்சியை அப்படியே நீரூற்றி அணைத்தவனின் செயலில் அலட்சியமாய் வளைந்தன,அவளிதழ்கள்.

"ஒரு நிமிஷம் சந்தோஷப்பட விடமாட்டேங்குதே இந்த ரோபோ.." அவளின் அலுப்பான உச்சரிப்பு அவனுக்கு கேட்கவில்லை போலும்.

சோபாவில் சரிந்து கழுத்து வரை போர்த்திக் கொண்டு படுத்தவளோ பையனை அடிக்கடி பார்வையால் தொட்டவாறே கண்ணயரந்து ஆழ்ந்தும் போனாள்.

சிறிது நேரம் கழிய பெருமூச்சொன்றுடன் அவளைப் பார்த்து விட்டு பையனும் படுத்துக் கொண்டு விழிமூடினான்.

நடுநிசியைத் தாண்டி சில நிமிடங்கள் கடந்திருக்கும்.ஏதோ சத்தத்தில் விழிப்புத் தட்டிட விழியசைத்துப் பார்த்தவனுக்கோ சோபாவில் படுத்திருந்த இசையைக் காணாமல் புருவங்கள் சுருங்கின.
 
Status
Not open for further replies.
Top