ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

Epi 8 Continuation 👇👇👇


சித்தார்த் தன் அறைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் நேத்ராவை கூப்பிட்டு அனுப்பி இருந்தான். அவள் உள்ளே வந்து தவறு செய்துவிட்ட மாணவியை போல தலை கவிழ்ந்து நின்றாள்.​

சித்தார்த் எதுவும் பேசாமல் தன் கைப்பேசியை அவளிடம் நீட்டினான். அவள் புரியாமல் நிமிர்ந்து அவனை பார்க்க, போனை காதில் வைக்க சொல்லி சைகை செய்தான். அவளும் யோசனையோடு அதை தன் காதில் வைக்க மறுமுனையில் மகேந்திரன் தான் பேசினார்.​

“என்னம்மா மருமகளே ஒரு போன் கூட பண்ணல? எப்படி இருக்க? சித்து கூடவே மருத்துவமனைக்கு போய் அவனுக்கு உதவி செய்வதாக சொன்னான். ரொம்ப நல்ல முடிவு தான் எடுத்திருக்கம்மா. சித்துக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். நீ வந்ததில் இருந்து விதவிதமா சமைச்சு போடறியாமே? இன்னைக்கு என்னம்மா சமைச்சு கொடுத்தே?” என்று அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் பேசிக்கொண்டே போக என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து விழித்தாள்.​

போன் ஸ்பீக்கரில் இருந்ததால், “ம் முருங்கைக்காய் சாம்பார் முருங்கைக்காய் பொரியல்” என்றான் சித்தார்த் நேத்ராவை நக்கலாக பார்த்துக் கொண்டே.​

“மருமகளே நான் போனை வைக்கிறேன்மா உன் புருஷனுக்கு இங்கிதமே இல்லை. பவிஷ்கா உன்னோடு பேசணும்னு சொன்னாள், ஞாயிற்றுக்கிழமையில அவளுக்கு போன் செய்து பேசும்மா” என்றார் மகேந்திரன்.​

“சரி மாமா, உடம்பை பார்த்துக்கோங்க* என்று சொல்லி போனை சித்தார்த்திடம் நீட்டினாள்.​

அவளை பார்த்து கொண்டே அதை அவளிடமிருந்து வாங்கியவன், “என் அறைக்கு வந்து எட்டிப் பார்த்த உனக்கு எனக்கு போன் செஞ்சு பேசணும்னு தோணலையா?” என்றான்.​

திகைப்புடன் விழி விரித்து அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அதுக்கெல்லாம் இது இருக்கணுமே என்று ஒற்றை விரலால் நெற்றியின் பக்கவாட்டில் தட்டி காண்பித்தான்.​

தனக்கு அறிவில்லை என்கிறான் என்பதை உணர்ந்தவள் மனம் வாட, “நான் கிளம்பட்டுமா டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்.​

“சரி சரி யாரையும் குறை சொல்லிட்டு இருக்காமல் தன் கையே தனக்கு உதவினு வேலை கத்துக்கணும் புரியுதா?” என்றான்.​

“புரியுது டாக்டர்” என்றாள் அவள் அவசரமாக​

தன் கட்டளையால் அவளுடைய பிரச்சனைகள் அவனுக்கு தெரியாமல் போய்விடப்போகிறது என்பதை சித்தார்த் அபிமன்யூ அறிந்திருக்கவில்லை.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 09

சித்தார்த்தின் அறையில் இருந்து வெளியே வந்த நேத்ரா நேராக ஜமுனா இருந்த இடத்திற்கு சென்றாள். அவள் ஒரு நோயாளியிடம் சாப்பிட வேண்டிய மருந்துகளை காண்பித்து சாப்பிட வேண்டிய கால நேரத்தை பற்றி விளக்கி கொண்டிருந்தாள்.​

நேத்ரா அதை கவனமாக பார்த்தபடி நின்றிருந்தாள். நோயாளியிடம் பேசி விட்டு திரும்பிய ஜமுனா, “ஏய் இங்கே நின்னு என்ன செய்யறே? அந்த பெட்டியில் மருந்து எல்லாம் காலி ஆயிடுச்சு பாரு. ஸ்டோர்ல போய் வாங்கிட்டு வா” என்றாள் ஜமுனா.​

நேத்ரா உடனே திரும்பி செல்லாமல் அவள் சொன்ன வேலையை ஒரு சின்ன நோட்டு புத்தகத்தில் குறித்துக் கொண்டு மீண்டும் அங்கேயே நின்றாள்.​

ஜமுனாவிற்கு கோபம் வந்துவிட்டது, “நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுனு எகத்தாளமா நிக்கறீயா? சீனியர் சொல்ற வேலையை உன்னால செய்ய முடியாதா? இந்த மருத்துமனையில் பத்து வருஷமா வேலை செய்யற வசந்தியே நான் ஒரு வேலை சொன்னால் மறுக்காமல் உடனே செய்து முடிப்பா, வந்து ஒரு மாசம் ஆகல, என்ன திமிர்? தகுந்த படிப்பும் அனுபவமும் இல்லாத உனக்கெல்லாம் நான் சொன்னால் மட்டும் எங்கே புரிய போகுது? இப்போ நான் சொல்ற வேலையை செய்ய முடியுமா? இல்லை டாக்டர் சித்தார்த்திடம் போய் இந்த பெண்ணுக்கு என்னால வேலை சொல்லித்தர முடியாதுனு சொல்லிடட்டுமா?” என்று மிரட்டினாள்.​

நேத்ரா அமைதியாகவே நின்றிருந்தாள்.​

“ஓ அவ்வளவு நெஞ்சழுத்தமா உனக்கு? நான் அவங்க அப்பா காலத்துல இருந்து வேலை செய்யறேன். அவரே என்னை எதிர்த்து பேச மாட்டாரு. இ்ப்போ அவர் மகன் மட்டும் என்னை என்ன சொல்லிட போறாருனு நானும் பார்க்கிறேன்” என்று கிளம்பினாள்.​

“நில்லுங்க சிஸ்டர்” என்றாள் நேத்ரா.​

ஜமுனா முறைத்துக் கொண்டே “என்ன?” என்று கேட்க,​

“அதிகப்பட்சம் என்னை அட்மின் பிளாக்கிற்கும். மருந்துகள் இருக்கிற ஸ்டோருக்கும், கேண்டீனுக்கும் தான் அனுப்பறீங்க. உங்களுக்கு ஒரு நாளைக்கு என்னென்ன தேவை இருக்குனு நான் குறிப்பெடுத்துக்கிறேன். அதை வாங்குவதற்காக அடிக்கடி நான் அங்கே போய் கேட்கிறதுக்கு பதிலாக, ஒரு நாளைக்கு தேவையானதை ஒரே முறையாக போய் வாங்கிட்டு வந்திடுறேன்.​

நான் இதுவரைக்கும் உங்களுக்கு செய்த எந்த வேலையும் தவறாமல் செய்வேன். சரியான நேரத்துக்கு உங்களுக்கு தேவையானது அனைத்தும் கிடைக்கும், பஜ்ஜி, டீ உட்பட. ஆனால் அதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி மற்ற நேரத்தில் நான் இங்கே தான் இருப்பேன். உங்களுக்கு வேண்டியது ஸ்டாக் இல்லாமல் போனால் நீங்க போய் தாராளமாய் டாக்டர் சித்தார்த்திடம் கம்ளெய்ன்ட் பண்ணுங்க” என்றாள் தீர்க்கமான குரலில்.​

ஜமுனா திகைத்துப் போய் பார்த்தாள். இவள் என்ன பார்க்க அம்மாஞ்சி மாதிரி இருக்கானு பார்த்தால் இவ்வளவு புத்திசாலித்தனமா பேசுறா. இங்கேயே இருந்துட்டா மட்டும் சொல்லி கொடுத்திடுவேனா? எப்படி பத்து நாள்ல வேலை கத்துக்கிறேனு நானும் பார்க்கிறேன்” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள் ஜமுனா.​

ஜமுனா, வசந்தி மற்றும் சில டாப் நர்ஸ்கள் கேட்கும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு, அங்கிருந்து நகராமல் அவர்கள் எப்படி நோயாளிகளை கவனிக்கிறார்கள், ஊசி செலுத்துவது, டிரிப்ஸ் ஏத்துவது என அனைத்தையும் கவனமாக உற்று நோக்கினாள். அவர்கள் செலுத்தும் மருந்து ஏன்? எதற்கு? அதன் அளவு பற்றி எந்த புரிதலும் அவளுக்கு இல்லை, அவளாக சந்தேகம் கேட்டாலும் ஜமுனாவும் வசந்தியும் எந்த பதிலும் சொல்லாமல் தங்கள் வேலையை கவனித்தார்கள்.​

ஏன் எதற்கு என்று தெரியா விட்டாலும் அனைத்தையும் குறிப்பெடுக்க தொடங்கினாள். அன்று மாலை டியூட்டி முடித்த பின் விடுதிக்கு செல்லாமல் ஜமுனா கட்டளையிட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடித்தபின்பு தான் கிளம்பினாள்.​

அன்றிரவு உணவு உண்டபின், தான் வைத்திருந்த குறிப்பை காட்டி தன் சந்தேகத்தை எல்லாம் சுதாவிடம் கேட்டாள். சுதாவும் வேறு மருத்துவமனையில் இப்போது பணிபுரிவதால், அவள் அந்த மருந்தின் உபயோகங்களை பற்றி விவரித்தாள். அவற்றை எல்லாம் கவனமாக தன் மனதில் பதித்துக் கொண்டு, நோட்டு புத்தகத்தில் குறித்தும் கொண்டாள்.​

மறுநாள் காலையும் தன் வேலை நேரத்திற்கு முன்னாடியே சென்றாள், ஜமுனா சொன்னவற்றையெல்லாம் வாங்கி அவள் வருவதற்குள் அனைத்தையும் அதற்குரிய இடத்தில் வைத்திருந்தாள். காலையில் எப்படியும் நேத்ராவை எதாவது சொல்லி திட்டலாம் என்று வந்த ஜமுனாவிற்கு ஏமாற்றமே கிடைத்தது.​

நேத்ரா எதற்காவும் அந்த இடத்தை விட்டு நகராமல் அனைத்து நர்ஸ்களையும் கவனித்த வண்ணம் இருந்தாள். வேலையை கற்றுக் கொள்ள அவர்களை அவள் கவனித்தாலும் அதில் யார் சேவை மனதுடன் நன்றாக பணிபுரிகிறார்கள், யாரெல்லாம் நோயாளியிடம் கோபத்தோடு நடந்துக் கொள்கிறார்கள் என அனைத்தையும் கவனித்தாள்.​

அன்று பதினொரு மணிக்குமேல் நேத்ரா கேண்டீனுக்குள் செல்வதை தற்செயலாக பார்த்த சித்தார்த்க்கு கோபமாக வந்தது. நர்ஸ் வேலை செய்ய போறேன்னு அவள் தான் சொன்னாள், நானா செய்ய சொன்னேன்? அப்படி வேலை செய்ய வந்தவள் அதை ஒழுங்காக செய்யாமல், அவன் எவ்வளவு திட்டியும், இப்போது கேண்டினுக்கு செல்கிறாளே என்று கோபத்தோடு அவளை திட்டுவதற்காக அவனும் கேண்டினுக்கு சென்றான்.​

ஆனால் நேத்ரா ப்ளாஸ்க் நிறைய தேநீர் வாங்குவதையும், விதவிதமான திண்பண்டங்களை அதிகமாக வாங்குவதையும் பார்த்து புருவம் சுருக்கினான்.​

இவள் இருக்கிற சைஸ்க்கும் சாப்பிடற சாப்பாட்டுக்கும் சம்மந்தமே இல்லை போல இருக்கே! இது எல்லாமே அவளே சாப்பிட போறாளா? என்று யோசனையுடன் பார்த்த சித்தார்த், அவள் அவன் இருக்கும் திசையை நோக்கி வரவும் அவசரமாக வேறு பக்கம் திரும்பி போன் பேசுவது போல நின்றுக் கொண்டான்.​

அவன் அங்கே இருப்பது தெரியாமல் நேத்ரா எப்பவும் போல் அவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு பொதுபிரிவிற்கு சென்றாள். அவளறியாமல் அவளை பின் தொடர்ந்தான். நேத்ரா கேண்டீன் ஊழியர் போல அங்கிருந்த அனைவருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.​

சித்தார்த் அபிமன்யூவிற்கு கோபத்தால் நரம்புகள் புடைத்துக்கொண்டு உடல் முறுக்கேறியது. கழுத்தை தடவியபடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.​

அன்று மாலையும் வேலை முடிந்த பின்பும் மருத்துவமனையிலேயே நேத்ரா இருப்பதை பார்த்து, தன் சிசிடிவி கேமராவின் பதிவுகளின் மூலம் அவளை கவனிக்க தொடங்கினான் அவள் கணவன்.​

நேத்ரா மருத்துகளுக்கான ஸ்டோரில் அன்றைய மருந்துகளின் பயன்பாட்டிற்கான குறிப்புகளை கொடுத்து விட்டு, மறுநாள் தேவைக்கான அனைத்து மருந்துகளையும் அட்டை பெட்டியில் வைத்து தூக்க முடியாமல் தூக்கி கொண்டு சென்றாள். இறுகிய முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.​

இரவு எட்டு மணிக்கு மேல் அனைத்து வேலைகளையும் முடித்து அவள் உடை மாற்றும் அறைக்கு சென்றாள். சித்தார்த்தும் தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, தன் அறையை பூட்டிக் கொண்டு, அவள் இருந்த அறைப்பக்கம் சென்றான்​

அவன் வருவதற்குள் அவள் சென்று விட்டிருந்தாள். தோள்களை குலுக்கியபடி வெளியே சென்றவன் தன் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனையின் கேட்டருகே சென்ற போது எளிதான காட்டன் புடவையில் நேத்ரா வாயிலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள்.​

ஒல்லியான உருவத்தில் இருந்தவள், அந்த புடவையை மிக நேர்த்தியாக கட்டியிருந்ததில் அவளின் பின் பக்க வளைவு நெளிவுகளும், கொடியிடையும் அழகாக தெரிந்தது. நீண்ட கூந்தலை அழகாக பின்னியிருந்தாள், அது அவளின் இடையை தாண்டி அவள் நடைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தது. தன்னையும் அறியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணை கவனித்தான். அவன் கார் முன்னோக்கி செல்ல முடியாமல் அவள் பாதையை மறைத்தவாறு சென்று கொண்டிருந்தாள். யாரது என்று எண்ணியபடி காரின் ஹாரனை வேகமாக அழுத்தினான்.​

அதில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் நேத்ரா. அப்போது தான் அங்கே சென்று கொண்டிருந்தது தன் மனைவி தான் என்றே அவனுக்கு தெளிவாக புரிந்தது. கையில் ஹேண்ட்பேக்குடன் அதிர்ச்சி விலகாமல் அப்படியே நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான். அவனின் காரின் ஒளிவிளக்கு தந்த வெளிச்சத்தில் பளிச்சென்று அவள் முகம் தெரிந்தது. எந்த ஒப்பனையும் இல்லாமல் தமிழ் பெண்ணுக்கான அழகுடன் நிர்மலமான முகத்துடன் இருந்தவளை பார்க்கும் போது ஏனோ, “ஒளியிலே தெரிவது தேவதையோ” என்ற வரிகள் தான் அவன் நினைவில் வந்தது.​

பார்க்க டீச்சர் மாதிரி இருக்கா, ஆனா செய்யறது நர்ஸ் வேலை என்று மனதிற்குள் செல்லமாக திட்டிக் கொண்டான்.​

எந்தபக்கமும் செல்லாமல், அவனை பார்த்து பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தவளை பார்த்து காரில் ஏறுமாறு சைகை செய்தான்.​

திகைப்புடன் அவனை பார்த்து விழித்தவள், அவசரமாக சுற்றும்முற்றும் இருக்கும் செக்யூரிட்டிகளை பார்த்து விட்டு, மறுப்பாய் தலையசைத்து விட்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விலகி நடந்தாள்.​

சித்தார்த் அபிமன்யுவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம். முகமும் கண்களும் கோபத்தால் சிவந்து போனது. தன் கையால் ஓங்கி ஸ்டிரியங்கில் குத்தினான். என்னதான் நினைச்சுட்டு இருக்கா இவ? நான் என்ன ரோட் சைட் ரோமியோவா? இவளை பார்த்து நான் கூப்பிட்டதும் என்னவோ அதிர்ச்சியா சுற்றும் முற்றும் பார்த்துட்டு பயந்து போற மாதிரி போறா? இப்போ செக்யூரிட்டி அவனைப்பற்றி என்ன நினைப்பான்?​

அவர்களை திரும்பி பார்க்காமல் மறுத்திருந்தால் கூட பரவாயில்லை. ஏதோ அவர்கள் இருக்கிறார்கள் என்பதால் பயந்து போவது போல செல்கிறாளே? வழக்கமாக செக்யூரிட்டி வைக்கும் வணக்கத்திற்கு பதிலாக தலையசைப்புடன் சின்னதாக ஒரு புன்முறுவலுடன் மெயின் கேட்டை கடப்பவன் இப்போது கோபத்தோடு காரை திருப்பி வழக்கத்திற்கு மாறாக அதிவேகமாக சென்றான்.​

அங்கே நின்றிருந்த செக்யூரிட்டிகள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் ஆம்புலன்ஸ் தவிர மற்ற வண்டிகள் அனைத்தும் வேகம் 20ஐ தாண்டக் கூடாது என்பது அவன் விதித்திருந்த கட்டளை. இன்று அவனே அதை மீறிச் செல்லவும் அங்கிருந்தவர்கள், “டாக்டரு இன்னைக்கு ரொம்ப கோபமாக இருக்கிறார் போல” என்று பேசிக் கொண்டார்கள்.​

அன்று இரவு வீட்டிற்கு சென்றதும், முதல் முறையாக நேத்ராவின் எண்ணிற்கு அழைத்தான். அவள் எடுத்து “ஹலோ” என்றது தான் தாமதம், சரமாரியாக திட்ட தொடங்கிவிட்டான்.​

“உனக்கென்ன மனசுல பெரிய ரதினு நினைப்பா? இல்லை உன்னை நான் எங்காவது கடத்திட்டு போயிடுவேனு நினைச்சியா? ஏதோ நடந்து போறியே, லேட்டாயிடுச்சே, பஸ் ஸ்டாப்பில் டிராப் பண்ணிட்டு போகலாம்னு நினைச்சா, ஓவரா பண்றே? அங்கே இருக்கிறவன் எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பான்? நான் உன்னை கரெக்ட் பண்ண முயற்சி பண்றதாகவும், நீ என்னை அவாய்ட் பண்றதாகவும் தானே நினைப்பான்?” என்று கோபத்தோடு கர்ஜித்தான்.​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அவன் திட்டி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், அவன் பேசி முடித்ததும், “நான் ரதி எல்லாம் இல்லை டாக்டர்! கண்ணாடி போட்ட சோடாபுட்டி தான் நான்! அப்புறம் உங்க காரில் நான் ஏறினா, நீங்க என்னை கரெக்ட் பண்றதாக யாரும் நினைக்க மாட்டாங்க. நான் தான் உங்களை… என்னை தான் தப்பா பேசுவாங்க. இந்த சமூகத்தில தப்பு யார் பண்ணாலும் பழி பெண்கள் மேலே தானே, அதனால தான் எதுக்கு பிரச்சனைனு ஒதுங்கி போயிட்டேன்” என்றாள் நேத்ரநயனி.​

தெரியாமல் ஒருமுறை இவளை சோடாபுட்டினு கூப்பிட்டுட்டேன். இதையே பேசி காலம் முழுக்க என்னை வச்சி செய்வா போல என்று கடுப்பாக இருந்தது சித்தார்த்திற்கு.​

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் போனை வைத்துவிட்டான். அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் மனதிற்குள் ஏதோ பாரமாக இருந்தது. அன்று காலை சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு சென்றவன் காரை பார்க்கிங் ஏரியாவே நோக்கி செலுத்தினான்.​

அன்று நேத்ராவும் சீக்கிரமாக வந்திருந்தாள், வெள்ளிக்கிழமை என்பதால் இளம் மஞ்சள் நிற புடவையில் இருந்தவள், தலைக்கு குளித்து முடியை மயில் தோகை போல விரித்து விட்டிருந்தாள். பக்கவாட்டில் இருந்த செடியில் மலர்ந்திருந்த ஒரு மலரை கொய்ந்து அங்கிருந்த பிள்ளையாருக்கு வைத்து விட்டு, கண்மூடி கடவுளை வணங்கினாள்.​

காரில் இருந்தவாறே, அவளை கவனித்துக் கொண்டிருந்தான் நயனியின் கணவன் சித்தார்த். கடவுளை வணங்கி விட்டு திரும்பியவள், அங்கிருந்த ரோஜா செடியில் இருந்த சிவப்பு நிற ரோஜாவை ஆசையாக பார்த்தாள். பிறகு யாராவது செக்யூரிட்டி இருக்கிறார்களா என்று தன் உடலை வில்லாக வளைத்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமில்லை என்றதும் அவசரமாக அந்த ரோஜாவை கொய்து தன் காதருகே வைத்துக் கொண்டாள்.​

அடிப்பாவி, இந்த மருத்துவமனையின் முதலாளியோட மனைவி, போயும் போயும் ஒரு ரோஜா பூவை திருட்டு தனமா எடுத்து வச்சிக்கிறாளே? என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.​

அவளுக்கு தெரியாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் கைப்பேசியில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளில் அவளை கவனித்துக் கொண்டிருந்தான். கேண்டீனுக்கு செல்ல வேண்டிய நேரத்தை அவள் சுவர் கடிகாரத்தில் கவனிப்பதை புரிந்துக் கொண்டான்.​

அவள் பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு திரும்பிய நேரம், கேண்டீனில் பணிபுரியும் ஊழியர் ஒரு தள்ளு வண்டியில் தேநீர் மற்றும் இதர திண்பண்டங்களை கொண்டு வந்தார். விழி அகல ஆச்சரியமாக அந்த ஊழியரை பார்த்தாள்.​

அவரே அங்கிருந்த அனைவரையும் ஸ்டாப் ரூமிற்கு வரச் சொல்லி தேவைப்படுவோர் அவர்களாகவே தேநீரை ஊற்றி பருகி கொள்ளுமாறும் பிறகு தான் வந்து காலியான பொருட்களை எடுத்துச் செல்வதாகவும் கூறிவிட்டு சென்றார்.​

நிம்மதியாக இருந்தது நேத்ராவிற்கு. அதுமட்டுமில்லாமல் அன்று மாலை ஸ்டோரிலிருந்து ஒரு ஊழியர் வந்து அன்று காலியான மருந்தின் விவரங்களை கேட்டு குறித்துக் கொண்டு, மறுநாள் தேவைப்படும் மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றார். இதனால் நேத்ராவின் முகத்தில் வெளிப்படையாக அவளின் மகிழ்ச்சி தெரிந்தது.​

ஜமுனாவும் வசந்தியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள். “என்னடி வசந்தி? என்ன நடக்குது இங்க? ஒண்ணும் சரியா படலையே?” என்றாள் ஜமுனா.​

“ஆமாக்கா எனக்கும் எதுவும் சரியா படலை. நாலு நாளா இந்த நேத்ரா டியூட்டி முடிஞ்சதும் உடனே இங்கிருந்து போறது இல்ல. நேத்து கூட எட்டு மணிக்கு மேலே தான் போயிருக்கா? காலையிலயும் சீக்கிரமா வந்துட்டாளாம். டாக்டர் சித்தார்த்தும் சீக்கிரமா வந்ததா கேள்விப்பட்டேன்” என்றாள் வசந்தி.​

“ஓ அப்படி போகுதா கதை?” என்றாள் ஜமுனா நேத்ராவை ஏளனமாக பார்த்துக் கொண்டே.​

முகமலர்ச்சியுடன் இருந்த நேத்ரா எதேச்சையாக திரும்பி ஜமுனாவை பார்க்க, அவளின் குரோதமான பார்வையும், இகழ்ச்சியான உதட்டு சுழிப்பையும் பார்த்து புருவம் சுருக்கினாள்.​

வெள்ளந்தியாக அவர்களிடம் சென்று “என்னாச்சுக்கா? வேறே எதுவும் வேணுமா?” என்று கேட்டாள்.​

ஆனால் ஜமுனாவும் வசந்தியும் அவளை ஏற இறங்க கேவலமான பார்வை பார்த்தார்கள். என்னவென்று புரியாமல் திகைத்து அவர்களையே புரியாமல் பார்த்தாள் நேத்ரா.​

“ஏன்டி வசந்தி, இவ கிட்ட அப்படி என்ன இருக்குனு, டாக்டர் சித்தார்த் இவ மேல மயங்கி இருப்பாரு?” என்றாள் ஜமுனா.​

“அதான் எனக்கும் ஒண்ணும் புரியலைக்கா. நீ ஒண்ணு கவனிச்சியா? அவ அடிக்கடி டாக்டர் இருந்த அறைப்பக்கமாகவே போய் வந்துட்டு இருந்தாளே? அப்படி என்னத்தை காட்டி மயக்கினாளோ? யாருக்கு தெரியும்?” என்றாள் வசந்தி.​

அவசரமாக தன் காதுகளை பொத்திக் கொண்டாள் நேத்ரா. ச்சே எப்படி இவர்களால் இவ்வளவு கேவலமாக பேச முடிகிறது? அவர்களை திட்டக்கூட வராமல் அழுகை தொண்டையை அடைத்தது. ஆனால் அவர்கள் முன்னால் அழக்கூடாது என்று தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு,​

கோபத்தோடு அவர்களை பார்த்து, விரல் நீட்டி ஜாக்கிரதை என்று எச்சரிக்கை செய்து மேலும் அதே விரலை உதட்டின் மேல் வைத்து இனி எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி வேகமாக அங்கிருந்து சென்றவளை அந்த பெண்கள் ஆத்திரத்துடன் முறைத்தார்கள்.​

“எவ்வளவு திமிர் பார்த்தியா இவளுக்கு? நேத்து வந்தவ, என்னையே எச்சரிச்சுட்டு போறா? இவளை சும்மா விடக்கூடாது வசந்தி” என்று பொங்கினாள் ஜமுனா.​

“ஆமாக்கா, உன்னை நேரா பார்த்து பேசவே நாங்க எல்லாம் பயப்படுவோம், இவ என்னாடான்னா விரலாலேயே எச்சரிச்சுட்டு போறா? இவளை இங்கே இருந்து துரத்தி அடிச்சே ஆகணும் அக்கா” என்றாள் வசந்தி.​

“இரு நம்ம கிட்ட மாட்டாமலா போயிடுவா?” என்றாள் ஜமுனா குரூரத்துடன்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 10

நேத்ரநயனிக்கு ஜமுனா கொடுக்கும் பெரும்பாலான வேலைகள் குறைந்து போனதால் நர்ஸ் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கூர்மையாக கவனிக்க தொடங்கினாள்.​

நயனியை பார்த்த வசந்தி “என்னக்கா போற‌ போக்கை பார்த்தால் கத்துக்குவா போலிருக்கே?” என்றாள் வசந்தி.​

“அவ என்னதான் கத்துக்கிட்டாலும் டாக்டர் சித்தார்த் என்னை கூப்பிட்டு தான் அவளோட பெர்பாமன்ஸ் எப்படி இருக்குனு ரிப்போர்ட் கேப்பாரு, எப்படி ரிப்போர்ட் கொடுத்தால் வெளியே போவாளோ அந்த மாதிரி கொடுக்க போறேன். எவ்வளவு திமிர் இருந்தால் என்னை பார்த்து விரல் நீட்டி எச்சரிக்கை செய்வா? இதுல என்கிட்டே வாய் மேல கை வச்சு வாயை மூடுனு சைகை காட்றா. எனக்கு ஆறவே இல்லை வசந்தி” என்றாள் ஜமுனா பகையுடன்.​

“எனக்கென்னவோ அவ்வளவு சீக்கிரம் டாக்டர் அவளை வெளியே அனுப்ப மாட்டார்னு தோணுதுக்கா” என்றாள் வசந்தி யோசனையாக.​

“பார்க்கலாம் என்ன பண்றாருனு, நான் ரிப்போர்ட் கொடுத்தும் அவளை அவர் வெளியே அனுப்பலைனா இரண்டு பேருக்கு நடுவில் ஏதோ இருக்குனு அர்த்தம். அதை எப்படி கொளுத்தி போட்டு அவளை அசிங்கப்படுத்தறேனு மட்டும் பாரு” என்று கறுவினாள் ஜமுனா.​

இரண்டு பேரும் தனக்கெதிராக திட்டம் போடுவதைப் பற்றி எல்லாம் தெரியாமல் நேத்ரா தன் வேலையில் கவனமாக இருந்தாள். தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை சுதாவிடம் கேட்டு தெளிவு பெற்றதும் இல்லாமல் விடுமுறை தினங்களில் சுதா பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று பகுதி நேர பணியாற்றினாள். சுதா பணிபுரியும் மருத்துவமனை அளவில் சிறியது என்பதால் அவர்கள் நேத்ராவிற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.​

அன்று சித்தார்த் கொடுத்திருந்த கால அவகாசம் முடிவடைவதற்கான கடைசி நாள். நேத்ரா அன்று காலை சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு சென்று விட்டாள். சித்தார்த் அபிமன்யு அவசரமாக மருத்துவமனைக்குள் வந்தவன் தன் அறைக்குள் சென்று கொண்டே நேத்ராவிற்கு போன் செய்தான்.​

என்ன வந்ததும் வராததுமாக போன் செய்கிறான்? இப்பவே கேள்வியா கேட்டு நான் பதில் சொல்லலைனா வெளியே அனுப்பிடுவானோ? ஒரு வித பதட்டத்துடன் போனை எடுத்தாள்.​

“நயனி சீக்கிரமா என் அறைக்கு வா” என்று சொல்லி அவள் பதிலுக்காக கூட காத்திருக்காமல் போனை வைத்து விட்டான்.​

எதற்கு காலையிலேயே அவளை கூப்பிடுகிறான் என்ற குழப்பத்தோடு அவன் அறைக்குள் சென்றாள். சித்தார்த் தன் லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்கவும், அவனாக பேசும் வரை அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.​

அவன் எழுந்து மெல்ல தன் போனை பார்த்துக் கொண்டே அவளருகே மிகவும் நெருக்கமாக வந்து நின்றான். அதிர்ச்சியுடன் திகைத்த விழிகளோடு நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனோ அப்போதும் போனை தான் பார்த்து கொண்டு இருந்தான். ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவள் சற்று பின்னோக்கி செல்லவும் அவன் அவள் தோளில் கை போடவும் சரியாக இருந்தது.​

நேத்ரநயனி அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள். எதற்கு அழைத்தான்? எதற்கு இப்போது தோள் மேல் கை போடுகிறான்? இது அவளுக்கு கணவனின் முதல் தொடுகை மட்டுமல்ல இதுவரை அனுபவமில்லாத ஆணின் தொடுகை. உடம்பு தன்னிச்சையாக உதற தொடங்கியது.​

அவன் மேலும் தன்னை நோக்கி அவளை இறுக்கியபடி காதருகே குனிந்து “ஷாக்க குறை”என்றான் அடிக்குரலில்.​

தாலி கட்டும்போது கூட அவன் விரல் அவள் மேல் பட்டதாக அவளுக்கு நினைவில்லை. இத்தனை நாள் இல்லாமல் எதற்கு இப்போது தனியாக அவளை அழைத்து தோள் மேல் கை போடுகிறான் என்று அவள் அவனை அண்ணாந்து பார்த்தாள்.​

தன் கைவளைவிற்குள் நடுங்கும் அவள் மேனியை உணர்ந்தவன் இப்போ எதற்கு இவ்வளவு பதட்டபடுகிறாள் என்று அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை இத்தனை நெருக்கத்தில் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறான். அவளின் அகன்ற கண்கள் ஆச்சரியத்தில் மேலும் பெரியதாக விரிந்திருக்க, அவள் அணிந்திருந்த கண்ணாடி அவளின் பார்வை வீச்சை பலமடங்காக அதிகரித்து காட்டியது. என்ன இப்படி பார்க்கிறா? விட்டால் பார்வையிலே முழுங்கிடுவா போல என்று நினைத்தபடி ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன? என்பது போல கேட்டான்.​

அதற்கும் அவள் ஆவென்று வாயை பிளக்க, அவன் அவளை கவனிக்காமல், “வாங்க மாமா எப்படி இருக்கீங்க?” என்றான்.​

நேத்ராவிற்கு அவன் பிடியில் இருப்பதால் உலகமே ஸ்தம்பித்தது போல இருக்க, அவன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் விழவே இல்லை.​

புன்னகையுடன் உள்ளே நுழைந்த சிவக்குமார், தன் மகள் மருமகன் பிடியில் நின்றிருந்த கோலத்தை பார்த்து பூரித்துப் போனார். கூடவே அவர்கள் அந்நியோன்யமாக இருக்கும் சமயத்தில் தான் நந்தியாக வந்து விட்டோமோ என்று வெட்கத்துடன் திரும்பி கொண்டு, “நான் கொஞ்ச நேரம் வெளியில் இருக்கேன் மாப்பிள்ளை” என்றார்.​

“ஐயோ மாமா அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீங்க இங்கேயே நில்லுங்க” என்றவன் இப்போது நேத்ராவை பார்த்து “நயனி வந்தவங்களை வாங்கனு கூட கூப்பிடாமல் என்ன அப்படி பார்க்கிறே? தினமும் பார்க்கிறது போதலையா?” என்றான் செல்லமாக சிரித்துக் கொண்டே​

அவன் அவளிடம் சிரித்து பேசுகிறானா? அவளால் நம்பவே முடியவில்லை! என்னவோ சொல்கிறான் அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.​

அப்பப்பா… இவளோடது கண்ணா? இல்லை காந்தமா? இப்படி பார்க்கிறாளே? என்று மனதிற்குள் நொந்தவனாய் “நயனி” என்றான் இந்த முறை சத்தமாக.​

அந்த சத்தத்தில் சுய உணர்வு பெற்றவள் அதிர்ச்சியுடன், என்ன? என்பது போல பார்த்தாள். அவன் கண்களாலே சிவக்குமார் நின்றிருந்த திசையை காட்டினான். மெல்ல ரோபோ போல திரும்பி பார்த்தாள்.​

அங்கே சிவக்குமாரை கண்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். “அப்பா” என்று கூறியபடி அவன் கை வளைவில் இருந்து விடுபட்டு ஓடிச்சென்று தன் தந்தையை அணைத்து கொண்டாள்.​

“எப்படிப்பா இருக்கீங்க? நீங்க வர்றதா என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்றாள் நேத்ரா.​

“திடீர்னு பார்க்கணும்னு தோணுச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன். சென்னை வந்ததும் மாப்பிள்ளைக்கு போன் செய்தேன். அவர் தான் மருத்துவமனைக்கு நீங்க ரெண்டு பேரும் அவசரமாக போயிட்டு இருக்கிறதாகவும் அங்கேயே பார்க்கலாமானு கேட்டார். எங்கே பார்த்தால் என்ன? இரண்டு பேரையும் ஒன்னா பார்த்து பேசிட்டு போனால் அதுவே போதும்னு சொன்னேன். அவரும் என்னை அழைச்சிட்டு வர காரையும் அனுப்பி வச்சாரு. ஏன் நீ அவர்கூட தானே கார்ல வந்தே? உனக்கு தெரியாதா?” என்று கேட்டார் சிவக்குமார்.​

இப்போது மீண்டும் கணவனை திரும்பி பார்த்தாள். ஓ அதற்காக தான் போனில் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து கொண்டு அவள் தந்தை வரும் சமயம் சரியான நேரத்தில் அவள் தோள் மேல் கை போட்டு இருக்கிறான். அவன் செயலுக்கான காரணம் புரிந்துவிட ஏனோ மனதில் இனம்புரியாத ஒரு ஏமாற்றம் தோன்றியது.​

அவள் பார்வை கதிர்கள் விழி லென்ஸ் மற்றும் கண்ணாடி லென்ஸ் வழியாக ஊடுருவி மீண்டும் பல மடங்கு பெருகி அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த, “சித்தார்த் இவ கண்ணை பார்க்காதே! அது ரொம்ப டேஞ்சர்!” என்று தனக்கு தானே எச்சரித்துக் கொண்டான்.​

தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மீண்டும் இருவரும் தங்களுக்குள் காதல் பாஷை பேசிக் கொள்கிறார்கள் என்று நினைத்து கொண்ட சிவக்குமார் அவர்களுக்கு தொல்லையாக இருக்க விரும்பாமல், “சரிங்க மாப்பிள்ளை நான் கிளம்பறேன். நேத்ரா நல்லா சாப்பிடு, மாப்பிள்ளையையும் பத்திரமா பார்த்துகோம்மா” என்றார்.​

அதற்குள் தந்தை கிளம்புகிறேன் என்கிறாரே. அவரை இரண்டு நாளைக்கு தங்கி விட்டு செல்லுமாறு சொல்லலாம் என்றால் தந்தையை எங்கே தங்க வைப்பது? அவள் தனியாக விடுதியில் தங்கி இருக்கிறாள் என்று தந்தைக்கு தெரிந்து விட்டால் உடைந்து போவாரே! என்ன செய்வது? என்று புரியாமல் விழித்தாள் நேத்ரா.​

சித்தார்த் தான், “என்ன மாமா எங்களுக்கு கல்யாணம் ஆகி முதல் முறையாக வந்திருக்கீங்க. வீட்டிற்கு வராமல் போனால் எப்படி? வீட்டுக்கு வந்து இரண்டு நாளைக்கு இருந்துட்டு தான் போகணும்” என்றான் உரிமையாக​

சிவக்குமார் மகளை திரும்பி பார்த்தார். அவள் அமைதியாகவே. நின்றிருந்தாள். “நயனி என்ன அமைதியாகவே இருக்க? உங்க அப்பாவை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடு” என்றான் சித்தார்த் நேத்ராவை பார்த்து.​

எது? நம்ம வீடா? அது எங்கே இருக்கு? நானே பார்த்தது இல்லையே! அவரை எப்படி கூப்பிடுவேன்? என்று மனதிற்குள் நினைத்தவாறு மீண்டும் அவனையே அவள் பார்க்க, இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாமல் இப்படி வெறிச்சு பார்க்கிறாளே என்று தலையை கோதியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.​

சிவக்குமாருக்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது. அவர் அங்கே தங்கும் எண்ணத்தில் வரவில்லை தான். ஆனால் மகளின் கையால் ஒரு வேளை உணவாவது சாப்பிட்டு விட்டு போகலாம் என்று நினைத்திருந்தார். ஒரு பேச்சுக்காக கூட மகள் தன்னை வீட்டிற்கு அழைக்க வில்லையே என்று அவர் மனம் வாடியது.​

ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல், “சரி மாப்பிள்ளை நான் கிளம்பறேன்” என்றார் கம்மிய குரலில்.​

“இருங்க மாமா, இங்கேயே சாப்பாடு வரவழைக்கிறேன். சாப்பிட்டாவது போங்க” என்று சொல்லி யாருக்கோ போன் செய்தான்.​

நேத்ரா தந்தையின் தோளில் ஆதுரமாக சாய்ந்து கொண்டாள். மகளின் இந்த ஒற்றை செய்கையிலேயே சிவக்குமாரின் மனபாரம் எல்லாம் நீங்கிவிட அவளின் தலையை ஆதரவாக தடவி கொடுத்தார்.​

அதற்குள் உணவு வந்து விட நேத்ரா தன் தந்தையை அமரச் சொல்லி சாப்பாடு பறிமாறினாள். அவள் அருகில் நின்று கொண்டு சித்தார்த்தும் தன் மாமனாரை உபசரித்துக் கொண்டிருந்தான்.​

சரியாக இதே நேரத்தில் ஜமுனாவும் வசந்தியும் பேசிக் கொண்டு இருந்தனர்.​

“ஏன்டி வசந்தி, இன்னமும் அந்த நேத்ரா வேலைக்கே வரக்காணோம். வழக்கமாக நாம வர்றதுக்கு முன்னாடியே வந்திடுவாளே? நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்” என்றாள் ஜமுனா.​

“எப்படியும் வேலையை விட்டு துரத்திடுவாங்கனு அவளுக்கே புரிஞ்சு இருக்கும். அதான் வரலை போல இருக்கு. தொலைஞ்சது சனினு விட்டு தள்ளுங்க அக்கா” என்றாள் வசந்தி.​

“இரு வசந்தி அவ இன்னைக்கு சொல்லாமல் விடுமுறை எடுத்து இருக்கா. இதையும் இந்த ரிப்போர்டில் சேர்த்து டாக்டர் சித்தார்த் கிட்ட கொடுத்துட்டு வர்றேன். ஒருவேளை நாளைக்கு அவ வந்து நின்னா என்ன செய்யறது? இப்பவே அவர்கிட்ட இதை கொடுத்திட்டால் அவ வந்தா கூட சேர்த்துக்க மாட்டார்” என்றாள் ஜமுனா குரூரத்துடன்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“நீ சொல்றதும் சரிதான். டாக்டர் அவர் அறையில் தான் இருக்கார் போல இருக்கு. போய் பாரு” என்றாள் வசந்தி.​

ஜமுனா நேத்ராவிற்காக தயார் செய்திருந்த புகார் பட்டியலை எடுத்துக் கொண்டு சித்தார்த் அறை நோக்கி சென்றாள். அந்த பக்கமாக சென்ற ஜனனி ஜமுனா சித்தார்த் அறையை நோக்கி செல்வதை பார்த்தாள். அவளை சித்தார்த் அறைக்கு போக விடாமல் தடுக்க எண்ணினாள். காரணம் சித்தார்த் ஏற்கனவே அவளிடம் தன் அறைக்கு அவன் மாமா வரப்போவதால் அவன் கூறும்வரை அறைக்குள் யாரையும் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.​

“ஜமுனா சிஸ்டர்…டாக்டர் சித்தார்த் சார் ரூமுக்கா போறீங்க?” என்றாள் ஜனனி.​

“ஆமா. ஏன் கேட்கிறே ஜனனி?” என்றாள் ஜமுனா.​

“டாக்டருக்கு முக்கியமான நபரோட பர்சனல் மீட்டிங் இருக்கு. யாரையும் அவர் அறைக்கு வராமல் பார்த்துக்க சொன்னார்” என்றாள் ஜனனி.​

“ஓ அப்படியா? சரி ஜனனி” என்று சொல்லி ஜமுனா திரும்பி நடக்கவும் ஜனனியும் தன் கேபினை நோக்கி சென்றாள்‌.​

ஜமுனாவுக்கு ஏனோ டாக்டர் யாருடன் பர்சனல் மீட்டிங்கில் இருக்கிறார் என்று தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டு விட ஜனனி போய் விட்டாளா என்று எட்டி பார்த்தாள். அவள் சென்று விட்டதை உறுதி செய்துக் கொண்டு சித்தார்த் அபிமன்யுவின் அறை நோக்கி சென்றாள்.​

நாற்காலியில் சிவக்குமார் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, அவர் அருகில் நேத்ராவும் அவளருகில் சித்தார்த்தும் நின்று கொண்டு இருந்ததால் வெளியில் இருந்து கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்த ஜமுனாவின் கண்களில் தெரிந்தது எல்லாம் நேத்ராவும் அவளுக்கு மிக நெருக்கத்தில் நின்று கொண்டு இருந்த சித்தார்த்தும் தான்.​

ஜமுனா அதிர்ச்சியில் வாயில் கை வைத்து கொண்டாள். என்னதான் சித்தார்த்தையும் நேத்ராவையும் அவள் சேர்த்து வைத்து பேசினாலும், உள்ளுக்குள் டாக்டர் படிப்பென்ன? அவர் அழகென்ன? அவராவது இந்த நேத்ராவை நெருங்குவதாவது என்று தான் நினைத்தாள்.​

ஆனால் இப்போது இரண்டு பேரும் நெருக்கமாக நின்று கொண்டு இருக்கிறார்கள். ஜனனியிடம் வேறு பர்சனல் மீட்டிங் யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாரே? ஓ இது தான் அந்த பர்சனல் மீட்டிங்கா?​

நான் வரும் முன்பே இந்த நேத்ரா மருத்துவமனைக்கு வந்து விட்டு இருக்கிறாள். அப்போ வந்ததிலிருந்து டாக்டரோட அறையில் தான் தனியாக அவருடன் இருந்து இருக்கிறாள். அடச்சே என்ன மாதிரி பொண்ணு இவ?​

எங்கே அவளை டாக்டர் வேலையை விட்டு அனுப்பிடுவாரோனு பயந்துபோய் கடைசி நாளான இன்று கடைசி முயற்சியாக அவரை தன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறாள். என்ன மாதிரி பெண் இவள்? என்று முகத்தை அசூசையாக சுழித்து, தானே ஒரு கதையை உருவாக்கி அதுதான் உண்மை என்று நம்பி தன் சகாக்களுடன் இந்த விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள ஓடினாள் ஜமுனா.​

சற்று நேரத்தில் அவள் பற்ற வைத்த வதந்தீ காட்டு தீயாக அந்த மருத்துவமனை எங்கும் பரவியது.​

சிவக்குமார் சாப்பிட்டு முடித்ததும் கிளம்ப தயாரானார். அதற்குள் சித்தார்த் ஆபரேஷன் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதால், “மாமா எதுவும் நினைச்சுக்காதீங்க, நான் ஓடி க்கு அவசரமா போகணும். ஏற்கனவே நேரமாயிடுச்சு” என்றான்.​

“அதுக்கென்ன மாப்பிள்ளை நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றார் சிவக்குமார்.​


“நயனி, ஜனனிகிட்ட சொல்லி மாமாவை காரில் அனுப்பிவை” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் சித்தார்த்.​

நேத்ரா பதில் ஏதும் சொல்லாமல், “அப்பா நீங்க எதுக்குப்பா வீணா அலையறீங்க. சொல்லியிருந்தா நானே உங்களை வந்து பார்த்திருப்பேனே” என்றாள்.​

“ஏன்டா உன்னை பார்க்க நான் வரக்கூடாதா?” என்றார் சிவக்குமார் மகளை கூர்மையாக பார்த்தபடி.​

“அதுக்கு சொல்லலைப்பா, எதுக்கு வீண் அலைச்சல்னு தான்” என்று தடுமாறியபடி பேசியவள் நேராக தந்தையை பார்க்கமுடியாமல் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.​

தந்தையிடம் அவர்கள் ஒன்றாக வாழ்வதை போல பொய்யாக நடிக்க வேண்டியதாக இருக்கிறதே என்ற குற்ற உணர்வில் தலையை தாழ்த்திக் கொண்டாள். ஆனால் சிவக்குமாருக்கு மகளின் செயல் மனவருத்தத்தையே கொடுத்தது.​

“சரிம்மா நான் கிளம்பறேன்” என்றார் சிவக்குமார்.​

“இருங்க அப்பா, நானும் கூடவே வரேன். வெளியே ஆட்டோ, டாக்சி இருக்கானு பார்க்கிறேன்” என்ற நேத்ராவை அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவக்குமார்.​

சித்தார்த் அவரை காரில் அனுப்பி வைக்கும்படி தன் எதிரிலேயே தன் மகளிடம் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் மகள், அவரை ஆட்டோ டாக்சியில் செல்லும்படி கூறுகிறாளே!​

கசந்த முறுவலுடன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா, நான் பஸ்ஸிலேயே போய்க்கிறேன்” என்று சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கிவிட அதை மறைப்பதற்காக அவசரமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.​

நேத்ரா சித்தார்த்தின் அறையை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு தந்தையின் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றாள். அதற்குள் அவர் மருத்துவமனையின் வெளிவராந்தாவை நோக்கி செல்லவும், அவளும் அவர் பின்னால் சென்றாள்.​

நேத்ரா தந்தையை அடைவதற்குள் அவர் அந்த மருத்துவமனையின் கேட்டை அடைந்துவிட்டார். ஓடிச்சென்று அவர் கைகளை பற்றியபடி, “அப்பா என் மேலே எதுவும் கோபமா இருக்கீங்களா? எதுவா இருந்தாலும் சாரிப்பா” என்றாள் நேத்ரா.​

மகளை திரும்பி பார்த்தவர், “நான் ஏன்டா உன்மேல கோப பட போறேன். நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும். நீ நல்லா தானே இருக்கே?” என்றார்.​

அவள் ஆமாம் என்பது போல தலையாட்ட, “அது போதும் எனக்கு, எப்பவாவது உனக்கு என்னை பார்க்கணும்னு தோணிச்சுனா நம்ம வீட்டுக்கு வா. இனி நானா இங்கே வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று சென்று விட்டார். கண்கள் கலங்க தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரநயனி.​

அங்கே ஒரு நோயாளியை இறக்கிவிட வந்த ஒரு டாக்சி, காரில் இருந்து தன் வாடிக்கையாளர் இறங்கிய பின்பும் அங்கிருந்து கிளம்பாமல் இருந்தது. தந்தையும் மகளும் பேசிக் கொண்டிருந்ததை வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன அந்த காரில் இருந்த ஒரு ஜோடி கண்கள். யார் அது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0
Status
Not open for further replies.
Top