ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 05

சித்தார்த் அபிமன்யூ பேசிக் கொண்டே இருக்க, நேத்ராவின் மனதில் பல்வேறு விதமான யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அவள் தந்தை எப்போதும் தன் நண்பன் மகேந்திரனை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.​

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அவளிடம் வந்தவர் “நேத்ரா, என் நண்பன் சென்னையில் இருக்கிற மிகப் பெரிய மருத்துவமனையின் உரிமையாளர் தெரியுமா? நான் உனக்கு நர்ஸ் வேலை கேட்டிருக்கேன். அவனோட மகனும் வெளிநாட்டுக்கு போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு டாக்டரா இருக்காராம். அவர் கையாலேயே உன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கொடுக்க வைக்கிறேன்னு மகி சொன்னான் மா. நீ சென்னைக்கு போனதும், வேலையில் சேர்ந்துக்க, பாண்டி டாக்சி ஓட்ற பணம் மட்டும் குடும்பம் நடத்த போதாது” என்று சிவக்குமார் தன் மகளிடம் சொல்லியிருந்தார்.​

ஆக, வேலைக்கான ஆர்டரை கொடுக்க வந்த முதலாளியை எனக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள் இந்த இரு தகப்பன்களும். அவளை பொறுத்தவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால், தந்தை கைகாட்டியவனை மணாளனாக ஏற்று கொள்ள தயாராகி விட்டாள்.​

ஆனால் இவருக்கு அப்படி இருக்காதே, எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவருடைய படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் எந்த வகையிலும் பொறுத்தமில்லாத என்னை அவருக்கு பிடிக்கும் என்று நான் எப்படி நினைத்தேன்? சற்று முன் தலையணையை அவள் முன்னாடி நீட்டிய கணவனின் முழங்கையில் கரு கருவென்று இருந்த முடிகளையும் தான்டி தெரிந்த சிவந்த நிறம் அவள் நினைவுக்கு வந்தது, தன்னுடைய மாநிறம் அவருக்கு எப்படி பிடிக்கும்? என் வாழ்க்கையை காப்பாற்றுவதாக எண்ணி, தந்தை இவரோட வாழ்க்கையை பணயம் வைத்து விட்டாரோ என்று கலங்கினாள் நேத்ரா.​

இப்போது என்ன செய்வது? என் கணவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தால் என் அப்பாவால் தாங்கி கொள்ள முடியுமா? என்று தந்தையை நினைத்தவளுக்கு தானாக கண்களில் கண்ணீர் பெருகியது.​

நேத்ராவின் சிறு வயதில் அவள் தாய் திலகாவிற்கு உடல் நன்றாக இருந்த போது தான் சிவக்குமார் மனம் விட்டு சிரித்தே பார்த்திருக்கிறாள். அதன் பிறகு அவர் சிரிப்பு எப்போதும் உதட்டளவில் மட்டும் தான். அவர்களுக்கென்று இருக்கும் கொஞ்ச நிலத்தில் படாதபாடுபட்டு விவசாயம் செய்து அவளை டிப்ளமா வரைக்குமே அவரால் படிக்க வைக்க முடிந்தது. அவரின் சம்பாத்தியம் மொத்தம் தாயின் வைத்திய செலவுக்கே போதவில்லை.​

எப்போதும் கஷ்டத்தை தவிர வேறு எதையும் பார்த்திராத சிவக்குமாருக்கு மகளின் திருமணம் ஒன்றே லட்சியமாக இருந்தது.​

தாலிகட்டும் நேரத்தில் திருமணம் தடை படவும் உடைந்து விட்டார் அவர். தந்தையின் நிலையை பார்த்து அவள் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருகியது. மகேந்திரன் மாமாவால் நின்று போக இருந்த திருமணம் நடந்ததும் அவர் கண்களில் தான் எத்தனை நிம்மதி! இதோ சற்று முன் வெளியே மாமாவுடன் எப்படி எல்லாம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இப்படி அவளின் தந்தை சிரித்து பேசியே எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது.​

தன் கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் வழியும் கண்ணீரை மறைக்க வழி தெரியாமல் தலையை குனிந்த படி நின்றிருந்தாள். அவளையே பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த சித்தார்த் அபிமன்யுவுக்கு தான் சொல்வதை அவள் கேட்கிறாளா இல்லையா? என்று சந்தேகம் வர,​

“நான் சொல்றது புரியுதா?” என்றான் சற்று அழுத்தமான குரலில்.​

அவள் ஆமாம் என்பது போல தலையாட்ட, “என்ன புரிஞ்சது?” என்றான்.​

“இஷ்டமில்லாமல் நடந்த இந்த கல்யாணத்தை நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க. பெரியவங்களோட ஏமாற்றத்தையும் பதட்டத்தையும் சமாளிக்க அந்த நேரத்திற்கு தேவையான ட்ரீட்மெண்டுக்காக என் கழுத்தில் தாலி கட்டியதாக நினைச்சுக்கோங்க.​

நீங்க எப்போ கேட்டாலும் விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துடறேன். ஆனால் என் அப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியக் கூடாது. லேடீஸ் ஆஸ்டல்ல தங்கறதுக்கு மட்டும் கொஞ்சம் ஏற்பாடு செய்து கொடுங்க, அப்புறம் நான் உங்க மருத்துவமனையில் வேலையில் சேர்ந்துக்கலாம் தானே?” என்று கேட்டாள் நேத்ரா குனிந்த தலை நிமிராமல்.​

எங்கே தலையை நிமிர்ந்து பார்த்தால் தன் கண்களில் உள்ள கண்ணீரை அவன் கண்டு விடுவானோ? தன்னுடைய பலவீனம் அவனுக்கு தெரியக்கூடாது என்று குனிந்த தலையை நிமிரவே இல்லை அவள்.​

நேத்ராவின் பேச்சில் மலைத்து போனான் சித்தார்த் அபிமன்யூ. உண்மையில் அவன் மனதின் ஓரத்தில் இதே எண்ணம் தான் இருந்தது. ஆனால் அவன் தந்தை மகேந்திரன் செய்து வைத்த திருமணம் ஆயிற்றே. அவன் மகேந்திரனை ஏமாற்றினால், அது சிவக்குமாரை அவன் தந்தை ஏமாற்றியது போல் அல்லவா ஆகிவிடும்? அவனால் அவன் தந்தைக்கு எந்த தலைக்குனிவும் ஏற்படக்கூடாது என்பதால் இந்த திருமணத்தில் இருந்து விடுபடும் எண்ணமே அவனுக்கு இல்லை.​

அதனால் தான் மனைவியிடம் தான் காதலித்த எலிசாவைப் பற்றி கூறினான். அவர்களின் காதல் எல்லை தாண்டியது வரை கூறிவிட்டான். அத்தனை எளிதாக அவளை மறந்து விட்டு உன்னை ஏற்றுக் கொள்ள முடியாது. அவளை மறந்து உன்னுடன் வாழ எனக்கு கால அவகாசம் வேண்டும், அதுவரை தனித்திருப்போம் என்று தான் அவன் பேசிக் கொண்டிருந்தான்.​

ஆனால் இவள் பேசுவதை பார்த்தால் இவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை போலிருக்கிறதே! ஒருவேளை இன்னொருத்தியை காதலித்து, அவளுடன் முறைதவறி இருந்தவனை எப்படி கணவனாக ஏற்றுக் கொள்வது என்று நினைக்கிறாளோ? அல்லது முதலில் தாலிக் கட்ட இருந்தவனின் மேல் காதலாக இருக்குமோ? என்று அவனும் குழம்பினான். அவன் பேச்சை அவள் முழுமையாக உள்வாங்கி இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?​

அவளை அழுத்தமாக பார்த்தபடி “அப்போ, விவாகரத்து தான் உன் முடிவா?” என்றான்.​

அவள் ஆமாம் என்பது போல தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள். ஒரு பெருமூச்சுடன், “ஓகே உன் விருப்பம்” என்று விட்டு படுக்கையில் சென்று படுத்துக் கொண்டான் சித்தார்த் அபிமன்யூ.​

நேத்ரா கையிலிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நீள் இருக்கையில் கால்களை குறுக்கி படுத்துக் கொண்டாள். தனக்கு எதிரே இருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருக்கும் கணவனை பார்த்தாள்.​

அவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான். அந்த பெரிய கட்டிலின் நீளம் அவனுக்கு சரியாக இருந்தது. மிகவும் உயரமாக இருப்பான் போலும். முகத்தை தான் சரியாக பார்க்கவில்லை என்று நினைத்தபடி எட்டி பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருந்ததால் ஒன்றுமே தெரியவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனோடு வாழ்க்கையே இல்லை என்று ஆன பின்பு முகத்தை பார்த்து மட்டும் என்னவாக போகிறது? எதற்கு வீணாக ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவளாக கண்களை மூடிக் கொண்டாள்.​

வெகுநேரமாக தூக்கம் வராமல், அந்த சோபாவில் புரண்டு படுக்கவும் முடியாமல், விழித்தபடி தன் வாழ்க்கை இனி எப்படி இருக்க போகிறதோ என்ற யோசனையுடன் நடுநிசி தாண்டியும் தூங்காமல் விழித்திருந்தாள்.​

பிறகு எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. தூக்க கலக்கத்தில் புரண்டவள் சோபாவில் இருந்து தொப்பென கீழே விழுந்தாள். எங்கேயோ விழுந்து விட்டோம் என்று பதறி கொண்டு எழுந்தவள் மீண்டும் புடவையில் கால் தடுக்கி சோபாவில் விழுந்தாள். எதிர்பாராமல் வேகமாக விழுந்ததில் அந்த சோபாவின் மரக்கட்டை அவள் கன்னத்தில் பட்டு வலித்தது.​

சமாளித்து எழுந்து நின்றவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். நல்ல வேளை அங்கே சித்தார்த் அபிமன்யு இல்லை. எப்போது எழுந்து சென்றான் என்றே அவளுக்கு தெரியவில்லை. மணியை பார்த்தாள், அது எட்டு மணியை தாண்டி இருந்தது.​

“நேத்ரா” வெளியே அவளின் அத்தம்மா அழைக்கும் குரல் கேட்டது. “இதோ வர்றேன் அத்தை” என்று குரல் கொடுத்தபடி அவசரமாக வெளியே போனவளை, அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் ஆராய்ச்சியாக பார்த்தனர்.​

கன்னத்தை தேய்த்துக் கொண்டே என்ன என்பது போல பார்த்தாள் நேத்ரா. அவர்களின் பார்வை அவளின் கலைந்திருந்த புடவையின் மேல் படியவும், கன்னத்தை தேய்ப்பதை விட்டு அவசரமாக புடவையை சரி செய்தாள். அவளின் கன்னம் கன்றி சிவந்து இருந்ததை பார்த்த பெரியவர்கள் தங்களுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.​

முந்தைய நாள் இரவு, அவளை அதட்டி முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்த அப்பத்தா மட்டும், “ராத்திரி என்னவோ உள்ளேயே போக மாட்டேன்னு சொன்னே? இப்போ என்னடான்னா உன் புருஷன் வந்து அரை மணி நேரம் ஆகியும் வெளிவராம இருக்க? நான் சொல்லலை? முதலிரவு அறைக்குள்ளே போக தயங்கறவ சீக்கிரமா வெளியே வந்தததா சரித்திரமே இல்லை” என்று அந்தம்மா கிண்டலாக பேசி சிரிக்க, அப்போது தான் நேத்ராவுக்கு அவர்கள் பேச்சின் அர்த்தம் புரிந்தது. அங்கே நிற்க முடியாமல் அவசரமாக குளியலறைக்கு செல்பவளை மகேந்திரனும் சிவக்குமாரும் கவனித்தும் கவனிக்காதது போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.​

“சிவா, என் மகன் கண்டிப்பா சொல்லிட்டான், இன்னைக்கே நான் கனடா போயே ஆகணுமாம், அவன் பொண்டாட்டியை அவனுக்கு பார்த்துக்க தெரியுமாம். அவன் சொன்னப்போ எனக்கு புரியலை. இப்போ தான் புரியுது. நான் அவங்களுக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுனு தான் என்னை என் பொண்ணு வீட்டுக்கு போக சொல்றான் போல இருக்கு” என்றார் மகேந்திரன் சிரித்துக் கொண்டே. மருமகளின் கன்ன சிவப்பையும் வெட்கத்துடன் அவள் ஓடிய ஓட்டத்தையும் பார்த்தவரின் மனம் பூரித்து போய் விட்டது.​

“மாப்பிள்ளை சொல்ற மாதிரி கேளு மகி. உடம்பை பார்த்துக்கோ. எனக்கும் இங்கே வயலில் அறுவடை வேலையிருக்கு, சின்னஞ்சிறுசுங்க, கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கட்டும். நான் அறுவடை முடிஞ்சதும் சென்னைக்கு போய் அவங்களை பார்த்துட்டு வர்றேன்” என்றார் சிவக்குமார்.​

அதன்பிறகு நேத்ரா குளித்து முடித்து தயாராகி வரும் போது, சித்தார்த் தன் தந்தையிடமும் மாமனாரிடமும் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.​

“மருமகளே, ஏன் அங்கேயே நிக்கிற? வந்து உன் புருஷன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு வா” என்று அழைத்தார் மகேந்திரன்.​

சித்தார்த் திரும்பவும் இல்லை, அவளை அழைத்து தன் அருகில் அமரச் சொல்லவும் இல்லை. குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தயங்கியபடி அவன் அருகில் சென்று அவள் அமர்ந்த அடுத்த நொடி, அவன் எழுந்து விட்டிருந்தான். உண்மையில் அவனுக்கு நிறைய போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனால் அவசரமாக சாப்பிட்டு எழுந்துக் கொண்டான்.​

ஆனால் நேத்ராவுக்கு தான் என்னவோ போலாகி விட்டது. அவன் அருகில் அமர்ந்து உண்ணக் கூட அவளுக்கு தகுதியில்லை என்று நினைக்கிறானோ? என்று கலங்கினாள். சிவக்குமாரின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே சாப்பிட்டாள்.​

மகளின் கன்னத்தில் இருந்த சிவப்பை பார்த்த சிவக்குமார் மகளை கனிவாக பார்த்தபடி, “மாப்பிள்ளை இன்னைக்கே சென்னைக்கு கிளம்பணும், மருத்துவமனையில் நிறைய நோயாளிங்க அவருக்காக காத்திட்டு இருக்காங்கனு சொல்றாருடா. மகியை பிளைட் ஏத்தி விட்டுட்டு அப்படியே சென்னையில் இருக்கிற வீட்டுக்கு உன்னை அழைச்சிட்டு போறதா சொல்றாரு.​

வயலில் அறுவடை இருக்கிறதால என்னால வர முடியாது. அதுவும் அத்தை, அப்பத்தா எல்லாம் தான் வயல்ல வேலை பார்க்கணும். நீ மாப்பிள்ளையோட தனியா இருந்துக்குவ தானே? உனக்கொண்ணும் பயமில்லையே?” என்றார் சிவக்குமார் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியபடி​

“அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா, நான் இருந்துப்பேன், நீங்க அறுவடையை பாருங்க” என்றாள் நேத்ரா.​

சிவக்குமார், மகளும் மருமகனும் தனிமையில் பேசி பழகட்டும், பிறகு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவராக தாய் வீட்டு சீர் சாமான்களை எல்லாம் இங்கேயே கொண்டு வந்து இறக்கி வைத்திருந்தார்.​

மறுப்பாய் ஏதோ சொல்ல போன சித்தார்த்தை கண்களால் அடக்கினார் மகேந்திரன். “நீ சீர் சாமான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டா, நம்ம பொண்ணுக்கு நம்மால எதையும் செய்யமுடியலைனு வருத்தப்படுவான். அவன் செய்யறதை செய்யட்டும். நீ எதுவும் தலையிடாதே” என்று சொல்லிவிட்டார்.​

அதற்கு பிறகு மகேந்திரன் நேத்ராவிடம், “மாற்றி உடுத்திக் கொள்ள தேவையான ஆடைகளை மட்டும் எடுத்து பேக் செஞ்சுக்கோ நேத்ரா. மற்றவற்றை இந்த வீட்டிலேயே வைத்து விடு, தேவைப்பட்டால் பிறகு எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறவும் அவளும் தன் உடைமைகள் இருக்கும் பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தாள்.​

தந்தை சிவக்குமாரிடமும், உற்றார் உறவினர்களிடமும் கண்ணீருடன் விடைப் பெற்றுக் கொண்டு அவள் வெளியே வரும்போது சித்தார்த் அபிமன்யு காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான். மகேந்திரன் முன்பக்க கதவை மருமகளுக்காக திறந்து விட்டார்.​

சாப்பிடும்போது நேத்ரா அவன் அருகில் அமர்ந்ததும், அவன் சட்டென்று எழுந்து போனதும் நினைவில் வர, “இல்லை மாமா, நீங்க உட்காருங்க. நான் பின்னாடி உட்கார்ந்திட்டு வர்றேன்” என்றாள்.​

சித்தார்த்தின் முகம் இறுகியது. “ஓ மகாராணி என் பக்கத்துல கூட உட்கார மாட்டாங்களோ?” என்று கோபத்தால் முகம் சிவந்தான். ஆனால் எதற்கு கோபப் படுகிறோம் என்று தான் அவனுக்கே தெரியவில்லை.​


epi-5 continuation 👇👇👇
 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

Epi - 5 Continuation...​

அதன்பிறகு மூவரும் அங்கிருந்தவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு, தர்மபுரியிலிருந்து சென்னையை நோக்கி காரில் பயணித்தனர்.​

மகேந்திரனும் சித்தார்த்தும் மருத்துவமனையை பற்றி பேசிக் கொண்டே வந்தனர். நேத்ரா தனியாக அமர்ந்து கொண்டு அமைதியாக வந்ததால் அப்படியே பின் இருக்கையில் படுத்து உறங்கி விட்டாள்​

சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டை வந்தபின்னும் அவள் உறங்கி கொண்டே இருக்கவும், “சித்து ஏதோ ரொம்ப டயர்டா இருக்கா போல இருக்கு. தூங்கட்டும். எப்படியும் போர்டிங்கு என்னை தவிர யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன், எல்லாம் முடிச்சிட்டு ஓகே ஆனதும் உனக்கு போன் பண்றேன். நீ என் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போ. அவளை நல்லா பார்த்துக்கோ சித்து” என்றார் மகேந்திரன்.​

“சரிப்பா, மதிய சாப்பாட்டு நேரம் ஆகிடுச்சு. அவள் எழுந்ததும் சாப்பிட வைச்சு அழைச்சிட்டு போறேன். உங்களுக்கு பிளைட்ல சாப்பிட கொடுப்பாங்க. மறுக்காம சாப்பிடணும் புரியுதா?” என்றான் சித்தார்த் அபிமன்யு​

சம்மதமாக தலையசைத்து மகனை ஆரத்தழுவி கொண்டார் மகேந்திரன். பின்பு அவர் ஏர்போர்டினுள் நுழையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவர் சென்ற பின் திரும்பி காரில் உறங்கி கொண்டிருந்தவளை பார்த்தான். இவள் இப்போதைக்கு எழமாட்டாள் போல இருக்கிறதே, சரி சாப்பிட எதாவது வாங்கிக் கொண்டு வந்து கிளம்பலாம். நடுவில் எழுந்தால் சாப்பிட கொடுப்போம் என்று எண்ணியவாறு, அவளை அங்கேயே காரில் விட்டுவிட்டு கார் லாக்கரை விடுவித்து விட்டு, கேண்டினை நோக்கி சென்றான் சித்தார்த்.​

அவன் சென்ற சில நிமிடங்களிலேயே காரின் கதவை யாரோ தட்டினார்கள். அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள். ஒரு காவலாளி நின்றிருந்தார், “ஹலோ மேடம், மினிஸ்டர் வெளிநாடு போக போறார்,. நிறைய கார்கள் வரப்போகுது. கொஞ்சம் உங்க காரை வேறே இடத்தில் நிறுத்தறீங்களா?” என்றார்.​

அப்போது தான் எழுந்து அமர்ந்தவள் கணவனையும் மாமானாரையும் காணாமல் திருதிருவென் விழித்தாள். “எனக்கு கார் ஓட்ட தெரியாது,. அவர் வந்தா தான். எங்கே போயிருக்கார்னு தெரியலையே” என்றாள்.​

“உங்க கணவரை சொல்றீங்களா? அதோ அந்த கேண்டினுக்கு தான் போனார். நான் ரோட் கிராஸ் ஆகி வர்றதுக்குள்ளே போயிட்டாரு. நீங்க கொஞ்சம் சீக்கிரமா போய் அவரை அழைச்சிட்டு வந்து காரை ஓரம் கட்ட சொல்லுங்க” என்று அவசரமாக சொல்லிவிட்டு அவர் மற்றொரு காரை நோக்கி சென்றார்.​

காரிலிருந்து இறங்கியவள் அவசரமாக அங்கிருந்த கேண்டினுக்கு சென்றாள். கணவனின் முகத்தை சரியாக பார்க்காதவளாயிற்றே, அவனை எப்படி கண்டுபிடிக்க போகிறோம், சரி உயரம் மற்றும் அவன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணியபடி கேண்டினுக்குள் நுழைந்தாள்.​

அங்கே உயரமான ஆண்கள் பலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் யார் வெளிர் சாக்லேட் நிறச் சட்டை அணிந்திருக்கிறார்கள் என்று தேடினாள். அங்கே இரண்டு ஆண்கள் ஒரே உயரத்துடன் ஒரே நிற சட்டையை அணிந்திருந்தார்கள். அந்த இருவரில் யார் அவள் கணவன் என்றே அவளுக்கு தெரியவில்லை.​

நாடியில் ஆட்காட்டி விரலை தட்டியபடி இருவரையும் அவர்களுக்கு தெரியாமல் மாறி மாறி பார்த்தாள். அதற்குள் எதேச்சையாக திரும்பிய சித்தார்த் நேத்ராவை பார்த்துவிட்டான். எந்த மேக்கப்பும் இல்லாமல் இருந்தவளை அவனுக்குமே சில நிமிடம் அவள் யார் என்றே தெரியவில்லை. சற்று முன்பு பார்த்த அவளின் பக்கவாட்டு தோற்றமும் அவள் அணிந்திருந்த வெளிர் மஞ்சள் நிற புடவையும் தன் மனைவி தான் என்று உறுதி செய்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.​

யாரை தேடுகிறாள் என்று புருவமுடிச்சுடன் அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்.​

அவள் கைகளை பிசைந்து கொண்டு எட்டி எட்டி இரு ஆண்களின் முகத்தை பார்த்தாள். இருந்தாலும் அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இந்த மாதிரி சோதனை தனக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. இங்கிருப்பவர்களில் யார் அவள் கணவன் என்று எப்படி கண்டுபிடிப்பாள்? தவிப்புடன் நகத்தை கடித்தாள்.​

அவளின் செய்கை சித்தார்த்துக்கு ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. அவள் அவனை தான் தேடுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டான். சரியாக கண்டுபிடிக்கிறாளா என்று பார்ப்போம் என்று எண்ணியபடி அவளை கண்டு கொள்ளாதவாறு நின்று கொண்டான்.​

இப்போது அவள் தன் கைப்பையிலிருந்த ஒரு மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு இருவரையும் ஆராய்ச்சியாக பார்த்தாள்.​

அவளுக்கு தெரியாமல் ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தபடி பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான். என்ன இது கண்ணாடி வேற போட்டு இருக்கா? இதுவரைக்கும் அதைப்பற்றி அவனுக்கு தெரியாதே என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, சித்தார்த்தின் சட்டையை போல அணிந்திருந்த மற்றவன் கேண்டினிலிருந்து வெளியே செல்லவும், அவசரமாக அவன் பின்னால் சென்றாள் நேத்ரா.​

நான் என்று நினைத்துக் கொண்டு அவன் பின்னால் செல்கிறாளே என்று பதட்டத்தோடு மனைவியை அழைக்க நினைத்தான். “என்னவென்று அழைப்பது? அவள் பெயர் அவனுக்கு நினைவில் இல்லையே? திருமணம் ஆனபின்பு மகேந்திரன் அவளை மருமகளே என்று தான் அழைத்தார்.​

திருமணத்திற்கு முன்பு வேலைக்கான ஆர்டரை தரும்படி சொன்னபோது ஒரு முறை அவள் பெயரை சொன்னார். இப்போது சுத்தமாக அவளின் பெயர் அவன் நினைவில் இல்லை.​

கணவனின் முகமறியா பேதை பெண் யார் பின்னாலோ சென்று கொண்டிருக்க, அதை பார்த்தும் மனைவியின் பெயர் தெரியாததால் கூட்டத்தில் அவளை என்னவென்று அழைப்பது என்று தெரியாமல் விழித்தான் சித்தார்த் அபிமன்யு!​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 06

நேத்ரா யாரோ ஒரு ஆடவன் பின்னால் அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தயங்கியபடி சென்று கொண்டிருக்க, சித்தார்த் கூட்டத்தில் அவளை அழைக்கவும் முடியாமல் வேகமாக அவளருகே செல்லவும் முடியாமல் தத்தளித்தான்.​

அவசரமாக கூட்டத்தை விலக்கி கொண்டு வேகமாக சென்றவன், “ஹலோ, ஏய், எக்ஸ்கியூஸ்மீ” என்று பல பதங்களில் அழைத்து பார்த்துவிட்டான்.​

அவள் நினைவெல்லாம் முன்னால் சென்று கொண்டிருப்பவனை எப்படி அழைப்பது என்பதிலேயே இருக்க, சித்தார்த்தின் முயற்சியை அவள் அறிந்திருக்கவில்லை.​

வேகத்தை குறைத்து நின்றுவிட்டவன் “ப்பூ” என்று இதழ்குவித்து ஊதி தலையை உலுக்கிக் கொண்டு அவளை பார்த்து, “ஏய் சோடாபுட்டி” என்றான் சத்தமாக.​

சிறு வயதிலிருந்து இந்த வார்த்தையை கேட்டு கேட்டு எரிச்சல் அடைந்தவளாயிற்றே. சட்டென தன்னிச்சையாக திரும்பி பார்த்தாள் நேத்ரா. தன்னை பார்த்து தான் சொல்கிறானா என்று சித்தார்த்தை ஆழ்ந்து பார்த்தாள். அவனும் அவளை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான். மற்றது எல்லாம் மறந்து விட வேகமாக அவனருகில் வந்து, “யாரை பார்த்து சோடாபுட்டினு சொல்றீங்க” என்றாள் கோபமாக.​

“உன் பெயர் தெரியலை, வேறெப்படி கூப்பிட முடியும், அதான் கண்ணாடி போட்டு இருந்ததால அப்படி கூப்பிட்டேன் சாரி” என்றான்.​

“நீங்க ஏன் என்னை கூப்பிடணும்?” என்று கோபம் மாறாமல் கேட்கும் போதே அவளுக்கு ஒன்று உறைத்தது. இவன் குரலும், உயரமும், அணிந்திருக்கும் சட்டையும் சித்தார்த் அபிமன்யூவை நினைவூட்டுகிறதே, அப்படி என்றால் இவன் தான் அவளுடைய கணவனா?​

அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள், சிவந்த நிறம், ஆறடிக்கும் அதிகமான உயரத்தில், கட்டுக்கோப்பான உடற்கட்டுடன், கூர்மையான விழிகளும், அழுத்தமான உதடுகளும், கருகரு மீசை, டிரிம் செய்யப்பட்ட தாடி, கலைந்திருந்த கேசமும் என அவன் பார்க்க படு ஸ்மார்ட்டாக திரைப்பட கதாநாயகன் போல இருந்தான். பேண்டில் இரண்டுகைகளையும் வைத்துக் கொண்டு அவன் நின்றிருந்த விதம் எந்த பெண்ணையும் திரும்பி பார்க்க வைக்கும்.​

ச்சே ச்சே இவன் அவளுடைய கணவனாக இருக்க வாய்ப்பில்லை. இவன் யாராவது பிரபலமாக இருக்க கூடும் என்று நினைத்தவள் திரும்பி அதே நிற சட்டையில் சென்று கொண்டிருக்கும் இன்னொருவனை தவிப்புடன் திரும்பி பார்த்தாள்.​

அவள் இன்னும் தன்னை இனம் கண்டுகொள்ளவில்லை என்று உணர்ந்தவன், சட்டென அவள் அருகில் வந்து அவள் கழுத்தில் இருந்த தாலியை சுட்டிக்காட்டி, “இதை நான் தான் கட்டினேன். இப்போ தெரியுதா நான் யார்னு?” என்றான்.​

அதிர்ந்து விழித்தவள், மீண்டும் அவனை நன்றாக அளவெடுக்கும் பார்வை பார்த்தாள். “என்னை அப்புறமா பார்க்கலாம், கார்ல தூங்கிட்டு இருந்தவ, எதுக்கு என்னை தேடிட்டு வந்தே, முதல்ல அத சொல்லு” என்று கேட்டான்.​

அப்போது தான், அவள் அவனை தேடிவந்ததற்கான காரணத்தை நினைவு கூர்ந்தவளாய் நெற்றியை தன் விரல்களால் தேய்த்தபடி, “காரை ஓரமாக நிறுத்த சொன்னாங்க, யாரோ மினிஸ்டர் வராங்களாம்” என்றாள்.​

“சரி வா போகலாம், வேறே எங்காவது போய் சாப்பிட்டுக்கலாம்” என்றபடி அவசரமாக காரை நோக்கி சென்றான். அவன் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக சென்றவள் அப்போதும் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.​

சித்தார்த் வேகமாக காரை கிளப்பி வெளிப்பக்கமாக ஓட்டினான். நேத்ரா இப்போது தான் எந்த வகையிலும் சித்தார்த்துக்கு பொருத்தமானவள் இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டிருந்தாள். அவன் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவத்தில் முதுகலை படித்தவன், அவளோ வெறும் டிப்ளமா நர்சிங்.​

நேத்ரா இருந்த ஊரிலேயே பணக்காரர் என்றால் அது மகேந்திரன் தான். அப்படிப் பட்ட பணக்காரரின் மகன், மிகப்பெரிய மருத்துவமனையின் முதலாளிக்கு, வயலில் வேலை செய்யும் கூலிக்காரரின் மகள் எப்படி ஒத்து போவாள்?​

சரி, அழகாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தனியாக பார்த்தாலே பார்க்க சுமாராக இருப்பாள்., இவ்வளவு அழகாக இருப்பவன் அருகில் நின்றால் அவ்வளவு தான். போதாக்குறைக்கு கண்ணாடி வேறு முகத்தின் அழகை கெடுக்குது. ச்சே, திருமணமாகி முதன் முதலாக அவன் என்னை “சோடாபுட்டி” என்றா அழைக்க வேண்டும்? என்று மனம் சுணங்கியது.​

“உன் பேர் என்ன?” என்ற சித்தார்த்தின் குரலை கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.​

“பேர் தெரியாமலே தாலிக் கட்டி மனைவியாக்கிட்டானேனு பார்க்கிறியா? என்ன பண்றது? கட்டாயத்துல நடந்த கல்யாணம், நானும் குழப்பத்துல இருந்ததால நேத்து நைட் உன்கிட்ட பேரை கேட்க மறந்துட்டேன்” என்றான் சித்தார்த் பாதையில் கவனத்தை வைத்தபடி.​

“நேத்ரநயனி” என்றாள்​

“என்ன நேத்ரநயனியா? பேரு ரொம்ப புதுசா இருக்கே?” என்றான் ஆச்சரியமாக​

“நேத்ரா, நயனி இதுக்கெல்லாம் அழகிய கண்களை உடையவள்னு அர்த்தமாம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் கண்ணாடி வழியே அவன் சிரிப்பை அடக்குவதை கவனித்தாள்.​

“ஏன் சிரிக்கறீங்க?” என்று கேட்டாள்.​

“இல்ல அழகான கண்களை உடையவள்னு பேரு வச்சிருக்காங்க, கண்ணாடி போட்டு இருக்கியே அதான் சிரிப்பு வந்துடுச்சு. ஆமா இரண்டு நாளா நீ கண்ணாடி போட்டே நான் பார்க்கலையே, ஏன் அப்போவெல்லாம் கண்ணாடி போடலை?” என்று கேட்டான்.​

அவனை பொறுத்தவரை சாதாரணமாகத் தான் கேட்டான், அவளுக்கு தான் அவமானமாக தோன்றியது. “கல்யாணத்தில் மணமேடையில் உட்காரும்போது எதுக்கு கண்ணாடி, போட்டோவில் நல்லா இருக்காதுனு சொல்லிட்டாங்க” என்றாள் தன் மனக்குமறலை அடக்கியபடி​

“சரி கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்த பின்னாடியும் கண்ணாடி போட்ட மாதிரி தெரியலையே” என்றான் அவன்​

இப்போ இந்த கண்ணாடி தான் இவனுக்கு பிரச்சனையா என்று எரிச்சலாக இருந்தது. “நான் கண்ணாடி போட்டு இருந்தால் மட்டும் உங்களுக்கு தெரிய போகுதா? நீங்க தான் வீட்டுக்குள் நுழைந்ததுமே உங்க அறைக்கு போயிட்டீங்க, அப்புறம் நேத்து ராத்திரியும் கண்ணாடிக்கு அவசியம் இருக்காதுனு சொல்லி அத்தை என்னை கண்ணாடியே போட விடலை” என்றாள்.​

“ஏன் கண்ணாடிக்கு அவசியமே இருக்காதுனு சொன்னாங்க?” என்று கேட்டான் வேண்டுமென்றே.​

அவள் பதில் ஏதும் கூறாமல் வெளிப்பக்கமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். மனதின் ஓரத்தில் பாரம் ஏறியது, வெடுக்கென்று தன் முகத்தில் இருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.​

கார் கண்ணாடி வழியே அவளின் முகபாவத்தையும் செய்கையும் பார்த்துக் கொண்டு வந்த சித்தார்த் எதுவும் பேசாமல் ஒரு ரெஸ்டாரண்ட் முன்னே காரை நிறுத்தினான்.​

இருவரும் உள்ளே சென்று எதிரெதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டனர். “என்ன சாப்பிடுறே?” என்று கேட்ட சித்தார்த்தை அவள் நிமிர்ந்தும் பார்க்காமல் பதில் ஏதும் சொல்லாமல் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.​

முதன் முதலாக ஒரு பெண், அதுவும் மனைவியாக வந்த மறுநாளே தன்னிடம் உதாசீனத்தை காட்டவும் சித்தார்த்தின் முகம் இறுகியது. அவளை அழுத்தமாக பார்த்தபடி உணவுக்கான ஆர்டரை கொடுத்தான். ஆர்டர் கொடுத்த உணவுகள் வந்ததும் சித்தார்த்தே அவற்றை அவள் எதிரே நகர்த்தி சாப்பிட சொல்லவும், மறுக்க முடியாமல் தட்டில் இருந்த உணவுகளை வேண்டா வெறுப்பாக கொறித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.​

அவளின் இறுக்கத்தை குறைத்து எப்படியாவது அவளை இயல்பாக பேச வைக்க வேண்டும் என்று நினைத்தான் சித்தார்த் அபிமன்யூ.​

“ஏன் மறுபடியும் கண்ணாடி போடாம, கைப்பையில் வச்சிருக்க? பவர் கண்ணாடியா இருந்தால் போடாமல் இருக்காதே, எடுத்து போட்டுக்க” என்று அவன் மருத்துவனாக பேச போக நேத்ராவிற்கு பொறுமை பறந்து விட்டது.​

“உங்கள மாதிரி எல்லாரும் சின்ன வயசுல இருந்து சோடாபுட்டினு கூப்பிட்டு கூப்பிட்டு தான் கண்ணாடி போடறதை வெறுக்கிறேன். இப்போ என்ன? நான் அந்த கண்ணாடியை போட்டுக்கணும், நீங்க என்னை சோடாபுட்டினு கிண்டல் செய்யணும் அவ்வளவு தானே” என்று வெடித்தவள் தன் கைப்பையில் இருந்த மூக்கு கண்ணாடியை அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்டாள்.​

சித்தார்த் அபிமன்யூவிடம் இதுவரை யாருமே இப்படி எடுத்தெறிந்து பேசியதே இல்லை. அவள் பெயர் தெரியாததால் தானே அப்படி கூப்பிட்டான், அவன் என்னவோ அவளை வேண்டுமென்றே கிண்டல் செய்தது போல அவனிடம் கோபப்படுகிறாளே?​

அவன் யார்? பிரபல மருத்துவமனையின் சேர்மன். அனைத்து ஊழியர்களும் அவனை பார்த்து நடுங்குவார்கள். விருப்பமில்லாத திருமணம் தான் என்றாலும் ஏதோ அவன் தந்தையுடைய நண்பரின் மகள், அதுமட்டுமில்லாமல் தந்தையின் தலைமையில் திருமணம் நடந்ததால் அதற்கு மதிப்பு கொடுத்து பேசினால் ரொம்ப துள்ளுறாளே” என்று அவனுக்கும் கோபம் வந்தது.​

“நீ கண்ணாடி போடு, போடாம இரு, இட்ஸ் நன் ஆஃப் மை பிசினஸ், நெக்ஸ்ட் என்ன பண்ண போறதா உத்தேசம்?” என்றான் கடுமையான குரலில்.​

“என்னை எதாவது பெண்கள் விடுதியில் சேர்த்திடுங்கள், நாளையிலிருந்து நான் வேலையில் ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்றாள் நேத்ரா சற்றும் யோசிக்காமல்​

“என் மனைவினு சொல்லிக்கிட்டு நீ விடுதியில் தங்குவ, என் மருத்துவமனைக்கே நர்ஸ் வேலைக்கு வருவியா? அது எனக்கு தான் அவமானம், வேறே சொல்லு” என்றான் அழுத்தமான குரலில்.​

சற்று நேரம் யோசித்தவளுக்கு வேறு எந்த யோசனையும் வராததால், “நான் உங்க மனைவினு சொன்னால் தானே உங்களுக்கு அவமானம். நான் யார்கிட்டயும் உங்க மனைவினு சொல்ல மாட்டேன். மற்ற நர்ஸ் கூட வேலை செய்துட்டு என் வழியில் போய்க்கிறேன். நீங்க பரஸ்பர விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துட்டு, அதில் எப்போ கையெழுத்து போட சொன்னாலும் நான் போட தயார்” என்றாள் நேத்ரா தீர்மானமாக.​

நேத்ராவை கூர்மையாக பார்த்தான் சித்தார்த். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு அவளின் தந்தையின் நிலையை பற்றி சற்றும் யோசிக்காமல் இத்தனை தீர்மானமாக விவாகரத்துக்கு சம்மதம் என்று அவளே சொல்லும் போது, அவன் என்ன அவளிடம் கெஞ்ச வேண்டுமா? அப்படி கெஞ்சி அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள இது ஒன்றும் விருப்பப்பட்டு நடந்த திருமணம் இல்லையே?​

தோள்களை குலுக்கிக் கொண்டான். “உன் விருப்பம். இவ்வளவு தெளிவா பேசற உனக்கு மகளிர் விடுதியை பார்த்துக் கொள்ள தெரியாதா என்ன?​

நாளைக்கு நீ வந்து ஆஸ்பிட்டல்ல ஜாய்ன் ஆகிக்கலாம். நீ கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லுவியாே? கல்யாணம் ஆகலைனு சொல்லுவியோ, அது உன் விருப்பம், ஆனால் என் மனைவினு மட்டும் சொல்லாதே” என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டிலிருந்து சில ரூபாய் நோட்டுக்களை டேபிளின் மீது வைத்து விட்டு அங்கிருந்து அவன் மட்டும் கிளம்பி சென்றான்.​

அவள் சொன்ன வார்த்தைகளையே தான் அவனும் திருப்பி சொன்னான். அவள் சொன்ன போது அந்த வார்த்தைகளின் வீரியம் உணராதவள், இப்போது அவன் சொன்ன போது இதயத்தை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.​

இப்படி அவளை தனியே விட்டுச் செல்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னிச்சையாக கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கவும் மறந்து அப்படியே சிலையென அசையாமல் அமர்ந்திருந்தாள்.​

கோபமாக வெளியேறிய சித்தார்த், தன் காரில் அமர்ந்து தன் கோபத்தை காரின் வேகத்தில் காட்டினான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 07

நேத்ரா எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. அவளுடைய கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.​

இரண்டு முறை அடித்து ஓய்ந்த பின்னும் மீண்டும் அது விடாமல் ஒலிக்கவும் அதை எடுத்து பார்த்தாள். அவள் தந்தை சிவக்குமார் தான் போன் செய்திருந்தார்.​

“நேத்ரா எப்படிம்மா இருக்கே? வீடு போய் சேர்ந்துட்டீங்களா? மகி வீடு அரண்மனை மாதிரி இருக்குமே… என் பொண்ணு அதில் மகாராணி மாதிரி வாழப்போறாள்னு நினைக்கும் போதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உனக்கு வீடு பிடிச்சிருக்கா? நீயும் மாப்பிள்ளையும் சாப்டீங்களா? மாப்பிள்ளை எங்கே? அவர் பக்கத்தில் இருந்தா கொஞ்சம் போனை கொடு” என்று அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக நேத்ராவின் கண்களில் கண்ணீர் மேலும் ஊற்றெடுத்தது. பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.​

“நேத்ரா, ஏன்டா பேச மாட்டேங்கிற? அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று சிவக்குமார் அந்த பக்கம் பதறவும், வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு, அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.​

“சசாப்பிட்டுட்டு இருந்தேன்பா, அதான் பேச முடியலை. இப்போ தான் ஓட்டல்ல சாப்பிட்டோம், இனிமேல் தான் வீட்டுக்கு போகணும்பா. அவர் சாப்பிட்டுட்டு இருக்கார், போனை கொடுக்கட்டுமா?” என்றாள் தன்னை சமாளித்துக் கொண்டு.​

“வேணாம் டா, அவர் சாப்பிடட்டும், நான் அப்புறமா பேசிக்கிறேன். வீட்டுக்கு போனதும், நல்லா ஓய்வெடு. மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்துக்கோ” என்றார் சிவக்குமார்.​

“சரிப்பா, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்​

“சொல்லுடா” என்றார் சிவா​

“நானும் அவரோட ஆஸ்பிட்டலுக்கு போய் நர்ஸ் வேலை பார்க்கலாம்னு இருக்கேன். அவர் டாக்டர் என்பதால அதிகமாக விடுமுறை எடுக்க முடியாது. நாளையிலிருந்தே ஆஸ்பிட்டலுக்கு போகணும்னு சொல்றாரு. நான் மட்டும் வீட்டில் தனியா இருக்கிறதை விட, அவர் கூடவே போய் நர்ஸ் வேலை பார்க்கலாம்னு இருக்கேன்” என்றாள் நேத்ரா. பின்னாளில் தந்தைக்கு விஷயம் தெரியவந்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி கூறினாள்.​

“அவர் கூட மருத்துவமனைக்கு போறதெல்லாம் சரிதான்டா, முதலாளியா இருக்க வேண்டியவ, மத்தவங்க மாதிரி ஒரு நர்ஸ் ஆ இருக்க போறேன்னு சொல்றியே, அதுதான் என்னவோ போல இருக்கு” என்றார் சிவக்குமார் யோசனையோடு.​

“அப்பா இடையில் இந்த கல்யாணத்தால நமக்கு கிடைச்ச முதலாளிங்கிற அந்தஸ்து தேவையா? நர்ஸ் வேலை ஒண்ணும் கீழானது இல்லையே” என்ற மகளை எண்ணி பூரித்தார் சிவக்குமார்.​

“அப்படி சொல்ல வரலை நேத்ரா. சரி உனக்கு எது சரினு படுதோ செய். மாப்பிள்ளை கூடவே இருக்கணும்னு நீ பிரியப்படுறது எனக்கும் புரியுது. நீ அங்கே போய்ட்டு சும்மா இருக்காம அவருக்கு உதவியா இருக்கிறதும் நல்லது தானே” என்றார் சிவக்குமார்.​

“சரிப்பா உடம்பை பார்த்துக்கோங்க, உங்களை பார்க்கணும்னா நானே வந்து பார்க்கிறேன். நீங்க வெயில்ல அலைய வேண்டாம்” என்று சொல்லி போனை வைத்தாள்.​

இப்போது சற்று தெளிந்தவள், அந்த ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஊழியரிடம் அங்கே எதாவது பெண்கள் விடுதி அருகில் இருக்கிறதா என்று விசாரித்தாள். அவர்கள் ஏதோ ஒரு விலாசம் கொடுக்கவும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு டாக்சி வரவழைத்து அங்கிருந்து சென்றாள்.​

சித்தார்த் காரில் கோபத்துடன் நீண்ட தூரம் வந்து விட்டவன், அங்கே கடற்கரையை பார்த்ததும் காரை நிறுத்தி அலைகளை நோக்கி சென்றான். அவன் மனதில் இருந்த சீற்றத்தை போல அந்த அலைகளும் சீற்றமாய் அவனை நோக்கி சீறிக் கொண்டு வந்தன.​

அவ்வளவு ஆக்ரோஷமாய் வந்த அலைகள், வந்த வேகத்தில் அப்படியே தலைவணங்கி மீண்டும் பின்னோக்கி அந்த கடலிடமே சென்று தஞ்சம் புகுந்து கொண்டன. சற்று நேரம் தன் கோபத்தோடு அலைகளின் சீற்றத்தை ஒப்பிட்டு பார்த்தான் சித்தார்த்.​

அலைகளை போல பொங்கி வந்த கோபமும் குறைந்து அவனின் சமுத்திரமான நேத்ரநயனியின் நினைவில் பின்னோக்கி சென்றது. அவளை தனியாக விட்டுட்டு வந்துட்டேனே என்று தலையில் கைவத்துக் கொண்டு, மீண்டும் அந்த ரெஸ்டாரண்டை நோக்கி வேகமாக காரைச் செலுத்தினான்.​

அவசரமாக ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தவன் அவளை சுற்றும் முற்றும் தேடினான், அவள் எங்கேயும் இல்லை. அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்தற்கு அவள் பெண்கள் விடுதியின் விலாசத்தை கேட்டு தெரிந்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறினார்கள்.​

சற்றே மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் துளிர் விட்டது. “எவ்வளவு திமிர் அவளுக்கு. எனக்கு சற்றும் பொருத்தமில்லாதவளாக இருந்தாலும் தாலி கட்டியாயிற்று, இனி அவளை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் என்று நான் நினைத்திருந்தால் முதல் நாள் இரவே விவாகரத்தை பற்றி பேசுகிறாள். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள்னு நினைச்சிருந்தா, சென்னை வந்தும் அப்படியே பேசுறா. இதோ இப்போ தனியா ஹாஸ்டலை தேடி போயிருக்கா என்றால் அவள் எதுவும் சும்மா பேசல. அவளோட உள் மனசுல விவாகரத்து என்ற முடிவுல தான் இருக்கா போலிருக்கு. அவள் என்ன என்னை வேண்டாம் என்பது, எனக்கு அவள் வேண்டாம்” என்று மனதிற்குள் கறுவியபடி, இறுகிய முகத்துடன் மீண்டும் காரில் ஏறி தன் வீட்டிற்கு சென்றான்.​

அதிர்ஷ்டவசமாக நேத்ராவிற்கு அவள் தேடிச் சென்ற ஹாஸ்டலில் தங்குவதற்கு அறை கிடைத்து விட்டது. விலையும் அவளுக்கு ஏற்றபடி இருந்தது, ஆனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு தான் அங்கே தங்க அனுமதி என்ற அறிவிப்பு பலகை இருக்கவும், அவசரமாக தன் தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்.பணத்தை கட்டிவிட்டு தனக்கான அறைக்கு சென்றாள். அந்த அறையில் தங்கி இருக்கும் மற்ற மூன்று பெண்கள் வேலைக்கு சென்றிருப்பதால் அவள் மட்டும் தனியாக இருந்தாள்.​

சற்றுநேரம் தன் நிலையை நினைத்து கண்கலங்கியபடி இருந்தாள், அதற்குள் மற்ற பெண்கள் வந்து விடவும் அவர்களுக்கு தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தன் வேலையை பற்றியும் கூறினாள்.​

அந்த பெண்களில் ஒருத்தி சுதா, “நலமுடன் மருத்துவமனையில் வேலை கிடைப்பதே கஷ்டம் ஆச்சே, நான் பிஎஸ்சி முடிச்சிருக்கேன், ரொம்ப டிரை பண்ணேன். வேலையே கிடைக்கலை. நீ டிப்ளமா தான் படிச்சிருக்கே, எப்படி வேலை கிடைச்சது?” என்றாள்.​

அதற்கு மற்றொருத்தி, “சிபாரிசாக இருக்கும்” என்றாள்.​

“நோ சான்ஸ், அந்த மருத்துவமனையில் சித்தார்த்னு ஒரு ஹான்டஸ்சம் டாக்டர் இருக்கார். அவருக்கு சிபாரிசுனாலே பிடிக்காது. நான் ஆல்ரெடி டிரை பண்ணிட்டேன். எனிவே வாழ்த்துக்கள் நேத்ரா” என்றாள் சுதா.​

சித்தார்த்தின் பெயர் கேட்டதும் நேத்ராவின் முகத்தில் புன்னகை மறைந்து இருள் சூழ்ந்துக் கொண்டது.​

அடுத்த நாள் காலை நேத்ரநயனி அந்த பெரிய ஹாஸ்பிட்டலின் கேட்டருகே நின்று அதிர்ச்சியுடன் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள்.​

பெரிய மருத்துவமனை என்று தெரியும், ஆனால் இத்தனை பெரிய பிரம்மாண்டமான கட்டிடங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.​

வெளி நோயாளிகளை கவனிக்க என்று ஒரு பெரிய கட்டிடம், குழந்தை பேறு, விபத்துக்கான நோயாளிகள், மற்ற நோய்களான இதயநோய்கள், கேன்சர், சிறுநீரக கோளாறு, எலும்பு மற்றும் நரம்பு என அனைத்துக்குமே தனித்தனி கட்டிடங்கள் ஒரு பக்கம் இருக்க, நோயாளிகளுக்கான உணவகம், மற்றவர்களுக்கு தனியாக கேண்டீன், மருந்தகம் என ஒரு குட்டி நகரமே அங்கே இருந்தது. ஷிப்ட் முடிந்து ஆண்களும் பெண்களும் வெளியே வந்துக் கொண்டிருக்க, அடுத்த ஷிப்டிற்கான ஆட்கள் தங்கள் வேலையை பார்க்க உள்ளே சென்று கொண்டிருந்தனர்.​

பரப்பரப்புடன் இயங்கி கொண்டிருந்த அந்த மருத்துவமனையில் எங்கு யாரை சென்று பார்ப்பது என்பதே தெரியாமல் மலைப்பாக இருந்தது. அங்கே ஆட்களை அப்புறபடுத்திக்கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் தன் வேலைக்கான ஆர்டரை நீட்டி, எங்கு சென்று யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டாள்.​

அவளை அந்த செக்யூரிட்டி மேலிருந்து கீழாக பார்த்தான். தொள தொள வென்று லூசாக இருந்த ஒரு காலர்வைத்த பழைய சுடிதாரை மாட்டிக் கொண்டு, பழைய கலர் போன மூக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு நெற்றியில் ஒரு சின்ன ஸ்டிக்கரை தவிர வேறெந்த அலங்காரமும் இல்லாமல் பார்க்க படு சுமாராக இருந்தவளை ஏளனமாக பார்த்தான் அவன்.​

இங்கே வர்ற நோயாளி கூட கொஞ்சம் அழகா வருவாங்க, இந்த பொண்ணு என்ன பஞ்சத்துல அடிப்பட்ட போல இருக்கு என்று நினைத்தவன், அவளை சந்தேகமாக பார்த்து, “உண்மையை சொல்லு, இது உனக்கு வந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரா? இல்லை யாருடையதாவது எடுத்துக்கினு வந்துட்டியா?” என்றான் சந்தேகமாக​

“என்னோடது தான்” என்று ரோஷமாக உரைத்தவள், தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து காண்பித்தாள்.​

“சரி சரி, அந்த பக்கமாக அட்மின் பிளாக் இருக்கு, அங்கே ஜனனினு ஒரு மேடம் இருப்பாங்க, அவங்க கிட்ட இந்த லெட்டரையும் அடையாள அட்டையையும் காட்டுங்க” என்று சொன்னான்.​

நேத்ராவும் அவன் சொன்னபடி சென்று ஜனனியை சந்தித்தாள். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சித்தார்த் சார்கிட்ட ஒரு முறை கன்பார்ம் பண்ணிக்கிட்டு எந்த டிபார்மென்டில் விடணும்னு கேட்டுக்கிறேன்” என்ற ஜனனி, சற்று தயங்கி, “நீங்க மிஸ் ஆர் மிஸஸ்?” என்று கேட்டாள்.​

ஒரு கணம் யோசித்து பின்பு திடமான குரலில், “மிஸ்.நேத்ரநயனி” என்றாள் மெல்லிய குரலில்.​

“ஓகே” என்று விட்டு ஜனனி சித்தார்த்க்கு அழைத்து பேசினாள்.​

அவன் என்ன சொன்னானோ, “என்கூட வாங்க மிஸ்.நேத்ரா” என்று முன்னால் சென்றாள் ஜனனி.​

படபடக்கும் இதயத்தோடு ஜனனியை தொடர்ந்தாள் நேத்ரநயனி. எவ்வளவு கட்டுப்படுத்தியும் இதயதுடிப்பின் வேகம் பந்தய குதிரையின் வேகத்தை விட அதிகமாகி கொண்டே போனது.​

அந்த பகுதியில் நடுநாயகமாக இருந்த பெரிய அறைக்கதவின் வாசலில் நின்றபடி ஜனனி போன் செய்து உள்ளே வருவதற்கான உத்தரவிற்காக காத்திருந்தாள். அந்த அறைக் கதவில் சித்தார்த் அபிமன்யூ சேர்மன் என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கபட்டிருந்த பெயர் பலகையில் அவன் பெயருக்கு பின்னால் MBBS, MS, MD, MBA என்ற பல பட்டங்கள் அவனின் படிப்பை பறைச்சாற்றின.​

அவனுக்கும் அவளுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது, தான் எடுத்த முடிவு சரியே என்று தோன்றியது நேத்ராவுக்கு. ஜனனி இப்போது அறைக்குள் செல்லவும், நேத்ராவும் அவளை பின் தொடர்ந்தாள். அந்த மருத்துவமனை முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது தான் என்றாலும், அவன் இருந்த அறைக்குள் சென்ற போது ஏதோ சுவிசர்லாந்திற்குள் நுழைந்தது போல இருந்தது. அந்த அளவிற்கு ஏசியின் குளுமை அதிகமாக இருந்தது.​

சுழற்நாற்காலியில் அமர்ந்தபடி, மேஜையில் இருந்த தன்னுடைய மடிக்கணினியில் ஏதோ வேலையில் இருந்தான் சித்தார்த் அபிமன்யூ.​

அவனின் வெண்ணிற தேகத்திற்கு அவன் அணிந்திருந்த வெண்ணிற சட்டை மிகவும் அழகாக இருந்தது. மேல் சட்டையில் போடாமல் விட்டிருந்த இரண்டு பட்டன்களின் வழியே தெரிந்த நெஞ்சத்து கரு நிற கேசங்களும், முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்ததால் முழங்கையில் இருந்த முடிகளும் அவன் வெண்ணிறத்துக்கு போட்டியாக தங்கள் இருப்பை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தன.​

அலையலையாய் இருந்த கேசத்தை ஒற்றை கையால் கோதிவிட்டபடி லேப்டாப்பில் பார்வையை பதித்திருந்தான். அவன் மீசையும் தாடியும் கூட அவன் அழகை கூட்டி இருந்தது. அவன் கவனிக்காததால் நேத்ரா தன் கணவனை நிறுத்தி நிதானமாக ரசித்து பார்த்து தன் கண்களில் நிரப்பிக் கொண்டாள்.​

சற்று நேரம் பொறுமையாக காத்திருந்த ஜனனி தனக்கு நேரமாவதால், “டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்​

“யெஸ்” என்ற படி நிமிர்ந்து தன் சாய்வு நாற்காலியில் தன் இருகைகளையும் கோர்த்துக் கொண்டு கைகளின் மேல் தலையை சாய்த்தபடி சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த் அபிமன்யூ​

“சொல்லுங்க ஜனனி” என்றவனின் பார்வை அவள் பின்னால் நின்றிருந்த நேத்ரநயனியின் மேல் நிலைத்திருந்தது.​

அவளை அப்போது தான் பார்ப்பது போல மேலிருந்து கீழாக ஆராய்ச்சி பார்வை பார்த்தான். நேத்ரா சட்டென்று பார்வையை தழைத்துக் கொண்டாள்.​

“சார் இவங்க மிஸ்.நேத்ரநயனி, நீங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுக்க சொன்னீங்களே, இப்போ வேலையில் ஜாயின்ட் பண்ணிக்க வந்திருக்காங்க, எந்த டிபார்ட்மென்ட்ல இவங்களை விடுறது?” என்று கேட்டாள் ஜனனி.​

மற்றதையெல்லாம் பின்னுக்கு தள்ளி, ஒற்றை புருவத்தை உயர்த்தி, “மிஸ்.நேத்ரநயனி?” என்றான் கேள்வியாக.​

“எஸ் சார்” என்றாள் ஜனனி.​

அவனோ ஜனனியை பார்க்காமல் நேத்ராவை அழுத்தமாக பார்த்து, “அப்படியா?” என்றான் ஆச்சரியமாக கேட்பது போல, ஆனால் அவன் குரலில் ஒளிந்திருந்த நக்கல் நேத்ராவுக்கு மட்டுமே புரிந்தது.​

ஆனாலும் முதலாளியாக அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி தானே ஆக வேண்டும் என்று மேலும் கீழுமாக ஆமாம் என்பது தலையை ஆட்டினாள்.​

“ஓகே, மிஸ். எந்த துறையில உங்களுக்கு அனுபவம் இருக்கு” என்றான், ஆனால் அந்த மிஸ்ஸில் மட்டும் அதிக அழுத்தத்தை கூட்டியிருந்தான்.​

“எஎந்த அனுபவமும் இல்லை டாக்டர்” என்றாள் தடுமாறிய குரலில்.​

இப்போது ஜனனியிடம் திரும்பி, “வெளி நோயாளிகளை பார்க்கும் பகுதியில் இருக்கும் முதன்மை நர்சை என் அறைக்கு வரச்சொல்லுங்க ஜனனி” என்று அவளை அனுப்பினான் சித்தார்த்.​

அவள் சென்றதும், “சொல்லுங்க மிஸ், நயனி” என்றான் நக்கலான குரலில்.​

இரண்டாவது முறை அழைத்திருக்கிறான், ஆனால் எல்லாரையும் போல நேத்ரா என்றழைக்காமல் நயனி என்றிருக்கிறான். உள்ளுக்குள் ஒரு பக்கம் குளிர்ந்தாலும் அவனின் குற்றம் சாட்டும் பார்வையில் அனலாகவும் இருந்தது.​

“என்ன பேச்சையே காணோம், நேத்து படபட பட்டாசாக வெடிச்சீங்க, நீங்களே தனியா போய் ஹாஸ்டல்ல தங்கிட்டிங்க போலிருக்கு? இன்னைக்கு என்ன ஆச்சு?” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்து “என்ன டிரஸ் இது? சோள காட்டு பொம்மைக்கு மாட்டிவிட்டா மாதிரி?” என்றான்.​

இப்போது நிமிர்ந்து அவனை கோபத்துடன் பார்த்தவள் சற்றே தான் இருக்கும் இடத்தையும்,. அவன் நிலையையும் உணர்ந்தவளாக குரலை தழைத்து, “என்கிட்ட இருக்கிறதை தான் உடுத்த முடியும் சார்” என்றாள் மெல்லிய குரலில்.​

“ஆனால் இந்த மருத்துவமனையில் வேலை செய்யறதுக்கு ஒரு டிரஸ்ஸிங் சென்ஸ் இருக்கணும். மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸே பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளி போல இருந்தால், இங்கே வர்றவங்க இந்த மருத்துவமனையை பத்தி என்ன நினைப்பாங்க. அதனால உங்க டிரஸ்ஸிங் சென்சை கொஞ்சம் மாத்திக்கோங்க மிஸ்.நயனி” என்றான் அழுத்தமான குரலில்.​

அப்பவும் விடாமல், “எப்படியும் வேலைக்கு ஜாய்ன் ஆன பின்னாடி யுனிபார்ம் தானே சார் போட போறேன்” என்றாள்​

“அப்பவும் பெரிய சைஸ் யுனிபார்ம் மாட்டிட்டு சோள காட்டு பொம்மை போல நிக்காதீங்கனு தான் சொல்றேன், புரியுதா?” என்றான் எரிச்சலான குரலில்.​

அடேங்கப்பா, இவனோட மனைவியாக இருக்கறதை விட நர்ஸ் ஆக வேலைப் பார்ப்பது அதை விட கஷ்டம் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டாள் நேத்ரநயனி.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 08

சித்தார்த் அபிமன்யு நேத்ராவையே அழுத்தமாக பார்த்து கொண்டு இருந்தவன், “நான் புரியுதானு கேட்டேன்! ஒன்னு புரியுதுனு சொல்லு, இல்லை புரியலைனு சொல்லு. இப்படி அமைதியா நின்னுட்டு இருந்தால் எப்போ உன் வாயிலிருந்து வார்த்தைகள் வரும்னு நான் காத்திட்டு இருக்கணுமா? மருத்துவ தொழில்ல ஒவ்வொரு விநாடியும் ரொம்ப முக்கியமானது. உன் மெளனத்துக்கு என்ன அர்த்தம் என்று என்னால் யோசிச்சுட்டு இருக்க முடியாது” என்றான் அழுத்தமான குரலில்.​

அவன் பேச்சில் ஆடிப்போனாள் நேத்ரநயனி. அவசரமாக “புரியுது சார், நல்லா‌ புரியுது” என்றாள்.​

“என்ன புரிஞ்சது?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி​

அதற்குள் ஒரு நடுத்தர வயது பெண்மணி தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் அவசரமாக நடந்து வந்தார்.​

சித்தார்த்திடம் திரும்பி, “சார் கூப்பிட்டிங்களாமே!” என்று கேட்டார்.​

“ஜமுனா! இந்த பெண் இன்னைக்கு தான் வேலையில் சேர்ந்து இருக்காங்க. ஜெனரல் வெளி நோயாளிகள் பிரிவுல இவங்களுக்கு டிரைனிங் கொடுங்க” என்றவன் நேத்ராவிடம் திரும்பி​

“மிஸ். நயனி இவங்க நம்ம மருத்துவமனையில் ரொம்ப வருஷமா வேலை செய்து கொண்டிருக்கும் டாப் நர்ஸ். இவங்களோட இருந்து வேலை கத்துக்கோங்க. ஒரு மாதம் தான் உங்களுக்கு டிரைனிங். அதுக்குள்ள வேலை கத்துக்கிட்டு தனியாக வேலை செய்யணும் புரியுதா?” என்றான்​

“புரியுது சார் புரியுது” என்றாள் அவசரமாக.​

அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் தனக்குள் அடக்கியபடி “ஓகே நீங்க கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு தன் லேப்டாப்பில் கவனத்தை திருப்பினான்.​

ஜமுனா நேத்ராவை ஏற இறங்க ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்னோட வா” என்று அழைத்துச் சென்றாள்.​

அவர்கள் வெளியே வந்ததும், “என்ன படிச்சிருக்க? இதுக்கு முன்னாடி எங்கே வேலை செஞ்சுட்டு இருந்தே?” என்று கேட்டாள்.​

“டிப்ளமா நர்சிங். இதுக்கு முன்னாடி எங்கேயும் வேலை செய்யலை, இங்கே தான் முதல் அனுபவம்” என்றாள் நேத்ரா.​

“எப்போ கோர்ஸ் முடிச்சே?” என்றாள் ஜமுனா மீண்டும்.​

“மூணு வருஷம் ஆயிடுச்சு” என்றாள் நேத்ரா​

“இத்தனை வருஷமா வேலை செய்யாமல் என்ன பண்ணிட்டு இருந்தே? இடையில் இவ்வளவு இடைவெளி என்றால் படிச்சதே மறந்திருப்பியே” என்றாள் ஒரு ஏளன பார்வையுடன்​

“அது வந்து படிப்பை முடிக்கும் போது அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போச்சு, போன வருஷம் தான் இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் அப்பாவுக்கு துணையாக இருந்தேன்” என்றாள்.​

“சரி இப்போ மட்டும் எதுக்கு வேலைக்கு வந்தே?” என்றாள் ஜமுனா ஏளனமாக​

இதற்கு என்னவென்று பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் நேத்ரா.​

“வேறெதுக்கு நம்ம உயிரை எடுக்க தான்” என்று சிரித்தபடி அவர்களருகே வந்தாள் மற்றொரு நர்ஸ்.​

“பாரு வசந்தி, படிச்சது டிப்ளமா! அதுவும் மூணு வருஷத்துக்கு முன்னாடி, அனுபவமும் இல்ல. ஒரு மாசத்துக்குள்ள இந்தம்மா வேலைய கத்துக்கணுமாம். இவங்களுக்காக நமக்கிருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு இவங்களுக்கு நாம கத்து தரணுமாம், கேட்டியா கதைய?”என்று அலுத்துக் கொண்டாள் ஜமுனா.​

“சரி சரி நீ டென்சன் ஆகாத. இந்தாம்மா பொண்ணு! அந்த கேண்டீன்ல சூடா பஜ்ஜி போட்டு இருப்பான், அதை வாங்கிட்டு அப்படியே பிளாஸ்கில் டீ வாங்கிட்டு வா” என்று அதட்டினாள் வசந்தி.​

நேத்ராவிற்கு கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது, அதை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு அவர்களிடமிருந்து பிளாஸ்க்கை வாங்கி கொண்டு சென்றாள்.​

அவள் வாங்கி வந்த பின்பும் ஏதாவது வேலை கொடுத்து ஏவிக் கொண்டே இருந்தனர். “அந்த டேபிளை நகர்த்து, இந்த சேரை நகர்த்து இந்த பைலை அட்மின்ல கொடுத்துட்டு வா” இது போன்ற அட்டென்டர் வேலையையே கொடுத்தனர்.​

சரி அடுத்த நாள் சொல்லி தருவார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்கள் கொடுத்த வேலை எல்லாம் முகம் கோணாமல் செய்து முடித்து அன்று மாலை அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றாள்.​

அறையில் அவளுடன் தங்கியிருந்த சுதா முதல் நாள் வேலை அனுபவத்தை பற்றி கேட்கவும் நேத்ராவுக்கும் இன்றைய தன் நிலையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் காலை செக்யூரிட்டி முதல் சித்தார்த் வரை அவள் ஆடையை கேலி செய்தது, ஜமுனாவும் வசந்தியும் அவளிடம் நடந்து கொண்டது வரை கூறினாள்.​

“ஆமா நேத்ரா இந்த டிரசையும் கண்ணாடியும் மாத்துனு நானே சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் அந்த ஜமுனா உனக்கு வேலை சரியாக சொல்லிக் கொடுக்கலைன்னா டாக்டர் சித்தார்த்திடம் சொல்லிடு. அப்புறம் ஒரு மாசத்தில் வேலை கத்துக்கலைனா அவர் தானே உன்னை கேள்வி கேப்பாரு?” என்றாள் சுதா.​

“இப்போ தானே சேர்ந்தேன், உடனே குறை சொன்னால் நல்லா இருக்காது. ஒருவேளை அவங்க நாளைக்கு சொல்லி கொடுக்கலாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் நேத்ரா.​

அதன்பின் சுதாவுடன் சென்று அத்தியாவசியத்திற்கு இரண்டு செட் சுடிதாரும், வெளியில் சென்றால் அணிவதற்கு இலகுவான இரண்டு புடவையும் எடுத்துக் கொண்டாள். பட்டுப்புடவையை தவிர அவளிடம் இருந்தது எல்லாம் அவளின் அம்மாவின் புடவைகள். அனைத்துமே பழைய மாடல் வகையை சார்ந்தவை.​

அடுத்த நாள் புதிதாக வாங்கிய சுடிதாரை அணிந்து கொண்டு வேலைக்கு சென்றாள். கண்கள் தானாக சித்தார்த் அறையில் சென்று மீண்டது. இப்போது அணிந்திருந்த உடை அவளுக்காக அளவெடுத்து தைத்தது போல இருந்தது. இப்போது அவளைப் பார்த்தால் அவன் என்ன சொல்வானோ? என்று ஆர்வமாக இருந்தது. ஆனால் சித்தார்த் தொடர்ந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்ததால் அவன் அலுவலக அறை பக்கமாகவே இரண்டு நாட்களாக வரவில்லை.​

ஜமுனாவும் வசந்தியும் எப்போதும் பிசியாகவே இருந்தனர். அவளையும் ஒரு இடத்தில் நிற்கவிடாமல் வேறு வேலை சொல்லிக் கொண்டே இருந்தனர். இப்படியே பதினைந்து நாட்கள் கடந்திருக்க நேத்ரா ஊசியை செலுத்த கூட கத்து கொள்ளவில்லை. இன்னும் பதினைந்து நாட்களே இருக்கிறது. சித்தார்த் வேலையை பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வது? அப்போது தெரியாமல் விழிப்பதை விட இப்போதே இந்த ஜமுனா அவளுக்கு எதுவுமே கற்று தரவில்லை என்று சொல்லி விட்டால் குறைந்த பட்சம் சொல்லி தர வேறு ஆளையாவது மாற்றிவிடுவான் என்று யோசித்தவள் சித்தார்த்தை எதிர்பார்த்து தினமும் அவன் அறைப்பக்கம் செல்வதும் பக்கவாட்டில் திரும்பி யாருக்கும் தெரியாமல் அவன் அறையின் கதவின் மேல் புறம் இருக்கும் கண்ணாடி வழியே எட்டி பார்ப்பதுவுமாக இருந்தாள்.​

சித்தார்த்திற்கு ஓய்வு கூட எடுக்க முடியாமல் அதிகப்படியான நிர்வாக பொறுப்புகள் இருந்தன. அதற்கிடையே அறுவை சிகிச்சைகள் வேறு. அவன் அறைக்கோ அல்லது வெளி நோயாளிகளுக்கான பகுதிக்கோ அவனுக்கு செல்ல நேரமில்லை‌. அந்த பகுதிக்கு ஏற்கனவே மற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தி இருந்ததால் மற்ற வேலைகளில் பிசியாக இருந்தான்.​

ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அன்று மாலை சீக்கிரமே வீட்டிற்கு சென்றவன், தன் கைப்பேசியில் இணைக்கப்பட்டிருந்த அவன் அறைக்கான சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்க தொடங்கினான். அவன் அறைக்கு செல்ல முடியாத நாட்களில் இப்படி தன் அறைக்கு யாராவது அத்துமீறி சென்றார்களா என்று பார்ப்பதுண்டு. ஏனென்றால் அனைத்து முக்கிய கோப்புகளும் அங்கு தான் இருக்கும்.​

அப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமாக வீடியோ பதிவை நகர்த்தி பார்க்கும் போது அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. தினமும் நேத்ரா அவன் அறை பக்கமாக காலை மதியம் மாலை என்று மூன்று வேளையும் சென்று வந்தாள். போகும் போது எல்லாம் யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்து பின் தயங்கியபடி அவன் அறையை எட்டிப் பார்த்தாள். அவன் அங்கே இல்லை என்றதும் அவள் முகம் வாடி சிறிது ஏமாற்றத்தோடு செல்வதை பார்த்தான். பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னையறியாமல் உடலில் ஒரு கிளர்ச்சியும் வார்த்தையால் சொல்ல முடியாத ஒரு வித பரவசமும் மனமெங்கும் பரவியது.​

ஆனாலும் மருத்துவமனையின் நிர்வாகியாக யோசித்தது அவன் மூளை. தினமும் மூன்று வேளை என்னை பார்க்க வந்து விட்டால் இவள் எங்ஙனம் வேலை செய்வது? எப்படி வேலையை கற்றுக் கொள்வாள்? என்று எண்ணியபடி உறங்கி போனான்.​

மறுநாள் காலை அவன் நேராக வெளி நோயாளிகளை கவனிக்கும் பிரிவுக்குச் சென்று தனக்கான அறையில் நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். அவன் அங்கே இருப்பது தெரியாமல் நேத்ரா எப்போதும் போல ஜமுனாவிற்கும் வசந்திக்கும் செய்யும் அனைத்து பணிவிடைகளையும் செய்து முடித்தாள்.​

சித்தார்த் இரண்டு முறை எதேச்சையாக வருவது போல வந்து நேத்ரா எங்காவது கண்ணில் தென்படுகிறாளா? என்று பார்த்தான். ஆனால் அவள் அவன் கண்களில் படவே இல்லை. ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய நோயாளிகளை பரிசோதிக்கும் அறைக்கு மீண்டும் சென்று தன் கைப்பேசியில் இருந்த சிசிடிவி கேமராவை ஓடவிட்டான்.​

அப்போது சரியாக நேத்ரா அவனுடைய அறையின் முன்பு தான் நின்றுக் கொண்டு சித்தார்த் இருக்கிறானா? என்று எட்டி பார்த்து கொண்டிருந்தாள்.​

ஒரு புறம் மென் புன்னகை அவன் இதழில் தோன்றி மறைந்தது. மறுபுறம் பல்லை கடித்து கொண்டு “ஜமுனா” என்று கத்தினான்.​

ஜமுனா என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வர, “நேத்ரநயனி என்ன பண்றாங்க? வேலை எல்லாம் கத்துகிட்டாங்களா? அவங்களை அனுப்புங்க!” என்று ஆணையிட்டான்‌.​

அவசரமாக ஜமுனா ஓடிச்சென்று நேத்ராவை பல இடங்களில் தேடி பிறகு சித்தார்த்தின் அலுவலக அறைக்கு எதிரே அவளை கண்டுபிடித்து, “ஏய் எங்கே போய் தொலைஞ்சே? உன்னை டாக்டர் கூப்பிடுறாரு பாரு. சீக்கிரம் போ” என்று சீறினாள்.​

சித்தார்த் தான் அறையில் இல்லையே இவள் எந்த டாக்டரை கூறுகிறாள்? என்று யோசித்தபடி, “யாரு கூப்பிடறது?” என்றாள் நேத்ரா.​

“ஆங் உன் புருஷன் கூப்பிடுறாரு போய் பாரு” என்று நக்கல் செய்தாள் ஜமுனா.​

நீ சொன்னாலும் சொல்லலைனாலும் அவர் என் புருஷன் தான் என்று மனதில் எண்ணி கொண்டு ஓபியை நோக்கி அவசரமாக ஓடினாள் நேத்ரா.​

அவள் சித்தார்த் இருந்த அறைக்குள் செல்லும் போது அவன் நோயாளியை பரிசோதித்துக் கொண்டு இருந்தான். இவளை கண்டதும், “நயனி இவங்களுக்கு இங்கேயே டிடி இஞ்செக்சன் போடுங்க. நடக்க கஷ்டப்படுறாரு” என்றான்.​

நயனியோ திருதிருவென்று விழித்தாள். “என்ன சிலையாகிட்டிங்களா?” என்றான் எரிச்சலாக.​

வெளியே ஓடிச் சென்று ஜமுனாவிடம் கேட்டதற்கு அவளே கொண்டு வருவதாக கூறினாள். நேத்ரா ஜமுனாவுடன் அவள் பின்னாலேயே சென்றாள்.​

ஜமுனாவை கண்ட சித்தார்த் “நீங்க ஏன் கொண்டு வர்றீங்க? அதை நயனிகிட்ட கொடுத்துட்டு போங்க” என்றான் அழுத்தமாக.​

ஜமுனா அந்த ஊசியை நயனியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள். நயனிக்கு கைகள் நடுங்கியது. சித்தார்த் கோபமாக அவளை பார்த்து முறைத்துக் கொண்டே “ம் அவருக்கு ஊசி போடுங்க. வெளியே நிறைய பேர் காத்திட்டு இருக்காங்க” என்றான் கோபத்தை அடக்கியபடி.​

நேத்ரநயனி கைகளில் அந்த ஊசியை நடுக்கத்தோடு நோயாளியின் அருகில் கொண்டு சென்றாள். அவசரமாக எழுந்து அவளருகில் வந்தவன் அவள் கைகளில் இருந்த ஊசியை வாங்கி அவனே அந்த நபருக்கு போட்டு விட்டு மருந்து குறிப்பை எழுதி அனுப்பினான்.​

அந்த நபர் செல்லும் வரை பொறுமையாக இருந்தவன் கத்த ஆரம்பித்து விட்டான். “வந்து இருபது நாள் ஆகுது இன்னும் எதுவும் கத்துக்காமல் என்ன செய்துட்டு இருக்கே” என்றான் கோபமாக.​

“அது வந்து அவங்க எனக்கு சொல்லி தரமாட்டேங்கிறாங்க. அட்டன்டர் வேலை தான் செய்ய சொல்றாங்க” என்றாள் மெல்லிய குரலில்.​

“நீ இங்கே இருந்தால் தானே அவங்க உனக்கு சொல்லித் தரமுடியும்? நீ தான் தினமும் என்னோட அறையே கதினு அங்கேயே பழியாக கிடக்கிறாயே. அவ்வளவு ஆசையா இருந்தால் என் கூடவே வந்து தொலைக்க வேண்டியது தானே” என்றான் எரிச்சலாக.​

“நான் ஒன்னும் உங்களை ஆசையா பார்க்க வரல” என்றாள் ரோஷமாக.​

இந்த பதிலில் அவன் கோபம் இன்னும் எகிறியது. “அப்போ என் அறைக்கு எதுக்கு தினமும் மூணு வேளை பார்த்துட்டு போறே?” என்றான் அவளை கூர்மையாக பார்த்து.​

தான் பார்க்க வந்ததை அவன் தவறாக எடுத்துக் கொண்டதோடு கோபமாக பேசவும் நயனியின் கண்களில் நீர் துளிர்த்தது. “ஜமுனா சிஸ் எனக்கு எந்த வேலையும் சொல்லி தரவில்லை. எதாவது அட்டென்டர் வேலை கொடுத்துட்டே இருக்காங்க‌. அதைப்பற்றி உங்க கிட்ட சொல்லி வேற யார்கிட்டயாவது டிரைனிங்கிற்கு அனுப்ப சொல்லி கேக்கலாம்னு தான் உங்களை தினமும் தேடி வந்தேன்” என்றாள் அழுகையை கட்டுப்படுத்திய குரலில்.​

“நீ என்ன சின்ன குழந்தையா? ஒருத்தர் கையை பிடிச்சு சொல்லி தர? கண் பார்த்தால் கை வேலை செய்ய வேணாமா? அதை விட்டுட்டு புகார் சொல்ல என் அறை வாசலில் காத்திட்டு இருந்தியா? அந்த நேரத்தில் உருப்படியா ஒரு வேலை கற்றிருக்கலாமே? வேறு யாரையும் மாற்றி விட முடியாது. ஜமுனா கிட்ட தான் நீ கத்துக்கணும். இன்னும் பத்து நாள் தான் டைம் உனக்கு. அதுக்குள்ள அடிப்படை விஷயங்களையாவது கற்றுக் கொள்ளணும். இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கிடுவேன்” என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சொல்லி விட்டு செல்பவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் நேத்ரநயனி.​

இந்த வேலையை நம்பி தானே மகளிர் விடுதியில் தங்கி இருக்கிறாள். இவன் இங்கிருந்து அனுப்பி விட்டால் எந்த முன் அனுபவமும் இல்லாமல் எங்கு சென்று வேலை தேடுவாள்? அவளுக்கு யாரை தெரியும்? இவனுக்கு கொஞ்சம் கூட என் மேல் கரிசனமே இல்லையா? கண்ணை கரித்தது நயனிக்கு.​

Epi continuation 👇 👇 👇

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1
Status
Not open for further replies.
Top