சாண்டி, "சரி உன் குடும்பத்தை காப்பாத்த தான் அவங்க சொன்ன போல நடிச்ச அப்படி தானே!" என்று சந்தேகமாக கேட்க, அவளும் அவன் கண்களை எதிர்க்கொண்டு ஆம் என்று தலையாட்டினாள்.
"சரி. அன்னைக்கு வருணுக்கு என்ன ஆச்சு?" என்று மீண்டும் சந்தேகமாக கேட்க, 'அய்யோ! முதல்ல இருந்தா?' என்ற ரேஞ்சில் சோர்வாக அவனை பார்த்தவள் "நிஜமா எனக்கு தெரியாது. நீங்க எத்தனை முறை, எந்த ஆங்கில்ல கேட்டாலும். தெரியாதத தெரியாதுன்னு தான் சொல்ல முடியும்" என்று மெய் வருத்தத்துடன் சொல்லி, விட்டால் அழுது விடுவேன் போல் இருந்தவளை "போதும் விடு டா. இங்க இருந்து எப்படி தப்பிக்கலாம்னு முதல்ல யோசிக்கலாம். அதை விட்டுட்டு அவளையே கேள்விக் கேட்டு சாகடிக்காத, அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம ஏதாவது வழி இருக்கா தேடலாம்" என்று சொல்லி நண்பனிடம் இருந்து தன் காதலியை காப்பாற்றி ஓய்வெடுக்க அனுப்பி வைத்தான் வருண்.
"ஏய்... உன்ன கடத்துனவங்க பார்க்க எப்படி இருந்தாங்க, குறிப்பா உனக்கு இன்ஸ்டிரக்சன் கொடுக்கிறவன் எப்படி இருந்தான் மட்டும் சொல்லிட்டு போ" என்று சென்றவளை நிறுத்தி கேட்க, அவளும் "முக மூடி போட்டுருந்ததால் முகத்தை பார்க்க முடியல, ஆனா எல்லாரும் நல்ல வாட்டா சாட்டமா தெலுங்கு படத்துல வர வில்லன் குரூப் போல இருந்தாங்க. எனக்கு இன்ஸ்ரக்சன் கொடுத்தவன், ஸ்பெஷல் ட்ரைனிங் எடுத்த வில்லன் போல இருந்தான். அப்படியே பெரிய பாறங் கல்லை முழுங்கினா போல இருந்தான்" என்று அவள் சொல்ல, சாண்டிக்கோ எதுவும் உருப்படியா தோன்றவில்லை.
அவளிடம் இருந்து தெரிந்துக் கொண்ட ஒரே ஒரு விசயம் இங்கே சுத்தி இருக்கும் ரகசிய கேமரா மூலம் அவன் இருபத்தி நாலு மணி நேரமும் தங்களை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான் என்பது மட்டும் தெளிவானது. ஆனால் ஏன்? எதற்கு? அப்படி இங்கு என்ன இருக்கிறது? என்று தான் அவனுக்கு எதுவும் புரியவில்லை.
தலை கீழாக டிராவல் பண்ணி வந்ததில் தலை இன்னும் கேராக இருக்க, மாதங்கியைப் பிடித்துக் கொண்டு அறைக்கு சென்றுக் கொண்டிருந்த அதிதி, இடது புற சுவரில் மாட்டப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடியை பார்த்த படி அப்படியே நின்று விட்டாள். அவள் சட்டென்று நின்று விடவும் மாதங்கிக்கு தான் பயம் சூழ்ந்து கொண்டது. "என்னாச்சு அதிதி?" என்று பயத்தில் எழாத குரலில் கேட்க, அவளோ அந்த கண்ணாடியை பார்த்த படி அதன் அருகில் செல்ல, மற்றவர்களும் அவள் ஏதோ கண்டு பிடித்து விட்டாளோ? என்ற ஆவலில் அருகில் வந்தவனர்.
கண்ணாடியில் தன் கையை வைத்து பார்த்தவள் அதில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தபடி "அய்யோ!" என்று அதிர்ந்து தன் முகத்தை தடவி பார்த்தாள். அவள் கத்தலில் இங்கே மாதங்கிக்கு தான் உயிர் இல்லை.
"என்னாச்சு அதிதி?" என்று மீண்டும் நடுங்கிய குரலில் அவள் அருகே சென்று கேட்க, அவளோ "சுத்தி கேமரா வச்சு ஷூட் பண்றாங்க. கொஞ்சம் கூட மேக்கப் இல்லாம என் முகம் எப்படி இருக்கு பாரு? தலை முடி வேற சரியில்ல. காட்டுவாசி போல இருக்கேன்" என்று அவள் சினுங்களாக சொல்ல, அதை கேட்ட விதுரனோ தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டான் என்றாள், வருணோ "அவன் அவன் இங்க என்ன பிரச்சனையில மாட்டி முழி பிதுங்கி போய் நிற்கிறான். அவளுக்கு முடி தான் பிரச்சனையா போச்சு. நைகால சொல்லி ஆர்டர் பண்ணி கொடுக்கிறேன். அந்த ஓரமா போய் வெள்ளை அடிச்சுட்டு வா" என்று நக்கலடித்த படி நகர்ந்து கொள்ள, மாதங்கியும் அருந்ததியும் கூட, தலையசைத்து சிரித்தபடி சென்று விட்டனர்.
எஞ்சி நின்றது சாண்டியும் அதிதியும் மட்டுமே. தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த சாண்டியை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை அவள் சிரித்து வைக்க, அவள் அருகே வந்தவன் குருவி கூடு போல இருந்த அவள் தலை முடியை சரி செய்த படி, "நீ எப்படி இருந்தாலும் அழகா தான் தெரிவ, கேமராவிலையும் நேர்லையும்" என்று சொல்ல, அவன் தன்மையான குரலே அவளுள் மகிழ்ச்சியை உருவாக்கியது.
"சாண்டி, நீ என்கிட்ட பேசுற, அதுவும் சாஃப்ட் ஆஹ். என்மேல இருந்த கோபம் போய்டுச்சா?" என்று பூரிப்பாக கேட்க, அவள் பிரிவே அவன் காதலின் ஆழத்தை அவனுக்கு உணத்தியதே, அதற்கு மேல் சண்டையை இழுத்து பிடிக்க மனம் வருமா என்ன?
"நீ இல்லைனா நான் என்ன ஆவேனு நேத்து ஒரே நாள்ல புரிஞ்சுக்கிட்டேன். நீ இல்லைனா நான் இல்ல. மறுபடியும் உன்ன இழக்க விரும்பல" என்று ஆத்மார்த்தமாக சொன்னபடி அவன் அவளை தன் உயிரில் வைத்து காக்கும் உணர்வில் அணைத்துக் கொள்ள, அவன் அணைப்பின் இறுக்கமே அவன் காதலை அவளுக்கு உணர்த்த, அவளும் மனம் முழுதும் காதலுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
நேத்ரனோ கோபத்தின் உச்சியில் பற்களை கடித்தபடி தன் முன் இருந்த பெரிய டிவியில் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் முன் கன்னத்தை பொத்திய படி நின்றிருந்த மார்க்கோ, 'அவங்க ரெண்டு பேரும் டாய்லெட் டியுப் வழியா தப்பிச்சு போவாங்கனு நான் என்ன கனவா கண்டேன். எல்லா இடமும் கேமரா வச்ச நீ அங்கேயும் வச்சு இருக்கணும்' என்று மனதில் புலம்பிய படி வாங்கிய அடியில் வாய்க்குள் ஆடிக் கொண்டிருந்த பல்லுடன் மல்லுக் காட்டிக் கொண்டிருந்தான்.
அப்போது பணியாள் ஒருவன் நேத்ரன் காதில் கிசு கிசுக்க, அவனும் அதை எதிர் பார்த்தவன் போல் சலிப்பாக தாடியை நீவிய படி தன் வேக எட்டுகளுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அங்கிருந்து வந்தவன் தன் அலுவலக அறையில் தன் இருக்கையில் அமர்ந்து எதிரில் இருந்தவனை தீர்க்கமான பார்வை பார்க்க, அவனுக்கு சற்றும் குறையாத அதே பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தான் நிரல்யன்.
"ஹ்ம்ம்... சொல்லுங்க மிஸ்டர் நிரல்யன், என்ன விசயம்?" என்று நேத்ரன் சாதாரணமாக கேட்டாலும், அவன் கண்களோ திமிராக தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தது.
"நான் நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன் மிஸ்டர் நேத்ரன். கடந்த சில மாதங்களாகவே நம்ம ஊர்ல நிறைய இளைஞர்கள் காணாமல் போய்ட்டு இருக்காங்க, அந்த கேஸ் இப்போ என் கைக்கு தான் வந்திருக்கு" என்று நிரல்யன் சொல்ல, "நானும் அந்த நியூஸ் எல்லாம் கேள்வி பட்டேன். அதை எதுக்கு இப்போ என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க? நான் என்ன பண்ண முடியும்?" என்று கேட்டவன், "இந்த கேஸ் நடத்த ஏதாவது ஃபினான்சியல ஹெல்ப் ஏதும் கேட்டு வந்துருக்கீங்களா?" என்று ஏகத்துக்கும் நக்கலாக கேட்க,
அவன் நக்கலில் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், பொறுமையை கையாண்டு மெலிதாக புன்னகைத்த நிரல்யன், "அரசாங்கம் இன்னும் அந்த நிலமைக்கு போகல, பண உதவியெல்லாம் வேணாம். காணாம போனவங்கள்ல 50% பேர் இந்த கம்பனில வேலை செய்தவங்க" என்று சொல்லி அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.
அதற்கெல்லாம் அசராத நேத்ரனோ, "இந்த விசாரணைக்கு எல்லாம் முன்னாடியே பதில் சொல்லியாச்சு. எங்க சைட்ல இருந்து கம்பிளைண்ட் லெட்டர் கூட கொடுத்து இருக்கோம். எல்லாருமே அவங்க அவங்க சொந்த வேலையா லீவ் போட்டு போன நேரத்துல தான் காணாம போய் இருக்காங்க. கம்பெனிக்கும் அவங்க காணாம போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அவங்களே சைன் பண்ணி கொடுத்த லீவ் லெட்டர் பார்க்கிறீங்களா?" என்று திமிராக பார்த்து கேட்டவன் "ஜோன்" என்று தன் உத்தரவு குரலில் அழைக்க, ஜோனும் சில கோப்புகளை நிரல்யன் முன் வைத்தான்.
அதை குனிந்து கூட பார்க்காத நிரல்யன், நேத்ரனை பார்த்த படியே அந்த கோப்புகளை தன் பின்னால் நின்ற கான்ஸ்டபிளிடம் தூக்கிக் கொடுத்து விட்டு, "கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்" என்று அர்த்தமுள்ள புன்னகை ஒன்றை புரிந்தவன் எழுந்து செல்ல, சென்றவன் முதுகை வெறித்தவன் இதழ்களோ ஆணவமாகத் தான் புன்னகைத்துக் கொண்டது.
வெளியே ஜீப் அருகே வந்த நிரல்யனிடம் "எல்லா டீட்டைல்ஸ்ஷும் பக்காவா இருக்கு சார். நாம தேவை இல்லாம இவரை சந்தேகபட்டு டைம் வேஸ்ட் பண்றோமா?" என்று கேட்க, இல்லை என்று தலையாட்டி சிரித்துக் கொண்ட நிரல்யன், "இப்போ தான் ரொம்ப சரியான ரூட்ல போய்ட்டு இருக்கோம். ஒருத்தன் பக்காவா எல்லாம் கையில வச்சிருக்கான் என்றா ஏதோ ரொம்ப பெரிய தப்பு பண்றானு அர்த்தம்" என்று சொல்லிய படி ஜீப்பில் ஏறியவன் அடுத்து சென்றது காணாமல் போனவர்கள் பலரின் அலைபேசி அழைப்பு துண்டிக்க பட்ட, அந்த காட்டு பகுதிக்கு தான்.
இது நாள் வரை அவன் மூளையை குழப்பிக் கொண்டிருந்த வழக்கு அது. பல ஊரில் இளைஞர்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தனர். சாதாரண மிஸ்ஸிங் கேஸ் என்று நிரல் எண்ணி கொண்டிருக்க, அதில் பலர் ஒரே அலுவலகத்தில் பல்வேறு கிளையில் வேலை பார்ப்பவர்கள் என்ற தகவலே நேத்ரன் மீது சந்தேகத்தை வலுபடுத்தியது.
இத்தனை நாட்கள் இறந்துவிட்டாள் என்று எண்ணிய தங்கை கூட ஏன் கடத்தப் பட்டிருக்க கூடாது? என்ற சந்தேகம் வலுப்பெற்றது என்னவோ வர்ஷினி சொல்லித்தான். தங்கை தீ விபத்தில் உடல் கருகி இறந்து விட்டாள் என்று முழுவதும் பொதிந்து வைக்கப்பட்டிருந்த சடலத்தை தானே கொண்டு வந்தார்கள்.
இப்போது அவனுக்கும் கூட நம்பிக்கை வந்து விட்டது தன் தங்கை உயிருடன் தான் இருக்கிறாள் என்று.
அதிதி, அருந்ததி தப்பி வந்த விசயம் சொன்னதில் இருந்து கழிவறை கூட விட்டு வைக்காமல் சோதனை செய்ய, வெளியே செல்லும் வழி கிடைக்கவில்லை என்றாலும் பல ரகசிய கேமராக்களை கைபற்றி இருந்தனர் சாண்டி அண்ட் கோ'ஸ்.
மாதங்கி, அதிதி பார்த்த கண்ணாடியை சுற்றி சுற்றி ஆராய்ந்து அதில் தன் கையை வைக்க, அதுவோ அவளை மொத்தமாக உள்ளே இழுத்துக் கொண்டது. மற்றவர்கள் ஒவ்வொரு திசையில் தீவிரமாக தேடிக் கொண்டிருந்ததால் அவள் இழுக்கப்பட்டத்தை யாரும் கவனிக்கவில்லை.
கண்ணாடி வழியே உள்ளே இழுக்கபபட்டவள், அந்த கண்ணாடிக்கு மற்றைய புறம் இருந்த இருட்டான அறையில் தான் இப்போது நின்றுக் கொண்டிருந்தாள்.
எப்போதும் பயந்து நடுங்கும் அவள் அதரங்களோ அழுத்தமாக மூடி இருக்க, அறையை சுற்றி கண்களை சுழல விட்டவள் தன் கை சங்கிலியில் இருந்த உருண்டைகளில் ஒன்றை அழுத்த, அவள் முன் கணினி திரையில் தோன்றினான் நேத்ரன்.
அவனை பார்த்ததும், "இந்த கேம்ல அதிதி இல்லனு சொன்னீங்க. இப்போ மறுபடியும் வந்திருக்கா?" என்று கேட்க, அவனோ "ஒரு சின்ன டெக்னிக்கல் ஃபால்ட். ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு. அவளுக்கு வாழ ஆசை இல்ல போல" என்று சொல்லி கோணல் சிரிப்பு சிரிக்க, "உங்களால எப்படி சிரிக்க முடியுது? அவங்க கேமராஸ் கண்டு பிடிச்சு ரிமூவ் பண்ணிட்டு இருக்காங்க" என்று தங்கள் திட்டங்கள் சரிவு பாதையில் செல்வதை அவள் பரிதவிப்பாக சொல்ல, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன்,
"இப்போ தான் கேம் இன்னும் இன்டர்ஸ்ட் ஆஹ் போகுது. பார்க்கலாம், எவ்வளவு தூரம் போறாங்கனு" என்று அவனுக்கே சவாலான பதில் ஒன்றை சொல்லிக் கொண்டவன், "உனக்கு எல்லாம் ஓகே தானே?" என்று கேட்க, "ஹ்ம்ம்.. யாருக்கும் என் மேல எந்த சந்தேகமும் வரல, எல்லாம் அந்த புள்ள பூச்சிய போட்டு நூடுல்ஸ் ஆக்கிட்டு இருக்காங்க. எல்லாம் ஓகே தான். அந்த விதுரன் மட்டும் தான் அப்பப்போ வந்து வழியுறான். எப்படி இருக்கா என் டுவின்?" என்று சலிப்பாக அவள் கேட்க, "ரொம்ப சேஃப் ஆஹ் இருக்கா" என்று சொல்லி, அவன் இருந்த திரையில் வீடியோ ஒன்றை ஓட விட, அதிலோ கை, கால்கள் மட்டுமின்றி வாயும் கட்டப்பட்ட நிலையில், கத்தி கத்தியே சோர்ந்து உடலில் தெம்பே இனி இல்லை என்ற நிலையில் தான் இருந்தாள் மாதங்கி. அவளை அந்த நிலையில் பார்த்த அவள் இரட்டை சகோதரியான சிவாங்கி இதழ்களோ வஞ்சகமாக புன்னகைத்துக் கொள்ள அவன் இணைப்பை துண்டித்தவள், மூளையே இந்த கூட்டத்தில் சேர்ந்ததை ஒரு முறை ஓட்டி பார்த்தது.
பள்ளி காலத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றில் சிறை சென்றவள், இப்போது தான் நான்கு மாதங்கள் முன் தப்பி வந்தாள். அவள் நல்ல நேரமோ? கெட்ட நேரமோ? நேத்ரனிடம் அவனின் இல்லீகல் ஆய்வு ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அவளுக்கும் உலகத்திடம் இருந்து தலை மறைவாக இருக்க வேண்டுமே!
அவன் தன் ஆராய்ச்சிக்காக ஆள் தெரிவு செய்த கொண்டிருந்த போது அவன் கண்ணில் சிக்கிய மாதங்கியை பார்த்து அதிர்ந்து தான் போனான். இருவரும் இரட்டையர்கள் என்று அறிந்துக் கொண்டவன், சிவாங்கியை வைத்து அவன் விளையாட்டை தொடங்கி மொத்த கூட்டத்தையும் உள்ளே இழுத்திருந்தான்.
மாதங்கி போல் நடித்து அனைவரையும் அவள் ஏமாற்ற உருவ ஒற்றுமை அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு தான் மாதங்கி இடத்தில் அவள் அடையாளத்தில் வாழ ஆள் மாறாட்டம் செய்யப்பட்டாள்.
அதன் பிறகு நடக்கும் ஸ்கிரீன் பிளே அனைத்தும் முன்னமே தெரிந்தாலும் பயம், அதிர்ச்சி என்று நடித்து நடித்தே சோர்ந்து போய் விட்டாள் சிவாங்கி. உருவ ஒற்றுமை இருந்தாலும், குணாதிசயங்கள் வேறாக தான் இருந்தது. மாதங்கி இளகிய மனம் கொண்டவள் என்றாள், சிவாங்கியோ இதயம் அற்றவள் என்று தான் சொல்ல வேண்டும்.
'வருண் இறந்து விட்டான்' என்று பெண்கள் இருவரையும் பார்த்து கொள்ள சொல்லி விட்டு சாண்டியும் விதுரனும் கீழே அருந்ததியை விசாரிக்க வந்து விட, வருணிற்கு கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவனிடத்தில் அசைவு ஏற்படுவதை பார்த்த சிவாங்கி அதிதியை அழைத்துக் கொண்டு கீழே வந்திருந்தாள். அப்போது தானே நேத்ரனால் அவர்கள் திட்ட படி வருணை அங்கிருந்து அப்புற படுத்த முடியும்.
அடுத்து சமையலறையில் தலையில் இரத்தம் சொட்ட சொட்ட வருண் நின்றான் என்று சொல்லியதெல்லம் அவள் நாடகம் தான்.
மகள் காதல் விவகாரத்தில் கோபமாக இருந்த விஸ்வநாதன், நேத்ரன் தெரிவு செய்த ஆளில் சாண்டியும் ஒருவன் என்று தெரிந்து கொண்ட பிறகு மொத்தமாக அவனுக்கு முடிவு கட்ட திட்டம் தீட்டியே, தன் மகளை மட்டும் காக்கும் பொருட்டு அவளை கடத்தியிருந்தாலும், இப்போது அவளை வெளியே விட்டால், காதல் மயக்கத்தில் அவனை காப்பாற்ற தங்களை காட்டிக் கொடுத்து விடுவாள் என்று அடைத்து வைத்திருக்க, அவள் கெட்ட காலம் மீண்டும் வந்து மாட்டிக் கொண்டாள்.
நேத்ரனின் அடுத்த திட்டப்படி அருந்ததியை கடத்த வழி செய்து கொடுக்கவே அந்த சுரங்க பகுதிக்கு சென்று எல்லாரையும் அங்கே வர வைத்து மற்றவர்களின் கவனம் சிதறிய நேரம் அருந்ததியை கடத்தி செல்ல வகை செய்து கொடுத்தாள்.
அதிதி, அருந்ததி கட்டி வைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்தில் தான் மாதங்கி கட்டி வைக்க பட்டிருந்தாள். அவளும் அழுது அழுது ஓய்ந்தவள் இன்று தப்பிக்க முயன்ற போது, மீண்டும் அந்த அரக்கர்கள் கையில் சிக்கி கொண்டாள்.
எல்லாவற்றையும் யோசித்தவள், தன் கண்ணில் இருந்து ஐ- லென்ஸை எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க, இதை நேத்ரன் கொடுத்த போது "என் ஐ பவர் நல்லா தான் இருக்கு, எனக்கு எதுக்கு லென்ஸ?" என்று கேட்டவளிடம் "இது நீ பார்க்கிறதுக்கு இல்ல, நாங்க பார்க்கிறதுக்காக" என்று சொல்லி அவளிடம் அவன் அதை கொடுத்ததையும் யோசித்தவள், அதிலிருந்த கேமராவை ஆஃப் செய்து விட்டு திரும்ப, அங்கே சுவரில் சாய்ந்து பேண்ட் பாக்கெட்டில் கை விட்டப் படி அவளை தான் மெச்சுதல் பார்வை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான் சாண்டி.
அவள் நடிப்பை பாராட்டும் விதமாக சூப்பர் என இடது புருவத்தை உயர்த்தி, செய்கை செய்ய, அவனை வேண்டா வெறுப்பாக பார்த்தவள் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனிக்க, சிரித்த படி அவள் தோளில் கைப்போட்டவன் அவளுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.