ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இவர்களது கார் ஏன் நிற்க வேண்டும்? ஏன் இவர்கள் இந்த வீட்டிற்கு வர வேண்டும்? ஏன் இவர்களது உயிர் நண்பன் இறந்துக்கிடக்க வேண்டும்? என்று கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக சாண்டியின் மனதில் தோன்ற, கோபத்தில் எழுந்தவன், அருந்ததியின் மகன் என்று கூறப்பட்டவரை அடிக்கச் சென்றான்.

"யார்டா நீங்க எல்லாம்? உண்மையை சொல்லு? இங்க என்ன நடக்குது? அப்படி சாகுறாங்கனா? நீங்க இரண்டு பேரு மட்டும் எப்படி உயிரோட இருக்கீங்க? சொல்லு? என்றவன் அவரை அடிப்பதற்காக கைகளை ஓங்க, அவனைத் தடுத்து நிறுத்தியிருந்தான் விதுரன்.

கீழே நடக்கின்ற சப்தம் கேட்டு, அதிதியும், மாதாங்கியும் விரைந்து கீழே இறங்கியிருக்க, சாண்டில்யனின் ஆத்திரம் மட்டும் குறைந்தபாடில்லை.

"என்ன விடுடா விது. இவங்களை சும்மா விடக்கூடாது. இதோ இந்த கிழவி அருந்ததி, நம்மளை வேணும்னே சிக்க வெச்சுருக்கு." என்றான் கத்தியபடி.

"நான் தான் உங்க கையை பிடிச்சு கூப்பிட்டு வந்த மாதிரி பேசுற? நீங்க தான் இந்த வீட்டை தேடி வந்தீங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை." என்று அருந்ததி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு கூற,

"பார்த்தியாடா இந்த கிழவி பேசுறது பார்த்தியா? இவளை..." என்றவன் அருந்ததியின் கழுத்தை நெறிப்பதற்காக போக, அவனது கோபத்தைக் கண்டு அச்சமுற்ற அருந்ததியோ, திடுக்கிட்டு இரண்டு அடி பின்னோக்கி நகர, இருவருக்கும் நடுவே வந்து நின்றுக் கொண்டாள் அதிதி.

"சாண்டி... அமைதியா இருக்கியா? இனி என்ன பண்ணலாம்னு யோசிடா. இங்க இருந்து நம்ம உயிரோட வெளியே போகணும். அப்புறம் தான் மத்தது எல்லாம் யோசிக்கணும்." என்றவள் கூறும்போதே அவளது கண்களில் அச்சம் அப்பட்டமாக தெரிந்தது. மேலும் அழுது சிவந்திருந்த அவளது கண்களைக் காணும் போதே இவனுக்கும் வலித்தது.

அவளது கண்ணீரில் நிதானித்தவன் தன் நண்பர்கள் மூவரையும் பார்த்தான். பேயரைந்தார் போல மிரட்சியுடன் நிற்பவர்களை காணும் போதே அவனுக்கு பாவமாக இருந்தது. முதலில் இவர்களை இங்கிருந்து வெளியே பத்திரமாக அனுப்ப வேண்டும் என்று நினைத்தவன் அமைதியானான்.

"ஓகே நான் கோபப்படலை. ஆனால் இதுங்க இரண்டும் முழிக்கும் முழியே சரியில்லை." என்றவன் அருந்ததியையும், அவனது மகனையும் முறைக்க, அருந்ததியோ, திருதிருவென முழித்தாள்.

"ஓகே சாண்டி அடுத்து நம்ம என்ன பண்ண போறோம்? நம்ம வருணுக்கு தான் இப்படி நடந்திடுச்சு. இங்க நடக்குற மர்மத்தை பார்க்கும் போது, நாம எல்லாருமே இரத்தம் கக்கி தான் சாவோமா?" மிரட்சி கலந்த குரலில் விதுரன் கேட்ட நொடி,

"அய்யய்யோ பெருமாளே. அவ்ளோதானா? நாங்க எல்லாருமே சாகப் போறாமா?" என்று பதட்டத்துடன் மாதங்கி கூற, அவளை சலிப்பாக பார்த்தான் சாண்டில்யன்.

"கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? உங்க எல்லாரையும் பத்திரமா கொண்டு போறது என்னோட கடமை." என்றவன் நெற்றியை நீவியபடி கூற, சட்டென்று வருணின் நினைவு தோன்ற,

"ஒரு நிமிசம், நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? அப்போ அங்க வருண் தனியா இருக்கானா?" என்றவன் பதட்டம் குறையாது கேட்க, பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழித்தனர்.

"சத்தம் கேட்டு தான் பயத்துல வந்து பார்த்தோம். அவன் என்ன ஓடியா போகப் போறான். அவன் தான் நம்மளை விட்டு போயிட்டானே?" என்று விரக்தியில் அதிதி கூற, அவளை முறைத்த சாண்டில்யனோ,

"விதுரா இதுகளை பார்த்துக்கோ." என்று அருந்ததியையும், அவனது மகனையும் கண் காட்டி விட்டு விரைந்து மாடியில் ஏறினான். அவன் பின்னே அதிதி மற்றும் மாதங்கியும் விரைந்து செல்ல, கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்ற சாண்டில்யனோ, அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அடுத்தடுத்து வந்த அதிதி மற்றும் மாதங்கியும் வாயடைத்துப் போயினர்.

" அய்யய்யோ,இவன் எங்க போனான் சாண்டி?" என்று மாதங்கி பதட்டம் சற்றும் விலகாமல் கேட்க, அதிதியோ வாயைப் பொத்திக் கொண்டு பயத்தில் மௌனமாக நிற்க, சாண்டில்யனோ மொத்த குழப்பத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பதை போல் அதிர்ச்சியில் செய்வதறியாது சிலையென நின்றான்.

ஒரு மனிதன் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்க இயலும்? பிணமாக கிடந்தவன் எழுந்தா சென்றிருக்க முடியும்? மர்ம வீட்டினுள் நடக்கும் தொடர் மர்மத்தில் உறைந்து போய் நின்றவனது முகம் முழுவதும் குப்பென்று வியர்த்திருந்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் – 4


உறைந்த நிலையில் இருந்து முதலில் மீண்டது என்னவோ சாண்டி தான், பக்கவாட்டில் திரும்பி பார்க்க விழிகள் வெளியே வந்து விழுந்து விடும் வண்ணம் நின்றிருந்தனர் அதிதியும் மாதங்கியும்.

ஆண்மகன் தனக்கே பதறுகிறது என்று இவர்களின் நிலை புரிந்தவனாக, "லூசுங்களா! அவன் எங்க போக போறான். கீழே இருக்க அந்த ரெண்டு பேரும் ஏதோ கேம் விளையாடுற மாதிரி எனக்கு தோணுது. கீழே போய் அதை கண்டுபிடிக்கலாம்" என்று அவர்களை முன்னே அனுப்பி மீண்டும் அறையை நோட்டமிட்டான்.

வருண் அங்கே இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. எப்படி இது சாத்தியம் என்று அந்த அறையின் பால்கனியிலும் பார்த்தான் அங்கேயும் அவன் இல்லாமல் போக மனதில் பதற்றம் இருந்தாலும் தன் நண்பர்களுக்காக முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி கீழே சென்றான்.

அவன் வரும் முன்னரே அதிதியும் மாதங்கியும் மாற்றி மாற்றி பயத்தில் உளற அங்கிருப்பவர்களுக்கு ஒன்று புரிந்தது, வருணின் உடலை காணவில்லை. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று விதுரன் குழம்ப, அருந்ததியும் அவரின் மகன் என்று சொல்லப்பட்டவனும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்த விதுரனுக்கு சாண்டி சொன்னது போல் இவர்களிடம் ஏதோ மர்மம் ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுக்கொண்டான்.
அந்த நேரம் சாண்டியும் வந்துவிட மெதுவாக அவன் அருகே சென்ற விதுரன் தன் மனதில் இருப்பதை அவனுக்கு மட்டும் கேட்டும் குரலில் கூற அவர்களை எரித்து விடுவது போல் பார்த்தான்.

அவர்களின் முன் போய், "இங்க பாருங்க என் பொறுமைக்கும் ஒரு அளவு தான். நீங்க எதையோ மறைக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரியும். அது என்னனு நீங்களே சொல்லிட்டா நல்லது. இருக்கிற கோவத்துல உங்களை கொன்றுவேன்" என்று மிருகமாய் அவன் கர்ஜிக்க அந்த நடுத்தர வயதுடையவர் ஏதோ கூற வர அருந்ததி அவரை பார்த்த பார்வையில் அப்படியே வாயை மூடிக்கொண்டார்.

"ஆக ரெண்டு பேரும் சொல்லமாட்டீங்க அப்படி தானே!" என்ற சாண்டியிடம்,
"இங்க பாருப்பா! இந்த கொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸுக்கு தான கால் பண்ணனும் நானே பண்ணுறேன்" என்று அருந்ததி பேச, அவரை ஆழ்ந்து பார்த்தான் சாண்டி.

அவனது போனை எடுத்தவன் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று நிரல்யனுக்கு அழைக்க அவனோ முக்கியமான இன்வெஸ்டிகேசினில் இருந்ததால் அலைபேசியை எடுக்கவில்லை.

வேகமாக அருந்ததியின் மகன் சாண்டியை தள்ளி போனை பறிக்க, விதுரன் ஓடி போய் அவரை இழுக்க, ஒரு தள்ளுமுள்ளு அங்கே நடக்க மேலே ஏதோ 'டமார்' என்று சத்தம் கேட்டது.

அனைவரும் அப்படியே நிற்க மீண்டும் ஒரு சத்தம், பயத்தில் அதிதியும் மாதங்கியும் உறைந்து போயிருக்க, அதே நிலை தான் ஆடவர்கள் இருவருக்கும். இருப்பினும் முகத்தில் எதையும் காட்டாது, கையில் இருப்பவனை கிடுக்குபிடி போட்ட விதுரன், "உங்களை தவிர இங்க வேற யாரு இருக்காங்க? இப்போ சொல்றியா இல்லை உன்னை நானே கொன்றுவேன்" என்று மிரட்ட,
பாக்கெட்டில் இருந்த சிறு கத்தியை எடுத்து விதுரனின் கையில் கோடு போட்டு, "நான் உன்கிட்ட சொன்னாலும் செத்து தான் போவேன். இப்படி தினம் தினம் பயத்தில் வாழ நானே எனக்கு முடிவு கட்டிக்கிறேன்" என்று தாறுமாறாக கழுத்தை அறுத்துக்கொண்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இது எல்லாம் முடிந்து விட அதிதி பயத்தில் என்ன செய்கிறாள்? என்று தெரியாது அங்கும் இங்கும் ஓடி கடைசியாக வெளியே செல்லலாம் என்று வாசல் கதவை தொட, அடுத்த நொடி பத்தடிக்கு தூக்கி எறியப்பட்டாள்.

என்ன இங்கு நடக்கிறது என்று யாருக்கும் புரியாத அளவிற்கு அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேற அனைவரையும் பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. அவளை நெருங்க அத்தனை பயம் இருந்தாலும் அவள் தன் உயிரானவள் என்பதால் அவளிடம் சென்றான். அவளை சோதித்து அவளுக்கு ஏதாவது என்றால் தன்னால் தாங்க முடியுமா என்று பலவாறு யோசித்தான்.

முடிந்ததை யோசிக்கும் தருணம் இது இல்லை என்று நிகழ்வுக்கு வந்த சாண்டி அதிதியின் கழுத்தில் நாடியை பார்க்க அது துடித்து அவளது இருப்பை காட்டியது. அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது.

"விது நீ இந்த கிழவியை அந்த சேரில் கட்டிப்போடு நான் வந்து விசாரிக்கிற விதத்தில் விசாரிக்கிறேன்" என்றதும் விதுரன் அவன் சொன்னதை செய்ய ஆரம்பித்தான்.

அருந்ததியும் அவனது இழுப்பிற்கு சென்றாரே தவிர எந்த வித மறுப்பும் காட்டவில்லை, 'இவரிடம் தான் தங்கள் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது' என்று அறிந்தவர்கள் இனி ஒவ்வொரு அடியும் சற்று பாதுகாப்பாக தான் எடுத்து வைக்க வேண்டும் என்பதை அதிதியின் நிலையில் அறிந்துக் கொண்டனர்.

அதிதி அருகே மாதங்கி சத்தம் வராமல் அழுதுக்கொண்டு இருக்க, அவள் கையை பிடித்து, "மாது இங்க நடக்கிறது எல்லாம் பார்த்தால் பயமா தான் இருக்கும். என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல இப்படி ஆளாளுக்கு ஏதாவது பண்ணா சேதாரம் நமக்கு தான். அவளுக்கு ஒன்னும் இல்லை மூச்சு இருக்கு, பயத்துல மயங்கிட்டா. கிச்சனில் இருந்து தண்ணி எடுத்து வா, அப்படியே சாப்பிட ஏதாவது இருந்தால் கொண்டு வா" என்றான்.

உயிர் கொல்லும் பயம் மனதில் இருந்தாலும் தோழியின் நிலைக்கண்டவளுக்கு அவளை எழுப்ப வேண்டும் என்பதே மனதில் ஓட, ஒரு உத்வேகத்துடன் உள்ளே சென்றாள்.
அதிதியின் கை கால் என்று பரபரவென தேய்த்து, அவளது கன்னத்தை தட்டி எழுப்பினான்.

அதிதி மெதுவாக கண்களை திறந்து எதிரே இருப்பவனை பார்த்தாள். வேகமாக எழுந்து அவனை இறுக்கி அணைத்து, "சாண்டி எனக்கு ரொம்ப பயமா இருக்கு இங்கு என்னமோ இருக்கு. நம்ப இங்க இருந்து இப்பவே போகணும். நம்ப உயிரோட இருக்கணும்ன்னா இங்க இருந்து கிளம்பனும்" என்று அவள் நிதானமின்றி கத்த அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தான்.

என்ன சொல்லி அவனும் அவளை சமாதானம் செய்வான், அவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில் அவன் எப்படி அவளுக்கு தைரியம் அளிப்பான்.
"அதி இங்க பாரு நம்ப ஏதோ ஒரு ட்ராப்பில் மாட்டிருக்கோம். நம்ப கூட வந்த வருண் உயிரோட இல்லை, கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வர பேசிட்டு இருந்த ஆளு இப்போ செத்துட்டான்.

நீ வெளியே போக ட்ரை பண்ணி பறந்து வந்து விழுந்திருக்க. எனக்கு நடக்கிற எதுவும் புரியல. கொஞ்சம் டைம் கொடு! ஏதாவது பண்ணி இந்த இடத்தில் இருந்து தப்பிக்கலாம். அதுக்கு நம்ப எல்லாரும் சேர்ந்து இருக்கனும் இப்படி ஆளாளுக்கு ஒன்னு பண்ணா ப்ரோப்லேம் ஒர்ஸ்ட் ஆகும்"

"நீ சொல்லுறது எல்லாம் புரியது ஆனால் எனக்கு பயமா இருக்கு சாண்டி. வருண் செத்துட்டான் ஆனால் இப்போ அவனோட பாடியை காணோம். கதவை தொட்டால் ஷாக் அடிக்குது எனக்கு இங்க ஏதோ பாரநோர்மல் ஆக்ட்டிவிட்டி நடக்கற மாதிரி இருக்கு. நம்ப கவனமா இல்லைன்னா கண்டிப்பா நம்ப உயிரோட இங்க இருந்து போகமாட்டோம்."

"எனக்கும் அதே டவுட் தான். நம்ப எல்லா கேள்விக்கும் அந்த கிழவிகிட்ட பதில் இருக்கு. வா" என்று அவளை எழுப்ப பறந்து விழுந்ததில் கை கால்கள் எல்லாம் ரத்தம் கட்டியிருக்க மெதுவாக அவன் பின் சென்றாள்.

சமையலறையில் சாப்பிட உணவு தேடியவளுக்கு பிரட் பிஸ்கட் பால் பாட்டில் குளிர்பானம் என்று கிடைக்க கையிக்கு கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவளுக்கு யாரோ தன்னை உற்று பார்ப்பது போல திரும்பிப்பார்க்க அங்கே இருந்ததை கண்டு காட்டுக்கத்து கத்தினாள் மாதங்கி.

மூவரும் அவளது சத்தத்தில் அடித்து பிடித்து உள்ளே செல்ல அங்கு மூர்ச்சை ஆகிருந்தாள் மாதங்கி. சிதறி கிடந்த பொருட்களை எல்லாம் ஒதுக்கி அவளிடம் சென்றான் சாண்டி, பாட்டிலில்இருந்த தண்ணீரை அவள் மேல் தெளிக்க கண் விழித்து பின்னே பார்க்க அவள் பார்த்த விஷயம் அங்கே இல்லாமல் போக அவள் மனம் தாறுமாறாக துடித்து மூச்சுக்கு ஏங்கியது.

அவளை சற்று ஆசுவாசப்படுத்தி நடந்ததை கேட்க, "நான் தண்ணி எடுத்துட்டு சாப்பிட ஏதாவது இருக்கானு தேடுனேன். ஒரு கப்போர்டுல நெறய பிஸ்கட் பிரட் ட்ரிங்க்ஸ்ன்னு இருந்துச்சு, எல்லாத்தையும் எடுத்துட்டு வெளியே வரும் போது யாரோ என்னையே பார்க்கிற மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தால் வாயில் ரத்தம் உறைந்த நிலையில் வருண் அங்க நின்னுட்டு இருந்தான். அவனை பார்த்து பயத்துல கத்தினேன்.

அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல கண்ணை முழிக்கும் போது என்னை சுத்தி நீங்க எல்லாரும் நின்னுட்டு இருந்திங்க. அவன் நின்ன இடத்தை பார்த்தால் அவனை காணோம். எனக்கு பயமா இருக்கு இங்க என்னமோ இருக்கு" என்று அவள் மீண்டும் பதற்றமாக அவளை கைவளைவிற்குள் கொண்டு வந்தான் விதுரன்.

அவனது செய்கையில் அதிர்ந்து அவனை பார்த்தாள் மாதங்கி.
"இங்க இருந்து உன்னை பத்திரமா வெளியே கூட்டிட்டு போவேன் என் உயிரை கொடுத்தாவது. நீ பயப்படாமல் இரு இப்போ"

தலையை ஆட்டியவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் சாண்டியிடம் திரும்பி, "இனி யாரும் தனியாக எங்கேயும் போக வேண்டாம். எல்லாரும் ஒன்னாவே போகலாம். நம்ப சேர்ந்து இருக்கிறது தான் பாதுகாப்பு" என்று அவன் சொல்ல சாண்டிக்கும் அதுதான் சரியெனப்பட்டது.

அனைவரும் சேர்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தார்கள்.
வெளியே வந்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக இறந்து கிடந்த அருந்ததியின் மகன் என்ற அடையாளத்துடன் வந்தவனின் உடல் காணாமல் போய் இருக்க, "எங்கடா அவன்?" என்று சாண்டி பதற அதே பதட்டம் தான் அனைவருக்கும்.

********************************

அப்போது தான் தனது விசாரணை முடிந்திருக்க, தனது காதல் மனைவியிடம் பேச அலைபேசியை எடுத்தவனின் கண்களில் பட்டது சாண்டியின் அழைப்பு பல்வேறு யோசனையுடன் அவன் சாண்டிக்கு அழைக்க அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று கணிணியின் குரல் பதிலளிக்க தோளைக்குலுக்கி அமிர்தாவிற்கு அழைத்தான்.

"ஹே பொண்ணு ! சாப்டியா?"
"சாப்பிட்டேன். நீங்க சாப்பிட வீட்டுக்கு வருவீங்களா?"
"இல்லை கொஞ்சம் வேலை இருக்கு அதை சொல்ல தான் கூப்பிட்டேன். ஆமாம் ஏன் உன் வாய்ஸ் ரொம்ப டல்லா இருக்கு?"
பணியில் இருப்பவனிடம் எதையும் சொல்ல விருப்பமில்லாதவள், "கொஞ்சம் தலைவலி நிரல் தூங்கி எழுந்தா சரி ஆகிடும். நீங்க டைமுக்கு சாப்பிடுங்க. பை" என்று வைத்து விட சாண்டி அழைத்ததை சொல்லாமலே வைத்துவிட்டான்.

இந்த கேஸ் என்ன ரொம்ப சுத்தவிடுது தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் எப்படி இதை முடிக்க போறேனோ? என்று நினைத்தவன் கையில் இருந்த ஃபைலை படிக்க ஆரம்பிருந்தான்.

*******************************

"ஏய் கிழவி! இவன் உன் பையன்னு எதுக்கு பொய் சொன்ன?"
"ஹா ஹா! கண்டுபிடிச்சுட்டியா?"
அவரது சிரிப்பில் கடுப்பானவன், "இங்க பாரு நீ என்னை ரொம்ப சோதிக்கிற. இங்க இருந்து எப்படி வெளியே போகிறது? அதை மட்டும் சொல்லு "

"உள்ள வருவது மட்டும் தான் நம்ப கையில் இருக்கு, வெளியே போவது எல்லாம்..... " என்று மீதியை சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.

"என்னை நீ கொலைகாரனா மாத்தாமல் விட மாட்ட போல" என்று அவர் கழுத்தை நெறிக்க செல்ல, மாடியில் ஏதோ சரிந்து விழுவதும் தூக்கி எரியும் சத்தமாக அந்த வீடே அதிர்ந்தது.
அருந்ததியோ எந்த வித பயமும் இல்லாமல் அமர்ந்திருப்பதை பார்த்த மாதங்கி, "நீ நிஜமா மனுஷி தானா? எனக்கு உன்மேல சந்தேகமா இருக்கு?"

"ஹா ஹா! சீக்கிரமா நீங்களே தெரிஞ்சுப்பீங்க" என்றார்.
எவ்வளவு கேட்டும் வாயை திறக்காத அருந்ததி வெளியே பார்க்க, சூரியன் அஸ்தமித்து கொண்டிருக்க கட்டியிருந்த கைகளை விடுவித்து மாடிக்கு செல்ல அவரை துரத்தி நால்வரும் மேலே சென்றனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சியை அவர்களாலே நம்ப முடியாமல் திணறி போய்விட்டனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

மாடிக்கு விரைந்த அனைவரின் இமைகளும் அதிர்ச்சியில் உறைய கருவிழிகள் விரிய நின்றனர். முதல் தளத்திற்கு செல்லும் கடைசி படியில் அமர்ந்திருந்தான் வருண். அவன் தலையை அவனின் இருகரங்கள் முட்டுக்கொடுத்திருக்க கரங்களை அவன் முழங்கால்கள் முட்டுக்கொடுத்திருந்தன. அவனை கண்ட நொடி அதிர்ந்து நின்ற சாண்டி பின் தன்னை சுதாரித்துக்கொண்டு அவனை நெருங்கினான்.

அதே நேரம்,
“இந்த செத்துப்போன வருண் வேற அடிக்கடி நம்ப கண்ணுல மட்டும் பட்டு பயமுறுத்துறானே!? பக்கிப் பைய சாவடிக்குறானே!” என்று சத்தமாக முணுமுணுத்தாள் மாதங்கி.

அவளை பார்த்து முறைத்த அதிதியோ, “அடியே இப்ப எல்லார் கண்ணுக்குமே தெரிஞ்சிட்டான்.. புலம்பாம அமைதியா இரு.”
“அப்ப எல்லார்க்கும் தெரியிறானா?! அப்பாடா!!”

இவர்கள் சம்பாஷனைகள் ஓர்புறம் நடக்க, சாண்டியோ வருணை நெருங்கினான்.
“மச்சான்...” விதுரனும் அவனை பின்பற்றி அருகே வந்து வருணை அழைத்தான்.

அவ்வளவு நேரம் கவிழ்ந்திருந்த வருணின் தலை நிமிரத் தொடங்கியதுமே அதிதியும் மாதங்கியும் கைகளால் முகங்களை மூடிக் கொண்டனர்.
தைரியமாக நின்றிருந்த ஆண்களுக்கும் கூட பயம்தான் இருந்தாலும் சூழ்நிலை கருதி தைரியமாக நின்றிருந்தனர். விதுரன் கைகளில் நடுக்கத்தை கண்ட சாண்டி அவன் கரத்தை இறுகபற்றி அவனை சமன் படுத்தினான்.

இருவரும் வருணையே பார்த்திருக்க பெண்களிருவரும் கைகளினால் முகத்தினை மூடியபடியே விரல்களின் இடைவெளியினூடு அவனையே பார்த்திருந்தனர்.
நால்வரின் மூச்சையும் பயத்திலும் பதற்றத்திலும் எகிற வைத்துவிட்டே தலையை நிமிர்த்தினான் வருண்.

அவனைக் கண்ட அனைவரும் மேலும் ஒருமுறை அதிர்ந்தனர். ஆம் வாயில் இரத்தம் வடிய இறந்து கிடந்தவன், இப்பொழுது எந்தவித காயமோ இரத்தக்கறையோ இல்லமால் பழைய வருணாக அமர்ந்திருந்தான்.

இவர்களை கண்டவுடன் இப்பொழுது வருண் அதிர்ந்து நின்றான். அவன் விழிகளால் ஒவ்வொருவராக ஆராய்ச்சியாய்ப் பார்த்தவன், ‘எப்படியும் இப்பவும் இவனுங்களுக்கு நான் தெரியப்போறது இல்லை!’ என்று சத்தமாக புலம்பியவன் மீண்டும் படியிலேயே அமர்ந்தான்.

அவன் கூற்றில் அந்த பதற்றத்திலும் நால்வரும் நகைத்தனர். “டேய் நீ எங்க கண்ணுக்கு நல்லாவே தெரியிற டா...” என்றான் சாண்டி.
“எதே! தெரியிறனா!!?? நானும் காலையில இருந்து உங்க முன்னாடி முன்னாடி வரேன் ஒருத்தர் கூட என்னை பார்க்கலை...”

“என்னடா சொல்ற காலையில இருந்தா?? காலையில என்ன நடந்ததுன்னு தெரிஞ்சு தான் பேசுறியா நீ??” என்றபடியே சாண்டி அவன் தோள்களில் கை போட்டான். அவன் மனிதன்தானா என்ற சோதனை போலும்.

இதனை உணர்ந்த வருண் அவனை ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு, “என்னடா போலிஸ் மச்சான் சோதனை பண்றியா??!” என்று வம்பிழுத்தான்.

அவன் கண்டுகொண்டதை நினைத்து ஓர் அசட்டு சிரிப்பை அசால்டாய் உதிர்த்தான் சாண்டி. “கோவிச்சுக்காத மச்சான்.. காலையில இருந்து நாங்க பட்ட பாடு அப்படி..” என்று பெருமூச்சு விட்டான் விதுரன்.

“தெரியும் டா நான்தான் உங்களுக்கு தெரியலை... பட் ஐ ஆம் வாட்சிங் யூ! துபுச்சுக்கு துபுச்சுக்கு பிக் பாஸ்!” என்று அங்கிருந்த சூழலை இலகுவாக்கினான் வருண். இது தான் வருண். அவன் எங்கிருந்தாலும் அங்கு கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.

அனைவரும் அவனை முறைக்க முயன்று தோற்று சத்தமாக சிரித்தனர். அவர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தவன் சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு மாதங்கியைப் பார்த்தான். அவளும் அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவனை பார்த்தாள். அவன் பார்வை எவ்வித சலனமும் இன்றி அவளையே தொடர அவளுக்கு வியர்க்க தொடங்கியது.

மற்றவர்களும் அவர்களையே ஆராய்ச்சியாய் பார்த்தனர். திடிரென வருண் அவளை நோக்கிச்சென்று அவள் கரத்தை பற்றி இழுத்தான், “ஏன் இப்படி பண்ண மாது?” என்றான்.
அவன் கேள்வியில் குழம்பியவள், “நானா? நான் என்ன பண்ணேன் வருண்?” என்றாள்.

“நடிக்காத.. நீ இப்படி பண்ணுவனு நான் நினைச்சுக்கூட பார்க்கல... எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது?”
“துரோகமா?? என்னடா உளறிட்டு இருக்குற??” என்று இருவருக்கும் இடையில் வந்து நின்றான் விதுரன்.

அவனை அழுத்தமாக பார்த்தவன் “ஓஹ் நீயும் அவ பண்றதுக்கு உடந்தையாடா?? என்னை போய் ஏன்டா இப்படி பண்ணீங்க? என்னை பார்க்க பாவமாக இல்லையா உங்களுக்கு?” என்று வருத்தமாக கேட்டவன் மீண்டும் சென்று படியில் அமர்ந்து கொண்டான்.

சாண்டியும் அதிதியும் மூவரையும் புரியாமல் பார்த்திருந்தனர். அதிதி மெதுவாக சாண்டியின் பக்கம் சாய்ந்து அவனுக்கு மட்டும் கேட்கும்படி, “ஒருவேளை இவங்கதான் அவனை கொலை பண்ணிருப்பாங்களோ?!” என்றாள்.

அவன் முறைத்த முறைப்பில் வாயை கப்பென்று மூடிக் கொண்டாள். அவன் அவர்களை நோக்கி திரும்பியதும் அவள் அவனை பார்த்து வாயை சுளித்து பழிப்பு காட்டினாள். அதை உணர்ந்தாலும் அவளை கண்டுகொள்ளாமல் சாண்டி விதுரன் மற்றும் மாதங்கியை நோக்கிச் சென்றான்.

“என்னடா பண்ணீங்க? அவன் சொல்றதைப் பார்த்தா எனக்கு என்னென்னவோ தோணுதுடா.. நீங்களே சொல்லிருங்க என்ன நடந்ததுனு.”
“மச்சான் நீயுமா?! போடா எங்களையே சந்தேக படுறியா?” என்று விதுரன் வருந்தினான்.

“என்னடா எதுவுமே தெரியாத மாதிரி நடிக்குற எனக்கு எல்லாம் தெரியும்... நான் நீங்க பேசிக்கிறதை பக்கத்தில் நின்று கேட்டேன்..” என்று வருண் வாதிட்டான்.

“என்னடா கேட்ட அதை முதல்ல சொல்லித் தொலை.” என்று விதுரன் சீறினான்.
“என்னத்த சொல்ல ஃப்ரென்ட் செத்துப்போய்ட்டானேனு கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம நாயிருக்கேன்னு நரியிருக்கேன்னு அவகிட்ட நீ லவ் டயலாக் விடல?? சாண்டிக்கு சரி பண்ண வந்த இடத்துல நீ செட் பண்ண பாக்குறியா?! இதெல்லாம் நியாயமா?” என்று சோகமாக முடித்தான்.

“அடேய் இதையாடா துரோகம் அது இதுன்னு பேசுன.. கொஞ்ச நேரத்துல மனுசன சுத்திவிட்டு வேடிக்கை பார்த்திட்டியே டா... உன்னை.." என்று அவனை விதுரன் நெருங்க, அவனை பிடித்து சமாதான படுத்தினான் சாண்டி.

“சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் விதுவை லவ் பண்ணா உனக்கென்ன ப்ராப்ளம்??” என்று மாதங்கி கேட்டாள்.
“என்ன ப்ராப்ளமா?? இனிமே நான் மட்டும் சிங்கிளா சுத்துவேண்டி நம்ப கேங்ல... அது எம்புட்டு கொடுமை தெரியுமா?!” என்றவன் புலம்ப மற்றவர்கள் அவன் கூற்றில் மறுபடியும் சில்லறையை சிதறவிட்டனர்.

அவன் தோளில் கைபோட்ட சாண்டி, “மச்சான் உன் கஷ்டம் புரியுது.. இதுக்கு ஒரு தீர்வு இருக்குடா சொல்லட்டுமா?” என்று பீடிகையாக கேட்டான்.
“வாவ் என்ன தீர்வுடா??” என்று ஆவலாக வருண் கேட்க.. அவனுக்கு அவலாக ஓர் பதில் கிட்டியது.

“நீயேன் நம்ப அருந்ததியை ட்ரை பண்ணக் கூடாது.. இன்றைக்கே கூட ப்ரொப்போஸ் பண்ணிரு எப்படி என் ஐடியா??!” என்று நக்கலாக கேட்டுவிட்டு வருணின் பதிலுக்காக காத்திருந்தான் சாண்டி அவன் பதிலளிக்காமல் இருக்கவும் அனைவரும் அவனை பார்க்க அவன் பார்வை எங்கோ நிலைத்திருந்தது. அவன் பார்வை சென்ற திசையை நோக்கித் திரும்பிய நால்வரும் அதிர்ந்தனர்.

அருந்ததி அங்கு நின்றிருந்தாள் இவர்கள் பேச்சை கேட்டபடி. சாண்டிக்கு தான் சங்கடமாக இருந்தது. அவன் எதுவோ சொல்ல வாயெடுக்க அதற்குள் வருண் “ட்ரைப் பண்ணலாமே.. எனக்கு டபுள் ஓகே.. உனக்கு ஓகேவா” என்றான் அருந்ததியிடம். அவன் கேள்வியில் அனைவரும் திகைக்க அருந்ததிக்கோ எவ்வளவு முயன்றும் அவன் பார்வையில் அவள் முகம் சிவப்பதை மறைக்க முடியவில்லை.

வருணோ மறுபடியும், “ஓகேவா?” என்றான். அருந்ததி அவனை முறைத்தாள் பின் கண்களால் அதட்டினாள். “என் மகன் வயசுடா தம்பி உனக்கு.”
“பரவாயில்லை..” என்றான் நக்கலாக. அவளோ அவனை அழுத்தமாக பார்த்தபடி “எனக்கு தூக்கம் வருது வயசான காலத்துல என்னை தொல்லை பண்ணாம போங்க எல்லாரும்" என்றுவிட்டு தன்னறைக்கு செல்லத் திரும்பினாள். அவளை விரைந்து சென்று வழி மறைத்த சாண்டி, “இன்னும் என்ன நடந்ததுன்னு நீ சொல்லலையே?” என்றான்.

“இறந்து போய் கிடந்த எங்க வருண் இப்போ எப்படி உயிரோட வந்தான். கண்டிப்பா உனக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்காது. ஒழுங்கா சொல்லுறியா இல்லையா?”

“எனக்கு எப்படி தெரியும்?” என்றதுமே அவள் கழுத்தை பிடித்திருந்தான் சாண்டி, “உனக்கு தெரியாது... இதை நாங்க நம்பனும்.
அவன் கரத்தை பற்றிய வருண் “விடுடா" என்றான். அவனை வினோதமாக பார்த்தது அவனின் நட்பு வட்டம். அவன் கையில் அழுத்தத்தை உணர்ந்த சாண்டி அருந்ததியின் கழுத்திலிருந்து தன் கையை அகற்றினான்.

“டேய் நீங்க காலைல இருந்து சாப்பிடலைல நம்ப அரு பேபி ஏதாச்சு சமைச்சிருக்கும் போய் எடுத்து சாப்பிடுங்க" என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு அருந்ததியை நோக்கி திரும்பினான் வருண்.

அவன் சொன்னதும் தான் தங்கள் பசியின் அளவை உணர்ந்தனர் நால்வரும். “நீயும் வாடா” என்ற சாண்டியிடம் எனக்கு ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இருக்கும்டா” என்றான் நக்கலாக ஆனால் அவன் பார்வை முழுவதும் அருந்ததியையே சுற்றி வந்தது.

விடையறியா கேள்விகளா பசியா என்ற பேராட்டத்தில் பசி வென்றது. இங்கு வருணோ அருந்ததியை அவள் அறைக்கு போகச் சொன்னான். அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு அவள் சென்றாள்.

அவள் தன்னறைக்குள் சென்று கதவடைக்கும் நேரம் அவள் முந்தானை கதவிடுக்கில் மாட்டிக் கொண்டது. மீண்டும் கதவை திறந்து அதனை எடுக்க முயன்ற பொழுதுதான் புடவை தானாக மாட்டவில்லை வருண்தான் முந்தானையை பற்றியிருக்கிறான் என்று. அவனைக் கண்டதுமே இவளுக்கு வியர்த்து வழிந்தது. அவள் அறைக்குள் நுழைந்து கதவடைத்தவன் தான் பற்றியிருந்த முந்தானையை கொண்டே அவளின் வியர்வை துளிகளை மெல்ல துடைத்தான். அவன் செயல் பிடித்திருந்தது போல அந்த வியர்வை துளிகளுக்கு, மேலும் மேலும் அரும்பி அவனை எட்டிப் பார்த்தன.

“ஓகேவா? இல்லையாடி?”
“டியா? மரியாதை தேயுதே...”
“என்னை விட சின்ன பொண்ணு தான் நீ ன்னு நேத்தே பார்த்தாச்சு அப்றம் என்னடி?” என்றான் வேண்டுமென்றே டியில் அழுத்தம் கொடுத்து.

அவன் அவ்வாறு கூறியதுமே அவள் மீண்டும் முகம் சிவந்தாள். அவள் மா
மௌனத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு அவளை நெருங்கியவன், “நேற்று நீ என்ன சொன்ன நினைவிருக்கா?”

“இன்னைக்கு ஒருநாள் இரவு மட்டும் நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் கண்ணுக்குத் தெரிய மாட்டீங்கன்னு சொன்னேன்..” என்று பாதி கூறி அவன் பார்வையில் இருந்த நக்கல் உணர்ந்து நிறுத்தினாள் மீதியை.

“அதுக்கப்புறம்....”
“எல்லா நாளும் என் கண்ணுக்குத் தெரிவீங்கன்னு சொன்னேன்..”
“ம்ம்ம்... அதுக்கும் அப்பறம்...”

“நியாபகமில்லையே..” என்று மறுபுறம் திரும்பி அவனை பார்ப்பதை தவிர்த்தாள்... தவித்தாள்... (இது காதலா கானலானு நமக்கு தெரியாதுப்பு....)

அவள் நிலையை புரிந்துகொண்டவன், “ஓஹ்! நானே நியாபக படுத்துறேன் அப்போ...” என்றவன் அவள் நெற்றியை தன் விரல்களால் தீண்டியவன் விரல்கள் அவள் மேனியெங்கும் ஊர்வலம் நடத்தியது அவன் கண்களோ அவள் கண்களையே கவ்வியிருந்தது. அவள் உணர்வுகளை முகம் மறைத்தாலும் அவள் விழிகள் காட்டிக் கொடுத்தன.

“நியாபகம் வந்ததா?? இல்லை இன்னும்...”
“வந்திடுச்சு...”
“சொல்லு..”
“உங்க மேல அன்போ காதலோ வச்சிருக்கிறவங்களை உங்களால தொட முடியும்...”

“என் ஃப்ரெண்டஸ்க்கு என் மேல அன்பு இருக்கு... ஆனா உனக்கு எப்படி யார்னே தெரியாத என்மேல அன்பு பாசம்லாம் இருக்கும்??” என்றான்.
அவள் அமைதியாக நின்றாள். அவள் அமைதியை சில நிமிடங்கள் ரசித்தான்.

“ஆத்மாவின் ரூல்ஸ் இன்னும் விளங்கல போலையே உனக்கு இன்னொரு தடவை டெஸ்ட் பண்ணிருவோம்....” இந்த முறை அவன் சோதனைக் கருவி அவன் விரல்களல்ல இதழ்கள்.

அந்த நீண்ட இதழணைப்பு முடிவுற்றது அவளின் கண்ணீர்த்துளிகளின் படையெடுப்பால்.
“உங்களை நான் சரி பண்ணிருவேன் வருண் சீக்கிரமே..” என்றாள் வேதனையுடன்.

அவனோ ஆறுதலாய் அவள் நெற்றியில் இதழொற்றியவன், “அப்போ இது லவ் தான ஜெஸி??! சாரி அரு!!?” என்று அவளை இலகுவாக்கினான். அவள் ஆமோதிப்பாய் புன்னகைத்தாள்.....

வருண் வெளியேறியதுமே அங்கே சுவரில் இருந்த சி சி டி வியைப் பார்த்த அருந்ததி, "நீங்க சொன்ன போலவே பண்ணிட்டேன்" என்று சொல்லும் போதே அவள் குரல் கம்மி போனது.

இன்னொரு பக்கம், வருணை சுற்றி அமர்ந்து இருந்த அனைவரும் அவனிடம் இஷ்டத்துக்கு விசாரணை நடத்த ஆரம்பித்தார்கள்.
அவனோ இஞ்சி தின்ற டெட்டிபியர்(நம்ப க்ரஷ்ல) போல விழித்துக் கொண்டே அமர்ந்து இருக்க, சாண்டிக்கு எரிச்சல் மேலிட்டது.

"ஏதாவது சொல்லி தோலையென்டா" என்று அவன் கடுப்பில் சீற, வருணோ, "என்னாச்சுன்னு எனக்கே தெரியலடா, அப்புறம் நான் என்ன தான் சொல்றது?" என்று அவன் சலித்துக் கொண்டான்.

திடீரென ஏதோ நினைவு வந்தவனாக, "அந்த அருந்ததி எனக்கு முத்தம் கொடுத்திச்சு டா" என்று சொல்ல, அனைவரும் வாயில் கையை வைத்தபடி அவனைப் பார்க்க, சாண்டியோ, "என்னடா சொல்ற??" என்று கேட்க, வருணோ அவனிடம் பதிலுக்கு, "என்னடா சொன்னேன்?" என்று கேட்டான்.

அவனது இந்த மாறாட்ட கதையினால் அனைவரும் தலையை பிடித்துக் கொண்டே உட்கார்ந்து விட்டார்கள்.
(பாருங்களேன் அங்க ஒருத்தன் உடம்பு மறைஞ்சு போனதையே எல்லாரும் மறந்துட்டாய்ங்க... இவனுங்களையெல்லாம் வச்சு நாங்க த்ரில்லர் கதை எழுதி.... முடிச்சிருவோம் சீக்கிரமா?)
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 06


“சாண்டி கால் பண்ணவே இல்ல நிரல்... நாமளா பண்ணாலும் எடுக்கவே மாட்டேங்குறான்... எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு” சாப்பாட்டை எடுத்து வைத்தவாறே நிரல்யனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷனி.

மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்தவனுக்கு, தான் இன்வெஸ்டிகேஷனில் இருக்கும் போது வந்திருந்த சாண்டில்யனின் அழைப்பு அப்போது தான் ஞாபகத்திற்கு வர, தான் மீண்டும் அழைத்து அது எடுக்கப்படாததை சொல்லி மனைவியை மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாமென நினைத்தவன் எதுவும் பேசாமல் உண்ண ஆரம்பித்தான்.

“நிரல்... உங்களுக்கு சாண்டி மேல கோபம் இருக்குனு தெரியும்... அதுக்காக அவன் என்ன நிலையில இருக்கான்னு கூட தெரிஞ்சுக்காம இருப்பீங்களா?”

“பொண்ணு... முதல்ல உட்காரு” கைப்பிடித்து அமர வைத்தவன், தட்டை எடுத்து சாப்பாட்டு போட்டு விட்டு சாப்பிடுமாறு கண்களால் பணிக்க

“ப்ச்... என்ன நிரல்... நான் பேசுறத கண்டுக்கவே மாட்டேங்குறீங்க?” சிணுங்கினாள் மனைவி...

“என் மச்சான் மேல எனக்கு கோபம் இருக்கு தான்... அதுக்காக அவன் மேல அக்கறையே இல்லன்னு ஆயிடுமா சொல்லு?”

“அப்படி இல்ல நிரல்... நான்...”

“ஷ்... எதுவும் பேசாம சாப்பிடு டா... சாப்பிட்டதுக்கப்பறமா பேசலாம்” அவன் அன்பில் நெகிழ்ந்தவள் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பிக்க நிரல்யனின் முகத்தில் குழப்ப ரேகைகள் படிய ஆரம்பித்தன.

இருவரும் சாப்பிட்டு முடிக்க தட்டை எடுத்து வைத்தவள் கிளம்பிக் கொண்டிருந்தவன் அருகே வந்து நிற்கவும் ஷூவை போட்டு விட்டு நிமிர்ந்தவன் வலது கையை நீட்டி மனைவியை தன் கையணைப்புக்குள் கொண்டு வர அவனை அண்ணார்ந்து பார்த்து புன்னகைத்தாள் அவன் மனையாள்.

“கண்டிப்பா சாண்டி கிட்ட உன் அக்கா கூட பேசு னு திட்டிட்றேன்... சரியா?”

“ம்...”

“நீ எதுவும் யோசிக்காத பொண்ணு... நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்”

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு நிரல்”

“லவ் யூ டா” முன்னெற்றி முடியை ஒதுக்கியவன் உச்சந்தலையில் முத்தமிட்டு விட்டு வெளியேற அவனையே பார்த்திருந்தாள் வர்ஷினி.

***

“ச்சே...” எரிச்சலாய் நெற்றியை நீவி விட்டு கையிலிருந்த பைலை கடுப்புடன் பார்த்தான் நிரல்யன்.

அந்த கேஸ் அவன் கைகளுக்கு மாற்றம் பெற்று இன்றுடன் மூன்று வாரங்களாகின்றன.

இருந்தும் அதிலிருந்து சிறு துரும்பு கூட சந்தேகத்திற்கு வராதது அவனை இன்னும் கோபமடைய வைத்திருந்தது.

“ப்ச்....” எரிச்சலாய் மேசை மீது தூக்கிப் போட உள்ளிருந்த வெள்ளை நிற கவரொன்றிலிருந்து உள்ளேயிருந்த புகைப்படம் வெளியே வந்து விழ புருவங்கள் நெறிய அதை கையிலெடுத்து பார்த்து விட்டு பின்னால் திருப்பியவனின் உதடுகள் பின்னால் எழுதப்பட்டிருந்த பெயரை பார்த்து “நேத்ரன்” என முணுமுணுக்க அவன் மூளை தீவிர சிந்தனையில் ஆழ்ந்து போயிற்று.

***

இதே சமயம் பங்களாவில்…

“ஆஆ...” விழப் போனவளை சட்டென வந்து தாங்கிக் கொண்டான் சாண்டி.

“ரொமான்ஸ் சீனுக்காக விழுந்தியா அதி?” குறும்பாக கேட்ட வருணை முறைத்தவள் அவனுக்கு அடிக்க கையோங்க

“கொஞ்சம் சும்மா இருங்கடா... நானே குழம்பி போயிருக்கேன்” தனக்குள் புலம்பிக் கொண்டிருந்த விதுரனை குழப்பமாய் திரும்பிப் பார்த்தனர் நால்வரும்...

“என்னாச்சுன்னு கேள்வி கேட்டுறாதீங்கடா... நடந்தது குழப்பமாவே இருக்கு”

“விது... அதான் இப்போ வருண் திரும்ப வந்துட்டான்லடா... இன்னும் என்ன யோசிச்சு கிட்டு இருக்க?” என்றாள் மாதங்கி.

“வருண் வந்துட்டான் தான்... ஆனா!”

“ஆனா?” இடையிட்டான் சாண்டி.

“சாண்டி... அந்த கிழவி அருந்ததி... சரி சரிஇஇ... கேவலமா முறைக்காத வருண்... அதாவது அந்த அருந்ததியும் அவ பையன்னு சொல்லிகிட்டு வந்த ஒருத்தனும் நம்ம கன்ட்ரோல்ல தானே டா இருந்தாங்க...? அது எப்படி வருண் முழிக்கும் போது பக்கத்துல இருந்தானு சொல்றான்...? ரொம்ப நேரமா நானும் யோசிக்கிறேன்டா... அவங்க நம்ம கண் பார்வையிலேயே தானே இருந்தாங்க... பின்ன எப்படிடா?”

“விது சொல்றது கரெக்ட் தான் சாண்டி” உடனே ஆமோதித்து விட்டனர் பெண்கள் இருவரும்.

“டேய் இதுல என்ன குழப்பம் உனக்கு...? வருண் தனியா மேல இருக்க ரூம்ல தூங்குனான்... நாம எல்லோரும் வேற வேற இடத்துல தூங்கினோம்... நாம போறதுக்கு முன்னாடி தான் அந்த கிழவி போயி ஏதாவது மாயாஜாலம் பண்ணி வருணுக்கு என்னமோ பண்ணி இருக்கா...”

“ஆனா சாண்டி... கண்ணால பாத்தோமேடா அவன் செத்து கிடந்ததை?” என்றான் விதுரன் மீண்டும் விடாப்பிடியாய்...

“நாம ரூமுக்குள்ள போனப்போ, அப்பறம்... மாதங்கி கிச்சன்ல வருணை பாத்ததா சொன்னது... இது ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு... நம்ம செத்ததா நினைச்சு பாத்த வருண்... திடீர்னு நம்ம முன்னாடி வந்து நான் உங்க முன்னாடி இருந்தேன் நீங்க யாரும் என்ன பாக்கல... ஆனா நான் உங்களை பாத்தேன்னு சொல்றான்... இதுல என்ன நடந்ததுன்னு கூட அவனுக்கு எதுவும் ஞாபகம் இல்ல... சோ, இதுக்கு பின்னாடி நிச்சயமா அருந்ததிக்கு சம்பந்தம் இருக்கு”

“நீ ஏன் அரு மேல சந்தேகமாவே இருக்க?” இடையிட்டான் வருண்.

“இவன் ஒருத்தன்... சாண்டி நீ சொல்றது சரி தான்
டா…“ சாண்டில்யனுக்கு கொடி பிடித்தாள் மாதங்கி.

“ஆமா... உனக்கு தான் எதுவுமே ஞாபகமே இல்லைல வருண்...? அப்பறம் எப்பிடி அவ கிழவி இல்ல பொண்ணு ன்னு மட்டும் ஞாபகம் இருக்கு?” அதிதி சந்தேகப் பார்வை பார்க்க பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவாறே நின்றிருந்த மூவருள்

“அதி கேக்கறதுக்கு பதில் சொல்லு வருண்” என்றான் விதுரன்.

“டேய் நைட்டு நாம தூங்க போனோம்ல...? நான் கூட நான் இங்கேயே தூங்குறேன்னு சொல்லிட்டு தனியா தூங்கிட்டேன்... ராத்திரி திடீர்னு விழிப்பு வந்துது டா... இரண்டு பேரு பேசுறா மாதிரி குரல் கேட்டு கிட்டே இருந்துது... இந்த வீடு வேற பாக்குறதுக்கு நம்ம அருந்ததி பேய் பட பங்களா மாதிரியே இருந்துதா... மனசு ஜர்க் ஆயிடுச்சு கொஞ்ச நேரம்... நானும் தூங்கலாம் னு கண்ணை இறுக்க மூடி கிட்டு இருந்தாலும் வாசல் கதவு பக்கத்துல அருவோட சேலை தெரிஞ்சுது... அட இந்த கிழவி இந்த நேரம் யார் கூட பேசிட்ருக்குனு யோசிச்சு கிட்டே எழுந்தேனா... பக்கத்துல போனா கிழவி பொண்ணா இருக்காடா... தூக்க கலக்கத்துல தான் எனக்கு அப்பிடி தெரியுதோன்னு கண்ண கசக்கி கிட்டு மறுபடி மறுபடி பாத்தேன் மச்சான்... பொண்ணு தான்டா.... ஏய் நீ னு நான் பேசுறதுக்குள்ள என்ன உள்ள தள்ளி விட்டாடா.... நான் சுதாரிச்சு திரும்ப எழுந்துக்கறதுக்கிடையில இரண்டு பேரையுமே காணோம்...”

“ஹே இரு... இரு... இரண்டு பேருன்னா ஒன்னு அந்த கிழவி... அடுத்தது யாரு வருண்?” என்றான் சாண்டில்யன் தீவிரமாய்...

“அவன நான் சரியா கவனிக்கல சாண்டி... அருந்ததிய ஆராய்ச்சி பண்ற டென்ஷன்ல பக்கத்துல நின்னு கிட்டு இருந்தவன மறந்துட்டேன்...”

“ப்ச்... சரி இருக்கட்டும் விடு... எப்பிடி இருந்தான்னாவது ஞாபகம் இருக்கா?”

“கொஞ்சம் ஹைட்டா...” வருண் ஆரம்பிக்க

“சாண்டி... அவனை முழுசா சொல்ல விடுடா... அப்பறமா கேக்கலாம்...” இடையிட்டாள் அதிதி.

“சரி சொல்லு...” சம்மதித்து விட்டாலும் வருண் சொன்ன ஹைட் என்ற சொல்லிலேயே தங்கி விட்டிருந்தது சாண்டியின் மூளை...

அவன் கூற்றுப் படி அருந்ததியின் மகன் என அறிமுகமாகி இருந்தவன் அதற்கு பொருந்திப் போகவில்லை...

அவன் கொஞ்சம் உயரம் குறைவாக இருந்ததால் வருண் கண்ட அந்த ஒரு நபர் வேறு யாரோவாகவே இருக்க வேண்டுமென்றே அவன் மனம் உறுதியிட்டுக் கூறிக் கொண்டிருந்தது.

“அப்போ அவ கிஸ் அடிச்சா னு எல்லாம் சொன்ன...? அது எப்போ நடந்தது?” மாதங்கியின் கேள்வியில் தன் சிந்தை கலைந்தவன் வருண் சொல்வதை மீண்டும் கேட்கலானான்.

“அவ தள்ளி விட்டு நான் சுதாரிக்கறதுக்குள்ள அவங்க காணாம போயிட்டாங்கல்ல...? அப்பறம் நானும் பேயோனு பயத்துல தூங்கிட்டேன் மாது... திரும்ப யாரோ என் முன்னாடி என்னையே பாத்திட்டு இருக்கா மாதிரி இருக்கவும் கண்ண திறக்க என் முன்னாடி அவ இருக்கா... பின்னால ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான்... நான் யாருனு பாக்கறதுக்கு முன்னாடி அரு திடீர்னு கிஸ் பண்ணிட்டா... அப்போ தான் அவ கிழவி இல்ல பொண்ணு னு முழுசா நம்ப ஆரம்பிச்சேன்...” அவன் வெட்கப்பட

“அப்போ கூட பின்னாடி யாரு இருக்காங்கன்னு நீ பாக்கல?” என்றான் சாண்டி கடுப்புடன்...

“டேய் மச்சான் அருந்ததி கிஸ் பண்ணதே வருண் அவ பின்னாடி இருக்கறவனை பாத்துட கூடாதுன்னு இருக்குமோ?” விதுரன் கேட்க அப்போது தான் அனைவருக்கும் அந்த எண்ணமே தோன்றிற்று.

“இருக்குமோ இல்லடா... அதே தான்” சாண்டியும் வருணும் ஆமோதிக்க பெண்களின் தலைகள் புரிந்தும் புரியாமலும் மேலும் கீழுமாக ஆடியது.

“அந்த கிழவி ஏதோ ப்ளே பண்றாடா” என்றான் சாண்டி உறுதியாக...

“ஞாபகம் இல்லை னு சொன்ன இப்போ சொல்ற?” அதிதி அதிர்ந்து வருணை கேட்க அனைவர் பார்வையும் சந்தேகமாய் அவன் மேல் படியவும் கேலிப் புன்னகையுடன் அவர்களையே பார்த்திருந்து விட்டு நகர்ந்தாள் அருந்ததி.

“என்ன சொன்னேன்?” மேலும் அதிர வைத்தான் வருண்.

“இப்போ தானேடா சொன்ன நைட்டு தூங்கினே் அருந்ததி வந்தா தள்ளி விட்டானு எல்லாம்...”

“நான் எப்போ சொன்னேன் விது?”

“ஏய் விளையாட்றியா நீ...? ஞாபகம் இல்லன்னு சொல்லிட்டு என்ன நடந்துதுன்னு சொல்லி முடிச்ச அடுத்த செக்கெண்ட் என்ன சொன்னேன்னு எங்களையே திரும்ப கேள்வி கேக்குற?” சாண்டில்யனுக்கு தன்னை கட்டுப் படுத்துவதே பெரும் பாடாய்...

“சாண்டி ரிலாக்ஸ்டா... அதான் தெரியலன்னு சொல்றான்ல... விடு பாத்துக்கலாம்” மாதங்கி தான் சமாதானப்படுத்தி வைத்தாள்.

“மச்சி நிஜமாடா”

“சரி விடு வருண்...” தோளில் தட்டிக் கொடுத்தவனுக்கு குழப்பம் அதிகமாகிக் கொண்டே போனது.

***

கிட்டத்தட்ட மூன்று அறைகள் ஒன்று சேர்ந்தவாறு இருந்தது அந்த அறையின் நீளம்.

ஒரு பக்க சுவர் முழுவதுமாக கணனிகள் பொறுத்தப்பட்டிருக்க நடுநாயகமாக ஐந்து கதிரைகள் அக்கணனி திரைகளை பார்வையிடும் தூரத்தில் வைக்கப்பட்டிருந்தன.

அறை முழுதும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது அங்காங்கே இருந்த மெஷின்களிலும் பெரிய திரைகளிலுமே தெரிந்தது.

நடுவில் நடமாடுவதற்கு ஏதுவாக எதுவும் போடப்பட்டிருக்காவிடினும் சில சில தொடு திரைகள் இடைக்கிடையில் பொருத்தப்பட்டிருந்தது.

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் ஐவர்.

கோர்ட் சூட், ஐவரில் இருவர் கண்ணாடி அணிந்திருக்க மூவர் நல்ல உயரமாகவும் இருவர் அவர்கள் மூவரையும் விட சற்றே உயரம் குறைவாகவும் இருந்தனர்.

“ஜோன்... அங்கே பாரு... அந்த அஞ்சு பேரும் பங்களாவை சுத்தி பாத்துட்டு இருக்கானுங்க” கண்ணாடி அணிந்திருந்த ஒருவனை பார்த்துச் சொன்னான் டேவிட்.

“ம்... கொடுத்த அதிர்ச்சியில பயந்திருக்கானுங்க போல... அதான் ஒன்னாவே சுத்திட்ருக்கானுங்க” டேவிட்டின் கூற்றை ஆமோதித்தான் கண்ணாடி அணிந்தவனில் மற்றவன் மார்க்.

“நாம சொன்னா மாதிரியே அந்த அருந்ததி பண்ணி கிட்டு இருக்கா... இப்போ பாரு... வருண், ஞாபகம் இல்லன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னதும் அதுக்கப்பறம் ஞாபகமே இல்லன்னு சொன்னதும் ரொம்ப குழம்பி போயிருக்கானுங்க” என்றான் ஜோன் மீண்டும்.

“அடுத்த டாஸ்க் என்ன நேத்ரன்?” அங்கு தலைவன் தோரனையில் இருந்தவனிடம் உயரம் சற்று குறைவாக இருந்த இருவரில் ஒருவனான விக்னேஷ் கேள்வியெழுப்ப நேத்ரனையே தாங்களும் கேள்வியாய் நோக்கிக் கொண்டிருந்தனர் மற்றைய மூவரும்.

“அதிதி” அவனின் ஒற்றைச் சொல் அனைவரையும் மீண்டுமொறுமுறை திரையை பார்க்கத் தூண்டியது என்றே கூற வேண்டும்.

***

“அதிதியை காணோம்டா” மறுநாள் காலை தூக்கம் விழித்து எழுந்து வந்த சாண்டில்யனிடம் வருணும் மாதங்கியும் விதுரனும் பதைபதைக்க திடுக்கிட்டவனுக்கு மொத்த தூக்கமுமே கலைந்து தான் போயிற்று.

“எ...எ...என்ன சொல்ற?”

“ஆமா மச்சான் நல்லா தேடி பாத்துட்டோம்டா... அவ எங்கேயுமே இல்லடா” வருணின் குரல் கலங்கிப் போய் ஒலிக்க இதயவோரம் சுளீரென்ற வலி தோன்றி மறைந்தது சாண்டில்யனுக்கு...

இருவரும் பிரிந்திருக்கலாம்... ஆனால் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கிறார்களே!

‘ஒருத்தங்க மதிப்பு அவங்க பக்கத்தில இருக்கும் போது தெரியாதாம்’ அதிதியின் நேற்றைய வார்த்தைகள் நெஞ்சை சுட

“அதி... எங்கேடி போயிட்ட...? ப்ளீஸ் வந்துடுடி...” ஊமையாய் அரற்றியது சாண்டில்யனின் மனம்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் – 07

அதிதி... எங்கு தேடியும் இல்லையென்று கூறிய வருணின் வார்த்தைகளில் மொத்தமாய் உடைந்து தான் போனான் சாண்டி. அவளோடு பிணக்கு ஏற்பட்டு அவளை தவிர்க்க நினைத்தவன் தான். ஆனால் அதனை செயல்படுத்த இயலாமல் தானே தடுமாறி கொண்டிருக்க, இப்போது அவள் இல்லை என்ற செய்தி மூளையில் உரைக்க, சுளீரென்று நெஞ்சத்தில் ஓர் வலி ஏற்பட்டது.‌ யாரோ தன் இதயத்தை வலிக்க வலிக்க பிடுங்கிய உணர்வு மனதில் தோன்ற, மூளையும் சொன்னது 'அவள் இல்லை என்றால் நீ வெறும் கூடு மட்டுமே' என்று.

'ஆம்! அவளை பிரிந்து தன்னால் இருக்க இயலாது என்பதால் தானே, அவள் மீது தன் கோபத்தை கொட்டியாவது அவளோடு பேசிக் கொண்டு இருக்கிறோம். தன்னுடைய புறக்கணிப்பை சிறிதளவு காட்டிவிட்டு தானே தவித்துக் கொண்டு இருக்க, தற்போது தன்னை மொத்தமும் தவிக்க விட்டு அவள் எங்கு சென்றுவிட்டாள்' என ஓர் நிமிடத்திலே பல சிந்தனைகள் மனதில் தறிக்கெட்டு ஓட, அதை கட்டுபடுத்த இயலாது அங்கேயே மடங்கி அமர்ந்தவன் விழிகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழுந்து அவன் விழி திரையை மங்க செய்தது.

அவனின் கண்ணீரை கண்டு நண்பர்கள் மூவரும் அதிர்ந்து தான் போயினர். அவனின் உடைந்த நிலை அவர்களையும் உலுக்கிட, சாண்டியின் அழுகை கண்டு மாதங்கியும் தற்போது வாய்விட்டே கதற, நேற்றைய இருந்த இதமான சூழல் இன்று மொத்தமாய் மாறி இருந்தது.

"சாண்டி இது அழுறதுக்கு நேரம் கிடையாது. நம்ம சுத்தி ஏதோ நடக்குது. அதை தெரிஞ்சுக்கிட்டா தான் நம்மால் அதிதியை கண்டுபிடிக்க முடியும்" என்று
மண்டியிட்டு அமர்ந்து இருந்தவனின் தோள் மீது கை வைத்து வருண் கூற, தன் நண்பன் சொல்வதை உணர்ந்து, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான் சாண்டில்யன்.

விடாது இன்னும் அழுதுக் கொண்டு இருந்த மாதங்கியை கண்டு எரிச்சலுற்ற விதுரன், "ப்ச் மாது உன் அழுகையை கொஞ்சம் நிறுத்து, அப்போ தானே திங்க் பண்ண முடியும்" என்றிட கண்களை துடைத்துக் கொண்டாலும் அவளிடம் இருந்து மெல்லிய விசும்பல் சத்தம் வெளிவந்தது.

"எனக்கு தெரிஞ்சு நாம எதோ பெரிய டிராப்ல(trap) மாட்டி இருக்கிற மாதிரி இருக்கு. பர்ஸ்ட் நாம இங்க வர வைக்க பட்டதே பிளானிங்கோனு தோனுது" என்ற சாண்டியின் முகம் தீவிரமான பாவனையில் இருந்தது.

"எப்படி சொல்ற சாண்டி, ஆக்சுவலி இந்த பிளான் எங்க மூனு பேருக்கு மட்டும் தானே தெரியும். ஏன் உனக்கும் அதிதிக்கும் கூட தெரியாதே" என்றபடி வருண் தலையை சொறிய,

"எஸ் யூ ஆர் ரைட் டா. எங்களுக்கு தெரியாது ஆனா உங்க மூனு பேருக்கு தெரியும் தானே. அப்போ உங்க மூனு பேருல, யாரோ ஒருத்தர் நீங்களே தெரியாம இந்த விஷயத்தை சொல்லி இருக்கிங்க… கண்டிப்பா நம்ம ஐந்து பேரை பற்றி நல்லா தெரிஞ்சவனா இருக்கலாம் இல்லைனா... நம்ம எல்லாரையும் கண்கானிச்சு இதை செஞ்சு இருக்கனும்" என்றதும்,

"அப்படியும் இருக்கலாமா டா" என்ற விதுரனை கண்டு உதட்டை‌ பிதுக்கியவன், "இது என்னுடைய கெஸ் மட்டும் தான். ஆனா நான் சொன்ன மாதிரி இருந்ததனா கண்டிப்பா அதிதியை வைச்சு நம்மள யூஸ் பண்ணிக்க பார்ப்பாங்க" என்று ‌பேசிக் கொண்டு இருக்க, இதை கேட்ட மாதங்கியோ தன் முகத்தை சீராக வைத்துக் கொள்ள அரும்பாடு பட்டு போனாள்.

"சரி இப்போ நாம எப்படி அதிதியை கண்டு பிடிக்கிறது" என்ற வருணை அழுத்தமாக பார்த்தவன், "அருந்ததி" என்று‌ உச்சரித்திட, அதன் பின் நால்வரும் நின்றது என்னவோ அருந்ததி அறையினுள் தான்.

அப்போது தான் இரவு நெடு நேரம் உறங்காது இருந்தவள் சோர்வில் கண்களை மூடியபடி மெத்தையில் படுத்துக் கொள்ள, திடிரென்று நுழைந்த நால்வரை கண்டு ஒரு நிமிடம் அரண்டாலும், அதன் பின் சுவாசத்தை உள்ளும் வெளியேவும் இழுத்து விட்டுக் கொண்டு தன்னை சமன்படுத்தி கொண்டாள் அருந்ததி.

வருணோ அவள் முகத்தையே உற்று உற்று பார்த்துக் கொண்டு இருக்க, "ப்ச் உங்களுக்கு எல்லாம் என்னை பிரச்சினை. தூக்கம் வரலேனா எழுந்து போங்க, எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு" என்றபடி போர்வையை இழுத்து போர்த்தியபடி தூங்க முயல, அதை பிடுங்கி கிழே எறிந்த சாண்டி,

"என்ன விளையாடுறியா ஒழுங்கா என் அதிதி எங்கேனு சொல்லிடு… இல்லைனா உன்னை என்ன செய்வேனு எனக்கே தெரியாது" என்று கண்கள் சிவக்க கர்ஜித்தவனை கண்டு அவள் மிரண்டது எல்லாம் ஓர் நொடி தான்… அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டவளுக்கு, அதிதி இல்லை என்ற விடயமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அதனை தன் முகத்தில் காட்டாது, "என்ன சொல்ற அதிதியை காணோமா எனக்கு தெரியாது" என்று பதற்றமே இல்லாமல் பேசியவளை கண்டு அவனின் கோபம் இன்னும் இன்னும் பெருகியது.

தன் நண்பனின் கோபம் அதிகமானதை உணர்ந்த வருண்,"அருந்ததி தயவு செஞ்சு விளையாடாத பிளிஸ், அதிதி எங்கேனு சொல்லிடு" என்று இரைஞ்ச,

"டேய் நீங்க எல்லாம் லூசா டா, யாரு காணாம போனாலும் என்னையே போட்டு படுத்துறீங்க. எனக்கு உண்மையா தெரியாது. ஆளை விடுங்க சாமி நான் தூங்கனும்" என்று படுக்க முயல, அடுத்த நொடி அவளின் கழுத்தை சாண்டி இறுக பற்றி ‌இருக்க, சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சுக்கு திணறிக் கொண்டு இருந்தாள் அருந்ததி.

•••••••••••••••


நேற்று தான் பார்வையிட்ட பைலில் இருந்து கீழ் விழுந்த புகைப்படத்தின் பின் இருந்த நேத்ரன் பெயரை பற்றியே தீவிர சிந்தனையில் ஆழ்ந்து இருந்தான் நிரல்யன். தன் மூளையினுள் எங்கோ மறைந்திருந்த அப்பெயரை தட்டி எழுப்ப முயன்று கொண்டு இருந்தான்.

யோசனை அடுக்குகளில் நிறைந்து இருந்தவனை கலைக்கவென இறுக்கி அணைத்து கொண்டது ஓர் கரம். அதன் இதத்தில் மெல்ல தன் பார்வையை ஓடவிட, அவன் பார்வையை நிறைத்தாள் அவனின் காதல் மனைவி.

தன் மார்பின் மீது தலை சாய்த்து உறங்கிக் கொண்டு இருக்கும் மனையாளை கண்டதும் காதல் பொங்கியது. அவளை கண்டதும் மனதில் தோன்றிய சஞ்சலங்கள் எல்லாம் நீங்கியது போன்று உணர, கண்மூடி யோசித்தவனின் புருவங்கள் சுருங்க, அவன் விழிகளில் ஏதெதோ நிகழ்வுகள் தோன்ற, சட்டென்று விழி திறந்தவன், தன் மனையாளை மெத்தையில் கிடத்திவிட்டு வேக வேகமாக எங்கோ வெளியே கிளம்பிச் சென்றான் நிரல்யன்.


••••••••••••••••


கண்கள் சொருக மூச்சுக்கு திணறியபடி, சுவாசத்திற்கு ஏங்கி கொண்டு இருந்தவளின் நிலைக் கண்டு மருண்ட வருண்,

"டேய் சாண்டி அவளை விடுடா… விடு… மூச்சு திணறுது பாரு செத்து போயிட போறாடா" என்றபடி தன்‌ நண்பன்‌ கரத்தை கடினபட்டு விலக்க, தளர்ந்து போய் கீழ் அமர்ந்தவள், கழுத்தை பிடித்தபடி இறுமி கொண்டு இருந்தாள் அருந்ததி.

"மாது போய் கொஞ்சம் வாட்டர் கொண்டு வா" என்றதும் வேகமாக கிட்சன் சென்று தண்ணீர் கொண்டு வந்து அவளிடம் கொடுக்க, தடுமாறியபடி வாயுக்குள் அதனை சரித்துக் கொண்டவள் ஆசுவாசம் பெறவே நீண்ட நேரமானது‌.

"உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லயா சாண்டி. அவளை கொன்னுட்டா மட்டும் நமக்கு அதி எங்கே இருக்கானு தெரிஞ்சிடுமா..‌. இடியட்…" என்றிட,

"என்னடா நீ லவ் பண்ற பொண்ணு அப்படிங்கிறதால பாசம் பொங்குதோ. அதிதீயை விட இப்போ வந்தவ அவளோ முக்கியமா போயிட்டாளோ" என்றபடி வருணை நக்கலாக பார்க்க, அடுத்த நொடி அவன் மீது பாய்ந்து இருந்தான் வருண்.

இவர்கள் சண்டை இட்டுக் கொள்வதை எல்லாம், தன் தொண்டையை நிவியபடி அமைதியாக பார்த்திருந்தாள் அருந்ததி. இருவரும் அடங்காது திமிறிக் கொண்டிருக்க, இருவரையும் பிரித்து அவர்களின் கன்னத்தில் ஓர் அரை விட்டான் விதுரன்.

"நீங்க என்ன சின்ன பசங்களாடா… இப்படி சண்டை போட்டு இருக்குறீங்க… இப்போ நமக்கு அதியை கண்டு பிடிக்கிறது முக்கியம். அதுக்கு அப்புறம் வைச்சிக்கோங்க உங்க பஞ்சாயத்தை" என்ற விதுரன் இருவரிடமும் கோபமாக பேசிக் கொண்டிருக்க, மாதங்கியோ சோகம் நிறைந்த முகத்தோடு தன் நண்பர்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் அறிந்து இவர்கள் இப்படி முரட்டு தனமாக அடித்துக் கொள்வது இதுவே முதல் முறை!

சாண்டியோ தன் கேசத்தை அழுந்த கோதியபடி தன்னை சமன்படுத்திக் கொண்டவன், தீவிர யோசித்தபடி

"விது அதுக்கு பர்ஸ்ட் நாம இந்த வீட்டுல இருந்து வெளியே போகனும்… கண்டிப்பா நம்மால முன்னாடி வழியா போக முடியாது. அதுனால வேற ஏதாவது வழி இருக்கானு தேடனும்" என்றிட, மூவரும் அதை ஆமோதித்தபடி தேட ஆயத்தமாக, மெல்லிய குரலில், "நானும் உங்களோடு தேட வரேன்" என்று ஒலித்தது அருந்ததியின் குரல்.

"டேய் அவளை வாயை மூடிட்டு இங்கேயே இருக்க சொல்லிடுடா… இல்லைனா செம டென்சன் ஆகிடுவேன்" என்ற சாண்டியை முறைத்து பார்த்தவள், நான் உங்க கூட வருவேன் என்று பிடிவாதமான குரலில் சொல்ல,

"அடிங் என்னடி நினைச்சிட்டு இருக்க… நீ கிழவி மாதிரி வேசம் போட்டு எங்களை ஏமாத்துவியாம். எங்களை இந்த வீட்டுல தங்க அனுமதி தந்த மாதிரி ஹவுஸ் அரெஸ்ட்ல வைச்சு இருப்பியாம்… அப்புறம் அமானுஸ்யம் அப்படினு கதை கட்டுவியாம்… இப்போ எனக்கும் வீட்டை விட்டு போற வழி தெரியாதனு சொல்வியாம். நாங்க எல்லாத்தையும் நம்பனும்… இதோ இருக்கான் உன் லவ்வர் அவன் எல்லாத்துக்கும் ஜால்ரா போடுவான்… நான் அப்படி கிடையாது" என்றவன் தன் நண்பர்களை கண்டு,

"யாரெல்லாம் என்னோடு வரிங்களோ வாங்க" என்றவன் அழுத்தமாக வருணை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட, வருணும் அவளை சந்தேகமாக பார்த்தபடி தன் நண்பர்கள் பின்னே சென்றான்.

அவன் செல்வதையும் உணராத அருந்ததி, தீவிர யோசனையில் இருக்க, சில நிமிடங்கள் பின்னே நிமிர்ந்து பார்க்க அப்போது தான் யாரும் இல்லை என்று புரிய,

"அய்யயோ விட்டுட்டு போயிட்டாங்களா.. இவனுங்களை விட்டா நம்மாலும் இந்த வீட்டுல இருந்த வெளியே போக முடியாது போலவே" என்றபடி அவர்களை தேடிச் சென்றாள் அருந்ததி.


•••••••••••••••••••


பல பல தொழில் நுட்பங்கள் பொருத்தப் பட்டிருந்த அறையின் உள்ளே, தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து இருந்தவனின் கரங்களோ நாற்காலியின் பிடியில் தாளம் போட்டபடி இருக்க, அவன் இதழ்களோ தான் வெற்றியை அடையப் போகிறேன் என்ற ரீதியில் கர்வ புன்னகை சூடியிருக்க, திரையில் ஓடிக் கொண்டிருந்த நிகழ்வுகளை எல்லாம் ரசித்து பார்த்தபடி இருந்தான் அவன்... நேத்ரன்!

நடுநாயகமாக நேத்ரன் அமர்ந்து இருக்க, அவனுக்கு வலது புறம் ஜோனும், இடது புறம் விக்னேஷ் என்பவனும் நின்று இருந்தனர்.

"வாவ் விக்னேஷ்… இந்த கண்கொள்ளா காட்சியை பாரேன். நீ என்னமோ பெருசா சொன்ன இவனுங்க எல்லாம் நகமும் சதையும் மாதிரி பிரிக்க முடியாதுனு. ஆனா இங்க பாரு எப்படி சண்டை போட்டுக்கிறாங்க. அதுவும் ஒரு பொண்ணுக்காக…" என்று கேலியாக கூறிக் கொண்டு இருக்க, அந்த அறைக் கதவை திறந்தபடி உள்ளே நுழைந்தனர் இருவர். அவர்கள் வேறு யாரும் அல்ல நேற்று இந்த மூவரோடு இருந்த இருவர் தான்.

அதில் கோட் சூட் அணிந்தபடி குட்டையாக இருந்தவனோ, "டாஸ்க் கம்பிளிட்டட் நேத்ரன்" என்றிட அதை கேட்ட நேத்ரன் முகத்தில் குரூர சிரிப்பு உண்டாக, திரையை பார்த்தபடியே, "இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் தான் அடிச்சிக்க வைச்சிருக்கேன்… போக போக உங்களை ஆட்டி வைக்கிறேன் டா" என்று அறையே அதிரும்படி வெடித்து சிரித்தான் நேத்ரன்.


•••••••••••••••••


"ப்ச் இப்போ எதுக்கு எங்க பின்னாடியே வந்திட்டு இருக்க… என்ன எங்களை கண்காணிக்குறியா" என்று மார்பின் குறுக்கே கையை கட்டியபடி தனக்கு பின்னால் நடந்து வரும் அருந்ததியை முறைத்து பார்த்தான் சாண்டி.

"டேய் அவ அமைதியா தான வரா, நீ ஏன்டா தேவை இல்லாம கற்பனை பண்ணிட்டு‌ இருக்க, ஒருவேளை அவளுக்கும் நம்மை போல எதுவும் தெரியாம இருக்கலாம் இல்ல" என்ற வருணை உறுத்து விழித்தவன் அதன் பின் எதுவும் பேசாது திரும்பிக் கொண்டான்.

"எல்லாரும் இங்க வாங்க, இந்த இடம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு" என்று மாதங்கி கத்த, அனைவரும் அவ்விடம் விரைய, அவள் நின்றிருந்த இடம் சாதாரண தரையை போன்று இல்லாது ஏதோ மரக் கதவால் மூடப்பட்டு இருந்தது போன்று தோன்றியது.

"ஃபர்ஸ்ட் இதுக்குள்ள நானும் சாண்டியும் போய் பார்க்கிறோம், வருண் நீ மேல மாதங்கி அருந்ததிக்கு பாதுக்காப்பா இரு"

"ஏன் விது எல்லாரும் உள்ள போகலாமே. என்னை இருக்குனு தெரிஞ்சுப்போம்" என்ற வருணை இடைமறித்த சாண்டி,

"நோ வருண்… இங்கே நமக்கே தெரியாம ஏதோ மர்மமா இருக்கு. அதுனால நானும் விதுவும் மட்டும் போறோம். நீங்க எல்லாம் மேலேயே இருங்க" என்று யோசனையாக கூறினான் சாண்டி.

அதை கேட்டதும் அருந்ததி வேகமாக, "வேணாம் யாரும் உள்ள‌ போக வேண்டாம் அங்கே பேய்‌ எதாச்சும் இருந்தா என்ன செய்றது. இந்த வீட்டுல கண்டிப்பா ஏதோ அமானுஷ்யம் இருக்கு… என்னை நம்புங்க" என்றவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்த மரப்பலகை உடைந்து ஐவரும் அந்த இருட்டுக்குள் விழுந்து இருந்தனர்.

சட்டென்று நடந்த நிகழ்வில் ஐவருக்குள்ளும் ஓர் அதிர்வு ஏற்பட்டு இருக்க, பூச்சிகளின் கிர்.. கிர் சத்தமும், அவர்கள் மூச்சு விடும் சத்தமும் அன்றி அங்கு வேறெதுவும் கேட்கவில்லை.

"ந...நான் தான் சொன்னேன் இல்லை.. இப்போ பாருங்க.. போச்சு… போச்சு இனி யாருக்கு என்ன நடக்க போகுதோ" என்று அருந்ததி பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்த இருட்டுக்குள் அருந்ததியின் கரத்தை பிடித்து, ஏதோ ஒன்று தரதரவென்று இழுத்து சென்றுக் போக, "ஆ…ஆ… கா… காப்பாத்துங்க…"
என்றவளின் கதறல் அந்த சுரங்கம் எங்கும் ஒலித்து கொண்டிருந்தது.

விடையறியா வியுகத்தில் சிக்கி கொண்டு இருப்பவர்கள் அதில் வீழ்வார்களா அல்ல மீள்வார்களா?

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top