ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 14

உறவுகள் வலுப்பெற இரண்டு விஷயங்களை நிச்சயம் செய்ய வேண்டும். ஒன்று அன்பை வெளிப்படுத்த வேண்டும், இன்னொன்று அன்பை உணரவைக்க வேண்டும்.

ஜெய் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன் ஆகிற்றே. அவனுக்கு தென்னை மரம் டைரக்டாக கள்ளாக காய்ச்சினால் வேலை மிச்சம் என்று எண்ணுபவன்.

பூனை போல் தன் பொரிஉருண்டையை சுற்றியும் வந்தாச்சு, புலி போல் பாய்ந்து குதரவும் செய்தாச்சு, சுண்டெலி எதற்கும் மசிய மறுக்க, கிறுக்கு பிடித்தது கிராதகனுக்கு.

ஒருவேளை விலகி இருந்தால் நெருங்கி வருவாளா? அந்த முயற்சியில் தான் ஆள் இப்போது இறங்கி இருக்கிறான்.

வீணாக அவளிடம் வம்பு செய்வதில்லை. அவளுக்கு அவன் எப்போதும் புரியாத புதிர் தானே! எப்போது என்ன செய்வான்? என்ன செய்தால் தன் மீது இரக்கம் வந்து அனுப்பி வைப்பான் என்ற எண்ணம் தான் அவளுக்கு.

கணவன் மனைவி உறவை அவனும் புரிந்து கொள்ளவில்லை, அவளும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏதோ ஒரு கட்டாயத்தில் அவள் இங்கிருக்க, அவனும் தேவைக்காக அவளை பிடித்து வைத்திருக்கிறான்.

இப்படி பட்டும் படாமல் எந்நேரமும் பதட்டமான சூழ்நிலையிலேயே சுடரின் நாட்கள் நகர, அவள் திருமதி. ஜெய் கிருஷ்ணாவாகி ஒரு மாதமும் கடந்திருந்தது.

அன்று சுடரின் கிராமத்து பெரிய தலைகள் சிலர் ஜெய் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

ஊர் கோவிலில் திருவிழா… மருமகன் என்று முறையாக அவனுக்கு அழைப்பு விடுக்க, அவனும் வந்தவர்களை தேனொழுக பேசி உயர்தர உபசரிப்பு தான் வழங்கினான்.

வார்த்தைக்கு வார்த்தை என் பொண்டாட்டி என்று சுடரையும் தலைமேல் தூக்கி வைத்து தாங்க, வந்திருந்த பெரியவர்களுக்கு எல்லாம் மனம் குளிர்ந்து தான் போனது.

'அப்பன் ஆத்தா இல்லா பிள்ளையை எப்படி கரை சேர்க்க போறோம்னு நினைச்சுட்டு இருந்தோம், எங்க கவலை எல்லாம் காணா போச்சு' என்று அத்தனை பூரிப்பு அவர்களுக்கு.

"உங்க கல்யாணத்துக்கு பிறகு வர்ற முதல் திருவிழா, கண்டிப்பா குடும்பத்தோட வரணும் மாப்பிள்ளை. எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கு." என்று அவர்கள் அழைக்க,

"கண்டிப்பா மாமா… நம்ம ஊரு திருவிழா நான் வராம இருப்பேனா?" என்று சொன்னவன், "குட்டிமா… போய் பணம் எடுத்துட்டு வா" என்று மனைவியிடம் சொல்ல,

அவன் உரிமையான அழைப்பிலும், அன்பான உத்தரவிலும் தடுமாறி நின்றது என்னவோ சுடர் தான்.

என்ன பணம்? என்று அவள் புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,

"நம்ம ஊர் கோவிலுக்கு நம்ம பங்குக்கு ஏதாவது செய்யணும் தானே" என்று பக்கா நல்லவன் வேசம் போட்டவனை பாவம் அந்த வெள்ளந்தி மனிதர்கள் நம்பி தான் தொலைத்தார்கள்.

"அதெல்லாம் எதுவும் வேணாம் மாப்பிள்ளை. நீங்க வந்த மட்டும் போதும்" என்று மறுத்தவர்களிடம், "நீங்க என்னை மதிச்சு கூப்பிட்ட அதே உரிமையில தான் நானும் தர்றேன். வேணாம்னு சொல்ல கூடாது" என்றவன், இன்னமும் திரு திறுவென முழித்துக் கொண்டு நின்ற மனைவியிடம், "நீ என்ன மா இன்னும் இங்க நிற்கிற டேபிள்ல சாவி இருக்கும், லாக்கர்ல இருந்து பணம் எடுத்துட்டு வா" என்று அனுப்பி வைத்தான்.

அவளும் ஊரார் முன்பு தன் நிலையை வெளிப்படுத்த எண்ணாது சரி என்று தலையை ஆட்டி விட்டே மெதுவாக மாடியேறினால்.

அறைக்கு வந்து அவன் சொன்னது போல் சாவி எடுத்து லாக்கரையும் திறந்தாள். எவ்வளவு பணம் வைத்திருக்கிறான்? அவளே ஒரு நிமிடம் கண்களை விரித்து தான் அவைகளை பார்த்தாள்.

மறுநிமிடமே 'ஊர எத்தி சேர்த்து வச்சிருக்கான்' என்று ஜெய்யை திட்டியவள், எவ்வளவு பணம் எடுத்துக் கொடுப்பது? என்று குழம்பி தான் போனாள்.

கை நிறைய அள்ளி கொடுத்தால்? எவன் அப்பன் வீட்டு பணத்தை எவனுக்கு கொடுக்கிறது? என்று திட்டுவானோ என்ற பயம்,

அத்தனை கட்டுகளில் ஒன்றை மட்டும் எடுத்தவள், அதிலிருந்து இரண்டு ஐந்நூறு நோட்டை மட்டும் உருவிக் கொண்டு வந்து ஜெய் கையில் கொடுத்தாள்.

"என்னமா நீ? சாமிக்கு செய்ற விசயத்துல கஞ்சம் பிடிக்கிற? நம்ம ஊர் கோவிலுக்கு தானே செய்றோம்" என்று எண்ணி கூட பாராது மினி சூட்கேஸ் நிறைய பணத்தை அள்ளி கொடுத்தவன் பெரிய தலைகள் மனதில் உயர்ந்து நிற்க,

அவன் பணம் என்று உரிமையில்லாது அளந்து கொடுத்தவள் ஒரே நாளில் அகல பாதாளத்தில் தான் விழுந்தாள்.

'மாப்பிள்ளைக்கு இருக்க மனசு நாம தூக்கி வளர்த்த பிள்ளைக்கு இல்லையே. அவர் கொடுக்க நினைச்சாலும், இவ கொடுக்க விட மாட்ட போல. இந்த புள்ளை இப்படி மாறி நிற்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல" என்று ஊர் வந்து சேரும் வரை சுடர் தான் அவர்கள் வாய்க்கு எல்லுருண்டையாக அரைப்பட்டாள்.

இதற்கு நடுவில் கலாவதி வேறு மகன் கர்ணனாக வாரி வழங்குவதை பார்த்து புல்லரித்து தான் போனார்.

(இருக்கிற டிக்கெட்ல இந்த அம்மா தான் ரொம்ப பாவம். அவன் என்ன பண்ணினாலும் நம்பி தொலையுது. நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து ஏமாந்து போனால் பெரிய வலி மட்டும் தானே மிஞ்சும்.)

இப்போதெல்லாம் ஜெய்யின் நடவடிக்கைகளை சுடரும் அவதானித்து கொண்டு தான் வருகிறாள். அவள் அவனை கண்டு அஞ்சினாள் அவள் அருகிலேயே அவன் வருவது இல்லை. சேட்டைகள் வேறு குறைந்து இருந்தது.

ஆனால் இரவு கட்டி கொண்டு தூங்க மட்டும் மனைவி வேண்டும். அதற்கு மட்டும் அவனிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.

மன்மதராசாவா இருந்தவனை மங்குளிராசாவா மாத்தி விட்டுருச்சு.

இன்று காலை நடந்த சம்பவத்தை தான் மனதில் அலசியபடி துணிகளை மடித்து கொண்டிருந்தாள் சுடர்.

'திடீர்னு எதுக்கு ஊர்க்காரங்களுக்கு அவ்வளவு பணம் கொடுக்கிறார்? ஏதாவது சதி திட்டமா இருக்குமா?
என்கிட்ட கூட முன்ன போல காட்டுத்தனமாக நடந்துக்கது இல்ல. ஒருவேளை திருந்திட்டாரோ? இல்லையே அதுக்கு வாய்ப்பில்லையே' என்று அறிவு சுடராக அவள் யோசித்துக் கொண்டிருக்க,

உள்ளிருக்கும் பெண் மனமோ, 'ஏன் தப்பு பண்ற யாரும் திருந்தவே கூடாதா? ஒரு மனுசன் கெட்டது பண்ணா கேடு கெட்டவன்னு திட்ட வேண்டியது, நல்லது பண்ணா நடிக்கிறான்னு சந்தேகப்பட வேண்டியது.' என்று தன் பங்கிற்கு அவளை குழப்பி விட்டு உள்ளே சென்று ஒளிந்து கொண்டது.

அது சொன்னதையும் கேட்டு மொத்தமாக குழம்பி போன சுடர், தலையை பிடித்துக் கொண்டு லேப்டாப் டேபிள் முன் அமர்ந்திருந்த ஜெய்யையே சிறிது நேரம் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

'என்னாச்சு? ஏதோ ஆள் டல்லா இருக்க போல இருக்கு?' என்று எண்ணிக் கொண்டே அவனை ஆராய, அவனுக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அவளாக சென்று நலன் விசாரித்து நரபலியாக தயாரில்லை.

ஆனாலும் பெண் மனம் எதிரே ஒருவனின் அவஸ்தையை பார்த்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க மனமில்லாது, ஆடு தானாக தலையை கொண்டு விட்டது.

அவனை நோக்கி சென்றவள், சிறிது தள்ளியே நின்றுக் கொண்டு தலையை முன்னால் நீட்டி அவனை எட்டி பார்த்தபடி "சார்…" என்று மெதுவாக அழைக்க,

அவளை திரும்பி கூட பாராது, "ஏற்கனவே தலைவலி மண்டைய பொழக்குதுனு கடுப்புல இருக்கேன். வான்டடா வந்து வாங்கி கட்டிக்காத, ஓடிரு" என்று எச்சரிக்கை விடுத்தவனை பார்த்து, உள்ளுக்குள் அல்லு தான்.

இருந்தாலும் மனம் கேளாது, "ஸ்ட்ராங்கா காபி குடிச்சா சரியாகும். நான் போட்டு தரவா?" என்று கேட்டாள்.

திரும்பி அவளை பார்த்தவன், "சரி ரொம்ப ஆசை படுற போய் எடுத்துட்டு வா" என்று சொன்னதும், ஜெட் வேகத்தில் சுக்கு காபியோடு அவன் முன்னால் வந்து நின்றாள்.

'அந்த விஷயம் தவிர மத்த எல்லாத்துலயும் வேகம் தான்' என்று முணு முணுத்துக் கொண்டே அவள் நீட்டிய காபியை வாங்கி ஒரு மிடறு பருகியவன், "தூ…" என்று துப்பியே விட்டான்.

"என்ன எழவு டி இது?"

"சுக்கு காபி… சுக்கு மல்லி காபி குடிங்க அஞ்சே நிமிஷத்துல தலைவலி பறந்துடும்." என்று துள்ளாலாக கைகளை விரித்து சொன்னவளிடம்,

"நீயே குடி" என்று காபியை ஓரம் வைத்து விட்டு எழுந்து செல்ல இருந்தவனை, அமுக்கி பிடித்து உட்கார வைத்தவள்,

"குடிங்க" என்று அவளே அவன் வாய் அருகே கொண்டு செல்ல, அவள் நெருக்கம் கசக்குமா அவனுக்கு,

வேப்பங்காயில் கூட அமிர்தம் கடையும் வித்தகன், அவள் வாசம் நுகர்ந்தே சற்று முன் கசந்த காபியை உதட்டில் உறிஞ்சினான்.

சுடரோ கையில் எடுத்து கொடுக்க நினைத்து தான் நெருங்கியது, ஆனால் அவனோ பச்ச பிள்ளை போல பாசாங்கு காட்டி அவள் கையாலேயே குடித்தும் முடித்து விட்டான்.

"பார்த்து கப்பும் சேர்ந்து தொண்டைக்குள்ள போய்யிட போகுது" என்று தீர்ந்து போன கப்பில் அவன் காபியை உறிஞ்ச, கேலி செய்த மனைவியை முறைத்தான் ஜெய்.

"எங்க டி தலை வலி பறக்கல? என்னை ஏமாத்த பார்க்கிறியா?" என்று அவன் அடுத்த நிமிடமே நோய் குணமாகவில்லை என்று சீற,

அய்யோ! என்று ஆனது சுடருக்கு.

பேசாம தலைவலியோட சாகட்டும்னு விட்டிருக்க வேண்டியது. என்று மனதில் அவனுக்கு திட்டிக் கொண்டவள்,

"இருங்க வரேன்" என்று ஒரு கிண்ணத்தில் எண்ணையோடு வந்தாள்.

"இது என்ன?"

"எண்ணெய் ங்க… சில நேரம் உடம்பு ரொம்ப சூடா இருந்தா கூட இப்படி தலைவலியெல்லாம் வரும். கொஞ்சம் எண்ணெய் எடுத்து, தலைக்கு ஒரு குட்டி மசாஜ் பண்ணிவிட்டா எல்லாம் சரியாகிடும்" என்று ஆயுர்வேத மருத்துவம் சொன்ன மனைவியிடம்,

"ஹீட்ட தணிக்க இத விட சூப்பர் மெத்தட் ஒன்னு இருக்கு. அதுவேனா ட்ரை பண்ணலாமா?" என்று கேடி குறும்பு கண்களுடன் பிசியோதெரோபிக்கி தூண்டில் போட,

உஷாராகி கொண்டாள் அவன் ஆசை மனைவி.

ஹி… ஹி… இதையே டிரை பண்ணலாமே என்று சமாளிப்பாக சிரித்துக் கொண்டே சொன்னவள், எண்ணெய் யை கையில் எடுத்து சேரில் இருந்தவன் பின்னால் நின்று அவன் தலையில் தான் கை வைத்திருப்பாள்.

கேடி அவள் கையை பிடித்து முன்னால் தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், இப்போ தேச்சு விடு என்று அவள் இடையோடு கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்து தூங்கவே ஆரம்பித்து விட்டான்.

அவன் மடியில் அமர்ந்திருந்த சுடருக்கு ஊர் மேல போற பேயே என் மேல கொஞ்சம் வாயேன்! என்று அழைத்தது போல் ஆனது

அவன் பாரம் நெஞ்சை அழுத்த, அவன் உதடுகள் வேறு கழுத்தில் பட்டும் படாமலும் உரசிய படி அவளை அசௌகரியமாக்கி கொண்டிருந்தது.

விழிகளை தாழ்த்தி ஆறடி குழந்தைப் போல் தன் தோளில் தூங்கும் அரக்கனை பார்த்தாள்.

குறும்பு கண்கள் தன் குகைக்குள் ஓய்வு கொண்டிருக்க, அவளிடம் சில்மிஷம் செய்யும் சேட்டை பிடிச்ச விரல்கள் கூட பதிந்த தடம் மாறாது தான் அவள் இடையை சுற்றி இருந்தது.

பாவம்… நிஜமாவே முடியல போல இரக்கம் கொண்ட பெண் மனம், தன்னை சிறை வைத்திருக்கும் ராவணனுக்கே சேவகம் செய்தது.

மாங்கு மாங்கென ஜெய் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து விட்டவளுக்கும் தூக்கம் கண்ணை சொக்க, அவன் விட்டால் தானே எழுந்து செல்ல முடியும்.

சார்… என்னங்க… என்று அவனை எழுப்ப முயன்று தான் அழைத்தாள்.

அவள் உசுப்பலில் கண்களை கூட திறக்காது சட்டென்று அவளை கைகளில் தூக்கிக் கொண்டே எழுந்தவன், என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க என்ற அவள் பதட்டம் எதையும் காதில் கேட்காது கட்டிலில் கிடத்த,

ஆத்தே! என்று அவள் சுதாரித்து நகரும் முன் அவள் மீது படர்ந்திருந்தான்.

பாவம் பார்த்து கொஞ்சொண்டு எண்ணெய் தேச்சு விட்டது ஒரு குத்தமா? இப்படி என்னை எண்ணெயாக்குறீங்களே என்று அவன் மலைபோல் உடலுக்கு அடியே நசுங்கி கொண்டிருந்த அவன் மனைவி புலம்ப,

அதுவும் அவன் காதில் விழவில்லை.

புலம்பிக் கொண்டிருந்த இதழ்கள் இரண்டையும் தேன் மிட்டாய் போல் தன் அதரங்களுக்குள் அதக்கி சுவைக்க ஆரம்பித்து விட்டான்.

அவன் அதிரடி செயலில் அரண்டு போனவள், ஹ்ம்ம்… என்று முனங்கிக் கொண்டே, அவனிடம் இருந்து தப்பிக்க போராடிய படி, ஜெய்யின் புஜத்தில் அடித்து அவனை தள்ள முயன்றாள்.

சட்டென்று அவள் மீதிருந்து ஜெய் நிமிர, அவன் கவ்வி சுவைத்த அதரங்கள் இரண்டையும் அழுந்த துடைத்து கொண்டே, தன்னை விட்டு விட்டான் என்ற நிம்மதி பெருமூச் சில் நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் எண்ணங்கள் தவறு என்பதை அவன் செயலே தெளிவாக்கி கொண்டிருந்தது, அத்துடன் இன்று உன் கற்பிற்கு உத்திரவாதம் கிடையாது என்பதையும் நிரூபிக்கும் வகையில், ஒற்றை கையில் தலை வழியே தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டியவன், அவள் இமைக்கும் நொடிக்குள், அவள் உடையையும் நகட்டியிருந்தான்.

"ஆ ஆ… என்ன பண்றீங்க?" என்று அலரியவளை ஒரு பொருட்டாக கூட கருதாது, மீண்டும் அவள் மீது படர்ந்து, மங்கையில் கழுத்து வளைவில் முத்தம் பதித்து, மீண்டும் இதழ்களில் இன்ப கவி பாட ஆரம்பித்த தருணம் அது.

விட்டால் ஒரு அறை தன் பலம் மொத்தமும் திரட்டி.

பளார் என்று கன்னம் காய, அதன் பிறகே தூக்கத்தில் இருந்து விழித்தான் ஜெய்.

அவன் ஆசை மனைவி, ஆருயிர் அரக்கி அவன் அடியில் நசுங்கி கொண்டிருக்க, அவனோ மலைப்பாம்பாக அவளை சுருட்டி வைத்திருந்தான்.

அவள் ஆடை நழுவிய அங்கத்தை இவன் விழிகள் ஆராய, அவன் நெஞ்சில் கை வைத்து பலம் கொண்டு அவனை தள்ளி விட்டவள், அவசர அவசரமாக பெட் சீட்டை இழுத்து தன்னை முழுதாக மூடிக் கொண்டு நடுங்கியபடி, அவனை பார்த்து முறைத்தாள்.

அவளை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே யோசித்தவன்,

"என்னாச்சு?" என்று கேட்க,

"என்னாச்சா? கொஞ்சம் விட்டிருந்தா எல்லாம் முடிஞ்சு இருக்கு" என்று உதட்டை பிதுக்கி சொன்னவள், "நான் ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் சொல்லிட்டு, இப்படி வந்து பாய்றீங்க" என்று நடுங்கிய உடலை போர்வைக்குள் புதைத்துக் கொண்டே, கண்ணீரோடு புகார் சொன்ன மனைவியை பார்த்து
அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"ஓகே ஓகே… நான் வேணும்னு பண்ணல, ஏதோ தூக்க கலக்கத்தில நடந்துடுச்சு… தூங்கிட்டு இருக்கேனா? முழிச்சு இருக்கேனா பார்க்க மாட்டியா?" என்றவனை,

அடேய் இது அந்த கடவுளுக்கே அடுக்காது டா என்பது போல் பார்த்து வைத்தாள் சுடர்.

"தூக்கத்துல நடக்கிற வியாதி கேள்விப்பட்டு இருக்கேன். இது என்ன டா மேல பாய்ற வியாதி" என்று அழுகுரலில் கேட்ட மனைவியின், விரிந்திருந்த கருமணிகள் இரண்டும் அவனை மீண்டும் இன்பலோகம் அழைக்க,

சுயமில்லா நிலையில் கூட அவளை ஸ்பரிசத்த தேக சுகம் தன் மேனியில் உணர்ந்தவன், கள்ள சிரிப்புடன், "எனக்கு தூக்கம் வருது குட் நைட்" என்று விட்டு மெத்தையில் குப்புற விழுந்து கண்களை மூடிட,

சுடரோ, 'இவன் வேணும்னு பண்ணானா? நிஜமா தூக்கத்துல பண்ணானா?' என்ற பாரிய சந்தேகத்தில் அவனையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் சட்டென்று கண்களை திறந்து அவளை பார்க்க, பதறி போனவள் பட்டென்று சறுக்கி படுத்து தலைவரை பெட் சீட்டை மூடிக் கொண்டாள்.

கஞ்சமில்லா சிரிப்பு அவன் இதழ்களில், அவன் மேனி தீண்டிய அந்தரங்க பூரிப்புகள் அவள் உடலில்.

"நாளைக்கு காலை ல ஊருக்கு போகலாம். அங்க உனக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு" என்று சந்தோசமாக சொன்னவன் நிம்மதியாக தூங்கினான்.

'சர்ப்ரைஸ்ஸா எனக்கு ஆப்பா தெரிலையே!' என்ற பதட்டத்துடன் வழமை போல் அவள் தூக்கம் தொலைத்தாள்.

இட மாற்றம் மன மாற்றம் கொண்டு வருமா? மரண ஓலத்திற்கு வித்திடுமா?
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 15



'சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?'


பணத்தின் பின்னால் பல நாடுகள் ஓடிய அசுரன், இயற்கை காற்றை சுவாசித்தப்படி, கண்களை குளிர்ச்சியாக்கும் பச்சை பசேலென்ற வயல்வெளி கடந்து, வெள்ளிமலை கிராமத்திற்குள் வந்து கொண்டிருந்தான் தன் குடும்ப சகிதம்.


அவன் இங்கு வருவது இது முதல் முறை அல்ல தான்.


தொழில் ரீதியாக வரும் போதெல்லாம், தொழில் விருத்தி இடமாக மட்டுமே தான் அந்த வயல்கள் அவன் கண்ணுக்கு தெரியும். இப்போது அதன் அழகை கண்கள் ரசிக்கிறது, ஏசி காற்றை தாண்டி இயற்கை காற்றை மனம் சுவாசிக்க முயல்கிறது.


காரின் முன்னிருக்கையில் ஜெய் அமர்ந்திருக்க, அவன் அருகே அமர்ந்து காரை செலுத்தி வந்தது என்னவோ தினேஷ் தான். ஜெய்யின் ஆளின் ஆல் அழகு ராஜா அவன் தானே. அவனையும் கூடவே இழுத்துக் கொண்டு தான் வந்திருந்தான்.


பின்னிருக்கையில் சுடரும், கலாவதியும் அமர்ந்திருந்தார்கள்.


இதற்கு முன் இந்த கிராமத்திற்கு வரும் போது, அவன் பாதுகாப்பிற்காகவே நாலு வண்டி கார்ட்ஸ் வருவார்கள்.


இப்போது அவன் பாதுகாப்பிற்கு தான் மொத்த கிராம மக்களும் இருக்கிறார்களே.


மனைவி என்ற ஒற்றை உறவு, வீட்டு மாப்பிள்ளை என்ற பாரிய பாதுகாப்பை மரியாதையுடன் அவனுக்கு கொடுக்கிறதே.


ஊர் எல்லையிலேயே மேள தாளத்துடன் பண்ணையாருக்கு வரவேற்பு வேறு.



ஊர் பஞ்சாயத்து தலைவர் இளமதியின் தந்தை வேதாசலமே நேரில் வந்து அவனை அழைத்து சென்றார்.


அவர் வீட்டு வாசலில் கார் நின்ற போது, நண்டான், சிண்டான் துவக்கம் மொத்த கிராமமும் அங்கே தான் கூடியிருந்தது.


அவன் ஒன்றும் காணாத அதிசயம் கிடையாதே!


'கட்டையில போக, எங்க குடியை கெடுக்குறானே வெளங்காம போக' என்று அவன் பாதம் கூட இந்த மண்ணில் பட கூடாது என்று ஆயிரம் சாபங்கள் விட்ட வாய் தான், இப்போது ஆ வென பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.


தீனாவும், அவன் படையும் கூட அங்கே தான் நின்று கொண்டிருந்தார்கள்.


மவுசு குறையாது, நெஞ்சை நிமிர்த்தி இந்த நாட்டுக்கே ராஜா நான் தான் என்ற தோரணையில் ஜெய் இறங்க, வஞ்சகம் கொண்டு, தங்கள் கோபத்தை கூட வெளிப்படையாக காட்ட வக்கத்து போய் தான் நின்றிருந்தார்கள் இளைஞர் பட்டாளங்கள்.


ஜெய்யை தொடர்ந்து மற்றவர்களும் இறங்க, ஊரார் கண்ணுக்கு சுடரின் தேக பளபளப்பு தெரிந்த அளவிற்கு உள்ள குமுறல்கள் தெரியவில்லை.


அவள் இறங்கியதும் தன் பாட்டியை தான் தேடி வந்து ஒட்டிக் கொண்டாள்.


"ஏத்தா… அப்புறமா ஆத்தாள நலம் விசாரிக்கலாம். வந்து மருமகன் கூட சேர்ந்து நில்லு" என்று ஜெய் அருகே இழுத்து விட்டு ஆரத்தி எடுத்தே வீட்டிற்குள் அழைத்து சென்றார்கள்.


ஜெய் வீடு அளவிற்கு இல்லை என்றாலும் அந்த கிராமத்தில் இது தான் பெரிய வீடு. இரண்டு மாடி வீடு. மழை காலத்தில் ஆலமரம் நட்டுகிட்டால் கூட வீட்டிற்குள்ளேயே பஞ்சாயத்தை வைத்து தீர்ப்பு சொல்லி முடித்து விடும் அளவிற்கு பெரிய கூடாரம். அதில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது நெல் மூட்டைகள்.


"நான் ஃபேக்டரியை திறந்ததால பஞ்சத்துல இருக்கோம், பட்டினில சாகுறோம் சொன்னீங்க, இத பார்த்தா அப்படி தெரிலையே" என்று நெல் மூட்டைகளை கண்களால் காட்டி, யார்க்கும் கேட்கா வண்ணம் சுடரின் காதை ஜெய் கடிக்க,


கோபமாக ஒரே ஒரு பார்வை தான் அவளிடம். அதை தாண்டி அவளாலும் அந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாதே.


ஹாலில் கிடந்த வெல்வெட் சோபாவை கைகளால் தூசி தட்டியபடியே "உட்காருங்க தம்பி" என்று வேதாச்சலம் அவனை அமர சொல்ல, ஜெய்யும் அமர்ந்தான்.


"நீங்க வந்தது ரொம்ப சந்தோசம்" என்று அவர் பேச ஆரம்பிக்க, ஜெய்யின் விழிகளோ அந்த வீட்டை தான் அலசிக் கொண்டிருந்தது.


அவர் பேச ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே, "இது யார் வீடு?" என்று பேச்சின் நடுவே சட்டென்று அவன் கேட்க,


"நம்ம வீடு தான்." என்றார் வேதாசலம்.


ஜெய் பார்வையோ இளமதி, வேதாசலம் என்று வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் மீது தான் இருந்தது.


சுடரின் புகைப்படம் எதுவும் அங்கே இல்லை. அவள் வீடு இல்லை என்பதை நொடியில் புரிந்துக் கொண்டவன், சுடரை பார்க்க, அவளோ கண்காட்சிக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்ட பொம்மை போல் தான் தன் பாட்டியின் கைகளை இறுக பற்றிக் கொண்டு நின்றிருந்தாள்.


அந்நேரம் “தம்பி மோர் எடுத்துக்கங்க” என்று வேதாசலத்தின் மனைவி சில்லென்று மோர் கொண்டு வந்து கொடுக்க, மறுப்பு ஏதும் சொல்லாது மெல்லிய புன்னகையுடன் எடுத்துக் கொண்டான்.


கலாவதிக்கும், தினேஷுக்கும் கூட அவர் மோர் கொடுத்து விட்டு, சுடருக்கு கொடுக்க, அவளோ வேண்டாம் என்று தலையசைத்து மறுத்து விட்டாள்.


சொந்த ஊரிலேயே விருந்தாளி போல் நடத்தும் உணர்வு அவளுக்கு. அவள் விருந்தாளி தானே. திருமணம் முடிந்து புகுந்தகம் சென்று விட்டால், பிறந்தகம் விருந்தினர் மாளிகையாக மாறிவிடுகிறதே எல்லா பெண்களுக்கும்..


“அப்புறம் மா தங்கச்சி… சம்மந்தி வரலைங்களா? நாங்க அன்னைக்கு வந்தப்ப கூட அவரை பார்க்கலையே?” என்று தீனாவின் தந்தை ஜெய்யின் தந்தையை பற்றி கேட்க,


அத்தனை நேரம் பிரகாசமாக இருந்த கலாவதி முகம் நொடியில் சுருங்கி தான் போனது.


அவர் தங்களுடன் இல்லை என்றா சொல்வார்? அப்படி சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று ஆயிரம் கேள்விகள் அடுத்தடுத்து வருமே. அதனால் தன் மகன் மரியாதை குறைந்து விடுமோ என்ற பயம் தான் அவருக்கு.


“இல்ல… அவுக எப்பவும் வேலை வேலைனு தான் ஓடிட்டே இருப்பாக. நானும் கூப்பிட்டேன் ஒரு எட்டு மருமக ஊருக்கு போய்ட்டு வந்துடலாம் வாங்கனு… வேலை இருக்குனு சொல்லி மறுத்துட்டாக” என்று அவர் சமாளித்து கொண்டிருக்க,


முதல் முறை பொய் சொல்லும் அன்னையை ஜெய் கூட எதற்கு இந்த பொய்? என்பது போல் தான் அவர் முகத்தையே பார்த்தான்.


சுடரும் இத்தனை நாட்கள் ஜெய் தந்தை பற்றி யோசித்தது கிடையாதே. அவளும் இப்போது தான் ஏன் அவர் அந்த வீட்டில் இல்லை? என்று யோசனையாக ஜெய்யைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“நாங்க நேரடியா அவரை அழைக்கலைனு எங்க மேல ஏதும் கோவத்துல வரலையா? சம்மந்தி அம்மா நீங்க அவர் போன் நம்பர் தாங்க, நாங்க ஒருமுறை அவர் கிட்ட பேசுறோம்” என்று வேதாசலம் கேட்க,


ஈ ஆடவில்லை கலாவதி முகத்தில். “அதெல்லாம் அவுக எதுவும் நினைக்க மாட்டாக” என்று சமாளிக்க முயன்றவரை அவரும் விடுவதாக இல்லை.


வற்புறுத்தி போன் நம்பர் கேட்க, கலாவதிக்கு தெரிந்தால் தானே கொடுப்பார்.


“இல்ல…” என்று கலாவதி ஏதோ சொல்ல வர, “கலாவதி” என்ற ஆண் குரலில் மொத்த கூட்டமும் திரும்பி பார்த்தது.


வெள்ளை வேட்டி, சட்டையில், முன் நெற்றியில் சில வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்க, ஜெய்க்கு இணையாக சற்றும் கம்பீரம் குறையாது, மீசையை முறுக்கிக் கொண்டே மிடுக்குடன் வந்து நின்றார் பாலகிருஷ்ணா.


அவரை பார்த்ததும் கலாவதி ஆவென வாயை பிளந்து கொள்ள, ‘இவர் எதுக்கு இப்போ தேவையில்லாத ஆணி போல வந்து இறங்கி இருக்கார்?’ என்று கோபமாக தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.


ஜெய்யின் சாயல் அவர் ஒவ்வொரு அங்கத்திலும் தெரிய, அவர் தான் அவன் தந்தை என்று தனியாக விளக்க அவசியமின்றி, “வாங்க சம்மந்தி” என்று வாய் நிறைய உறவாக அழைத்து உபசரித்தார்கள் கிராமவாசிகள்.


அவரும் இத்தனை வருட பிரிவு என்பதை மறைத்து, ஆத்மார்த்த கணவன் மனைவி போல் தான் நடந்துக் கொண்டார்.


மகனுக்கும், மனைவிக்கும் நடுவே மகனை இடித்து கொண்டு வந்து அமர்ந்தவருக்கு கலாவதி தான் நகர்ந்து இடம் கொடுத்தார்.


காலாவதிக்குமே பாலா திடீரென்று இப்படி வந்து நின்றது அதிர்ச்சி தான். இயல்பாக அவரோடு பேசியது கூட கிடையாது. ஆனால் இன்று உரிமையாக அவரே வந்து அருகே அமரவும், அந்த வயதிலும் கூச்சத்தில் கன்னங்கள் செம்மை பூசிக் கொண்டது கலாவதிக்கு.


மனைவியின் சிவந்த கன்னங்களை அவரும் இன்று தான் முதல் முறை ரசிக்கிறார். மெல்லிய புன்னகையுடன் மகன் பக்கம் திரும்ப, அவனோ அரைகிலோ மிளகாயை அரைத்து முகத்தில் பூசியது போல் அத்தனை அனலாக எரித்து கொண்டிருந்தான்.


அவன் அனல் பார்வை அவருக்கு சுவாரஸ்யமாக, ஏளனமாக சிரித்துக் கொண்டவர், “ரொம்ப சூடா இருக்க போல… கையில இருக்க மோர குடி. பித்தம் குறையும்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நக்கலாக சொல்லி கொண்டே, வேதசலத்தை பார்த்தார்.


“கலாவதி சொன்னா நம்ம ஊர் விசேஷம் கண்டிப்பா வரணும்னு. ஆனா பாருங்க அந்த நேரம் பார்த்து முக்கியமான வேலை பல அடுத்தடுத்து நின்னுடுச்சு. நான் வரல நீங்க எல்லாம் போய்ட்டு வாங்கனு சொல்லி அனுப்பி வச்சாலும், அவ மூஞ்ச தூக்கி வச்சிட்டு வந்தது மனசு கேட்காம நானும் பின்னாடியே வந்துட்டேன். எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும், வீட்டு பொம்பளைங்க தானே நம்ம சொத்து. அவங்க சந்தோசமா இருந்தா தானே நாமளும் நிம்மதியா இருக்க முடியும்” என்றவரை கலாவதி ‘இந்த மனுஷன் இவ்வளவு பேசுவாரா?’ என்று வியந்து தான் பார்க்க,


'இவர் எதுக்கு இப்போ வாயிலயே வடை சுடுறார்?' என்பது போல் தான் தந்தையை பார்த்து வைத்தான் ஜெய்.


“சரியா சொன்னீங்க சம்மந்தி” என்று தீனா தந்தை ஆமோதிப்பாக சொல்லி புன்னகைக்க, கூடியிருந்த எல்லார் முகத்திலும் கள்ளமில்லா புன்னகை பரவியது.


பெரியவர்களுக்கான பேச்சு தொடர, மெதுவாக எழுந்த ஜெய்,


"அப்புறம் நாங்க கிளம்புறோம்" என்று சொல்ல,


"என்னாச்சு தம்பி? ஏதாவது குறை வச்சிட்டோமா? திருவிழாவுக்கு வந்துட்டு இப்படி உடனே கிளம்புறேன் சொல்றீங்க?" என்று வேதாசலம் பதற,


"அய்யோ நான் ஊருக்கு போறேன் சொல்லல, எங்க வீட்டுக்கு போறேன் சொன்னேன்." என்றவன் சுடர் அருகே சென்று "நம்ம வீட்டுக்கு போலாமா?" என்று கேட்க,


அவளோ வியப்பாக தான் அவனை பார்த்தாள்.


"தம்பி அங்க அவ்வளவு சௌகரியம் இருக்காது. இதுவும் உங்க வீடு மாதிரி தானே இங்கேயே தங்கிகங்க" என்று சொல்ல,


"இவ்வளவு நாள் என் பொண்டாட்டி அந்த வீட்ல தானே வாழ்ந்தா. ஒரு இரண்டு நாள் நான் இருக்க மாட்டேனா? எனக்கு அவ கூட அவ வீட்ல இருக்கணும்" என்று சுடரை பார்த்துக் கொண்டே சொன்னவனை அத்தனை பெண்களும் வாயடைத்து பெருமையாக பார்க்க,


'அம்புட்டு நல்லவனா நீ?' என்பது போல் தான் இருந்தது சுடரின் பார்வை.


மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணடித்தவன், "போலாமா?" என்று கேட்டுக் கொண்டே பெரியவர்களை பார்த்து இரு கைகூப்பி விடை பெற்று செல்ல,


மகன் பின்னால் செல்ல இருந்த மனைவி கையை பிடித்து தடுத்த பாலாவோ தன் அருகே அவரை நிறுத்தி கொண்டார்.


அவர் கையை பிடிக்கவும், என்ன? என்பது போல் ஒரு பார்வை கணவனை பார்த்த கலாவதி,


"நானும் அவனோட அங்க மருமக வீட்லயே இருக்கேனே!" என்று சொல்ல,


"உன் புள்ளை ஒன்னும் பால்குடி மறவாத பச்ச புள்ளை இல்ல. இவ்வளவு நாள் மகன் பின்னாடி சுத்தின. இனி கொஞ்சம் புருஷனையும் கவனி மா" என்றவர் பேச்செல்லாம் உதறல் தான் அந்த ஐம்பது வயது பெண்மணிக்கு.


"உங்கள கவனிக்க என்ன இருக்கு?" எனக்கு என் மகன் தான் முக்கியம் என்று சேலையை இழுத்து சொருகி கொண்டே


"அய்யா!" என்று அழைத்து கொண்டே செல்ல இருந்தவர் கையை அவர் விடவே இல்லை.


"அவனை அவன் பொண்டாட்டி பார்த்துப்பா. நீ உன் புருஷனை பாரு" என்றவர் குரலில் சிறு கண்டிப்பு இருக்க,


சபை முன் முரண்டு பிடிக்காது, கலாவதியும் மகன் சென்ற வழியை தவிப்பாக பார்த்துக் கொண்டே அமைதியாக கணவர் அருகே நின்றிருந்தார்.






 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌄💐💐💐

என் போதை தீயே!

அத்தியாயம் : 16

சுடரின் வீட்டு வாசலில் ஜெய்யின் கார் நிற்கவே இடம் இல்லை. மிகவும் குறுகலான தெரு தான் அது. வேதாச்சலம் வீட்டில் காரை விட்டு விட்டு, தன் மனைவியின் கையை பிடித்துக் கொண்டே நடந்து தான் அவள் வீடு வந்து சேர்ந்தான் ஜெய்.

சற்று உயரம் குறைவான ஓட்டு வீடு, வீட்டின் முன் கூரையோ ஜெய்யின் நெற்றியில் மோதும் அளவிற்கு தாழ்ந்து இருக்க, சுடருக்கே அவனை இங்கே தங்க வைப்பது பாவமோ என்று தான் தோன்றியது.

சற்று தயக்கமாக கணவனை அவள் திரும்பி பார்க்க, அவன் பார்வையோ பிடித்தமின்மையாக தான் அந்த இடத்தை அலசியது.

ஒருசில கான்கிரீட் வீடுகள், ஓட்டு வீடுகள், ஓலை வீடுகள் என எல்லாம் கலந்த கலவையாக தான் இருந்தது அந்த தெரு.

வீட்டிற்குள் சற்று குரலை உயர்த்தி பேசினால் கூட மொத்த தெருவுக்கும் கேட்கும் போல,

கொஞ்சம் சலித்தபடி ஜெய் நிற்க,

“நீங்க வேணா பஞ்சாயத்து தலைவர் வீட்லயே தங்கிகோங்க” கீச் குரலில் சொன்னால் அறிவு சுடர்.

அதன் பிறகே போட்டு கொண்டிருக்கும் வேசத்தை மறந்து, முகத்தில் எக்ஸ்பிரசனை காட்டி தொலைத்தது ஜெய்க்கு உணர்வு வந்தது.

நொடியில் பாவணையை மாற்றி, இதழ் பிரித்து சிரித்துக் கொண்டவன்,

“இதான் நம்ம வீடா?” என்று கேட்டுக் கொண்டே ஷூவை வாசலில் கழட்டி விட்டு குனிந்து உள்ளே போக, அவன் தலையை பதம் பார்த்தது கதவு நிலை.

கிழக்கு பார்த்த வாசல் வைத்த வீடு, காலை வெயில் உள்ளே விழாமல் இருக்க, ஓடுகளை தாழ்வாக போட்டு கட்டியிருந்தனர். அந்த முன்னேற்பாடு தான் ஜெய்யின் முன் நெற்றியை வீங்க வைத்தது

வெளி ஓடுகளை கவனித்து கொண்டே குனிந்து உள்ளே சென்றவன், கதவு நிலையில் முட்டி “ஆஆ” என்று மெல்லிய முனங்களுடன் மீண்டும் வெளியே வந்தவனுக்கு தலை வின்னென்று வலிக்க,

எதட்சை செயலாக சுடரும் “அய்யோ!” என்று பதறி தான் அவன் நெற்றியை தேய்த்து விட்டாள்.

“பார்த்து போக மாட்டீங்களா?”என்று அக்கறையாக கடிந்து கொண்ட மனைவியின் அருகாமையை அந்த நொடி ரசிக்க தான் செய்தான் ஜெய்.

சூடு பறக்க நெற்றியை தேய்த்து விட்டவள், அவன் விழிகளை பார்க்க,

ஆடாது, அசையாது அவளை தான் விழுங்கி கொண்டிருந்தது அவன் விழிகள் இரண்டும்.

அந்த தெரு மொத்தமும் ஜெய்யை காணாத அதிசயம் போல் நின்று இன்னும் பார்த்துக் கொண்டிருக்க,

சுடருக்கோ, சுற்றம் மறந்து அவனை நெருங்கி நின்றது ஒருமாதிரி ஆகி போனது. உடனே விலகி நின்று கொண்டவள்,

“குனிஞ்சு வாங்க” என்று சொல்லிக் கொண்டே அவளும் குனிந்து வீட்டிற்குள் செல்ல,

ஜெய்யும் நன்றாக குனிந்தே உள்ளே சென்றான்.

இருவரின் காலனிகளையும் பத்திரமாக உள்ளே கதவுக்கு பின்னால் எடுத்து வைத்தார் காமாட்சி பாட்டி. அவரின் ஐம்பது ரூபா பேட்டா செருப்பு வெளிய தான் கிடந்தது. பளபளவென இருந்த பேரன், பேத்தி செருப்பில் கூட தூசு பட்டிட கூடாது என்று அந்த மூதாட்டி அத்தனை பவியமாக அதை பத்திர படுத்தினார்.

முன் கூரை தாழ்வாக இருந்தாலும், வீட்டிற்குள் மேற்கூரை உயரமாக தான் இருந்தது. இல்லையேல் ஜெய் குனிந்து குனிந்தே கழுத்து வலியோடு தான் வீடு திரும்பியிருப்பான்.

கழுத்தை நெட்டி நிமிர்த்தி நின்ற ஜெய் விழிகளோ அரை கணத்தில் அந்த அறை மொத்தத்தையும் அளவிட்டது.

அரை கணமே கொஞ்சம் அதிகம் தான் அந்த அறைக்கு.

கொஞ்சம் அகலமான ஒரே அறை. அதில் இடது பக்கம் பாதி வரை வளர்த்து விடப்பட்ட சுவருக்கு அந்த பக்கம் சமையலறை, வலது பக்க சுவரை ஒட்டி ஒரு வயர் கட்டில், அதுக்கு அடியில் இரண்டு டிரங்குபெட்டி. அதுவும் துரு பிடித்த நிலையில் இருந்தது.

மூலையில் ஒரு பழமையான கோரபாய் சுருட்டி வைக்க பட்டிருக்க, அதன் அருகே இரும்பு பீரோ, அதற்கு அந்த பக்கம் குட்டி மரசெல்பில் முருகர், பிள்ளையார், அம்மன் படம் என்று சில சாமி படங்கள் சுவரில் தொங்கி கொண்டிருக்க, மரசெல்பில் குட்டி காமாட்சி விளக்கு என பூஜை அறை ஓவர்.

உட்கார ஒரு நாற்காலி கூட இல்லை. ஒரே ஒரு ஸ்டூல் தான் கிடந்தது. அதிலும் டேபிள் ஃபேன் இடம் பிடித்திருந்தது.

வந்த அரை நொடியில் வியர்வையில் குளித்து நின்றான் ஜெய்.

ஏசி அறையில் சொகுசாக வளர்ந்த உடம்பு, இந்த குருவி கூட்டுக்குள் அரை நொடி கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.

அவன் அவதியாக முகத்தை சுருக்கி கொண்டே, கழுத்தில் வடிந்த வியர்வையை துடைத்தப் படி அன்னானர்ந்து மேலே ஃபேனை தேட,

அதை எங்க கொண்டு வந்து மாட்ட என்பது போல் தான் பனை கம்பிகள் ஆங்காங்கே வளைந்து கிடந்தது மேற்கூரை.

அவன் அவதியை உணர்ந்த காமாட்சி பாட்டியோ, கொல்லப்புற கதவை திறந்து விட்டு, ஸ்டூலில் இருந்த டேபிள் ஃபேனை போட்டு விட,

ஸப்பா… என்று இதழ் குவித்து ஊதிக் கொண்ட ஜெய்யோ, ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்.

“அறிவே… அவுகள உட்கார சொல்லு” என்று பாட்டி, சுடரின் தோளில் இடித்து சொல்லிக் கொண்டே, அடுக்களைக்குள் சென்று சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து சுடர் கையில் கொடுத்து, ‘அவுகளுக்கு கொடு’ என்று கண்ணசைக்க,

தன் ஊர் மக்களும், பாட்டியும் அவனை தலையில் தூக்கி வைத்து கொடுக்கும் மரியாதையை பார்த்து சற்று எரிச்சல் தான் வந்தது சுடருக்கு.

இருந்தாலும் தன் வீடு தேடி வந்தவனை வெறுக்காது அனுசரித்து உபசரிக்க தான் செய்தாள் மங்கை அவளும்.

“உட்காருங்க” கட்டிலை காட்டிட, அவன் அமர்ந்ததில் புதை குழி போல் உள்ளே சென்றது அந்த தொய்வான காட்டில். எங்கே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து விடுமோ என்று பயந்து எழுந்தே விட்டான்.

“விழ மாட்டீங்க, நடுவுல உட்காருங்க” என்று சுடர் சொல்ல,

“இல்ல பரவாயில்லை” என்று மறுத்தவன் கொல்லப்புற கதவு திறந்து கிடக்க அந்த பக்கம் சென்று பார்த்தான்.

வீட்டின் பின்புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முட்காடும், புதர்களும் தான் மண்டி கிடந்தது. வீட்டை ஒட்டி சிறுது இடம் திருத்தி, பூச்செடிகளும், வேப்ப மரமும் நின்றிருந்தது.

சில்லென்ற காற்று முகத்தில் மோதி செல்ல, உள்ளே இருந்து வேகுவதை விட இது தேவலாம் என்று தான் தோன்றியது.

‘ரெண்டு நாள் இங்க எப்படி ஓட்ட போற ஜெய்? இதுல அந்த ஆள் வேற என்ன பிளான்ல வந்து இறங்கி இருக்கார்னு தெரியல’ என்று தந்தையை திட்டிக் கொண்டே அவன் கவலையில் உழன்று கொண்டிருக்க,

தயங்கிய விழிகளோடு அவன் முன் வந்து நின்றாள் சுடர்.

“உங்களுக்கு இங்க கஷ்டமா இருந்தா, தலைவர் வீட்ல தாங்கிகோங்க” என்று மீண்டும் அதையே சொல்ல,

இருக்கும் எரிச்சலில் இவ வேற என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டாலும், வெளியே புன்னகை முகமாவே, “கஷ்டம் தான். என் பொண்டாட்டிக்காக இதை கூட செய்யலைனா நான் என்ன புருஷன். பழகிக்கிறேன்” என்றவன் மாறுதல் அனைத்தும் மங்கைக்கு வியப்பாக தான் இருந்தது.

“இதெல்லாம் உங்க இடமா?” என்று கண் முன்னால் கிடந்த முட்காட்டை காட்டி கேட்க,

இல்லை என்று தலையை ஆட்டிய சுடரோ,

“புறம்போக்கு இடம். ஆனா நிறைய பேர் அவங்க அவங்க தேவைக்கு ஆக்கிரமிக்க ஆரம்பிச்சிட்டாங்க”

உண்மை தான். ஒவ்வொரு வீட்டின் பின் புறத்திலும் அவர்கள் பாகத்திற்கு நேராக இருந்த இடம் திருத்தப் பட்டு, மரம், செடிகள், கோழி பண்ணை வரை ஆரம்பித்து இருந்தார்கள்.

“நீங்க பண்ணா தப்பு இல்ல. அதுவே நான் சொந்தமா இடம் வாங்கி கம்பனி ரன் பண்ணா உலகமகா குத்தம்” என்று குத்தலாக சொன்னவன்,

“அவனவன் தகுதிக்கும், திறமைக்கும் ஏத்த மாதிரி அடுத்தவனை ஏமாத்திட்டு தான் இருக்கான். அப்படி இருந்தா தான் இந்த காலத்துல பொழைக்க முடியும். இல்ல பிழைக்க தெரியாதவன், கையாலாகதவன்னு உலகம் முத்திரை குத்திடும்.” என்றவனை சுடர் புருவம் சுருக்கி பார்க்க,

“நீங்க எதுவும் பிளான் பண்ணலையா இந்த இடத்தில?” என்று கேட்டான்.

“அரசு இடத்த ஆக்கிரமிக்கிறது தப்பு தானே”

“ரொம்ப தான் நேர்மையா இருக்க போல” என்று சொல்லிக் கொண்டவன் பார்வை அவள் கழுத்தில் கிடந்த தாலியை வருடி சென்றது.

நேர்மையான வழியில் அது அவள் கழுத்தில் ஏறவில்லையே, அவளும் தானே ஏமாத்துக்காரி என்பது போல அவன் இளக்காரமாக இதழை சுளிக்க,

குற்றவுணர்வில் தலையை தாழ்த்தி கொண்டாள் அறிவு சுடர்.

பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்ட ஜெய், “தவறை கூட திருத்த வாய்ப்பு இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே, மனைவியின் தோளில் கை போட்டவனை அவன் மனையாளும் புரியா பார்வை பார்க்க,

“இன்னைக்கு நைட் கோவில்ல வச்சி உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றான் மயக்கும் புன்னகையுடன்.

அவன் சர்ப்ரைஸ் என்னும் போதெல்லாம் இவள் சகலமும் ஆடி போய் தான் நிற்கிறாள்.

இப்போதும், ‘என்ன பண்ண திட்டம் வச்சிருக்கான்?’ என்று அதிர்ந்து விழிகளை விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

ஜெய்யோ, பார்வையை அலைய விட்டபடி, அங்கேயிருந்த பாத்ரூமுக்குள் செல்ல போக,

அதிர்ந்து நின்றிருந்த சுடரோ, ஏதோ யோசனை வந்தவளாக, “ஒரு நிமிஷம்” என்று சொல்லிக் கொண்டே, அவனுக்கு முன்பாக உள்ளே சென்று, கழிவறையை சுத்தம் செய்த பிறகே “இப்போ போங்க” என்று கையை முந்தானை சேலையில் துடைத்து கொண்டே வெளிய வர,

பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டவன் உள்ளே சென்றான்.

அவன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். இந்த மாதிரி ஒரு இடத்தில் தானாக விரும்பி வந்து மாட்டுவோம் என்று.

சுடரின் வீட்டில் வசதி வாய்ப்பு இருக்காது என்று தெரியும். ஆனால் இப்படி அடிப்படை வசதிக்கு கூட இல்லாது அவதி பட நேரிடும் என்று நினைக்கவில்லையே.

அங்கே பாட்டியோ, திருமணம் முடித்து முதல் முறை வீட்டுக்கு வந்த பேரனுக்கு ஆக்கி போட அடுக்கலைக்குள் எதையோ உருட்டி கொண்டிருந்தவர், ஓடி வந்து பீரோவை திறந்து கட்டம் போட்ட சட்டையும், வெள்ளை வேஷ்டியும் எடுத்து சுடர் கையில் கொடுத்து,

“உன்ன கட்டிக்க போறவருக்காக முன்னாடியே எடுத்து வச்சது. இதெல்லாம் அவுக போடுவாகளா?” அவன் வசதி வாய்ப்பை கண்ட அந்த வயோதிக பெண்மணி தயக்கமாக கேட்டாலும், செய்ய வேண்டியது தன் கடமை என்று அவளிடம் உடையை கொடுத்தார்.

“இதெல்லாம் எதுக்கு ஏலா?” என்று மறுப்பாக கேட்டவளுக்கும், இதை அவன் எப்படி எடுத்து கொள்வான் என்ற தயக்கமும் இருந்தது.

பாட்டி அன்பாக தான் எடுத்துக் கொடுத்தார். ஆனால் வில்லங்கம் பிடித்தவன், ஏதும் விவகாரமாக எடுத்து சண்டை போடுவானோ? என்ற பயம் அவளுக்கு.

வேண்டாம் என்று சொல்லி அவர் மனதை நோகடிக்கவும் மனம் இல்லாது வாங்கி கொண்டாள்.

ஜெய் வெளியே வந்ததும் அவனிடம் உடையை நீட்டு, “பாட்டி கொடுத்தாங்க” என்று தயங்கியபடி சொன்னாள்.

‘இருநூறு ரூபா சட்டை, நூறு ரூபா வேஷ்டியில் மறுவீட்டு விருந்தை சிக்கனமாக முடித்து விட்டது பாட்டி’ என்று எண்ணிக் கொண்டான் ஜெய்.

அவன் வீட்டு கர்டன் துணி கூட இதை விட நல்ல கிளாத்தில் இருக்கும்.

அதை அப்படியே மனைவியுடன் சொல்லி வேசம் கலைக்க விரும்பாது, “நைஸ் கலர்” என்று சொல்லிக் கொண்டே, “இப்பவே மாத்தனுமா?” என்று மனைவியிடம் கேட்க,

அவளும் “உங்க விருப்பம்” என்று மட்டும் சொன்னவள், பாட்டிக்கு உதவி செய்ய அடுக்களைக்குள் சென்று விட்டாள்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் உடையை மாற்றி விட்டு உள்ளே வந்த ஜெய்,

“பாட்டி” என்று அழைக்க, அவரும் எட்டி அவனை பார்த்தார்.

“எப்படி இருக்கேன்? உங்க பேத்திக்கு ஏத்தவனா இருக்கேனா?” என்று சட்டை கையை முட்டி வரை மடக்கி விட்டுக் கொண்டே, மீசையை முறுக்கி விட,

கண்களில் நீர் ததும்பியது அந்த மூதாட்டிக்கு.

“நல்லா இருக்க ய்யா” பூரிப்பாக சொன்னவர், ஒரு பத்து நிமிசத்தில சோறாக்கிடுவேன். அதுவரை இந்த முறுக்க கடிச்சிட்டு இருங்க” என்று சொல்லிக் கொண்டே சில்வர் டப்பாவில் இருந்து அச்சி முறுக்கு, முந்திரி கொத்து என சிறிய தட்டில் வைத்து அவனிடம் கொடுக்க, அவனும் புன்னகையோடு வாங்கி கொண்டவன், ஒற்றை கையில் தட்டையும், இன்னொரு கையில் கட்டிலையும் தூக்கி கொண்டு கொல்ல பக்கம் சென்று, முறுக்கை கடித்து கொண்டே காத்து வாங்க ஆரம்பித்து விட்டான்.

பேத்தி வருகிறாள் என்று அவரே வீட்டில் சில பலகாரங்கள் செய்து வைத்திருந்தார்.

அவரின் ஆசைகள் எதையும் அவன் நிராகரிக்கவில்லை. எதை கொடுத்தாலும் இன்முகமாக வாங்கி கொண்டதே அவருக்கு பரம திருப்தி.

மீண்டும் அடுக்களைக்குள் வந்தவர்,

காய் வெட்டி கொண்டிருந்த சுடரின் அருகே கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டே,

“சந்தோசமா இருக்கியா?” என்று கேட்க,

விழிகளை உயர்த்தி அவரை பார்த்தவள், “ஹ்ம்ம் நான் சந்தோசமா இருக்கேன் ஏலா.” என்றாள் ஜீவனில்லா குரலில்.

“பொய் சொல்ற. வயசானவ தானே என்னத்த கண்டுபிடிச்சுடுவானு என்கிட்டேயே பொய் சொல்ற. ஊர் உன் பவுச பார்த்து நீ சொல்ற பொய்யை நம்பும். ஆனா உன்ன சின்னதுல இருந்து தூக்கி வளர்த்த உன் ஏலா நம்ப மாட்டா.

நீ கெட்டு போய் தான் கல்யாணம் பண்ணினனு சொன்னத நான் நம்ப மாட்டேன். என் வளர்ப்பு தப்பாது. சொல்லு ஆத்தா எதுக்கு இந்த நாடகம்?” என்றதும் பொலபொலவென கண்ணீர் தான் வந்தது சுடருக்கு.

‘வெளி தோற்றம் தாண்டி என் மனதை புரிந்து கொள்ளும் ஒரே ஜீவன். அவர் என்னை நம்புகிறார் இது போதும் எனக்கு’' என்று புது தைரியம் பிறந்தது.

இந்த வயதான காலத்தில் அவரின் நிம்மதியை குலைக்க விரும்பாது,

“பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணினேன். ஆனா அவர் அந்த பொய்ய உண்மையா மாத்த போறேனு சொல்றார்.” முழுதாக உண்மையை உரைக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. மேற்பூச்சாக சொன்னால்.

“உனக்கு அவரை பிடிக்கலையா?” என்று பாட்டி கேட்க,

‘அவன் நம்ம எதிரி, நெல்லு விளையுற பூமிய நஞ்சா மாத்தின அரக்கன். அவனை எதிர்த்து தானே பழக்கம், பிடித்தம் எப்படி வரும்?’' என்று சுடர் மனம் பினாத்தினாலும்,

“தெரியல” என்று பதில் சொன்ன பேத்தியை புருவம் சுருக்கி பார்த்தவர்,

“ஊருக்காக ஓடினது எல்லாம் போதும். இனி உனக்காகவும் கொஞ்சம் வாழு” என்றார்.

சாதாரண தாய்மார்கள் போல் அவரும் தன் பிள்ளை நலனை மட்டும் யோசிக்க,

அவன் எம கிராதகன் ஆயிற்றே. பேத்தி நல்வாழ்க்கையை தொடங்க வேண்டி கொண்டவர், பேத்தி மனதை போல பேரன் மனதை அறியாது, அவளை கோத்து விட்டார்.

மாற்றம் ஒன்றே மாறாதது…

ஆனால் சிலரின் மாற்றங்கள் வினையானது அல்லவா!
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என் போதை தீயே!


அத்தியாயம் 17


அங்கே ஜெய், சுடரின் வீட்டில் வசதி குறைவில் நொந்து கொண்டிருக்க, இங்கே வேதாச்சளம் வீட்டில் அவனை ஈன்றெடுத்த புண்ணியவதியோ, ஒரே அறையில் பழைய கணவரின் புது அவதாரத்தில் வெட வெடத்து தான் நின்றிருந்தார்.


கணவன், மனைவி தானே என்று ஒரே அறையை அவர்களுக்கு ஒதுக்கி இருக்க,


பலநாள் அன்னியவாசி ஜோடியோ புதுமண தம்பதிகள் போல் வெட்கம், நாணம், சீண்டல், தீண்டல் என ஐம்பதின் முடிவில் காதலின் முதல் பக்கத்தை திறக்க ஆரம்பித்தார்கள்.


“என்ன மா வாசல்லயே நின்னுட்ட, உள்ள வா” என்று பாலகிருஷ்ணா தன் மனைவியை அழைக்க,


அவருக்கு தனி அறையில் பாலா முன் நிற்பதே சங்கோஷமாக தான் இருந்தது.


“நானும் மருமக வீட்டுக்கு போறேனே!” கணவரோடு இயல்பு பேச்சு கூட அவருக்கு வரவில்லை. ஸ்கூல் பிள்ளை வாத்தியாரிடம் அனுமதி கேட்பது போல் கேட்டு நின்றார்.


புருவம் சுருக்கி மனைவியை ஆழப்பார்வை பார்த்த பாலாவோ,


“ஏன் உன் புள்ளை நீ இல்லாம தூங்க மாட்டானா? அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு கலாவதி. அவனும் அவன் பொண்டாட்டி, பிள்ளைங்க தான் இனி அவன் குடும்பம். நீ எதுக்கு தேவையில்லாத தலைவலியா நடுவுல இருக்கணும்னு நினைக்கிற. நீயும், நானும் இனி தனி குடும்பம். முதல்ல என்னை பூச்சாண்டிய பார்க்கிற போல பார்க்காத” என்று மனைவி தன்னை தீண்டத்தகாதவன் போல் பார்த்து வைப்பதில் எரிச்சல் வந்தது அவருக்கு.


“அப்படியெல்லாம் என் புள்ளையும், என் மருமகளும் என்னை தலைவலினு நினைக்க மாட்டாங்க. இவ்வளவு நாள் இல்லாம திடீர்னு வந்து வெறிச்சி வெறிச்சி பார்த்தா பூச்சாண்டி போல தான் இருக்கும்” என்று கலாவதியும் மகனோடு போக அனுமதிக்காது குறுக்கே நிற்கும் கணவனை சாட நினைத்தாலும், சுத்தமாக அவருக்கு அந்த கோப தொனி வரவில்லை. பாவமான குரலில் சொன்னார்.


அவர் விழிகளின் பரிதவிப்பையும், தன்னை பார்த்து நடுங்கும் உடலையும் பார்த்த பாலாவுக்கோ ‘ஏன் இத்தனை காலம் என் மனைவியை நான் விலகி இருந்தேன்?’ என்று அவர் மீதே கோபம் தான் வந்தது.


ஊர் குறை சொல்லி விட கூடாது என்று இளமை காலத்தில், ஒற்றை பிள்ளைக்காக போராடிய போதும் இதே பார்வையை தான் பார்த்து வைத்தார் கலாவதி.


என் மனைவி மணி கணக்காக என்னோடு பேச வேண்டும். எனக்காக காத்திருக்க வேண்டும், விரல் கோர்த்து நடை பழக வேண்டும், செல்ல சண்டையிட வேண்டும், வீட்டில் எனை ஆள வேண்டும், கட்டிலில் என் ஆளுமைக்கு உருக வேண்டும் என்று எல்லா ஆணுக்கும் இருக்கும் ஆசை அவருக்கும் இருந்தது.


ஆனால் அது எல்லாம் கலாவதி புண்ணியத்தில் நிராசையாக போனதே.


பிள்ளை தேவை எதுவென்று அறிய முடிந்த அவருக்கு, கணவன் தேவை அறிய முயலவில்லை.


தாயாக மகன் மீது பாசம் பொழிந்தவர், மனைவியாக கணவன் மீது காதலை கடைகண்ணில் கூட காட்ட மறந்தார்.


தந்தை சொல்லுக்காக ஒரு திருமணம், கடமைக்காக ஒரு குழந்தை இதில் கணவர் காணாமல் தான் போனார்.


கலாவதி யாக திருமண பந்தத்தை தூக்கி செல்ல முயலவும் இல்லை, பாலாவும் அந்த உறவை காக்க கருதவில்லை.


வாக்குவாதம், சண்டையென்று எதுவும் இல்லை. பேசினால் தானே கருத்து வேறு படும். இங்கே தான் பேச்சே இல்லையே.


இதுவரை தனிக்காட்டு ராஜாவாக இருந்ததெல்லம் போதும். எஞ்சிய வாழ்வை வாழ என் மனைவி வேண்டும்.


முறைக்கும் மகன் தான் என்றாலும், அவன் என் மகன் ஆகிற்றே, என் வாரிசு என்று சொல்ல அவனும் வேண்டும்.


நாற்பதில் நாய் குணம் கடந்து, அவர் நல்வாழ்வை தேடி வந்திருக்க,


‘கொஞ்சம் அவகாசம் கொடுங்க, இப்படி ஒத்த ராத்திரில உருமாறி வந்தா நான் எப்படி எடுத்துகிறது’' என்று உதறல் இருந்தாலும், அவர் சொன்னதில் மகன் மட்டும் தான் மனதில் பதிந்தான் கலாவதிக்கு.


அவர்கள் இருவர் மட்டுமின்றி தினேஷும் வேதாசலம் வீட்டில் தான் இருந்தான்.


ஜெய் மதிய உணவு காமாட்சி பாட்டி வீட்டில் தான் என்றாலும், அக்கம் பக்கம் சொந்தம் பந்தம் என ஒரு கூட்டமே கூடி தான் விருந்து வைத்தது.


தலைவாழை இலை போட்டு சாப்பிட அமர்ந்தவன், முன்னால் பாட்டி கொண்டு வைத்ததோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாக சிலதை தான்.


ஆனால் “மருமகனே உங்களுக்காகவே ரவா லட்டு பண்ணேன். ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க.


கோவில்ல கால் நாட்டி இருக்கிறதுனால அசைவம் சமைக்க முடியல, வாலை பூ வடை, வாழை தண்டு பொரியல், உடம்புக்கு ரொம்ப நல்லது இதையும் சாப்பிடுங்க.”


என ஆரம்பம் முதல் இறுதி வரை அன்பு மழை பொழிய, இங்கே ஜெய்யோ சாப்பிடவும் முடியாது, மறுக்கவும் முடியாது அல்லோலப் பட்ட படி தான் அனைத்தையும் வயிதுக்குள் தள்ளினான்.


இதையெல்லாம் வெறும் பார்வையாளராக மட்டுமே நின்று பார்த்து கொண்டிருந்தாள் அறிவு சுடர்.


இரவு கோவிலுக்கு செல்ல எல்லாரும் தயாராகி கொண்டிருந்தனர்.


மதியம் உண்ட நளபாகத்தில் ஜெய் அடுத்த உடைக்கு தாவி உருண்டு கொண்டு வர,


சுடரும் குளித்து முடித்து, குளியலறையிலேயே உடையை மாற்றி கொண்டு வெளியே வந்தாள்.


சிவப்பு நிற மெல்லிய பட்டில், கூந்தலில் இருந்து சொட்டிய சில துளி நீர் கழுத்து வளைவில் திவலைகளாக உருண்டு கிடக்க, இதழ் கொண்டு துடைத்து விட ஆசை தான் அவள் மணாளனுக்கு


ஆனால் அவள் அலறல், முக சுழிப்பு இல்லாத தீண்டல் வேண்டும். சும்மா சும்மா தொட்டு உசுபெத்தாம இனி மொத்தமா வேணும். அதுக்கு வழிய பாரு என்று மனமும் உடலும் உந்த, தாவி அணைக்க பரபரத்த கைகளை அழுந்த மூடிக் கொண்டே, ஜெய்யும் சென்ட் அடித்து கொண்டு மைனராக அவளுக்கு இணையான சிவப்பு நிற சட்டை, வெண்ணிற வேஷ்டியில் தயாராகி நின்றான்.


காமாட்சி பாட்டியோ, ஒத்த அறையில் உடை மாற்றி கிளம்ப மருமகனுக்கு அவதியாக இருக்கும் என்று எண்ணி பக்கத்து வீட்டில் குளித்து, அங்கேயே உடை மாற்றி கொண்டு,


‘அறிவே நான் முன்னாடி போறேன். நீ அவுகளை கூட்டிட்டு வா’ என்று ஒருசில ஆட்களோடு கோவிலுக்கு சென்று விட்டார்.


ஆனால் இங்கே சுடருக்கோ அவன் முன் நிற்கவே உதறல் தான்.


அவனை திரும்பி கூட பாராது, பீரோ கண்ணாடி முன்னால் நின்று ஈர தலையை குளிச்ச பின்னல் போட்டு, கூந்தலை உதறி விட சில துளி நீர்கள் அங்கே ஓரமாக அமர்ந்து போனை நொண்டி கொண்டிருந்தவன் மீது தெறித்து அவன் கவனத்தை அவள் புறம் திருப்பியது.


விழிகளை நிமிர்த்தி தன் ஆசை மனைவியை பார்த்தான். அவளோ அவன் ஆசைகளை தூண்டி விட்டதை அறியாது, ஜாக்கெட்டில் இருந்த கயிறை கட்டுவதற்காக போராடி கொண்டிருந்தாள்.


சேலைக்குள் அது மாட்டிக் கொண்டிருக்க, இழுத்து பார்த்து சோர்ந்து போனவள் முதுகை மோதியது உஷ்ன மூச்சு.


விழிகளை உயர்த்தி பீரோ கண்ணாடி வழியே தன் பின்னால் நின்ற கணவனை பார்த்து மெல்லிய நடுக்கம் மங்கையவள் உடலில்.


மூச்சு காற்று மோதிய முதுகை அவன் கைகள் மென்மையாக வருட, இவள் மூச்சை உள்ளிழுத்து அசையாது நின்றிருந்தாள்.


கண்ணாடி வழியே அவள் விழிகளை பார்த்த ஜெய்யும், சேலைக்குள் மாட்டி இருந்த கயிற்றை எடுக்க, உடலை எக்கி அவன் விரல்கள் நுழைய இடம் கொடுத்தவள் கண்கள் இரண்டையும் இறுக்க மூடிக் கொண்டு தான் நின்றிருந்தாள்.


அவனே கயிறை கட்டி விட்டு, பின்னால் இருந்து அணைத்து, கழுத்து வளைவில் முத்தம் வைக்க, ஏற்கனவே சில்லிட்டிருந்தவள் உடல் மேலும் சில்லிட்டது.


செம்ம அழகா இருக்க டி என்று சொல்லி கொண்டே கண்ணாடியில் இருவர் இணைப்பையும் ஜெய் பார்க்க, அவளும் விழி திறந்து அவன் விழிகளை தான் பார்த்தாள்.


ஒப்பனை ஏதும் இல்லா அவள் அழகு அவனை வாட்ட, ஆண்மைக்கு இலக்கணமாக விளங்குபவன் அழகு அவள் மனதில் துளியும் சலனத்தை ஏற்படுத்தவில்லை என்பதே நிஜம்.


அவன் சலனம் அவளை கட்டிலில் கொண்டாடி தீர்ப்பதில் இருக்க, பெண்ணவள் சலன தன்னை கொடுத்தாள் வாழ்க்கை அல்லவா கேள்வி குறியாகும்.


அவள் ஒன்றும் புத்தன் இல்லையே. ஆசைகளை அடக்கி வாழ, அவளுக்கும் ஆசை வந்தாள், அழிவது அவள் நிம்மதியா? ஆணவன் அகம்பாவமா?

 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என் போதை தீயே!


அத்தியாயம் 18


ஜெய், தன் கைச் சிறையில் அணைத்தபடி அவன் மனைவியை பீரோ கண்ணாடி வழியே பார்த்து கொண்டிருக்க,


இதயம் பட படக்க அவன் அணைப்பில் நின்றிருந்தவளுக்கு அவனை விலக்க பயம் தான்.


விழி உயர்த்தி அவன் விழிகளை ஒருமுறை பார்த்தவள், “கோவிலுக்கு நேரமாச்சி” என்று மெல்லிய குரலில் சொல்ல,


ஹ்ம்ம் என்று தலையை ஆட்டி கொண்டே ஜெய் பின்னால் நகர்ந்து நின்றான்.


சுடரும் நெற்றியில் பொட்டு வைத்து கொண்டே அவசர அவசரமாக வெளியேற எத்தணிக்க, அவள் தளிர் கரங்களை பற்றி இருந்தான் ஜெய்.


மென்மையாக தான் பிடித்தான். ஆனால் அதுவே அவளுக்கு உதறலை கொடுத்தது.


அவன் தொடுகை புதிது இல்லை தான். ஆனாலும் மனதால் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாத கணவனின் விழி தீண்டல் கூட அசௌரியத்தை தானே கொடுக்கும்.


“கோவிலுக்கு போறோம். கொஞ்சம் சுத்தமா போகணும்.” ஏடா கூடமா ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் தான் அவளுக்கு.


“ஹ்ம்ம் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, சாமி படத்திற்கு முன்பிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்து விட,


அசந்து தான் அவனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் சுடர்.


“இப்போ போகலாம்” என்றவன் முன்னே நடக்க,


கண்ணாடியில் அவன் வைத்து விட்ட குங்குமத்தை பார்த்த சுடர் மனதிலோ சிறு சஞ்சலம்.


எப்போதும் முரடன், திமிர் பிடித்தவன், அரக்கன் என்று தானே அவள் மனதில் பதிந்திருந்தான்.


முதல் முறை மனிதனாக அவனை பார்க்க வைத்தது, தன் பாட்டி மீது அவன் காட்டும் அன்பும், அக்கறையும்.


கணவனாக அவனை உணர வைத்தது காமமில்லா பார்வையுடன் குங்குமம் வைத்த இந்த நொடி..


ஆனால் அடுத்த கணமே ‘இல்லை இல்லை இவன் அரக்கன் தான். என் ஊரை அழிக்க வந்த ராட்சசன்” என்று அவன் குற்ற வழக்குகளை மனதுக்கு நினைவு படுத்தியபடி, கதவை பூட்டி கொண்டே சிறிது இடைவெளி விட்டு ஜெய்யுடன் நடந்தாள் அவன் சரி பாதி.


இருவரும் கோவிலை அடைந்த சமயம், பூஜை ஆரம்பித்து இருந்தது.


அமைதியாக சுடர் தன் பாட்டி அருகே சென்று நிற்க,


அவளை பார்த்த படியே தினேஷ் அருகே சென்று நின்றான் ஜெய்.


அப்போது தான் பாலகிருஷ்ணாவும் கலாவதியும் கூட வந்து சேர்ந்தார்கள்.


பாலகிருஷ்ணாவோ மனைவியின் கையை பிடித்து தன் அருகே நிறுத்திய படி கம்பீரமாக நின்று சாமி கும்பிட,


இத்தனை பேர் மத்தியில் அவருடன் இணைந்து நிற்பதே ஒரு மாதிரி தான் இருந்தது கலாவதிக்கு.


அத்தனை பேர் மத்தியில் அவர் விழிகள் மகனை தான் தேடி அலைப்பாய்ந்தது.


மனைவியை கவனித்த பாலகிருஷ்ணாவும், “என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்க, சாமி கும்பிடு கலாவதி” என்று ஆளுமையான குரலில் மெதுவாக தான் சொன்னார்.


ஆனால் இத்தனை காலம் தள்ளி இருந்தே பழகிய அவர் மனைவிக்கோ அது கட்டளையாக பதிய, ஆள் அரண்டு போய் தான் பாவமாக அருகே நின்று இறைவனிடம் மகனின் ஆயுளுக்கு வேண்டுதல் வைக்க ஆரம்பித்தார்.


அம்மனுக்கு பூஜை முடிய முதல் மரியாதை கூட, ஜெய்யை அழைத்து அவனுக்கு தான் செய்தார்கள்.


பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து இருக்கிறானே. அதற்காக தான் கடவுளின் முதல் அனுகிரகம் அவனுக்கு.


அவனுக்கு மரியாதை அளிக்கும் போதும், அவன் மனைவி ஓரமாக நின்றாள் முறையாகுமா? சில பெண்கள் சுடரையும் இழுத்து அவன் அருகே விட்டார்கள்.


தங்கள் பிள்ளைகளை பார்த்து காமாட்சி பாட்டியும், கலாவதியும் பூரித்து போக, மகன் தான் என்றாலும் அவனின் மொள்ளமாரி தனம் அனைத்தும் அறிந்த தகப்பனால் இதை சகித்து கொள்ள முடியவில்லை தான். முகத்தை திருப்பி கொண்டு நின்று விட்டார்.


ஜெய்யும் அவன் கழுத்துக்கு வந்த சாமி மாலை, பிரசாதம் அனைத்தையும் தன் தோளோடு உரசி நின்ற மனைவி பக்கம் எல்லாம் தள்ளி விட்டான்.


அவளும் அன்னியோன்ய தம்பதிகள் போல் அனைத்தையும் வாங்கி கொள்ள,


மேள சத்தத்தில் ஒரு சில வயோதிக ஆசாமிகள் அருள் வந்து சாமி ஆடி அருள் வாக்கு சொல்ல,


ஏகத்துக்கும் கடுப்பாகி போனாள் சுடர்.


பிறந்ததில் இருந்து இதே ஊரில் தான் இருக்கிறாள். ஒருமுறை கூட சாமி அவளுக்கு அருள் வாக்கு சொல்லவில்லை.


ஊரை அழிக்க வந்தவன் கொஞ்சம் நன்கொடை கொடுத்ததும், மாலை மரியாதை என்ன? அருள்வாக்கு என்ன?


‘சாமி கூட காச பார்த்தா தான் கண்ணை திறக்கும் போல’ மனதில் வெம்பி கொண்டே அருகே அமைதியாக நின்றிருந்தாள்.


அந்த சமயம் பாலகிருஷ்ணா போன் அடிக்க, அழைப்பு எண்ணை பார்த்தவர் சற்று தள்ளி பேச செல்ல,


தந்தை கூட்டத்தை விட்டு நகர்ந்து செல்வதை அரை கண் வழியே பார்த்த ஜெய் விழிகளோ, ஓநாய் பார்வையை தினேஷ் மீது வீச,


அவனும் ஆல் கிளியர் என்பது போல் கண்களை மூடி திறந்து சிரித்துக் கொண்டான்.


சாமி ஆடி, பக்தர்களுக்கு எல்லாம் திருநீர் வழங்கி ஒருவாறு பூஜை முடிந்து, எல்லாம் கரகாட்டம், கணியான் ஆட்டம் பார்க்கம் இடம் பிடித்து அமர்ந்த சமயம்,


ஜெய் தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான்.


“நீங்க வந்து பூஜையில் கலந்து கிட்டது ரொம்ப சந்தோசம் தம்பி. ராவு உச்சி பூசை இருக்கு. அது இத விட நல்லா இருக்கும். கண்டிப்பா அதுலயும் நீங்க கலந்துக்கணும்* என்று சொன்ன வேதாச்சலத்திடம்,


கண்டிப்பா… அதுக்கு முன்னாடி இந்த ஊருக்காக ஒன்னு பண்ண நினைக்கிறேன் என்றவன் தினேஷை பார்த்து விழியசைக்க,


அதற்காகவே காத்திருந்தவன் போல், சில பத்திரங்களை தன் பாஸ் கையில் கொடுத்தான்.


இத்தனை நாள் உங்களோட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொண்டே, அந்த பாத்திரத்தை வேதாசலம் கையில் கொடுத்தவன்,


உங்க வாழ்வாதாரத்துக்கு இடைஞ்சலாக, இந்த மண்ணுக்கு விசமா இருக்கிற அந்த ஃபேக்டரி ய நான் க்ளோஸ் பண்றேன். அந்த இடத்தை கூட ஊருக்காக இஷ்ட தானமா எழுதி கொடுக்கிறேன் என்றதும், யார் அதிர்ந்தார்களோ இல்லையோ,


அவன் சகபத்தினி முகத்தில் ஈ ஆடவில்லை.


ஏக அதிர்ச்சி தான் அறிவு சுடருக்கு.


இவன் இவ்வளவு நல்லவன் இல்லையே என்ற பார்வை அவள் வீச,


அதே சந்தேகத்துடன் தான் அதிர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தான் தினகரன்.





 
Status
Not open for further replies.
Top