ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என் போதை தீயே!


அத்தியாயம் 19



ஜெய், பேக்டரியை மூடுவதாக சொல்லி, அந்த இடத்தையும் ஊருக்கு எழுதி வைத்திட, அத்தனை பேர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.


ஓசியில் வரும் சொத்து என்றால் யார் தான் விடுவார்கள்? அதிலும் அவர்களின் பலவருட போராட்டம் முடிவுக்கு வந்ததே! அதில் ஏக சந்தோசம் மக்களுக்கு.


“அறிவு, புருஷன் எவ்வளவு நல்லவர்ல”


ஒரு மாதம் முன்பு இந்த நல்லவன் தலையில் இடி விழுந்தது சாக மாட்டானா? என்று சபித்த வாய் இன்று வாழ்த்தியது.


ஊர் தலைவருக்கும் ஏக சந்தோசம் தான். ஆனாலும் பெரிய மனிதராக,


“நீங்க பேக்டரிய மூடுறேன் சொன்னதே ரொம்ப சந்தோசம் தம்பி. அந்த இடம் உங்க பெயர்லயே இருக்கட்டும்” என்று சொல்ல,


“இது நான் என் மனைவிக்காக பண்றேன். வேணாம் சொல்லாதீங்க. ஊர் நல்லதுக்காக பயன்படுத்திக்கோங்க. ஸ்கூல், ஹாஸ்பிடல் ஏதாவது கட்டுங்க. அதுக்கு ஆகுற செலவு கூட நானே ஏத்துக்கிறேன்” என்றவனை கடவுளாக தான் அனைவரும் பார்த்து வைத்தார்கள்.


அவன் ஊருக்காக கொடுக்கும் போது தனி மனிதனாக வேதாச்சலத்தாலும் மறுக்க முடியவில்லை.


“உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க தம்பி.


கடவுள் சந்நிதானத்தில வச்சி சொல்றேன். நீங்க இந்த கடவுளுக்கும் ஒருபடி மேல உயர்ந்துட்டீங்க தம்பி” என்று அவர் நெகிழ்வாக சொல்ல,


கலாவதிக்கு மகனை எண்ணி பூரிப்பு தான்.


முகம் கொள்ளா சிரிப்புடன், ஊரே கொண்டாடும் மகனை நிறைவாக பார்த்து கொண்டிருந்தார்.


அந்த மகிழ்ச்சி எதுவும் இன்றி சுடரின் பார்வை ஜெய் மீது சந்தேகமாகவே பதிந்து இருந்தது.


எதுக்கு இந்த நாடகம்? என்ற யோசனையில் சுடர் விழிகள் கணவனை விட்டு அகல மறுத்து இருக்க,


“நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்” என்று தலைவரை பார்த்து கேட்ட ஜெய்யை சுடரும் விழி சுருக்கி பார்த்தாள்.


“அந்த இடத்த நான் ஊருக்காக எழுதி இருக்கேன். ஆனா தலைவர் முறையில நீங்களும், சாட்சிக்கு இன்னும் சிலரும் கையெழுத்து போட்டா தான் சட்டபடி அந்த இடம் இந்த ஊர் சொத்தாகும்” என்றவன் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி கேட்க,


“அதுக்கென்ன தம்பி தாராளமா கையெழுத்து போட்டு தரோம்” என்றவர்,


கோவில் கர்ப்பகிரக நடையில் வைத்து கையெழுத்து போட தயாராக,


“ஒரு நிமிஷம் மாமா” என்று அவரை தடுத்திருந்தான் தீனா.


சுமுகமாக முடிஞ்சா அது நல்லதுக்கு இல்லையே.


இந்தா தூக்கிட்டான் கட்டைய. நாம கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் பண்ணலாம் என்று சுவாரசியமாக தான் ஜெய் விழிகள் தீனாவை ஏளனமாக ஒற்றை புருவம் உயர்த்தி, கோணலாக சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தது.


‘இன்னும் என்ன டா உன் பிரச்சனை?’ என்பது போல் வேதாசலம் பார்வை அவன் மீது பதிய,


“படிச்சி பார்த்திட்டு கையெழுத்து போடுங்க” என்றவன் கோவில் நடையில் இருந்த பத்திரத்தை பறித்து எடுத்துக் கொண்டே,


“அறிவு இதை வாசி’' என்று ஜெய் மனைவி கையிலேயே கொடுத்தான்.


“அதெல்லாம் எதுவும் தேவையில்ல, ஊருக்கு உதவி செய்ய நினைக்கிற மனுஷனை சந்தேகபடுறது ரொம்ப தப்பு” என்று தீனா தந்தை சுடர் கையில் இருந்து பத்திரத்தை பறிக்க முயல,


கை நீட்டி அவரை தடுத்திருந்தான் ஜெய்.


“பொறுமையா இருங்க மாமா. மச்சான் சொல்றதும் சரி தானே. ஊர் காரியம். படிச்சு பார்த்துட்டே கையெழுத்து போடுங்க” என்றவன் மனைவியை பார்த்து வாசி என்பது போல் விழியசைக்க,


அவளுக்கும், கணவன் மீது நம்பிக்கை இல்லை என்பதால் அதை சத்தமாகவே வாசித்தாள்.


ஜெய் முகவரி முதல் பத்தியிலும், வெள்ளிமலை கிராமத்திற்கு பொது சொத்தாக இஷ்ட தானம் கொடுப்பதாக அடுத்த பக்கத்திலும் இருந்தது.


நிஜமாகவே எழுதி வைத்து விட்டானா? வாசித்த அவன் மனைவியால் கூட இதை நம்ப முடியவில்லை.


வெடுக்கென்று அவள் கையில் இருந்து பத்திரத்தை பிடுங்கிய தீனாவும் கண்களை நன்கு விரித்து அதை பார்த்தான்.


உண்மை தான். இடத்தை ஊருக்கு இஷ்ட தானமாக எழுதி வைத்திருந்தான்.


அதிர்ச்சி நீங்க விழிகளோடு தீனா நிமிர்ந்து ஜெய்யை பார்க்க,


அவனோ நக்கலாக சிரித்து கொண்டே தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.


தீனா அதிர்ந்து நிற்கும் போதே, அவன் கையில் இருந்து பத்திரத்தை பறித்து வேதாசலம் கையெழுத்து போட,


“மிச்சத்தையும் படிச்சிட்டு போடுங்க” என்றான் ஜெய், உலகமகா உத்தமன் நான் தான் என்ற பாவத்தில்.


“உங்க மேல நம்பிக்கை இருக்கு தம்பி.” என்று அவர் மட்டுமல்ல இன்னும் சில ஊர் பெரிய தலைகளையும் கையெழுத்து போட வைத்தார்.


அவர்களை கண்களை சுருக்கி ஓநாய் பார்வை பார்த்த ஜெய் இதழ்கள் எல்லாரும் கையெழுத்து போட்டு முடியவே கோணலாக சிரித்து கொண்டது.


வேதாசலம் பத்திரத்தை பத்திரமாக அம்மன் பொருட்களை வைக்கும் பிரோவில் வைத்து பூட்டி வைத்தார்.


அதன் பிறகு கரகாட்டம் ஆரம்பமாக, குடு குடு பொடிசுகளும், கிடு கிடு பெருசுகளும் கடல் மணல் பரப்பிய தரையில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்கள்.


சில பக்திமார்க்க இளசுகள் உச்சி பூஜைக்கு, பூபடைப்பு, தோரணம், சாமிசிலை அலங்காரம் என்று பிசியாகி விட்டார்கள்.


அரைகுறை ஆடையுடன் மாராப்பு இன்றி முன்னழகு முட்டி கொண்டு நிற்க, இடை மொத்தமும் பளிச்சென்று கடை பரப்பியபடி, முப்பதை கடந்த இரண்டு பெண்கள் கரகத்தை ஓரமாக வைத்து விட்டு நாதனகாரர் இசைக்கு ஏற்ப ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை மணலில் காலை உரசிய படி உடலை அசைத்திட,


திருமணமான பெண்களுக்கு அவர்களை பார்க்க பார்க்க கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்தது.


“எதுக்கு இவளுகளுக்கெல்லாம் ஊர் காச செலவு பண்றாங்க? அவளுக மூஞ்சும் போட்டிருக்க டிரெஸ்சும்” என்று திட்டிக் கொண்டே பூஜைக்கு வரலாம் என்று நடையை கட்டி விட்டார்கள்.


‘நிஜமா பேக்டரிய மூடிட்டாரா? ஒருவேளை திருந்திட்டாரா? ஏன்? எதுக்காக?’ ஆயிரம் ஆயிரம் சந்தேக கேள்விகள் மூளைக்குள் ஓடிட, அவள் பார்வையோ சிந்தையின்றி கரகாட்ட பெண்களை வெறித்து கொண்டு தான் இருந்தது.


மனைவியின் குழப்ப முகத்தை பார்த்த ஜெய், இதழ்கடையில் சிரித்துக் கொண்டே,


“நான் தப்பு பண்ணிட்டேன்” என்றதும் வெடுக்கென்று அவனை திரும்பி பார்த்தாள் அறிவுசுடர்.


“அன்னைக்கு போல் டான்ஸ் இல்ல உன்னை கரகாட்டம் ஆட சொல்லி இருக்கணும்” என்றவனை சுடர் புரியாமல் பார்த்து வைக்க,


“சோ செக்ஸி. இந்த காஸ்ட்யூம் எங்க கிடைக்கும் கேட்டு வை போகும் போது வாங்கிட்டு போகலாம்” என்று அந்த பெண்களின் கஞ்சமில்லா மேனி வனப்பை கண்களால் காட்டி சொல்லிட,


அவனை புருவம் சுருக்கி முறைத்த அவன் மனைவியோ, அங்கே தரையில் அமர்ந்திருந்த தன் தோழி இளமதி அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.


அவளை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்து கொண்டிருந்தவன் அருகே வந்த தினேஷ்,


“பாஸ் நிஜமா பேக்டரிய ஊருக்காக எழுதி வச்சிடீங்களா?” கூடவே சுத்தும் அவனுக்கே ஏக அதிர்ச்சி.


பாலகிருஷ்ணாவின் கார்மெண்ட் கம்பெனியில் தீ விபத்து என்று புரளியை கிளப்பி விட்டு, அவரது காரியதரிசி மூலம் போன் போட வைத்தது என்னவோ ஜெய் சொல்லி தினேஷ் தான்.


அது ஏதோ அவரை வெறுபேற்ற என்று எண்ணியே அவனும் தன் தலைவனின் ஆக சிறந்த தொண்டனாக வேலையை கச்சிதமாக முடித்திருக்க,


அவர் போனில் குறுக்கு விசாரணை முடித்து, அது வெறும் புரளி என்று உறுதி செய்து விட்டு திரும்பி வரும் முன்னமே மகன் தன் திருவிளையாடலை முடித்து விட்டு மனைவியிடம் கிருஷ்ண லீலையில் இறங்கி இருந்தானே.


தீ விபத்து என்று புரளியை கிளப்பி விட்டது அவனாக தான் இருக்கும் என்று சரியாக யூகித்து அதை பெரிசாக்காது ஓரம் தள்ளியவர், அவனின் மாஸ்டர் பிளானை அறியாது தான் போனார்.


கோவில் உள்ளே திரை சீலை போட்டு மூடிய சிலையை இரு கை கூப்பி வணங்கி கொண்டிருந்த மனைவி அருகே வந்தவர்,


“கலாவதி, கொஞ்சம் அவருக்கு ஓய்வு கொடுமா. எந்நேரமும் கோரிக்கை வச்சிட்டு இருந்தா பாவம் கடவுளும் என்ன தான் பண்ணுவார்” என்று மனைவியை கேலி செய்த பாலா,


“அடுத்த பூஜை ஆரம்பிக்க நேரம் ஆகும். வா கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துட்டு வரலாம்” என்று அழைக்க,


“வயசானவங்களுக்கு தான் நீங்க சொல்ற ஓய்வு வேணும். என் அம்மா ஸ்டில் யங். அவங்களுக்கு கட்டளையிட உங்களுக்கு உரிமை இல்ல” என்று குறுக்க வந்து நின்றான் பாலா, கலாவின் புத்திர பாக்கியம்.


ஊருக்காக இந்த ஒத்த புள்ளையையும் பெத்துக்காம் இருந்திருக்கலாம் என்று அவர் நொந்த நாட்களும் ஏராளம்.


“யாருக்கு டா வயசு ஆச்சு?” என்று ஆவேசமாக கேட்டவர்,


“இப்போ கூட உனக்கு ஒரு தம்பி பாப்பா ரெடி பண்ற அளவுக்கு எனக்கு திறமை இருக்கு.” என்று மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனுடன் மல்லு கட்ட,


ஹிம் என்று கோணலாக சிரித்த ஜெய். “நினைப்பு தான்.” என்று சொல்லி கொண்டே அன்னையை எழ வைத்து, அங்கே ஓரமாக போட பட்டிருந்த இருக்கைகளில் அமர வைத்தவன், அவனும் அருகே அமர்ந்து கொண்டான்.


ஐம்பது வயதுக்கு மேல் அன்னைக்கு பாடிகாட் வேலை பார்க்கும் மகனை பார்த்து பாலாவுக்கு சிரிப்பு பீறிட்டு வர, அடக்கிக் கொண்டே மனைவிக்கு மற்றைய புறம் சென்று அமர,


அன்னையை தாண்டி தந்தையை முறைத்து பார்த்தான் ஜெய்.


அவரோ அவனைப் பார்த்து சிரித்து கொண்டே, கலுமா என்று அழைக்க,


அவர் மனைவியோ அது நான் இல்லைங்கோ என்ற தொனியில் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.


தந்தை, அன்னைக்கு செல்லப்பெயர் வைத்து அழைத்ததற்கு அன்னையிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க, பல்ப் வாங்கிய தந்தையை இதழ்களுக்கு குள் அடக்கிய ஏளன புன்னகையுடன் பார்த்து சிரித்தான் ஜெய்.


மகன் சிரிக்க அவமானமாக போனது. காலம் போன வயசுல இந்த காதல் நாடகம் தேவையா? தாயின் தலைக்கு பின்னால் எட்டி பார்த்து குசு குசுவென தந்தையை கலாய்த்தான் அவர்களின் கடமை புத்திரன்.


அவரும் அவனை போலவே பின்னால் சரிந்து,


“என் பொண்டாட்டி நான் எந்த வயசுல வேணாலும் காதலிப்பேன். எந்த கொம்பன் வந்து தடுப்பான்?” என்று மகனை குத்த,


அவரை பார்த்து உஷ்ணமாக ஜெய் முறைக்க,


ஏதாவது சொன்னியா ய்யா” என்று கலாவதி பின்னால் திரும்பி கேட்க,


கட்டாய புன்னகை ஒன்றை இதழ்களில் கொண்டு வந்தவன் இல்ல மா என்று தலையை ஆட்டிட,


பாலாவுக்கோ அவன் சிவந்த முகமும், சிடு சிடுவென வெடிக்கும் குணமும் அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்க, இதழ்கடையில் பதுக்கிய புன்னகையுடன் மனைவியை கையை அவர் பற்றிட,


இங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது ஜெய் முகத்தில்.


கண்களை அகல விரித்து தந்தையை அவன் முறைக்க,


அதை கண்டும் காணாமல் மனைவியிடம் கதை பேச ஆரம்பித்தார் பாலா.


“கலு மா” என்று அவர் மீண்டும் கலாவதி கையை பிடித்து அழைக்க,


என்னிய யா கூப்டீக? புதிய பெயர் சுருக்களில் பதறி போனார் அந்த வயோதிக காதலி.


உன்னை தான் மா. கன்னியாகுமரி ல பகவதியம்மன் கோவிலுக்கு போய் இருக்கியா


இல்லைங்க


கோவில் திருவிழா முடிய நான் உன்னை கூட்டிட்டு போறேன். என்றவரை பார்த்து கோவில் என்றதும் அவரும் ஆர்வமாக தலையை ஆட்டி வைத்தார்.


அங்க சுத்தி பார்க்க நிறைய இருக்கு. 133 அடியில திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், இப்போ சமீபமாக பிரதமர் கூட அங்க போய் தியானம் பண்ணிட்டு, அம்மனை கும்பிட்டு வந்த பிறகு மூனாவது முறையா தேர்தல்ல ஜெயிச்சு இருக்கார். ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்று அவர் பேச்சை துவங்க,


கலாவதியும், “நிஜமா வா?” என்று வாயில் கையை வைத்து ஆச்சர்ய பட்டவர் சுவாரஸ்யமாக கதை கேட்க,


அவர் மகனோ விழிகளை சுருக்கி அவரை முறைத்து வைக்க,


நீயெல்லாம் இனி எனக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் தான் என்பது போல், வாய் ஓயாது மனைவியிடம் வம்பளக்க ஆரம்பித்து விட்டார் பாலா.


இங்கே ஜெய் அன்னை தந்தை காதலில் வயிரெரிந்து கொண்டிருக்க, அங்கே அவன் காதல்காரியோ அவன் திடீர் மாற்றத்தில் ஏக குழப்பத்தில் தான் இருந்தாள்.


கவனமின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த தோழி தோளில் இடித்த இளமதி என்ன அறிவு என்ன சிந்தனையில் இருக்க என்று கேட்க,


முதலில் எதுவுமில்லை என்று தலையை ஆட்டியவள், பிறகு யாருடனவானது தன் மனதில் இருப்பதை பகிர்ந்தால் தெளிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவளிடம் தன் சந்தேகங்களை கூறலானாள்.


இளா, இந்த மனுஷன் பண்ற எதையும் என்னால புரிஞ்சிக்க வே முடியல. அத்தன பேர் எத்தனை போராட்டம் பண்ணியிருப்போம். அப்போலாம் மனசு இறங்காத மனுஷன். இப்போ மட்டும் எதுக்கு பெக்டரிய மூடனும்?”


இதுல என்ன சந்தேகம் உனக்கு? எல்லாம் உனக்காக தான். என்றவளை சுடர் அதிர்ந்து பார்க்க,


ஆமா. அதான் அவர் தெளிவா சொன்னாரே என் பொண்டாட்டிக்காக தான் பண்றேனு. நம்ம ஊர் ஆம்பளைங்க களுக்கு மானே தேனேனு கொஞ்சி எல்லாம் பொண்டாட்டிய காதலிக்க தெரியாது. அவங்க அன்பு இது போல அக்கறையுல தான் வெளிபடும்.


இல்ல இளா எனக்கு என்னமோ சந்தேகமா தான் இருக்கு.


அடியே… எப்போத்துல இருந்து இப்படி மனசாட்சி இல்லாத மடச்சி ஆனா? கட்டுன புருஷனை நம்ப முடியல சொல்ற? என்று ஆதங்கமாக கேட்டவள்,


நீ அவர் நமக்கு செஞ்ச பழசு எல்லாம் நினைவு வச்சி குழம்பி போய் இருக்க. ஒன்னே ஒன்னு மட்டும் உனக்கு நீயே தெளிவு படுத்திக்க. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள சங்கதி எல்லாம் கொஞ்சம் ஓரம் தள்ளி வச்சிட்டு, கல்யாணத்துக்கு பிறகு அவர் உன்கிட்ட எப்படி நடந்துகிட்டார் அதை மட்டும் சொல்லு என்று கேட்க,


சுடரும், அவன் செயல்களை நினைவு படுத்தினாள்.


பெரிதாக அவன் அவளை அதிர்ந்து கூட பார்த்து பேசவில்லையே..அவர்களுக்குள் சண்டை என்று இருந்தால் அது கட்டில் சண்டையாக தான் இருக்கும். அதுவும் இப்போது சமீபகாலமாக அரிது தான். அவள் பக்கம் கூட வீணாக வர மாட்டானே.


அதை அவள் நினைவு படுத்தி, மனதில் பதித்து கொண்டிருக்கும் போதே,


அறிவு… ஒரு மனுஷன் எப்பவும் கெட்டவராகவே வா இருப்பாங்க, உன் மேல அவர் வச்சிருக்க பாசம் ஒருவேளை அவரை மாத்தி இருக்கலாம் என்று இளமதி அவளுக்கு தூபம் போட,


சுடரும் இருக்குமோ என்ற எண்ணவோட்டதில் கணவனை பார்த்தவள் விழிகள் முதல் முறை அவனை கண்டு அஞ்சவில்லை, குற்றம் சுமத்தவில்லை.


இயல்பான ஒரு பார்வை, அவள் அறியாது காதலோடு அவள் அவனை பார்த்த முதல் பார்வை.


 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 20



விடிய விடிய கோவில் கொடையை சிறப்பித்து விட்டு, அம்மனுக்கு நேர்ந்து விட்டிருந்த நான்கு கிடாக்களையும் வெட்டி படையல் போட்டு, விடியற்காலையில் எல்லாம் அள்ளி கட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள் பக்தகோடிகள் அனைவரும்.


ஜெய்யும், இப்படி விடிய விடிய கண் முழிக்க வைத்து நொங்கு எடுப்பார்கள் என்று எண்ணவில்லை.


தூங்காமல் சல்லாபிக்க சொன்னால் ஆள் எப்போதும் ரெடி தான். ஆனால் கண் சொக்கி சாமி கும்பிட தான் கின்னஸ் சாதனையாக இருந்தது.


உச்சி பூஜை என்றதும், அவனும் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பூஜையை முடித்து விட்டு, தன் பெட்ரோமாக்ஸ் லைட்டோடு பெட்டியை கட்டி விடலாம் என்று மிதப்பாக இருக்க, டான்னு பனிரெண்டு மணிக்கு பூஜையை தொடங்கி அரை மணி நேரத்துக்குள் ஆட்டையும் வெட்டியாச்சி. அதுக்கு பிறகு சாமி ஆடி, வெட்டிய ஆட்டை கறி வச்சி, படைப்பு சோறு போட்டா தான் நகருவோம்னு ஊர் மக்கள் கட்டையை சாய்த்து விட்டார்கள்.


இருந்து இருந்து பார்த்த ஜெய்க்கோ ஒரு கட்டத்திற்கு மேல் கண் இமைகளுக்குள் ஊசி வைத்து குத்தும் உணர்வு.


எல்லாரும் இங்கே இருக்க, அவன் மட்டும் வீட்டிற்கு சென்றால் இத்தனை நாட்கள் போட்ட வேஷமெல்லாம் வீணாகுமே.


எப்போ இவனை குழிக்குள் தள்ளலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் தீனாவுக்கு, அவன் கொஞ்சம் நகர்ந்தால் போதும், ‘உங்க மாப்பிள்ளைக்கு உங்க ஊர் பழக்க வழக்கம் பிடிக்கலை போல, அதான் கோச்சிகிட்டு கிளம்பிட்டார்’ என்று கட்டி விட்டாலும் சந்தேகமில்லை.


அதற்காகவே அகோரி போல் அவனும் கொட்ட கொட்ட கண்விழித்து கிடந்தவன்,


விடியற்காலையில் கூட்டம் நகரவே, வீட்டிற்கு ஓடி வந்து, உடை கூட மாற்ற தோணாது, கட்டாந்தரையிலேயே நீட்டி நிமிர்த்தி படுத்து விட்டான்.


“அய்யோ பாவம் மனுஷன். கண்ணு முழிச்சு பழக்கம் இல்ல போல. அந்த பேனை போட்டு வுடு அறிவு. கொசு கடிக்கும் கொசுவத்தி ஏத்தி வச்சிட்டு நீயும், பேரனும் உள்ளாரா படுத்துக்கங்க நான் அப்படியே காத்தாட கொல்ல பக்கம் படுத்துகிறேன்” என்ற பாட்டியும், காலையில் ஜெய் தூக்கி வெளியே போட்டிருந்த கயித்து கட்டிலில் சென்று படுத்துக் கொண்டார்.


இங்கே வீட்டிற்குள் ஜெய் முன்னால் நின்றிருந்த அறிவுசுடர், பாட்டி சொன்னது போல் அவனுக்காக பேன் போட்டு, கொசுவத்தி ஏற்றி வைத்தவள், சிறு விநாடிகள் நின்று அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஏசியில் பழகிய உடம்புக்கு டேபிள் பேன் காத்து எந்த மூளைக்கு என்பது போல் தான் இருந்தது.


இத்தனை நேரம் ஜன நெரிசல் நடுவே நின்றிருந்தது உடலில் உஸ்னத்தை அதிகரித்து வியர்வையை உற்பத்தி செய்திருந்தது.


தலை முதல் கால் வரை தன் தலையை திருப்பி அதால் முடிந்த அளவிற்கு அந்த மின்விசிறியில் காற்றை வீசியடிக்க,


அது பத்தவில்லை ஆறடி ஆலமரத்திற்கு.


கால் மாட்டுக்கு காத்து கிடைத்தால், தலை வியர்த்தது. தலைக்கு காத்து வரும் போது உடல் வியர்த்தது. அவதி என்பதை கூட உணர முடியாத அசதியில் ஆள் கிடந்தது.


இந்த நிலையில் அவனை பார்க்க சுடருக்கே சற்று பரிதாபமாக தான் இருந்தது.


‘தேவையா இதெல்லாம்? எதனால் இந்த மாற்றம்? என்னால? எனக்காவா?’ நம்பவும் முடியவில்லை. கண் கூடாக நடப்பதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.


அவன் முகத்தில் தன் விழிகளை பதித்திருந்த சுடருக்கோ, அவன் நெற்றி ஓரத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளை தன் சேலை முந்தானை கொண்டு துடைத்திட கைகள் பரபரத்தாலும், பெண் மனம் ஏனோ அதற்கு உடன்படவில்லை.


இன்னும் தெளிவில்லா மன நிலையில் தானே இருக்கிறாள்.


அவன் இப்போதைய மாற்றத்தை ஏற்கவும் முடியவில்லை. முந்தைய செயல்களை புறக்கணிக்கவும் முடியாமல் தவித்து போனாள்.


‘இவன் நல்லவனா? கெட்டவனா?’ குழப்பமான மனநிலை தான்.


அவள் அணிந்திருந்த பட்டு புடவை வேறு கச கசவென இருக்க, குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டே உடை மாற்றி வந்தாள்.


வெளியவே இருந்தால் பாட்டியின் வீண் சந்தேகங்களுக்கும், கவலைகளுக்கும் ஆளாக நேரிடும் என்றே, வீட்டிற்குள் வந்து படுக்க எண்ணினாள்.


சாணம் மொழுகிய தரை, இப்போதே அவன் தலையில் தூசி பறக்கிறது. இப்படியே விட்டு விடுவதா என்று அவள் மனமே அவள் மீது சாடிட, பாயை எடுத்து ஜெய்க்கு பக்கத்தில் புழுதி பறக்காது மெதுவாக விரித்து, தரையில் கிடந்தவன் முதுகுக்கு அடியில் கை கொடுத்து அவனை புரட்டி தள்ளி போடும் முன்னமே அவளுக்கு நாக்கு தள்ளியது.


“என்னா கனம் கனக்கிறாரு? உருட்ட கூட முடியல, நீயெல்லாம் என்ன தான் கிராமத்து பொண்ணோ?” என்று தன்னை தானே நொந்து கொண்டே, அவன் அருகில் குத்த வைத்து அமர்ந்து இருந்தவளை இழுத்து பிடித்து அணைத்து கொண்டே ஜெய் நிம்மதியான தூக்கத்தை தொடர்ந்தான்.


‘அய்யோ!’ என்று சத்தமின்றி அலரியவள், ‘முழிச்சுட்டாரா?’ என்று விழிகளை திருப்பி அவனை பார்க்க,


அவன் சீரான மூச்சு காற்று ஆழ்ந்த நித்திரையை சொன்னது.


‘தூங்கிட்டு தான் இருக்கார்’ என்று ஒரு மனம் ஆசுவாசம் அடைய,


‘அது இன்னும் டேன்ஜர் ஆச்சே. தூக்கத்துலயே மேல பாய்ற ஆளாச்சே’ என்று பதறினாலும் முதல் முறை அவனை விட்டு விலக மனமின்றி போனது பேதைக்கு.


மிக மிக அருகாமையில் அவன் முகம் பார்த்தாள்.


சிவந்த நிறம் இல்லை என்றாலும் அவளை விட சற்று கூடுதல் நிறம் தான்.


இடது கன்னகதுப்பில் முகபருக்கள் வந்து சென்ற தடம் சிறு பள்ளமாக கிடந்தது. கூர் நாசி, கற்றை மீசை. அழுத்தமாக மூடியிருந்த கருத்த உதடுகள் விழிகள் அவன் உருவத்தை ஆராய, அதற்கு மேல் அவன் வசம் மனம் அலைபாய்வதை அவள் விரும்பவில்லை.


“என்ன எண்ணம் இது?” என்று பார்வையை மட்டுமல்ல மொத்தமாக திரும்பி படுத்து கொண்டாள் அறிவு சுடர்.


‘அவன் நல்லவனோ? கெட்டவனோ உனக்கு வேணாம் அறிவு. அவருக்கு நீ செட் ஆக மாட்ட’ என்று அவனை குறை சொல்லும் வாய் முதல் முறை தான் அவனுக்கு தகுதியில்லை என்று தன்னை குற்றம் சொன்னது.


நீ விலகி சென்றால் நான் விடுவேனா? என்பது போல், விலகி கிடந்தவள் வயிற்றை சுற்றி தன் வலிய கரத்தை இறுக்கி பிடித்து தன்னோடு அணைத்து கொண்டான் ஜெய்.


அவள் வாசத்தில் அவன் நிம்மதியாக உறங்கி போக. அவனை பற்றிய குழப்பத்திலேயே நிம்மதியும் இழந்து, தூக்கமும் தொலைத்தாள் அவன் மனைவி.


காலை ஜெய் கண் விழித்த போது, அடுக்களைக்குள் பாட்டி தான் எதோ உருட்டி கொண்டிருந்தது. அவன் பார்ட்டியை காணவில்லை.


கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தவனை எட்டி பார்த்த பாட்டியோ, “எழுந்துடீயலா ஐயா. வாய கொப்பிளிச்சுட்டு காப்பி தண்ணிய குடிங்க” என்று சொல்லி கொண்டே காப்பி ஆத்தா ஆரம்பித்து விட்டார்.


அவரிடம் மண்டையை ஆட்டிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தான் ஜெய்.


பொழுது நன்றாக விடிந்திருந்தது. கைகளை தூக்கி சோம்பல் முறித்துக் கொண்டே வந்தவன் கண்களில் சிக்கினாள் அவன் தாரகை.


வெளியே கிடந்த கயித்து கட்டிலில் படுத்து கொண்டே பகலில் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள் போலும்.


ஆள் இங்கு இருக்க, சிந்தை எங்கோ தான் இருந்தது. அருகே ஆறடியில் ஒருவன் வந்து நின்றதை கூட கவனிக்காது அவள் இருக்க, ஜெய்யோ பாதி தூக்கத்தில் உடல் அசதியில் எழுந்து வந்தவன், அவள் மீதே படுத்துக் கொண்டான்.


அவன் உடலின் முழு பாரமும் அவள் மீது தான். சாதாரணமாக சுண்டு விரல் பட்டால் கூட நெளியும் மனைவி இப்போது அசைவின்றி கிடைக்க,


‘என் பொண்டாட்டி தானா?” என்ற சந்தேகம் அவனுக்கே வந்து விட்டது.


கழுத்தில் முகம் புதைத்து படுத்து கிடந்தவன், தலையை தூக்கி அவள் முகத்தை பார்த்தான்.


அவள் முகம் தான். ஆள் மாறி விழவில்லை என்பது உறுதியாக, விழி சுருக்கி மனைவியை பார்த்தான் ஜெய்.


அவன் அணைப்பில் பல நாட்கள் ஜடம் போல் கிடந்திருக்கிறாள் தான். ஆனால் அப்போதெல்லாம் எங்கோ வெறித்து, வெறுப்பை உமிழும் விழிகள் இரண்டும், இன்று அவனை தான் இமைக்காது பார்த்து கிடந்தது.


அவள் விழிகள் இரண்டும் காளையவன் கருவிழிகளை கலக்கமின்றி பார்த்திருக்க, முதல் முறை தன் மனைவி இவ்வளவு நிமிடங்கள் தன் கண்களை எதிர்கொள்கிறாள் என்பதே அவனுக்கு உள்ளூர தேனை பாய்ச்சியது.


அவள் விழிகளை பார்த்து கொண்டே வலது கன்னத்தில் முத்தமிட்டு மன்னவன் சோதனை செய்ய, அருவருப்பாக மூடும் இமைகள் இன்று அவன் இதழ்களின் அழுத்தத்தை அனுபவித்து மூடியது.


அவன் ஏதோ நினைத்து ஊருக்கு வந்திருக்க, அவன் தூண்டிலில் அவளாக வந்து மாட்டிக் கொண்டாளே.


ரெண்டிப்பு மகிழ்ச்சி நயவஞ்சகனுக்கு.


ஆனாலும் முழுதாக அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை.


‘அவளும் என்னை போல ஏதும் சதி பண்றாளா?’' என்று குற்றமுள்ள ஓநாய் மூளை உள்ளுக்குள் குடைய,


“ஐ கிஸ் யூ” என்றான். ஒருவேளை தன் செயலை அவள் கவனிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில்.


சுடரோ, விழிகளை நிமிர்த்தி அவனை பார்த்தவள், ஹ்ம்ம் என்று மட்டும் சொல்ல,


அந்த ஹ்ம்ம் க்கே போதை ஏறியது.


அவள் கண்களிலும் பொய் இல்லை. காதலிலும் வேஷமில்லை.


ஆனால் காதல் என்றால் காமத்தை தீர்க்க மக்கள் போட்டுக் கொள்ளும் முகமூடி என்று விளக்கம் சொல்பவன், அவள் மாற்றத்தை தன் ஆண்மைக்கு கிடைத்த வெற்றி என்று தான் எண்ணிக் கொண்டான்.


‘அவள் வேஷம் போட்டாலும், சதி செய்தாலும் எதுவும் இந்த ஜெய்யை பாதிக்காது. கிடைத்த வரை லாபம்’ என்று கர்பமாக எண்ணிக் கொண்டவன்,


“நான் கிஸ் பண்ணா உனக்கு ஓகே வா” என்று கேட்டான்.


முழுதாக அவள் வேண்டும். அவளாக மஞ்சத்தில் தன்னிடம் மயங்க வேண்டும் என்ற ஆசை கொண்டா னே.


அவன் வாயால் கேட்கும் முத்தம் என்ற சொல்லே அவளை நாணத்தில் சிவக்க வைத்தது.


பிராக்டிகலுக்கு அவள் தயார் தான். ஆனால் தியரி பேச்சு வேறு மாதிரி கூச்சத்தை ஏற்படுத்தியது.


“நீங்க என் புருஷன் தானே” முத்தம் மட்டுமல்ல மொத்தமாக என்னை எடுத்து கொள்ளவும் சம்மதம் என்று தன் சம்மதத்தை சொன்னாள் கன்னங்கள் சிவக்க அவன் கண்களை பார்த்துக் கொண்டே.


ஜெய் இதழ்கள் தாராளமாக விரிந்து கொள்ள,


“இப்போ தான் புருஷன்னு தெரியுதா?” என்று கேட்க,


“இப்போ தான் உங்க அன்பு புரியுது” என்றால் அவள் தன் அன்பை உணர்த்திய படி.


ஓ என்று புருவத்தை உயர்த்தியவன், “அப்போ உனக்கு ஓகே வா” என்று கேட்க,


அவன் கண்களில் தெரிந்த ஆர்வம் கண்டு சிறிது பயம் தான். இருந்தாலும் அவன் மனைவியாக தன் கடமையையும் காதலையும் வெளிப்படுத்தவே பெண் மனம் இசைந்தது.


ஹ்ம்ம் என்றவள் விழிகளை தாழ்த்தி கொள்ள,


அவள் நயணங்கள் மீது முத்தமிட்டவன் நெஞ்சில் கை வைத்து தடுத்திருந்தாள் அவன் மணவாட்டி.


“என்ன?” எரிச்சல் இல்லை. ஒருவித ஏக்க குரலில் ஜெய் கேட்க,


தாங்கள் இருக்கும் இடத்தை கண்களை சுழல விட்டு காட்டினாள்.


வீட்டின் கொல்லபுறம். வெட்டவெளி. முந்தைய நாள் விடிய விடிய கொடை பார்த்த அலுப்பில் ஒரு ஈ காக்கா வெளிய இல்லை தான். பாட்டி கூட உள்ளே சமையல் அறையில் தான் பரபரப்பாக சமைத்து கொண்டிருந்தது. அதுவும் இப்போதைக்கு வெளியே வராது.


ஆனாலும் பெண்ணவளின் கூச்சம் அவனுக்கு தடை விதிக்க,


அவனும் அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு,


“ஊருக்கு போகலாமா?” என்று தான் கேட்டான்.


அவள் சம்மதம் சொன்ன பிறகு தள்ளி இருப்பதே அவனுக்கு பெரும் பாடு தான்.


இத்தனை நாட்கள் அவளால் சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்தவன், சம்சாரியாக அவன் சம்சாரத்தின் முழு ஒத்துழைப்பு வேண்டுமே.


அரக்க பறக்க எப்போதும் கூடல் கொள்வது அவனுக்கு பிடிக்காது. ஆழ அனுபவித்து ருசிக்க வேண்டும்.


அதற்கு இந்த இடம் சரிவராது என்று தான் தன் மனைவியை தன் இடத்திற்கு பார்சல் பண்ண கேட்டான்.


சுடரும், “பாட்டியையும் கூட்டிட்டு போலாமா?” என்று அவனிடம் அனுமதி கேட்க,


ஊரையே வேணும்னாலும் கூட்டிட்டு வா. என்னை டிஸ்டப் பண்ணாம இருந்தா போதும் என்ற நிலையில் இருந்தவன்,


“தாராளமா” என்றான்.


சுடரும் இப்போது மனதார புன்னகைத்துக் கொண்டவள், “இப்பவே கிளம்ப சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே அவனை விலக்கி விட்டு எழுந்து பாட்டியிடம் சென்றாள்.


துள்ளி குதித்து ஓடிய மனைவியை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் இதழ்கள் கோணலாக வளைந்து கொண்டது.


“பைனலி ஐ டி-இட்” என்று சொல்லிக் கொண்டவன் கண்களில் அத்தனை நிறைவு.


தான் நினைத்த காரியம் அனைத்தும் ஒரே நேரத்தில் கை கூடி வரும் ஆனந்தம் அவனுக்கு.


ஓநாய் குதூகளிக்க வேண்டும் என்றால் மான்கள் இரையாக வேண்டுமே?

 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 21



“ஏலா நீயும் என் கூடவே வந்துடேன்” கண்களில் நீர் ததும்ப ஆயிரம் முறை மன்றாடிட்டு விட்டாள் சுடர் அவள் பாட்டியிடம்.


ஆனால் அந்த வயதான பெண்மணியோ, “இல்ல மா. நான் இங்கனையே இருக்கேன். உன் தாத்தன் வாழ்ந்த வீட்ட விட்டு எங்கேயும் வர மாட்டேன். என்னைய கட்டாய படுத்தாத.” என்று பேத்தியை சமாளித்தார்.


பெண்ணை கட்டிக் கொடுத்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பாரமாக இருக்க, அந்த தள்ளாடும் வயதிலும் அவர் சுய மரியாதை இடம் கொடுக்கவில்லை.


அது மட்டுமல்ல, கணவன் வீட்டில் சண்டை சச்சரவு என்றால் என் பிள்ளை நாடி வர அன்னை வீடு வேண்டுமே! என்று எண்ணி தீர்க்கமாக மறுத்து விட்டார்.


மனைவியின் வாடிய முகம் கண்டு ஜெய்யும் பலமுறை பாட்டியை அழைத்து பார்த்தான்.


வைர பெண்மணி திடமாக வர மறுக்கவே,


“உனக்கு எப்போ வேணும்னாலும் வந்து பார்த்துட்டு போகலாம்.” என்று கடைசியாக மனைவியை தான் சமாதானம் செய்து அழைத்து சென்றான்.


அப்போதும் கூட, தன்னிடம் இருந்த பழைய பட்டன் போனில், போன் வந்தால் அட்டன் செய்து பேசவும், அவளுக்கு போன் செய்யவும் சொல்லி கொடுத்து விட்டே ஜெய்யுடன் ஊருக்கு திரும்ப ஆயத்தமானாள்.


கார் நிறுத்தி வைத்திருந்த களத்திற்கு மனைவியுடன் ஜெய் வந்து சேர, அதற்கு முன்பே அங்கே நின்றிருந்தான் தினேஷ்.


தனியாக இல்லை ஜோடியாக. அதுவும் அவன் பிரிவு துயர் தாங்காது கண்ணீர் வடித்து கொண்டிருந்த காதலியை சமாதானம் செய்தபடி.


“இளா… சின்ன குழந்தை போல அழாத. நீ அழுதா இங்க என்னமோ பண்ணுது டி” என்று தனது இடது மார்பில் கை வைத்து காட்டியவனை, தன் செவ்விழிகளை நிமிர்த்தி பார்த்தாள் இளமதி.


“நான் ஒன்னும் அழல” என்று மூக்கை உறிஞ்சி கொண்டவள், “உன்னை யாரு இப்போ வர சொன்னது? போ” என்று அவன் மீது சாடிக் கொண்டே அவனை தள்ளி விட்டு சென்றவள் பின்னால் ஓடினான் தினேஷ்.


“ஏய் என்ன டி? உன்ன பார்க்கலாம்னு எவ்வளவு ஆசையா பாஸ் கூப்பிட்டதும் வந்தேன் தெரியுமா? நீ என்னடானா ஏன் வந்தேன் கேட்கிற? இனி வரவே மாட்டேன் டி.” என்று காளையவன் முறுக்கி கொள்ள,


அடிபணிந்து வந்தது மான்குட்டி.


கையை கட்டிக் கொண்டு அவளுக்கு எதிர் திசையில் திரும்பி நின்றவன் முன்னால் வந்து நின்ற மதியோ, கண்ணீரை துடைத்து கொண்டே,


“மன்னிச்சிடு யா. நீ வந்தது சந்தோசம் தான். ஆனா போகும் போது கஷ்டமா இருக்கே” என்று அடுத்த கட்ட கண்ணீர் ஊற்றிற்கு தயாராகி விழிகளை சிமிட்டி கொண்டே மென் குரலில் அவள் சொல்ல,


இரண்டு வருடமாக காதலிக்கும் தன் பெண்ணின் அன்பு சீறலை புரிந்து கொள்ளா அரக்கன் அல்லவே அவனும்.


அவள் காதல் ததும்பும் கீச் குரலில் உருகியே விட்டான்.


“ஒவ்வொரு முறையும் இப்படி தான் அழுகுற. சந்தோசமா சிரிச்சிட்டே அனுப்பி வை டி” என்றான் அவனும் தவிப்பான குரலில்.


“ம்கும். அனுப்பி வைக்கிறதுலையே இரு. எப்போ என்னையும் உன்கூட கூட்டிட்டு போவ? முன்ன தான் ஊர் பகை. திருட்டு தனமா லவ் பண்ணோம். இப்போ தான் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயாச்சே. என் அப்பன்கிட்ட வந்து பொண்ணு கேளு யா” என்றதும் திருட்டு முழி முழுத்தான் ஜெய்யின் ஆக சிறந்த தளபதி.


“கேட்கலாம் தான். ஆனா உங்க அப்பன் பொசுக்குனு அறுவால தூக்கி இளநீர் சிவுற போல கழுத்தை சிவிட்டா? உன் கழுத்துல தாலிக் கட்ட என் உடம்புல தலை இருக்காதே” என்றவனை முறைத்த இளமதி,


“உன்ன காதலிச்சதுக்கு நான் கடைசி வரை கல்யாணமே ஆகாம, கன்னியா தான் சாகணும்” என்று புலம்பிக் கொண்டே வேகமாக நடக்க,


“ஏய் நில்லுடி. அப்படியெல்லாம் உன்ன விட்டுட மாட்டேன். கல்யாணம் வேணா அப்புறம் பண்ணலாம். அடுத்து ஏதோ சொன்னியே அதுக்கு வேணா இப்பவே ட்ரை பண்ணலாம்” என்று குறும்புடன் சொன்னவனை, திரும்பி நின்று முறைத்தாள் இளமதி.


உன் மூஞ்சி. போ யா என்று அவனை திட்டி விட்டு திரும்பி கொண்டவளுக்கு அவன் கேலி பேச்சில் வெட்கம் பிடுங்கித் தின்றது.


வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே நிற்காமல் அவள் செல்ல, ஓடி வந்து அவள் கையை பிடித்தான் தினேஷ்.


அவளோ முறுக்கி கொண்டே அவன் கையை உதற, அவன் அடாவடியாக அவளை பிடிக்க,


இவர்கள் நடத்திய செல்ல சண்டையில் கன்னம் பழுத்தது தினேஷுக்கு.


வலிய கரம் ஒன்று அவன் கன்னத்தில் இடியென இறங்கி இருக்க, கன்னத்தை பொத்திக் கொண்டு இடிக்கு சொந்தகாரனை சினத்துடன் ஏறிட்டான் தினேஷ்.


தினேஷ் விழிகள் கோபத்தை பிரதிபலிக்க, எதிர்பாரா அறையில் திடுகிட்டு திரும்பி பார்த்த இளமதிக்கோ தூக்கி வாரி போட்டது எதிரில் நின்றிருந்தவனை பார்த்து.


“மச்சான்” என்று வெட வெடத்து இளமதி உடல் நடுங்க,


அவள் அத்தை மகன் தீனாவோ, “எவ்வளவு ஏத்தம் இருந்தா என் ஊட்டு பொண்ணு மேல கையை வைப்ப?” என்று சொல்லிக் கொண்டே தினேஷ் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க போக, அவன் கையை தடுத்து இருந்தது இன்னொரு முரட்டு கரம்.


கை எலும்புகள் முறியும் அளவிற்கு அழுத்தமாக தன் கையை பிடித்திருந்தவனை அனல் தெறிக்க திரும்பி பார்த்தான் தீனா.


இவன் பார்வைக்கு அதிகப்படியான சிங்க பார்வை எதிராளி பார்க்க,


பெரிதொரு பிரளயம் வெடிக்கும் முன் இளம் சிங்கங்கள் இருவரையும் பிரித்து விட்டிருந்தார் வேலாயுதம்.


“மாப்பிள்ளை விடுங்க. ஏலே தீனா எதுக்கு ஊருக்கு வந்த விருந்தாளிகிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க” என்று முட்டி கொண்டு நின்ற இருவரையும் தலைவர் பிரித்து விட,


ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே விலகி நின்றார்கள் இருவரும்.


என்ன நடந்தது? என்று ஜெய், தினேஷிடம் புருவத்தை உயர்த்தி விளக்கம் கேட்க,


அவன் வாயை திறக்கும் முன், தான் கண்ட காட்சியை விவரித்து இருந்தான் தீனா.


“வீட்டுக்கு வந்த விருந்தாளியா ஒரு எல்லையோட இருந்திருக்கணும் மாமா. இந்த நாய் என்ன பண்ணிச்சி தெரியுமா?” என்று கேட்டவனே அதற்கு பதிலும் சொன்னான்.


“நம்ம மதி மேல கை வைக்கிறான். நம்ம ஊட்டு பொண்ணு மேல கை வச்சவனை சும்மா விட சொல்றீங்களா?” என்று மீண்டும் அவன் மீது பாய முயல,


“கொஞ்சம் இரு லே” என்று அவனை தடுத்து இருந்தார்கள் சில பெரிய தலைகள்.


இளமதியோ நொடியில் கலவரமாக மாறிய நிகழ்வை கையாளும் வழியறியாது திகைத்து தான் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


கொஞ்ச நேரம் முன் சவிடாலாக தினேஷிடம் குரல் உயர்த்திய மங்கை இப்போது இல்லை.


கண்கள் இரண்டும் பயத்தில் கலங்கி இருக்க, உடலோ நடுங்கி வியர்த்து போனது. விட்டால் மயங்கி விழுந்து விடுவேன் என்று நிலையில் தான் தினேஷ் ஷர்ட் நுனியை தன் விரல் நுனியில் பிடித்துக் கொண்டு அவன் பின்னால் மறைந்து நின்றாள்.


சுடருக்கோ எதுவும் புரியா மன நிலை. குழப்பமாக தான் அங்கே நடக்கும் பஞ்சாயத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஜெய்யை வழியனுப்பி வைக்க வந்த பெரிய தலைகளுக்கு புதிய பஞ்சாயத்தை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை.


கண்ணீருடன் உடல் நடுங்க நின்றிருந்த மகளை பார்த்த வேலாயுதத்திற்கு சொந்த பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்ல சற்று கடினமாக தான் இருந்தது.


‘என்ன நடந்தது?’ என்று விசாரிக்கும் அளவிற்கு மகள் மீது அவர் கொண்ட பாசம் இடம் கொடுக்கவில்லை.


இங்கே தீனா வேறு அவன் நேசித்த பெண் மீது மற்றொரு ஆடவன் கை வைத்து விட்டானே! என்ற கடுப்பில் கத்தி கொண்டு இருந்தான்.


சிறிதே பார்வை பரிமாற்றம் நடந்தது ஜெய்க்கு, தினேஷ்க்கும் இடையில்.


தன் சீடனின் நிலையை புரிந்து கொண்டவன்,


“ஒரு நிமிஷம்” என்று கத்திக் கொண்டிருந்த தீனா வாய்க்கு ஓய்வு எடுக்க நேரம் கொடுத்தான்.


“என்ன நடந்ததுனு விசாரிக்காம மூனாவது ஆள் சொல்றத கேட்டுட்டு பேசாம இருக்கீங்க? தீனா சொல்ற போல, தினேஷ் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்ச்சி பண்ணியிருந்தா? இந்நேரம் தன்னை காப்பாத்திக்க அவனை விட்டு விலகி ஓடி இருப்பா. இப்படி அவன் பின்னாடி பயந்து நிற்க மாட்டா.


உங்க பொண்ணுகிட்டயே கேளுங்க என்ன நடந்ததுனு?


தினேஷ் என் தம்பி மாதிரி. தப்பு பண்ண மாட்டான்” என்று ஜெய் அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு வேலாயுதத்தை பார்க்க,


அவர் பார்வை மொத்தமும் மகள் பற்றியிருந்த அவன் சட்டையில் தான் இருந்தது.


ஓரளவுக்கு நிலமையை புரிந்து கொண்டவர் வீட்டு விசயத்தை சந்தியில் நின்று பேச விரும்பவில்லை.


“மதி வா” என்று வேலாயுதம் மகளை அழைக்க,


அவளுக்கோ பயபந்து ஒன்று அடி வயிற்றிற்கு தொண்டைக்கும் இடையே உருண்டது.


‘வீட்டுக்கு கூட்டிட்டு போய் அப்பா அடி வெளுத்து விடுவாரோ’ என்ற பயத்துடன் தான், அடிமேல் அடி வைத்து தந்தை அருகே சென்றாள் இளமதி.


அருகே வந்ததும் மகள் கையை இறுக பற்றி கொண்டவர், யாரையும் பார்க்காது விறு விறுவென வீட்டை நோக்கி சென்று விட்டார்.


தந்தை இழுப்புக்கு சென்றாலும், அவள் விழிகள் இரண்டும் தினேஷை ஏக்கமாக பார்த்து செல்ல,


இங்கே பரிதவித்து போனான் காதலன்.


“இந்த தீனாவுக்கு வேற வேலையே இல்ல. எதையாவது சொல்லி சண்டை போட்டுகிட்டே இருப்பான். எல்லாரும் போய் பொழப்ப பாருங்க” என்று கூட்டம் மொத்தமும் களைந்து செல்ல,


எஞ்சி இருந்தது என்னவோ, தீனா, ஜெய், தினேஷ், சுடர் தான்.


“என் மண்ணை தொட்டாலே பொலி போடுவேன். நான் கட்டிக்க போற பொண்ணையே தொடுறியா?” என்று தினேஷ் முகத்திற்கு நேராக நின்று அடிகுரலில் தீனா மிரட்ட,


ஏளனமாக சிரித்துக் கொண்ட ஜெய்யோ,


“தினேஷ் வண்டிய எடு” என்று சொல்லிக் கொண்டே தன் மனைவியுடன் பின்னிருக்கையில் ஏறிக் கொண்டான் ஜெய்.


வேறு வழியின்றி தன் எஜமானுக்கு சாரதியாக முன்னிருக்கையில் வந்து அமர்ந்த தினேஷும் தவிப்பான மனதுடன் தான் அங்கிருந்து காரை கிளப்பினான்.


அந்த களத்திலிருந்து கார் வெளியேற, வெற்றி புன்னகை தீனா இதழ்களில்.


தன் எதிரியை ஊரை விட்டு மொத்தமாக துரத்தி விட்டதாக எண்ணிக் கொண்டவன் அறியவில்லை, அவன் எதிரி கூடாரத்தை அபகரிக்கும் ஒட்டகம் என்பதை.


ஊரை விட்டு வெளியே செல்லும் பாதையில் தினேஷ் வண்டியை திருப்ப,


“வழி மறந்துட்ட போல, உன் மாமனார் வீட்டுக்கு வண்டிய திருப்பு” என்ற ஜெய்யை, சுடரும், தினேஷும் ஒரே நேரத்தில் அதிர்ந்து திரும்பி பார்த்தார்கள்.


“மாமனாரா?” என்று புரியாமல் விழித்த மனைவி தோளை சுற்றி கையை போட்ட ஜெய்,


“அதான் உன் தோழி அந்த பொண்ணு பேரு என்ன?” என்று ஜெய் புருவம் சுருக்க,


“இளமதி” என்று பதில் வந்தது முன்னிருக்கையில் இருந்து.


“ஹாங்…” என்று சத்தமாக சிரித்த ஜெய், “உனக்கு துணைக்கு அவளையும் சென்னைக்கு கூட்டிட்டு போகலாமா?” என்று மனைவி கன்னத்தை பற்றி கேட்க,


புரியா பாவம் அவள் வீசினால் என்றால், ஏக சந்தோசம் தினேஷ் முகத்தில்.


புழுதி பறக்க காரை திருப்பியவன், காற்றை கிழித்து வேகமாக வந்து நிறுத்தினான் இளமதி வீட்டு வாசலில்.


 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 22

இங்கே இளமதியை வீட்டுக்கு அழைத்து வந்த வேலாயுதம் அவளிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

நடு கூடத்தில் கிடந்த விசாலமான சங்கிலி ஊஞ்சலில் அவர் அமர்ந்திருக்க,

அந்த சங்கிலியின் மெல்லிய சத்தம் கூட ஏதோ மரண ஓலம் போல தான் செவியில் விழுந்தது இளமதிக்கு.

கூடத்தின் பக்க தூணில் ஒன்றை கட்டிக் கொண்டு அவரை தான் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்போ ரெண்டு பேரும் என்னை விசயமுனு சொல்ல போறீயலா இல்லையா? வந்ததுல இருந்து நானும் கேட்டுட்டு இருக்கேன்.

அப்பனும் மகளும் வாயைவே தொறக்க மாட்ரீங்க” என்று இளமதி அன்னை புலம்பிக் கொண்டிருக்க,

“நான் சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான் ஜெய், தன் தளபதி மற்றும் மனைவியுடன்.

அவர்களை பார்த்ததும் இன்னும் பயம் சூழ்ந்து கொண்டது இளமதிக்கு. இதயம் பட படக்க நின்றிருந்தவள் சிவந்த விழிகளுடன் தினேஷை ஏறிட்டு பார்க்க,

அவனோ ‘பயப்படாத, நான் இருக்கேன்’ என்பது போல் தைரியம் ஊட்டும் வகையில் விழிகளை மூடி திறந்து கொண்டே வேலாயுதம் முன்பு வந்து நின்றான்.

“வாங்க தம்பி” என்று வாய் நிறைய ஜெய்யை அழைத்து கொண்டே அவர்களை வரவேற்ற இளமதி அன்னையோ, அடுக்களைக்குள் சென்று தண்ணீர் சொம்பை கொண்டு வந்து நீட்டினார்.

அவர்கள் பழக்கம். வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டே, என்ன? ஏது? என்று விசாரிப்பது.

எப்போதும் கடைபிடிக்கும் பழக்கத்தை இப்போதும் அவர் கடைபிடிக்க,

அவர் நீட்டிய சொம்பை வாங்காது நின்றிருந்த ஜெய்யோ,

“நாங்க வந்த விசயத்த முதல்ல சொல்லிடுறோம். அப்புறம் எங்களுக்கு இந்த தண்ணிய கொடுக்கலாமா? வேணாமா? யோசிங்க” என்றவன்,

“தினேஷும், உங்க பொண்ணு இளமதியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. என் உடன்பிறவா தம்பி தினேஷ்க்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?” என்று ஜெய் வேலாயுதத்தை பார்த்து சட்டென்று கேட்டு விட,

அவன் கேள்வியில் ஆடி போனது என்னவோ இளமதி அன்னை தான்.

அதிர்ந்து கைகளில் இருந்த சொம்பை அவர் நழுவ விட,

தண்ணீர் சொம்பு கீழே விழும் முன் அதை தன் கரத்தில் ஏந்தி இருந்தான் ஜெய்.

வேலாயுதம் சிறிது யூகித்த விடயம் தான் என்பதால் பெரிதாக ஒன்றும் அதிரவில்லை. ஆனாலும் ஊர் பெயர், சொந்தம் பந்தம் என்று எதுவும் அறியா ஒருவனுக்கு ஒற்றை பெண்ணை எங்ஙனம் மணமுடித்து கொடுப்பார்?

பெரிதொரு தடுமாற்றம் தான் மகள் விசயத்தில் அவருக்கும்.

“என்ன தம்பி சொல்லுதிய?” என்று அதிர்ந்து கேட்ட இளமதி அன்னை தன் பெண் இப்படி காதல் என்று எல்லாம் வளர்த்து வர மாட்டால் என்று முழுதாக நம்பி இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்து விட்டதே. அதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அந்த அன்னையால்.

இது உண்மையாக இருக்க கூடாது என்று மனம் இறைவனை வேண்டிக் கொண்டது.

ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் சில விஷயங்கள் உண்மை இல்லை என்று ஆகி விடாதே.

“உங்க பொண்ணுகிட்டயே கேளுங்க” என்று ஓரமாக தூணை கட்டி கொண்டு நின்றிருந்த இளமதியை ஜெய் இழுத்து விட,

ஏற்கனவே பயத்தின் நடுவில் தத்தளித்து கொண்டிருந்தவளுக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

திடுகிட்டு, ஜெய்யை மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தவளை அவள் அன்னை தவிப்பாக பார்க்க,

அவரை பார்த்தவள் தலையை குனிந்து கொண்டே,

“எனக்கு அவரை புடிச்சு இருக்கு ம்மா“ என்று சிறிதே சிறிது தைரியத்தை வரவைத்து சொல்லி விட்டாள்.

வாழ்க்கையில் எல்லா நேரமும் பயத்திற்கு முன்னுரிமை கொடுத்தால், வாழ்வை இழந்து விடுவோமே.

தலை குனிந்தேனும் தன் ஆசையை சொல்லிவிட்டாள் பெண் அவள்.

மகள் பதிலில் உறைந்து போன அன்னையோ,

“என்ன காரியம் டி பண்ணி வச்சிருக்க?” என்று கேட்டு கொண்டே மதி முதுகில் நாலு மொத்து மொத்திவிட்டார்.

தன் நம்பிக்கை பொய்த்து போன கோபம் தான் அந்த அன்னைக்கு.

அவர் செயலில் அது தெரிய, எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது நிர்மலமான முகத்துடன் தான் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தார் வேலாயுதம்.

ஜெய்யுடன் வந்த விருந்தாளியாக போய் விட்டான், இல்லையேல் இந்நேரம் அவர் கை தான் வேறு விதமாக பேசி இருக்கும்.

அங்கே மதி அடி வாங்க, இங்கே இருப்பு கொள்ளவில்லை தினேஷ்க்கு, அய்யோ என்று பதறி அவர்கள் அருகே செல்ல இருந்தவன் கையை பற்றி ஜெய் தடுக்க,

“என்னால என் பொண்டாட்டி அடி வாங்குறத பார்க்க முடியாது பாஸ்” என்று சொல்லி கொண்டே ஜெய் கையை விலக்கியபடி மதிக்கு முன்னால் வந்து நின்று அவள் மீது விழ இருந்த அடிகளை தன் மீது வாங்கி கொண்டான்.

கை நீட்ட முடியா ஆள் அல்லவா, கை கட்டி அடிகளை வாங்கி கொண்டேன்.

அவன் வந்து நின்றதை கூட உணர முடியாத ஆத்திரத்தில் இருந்தவர் நான்கு அடிகளை அவனுக்கும் போட்டார்.

பிறகு தான் சித்தம் வந்து கைகளை விலக்கி கொண்டு அவர் மகளை முறைக்க,

அவர் மகளோ ஆடவன் முதுகோடு ஒட்டி நின்று தன் பாதுகாப்பு அவன் தான் என்று அன்னைக்கு உணர்த்தி கொண்டிருந்தாள்.

அதில் இன்னும் வருத்தம் தான் அந்த தாய்க்கு.

பெத்து, வளர்த்து இத்தனை காலம் பாராட்டி, சீரட்டு வளர்ந்தது எல்லாம் எவனோ ஒருவனை நாடி, தன்னை அன்னியமாக மகள் பார்ப்பதற்காக தானா? பெத்த வயிறு பற்றி எரிந்தது.

“ஐயோ! ஐயோ! பாவி மவ இப்படி என் நெஞ்சுல ஏறி மிதிச்சிட்டாலே” என்று புலம்பிக் கொண்டே நெஞ்சில் அடித்து கொண்டவரை “அம்மா” என்று கதறிய படி ஓடி வந்து தடுத்திருந்தாள் மகள்.

‘“மன்னிச்சிடு ம்மா. எனக்கு அவரை பிடிச்சு இருக்கு. கல்யாணம் பண்றதா இருந்தா அவரை தான் பண்ணிப்பேன். இல்லை கல்யாணமே பண்ண மாட்டேன்” என்று அப்போதும் திடமாக தன் விருப்பத்தை சொல்லும் மகளை அடி பட்ட பார்வை பார்த்தார் அவள் அன்னை.

“ஐயோ! என்னங்க இவ என்னனென்னமோ சொல்றா, நீங்க குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கீங்க” என்று கணவனை நாடி அவர் ஓட,

“என்னை என்ன சொல்ல சொல்ற விஜயா? பொம்பளை பிள்ளையா வீட்டுக்குள்ள பூட்டி வச்சி வளர்க்கணும், ஒத்த புள்ளைனு செல்ல கொடுத்து வளர்த்தல்ல அதுக்கு உன் மக இப்படி நம்ம குடும்ப மானத்தை வாங்கிட்டா.”

என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவரும் வெடித்து விட,

தந்தை கோபத்தில் நடுங்கி தான் போனாள் இளமதி.

நிலமை கை மீறி போவது போல் இருக்க, இடை புகுந்து ஆட்டத்தை தன் திசைக்கு மாற்ற முயன்றான் ஜெய்.

இதற்கு இடையில் தீனாவிடம் ஒருவன் சென்று ஜெய்யின் கார் மீண்டும் தலைவர் வீட்டில் நிற்பதாக தகவல் சொல்ல,

ஓடோடி வந்து சேர்ந்தான் தீனா.

என்ன? ஏது? என்று எதுவும் புரியா நிலையில் உள்ளே தீனா நுழைய,

அப்போது தான் ஜெய், “இங்க பாருங்க சித்தப்பா.” என்று வேலாயுதத்தை அவன் உறவு முறை சொல்லி அழைக்க,

யாருக்கு யாருடா சித்தப்பா என்று அப்போதே அவன் நெஞ்சில் மிதிக்க ஆத்திரம் தான் வந்தது தீனாவுக்கு. அடக்கி கொண்டே அமைதியாக சபையில் வந்து நின்றான்.

‘“தினேஷ் என்கிட்ட வேலை பார்க்கிற பையன்னு நான் சொல்லல. நிஜமாவே அவன் ரொம்ப நல்ல பையன். இத்தனை வருஷம் கூட இருக்கான். அவனை என் தம்பி மாதிரி தான் நான் பார்க்கிறேன். நீங்களா தேடினா கூட உங்க பொண்ண தினேஷ் அளவுக்கு சந்தோசமா பார்த்துக்கிற பையனை பார்க்க முடியாது. அவ விரும்புற பையன் கூட இருந்தா தானே அவ வாழ்க்கையும் நல்லா இருக்கும். அவனை பத்தி விசாரிச்சிட்டு உங்க பொண்ணை நீங்க கொடுத்தா போதும்.”

என்றவன் ஓர விழியால் வேலாயுதத்தை பார்க்க, அவரோ ஜெய்யிடம் வெளிப்படையாக கோபத்தை காட்ட முடியாது எரிச்சலாக தான் நின்றிருந்தார்.

நிலைமையை கொஞ்சம் யூகித்து கொண்ட தீனாவோ, அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் வாழ்க்கைலயே மண்ணள்ளி போடுறியா என்று உள்ளுக்குள் வெதும்பிக் கொண்டே,

“எங்க வந்து யார் வீட்டு பொண்ணை கேட்கிற?” என்று ஜெய் மீது பாய வந்தவனை மண்புழு போல் பார்த்து ஜெய் முகத்தை திருப்பி கொண்டான்.

“பொண்ணு கேட்கிறதுக்கு ஒரு தகுதி தராதரம் வேணாம். எவனோ ஊர் பேர் தெரியாத ஒரு ஒட்டுண்ணி பயலுக்கு என் மாமன், அவர் மகளை கட்டி கொடுப்பார்னு நினைச்சியா?” என்று தீனா கோபத்தில் சீறினான்.

இதை தானே வேலாயுதமும் மனதுக்குள் போட்டு குமைந்து கொண்டிருந்தார்.

தீனா கேட்டு விட, அவர் மனபாரம் குறைந்த உணர்வு தான் அவருக்கு.

“என்ன தகுதி இல்ல அவனுக்கு. வெறும் வாய் வார்த்தையா மட்டும் அவனை என் தம்பினு சொல்லல, என்னோட காப்பர் கம்பெனியோட சி இ ஓ அவன் தான். அந்த கம்பெனில வர்ற லாபம் மொத்தமும் அவனுக்கு தான். குறைஞ்சது வருஷத்துக்கு இருநூறு கோடி டார்ன் ஓவர் வரும்.” என்று ஜெய் அடித்து விட,

விஜயா மட்டுமல்ல தினேஷ் கூட இது எப்போ? என்பது போல் தான் வாயை பிளந்து ஜெய்யைப் பார்த்து கொண்டிருந்தான்.

எப்போதும் கலாவதி செய்யும் வேலையை இன்று சுடர் வாங்கி கொண்டாள் போலும். அது தான் ஜெய்யை கண்டு மெய் சிலிர்த்து உச்சி குளிர்ந்து போவது.

‘என் புருஷன் வாரி வழங்கும் வள்ளல் யா’ என்பது போல் அத்தனை அன்போடு அவள் பார்வை கணவன் மீது பதிய,

அவனோ இளமதி பெற்றோர்களை அடுத்து என்ன சொல்லி வலையில் விழ வைக்கலாம் என்று தான் யோசித்து கொண்டிருந்தான்.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 23


பணம் என்றதும் இளமதியின் அம்மா, மகள் சுக போக வாழ்க்கை வாழ்வாள் என்று ஜெய்யின் பவுசு வார்த்தைகளில் சற்று சருக்கிட,

அவரின் அரை கன முக மாற்றத்தை அனுதானித்து கொண்ட ஜெய்யோ,

‘சிக்கிச்சு செம்மறி ஆடு’ என்ற கணக்கில் அவரை தன் வசமாக்கவே அடுத்தடுத்து ஆஹா ஓஹோ என்று தினேஷை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

அதையெல்லாம் கேட்கவே தீனாவுக்கு உள்ளுக்குள் புகைந்தது.

‘அடிச்சி, கழுத்தை பிடிச்சு வெளிய தொறத்துரத விட்டு, இந்த மாமா என்ன கதை கேட்டுட்டு இருக்கார்?’ என்று எரிச்சலாக வேலாயுதம் முகத்தை பார்க்க,

அவரும் கடுப்பாக தான் நின்றிருந்தார். அதில் ஒரு ஆனந்தம் தீனாவுக்கு.

‘உன் ஜாலம் என் மாமாகிட்ட பலிக்காது டா. உன் உருட்டலுக்கு என் மாமா மசிய மாட்டார்’ என்று மாமன் மீது மலையளவு நம்பிக்கை கொண்டு அமைதி காத்தான்.

அந்த பக்கம் விஜயாவோ வி.ஐ.பி மாமியார் கனவில் மிதக்கவே ஆரம்பித்து விட்டார்.

‘விட்டால் இவன் பேசிட்டே இருப்பான்’ என்று அதற்கு மேல் ஜெய் குரலை கேட்க சகிக்காது,

“நீ ரீல் ஓட்டுன வரை போதும். ஊருக்கு கிளம்பு” என்று தீனா அவனை அப்புறப்படுத்துவதில் துடிப்பாக இருக்க,

‘இவன் ஒருத்தன் எல்லா விசயத்துலயும் வந்து மூக்க நுழைச்சிட்டு’ என்று சிடு சிடுத்து தீனாவை மனதுக்குள் திட்டியது என்னவோ விஜயா தான்.

‘இவனை பேச விட்டா என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடுவான்’ என்று மனம் அரற்றவே,

“தீனா நீ கொஞ்சம் சும்மா இரு” என்று அவனை அடக்கினார்.

அத்தை அடக்கவும், ஜெய் முன்னால் அவமானமாகி போனது தீனாவுக்கு. அதிலும் ஜெய்யின் எக்காள சிரிப்பில் இரத்தம் கொதித்தது.

“நான் எதுக்கு சும்மா இருக்கணும்? இல்ல எதுக்கு சும்மா இருக்கணும்னு கேட்கிறேன்? எவனோ இரத்தத்தை உறிஞ்சிற நசை பய நடு வீட்ல நின்னு என் மாமன் பொண்ணை பொண்ணு கேட்பான், நான் வாயை மூடிட்டு சும்மா போகணுமா? முடியாது அத்தை.” என்று அவேசமாக தன் உரிமையை அவன் நிலை நாட்டிடை முனைந்தான்.

அதிலும் இன்னும் அமைதி காக்கும் தன் தாய் மாமன் மீது சிறிது கோபம் வேறு வந்தது.

“மாமா இந்த பயலை இப்போ கழுத்த பிடிச்சு நீங்க வெளிய தள்ளுறீங்களா? இல்லை நான் தள்ளவா?” என்று திமிறி கொண்டு கேட்க,

“என் வீட்டுக்கு வந்த விருந்தாளிய வெளிய போக சொல்ல நீ யாரு? முதல்ல நீ வெளிய போ” என்று விஜயா தீனாவை அதட்டிட,

அதிர்ந்து அவரை பார்த்தான் தீனா.

என்னையா அத்தை வெளிய போக சொல்றீங்க ஆட்டம் கண்ட குரலில் தீனா கேட்க,

முகத்தை திருப்பி கொண்டார் விஜயா.

அவரின் உதாசீனம் அவனை வெகுவாக தாக்கிட,

இந்த நாய் க்காக என்னை வெளிய போக சொல்றீங்களா அத்தை? என்று உருமியவன் சத்தத்தில் அலட்சியமாக காதை குடைந்து கொண்ட ஜெய் செயல் இன்னும் அவன் கோபத்தை தூண்டியது.

அத்தனை நேரம் அமைதி காத்த வேலாயுதம், அதற்கு மேல் அமைதியாக இருந்தால் குடும்பம் பிரிந்து விடும் என்று எண்ணியே,

விஜயா என்று மனைவியை அதட்டியவர், தீனா கொஞ்சம் அமைதியா இரு என்று மருமகனையும் சாந்தப்படுத்த முயன்றார்.

அத்தை என்ன சொல்றாங்க பாருங்க மாமா என்று தீனா அவரிடம் முறையிட,

அவ பேசினது தப்பு தான் தீனா என்று வேலாயுதம் அவன் பக்கம் பேச தயாராக,

எங்கே தன் மகள் வாழ்க்கையில் மாமனும் மருமகனும் சேர்ந்து சிங்கி அடிச்சடுவாங்களோ என்று பதறி,

ஏங் க, கொஞ்சம் உள்ள வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று கணவரை விஜயா அழைக்க,

தன் அத்தை தன் காதலை சிதைத்து விடுவாரோ என்று தீனாவுக்கு பயம் வந்து விட்டது.

மாமா யாருக்காகவும் என் மதிய நான் விட்டு கொடுக்க மாட்டேன் மாமா என்று அவன் கோபமும், பயமும் கலந்த குரலில் சொல்ல,

நானும் உன்னை விட்டுட மாட்டேன் தீனா என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளே சென்ற பெரிய மனுஷர்,

மனைவியின் கோரிக்கைகளுக்கு முன் தலை வணங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

என்னங்க பண்ணலாம் என ஆரம்பித்தவர்,

மக ஆசைப்பட்டுட்டா, இத்தனை நாள் அவ ஆசைக்கு நாம தடை போட்டதே இல்ல. ஒத்த புள்ளையை பெத்து வச்சிருக்கோம். நாளைக்கு நீங்க சொல்லி தானே அவனை கல்யாணம் பண்ணேன். இப்போ பாருங்க கஷ்ட படுறேனு கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா? நம்ம மனசு தாங்குமா? இது அவ வாழ்க்கை. அவ விருப்ப பட்ட பையனுக்கே கட்டி வச்சிடலாம் என்று விஜயா சொல்ல,

ஏய்… என்ன பேசுற? ஆசை பட்டா சாதி மதம் பார்க்கமா கட்டி வைக்க முடியுமா? அந்த பைய என்ன சாதினே தெரியல, அவனுக்கு போய் எப்படி நம்ம பொண்ணை கட்டி வைக்க முடியும்?

எந்த காலத்தில இருக்கீங்க? சாதி, சாதகம் பார்த்து கட்டி வச்சதுக எல்லாம் நல்லாவா இருக்குதுக? அறிவ பாருங்க, மாப்பிள்ளை என்ன ஆளு எதுவும் தெரியாம தானே ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா? இப்போ அவ நல்லா இல்லையா? இல்லை அவரை தான் இந்த சனம் ஏத்துக்களையா? எனக்கு மத்தவங்களை பத்தி கவலை இல்லை. என் மக நல்லா இருக்கணும் அவ்வளவு தான்.

அந்த பையன் வேணாம்னா வேற நல்ல பையனை பாருங்க. ஆனா அந்த தீனாவுக்கு மட்டும் என் மகளை கட்டி கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். உறுதியாக ஒரு வேலை இருக்கா அவனுக்கு? ஊருக்கு நல்லது பண்றேன்னு ஊர்ல ஊதாரியா சுத்துர நாலு பயலுகல கூட்டு சேர்த்து போராட்டம் பண்ணிட்டு அடி வாங்கிட்டு சுத்துறான்.

அவனை நம்பி எப்படி பொண்ணை கொடுக்க முடியும். என் மக இந்த கிராமத்துல கிடந்து கஷ்ட பட கூடாது சொல்லி ட்டேன் என்று அவர் பொரிந்து விட்டு கணவர் முகம் பார்த்திட,

யோசனையாக நெற்றி சுருக்கினார் வேலாயுதம்.

இன்னும் என்னங்க யோசனை? சரி சொல்லுங்க அவ சந்தோசம் தானே நமக்கு முக்கியம் என்று கோபமாக பேசிய குரல் கெஞ்சலாக இறங்கி வர,

மகள் பாசத்தில் அவரும் தலையை ஆட்டி வைத்தார்.

அவர் சம்மதம் சொன்னதும் முகம் கொள்ளா சிரிப்புடன் வெளியே ஓடி வந்த விஜயா,

தம்பி ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை வச்சுக்கலாம். எங்க முறை படி பொண்ணு ஊர்ல தான் கல்யாணம் பண்ணுவாங்க. தாலி கட்டின பிறகு தான் மாப்பிள்ளை யோட அனுப்பி வைப்போம் என்று அவர் ஆனந்த தில் சொல்லிட,

ஏக மகிழ்ச்சி இளமதிக்கும், தினேஷுக்கும்.

போட்ட திட்டம் வெற்றியடைந்த களிப்பில் ஜெய், தீனாவை கெத்தாக திரும்பி பார்க்க,

இங்கே தீனா முகத்தில் ஈ ஆடவில்லை.

அமைதியாக அறையை விட்டு வெளியே வந்த வேலாயுதத்திடம் வந்தவன்,

அத்தை என்ன மாமா சொல்றாங்க? என்று தழு தழுத்த குரலில் கேட்க,

மதி ஆசை பட்டுட்டா, வேற என்ன செய்ய சொல்ற மாப்பிள்ளை என்று அவர் அடித்த அந்தர் பல்டியில் தீனாவுக்கு இரத்தமே கொதித்தது.

அப்போ என் ஆசை என்று அவன் கேட்க,

அது நிராசை மச்சான் என்ற ஜெய்யின் எகதாள குரலில் திரும்பி தீனா அவனை விழிகளால் பொசுக்கிட,

இதழ்களை மூடிக் கொண்டு சிரித்தான் ஜெய்.

அம்மா என்று சந்தோசத்தில் மதி ஓடி வந்து விஜயாவை கட்டி கொள்ள,

தாங்க்ஸ் அத்தை என்றான் தினேஷ் புன்னகை முகமாக,

அதையெல்லாம் பார்க்க பார்க்க வயிறெரிந்தது தீனாவுக்கு.

அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகள் தினேஷ், இளமதி திருமணத்தை பற்றி விஜயா பேச துவங்கிட,

அந்த இடத்தில் நிற்கவே நரக வேதனையாக தான் இருந்தது தீனாவுக்கு.

எல்லாரையும் முறைத்து விட்டு, விருட்டென அவன் வெளியேறி ட,

செல்லும் அவன் முதுகை வெறித்து கொண்டிருந்த ஜெய் இதழ்களில் கொடூர புன்னகை ஒன்று இழையோடியது.

அப்போதே காலண்டரில் நல்ல நாள் பார்த்து அடுத்த மாதமே திருமணம் வைத்து விடலாம் என்று விஜயா பற பறக்க, காதல் ஜோடிகளுக்கு கசக்குமா என்ன?

வெட்கத்தில் முகம் சிவந்து போனாள் இளமதி.

வேலாயுதம் தான் விஜயா கொஞ்சம் பொறுமையா செய்யலாமே என்று சொல்ல,

நல்ல விசயத்தை எல்லாம் தள்ளி போட கூடாதுங்க. நம்ம பொண்ணுக்கு இனியா சேர்க்க போறோம். சேர்த்து வைச்சத கொடுக்க போறோம். அதுக்கு எதுக்கு நாள் தள்ளி போடணும்? என்றவருக்கு இருந்த ஒரே பயம் தீனா தான்.

குறுக்க விழுந்து கல்யாணத்தை கெடுத்து விடுவானோ என்று எண்ணி அஞ்சி தான் அவர் அவசர பட்டார்.

நாங்க ஜோசியர் கிட்ட ஒருமுறை கேட்டுட்டு உங்களுக்கு உறுதியா சொல்றோம் தம்பி என்று ஜெய்யிடம் அவர் கூறிட,

நல்லது என்று இருக்கை கூப்பி கும்பிட்டு விட்டு, தன் மனைவி மற்றும் தினேஷுடன் அங்கிருந்து புறப்பட்டான் ஜெய்.

உற்சாகமாக தினேஷ் வண்டி ஓட்டி கொண்டு வர,

ஜெய்க்கும், தீனா வை ஆசையை நெருப்பில் எரித்து விட்ட ஆனந்தம்.

அவன் அருகே பின்னிருக்கை யில் அமர்ந்து இருந்த அறிவு சுடரே, தன் கணவன் இன்று இரு உள்ளங்களை இணைத்து வைத்த உத்தமன் என்ற பூரிப்பில் அவன் தோள் சாய்ந்திட,

பக்கவாட்டாக மனைவியை பார்த்த ஜெய்க்கு இன்னும் ஆனந்தம்.

அவன் காட்டில் மழை அல்லவா பெய்து கொண்டிருக்கிறது.

மழை வந்தால் இடி மின்னல் வருவதும் இயல்பு தானே.

அடுத்தவன் குடியை கெடுத்து சுகம் காண்பவனுக்கு அப்போது தான் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுக படுத்திய ஜீவன் நினைவில் வந்தது.

தினேஷ் அம்மா எங்க? என்று அவன் கேட்க,

சாரி பாஸ் சொல்ல மறந்துட்டேன். அம்மா காலையிலேயே அப்பா கூட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு போய்ட்டாங்க.

என்றதும் களிப்பாக இருந்த முகம் கரியை பூசியது போல் ஆகி விட்டது.

வண்டிய நிறுத்து என்று அடி குரலில் ஜெய் சொல்ல,

அவன் குரல் பேதம் திருமண கனவில் மிதந்து கொண்டு வந்தவனை ஆகாயத்தில் இருந்து கீழே தள்ளி விட்டது.

என்னாச்சு பாஸ் சற்று அல்லலுடன் கேட்டான் தினேஷ்.

சொல்றேன் கீழ இறங்கு என்று ஜெய் சுடர் இருப்பதால் கோபத்தை கூட காட்ட முடியாத நிலையில் பல்லை கடித்து கொண்டு சொல்ல,

அவன் விழிகளை கண்ட சேவகனுக்கு அவன் கோபம் அப்பட்டமாக தெரிய,

வாக்குவாதம் பண்ணாது, அமைதியாக கீழே இறங்கினான் தினேஷ்.

அந்த ஆள் கூட ஏன் அம்மாவா அனுப்பி வைச்ச என்று சத்தமின்றி மிரட்டியவன்,

நடந்தே ஊர் வந்து சேரு என்று அவனே காரை ஓட்டி கொண்டு சென்று விட்டான்.

அந்த அம்மா அவங்க புருஷன் கூட போய் இருக்கு? நான் ஏதோ இல்லீகள் ஆள் கூட அவங்களை அனுப்பி வச்ச போல கோபப்பட்டு போறார்.

இவர் மட்டும் இவர் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கலாம். இவர் அப்பா அவர் பொண்டாட்டி கூட கோவிலுக்கு போக கூடாதா? என்னங்கடா நியாயம் இது?

இந்த ரோட்ல பஸ் எதுவும் வருமா தெரியலையே” என்று புலம்பிக் கொண்டே தினேஷ் பொடி நடையாக நடக்க ஆரம்பித்தான்.
 
Status
Not open for further replies.
Top