ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் பெயர் ஆதிரா - கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6 - கனவு

அடுத்து சில நாட்களுக்கு கவினும் ஆதிராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. அதற்கேற்றால் போல கவினும் தொழில் விடயமாக வெளியூர் சென்ற அப்பாவுடன் தொற்றி கொண்டுவிட்டான். அவன் வெளியூர் சென்றதே ஆதிராவை முகம் கொடுக்க முடியாமல்தான். ஆதிராவுக்கு தான் முன்னர் பூஜாவுடன் பழகவேண்டும் என்று கூறியது இன்னும் நினைவில் இருக்கும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. தன்னை நேசிக்கும் தன் மீது அக்கறை நிறைந்த ஆதிராவின் பதில் தனக்கு சாதகமாக இருக்குமா என்றெண்ணும் போது கவினுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.

'திராவுக்கு பூஜாவை பிடிக்குமா?'

'எவ்வளவு மடத்தனமான செயல் செய்துள்ளேன். நல்ல நண்பிகளாக இருந்தவர்களை நான்தானே பிரித்தேன்....'

'எனக்கு நானே ஆப்பு வைத்துவிட்டேனா?'

'ச்சா..... திரா என்னை பற்றி மட்டும்தான் யோசிப்பாள்? பூஜா நல்ல பொண்ணுதானே? திரா நிச்சயம் நல்ல முடிவா சொல்லுவாள்.' இவ்வாறு தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் சில வேளைகளில் 'நான் எதுக்கு ஒரு பொண்ண லவ் பண்றதுக்கு திரா கிட்ட பெர்மிஷன் வாங்கணும்?' என்றும், 'டேய் கவின், திராவ விட வேற யாருடா உன் மேல அக்கறையா இருப்பாள்?' என்றும் தன் மனதையே போட்டு குழப்பியடித்துக்கொண்டிருந்தான்.

கவின் போலவே ஆதிராவுக்கும் ஒரே குழப்பமாகவேயிருந்தது. ஆனால் ஆந்திராவின் குழப்பம் பூஜாவையும் கவினையும் பற்றியதுதான்.

'பூஜா யார்?'

'பூஜாவுக்கும் கவினை பிடிக்குமா?'

'பூஜாவின் குடும்ப பின்னணி என்ன?'

இவையெல்லாம் தெரிய வேண்டுமென்றால் அது பானுவுக்கு மாத்திரமே தெரிந்திருக்கும். ஏனெனில் பானுவின் அம்மா ராஜேஸ்வரிக்கு தெரியாதவர்களே அவ்வூரில் இருக்க முடியாது. அப்படியிருக்க அத்தொகுதி எம் எல் ஏ சக்திவேலுவை தெரியாமலா இருக்கும். ஏனெனில் எம்.எல்.ஏ சக்திவேலுவின் மகள்தான் இந்த பூஜா. எம்.எல்.ஏயின் பெயர் தொகுதியில் அவ்வளவு நல்லதாக இல்லை என்பது மட்டுமே ஆதிராவுக்கு அப்போது தெரிந்திருந்தது. ஆனால் இதையெல்லாம் நன்றாக அறிந்தவர் ஆதிராவின் அப்பா ராம்குமார்தான், என்றாலும் அவரிடம் விசாரிக்க சென்றால் மாட்டிக்கொண்டு விடுவோம் என்பது ஆதிராவுக்கு தெரியும்.

அடுத்த நாள் ஆதிராவோ ஸ்கூலில் இருந்த விஷேட வகுப்புகளை முடித்துக்கொண்டு பானுவுடன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள். அன்று முழுதும் வகுப்பறையிலேயே ரகசியமாக நடந்தவற்றை விசாரித்திருந்தாள் பானு.

"ஹேய், என்னடி சொல்ற? பூஜாவையா?' நிஜமாத்தானாடி......."

"ஐயோ ராமா, நான் பொய்யா சொல்லிக்கிட்டிருக்கேன். நிஜமாத்தான்டி."

"கவின் குடுத்து வச்சவன். ராஜா மாதிரி வாழப்போறான்."

"அதான் எனக்கு பயமாயிருக்குடி. பணம் இருக்கிற இடத்தில குணம் இருக்காதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்."

"குணமில்லாம போனாத்தான் உனக்கென்னடி? கவின்தான் உன்ன லவ் பண்ணலன்னு தெரிஞ்சிடுச்சு தானே. அப்புறம் அவன் நல்லா இருந்தா என்ன? இருக்கலாட்டி என்ன? விட்டு தள்ளுடி...."

"ஷட் அப் பானு. என்ன நடந்தாலும் அவன் என்னோட பிரெண்ட், இனி ஒரு தடவை நீ இப்பிடி பேசிக்கிட்டிருக்கிறத பார்த்திட்டு சும்மா இருந்திட மாட்டன்........" ஆதிரா கோபத்தில் கொதிக்க ஒருகணம் வெலவெலத்துப்போனாள் பானு.

கோபம் குறையும் வரை அமைதியாய் இருந்த ஆதிராவுக்கு பானுவை பார்க்கவும் பாவமாய் இருந்தது.

"ஸாரி ஆதி, நீ அவனோட பெஸ்ட் பிரெண்டா இருக்கலாம். பட் எனக்கு நீதான் பிரெண்ட். நீ உள்ளுக்குள்ள கவலை பட்டுக்கிட்டு இருக்கிறது எனக்கு புரியாதுன்னு நினைச்சா நீதான் முட்டாள். உன்ன இப்பிடி பார்க்க கஷ்டமா இருக்கு. அதனாடிதான் கவின்ல கோபமா பேசிட்டேன். ஸாரிடி." ஆதிராவை சமாதானப்படுத்தினாள் பானு.

"இல்லடா, எனக்கு அவன பிடிச்சிருந்திச்சு. அத யாரும் தப்புன்னு சொல்ல முடியாது. அதே போல அவனுக்கு பூஜாவ பிடிச்சிருக்கு. அது அவனோட விருப்பம். அவனோட உண்மையான பிரெண்டா நான் அவன டிஸ்டர்ப் பண்ணாம அவனுக்கு பிடிச்ச லைஃப வாழ விடுறதுதான் நான் அவன் மேல வச்சிருந்த பாசத்துக்கு அழகு. அதில்லாம நானும் அவன்கிட்ட போய் என்னோட லவ்வ சொல்லி அவனோட லவ்வையும் கெடுத்து என்னோட லைஃபயும் கெடுத்து......... இதனால என்ன கிடைக்கபோகுது......."

"ப்பா...... என்னடி இவ்வளவு மெச்சூரா பேசுற? உடம்பெல்லாம் புல்லரிக்குது...."

"நல்லா புல்லரிக்கும்...... கலாய்க்காம நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுடி."

"அப்படியே ஆகட்டும் மகா ராணி, கேளுங்கள்."

"விளையாடாதடி....."

"கேளுடி........"

"பூஜா எப்பிடி? உனக்கு அவளை பத்தி தெரியும்தானே? சொல்ல்லுடி."

"அவள் நல்ல பொண்ணுதான். கவினுக்கு ஏத்த ஜோடிதான். முதல்ல பூஜாக்கு கவின பிடிக்கணுமே?"

"அதெல்லாம் நல்லா பிடிக்கும்."

"அதெப்பிடி உனக்கு தெரியும்!?"

"அன்னைக்கு கிரௌண்ட்ல பேசிக்கிட்டிருக்கும் பொது கவினோட பேர நான் சொன்னதும் அவ கண்ணே காட்டி குடுத்திடுச்சே....."

"அப்பிடீன்னா பிரச்சனை இல்ல, ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாலே சக்ஸஸ்தான்."

"அதெல்லாம் பிரச்சனை இல்லன்னு எனக்கும் தெரியும். நான் கேட்க வந்ததே வேறொன்ன பத்தி....."

"எத பத்தி?"

"பூஜாவோட பேமிலி பத்தி.... அப்பா....அம்மா....அண்ணா....இவங்க எல்லாம் எப்பிடின்னுதான்."

"அதெல்லாம் உனக்கெதுக்குடி, அத கவினோட அம்மா,அப்பா அவனுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறப்போ விசாரிச்சு தெரிஞ்சுக்குவாங்க."

"அத அந்த நேரம் அவங்க விசாரிக்கட்டும், நான் இப்பதான் விசாரிக்கணும்."

"ஏன் ஆதிரா?"

"கவின் லவ் பண்றான்னா அவள தான் அவன் கல்யாணம் பண்ணிக்கணும். சும்மா டைம் பாஸுக்கா லவ் பண்றது. அப்பிடீன்னா அவளோட பேமிலி பத்தியும் தெரிஞ்சுக்கணும்."

"டைம் பாஸுக்கு லவ் பண்ற பையன்களும் நிறைய பேர் இருக்கிறானுங்கன்றத மறந்திடாத....."

"இருக்கலாம், கவின் அப்பிடிப்பட்டவன் இல்ல. அப்பிடி இருக்கவும் விட மாட்டன்."

"சூப்பர்டி......"

"சொல்லு....."

"எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவளோட அப்பா பத்தி ஊருக்குள்ள நல்ல பேரு இல்ல. அம்மா ஒரு அப்பாவி. அவளோட அண்ணன் பாலிவுட் ஹீரோ போல இருப்பான். செம ஹாண்ட்ஸம். அவனை நல்லா சைட் அடிச்சிருக்கன்."

"வேற......"

"வேற......... ஆங்...... எம்.எல்.ஏக்கு இல்லீகல் பிஸ்னஸ் இருக்கிறதா அம்மா அப்பா கூட பேசிட்டிருந்தத சின்ன வயசில கேட்டிருக்கேன். புள்ளைங்க ரெண்டு பேரும் அம்மா போல நல்லவங்களா இருப்பாங்கன்னு தோணுதுடி."

"ஏன் அப்பிடி தோணுது?"

"இல்லடி, பூஜா என்கூட பழகின வரைக்கும் நல்ல அமைதியான பொண்ணு போலதான் இருந்தாள். அதனாடிதான் சொன்னான்."

"அப்போ புள்ளைங்க ரெண்டு பேரும்னு சொன்னியே?"

"அவங்கண்ணன் பால் நிறம், வெள்ளையா இருக்கிறவன் நல்லவனாத்தான் இருப்பான்."

பானுவின் பதிலை கேட்ட ஆதிராக்கு மட்டுமல்ல சொன்ன பானுவிற்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. அவ்வாறு சிரித்தவாறே இருவரும் தத்தம் வீடுகளை நோக்கி நடையை கட்டினர். போகும் போது பானுவும் சக்திவேலை பற்றி வேறு ஏதேனும் தகவல்களை தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ கேட்டு அறிந்து வருவதாக கூறி விட்டு சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு பூஜை அறையில் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு படிப்பதற்கு புத்தகத்தை திறந்தாள் ஆதிரா. சில நாட்களாக அவளது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தபடியால் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை அவளுக்கு. அது அவளுக்கே விளங்கியிருந்தாலும் அந்த சந்தோச இம்சையை விரும்பி ஏற்றிருந்தாள் ஆதிரா. இன்று கவின் மனதில் தான் இல்லை என்று புரிந்திருந்தாலும் பூஜாவை பற்றிய தேடலிலும் பூஜாவினால் தன் நட்புக்கு என்ன இடையூறு ஏற்படப்போகிறதோ என்ற யோசனையும் ஏற்பட்டிருந்தது.

வழமையான தனது மகள் ஆதிராவை சில நாட்களாக காண முடியவில்லை என்று ராம்குமாருக்கும் விளங்கியிருந்தது. மானிடராய் பிறந்த எல்லோரும் இந்த வயதில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களையும் அதனால் மனதில் ஏற்படும் குழப்பங்களையும் கடந்து வந்தவர்கள்தான், ராம்குமார் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆனால் மற்றோர்கள் எல்லோரிடத்திலும் இல்லாத தெளிவு ராம்குமாரிடம் இருந்தது. அது பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளின் செயற்பாடுகளை கண்டிக்கிறேன் என்கின்ற பெயரில் எரிகிற எண்ணெயில் பெட்ரோலை ஊற்றுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பது அவருக்கு தெரியும். இவ்வாறான காலகட்டத்தை தனது மகள் கடக்கும் போது எவ்வாறு அவளுக்கு துணையாக இருந்து அவளை வழிநடத்த வேண்டும் என்பதனையும் அவர் முன்னமே அறிந்து வைத்திருந்தார்.

"எங்கம்மா ஆதி இந்த கவின் பயல ரெண்டு நாளா காணல?" அப்பாவின் குரல் கேட்டு சுய நினைவிற்கு வந்தாள் ஆதிரா.

"அப்பா அவன் அங்கிளோட சென்னைக்கு போய்ட்டானாம். உங்ககிட்ட சொல்லலையா?"

"இல்லையேம்மா, எதுன்னாலும் சொல்லிட்டு போவான்....."

"அவன் இந்த சமயம் அம்மாகிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கான் போல." என்று புன்னகைத்தாள் ஆதிரா.

"ஏன் உன்கிட்ட கூட சொல்லலையாம்மா?"

"ம்ம்ஹும், இந்த வீட்டில அம்மாக்கு மட்டும் தான் மரியாதை போல."

"உன்கிட்டயும் சொல்லலைன்னா அது அதிசயம்தான். இன்னும் விளையாட்டு புள்ளையாவே இருக்கான். படிக்கிற போலவும் தெரியல. படிப்பானா?"

"அவன் படிப்பான்ப்பா. என்ன எதிலேயும் சீரியஸ்னஸ் இல்ல."

"அவங்கம்மா தன்னோட மகனும் உன்ன போல நல்லா படிச்சு கலெக்டரா வரணும்னு ஆசை பட்டிட்டு இருக்கா. அதுக்கு வாய்ப்பு இருக்காம்மா?"

"அவன்கிட்ட நிறைய டேலேன்ட் இருக்கு. பட் எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டிருக்கான். அவன் வீட்டையும் அவனுக்கு ரொம்ப செல்லம்."

"ஹ்ம்ம்..... அது எனக்கும் புரியுது. உண்மையிலேயே மோகனுக்கு கவின தான் ஆரம்பிச்சிருக்கிற கான்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு எம்.டியா ஆக்கணும்னு தான் ஆசை. அவனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தும் ஒரு இன்ஜினியரிங் சீட் வாங்கிடுவான்."

"ஓ...அப்பிடியாப்பா?"

"ஆமாம்மா. காசு இருந்தா எதுவும் படிச்சிடலாம்மா இந்த ஊர்ல, ஆனா பப்லிக் சர்வீஸ்ங்கிறது எவ்வளவு கோடி பணமிருந்தாலும் கிடைச்சிடாது. அதில திறமைக்கும் முயற்சிக்கும்தான் வாய்ப்பு கிடைக்கும். அந்த சர்வீஸ்ல கிடைக்கிற மரியாதை வேற எதிலேயும் கிடைக்காதும்மா."

"நான் பப்லிக் சர்வீஸ்ல செலக்ட் ஆகணும்னு உங்களுக்கு அவ்வளவு ஆசையாப்பா?"

"அது என்னோட ஆசை இல்லம்மா, அது உன்னோட கனவு. கண்ண திறந்திருக்கும் போதே நீ கண்ட கனவு அது, இப்போ கண் மூடி கனவு காண்கிறதால உன்னோட லட்சிய கனவ மறந்துட்டியாம்மா?" என்று கூறி விட்டு ஆதிராவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார் ராம்குமார்.

அப்பாவின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் கீழே தன் பார்வையை செலுத்தி மௌனமானாள் ஆதிரா.

மகளின் சங்கடத்தை புரிந்து கொண்ட ராம்குமார் "ஆதிம்மா, வாழ்க்கை ரொம்ப பெரிசும்மா, உனக்கு பிடிச்ச எதையும் நீ அதில சம்பாதிக்கலாம்.... அன்பு, கல்வி,பாசம், நட்பு, விளையாட்டு, கோபம்..... எதுவும் உனக்கு கிடைக்கும். ஆனா உனக்கு கிடைக்காத ஒண்ணு காலம் மட்டும்தான். ஒவ்வொரு காலத்திலேயும் நமக்கு எது முக்கியமுன்னு நமக்கு புரியனும். விளையாட வேண்டிய காலத்தில விளையாடனும், படிக்க வேண்டிய காலத்தில படிக்கணும். அதே போலத்தான் வாழ்க்கைல நட்பு, பாசம், காதல் எல்லாமே. எதுவும் நிரந்தரமில்லை. என்னைக்குமே உன்னோட கல்வி உன்ன கை விடாது. எப்பவும் உன்ன ஏமாத்தாது. அதுக்காக உன்னோட ஆசைகளை எல்லாம் அழிக்க சொல்லல. அதுக்கு இப்ப நேரமும் இல்ல, நம்மளோட நிலைமையும் அப்பிடி இல்ல. நீ புத்திசாலி, நீ உன்னையும் நல்லா பார்த்துப்ப, உன்னோட சேர்ந்தவர்களையும் நல்லா பார்த்துப்பன்னு தெரியும்."

ஆதிராவின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

"ஆதிம்மா, நான் எதாவது உன்னோட மனசு நோகிற மாதிரி பேசியிருந்தா அப்பாவ மன்னிச்சுக்கம்மா."

"அப்பா, அப்படி சொல்லாதீங்கப்பா......"என்றபடி ஓடிவந்து ராம்குமாரின் நெஞ்சில் முகம் புதைத்து கண்ணை கசக்கினாள் ஆதிரா.


"டேய் காளி, உன்ன வெளியதானே காவலுக்கு விட்டிருந்தேன். இப்ப உள்ளருந்து வர......"

"அண்ணே, பானுக்கு பசிக்குமுன்னு தான் ஒரு ரொட்டி கொடுத்திட்டு வந்தேன்..."

"உனக்கு ஒருதடவை சொன்ன புரியாதா? அவளுக்கு சாப்பாடு கொடுக்கிற வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ மூடிக்கிட்டு இங்கயே நில்லு. இதுதான் உனக்கு கடைசி வார்னிங்...."

"அண்ணே, ஸாரிண்ணே ஸாரிண்ணே. இனிமே இப்படி நடக்காதுண்ணே. அது என்னமோ தெரியல, அவளோட கண்ணை பார்த்தாலே பேஜாராகிடுதுண்ணே"

"டேய் அவள் ஆள மயக்குறதுல கில்லாடிடா.......அது சரி, எதோ பேர் சொன்னியே... என்ன பேரு?"

"அவளோடதாண்ணா? பானு......"

"அட்ராசக்க...... என்கிட்ட பூஜான்னு சொல்லிட்டு உன்கிட்ட பானுங்கிறாளா? ஐயா சொன்னது சரிதான் போல"


"என்னண்ண சொல்ற? பூஜாவா!!!!!!?"


-ஆதிராவின் கனவு தொடரும்...
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 7 - கற்பூர வாசனை

"ஹேய் கவின் நில்லு......"

ஆதிராவின் குரலை கேட்டு முகம்கொடுக்க முடியாமல் தலை குனிந்து நின்றான் கவின்.

"டேய் இன்னும் எத்தன நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடப்போற? பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணிடலாம்னு நினைப்போ?"

"அப்பிடியில்ல ஆதிரா, உன்ன பேஸ் பண்ணவே ஏதோ போல இருந்திச்சு, அதான் அப்பா கூட வெளியூருக்கும் போய்ட்டேன்."

"ஓ.... எனக்கு பயந்துதான் தப்பிச்சு ஓடினியா? நான் என்ன உன்ன பிடிச்சு கடிச்சு சாப்பிட்டிட போறானா?" என்றபடி செல்லமாக கவினின் வயிற்றில் குத்தினாள் ஆதிரா. தன் தோழிக்கு தன்னில் வருத்தமில்லை என்று தெரிந்த பின்தான் கவினுக்கும் நிம்மதியாயிருந்தது.

"அது சரி கவினு....... அது என்ன புதுசா?"

"இந்த ஜீன்ஸ கேட்குறீயா? லாஸ்ட் பர்த்டேக்கு அப்பா வாங்கி குடுத்தது. நீ கூட நல்லா இருக்குன்னு சொன்னியே.... அதுக்குள்ளே மறந்துட்டியா?"

"அது இல்லடா, பேசும் போது "ஆதிரா" ன்னு யாரையோ கூப்டியே..... "

தலையில் கைவைத்த கவினும் "அதுதானே உன் பேரு, அப்புறம் அப்பிடித்தானே கூப்பிடணும்...." என்றபடி நகைக்க, "டேய் இந்த உலகத்துலயே என்ன "திரா"ன்னு கூப்பிடுறது நீ மட்டும் தான். நீ அப்பிடி கூப்பிடல்லேன்னா அது கவின் போலவே இருக்காது."

"இல்லடி, நீ வேற என்மேல கோபத்துல இருப்ப, அந்த நேரத்துல திரான்னு கூப்பிட உனக்கு கோபம் வந்துடுமோன்னு பயத்துல ஆதிரான்னு கூப்பிட்டேன், இனிமே கூப்பிட மாட்டேன்."

"அது..... என்ன திரான்னு எப்பவும் நீ மட்டும்தான் கூப்பிடனும்,........ இல்ல கூப்பிடுற......."

"அப்படியே ஆகட்டும் எஜமானி"

"டேய்......சரி சென்னைக்கு போனியே எனக்கு என்ன வாங்கி வந்த?"

ஆதிரா கேட்டதும் கண்களை இருபுறமும் சுழற்றி முழித்தான் கவின். அவனைப்பற்றி தெரிந்த ஆதிராவும் "டேய் மறந்துட்டேன்னு மட்டும் சொல்லிடாத, அப்புறம் கடுப்பாகிடுவன்."

"நான் மறப்பானா? ஸ்வீட்ஸ் வாங்கி வந்தன். வீட்டை இருக்கு. இப்ப போகும் போது எடுத்து தறேன்."

"மதுரைல இல்லாத ஸ்வீட்ஸாடா? ஒரு ஊருக்கு போனா அங்க என்ன ஸ்பெஷலோ அதத்தான் வாங்கிட்டு வரணும்?"

"அப்போ சென்னையில என்ன ஸ்பெஷல்னு நீயே சொல்லு."

"ம்ம்ம்ம்....... அங்க என்ன ஸ்பெஷல்.......ஆங்..... தோணிகிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்திருக்கலாமேடா?"

"அடியே தோனி பைத்தியம்...... தோனி தானா சென்னையோட ஸ்பெஷல்?"

"தோனி இந்தியாவுக்கே ஸ்பெஷல்டா........"

"ஷப்பா...... முடியலடா..........." இருவரும் வழமை போல மாறி மாறி ஒருவரை கலாய்த்த வண்ணம் வகுப்பிலிருந்து வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

ஆதிராவின் வீட்டை வந்தடைந்ததும் ஆதிரா வீட்டிற்குள் செல்ல கவின் தான் வாங்கி வந்த ஸ்வீட்சை எடுப்பதற்காக தனது வீட்டிற்கு சென்றான்.

'ஏன் திரா பூஜா பத்தி எதுவுமே சொல்லல? ஒருவேளை பூஜாவை பிடிக்கலையோ?'

இந்தக்கேள்வி மாத்திரம் கவினின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

வீட்டிற்கு போய் ஸ்வீட்ஸையும் இன்னொரு பையையும் கையில் எடுத்தவன் வேகமாக ஆதிராவை சந்திக்க சென்றான்.

வாசலிலேயே ஆதிராவும் கவினின் அம்மா ரோகிணியும் சிரித்து கதைத்துக்கொண்டிருந்தனர். தன்னுடைய அம்மாவும் அங்கேதான் இருக்கிறார் என்பது அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது. கவினைக்கண்டதும் பேச்சை குறைத்துக்கொண்டு அவர்கள் ஏதோ சைகை மூலம் பேசுவது தெரிந்தது.

"டேய் எங்கடா என்னோட டீ ஷர்ட்?"

ஆதிரா இப்படி கேட்டதும் கவினுக்கு அம்மா மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"அம்மா, உனக்கெவ்வளவு வாட்டி சொன்னன், இது திராவுக்கு சர்ப்ரைஸ்ன்னு? எல்லாத்தையும் சொதப்பிட்டியேம்மா?"

"டேய் ஏன்டா ஆன்டிய திட்டுற? நீ சர்ப்ரைஸ்ன்னு வீட்டுலயே ரெண்டு நாளா டீ ஷர்ட்ட வச்சிருந்தா அவங்களுக்கு எப்பிடி தெரியும்? நீ குடுத்திருப்பன்னு நினைச்சி என்கிட்ட அத காட்ட சொல்லி கேட்டா? அட்லீஸ்ட் அவங்களுக்கு முன்னமே காட்டியாவது இருந்திருக்கலாம்?"

"டேய் கவினு, ஸாரிடா. அவசரப்பட்டு கேட்டுட்டேன்."

"நீங்க ஏன் ஆன்ட்டி ஸாரி கேட்குறீங்க? கவின் நீதான் அம்மாவ திட்டினத்துக்கு ஸாரி கேட்கணும். கேளுடா...."

"சரி..... ஸாரி ஸாரி....." என்று வேண்டா வெறுப்பாக கூறிவிட்டு தான் சென்னையிலிருந்து வாங்கி வந்த தோனியின் கையொப்பமிட்ட டீ ஷர்ட்டை ஆதிராவிடம் கொடுத்தான்.

தனது ஆசைகளை இப்படி துல்லியமாக புரிந்து வைத்திருக்கும் பையனை எந்தப்பெண்ணுக்குத்தான் பிடிக்காது, இல்லை யாருக்குத்தான் விட்டு கொடுக்க மனம் வரும்?

சிறிது நேரத்தில் ரோகினி கிளம்பிவிட்டாலும் கவினை சாப்பிடவைத்தே வீட்டிற்கு அனுப்பிவைத்தார் இந்திராணி.

வீட்டிற்கு வந்த கவினுக்கு ஆதிரா ஏன் பூஜாவை பற்றி எதுவுமே கூறவில்லை என்பது கவலையை உண்டு பண்ணியிருந்தது. என்ன ஆனாலும் சரி அடுத்த நாள் ஆதிராவிடம் கேட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவனாய் தூக்கத்தில் விழுந்தான் கவின்.

ஆனால் அருகிலுள்ள வீட்டில் ஒரு அறையில் மட்டும் வெளிச்சம்..... அங்கே ஆதிரா தன நினைவுகளில் எட்டிப்பார்க்கும் கவினை சட்டை செய்யாமல் பாடப்புத்தகத்துள் மூழ்கிப்போனாள்.

கவின் அடுத்த நாள் ஆதிராவை பார்த்து கேட்கவென இருந்த எதையும் அவனால் அடுத்த சில நாட்களுக்கு கேட்க முடியவில்லை. ஆதிரா தன்னை என்ன நினைப்பாள் என்ற எண்ணம் அவனுக்கிருந்தது. ஆதிராவும் பூஜாவைப்பற்றி எதுவும் கூறாமலிருந்ததுக்கு காரணமில்லாமலில்லை.



சில வருடங்களுக்கு முன்பு

மாநில மட்டத்திலான மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வந்திருந்த மாணவர்கள் தங்கள் திறமைகளை காட்டிக்கொண்டிருந்தபோது பெண்களுக்கான நூறு மீற்றர் குறுந்தூர ஓட்டத்தில் மாநில அளவிலான சாதனையை முறியடித்து வெற்றி வாகை சூடினாள் மதுரைப்புயல் ஆதிரா.

பார்வையாளர் பகுதியிலிருந்து பெருமை பொங்க தனது மகளின் சாகசங்களை ரசித்து பூரிப்படைந்து கொண்டிருந்தார் ராம்குமார்.

நூறு மீற்றர் போட்டி முடிவடைந்திருந்தாலும் அடுத்து இருநூறு மீற்றர் ஓட்டப்போட்டியிலும் நீளம் தாண்டல் போட்டியிலும் ஆதிரா பங்குபற்றுவதால் அவற்றை பார்ப்பதற்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தார் ராம்குமார்.

அடுத்து சிறிது நேரத்தில் இருநூறு மீற்றர் பெண்களுக்கான இறுதிப்போட்டி என்று அறிவிப்பு வந்ததுமே ராம்குமாரின் கண்கள் ஆதிராவை தேடத்தொடங்கின. ஆனால் எங்கு தேடியும் ஆதிரா தென்படவில்லை.

'எங்கே மகள்?'

'ஆதிராவிற்கு உடம்புக்கு முடியாம போயிற்றா?'

ஓடுபாதையில் கூட ஆதிரா நிற்கவேண்டிய நான்காம் இலக்க பாதை வெறுமையாக இருந்தது. கண்கள் பதைபதைக்க எழுந்து வீரர்களின் அறையை நோக்கி சென்ற ராம்குமாரை காவலதிகாரிகள் உள்ளே விட மறுத்து விட்டனர். காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு திரும்பும் வேளையில் போட்டியும் முடிவடைந்திருந்தது.

கண்கள் கலங்க மகளுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் பயந்த ராம்குமாருக்கு மீண்டும் சில நிமிடங்களில் ஆதிராவை அரங்கிற்குள் கண்டதும்தான் உயிரே வந்தது.

ஆதிராவும் நடைபெறவிருந்த நீளம் தாண்டுதல் போட்டிக்காகத்தான் வந்திருந்தாள். போட்டியே இல்லாமல் இலகுவாக முதலிடம் கிடைத்தது.

வெற்றிக்களிப்புடன் பதக்கங்களை பெற்றவள் தந்தையிடம் ஓடினாள். மகளை அள்ளியணைத்தவர் இருநூறு மீற்றர் போட்டியில் பங்குபற்றாததன் காரணத்தையும் வினவினார்.

"அதுவா அப்பா, கோச் தான் சொன்னாரு, அடுத்தடுத்து மூணு போட்டில கலந்துக்கிட்டா ஸ்டாமினா குறைஞ்சிடும்னும் அப்புறம் முதல் மூணு ப்லேஸ்ல கூட இடம் கிடைக்காதுன்னும் சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே இருநூறு மீற்றர் போட்டில கலந்துக்கல, மத்த ரெண்டிலயும் பர்ஸ்ட் பிளேஸ் கிடைச்சிட்டுப்பா." ஆதிராவின் இந்தப்பதிலை கேட்ட ராம்குமாரின் கண்கள் சிவந்திருந்தது. ஆதிராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவளின் கோச் ரவீந்தரிடம் சென்ற ராம்குமார் " சேர் நீங்கதானா என்னோட பொண்ண இருநூறு மீற்றர் போட்டில கலந்துக்க விடல?" ராம்குமாரின் கோபம் புரிந்த கோச் ரவீந்தரும் "அப்பிடி பண்ணினதாலதான் அவளுக்கு இன்னைக்கு ரெண்டு கோல்ட் மெடல், புரிஞ்சுக்கோங்க மிஸ்டர் ராம்குமார்."

"என் பொண்ணோட வாய்ப்பை தட்டிப்பறிக்கிறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இருநூறு மீற்றர் போட்டில முதலிடத்துல வந்த பொண்ணு எடுத்த நேரம் என்ன தெரியுமா? 27.6 செக்கன். என் பொண்ணோட பெஸ்ட் என்னன்னு தெரியுமா? 27.1 செக்கன்."

"அதுவந்து....... அந்தப்பொண்ணு 26.9 செக்கன்ல பினிஷ் பண்ணிருக்கான்னு சொன்னாங்க. அதான் ரிஸ்க் எடுக்க வேணாமேன்னு விட்டுட்டேன்...."

"யோவ்..... நீயெல்லாம் ஒரு கோச்சா? உன்கிட்ட கத்துக்கிற பொண்ண நீயே குறைச்சு பார்க்கலாமா? இன்னைக்கு என்னோட பொண்ணு மூணு கோல்ட் மேடலோட வந்திருப்பாள்.... எல்லாத்தயும் கெடுத்திட்ட....." என்று கத்தியதில் அரங்கமே ஒரு நிமிடம் அரண்டு போனது.

"ஆதிம்மா, நமக்கு ஒண்ணு புடிச்சிருந்தாலோ இல்ல அதுக்காக நாங்க கஷ்டப்பட்டிருந்தாலோ அதுக்காக நேர்மையா உழைச்சிருந்தாலோ அத எந்த காரணத்துக்காகவும் விட்டு கொடுத்திடக்கூடாது. கட்டாயம் முயற்சி செய்து பார்க்கணும். உண்மையா முயற்சி செய்தும் அது கிடைக்கலன்னா அது நமக்கானதில்லம்மா. ஆனா முயற்சி செய்யணும், அதுதான் முக்கியம். இது வாழ்க்கைல எப்பவும் மறக்க கூடாத பாடம். சரியாம்மா?"

'நான் மறக்க மாட்டேன்ப்பா........' என்று இன்றும் அந்த நிகழ்வை மீட்டிக்கொண்டிருந்தாள் ஆதிரா.

ஒரு வாரம் கடந்திருந்தது. கவினுக்கான சந்தர்ப்பமும் அமைந்தது. கவினின் குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரான விநாயகபுரத்திலுள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் பொங்கி வழிபட சென்றனர். கூடவே இந்திராணியையும் ஆதிராவையும் அழைத்துச்சென்றனர். பெரியவர்கள் எல்லோரும் பொங்கல் பொங்குவதிலும் அரட்டை அடிப்பதிலும் கவனத்தோடு இருக்க ஆதிரா கவினை அழைத்துக்கொண்டு அந்த பழைய கோவிலை சுற்றிப்பார்த்து அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்.

"டேய் இவ்வளவு நாளா உங்க கோவில் இப்பிடி அழகா இருக்குமுன்னு சொன்னதே இல்லையடா?"

"திரா, இதிலென்ன அழகிருக்கு? சுத்திவர காடு போல இருக்கு. இது அழகா உனக்கு?"

"எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனைன்னு சொல்லுவாங்களாம். உன்கிட்ட போயி கேட்டேன் பாரு...... என்ன சொல்லணும். இயற்கைய ரசிக்கிறதுக்கெல்லாம் ஒரு இது வேணும்."

"என்ன இது வேணும்?"

"அதுக்கொரு ஞானக்கண் வேணும்டா...."

"நல்லா தெரியுது உன்னோட ஞானக்கண்...."

"தெரிஞ்சா சரி தம்பி......" என்றுவிட்டு ஆதிரா சிரிக்க கூடவே சிரித்த கவினும் " ஆனா என்ன பிரயோஜனம், அந்த ஞானக்கண்ணுக்கு என்னோட லவ் தெரியலையே......" என்று முதல் அடி எடுத்து வைத்தான்.

கவின் கூறியது என்னவோ தன்னை ப்ரொபோஸ் செய்வது போல தெரிந்தாலும் அடுத்த கணமே சுதாகரித்த ஆதிரா "இப்ப எதுக்கு கதைய மாத்துறே?" என்று கேட்டாள்.

"யாரு நானா? நானும் ரெண்டு வாரமா பார்த்திட்டே இருக்கன், நீயும் எதுவுமே நடக்காதது போலவே சாதாரணமா இருக்கிறே. எனக்குத்தான் மரண வேதனை."

"நீ எதைப்பத்தி பேசுறே?" மீண்டும் கவினை சீண்டினாள் ஆதிரா.

"என்ன கொலைகாரனா மாத்தாத திரா....." கோபத்தில் பொரிந்தான் கவின்.

"சரி சரி.... டென்ஷன் ஆவாத. எல்லாம் பொறுமையா பேசுவோம்னு இருந்தேன்டா."

"பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குல்ல, அதுக்காக இவ்வளவு பொறுமையா?"

"உனக்கு இப்ப என்ன தெரியணும்டா?"

"அன்னைக்கு நான் விரும்புற பொண்ண காட்டணும்னு கூட்டி போனன். அது பத்தி எதுவுமே சொல்லலையே...."

"பூஜா ரொம்ப நல்ல பொண்ணு, பூஜாவோட அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க. உனக்கேத்த பொண்ணு....... அப்பிடீன்னுதான் வேற யாரா இருந்தாலும் சொல்லியிருப்பன்.ஆனா......." ஆதிரா சொல்ல ஆரம்பிக்க மலர்ந்த கவினின் முகம் சொல்லி முடிக்கும் போது வாடியிருந்தது.

"ஆனா என்ன திரா?"

"பதறாதடா... பூஜா நல்ல பொண்ணு. அவளுக்கும் உன்ன பிடிச்சிருக்கு."

"என்னடி உளர்ர? யாரு அப்பிடி சொன்னா?"

"இதெல்லாம் சொல்லித்தான் தெரியனுமா? அவகிட்ட உன் பேர சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சிடுச்சுடா..."

"நிஜமா?...... அப்புறம் என்ன பிரச்சனை?"

"அது நிறைய இருக்குடா..... முதலாவது அவங்கப்பாவுக்கு நல்ல பேரு இல்ல. நிறைய இல்லீகல் பிஸ்னஸ் இருக்கிறதா ஊரு புல்லா கதை."

"அரசியல்வாதின்னாலே அப்பிடி கதை வாராது சகஜம்தானே..."

"அப்பிடி எல்லா விஷயத்தையும் ஈஸியா எடுத்துக்க முடியாதுடா... உன்னோட பியூச்சர்......"

"பூஜாவ நான் லவ் பண்றன், அவ அப்பாவ இல்ல. வேற என்ன பிரச்சனை?"

"உன்னோட ஸ்டடீஸ்? ஆன்ட்டி உன்னில் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்கடா... ஆனா நீ விளையாட்டுத்தனமா இருக்கே...."

"அதெல்லாம் படிச்சுடலாம்டி......" பூஜா தன்னை விரும்புகிறாள் என்று ஆதிரா சொன்னதும் கவினுக்கு வேறு எதுவும் தலைக்குள் ஏறவில்லை.

"நீ இப்போ வேற எதையும் கேட்கிற மன நிலையில இல்ல. எல்லாத்தையும் பொறுமையா யோசிச்சு பாருடா...."

"கண்டிப்பா....." வெறும் உதட்டிலிருந்து வார்த்தைகள் வந்தன.

.................................................................................

"கவின் இன்னொரு விஷயம், உன்னோட பிரெண்ட் ஆதிராவும் உன்னைத்தான் லவ் பண்றாள்." என்றுவிட்டு நடையை கட்டினாள் ஆதிரா.


-ஆதிராவின் காதல் தொடரும்.....
 
Status
Not open for further replies.
Top