ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் பெயர் ஆதிரா - கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3 - நட்பு வேறு காதல் வேறு

அடுத்த நாள் பள்ளியில் கவினிடம் ஒருவார்த்தை கூட பேசாமலிருந்த ஆதிராவை பார்க்கும் போது ஆதிராவின் தோழி பானுவிற்கோ ஆச்சர்யமாயிருந்தது.

"என்னடி ஆச்சு உனக்கு? கவின் வந்து பேசும்போது கூட முகத்த திருப்பிட்டு வந்துட்ட......"

"ஒண்ணுமில்லடி, அதொரு சின்ன சண்டை."

"உனக்கும் அவனுக்கும் சண்டை வர்றது எனக்கு தெரியாதா? ஆனா இன்னைக்கு என்ன புதுசா உன் கண்ணுல ஏதோ சோகம் தெரியுதே........"

"சோகமா???? நான் ஒண்ணும் சோகமால்லாம் இல்ல...." என்றவளின் கண்கள் உண்மையை காட்டி கொடுத்தது.

"ஓகே. எதுக்கு கவின் கூட சண்டை?"

"எப்பபாரு விளையாடிட்டே திரியுறான். படிக்கிறதும் இல்ல. இப்ப புதுசா யாரோ பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கானாம்னு கேள்விபட்டேன்."

"பொண்ணு பின்னாடியா? கவினா?"

"நானும் இப்பிடித்தான் சந்தேகப்பட்டு அவன்கிட்ட கேட்டேன், அவன் என்னடான்னா 'ஆமா அதுக்கென்ன'ன்னு சொல்லிட்டு போறான்"

கவின் விளையாடுவதும் படிக்காமல் ஊர் சுற்றுவதும் பல நாட்களாக இருக்கும் பிரச்சனை. இவற்றுக்கெல்லாம் அவனது வீட்டிலோ ஆதிராவின் வீட்டிலோ பிரச்சனையாகினால் கவினுக்கு ஆதரவாக போய் நிற்பது ஆதிராவும் அவளது அம்மா இந்திராணியும் தான். இதெல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்த பானுவிற்கு தற்போதைய ஆதிராவின் கோபம் எதற்கென்று புரிந்துவிட்டது.

"சரி ஆதி, அவன் எப்பவும் இதுபோல வம்பு பண்ணிகிட்டுதான் இருப்பான். அவனுக்கிருக்கிற வசதிக்கு எந்த பொண்ணுக்கு கொடுத்து வச்சிருக்கோ?" என்று சொல்லி ஆந்திராவை சீண்டி விட்டாள் பானு.

"பானு!....... நிறுத்து...........இனி அவனை பத்தி இப்பிடியெல்லாம் பேசாத..........." கோபக்கனலில் கொந்தளித்தாள் ஆதிரா.

"அவனை பத்தி பேசினா உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?"

"ஆயிரம்தான் இருந்தாலும் கவின் என்னோட பிரெண்ட். அவன் ஒண்ணும் நீ சொல்றது போல மோசமான பையன் இல்ல....."

"ஆதி..... வெயிட் வெயிட்...... நான் எப்போ கவின் மோசமானவன்னு சொன்னேன்?"

"நீ சொன்னதுக்கு அதுதான் அர்த்தம் பானு."

"ஹாஹாஹா........" வாய் விட்டு சிரித்த பானு தொடர்ந்தாள், " ஹேய் ஆதி, அவன லவ் பண்ற பொண்ணு கொடுத்து வச்சவள்னு சொன்னேன். இதில என்ன தப்பு இருக்கு?"

"லவ்வா? இந்த வயசிலையா? சான்ஸே இல்ல. அதுக்கெல்லாம் ஒரு மெச்சூரிட்டி வேணும்பா..... கவின் அப்பிடியெல்லாம் வழி தவறிடமாட்டான்."

"சினிமால பாட்டு பாடுற சங்கர் மகாதேவனை தெரியுமா?"

"ஆமா தெரியும்."

"அவரு அவரோட மனைவிய தன்னோட பதினாறாவது வயசிலதான் பார்த்து லவ் பண்ணினாராம். சச்சின் டெண்டுல்கர் பதினேழு வயசில...... இப்பிடி நிறைய லவ் ஸ்டோரீஸ் இருக்கும்மா."

"சரி அதுக்காக கவினும் அப்பிடித்தான் இருப்பான்னு நினைக்கவேணாம்." என்று சொன்னவளின் கண்களின் பதற்றம் எட்டிப்பார்த்தது.

அப்போது சரியாக மணியோசை கேட்க வேகவேகமாக பள்ளியறையை நோக்கி நடக்கலானாள் ஆதிரா. பின்னால் சென்ற பானுவிற்கு யார் இந்த வயதில் காதலில் விழுந்திருக்கிறார் என்ற சந்தேகமும் தீர்க்கப்பட்டிருந்தது. அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்குத்தான் அந்த சங்கர் மகாதேவன், சச்சின் கதையெல்லாம்.

அன்று வகுப்புகள் முடியும்வரை பானுவிடமும் எதுவும் பேசாமலிருந்த ஆதிராவுக்கோ நெஞ்சம் முழுவதும் ஆயிரம் கேள்விகள்.

'கவின் ஒரு வேளை பானு சொல்வது போல வேறு யாரையோ விரும்புகிறானா?'

'இந்த வயதில் வருவது காதல் தானா?'

'தான் ஏன் கவினை பற்றி எந்நேரமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்?'

'கவின் என் உயிர் தோழன் என்பதாலா?'

'இல்லாவிடின் கவின் யார்? அதையும் தாண்டி வேறு ஏதாவது உறவா?'

'பத்து வருடங்களாக இல்லாத ஒரு புது உணர்வு உள்நெஞ்சை ஆட்டி படைக்கிறதே.... இதுதான் காதலா?'

'நட்பு வேறு, காதல் வேறுதானே!'

'பானுவிடம் கோபம் கொண்டது ஏன்?'

இவ்வாறான கேள்விகள் அவள் மனதை துளைத்துக்கொண்டிருக்க வகுப்புகள் முடிந்ததும் முதல் ஆளாய் போய் பானுவிடம் மன்னிப்பு கேட்டாள் ஆதிரா.

"கோவிச்சுக்காதடி, ஏதோ கோபத்தை உன்னில் காட்டிட்டன்."

"எனக்கு உன்மேல வருத்தமெல்லாம் இல்லடி. ஆனாலும் என்கூட கோபமா பேசினத்துக்கு உனக்கு பணிஷ்மென்ட் இருக்கு."

"என்ன பணிஷ்மென்ட் மேடம்?"

"உங்க அம்மாகிட்ட சொல்லி எனக்கு சீடை செய்து தாடி."

"தீனி பண்டாரம்...... அம்மாகிட்ட சொல்லி தொலைக்கிறன்." என்று ஆதிரா செல்லமாக கோபிக்க,

"இப்பிடி திட்டினா, அப்புறம் நானும் கோவிச்சுடுவன்டி........" பதிலுக்கு பானுவும் செல்லமாக கோபிக்க தோழிகள் இருவரும் தோழமையில் ஒன்றிப்போயினர்.

சிறிது நேரம் சிரித்துக்கதைத்து மகிழ்ந்த பானுவும் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆதிராவிடம் விடைபெற்று தன் இல்லம் நோக்கி புறப்பட்டுவிட்டாள். பானு தான் ஆதிராவிடம் கேட்கவேண்டுமென இருந்த ஒரு விடயத்தை அப்போது கேட்காமல் விட்டிருந்தாள். அன்றே கேட்டு மீண்டும் ஆதிராவின் கோபத்திற்கு ஆளாக அவள் விரும்பவில்லை.

பானு சென்ற பின்னர் இரண்டொரு அடிகள் எடுத்து வைத்த ஆதிராவின் அருகில் வந்து நின்றது இன்னொரு சைக்கிள். வந்தது கவின் தான் என்று தெரிந்தாலும் கவனிக்காதது போல நடையை தொடர்ந்தாள் ஆதிரா.

காலையில் பள்ளிக்கு அப்பாவுடன் வரும் ஆதிரா, பள்ளி முடிந்ததும் கவினுடனே வீடு திரும்புவாள். ஆறு வருடங்களாக அதுவே வழமையாகி போயிருந்தது. ஆதிராவின் பெற்றோருக்கு கவினும், கவினின் பெற்றோருக்கு ஆதிராவும் செல்ல பிள்ளைகளாகி போனதாலும் தமது பிள்ளைகள் மீது அளவுகடந்த நம்பிக்கை அவர்களுக்கு.

"ஏய் திரா, என்னாச்சு உனக்கு? நானும் காலைல இருந்து பார்த்துக்கிட்டுத்தான் இருக்கன். ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டிருக்க."

"கவி, நான் ஒண்ணும் ஓவரா பண்ணல. நீதான் ஓவரா போய்கிட்டிருக்க."

"நானா? நான் என்ன பண்ணினன்?"

"ஸ்கூல் புல்லா உன்னோட பேச்சுத்தான். ஏன் அப்பாக்கு கூட தெரிஞ்சிருக்கே?"

ஆதிரா எதை பற்றி சுற்றிவளைத்து பேசுகிறாள் என்பது கவினுக்கு புரிந்தது.

"ஓ..... அதுவா?"

"என்ன அதுவான்னு சிம்பிளா சொல்ற கவி! என்கிட்ட ஏதாவது மறைக்கிறியாடா?"

"ஹேய், அப்பா என்ன எங்கயோ பார்த்தார்னு சொன்னார். அதுக்கு போயி......"

"எங்கயோ பார்த்தாரா? எங்க பார்த்தாரு?"

"நான் பிரெண்ட்ஸ் கூட நின்னுக்கிட்டிருக்கும் போது பார்த்தாரு. ஏன்டி இப்பிடி துருவி துருவி கேள்வி கேட்குற?"

"கவி என்கிட்டே மழுப்பாம பதில் சொல்லு. நீ யாரோ பொண்ணு பின்னாடி சுத்துறதா பள்ளில எல்லாரும் பேசிக்கிறாங்க? உண்மையா அது?" கொஞ்சம் காட்டமாகவே கேட்டாள் ஆதிரா.

"யாரு பேசிக்கிறாங்க?" என்று சொன்னவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

"எல்லாரும் பேசிக்கிறாங்க? யாரென்னு எதுக்கு? உண்மையா இல்லையா? அத மட்டும் சொல்லு."

"ஹேய் பைத்தியம் யாரு இப்பிடி சொன்னாலும் நம்பிடுவியா? என்னோட உயிர் தோழி நீ நம்பலாமா?" என்று கூறிவிட்டு கவின் கவலைப்படுவது போல பாசாங்கு செய்தான்.

"நடிக்காத கவி. நான் சீரியஸா கேட்கிறான். விளையாடாம பதில் சொல்லு."

"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லடி." என்று சொன்னவனின் முகத்தில் வெட்கம் எட்டிப்பார்த்தது.

ஆதிராவுக்கோ கவினின் வெட்கம் வயிற்றில் புளியை கரைத்தது.

"ஏன் இப்ப பல்ல காட்டுற கவி?"

"சரி நீ மொதல்ல வண்டில ஏறு" என்று ஆதிராவை சைக்கிளில் ஏற்றியவன் சைக்கிளை மிதித்தவாறே தொடர்ந்தான்.

"இப்போ ஒண்ணுமில்ல, ஆனா இனி எதுவும் நடக்கலாம்." என்று கூறிவிட்டு வெட்கப்புன்னகையை உதிர்த்தான் கவின்.

ஆதிராவுக்கு ஒரு கணம் இதயமே நின்றுவிட்டதை போன்று உணர்ந்தாள். இருந்தாலும் சீக்கிரம் சுதாகரித்துக்கொண்டவள் தன்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு பேசலானாள்.

"டேய் உண்மையாவா? யாருடா அது? ஏன் என்கிட்ட சொல்லல?"

"உன்கிட்ட சொல்லாமலாடி? உன்கிட்டத்தான் பெர்ஸ்ட்டா சொல்லணும்னு இருந்தன். அதுக்குள்ளே நீயே கேட்டுட்டே?"

"அப்போ அப்பா நீ பிரெண்ட்ஸ் கூட நின்னு ஒரு பொண்ண கேலி பண்ணிட்டிருந்ததா சொன்னாரே? நீ யாருக்குமே தெரியாதுங்கிற!"

"திரா, அது நேத்து நம்ம மணி இருக்கான்ல....."

"ஆமா, உன்கூட கிரிக்கெட் விளையாட வருவானே அவன்தானே?"

"ஆமாடி, அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டிருக்கான், அவனோட ஏரியா பொண்ணு. அந்தப்பொண்ண கலாய்க்கும்போதுதான் அப்பா பார்த்திருக்காரு. அத பத்தித்தான் கேட்டவரு."

தான் ஏதோ கேட்கப்போய் வேறு ஏதோ தெரிந்து கொண்டேன் என ஆதிராவுக்கு அப்போதுதான் விளங்கியது.

"ஓ..... இதுதான் போட்டு வாங்குறதா? சரி சொல்லு யாரந்த பொண்ணு? எவ்வளவு நாளா சைட் அடிச்சிட்டு இருக்கிற?"

"எல்லாம் கொஞ்ச நாளாத்தான்.... யாருன்னு நாளைக்கு உனக்கு நேர்லயே காட்டுறேன்."

"டேய் டேய் சஸ்பென்ஸ் தாங்காதுடா.... இப்பவே சொல்லிடுறா..... ப்ளீஸ்......"

"அப்பிடியெல்லாம் சொல்லிட முடியாது. வெயிட் பண்ணுடி........"

ஆதிராவுக்கு கவினைப்பற்றி நன்கு தெரியும், எவ்வளவுதான் கேட்டாலும் அன்று அந்த பெண் யாரென்பதை சொல்லமாட்டான் என்று விளங்கிற்று.

"ப்ரொபோஸ் பண்ணிட்டியாடா?"

"இன்னும் இல்லடி, எல்லாமே உன்னோட கையில தான் இருக்கு திரா."

"டேய் உனக்கு மாமா வேலையும் பார்க்கணுமா? அதுக்கெல்லாம் வேற ஆள பாரு தம்பி."

"உன்ன விட்டா எனக்கு வேற யாரு இருக்கா? உன்ன நம்பித்தான் இருக்கேன்டி."

"சரி சரி, சென்டிமென்ட் எல்லாம் உனக்கு செட் ஆகல, ஏதோ பழகின பாவத்துக்கு மாமா வேலையும் பார்க்கிறன். பட் ஒரு கண்டிஷன்......"

"என்ன கண்டிஷன்....."

"பொண்ணு யாரென்னு பார்த்து எனக்கு ஓகேன்னா மட்டும்தான் ஹெல்ப் எல்லாம் பண்ணலாம். எனக்கு பொண்ண பிடிக்கலன்னா...... பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்...."

"நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் உனக்கு பிடிச்சிருந்தா தான் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணுவன்டி....."

இப்போது கவின் சொன்ன வார்த்தைகள் கேலியாகவோ போலியாகவோ பேசவில்லை என்பதும் சத்தியமான வார்த்தைகள் என்பதும் ஆதிராவிற்கு தெரிந்திருந்தது.

பேசிக்கொண்டிருந்ததில் இருவருக்கும் நேரம் போனது தெரியவில்லை. ஆதிராவின் வீட்டை தாண்டித்தான் கவினுடைய வீடு உள்ளது. ஆதிராவை வாசலில் இறக்கிவிட்ட கவின் அடுத்த நாள் காலையில் சீக்கிரம் ஸ்கூலுக்கு புறப்பட்டு வருமாறு கூறிவிட்டு தன்னுடைய வீடு நோக்கி சைக்கிளை மிதித்தான்.

கவினையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.

தன்னுடைய வீட்டு வாசலுக்கு சென்ற கவினோ திடீரென சைக்கிளை திருப்பி மீண்டும் ஆதிராவின் வீட்டை நோக்கி விரைந்தான்.

கவினையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு கவின் மீண்டும் அங்கே வருவது புரிய கண்களை துடைத்துவிட்டு எதுவும் புரியாமல் விழித்தாள்.

'திரா நான் உன்கிட்ட சும்மா விளையாடினேன், நான் சொன்னது பூரா பொய். நான் உன்னைத்தான் ஆதிரா விரும்புறன். எனக்கு நீ, உனக்கு நான். இத யாராலும் மாத்த முடியாது.' என்று கவின் வந்து சொல்லிவிட மாட்டானா என்று அந்த கலப்பில்லா நெஞ்சம் ஏங்கிக்கொண்டிருந்தது.


"ஏய் பொண்ணு...... இந்தா இத சாப்பிடு." என்று கூறியவாறே அவளின் கைகளில் ஒரு ரொட்டித்துண்டை திணித்தான் காளி.

கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலும் தன உடலும் மனதும் சோர்வாக உள்ளது என்பதை உணர்ந்தவள் தலையை குனிந்து அந்த ரொட்டித்துண்டை சாப்பிடலானாள். சிறிது நேரம் அவளின் அழகை ரசித்துக்கொண்டிருந்த காளியோ மீண்டும் பேச்சு கொடுத்தான்.

"யாரு நீ? உன்னோட பேரு என்ன?"

"உன்னோட பேரு என்ன?"

"நம்மக்கிட்டயே உன் வேலைய காட்டுறியா? உன்ன பத்தி அண்ணன் என்கிட்ட சொல்லியிருக்காரு.............."

"என் பேரு பானு!"


"என்ன!!!!!!!!!..........................................................."


-ஆதிரா வளர்கிறாள்
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4 - இதுதான் காதலா?

அன்று ஸ்கூல் முடிந்து வந்த ஆதிரா அம்மாவிடம் தலையிடி என்று கூறிவிட்டு படுக்கையில் வீழ்ந்தவள் வெளியில் வரவில்லை. கவினுக்கும் தனக்குமான பத்து வருட நட்பு அவள் கண் முன் நிழலாட கண்களின் ஓரம் கண்ணீரும் வழிந்தோடிக்கொண்டிருந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் உயிர்த்தோழனாக இருந்தவன் என்றிலிருந்து தோழமையை தாண்டி வேறொரு இடத்திற்கு வந்து சேர்ந்தான் என்பது ஆதிராவுக்கு புரியாத புதிராகவே இருந்தது.

'என்னை உற்ற நட்பாக எண்ணும் நண்பனிடம் இவ்வாறான உணர்ச்சிகள் ஏற்படுவது என்னவொரு பாதகமான செயல்?'

'என்ன உணர்வு இது?'

'இதுதான் காதலா?'

'காதல் என்பது தவறில்லை என்றுதான் அப்பா சொல்லியிருக்கிறாரே?'

'ஆனால் இந்த வயதில் வருவது அஃபெக்க்ஷன் என்றுதானே இத்தனை நாள் இருந்தேன்?'

'ஏன் இந்தக்குழப்பம்?'

இவ்வாறாக பல கேள்விகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்க வெளியில் பானுவின் குரல் கேட்டது.

பானுவின் அம்மா ராஜேஸ்வரி, இந்திராணிக்கு தூரத்து உறவுமுறையானவள். இப்படி எதிர்பாராத நேரங்களில் வருகை தருவது வாடிக்கை. என்னதான் உறவானாலும் இந்திராணியின் குணத்திற்கு அப்படியே எதிர்மறையான குணங்களைக்கொண்டவள் தான் ராஜேஸ்வரி. எதிலும் போட்டி, பொறாமை அதிகம். அதிலும் தன்னுடைய மகளும் இந்திராணியின் மகளும் ஒரே பள்ளியில் அதுவும் ஒரே பிரிவில் படிக்கிறார்கள் என்பது போதாதா அவளுக்கு. இந்திராணியின் வீட்டிற்கு வந்து ஆதிரா எப்படி படிக்கிறாள் என்று நோட்டம் விடுவதற்குத்தான் இந்த திடீர் விசிட் எல்லாம். இது எல்லாம் இந்திராணிக்கும் ராம்குமாருக்கும் ஏன் ஆதிராவுக்கு கூட தெரிந்த விடயம்தான். பானுவின் அம்மாதான் அப்படி, அப்பா கணேசன் சொக்கத்தங்கம். பானு நல்லவேளை அப்பாவை போலதான் இருந்து வந்தாள்.

இந்திராணியிடம் ஆதிரா எங்கே என விசாரித்த பானு ஆதிராவை தேடி அவளின் அறையினுள்ளேயே நுழைந்துவிட்டாள். அங்கே கண்ணீரை துடைத்துவிட்டு படுத்திருந்த ஆதிராவை பார்த்ததும் பானுவிற்கு ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்துவிட்டது.

மெதுவாக ஆதிராவின் அருகில் சென்றவள், தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த ஆதிராவை எழுப்பினாள்.

"எந்திரி ஆதி, இந்த நேரத்துல என்ன தூக்கம்?" என்றவாறே ஆதிராவின் தோளை பிடித்து அசைக்க அவளும் கண்விழித்தாள்.

அவளது கண்களுக்கு சோகத்தை மறைக்கும் தன்மை இல்லை என்பது ஆதிராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"வா பானு, அம்மா கூட வந்தியா?"

"ஆமாடி, அம்மாகிட்ட நீ எங்கன்னு கேட்டன், அவங்கதான் நீ ஸ்கூல்ல இருந்து வந்ததுமே தூங்கிட்டன்னு சொன்னாங்க. ஏன் உடம்புக்கு என்ன ஆச்சுடி?"

"உடம்புக்கு ஒண்ணுமில்லடி....." ஆதிராவின் பதிலில் சலிப்பு மேலோங்கியிருந்தது.

"அப்படீன்னா மனசுக்கு என்ன?"

இந்த பதிலை எதிர்பாராதவள் கடலில் மூழ்குபவனுக்கு கிடைத்த துரும்பை போல் தன் மனக்குமுறலை கொட்டி தீர்ப்பதற்கு அவ்விடம் பானு இருப்பதை புரிந்து கொண்டாள்.

"இல்லடி, இந்த கவினால தான் எல்லாமே."

"என்ன கவின லவ் பண்றியா?" சட்டென கேட்டுவிட்டாள் பானு.

"உனக்ககெப்பிடி தெரியும்? ஏன் அப்பிடி கேட்கிற?" அதிர்ச்சியில் வார்த்தைகள் வெளியாகின.

"ஆதி..... கவின் உன்னோட பெஸ்ட் பிரெண்டா இருக்கலாம். அதுக்காக நான் உன்னோட பிரெண்ட் இல்லன்னு ஆகிடாதே, அதோட நானும் ஒரு பொண்ணு. இந்த படங்கள்ல சொல்ற மாதிரி ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தானே தெரியும். எல்லாம் நானும் நோட் பண்ணிட்டு தானே வாறன். எனக்கு புரியாம இருக்குமா?"

"என்ன நோட் பண்ணிட்டு வாற? கொஞ்சம் சொல்லுடி...."

"என்ன சொல்ல...... பத்து வருசமா நண்பனா இருந்தவன இப்ப வெறும் நண்பனா மட்டும் பார்க்க முடியாம கொஞ்ச நாளாவே உன்னோட கால் தரையில படாம இருந்துச்சே அத நோட் பண்ணினத சொல்ல சொல்றியா..... இல்ல இப்ப ரெண்டு நாளா கவின் வேற யாரையோ சைட் அடிக்கிறான்னு கோபத்திலையும் கவலைலயும் எங்க எல்லாருகிட்டயும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தத சொல்ல சொல்றியா......எத சொல்லன்னு சொல்லு ஆதிரா?"

பானு சொல்ல சொல்ல தான் இவ்வளவு நாளும் தன் உணர்வுகள் வெளியில் யாருக்கும் தெரிந்திருக்காது என்று எண்ணியது எல்லாம் பொய் என புரிந்து கொண்டாள் ஆதிரா.

"ஏய் இதெல்லாம் வெளில தெரியுதாடி?" சந்தேகம் கலந்த பயத்துடன் கேள்வியெழுப்பினாள் ஆதிரா.

"ஹாஹாஹா...... ஒண்ணும் பயப்படாதடி, அது எனக்கு மட்டும் தான் புரியும். என்ன விட யாரு உன்ன புரிஞ்சு வச்சிருப்பா?"

சில நிமிடங்கள் ஆதிரா எதுவும் பேசாமல் தலையை குனிந்தபடி இருக்க ஆதிராவுக்கு ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலையை குறைக்கும் முகமாக பானுவே பேச்சை தொடர்ந்தாள்.

"சரி இப்ப உன்னோட பிரச்சனைதான் என்ன? என்கிட்டே சொல்லலாம் தானே?"

"உன்கிட்ட சொல்றன், வேற யாருகிட்டயும் சொல்லிடாதடி.... ப்ளீஸ்..... முக்கியமா உங்க அம்மாகிட்ட...."

"அதெல்லாம் யாருகிட்டயும் நான் சொல்ல மாட்டன், உனக்கு சொல்லணும்னு தோணலன்னா சொல்ல தேவையில்லை. நான் எதுவும் போர்ஸ் பண்ணல."

"அப்பிடியில்ல பானு, எனக்கு இப்ப யாருகிட்டயாவது சொன்னாத்தான் நிம்மதியா இருக்கும். எல்லாமே என்னோட மூளைல குடைஞ்சிட்டிருக்கு. எதுவும் பண்ண முடியல. வீட்டையும் சொல்ல முடியல."

"உன்னோட லவ்வ அவன்கிட்ட சொல்லிட்டியா?" நேரடியாக வந்தாள் பானு.

எப்படித்தொடங்குவது என்று தெரியாமல் இழுத்தடித்த ஆதிராவுக்கு பானுவின் கேள்வி சிறிது நிம்மதியை கொடுத்துவிட்டது.

"இல்ல பானு, நான் சொல்லல......"

"ஏன் இன்னும் சொல்லல? பயப்படுறியா? இல்ல, வேற யாரையோ கவின் சைட் அடிக்கிறான்னு சொல்லலையா? இல்ல, பாய்ஸ்தான் பெர்ஸ்ட்டா சொல்லணும்னு நினைக்கிறியா?" கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள் பானு.

"அதெல்லாம் இல்லடி. கவின்கிட்ட எப்பிடியும் சொல்லிடணும்னு தான் இருந்தன்...... ஆனா........"

"என்ன ஆனா...... ஹேய் இந்த வயசில பசங்க பொண்ணுங்கள சைட் அடிக்கிறதெல்லாம் சாதாரண விஷயம். இதுக்காக எல்லாம் ஆசையை மறைச்சு வைக்காதடி....."

"அதில்லை பானு. கவின் வேற யாரையோ விரும்புறானாம்...." ஆதிராவுக்கு இப்படி சொல்வது கூட கடினமாகத்தான் இருந்தது.... மறுமுனையில் பானுவோ இந்த ட்விஸ்ட்டை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

"என்னடி சொல்ற? நான் அப்படி எதுவும் கேள்விப்படலையே!!!!!!!!!!"

"எனக்கு கூட ஷாக்காத்தான் இருந்திச்சு, இன்னைக்குத்தான் என்கிட்டயே சொன்னான்."

"நிஜமாவாடி?...... என்னால நம்பவே முடியல.... யாரு பொண்ணாம்?"

"தெரியல, நாளைக்கு எனக்கு காட்டுறேன்னு சொன்னான்."

"டூ சைடு லவ்வா?"

"இல்ல வன் சைடு தான்........" என்று சொல்லிக்கொண்டிருந்தவள் சோகம் தாளாமல் பானுவின் மடியில் முகம் புதைத்து கதறியழுதாள்.

பானுவுக்கும் ஆதிராவின் கவலையும் சங்கடமும் புரிந்தது.

இதுவரைகாலமும் ஆதிரா எந்த துக்கத்தையோ கவலையையோ பானுவிடம் பகிர்ந்ததில்லை. ஏன் கவினைத்தவிர வேறு யாரிடமும் பகிர்ந்ததில்லை. உற்ற நண்பனே சோகத்துக்கு காரணமானால் அவளது மனம் எவ்வளவு பாடுபடுகின்றது என்பது பானுவுக்கு விளங்கியது.

"ஹேய் அழாதம்மா, அழுறதால எந்த பயனுமில்ல. கவினுக்கு உன்னோட காதல புரிய வச்சா சரி."

பானு பேசுவதை கேட்டுக்கொண்டே கண்களை துடைத்தவள் "அது சரியில்ல பானு, அவனுக்கு இன்னொருத்தியை பிடிச்சிருக்கும் போது நான் என்னோட லவ்வ சொல்றது நியாயமில்ல."

"அப்பிடீன்னா....... நீ உன்னோட லவ்வ சொல்ல போறதில்லையா?"

பானுவின் கேள்விக்கு இல்லை என்பது போல தலையாட்டினாள் ஆதிரா.

"ஹேய் ஆதி, பைத்தியம் மாதிரி பேசாத. உன்ன போய் அவனோட லவ்வ குழப்ப சொல்லல. அவனுக்கு இன்னொருத்திகிட்ட காதல சொல்ல உரிமை இருக்கிறது போல உனக்கும் உன்னோட ஆசைய சொல்றதுக்கு உரிமை இருக்கு. ஆனா அவனோடது கூட வன் சைடு லவ் என்கிறதையும் மறந்துடாத."

"உனக்கு புரியாது பானு, இதுவே எனக்கு கவின் மேல இல்லாம வேற யாரு மேலயும் லவ் வந்திருந்தா நீ சொல்றது போல தான் நானும் செய்திருப்பன். பட் இது கவின். என்னோட பெஸ்ட் பிரெண்ட். என்கிட்டே கேட்காம அவன் எதுவும் செய்ய மாட்டான். அவனுக்கு இன்னொருத்தியை பிடிச்சிருக்கு என்கிறத கூட அந்த பொண்ணுகிட்ட சொல்றதுக்கு முன்னாடி என்கிட்டதான் சொல்றான். அவன்கிட்ட போய் நான் எப்பிடி சொல்லுவன்,'கவின் எனக்கு உன்ன பிடிச்சிருக்குடா'ன்னு."

"சரிடி, நீ சொல்றது சரிதான், ஆனா முதல்ல யாரு அந்த பொண்ணுன்னு தெரிஞ்சிக்கோ, அவளுக்கும் கவின பிடிக்கணுமே. ஒருவேளை பிடிக்கலாட்டி........."

"கவின எந்த பொண்ணுக்கும் நிச்சயமா பிடிக்கும்."

"இந்த சினிமா டயலாக்கெல்லாம் விட்டுட்டு அந்த பொண்ணுக்கு கவின பிடிச்சிட கூடாதுன்னு பிறே பண்ணுடி."

"நிச்சயமா கவினுக்கு பிடிச்ச பொண்ணுக்கு கவின பிடிக்கணுமுன்னு தான் பிறே பண்ணுவன்."

"சரி நீ பண்ணலாட்டி என்ன நான் பிறே பண்றன்."

"என்ன பானு, ஆதிரா கூட சேர்ந்து என்ன பிறே பண்ண போற?" ஆதிராவின் ரூமுக்குள் அதிரடியாய் நுழைந்த ராஜேஸ்வரியின் இந்தக்கேள்வி இருவருக்குமே தூக்கி வாரி போட்டது.

சட்டென முகத்தை துடைத்துக்கொண்டு ஆதிரா பதில் சொல்லாமல் விழிக்க, சுதாகரித்துக்கொண்ட பானுவோ "அதொன்னுமில்ல அம்மா, எக்ஸாம்ல நல்ல மார்க் எடுக்கணுமுன்னு பிறே பண்ணணுமுன்னு பேசிக்கிட்டிருந்தம்."

"பானு படிக்காம பிறே பண்ணியே மார்க் எடுக்கலாமுன்னு யோசனையா? அது சரி. நீயும் ஆதிரா போல ஸ்கூல் டீச்சர்கிட்ட நல்ல பேரு எடுத்திருந்தா உனக்கும் பெர்ஸ்ட் மார்க் போடுவாங்க. இல்ல ஆதிரா?"

"ஆமா ஆன்ட்டி, நல்லா படிக்கிற பிள்ளைகளை டீச்சருக்கும் பிடிக்கும்தானே. அதனாடிதான் பெர்ஸ்ட் மார்க் எனக்கு போட்டிருக்காங்க. ஆனா இந்த வருஷம் நிச்சயமா பானுக்குதான் பெர்ஸ்ட் மார்க் கிடைக்கும்." தனது பதிலில் ராஜேஸ்வரிக்கு தகுந்த பதிலடி கொடுப்பது ஒன்றும் ஆதிராவுக்கு புதிதல்ல.

"அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு."

"ஆமா ஆன்ட்டி. பானுவும் என்ன போலதான்." திரும்பவும் ஆதிராவிடம் வாங்கி கட்டிக்கொண்ட ராஜேஸ்வரியை பார்க்கும் போது பானுவிற்கு பரிதாபமாக இருந்தது.

"அம்மா, நாங்க கிளம்புவமா? ஹோம் ஒர்க் செய்யணும்." என்று தாய் படுகின்ற அவமானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியவாறே தாயை கூட்டிக்கொண்டு ஹாலிற்குள் சென்றாள் பானு.

ஹாலில் இருந்த ராம்குமாரிடமும் இந்திராணியிடமும் விடைபெற்ற இருவரும் வேக வேகமாக வீட்டை நோக்கி நடையை கட்டினர். ஜன்னலினூடு பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவிற்கு அடுத்த நாள் சந்திப்பதாக சைகை காட்டியவாறே விடை பெற்றாள் பானு.

"ஆதிரா......ஆதிரா....." ஹாலில் அமர்ந்திருந்த இந்திராணி மகளை சத்தமாக அழைத்தார்.

இந்திராணி ஏன் இப்போது அவசரமாக ஆதிராவை அழைக்கிறார் என்பது ராம்குமாருக்கும் நன்கு தெரியும், ஆதிராவிற்கும் நன்கு தெரியும்.

"என்ன அம்மா?"

"பெரியவங்ககிட்ட பேசும் போது மரியாதையா பேசுறல்லயா? இப்பிடியா ஏட்டிக்கு போட்டியா பேசுறது?"

"நான் எதுவும் பிழையா பேசல்ல, அவங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான்."

"என்னங்க.... நீங்க கொஞ்சம் அவளை கண்டிக்க கூடாதா?" என்று துணைக்கு கணவனை அழைத்தார் இந்திராணி.

"எதுக்கு கண்டிக்கணும்? அவ தப்பு பண்ணினா முத ஆளா நான் அவளை கண்டிப்பன். ஆனா அந்த குடுப்பினைதான் எனக்கில்லையே. என் பொண்ணுதான் எந்த தப்புமே பண்ண மாட்டாளே. பிறகு எதுக்கு கண்டிக்கணும்?"

"என்னங்க நீங்க? என்ன இருந்தாலும் அவங்க வயசுக்கு மரியாதை கொடுக்க வேணாமா?"

"இல்ல இந்து, வயசானவங்கங்கிற ஒரே காரணத்துக்காக அவங்க எது சொன்னாலும் பொறுத்து போகணும்னு அவசியமில்லை. வயச விட செயல்தான் முக்கியம்............................."

ராம்குமார் இந்திராணிக்கு பாடம் நடத்த தொடங்கியிருக்க அவ்விடம் விட்டு மெல்ல நகர்ந்த ஆதிராவிற்கு மனதிற்குள் ஒரு கேள்வி மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

'அப்பாவின் நம்பிக்கையை நான் உடைக்க போகிறேனா?'


-ஆதிரா வருவாள்
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5 - நட்பின் வழியிலே காதல் வளருமே

"திரா திரா......."

கவினின் குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தாள் இந்திராணி.

"என்ன கவின் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா ஸ்கூலுக்கு கிளம்பிட்ட? இன்னைக்கு மழைதான் போல."

"இல்ல ஆன்ட்டி, திரா எனக்கு பிஸிக்ஸ்ல டௌட்ஸ கிளியர் பண்ணி விடுறேன்னு சொன்னா, அதனாலதான் சீக்கிரமா போறேன். திரா ரெடி ஆகிட்டாளா ஆன்ட்டி?"

"இதோ கிளம்பிட்டுத்தான் இருந்தாள். கூப்பிடுறேன் நில்லுப்பா." என்று கூறிவிட்டு ஆதிராவை அழைத்தபடி உள்ளே சென்றாள் இந்திராணி.

கவின் சீக்கிரமாக வருவான் என்று ஏற்கனவே புரிந்து வைத்திருந்த ஆதிராவும் வழமையை விட அன்று சீக்கிரமாகவே தயாராகி இருந்தாள்.

அம்மாவிடம் பொய் சொல்ல மனமில்லாமல் இந்திராணியின் பார்வை படாதவாறு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் ஆதிரா. வெளியே வந்தவள் கவினையும் கவனியாது ஒரேயடியாக வேகவேகமாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

"ஹேய் திரா, நில்லு..... "

"டேய் நீ சீக்கிரம் வாடா...."

"வர்றேண்டி, என்ன அவசரம்?"

"ஒரு அவசரமுமில்ல, நீ வேகமா வாடா..."

"சரி சரி வர்றேன்......" என்றவாறு ஆதிராவின் வேகத்துக்கு ஈடு கொடுத்தவாறே சைக்கிளை தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் கவின்.

பொதுவாக காலை வேளையில் இருவரும் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து செல்வதுதான் வழக்கம். அது சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும் என்பது ஆதிராவின் கூற்று. கூற்று அல்ல முடிவு. ஆதிராவின் முடிவை தட்டிக்கழிக்க ராம்குமாரின் குடும்பத்திலோ சந்திரமோகன் குடும்பத்திலோ யாரும் இல்லை. அது ஆதிரா மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை. அதற்கேற்றவாறு ஆதிராவும் வயதில் சிரியவளாக இருந்தாலும் ஆளுமை நிறைந்தவளாகவே இருந்து வந்தாள்.

"ஏன் திரா, பதற்றத்தோடவே வீட்டிலருந்து கிளம்பின? நிஜமா பதற வேண்டியவனே நான்தான்."

"இல்லடா, சீக்கிரமா கிளம்பும் போது அம்மா ஏன்னு கேட்பா. அப்பிடி கேட்கும்போது என்னால பொய் சொல்ல முடியாது. உண்மைய சொன்னா உனக்கு பிரச்சனை, அதான் அவங்க கண்ணில படாம வெளிய வந்துட்டன்."

"ஓ....அப்பிடியா? நீ அவ்வளவு நல்லவளாடி....." என்று விட்டு வாயை மூடி சிரித்தான் கவின்.

"டேய்......... சரி நீ எதுக்கு பதறணும்?"

"உனக்கு என்னோட தேவதைய பிடிக்கலன்னா......."

"பிடிக்கலன்னா...... என்ன பண்றது?"

.....................................................................

"பீல் பண்ணாதடா, உனக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும்."

"தாங்க்ஸ் திரா. உனக்கு நிச்சயம் பிடிக்கும்."

"சரி இப்பவாச்சும் யாரு உன்னோட தேவதைன்னு சொல்லன்டா. சஸ்பென்ஸ் தாங்க முடியல....."

"இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியிருக்க, இன்னும் கொஞ்ச நேரம்தானே. பத்து நிமிஷத்துல ஸ்கூலுக்கு போய்டலாம்."

"டேய் அப்போ நம்ம ஸ்கூலா?"

"அப்படியும் இருக்கலாம்."

"என்னடா.... எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கே.... நம்ம கிளாஸ்தான்னு சொல்லிட மாட்டியே?"

"அதுவும் இருக்கலாம். நீ எதுக்கு அவசரப்படுற? அவ இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் கிரௌண்டுக்கு பக்கத்தில இருக்கிற பெஞ்சில வந்து என்ன எதிர்பார்த்திட்டிருப்பா?"

"நீதான் இன்னும் உன்னோட லவ்வ சொல்லலன்னு சொன்னியேடா?"

"ஆமா, லவ்வ சொல்லல. எதுவும் பேசல. கண்ணாலேயே பேசிப்போம்."

"அடச்சீ.... வெட்கப்படாத... அது உனக்கு செட் ஆகல. அண்ட் வெட்கப்படுற பசங்கள பொண்ணுங்களுக்கு பிடிக்காது."

"அதெப்பிடி உனக்கு தெரியும்? நீ யாரையாச்சும் பார்த்து வச்சிருக்கியா?"

ஆதிரா மனதினுள் 'உன்னைத்தாண்டா பார்த்தன், நீ வெட்கப்படுறத பார்க்க சகிக்கலையே' என்று நினைத்துக்கொண்டாள்.

"ஸாரி கோவிச்சுக்காத திரா, நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டுட்டேன்."

இருவரும் ஸ்கூலுக்கு வந்து புத்தக பையினை வகுப்பறையினுள் வைத்துவிட்டு வேக வேகமாக கிரௌண்டை வந்தடைந்தனர். அங்கு கவின் வழமையாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் பெஞ்சினில் இருவரும் உட்கார்ந்து கொண்டனர். அதுவரை தனதருகே கதைத்து சிரித்து வந்த கவின் அங்கு வந்ததும் தன்னிடமிருந்து சற்று விலகி உட்கார்ந்து கொண்டதை ஆதிராவும் கவனிக்க தவறவில்லை. இச்செயலானது ஆதிராவின் மனதிற்குள் வலியை கொடுத்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள் அவள். அதில் அவள் கெட்டிக்காரியும் கூட.

நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகும் என்று வாலி காதல் தேசம் படப்பாடலுக்கு எழுதிய வரிகள் இவ்விருவருக்கும் அப்போது நன்றாக பொருந்திப்போனது. கவினின் எண்ணம் முழுக்க தன்னவளை ஆதிராவுக்கு பிடித்துவிட வேண்டும் என்பதாகவும் ஆதிராவின் எண்ணமெல்லாம் இப்போதாவது கவின் 'அந்தப்பொண்ணே நீதானேடி' என்று கூறுவானா என்று ஏங்கிக்கொண்டிருந்தது.

"கவின் எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது. உன்னோட ஆள் வருவாளா? மாட்டாளா?"

"வெயிட் பண்ணுடி.... தேவதை தரிசனம் சீக்கிரமா கிடைச்சிடாதுடி....."

"அய்யய்யய்யோ.......... உன்னோட இம்சை பெரும் இம்சையா இருக்குதே...... முடியலடா சாமி....." கவினும் இருவரும் ஒருவரை மாறி ஒருவர் கிண்டலடித்துக்கொண்டிருக்கும் சமயம் ஆதிராவின் பின்னாலிருந்து ஒரு கை ஆதிராவின் தோளில் தட்டியது.

"ஹேய் ஆதி, வாட் எ சப்ரைஸ்? கிரௌண்ட் பக்கமெல்லாம் வந்திருக்க?" என்று கேட்டவள் பூஜா. ஆதிராவின் பள்ளித்தோழி. ப்ளஸ் டூவில் காமெர்ஸ் பிரிவிற்கு சென்றபடியால் இருவருக்குமான தொடர்பு இப்போது வெகுவாக குறைந்திருந்தது. இப்படி எதேச்சையா பார்க்கும் போது நட்பு பாராட்டுவதோடு நின்றுவிட்டிருந்தது அந்த பால்ய கால நட்பு.

"பூஜா...... பார்த்து எவ்வளவு நாளாச்சுடி.... எப்பிடி இருக்க? அம்மா அப்பா எப்பிடி இருக்காங்க? அண்ணா என்ன பண்றாங்க?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க. அண்ணா காலேஜ் போறான். உங்க வீட்ட சுகமா?"

"என்ன வச்சுக்கிட்டு அவங்க சுகமா இருக்க முடியுமா? ஏதோ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்காங்க."

"அடி ஆதி.... அந்த குசும்புத்தனம் இன்னும் மாறலயாடி..... ஸ்டடீஸ் எப்பிடிப்பா? நல்லா பிரிப்பேர் பண்றியா? ஸாரி ஸாரி..... உன்கிட்ட படிக்கிறத பத்தில்லாம் கேட்க கூடாது. ஆறு வயசிலேருந்து கலெக்டர் ஆவன்னு சொல்லிட்டிருப்ப... பர்ஸ்ட் ரேங்க தவிர வேற எந்த ரேங்கும் வாங்கினது கூட இல்ல... உன்கிட்ட கேட்டது தப்புடி......"

"ஓட்டாதடி.... சின்ன வயசில ஏதோ கலெக்டர் ஆவுறது ஈஸின்னு நினைச்சு சொல்லிட்டிருந்திருப்பன். இப்பதானே அது எவ்வளவு கஷ்டம்னு புரியுது. இருந்தாலும் ட்ரை பண்ணாம விடமாட்டான்."

"அதானே பார்த்தன், எங்க ஆதிக்கு தன்னம்பிக்கை குறைச்சிடுச்சான்னு? நீ நிச்சயம் கலெக்டர் ஆவ..... மார்க் மை வேர்ட்ஸ்."

"அதெல்லாம் நான் மார்க் பண்ணி வைக்கிறேன், உன்னோட பாடு எப்பிடி?"

"ஹேய் இன்சல்ட் பண்ணாதடி. என்னோட மூளைல்லாம் சஞ்சய் ராமசாமியோட லெவெல்ல இருக்கும்."

"அப்பிடீன்னா?"

"எதுவுமே அஞ்சு நிமிசத்துக்கு மேல தாங்காது."

பூஜாவின் பதிலை கேட்டு தோழிகள் இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.

"வகுப்பறைக்குள்ளேயே அடைஞ்சிருந்து போர் அடிச்சிடுச்சா ஆதி? இங்க வந்திருக்க? அதுவும் இவ்வளவு சீக்கிரமா?"

"நீ கேட்டதையே மறந்துட்டேன்.... அது ஒண்ணுமில்ல, இந்தா இவன் கூடத்தான்................" என்றபடி பின்னால் கவினை நோக்கி திரும்பியவளுக்கு வெற்றிடம் மட்டுமே கண்ணில் பட்டது. சுற்றிலும் பார்வையை சுழற்றிப்பார்த்தும் கவினின் தடம் கூட ஆதிராவிற்கு தென்படவில்லை.

"என்னடி? யார்கூட வந்த? யாரை தேடுற?" ஆச்சர்ய தொனியில் கேட்டாலும் அதில் ஆச்சர்யமில்லை என்பது ஆதிராவுக்கும் விளங்கிற்று.

"அதுவா.... நம்ம கவின் கூடதான் வந்தேன். கேன்டீன்கு போய்ட்டான்னு நினைக்கிறன். இன்னைக்கு சீக்கிரமா வா, பேசிட்டிருப்போம்னு சொன்னான். இப்ப பார்த்தா ஆள காணல. இந்த பசங்களே இப்பிடித்தானே. யாரையும் நம்பி வந்தா இப்பிடித்தான், நட்டாத்தில விட்டுட்டு போய்டுவானுகள்." ஆதிரா பூஜாவின் கண்களையே பார்த்த படி பதிலளித்துக்கொண்டிருந்தாள்.

கண்கள் இரண்டும் படபடக்க உண்டான குழப்பத்தை மறைக்க எத்தனித்துக்கொண்டிருந்த பூஜாவும் "அப்பிடியாடி?.... எனக்கு லேட் ஆகுதுடி.. கிளாஸ் ரூமுக்கு போகணும். ஹோம் ஒர்க் ஒண்ணு முடிக்க இருக்கு. அப்புறமா மீட் பண்றன்டி...." என்று உளறிவிட்டு அவசர அவசரமாக நடையை கட்டினாள் பூஜா.

பூஜாதான் கவினின் தேவதை என்பது ஆதிராவிற்கு விளங்கிற்று. சந்தோஷமும் கவலையும் ஒருசேர கிடைத்த அனுபவத்தை முதன் முதலாக அனுபவித்தாள் ஆதிரா. தன்னுடைய கனவில் மண்ணை அள்ளி போட்டவள் போவதை பார்த்துக்கொண்டு நின்றாள் பேதையவள்.

பூஜாவும் ஆதிராவும் சிறுவயதிலிருந்தே பள்ளித்தோழிகள். அப்போது சிறுவனாக இருந்த கவினுக்கு ஆதிரா தன்னுடன் பழகுவதை விட பூஜாவுடனே அதிகம் பழகுவதாக கூறி ஆதிராவுடன் சண்டையெல்லாம் போட்டிருக்கிறான். அதனாலேயே பூஜாவை பார்த்தாலே கவினுக்கு பிடிப்பதில்லை. கவினின் அன்புத்தொல்லையால் ஆதிராவும் பூஜாவுடன் பழகுவதை மெதுவாக குறைத்துக்கொண்டாள். ஆயிரம் பேர் தன்னோடு இருந்தாலும் கவின் மட்டுமே தன்னுயிர் தோழன் என்றும் கவினின் அந்த சிறுபிள்ளைத்தனமான நட்பினை மதித்தும் ஆதிரா அப்படி செய்தாள். இறுதியில் கவினின் தேவதையாக பூஜா மாறிவிட்டாள். பூஜாவின் நட்பும் ஆதிராவுக்கு கிடைக்கவில்லை.

இவையெல்லாம் ஆதிராவின் எண்ணங்களில் சட்டென வந்து போக தான் எவ்வளவு பெரிய முட்டாள் என எண்ணி புன்முறுவல் பூத்தபடி திரும்ப அங்கே நின்றிருந்தான் கவின்.

"டேய் எங்கடா போயிருந்த?"

"நான் இங்கதான் நின்னிட்டிருந்தன், கிரிக்கெட் கோச் வந்தாரு, அவர போயி மீட் பண்ணிட்டு வந்தன்."

"ஓ.... நானும் எங்க காணலைன்னு யோசிச்சிட்டிருந்தன்."

"சரி, நீ என்ன பண்ணிக்கிட்டிருந்த?"

பூஜா வந்தவுடன் ஒளித்திருந்து இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, பூஜா சென்றவுடன் எதுவும் தெரியாதது போல வந்து பீலா விட்டு கொண்டிருக்கும் கவின் ஆதிராவை குறைத்து மதிப்பிட்டுவிட்டான். ஆதிராவும் கவின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக வெளுத்துக்கொண்டிருந்தாள்.

"நான் சும்மா காத்து வாங்கிட்டு நின்னன்டா."

"என்ன இவ்வளவு நேரமுமா?"

"ஏன்டா, இவ்வளவு நேரமும் காத்து வாங்க கூடாதா?"

"இல்ல வாங்கலாம்....ஆனா......"

"ஆனா..... என்ன? டேய் வந்த வேலைய பார்ப்பம். எங்க உன்னோட தேவதை? இன்னும் வரலையே? தேவதை மாதிரி இங்க யாரும் வரல்லன்னு வையி..... அப்புறம் இருக்கு உனக்கு...." ஆந்திராவின் பதில் தாக்குதலில் நிலை குலைந்து போனான் கவின்.

"அவ நிச்சயமா வருவாள். கொஞ்சம் வெயிட் பண்ணுடி."

ஆதிராவிற்கு விளங்கிவிட்டதா? இல்லையா? என்றே பெரும் குழப்பமாக இருந்தது கவினுக்கு. இருந்தாலும் சொல்வதற்கும் வெட்கமாக இருந்தது.

"இல்ல, தூரத்திலேருந்து பார்க்கும்போது யாரு கூடயோ பேசிட்டிருந்தது போல இருந்திச்சே திரா? தொடர்ந்தான் கவின்.

"நானா? இல்லையே?" கவினின் பொறுமையை சோதித்தாள் ஆதிரா.

"இல்லடி, யாரோ நின்னமாதிரி இருந்திச்சு?"

"ஓ... அதுவாடா! அது அந்த பூஜா. ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்ததால வந்து எப்பிடி இருக்கிறன்னு நலம் விசாரிச்சிச்சு."

"அப்புறம்?"

"நான் அவ கூட பெரிசா பேச்சு கொடுக்கல. அவள்ட பிரெண்ட்ஷிப் வேணாம்னு நீ எட்டாம் கிளாஸ் படிக்கும்போது சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குடா. அதான் ஆள நைசா கழட்டி விட்டுட்டன்." கவினின் வாயால் உண்மையை சொல்லும்வரை ஆதிராவும் விடுவதாயில்லை.

"திரா, சின்ன வயசில ஏதோ விளையாட்டா சொல்லியிருப்பன். அதுக்காக இப்ப பெரியவங்களானதுக்கப்புறமும் இப்படி செய்யலாமா? இது சரியில்ல திரா." கவினின் முகம் சட்டென சோகத்தில் மூழ்கிவிட்டது.

"ஓ...... சார் பெரியாளாகிட்டிங்களோ? இன்னும் முழுசா மீசையே முளைக்கல."

"ஷேவ் பண்ணிட்டேன்டி......"

"அப்பாக்கு தெரியுமாடா?"

"திரா........ ப்ளீஸ்...... ஏன் பூஜாகிட்ட அப்பிடி நடந்துக்கிட்ட?"

"என்ன ஐயாக்கு கோபமெல்லாம் வருது?"

"நான் கோபப்படலம்மா, நீ அவளோட அப்பிடி நடந்திருக்க கூடாது."

"அப்பிடியா? நீங்க சொன்னா பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணனும், பெரியவங்க ஆனதும் திரும்ப பிரெண்ட் ஆகணும்னா எப்பிடிடா?"

கவினுக்கு ஆதிராவின் மேல் கோபம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு அதை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்துக்கொண்டிருந்தான்.

ஆதிராவிற்கும் கவினின் மேல் வருத்தம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு முக்கிய காரணம் கவின் தன்னை காதலிக்கவில்லை என்பதல்ல, தான் மாத்திரம் எல்லாவற்றையும் விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறதே என்பதுதான்.... காதல், நட்பு, பாசம் என அனைத்தையும் கவினுக்காக விட்டு கொடுப்பதுதான். இருந்தாலும் கவின் மீது கொண்ட காதலும் உள்ளே உறங்காமல் விழித்துக்கொண்டிருந்தது, தக்க சமயம் பார்த்து.....

சில நிமிட மௌனம் இருவரது கோபத்தையும் சாந்தப்படுத்தியது. வழமைக்கு மாறாக அன்று ஆதிராவே கவினை சமாதானம் செய்ய முனைந்தாள். அதற்கு கவின் மீது கொண்ட அன்பே வழிவகுத்தது.

என்னதான் கவின் வேறொருத்தியை விரும்பியிருந்தாலும் கவின் ஒரு அப்பாவி என்பது ஆதிராவின் புரிதலாக இருந்தது. கவினை மேலும் சங்கடத்திற்கு உட்படுத்த ஆந்திராவுக்கு விருப்பமில்லை. வீணாக அவன் மனதை நோகடித்ததும் ஆதிராவிற்கு பிடிக்கவில்லை.

'என்னோட கவின்கிட்ட ஏன் இந்த வீராப்பு?' என்று எண்ணியவளாக "டேய் கோவிச்சுகிட்டியா?" என்று கவின் பக்கம் திரும்பியவளுக்கு கவினின் கண்ணிலிருந்து கண்ணீர் வந்திருந்தது தெரிந்தது.

ஆதிரா திரும்பியதும் கண்ணீரை துடைத்துக்கொண்டு "இல்லம்மா, உன்கூட என்ன கோபம்? ஆனா நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். நான் பூஜாவைத்தான் விரும்புறேன். அவள் விரும்புறாளான்னு தெரியல. அது எனக்கு முக்கியமும் இல்ல. பட் உனக்கு அவளை பிடிக்கலாட்டி நான் இதுக்கப்புறம் அவளை நினைக்க கூட மாட்டேன். இது சத்தியம். இனி உன்னோட முடிவு." என்று கூறியவாறே கண்களில் திரும்ப எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்தவாறே அவ்விடம் விட்டு கிளம்பினான் கவின்.

தன்னுயிர் தோழன் தனக்கு கொடுத்திருக்கும் ஸ்தானத்தை எண்ணி ஒருபுறம் பெருமை போட்டுக்கொண்டும் மறுபுறம் தன்னவனுக்கான துணையை தானே தேர்ந்தெடுக்கும் நிலை வேறெந்த பெண்ணுக்கும் வந்துவிடக்கூடாது என்று கவலையிலும் மூழ்கித்தவித்தாள் ஆதிரா.


-ஆதிரா தொடர்வாள்
 
Status
Not open for further replies.
Top