அத்தியாயம் 1 - சிங்கக்குட்டி
அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டுப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக்கொண்டாள்.
கண்களை விழித்துக்கொண்டாலும் பார்வை தெளிவடைவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டன. சுற்றி முற்றிலும் பார்த்தவளுக்கு எல்லாம் இருட்டாகவே இருந்தது. வெளியிலிருந்து அந்த அறைக்குள் எவ்வித வெளிச்சமும் வருவதற்கும் வாய்ப்பே இல்லை என்பதும் புரிந்தது.
இரு கைகளும் ஒன்றோடொன்று இறுக கட்டப்பட்டிருந்தது. வாயினில் அடைக்கப்பட்ட துணி அவளை உதவி கேட்டு குரல் கொடுக்காத வண்ணம் பார்த்துக்கொண்டது. அந்த நேரத்தில் நிலவிய மயான அமைதியை குலைக்கும் வண்ணம் மெல்லியதாக இருவர் பேசிக்கொள்வது அந்த அறைக்குள் கேட்டது. அவளும் குரல் வந்த திசையை நோக்கி செவியை தீட்டிக்கொண்டாள்.
"அண்ணே, இத என்னண்ணே பண்றது?"
"டேய் என்ன அவசரம், இன்னைக்கு நைட் ஏதோ இவ கூட பேச வேண்டியிருக்காம். அப்புறமா முடிச்சிட வேண்டியதான்."
"லவ் மேட்டரா அண்ணே?"
"அந்தக்கருமத்தால தான் எல்லாமே. உனக்கெதுக்கு தேவையில்லாத கேள்வியெல்லாம், காச வாங்கினமா காரியத்த முடிச்சமான்னு இருக்கணும்....."
"இல்லண்ணே, அந்த பொண்ண பார்த்தா பரிதாபமா இருந்திச்சு...... அதனாடிதான்......"
"ஓ..... அப்பிடீன்னா தொரை கண்ணாளம் கட்டி வாழ்க்கை குடுக்கப்போறீங்களோ?"
"எனக்கு டபிள் ஓகே, அந்த பொண்ணுட்ட ஒரு வார்த்தை கேட்டா சரி."
"டேய் ஆளப்பார்த்து வாய பொளக்காத. அவளப்பத்தி தெரிஞ்சா இப்பிடி பேச மாட்ட, நான் கேள்விப்பட்ட கொஞ்ச விஷயத்துக்கே எனக்கு அல்லு இல்ல."
"ஆள பார்த்தா அப்பிடி தெரியலையேண்ணா!"
"டேய் திரும்பவும் சொல்றன், பொண்ணு ஒன்னும் லேசுபட்டவ இல்ல, ஜெகஜ்ஜால கில்லாடி. தேவையில்லாத விஷயத்தில மூக்க நுழைக்காத. நைட் வரைக்கும் பாத்துக்கணும், அதுக்கப்புறம் அவங்க வந்து விஷயம் முடிஞ்சதும் பாடிய யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடனும். அவ்வளவும் தான் நம்மளோட வேலை. இதுல வேற ஏதாவது பண்ணி நீ ஹீரோ ஆக பாத்தீன்னா, நீ டெட் பாடி ஆகிடுவ."
"சரிண்ணே சரிண்ணே, டென்சன் ஆக வேணாம்."
"டேய் இப்பிடி கண்ட கண்ட பொண்ண எல்லாம் கண்ணாளம் கட்டிக்கிறேன்னு சொல்றியே, இது உன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா என்னாவ?"
"ஏண்ணே இப்ப போயி அந்த பஜாரிய ஞாபகப்படுத்திக்கிட்டு....."
இதன் பின்னர் அந்த இரு குரல்களும் சிறிது சிறிதாக மறைந்துவிட்டது. இதை அறையினுள்ளே இருந்து உற்றுக்கேட்டுக்கொண்டிருந்தவளின் தேகம் பதறத்தொடங்கியது.
பதற்றம் கூட கூட, வாயிலும் துணியினால் அடைந்திருந்ததினால் மீண்டும் மயக்க நிலைக்கு திரும்பலானாள். உடனே சுதாகரித்துக்கொண்டவள் தற்போது தான் இருக்கும் நிலையில் பயமும் பதற்றமும் தன்னுடைய முதல் எதிரி என்பதை புரிந்து கொண்டு மனதையும் நினைவுகளையும் வேறு பாதைக்கு திருப்புவதற்கு பாடுபடலானாள்.
இருபது வருடங்களுக்கு முன்பு
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கமுள்ள அனைத்து கிராம மக்களும் அங்கே கூடியிருந்தால் சன நெருக்கம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வேறு, ஆதவனும் அன்று தனது முழுப்பரிவாரத்துடன் சற்று அதிக நேரமாகவே பகல் பூஜையை ஆக்கிரமித்துக்கொண்டான். கூத்தும் பாடல்களும் ஒருபுறம், சிற்றுண்டி பலகார கடைகள் ஒருபுறம், கடைகளில் மொய்த்த வாண்டுகள் கூட்டம், கண்களில் மை பூசி வாரி முடிந்த கார் குழலுடன் காரிகைகள் ஒருபுறம் நடந்து செல்ல அவர்களை பின் தொடர்ந்து வந்த காளைகள் கூட்டமென அப்பகுதியே சித்திரை திருவிழாவில் களை கட்டியிருந்தது.
கூடல் நகரின் கூட்ட நெரிசலில் தனது செல்ல மகள் ஆதிராவுடன் சிக்கி கொண்ட ராம்குமாரும் ஒருவாறு ஆதிரா குட்டியை தூக்கியபடி ஓட்டமும் நடையுமாக வெளியேறி தனது துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அதுவரை கூட்டத்தையும் திருவிழாவையும் கடைத்தெருவையும் ரசித்து சிலாகித்துக்கொண்டிருந்த ஆதிரா குட்டிக்கு திரும்ப வீடு செல்லப்போகிறோம் என விளக்கியபோது சோகம் தாளவில்லை. மகளின் சோகத்தை புரிந்து கொண்ட தகப்பனும் மகளை சமாதானப்படுத்த எத்தனித்தார்.
"ஆதிம்மா அப்பா கூட கோபமா?"
"அப்பா இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம்பா......." மழலைத்தமிழில் கெஞ்சினாள் ஆதிரா.
"இல்ல குட்டிம்மா, இன்னைக்கு ரொம்ப வெய்யிலாருக்குடா, இன்னொரு நாள் அம்மாவையும் கூட்டிட்டு இரவு திருவிழா, ஆடல் பாடல் நிகழ்ச்சி எல்லாம் பார்க்கலாம். வெயில்ல நின்னா ஆதி குட்டிக்கு அப்புறம் ஜுரம் வந்துடும், ஜுரம் வந்துச்சுன்னா மாத்திரை போடணும், ஆதி குட்டிக்கு ஊசி போடணும். ஊசின்னா குட்டிக்கு பயம் தானே......."
"ஆமாப்பா..... அப்ப என்ன இரவு கூட்டி வருவீங்களாப்பா?"
"நிச்சயமாடா...."
"ம்...... ஆனா அம்மா வேணாம்பா, நானும் நீங்களும் மாத்திரம் வருவம்பா." என்று கொஞ்சும் தமிழில் ஆதிரா குட்டி கூற கூடவே ராம்குமாரும் சிரித்துக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதிக்கத்தொடங்கினார்.
சந்து பொந்துகளினூடாக சைக்கிளை மிதித்த ராம்குமார் தனது மகளின் பேச்சுத்துணையுடன் களைப்பை மறந்து பிரதான வீதியையும் வந்தடைந்திருந்தார்.
மனைவி சொல்லியனுப்பிய சில பொருட்களை வாங்குவதற்கு கடையை தேடியவாறே கண்களை ஒரு பக்கமாக அலையவிட்டிருந்தார் ராம்குமார்.
"அப்பா! அங்க பாருங்க........" ஆதிரா குட்டியின் அதிர்ந்து போன குரலைக்கேட்டு ஆதிரா கை காட்டிய திசையை நோக்கி நோட்டம் விட்டார் ராம்குமார். பாதையின் எதிர் முனையில் இருபது முப்பது பேர் கூடியிருந்தனர், எல்லோரது முகத்திலும் ஏதோ பதற்றம். அங்கு ஏதோ விபத்து நடந்துள்ளதென்பதை பாதையின் ஓரம் சரிந்து கிடந்த மோட்டார் சைக்கிள் காட்டிக்கொடுத்தது.
கண நேரம் தாமதிக்காமல் அவ்விடம் நோக்கி விரைந்தார் ராம்குமார். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஆதிராவின் கையை பிடித்துக்கொண்டு கூட்டத்தை விலக்கியவாறு உள்ளே நுழைந்தவர், அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு ஆசாமியை சுற்றித்தான் அனைவரும் நின்று வெட்டி பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டார்.
"என்னங்க, இவரை ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு போகலையா?" என்று அங்கிருந்தவர்களை பார்த்து பதற்றத்துடன் கேள்வியெழுப்பினார்.
"கார்ல வந்தவன் யாரோ பின்னாடி வந்து மோதிட்டு நிக்காம போய்ட்டானப்பு, உசுரு தப்புறது கஷ்டம். ஆம்புலன்சுக்கு சொல்றதுக்கு பசங்க போயிருக்கானுக."
"அண்ணே ஆக்சிடென்ட் நடந்து எம்புட்டு நேரமாச்சு?"
"இப்பதான், செத்த நேரம்தான் ஆச்சு." என்று கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் சொல்ல குறுக்கிட்ட ஒரு வயதான பாட்டி "ராசா அந்தப்புள்ள அடிபட்டு முப்பது நிமிசத்துக்கு மேலாச்சு, உசுருக்கு போராடிக்கிட்டிருக்கு. எந்தப்பயலுமே கிட்டயும் போறானில்ல."
"ஏய் கிழவி, அதான் ஆம்புலன்சுக்கு சொல்லியிருக்கம்ல, வேற என்ன பண்ணணும்கிற? சாகப்போறவன தூக்கி நம்மளே நம்மட தலையில மண்ண வாரி போடுறதா? நாளைக்கு கோர்ட், கேஸ்ன்னு நீயா போவ?" என்று கடுகடுத்தார் அந்தப்பெரியவர்.
நிலைமையை உணர்ந்த ராம்குமார், இங்கு பேசிப்பயனில்லை என்று தெரிந்துகொண்டு சட்டென கூட்டத்திற்கு வெளியே சென்று அந்தப்பாதையில் சென்ற ஒரு ஆட்டோவை மறித்தார். பின்னர் கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த மனிதரை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு மறுபுறம் ஆதிராக்குட்டியையும் இழுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி பக்கத்திலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு ஆட்டோவை போகச்சொன்னார். நொடிப்பொழுதில் நடந்த இந்நிகழ்வை எதிர்பாராத கூட்டத்தினர் ஆளுக்கொருவிதமாக பேசத்தொடங்கினார்.
"அவன் என்ன ஆளோ தெரில, அவனை போயி தோள்ல போட்டுட்டு போறானே இவனுக்கென்ன பைத்தியமா?"
"அண்ணனுக்கு தேவையில்லாத சோலி"
"அண்ணனுக்கு சினிமால வாற ஹீரோன்னு நினைப்பு."
"இவன மாதிரி ஒரு கிறுக்கன் இருக்கமாட்டான்"
இப்படியான பல பேச்சுக்கள் அங்கே எழுந்தாலும் சில கண்கள் பெருமையுடன் ராம்குமாரை பார்த்ததையும் ஆதிரா குட்டி கவனிக்க தவறவில்லை.
அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் விபத்துக்குள்ளானவனை அனுமதித்துவிட்டு படபடத்துக்கொண்டிருந்த ராம்குமாருக்கு டாக்டர் கூறிய வார்த்தைகளே நிம்மதியை கொடுத்தது.
"தாங்க்ஸ் மிஸ்டர் ........"
"ராம்குமார்"
"தாங்க்ஸ் மிஸ்டர் ராம்குமார், சரியான நேரத்துக்கு கொண்டுவந்து அட்மிட் பண்ணினீங்க. உங்கள மாதிரி ஆட்கள் இந்த மிலேனியத்திலயும் இருக்கிறது ரொம்ப அபூர்வம்தான்."
"அந்த பையனோட உசிருக்கு ஒண்ணும் ஆகிடலையே டாக்டர்?"
"ஒண்ணும் பயப்படாதீங்க, கிரிட்டிக்கல் ஸ்டேஜ் இல்ல. யாருன்னே தெரியாத ஒருத்தருக்காக இவ்வளவு கேர் பண்ற ஒருத்தர மீட் பண்ணினது....... யூ ஆர் கிரேட் மிஸ்டர் ராம்குமார்" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார் டாக்டர்.
கண்களின் ஓரம் வழிய ஆயத்தமாயிருந்த கண்ணீர்துளியை துடைத்தவாறே தன் கைகளுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த மகளின் முகத்தை பார்த்தார் ராம்குமார். அவ்வளவு நேரமும் இதுவரை தான் கண்டிராத அப்பாவினை அருகிலிருந்து பார்த்த ஆதிராவிற்கு பல குழப்பங்கள் மனதில் எழுந்திருந்தது.
மகளை அள்ளியணைத்தவாறே தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வெளியே வர விபத்து நடந்த இடத்திலிருந்த இரு இளைஞர்கள் ராம்குமாரின் சைக்கிளை அங்கே கொண்டு வந்து ராம்குமாருக்காக காத்திருந்தனர். தனது சைக்கிளை பார்த்த பிறகே ராம்குமாருக்கு தான் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு வந்தது ஞாபகம் வந்தது.
ராம்குமாரை கண்டதும் அவ்விரு இளைஞர்களும் விபத்தில் காயப்பட்டிருந்தவனின் நிலை பற்றி விசாரித்து விட்டு ராம்குமாரிடம் சைக்கிளை ஒப்படைத்தனர்.
"ரொம்ப நன்றிப்பா, மறக்காம என்னோட சைக்கிளை இங்க மட்டும் கொண்டுவந்து கொடுத்திருக்கீங்க." என்று கூற குறுக்கிட்ட ஒரு இளைஞன் " அண்ணா நீங்க வேற, யாருன்னே தெரியாத ஒருத்தருக்காக நீங்க இவ்வளவு பண்ணும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல, உங்கள மாதிரி ஆட்கள்தான் எங்கள மாதிரி பசங்களுக்கு இன்ஸ்பிரேசன்." என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.
அவர்கள் பேசியது பெரிதாக ஆதிராவுக்கு விளங்காவிடினும் அப்பாவை இப்போது எல்லோரும் பாராட்டுவது விளங்கியது.
அப்படியே மீண்டும் ஆதிராவை கூட்டிக்கொண்டு சைக்கிளை மிதிக்க தொடங்கினார் ராம்குமார்.
"அப்பா......."
"என்னம்மா?"
"ஹாஸ்ப்பிட்டல்ல வந்த அண்ணா உன்கிட்ட என்ன சொன்னாருப்பா?"
"ஓ.... அதுவா, அவரு உன்னோட அப்பாவ பாராட்டிட்டு போனாரு."
"எதுக்குப்பா பாராட்டினாரு?"
"நாங்க ரோட்ல அடிபட்டுக்கிடந்த அந்த அங்கிள ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டி வந்து காப்பாத்துனோமுன்னுதான்மா...."
"அப்போ எதுக்குப்பா அங்க நின்னுட்டிருந்தவங்க எல்லாம் நீங்க அந்த அங்கிள தூக்கிட்டு வரும்போது திட்டினாங்க?"
"அதுவாம்மா..... நமக்கேதும் பிரச்சனை வந்துடுமோன்னு திட்டியிருப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்க கூடாதும்மா. இது சுயநல உலகம்...."
"சுயநல உலகமா? அப்பிடீன்னா என்னப்பா?"
"ம்ம்ம்..... குட்டிக்கு என்னன்னு சொல்றது?...... ஆங்....... தன்னை பத்தி மட்டுமே யோசிக்கிறது."
"புரியலையேப்பா!"
"யாருக்கும் ஏதாவது தேவைன்னா உதவி பண்ணாம இருக்கிறதும்மா."
"இது எங்க டீச்சர் சொல்லி குடுத்திருக்காங்களேப்பா. அங்க நின்னவங்க யாருமே பள்ளிக்கூடம் போகலையாப்பா?" ஆதிராக்குட்டியின் இந்த கேள்விக்கு ராம்குமார் சிரித்தே விட்டார்.
"ஆதிராகுட்டிக்கு இருக்கிற புத்தி அங்க யாருக்கும் இருக்குமா?"
'இல்லை' என்று தலையாட்டியபடி திரும்பி ராம்குமாரின் முகத்தை பார்த்து சிரித்தாள் ஆதிராக்குட்டி.
"அப்பா நானும் நீங்க செய்தது போல யாரையாச்சும் ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டி போய் சேர்க்கலாமா?"
"ஹாஹாஹா...... கண்டிப்பாம்மா. யாருக்கும் உதவி தேவைன்னா கட்டாயம் செய்யணும். ஆதிரா குட்டி வளர்ந்து எவ்வளவு பெரிய ஆளானாலும் உன்னாலான உதவிகளை செய்திடனும். அது கடவுளுக்கு சேவை செய்றதுக்கு சமம்."
ராம்குமார் கடைசியாக கூறியது ஆதிரா குட்டிக்கு புரியாவிடினும் மனதில் பதித்து வைத்துக்கொண்டாள்.
அப்பாவும் மகளும் இவ்வாறே உரையாடலை தொடர்ந்தபடி உல்லாசமாக பவனி வர சிறிது நேரத்தில் அழகர் நகரிலுள்ள ராம்குமாரின் இல்லத்தை வந்தடைந்தனர்.
ஆதிராவின் சத்தம் கேட்டு வெளியில் வந்த இந்திராணியோ ராம்குமாரின் சட்டையில் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு பதைபதைத்தார்.
"ஐயோ என்னங்க ஆச்சு?"
ஒருவாறாக இந்திராணியை சமாதானப்படுத்தி நடந்தவற்றை சொல்லி முடிப்பதற்குள் ராம்குமாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
"எதுக்குங்க நமக்கு தேவையில்லாத சோலி? யாரு அடிபட்டு கிடந்தா நமக்கென்ன?" இந்திராணியின் இந்த பேச்சு ராம்குமாருக்கு சற்றே சினத்தை உருவாக்கிவிட்டது.
"என்ன பேச்சு பேசுற இந்திரா? இப்பிடித்தான் நாளைக்கு நமக்கு ஒன்னுன்னாலும் யாருமே உதவிக்கு வரமாட்டான். யாருமே எனக்கு உதவலன்னாலும் நான் இப்பிடித்தான் இருப்பன். நெஞ்சில ஈரமில்லாம என்னால வாழ முடியாது."
"அதுக்கில்லைங்க.... நாளைக்கு போலீஸ் அது இதுன்னு பிரச்சனையாகிட்டா......."
"எது இன்னொருத்தனோட உசுர காப்பாத்தினா பிரச்சனையா? அதுக்கு பிரச்சனை வந்தா, அதையும் நான் பார்த்துக்குவன்."
"காலம் கெட்டு போயிருக்கு, நமக்கும் ஒரு பொண்ணிருக்கா என்கிறத மறந்துடாதீங்க. உங்கள நம்பி இங்க ரெண்டு உசுரு இருக்குங்கிறத ஞாபகம் வச்சுக்கோங்க..." இந்திரா சென்டிமென்டலாக தாக்கி ராம்குமாரை வழிக்கு கொண்டு வர முயற்சித்தாள்.
"என்ன நம்பித்தான் நீயிருக்க சரி, ஏன்னா உங்க வீட்டை உன்ன அப்பிடி வளர்த்துட்டாங்க. ஆனா என்னோட பொண்ணு சிங்கக்குட்டி, என்னையோ உன்னையே நம்பி இந்த உலகத்துக்கு அவள் வரல்ல."
"இதெல்லாம் பேச்சுக்கு வேணும்னா சரியா இருக்கும்ங்க, வாழ்க்கைக்கு ஒத்துவராது. உங்க குணத்த என் பொண்ணுக்கும் கொடுத்துடாதீங்க. அப்புறம் வாழப்போற இடத்துல 'எங்கப்பா வீடு பெருக்குவார், சமையல் செய்வார், நீயும் அப்பிடி செய்யணும்'னு கட்டுறவனோட சண்டை பிடிக்கப்போறாள்."
"இந்திரா இது உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியலையா? அவளுக்கு இப்போதான் அஞ்சு வயசு. செல்போன், கம்பியூட்டர்னு உலகமே எங்கயோ போய்கிட்டிருக்கு, இப்ப போயி வாழப்போறவ, கட்டுறவன்னு பேசிக்கிட்டிருக்கா. ஆணும் பொண்ணும் சமம்கிறதா இந்த நாடும் ஊரும் ஒத்துக்கிற காலம் சீக்கிரம் வந்திடும். அப்புறம் பேசு என்கிட்ட"
"ஆமா அப்புறம் பேசுறன், அதுவரைக்கும் என் பொண்ணுக்கு எனக்கு எங்க அம்மா என்ன கத்துக்கொடுத்தாங்களோ அதத்தான் காத்துக்கொடுப்பேன்."
"குட்டிம்மா அம்மாதான் உனக்கு கத்துக்கொடுப்பங்களாம். சரிதானேம்மா?" விளையாடிக்கொண்டிருந்த ஆதிரா குட்டியையும் உள்ளே இழுத்தார் ராம்குமார்.
"இல்லப்பா, எனக்கு நீங்களே கத்துக்குடுங்கப்பா."
"அப்பிடிச்சொல்லுடா என் சிங்கக்குட்டி." என்று பெருமிதத்துடன் ஆதிராவை அள்ளியணைத்தார் ராம்குமார்.
"அப்பாக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கு, இவள எப்பிடி கரை சேர்க்கபோறேனோ..... அப்பிடியே என்கிட்டே நேற்று பூரா கேட்டுக்கிட்டிருந்தியே ஒரு கேள்வி, அத அப்பாகிட்ட கேளு, அவரே பதில் சொல்லுவார்." என்று சலித்தபடியே அவ்விடம் விட்டு நகர எத்தனித்தாள் இந்திரா.
"அதுக்கு பதில் தெரிஞ்சிருச்சும்மா"
"என்ன கேள்விம்மா அது?" என்று ராம்குமாரும் கேட்க இந்திராவும் பதிலை தெரிந்து கொள்ள ஆர்வமானாள்.
"அப்பா பள்ளிகூடத்தில் டீச்சர் 'நீங்க பெரியவங்களாகி என்னவா ஆக போறீங்கன்னு' கேட்டாங்கப்பா. நாளைக்கு பதில் சொல்லணும். அத தான் அம்மாகிட்ட கேட்டேன்பா."
"அப்பா கலெக்டராகணும்னு சொல்லி கொடுத்திட்டாரா?"
"இல்லம்மா, அப்பா சொல்லி கொடுக்கல......"
"அப்போ என்னவா ஆகப்போற?" என்று புருவத்தை உயர்த்தினாள் இந்திரா.
"அம்மா நான் மத்தவங்களுக்கு உதவி செய்யப்போறேன்மா" என்று ஆதிரா குட்டி சொல்ல இந்திராவோ சிரிப்பை அடக்க முடியாமல் " என்ட தங்கத்துக்கு இன்னும் கேள்வியே புரியல...." என்றபடி ஆதிராவின் நெற்றியில் முத்தமிட்டார்.
"அடி சிறுக்கி மவளே.... என் பொண்ணுக்கா கேள்வி புரியல. அவளுக்கு புரிஞ்சிடிச்சு...ஹ்ம்ம்.... உனக்குத்தான் வாழ்க்கை என்னன்னு புரியல." என்றவருக்கு தனது மகளின் பதிலில் அவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தது.
"என்னங்க ஆச்சு உங்களுக்கு, நீங்கதானே அவ பெரியவளாகி கலெக்டரா வரணும்னு சொல்லுவீங்க. இப்போ என்னடான்னா......"
"இந்திரா அது தொழில், தொழில் மட்டுமே வாழ்க்கையில்ல, கலெக்டராகி கூட அவள் இந்த நாட்டுக்கு சேவை செய்வாள்......"
"என்னது.... சேவையா? ம்ம்ம்.... கடைசில அன்னை தெரேசா மாதிரித்தான் ஆகப்போறாள் உங்கட சிங்கக்குட்டி...."
"அவளோட மனசுக்கு எது பிடிக்குதோ அத அவள் செய்வாள். அத யாரும் இல்லன்னு சொல்ல முடியாது."
"இன்னும் கொஞ்ச நேரம் உங்களோட இத பத்தி பேசினா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்....."
"இனிமே தான் புடிக்கணுமா?"
"ஆள விடுங்க, அப்பாவாச்சு.... பொண்ணாச்சு" என்று விட்டு இந்திரா சமையலறை பக்கம் நகர,
"அப்பா நான் கலெக்டரெல்லாம் ஆவ மாட்டன். ரோட்ல யாராச்சும் அடிபட்டு கிடந்தா அவங்களுக்கு உதவி செய்யப்போறான்பா....." என்று மழலை குரலில் கிசுகிசுத்தாள்.
"நல்ல வேளை இத உங்கம்மா முன்னாடி சொல்லல என் தங்கம்...." என்று சொல்லிவிட்டு ராம்குமார் வந்த சிரிப்பையும் அடக்கி கொண்டார்.
ஆதிரா வளர்வாள்......