ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரின் தேடல் நீய(டா)டி- கதைதிரி

Status
Not open for further replies.

Anucharan

Active member
Wonderland writer
938d2db913cd0de21edbcbc5267f5d2a.jpg wp4907357.jpg
அத்தியாயம் 5

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர் ..

கோபாலின் நண்பர் ராம்நாதன் அவர்களை ஸ்டேஷனிலேயே வந்து அழைத்து சென்றார்.பரஸ்பர நலம் விசாரிப்புகுப்பின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்... ராமநாதன் வரும் வழியிலேயே கார் வாடகை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். கோபாலின் பள்ளி கால நண்பர்... கோவையை பூர்வீகமாகக் கொண்டவர்.. கடந்த பத்து வருடங்களாக வேலை மாற்றல் பெற்று சென்னையில் வசிக்கிறார்.அவருக்கு ஒரே மகள் வர்சினி. அவள் ஸ்ரீ நிதி பணிபுரிய இருக்கும் நிறுவனத்தின் சென்னையில் இருக்கும் தலைமையிடத்தில் பணிபுரிகிறாள்.

ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு ராமநாதனின் வீட்டை அடைந்தனர். அங்கு அவரின் மனைவி கலையரசியும் மகளும் வாசல் வரை வந்து வரவேற்றனர்... அவரின் வீடு நான்கு அறைகள் கொண்ட ஸ்ரீ வீட்டில் பாதியளவு இருந்தது.. பத்துக்கு பத்து அறை மூன்றும் சிறிய பூஜை அறை சமயலறை மற்றும் சற்று பெரிய வரவேற்பு அறை... சிரம பரிகாரங்கள் நால்வரும் முடித்தபின் காலையுணவை கலையரசி எடுத்துவைக்க அனைவரும் உண்டனர்.

"அண்ணா இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் ஊருக்கு போலாம் ல ணா... வந்தன்னைக்கே கிளம்பனுமா " என்றார் கலையரசி..

"இல்லை மா அங்க ஊருலையும் கொஞ்ச வேலை இருக்கு நடவு சமயம் வேற இன்னொரு நாள் கண்டிப்பா வரோம் மா.. ஸ்ரீ பத்திரமா இருடா .. " என்று கலையரசியிடம் ஆரம்பித்து ஸ்ரீ யிடம் முடித்தார் மூர்த்தி.

" அண்ணா இதெல்லாம் நீங்க சொல்லனுமா ஸ்ரீ எங்க பொண்ணு மாதிரி நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க கவலைப்படாமல் போய்ட்டு வாங்க" கலையரசி.. இதைக் கேட்ட மூர்த்தி மற்றும் கோபாலிற்கு மனநிறைவாய் இருந்தது..

"ஆன்ட்டி எனக்கு உங்களை நினைச்சா தான் பாவமா இருக்கு....நான் நல்லா சமைப்பேன்னு இவ சொன்னா தயவு செய்து நம்பி கிட்சன் பக்கம் மட்டும் விட்றாதிங்க...அப்புறம் உங்க கிட்சனுக்கு அது தான் கடைசிநாளா இருக்கும்.. அனுபவத்துல சொல்றேன்.." என வராத கண்ணீரை துடைத்து கொண்டு சிரியாமல் சொல்ல அங்கிருந்த அனைவரும் கொல்லென சிரிக்க ஸ்ரீ யோ ராமை கொலை வெறியோடு முறைத்து பார்த்தாள்..

"அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி ஏதோ ஒரு தடவை அம்மா சாதம் குக்கர் ல வைக்க சொன்னாங்க நான் கரெக்ட் ஆ தான் வைச்சேன்.. பழைய குக்கர் வெடிச்சுருச்சு அதுக்கு நான் என்ன செய்வேன்.. எல்லாம் அந்த குக்கர் மேல் தான் தப்பு... இவன் என்னவே என்னை சொல்றான்.. " என அப்பாவியாக சொல்ல எவ்வளவு முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்... பின் ஸ்ரீ அழுகையாய் உதட்டை பிதுக்க கலையரசி அங்கிருந்தவர்களை கண்ணால் சைகை செய்ய

ராமும் வர்சினி மட்டும் சிரிக்க அவரோ "நீ எதும் வருத்தப்படாத டா.. நீ கூட பரவால வர்சூக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது..."என வர்ஷினியை வார அவள் அன்னையின் மேல் கடுப்பானாள்

"நான் உனக்கு சூப்பரா சமைக்க கத்து தர்றேன்..சரியா!!" என ஸ்ரீ யை கேட்க அவளும் ராமிற்கு பழிப்புக்காட்டி சிரித்தாள்.

பின் மூவரும் அன்றிரவே ஊரிற்கு கிளம்ப "பொறுப்பா நடந்துகணும் டா" என கூறிய மூர்த்தியும் கோபாலும் மனமேயின்றி பிரிந்து சென்றனர்...ஸ்ரீ அவர்கள் கிளம்பும் வரை பொறுத்தவள் அதற்குமேல் முடியாமல் அவளுக்கென ஒதுக்க பட்ட அறையில் முடங்கி விட்டாள் .. முதல் நாள் என்பதால் அவர்களும் ஓய்வெடுக்கட்டும் என விட்டுவிட்டனர்..

எப்போதுமே வர்ஷினியின் பெற்றோருக்கு அவள் ஒரே பெண்ணாய் போனதில் வருத்தமே.. உறவுகள் உடன்பிறப்புகள் இன்றி தனியாய் வாழ்வதின் அருமை தெரிந்தவர்கள்.

கல்லூரி படிக்கும் போதே கலையரசியை காதலித்து படித்து முடிக்கும் முன்பே பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.. எனவே உறவுகளும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.. கோபாலின் குடும்பத்தை போல் தனித்தனியான வீடுகளில் வசித்தாலும் அவர்களின் ஒற்றுமையில் பெரிய ஆச்சர்யமே.. வர்ஷினியை இது போன்ற குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதே அவர்களின் எண்ணம்..

முதல் முறை குடும்பத்தை விட்டு பிரிந்தது, புது இடம் என ஸ்ரீ க்கு அந்த இரவு சிவராத்திரி தான்.. அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டி அனைவரும் பரப்பரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர் ..

அவர்களதும் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலானவர்கள் சொந்தவீடு , வர்ஷினிக்கு ஸ்கூட்டி, சாதரணமான கார் என இவ்வளவு தான் உடைமையே.. முதலில் ராமநாதன் அலுவலகம் கிளம்பி விட ஸ்ரீ யும் வர்ஷினியும் ஸ்கூட்டியில் ஆபிஸ் சென்றனர்..

அந்த வானுயர முப்பது மாடி கட்டிடத்தின் பிரமாண்டத்தில் திகைத்து நின்று விட்டாள்.. வர்ஷினி அவளை அழைத்து சென்று அவளின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சி நடக்கும் இடத்திற்கு வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தாள்.. வர்ஷினி ஸ்ரீ யை விட ஒரு வயது மூத்தவள்.. அவளும் இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் பிரிவு படித்து இந்நிறுவனத்தில் ஓராண்டிற்கு முன்பு சேர்ந்தாள்.

இன்றுடன் ஸ்ரீ சென்னை வாசி ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது.. சென்னை வாழ்க்கை அவளுக்கு உயிரோட்டம் இல்லாததது போலவே தோன்றியது... அந்த போக்குவரத்தும் ஜன நெருக்கடியும் ஸ்ரீ க்கு மூச்சு முட்ட வைத்தது..

வர்சினியும் ஸ்ரீயும் நன்றாக நெருங்கி விட்டனர்.. முதலில் குடும்பத்தை பிரிந்து மிகவும் வருந்தியவள் அதை வெளியில் காட்டாமல் இருந்தாள் அதை அறிந்து கொண்ட வர்ஷினி அவளை தனியாக விடாமல் எப்பவும் கூடவே இருந்தாள்..
தனியாக வளர்ந்தவளுக்கு ஸ்ரீ தங்கையை தாண்டியும் தோழியைத் தாண்டியும் இருவருள்ளும் நல்ல பாசபிணைப்பு உருவாகி இருந்தது..

போனில் அனைவரிடமும் தவறாமல் பல மணிநேரம் பேசுபவள் இருந்தும் எப்போது நேரில் சென்று அவர்களை பார்க்க என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.. எப்போது ஊருக்கு சொல்வோம் என ஆவலாக இருந்தாள்.
எப்போழுதும் துறுத்துறுவென இருக்கும் ராமும் பெங்களூர் கிளம்பி விட ஸ்ரீயும் இல்லாமல் பெரியவர்கள் தான் மிகவும் வருந்தினர்..

நாட்கள் அதன் போக்கில் நகர ஸ்ரீ வேலையை நன்கு கற்றுக் கொண்டிருந்தாள் அவள் குழுவில் அவளுடன் சேர்த்து இன்னும் நான்கு பேர்.. அனைவரிடமும் இன்முகத்துடனே நடந்து கொண்டாள்.. ஸ்ரீ இங்கு வந்து மூன்று மாதங்கள் முடிய இருநாட்கள் இருந்தது.. அவளுக்கு வேலையும் உறுதியானது. இடையில் அவளின் பெற்றோர்கள் வேலை பளுவினால் வந்து பார்க்க முடியவில்லை அவளும் வேலை காரணமாக ஊரிற்கு செல்ல முடியாமல் போக கலையரசி ராமநாதனும் தான் அவளை தேற்றி மகள் போலவே பார்த்துக் கொண்டனர்..

இன்று....

எவ்வளவு முயன்றும் அவளால் நம்பவே முடியவில்லை ...

பின் தன் கை கால்கள் என வேகமாக தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் ஏதோ சற்று வித்தியாசமாக உணர்ந்தாலே தவிர மற்றபடி அவளுக்கு வேறு எதுவும் தவறாய் தோன்றவில்லை..

சட்டென நினைவு வந்தவளாய் சுற்றி முற்றி தன் தோழி வர்ஷினியை தேட அங்கு அவள் இல்லை வண்டியின் அருகே அந்த கரிய சாலை வண்ணத்தையும் மீறி செங்குறுதி பளபளத்தது கையில் நடுக்கத்துடன் அதை வருடிப் பார்த்தாள் சுத்தமாக தொடு உணர்வின்றி ஏதோ குளுமையாய் மட்டும் உணர்ந்தாள்..

பின் வேகமாய் எழுந்தவள் அந்த காவல் அதிகாரி கூறிய மருத்துவ மனையை நோக்கி விரைந்தாள்.. வர்ஷினி யுடன் ஊர் சுற்றியதில் அந்த ஏரியா பழக்கமாகி இருந்தது...

'வர்ஷினி வர்ஷினி....' என அவள் மனம் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க சட்டென அவள் நடந்த இடம் ஆடுவதை உணர்ந்து பயந்து தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்..

சிறிது நேரம் கழித்து சுற்றுப்புறம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க மெல்ல கண்கள் திறக்க தன் முன்னால் கிழிந்த நாறாய் கிடந்த வர்ஷினியை கண்டவள் கண்களில் கண்ணீர் தானாய் சுரக்க ஆரம்பித்தது... அவளின் தலையிலும் வலது கையிலும் வலது காலிலும் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது..

அவளை அந்நிலையில் பார்க்க முடியாதவள் வேகமாக அங்கிருந்து வெளியில் வந்து வராண்டாவில் நின்று கொண்டாள்.

அப்போது தன் பதட்டமாய் உள்ளே வந்த ராமநாதன் மற்றும் கலையரசியை கண்டவளுக்கு இன்னும் அழுகையாய் வந்தது .. கலையரசி ஸ்ரீ யினை ஊடுருவி செல்வது போல செல்ல ஸ்ரீ தான் அதில் தடுமாறி அங்கேயே அமர்ந்து விட்டாள். அவளுக்கு இன்னும் இந்த நிலையை தாக்குபிடிக்க முடியவில்லை ... மரணத்திற்கு பிறகான இந்நிலை அவளிற்கு ஏதோ மீளா சுழலில் மாட்டிக் கொண்டது போல் உணர்ந்தாள்..

ஆம் அவள் உடலில் இருந்து உயிர் பிரிந்து முழுதாய் மூன்று மணி நேரம் ஆகி இருந்தது...

இந்நிலையில் இருந்து எவ்வாறு அவள் மீள போகிறாள்.. அல்லது இந்த மீளா சுழலில் சிக்கி மூழ்கிப் போவாளா!! என்பதை இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்...



உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும் ??

 

Anucharan

Active member
Wonderland writer
images (1).jpeg

அத்தியாயம் 6

சில மணி நேரங்களுக்கு முன்பு..

அவளுக்கு இரவு எட்டு மணிக்கு இரயில்.அவளுடன் வர்ஷினி குடும்பத்தினரும் பொள்ளாச்சி சென்று ஒரு வாரம் தங்குவதாக திட்டமிட்டிருந்தனர். ராமநாதன் அலுவலகம் ஒரு வாரம் விடுமுறை சொல்வதற்காக சென்றுவிட .. வர்ஷினியும் ஸ்ரீ யும் குடும்பத்தினர்க்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தனர்.

அனைத்தும் வாங்கி விட்டு வர்ஷினி வண்டி ஓட்ட ஸ்ரீ பின்னால் அமர்ந்திருந்தாள். அவர்களின் வீடு செல்ல குறுக்கு வழியான ஒரு வழிப் பாதையில் சென்றார்கள்.. அப்போது எங்கிருந்தோ வந்த கருப்பு நிறக் கார் இவர்களது ஸ்கூட்டியை வேகமாக மோத வண்டி தடுமாறி சரிந்தது..

இருவருமே ஊரிற்கு செல்லவிருக்கும் மகிழ்ச்சியில் தலைகவசத்தை மறந்து வந்திருந்தனர்..(இதனால் கூறவருவது என்னன்னா மக்களே "தலை கவசம் நம் உயிர் கவசம்")

அதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீ நடைமேடை தடுப்பில் தலை மோத சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

வர்ஷினியோ வண்டியுடனே இழுத்து செல்லப்பட்டு தலை கை கால்கள் என உடலில் பல காயங்களுடன் மயக்கமடைந்தாள். இவர்களை இடித்த அந்த காரோ சிறிதும் வேகத்தை குறைக்காமல் சென்றுவிட்டது..

அந்த பகுதியில் குறைந்த மக்களே அந்நேரத்தில் அங்கு இருந்தனர்.. அங்கிருந்த சிலர் வேகமாக வந்து ஆம்புலன்ஸ்க்கும் போலீஸ் நிலையத்திற்கும் அழைத்தனர்.

அருகிலேயே ரவுன்ஸ்ல் இருந்த அந்த ஏரியா இன்பெக்டர் சேகர் மற்றும் அவருடன் கான்ஸ்டபிள் ஒருவரும் உடனடியாக சம்பவ இடத்தினை அடைந்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்...

அதற்குள் அங்கு வந்த ஆம்புலன்ஸ் முதலில் ஸ்ரீ யை பரிசோதித்த மருத்துவர்கள் இல்லை என தலையசைக்க அந்த இன்ஸ்பெக்டருக்கே சற்று மனம் கனத்து விட்டது. அதுவும் ஸ்ரீ யினது கண்கள் திறந்த நிலையிலேயே அவள் உயிர் பிரிந்திருக்க மருத்துவரே வருத்த்துடன் அவள் கண்களை மூடினார்...

வர்ஷினியை பரிசோதித்தார் உயிர் இருப்பதாகவும் சீக்கிரம் மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என அவசரப்படுத்தினார்.

ஆம்புலன்ஸில் அவர்களுடன் கான்ஸ்டபிளை துணைக்கு அனுப்பிவிட்டு சேகர் காவல் நிலையத்திற்கு அழைத்து உதவிக்கு ஆள்அனுப்ப சொல்லிவிட்டு அருகில் இருந்தவர்களை விசாரித்தார்..

அதில் ஒருவர் " சார் கருப்பு கலர் கார் சார் மின்னல் வேகத்தில் வந்தது நாங்க என்னனு திரும்பி பார்க்கறதுக்குள்ள வண்டியை இடிச்சுட்டு போயிருச்சு" என்றார்.

"வண்டி நம்பர் யாரும் பாத்திங்களா" என்று கேட்டார் சேகர்.

"இல்ல சார் ஆனா கார் நல்ல விலையுயர்ந்த கார் சார்" என்றனர் சுற்றி இருந்தவர்கள்.

அவர்களை அனுப்பிய சேகர் ஸ்கூட்டியை சோதிக்க அதில் வர்ஷினி அழைப்பேசி மற்றும் இருவரது கம்பெனி ஐடி கார்டுகளும் இருந்தது .. அதில் இருவரின் பெற்றோருக்கும் அழைத்து சிறு விபத்து என்றும் சின்ன காயம் தான் என பொய் கூறி மருத்துவமனை பெயர் சொல்லி வர சொன்னார் ..

பின்னர் தன் வண்டியில் சாய்ந்து ஹாஸ்பிடல் சென்ற கான்ஸ்டபிளுக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.அதே சமயம் அவரிடமிருந்தே அழைப்பு வந்தது .

" ம் .. ஹாஸ்பிடல் சேர்த்துட்டயா" சேகர்.

...................

" அந்த சீரியஸா இருக்க பொண்ணு பேரு வர்ஷினி சென்னை பொண்ணு. அந்த ஸ்பாட் அவுட் பொண்ணு பேரு ஸ்ரீநிதி பொள்ளாச்சி போல. ஹாஸ்பிடல்ல இந்த விவரத்தை கொடுத்துரு. " சேகர்

....................

"அந்த கார் அடையாளம் சொல்லி அடுத்த செக் போஸ்டர்ல தேட‌ சொல்லிருக்கேன் . இடிச்ச காரை கண்டு பிடிச்சர்லாம். நீ அந்த ஸ்ரீ யோட பேரன்சு வந்ததும் பாடிய ஒப்படைச்சுரு. அவங்க கிளம்பர வர கூட இருந்துட்டு வா. நா துணைக்கு கான்ஸ்டபிள அனுப்புறேன்" என்று கூறி போனை வைத்தார். இதைத்தான் ஸ்ரீ ஆன்மாவாய் நின்று கேட்டது அதன் பின்னே தன் தோழியின் நினைவு வந்து தேடினாள்.

இங்கு மருத்துவமனை வந்த ராமநாதன் அங்கு ஐசியு முன் நின்ற கான்ஸ்டபிளை நோக்கி சென்றார்.

"சார் எங்க பொண்ணுங்களுக்கு ஒன்னும் ஆகலையே" சற்று பதட்டதுடனே வினவினார்.

அவரோ"நீங்க வர்ஷினியோட பேரன்சா.."என்றார்.

"ஆமா சார் . ஸ்ரீ யும் எங்க பொண்ணு மாதிரி தான் சார் .. ரெண்டு பேருக்கும் என்னாச்சு சார் சின்ன அடினு தான் சொன்னாங்க எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு சார்" என்றார் கலைச்செல்வி.

அதில் பெருமூச்சு விட்ட கான்ஸ்டபிள் ஐசியுவை நோக்கி கைகாட்டினார். அதில் இருவரும் "சார் சின்ன அடினு தான சொன்னாங்க ஏன் ஐசியுல வச்சுருக்காங்க" என பதறினர்.

"ஒண்ணும் இல்லை.. நீங்க பதறாதிங்க டாக்டர் வந்து சொல்லுவாங்க " என்றார்.

கான்ஸ்டபிளும் தான் என்ன செய்வார் இது போல் எத்தனையோ கேஸ்களை தினம் தினம் பார்த்தாலும் இது போன்ற அப்பாவி பெற்றோர்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கும் மனம் பாரமாகி விடும். அதுவும் ஸ்ரீ போல ஸ்பாட் அவுட் கேஸ்கள் தான் கடினமே அதுவும் அவர்களின் பெற்றோர்கள் கதறுவதில் தான் இவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றி போகிறது .

அவர்கள் மருத்துவமனை அடைவதற்குள் ஸ்ரீ குடும்பத்தினர் பத்து முறை ராமநாதனுக்கு அழைத்து விட்டனர்.. இவரும் மருத்தவரை பார்த்து விட்டு அழைப்பதாய் கூறி வைத்தார்.

ஸ்ரீ யோ தட்டுத்தடுமாறி எழுந்தவள் அங்கு கான்ஸ்டபிளிடம் இருவரும் பேசுவதை கண்டு அவர்கள் அருகில் சென்றாள். வீண் முயற்சி தான் என்று தெரிந்தும் கலைச்செல்வியிடம்."ஆன்ட்டி வர்ஷினிக்கு ஒன்னும் ஆகாது அவ நல்லாகிடுவா" என கூறி அவரின் தோள் தொட முயற்சிக்க ம்கூம்... அவள் ஸ்பரிசம் வெறும் காற்றாய் தான் போனது அவள் யார் கண்ணுக்கும் தெரியவுமில்லை இவள் பேசுவதும் ஒருவருக்கும் கேட்கவில்லை... ஸ்ரீக்கோ மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களின் அருகேயே நின்று கொண்டாள்.

அந்நேரம் வெளியே வந்த நர்ஸ் இவர்களை அழைக்க அனைவரும் மருத்துவரை சந்திக்க சென்றனர்.
உள்ளே நுழைந்தவர்களை பார்த்த

மருத்துவர் "முதல்ல உட்காருங்க .. நீங்க வர்ஷினியோட பேரன்ஸ் ரைட்" என, இருவரும் ஆம் என தலையசைத்தனர்.

"வர்ஷினிக்கு ஹெட் ல இன்ஜூரி ஆகிருக்கு ... கிரிட்டிகள் ஸ்டேஜ் தான். பிரைன் டெட் ஆகவும் சான்ஸ் இருக்கு எதுனாலும் அவங்க கண்விழித்தால் தான் சொல்ல முடியும். அதுபோக கால்லையும் கைலயும் எழும்பு முறிவு அதுக்கான ட்ரீட்மெண்டும் பண்ணிருக்கோம் அவங்க கண்விழித்தால் தான் மேற்கொண்டு சொல்ல முடியும். " என நிறுத்த கலைச்செல்வியோ கதறி அழ ஆரம்பித்து விட்டார்..

ராமநாதனுக்கும் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கினர். பின்பு " டாக்டர் ஸ்ரீ எப்படி இருக்கா அவளுக்கு எதும் ஆகலையே" என்று கேட்க மருத்துவரோ கான்ஸ்டபிளை 'இன்னும் சொல்லலையா' என்ற ரீதியில் பார்க்க அவர் இல்லை என தலையசைத்தார்.

"அந்த பொண்ணோட பெற்றவர்கள் வந்துட்டாங்களா " மருத்துவர்.

" இல்லை டாக்டர். அவங்க பொள்ளாச்சி. வந்துட்டே இருக்காங்க நைட்குள்ள வந்துடுவாங்க .என் நண்பனோட பொண்ணு தான் வேலை விசயமாக இங்க இருக்கா" என்றார்.

பெருமூச்சு விட்ட மருத்துவர் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்து சென்றார். அங்கு தலை முதல் கால் வரை வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்த ஒரு ஸ்டச்சரின் முன்பு அனைவரையும் நிற்க வைத்து "சாரி சார் அவங்க சம்பவ இடத்திலேயே " என்று மருத்துவர் முடிக்க வில்லை கலைச்செல்வி இல்லை என கத்தியிருந்தார்.

"ஏங்க நம்ம ஸ்ரீ க்கு ஒண்ணும் இல்லைல வாங்க நம்ம போலாம் இது ஸ்ரீ‌ இல்லை வாங்க போலாம்" என கூறியபடியே தன் கணவனின் கைகளைப் பிடித்து இழுத்தார்.

அவரோ தன் மனைவியை சமாதானம் செய்து கொண்டே மருத்துவரையும் கான்ஸ்டபிளையும் நோக்க "நடந்த விபத்துல அவங்க தலையில பலமா அடிபட்டு அந்த இடத்துலயே இறந்துட்டாங்க" என கூற கான்ஸ்டபிள் அந்த துணியை விலக்க அங்கு முகத்தில் பக்கவாட்டிலும் காதில் இருந்தும் வழிந்த உதிரம் உறைந்த நிலையில் நிர்மூலமான முகத்துடன் படுத்திருந்த ஸ்ரீ யை கண்ட கலைச்செல்வி அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார்..

அவரை ஒரு கையால் தாங்கிய ராமநாதன் ஸ்ரீ யின் முகத்தை தொட்டு " ஸ்ரீ உனக்கு ஒண்ணு இல்லடா கண்ண முழிச்சு பாருடா மா இந்த அங்கிளை பாருடா பிளீஸ் டா எங்களை விட்டு போயிராதமா.. உங்க குடும்பத்துக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன் ...எந்திரிடா.. " என திரும்ப திரும்ப சொல்லி கதற அங்கு அரூபமாய் இருந்த ஸ்ரீ யோ மவுனமாய் கதறினாள்.

தன்னவர்களின் கதறல்களை காண சகிக்காதவள் வேகமாக வெளியே வந்து வர்ஷினியின் அறைக்கு சென்று விட்டாள். குறுகிய காலமே ஆனாலும் இரத்த உறவுகளை போல மனதளவில் மிகவும் நெருங்கி விட்டிருந்தனர்.

இங்கு கான்ஸ்டபிளோ அவர்களை வெளியில் அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தினார். கலைச்செல்வி ஒருபுறம் மயங்கி இருக்க அங்கிருந்த செவிலியர்கள் அவரை பார்த்து கொண்டனர்.

ராமநாதன் " எப்படி சார் இப்படி ஆச்சு .. என் பொண்ணு நல்லாதான் வண்டி ஓட்டுவா.."என அழுகையுனுடே கேட்டார் அவரும் மேலோட்டமாக நடந்ததை கூற அவருக்கு ஆத்திரம் தாளவில்லை.

அதே நேரம் ஸ்ரீ யின் தந்தை அழைக்க ராமநாதனுக்கோ நின்ற அழுகை மீண்டும் வந்தது . எப்படி கூறுவார் அவர்களின் குலகொடி இங்கு வேரறுந்து கிடப்பதை...

துக்கம் மேலிட அழைப்பை ஏற்காமலே விட்டு விட்டார். அருகிருந்த கான்ஸ்டபிளோ "இப்போ எதுவும் சொல்லாதிங்க சார் அவங்க இங்க வந்து தெரிஞ்சுக்கிட்டும்.. " என ஆலோசனை கூறினார். அவருக்கும் அதுவே சரியென பட மீண்டும் அழைத்த சமயம் பெரிதாய் ஒன்றும் இல்லை எனக் கூறி வைத்தார்.

மகள் மனைவி ஒரு பக்கம் ஸ்ரீ மறுபக்கம் என துக்கம் தொண்டையை அடைக்க ஐசியு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

ஐசியினுள் இருந்த ஸ்ரீ யோ மெதுவாய் தன் தோழியின் அருகே சென்று அவள் கைகளின் மேல் மெதுவாய் தன் கையை வைத்தாள். பின்பு அவளின் பெட்டில் அமர்ந்து " வர்ஷு நா இப்போ பேசரது எல்லாம் உனக்கு கேட்காதுனு தெரியும் ஆனாலும் பேசுறேன் உங்களையெல்லாம் இனி எப்போ பார்பேன்னு தெரியல.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் குடும்பத்தை பிரிந்து வந்தப்ப அவங்க நினைப்பே வராம என்னை நீங்க பார்த்துக்கிடீங்க... நான் என்ன யோசிக்கிறேன் எதற்காக வருத்தப்படுறேன்னு நா சொல்லாமையே என்னை பத்தி புரிஞ்சு என்னை சந்தோஷப்படுத்துனீங்க... இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன திருப்பி செய்ய போறேன்னு தெரியல.. " துக்கம் தொண்டையை அடைக்க குரலை செருமிக் கொண்டு" பிளீஸ் எழுந்த்துக்கோ வர்ஷு ஆன்ட்டியும் அங்கிளும் ரொம்ப அழறாங்க" என தேம்பினாள் ஸ்ரீ..

பின்பு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் நேரம் ஆவதை உணர்ந்து " வர்ஷு டாக்டர்ஸ்லாம் என்னென்னமோ சொல்லாறாங்க ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு நீ கண்டிப்பா எழுந்து வரனும் என்ன காப்பாத்தாம விட்ட கடவுள் கண்டிப்பா உன்ன காப்பாத்துவாரு. என்னால் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது.. என்னோட நினைப்புல நீங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருந்த நினைவு தான் இருக்கனும்... இவங்க எல்லாம் எனக்காக அழறத பாக்குற சக்தி எனக்கு இல்லை.. என்னோட குடும்பம் இங்க வர்றதுக்குள்ள நான் கிளம்பனும். எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்வியா வர்ஷு அப்ப அப்ப பொள்ளாச்சி போய் என்... இல்ல இல்ல நம்ம குடும்பத்தை பார்த்துக்கோ" என கண்கலங்க தன் கையை அவள் கையிலிருந்து விலக்கியவள் நிமிர்ந்து அவளை காண என்ன புரிந்ததோ வர்ஷினியின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது..

வர்ஷினியின் கைகள் அசைந்து ஸ்ரீ யினது ஸ்பரிசத்தை தேட அது கிடக்காமல் அவள் இமைகளுக்குள் கருமணிகள் அங்குமிங்கும் அலைந்து கடினப்பட்டு விழிகள் திறக்க முயற்சி செய்தாள்.

யார் சொன்னது மரணித்தால் அவர்களை உணரமுடியாது என்று உண்மையான அன்பு கொண்டால் நிச்சயமாக அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் எந்நிலையில் இருந்தாலும் அவர்களை நம்மால் நிச்சயம் உணரமுடியும் என்பதற்கு வர்ஷினியும் ஸ்ரீ யுமே ஒரு எடுத்துக்காட்டு..

சுய உணர்வுகளற்று கிடந்த நிலையிலும் தன் தோழிக்கு மேலானவளின் உயிரற்ற ஸ்பரிசத்தை அவளால் சில கணங்கள் உணரமுடிகிறது என்றால் இவர்களின் அன்பு பிணைப்பை எந்த வார்த்தைகள் கொண்டு விளக்குவது..

அவளின் அசைவை பார்த்த ஸ்ரீ அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவள் இனி வர்ஷினி குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில் அவ்விடத்தை விட்டு சற்று லேசான மனதுடன் வெளியேறினாள் ஸ்ரீ.



இனி இக்கதையின் எபி வாரம் இருமுறை பதிவிடப்படும் மக்களே... கதையினைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??

 
Last edited:

Anucharan

Active member
Wonderland writer
images (5).jpegimages.png
அத்தியாயம் 7

ஐசியுவிலிருந்து வெளியேற நினைக்கையில் கதவின் வழியே ஊடுறுவி வந்தவள் மீண்டும் நிலையில்லாமல் கீழே விழுந்து விட்டாள் ஸ்ரீ. முன்பும் இருமுறை இப்படி தான் சென்றாள் அப்போதெல்லாம் விழவில்லையே என யோசித்தவள் அந்த நேரம் முழுகவனமும் வர்ஷினியை பார்க்கும் ஆவலால் கவனிக்காதது நினைவு வந்தது. இது ஏன் இப்படி இருக்கு என குழம்பி எழுந்தாள்

அப்போது அங்கு இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த வர்ஷினியின் பெற்றொரை பார்த்ததும் மீண்டும் மனம் கனத்தது.. அழுது அழுது ஓய்ந்தவர்கள் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அமர்ந்திருக்க அந்நேரம் சரியாக ஸ்ரீ யின் பெற்றோர்கள் அவருக்கு அழைக்க இவரும் மருத்துவமனை முகவரியை கூறி வரசொன்னார்.

இதை கேட்ட ஸ்ரீ அவர்களை பார்க்கும் ஆவலும் ஏக்கமும் மனதில் எழ அதை அடக்க வழி தெரியாமல் திணறினாள். இங்கு கலைச்செல்வியோ மேலும் அழ ராமநாதனுக்கும் மீண்டும் கண்கள் கலங்கியது.. சிறிது நேரம் அங்கேயே நின்றவள் ' உண்மை தெரிந்த பின் அவர்களின் நிலைமையை காணும் தைரியம் நிச்சயமாக தனக்கு இல்லை' என முடிவெடுத்தவள் மனதின் ஏக்கத்தை அங்கேயே புதைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நேரம் நள்ளிரவை தொட்டுக் கொண்டு இருக்க எங்கே செல்வது இனி என்ன செய்வது இந்நிலைக்கு ஒரு முடிவு இல்லையா என பலவாறு சிந்தித்தவள் இலக்கின்றி அந்த வெறிசோடிய சாலையில் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

அந்த இரவு நேரத்தில் ஆங்காங்கே சில விளக்குகள் மட்டுமே ஒளிர அங்கிருந்த நடைபாதையில் சிலர் உறங்க எங்கிருந்தோ கேட்ட நாயின் ஊளையிடும் சத்தத்தில் தன் யோசனையில் இருந்து களைந்தவள் சுற்றுப்புறத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.. வர்ஷினியுடன் ஊர் சுற்றிய போது இந்த இடத்தை பார்த்துள்ளாள்

இது மெரீனா கடற்கரை செல்லும் வழி என அறிந்தவள் கடற்கரை நோக்கி முன்னேறினாள்... அவளுக்கு இந்த இரவும் தனிமையும் ஒருவித பயத்தை உருவாக்க மனதினுள் நமச்சிவாய மந்திரத்தை உருப்போட்டுக் கொண்டு நடந்தாள். ஆங்காங்கே படுத்திருந்த சில நாய்கள் திடிரென்று குரைக்க அவளுக்கு சகலமும் ஆடிப்போனது.

பொதுவாக ஸ்ரீ க்கு நாய்கள் என்றாலே பயம்... இதில் இந்த நாய்கள் வேறு அவளைப் பார்த்து குரைத்து கொண்டே முன்னேற இவளோ தான் ஒரு ஆன்மா என்பதையும் மறந்து பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டாள். பின்னர் ஒரு வழியாக தைரியத்தை கூட்டி அங்கிருந்த வேகமாக நடந்தவள் அங்கு ஓரமாய் கரையில் நின்ற ஒரு படகின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

இருள் சூழ்ந்த அந்த சாமத்தில் கடல் அலைகளின் ஓசை மட்டுமே கேட்க அந்த கடலினை வெறித்துப் பார்த்தவள் அவள் வர்ஷினியுடன் இங்கு வந்தது நினைவில் ஆடியது. சென்னையில் அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த கடற்கரை தான் அதனாலேயே வர்ஷினியை வற்புறுத்தி இங்கு பலதடவை அழைத்து வந்துள்ளாள். அவர்கள் இருவரும் இணைந்து இங்கு அலைகளில் ஆடியது நினைவு வர ஸ்ரீ க்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.‌ இருந்தும் அந்நாட்களில் மகிழ்ச்சியை எண்ணி கண்மூடி நினைவு படுத்த அவளின் இதழ் ஓரம் புன்னகை அரும்பியது ..

மனதை சந்தோசமான தருணங்கள் மூலம் திடப்படுத்திக் கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் சேர்க்கும் மிக பெரிய சொத்து நல்ல நினைவுகளே என்பதை ஸ்ரீ நன்றாக உணர்ந்திருந்தாள்..

குளிர்ச்சியான காற்று மெதுவாய் சீண்ட ஏனோ அவள் ஆன்மா சிலிர்த்து அடங்கியது..
அந்த கூதல் காற்றில் அவள் அமர்ந்திருந்த மணல் சற்று கிளம்ப தன் பின்னே கேட்ட காலடி சத்தத்தில் சர்வமும் அடங்கி போனது ஸ்ரீ க்கு அதுவும் நாய்கள் ஊளையிடும் சத்தம் வேறு அவளை பயமுறுத்தின அந்த இரவு நேர தனிமையும் கும்மிருட்டும் நடுங்க வைக்க பயந்து கொண்ட திரும்பிவள் பின்னால் நின்ற உருவத்தை பார்த்து 'வீல்...' என அலறினாள்..

------------------------------------------------------------

மின்னல் வேகத்தில் உள்ளே வந்த காரை பார்த்து மருத்துவமனை ஊழியர்களே சற்று மிரண்டு தான் போயினர்.. வண்டியை அதன் இடத்தில் நிறுத்திய விஷ்ணு வேகமாக இறங்க அவனைத் தொடர்ந்து மூர்த்தி, சித்ரா , கோபாலும் பதற்றத்துடன் இறங்கினர். மாலை மூர்த்திக்கு ஸ்ரீ க்கு சிறு விபத்து என அழைப்பு வர அதிர்ந்தனர். உடனே ராமநாதனுக்கு அழைக்க அவரும் அதையே உறுதி செய்தார். சின்ன காயம் தான் என கூறியிருந்தாலும் ஏனோ மனது பதறிக் கொண்டே இருந்தது‌.. தகவலை வீட்டில் சொன்னவுடன் அனைவரும் பதறி விட்டனர்.

அவர்களை சமாதானம் செய்து மூர்த்தி, சித்ரா, விஷ்ணு,கோபால் என நால்வரும் காரில் கிளம்பினர். அவர்களுடன் சவிதா மேடிட்ட வயிற்றுடன் ஐந்து மாத கருவை சுமந்து கொண்டு வருவதாய் அடம் பிடிக்க அவளை வற்புறுத்தி விட்டு விட்டு வந்தனர்..

மின்னல் வேகத்தில் விஷ்ணு வண்டியை ஓட்ட சாதரணமாக சென்னையை அடையும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக சென்னையை அடைந்திருந்தனர். மருத்துவமனையை அடைந்தவுடன் பெயரை சொல்லி விசாரித்தவர்கள் நேரே வர்ஷினி இருக்கும் ஐசியு வார்டு இருக்கும் தளத்தை அடைந்தனர்.

அங்கு ஒரு அறையின் முன்பு அமர்ந்து அழுது கொண்டு இருந்த வர்ஷினியின் பெற்றோரை கண்டவர்களுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது... வேகமாக அவர்களை அடைந்து கோபால் ராமநாதன் தோளை தொட திரும்பி பார்த்தவர் நொடியும் தாமதிக்காமல் அவரை கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்துவிட்டார்..

அவரும் எவ்வளவு நேரம் தான் அழுகையை அடக்கி அவர் மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியும் நண்பர் வந்தவுடன் தனக்கு ஆதரவாக எண்ணி அழுது விட்டார்.

அதைக் கண்ட ஸ்ரீ யின் பெற்றோர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது. கோபால் "என்னாச்சு டா .. ஸ்ரீ யும் வர்ஷினியும் எங்க .. அவங்களுக்கு ஒண்ணும் ஆகல தான்... சொல்லுடா என்னாச்சு.. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று அவரை உலுக்கினார்.

அவரோ "நம்ம ஸ்ரீ நம்மல விட்டுட்டு போயிட்டாட " என்றார் அழுகையுடனே.. அதைக் கேட்ட நால்வரும் அவ்விடத்திலேயே உறைந்து விட்டனர்..

முதலில் சுயவுணர்வு பெற்ற சித்ரா "என்ன அண்ணா சொல்றீங்க .. கண்டிப்பா ஸ்ரீ க்கு எதுவும் ஆகியிருக்காது நீங்க வேணா பாருங்க என்னை பாத்ததும் அம்மானு சொல்லி என்னை வந்து கட்டிப்பிடிச்சுக்குவா" என கண்ணீருடன் பேச கலைச்செல்வியோ வேகமாக வந்து சித்ராவின் கையை பிடித்துக் கொண்டார். மூர்த்தியும் கோபாலும் கண்களில் கண்ணீரோடு நிற்க விஷ்ணுவோ நம்ப முடியாமல் "என்ன நடந்தது" என்றான்.

அங்கிருந்த கான்ஸ்டபிளும் நடந்ததை கூற விஷ்ணுவிற்கோ ஆத்திரம் தாளாமல் அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதை துடைக்கும் எண்ணம் அற்று மொத்தமாய் நொருங்கி விட்டிருந்தனர்.

கான்ஸ்டபிளோ அவர்களை ஸ்ரீ யின் உடல் இருக்கும் அறைக்கு அனைவரையும் அழைத்து சென்றார். துணியை விலக்க ஸ்ரீ யின் உயிரற்ற உடலை கண்டவர்கள் உயிர் போகும் வலியை அனுபவித்தனர். சித்ராவோ " அய்யோ ஸ்ரீ உனக்கு என்னாச்சுமா... எந்திரிம்மா... ஒரே ஒரு முறை அம்மான்னு கூப்பிடுடா... " என அவளின் முகத்தை கையில் ஏந்தி கதற அங்கிருந்தவர்களுக்கு இதயத்தில் இரத்த கண்ணீர் வடிந்தது... அழுது அழுது ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தம் தாங்காமல் சித்ரா மயக்கமடைய அவரை அங்கிருந்த நர்ஸ் மற்றும் கலைச்செல்வி தாங்கிக் கொண்டனர்.

ஆண்கள் மூவரும் மௌனமாய் கண்ணீர் வடிக்க அங்கிருந்த கான்ஸ்டபிள் அவர்களை வெளியில் அழைத்து வந்தார்.

அவர்கள் வருவதை பார்த்த மற்றுமொரு கான்ஸ்டபிள் அவர்களிடம் வந்தவர் ஃபார்மாலிட்டிஸ் முடிக்க வேண்டி ஸ்ரீ யின் பெற்றோர்களிடம் சில கையெழுத்துகள் வாங்கினர். மகளின் இழப்பில் துவண்டு இருந்தவர்கள் அதன்பின்னே வர்ஷினி யின் நினைவு வந்து விசாரிக்க அவளின் நிலைமையை எண்ணி மேலும் சோர்வுற்றனர்.

ஸ்ரீ வர்ஷினியிடம் பேசி சென்றவுடன் வர்ஷிக்கு நினைவு வர சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்தாள் அவளுக்கு ஸ்ரீ பேசியதும் அவளின் ஸ்பரிசமும் அந்நிலையிலும் மீண்டும் மீண்டும் நினைவு வர கடினப் பட்டு விழிகளை திறந்தாள்..

அப்போதுதான் உள்ளே வந்த நர்ஸ் அதைப் பார்த்து டாக்டரை அழைக்க வெளியில் இருந்தவர்கள் இன்னும் பயந்து விட்டனர். வர்ஷினியை பரிசோதித்த மருத்துவர் முகத்தில் ஒரு வித நிம்மதி ... வர்ஷினியோ தனக்கு சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கையும் மீறி ' ஸ்ரீ ஸ்ரீ... 'என முணுமுணுத்தாள். மருத்துவர் அவளை ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம் எனக் கூறி இனி சுவாசக் கருவி தேவையில்லை என அதை அகற்றி விட்டு வெளியில் வந்தவர் பதற்றத்துடன் நின்றவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.

"வர்ஷினி கண் விழிச்சுட்டாங்க பை காட்ஸ் கிரேஸ்... இனி அவங்க குணமாகிடுவாங்க... அவங்க ஸ்ரீ ஸ்ரீ னு திரும்ப திரும்ப சொல்லட்டு இருக்காங்க ... இப்போதைக்கு எந்த அதிர்ச்சியான விசயத்தையும் அவங்க கிட்ட சொல்லாதிங்க..." என்றார்.

ராமநாதன் " டாக்டர் இப்போ நாங்க எங்க பொண்ண பார்க்கலாமா" என கேட்டார். " தாராளமா பார்க்கலாம்.. அவங்க முன்ன யாரும் அழாதிங்க தைரியம் தர மாதிரி பேசுங்க" என கூறி நர்ஸிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு சென்றார்.

ஐசியினுள் நுழைந்து அங்கு தலையிலும், கை கால்களில் கட்டுகளுடன் கிழிந்த நாறாய் கிடந்த வர்ஷினியை கண்டவர்களுக்கு தங்களையும் மீறி கண்ணீர் சுரந்தது.. அவள் அருகில் சென்ற கலைச்செல்வி அவளுக்கு ஆறுதல் சொல்ல போகும் முன் அவளே "மா.. ஸ்ரீ எங்க...ம்மா ... இவ்வளவு நேரம் .... இங்கதான் இருந்தா... கண்விழித்து பார்த்தால் காணோம்... அவளை கூப்புடு ...மா... " என திக்கி திக்கி கேட்க அவள் பேசுவதை கேட்ட மூர்த்தி கோபால் மற்றும் சித்ரா அதற்குமேல் முடியாமல் அழுகையுடனே வெளியேறினர்..

விஷ்ணு மட்டும் அங்கேயே அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான்.. ஏனெனில் அவனுக்கு வர்ஷினியிடம் விபத்து பற்றி கேட்க வேண்டி இருந்தது.. இந்நிலையில் அவளால் கூற முடியாது என்று தெரிந்தும் அவனுக்கு தன் தங்கையின் நிலைமைக்கு காரணமானவர்களை உருத் தெரியாமல் அழிக்க வேண்டியிருந்தது.

அவர்கள் அழுது கொண்டே வெளியேறியதை கண்டவள் குழம்பிய முகத்துடன் தன் தந்தையை காண அவரோ "ஸ்ரீ க்கு ஒண்ணுமில்லை டா அவ பக்கத்துல தான் ரெஸ்ட் எடுக்கறா..‌நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம் ரெஸ்ட் எடு என்றார்.." என்றார். விஷ்ணு முன்னே வந்து " ஆர் யூ ஓக்கே" என்க அவளும் ம் என தலையசைக்க விஷ்ணு மேற்க் கொண்டு " என்னம்மா ஆச்சு" என்றான்.

"அண்ணா நாங்க மெதுவா தான் வண்டியை ஓட்டினோம் அந்த கார் தான் வேகமாக வந்து இடிச்சது.. இடிச்சதும் இல்லாம நிற்க கூட இல்லை... கருப்பு கலர் ஃபெராரி கார்னு நினைக்குறேன்." என தட்டுத் தடுமாறி கூற அவனும் இது போதும் என எண்ணி வர்ஷினி யை ஓய்வெடுக்க கூறி விட்டு வெளியே வந்தான். அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் விவரம் கூற அவர் உடனே இன்ஸ்பெக்டர்க்கு தகவல் கூறினார்..

அவருக்கோ இந்த விபத்தின்பின் சற்று அருகிலேயே இன்னொரு விபத்து ஏற்பட்டு இருக்க அதுவும் சற்று பெரிய இடமாக இருக்க நேரே சென்று விசாரிக்க வேண்டிய சூழ்நிலை எனவே கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் கூறிவிட்டு இவர் வேலையை தொடர்ந்தார்.

இங்கு விஷ்ணுவிற்கு நிலைகொள்ள முடியவில்லை அழுது அழுது ஓய்ந்து போன பெரியவர்களைக் கண்டு அவன் தற்போது நிலைமையை கையில் எடுத்துக் கொண்டான். ஊரில் மற்ற சித்தப்பாக்களிடம் அலைபேசியில் நடந்ததை கூறி பிற ஏற்பாடுகள் செய்ய சொன்னான்..

அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த கிராமமே ஸ்ரீ வீட்டின் கதறலில் விழித்துக் கொண்டது. இங்கு இன்ன‌ பிற நடைமுறைகளை முடித்து காலை எட்டு மணியளவில் ஸ்ரீ யின் உடலை ஒப்படைப்பதாய் இருந்தது..

ராமிற்கும் ரவிக்கும் தகவல் சொல்லப்பட அவர்களும் அடுத்த விமானத்தில் கிளம்பியிருந்தனர். ரவிக்கு இந்த வாரத்துடன் பயிற்சி முடியவுல்ல நிலையில் அவன் தன் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்று உடனே கிளம்பியிருந்தான்.அடுத்தநாள் காலை எட்டு மணிவாக்கில் ஸ்ரீ யின் உடல் தன் சொந்த ஊரை நோக்கி ஆம்புலன்ஸில் பயணப்பட்டது...

எவ்வளவு ஆவலாக தன் சொந்த ஊர் செல்லும் நாளிற்காக காத்திருந்தாள் ஆனால் இப்படி அவள் செல்வதை யார் தான் கற்பனை செய்திருப்பார்கள்.... நாம் அன்றாடம் வாழ்வில் எவ்வளவோ விபத்தைக் கடந்து வந்திருப்போம் சிலர் விபத்திற்கு காரணமாகவும் இருந்திருப்பார்கள் அவர்கள் செய்யும் தவறினால் ஸ்ரீ போன்ற எத்தனையோ குடும்பம் தவறே செய்யாத தம் குடும்பத்தினரை இழந்து வாழ்கின்றனர். இழப்பிலேயே பெரிய இழப்பு, சோகம் புத்திர சோகம்.. தாம் உயிருடன் நன்றாய் இருக்கும் போது தன்னுடைய இரத்தம் வாழும் முன்பே மரணிப்பது எவ்வளவு பெரிய கொடுமை ...‌
----------------------------------------------------------
அந்த நடுசாம நேரத்தில் ...

ஆந்தைகள் ஒருபுறம் அலற அந்த அடர்ந்த மனித வாசனை அறியா இருள் சூழ்ந்த காட்டில் பெயரறிய ஜீவராசிகள் ஏதோ ஆபத்தை உணர்ந்து கத்த அந்த‌ இடமே அகோரமான பிம்பத்தை உருவாக்கியது....

நிலவொளியோ அந்த காட்டினுள் நுழைய முயற்சித்து லட்சத்தியொரு முறையாக தோல்வியை தழுவ மை இருட்டின் நடுவே திடிரென்று விழித்த ஒரு ஜோடி சிவப்பு நிறக் கண்கள் மட்டும் தன் இத்தனை வருட காத்திருப்பின் பலனாய் கிடைக்கப் போகும் இரையை எண்ணி மகிழ்வில் மின்னி பளபளத்தன.


உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ? ?


 
Last edited:

Anucharan

Active member
Wonderland writer
images (3).jpeg IMG_20210203_122508_134.jpg images (7).jpeg

அத்தியாயம் 8

அந்த வீடே வெறிச்சோடிக் கிடந்தது... வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் எதிர்பாராமல் நிகழ்ந்த இரண்டு மரணங்களுக்கும் துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருக்க ஸ்ரீ யின் குடும்பத்தினர் ஆளுக்கொரு மூலையில் அடைந்திருந்தனர்..

பெரியவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாது ரவி,ராம் விஷ்ணு மூவரும் சென்னை கிளம்பியிருந்தனர் ஸ்ரீ இறந்த பத்து நாட்களில்....
அன்று...
ஸ்ரீ யின் உடல் மதியம் தாண்டியே பொள்ளாச்சியை அடைந்தது. உடன் ராமநாதனும் வந்திருந்தார். வர்ஷினி கண் விழித்ததால் கலைச்செல்வியே பார்த்துக் கொள்வதாய் கூற கோபால் எவ்வளவோ தடுத்தும் கிளம்பி வந்துவிட்டார்.

அதற்குள் ராமும் ரவியும் வந்திருந்தனர். பெரியவர்கள் ஒரு பக்கம் சின்ன வர்கள் மறுபக்கம் என யார் யாரை தேற்றுவது என்ற வழியறியாது அழுது கொண்டு இருந்தனர். இதில் சவிதா வேறு ஸ்ரீ யின் உடலை கண்டு மயங்கி விழ இன்னும் களோபரம் ஆனாது.

ராம் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் வைராக்கியமாய் நின்றிருந்தான். சிறுவயதில் இருந்தே இரட்டையர்கள் போல் ஒன்றாய் திரிந்தவர்கள்... அதில் அவள் இல்லை என்பதை அவனால் முழுதாய் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

பங்காளிகள் என ஸ்ரீ யின் உடலை தூக்க வர அதனைத் தடுத்து ராம் ரவி நவீன் நரேன் என அண்ணன் தம்பிகளே அவளின் இறுதியாத்திரையை முடித்து வைத்தனர்.

சுந்தரம் தாத்தாவிற்கு அன்றிரவு அதீத நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருந்தார். ஒன்றிற்கு இரண்டு மரணம் நிகழ்ந்திருக்க அங்கிருந்தவர்கள் ஒருவர் கண்ணிலும் ஜீவனில்லை...

அடுத்தநாள் அவருக்கான காரியங்களும் முடிந்திருக்க உடலின் சக்தி மொத்தமும் வடிந்ததுபோல் அனைவரும் இருந்தனர்... உணவு, தூக்கம், சுற்றுபுறம் மறந்து இன்ன பிற அன்றாட வேலைகளையும் மறந்து ஒரு வாரம் அனைவருக்கும் போனதே தெரியவில்லை..

இறுக்கமாகவே இருந்த ராம் உறவினர் ஒருவர் ஸ்ரீ மற்றும் சுந்தரம் படத்திற்கு மாலை அணிவிப்பதை பார்த்து ஆவேசமானான்.

வேகமாக சென்று ஸ்ரீ க்கு போடப்பட்ட மாலையை கழட்டி வீசி எறிந்தான். அதை கண்ட அனைவரும் சுயவுணர்வு பெற்று வந்து ராமை தடுக்க அதற்குள் ஸ்ரீ புகைப்படத்தில் வைக்கப்பட்டிருந்த பொட்டையும் அழித்திருந்தான்.

சில இடங்களில் இறந்தவர்க்கு குறிப்பிட்ட நாட்கள் வரை அவர் படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றுவது வழக்கம். அதேபோல் தான் எண்ணி அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இவர்கள் வருந்துவதைப் பார்த்து விட்டு அவரே ஹாலில் இருந்த படங்களை எடுத்து சுத்தம் செய்து பொட்டிட்டு மாலையிட்டார் ஆனால் ராமின் ஆவேசத்தில் அவரே பயந்து ஒதுங்கி கொண்டார்.

மூர்த்தி "ஏன் இப்படி நடந்துக்கற ராம்.. இதெல்லாம் வழக்கமா செய்யர முறைதான நாம தான் கவலைல மறந்துட்டோம் அதான் அவங்க பண்றாங்க நீ ஏன் தடுக்கற " என்றார் குரல் கமற.

ராம் " பெரியப்பா என்ன பேசுறீங்க ...ஸ்ரீ நம்மல விட்டு எங்கயும் போகல அவ நம்ம கூட தான் இருக்கா ... இருப்பா ... எப்பவும்.... நீங்க எல்லாம் மொதல்ல அழறத நிறுத்துங்க ... இப்படி எல்லாம் நீங்க அழறீங்கனு தெரிஞ்சாலே அவ ரொம்ப வருத்தப்படுவ அவ ஆத்மா கூட சாந்தி அடையாது.. எல்லாரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க " என்றான் திடமான குரலில் கூறியவன் அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டான்.

அவன் குரலில் இருந்த கட்டளையே அனைவரையும் எழும்ப வைத்தது..இதுவரை விளையாட்டு தனமாய் இருந்தவன் இவ்வளவு பொறுப்பாய் பேசுவதைக் கண்டு வாயடைத்து போயினர்.

விஷ்ணுவும் ரவியும் அவன் பின்னாலேயே சென்றவர்கள் அவன் வயலையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்து அவன் தோளைத் தொட்டு திருப்பினர்" எங்களை விட ஸ்ரீ உனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று எங்களுக்கு தெரியும் ராம் அவ இல்லைங்கறத ஏத்துக்கோ ... வாய்விட்டு அழுதுரு டா ... துக்கத்தை மனசுக்குள்ளையே வச்சுக்காம அழு டா... மனசு கொஞ்சம் லேசாகும்...எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லற ஆனால் உன்னோட வருத்தத்தை வெளிக் காட்டாம பெரிய மனுஷன் மாறி நடந்துக்கற.." என்றான் விஷ்ணு.

அவர்களை நோக்கி ஒரு வலி நிறைந்த புன்னகையை சிந்தியவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான். அவன் செல்வதைப் பார்த்த இருவரும் பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றனர்.

அன்று இரவு விஷ்ணுவிற்கு அழைத்த ராமநாதன் கூறிய விசயத்தில் விஷ்ணு,ரவி, ராம் மூவரும் அடித்து பிடித்து அடுத்தநாள் சென்னை கிளம்பியிருந்தனர்..
--------------------------------------
அந்த இரவின் தனிமையில் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் வீல்.. என அலறியிருந்தாள். அங்கு முகம் மற்றும் உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் நின்ற உருவம் அவளை நொக்கி வர இவளோ நடுக்கத்துடன் பின்னால் நகர்ந்தாள்.

"அக்கா பயப்படாதீங்க ... பயக்காம என்னை பாருங்க பயந்தால் என் உருவம் அகோரமாகதான் தெரியும் " என்ற மழலை குரலில் அந்த உருவம் பேச முதலில் பயந்து பின்னோக்கி நடந்தவள் அந்த உருவம் தன் நடையை நிறுத்தியதும் அதில் இவளும் சற்று தள்ளி நின்று பயத்தை போக்க ஆழ்ந்து மூச்செடுத்தவள் கண்களை மூடித்திறக்க தற்போது அவளின் இடுப்பளவே உள்ள ஏறத்தாழ பத்து வயதுடைய சிறுவன் நிற்க ஸ்ரீ யோ விழிவிரித்து அவனைப் பார்த்தாள்

'சிறிது முன் அவனின் தோற்றம் என்ன தற்போதுள்ள தோற்றம் என்ன எப்படி இப்படி ஆனது ஏதோ மேஜிக் மாறி இருக்கு...' என எண்ணி வியந்தாள்.

அவனோ " அக்கா என்னைப் பார்த்து பயப்படாதீங்க நானும் உங்களை மாதிரி தான்" என்றான் சர்வசாதாரணமாக.

அவன் கூறியது புரியவே ஸ்ரீ க்கு சில நிமிடங்கள் ஆனது புரிந்ததும் அவளுக்கு இன்னும் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. ஓடியாடி விளையாட வேண்டிய இந்த சிறு வயதிலேயே இந்நிலையில் உள்ளான் என்றால் இந்த மரணம் தான் எத்தனை கொடியது என்றே ஸ்ரீ யின் மனதில் தோன்றியது.
--------------------------------------
இங்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட எத்தனையோ அதிசயங்கள் இவ்வுலகில் நடந்திருக்கிறது.. நடந்துகொண்டும் உள்ளது. இங்கு பல விசயங்கள் விடை தெரியாத மர்மங்களாகவே உள்ளது.. அதற்கான எத்தனையோ விளக்கங்கள் அறிவியல் பூர்வமாக கூறினாலும் மர்மங்கள் தீர்ந்தபாடில்லை..

அப்படி பட்ட இடம் தான் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதி சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட காடு தான் மதிகெட்டான் சோலை.. சாதரணமாக காட்சியளிக்கும் இந்த வனாந்தர பகுதி பல மனிதர்களையும் சித்தர்களையும் காவு வாங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது..

மருத்துவ செடிகளைத் தேடியும் காட்டை ஆராயவும் என்று சென்ற ஒருவரும் திரும்பி வரவில்லை. அறிவியல் பூர்வமாக அவர்கள் திரும்பி வராததற்கு அங்குள்ள ஒருவகை மூலிகைதான் அவர்களின் மதியை மயக்கி காட்டில் இருந்து வெளிவர இயலாமல் செய்து கொல்கிறது என பல அறிஞர்கள் கூறினாலும் இங்கு பல்வேறு விசயங்கள் மர்மமாகவே உள்ளது

அதனால் நம் அரசாங்கமே அந்த 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டை சுற்றியும் கம்பி வேலி அமைத்து தடைசெய்யப்பட்ட பகுதி என பிரசங்கப்படுத்தியுள்ளது.. சூரிய ஒளியை உள்ளே விடாமல் அந்த அடர் வனப்பகுதியின் நடுவே நடுநாயகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

பல நூறு ஆண்டுகளாக இந்த காட்டை ஆட்சி செய்பவன் உள் நுழையும் ஒருவரையும் விட்டு வைத்ததில்லை அவர்களின் ஆவி கூட அந்த காட்டை விட்டு வெளியே செல்ல அவன் அனுமதித்ததில்லை...

தற்போது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மரக்கிளைகள் இருபுறமும் அரண் போல் வளர்ந்து இருக்கக் முட்கள் நிரப்பப்பட்ட அந்த தரைக்கு பத்தடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்தவன் உடல் முழுதும் செதில்கள் போலவும் அகோரமாய் வளர்ந்திருக்க செய்த தவம் நிறைவுபெற முன்தின இரவே கண்விழித்து இருந்தான்.

ஒரு ஆன்ம சக்தியின் மூலம் ஆறடிக்கு மேல் மூன்று இன்ச் அதிகமான உயரமும் வசீகரமான முகத்துடன் பார்க்க முப்பது வயது இளைஞன் போல் இருக்கும் தன் இளமையை மீட்டு எடுத்து இருந்தான் அவன் ஆதிலிங்கம்..

அவனின் சிவப்பு நிற விழிகள் வேட்டையாட போவது போல் பளபளத்தது.

அவனால் தீயசக்திகளாக மாற்றப்பட்டு பிசாசுகளாக இருந்த இரண்டு ஆத்மாக்களை அழைத்தவன் அக்காடே அதிரும் வண்ணம் அகோரமாய் சிரித்தான்.

"இத்தனை வருட தவத்தில் எனக்கு தேவையானது கிடைக்கப் போகிறது... இன்னும் சில நாட்களில் நான் சாப விமோசனம் பெற்று விடுவேன்... அதன் பின் இந்த உலகமே என் கட்டுப்பாட்டில்" என்று கண்கள் மின்ன கூற அந்த பிசாசுகளும் தன் கோரப்பற்களைக் காட்டி சிரித்தது..பின் தன் இரையை பற்றிய விவரங்கள் கூறியவன் அது இருக்கும் திசையையும் கூறி அதனை இழுத்து வர கட்டளையிட்டான்.




கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??


 

Anucharan

Active member
Wonderland writer
Sivalingam-Photos-HD.jpg

அத்தியாயம் 9

சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் நேற்று வர்ஷினி யின் தந்தை கூறியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது...

விஷ்ணு விற்கு அழைத்த ராமநாதன் பொதுவான‌ நலம் விசாரிப்புக்கு பின் விபத்து கேஸ் பற்றி பேசினார்.. அதில் வர்ஷினி மற்றும் ஸ்ரீ ஓட்டிய வண்டியை எந்த வாகனமும் இடிக்க வில்லை எனவும் அவர்களின் வண்டி பிரேக் பிடிக்காமலே தடுமாறி விழுந்ததாக பதிவு செய்து கேஸை முடித்துள்ளதாக கூறினார்... காவல் நிலையம் சென்று விசாரிக்க அவர்கள் சரியான தகவல்கள் தரவில்லை என்றும் சொல்ல இவர்களுக்கோ மிகுந்த அதிர்ச்சி அதுவும் வர்ஷினி தன் கண்ணால் கண்டு உள்ளாளே இடித்தது கார் தான் என்று பிறகு எப்படி என்று அனைவரும் குழம்பினர்... ரவி தான் இதில் ஏதோ பெரிய சதி நடந்துள்ளது எனக் கூறி உடனடியாக நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என கிளம்பி விட்டான்...

சென்னை அடைந்த மூவரும் முதலில் நேரே சென்றது வர்ஷினி அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு தான் .. இந்த இடைப்பட்ட நாட்களில் நன்கு தேற வேண்டிய உடல்நிலையை ஸ்ரீ யின் இழப்பு தெரிந்து தன்னையே வருத்திக் கொண்டாள் வர்ஷினி..

வற்புறுத்தி ஸ்ரீ யை பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்ததால் அதுவும் அவள் சுயநினைவு இல்லாமல் இருந்த சமயம் அவள் தன்னிடம் பேசினாள் என உறுதியாக கூறவும் பொறுமை இழந்த கலைச்செல்வி உண்மையை உடைத்திருந்தார்... அதைக் கேட்டவளுக்கோ கத்தி அழக் கூடத் தெம்பில்லாமல் மௌனமாய் கதறினாள்...

மருத்துவர்கள் எவ்வளவு தான் ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் அவளின் உடல் பாதியே அதனை ஏற்றுக் கொண்டது... பத்தாதற்கு விசாரணை என்ற பெயரில் போலீஸ் வேறு அவளை முழுதும் குழப்பி ப்ரேக் பிடிக்காமல் தான் விபத்து நேர்ந்தது என அவளிடமே கூறி கையெழுத்து வாங்கி சொல்ல அவள் இன்னும் மன அழுத்தத்திற்கு ஆளானாள்..

அன்று நடந்த சம்பவத்தைப் பற்றியே எந்த நேரமும் நினைத்துக் கொண்டே யாரிடமும் பேசாமல் மௌனியாகிப் போனாள்... அவளின் பெற்றோர்கள் ஏதேனும் கேட்டாலும் ஆம் இல்லை பதிலும் சில சமயங்களில் அதுவும் இன்றி தலையசைப்புடன் பொம்மை போல் இருந்தாள்... வர்ஷினிக்கு கை கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டிருக்க எழுந்து நடக்க இரண்டு மாதங்கள் ஆகும் என்றிருந்தனர்.

மருத்துவமனை வந்து வர்ஷினியை பார்த்தவர்களுக்கு மன வருத்தம் அதிகரித்தது... ராமநாதன்
" ஸ்ரீ பத்தி தெரிந்ததில் இருந்து இப்படி தான் இருக்கா .. யாருகிட்டையும் பேசுறது இல்லை.. எங்கையோ வெறித்துப் பார்த்துட்டே இருக்கா ... எங்களால் அவளை இப்படி பார்க்கவே முடியல" என கண்கலங்கி கூறினார்... கலகலவென இருக்கும் பெண் இப்படி ஊமையாகிப் போனதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

இடது காலில் பெரிய கட்டுடன் தொட்டிலில் தொங்க , இடது கையிலும் பெரிய கட்டு போடப்பட்டு தலையிலும் கட்டு என பல கட்டுகளுடன் முகத்திலும் சிறு சிறு கீரல்கல்களுடனும் சாய்ந்து படுந்திருந்தவளைக் கண்டு ரவிக்கு மனிதில் பெரிய வலி உருவானது...

வர்ஷினிக்கும் ரவிக்கும் எப்போதும் ஒத்துப்போனதே இல்லை... ஒருமுறை ஸ்ரீ குளிக்கும் போது அவளிற்கு ரவி போனில் அழைத்திருந்தான் இருமுறை எடுக்கப்படாமல் போக மூன்றாம் முறை அழைக்க எடுத்தது என்னவோ வர்ஷினி தான்... அழைப்பு ஏற்க்கப்பட்டவுடனே " ஸ்ரீ என்னாச்சு டா ஏன் இவ்வளவு நேரம் போன் எடுக்கல... அந்த குடைமொளகா உன்கூட சண்டை போடுறாளா சொல்லுடா அவளை நான் பாத்துக்கிறேன்... " என அவன்பாட்டுக்கு பேசிக் கொண்டே போக பொறுமை இழந்த வர்ஷினி " ஏய் ...நெடுமரம் யாரப் பார்த்து குடமுளகானு சொல்லற....
வந்தேன் பல்லைத் தட்டிக் கைல கொடுத்துருவேன்... " என சீறியிருந்தாள்.

ரவியோ ஒரு நிமிடம் ஜெர்க்காகி பின் அவளுடன் சரிக்கு சமமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் குளித்து வந்த ஸ்ரீ யே அவர்களுக்குள் சண்டையை முடித்து வைத்தாள்... ஸ்ரீ குடும்ப புகைப்படம் காட்டும் போதே ஏனோ நெடுநெடுவென வளர்ந்திருந்த ரவியை முதல் பார்வையிலேயே அவளுக்கு பிடிக்கவில்லை .. பிடிக்கவில்லை என்பதை விட அவளுள் ஏற்பட்ட தாக்கத்தை மறைக்கவே இந்த அரிதாரத்தைப் பூசிக் கொண்டாள் என்பது சரியாக இருக்கும்... ரவிக்கும் ஸ்ரீ அவனுடன் பேசும் போது எல்லாம் இடையூறு செய்து வம்பு வளர்க்கும் வர்ஷினியை ஏனோ பிடித்திருந்தது... அப்படிப் பட்டவள் இன்று பாதி உயிராய் இருப்பதைக் கண்டு கண்கள் கூட கலங்கியது...
-------------------------------------------------------------------
தன் முன் நின்றிருந்த சிறு பாலகனைப் பார்த்த ஸ்ரீ முதலில் பயந்தவள் பின் அவனின் வெகுளியான பேச்சில் அவனை முழுதும் நம்பியிருந்தாள்

"அக்கா என் பேரு ஆதித்யா .. உங்க பேரு என்ன?" என அவளின் முன் கையை நீட்டி இருந்தான் அச்சிறுவன்.. அவனின் முன் மண்டியிட்டவள் . "என் பேரு ஸ்ரீ நிதி. ஆமா முதல்ல ஏன் அப்படி டிரஸ் முழுக்க இரத்தமா இருந்தது அப்புறம் மறுபடியும் பார்த்தால் எதுவும் இல்லை எப்படி இப்படி எல்லாம் மேஜிக் பண்ற ஒரு நிமிடம் நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா!"என்றாள்.

ஆதித்யா "அய்யோ ஸ்ரீ உனக்கு இது கூட தெரியாத இங்கவா " என்று அருகில் அழைத்தவன் அவள் காதில் " நாமே பேய் தான் நம்மை பார்த்து மத்தவங்க தான் பயப்படனும் நம்மலே பயப்படத் கூடாது சரியா" என்றான் அதைக் கேட்ட ஸ்ரீ வாயில் கை வைத்து " ஆலாக்கு சைசில இருந்துட்டு என்ன பேச்சு பேசுது பாரு " என நினைத்து கொண்டாள்...

திரும்பவும் சுற்றி முற்றி பார்த்து விட்டு " நாம் பயந்துகிட்டே பேய பாத்தா அவங்க பேயாகும் போது எப்படி இருந்தார்களோ அப்படித் தான் தெரிவாங்களாம் " என்றான் கிசுகிசுப்பாக.. அவன் சொன்னது புரிந்ததும் அவளோ திகைத்து ஆதித்யா வை பார்த்தாள் ஏனெனில் உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் அல்லவா அவள் கண்ணுக்கு தெரிந்தான்..

கண்கலங்க அவனின் கையை பிடிக்க ஆதித்யா வின் ஸ்பரிசத்தில் அவளின் கண் முன்னே

ஆதி பள்ளி சீருடையில்.... அவன் அருகே மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண்மணி அவனிடம் "ஆதி சேட்டை பண்ணாம இருக்கணும் சரியா.. ஸ்கூல் வேன் வந்துடுச்சு அம்மாக்கு முத்தம் குடுடா " என கேட்க அவனோ முதலில் அவரின் மேடிட்ட வயிற்றில் முத்தமிட்டு பின் அங்கிருந்த இருக்கையில் ஏறி தன் தாய்க்கு முத்தமிட்டான் அதனை கண்கலங்க கண்டவர் அவனை அணைத்து முத்தமிட்டு வேன் ஏற்றிவிட ஆதியும் " பை மா ... பை பேபி .. " என அவரின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சொல்லிவிட்டு ஓட்டுநரின் பின் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.. அவர் வாகனத்தை செலுத்த அங்கு கீர் போடும் பாகத்தில் சிறிய ஓட்டை இருந்தது.. எப்போதும் கவனமாய் இருக்கும் அந்த வண்டியின் உதவியாளர் அன்று ஏதோ ஒரு குழந்தை அழுது கொண்டு இருக்க அதனை சமாதானம் செய்து கொண்டிருநதார்... முன்னால் இருந்த ஆதித்யா எழுந்து நின்று விளையாடிக் கொண்டே அந்த கீர் பகுதியில் கால் வைத்து விட நொடியில் அதனுள் விழுந்திருந்தான்... சிறிய ஓட்டை தான் ஆனால் அதனை சுற்றியிருந்த பகுதி சற்று லேசாய் இருந்திருக்க அவன் கால் வைத்ததும் பெரிதாகி அவனை விழுங்கியிருந்தது... ஏதிர்பாரமல் நடந்த நிகழ்வில் ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்குள் அடியில் விழுந்த ஆதித்யா உருண்டு அந்த வாகனத்தின் சக்கரத்திலேயே மாட்டி உயிரை விட்டிருந்தான்...."

இதனை தன் கண்கள் வழியே கண்டவள் வேகமாக அவன் கையை விட்டாள்... அவளுக்கு கண்கலங்கி மூச்சு விட சிரமப்படுபவள் போல் உணர்ந்தாள்.. என்ன கொடுரமான நிகழ்வு.... நமக்காவது பரவாயில்லை தலையில் பட்ட சிறுகாயத்துடன் வலி இல்லாதது போல் மரணம் நிகழ்ந்தது ஆனால் இவனோ உடல்.... அதற்கு மேல் நினைக்க முடியாமல் ஆதித்யாவை மென்மையாக அணைத்துக் கொண்டாள்....

சிறிது நேரத்தில் அவளே விலகி "ஆமா உனக்கு பயமா இல்லையா இப்படி இருக்க " என்று அவனின் மரணத்தை பற்றி கேளாமல் பேச்சை மாற்றினாள்..

." ரொம்ப பயமா இருந்தது.. அப்போதான் ஒரு அங்கிள் நீ பயப்படக் கூடாது னு சொல்லி நிறையா மேஜிக்லாம் சொல்லித் தந்தாங்க " என கண்கள் மின்னக் கூறினான்... " இப்போ அவங்க எங்க " ஸ்ரீ..

" தெரியலையே எங்கூடத் தான் இருந்தாரு நேத்து நான் பார்க்கும் போதே ஏதோ வொய்ட் டார்ச்சு மாறி லைட் அவரு மேல பட்டுச்சா திடிர்னு மறைஞ்சு போய்ட்டாரு... நானும் இது மேஜிக் னு நெனச்சேன் ஆனால் இப்போ வர அவரு திரும்பி வரவே இல்லை" என அழகாய் தன் மழலை குரலில் பேசினான்..

" சரி எனக்கு மேஜிக் செய்து காட்டுவாயா " என வினவ .. அவனும் "ம்ம் செய்து காட்டுறேன் ஆனா இப்போ வேணா நாளைக்கு செய்து காட்டுறேன்" என்றான் ஆர்வமாய்....

இருவரும் அங்கிருந்த படகில் மேல் ஏறி வலையின் மீது படுத்துக் கொண்டு கதையளந்து கொண்டிருந்தனர்.. ஓயாது வாயடிக்கும் ஆதித்யா வைக் கண்ட ஸ்ரீ க்கு அவளின் சிறுவயது நினைவுகள் தோன்றியது..

ஸ்ரீ மனது லேசாய் இருப்பது போல் உணர்ந்தாள் எப்போதும் அவளை சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் இதுவரை அவள் தனிமையை உணர்ந்ததில்லை ஆனால் இந்த பல மணிநேரங்களாய் தனிமையிலேயே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு ஆதித்யா மருந்தாகிப் போனான்.. அவனின் வெகுளியான பேச்சும் தைரியமும் அவளுள் சிறு தைரியத்தை விதைத்தது..
------------------------------------------------------------------
தன் கண் முன்னே குற்றுயிராய் கிடந்தவனைக் கண்ட ஆருஷிக்கு இதழில் ஒரு வெற்றிப் புன்னகை... கீழே கிடந்தவனுக்கோ தலையிலும் கை கால்களிலும் பட்ட அடியுடன் ஒரு இன்ச் கூட அசைய முடியா சூழ்நிலையில் அவனின் கண்களில் மங்கலாக தெரிந்த ஆருஷியின் உருவத்தை கண்டு அதிர்ந்து மெல்ல தன் உயிரை விட்டிருந்தான்... அதன் பிறகே சற்று சாந்தமானான் ஆருஷி.

பின் அங்கிருந்து நகர முயற்சிக்க அவனை நோக்கி வீசிய வெள்ளை நிற ஒளியின் மூலம் அவன் இழுக்கப்பட அவனோ அதிர்ச்சியில் விழிவிரித்தான்... சிறிது சிறிதாக அவன் அதனுள் செல்ல அதற்குள் அவனை சுற்றி வளைத்த சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் அவனை அந்த வெள்ளை நிற ஒளியின் எதிர்புறம் இழுத்தது..

இவனோ என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு அதனிடம் இருந்து விடுபட போராட இருபுறமும் ரப்பர் போல் இழுக்கப்பட்டான்.. சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவனை சூழ்ந்த சிவப்பு நிற ஒளியால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு மின்னல் வெட்டுபோல் அவ்விடத்தில் இருந்து மறைந்தான்.

சில நொடிகளில் கண் விழித்து பார்த்தவனை சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க கண்ணில் எதுவும் தென்படவில்லை அவனை இழுத்து வந்த அந்த சிவப்புநிற ஒளி சிறுபுள்ளியாய் மாறி அவனின் முன் ஒளிர்ந்து கொண்டிருந்தது...

அந்த சிறிய வெளிச்சத்தில் அவன் இருக்கும் பகுதி மரங்கள் சூழ்ந்த அடர்காடு என்பதை புரிந்து கொண்டான்.. ஆருஷி சுற்றுலும் தன் பார்வையை ஓட்டியவன் ஆபத்து இல்லை என்பதை அறிந்து அந்த ஒளியை ஆராய்ந்தான்.. அந்த ஒளியோ அவனின் முன்னே ‌ஒரு வழியைக் காட்டி முன்னேற இவனும் வேறு வழி இன்றி அதன் பின்னேயே சென்றான்.

சுற்றுப்புறத்திலும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டவன் அந்த ஒளியை பின்பற்ற அதுவோ அடுத்து சென்றது அந்தக் காட்டின் மையப் பகுதியில் உள்ள ஒரு அருவிக்குத் தான் ... அதன் அருகில் இருந்த சுனை போன்று குறைவாக விழும் நீரின் கீழ் பச்சை நிற கல்லில் சிவலிங்கம் இருக்க அந்த சிவப்பு நிற ஒளியோ அந்த லிங்கத்தின் உள்ளே சென்று மறைந்தது. ..

இதை கண்டு ஆருஷி முற்றுலும் திகைத்து விட்டான். பொதுவாகவே ஆருஷிக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக கிடையாது.. அதிலும் ஆவி,பேய் இதிலும் சுத்தமாய் நம்பிக்கையற்றவன்.. அதைப்பற்றி ஆராயும் நேரமும் அவனுக்கு இல்லை அவன் பார்க்கும் சில சினிமாக்களில் இது போன்ற காட்சிகள் வந்தாலே சிரித்து விடுவான் அப்படி ஒரு நார்த்திகவாதி.. தன் அன்னை கோவில், பூஜை என்று செல்வது அவனுக்கே முட்டாள்தனமாகத் தான் தோன்றும்..

ஆனால் இந்த ஒருவாரமாக அவனை சுற்றி நடக்கும் அத்தனையும் அவனின் எண்ணத்திற்கு அப்படியே நேர்மாறாக ஒவ்வொன்றும் அவன் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.. அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை... ஏனெனில் நடப்பது அனைத்தும் அவனை மூலதனமாய் வைத்து அவனுக்கே அல்லவா நடக்கிறது..

சிறிது நேரம் அந்த லிங்கத்தைப் பார்த்தவன் அவனை அறியாமலே அவன் இரு கைகளும் வணங்குவது போல் குவித்திருத்தான்... சில நொடிகளில் தெளிந்தவன் கைகளை வேகமாக கீழிறக்கி ' என்ன பண்ற ஆருஷி ' என அவனையே கடிந்து கொண்டு மீண்டும் லிங்கத்தையே பார்த்தான் .. அவனுக்கு ஏனோ அந்த சிவலிங்கத்தைக் கண்டு வணங்கவே தோன்றியது.. தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவன் திரும்பி அருவியைப் பார்க்க அதுவோ அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளி போல் மின்னிக் கொண்டிருந்தது..
"ஆருஷி...." யாரோ தன்னை அழைப்பது கேட்க குரல் வந்த திசையை நோக்கி பார்த்தான் அங்கு யாருமில்லை .. பிரம்மை என எண்ணி ஒதுக்க நினைத்தவன் திரும்பவும் "ஆருஷி" என அழுத்தமாய் அழைக்க தற்போது குரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அது அந்த சிவலிங்கத்தின் வலது புறமிருந்து வர சுற்றிலும் பார்வையை ஓட்டியவன் மெதுவாக அவ்விடத்திற்கு சென்றான்...

அந்த சுனையின் பின் நிலவின் வெளிச்சம் நன்றாக விழ அஙகு சமதளப்பரப்பில் நிறைய வேல் குத்தப்பட்டு இருக்க அதன் அருகில் உடல் முழுதும் திருநீறு பூசப்பட்டு முடியும் தாடியும் நீண்டு வளர்ந்திருக்க உடம்பில் ருத்ராட்சமும் கச்சாடையும் மட்டும் அணிந்திருந்த ஒருவர் இரு கைகளையும் உயர்த்தி குவித்து வைத்து ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்..

அவரின் அருகே அவரைப் போன்றே ஒரு பிம்பம் பத்மாசனத்தில் காற்றில் மிதக்க ஆருஷி அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தான். சித்தர்கள் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறான் ஆனால் இதுவே முதல் முறை நேரில் பார்ப்பது அதுவும் இந்நிலையில்....

சித்தர்கள் தன் ஆழ் தியானம் மற்றும் பக்தியின் மூலம் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள் என்பதை முதல் முறை தன் கண்களால் கண்டான்.. சித்தரின் பிம்பம் மெல்ல நகர்ந்து அருகில் ஒற்றைக் காலில் நின்ற தன் உடலுடன் இணைந்த நொடி கண் திறந்தார்.

அவரின் விழிகள் நீல நிறத்தில் சாந்தமாய் காட்சியளிக்க அவர் கண் திறந்த நொடி ஆருஷிக்கு உடல் சிலிர்த்து அடங்கியது...

கண்முன் நடந்த இந்த விந்தையைக் கண்டவன் மனதில் 'மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி இந்த உலகில் உள்ளது என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை' என்றே தோன்றியது...



இக்கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??

 
Status
Not open for further replies.
Top