ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முன் தினம் பார்த்தேனே கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 11:-

அந்தக் கல்லூரியின் கலை அரங்கம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது அன்றைய விழாவுக்காக.

கல்லூரி பருவத்தில் இறுதி ஆண்டு நிறைவு விழா.

அந்த கல்லூரி பருவத்தில் இறுதி ஆண்டினர் அனைவரும் இருந்தனர்.
இறுதி விழாவும் கூட,அது ஒரு பிரிவு உபசார விழா.

மாணவர்கள் அனைவரும் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தனர்.
மாணவிகள் அவர்களுக்கு உதவி புரிந்தனர்.

மாணவிகள் அனைவரும் சேலை அணிந்து ரெட்டை ஜடையில் அமர்க்களமாக இருந்தனர்.

மாணவர்கள் எப்பொழுதும் போல பேன்ட் சட்டை அணிந்து இருந்தாலும் அட்டகாசமாக இருந்தனர்.

ஆயிரமே அந்த விழா அவர்களுக்கு குதூகலத்தை கொடுத்தாலும், கவலைகளையும் சேர்த்தே கொடுத்தது என்பது தான் உண்மை.

பிரிவு, அத்தனை இலகுவான விஷயமா என்ன உயிரை உருக்கும் ஒரு நிகழ்வு அல்லவா அது.

அதுவும் கல்லூரியில் சுதந்திரமாக சிறகு விரித்து பறந்தவர்கள் இனி சமுதாயத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளப்போகும் இளைஞர்கள் பட்டாளம்.

பொறுப்புகள் அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது.

இதன்பிறகு மேற்படிப்பு படித்தாலும் பதின்பருவ கல்லூரி வாழ்வின் வெள்ளந்தி குணம் சற்று பக்குவப்பட்ட இருக்கும் அல்லவா.

நண்பர்கள் இன்னும் நட்பை பலப்படுத்துவது எப்படி என்று யோசித்தனர்.

எதிரிகளாக முட்டிக் கொண்ட மாணவர்கள் தங்களது சுய அலசலில் பக்குவப்பட்டு பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர்.

அமர்ந்திருந்த வகுப்பறையையும், ஓடி விளையாடிய மைதானத்தையும், அரட்டையடித்த மரங்களையும், இறுதியாய் ஒரு முறை தொட்டு தடவி நெகிழ்ந்திருந்தனர் அம் மாணவர்கள்.

கல்லூரி வாழ்வில் அரசு பேருந்தும் ஒரு அங்கமாகி போக்கும்.

நடத்துனரும் ஓட்டுனரும் அண்ணன்களாய் மாறியிருந்த காலம் அது.

கல்லூரியின் உணவு விடுதி சொல்லவே தேவையில்லை, பல நாட்கள் கடன் சொல்லி உணவு உண்டு, பின்பு அத்தனை கடனும் காந்தி கணக்கில் போனது தான் மிச்சம்.

அங்கு விழாவுக்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
விழா மேடையில் கல்லூரி நிறுவனர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் வீற்றிருந்தனர்.

வந்தே மாதரம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

மாணவ மாணவிகள் அவரவர்களின்
இருக்கையில் அமர்ந்து தங்களது
பேராசிரியர்கள் கடைசியாக தங்களுக்கு ஆற்றும் உரையை கண்களில் பரவசத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சிலர் மேடை ஏறி பசுமை நிறைந்த நினைவுகளே பாடலை பாடினர்.

பரதத்தில் தேர்ச்சி பெற்ற மாணவி ஒருத்தி மேடை ஏறி அனைவரையும் தனது நடத்தினால் கட்டிப்போட்டாள்.

மற்றுமொரு மாணவியோ ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றை ஒன் மேன் ஷோ போல செய்து அசத்தினாள்.

நிகழ்ச்சியின் இடையில் செவிக்கு உணவு போல், வயிற்றுக்கும் உணவு வழங்கப்பட்டது.

பரதம் ஆடிய பெண்ணும் சேக்ஸ்பியர் நடித்த பெண்ணும் தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தனர்.

ஜனகனமன உடன் நிகழ்ச்சி முடிந்தது நிறைவடைந்தது.

"செல்வி ரொம்ப அருமையா ஆங்கிலத்தில் பேசி பிச்சு உதறிட்ட டி" என்று வாழ்த்தினாள் பரத பெண்.

"நீ மட்டும் என்னடி பாரு அத்தனை பேரும் இமைக்க மறந்து இருந்தோம்" என்றபடி கட்டி அனைத்தாள் செல்வி பார்வதியை.

செல்வி பார்வதி இருவரும் இணைபிரியா தோழிகள் கிட்டத்தட்ட ஐந்து வயதிலிருந்து தோழமையுடன் பழகி வருகிறார்கள்.

செல்வி எதையும் தைரியமாக எதிர் கொள்பவர் மிகுந்த அன்பானவள் கொஞ்சம் முற்போக்கு சிந்தனை உள்ளவள் உடையவள்.

அன்னாளில் முற்போக்கு சிந்தனை என்பதே அரிதான அபத்தமான ஒன்றாக கருதப்பட்டது.

பார்வதி மென்மையான அன்பான பெண் எதையும் செய்வதற்கு முதலில் தயங்குபவள் தான் ஆனால் காரியத்தில் கெட்டிக்காரி பெண்ணவள்.

இருவரின் கண்களிலும் சோகம், கவலை கப்பி இருந்தது.

வேறென்ன பிரிவின் சோகம் தான் அது தந்த ஆற்றாமையில் கிட்டத்தட்ட அழ தொடங்கிவிட்டாள் பார்வதி.

தோழிகள் இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்தனர்.

"டி இனிமே நாம ரெண்டு பேரும் பாத்துக்க முடியாதா" என்று சோகமாக வினவினாள்.

"முதல்ல இப்படி சோகமாக பேசுவதை நிருத்து, ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை"

"இல்லடி எங்க வீட்டில இப்பவே எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க"

"மாப்பிள்ளை பார்க்க தானே செய்றாங்க ஒன்னும் கல்யாணம் பண்ணி கொடுத்துடலயே".

"எங்க வழக்கத்தில் பொண்ணும் மாப்பிளையும் பார்த்துக்க மாட்டோம். பொருத்தம் எல்லாம் சரி பார்த்துட்டு கல்யாணம் பண்றது தான், மனவறையில தான் முதலில் பார்ப்போம், அதனால இந்த மாப்பிள்ளை முடிவான அடுத்து கல்யாணம் தான்" என்று சோகமே உருவாக சொன்னாள் பார்வதி.

அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தவள், "எங்க வீட்ல எல்லாம் பொண்ணு பார்த்து பேசி முடிவாகி அதுக்கப்புறம் பரிசம் போட்டு அப்புறம் தான் கல்யாணம்", என்று தங்கள் வழமுறையை சொன்னாள் செல்வி.

"அப்போ இந்த இடத்துல, இப்போ நாம பிரிஞ்சு தான் ஆகனுமா அவ்வளவுதானா என்னால தாங்க முடியலடி" என்ற அவளது கண்கள் நீரை சொரிந்தது.

அவளது சோகத்தை தாங்கமாட்டாமல் சட்டென அணைத்துக்கொண்டாள் செல்வி.

"இங்கே பாரேன் நம்ம ரெண்டு பேரும் எங்கே யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி, என் வீட்டுல எந்த விசேஷமானாலும் நீ இல்லாமல் இருக்காது. உன் வீட்ல எந்த விசேஷம்னாலும் நான் நான் இல்லாம இருக்கக் கூடாது சரியா, தபால் இருக்கு நம்ம ரெண்டு பேரும் அது வழியா பேசிக்குவோம். நீ எப்ப ஊருக்கு வந்தாலும் லெட்டர் போடு. நான் எப்ப ஊருக்கு வந்தாலும் லெட்டர் போடுறன். உங்க ஊருக்கு நான் வருவேன் எங்க ஊருக்கு நீ வரணும் சரியா, யாருக்கு முதலில் கல்யாணம் ஆகுதோ அவங்க பையனும், அடுத்து கல்யாணம் பன்னறவங்க பெண்ணும் பெத்துக்கலாம் நம்ம ரெண்டு பேரும் சம்பந்திங்க ஆகலாம், அப்போ நம்ம ரெண்டு பேரும் எப்போதுமே ஒன்னா இருக்கலாமே". என்று ஆலோசனை சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அவள் கண்கள் மின்ன "டி இது ரொம்ப அருமையான யோசனை இது நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். ஆனால் நடைமுறையில் நடக்கணுமே" என்று இன்னமும் இன்னமும் வருந்தினாள் பெண்.

"எல்லாம் நடக்கும் நாம நம்ம கல்யாணம் பண்ணிக்கிக்க போறவங்க கிட்ட கல்யாணத்துக்கப்புறம் சொல்லலாம் இது கூட செய்ய மாட்டார்களா என்ன" என்று வினவினாள்.

"ஆமாமில்ல நாம கண்டிப்பா இதை பேசணும் நம்ம கல்யாணம் பண்ணிக்க போறவங்ககிட்ட"என்று பெரிதாக திட்டம்போட்டார்கள், அந்த தோழிகள்.
தோழிகள் இருவரும் வெள்ளந்தியாக பேசிக்கொண்டிருந்தனர் அவர்களது பேச்சை கேட்ட அந்தக் கொன்றை மரங்களும் பூக்களை அவர்கள்மீது சொரிந்தது.

அன்றாடம் அவர்களது நட்பை அந்த மரமும் பார்த்து வந்தது அல்லவா.

அந்த மரத்திற்கு மட்டும் சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் அது கண்டிப்பாக யோசித்து இருக்கும் இதே மாதிரி எத்தனையோ பேர் இங்கே வந்து இப்படி பேசியிருக்காங்க.

ஆம் கல்லூரிக் மரத்தடி பேச்சுகள் என்றுமே நீங்காத நினைவுச்சின்னங்கள் தான்.

இப்படித் திட்டம் போட்டு
பேசிக்கொண்டிருக்கும் தோழிகளின் பேச்சைக் கேட்ட, சற்று தள்ளி இருந்த அந்த அரச மரத்தடி பிள்ளையார் மௌனமாக தனக்குள்ளே சிரித்து கொண்டார்.

உங்களுக்கு வேறு திட்டம் நான் வைத்திருக்கிறேன் என்பது அந்த புன்னகைக்கு அர்த்தமாக இருக்குமோ.
யாமறியோம் பராபரமே...

பாடல் இதோ:-

எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ

எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ

இந்த நாளை வந்த நாளில்
மறந்து போவோமோ

இல்லம் கண்டு பள்ளி கொண்டு
மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்...
 
Last edited:
அத்தியாயம் 12:-

பார்வதி அன்று சொன்னது போல அவளுக்கு ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை முடிவாக திருமணம் விரைவில் நடத்த பெரியவர்களால் முடிவுசெய்யப்பட்டது.

செல்வியோ தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்றும் ஓராண்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி இருந்தாள்.

இருவரின் பாதையும் தனித்தனியானது.

பார்வதி திருமணம் முடிந்திருந்தது. தமிழ்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டாள்.

செல்வியும் திருமணத்திற்கு வந்து இருந்தாள்.

அவளும் வேலைக்கு செல்வது என்றானது.

தமிழ்மணி நல்லவர், நன்றாக உழைக்க தெரிந்த மனிதர்.சொந்தமாக வியாபாரம் செய்பவர்.

செல்வி தனது வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம் பெற்று வேறு ஊருக்கு பயணமானாள்.

ஊர்மாற்றம், இடமாற்றம் மற்றும் காலமாற்றம் முகவரி தொலைந்தது தோழிகள் இருவருக்கும்.

இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தனர்.

அந்நாளில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பது வந்திருக்கவில்லை.

தபால் வழி செய்தி அனுப்புதல் தான் பெரும்பான்மையை.

தமிழ்மணி பார்வதி தம்பதியினருக்கு மீனாள் என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில் செல்விக்கும் திருமணம் முடிந்தது.

மீனாள் அமைதியான, அழகான பெண்ணாக, சற்று பிடிவாத குணமுள்ள பெண்ணாகவே வளர்ந்தாள்.

அதற்கு காரணம் ஒற்றை பெண்ணாக பிறந்ததே.

எத்தனையோ கோவில்கள் ஏறி இறங்கியும் தமிழ்மணி பார்வதி தம்பதிகளுக்கு அடுத்த குழந்தை என்பதே இல்லாமல் போனது.

ஆகையால் மீனாவை கண்ணின் மணியாக போற்றி பாதுகாத்து வந்தனர்.

கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து பழக்கியும் வைத்திருந்தனர் பெற்றோர் இருவரும்.

இதனால் பின்னாளில் பெரிய அனர்த்தம் நிகழப்போவதை அறிந்திருந்தால், கொஞ்சம் உலக நடப்பும் சொல்லி கொடுத்து மகளை வளர்த்து இருப்பார்களோ என்னவோ.

மீனாள் அன்றுதான் கல்லூரிக்கு முதன் முதலாக செல்லப்போகிறாள்.

கல்லூரி வாழ்வு அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

தானுண்டு தனது பாடிப்பு உண்டு என்று இருந்தாள் பெண்ணவள்.

தனது தந்தையின் எண்ணம்போல் அவருக்குப் பிறகு தான் தான் அவரது தொழிலை எடுத்து நடத்த வேண்டும் என்பதை மனதில் இருத்தி நன்றாகவே படித்தாள் மீனாள்.

மீனாளின் அமைதியான குணமும் அழகும் படிப்பும் முக்கியமாக வசதியும் அங்கிருந்த ஒருவனின் கண்ணில் விழுந்தது.

அவளை ஒரு தலையாக விரும்பினான் அவன்.

ஆனால் மீனாள் அப்படி தான் ஒருவனால் விரும்பப்படுகிறோம் என்பதே தெரியாது இருந்தாள்.

அவனுக்கு மீனாவை பற்றி ஆதி அந்தம் தெரியவந்தது, பின்னே காதல் என்றால் சும்மாவா ஒரு பெண்ணை பற்றி அனைத்தயும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள் அல்லவா.

அதையேதான் அவனும் செய்திருந்தான். ஆனால் அவனது நோக்கம் என்ன என்பது அவனுக்கே வெளிச்சம்.

கல்லூரியில் இறுதி ஆண்டும் வந்தது.

அன்று ஒருநாள் நூலகத்தில் நூல் ஒன்றை எடுத்து திரும்புகையில், நேரம் சற்று அதிகமாக, இருள் கவ்வியது.

அவளது தந்தையும் வியாபார விஷயமாக வெளியூர் சென்று இருந்தார். இப்படி சென்றால் திரும்பிவர கண்டிப்பாக ஒரு வாரம் ஆகும்.

அந்நாட்களிலெல்லாம் தனியாகத்தான் கல்லூரிக்கு சென்று வருவாள் மீனா.

அன்றும் அவள் தனியாகவே செல்லவேண்டியிருந்தது.
கல்லூரி வளாகத்தை கடந்து, பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் நான்கைந்து ஆட்களால் சூழப்பட்டாள் பெண்.

மென்மையான குணவதியான அவளுக்கு அது போன்ற சூழலை கையாளத் தெரியவில்லை.

அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது. ஓடிவிடலாம் என்று முடிவெடுக்கையில் அவர்களில் ஒருவன் அவளது கையை பிடித்து இழுத்தான்.

அதில் கையில் வைத்திருந்த புத்தகம் நழுவி விழுந்தது.

அந்த சமயத்தில்தான் ஆபத்பாந்தவனாக வந்தான் அவன்.
நாயகன் போல அவளை, அவளது கையறுநிலையில் கை கொடுத்து காப்பாற்றினான்.

"நீங்க" என்று தயங்கியபடி கேட்டாள் மீனா.

"இராமநாதன் இதே கல்லூரி தான்" சொன்னான் ராமநாதன்.

"துறை" மீண்டும் கேட்டாள் அவள்.

"ஒரே துறை ஒரே வகுப்பு" என்றான் சிரிப்புடன்.

ஆச்சரியமாக பார்த்தவள் "எனக்கு தெரியவில்லை சாரி" என்றாள் மீனா மன்னிப்புக் கோரும் குரலில்.

"அது சரி உனக்கு என்ன மட்டும் இல்லை யாரையும் அவ்வளவா தெரியாது தானே பிறகென்ன வா உன்ன உன் வீட்டுல விட்டு விடுகிறேன்" என்றான்.

முதலில் தயங்கியவள் பின் ஆபத்துக்கு பாவமில்லை என்று அவனுடன் சென்றாள்.

வீட்டிற்கு சற்று அருகில் இறக்கி விட்டு, அவன் கைகுட்டை கொடுத்து முகம் துடைக்க சொன்னான்.

அவளுக்கு ஆறுதல் மொழி கூறி அனுப்பினான்.

அவனது செயலால் பெண்ணின் மனதில் இடம் பிடித்து விட்டதை அவன் அறியவில்லை.

பேதையவளை பெருந்துயரில் மீட்டவனே பின்னாளில் மீளாத்துயரில் ஆழ்த்த போவதை அறியவில்லை.

மேலும் அவன் தனது முகவரியை கேட்காமலேயே அவளை வீட்டில் இறக்கி விட்டதைக் கணக்கில் கொள்ளவில்லை காரிகை.

ஆம் ராமநாதன் தான் அவளை ஆதியந்தமாய் அறிந்து வைத்திருந்த ஒருதலை காதலன்.

அந்த நிகழ்விற்கு பிறகு கல்லூரியில் பார்க்கும் பொழுதெல்லாம் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் மீனா.

சில நாட்களில் இருவரும் பேசக்கூட செய்தனர்.

மெல்ல மெல்ல இருவரிடமும் ஒருவித நட்பு துளிர்த்து, காதல் மலர்ந்தது.

நல்லதொரு நாளில் உள்ளத்தைத் திறந்து காதலை பகிர்ந்தனர்.

காதல் கண்களை மறைத்தது,
அறிவை மழுங்கடிக்க செய்தது.

இல்லை எனில் தனது தந்தை அமர்ந்திருந்த அதே உணவகத்தில் அவரை கடந்து அவனுடன் சென்றிருப்பாளா என்ன.

ஆம் அன்று வீட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள் மீனா.

எதையுமே மறுக்காத பெற்றோர்கள் காதலையும் மறுக்கப் போவதில்லை என்று நினைத்தவளை, அவர்களது மறுப்பு பலமாக தாக்கியது.

எவ்வளவு சொல்லியும் மறுத்துவர்களிடம் என்ன செய்ய என்று தெரியாமல், நேரே ராமநாதனிடம் போய் நின்றாள்.

அவனோ,"உங்க வீட்ல யார சொல்கிறார்களோ அவரையே கல்யாணம் பண்ணிக்கோ, சந்தோஷமா இரு, நான் தான் இனி உயிரோடு இருப்பேன்னானு தெரியல" என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றான்.

அது சரியாக அவளை சென்று தாக்கியது.

வீட்டிற்குச் சென்றாள் மீனா.

அமைதியான பெண் அதிரடி அதிரடியாக முடிவெடுத்து தூக்கில் தொங்கினாள்.

பின் கட்டிலிருந்து வந்த பார்வதி அதனை கண்டு பதறி கதறினாள்.

தமிழ்மணி விரைவாக செயல்பட்டு கதவை உடைத்து மகளை மீட்டார்.

வாழ்வா சாவா போராட்டம்...

பாடல் இதோ:-

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்

பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்

காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்

உன்னைத் தேடியே இனி எனது பயணமோ

எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ


ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ...
 
Last edited:
அத்தியாயம் 13:-

அந்த மருத்துவமனையில் கவலை அப்பிய முகத்துடன் அமர்ந்திருந்தனர் பார்வதி மற்றும் தமிழ்மணி.

உள்ளே தங்களது செல்ல மகளுக்கு மருத்துவம் நடந்து கொண்டிருந்தது.

அவள் இப்படி செய்வாள் என்று கனவிலும் அவர்கள் நினைத்துப் பார்த்ததில்லை.

என்ன குறை அவளுக்கு, அவளது விருப்பப்படி அனைத்தும் அவளது விரல் நுனியில் வந்து சேர்கையில் எதற்காக இப்படி செய்தாள் என்று யோசித்தனர்.

காதலுக்காகவா இப்படி பெற்றோர்களை விட்டு செல்ல வேண்டுமென்று துணிந்தாள்.

மனம் கசந்து போனது பார்வதிக்கு.
ஆயினும் மகளின் நிலை கவலைக்குரியது.

இருபத்தி நான்கு மணி நேரம் அவர்களை தவிக்கவிட்டு மெல்ல கண் திறந்தாள் மீனாள்.

கண்களை திறந்த மீனாள் தனது பெற்றோரைப் பார்த்து கண்ணீர் வடிக்கலானாள்.

அதைக் கண்ட பார்வதிக்கு கவலையுடன் கோபமும் வந்தது.

"எதுக்கு இப்போ அழுற அவனுக்காக தானே இப்படி பண்ண. தற்கொலை பண்ணி தொலச்ச உன்னோட காதலுக்கு நாங்க சம்மதிக்கிறோம்" என்று சீறினார்.

அது மேலும் அழுகை வந்தது அவளுக்கு.

"இல்லமா அவர் ரொம்ப நல்லவர், நீங்க வேணாம்னு அதான் யோசிச்சு இந்த மாதிரி" என்று தத்தி தத்தி பேசினாள்.

அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தார் தமிழ்மணி.

"எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம், இங்க எதுவும் வேண்டாம்" சொல்லிவிட்டு மருத்துவரைப் பார்த்து தனது மகளின் உடல்நலத்தை பற்றி கேட்க சென்றார்.

மேலும் இரு நாட்கள் மருத்துவமனையில் கழித்து விட்டு வீடு திரும்பினர் தமிழ்மணி குடும்பத்தினர்.

தமிழ் மணியால் இன்னும் தனது மகள் இப்படி செய்ததை ஜீரணிக்க முடியாமல் போனது.

அவளது அச்செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை தமிழ் மணிக்கு.

ராமநாதனை சந்திக்க முடிவு செய்தார். அவருக்கு ராமநாதனின் மேல் அப்படி ஒன்றும் நம்பிக்கை பெரிதாக வந்துவிடவில்லை.

ஒரு திருப்தியின்மையே இருந்து அவன் மேல்.

தனது வாழ்நாளில் எத்தனை மனிதர்களை சந்தித்து இருப்பார். அவரது கணிப்பு தவறாக வில்லை.

ஆயினும் மகளின் விருப்பத்திற்கு உடன்பட எண்ணினார்.

ஆம் மீனாள் மற்றும் ராமநாதனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

அதன்படி இராமநாதனின் பெற்றோரை வந்து பேச சொன்னார்.

ராமநாதனுக்கு அன்னை மட்டுமே, தந்தை சிறு வயதிலேயே காலமானார்.

ராமநாதனின் அன்னை கோகிலம் பெண் பார்க்க மீனாளின் வீட்டிற்கு வந்தார்.

அவருக்கு மீனாவை பிடித்துப் போய்விட்டது. அது மட்டுமல்ல அவளது செல்வசெழிப்பும் தான்.

இனி மகனது வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கை வந்தது கோகிலத்திற்கு.

தமிழ்மணி இந்த திருமணத்திற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைத்தார்.

அது அவர்களது இறுதி ஆண்டின் இறுதி தேர்வு முடித்து, கல்லூரி பட்டப்படிப்பை முடித்து விடவேண்டும் என்பதே.

அது முடிந்த பிறகுதான் திருமணம் என்றும் கூறினார்.

அதன்படி காதலர்கள் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பையும் நன்றாகவே முடித்தனர்.

வழக்கம் போல் மீனாள் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று சிறந்த மாணவியாக வந்தாள்.

இதில் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறாள்.

ஆனால் காதலில், அவளது வாழ்வில் தான் எடுத்த முடிவு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

நாட்கள் விரைந்து ஓடி அவர்களது திருமண நாளும் வந்தது.

மாப்பிள்ளையாக தன்னை கர்வமாக உணர்ந்தான் ராமநாதன்.

பின்னே வசதியான வீட்டின் மருமகனாக போகிறான்.

அது அவனது குறிக்கோள் அல்லவா. அதை வென்றுவிட்ட பிறகு கர்வம் கொள்ளாவிடில் எப்படி.

கம்பீரமாகவே மணமேடையில் அமர்ந்திருந்தான் ராமநாதன்.

அவனருகில் சர்வஅலங்காரத்துடன் தேவதையாக வீற்றிருந்தாள் மீனாள்.

மந்திரங்கள் ஓத சொந்த பந்தங்கள் புடைசூழ மூன்று முடிச்சிட்டான் ராமநாதன்.

இரு பெற்றோர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினார் மணமக்கள்.

மனநிறைவுடன் கண்ணீர் மல்க ஆசிர்வாதம் செய்தனர் தமிழ்மணி மற்றும் பார்வதி.

அவர்களுக்கு திருமணம் நடந்ததில் சந்தோஷமே.

தங்கள் தனது மகள் நீண்ட ஆயுளோடும் நிறை செல்வத்தோடும் சௌபாக்கியவதியாக வாழ வேண்டும் என்று மனதார ஆசீர்வதித்தனர்.

கோகிலமும் தனது மகன் வாழ்வில் இனி ஏற்றமே எந்நாளும் என்று ஆசீர்வதித்தார்.

காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்கவில்லை மாலை மயங்கி இருள் சூழ்ந்தது.

அன்றைய இரவுக்காக அந்த அறை பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டது. பூக்கள், ஊதுபத்தி, பால், பழம் என்று அந்த அறையே நிறைந்திருந்தது.

தனது காதல் கைகூடிய எல்லையில்லா ஆனந்தத்தில் வான்மதியாய் மலர்ந்தாள்.

தன்னவன் இன்று தன்னை ஆட்கொள்ள போகிறான் என்ற எண்ணமே அவளுக்கு கிறக்கத்தை கொடுத்தது.

கால்கள் பின்ன மெல்ல அடுத்த அடி எடுத்து வைத்து பெண்கள் புடைசூழ அந்த அறைக்குள் பிரவேசித்தாள்.

அங்கிருந்த பூக்கள் அலங்காரத்தை பார்த்து இன்னுமே நாணி உடல் சிலிர்க்க ஜன்னலின் அருகில் சென்று நின்றாள்.

ஜன்னல் வழியே தெரிந்த நிலவை பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டாள்.

அதே நேரம் அவனது கண்களில் எதையோ வென்ற திருப்தி மட்டுமே இருந்தது.

காதலும் இல்லை ஆசையும் இல்லை. தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவன், அவ்வறையை நோக்கி நடந்தான்.

கூடத்தைக் கடந்து அந்த அறையை நோக்கி நடக்கும் பொழுது, இரு பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

அதில் தனது பெயர் அடிபடுவது கேட்டவன் சற்றே தயங்கி நின்று உற்றுக் கவனித்தான்.

அவர்கள் சொன்ன விஷயத்தை கிரகித்தவன், புருவம் சுருக்கி லேசாக யோசித்து தனது திட்டத்தை மாற்றினான்.

இப்பொழுது இன்னுமே வண்மமாக சிரித்தபடி அந்த அறையை நோக்கி நடந்தான்.

இது போன்ற ஆயிரம் இரவுகளுக்கு சாட்சியாய் இருந்த நிலவும் இன்று நடக்கப் போகும் இந்த நிகழ்வுக்கு சாட்சியாக இருக்க வேண்டுமே என்று ஊமையாக அழுதது.

அந்த மேகத்தின் ஊடாக தன்னை மறைத்துக் கொண்டது. இனி நடக்கப் போகும் எதற்கும் தான் சாட்சி இல்லை என்று என்று எண்ணியதோ அந்த நிலா பெண்.

தன்னை நோக்கி வந்தவனை ஒருவித பரவசத்துடன் கண்களில் எல்லையில்லா காதலுடன் பார்த்திருந்தால் மீனாள்.

அவனருகில் நெருங்கி வரவும் தனது பார்வையில் நாணம் சுமந்தபடி இமை தாழ்த்தினாள் .

"ம்க்கூம்" என்று குரல் கொடுத்தபடி தனது வருகையை உணர்த்தினான்.

ஏறிட்டு பார்த்தவள் வெட்கம் கொண்டு கீழே குனிந்து பாதம் பணிந்தாள்.

அதனை கண்டவனின் முகம் திமிரும் கர்வமும் புன்னகைத்தது.

"என்னங்க" பாதம் பணிந்தவள், குரல் கொடுத்தாள்.

அவளை தோள் தொட்டு தூக்கினான்.
"வேற என்ன" என்று முகம் பார்த்து கேட்டான்.

புரியாமல் பார்த்தவளிடம் "வேற என்ன சொல்லி அனுப்பினார்கள் என்று கேட்டேன்" என்று சொன்னான்.

அவனது கேள்வியில் நாணத்துடன் பால் டம்ளரை கொடுத்தாள்.

வாங்கியவன் குடித்து விட்டு அவளை அணைத்தபடியே கட்டிலில் சரிந்தான்.

முடியா இரவோ எப்பொழுது விடியும் என்று எண்ணி எண்ணி கண்ணீர் சொரிந்தாள் பெண்ணவள்.

தனது காதல் கணவனுக்கு தன்னை அர்ப்பணிக்க நினைத்தவள், அர்ப்பணித்தவள் அவனது தொடுகை தாளமாட்டாது வெறுத்து இருந்தாள்.

அவளது உடலில் இருந்த காயங்களும் கீறல்களும் அவனது மிருக குணத்தை பறை சாற்றியது.

பூவையவளைப் பார்த்த பூக்களும் நீயும் எங்களை போல் கசக்கி முகரப்பட்டாயோ என்று கேட்பது போல் இருந்தது அவளுக்கு.

கண்ணீர் விடாமல் வந்தது.
இது இப்படித்தானோ என்று நினைத்தவள். இதுதான் தினம் தினம் நிகழுமோ என்றும் பதறினாள். தினமும் தான் இப்படி தான் சித்திரவதை போகிறோமோ என்று கூட நடுங்கினாள்.

பத்தொன்பதே நிரம்பிய பெண்ணவளேக்கு தாம்பத்தியம் பற்றிய அறிவு சிறிதும் இல்லாமல் இருந்தது.

அந்நாளில் அது பாவச் செயலாகவே கருதப்பட்டது.

பல இடங்களில் கணவனே ஆனாலும் தாம்பத்தியம் என்கிற போர்வையில் வன்புணர்வு தினம்தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது வன்புணர்வு என்ற அறிவு கூட இல்லாமல் பெண்கள், திருமண பந்தத்தில், இது தனது கடமைகளில் காதலில் சேரும் என்று எண்ணியிருந்தார்கள்.

இன்றும் இந்த நிலைப்பாடு பல வீடுகளில் பெண்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பிடிக்கிறதோ இல்லையோ கணவனின் தொடுகைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

ஆண்கள் தங்களது கலாச்சாரத்தையும் கட்டுப்பாடுகளையும் பெண்களின் உடலிலும் மனதிலும் நன்றாகவே புகுத்திருந்தனர்.

மீனா தனது கணவனை திரும்பி பார்த்தாள்.

சில நொடிகளுக்கு முன் தான் தன்னை விடுவித்து இருந்தான்.
ஆம் சிறையாக இருந்த அவனது கைகளில் இருந்து தான்.

கை சிறையில் இருந்து விடுபட்டு எழுந்தவள், அப்போது அறியவில்லை அவள் அடைபட்டு இருப்பது கருநாகங்கள் சூழ்ந்த பாதாளச் சிறை என்று.

அதனை அவள் உணரும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.

வாழ்க்கை வலிக்க வலிக்க பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவளது நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

பாடல் இதோ:-

ஒரு பார்வையிலே என்னை உறையவைத்தாய்

சிறு புன்னகயால் என்னை உருகவைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்

உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்

நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்

என்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ..
 
Last edited:
அத்தியாயம் 14:-

ராமநாதன் மீனாள் தம்பதிகளின் வாழ்க்கை அந்த புதிய வீட்டில் இனிதே தொடங்கியது.

வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது ராமநாதனுக்கு.

பெண் வீட்டு வரதட்சணையாக ஒரு வீடும் தொழில் அமைத்துக் கொள்ள பணமும் கொடுத்தால் யாருக்கு தான் வாழ்க்கை கசக்கும்.

ராமநாதனிடம் இருந்த ஒரு நல்லது என்றால், அது அவரது தொழில் திறமை தான்.

கோகிலம் அவர்களோடு தான் வாழ்ந்தார்.

ராமநாதனிற்கு தனது மாமனாரின் தொழில்களையும் தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பேராவல் இருந்தது.

அதனை மீனாவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைத்தான்.

ஆனால் தமிழ்மணி, அது தனது பேர குழந்தைக்கு சேரும் என்று தீர்க்கமாக அதே சமயத்தில் நாசுக்காகவும் சொல்லிவிட்டார்.

அந்த விஷயத்தில் ராமநாதனுக்கு பெருத்த ஏமாற்றமே.

ஏனெனில் பேர குழந்தையை பற்றிய அவரது நினைப்பை அவன்தான் பொய்யாக்கி கொண்டிருக்கிறானே.

கோகிலமிற்கு மருமகள் மீனாவின் மேல் கொள்ளைப் பிரியம்.

மீனாவும் அவரை நன்றாக கவனித்துக் கொண்டாள்.

அவருக்கு ஒரே ஒரு மனத்தாங்கல் இருந்தது. அது அவர்களது மழலைச் செல்வம் தான்.

வருடம் இரண்டு ஆயினும் எண்ணமோ குழந்தை என்ற ஒன்று அவர்களது வாழ்வில் இன்னும் இல்லையே.

மீனாவிற்கும் அந்த விஷயத்தில் பெரும் கவலையை.

எத்தனையோ கோயில்களும் மருத்துவரையும் சென்று பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

மீனாவிற்கு எந்த குறையும் இல்லை சீக்கிரமே குழந்தை பிறக்கும் என்றும் மருத்துவர்கள் ஒரே பதிலை சொல்லி வந்தார்கள்.

ஆம் உண்மையில் அவளுக்கு தான் எந்த பிரச்சனையும் இல்லையே.

ராமநாதன் அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் தானுண்டு தனது தொழில் உண்டு என்று இருந்தான்.

குழந்தை பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல் இருந்தால் ராமநாதன்.

ஆனால் மீனாவோ, தனது கணவன் தனக்காகவே சோகத்தை மறைத்து நடமாடுகிறான் என்று எண்ணினாள்.

ஆனால் அவள் அறியவில்லை அதுவும் அவனது திட்டம் தான் என்று.

நாட்கள் செல்ல செல்ல
கோகிலத்திற்கு மருமகளின் மேல் கோபமும் வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

காரணம் குழந்தை இல்லாததை சொந்தங்கள் பழித்துக் கூறினர்.

காய்க்காத மரம், பட்டுப் போன மரம் என்று தூற்றினார் மருமகளை.

அதில் மீனாள் வெகுவாக காயம்பட்டு போனாள்.

இப்படியான ஒரு நாளில், கோகிலத்தின் ஓரகத்தி அங்கு வந்து சென்றார்.

அவரது நக்கல் பேச்சால் பெரிதும் பாதிக்கப்பட்டாள் மீனா.

மேலும், கோகிலம் அதிகமாக வாட்டி எடுத்தார்.

இறுதியில் "நீ என் மகனோட வாழ்க்கையை அழிக்க வந்தவ, வம்சம் தழைக்க ஒரு பிள்ளை பெத்து தர துப்பில்ல. என் பிள்ளையையும் உன்னை எதுவும் சொல்லாமல் இருக்கிறான். உன்ன விட்டு வேற பொண்ணை கட்டி இருந்தால், இன்னேறம் ரெண்டு பிள்ளைங்கள பெற்றுக் கொடுத்து இருக்கும். நீ என்ன அவன் வாழ்க்கையை விட்டு போறியா என்ன. நல்லா பணத்தை வச்சு கட்டி போட்டு இருக்கீங்க அவனை" என்று சொல்லி ஒரு பெண்ணின் உயிர்ப்பை கொன்று விட்டார் அவர்.

மறைமுகமாக வரதட்சணை கேட்டு, இன்று அது தந்த வசதியில் வாழ்ந்து கொண்டு, அவள் பொறுப்பில்லாத ஒரு செயலுக்காக அவளை உயிரோடு வதைத்தார் கோகிலம்.

அவரது இந்தப் பேச்சில் அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

அது ராமநாதனை விட்டு விலக வேண்டும் என்பதே ஆகும்.

நல்லவேளை மீண்டும் தற்கொலை பற்றி சிந்திக்கக் கூடாது என்று பெற்றவர்கள் சத்தியம் வாங்கி இருந்தார்கள்.

பார்வதி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த கணவர் மற்றும் மகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

ஆம் மீனாள் தனது தாய் வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டது.

ராமநாதனை வேறு திருமணம் செய்து கொள்ள சொல்லிவிட்டு தான் வந்தாள்.

ராமநாதன் எப்பொழுதாவது வீட்டில் லேண்ட்லைன் போன் எடுத்து தொடர்பு கொள்பவன், அவளை சென்று பார்ப்பது என்பது அரிதானது.

காலுக்கு உதவாத செருப்பை கழட்டி விடு என்ற கொள்கையை பின்பற்றுகிறானோ என்னவோ, யாருக்குத் தெரியும்.

கோகிலம் மகனிற்கு வேறு பெண்ணை மணம் முடிக்க முடிவு எடுத்திருந்தார்.

இப்படியான ஒரு நாளில் தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

அவள் ராகசுதா அன்று வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்று இருந்தாள்.

கோக்கிலமும் தனது மனக்குமுறலை கடவுளிடம் முறையிட கோவிலுக்கு வந்திருந்தார்.

சாமியை வணங்கி விட்டு பிரகாரத்தில் அமர்ந்திருந்தார் கோகிலம்.

எதேச்சையாக கோக்கிலத்தை பார்த்த ராகசுதா, அவரிடம் சென்று ராமநாதனை பற்றி விசாரித்தாள்.

கோகிலமும் பதில் சொல்லியவர், மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

பேச்சு கொடுத்ததில் ராகசுதா, ஒருதலையாக ராமநாதனை விரும்பியது தெரியவந்தது.

இப்பொழுதும் அவனை மறக்க முடியாமல், வேறு ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் இருப்பது தெரிந்தது.

சட்டென்று கோகிலத்திற்கு ஒரு எண்ணம் உதித்தது.

ஆம் அடுத்த சில நாட்களில் ராமநாதனை வெகுவாக சம்மதிக்க வைத்து, ராகசுதாவை இரண்டாம் மருமகளாக கொண்டுவந்தார் கோகிலம்.

ராகசுதாவும் தன் தம்பியுடன் அந்த வீட்டிற்கு குடிபுகுந்தாள்.

திருமணத்திற்கு மீனாவும் வந்திருந்தாள்.

அவளது சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்மணி.

அவரது செல்ல மகளின் மணவாழ்வு இப்படியானதில் மிகுந்த கவலை அவரை ஆட்கொண்டது.

அதன் விளைவு உடல் நலம் சீர் கேட்டது, அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

தான் இல்லாவிடிலும் தனது தொழில், சொத்து மீனாவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணி அவளுக்கு பயிற்சி வழங்கினார்.

அனைத்தையும் மீனா மற்றும் பார்வதியின் பெயரில் எழுதி வைத்தார்.

கிட்டத்தட்ட பத்து மாதங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது மீனாவுக்கு.

மென்மையான பெண் தைரியமும் தன்னம்பிக்கையுமாக மிளிர்ந்தாள்.

இப்பொழுது ராமநாதனின் திருமணம் கூட பாதிக்கவில்லை அவளுக்கு.
அனைத்தையும் ஏற்க பழகினாள்.

நிறைமாதமாக இருக்கும் ராதாவின் வளைகாப்புக்கு கூட சென்று வந்தாள் என்று தான் கூற வேண்டும்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு நாள் தமிழ்மணி தூக்கத்திலேயே உயிரை விட்டிருந்தார்.

இடி விழுந்தது போல் ஆனது பார்வதிக்கும் மீனாவுக்கும்.

ராமநாதன் தான் வந்து இறுதி காரியம் செய்தான்.

கோகிலம் சிறிது நாள் ஆறுதலாக தங்கி இருந்தார்.

பதினாறாம் நாள் காரியத்தில் சொத்துகள் விவரம் வாசிக்கப்பட்டது.

ராமநாதன் இருக்கும் வீடு மற்றும் அவனது தனிப்பட்ட தொழில் மட்டுமே அவனுக்கு.

மீதமுள்ள அனைத்தும், தமிழ்மணியின் தொழில், நிலபுலன்கள், வீடு, கடைகள் என அனைத்தும் மீனா மற்றும் பார்வதிக்கு உரிமைபட்டது.

தமிழ்மணிக்கு படையலிட்டு சாமி கும்பிட்டனர்.

கிட்டதட்ட அனைத்து சொந்தங்களும் கிளம்பிய தருவாயில், மீனாவிடம் சொல்லிக் கொள்ள வந்தான் ராமநாதன்.

அப்பொழுதுதான் குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டு இருந்தாள் பெண்ணவள்.

அவன் சட்டென கதவை திறந்து வருவான் என்று எதிர்பாராதவள் ஆடைகளை நழுவ விட்டு இருந்தாள்.

அவளது மேனி அழகை பார்வையில் பருகியவன் தாபமாய் பார்த்தான்.

அவளது மறுப்பையும் மீறி அனைத்தும் நிகழ்ந்து முடிந்தது.

தனது தேவையை தீர்த்துக் கொண்டவன் அதனால் விளையப் போவதை அறியவில்லை.

திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

இவன் விதைத்தது திணையா வினையா காலம் தான் சொல்லும்.

பாடல் இதோ...

என் ஆசை உனக்குள்ளே இருக்காதா விட்டுவிட்டு இருதயம் துடிக்காதா
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காற்றை என் மூச்சு தேடாதா

என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காதா
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை
உன் நெஞ்சில் கேட்காதா

உன் பேரே காதல் தானா

தில்லானா போட வந்த மானா
 
Last edited:
அத்தியாயம் 15:-

தமிழ்மணியின் இல்லாமையை அந்த வீடு ஏற்றுக் கொள்ளத் துவங்கியது.

தனது அன்னை பார்வதியை நன்றாக கவனித்துக்கொண்டாள்.

தொழிலை திறம்பட நடத்தினாள்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிந்திருந்தது தமிழ்மணி இறந்து.

அன்றைய விடியல் மீனாவுக்கு சோம்பலை தந்தது.

மெல்ல விழித்தவள் பாரமாய் சுழன்ற தலையை உலுக்கி சமன் செய்து, குளித்து தயாராகி வந்தாள்.

அலுவலகம் செல்லும் பொருட்டு, உணவை வாயில் வைத்தவளுக்கு ஓங்கரித்து வந்தது.

அனைத்தையும் வாந்தி எடுத்தவள் தலையை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

மகளின் நிலையை கண்டு அவளது கைகளைப் பிடித்து பார்த்தார் இரட்டை நாடி ஓடியது.

மகளைப் பார்த்து "கடைசியா எப்ப தலைக்கு ஊற்றின" என்று கேட்டார்.

இது என்ன சம்பந்தம் இல்லாமல் யோசித்த மீனா முதலில் புரியாமல் இருந்து, பின்பு புரிந்ததும் முகம் வெளிறினாள்.

"அம்மா அன்னைக்கு அப்பாவுக்கு சாமி கும்பிடும் போது அவர் அது வந்து" என்று திணறியபடியே கூறினாள்.

பார்வதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆயினும் புன்னகைத்தபடி "உங்க அப்பா ஆசைப்படி உனக்கு ஒரு குழந்தை வரப்போகுது உன்னோட வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வரப்போகுது எனக்கு சந்தோஷம்தான்" என்றார்.

அன்று ராமநாதன் விதைத்தது வேர்விட்டு வளர்கிறது சூல்கொண்ட அவளது வயிற்றில்.

இதுதான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது.

கோகிலம் விஷயமறிந்த மிகவும் சந்தோஷப்பட்டார்.

இது முன்னமே நடந்து இருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொண்டார்.

ராகாவின் குணமும் அவளது தம்பி நடவடிக்கையும் சுத்தமாக பிடிக்கவில்லை அவருக்கு.

மீனாவை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

தொழில் விஷயமாக வெளியூர் சென்று வந்திருந்த, ராமநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராகசுதாவிற்கும் ராமநாதனுக்கும் இதனால் பெரிய சண்டையே வந்தது.

பின்னே காதல் மனைவி தான் இருக்கையில் வேறு ஒருத்தி கர்ப்பமானால் யார் தான் பொறுப்பார்.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவன், தனிமையில் மீனாவை சந்தித்தான்.

"மீனா இந்த குழந்தை இப்ப அவசியமா" எடுத்த எடுப்பில் கேள்வி வந்து விழுந்தது.

அதிலே சுதாரித்தவள் "ஏன்" ஒற்றை வார்த்தையில் பதில் கேள்வி கேட்டாள்.

"அது தான் ஏற்கனவே எனக்கு மகன் இருக்கிறானே" தெனாவெட்டாக பதில் வந்தது.

"அது உங்களுக்கும் ராகா விற்கும் பிறந்த குழந்தை இது என்னோட குழந்தை. என்னோட வாழ்க்கையோட பிடிப்பு" அழுத்தமாகவே உரைத்தாள்.

அவளது நிமிர்வு அவனுக்கு எரிச்சலூட்டியது.

"என்ன உன் குழந்தை, இல்ல தெரியாம தான் கேக்குறேன், நான் நினைச்சிருந்தா எப்போதோ. உனக்கு குழந்தை பிறந்திருக்கும் இத்தனை வருஷம் காத்திருக்கணும் அவசியமில்லை"

அவனது கூற்றில் புரியாமல் விழித்தாள்.

அவளை நக்கலாக பார்த்தவன், "என்ன புரியலையா" என்று கேட்டான்.

"நீ எங்களுக்கு பகடைக்காய் அதாவது இந்த வசதியான வாழ்க்கை வாழ பகடை நீ எங்களுக்குன்னா அது நானும் ராகசுதாவும்" என்றான்.

இப்போது முற்றிலுமாக அதிர்ந்தவள் தொப்பென கட்டிலில் அமர்ந்து "ஏன் எப்படி எதற்கு" என்றாள்வார்த்தை வரவில்லை பெண்வளுக்கு.

அவளைக் கூர்ந்து பார்த்தவன் நன்றாக சாய்ந்து அமர்ந்து "நானும் ராகசுதாவும் ஒருவருக்கு ஒருவர் விரும்புறோம். அவளை வசதியாக வாழ வைக்க எனக்கு ஆசை. அப்பதான் நீ எங்கள் கண்ணில் பட்ட. உன்ன பத்தி அத்தனையும் ராகாதான் சேகரிச்சு சொன்னா. நாங்க உன்னை ஃபாலோ பண்ணுணோம். ராகா நம்ம கல்லூரி தான். அன்றைக்கு நாலு பேரு உன்னிடம் வம்பு பண்ணாங்க பாரு, அது கூட எங்க ஏற்பாடுதான். ராகா தம்பிக்கு தெரிந்த ஆட்கள் தான். உன்னை காப்பாத்துற மாதிரி நடிச்சேன். நீயும் எங்க வலையில் விழுந்த. என்ன காதலிச்ச. நம்ம கல்யாணம் நடந்துச்சு. உன்னை தொட கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா அன்னைக்கு ரெண்டு பொண்ணுங்க விடிஞ்சதும் என்ன நடந்துச்சுன்னு கேட்கணும்னு பேசிக்கிட்டாங்க. அதனாலதான் உன்னை தொடுற மாதிரி ஆச்சு எனக்கு அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல. உன் வயித்துல குழந்தை வந்துடக் கூடாது அது மட்டும் தான் எனக்கு. என் ராகாவுக்கு துரோகம் பண்ண மாட்டேன். அதனால தான் சொல்றேன் இப்பவும் இந்த குழந்தை வேண்டாம்".

அனைத்தையும் சொல்லி முடித்தவன் அமைதியாக அவளைப் பார்த்தான்.

வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி அவள் கண்கள் கண்ணீர் மழை பொழிந்தது.

ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

ஒரு இடத்தில் கூட அவன் அவளை விரும்புவதாக கூற வில்லை ஏன் இப்போதும் கூட.

தன்னை தீண்டியது அவனுக்கு ஒரு செயல் அவ்வளவே அதில் காதல் இல்லவே இல்லை.

அவன் அதிகமாக அவளிடம் வந்தது இல்லை.

அப்படி வரும் நாட்களில் கூட ஏதாவது மாத்திரை கொடுத்து விழுந்த சொல்வான். கருத்தடை மாத்திரைகள் தான் அவை.

எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறோம்.

அவ்வளவு எளிதாக இதனை கடந்து விட முடியும் என்று தோன்றவில்லை மீனாவுக்கு.

வழிந்த கண்ணீரை துடைக்க கூட தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளை எப்படியாவது கருக்கலைப்பிற்கு அழைத்துச் செல்வது என்ற யோசனையோடு பார்த்திருந்தான் ராமநாதன்.

முதலில் சுதாரித்து பார்வதி தான். ஆம் அனைத்தையும் கேட்டிருந்தார்.
கோவிலுக்கு சென்றவர் சற்று முன்தான் வீடு திரும்பியிருந்தார்.

மீனாவை காண வந்தவர் அனைத்தையும் கேட்டுவிட்டார்.

மீனா என்று அழைத்தபடி அறைக்குள் சென்றார்.

சட்டென தன்னை மீட்டு அவள் கண்ணீரைத் துடைத்தாள்.

"இந்த இஞ்சி டீ இதமா இருக்கும் குடி" என்ற அவரது பார்வை ராமநாதனை துளைத்தது.

ராமநாதன் ஏதோ வேலை இருப்பது போல் நழுவினான்.

"என்னமா ரொம்ப அசதியா தெரியுற" என்றபடி மகளை மடி தாங்கினார் பார்வதி.

அன்னையின் மடியில் படுத்து அமைதியாக கண்ணீர் விட்டாள்.

அன்னையின் மடி ஆயிரம் துன்பங்களையும் ஆற்றும் வல்லமை கொண்டது.

பார்வதி மௌனமாக தலையை வருடியவர், "இத்தனை நாள் இல்லாத அழுகை என்னை ஏன் இன்னிக்கி என் பொண்ணு தெளிவா இருக்கணும் தைரியமா இருக்கணும் உன்னோட அப்பாவுக்கு மகள் அவரை நெனச்சு பாரு உன்னோட வாழ்க்கைக்கு நீ உன் குழந்தைதான்" எதுவும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் மகளை தேற்றினார்.

தனது தோழி செல்வியை நினைத்தவர் அவரைப்பற்றி மகளிடம் கதைகளாக கூறி தைரியப் படுத்தினார்.

மெல்ல மகள் உறங்கவும் தலையணையை வைத்து வெளியில் வந்தவர் கணவனின் புகைப்படத்தின் அருகில் நின்று ஓவென கதறி அழுதார்.

காலச்சக்கரம் சுழன்றது.

அதில் தாயும் மகளும் தங்களது கவலைகள் மறந்து விட்டார்களா என்றால் தெரியவில்லை.

ஆனால் மறைத்து வாழ பழகிக் கொண்டனர் ஒருவருக்கொருவர் தேற்றிக் கொண்டனர்
தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை.

மீனா நாள் தவறாமல் அலுவலகம் சென்று வந்தாள்.

தந்தையின் படத்தின் முன் நின்று தனக்கு தானே தைரியம் சொல்லி கொள்வாள்.

தொழிலை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்.

அதைவிட தனது உடலை உடல் நலத்தை பேணிணாள்.

ராமநாதன் என்னத்தை அழித்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வைராக்கியம் வந்தது.

ஐந்து மாத கருவை சுமந்திருந்த அவளது வயிறு நன்றாகவே தெரிந்தது.

பார்வதியின் கை பக்குவத்தில் சாப்பாடு நன்றாகவே சாப்பிட்டதால் குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்தது.

மீனா தனது வாழ்வில் இனி ராமநாதன் என்ற அத்தியாயமே இருக்கக் கூடாது என்று முடிவு செய்தவள்.

விவாகரத்திற்கு ஏற்பாடு செய்தாள் பார்வதிக்கும் அதில் சம்மதம் தான்.

ஏமாற்றியவன் கணவன் என்று சொல்ல யாருக்கு தான் விருப்பமாக இருக்கும்.

அது அவளது கருப்பு பக்கமாக போய் விட்டது அல்லவா.

பார்வதிக்கு மீனா மற்றும் அவளது குழந்தை மட்டுமே அவர்களது உலகமாக இருந்தது.

மாதம் தவறாமல் மருத்துவமனை சென்று குழந்தையை பற்றி பரிசோதனை செய்து வந்தாள்.

குழந்தை நன்றாகவே வளர்ந்து வந்தது.

மாதம் ஏழு முடிந்த நிலையில் வளைகாப்புக்கு நாள் குறித்தனர்.

வளைகாப்பு சின்ன அளவில் வீட்டோடு நடந்தது வளைகாப்பு முடிந்தது.

ஒரு மாதத்திற்கெல்லாம் மீனாள் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

குழந்தை அவளைப்போலவே பொன்னிறமாக தேவதையாக இருந்தாள்.

குழந்தையின் பராமரிப்பில் பார்வதி தன்னை மறந்து, கவலைகளை மறந்து வாழ்ந்து வந்தார்.

மீனாவிற்கும் நாட்கள் ரெக்கை கட்டி பறந்தது.

குழந்தை, அலுவலகம், தனது சொந்த வேலை என்று மீனாளின் நாட்கள் ஓடியது.

குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து இருந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.

குழந்தையை தொட்டிலில் இட்டு ரக்ஷிதா என்று பெயரிட்டனர்.

ராமநாதனும் வந்திருந்தான்.

விவாகரத்து கிடைக்கும் நிலையில் இருக்கிறது.

அந்த விழாவில் அவரது குடும்ப வக்கீல் சொத்துக்கள் அனைத்தையும் குழந்தை ரக்ஷசிதாவின் பெயரில் மாற்றி கார்டியனாக மீனாவை நியமித்து பத்திரங்களை கொண்டு வந்தார், அதனை படித்தும் காண்பித்தார்.

ராமநாதனின் முகத்தில் ஈயாடவில்லை. கருத்து சிறுத்துப் போனது அவனது முகம்.

மீனா கம்பீரமாக நிமிர்ந்து ராமநாதனை பார்த்தாள். எனது குழந்தை என்ற பெருமிதம் அவளது முகத்தில் ஏகத்துக்கும் இருந்தது.

எட்டு மாதங்கள் கடந்த நிலையில் குழந்தை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள். விமரிசையாக கொண்டாடினர் தாயும் மகளும்.

பார்வதிக்கு பேத்தியே உலகம் ஆனாள்.

ரக்ஷிமா, ரக்ஷிமா கொண்டாடி தீர்த்தார்.

ரக்ஷிதா அப்படியே கணவன் தமிழ்மணியின் சாயல், நிறமோ மீனாவை ஒத்திருந்தது.

அன்று அலுவலகத்திற்கு சென்ற மீனாள் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை.

இவ்வுலகை விட்டு அவ்வுலகிற்கு சென்றுவிட்டாள்.

அவளது வாகனம் விபத்திற்கு உள்ளானது தில் அவள் உயிரை விட்டு இருந்தாள்.

இந்த உலகில் அவள் பட்ட கஷ்டங்கள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ ஆண்டவன். தன்னிடமே அழைத்துக் கொண்டார்.

கணவனையும் இழந்து, வாழ வேண்டிய வயதில் மகளையும் இழந்து, பேத்தியான கைக்குழந்தையுடன் திக்கற்று நின்றார் பார்வதி.

பாடல் இதோ:-

மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி

கனவில் வந்தவர்
யாரென கேட்டேன் கணவர்
என்றார் தோழி

கணவர் என்றால்
அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி

இளமை எல்லாம்
வெறும் கனவு மயம் இதில்
மறைந்தது சில காலம்

தெளிவும் அறியாது
முடிவும் தெரியாது மயங்குது
எதிர்காலம் மயங்குது

எதிர்காலம்
 
Last edited:
Status
Not open for further replies.
Top