ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாயலீலா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 15



வருணிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்பதையே எதிர்பார்க்காத பெண்ணவள் அதிர்ந்து காதுகளை மூடி கொண்டு கத்தினாள். இவனின் அன்னை இப்படி கேட்டபோதே அவளால் தாங்க முடியவில்லை. இதில் இவளின் உயிரானவனும் அக்கேள்வியையே கேட்டால் இவளின் நிலை தான் என்ன.?

"இப்படி எல்லாம் பேசாத வருண்.. என்னால தாங்க முடியல.. என் மேல நம்பிக்கையும் இல்லாம போய்ருச்சா.? இப்படியொரு கேள்வி உன்கிட்ட இருந்து வரும்னு நான் நினைக்கவே இல்லை" என்றாள் தேம்பலுடன்.

ஆனால் அவனோ"உண்மையை பேசறதுல என்ன தப்பு.? நான் இல்லாத சமயம் எவன் எவனோ இங்க வந்துட்டு போறப்ப இது என் குழந்தையானு கேட்டதுல மட்டும் ரொம்ப வலிக்குதோ.?" என்று அவளின் கற்பையே சந்தேகப்பட்டான்.

இப்படி இவன் கேட்க காரணமே லீலாவை பற்றி இவன் அறிந்திட வேலைக்காரர் ஒருவரிடம் அடிக்கடி பேசுவான். இதையறிந்து சுசிலாவும் அவனின் முன்பு அடங்கி தான் இருப்பார். அவர் தான் யாருமில்லாத நேரத்தில் லீலாவின் அறைக்கு ஒருவன் வந்து விட்டு செல்கிறான் என்று கூறியது.

வந்தது ராம்பிரபு என்று அவர் அறியவில்லை. ராம் பிரபு தான் வீட்டில் இருப்பதே இல்லையே.? இப்போதும் யாருமறியாமல் வந்து விட்டு சென்று விட்டானே.? இதில் இவரின் தவறும் இல்லை. அவர் பார்த்ததை தான் வருணிடம் கூறி இருக்கிறார்.

வருணாவது பொறுமையாக லீலாவிடம் விசாரித்திருக்கலாம். ஆனால் அவனோ அன்னை சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கிறதே என்ற கோவத்தில் கண்டதையும் பேசி விட்டான்.

இதில் ஆவேசமடைந்தவள் "வந்தது உன் தம்பி தான்.. அவனை பேச..." என்று உண்மையை கூற முயன்றவளின் கன்னம் பழுத்தது.

லீலாவை அருவெறுப்புடன் பார்த்து "ஏய் என் தம்பியை பத்தி பேசுன நான் மனுசனா இருக்க மாட்டேன்.. அவன் மோசமானவன் தான்.. அதற்காக அண்ணனோட மனைவியை தப்பா பார்க்கறவன் இல்லை.. என் குடும்பமே உன்னைய வேணாம் வேணாம்னு சொல்லுச்சு..

அதைய நான் கேட்காம விட்டதுக்கு இப்ப அனுபவிக்கறேன்.. பேசாம மாயாவையே கல்யாணம் பண்ணிருக்கலாம்.. அவ என்னைய லவ் பண்றானு தெரிஞ்சும் உன்னைய கல்யாணம் பண்ணுனது என் தப்புத் தான்.. அதுக்கு தான் இப்ப நான் அனுபவிக்கறேன் போல" என்று வார்த்தைகளை கடுமையாக வெளி விட்டிருந்தான் வருண்.

படத்தில் மட்டும் தான் இவன் நல்லவன் போலும். நிஜ வாழ்க்கையில் அரக்கரை விட மோசமானவனாக இருக்கிறானே.. இவனை நம்பி வந்தது என் தவறு தான்.. அதுவும் இவனின் மேல் வைத்திருக்கும் காதலுக்காக இங்கு இருப்பதும் அதை விட தவறு தான்.

இவன் இல்லையென்றால் என்னால் வாழ முடியாதா என்ன.? என் குழந்தைக்காக இவனின் முன்பே வாழ்ந்து காட்டுவேன்.. அதற்கு முன்பு இங்கிருந்து இவனின் அன்னையின் குணத்தையும் தம்பியின் குணத்தையும் இவனிடம் வெளிக்காட்டி விட்டு தான் செல்வேன் என்ற தீர்மானம் அவளுள்.!

அதன் பின் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவனும் கண்டு கொள்ளவில்லை. ஆடவனின் பாராமுகம் இவளை வருத்தியது. தனியாக இருந்த போது எப்படி எல்லாம் தன்னை தாங்கினான் என்று நினைத்ததில் அழுகையும் வலுக்கட்டாயமாக வந்து விட, அதை அவன் அறியாவண்ணம் உள்ளிழுத்து கொண்டாள்.

நாட்களும் நகர்ந்தது. வருணின் மனதினுள் 'நான் இவ்வளவு பேசியும் அவள் இங்கேயே இருக்கிறாளே.? நம்ப முடியவில்லையே.?' என்ற யோசனை தான் விடாமல் ஓடிக் கொண்டிருந்தது. பெண்ணவள் இவனை கண்டு கொள்ளவில்லை. அவளுண்டு அவள் வேலையுண்டு என்றிருந்தாள்.

வருண் வீட்டில் இருப்பதால் சுசிலாவும் அடக்கியே வாசித்தார். ராம்பிரபுவும் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியவில்லை. லீலாவிற்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வருணை விட்டு விடும் எண்ணமெல்லாம் அவளிடம் இல்லை. ஏதோ ஒரு தவறான புரிதலில் தான் இவர் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார். நடப்பதை புரிந்து கொண்டு விட்டால் தன்னை தங்கத்தட்டில் வைத்தும் தாங்குவார் என்று அலாதி நம்பிக்கை.

படத்தின் வெற்றி விழாவுக்கு வருண் சென்றாக வேண்டிய கட்டாயம். அதை மறைமுகமாக மனைவியிடமும் உரைத்து விட்டு கிளம்பி இருந்தான். இப்படி அவன் சென்றால் வருவதற்கு எப்படியும் இரண்டு நாட்களாகி விடும் என்பது லீலாவும் அறிந்தது. இவர்களுடன் இருப்பதை நினைத்து பயந்து பேசாமல் தன் வீட்டிற்கு சென்று விடலாமா.? என்று நினைத்தாள். அதுவும் நல்லது தான் என்ற முடிவில் கிளம்ப ஆயத்தமானாள்.

சுசிலாவும் சுபவர்ஷினியும் ஏதோ விஷேசம் என்று வருண் செல்வதற்கு முன்பே கிளம்பி இருக்க, இப்போது லீலா மட்டும் தான் வீட்டில்.! மற்றவர்கள் வரும் முன்பே கிளம்பி சென்று விட வேண்டும் என்ற எண்ணம். அந்த அவசரத்தில் அவளின் பிரத்தியேக கார் டிரைவருக்கு அழைத்து சொல்லவும் மறந்திருந்தாள்.

இச்சமயம் சத்தம் வராதவாறு அவளின் பின்னே வந்து நின்ற ராம்பிரபுக்கு அவளின் மீது அவ்வளவு போதை. நினைத்தால் அடைந்து விட வேண்டும் என்று கொள்கை வேறு அவனிடம்.

பின்னால் நிற்பவனை உணாரமல் திரும்பிய லீலா அவனை பார்த்ததும் வெலவெலத்து போய் ஓரடி பின்னே நகர்ந்து நெஞ்சில் கை வைத்துக் கொள்ள, "செல்லம் மாமா வந்துருக்கேன்டி.. இப்படி பயந்தா நின்னா என்ன அர்த்தம்.? வா வா என் பக்கத்துல வா" என்று அவளை தொட போனான்.

சட்டென்று விலகி நின்று "முதல்ல வெளில போ.. இல்லனா எனக்கு கெட்ட கோவம் வரும்.. த்து பொறுக்கி" என்று அவனை சாட, "ஏய் என்னடி ரொம்ப தான் துள்ளற.? என் அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு எவன் எவன் கூடவோ படுத்து தானே இந்த புள்ளை வந்துருக்கு.? அப்பறம் என்ன பெரிய பத்தினி மாதிரி.?" என்று அவளின் முடியை பிடித்து இழுத்தான்.

உயிர் போகும் வலி. அதை விட அவளின் குழந்தை வேறு வயிற்றில். இந்த மிருகத்திடம் உன் குழந்தையும் சிக்கி விடுமோ.? என்று தான் பயந்தாள். அவளால் முடிந்த வரைக்கும் அவனிடம் இருந்து விடுபட போராடினாள். அவளின் பயமே அவளின் பலத்தை வெளிவர தடுத்தது. அவளால் முடியவில்லை.

'கடவுளே ஏன் இந்த நிலைமை.?' என்று புலம்பி கண்ணீர் வடித்த சமயம் சரியாக ராம் பிரபுவின் தலையை பூச்சாடி ஒன்று பதம் பார்த்தது. அதில் அவன் பயந்து விலகிட, பத்ரகாளியாக நின்றிருந்தாள் மாயா.

அவளை கண்டதும் "அக்கா" என்று ஓடி போய் அணைத்துக் கொண்டு "இங்கிருந்து போய்ரலாம்க்கா.. என்னைய கூட்டிட்டு போங்க.. ப்ளீஸ்.. இங்கிருந்து போய்ரலாம்" என்று அச்சத்தில் நடுங்கியவளை தான் முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக "என் கைல ஒரு நாள் வசமா மாட்டுவ.. அப்ப உன்னைய கண்டந்துண்டமா வெட்டி போடறேன் இரு" என்று ராம்பிரபுவை எச்சரித்து விட்டு லீலாவை அழைத்து கொண்டு கிளம்பினாள்.

விடாமல் தேம்பியபடி வந்தவளுக்கு மூச்சு விடவும் சிரமமாக இருக்க, "லீலா ரிலாக்ஸ்டா.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல" என்று ஆறுதல்படுத்தி குடிக்க தண்ணீரையும் புகட்டினாள்.

அதில் லீலாவும் சிறிது தெளிந்திட, "என்னடா ஆச்சு.? அங்க என்ன நடக்குது.?" என்று மாயா வினவியதில் ஏன் மறைக்க வேண்டும் என்று தோன்றியதில் அனைத்தையும் கூறி விட்டு "நான் என்னக்கா தப்பு பண்ணுனேன்.?" என்று அழுதாள்.

வருணை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அவனே சென்று காதலை கூறி சம்மதம் வாங்கி விட்டு இப்போது என்னவென்றால் இவள் தான் அவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது போல் பேசி இருக்கிறான்.

"அவன் மனுசனா.? முதல்ல வருண்கிட்ட தான் பேசணும்" என்று மாயா கோவப்பட்ட சமயம் "இதைய பத்தி நீங்க யாருகிட்டயும் பேச கூடாதுக்கா.. அப்பறம் என் குழந்தை காட்சிப்பொருளாக மாறிரும்.. என்னால அதை ஏத்துக்க முடியாது" என்று குழந்தையின் எதிர்க்கால நலனைப் பற்றி யோசித்து கூறினாள் லீலா.

இந்நிலைமையிலும் குழந்தையை பற்றி யோசிப்பவளை எப்படி தவறாக நினைக்க முடிந்தது அவனால்.? ச்சைக் அவனை போய் காதலித்தோமே.? என்று மாயாவே அருவெறுப்படைந்த தருணம் அது.

இதன் பின்பு லீலா அவளின் பிறந்தகத்திற்கும் செல்லவில்லை. அப்படி அங்கு சென்றால் வதந்திகள் பரவி அது உண்மையாக கூடும் என்று யாருமறியாமல் மாயாவின் இல்லத்திலே தங்கினாள். அவளுக்கு துணையாக மீராவும் இருக்க, காயப்பட்ட இரு பெண்களின் மனதும் இலகுவாக மாறி நிமிடங்கள் அது.

'லீலா வீட்டை விட்டு சென்று விட்டாள். எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று கூறி அழுத சுசிலாவின் நீலிக்கண்ணீரை நம்பி வருணும் அவனைப்பற்றி பேசுவதையே தவித்தான். அவளை விவாகரத்து செய்வதாகவும் கூறினான்.

ஆனால் இப்போது இதை வெளியில் அறிவித்தால் அவனின் படம் தான் தோல்வியை தழுவும் என்பதற்காக இவ்விடயம் வெளியில் தெரியாதவாறு மறைத்தான். சுசிலாவுக்கு சொல்லவொண்ணா சந்தோசம். இனி இவன் மாயாவை திருமணம் செய்து கொள்வான் என்று அகமகிழ்ந்து போனார்.
பாவம் அவள் வீட்டில் தான் லீலா இருக்கிறாள் என்பதையே அறியாமல்.!

தொடரும்..


Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 16




ஓரிரு முறை வருணை மாயா பார்த்திட, அவனிடம் பேசுவதையே தவிர்த்து சென்றாள். அவளின் இந்த மாற்றம் எதற்காக.? என்று தெரியாமல் அவளின் அலைப்பேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ள முயன்றிட, அதுவும் வீண் தான்.

லீலா சந்தோஷமாகவே இருந்தாள். ஆனால் அவளின் இடைவிடாத பயம் தான் குறைந்த பாடில்லை. இனி தன் எதிர்க்காலம் என்னவாகுமோ.? என்று நினைத்து அச்சமடைந்தாள். அவளின் இந்த பயம் தான் அவளின் உயிரை பறிக்க காத்திருக்கிறது என்று உணராமல்.!

மாயா பயந்த மாதிரியே லீலாவின் பிரசவம் சிக்கலில் முடிந்தது. தன் சிசுவை மாயாவின் கையில் பத்ரமாக ஒப்படைத்து விட்டு கண்மூடினாள் லீலா. அவளின் இறப்பிற்கு காரணமே அதீத பயமும் மன அழுத்தமும் தான் என்று மருத்துவ அறிக்கையும் வந்தது.

இனி மறைக்க எதுவும் இல்லையே.? முதலில் வருணிடம் தான் விஷயத்தை கூறி அவனை வர சொல்ல, இடிந்து போனான் வருண். அரக்கபரக்க ஓடி வந்தான் அவன். அவனிடம் குழந்தையை காட்டவும் விரும்பவில்லை. அதனால் மீராவிடம் குழந்தையை பார்த்து கொள்ள கூறி விட்டு மற்ற அனைத்தையும் மாயாவே செய்தாள்.

லீலா பெற்றோரும் 'பாவிமக எங்ககிட்ட கூட ஒன்னும் சொல்லாம மறைச்சுட்டாளே.?' என்று கதறினர். வருணை குற்றவுணர்வு தான் கொலையாக கொன்றது. எங்கிருக்கிறாள்.? என்ன செய்கிறாள்.? என்பதை கூட அறியாமல் இருந்த தன் மடத்தனத்தை தான் நொந்து கொண்டான்.

இவர்களின் பிரச்சனை யாருமறிந்திடாமலே மூடி மறைக்கப்பட்டது. பிரபலங்கள் அனைவரும் லீலாவிற்கு இரங்கல் தெரிவிக்க வருகை புரிந்திட, இணையதளத்திலும் அவளின் இறப்பை பற்றி விவாதமும் நடைப்பெற்றது.

பலவித விமர்சனங்களுடனே லீலாவும் இவ்வுலகை வாழ்வை முடித்து கொண்டாள் நிம்மதியே இன்றி.! இவளின் முடிவு இவ்வாறு தான் இருக்கும் என்றால் அது யாரால் மாற்றிட முடியும்.?

துவண்டு போயிருந்தான் வருண். அவனருகில் அவனின் குடும்பத்தை கூட மாயா விட அனுமதிக்கவில்லை. அவனை தன் நேரடி பார்வையில் வைத்தே அனைத்தும் செய்தாள். ஏனென்றால் இதற்கு காரணமே லீலாவிற்கு செய்த குடுத்த சத்தியமாயிற்றே.!

எட்டு மாத கருவை லீலா வயிற்றில் தாங்கி இருந்த நேரம் அது. "எப்பவும் அதையவே யோசிச்சுட்டு இருக்காத.. குழந்தைக்கு நல்லது இல்லை" என்று மாயாவும் எப்போதும் போல் அதட்டிட, "அக்கா நீங்க வருணை லவ் பண்ணுனீங்களா.?" என்று சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேட்க நினைத்ததை கேட்டாள்.

முதலில் அதிர்ந்து பின்பு "இல்லைனு சொல்ல ஆசைதான்.. உண்மை என்னனு தெரிஞ்சுட்டு தான் நீ இப்படி கேட்டுருப்பேனு எனக்கும் புரியுது" என்று சிரிப்புடனே மாயாவும் பதிலுரைத்திட, "நான் இல்லைனாலும் நீங்க வருண் கூட இருப்பீங்க தானே.?" என்று கேட்டு மாயாவை திகைப்படைய செய்தாள்.

"ஏய் பைத்தியம்.. இப்படியெல்லாம் யோசிச்சுட்டு இருக்காத.. அடி வாங்க போற" என்று மாயா அதட்டியதை வெற்றுச் சிரிப்புடன் எதிர் கொண்டு "எனக்கு பயமா இருக்குக்கா.. எனக்கு ஏதாவது ஆகிருமோனு ரொம்ப பயமா இருக்கு.. நான் இல்லைனாலும் என் பாப்பாவுக்கும் வருணுக்கும் நீங்க இருப்பீங்கனு ஒரு நம்பிக்கையே எனக்கு தைரியத்தை குடுக்கலாம்..

ப்ளீஸ்க்கா நான் இல்லனா வருணை தனியா விட்டராதீங்க.. அவன் பாவம் என்று அந்நிலையிலும் அவனுக்காக யோசித்து மாயாவிடம் சத்தியத்தையும் வாங்கி இருந்தாள் வருணின் மனைவியான லீலா.

அவள் கூறியதை போலவே வருணை தனியே விட்டு சென்று விட்டாள். லீலாவிடம் அளித்த வாக்கிற்காக எல்லாம் மாயா வருணை பார்த்துக் கொள்ளவில்லை. அவனின் மேல் இவள் வைத்திருந்த காதலும் ஆடவனின் வருந்திய தோற்றத்தை கண்டதும் வெளி வந்து அவனை விடாமல் கவனிக்க செய்தது.

முடிந்தது எல்லாம் முடிந்தது. லீலா என்ற ஒரு இனிமையான பெண்ணின் வாழ்வே முடிவு பெற்றிருந்தது. வருண் இன்னும் அவனின் மகளை பார்க்கவே இல்லை. மீரா தான் குழந்தையை பார்த்து கொண்டிருக்கிறாள். தாயில்லாத குழந்தைக்கு தாய்ப்பால் குடுத்து உதவும் ஒரு பெண்ணின் மூலம் குழந்தையை பசியாற்றி சிசுவின் அன்னையாகவே மாறி இருந்தாள் அவள்.

வருணுக்கு குழந்தையின் நினைவு எழுந்ததும் தயக்கத்துடன் மாயாவிடம் வினவிட, "அது தான் உன் குழந்தையே இல்லையே.? அப்பறம் என்ன அக்கறை வேண்டி கிடக்கு.?" என்று இவ்வளவு நாட்கள் அடக்கி வைத்திருந்த சினத்தை வெளிக்காட்டி இருந்தாள்.

"லீலாவை சாகடிச்சது நீயும் உன் குடும்பமும் தான்.. அவ சாவுக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. அவ எங்க போனானு கூட இத்தனை மாசம் நீ விசாரிக்கல.. இதுல குழந்தையை பத்தி மட்டும் எதுக்கு கேட்கற.? நீ நினைக்கிற அளவுக்கு உன் அம்மாவும் தம்பியும் அவ்வளவு நல்லவங்க இல்லை" என்று சீறி லீலாவை தான் அழைத்து சென்ற காரணத்தையும் கூறி ஓரமாக நின்ற ராம்பிரபுவையும் இழுத்து அன்று அவள் அடித்ததில் எழுந்த தழும்பையும் சாட்சியாக்கி கூறினாள்.

அதிர்ச்சி.. அதிர்ச்சி.. அதிர்ச்சி மட்டுமே.! அதிர்ச்சியில் கண்களும் இருட்டிக் கொண்டு வர, "நீ நம்புனவங்க உனக்கு துரோகம் தான் செஞ்சுருக்காங்க.. ஆனா நீ நம்பாத உனக்கு நல்லது மட்டும் தான் செய்ய நினைச்சுருக்கா.." என்று தன்னிடம் லீலா வாங்கிய சத்தியத்தையும் மறைக்காமல் உரைத்தாள்.

எத்தனை அதிர்ச்சிகளை தான் வருண் தாங்குவான். அவனால் சத்தியமாக முடியவில்லை. 'ஏன்டா இப்படி பண்ணுன.?' என்று தம்பியின் சண்டையை பற்றி சண்டை போடவும் அவனுக்கு தெம்பில்லை.

"இனி அந்த குழந்தை என் மகளா மட்டுமே வளரும்.. அதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இனியாவது புத்தியை யோசிச்சு பேச பழகு.. உன் பேச்சால தான் ஒரு உயிரு போய்ருக்கு" என்று சாடியவள் "உன் தம்பியை நான் சும்மா விடுவேனு நினைக்கறீயா.? அவனால பாதிக்கப்பட்டவங்க லிஸ்ட் பெருசா போய்ட்டு இருக்கு" என்றாள் அழுத்தமாக.

என் பையன் மேல கை வெச்சு பாரு.. அப்பறம் நடக்கறது என்னனு புரியும் என்று மகனை அவள் சாடுவதை பொறுக்காமல் சுசிலா வார்த்தையை விட, சப்பென்று ஒரு அறை அதுவும் அவருக்கு தான்.

"உன் மேலயே கை வெச்சுட்டேன்.. இனி நடக்கறதை நானும் பார்க்கறேன்.. நீயும் பார்க்க ரெடியா இரு" என்று மரியாதையின்றி அவரை திட்டி விட்டு அதோடு கிளம்பியும் விட்டாள்.

ஆனால் அவளின் பேச்சில் 'நீ என் வீட்டுக்கு வந்து தான் ஆக வேண்டும்' என்ற கட்டளை ஒளிந்திருந்தது. அதை வருணும் உணர்ந்து கொண்டான்.

யாரிடமும் எந்த கேள்வியும் அவன் கேட்க நினைக்கவில்லை. அப்படி கேட்டு சண்டையிட்டால் மாண்டவள் மீண்டு வந்து விட போகிறாளா.? அமைதியாக மாயாவின் பின்னே வருணும் கிளம்பி விட்டான் 'வருண் நில்லுப்பா' என்று வந்த சுசிலாவின் பேச்சையும் மதிக்காமல்.!

அதன் பிறகு அவனின் நாட்கள் அவளுடனே கழிந்தது. இருவரையும் பற்றி கிசுகிசுக்கள் வாடாமல் உலாவி கொண்டிருக்க, மாயாவின் பெற்றோர் அவளை கண்டித்து பார்த்தனர். ஆனால் அவள் அதை காதில் கூட வாங்கவில்லை. அடிக்கடி 'லீலா லீலா' என்று புலம்பி அழுபவனை சமாதானப்படுத்துவதே மாயாவின் தலையாய கடமையாக இருந்தது.

செய்த தவறை நினைத்து வருந்துபவனை தானும் நோகடிக்க வேண்டாம் என்று குழந்தை தியாவை அவனின் கையில் குடுத்தாள் மாயா. அன்று தான் அவன் மகளை பார்த்த முதல் தருணம். லீலாவையே உரித்து வைத்து பிறந்திருந்த மகளை வாங்கிய கைகள் நடுங்கியது. அவனின் மனப்போராட்டத்தை உணர்ந்து மாயா குழந்தையை வாங்கி கொள்ள, தலை சாய்த்து கண்ணீர் வடித்தான் அவன்.

செய்த தவறை உணராமல் இருப்பது தான் தவறு. ஆனால் செய்த தவறை உணர்ந்து அதற்காக தினமும் வருந்துபவரை தண்டிப்பது எவ்வகையில் நியாயம்.? லீலாவின் இறப்பில் இருந்து வருண் மீண்டு வரவே இரண்டு வருடங்களாகி இருந்தது. அதற்குள் அவனின் மகளான தியாவும் நடக்க தொடங்கி இருந்தாள்.

தியா முழுவதும் மீராவின் வசம் தான். மாயாவே அடிக்கடி தான் தியாவை தூக்குவாள். தியாவை வைத்து கொண்டு நாள் முழுவதும் மாயா அமர்ந்து விட்டால் படப்பிடிப்புக்கு எவ்வாறு செல்ல முடியும்.? தியாவை அதிகமாக பார்க்காமல் போனாலும் குழந்தைக்கு தேவையான ஒவ்வொன்றையும் மாயா பார்த்து பார்த்தே செய்தாள்.

குழந்தையை வெளி உலகத்திற்கு காட்டவே பயந்து தியாவின் புகைப்படத்தை கூட வெளியிட மாட்டாள். போதும் நானும் லீலாவும் சினிமாவால் அனுபவித்தது போதும்.. என் மகளுக்கு இந்த சாக்கடை வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம் மாயாவினுள்.!

தன்னால் தான் மாயாவின் பெயரும் கெட்டு கிடக்கின்றது என்பதை உணர்ந்து வருணும் அவளை ஏற்றுக் கொள்ள, மாயாவிற்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஏனென்றால் லீலாவே அவளிடம் வருணை தனியாக விட்டு விடாதீர்கள் என்று விட்டு சென்றிருக்கிறாளே.? பின்பு எதற்கு தயக்கம்.? சினிமா துறையிலும் இது சகஜமாக உலாவி வரும் விசயமாயிற்றே.!

ராம்பிரபுவிடமும் "ஏன்டா இப்படி பண்ணுன.?" என்று கேட்டு வருண் சண்டையிட, "அண்ணா சாரிண்ணா.. குடிச்சுட்டு ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. உண்மையா நான் வேணும்னு பண்ணல.. இந்த தவறுக்கு என்னைய நீ எப்பவோ போலீஸ்ல பிடிச்சு குடுத்துருக்கணும்.. இப்பவே போன் பண்ணுண்ணா.. நான் மறுக்கவே மாட்டேன்.. ஏன்னா நான் தப்பு பண்ணிருக்கேன்" என்று அவனின் காலைப் பிடித்து கொண்டு தண்டனை தரவும் கூறி அழுதான்.

இதற்கு மேலும் தம்பியை நம்பாமல் இருக்க முடியுமா.? வருண் நம்புனான். மீண்டும் ராம்பிரபு அவனை ஏமாற்ற தொடங்கினான். இதில் சுசிலாவின் நடிப்பு வேறு. 'ஏதோ புத்திக்கெட்டு போய் இப்படி பண்ணி தொலைஞ்சுட்டேன்பா.. என்னைய மன்னிச்சுரு' என்று அழுதவரிடம் பேச விரும்பாமல் போனாலும் மன்னித்து தொலைந்தான்.

அவளை வந்தால் இப்போது அவளே பிரிந்து கொள்ளலாம் என்கிறாள் வருணின் நிலை தான் பாவம். இவனை வேண்டாம் என்று விட்டு பெண்ணவள் மட்டும் மகிழ்ச்சியாகவா வாழ போகிறாள்.? முதலில் அவளால் அது முடியுமா.?


****


பழைய நினைவுகளை மறக்க முடியாமல் குடித்து குடித்து மட்டையாகி போயிருந்தான் வருண். ஆனால் மாயாவோ உடனடியாக ராம்பிரபுவின் மீது புகார் அளித்து அவனை மீண்டும் கைது செய்யவும் வைத்தாள்.

ராம்பிரபுவின் ரசிகர்கள் என்ற பெயரில் மாயாவின் வீட்டின் முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் போராட்டம் நடத்த, மாயாவுக்கு பாதுகாப்பு அளித்திடும் வேலை துருவனிடம் வந்தது.

அவனும் வடிவேலனை அனைத்தையும் பார்த்துக்
கொள்ள கூறி விட்டு கிளம்பி இருந்தான் அன்னையிடம் கூட கூறாமல்.!!




தொடரும்..

Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 17



லீலாவின் பெரியப்பா நடந்த எதையும் மனைவியிடம் கூறாமல் காலையில் எழுந்ததும் பயத்துடனே கிளம்பி கொண்டிருக்க, "யோவ் எங்கயா கிளம்பிட்ட.?" என்று கேட்ட மனைவிக்கு கூட அவர் பதில் சொல்ல விரும்பவில்லை.

"உன்னைய தான்யா" என்று அவர் விடாமல் நச்சரித்ததில் "ம்ம்ம் வேலைக்கு போறேன்.. போதுமா.? போய் சோறு எடுத்துட்டு வந்து வெய்யு" என்று கடுப்புடன் கூறியவரின் வார்த்தையில் 'அடியாத்தி' என்று வாயில் கை வைத்தவர் "உண்மையாவா.?" என்று நம்ப முடியாமல் வினவினார்.

"நான் என்ன பொய்யா சொல்ல போறேன்.? போடி போய் சோத்தை எடுத்துட்டு வந்து போடு" என்று அவரை விரட்டி விட்டு வாசலையும் ஒருமுறை பார்க்க தவறவில்லை. உண்மையாகவே துருவனின் வார்த்தையில் பயந்து போய் விட்டிருந்தார்.

யோசனையாக "யோவ் இனி நீ வேலைக்கு போனா என்ன.? போகலனா என்ன.? அதான் அந்த லீலா புள்ளையோட சம்பளம் வருமே.?" என்றதில் அவரை முறைத்து "வாயை மூடிட்டு உட்காரு.. இல்லனா அப்பிருவேன்" என்று அதட்டி மிரட்டி விட்டு கிளம்பினார்.

துருவன் இருப்பானோ.? என்று பயந்து பயந்து வந்தவருக்கு அவனின் தரிசனம் கிடைக்காமல் போனதில் நிம்மதி. 'நீ எப்படி நிம்மதியா இருக்கறேனு நானும் பார்க்கறேன்.?' என்ற முடிவில் வடிவேலன் இருந்தானோ என்னவோ "யோவ் பெரிய ஆப்பு என்ன துருவன் இல்லைனு சந்தோசப்படறீயா.? அவன் எப்ப வேணாலும் வருவான்.. சொல்லபோனா இப்ப கூட உன் முன்னாடி வந்து நிற்கலாம்" என்று கூறி அவரின் வயிற்றில் புளியை கரைத்தான்.

"பெரிய ஆப்பே இன்னும் அரைமணி நேரத்துல இந்த இடத்தை சுத்தப்படுத்தி இருக்கணும்.. நான் மறுபடியும் வந்து பார்க்கறப்ப வேலை முடியாம இருந்தா துருவனுக்கு போன் போட்டு சொல்லிருவேன்" என்று அவரை மிரட்டி விட்டு சென்றான்.

இவர்களையே பார்த்தபடி நின்றிருந்த லீலா "அண்ணா பெரியப்பா பாவம்" என்றிட, வந்த கடுப்பிற்கு பாராபட்சமே பார்க்காமல் பெண்ணவளின் தலையில் நங்கு நங்கு என்று விடாமல் கொட்டினான்.

"அண்ணா வலிக்குது.. விடுங்க.. அச்சோ நிறுத்துங்க" என்று லீலா பதறிட, "இனி இப்படி பேசுவீயா.? பேசுவீயா.?" என்று கேட்டதில் மறுபடியும் கொட்டி விடுவானோ.? என்ற பயத்தில் "மாட்டேன் மாட்டேன்" என்று வேகமாக தலையசைத்தாள்.

"போ போய் அம்மாவை வெளில கூட்டிட்டு வா.. சாப்பிட குடுக்கணும்" என்று அவளையும் துரத்தியவன் திரும்பி லீலாவின் பெரியப்பாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

வடிவேலன் சொல்லி விட்டு சென்றதை போலவே அவர் வேலையை முடித்திருக்க, "குட் குட்.. ஆமா பெரிய ஆப்பு இத்தனை நாளா நீ என்ன வேலை பார்த்துட்டு இருந்த.?" என்று கேட்டதற்கு அவர் திருதிருவென முழித்த முழியே சொல்லாமல் சொன்னது குடித்து விட்டு வீட்டில் கிடந்தேன் என்று.!

அப்படியே இவரை குனிய வைத்து கும்மி விடலாமா.? என்று தான் தோன்றியது. 'யோவ் பெரிய ஆப்பு இருயா உனக்கு பெரிய ஆப்பாஆஆஆ வெக்கறேன்" என்று திட்டி வேணுமென்றே ஓரத்தில் கிடந்த கல்லை தூக்கி அந்த பக்கம் போட சொன்னான்.

மறுபடியும் வேண்டாமென்று இருந்த இடத்தில் போடுமாறு சொன்னவன் ஏதோ யோசனையில் நின்றிருக்க, பாஸ்கர் தான் 'அய்யோ இவன் யோசிக்கறதை பார்த்தா பயமா இருக்கே.?' என்ற பீதியே பக்கென்றிருந்தது.

திரும்பி தெய்வானையை பார்த்து "அம்மா இந்த கல்லை எல்லாம் மாடில போட்டுட்டா என்ன.?" என்று வினவியதில் பாஸ்கருக்கு நடுக்கமே வந்து விட்டது. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெரிய கற்கள் அங்கு கிடந்தது. அதை அவர் உருட்டிக் கொண்டு தான் மற்றொரு பக்கம் போட்டார். இதில் மாடியில் என்றதும் தலைச்சுற்றியே போனது.

அவரும் வேணுமென்றே வடிவேலன் செய்வதை கவனித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு தான் இருந்தார். இப்போது அவரின் வயதிற்கு மதிப்பு குடுத்து "வேணாம்டா அது ஓரமா கிடந்துட்டு போகுது" என்று விட, அதன் பிறகு தான் இவருக்கு சீரான மூச்சே வந்தது.

இப்போதும் "அம்மா அவரு பாவம்" என்று லீலா கூறிட, தெய்வானையும் முறைத்து "ஆமா ரொம்ப பாவம் தான்.. என் வாய்ல நல்லா வருது.. பேசாம அமைதியா இரு.. அப்படி பாவமா தெரிஞ்சா நீயும் அவரு கூட கிளம்பு" என்றார் பட்டென்று.

இதற்கு மேல் லீலாவிடம் பேச்சில்லை. எப்படி அங்கு செல்வாள் இவள்.? அதற்கு பயந்தே வாயை கப்பென்றும் மூடி விட்டாள்.

பொய்யை பரப்பியதாக மாயாவை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களும் எழுந்தது. ரசிகர்கள் என்ற பெயரில் ரவுடிகள் அங்கு தான் கூடி இருந்தார்களோ.? என்று சந்தேகப்படும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்தது.

'கலைந்து செல்லுங்கள்' என்ற துருவனின் தன்மையான வார்த்தையை யாரும் செவி மடுப்பதாக தெரியவில்லை. திடீரென்று கூடிய கூட்டத்தால் அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது. பலர் பேர் பாதிக்கப்பட்டனர்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் குழந்தைகளை ஏற்றி வந்த பள்ளி வாகனமும் நகர முடியாமல் முடக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்த பிஞ்சுகள் பயத்தில் அழவே தொடங்கி இருந்தனர்.

'மாயாவை கைது செய்து ராம் பிரபுவை வெளியில் விட்டே ஆக வேண்டும்.. இல்லையென்றால் அதுவரை இந்த போராட்டமும் தொடரும்' என்ற கூச்சல் தான் விடாமல் எதிரொலித்தது.

துருவனும் முயன்ற அளவிற்கு கூட்டத்தை அப்புறப்படுத்த முயன்றான். இறுதியில் மாயாவின் முன்பு வந்து நின்று "மேடம் கொஞ்சம் நிலைமையை புரிஞ்சுக்கோங்க.. இதுல சம்பந்தமே இல்லாதவங்க பாதிக்கப்பட்டுட்டு இருக்காங்க.. ஆம்புலன்ஸ் கூட போக முடியாம நடுவுல நிற்குது.. அதுல ஒரு உயிரு வேற துடிச்சுட்டு இருக்கு" என்று நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக விட்டு குடுக்க சொன்னான்.

அவனின் நிலையை மாயாவும் உணர்ந்து "நான் கேஸ் வாபஸ் வாங்க போறது இல்லை துருவன்.. தாராளமா என்னைய கைது பண்ணிக்கலாம்.. இப்ப நான் உங்க கூட வந்துட்டா இந்த பிரச்சனை முடிஞ்சுரும்ல.?" என்று சாதாரணமாக கேட்டு அவனை திகைக்க வைத்தாள்.

இதை 'முடியாது' என்றாலும் போராட்டமும் ஓயாது. போக்குவரத்தும் சீராகாது. "நிலைமையை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் மேடம்" என்று புன்னகைத்து மாயாவுடன் வெளியில் வந்தவன் "மாயாவை நான் கைது பண்ணி அழைச்சுட்டு போறேன்.. ராம்பிரபுவும் சீக்கிரம் வெளில வருவாங்க.. இப்ப எல்லாரும் கிளம்புங்க.. உங்களால ஆம்புலன்ஸ் கூட போக முடியாம நிற்குது" என்று உரக்க கத்தினான்.

அப்போதும் அவர்கள் அடங்காமல் மாயாவை பார்த்ததும் கல்லை எடுத்து அவளை நோக்கி எறிய, அவளுடன் சேர்ந்து இரு காவலர்களுக்கும் அடிப்பட்டு ரத்தமும் கசிந்தது. இதில் உச்சக்கட்ட கோவமான துருவன் "ஒருத்தனை விடாம அடிச்சு வண்டில ஏத்துங்க.. ரசிகனாமா ரசிகன்.. உள்ள இருக்கறவன் சுதந்திர போராட்ட தியாகி பாரு" என்று கட்டளையிட்டு பாதுகாப்பாக மாயாவை அவளின் வீட்டினுள் அனுப்பியவன் கையில் கிடைத்தவனை எல்லாம் வெளுத்தான்.

பாதி பேர் கல்லூரி படிக்கும் பசங்களாக தான் இருந்தது. 'படிக்கறதை தவிர மத்த எல்லாமும் பண்ண வேண்டியது' என்று முணங்கி அனைவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டவன் முதலில் போக்குவரத்தை சீராக்கினான்.

அச்சூழலும் சற்று இலகுவாகியது. பெருமூச்சுடன் அமர்ந்தவனிடம் 'மாயா உங்களைய பார்க்க விரும்புகிறாள்' என்ற தகவல் வந்திட, மறுக்க தோன்றவில்லை அவனுக்கு.

அவனும் சென்றான். "அடி ரொம்ப பட்டுருச்சாங்க.?" என்று கேட்டவனிடம் "சின்ன அடி தான் துருவன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.. நீங்க மட்டும் இப்படி ஆக்ஷன் எடுக்கலனா நிலைமையும் மோசமாகி இருக்கும்.. உள்ள இருக்கறவன் உத்தமனு நினைப்பு இவங்களுக்கு" என்று தன் கோவத்தையும் வெளிப்படுத்தினாள்.

"என்ன பண்றது மாயா.. இக்கால பசங்க ஹீரோவை தலைல தூக்கி வெச்சு கொண்டாடி அவங்கள பெத்தவங்கள யோசிக்காம விட்டராங்க.. இப்ப அவங்களுக்கு ஒன்னுனா தலைவர் தலைவர்னு கத்தறவனா வந்து பார்க்க போறான்.. போன மாசம் கூட படத்துக்குப் போக பணம் குடுக்கலனு ஒரு நாய் அவன் அப்பாவை கல்லை தூக்கி போட்டு கொன்னுருக்கு.. இதெல்லாம் பார்க்கறப்ப சினிமாவை ஒழிச்சா தான் என்னனு இருக்கு.?" என்றான் வேதனையுடன்.

அவன் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்து "உண்மை தான்.. சினிமாங்கறது ஒரு பொழுது போக்கு மட்டும் தான்.. அதைய புரிஞ்சுக்காம பல பேரு பண்றதை பார்க்க எனக்கும் கடுப்பா தான் இருக்கு.. இப்ப உங்களுக்கு போலீஸ் வேலை பிடிச்சுருக்குனா எனக்கு சினிமால நடிக்கறது பிடிச்சுருக்கு.. அவ்வளவுதான்..

நாங்க ஒன்னும் சும்மா நடிக்கலயே.? பணம் வாங்கிட்டு தான் எங்க திறமையை காட்டறோம்.. எங்களுக்குனு ரசிகர்கள் கூட்டம் இருக்கறது பெருமை தான்.. ஆனா அது எங்க நடிப்புத்திறமையை மட்டும் பார்த்து ரசிச்சா அதுவே எங்களுக்கு போதும்" என்று மாயாவும் உரைத்தாள்.

அவளிடம் பேசியதில் அவளின் உண்மையான குணமே இது தான் என்று என்பதை அறிந்த துருவன் உண்மையிலே அவளுக்கு ரசிகனாகி போனான் அந்நிமிடத்தில்.! மென்புன்னகையுடன் அவளிடம் இருந்து விடையும் பெற்றான்.

மீண்டும் வருணின் வீட்டில் சண்டை. ராம்பிரபுவை வெளியில் அழைத்து வந்தே தீர வேண்டும் என்று சுசிலா பிடிவாதமாக நின்றிருக்க, எவ்வித பாவனையும் காட்டாமல் "என்னால எதுவும் செய்ய முடியாதுமா.. ஏன்னா எனக்கும் மாயாவுக்கும் தான் ஒன்னுமில்லாம போய்ருச்சு.. நீங்க இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவீங்கனு தெரிஞ்சு தான் உனக்கும் எனக்கும் செட்டாகாதுனு சொல்லிட்டாளோ என்னவோ.?

என்னாலயும் உங்களைய மீறி எதுவும் பண்ண முடியல.. அப்படி பண்ணுனா என்னைய மதிக்கல.. அப்பறம் நான் எதுக்கு உயிரோடு இருக்கணும்னு சாக போறீங்க.? நீங்க மாயாவை தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சீங்க.. இப்ப அவளை எதிரியா பார்த்துட்டு இருக்கீங்க.?

நான் இப்ப பிரபுவை வெளில கொண்டு வந்தாலும் மாயா விடுவானு நினைக்கறீங்களா.? இப்பவே என்னால எதுவும் பண்ண முடியாதுங்கற அளவுக்கு தான் எல்லாமும் பண்ணிருப்பா" என்றான் கோவமின்றி.

இன்னும் இவனுக்கு மாயாவின் வீட்டின் முன்பு நடந்த கலவரங்கள் எதுவும் தெரியாது. குடித்து விட்டு மண்டையாகி கிடந்தவன் இப்போது தான் சுயநினைவையே பெற்றிருக்கிறான். தெரிந்தால் இவனின் ரியாக்ஷன் என்னவாக இருக்குமோ.?

பாஸ்கரை எந்த அளவிற்கு படுத்தி எடுக்க முடியுமோ.? அந்த அளவிற்கு படுத்தி எடுத்தான் வடிவேலன். அதன் விளைவு தான் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட, விசயத்தை கேள்விப்பட்ட லீலா "பெரியப்பாவை பார்த்துட்டு வர்றேன் அம்மா" என்று தெய்வானையிடம் அனுமதி கேட்டு நின்றாள்.

"வேணாம்டா" என்றவரின் பேச்சை கேட்காமல் "ப்ளீஸ்மா.. போயிட்டு வர்றேன்" என்று கெஞ்சிட, "நீ எதுக்கு அங்க போகணும்.?" என்று வடிவேலனும் சீறியதில் "ப்ளீஸ்ண்ணா மறுக்காதீங்க நான் போய் பெரியப்பாவை பார்த்துட்டு வர்றேன்" என்றவள் அவர்களின் பேச்சை கேட்காமல் கிளம்பி இருந்தாள். அதன்
விளைவு அவள் அவமானப்பட்டு அடித்து துரத்தவும் போகிறாள்.!



தொடரும்..


Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 18



ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் பெரியப்பாவை காண லீலா வந்து விட்டாள். வீட்டினுள் போகவே பயமாக இருக்க, பாஸ்கரின் முணங்கல் சத்தத்தில் தன்னை மீறி உள்ளே சென்று "பெரியப்பா என்ன ஆச்சு.? ரொம்ப வலிக்குதா.?" என்று பதறினாள்.

அவளை கண்டதும் "இங்க எதுக்கு நீ வந்த.? போய் தொலை" என்று அவர் இருந்த வலிக்கு லீலாவிடம் கடுப்படித்திட, சத்தம் கேட்டு வெளியில் வந்த அவளின் பெரியம்மாவும் "வாடி என் படுபாவி.. உன்னைய போனா போகுதுனு வீட்டுல வெச்சதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதைய பண்ணிட்ட..

அங்க இவரை அத்தனை வேலை வாங்கிருக்காங்க அப்பவும் நீ வாயை மூடிட்டு அமைதியா இருந்துருக்க.? இப்ப எனத்துக்கு இங்க வரணும்.? அங்கயே போய் தொலை.. இந்த வீட்டுப்பக்கம் வந்தராத" என்று திட்டினார்.

"நான் ஒன்னும் பண்ணல பெரிம்மா.. இப்படி பேசாதீங்க" என்று லீலா அழுக, "இப்படி அழுது அழுது தான் அவனை மயக்கி வெச்சுருக்காளோனு நினைக்கறேன்.. நடிக்காதடி.. உன்னைய வீட்டுல வெச்சுருக்கறதே ஆபத்து.. ஒழுங்க மரியாதையா இங்கிருந்து கிளம்பிரு.. இல்லைனா அடிச்சு துரத்திருவேன்" என்று பாஸ்கரே வலியுடன் கத்தினார்.

தேம்பலுடன் "உங்களைய விட்டுட்டு நான் எங்க போவேன்.? நீங்களும் இப்படி பேசாதீங்க" என்றிட, "எங்கையோ போய் தொலை.. ஆனா இந்த வீட்டுப்பக்கம் மட்டும் வராத" என்றவரிடம் அழுகையை பதிலாக தந்தாள் பெண்ணவள்.

மனைவியிடம் கூற வேண்டாம் என்று நினைத்தார் பாஸ்கர். ஆனால் அவரால் முடியவில்லை. அனைத்தையும் கூறியதோடு நில்லாமல் 'அவ அங்க ரெண்டு பசங்களோட கூத்தடிச்சுட்டு இருக்கா' என்று விட்டார் கூடுதலாக.!

லீலா வருவாள் என்றே அவர் எதிர்பார்க்கவில்லை. அவளை கண்டதும் வடிவேலனின் மீதிருந்த கோவம் அனைத்தும் இவளின் மேல் தான் திரும்பியது.

"அவளை போக சொல்லு.. எனக்கு வர்ற கோவத்துக்கு அடிச்சுருவேன்" என்று பாஸ்கர் சாடிய போதும் நின்ற இடத்தை விட்டு அகலாமல் அப்படியே அவள் நிற்க, தட்டு தடுமாறி எழுந்த அவர் அழுதிருந்த லீலாவை பட்டென்று அடித்தார்.

அவர்களிடம் வாங்கும் அடி புதியதில்லையே.? வாங்கி கொண்டு அவளும் நிற்க, சண்டாளி சண்டாளி உன்னைய சோறு போட்டு வளர்த்துனது தப்புத்தான்.. என்ன தைரியமிருந்தா அவன் என் பொண்ணையும் மாப்பிள்ளையையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போவேனு சொல்லிருப்பான்.. அப்பவும் நீ வாயை மூடிட்டு தான் நின்னுருக்க.?" என்று அவளின் பெரியம்மாவும் அவரின் பங்கிற்கு அடித்தார்.

அதோடு நில்லாமல் தலைமுடியை கொத்தாக பற்றி வாசலிலும் தள்ளி விட்டு "ஒழுக்கம் கெட்டவளுக்கு எல்லாம் இந்த வீட்டுல இடம் இல்லை.. செய்யறது தப்புனு சொன்னவரை இப்படி அடிச்சு படுக்க வெச்சுட்டு இப்ப நல்லவளாட்டம் வந்து நிற்கறீயா.?" என்று அப்படியே மாற்றி பேசினார் அக்கம் பக்கத்தினர் நிற்பதை கண்டு.!

"பெரிம்மா இப்படி எல்லாம் தப்பா பேசாதீங்க.. நான் அப்படிப்பட்டவ இல்லை" என்று அழுதவளை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல் "ரெண்டு ஆம்பள பசங்க கூட சேர்ந்துட்டு கூத்தடிச்சுட்டு இருக்கீயாடி.? வெக்கமா இல்ல உனக்கு.? த்து பெத்தவ புத்தி தானே உனக்கும் வரும்" என்று லீலாவின் அன்னையையும் தப்பாக பேசினார்.

அந்நேரம் சரியாக காக்கி உடையில் துருவன் வர, லீலாவின் அன்னையை பற்றி பேசியது இவனின் செவியிலும் விழுந்தது. கூனி குறுகி நின்றவளை பார்த்தே என்ன நடந்தது என்பதை ஊகித்தவன் "நான் வர்றப்ப என்னமோ சொல்லிட்டு இருந்தீங்களே மறுபடியும் சொல்லுங்க" என்று கேட்டான் அழுத்தமாக.

அவனை கண்டு பயமாக இருந்தாலும் "எங்க வீட்டு விசயத்துல தலையிட நீ யாருடா.? நான் என்னமோ பேசுவேன் அதைய எல்லாம் உன்கிட்ட நான் ஏன் சொல்லணும்.? உன் வேலையை பார்த்துட்டு போ" என்று சிடுசிடுத்து "நீதான் வர சொன்னீயோ.? ஓஓ இவனை விட்டுட்டு உன்னால ஒரு நிமிசம் கூட இருக்க முடியலயா.? இப்படி தரங்கெட்டவளா இருப்பேனு நான் நினைக்கவே இல்லை" என்றது தான் தாமதம் சப்பென்று ஒரு அறை.

பம்மியபடி பாஸ்கர் கதவோரத்தில் மறைந்திட, "என்னைய யாருனு கேட்டதுக்கு இப்ப நான் பதில் சொல்லணுமா.? இல்ல என்னைய விட்டுட்டு இவ இருக்க முடியலயானு கேட்டதற்கு பதில் சொல்லணுமா.?" என்று எடக்கு மடக்காக கேள்வியை எழுப்பினான்.

வாங்கிய அடியில் அவருக்கு பேசவே நாவு எழ மறுத்திட, துருவனே "ம்ம்ம்ம்ம் அவ மாமன்" என்று விட்டு "தெய்வானை தெரியுமா.?" என்று கேட்டதில் விழிகளை விரித்தார் அவர்.

ஏனென்றால் லீலாவின் அன்னையின் ஒன்றுவிட்ட தம்பியின் மனைவியாயிற்றே அவர். பல நாட்கள் அவர் குடும்பத்துடன் வந்து தங்கி விட்டும் செல்வார். லீலாவின் பெற்றோர்கள் இறந்த சமயம் அவரின் வீட்டு சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் வந்ததும் கிளம்பி இருந்தார்.

லீலாவை அவளின் பெரியப்பாவின் குடும்பம் நன்றாக தான் பார்த்து கொள்கிறது என்பதை கேள்விப்பட்டு அவரும் அவருக்கான வாழ்க்கையில் மூழ்கி விட்டிருந்தார்.

துருவனும் மாற்றலாகி இங்கு வந்ததில் ஏதேச்சையாக இவர்களை பார்த்திட, பின்பு அன்னையிடம் சாதாரணமாக அவர்களை பற்றி விசாரிப்பது போல் விசாரித்து தெரிந்து கொண்டான். இவனே தான் லீலாவை அவனின் வீட்டிற்கு வர வைத்தது.

முதலில் பாஸ்கரை எப்படி மடக்க வேண்டுமோ அப்படி மடக்கி அவரின் சம்மதத்துடன் லீலாவை அவரே அழைத்து வர வைத்ததும்.

அவளின் பயந்த குணத்தை பார்த்து 'இவ என்ன இப்படி இருக்கிறாள்.?' என்று நினைத்து அவளுக்கு தைரியம் வரவழைக்கவும் முயன்றான். இதனால் தான் இன்னும் உண்மையை சொல்லாமல் அவன் இருப்பதும். இது இன்னும் தெய்வானைக்கு கூட தெரியாது.

இவனின் பதிலில் லீலாவே அதிர்ந்து தான் நின்றாள் 'மாமாவா.?' என்று.! பெண்ணவளின் திகைப்பை வாய்விட்டு கூற முடியாது. அனாதையாக நின்றவளுக்கு 'தனக்கும் ஒரு உறவு இருக்கிறது' என்பது தான் அவள் மகிழவே காரணம்.

"என்ன பதிலை காணோம்.? இவ மாமனா நான் கேட்க தான் செய்வேன்.. வர்றப்ப என் அத்தையை வேற தப்பா பேசிட்டு இருக்கீங்க.? அவங்க குணத்துல நீங்க என்ன குறையை கண்டீங்க.? அவங்க பணத்துல உட்கார்ந்து சோறு தின்னுட்டு இப்ப அவங்களயே குறை சொல்றீங்களா.?

இதுல இவளுக்கு நீங்கதான் சாப்பாடு போட்டு வளர்த்துனேனு பெருமை வேற.. இவ காசுல குடும்பமா உட்கார்ந்து தின்னதுல கொழுப்பு ஏறிருக்கு போல.? ஒன்னும் பிரச்சனை இல்லை குறைச்சரலாம்" என்று புதிருடன் பேச்சை நிறுத்தினான்.

பின்பு "இவ என் வீட்டுல தான் இருக்கா.. அங்க என் அம்மாவை பார்க்க தான் இவளை வரவழைச்சது.. இவங்களுக்கு துணையா என் தம்பி இருக்கான்.. நான் குவார்ட்ஸ்ல தான் இருக்கேன்.. அடிக்கடி என் அம்மாவை பார்க்க மட்டும் தான் வீட்டுக்கு போவேன்" என்று சுற்றி இருந்தவர்களிடம் கூறி "வேற ஏதாவது கேட்கணுமா.?" என்று குரலை உயர்த்தினான்.

அதில் பயந்து போனவர்கள் "இல்லை" என்று விட்டு கலைந்திட, "இங்க நின்னு பேச எனக்கு விருப்பமில்லை.. வாங்க வீட்டுக்குள்ள" என்று கட்டளையிட்டு லீலாவை "உள்ள வா" என்றழைக்க, அவளோ 'மாட்டேன்' என்றதில் கடுப்பாகி "ஏய் வாடிங்கறேன்" என்று பெண்ணவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

நடுநாயகமாக அமர்ந்து "யோவ் என்ன உடம்பு சரியில்லாம போனதுல பயம் விட்டு போய்ருச்சோ.?" என்று நாக்கை துருத்தி கேட்டவன்"இப்ப ரெண்டு பேரும் என்ன பண்றீங்கனா உங்களுக்கு தேவையான துணிமணிகளை எடுத்துட்டு கிளம்பறீங்க" என்றதில் அவர்கள் திகைத்து "எங்க கிளம்பணும்.?" என்று பயந்தனர்.

"ஏன் சொன்னா தான் கிளம்புவீங்களோ.?" என்று வந்த இவனின் காட்டமான குரலில் அவர்கள் அச்சமடைந்து தேவையானதை எடுக்க உள்ளே ஓடிட, "அவங்க..." என்று ஏதோ சொல்ல வந்த லீலாவே இவனின் ஆத்திரமான பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்.

வேகமாக அவர்களும் வந்து விட, "கிளம்புங்க" என்றவன் "ஏய் வாடி உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா.?" என்று சிடுசிடுத்தாலும் பெண்ணவளின் கையை மட்டும் அவன் விடவில்லை. கூட வந்த கான்ஸ்டபிளிடம் வீட்டை பூட்டி விட்டு வருமாறு பணிந்தான்.

பின்பு பாஸ்கரிடம் "வீடு தெரியும்ல.?" என்று கேட்க, அவசரமாக அவரும் "தெரியும்" என்றதில் "வந்து சேருங்க" என்று விட்டு லீலாவை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

ஏதோ வேலையென இந்த பக்கம் வந்து துருவன் வீட்டிற்கும் செல்ல, வடிவேலனும் யாரின் பேச்சையும் கேட்காமல் லீலா சென்றதை அவனிடம் கூறிட, அதன்பின்பு தான் துருவனும் அங்கு வந்தது.

தெய்வானையிடமும் இவள் யாரென்று துருவன் உரைத்திட, "சங்கரி மகளா.? உன்னைய பார்க்கறப்ப எங்கையோ பார்த்த மாதிரியே இருக்குதுனு யோசிச்சுட்டே இருந்தேன் கண்ணு.. இப்ப தான் தெரியுது.. இவன் சொல்லவே இல்லை" என்று கேட்டு லீலாவை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. என்ன தான் இவர் தம்பி மனைவியாக இருந்தாலும் இருவருக்கும் ஒரே வயது என்பதால் தோழிகளை போல தான் இருந்தனர். அவரின் இறப்பு இவரை பாதித்தது தான். ஆனால் அவரின் மகளை தன்னுடன் அழைத்து சென்று வளர்க்க முடியாத சூழ்நிலை. அடிக்கடி அவரை பற்றி நினைப்பார். அவரின் மகள் இருப்பதையே இவர் மறந்தும் விட்டிருந்தார். இப்போது மட்டற்ற பெருமகிழ்ச்சி.

"இத்தனை வருசமா அந்த பாவிமகனும் அவன் பொண்டாட்டியும் உன்னைய இத்தைன கொடுமை பண்ணிருக்காங்களா.? இங்க அவன் வந்தப்ப கூட அந்த புள்ளைய நம்பாதீங்க.. உங்க பையனை வளைச்சு போட்டாலும் போட்டுருவா.. பார்த்து சூதானமா இருங்கனு சொன்னான் கண்ணு.. அப்பவே அவன் வாய்ல வசம்பை வச்சு தேச்சுருக்கேன்" என்று பாஸ்கர் லீலாவை தவறாக சித்தரித்து கூறியதை மறைக்காமல் அவரிடமும் கூறினார் தெய்வானை.

இது எப்போதும் நடப்பது தான் என்பதால் லீலா அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரணமாக தான் இருந்தாள். அவள் கோவப்படுவாள் என்று எதிர்பார்த்த துருவனுக்கு ஏமாற்றம் தான் எழுந்தது.

'இவளை எந்த நேரத்துல பெத்து வெச்சுருக்காங்களோ.?' என்று முணுமுணுத்து தன் கடுப்பை அடக்கினான். இதையறியாமல் வடிவேலனோ "அப்ப நீ எனக்கு மாமன் பொண்ணா.?" என்று கேட்டதில் துருவனிடம் இருந்து பளாரென்ற ஒரு அறையும் பரிசாக கிடைத்தது.

"ஏன்டா.? என் சந்தேகத்தை கேட்டதுல என்ன தப்பு.?" என்று பாவமாக கேட்டவனை கண்டு கொள்ளாமல் "வெளில வா" என்று விட்டு அவன் செல்ல, 'எதுக்கு வர சொல்றான்.?' என்று புரியாமல் வடிவேலனும் அவனின் பின்னே வந்தான். இல்லையென்றால் மீண்டும் ஒரு அறை பரிசாக கிடைக்குமே.?

லீலாவின் பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்து சேர, அவர்களை வாசலிலே நிறுத்தி "இவங்கள அந்த கடைசி வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வாடா" என்று துருவன் கட்டளையிட்டான்.

'யாரை கொண்டு போய் விடணும்.?' என்று வெளியில் வந்த வடிவேலன் பெரியம்மாவின் கன்னம் சிவந்து கிடப்பதை கண்டு குதூகலித்து 'ஹப்பாடி இவங்களும் அடி வாங்கியாச்சு.. யோவ் பெரிய ஆப்பு நீ இந்த தடவை அடி வாங்காம தப்பிச்சுட்டியா.? சரி விடு அடுத்த தடவை ஒன்னுக்கு ரெண்டா வாங்க வெச்சறேன்' என்று மனதினுள் நினைத்தான்.

கிளம்பும் முன்பு "தினமும் இங்க வந்து தான் சாப்பிட்டு போகணும்.. என்ன புரியுதா.?" என்று அதட்டி கூறிட, அவர்களும் பயத்தில் சரியென்றனர். பக்கத்தில் தான் வீடு இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஐந்து கிலோமீட்டர் கடந்தே வீடு வந்தது. குடிக்க தண்ணீரை கூட ஒரு கிலோமீட்டர் கடந்து வந்து தான் எடுத்து செல்ல வேண்டும்.

இதில் தினமும் சாப்பிட ஐந்து கிலோமீட்டர் நடப்பது என்றால் அவர்களால் முடிந்த காரியமா.? ஆனால் சாப்பாடு வேணுமென்றால் நடந்து தான் ஆக வேண்டுமே.?

"என்ஜாய் பெரிய ஆப்பு.. அடுத்த தடவை என் அண்ணன்கிட்ட சொல்லி இதைய விட பெரிய ஆப்பாஆஆஆ வெக்க சொல்றேன்" என்று கேலி செய்து விட்டு கிளம்பினான் வடிவேலன்.

லீலாவை தெய்வானை எங்கும் விடவே இல்லை. தன்னருகிலே வைத்து கொண்டார். அவரின் கடந்த கதைகளை கூறி கண்கலங்கவும் வைத்தார்.

"நீ பிறந்ததும் சும்மா விளையாட்டுக்கு நீதான் என் மருமகனு நான் உன் அம்மாகிட்ட சொல்லிட்டே இருப்பேன்.. அவளும் சிரிச்சுட்டு சரி நீங்களே உங்க மருமகளை வெச்சுக்கங்கனு சொல்லுவா" என்று நிறுத்தி "என் பையனை நீ கல்யாணம் பண்ணிக்கறீயா.? உன்னைய என்கூடவே நான் வெச்சு பார்த்துக்கறேன்" என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்டார்.

இவரின் திடீர் கேள்வியில் லீலா பயந்து விட, அந்நேரம் உள்ளே வந்த துருவனோ "எனக்கு இதுல சம்மதம் இல்லமா" என்று
விட்டான் பட்டென்று.!

இப்போது அதிர்வது தெய்வானையின் முறையாயிற்றே.!



தொடரும்..




Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 19



மகனின் பதிலில் "ஏன்டா லீலாக்கு என்ன குறை.?" என்று அவனின் அன்னையே கோவப்பட்டு கேட்க, "எல்லாமும் குறை தான்மா" என்று கூறி லீலாவை அழுக வைத்தான்.

"ப்ச் இப்படியெல்லாம் பேசாதடா.. பாரு புள்ள அழுகறா" என்று மகனை அதட்டி "அவன் கிடக்கறான் நீ அழுகாத கண்ணு" என்று சமாதானப்படுத்திட, "ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு.? இப்படி எல்லாத்துக்கும் பயந்துட்டு இருக்கறவளை நான் கல்யாணம் பண்ணுனா நல்லாவா இருக்கும்.? எனக்கு வர்றவ பயப்படாம எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தெரிஞ்சவளா இருக்கணும்.. எப்ப பார்த்தாலும் இல்ல இல்லனு தேம்பிட்டு இருக்கறவளா இருக்க கூடாது" என்று லீலாவை கேலி செய்தான்.

இதில் அவளின் தேம்பல் இன்னும் அதிகமாகிட, "ப்ச் நீ முதல்ல இங்கிருந்து போடா.. எப்ப பார்த்தாலும் யாராவதை அடிக்க வேண்டியது.. இல்லனா அழுக வெக்க வேண்டியது" என்ற தெய்வானை "நீ அழுகாதடா.. உனக்கு இவனை விட நல்ல பையனா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வெக்கறேன்" என்று கூறி அவளின் அழுகையை நிறுத்த முயன்றார்.

அவர்களை உறுத்து விழித்த துருவன் எதுவும் பேசாமல் அகன்றிட, லீலாவை சமாதானப்படுத்துவதில் குறியாக இருந்த தெய்வானை மகனின் பார்வையை கவனிக்க தவறினார்.

அவன் தான் லீலா வந்ததுமே அவளிடம் விழுந்து விட்டிருந்தானே.? அதுவும் அத்தை மகள் வேறு. அவனுக்கு இல்லாத உரிமையா.? அப்பாவியாக முழித்து நிற்கும் பாவனையை காணவே அவன் அவளை அதட்டிக் கொண்டே இருந்தான்.

அதுவும் திருடி விட்டு சென்று விடுவாய் என்று கூறி கத்தியதெல்லாம் இவன் வேணுமென்றே செய்தது. ஆம் அவள் தான் திருடி விட்டாளே இவனின் விலைமதிப்பில்லாத இதயத்தை.! பின்னர் இவன் அவளை குற்றம் சுமர்த்துவதும் நியாயம் தானே.?

இப்போதாவது அவள் வாயை திறந்து எனக்கு சம்மதம் என்கிறாளா.? எதற்கெடுத்தாலும் அழுகை தான் என்ற எரிச்சல் அவனுக்கு.!

அவளை வம்பிழுக்கவே அவன் வீட்டில் இருந்தான். வடிவேலனிடமும் தெய்வானை தன் விருப்பத்தை கூறிட, "எனக்கும் ரொம்ப சந்தோஷம் அம்மா.. ஆனா அவன் சம்மதம் சொல்லணுமே.?" என்றவனிடம் "முதல்ல இவ சம்மதம் சொல்லணும்டா" என்றார் சலிப்புடன்.

"சரி விடுங்கமா.. பார்த்துக்கலாம்.. தங்கச்சியை சமாதானப்படுத்தறது பெரிய விசயமில்லை.. ஆனா துருவனை நினைச்சா தான் எனக்கே பயமா இருக்குமா.. அவன்கிட்ட பேச முடியுமா.?" என்று யோசனையுடன் கேட்டிட, "பேசித்தான் ஆகணுமேடா.. அவனை இப்படியே விட முடியுமா.?" என்று கவலையும் கொண்டார் மகனை நினைத்து.!

திருமணம் என்ற வார்த்தை அவனின் செவியில் விழுந்தாலே கத்த ஆரம்பித்து விடுகிறான். அவனிடம் பேசி பேசி தெய்வானை தான் ஓய்ந்திருந்தார்.

துருவனை காணவே பெண்ணவளுக்கு தயக்கமாக இருந்தது. ஓரக்கண்ணால் அவனை பார்க்கவும் தவறவில்லை. அவனை பிடித்தது ஆனால் அவனின் முறைப்பை பார்க்கவே பயமாகவும் இருக்க, இருதலைக்கொல்லி எறும்பாக தவித்தாள்.

அவன் இருந்தால் வெளியில் வரவே லீலா தயங்கினாள். ஏதேச்சையாக இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொள்ளும் சூழல் அமைய, ஆடவனின் விழி வீச்சை எதிர் கொள்ள முடியாமல் பெண்ணவள் தான் அங்கிருந்து ஓடினாள்.

'இவளுக்கு இதே வேலையா போய்ருச்சு' என்று துருவன் சலித்து கொள்ளவும் மறக்கவில்லை.

நடந்த கலவரத்தை வைத்து "ரசிகர்கள் எங்களின் நடிப்பிற்கு மட்டும் ரசிகர்களாக இருந்தால் போதும்" என்ற கருத்தை அவளின் சமூக வளைதளங்களில் வெளியிட்டாள் மாயா.

நல்லது சொன்னால் ஏற்றுக் கொள்ள கூடிய மக்களா இது.? அவளின் குணத்தையே தவறாக சித்தரிக்க தொடங்கிட, 'இதுக்கு முன்னாடி வந்த உன் படுக்கையறை வீடியோ மட்டும் பக்தி படமா.?' என்று கேவலமான கருத்துக்கள் விடாமல் வந்தது.

பயப்படாமல் இதற்கும் "விருப்பப்பட்டு படுப்பதும் விருப்பமே இல்லாமல் கட்டாயப்படுத்தி புனர்வதும் ஒன்றா.? இந்நிலை இன்று யாரோ ஒருவருக்காக இருக்கலாம்.. ஆனால் நாளை இவனால் உன் வீட்டின் பிள்ளைகளுக்கும் நடக்க வாய்ப்புண்டு" என்று பதிலடி குடுத்தாள்.

இதுவும் மின்னலென பரவியது. சமூக வளைதளங்களில் இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி விவாத பொருளாகவும் மாறியது. சிலர் இவளுக்கு ஆதரவாகவும் பலர் இவளுக்கு எதிராகவுமே கருத்துக்களை வெளியிட்டனர்.

இவர்கள் எல்லாம் திருந்த போவதில்லை என்றுணர்ந்து தியாவின் பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியும் நோக்கில் அறக்கட்டளை ஒன்றை தொடங்குவதற்கான வேலையில் கவனமாக இருந்தாள் மாயா.

நடந்த கலவரத்தை வருண் அறிந்ததுமே தன் ரசிகர்களை சாடி பதிவும் இட்டான். ஆனால் அவனுக்கென்று இருந்த ரசிகர் கூட்டம் மட்டும் குறையவில்லை. பெண் என்பதாலோ மாயாவை மட்டும் குற்றம் சுமர்த்தவே காத்திருந்தனர்.

மாயாவிடம் இவன் பேசிட, "நான் நன்றாக இருக்கிறேன்.. பிரச்சனை எதுவும் இல்லை" என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டாள். இல்லையென்றால் மீண்டும் அவள் ராம்பிரபுவை வெளியில் எடு என்று நச்சரிக்க ஆரம்பித்து விடுவானே.?

வருணும் வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. சொல்லபோனால் வீட்டிற்கே செல்லாமல் லீலாவுடன் வாழ்ந்த வீட்டில் தான் இருக்கிறான். அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தாலும் எடுப்பதில்லை. இவன் என்ன முடிவுடன் இருக்கிறான் என்பது அவனே அறியாத ஒன்று.

ஆனால் மாயாவை வந்தடைந்த செய்தி அவளை திகைப்படையவே வைத்திட, அவளால் நம்ப முடியவில்லை . நம்பாமலும் இருக்க முடியவில்லை. 'உண்மையாகவா.?'
என்று விடாமல் கேட்டாள் மாயா.




தொடரும்..


 
Status
Not open for further replies.
Top