ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாயலீலா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 5



வீட்டிற்கு வந்த வருணை உள்ளே விடாமல் தடுத்து "என் பையன் இப்பவே வெளில வந்தாகணும்" என்று அவனின் அன்னையான சுசிலா சினந்திட, முதலிலே குற்றவுணர்வில் மிதந்தவனுக்கு அன்னையின் மிரட்டல் கடுப்பை தான் கிளப்பியது."

"அவன் என்ன உத்தமனா.? தப்பு செஞ்சவன் தானே.? அதுக்கு தண்டனை அனுபவிக்கறதுல என்ன தப்பு.? நான் செய்ய வேண்டியதை மாயா செஞ்சுருக்கா அவ்ளோதான்.. அப்பவே தண்டனை வாங்கி குடுத்துருக்கணும்.. எல்லாம் என் தப்புத்தான்" என்று சீறினான்.

மகனின் வார்த்தையில் அதிர்ச்சியுற்றவர் கோவத்தை தணித்து "வருண் என்னப்பா இது.? அவன் உன் தம்பி.. ஏதோ தெரியாதனமா தப்பு பண்ணிட்டான்.. ஆனா கொலை எல்லாம் பண்ணலயே.? அவளே தான் உயிரை விட்டுருக்கா.. அதுக்கு எப்படி பிரபு பொறுப்பாவான்.? பாவம்பா அவன்.. அங்க என்ன பண்றானோ.?" என்று கண்ணீர் உகுத்தார்.

சுசிலாவின் அழுகையால் வருணிண் கடுகடுப்பும் குறைய, தலையை அழுத்த கோதி கொண்டவன் "புரிஞ்சுக்கங்கமா.. அவன் வெளில வந்தாலும் திருந்த மாட்டான்.. கொஞ்ச நாள் உள்ளேயே இருக்கட்டும்.. அப்பதான் புத்தி வரும்" என்றான் அமைதியாக.

இதில் ஆங்காரமாக மாறிய அவர் "என்ன சொன்ன.? என்ன சொன்ன.? அவன் உள்ளயே இருக்கணுமா.? பெத்த வயிறு எரியுதுடா.. உனக்கு கூட பிறந்தவனை விட அந்த பொட்டாச்சி தான் முக்கியமா போய்ட்டாளா.? அவகிட்ட அப்படி என்னத்த கண்டா.? உலகத்துல இல்லாத அழகியா அவ.?

அவ என்ன சொன்னாலும் தலையாடிட்டு இருக்க.? அவளை மீறி உன்னால என் பையனை வெளில எடுக்க முடியாதா என்ன.? நீ என்ன பண்ணுவீயோனு தெரியாது என் பையன் இப்பவே வெளில வந்தாகணும்.. இல்லனா நான் செத்துருவேன்" என்று சினந்தவர் டேபிளில் மேலிருந்த கத்தியை எடுத்து கையை அறுக்க முயன்றார்.

"இப்ப கூட உனக்கு அவ தான் முக்கியமா போய்ட்டா.. அம்மா செத்தாலும் உனக்கு கவலையில்லையா.? அம்மாக்கு ஏதாவது ஆகிட்டா நானும் அம்மா கூடவே போய்ருவேன்" என்று சுபவர்ஷினியும் அவனை மறைமுகமாக மிரட்டினாள்.

வேறு வழியும் இல்லை ராம்பிரபுவை வெளியில் எடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் பெற்றவளின் சாபத்திற்கு ஆளாக வேண்டும். தங்கையின் மிரட்டலையும் கணக்கில் கொண்டு வெறுப்புடன் அதற்கான வேலையையும் செய்திட, ஜாமீனில் வெளியில் வந்தான் ராம்பிரபு.

இதற்கு காரணம் மாயா தான் என்றும் வேணுமென்றே அவனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இதை செய்ததாக செய்தியும் உலாவ தொடங்கியது.

'இவ மட்டும் ரொம்ப உத்தமி போல.?'
'பட வாய்ப்புக்காக எத்தனை பேரு கூட படுத்துருப்பா.?'
'பணத்தை வாங்கிட்டு கண்டவனை எல்லாம் தொட விட்டுருப்பா'
'இவளே யோக்கியமில்ல இதுல அடுத்தவனை சொல்ல வந்துட்டா'
'இதுல என்ன விசயம்னா கேரவேன்ல சிசிடிவி கேமரா வெச்சுருக்காங்கனு ஒரு புரளியையும் பரவி விட்டுருந்தா.. இவளே படத்துல அவுத்து போட்டுட்டு ஆடறவ தானே.?'
'எல்லாம் பணம் செய்யற மாயம்.. இப்ப அந்த ராம்பிரபு பணத்தை குடுத்தா அவன் கூடவும் இவ படுக்க தயங்க மாட்டா'
'அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு தம்பிகூட இருந்தாலும் இருப்பா.. யாரு கண்டா.?' என்று வக்கிர குணமுடையவர்கள் அவளின் குணத்தையே தூற்றி சாடினார்.

ராம்பிரபு வெளியில் வந்து விட்டான். வருணின் தம்பி என்பதால் அவனுக்கு ஓரிரு படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பும் கிடைத்திருக்க, அவனுக்கென்று சில ரசிகர் பட்டாளமும் இருந்தது.

அவன் கைதான செய்தியை அறிந்ததுமே சில இடங்களில் மாயாவின் பேனரை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க, இப்போது என்னவென்றால் அவதூறு பரப்பியதற்காக மாயாவை கைது செய்ய கோரி போராட்டமும் நடத்தியது.

மோசமான கருத்துக்கள் தான் அவளை வந்தடைந்தது. அனைத்தையும் சாதாரணமாக பார்த்திருந்தவளின் கரங்களோ தன் மகளை தட்டி குடுத்து தூங்க வைப்பதிலே குறியாக இருக்க, அவளை பாவமாக பார்த்தாள் மீரா.

"மேடம் நான் வேணா சாட்சிக்கு வரட்டுமா.?" என்று மனம் தாங்காமல் மீரா கேட்டிட, "அப்படி ஏதாவது பண்ணனும்னு நினைச்சா அப்பிருவேன்.. ஊருல இருக்கற உன் அம்மா, அப்பா நிலைமை என்னவாகும்.? பாவம் அவங்க.. நீ வாயை திறக்கவே கூடாது.. இல்லனா பேசாம நீ உன் ஊருக்கே கிளம்பு" என்று அடக்கினாள்.

அப்போதும் அடங்காமல் "அவனால நானும் பாதிக்கப்பட்டிருக்கேன் மேடம்.. எப்படி அமைதியா இருக்க முடியும்.?" என்று விம்மிட, மகளின் தூக்கம் கலைந்து விட கூடாது என்பதற்காக "அதைய கெட்ட கனவா நினைச்சு மறக்க சொன்னேன்" என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

தேம்பலை பதிலாக குடுத்தவளை "ப்ச் முதல்ல இங்கிருந்து எந்திரிச்சு போ.. இப்படி அழுகறதை பார்த்தா எனக்கு செம கோவம் வருது.. தியா பயந்துருவாளோனு அமைதியா பேசிட்டு இருக்கேன்" என்று சாதாரணமாக கூறுவதை போல் மாயா கூறினாலும் அவளின் குரலில் அத்தனை கோவம்.

மாயாவின் வீட்டை மீடியா ஆட்களும் சூழ்ந்து கொண்டது. அவர்களை உள்ளே வர விடாமல் ஆட்கள் தடுத்து கொண்டிருக்க, அதையும் மீறி "மாயா மேடம் உங்க மேல தப்பு இருக்கறனால தான் வெளில வர மாட்டிங்கறீங்களா.?" என்று கத்தி அவளை வெளியில் வர வைத்திட போராடியது.

அவர்களின் எண்ணம் இவள் அறியாததா.? சினிமா துறையில் இவள் சந்திக்காத நிகழ்வா என்ன.? நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளுங்கள்.. நான் வெளியில் வர போவதில்லை என்ற தீர்மானத்துடன் மனதை அமைதிப்படுத்துவதற்காக யோகாவில் மூழ்கி விட்டிருந்தாள் வருணின் மாயா.

இன்னும் எழாமல் அப்படியே அமர்ந்திருந்தவளை கடுப்புடன் பார்த்த துருவன் "ஏய் இங்க எதுக்கு நீ வந்துருக்கேனு தெரியுமா.?" என்று அதட்டி அவளை எழ வைத்தான்.

'தெரியும்' என்ற அவளின் பதிலை எதிர்பாராமல் "வா அம்மா எந்திரிச்சுட்டாங்க.. உன்னைய அறிமுகப்படுத்தி வெக்கறேன்.. அவங்கள கவனமா பார்த்துக்கணும் புரியுதா.?" என்று கேட்டிட, வேகமாக தலையை ஆட்டினாள் லீலாவும்.

அவளின் செய்கை சிறுபிள்ளைத்தனத்தை தான் ஞாபகப்படுத்தியது. அரும்பிய புன்னகையை இதழுக்குள்ளே மறைத்து "சமைக்க தெரியுமா.?" என்றும் வினவ, மௌனமாக இருந்தால் சரி வராது என்று "சமைப்பேன்" என்ற கேள்விக்கான பதிலையும் அளித்தாள்.

கட்டலில் படுத்திருந்தவரை கண்டதும்
லீலாவின் மனது வருந்தியது. 'ப்ச் பாவம் இந்த அம்மா' என்று தான் பெண்ணவளின் நினைவில் வருத்தமும் எழுந்தது.

இவ்வளவு நேரம் அவளை அதட்டிய குரல் மறைந்து கனிவாக "அம்மா" என்றழைத்து அவரை கண்விழிக்க செய்திட, 'ஆத்தாடி இவனுக்கு இப்படி அமைதியா பேசவும் தெரியுமா.?' என்று உள்ளுக்குள் வியந்து கொண்டவள் வெளியில் எவ்வித பாவனைகளையும் எதிரொலிக்கவில்லை.

அவரை எழுந்தமரவும் உதவி செய்தான். லீலாவை யாரென்ற பாவனையில் அவரும் பார்க்க, "இவங்க தான்மா உங்களைய பார்த்துக்க வந்துருக்கற பொண்ணு.. என்ன வேணும்னாலும் இவங்ககிட்ட கேளுங்க" என்றவன் திரும்பி‌ "உன் பேரு என்ன.?" என்று கேட்டான்.

அதற்குள் அவனின் அன்னையான தெய்வானையே "நான் பேசிக்கறேன்.. நீ போ துருவன்" என்று விட, "சரிம்மா" என்று தாயின் பேச்சிற்கு மதிப்பளித்து எழுந்து சென்றான்.

"இங்க வந்து உட்காருமா" என்று பெண்ணவளை தன்னருகில் அமர வைத்தவர் அவளை பற்றி விசாரித்தார். கனிவான பேச்சில் லீலாவும் மடை திறந்த வெள்ளமென தாய், தந்தை இல்லாத கதையை மட்டும் கூறினாள். மற்றதை மறந்தும் கூற நினைக்கவில்லை.

அவளை யோசனையுடன் ஏறிட்டு "உன்னால என்னைய பார்த்துக்க முடியுமாம்மா.? ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீயே.? முடியாதுனா தயங்காம சொல்லிரு நான் துருவன்கிட்ட சொல்லி உன் பெரியப்பாகிட்ட பேச சொல்றேன்" என்று கேட்டவரின் வார்த்தையே இனித்தது.

முடியாது என்று விட்டு அங்கு சென்றால் இவளால் இருக்க முடியுமா.? பேசாமல் இவருடனே இருந்து விட்டால் என்ன என்று தான் தோன்றியது. இவளும் சின்ன சிரிப்புடன் "எனக்கு பழக்கமில்லை தான்மா.. ஆனா பழகிக்குவேன்" என்று உண்மையை உரைத்தாள்.

இதில் அவரின் முகமும் மலர்ந்தது. தலையை தடவி புன்னகைத்திட, அதில் தாயின் வருடலை உணர்ந்தவளுக்கு கலங்கிய கண்களை அவரிடம் காட்டாமல் இருக்க கஷ்டப்பட்டு போனாள்.

"நான் இப்ப என்ன பண்ணனும்.? இந்த நேரத்துல ஏதாவது சாப்பிடுவீங்களா.?" என்று அவளின் வேலைகள் என்னவென்று வினவினாள். இதை இவரிடம் தான் கேட்க முடியுமே துருவனிடமா கேட்க இயலும்.? அப்படி கேட்டாலும் 'நீ எதுக்கு இங்க வந்த.?' என்று கேட்டு முறைப்பானே.? எதற்கு வம்பு இவரிடமே பேச்சு வார்த்தைகளை வைத்து கொள்வோம் என்ற முடிவையும் எடுத்து கொண்டாள்.

தெய்வானையும் புன்னகையுடன் அவள் செய்ய வேண்டியது என்ன என்னவென்று பட்டியலிட தொடங்கினார். "இருங்கமா நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்" என்று வேகமாக சென்றவள் துருவன் இருப்பதையும் மறந்து வீட்டில் என்ன இருக்கிறது என்று தேட துவங்கினாள்.

அவள் உருட்டிய சத்தத்தில் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தவன் வேகமாக வெளியில் வந்து அவளை தவறாகவும் நினைத்து "ஏய் என்ன பண்ணிட்டு இருக்க.? ஏதாவது திருடிட்டு ஓடலாம்னு நினைக்கறீயா.? ச்சைக் இதுக்கே அலைவீங்களாடி.? உழைச்சு சாப்பிடணும்னு எண்ணமே வராதா.? இப்படி அடுத்தவன் கிட்ட இருந்து திருடிட்டு போய் உங்களால நிம்மதியா சோறு திங்க முடியுமா.?" என்று படபடவென்று பொரிந்தான்.

ஆடவனின் கேள்விக்கணையில் விக்கித்து நின்றவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. எதுவும் பேசாமல் தலையை மட்டும் குனிந்து கண்ணீரை அவனிடம் இருந்து மறைத்தும் நின்றாள்.



தொடரும்..

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 6



துருவனின் சிடுசிடுப்பில் பெண்ணவள் நொறுங்கி போனாலும் "அது.. அது அம்மாக்கு.. அம்மாக்கு ஏதாவது சாப்பிட குடுக்கலாம்னு" என்று உண்மையான காரணத்தை கூறினாள். அதற்குள் இமைகளும் கலங்கி போயின.

பெண்ணவளின் குரலே அது உண்மை என்று பறைசாற்றிட, ப்ச் என்று தலையை உலுக்கி கொண்டவன் "சரி பாரு" என்று விட்டு நகர்ந்தான். இது அவனுக்கு சாதாரணமாக தோன்றினாலும் லீலாவால் கடந்து செல்ல முடியவில்லை என்பதே உண்மை. 'இந்த அவமான வாழ்க்கை தேவையா.?' என்று மருகினாள்.

அவளின் பெரியம்மா இதை விட அவமானப்படுத்தி இருக்கிறார் தான் அதில் பெரியம்மா என்ற ஒரு உறவு இருந்தது. ஆனால் இவன் தன்னை திருடி என்றளவுக்கு நினைத்து தன்னை சந்தேகப்பட்டு சாடுவதை ஏன் கேட்க வேண்டும்.?

முடியவில்லை வந்த அன்றே மீண்டும் வீட்டிற்கே சென்று விடலாமா.? என்று தோன்ற தொடங்கியது. தெய்வானையின் அரவணைப்பான பேச்சும் பின் சென்று இருந்தது. யாரும் இல்லையென்றாலும் பரவாயில்லை தனியாக இருப்பதில் என்ன பிரச்சனை வந்து விட போகின்றது.?

இந்த வேலை வேண்டாம் என்று கூறினால் அவளின் பெரியப்பா சரி என்று தலையசைத்து விடுவாரா என்ன.? வார்த்தைகளாலே குத்தி குத்தி காயப்படுத்துவாரே.? வீட்டிற்கு சென்றால் அவளின் பெரியம்மாவும் சாடி அடிக்க வேறும் செய்வாரே.?

எப்போதும் போல் 'ஏன்மா என்னைய மட்டும் விட்டுட்டு போனீங்க.? என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போய்ருக்கலாமே.?' என்று எண்ணி அழுதாள். "லீலாம்மா என்னமா பண்ற.?" என்ற தெய்வானையின் அழைப்பில் தான் சட்டென்று அழுகையை நிறுத்தியவள் "இதோ வர்றேன்மா" என்று குரல் குடுத்து முகத்தை அழுத்த துடைத்தாள்.
ஆனால் அழுததற்கு சாட்சியாக கருமணிகள் இரண்டும் சிவந்து காணப்பட்டது.

"என்னம்மா என்னமோ எடுக்க போன.? இப்ப வெறும் கையோட வந்து நிற்கற.? வீட்டுல எதுவும் இல்லையா.? அவன் எப்பவும் அப்படித்தான்மா வேணுங்கறதை மட்டும் தான் வாங்குவான்.. இல்லைனா விட்டுருவான்.. நாங்க இங்க வந்து ஒரு மாசம் தான் ஆகுது.. அதனால அதிகமாக எதுவும் அவன் வாங்கி இருக்க மாட்டான்..

அதுவும் இல்லாம நாங்க ரெண்டு பேரும் தான் இருக்கோமே.? எதுக்கு தேவையில்லாம வாங்கிட்டுனு அவன் விட்டுருப்பான்.. என்ன என்ன இல்லைனு நீ சொன்னா நான் அவன்கிட்ட சொல்லி வாங்கி போட சொல்றேன்டா" என்று ஒரு தாயாக பேசியவரை கண் இமைக்காமல் கண்டாள்.

இதுவரை இப்படி யாரும் கனிவாக இவளிடம் பேசியதில்லை. அவளின் பெரியம்மாவிற்கு பயந்தே யாரும் இவளிடமும் பேச மாட்டார்கள். கிட்டத்தட்ட சிறைவாசம் போல் தான் இவளின் வாழ்வும். அவள் வளர்த்தும் நாய்குட்டியிடம் மட்டும் அவ்வப்போது அவளின் பேச்சும் வெளிப்படும். இல்லையென்றால் அவளுக்கு பேச வராது என்று முத்திரையையும் குத்தி இருப்பார்கள்.

அவளின் எண்ணங்களில் இவள் லயித்திருக்க, "லீலாம்மா என்னடா யோசிச்சுட்டு இருக்க.? ஏதாவது சொல்லணுமா.? தயங்காம சொல்லு" என்று அன்பாக கேட்டவரிடம் "ஒன்னுமில்லமா.. நான் உங்களைய பார்த்துக்க மட்டும் தான் வந்துருக்கேன்.. இதுல எப்படிமா மத்த பக்கம் போக முடியும்.? சமையல் யாரு செய்வாங்களோ அவங்ககிட்ட கேட்டுக்கங்க" என்று விட்டாள்.

கதவருகில் துருவன் நின்றிருப்பதை உணர்ந்து தான் இவள் இவ்வாறு கூறினாள். கேட்ட துருவனின் முகம் ஒரு கோணலாக வளைந்தது. 'வேலைக்கு வந்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா.? எனக்கும் திருப்பி பதில் வர முடியும்' என்று உணர வைத்திருந்தாள் பெண்ணவள்.

லீலாவின் பதிலுக்கு மறுபேச்சு பேச நினைக்கும் முன்பே மகன் நின்றிருப்பதை கண்டு விட்டு "என்னப்பா உனக்கு என்ன வேணும்.? ஏதாவது சொல்ல வந்தீயா.?" என்று தெய்வானை வினவிட, ஆமா என்று தலையாட்டி பின்பு இல்லையென்றும் தலையை அசைத்து விட்டு நகர்ந்தான் யோசனையுடன்.

'இவனுக்கு என்ன ஆச்சு.?' என்று நினைத்தவர் லீலாவிடம் "இவனுக்கு இப்படித்தான்மா அடிக்கடி புத்தி மழுங்கி போய்ரும்.. அப்பறம் அவனே தெளிஞ்சுக்குவான்.. என்னத்த சொல்ல.?" என்று பெருமூச்சு விட்டவர் "நான் கொஞ்சம் நேரம் படுத்துக்கறேன்மா" என்று அவளின் உதவியுடன் படுத்தும் விட்டார்.

லீலாவிற்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. இருந்தும் அந்த அறையிலே அமர்ந்து விட்டாள். சிறிது நேரம் அமைதியாக இருந்தவளுக்கு நேரத்தை கடத்துவது பெரும்பாடாக இருந்திட, புத்தகங்கள் அடுக்கிய அலமாரி இவள் கண்ணில் பட்டது.

அதை கண்டதும் கண்களில் மின்னலடித்திட, ஆர்வமாக எழுந்து அதை திறந்தவளின் விழிகளில் முதலில் சிக்கியது கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் தான். இவள் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை.

புத்தகத்தை எடுத்து திருப்பி திருப்பி பார்த்த லீலாவின் மனதில் மட்டமற்ற பெருமகிழ்ச்சி. எதையும் யோசிக்காமல் கதவை லேசாக சாற்றி விட்டு புத்தகத்தில் ஆழ்ந்தும் விட்டாள்.

கதையோடு இவளும் பயணித்து கொண்டிருக்க, நிமிடங்களும் மின்னலென கடந்திருக்க, தெய்வானையிடம் அசைவு தெரிந்ததும் உடனே புத்தகத்தை மூடி அவசர அவசரமாக அலமாரியில் வைத்தாள் அவர் ஏதாவது கூறி விடுவாரோ என்ற அச்சத்தில்.!

வெளியில் துருவனின் குரல் கடுமையாக ஒலித்திட, 'என்ன ஆச்சு.?' என்று புரியாமல் எழுந்தவளுக்கு வெளியில் செல்ல வேண்டுமா.? என்று தான் தோன்றியது.

வேண்டாம் என்ற முடிவுடன் இவள் அமர நினைத்த நேரத்தில் "ஏய் பெண்ணே வெளில வா" என்று துருவனின் குரலும் இவளை வந்தடைந்தது. இவன் எதற்கு தன்னை இப்படி கடுங்கோவத்தில் அழைக்கிறான் என்று எண்ணி நடுநடுங்கியும் போனாள்.

ராம்பிரபுவின் பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. விதவிதமாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டே இருந்தது. பிரபுவின் மனது தான் விடாமல் கொதித்து கொண்டிருந்தது. மாயாவை ஏதாவது செய்ய வேண்டும் என்று வன்மமும் அவள் மேல் கொண்டான்.

வருணின் முன்பு வராமல் இவன் ஆட்டம் காட்டி கொண்டிருக்க, மாயா நடிக்க இருந்த புதுபடமும் இப்பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டிருந்தது. இயக்குனரை மனதில் நிறுத்தி வேறு நடிகை பார்த்து கொள்ளுங்கள் என்னால் தாமதமாக வேண்டும் என்று படத்தில் இருந்து விலகியும் கொண்டாள்.

நடித்த வரைக்கும் போதும் என்ற மனநிலை. நிம்மதியாக ஒரு நாள் யாரின் தொந்தரவும் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆசை எப்போது நிறைவேறும்.? இதற்காகவே நடிப்பதை விட்டு விட்டால் என்னவென்று தான் தோன்றியது.

மருத்துவம் மருத்துவருக்கு தொழில் என்றால் நடிகைக்கு நடிப்பது தான் தொழிலாயிற்றே. இதற்காக ஏன் எங்கள் மேல் உயிரை வைத்து உருக வேண்டும்.? ரசிகர்கள் இருப்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் ரசிகர்கள் என்று சொல்லி கொண்டு குடும்பத்தை மறந்து எங்கள் பின்னால் சுற்றுபவர்கள் எப்போது திருந்த போகிறார்கள்.?

முதலில் பெற்றவர்களை மதிக்க கற்று கொண்டு அவர்களுக்கு பெருமை சேர்ப்பது தான் மகன்(ள்)களின் கடமை. நான் என் பெற்றவர்களுக்கு பெருமை சேர்த்து விட்டேன். ஆனால் என் ரசிகர்கள் எப்போது இதை செய்வார்கள்.?

ரசிகர்கள் என்று சொல்லி கொண்டு என் பின்னால் சுற்றுபவர்கள் என் நடிப்பின் திறமையை பார்த்து ரசிகர்கள் ஆனார்களா.? நிச்சயமாக இருக்கவே இருக்காது. அப்படி ஓரிருவர்கள் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் என் உடலை பார்த்து எனக்கென்று உருவான ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம்.

அவர்களுக்கு தேவை என் கவர்ச்சியான நடிப்பு. அதற்காக பணத்தையும் தண்ணீராக செலவளிப்பார்கள். இவளுக்கு நடிப்பின் மீது போதை. அதனால் நடிப்பு திறமையை அனைத்து விதங்களிலும் காட்ட முயற்சி செய்கிறாள். ஆனால் ரசிகர்களை கவருவது என்னமோ ஓரிரு நிமிடங்கள் இவள் தரும் கவர்ச்சி நடிப்பை தான். என்ன சொல்வது.?

நடிகையாக காலூன்ற வேண்டும் என்று இருந்த போதெல்லாம் இது தோன்றவில்லை. ஆனால் இப்போதெல்லாம் இதனால் தான் நான் இன்னும் சினிமா துறையில் இருக்கிறேன் போலும் என்று விரக்தியாக நினைத்து கொள்வாள்.

வெளியில் இருந்து பார்த்தால் நடிகைகளின் வாழ்வு வண்ணமயமாக இருப்பதாக தான் தோன்றும் ஆனால் உண்மையில் அவர்களின் வாழ்வு கரடுமுரடாக தான் காட்சியளிக்கிறது.

இப்போது மாயாவின் நிலைமையும் இது தான். முடியவில்லை. வீட்டினுள்ளே அடைந்து கிடக்க முடியவில்லை. மகளுடன் நேரங்களை செலவழித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாள். முடியாவிட்டால் வெளிநாடு சென்றாவது சுதந்திரமாக ஒரு மாதங்களை கழித்து விட்டு வரலாம் என்ற எண்ணம்.

மாயாவை அசிங்கப்படுத்தவே ராம்பிரபு பல வழிகளில் முயன்றதன் பலன் ஆதாரம் ஒன்று வசமாக இவனின் கைகளில் சிக்கியது. இந்த ஆதாரத்திற்காக அவன் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவளித்து இருந்தான்.

'பார்க்கலாம்டி நீயா.? நானா.?' என்று.! அன்றிரவு முழுவதும் குதூகலமாக இருந்தவனுக்கு தெரியவில்லை இவள் செய்ய போகும் வேலையால் வருணின் கோவம் எல்லை மீறி
சென்று இவனை வீட்டை விட்டு அனுப்புவானென்று.!!




தொடரும்..



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 7

துருவனின் அழைப்பில் லீலா பயந்து நிற்க, தெய்வானையும் "லீலாம்மா அவன் உன்னைய தான் கூப்பிடறான் போல.. என்னனு போய் கேட்டுட்டு வா.. இல்லனா அதுக்கும் திட்டுவான்" என்று கூறினார்.
அவளுக்கு செல்லவே பயமாக இருந்தது.

அவனின் குரலே நிலைமை சரியில்லை என்று இவளுக்கு உணர்த்திட, இப்போது நான் என்ன செய்தேன்.? என்று புரியாமல் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு யோசனையுடன் நடந்தாள்.

சென்று தான் ஆக வேண்டும்.. முடியாது என்று கூறி விட இயலுமா என்ன.? அனைவரிடமும் கேவலமாக பேச்சு வாங்குவது என்ன புதியதா.?

பெருமூச்சுடன் அவனின் முன்பு சென்றவள் "சொல்லுங்க" என்றாள்.
அவளை முறைத்து "உன்னைய இங்க வேலைக்கு வந்தே ஆகணும்னு நான் அழுதனா.? நீங்களே தானே வந்தீங்க.. அப்பறம் என்ன கேடு.?" என்று கடிந்திட, "சத்தியமா எனக்கு ஒன்னும் புரியலங்க.. நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க.? நான் தான் எதுவும் பண்ணலயே.?" என்று உரைத்தாள் பயத்தை தூக்கியெறிந்து.

"உன் பெரியப்பன் என்ன பைத்தியமா.? மண்டைல மூளைல ஒன்னு அவனுக்கு இல்லவே இல்லையா.? என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன்.? அவனே தான் போன் பண்ணுனான்.. அப்பறம் அவனே தான் உன்னைய இங்க விட்டுட்டு போனான்.. நான் உன்னைய இங்கயே இருந்தே ஆகணும்னு சொன்னனா.? சொல்லு" என்று கேட்டதில் இவனின் கோவத்திற்கு தன் பெரியப்பா தான் காரணம் என்பதை பெண்ணவளும் புரிந்து கொண்டாள்.

'அவரு என்ன பண்ணி தொலைஞ்சாருனு தெரியலயே.? இதுல நான் எப்படி பதில் சொல்ல முடியும்.?' என்று இவள் மருகிய நேரம் இவளை காப்பாற்றவே வந்து சேர்ந்தான் துருவனின் நண்பன் வடிவேலன்.

"டேய்ய்ய்ய் நண்பாஆஆஆ.. நான் வந்துட்டேன்.. நான் மறுபடியும் உன்கிட்டயே வந்துட்டேன்ன்ன்ன்" என்று கத்தியபடி உள்ளே வந்தவன் லீலா நிற்பதை பார்க்காமல் துருவனை அணைக்க போக, அவனோ சட்டென்று விலகி நின்றதில் சுவற்றில் மோதி கீழே விழுந்தான் அவன்.

'அடப்பாவி நான் உன் நண்பன்டா' என்று கருவியபடி எழுந்த வடிவேலன் அப்போது தான் லீலாவையே கண்டான். 'யாருடா இந்த பொண்ணு.?' என்று யோசித்து நேரம் காலமறியாமல் "என்னடா கல்யாணம் பண்ணிக்கிட்டியா.? நண்பன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லல பாரு நீ.?" என்று குறைப்பட்டு கொண்டான்.

அவனை கடுமையாக முறைத்து "சொல்லிருந்தா சாரு என்ன பண்ணிருப்பீங்க.?" என்று துருவனும் கேலியுடன் வினவ, "நல்லா இருனு அர்ச்சனை தான் தூவி இருப்பேன்டா.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. அரிசி எங்க இருக்குனு சொல்லு நான் அர்ச்சனை ரெடி பண்ணி எடுத்துட்டு வர்றேன்" என்றது தான் தாமதம் பட்டென்று ஒரு அறை. அதோடு அவனும் கப்சிப்.

திரும்பி லீலாவிடம் "உன் பெரியப்பனை வாயை மூடிட்டு இருக்க சொல்லிரு.. இல்லனா தூக்கி போட்டு மிதிச்சு சாவடிச்சுருவேன்.. இங்க இருக்க முடியலனா முதல்ல நீ கிளம்பி தொலை.. இங்க வந்ததும் ஒரு ஏழரை.. கருமம்" என்று பெண்ணவளை கடுமையாக சாடி விட்டு சென்றான்.

பாவம் வடிவேலனுக்கு தான் நடப்பது எதுவும் புரியவில்லை. அப்பெண்ணை பார்க்க பாவமாக இருந்ததால் "அவன் அப்படித்தான்மா.. அடிக்கடி சைகோவா மாறி கத்துவான்.. அப்பறம் அவனே புரிஞ்சுப்பான்.. அவன் சொன்னதை வெச்சு பார்த்தா உன் பெரியப்பா தான் ஏதோ வேலை பண்ணிருக்காருனு புரியுது.. அது என்னனு உனக்கு தெரியுமா.?" என்று கேட்டான்.

இல்லை என்று தலையாட்டியவளை பார்க்க கஷ்டமாக இருக்க, "சரி நீ யாரும்மா.? இங்க என்ன பண்ற.?" என்று அவளை பற்றி தெரிந்து கொள்ள வடிவேலன் வினவிட, அச்சமயம் புயலென அவர்களை நெருங்கி ஓங்கி ஒரு அறை விட்டு "உன்னைய எதுக்கு இங்க வர சொன்னேனு ஞாபகம் இருக்கா.? வந்த வேலையை மட்டும் பாரு" என்று மிரட்டினான் துருவன்.

'ஆத்தாடி இவன் என்ன பொசுக்குபொசுக்குனு அடிச்சுப்புட்டே இருக்கான்.. பைத்தியம் பிடிச்சுருச்சா என்ன.?' என்று கன்னத்தில் கை வைத்து நண்பனை மேலும் கீழுமாக பார்த்து "அது சரி" என்று விட்டு நகர, லீலாவின் புறம் இவன் பார்வை திரும்பும் முன்பே அவளும் ஓடி இருந்தாள்.

"அவன் எதுக்குமா கூப்பிட்டான்.?" என்று கேட்ட தெய்வானையிடம் உண்மையை கூறி அவரை வருத்த விரும்பாமல் "என் பெரியப்பாவை பத்தி கேட்க கூப்பிட்டாருமா.. வேற எதுவுமில்லை" என்று கூறினாள் புன்னகையுடன்.

உடனே அவரின் முகம் இஞ்சி தின்ன குரங்கை போல் மாறி "அந்த ஆளை பத்தி இவன் ஏன் கேட்கறான்.? அவன் மனுசனா முதல்ல.? அவனை எல்லாம் சும்மாவே விட கூடாது" என்றதை கேட்டு லீலா தான் திகைத்தாள்.

மாறா பாவனையுடன் "ஏன்மா இப்படி சொல்றீங்க.? அவங்க என்ன பண்ணுனாங்க.?" என்று இவள் கேட்ட நேரம் வடிவேலன் வந்து விட, அதோடு அப்பேச்சும் தடைப்பட்டது. அதன் பிறகு அதை கேட்கவும் நேரமில்லாமலும் போனது.

மாயாவின் பேச்சிற்கு பிறகு வருணின் குற்றவுணர்வு அதிகமாகி இருக்க, அவனின் அன்னையும் தங்கையும் எதிரில் வந்தாலே கடுப்பாகி அவர்களை சாடவும் தவறவில்லை.

வருணின் கோவத்தை அறியாமல் ராம்பிரபுவோ மாயாவின் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட தயாராக இருந்தான். இந்த வீடியோ சினிமாதுறையில் மாயா காலெடுத்து வைத்த சமயத்தில் எடுக்கப்பட்டது அதுவும் அவளே அறியாமல்.!

அதன் பிறகு தான் சினிமா என்னவென்றே உணர்ந்தவளுக்கு நடிப்பின் மீதிருந்த போதையில் பின்வாங்கவும் நினைக்கவில்லை. புத்திச்சாலியாக தன்னை காப்பாற்றி கொள்ள மட்டும் முனைந்தாள். ஆனாலும் ஓரிரு சமயங்களில் தடுக்கி விழவும் செய்தாள்.

இந்த வீடியோவை மாயா நடித்த படத்தில் வேலை செய்த ஒருவன் தான் ரகசியமாக வைத்திருந்தான். அதை ராம்பிரபு அறிந்ததும் அவனிடம் இதைப்பற்றி வினவி தனக்கு அந்த வீடியோவின் ஒரு நகலை தருமாறும் கேட்டதில் அவன் சொன்ன தொகை தான் ஒரு கோடி பணம்.

ஒரு பெண்ணின் மேனிக்கு ஒரு கோடி. அப்படி கேட்டவனுக்கு தெரியவில்லையா அந்த பெண்ணிடம் இருக்கும் அனைத்தும் தான் அவனின் தாயிடமும் உடன் பிறந்தவளிடமும் மனைவியாக வர போகிறவளிடமும் மகளாக பிறக்கும் போகும் மகளிடமும் இருக்குமென்று.!

அதை உணர்ந்தவன் இப்படியொரு தவறை செய்வானா.? நிச்சயமாக மாட்டான். பெண்ணை காம பொருளாக மட்டும் பார்க்கும் ஆடவர்களுக்கு பெண்மையின் அருமை பற்றி எங்ஙனம் புரிந்திடும்.? பெண்கள் என்றால் மோகம் மட்டுமே ஆனால் தாய்மையும் அதில் அடங்கி உள்ளது என்பதை அறிந்தோர் சிலரே.!

ஒரு பெண்ணை ஜெயிக்க வேண்டுமென்றால் அவளின் உடலின் அங்கங்களை தான் பணயமாக வைக்கிறார்கள். அவளின் திறமையோடு போட்டி போட்டு ஜெயித்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.? அவர்களை விரல் விட்டு எண்ணியும் விடலாம்.

"என்ன அவமானப்படுத்த நினைச்சவ மட்டும் யோக்கியமா.? இதை உடனே வெளில விட்டே ஆகணும்.. எனக்கே இந்த வீடியோவை பார்க்க பார்க்க ஜிவ்வுனு இருக்கு" என்றான் ராம்பிரபு.
அவன் நினைத்தது நடந்து விட்டது. நடிகை மாயாவின் லீலைகள் என்ற தலைப்பில் அந்த வீடியோவும் பரவலாகியது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த வீடியோவை பற்றிய பேச்சுக்கள் தான்.

நிலைகுலைந்து விட்டாள் பெண்ணவள். இதை எதிர்பார்க்கவில்லை. தவறு செய்யும் போது இது வெளியாகி இருந்தால் சாதாரணமாக கடந்திருப்பாள். ஆனால் செய்த தவறை உணர்ந்து திருந்தி விட்ட பின்பு வரும் அவதூறுகளை ஏற்கும் மனநிலை தான் அவளிடம் இல்லை. மனதளவில் நொறுங்கி போனாள்.

அவளை நிலை கண்டு மீராவும் வருந்தி "மேடம் நான் உங்களுக்கு சொல்லணும்னு இல்லை.. எதையும் கடந்து வர்ற மனதைரியம் உங்ககிட்ட இருக்கு.. இது என்ன புதுசா.? இதையும் கடந்து வருவோம்" என்று ஆறுதல் ஊட்டினாள்.

"நான் பட்ட அவமானத்தை அவளும் பட்டுட்டா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. ஆனா என் அண்ணன்கிட்ட இருந்து பணத்தை எடுத்தேனு மட்டும் அவனுக்கு தெரிஞ்சுச்சு நான் செத்தேன்.. இதுக்கு கொஞ்ச நாளைக்கு வெளிநாடு போய் இருக்கலாம்னு தோணுது.. பழிக்கு பழியும் வாங்கியாச்சு.. அங்க போய் நல்ல என்ஜாய் பண்ணுன மாதிரியும் ஆகிருச்சு" என்று வெற்றிச்சிரிப்புடன் நண்பர்களிடம் பேசி கொண்டிருந்தவன் திடீரென்று தலை குப்புற விழுந்தான்.

கீழே விழுந்த கோவத்தில் "எவன்டா அது.?" என்று எழுந்தவனின் முகத்தில் ஈயாடவில்லை. சட்டை கையை மடித்து விட்டபடி நின்ற வருண்தேவனை கண்டு எச்சிலை விழுங்கி தப்பிக்க வழியையும் தேடினான் அவனின் தம்பி ராம்பிரபு.


தொடரும்..
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 8


அண்ணனை எதிர்பாராமல் ராம்பிரபு திகைத்து அவனிடம் இருந்து தப்பிக்க வழியையும் தேடி ஓட முயன்றிட, ஒரே எட்டில் தாவி தம்பியின் சட்டையை பிடித்து நிறுத்தி இருந்தான் வருண்.

"அண்ணா விடுங்க.. அடுத்தவங்க முன்னாடி இப்படித்தான் பண்ணுவீங்களா.? ப்ச் விடுங்க" என்ற ராம்பிரபு அவனிடம் இருந்து விலக முற்பட, "ஓஓஓ சாருக்கு மானம் ரோசம் இருக்கோ.? அப்பறம் எனத்துக்குடா என் பொண்டாட்டியை பத்தி அடுத்தவன்கிட்ட பேசிட்டு இருக்க.? அது மட்டும் உனக்கு இனிக்குதா.?" என்று வலுத்த கோவத்துடன் கேட்டான்.

உள்ளுக்குள் தோன்றிய தடுமாற்றத்தை மறைத்து "நான் என்ன பண்ணுனேன்.? நான் பாட்டுக்கு தான் இருக்கேன்.. அவங்க தான் என்னைய ஜெயில்ல போட்டாங்க.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.? இதுக்கு நீங்க அவங்ககிட்ட தான் கோவப்படணும்.. என்கிட்ட வந்து கத்திட்டு இருக்கீங்க.?" என்று சற்றும் அசராமல் வினவினான்.

இதில் வருணுக்கு வந்ததே கோவம் சப்பென்று ஒரு அறை விட்டு "என்னடா உன் நடிப்பை என்கிட்ட காட்டறீயா.? நீ திருந்திட்டேனு சொன்னதை நம்புனேன்ல அது என் தப்புத்தான்.. நீ திருந்தவே மாட்டடா.. உன்னைய சும்மா விட்டது எவ்ளோ பெரிய தவறாகிருச்சு.?" என்று கடிந்தான்.

"நான் வர்றப்ப என்ன சொல்லிட்டு இருந்த.? மாயாவை பழி வாங்கிட்டியா.? பழி வாங்கு யாரு வேணாம்னு சொன்னது.. நீ என்ன பண்ணுனாலும் அவளுக்கு பக்கபலமா நான் இருப்பேன்டா.. என்னைய மீறி நீ அவளை தொட்டுத்தான் பாரேன்" என்று சவால் விட்டவனை வெறித்து பார்த்தான் ராம்பிரபு.

அவனின் கூட்டாளி ஒருவன் ரகசியமாக "நம்ம வெளில விட்ட வீடியோவை அழிச்சுட்டாங்கடா" என்று ஹஸ்கி குரலில் கூறிட, 'என்னை இவன் கொன்றாலும் பரவாயில்லை அந்த வீடியோ பரவலானால் போதும்' என்று இறுமார்ப்பில் இருந்தவனுக்கு சற்று பேரடி தான்.

நக்கலாக அவனை பார்த்தபடி அமர்ந்த வருண் "என்ன நினைச்சது நடக்கலயா.? நீ நினைக்கறது எப்பவும் நடக்காதுனு இப்பவாவது புரிஞ்சுக்கோ.. முன்னாடி தான் முட்டாளா இருந்துட்டேன் இப்பவும் அப்படியே இருப்பேனு நினைச்சீயா.? இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. மறுபடியும் ஏதாவது தில்லுமுல்லு பண்ணனும்னு நினைச்ச சாவடிச்சுருவேன்" என்று மிரட்டல் விட்டான்.

இதை வருணுடன் வந்த ஒருவன் வீடியோவாக பதிவு செய்தும் கொண்டான். இனி இதுவும் இணையத்தில் பரவுமோ என்னமோ.? நடிகர், நடிகைகளின் வாழ்க்கையை அடுத்தவர்கள் தான் பகடை காயாக உருட்டி கேலி செய்து கொண்டிருக்கின்றனர்.

இப்போதும் உடன்பிறந்தவனை மிரட்டலோடு விட்டு சென்றது கூட இனியாவது அவன் திருந்துவான் என்று தான்.! ஆனால் ராம்பிரபு திருந்துவதற்கான வாய்ப்பு குறைவு தான் என்பதை இவன் உணராமல் போனது விந்தையோ.?

அவன் நேராக சென்று நின்றது மாயாவின் வீட்டில் தான். அவனை பார்த்ததும் மீரா எழுந்து நிற்க, பொம்மைகளுக்கு இடையில் பொம்மையாக அமர்ந்து விளையாடி கொண்டிருந்த தியா இவனை கண்டதும் மலர்ந்து சிரித்தாள்.

மகளின் சிரிப்பினில் இருந்த கவலை அனைத்தும் தந்தையவனுக்கு பறந்து விட்டது. குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது எவ்வளவு பெரிய உண்மையான வரிகள். இருந்தும் தாயவளின் மனது கரைந்திடுமா.? பார்க்கலாம்.

மகளை கொஞ்சுவதை விட இப்போது மனைவியை சமாதானப்படுத்துவது தான் முக்கியம் என்றுணர்ந்து குழந்தையை பார்த்து கொள்ளும்படி மீராவிடம் கண்ணசைத்தவன் மாயாவை தேடி சென்றான்.

அவன் நினைத்தபடி மாயா ஒன்றும் அழுது வடிந்தபடி இல்லை. மாறாக யோகாவில் தான் லயித்திருந்தாள். இவன் வந்ததை உணர்ந்தாளோ என்னவோ இமைகளை பிரித்தெடுத்து அவனை என்னவென்று கண்டாள்.

அவளின் பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் வருண் தான் தடுமாறி போனான். அவளே "என்ன இந்த பக்கம்.? தியாவை பார்க்க வந்தா பார்த்துட்டு கிளம்ப வேண்டியது தானே.?" என்றிட, இதில் குறும்பு தலை தூக்கியதில் "நான் தியாவோட அம்மாவை தான் பார்க்க வந்தேன்.. இன்னும் பார்க்கலயே.? பொறுமையா பார்த்துட்டு அப்பறம் உடனே கிளம்பிருவேன்" என்றான் கண்சிமிட்டி.!

அவனை விழிகளால் வதம் செய்து "கிளம்பு" என்றவள் அவனை சாடி முணுமுணுத்தும் கொள்ள, எழுந்து அவளருகில் சென்று அமர்ந்து "சாரி மாயா.. அவன் திருந்திட்டானு நினைச்சேன்.. ஆனா அவன் திருந்தவே மாட்டானு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்" என்று உண்மையான வருத்தத்தில் உரைத்தான்.

சாதாரணமாக "இப்ப அதுக்கு என்னவாமா.? அவன் அப்படி பண்ணிட்டானு நான் மூலைல உட்கார்ந்து அழுதுட்டு இருக்கணுமா.? சினிமா துறையை பத்தி தெரிஞ்சு தான் அதுல காலடியும் எடுத்து வெச்சேன்.. இப்ப வெளி வந்த வீடியோவால எனக்கு என்ன நஷ்டம்.? முதல்லயே பாதி பேரு அதைய பார்த்துருப்பாங்க.. இப்ப உலகமே பார்க்குது அவ்ளோதான் வித்தியாசம்..

அது எனக்கே தெரியாம எடுத்ததுனு சொன்னா யாராவது நம்பவா போறாங்க.? உடனே இவ பட வாய்ப்புக்காக எத்தனை கூட படுத்துருக்கா.. என்னமோ புதுசா நடக்கற மாதிரி சொல்றானு தான் பேசுவாங்க.. எஸ் அவங்க சொல்ற மாதிரி நான் போய்ருக்கேன் தான்.. ஆனா இப்ப நான் திருந்திட்டேன்.. பட் பேசறவங்க திருந்துவாங்களா.? மாட்டாங்க.. இன்னும் கேவலமா தான் பேசுவாங்க..

உடம்பை வித்து பணம் சம்பாதிக்கற நடிகைகளும் இருக்காங்க.. அதே சமயம் மானத்தை காப்பாற்றி உண்மையை பேசற நடிகைகளும் இருக்காங்க.. ஆனா உண்மையா இருக்கறவங்களுக்கு இங்க இடமே இல்லை.. இப்ப படிக்கற பொண்ணுகளை விட சினிமாவுல கால் பதிக்கற பெண்கள் தான் அதிகம்..

இந்த சாக்கடை தான் வேணும்னு நிற்கறவங்க இதைய எல்லாம் அனுபவிச்சு தான் ஆகணுமே.? நானே இந்த சாக்கடையை விட்டு வெளில போனாலும் மத்தவங்க விடுவாங்கனு நினைக்கறீயா.?" என்றவளின் வார்த்தைகளில் தான் எத்தனை விரக்தி.

நடிப்பையே வெறுத்து விட்டாள். போதும் நடித்ததும் போதும் அதில் பணம் சம்பாதித்ததும் போதும். இனி என் மகளுக்காக வாழ போகிறேன். இவளின் மகளா நீ.? என்று யாரும் என் மகளை பார்த்து முகம் சுழித்து விட கூடாது. அதற்காக இந்த சாக்கடையை விட்டு எழுந்து வரவும் முடிவெடுத்து விட்டாள். நிச்சயமாக அதை நிறைவேற்றவும் செய்வாள்.

ஒன்றும் பேசாமல் அவளை நெருங்கிய ஆடவன் பெண்ணவளை அணைத்து கொள்ள, இருந்த வலிகளுக்கு அவளவனின் அணைப்பு ஆறுதலாக இருந்ததில் விம்மினாள். அழுகை கூட பிடித்தவர்களின் அருகில் தான் வெளி வரும் போலும்.

கண்ணீரை அடக்கி எதுவும் நடக்காதது போல் இருந்தவளை வருணின் ஒற்றை அணைப்பு துவண்டு போக செய்திருந்தது. அதுவும் சில மணி நேரங்கள் மட்டும் தான். சட்டென்று பலம் கொண்டு அவனை தள்ளி விட்டு "எல்லாம் உன்னால தான்.. நீ மட்டும் ஒழுங்கா அவ கூட குடும்பம் நடத்தி இருந்தா இப்ப இந்த நிலைமை வந்துருக்குமா.? அவ சாவுக்கு நீதான் காரணம்.. முதல் காரணம் நீதான்..
இப்ப என்னைய கல்யாணம் பண்ணிக்கவும் தயாராகிட்ட.. வெக்கமா இல்ல உனக்கு.? உன்னைய மட்டுமே நம்பி அவ உன்கூட வந்தா.. அவளை நம்பாம குடும்பமா சேர்ந்து சாவடிச்சுட்டு இப்ப என்கூட ஒட்டி உறவாடிட்டு இருக்க.? மனுசனா நீ.?" என்று வார்த்தைகளை கடித்து துப்பி இருந்தாள்.

அவளின் கோவமும் நியாயம் என்பதால் திருப்பி கோவப்படவும் முடியாமல் துவண்டு போன வருண் வெற்றுப்பார்வை ஒன்றை அவளின் மேல் வீசி விட்டு வெளியேறியும் இருந்தான்.

அவனை நினைத்து இவள் தான் தேம்புகிறாள் அவனின் மீது அளவற்ற காதலை வைத்த குற்றத்திற்காக.!

இரண்டு நாட்களில் துருவன் வேலையென சென்று விட்டான். அவன் இருக்கும் வரை அமைதியாக வலம் வந்து கொண்டிருந்த லீலாவுக்கு அவன் இல்லாதது நிம்மதியை குடுத்தது.

தெய்வானையுடனும் வடிவேலனுடனும் மகிழ்ச்சியாக நிமிடங்களை கழித்தாள். பேச யாருமின்றி இருந்தவளுக்கு இவர்கள் கிடைத்தது பெரிய வரம் தான். மீண்டும் அந்த சிறைக்கே செல்ல நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து அவ்வப்போது தலையிலடித்து கொள்வதும் உண்டு.

தெய்வானையும் இவளை போன்று தான். எப்போது கால் முடமாகி போனதோ அன்றிலிருந்து பேச யாருமின்றி தனிமை எப்போதடா என்னை விட்டு நீங்கும் என்ற மனநிலையில் தான் இருந்தார். தன்னை பார்த்து கொள்ள வரும் பெண்களிடம் இவர் அன்புடன் நடந்து கொண்டாலும் அவர்கள் எரிந்து விழுந்து சிடுசிடுப்பாக தான் நடந்து கொள்வார்கள். அதனால் தான் பல பெண்களை துருவன் வேண்டாம் என்று நிறுத்தியதும் உண்டு.

லீலாவும் எல்லா பெண்களை போல தான். ஆனால் யாருமின்றி தனிமையில் இருந்ததால் பேச்சை குறைத்திருந்தாள் அவ்வளவே.! இப்போது தனக்காக இரு ஜீவன்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையே அவளை இன்னும் வலுப்பெற செய்து இருந்தது.

துருவனின் பெரியப்பாவின் மகன் தான் வடிவேலன். இவனின் அன்னை இவன் பிறந்த போதே இறைவனடி சேர்ந்திருக்க, முதலிலே குடியிலே நாட்களை கழித்த இவனின் தந்தையும் இனி தன்னை கேள்வி கேட்க யாருமில்லை என்ற மிதப்பில் சம்பாரித்து சம்பாரித்து குடித்து விட்டே கிடந்தார். இதில் வடிவேலன் தான் பாவம். அவனை அரவணைத்து தன்னுடன் வைத்து கொண்டதும் தெய்வானை தான்.

வடிவேலனை விட துருவன் மூத்தவன். இருந்தும் இருவரும் நண்பர்களை போல் தான் இருப்பார்கள். லீலாவின் பேச்சில் தன்மானம் தலை தூக்கியதில் தான் அவனை சமையல் செய்வதற்காகவே இங்கு வரவழைத்து இருந்தான் துருவன்.

இதை வடிவேலனின் மூலம் அறிந்து கொண்ட லீலா 'ரொம்ப தான்' என்று நினைத்து "என்னால தான் நீங்க இங்க வந்தீங்க அண்ணா" என்று அடிக்கடி அவனிடம் கூறி வெறுப்பேற்றுவாள்.

இதற்கு அவன் முறைப்பதும் அவள் வாய்விட்டு சிரிப்பதுமாக அவ்விடமே கலகலவென்று இருக்கும்.
தெய்வானைக்கும் பொழுது நன்றாகவே கழிய தொடங்கியது. எப்போதும் வீட்டினுள்ளே அடைந்து கிடப்பவரை சக்கரநாற்காலியில் அமர வைத்து சிறுது நேரம் வெளியிலும் அழைத்து வந்து உலகத்தையும் காண வைப்பாள்
பெண்ணவள்.

ஏனென்றால் வீட்டினுள்ளே இருப்பது
எவ்வளவு பெரிய கொடுமை என்பது இவள் அறிந்த ஒன்றல்லவா. அதை தெய்வானையும் உணர கூடாது என்பதற்காகவே அவள் இப்படி செய்ய தொடங்கி இருந்தாள்.

புயலென உள்ளே நுழைந்த துருவனை கண்டதும் 'என்ன அதுக்குள்ள இவன் வந்துட்டான்.?' என்று வடிவேலன் நினைத்தாலும் வாடா என்றழைத்தவனுக்கு பட்டென்று விழுந்தது ஒரு அறை.!

'அடப்பாவி வாடான்னு சொன்னது குத்தமா.?' என்று கன்னத்தில் கை வைத்தபடி நிற்க, அந்நேரம் சத்தம் கேட்டு வெளியில் வந்த லீலாவை சொடுக்கிட்டு அழைத்து "இனி உனக்கு இங்க வேலை இல்லை.. பொட்டிப்படுக்கையை தூக்கிட்டு கிளம்பு" என்றான் அதிரடியாக.!


தொடரும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 9



துருவன் தந்த அதிர்வில் சிலையென மாறி லீலா நின்றிருக்க, "ஏன்.? என்னாச்சு.? ஏன் தங்கச்சியை போக சொல்ற.?" என்ற கேள்வியை எழுப்பியது வடிவேலன் தான்.

அவனின் கோவத்தை பற்றி நன்கறிந்தும் கேள்வியை எழுப்பிய வடிவேலனின் கன்னம் பழுத்தது. "நீ என்ன இவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க.? உதைச்சுருவேன் ஒழுங்கா வாயை மூடிட்டு நில்லு" என்று அதட்டி "நாளைக்கு உன் பெரியப்பனை வர சொல்லி நீ கிளம்பி இருக்கணும்.. என்ன புரியுதா.?" என்று பெண்ணவளிடம் கடுகடுத்தான்.

மாட்டேன் என்றாலும் விடவா போகிறான்.? சரியென்று தலையை மட்டும் ஆட்டி அங்கிருந்து அகன்றாள். விழிகள் குளமாகியது. அங்கிருந்தவளை வலுக்கட்டாயமாக இங்கு அவர்கள் அனுப்பி வைக்க, அமைதியாக இங்கிருப்பவளை அங்கு செல்ல கூறுகிறான் இவன்.

இரண்டு பக்கமும் உருட்டி விளையாடும் பொம்மையாகி போனாள் லீலா. யாரிடமும் தன் பேச்சு எடுபடாது என்பதை மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டாள். அவளின் பெரியப்பா என்ன தான் செய்து தொலைத்தார்.? அதற்கு அவரை வரவழைத்தே என்னை இங்கிருந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறி இருக்கலாமே.?

இவளிடம் பெரியம்மாவின் அலைப்பேசி எண் தான் உள்ளது. அவருக்கு அழைத்து விசயத்தை கூறினாலும் என்னவோ நான் தான் தவறு செய்தது போல் கேவலமான வார்த்தைகளை உதிர்த்து இவளை ஏசுவார்.

வேறு வழியில்லை அழைத்து தான் ஆக வேண்டும். வீட்டை விட்டு துரத்தி விட்டால் நான் எங்கு செல்வது.? என்று பலவகையான யோசனைகள் அவளிடம்.!

துருவன் நகர்ந்ததும் அவளை தேடி வந்த வடிவேலன் அவளை கண்டு வருந்தினான். இவள் என்ன செய்தாள் என்று அவன் இப்படி கடுகடுத்து விட்டு செல்கிறான்.? நடந்தது என்னவென்று கேட்டாலும் கூற மாட்டேன் என்கிறானே.?

முதலில் லீலாவிடம் பேசுவோம் என்று நினைத்து "தங்கச்சி" என்றழைத்து அவளின் யோசனையை அதோடு முடிக்க, "சொல்லுங்கண்ணா" என்றவளை பாவமாக தான் பார்த்தான் இவன்.

"என்னம்மா உன் பெரியப்பன் பண்ணி தொலைக்கிறான்.? நான் வந்த அன்னைக்கும் இதைய தான் சொல்லி கத்திட்டு இருந்தான்.. இப்பவும் அதையவே சொல்றான்.. உனக்கு ஏதாவது தெரியுமா.?" என்று கடுப்பாக வினவினான்.

விரக்தியாக "எனக்கு தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்க போறேன்.? அவங்க என்ன பண்றாங்கனு எனக்கு தெரியவே தெரியாதுண்ணா.. இப்ப என்ன கவலை என்னன்னா நான் இங்கிருந்து போனா என் பெரியம்மா என்னைய வீட்டுல சேர்க்காது.. எப்படியும் துரத்தி தான் விடும்.. இனி எங்க போறதுனு தான் தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்" என்று தன் குழப்பத்தை அவனிடமும் கூறினான்.

அதிர்ந்து போய் "ஏன்மா உன்னைய துரத்தி விடணும்.?" என்று கேட்க, மனதில் இருக்கும் பாரத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால் போதும் என்ற நினைப்பில் தன் சிறுவயதில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் விடாமல் கூறி முடித்தாள்.

"இங்க வர்றதுக்கு எனக்கு விருப்பமே இல்லண்ணா.. ஆனாலும் வந்தேன்.. இப்ப இங்கிருந்து போக எனக்கு மனசு இல்லை.. உங்களையும் அம்மாவையும் விட்டுட்டு போறதை நினைச்சா கவலையா இருக்கு.. அதை விட என் பெரியம்மா என்ன பண்ணுமோனு பயமா இருக்கு" என்றவளின் கண்கள் கலங்கியது.

அவளை பார்க்கவே பாவமாக இருக்க, "உன் பெரியப்பன் வரட்டும்டா என்ன ஏதுனு இங்கயே விசாரிக்கலாம்.. துருவனும் காரணமில்லாம கோவப்பட மாட்டான்.. நீ சொன்னதை வெச்சு பார்த்தா உன் பெரியப்பன் தான் குடிச்சுட்டு என்னமோ பண்ணிட்டு கிடக்கணும்" என்று சரியாகவே ஊகித்தான்.

இந்த பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை வேதனைகளா.? தனக்காவது துருவனும் தெய்வானை அம்மாவும் இருந்தார்கள். ஆனாலும் இந்த பெண்ணிற்கு.? ஏனோ வந்ததுமே இவளை பிடித்தது. அவளின் அண்ணா என்றழைப்பு இவனை அடிமையாக்கவும் செய்தது. தன்னை தேடி தேடி வந்து அவள் பேசுவதும் அவனை ஈர்த்தது.

பழகியது வார நாட்களே என்றாலும் அவனின் மனதில் தனி இடத்தை பிடித்திருந்தாள் லீலா. அவளை பற்றி எப்போதும் அவள் கூறியதும் இல்லை. அவளின் பெரியப்பா, பெரியம்மாவையும் விட்டு குடுத்து பேசியதும் இல்லை. இப்போது தன்னை மறந்து அனைத்தையும் கூறுகிறாள் என்றால் அவளின் மனதில் எவ்வளவு பயம் இருக்கும்.?

துருவனிடம் பேச வேண்டும். அவன் அடித்தாலும் உதைத்தாலும் வாங்கி கொள்ள தயாராகவே இருக்கிறான். இப்பேதை பெண்ணை அவர்களிடம் அனுப்பிட, இவனுக்கு மனது வரவில்லை. பேசாமல் தெய்வானை அம்மாவிடம் கூறினால் என்னவென்று நினைத்து பின்பு அந்த யோசனையையும் கைவிட்டான்.

பின்பு "ஏன்ம்மா அந்த வீடு, சொத்து எல்லாம் உன் அப்பாவோடதுனு சொல்ற.? அப்பறம் ஏன் நீ அடிமையா வாழணும்.?" என்று தனக்கு தோன்றிய சந்தேகத்தை வினவிட, "வேற என்னண்ணா என்னால பண்ண முடியும்.? எனக்குனு யாரு இருக்கா.? நான் பாட்டுக்கு எனக்கு துணையா இருக்கற இவங்களையும் துரத்தி விட்டுட்டு என்ன பண்ண முடியும்.? நான் பேசுனாலும் எனக்கு துணையா யாரு நிற்பா.? தைரியமில்லாம இப்படி இல்லண்ணா.. வேற வழியில்லாம தான் இப்படி இருக்கேன்" என்றாள் விம்மியபடி.

"பேசாம நம்ம துருவன் கிட்ட உதவி கேட்போமா.?" என்று வடிவேலன் கேட்டதும் புரியாமல் "அவருகிட்ட என்னனு கேட்கறது.? அவரால என்ன பண்ண முடியும்.? அவரு என்ன போலீஸா.? இல்ல கலெக்டரா.?" என்றவளை 'அடிப்பாவி' என்ற ரீதியில் தான் பார்த்தான்.

"அவன் என்ன வேலை பார்க்கறானே உனக்கு தெரியாதா.?" என்று மீண்டும் அக்கேள்வியை கேட்டவனிடம் 'தெரியாது' என்றே அவள் கையை விரிக்க, நல்லது என்று முணங்கி "அவன் இன்ஸ்பெக்டர்மா" என்றதில் வெலவெலத்து போனாள்.

அதீத பயம் அவளின் கண்ணில் தென்பட, "போலீஸா.? அப்ப என் பெரியப்பா தப்பு பண்ணுனா குச்சி வெச்சு அடிப்பாங்களா.?" என்று அதிமுக்கியமான சந்தேகத்தை வினவியதும் பெருமுழியென முழித்து "குச்சியா.? அது என்ன வேப்பங்குச்சியா.?" என்று கேலியுடன் வினவினான்.

அவனின் கேலியை உணராமல் "படத்துல எல்லாம் பார்த்துருக்கேன் அண்ணா.. பெருசா ஒரு குச்சி மாதிரி வெச்சு அடி அடினு அடிப்பாங்களே.? அதுக்கு பேரு எல்லாம் எனக்கு தெரியாது" என்று கண்களை விரிய கேட்டவளை என்ன செய்தால் தகுமென்று தான் இவன் பார்த்தான்.

"அப்ப உன் பெரியப்பனை இவன் வெளுக்க ஒரு மரத்தையே வெட்டணும் போல.. இப்ப உனக்கு வீட்டை விட்டு போறதை பத்தி கவலையில்லை.. உன் பெரியப்பன் அடி வாங்க போறது தான் கவலையா.? அப்படியே உன் மண்டைல நாலு போட்டா என்னனு தோணுது" என்று கொஞ்சம் குரலை உயர்த்தவும் லீலா கப்சிப் தான்.

இவர்களின் சம்பாஜனையை இன்னொரு ஜீவனும் கேட்டு கொண்டிருப்பதை அறியாமல் இவர்கள் இருக்க, லீலாவின் பேச்சில் தன்னை மீறி எழுந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கினான் துருவன்.

ஏனோ அவளின் பேச்சில் நிறைந்திருந்த வெகுளித்தனத்தை நன்றாகவே ரசித்து நின்றான் அதுவும் அவர்கள் அறியாதவாறு.!! எப்படியும் வடிவேலன் தன்னிடம் பேச வருவான் என்ற நம்பிக்கை.

"நான் இங்கிருந்து போனா மறுபடியும் அங்க சிறைவாசம் தான்.. அந்த சிறைவாசமும் கிடைக்கலனா.?" என்று மறுபடியும் அழுகைக்கு தாவி இருக்க, 'இவ என்ன நிமிசத்துக்கு ஒவ்வொரு பாவனையை காட்டிட்டு இருக்கா.?' என்று முழிக்கவே செய்தான்.

"அய்யோ தெய்வமே நீ இங்கேயே இரு.. நான் போய் துருவன் கிட்ட பேசிட்டு வர்றேன்" என்று ஒரு தைரியத்தில் கூறி விட்டான் தான். அவனிடமே செல்லவே பயந்து போனான்.

பின்பு தைரியத்தை வரவழைத்து கொண்டு துருவனை தேடி சென்று அழைக்க, அவனும் "என்ன.?" என்று கேட்டதில் நாவெண்ணம் ஒட்டி கொண்டது போலும் இவன் வாயை திறக்கவே இல்லை.

'பேசுடா பேசு.. பேசாம விட்டுட்டா தங்கச்சி பாவம்' என்று மனதினுள் தன்னை தானே அதட்டியவன் "அது... அது தங்கச்சி பாவம்.. அவ என்ன பண்ணுனானு இங்கயே இருக்க சொல்ற.? அவ இங்கிருந்தா எங்க போவா.?" என்று வாயை திறந்து உளரி கொட்டியது தான் மிச்சம்.

பளாரென்று ஒரு அறை. "ஏன்டா நான் என்ன பண்ணுனேன்.?" என்று பாவமாக கேட்க, "இப்ப திக்குவாய் சரியாகிருச்சா.? சொல்ல வந்ததை தெளிவா சொல்லு பார்க்கலாம்" என்று சொன்னதில் திருதிருவென விழித்து 'ஒழுங்கா சொல்லி தொலைஞ்சுருக்கலாம்' என்று புலம்பினான்.

"அது தங்கச்சி பாவம்டா.. அவ பெரியப்பன் பண்ணுனதுக்கு இது என்ன பண்ணும்.? அவங்க வீட்டுக்கு போனா அவ பெரியம்மா துரத்தி விட்டுரும்னு பயப்படற.? நீயே அவ பெரியப்பனை பிடிச்சு நாலு சாத்து சாத்த வேண்டியது தானே.?" என்று தெளிவாக பேசி விட்டான்.

வாங்க வேண்டிய அடி மிச்சம். இப்போதும் உளரி கொட்டி இருந்தால் மீண்டும் ஒரு கன்னமும் சிவந்திருக்கும்.

அவனை முறைத்து "எனக்கு என்ன வேலை இல்லைனு நினைச்சுட்டு இருக்கீயா.? அந்த கூறுகெட்டவனை எல்லாம் நான் ஏன்டா பிடிச்சு அடிக்கணும்.? தேவையில்லாத ஆணியை எல்லாம் நான் பிடுங்கறது இல்லை.. அந்த பொண்ணை துரத்தி விட்டா நான் என்ன பண்றது.? அதுக்கு பேச வாய் இல்லையா.? பேசி அவங்க பிரச்சனையை தீர்த்துக்கட்டும்" என்று சாதாரணமாக கூறி விட்டு சென்றான்.

'ஆத்தா மாரியாத்தா இவனை மலையிறக்கற அளவுக்கு தெம்பை எனக்கு குடுக்கவும்' என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு மீண்டும் அவனை தேடி சென்று பேசினான்.

இவன் எவ்வளவு இறங்கி பேசினாலும் அவன் மலை உச்சியிலே நின்று வீம்பு பிடிக்க, 'டேய் நாதாரி நீ மட்டும் என் கைல சிக்கு.. நானே உன்னைய வெட்டி நாய்க்கு போடறேன்' என்று முகமறியாத லீலாவின் பெரியப்பனை கருவினான்.

வடிவேலனின் கெஞ்சலில் ஒரு மனதாக மலையிறங்கிய துருவன் ஒரு நிபந்தனையுடன் அவள் இங்கிருக்க சம்மதம் சொன்னான். அது என்னவென்று கேட்டதும் 'அதுக்கு எல்லாம் அது சரிப்பட்டு
வருமா.?' என்று யோசித்ததில் வடிவேலனின் முகம் சுருங்கியது.



தொடரும்..
 
Status
Not open for further replies.
Top