ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாயலீலா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 10



"உன் அருமை தங்கச்சி இங்க இருக்கணும்னா அவ பெரியப்பன் வந்தா ஏன் இப்படி பண்றீங்கனு கேட்டு சண்டை போடணும்" என்றதில் தான் 'அவ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டானு சொன்னா இவன் நம்புவானா.?' என்ற யோசனையில் வடிவேலனின் முகம் சுருங்கியது.

"என்ன முடியாதா.?" என்று மீண்டும் அவனே கேள்வி எழுப்பிட, 'இந்தளவுக்கு இவன் இறங்கி வந்ததே பெரியது முடியாது' என்று கூறி அவனை மீண்டும் மலையேற்ற விரும்பாமல் "சரி சொல்றேன்" என்று விட்டான்.

லீலாவிடம் இதை கூறியபோது அவள் முழித்த முழியில் கண்ணாமுழியே வெளியில் வந்து விடுமளவுக்கு இருந்தது. "அய்யோ என்னால முடியாதுண்ணா" என்று மறுத்திட, "அப்ப உன் பெரியப்பன் கூடவே கிளம்பிரு" என்றதில் அரண்டு விட்டாள்.

"அண்ணா" என்று அழும் தோனியில் அவள் அழைக்க, "அப்ப நான் சொல்றதை கேளு.. முடியாதுனா நான் ஒன்னும் பண்ண முடியாது" என்று இவனும் அவளை அதட்ட, என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.

பின்பு "எனக்கு பேச வராதுண்ணா" என்றவளை முறைத்து "அப்ப அவன் கூட கிளம்பிரு" என்ற வடிவேலன் அவளை பேச விடாமல் நகர்ந்து விட்டான். இல்லையென்றால் கிளிப்பிள்ளையிடம் பேசுவது போலாகி விடுமே.?

சிறிது நேரம் உம்மென்று அமர்ந்திருந்து பின்பு வடிவேலனை தேடி செல்ல, அவனோ உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தான். இவளை வந்ததை கண்டு கொள்ளாமல் அவனிருக்க, "அண்ணா அண்ணா" என்று அவனின் கையை சுரண்டி அழைத்தாள்.

"என்ன.?" என்று சாதாரணமாக கேட்டவனின் பதிலில் பெண்ணவளின் முகம் சப்பென்று சுருங்கி போய் விட, "என்னைய பார்த்தா பாவமா இல்லையா.? இப்படி மாறி மாறி வெச்சு செய்யறீங்களே.?" என்று கெஞ்சல் நிறைந்த கொஞ்சலுடன் வினவினாள்.

"உன்னால முடியாதுனு சொல்லிட்ட.. நானும் அதோடு விட்டுட்டேன்.. இதுல நான் என்ன உன்னைய பண்ணுனேன்.? போய் எல்லாத்தையும் எடுத்து வெய்யு.. அப்பதான் நாளைக்கு உன் பெரியப்பா வந்ததும் நீ கிளம்ப முடியும்" என்று அவளை பயமுறுத்தினான்.

"உண்மையாவே என்னைய போக சொல்றீங்களா.?"

"நான் போக சொல்லலமா.. நீதான் போறேனு நிற்கற"

"நான் எப்ப அப்படி சொன்னேன்.?"

"அவன் மலை இறங்கறதே பெரிய கஷ்டம்.. உனக்காக நான் அவன்கிட்ட அடி வாங்கி வசைவு வாங்கி இருக்க பர்மிசன் வாங்கிட்டு வந்தா நீ ரொம்ப பிகு பண்ற"

"எனக்கு கோவப்பட தெரியாதுண்ணா.. எனக்கு தெரியாததை பண்ண சொன்னா நான் என்ன பண்ணுவேன்.?"

"இங்க இருக்கணும்னா நாளைக்கு காலைல கோவப்பட்டு தான் ஆகணும்.. அதுக்குள்ள கோவப்படறது எப்படினு கத்துக்கோ" என்றவனுக்கே சிரிப்பு தான் வந்தது. இவளை கோவப்பட வைப்பதற்குள் இவன் தான் ஒரு வழியாகி போவான் என்று அவனே உணர்ந்து இருந்தான்.

கெஞ்சி கொண்டே இருந்தால் பயத்தில் முடியாது என்று தான் கூறுவாள். அதனால் தான் சரி போ என்று கூறுவதை போல் நடித்து கொண்டிருக்கிறான்.

"அண்ணா" என்று சிணுங்கியவளை கண்டு கொள்ளாமல் "முடிவு உன் கைல தான்மா" என்று விட்டு அவன் வேலையை பார்ப்பதை போல் நடிக்க, இவள் தான் விரலில் இருக்கும் நகத்தை கொரிக்க ஆரம்பித்து விட்டாள்.

பழைய ஞாபகங்கள் அனைத்தும் விடாமல் வருணை துரத்தியதில் நிலை குலைந்து போனான். இவன் நினைக்க கூடாது என்று நினைத்தால் தான் மீண்டும் மீண்டும் அந்நினைவே அவனை துரத்தி இம்சை செய்கிறது.

ஆஆ ஆஆஆ என்று கத்தியபடி தலையை பிடித்தவன் அங்கிருந்த அனைத்தையும் தட்டி விட, அவனை பார்த்து சிரித்தது ஒரு புகைப்படம். அதில் இருந்தது இவனின் லீலா. இவனுக்கென்றே பிறந்த லீலா.

முதலில் அவனை ஈர்த்தது அவளின் இனிமையான குரல் தான். பின்பு அவனையே முழுவதுமாக அவளின்புறம் இழுத்து விட்டிருந்தாள் பெண்ணவள்.

அப்போது தான் இவன் சினிமாவில் காலூன்றிய சமயம். அவனின் முதல் படத்தில் பாடகியாக அறிமுகமானவள் தான் அவள். அந்த படத்தில் தான் வருணும் மாயாவும் இணைந்து நடித்தனர். இவர்களுடன் சேர்ந்து லீலாவும் பணியாற்றிட, மூவரும் நண்பர்களான தருணம் அது.

வருண்-மாயாவின் ஜோடி பொருத்தம் நன்றாகவே ரசிகர்களிடம் பிரபலமானது. அதே போல் லீலா பாடிய பாடலும் நன்றாக ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

வருண் மாயாவின் ஜோடி பொருத்தத்தை பார்த்து 'நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று பலவகையான கருத்துக்கள் அவர்களை வந்தடைந்தது.

அப்போது இருவருக்குமே சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால் இதை பெரியதாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் லீலாவை மட்டும் விடாமல் கவனித்து கொண்டே இருந்தான் வருண்.

அவளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தது அவளின் தந்தை தான். மகளின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவள் பயந்து நின்றபோது கூட அவளுக்கு துணையாக நின்று அவளை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து இப்போது திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவரையே சேரும்.

இவளின் பாடலுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் அவளுக்கு மட்டமற்ற மகிழ்ச்சி. இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். அடுத்த அடுத்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்க, இவளும் பிசியாகி விட்டிருந்தாள்.

ஆனால் மாயாவுடனான நட்பை மட்டும் இவள் விடாமல் பிடித்து வைத்திருந்தாள். அவளை காண இவளே செல்வாள். ஏனோ அவளை பிடித்து விட்டது காரணமின்றி.! அவள் சோர்ந்திருக்கும் போதெல்லாம் ஊக்கமளித்து அவளை வெற்றிநடை போட செய்த பெருமை லீலாவையே சாரும்.

மாயா நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியை தழுவிட, இறுதியாக மீண்டும் வருணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவளுக்கு கிடைத்தது. இதில் பெருமகிழ்ச்சி அவளிடம்.!

இத்தருணத்தில் தான் வருணின் மேல் மாயாவுக்கு காதலும் மலர்ந்தது. 'இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்' என்று வதந்தி பரவிய போதும் வருண் அதை மறுக்காமல் இருந்ததை பார்த்து அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று உவகை கொண்டாள் இப்பெண்ணவள்.

ஆனால் அவன் மறுக்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் நடிக்கும் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே.! இது திரையுலகில் சர்வசாதாரணம் தான். இதை மாயாவும் உணர்ந்து இருந்தாலும் காதல் கொண்ட மனது வேறாக தான் யோசித்தது.

படத்தின் இறுதி காட்சி முடிந்ததும் "வருண் நைட் டின்னருக்கு வெளில போலாமா.?" என்று ஆர்வமாக மாயா வினவியபோது அவன் மறுக்காமல் "நானே கேட்கலாம்னு இருந்தேன்.. நீயே கேட்டுட்ட.. நான் ரெடி.. இடத்தை நீயே முடிவு பண்ணிட்டு அப்பறம் எனக்கு சொல்லு" என்று அவளிடமே முடிவை விட்டதில் இவளுக்கு பேரதிர்ச்சி தான்.

தன் மீது அவனுக்கும் காதல் இருக்கிறது என்று பெண்ணவள் பெருமகிழ்வு கொண்டாள். முதல் தடவை வெளியில் செல்ல போகிறோம் அதுவும் தன் மனம் கவர்ந்தவனுடன் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் தனக்கு பிடித்த மாதிரி செய்து அவனுக்காக காத்திருந்தாள் மாயா.

வருணும் வந்தான். இவர்கள் இருவரும் மட்டுமே அந்த இரவில்.! இருளுடன் போட்டி போட்டு கொண்டு பெண்ணவளும் தன்னவளை கண்களில் நிறைத்து கொள்ளும் பணியை செவ்வென செய்ய, "ஏய் மாயா நான் கூப்பிடறது கேட்கலயா.?" என்று அவன் உலுக்கியதில் தன்னிலை பெற்றவள் ஙே வென்று விழித்தாள்.

அசட்டு சிரிப்புடன் "வருண் என்ன சொன்ன.?" என்று கேட்க, "நெக்ஸ்ட் என்ன படம்.? மறுபடியும் பிஸியா.?" என்று பொதுவான பேச்சுக்களுடன் அவர்களின் இரவுணவும் முடிந்தது.

"நம்மளைய இணைச்சு வெச்சு வர்ற வதந்திக்கு என்ன பதில் தர்றதுனு தெரியல.. ஆனா அதைய முடிவுக்கு கொண்டு வரணும்ல.?" என்று மாயா தான் அப்பேச்சை முதலில் எடுக்க, வருணும் "ம்ம்ம்ம் கண்டிப்பா.. நானே சொல்லிறேன்" என்றான் சாதாரணமாக.

சட்டென்று தோன்றிய படபடப்புடன் "என்னனு.?" என்று கேட்க, "உனக்கு சாதகமாக தான் என் பதில் வரும்.. வெய்ட் அண்ட் சீ" என்று கண்சிமிட்டி அவளின் கன்னத்தையும் மென்மையாக தட்டி விட்டு கிளம்பினான்.

வருணின் பதிலில் வானத்தில் மிதந்தாள். நான் கேட்டது நிஜமா.? என்று மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே திருப்பி திருப்பி நினைத்து வெக்கப்பட்டாள்.

வருணுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பதே இவளுக்கு சர்க்கரையாக இனித்தது. இந்த இன்ப அதிர்ச்சியை இவள் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.! எப்படி.? எப்படி.? என்று தனக்கு தானே கேட்டு கொண்டு தலையிலும் தட்டி கொண்டு தனியாக சிரித்தாள்.

இனி அவளின் வாழ்வு வருணுடன் தான் என்று நினைக்கையில் புன்னகையும் ஒட்டி கொண்டது. ஆனால் நாளை வருணின் அறிவிக்கையில் இவளின் மகிழ்ச்சி ஆட்டம் காண போகின்றது என்பதை இப்பேதை அறியாமல் அவனுடனான எதிர்க்கால வாழ்வில் லயிக்க தொடங்கி இருந்தாள்.




தொடரும்..


Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 11



மாயாவும் வருணும் தனியாக இரவுணவு உண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருவரும் காதலர்கள் தான் என்று அவர்களே முடிவும் செய்தனர்.

இதையும் கண்டு வருண் அமைதியாக இருந்தான். மாயாவும் மறுக்கவில்லை. அவன் தான் உனக்கு சாதகமாக தான் பதில் வரும் என்று விட்டு சென்றிருக்கிறானே.? பின்பு ஏன் இவள் மறுக்க வேண்டும்.? விட்டு விட்டாள்.

அதீத மகிழ்வில் இவள் திளைத்திருந்த நேரத்தில் இவளின் தலையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களின் தலையிலும் குண்டை இறக்கினான் வருண். அவனும் லீலாவும் காதலர்கள் என்றும் இன்னும் சில மாதங்களில் திருமணமும் நடைபெறும் என்றும்.!

இதற்கு சாட்சியாக அவனும் லீலாவும் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டு 'மை லவ்' என்றும் கூறி இருந்தான். இது ரசிகர்களிடையே அதிருப்தியை எழுப்பியது.

'நீங்கள் மாயாவை திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று அதிகமான கருத்துக்களும் அவனை வந்தடைய, அதில் ஒருவருக்கு மட்டும் "மாயா என் தோழி மட்டும் தான்" என்று பதிலுரைத்து மாயாவையும் டேக் செய்து அவளையும் சொல்ல சொன்னான்.

இதை அவள் பார்க்கும் முன்பே செய்திகளாக பல சேனல்களிலும் வெளி வந்தது. அதன்பின்பு தான் இதை பார்த்து "எஸ் ஒன்லி நண்பர்கள் மட்டும் தான்" என்று மாயாவும் பதிலளித்து விட்டிருந்தாள்.

பின்பு அவளால் என்ன செய்ய முடியும் அவர்கள் காதலர்கள் என்னும் போது.? இது தான் நான் எதிர்பார்த்த சாதகமான பதிலா.? வலித்தது. இதையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டாள்.

வருணின் அலைப்பேசி சிணுங்கி அவனின் எண்ண அலைகளை அதோடு முடிவுக்கு கொண்டு வந்திட, வெறுப்புடன் எடுத்தான். அழைத்திருப்பது மாயா தான்.

என்னவென்று கேட்டவனிடம் நேரில் சந்திக்க விரும்புவதாக கூறிட, இவனும் வருவதாக வாக்களித்து விட்டு போனை அணைத்தான்.

"அண்ணா மறுபடியும் ஒரு தடவை கோவப்பட்டு பேசட்டுமா.?" என்று லீலா கேட்டிட, கையை தலைக்கு முட்டுக்குடுத்து அவளை கடுப்புடன் பார்த்திருந்த வடிவேலனோ "இதோட தொன்னூறு.. போதும் நீ கோவப்பட்டு பேசுனதும் போதும்.. அதைய கேட்டு நான் தலைல அடிச்சுக்கிட்டதும் போதும்.. உன்னைய கோவப்பட்டு பேசணும்னு சொன்னான் பாரு முதல்ல அவனை தான் மிதிக்கணும்" என்றான் நொந்து போய்.!

பாவமாக "நான் சரியா தான் கோவப்படறேன்.. நீங்க சலிச்சுக்கறீங்க" என்று முகத்தை சுருக்க, "யாரு நீயா.? அது சரி.. நீ படற கோவத்துல இந்த பூமியே தலைகீழா திரும்பிருச்சு பாரு" என்று அவளை வாரினான்.

"ஒரு தடவை மட்டும்.. ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை வாட விட விரும்பாமல் "படும் கோவப்படும்.. நானும் அதைய கேட்டு தலையறேன்" என்று மீண்டும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

சட்டென்று முகத்தை மாற்றுவது போல் பாவனை செய்து "பெரியப்பா ஏன் இப்படி பண்றீங்க.? நான் என்ன பண்ணுனேன்.?" என்று கொஞ்சும் குரலில் பேசியவளை கண்டு இவன் வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டான்.

"நீ இப்படியே கொஞ்சிட்டு கிட.. என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்று வடிவேலன் எழுந்து கொள்ள, "அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்.. எனக்கு இவ்ளோ தான் கோவப்பட்டு பேச தெரியும்.. நான் பேசறது மட்டும் சரியானு சொல்லுங்க" என்றதில் வேறு வழியில்லாமல் அவனும் நின்றான்.

மறுபடியும் "ஏன் பெரியப்பா இப்படி பண்றீங்க.? என்னைய நீங்க தான் இங்க அனுப்பி விட்டீங்க.? அப்பறம் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க.?" என்று மூச்சு பிடித்து பேசிய லீலாவுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்து "அண்ணா அப்பறம் என்னனு கேட்கணும்.?" என்று கேட்டாளே பாருங்கள் போனால் போகுதென்று அமைதியாக நின்றிருந்த வடிவேலன் இப்போது கடுப்பாகி அவள் தலையில் நங்கென்று கொட்டினான்.

"ஏன் அண்ணா.?" என்று முகத்தை சுருக்கியவளை பார்த்து மீண்டும் ஒரு கொட்டு வைக்க அவனின் கைகள் பரபரத்தாலும் அதை அடக்கி "கோவப்படறது எல்லாம் நீயே படணும்.. அதைய நான் எழுதி குடுத்து நீ மனப்பாடம் பண்ணி பேச போறதா என்ன.?" என்று அதட்டினான்.

"அண்ணா ப்ளீஸ்" என்று கெஞ்சிட, "இதைய சொல்லி சொல்லி என் வாயை அடைச்சுரு" என்று புலம்பி "நீங்க தான் இங்க கொண்டு வந்து விட்டீங்க.. அப்பறம் என்ன கேடு வந்துச்சுனு இப்படி பண்ணிட்டு திரியற.? இவங்க என்னைய உங்ககூட கிளம்ப சொல்லிட்டாங்க.. வாங்க போலாம்.. என்னைய வீட்டை விட்டு துரத்தி விடணும்னு நினைச்சீங்கனா நான் போலீஸ்ல கம்பளைண்டு குடுப்பேன்" என்று விரல் நீட்டி கேட்பதை போல் கோவப்பட்டு காட்டினான்.

அவனையே பே வென்று பார்த்தவள் "அண்ணா காம்பவுண்டு குடுத்தா அடிப்பாங்களே.?" என்றவளை கொலைவெறியில் முறைத்து "ஆமா காம்பவுண்டு கட்டி உதைப்பாங்க.. உனக்கு இங்கிலீஷ் தெரியலனா தமிழ்ல பேசி தொலையேன்.. இப்ப நீ யாரு இங்கிலீஷ்ல பேசியே ஆகணும்னு அழுதது.?" என்றான் சலிப்புடன்.

"அண்ணா கோவப்படாதீங்க.. நான் மறுபடியும் பேசி காட்டறேன்" என்று ஆரம்பித்தவளுக்கு பாதி ஞாபகம் வராமல் போக, கெஞ்சலுடன் "அண்ணா மறுபடியும் ஒரு தடவை பேசி காட்டுங்களேன்" என்றது தான் தாமதம் நறுக்கென்று கிள்ளினான்.

"விட்டா நீங்க எழுதி குடுங்க.. நான் மனப்பாடம் பண்ணிக்கறேனு சொல்லுவ போல.. ஒழுங்கா நீயே ஏதாவது பேசு.. நான் போய் சமையல் பண்றேன்" என்று நழுவி விட்டான்.

நொந்து விட்டான். அவனால் முடியவில்லை. அதுவும் லீலா படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமில்லை. இப்படி செய்ய கூறிய துருவனை நாலு அடி அடித்தால் என்னவென்று இருந்தது.

லீலாவின் பெரியன்னைக்கு வடிவேலனே அழைத்து அவரை வர கூறி இருந்தான். அவளை பேச சொன்னால் 'மாட்டேன் பேச மாட்டேன்' என்று பயந்து நிற்பவளை மேலும் வற்புறுத்தாமல் இவனே விசயத்தை கூறி வர சொன்னான்.

பெண்ணவள் தான் பாவம். திடீரென்று கோவப்பட்டு பேச சொன்னால் அவள் என்ன செய்வாள்.? நீ பேசி தான் ஆக வேண்டும் இல்லையென்றால் அவர்களுடன் சென்று விடு என்று முடிவாக கூறி விட்டிருந்தான் வடிவேலனும்.

இது எதுவும் தெய்வானைக்கு தெரியாது. அவரிடம் எதுவும் சொல்லி கொள்ளவில்லை. அப்படி சொன்னாலும் துருவனின் கோவத்தை தான் பார்க்க வேண்டி வரும். அதனால் வடிவேலன் எதுவும் பேசவில்லை. அதே போல் லீலாவும் சொல்ல வேண்டும் என்று தோன்றாததால் விட்டு விட்டாள்.

ஆனால் அவளின் மனம் முழுவதும் பயம் தான். பயம் மட்டும் தான். நகத்தை கொரிப்பதும் பின்பு மனப்பாடம் செய்ததை தானே பேசி பார்ப்பதுமாக இருந்தாள். வடிவேலனும் அவளிடம் செல்லவில்லை. சென்றால் தான் 'நான் பேசி காட்டறேன்' என்று உயிரை வாங்குகிறாளே.? அதற்கு பயந்தே அமைதியாக இருந்தான்.

காலையில் அவளின் பெரியப்பாவும் வந்து சேர்ந்தார். துருவன் மௌனமாக அவரை முறைத்தபடி இருக்க, 'ஓஓஓ நீதான் அந்த பெரியப்புவா.? இருடா மவனே உனக்கு பெரிய ஆப்பா வெக்கறேன்' என்று உள்ளுக்குள் அவரை கருவி நின்றான் வடிவேலன்.

"வர சொன்னீங்களாமே.?" என்று கேட்டு அமைதியை பாஸ்கரே கலைத்திட, அவரை கூர்ந்து நோக்கி "வெளில என்ன சொல்லிட்டு திரியறீங்க.? அதைய இங்கையும் சொல்லுங்க" என்று அழுத்தமாக துருவன் வினவியதில் வெலவெலத்து போனார்.

'இவனுக்கு எப்படி தெரிய வந்தது.?' என்று பதறி "நா.. நா.. எதுவுமே சொல்லலயே.?" என்று திணறிட, "ஓஓஓ அப்ப நீங்க எதுவுமே சொல்லிட்டு திரியல.. அப்படித்தானே.?" என்று வில்லங்கத்துடன் கேட்டவனின் குரலில் அவர் நடுங்கி போய் விட்டார்.

"இ..இ..இ..ல்ல" என்றவரை இவன் அழுத்தமாக பார்த்திட, அவனின் பார்வையில் குப்பென்று வியர்த்த மேனியுடன் "நான் ஒன்னும் சொல்லல.. இனி சொல்ல மாட்டேன்" என்று இருவேறு விதமாக பதறி கூறினார்.

'டேய் பெரிய ஆப்பு அப்படி என்னடா சொல்லி தொலைஞ்ச.?' என்று வடிவேலனும் அவரை பார்த்து நின்றான்.

அவர் சொல்ல மாட்டார் என்றுணர்ந்தானோ என்னவோ "நான் எப்ப சார் உங்க வீட்டுப் பொண்ணை வெச்சுக்கிட்டு அதுக்கும் பணம் குடுக்கறேனு சொன்னேன்.? என்னமோ அவளும் என்னைய மயக்கிருவானு சொல்லிட்டு இருக்க.? நானாடா உன்னைய தேடி வந்தேன்.? எவ்வளவு தைரியம் இருக்கணும் என்னைய பத்தி இப்படி
சொல்லிட்டு திரிய.? ஒரு பெண்ணை பெத்த அப்பன் பண்ற காரியமா
இது.?" என்றவனின் வார்த்தையில் அவ்வளவு கோவம்.








தொடரும்..
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 12


துருவனின் அதட்டலில் லீலாவின் பெரியப்பாவுக்கு குப்பென்று வியர்த்திட, "குடிச்சுட்டு என்ன வேணாலும் பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சீங்களா.?" என்றிட, "அது.. சும்மா தம்பி.. இனி அப்படி பேச மாட்டேன்" என்றார் பவ்யமாக.

"இப்படி பேசி என் பேரை நாரடிச்சதுக்கு என்ன பண்ணலாம்.? நீயே சொல்லு" என்று காட்டமாக வினவினான்.

குடித்து விட்டு லீலாவையும் இவனையும் தவறாக இணைத்து பேசியதை இவனை தெரிந்த ஒருவர் கேட்டு விட்டு அப்போதே இவனிடம் வந்து கூறினார். அதற்கு தான் வடிவேலன் வரும்போது இவளிடம் அவன் சண்டையிட்டு கொண்டிருந்தது.

லீலாவிற்காக தான் இவன் மாதம் நாற்பதாயிரம் தர சம்மதித்ததாக இவர்களை இணைத்து வைத்து காது கூசும்படி பாஸ்கர் பேசியதை இவனே கேட்டு விட்டிருந்தான். இதற்கு தான் அவன் லீலாவை இங்கிருந்து கிளம்ப சொன்னது.

வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் இவன். இவனின் கீழ் வேலை செய்பவர்கள் இதை கேட்டால் இவனின் மேல் வைத்திருக்கும் பயம் கலந்த மரியாதை காணாமல் போய் விடுமே. முதலில் விட்டு விட்டான். மீண்டும் இவனே கேட்டதில் தான் இப்போது அவரை வரவழைத்திருப்பது.

"தம்பி மரியாதையா பேசுங்க.. இல்லனா போலீஸூக்கு போவேன்.. இவ இங்க இருக்கானு எப்படி வேணாலும் பேசலாம்னு நினைச்சீங்களா.? நான் போன் பண்ணுனா இப்பவே போலீஸ் வந்து நிற்கும்.. அவங்ககிட்ட என் வீட்டுப் பொண்ணை கடத்திட்டு வந்து வெச்சுருக்கீங்கனு சொல்லுவேன்.. பார்க்கறீங்களா.?" என்று எல்லாரையும் மிரட்டுவதை போல் உரைத்தார்.

இதற்கு இவன் பயந்து விடுவானா என்ன.? நக்கலுடன் "எனக்கு பயமா இருக்கே" என்றபடி துருவன் சாய்ந்தமர்ந்திட, வடிவேலன் தான் "யோவ் அவனே இன்ஸ்பெக்டர் தான்யா.. நீ வர சொல்லு.. இவனா இல்ல அவங்களானு பார்த்தரலாம்" என்றதில் அதிர்ந்தார் அவர்.

"வர சொல்லுவீயா.? போன் பண்ணி வர சொல்லு.. அப்படி எந்த கான்ஸ்டபிள் உன்கிட்ட சரக்கு வாங்கி குடிச்சுட்டு இந்த வேலை பண்ணிட்டு இருக்காருனு நானும் பார்க்கறேன்.. ஏய் போன் பண்ணுயா" என்று நாக்கை துருத்தி சுள்ளென துருவன் கத்தியதில் பம்மியபடி எழுந்து நின்றார்.

பின்பு "இந்த பொண்ணோட அப்பா சொத்தை ஆட்டைய போட்டு தான் இப்ப வேலைக்கே போகாம சொகுசா வாழ்ந்துட்டு இருக்கேனு கேள்விப்பட்டேன்.. நீயும் உன் பொண்டாட்டியும் பண்ற கேடித்தனம் எனக்கு தெரியாதுனு நினைச்சீயா.? அதுக்கே உங்களைய தூக்கி உள்ள வெச்சுருக்கணும்..

உன் பொண்ணுக்கும் இதுல பங்கிருந்துச்சு அவங்களும் கம்பி தான் எண்ணனும்.. அவங்க புருசன் ஏதாவது சப்போர்ட்டுக்கு வந்தா அவனுக்கும் இதுல பங்கிருக்குனு தூக்கி உள்ள வெச்சுருவேன்.. குடும்பமா உள்ள கலி தின்னா தான் உங்க கொழுப்பு அடங்கும்னு நினைக்கற.. எப்படி வசதி.?" என்று வெடித்த கோவத்தில் அதட்டினான்.

லீலாவோ விழிகளில் திகைப்பை கூட்டி இன்னும் பாவனை மாறாமல் அப்படியே நிற்கிறாள். பாஸ்கர் அச்சத்தில் நடுங்கி லீலாவை முறைத்திட, "யோவ் அங்க என்ன முறைப்பு.? என்னைய பாருயா" என்று மிரட்டி தன்னை பார்க்க வைத்தான்.

ஏதோ நினைவு வந்தவனாக "சம்பளத்தை உன் கைல குடுக்க சொன்னது கூட இதுக்கு தானா.? கேட்டா இந்த பொண்ணுக்கு விவரம் பத்தாதுனு பொய் வேற.? எல்லாம் இந்த பொண்ணுகிட்ட இருந்து புடுங்கிட்டு நீ சொகுசா வாழலாம்னு நினைப்போ.? இனி நீ சம்மளமில்லாத தோட்டக்காரனா வேலைக்கு வரணும்.. புரியுதா.?" என்று கேட்டான்.

"நான் எதுக்கு...?" என்று ஆரம்பித்தவரின் வார்த்தையில் வெளிப்படையாகவே முறைப்பை தந்து "டேய் போய் இவன் பண்ணுன கேடித்தனம் எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வா.. குடும்பத்தோட உள்ள வெக்க சரியா இருக்கும்" என்று துருவன் கூறியதில் பதறியவர் "இல்ல இல்ல நான் வர்றேன்" என்றார் பயத்துடன்.

"ம்ம்ம்ம்ம் உன் ஏமாற்று வேலை எல்லாம் என்கிட்ட காட்டலாம்னு இருந்த மவனே தொலைச்சுருவேன்.. வராம மட்டும் இருந்து பாரு உன் மருமகனை தூக்கிட்டு போய் உள்ள வெச்சுருவேன்" என்று கூடுதல் தகவலாக மிரட்டலையும் தந்திட, இனி இவரால் பின்வாங்க இயலுமா என்ன.?

அனைத்திற்கும் சரி சரியென்று தலையாட்டியவர் அமைதியாக நின்றிருந்த லீலாவை பார்வையால் மீண்டும் பொசுக்க தொடங்கிட, சப்பென்று ஒரு அறை விழுந்தது அதுவும் வடிவேலனுக்கு தான்.

"என்னடா நான் இருக்கறப்ப எப்படி இருக்கணும்னு தெரியாதா.?" என்று காவல் அதிகாரியாகவே மாறி குரலை உயர்த்திட,'நான் என்னடா பண்ணி தொலைச்சேன்.? பெரிய ஆப்பு நீ வாங்க வேண்டிய அடியை நான் வாங்கிருக்கேன்டா.. இதுக்கே உன்னைய வெச்சு செய்யறேன் இரு' என்று புலம்பினான்.

"யோவ் அந்த புள்ளையை முறைக்காதயா.. அப்பறம் நீயும் அடி வாங்க வேண்டி வரும்.. இவன் பாராபட்சம் பார்க்க மாட்டான்" என்றதில் பாஸ்கர் வாயடைந்து போய் "நான் கிளம்பறேன்" என்று விட்டார்.

"ம்ம்ம் இப்ப கிளம்பு.. நாளைக்கு சரியான நேரத்துக்கு வந்துருக்கணும்.. இல்லனா போலீஸ் உன் வீடு தேடி வரும்.. என்ன புரியுதா.?" என்று துருவன் வினவியதில் "புரியுது சார்" என்றவர் கிளம்ப எத்தனிக்க, "பெரியப்பா" என்ற லீலாவின் குரல் அவரை தடுத்தது.

"நான் என்ன பண்ணுனேனு இப்படி பண்றீங்க.? என் அப்பா போனதுக்கு அப்பறம் உங்களைய நம்புனேன்.. ஆனா நீங்க பணத்துக்காக தான் என்னைய வீட்டுல இருக்கவே விட்டுருக்கீங்க.. அப்பவும் நான் அமைதியா தானே இருந்தேன்.. இங்க வர மாட்டேனு அடம்பிடிச்சவளை நீங்களும் பெரியம்மாவும் தானே அனுப்பி விட்டீங்க.. அப்பறம் ஏன் பெரியப்பா இப்படி பேசிட்டு இருக்கீங்க.?

என் குணத்தையே கேவலப்படுத்திட்டு இருக்கறது உங்களுக்கு புரியலயா.? நான் இப்படிப்பட்டவளா.? உங்களுக்கு என்னைய பத்தி தெரிஞ்சும் இப்படி பண்றது நல்லாவா இருக்கு.? இனி இப்படி பேசாதீங்க.. மீறியும் பேசுனா நானே இந்த சார்கிட்ட நீங்க என்னைய கொடுமைப்படுத்துனதை எல்லாம் சொல்லி உள்ள வெக்க சொல்லிருவேன்" என்று தேம்பியபடியே கூறினாள்.

அவள் எதிர்த்து பேசியதை விட, அனைத்தையும் கூறி விடுவேன் என்றது தான் இவரின் வயிற்றில் புளியை கரைத்தது. அசையாமல் நின்றவரிடம் "இங்க நடந்ததை உன் பொண்டாட்டிகிட்ட சொல்ல கூடாது.. அப்படி சொல்லிட்டா நான் என்ன பண்ணுவேனு உனக்கு தெரியும்" என்றான் கூடுதல் மிரட்டலாக.!

அனைத்திற்கும் தலையசைத்தவர் விட்டால் போதுமென்று ஓடி விட, விடாமல் கண்ணீர் வடித்தவளிடம் "சரி உட்காரு" என்று துருவன் கூறினாலும் தேம்பியபடியே லீலா நின்றிருக்க, "ஏய் உட்காருனு சொல்றேன்ல.?" என்று அதட்டலுடன் வந்த வார்த்தையில் பட்டென்று அமர்ந்து விட்டாள்.

'இதுக்கு தான் அவன் சொன்னா கேட்டுக்கணும்னு சொல்றது.? அழுது அவன்கிட்ட இருந்து இரக்கத்தை சம்பாதிக்கலாம்னு நினைச்சீயா.? அது நடக்கவே நடக்காது கனவுல கூட நடக்காது' என்று மனதினுள் நக்கலடித்து நின்றான் வடிவேலன்.

"எதுக்கு அழுகற.?"

"தெரியல"

"ஓஓஓஓ இனி அழுவீயா.?"

"தெரியல"

"ஏய் ஒழுங்கா பதில் சொல்லு.. இல்ல சப்புனு அப்பிருவேன்" என்று அவன் கடுப்பாகியதில் இவள் பயந்து போனாள்.

"இனி அவங்க அப்படி பேசுனா பயந்து நிற்பீயா.?"

"மாட்டேன்"

"எப்ப பார்த்தாலும் அழுதுட்டு இருப்பீயா.?"

"மாட்டேன்"

"அப்ப என் அம்மாவை பார்த்துட்டு இங்கயே இருக்கீயா.?"

"மாட்டேன்"

"அப்ப இங்க இருக்க மாட்டியா.?"

"மாட்டேன்"

வடிவேலன் தான் 'பைத்தியமே அவன் என்ன கேட்கறான் நீ என்ன சொல்லிட்டு இருக்க.? அவனே மலைல இருந்து கீழ இறங்கி வந்தாலும் நீயே மறுபடியும் மலைல போய் உட்கார்ந்துக்கோங்க உட்கார வெச்சுருவ போல.?' என்று புலம்பி பெண்ணவளின் தலையில் தட்டி "அவன் என்ற கேட்கறான் நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க.?" என்றதும் திருதிருவென விழித்தாள்.

"கூட்டிட்டு போய் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துருடா.. நீயே அம்மாவை பார்த்துட்டு இங்க இருந்துக்கோ" என்று விட்டு துருவன் எழுந்திட, பதறி போன லீலா "இல்ல இல்ல நானே பார்த்துக்கறேன்.. அம்மாவை நான் பார்த்துக்கறேன்.. என்னைய போக சொல்லாதீங்க" என்றாள் அவசரமாக.

"இப்ப நீதான் இங்க இருக்க மாட்டேனு சொன்னீயே.?" என்று அவன் திருப்பி கேட்டதில் என்ன பதிலுரைப்பது என்று புரியாமல் "அது.. அது.. நான் இங்கயே இருக்கேன் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

வடிவேலனிடம் தலையை மட்டும் அசைத்து விட்டு துருவன் நகர்ந்திட, இன்னும் குனிந்த தலை நிமிராமல் அதுவும் துருவன் சென்றதையும் உணராமல் "என்னைய போக சொல்லாதீங்க" என்று கெஞ்சி கொண்டிருந்தாள்.

"அட பைத்தியமே அவன் போய் அரைமணி நேரமாகுது.. இன்னும் யாருகிட்ட கெஞ்சிட்டு இருக்க.?" என்று வடிவேலனின் குரலில் தலை நிமிர்ந்தவள் துருவனை காணாமல் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை போல் முழித்தாள்.

பாவனை மாறாமல் "அண்ணா அவங்க எங்க.? பேச பேச காணாம போயிட்டாங்க" என்று அப்பாவியாக கேட்டிட, "தொலைஞ்சு போய்ட்டான்.. வா தேடி கண்டுபிடிப்போம்" என்று கேலி செய்து "அவன் தான் உன்னைய இங்க இருக்க சொல்லிட்டான்ல.? அப்பறம் எதுக்கு இன்னும் ஒப்பாரி வெச்சு ஊரை கூட்டிட்டு இருக்க.? அடச்சீ கண்ணை துடைச்சு போய் அம்மாவை பாரு.. நான் சாப்பிட எடுத்துட்டு வர்றேன்" என்று நிலைமையை சகஜமாக்கினான். விட்டால் அதைப்பற்றியே பேசி பேசி புலம்புவாள் என்றுணர்ந்து.!

நல்லவேளை வடிவேலனின் அதட்டல் வேலை செய்தது போலும் தெய்வானையை பார்க்க சென்று விட்டாள். இவன் தான் பெருமூச்சு விட்டு 'ஹப்பாடா தப்புச்சேன்' என்று நிம்மதியடைந்தான்.

மாயாவிடம் மௌனம். வருணும் அமைதியை கடைப்பிடித்தான். யாரு முதலில் பேசுவது என்று போட்டி போலும்.? இருவருமே மௌனத்தை கலைப்பதாக தெரியவில்லை.

பேச வேண்டும் என்றழைத்தவளே அமைதியாக இருக்கும் போது அவளின் பேச்சிற்கு மதிப்பளித்து வந்த வருண் என்ன பேசுவான்.? அவனும் வார்த்தைகளின்றி தான் அமர்ந்திருந்தான்.

மாயாவின் இதழில் இருந்து வெளி வரும் வார்த்தைக்காக இவன் காத்திருக்க, பெண்ணவளோ தான் எடுத்த முடிவை அவனிடம் உரைக்க முடியாமல் தடுமாறி நிற்கிறாள் படபடப்புடன்.!

எப்படியும் கூறி தான் ஆக வேண்டுமே.? அதனால் நிமிர்ந்து அமர்ந்து ஆடவனை விழிகளுக்குள் நிரப்பி கொண்டு "நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்
வருண்.. நமக்கு செட்டாகாதுனு தோணுது" என்று கூறி அவனின் தலையில் குண்டை இறக்கினாள்.




தொடரும்..



Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 13



மாயாவின் முடிவில் சமைந்து வார்த்தைகளின்றி வருண் நிற்க, "உனக்கும் எனக்கும் செட்டாகும்னு தோணல வருண்.. உன் எண்ணம் வேற.. என் எண்ணம் வேற.. நான் தப்பு பண்ணுனவங்கள மன்னிப்பேன் தான்.. அதுக்காக இவ்ளோ பெரிய தப்பை பண்ணிட்டு மறுபடியும் அந்த தப்பை பண்ணிட்டு திரியறவங்கள நான் மன்னிச்சு விடற குணம் கிடையாது..

உன் தம்பினு நீ மன்னிக்கலாம்.. ஆனா நான் ஏன் மன்னிக்கணும்.? அவன் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றது உன் கண்ணுல மட்டும் பட மாட்டிங்குதா.? இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருக்கீயா.? எனக்கு புரியவே இல்லை" என்றாள் ஆதங்கத்துடன்.!

இவளின் வார்த்தைகள் எதுவும் அவனின் செவியில் விழவில்லை. "தியா..?" என்ற கேள்வியை எழுப்ப, அவனை வெற்றுப்பார்வை பார்த்தவள் "அவ என் மகளா எப்பவும் என்கூட தான் இருப்பா.. அவளுக்கு இப்படிப்பட்ட அப்பா தேவையே இல்லை" என்று விட்டாள் சுள்ளென்று.

அவள் கூறுவதும் சரியே. அவளிடம் எந்த உரிமையில் இவன் சண்டையிட முடியும்.? தியா வயிற்றில் இருந்தபோது அவளின் அன்னையை இவன் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமா.? இவனின் மனசாட்சியே அவனை தினமும் குற்றம் சுமர்த்தி கொண்டிருக்கிறதே.?

'ஏன் இந்த முடிவு.?' என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. விரக்தியுடன் "நீ சொல்றதும் சரிதான் மாயா.. நான் தியாவை எந்த உரிமைல சொந்தம் கொண்டாட முடியும்.? நான் உன்னைய லவ் பண்றேனு விடாம லீலாவை சுத்தி அவளை கல்யாணமும் பண்ணேன்.. ஆனா அவளுக்கு உண்மையா இல்லாம போய்ட்டேன்.. அப்பவும் அவ என்கூட தான் இருந்தா.. அவளை நான் பிரிஞ்சு இருந்த நேரத்துல கூட என்னைய பத்தி நினைச்சா..

லீலா ஒரு பக்கம்னா நீ ஒரு பக்கம்.. நான் லீலாவை காதலிக்கறேனு தெரிஞ்சும் விலகி போய்ருக்க.. ஆனா லீலாக்கு ஒன்னுனு தெரிஞ்சதும் முதல் ஆளா வந்து நின்ன.. அவளை இழந்து நின்னப்ப என்னையும் என் குழந்தையையும் நீதான் பார்த்துக்கிட்ட.. என்னைய லீலாவோட இறப்புல இருந்து மீட்டு நடமாட வெச்ச..

லீலாவோட காதலுக்கும் நான் தகுதியில்லை.. உன்னோட காதலுக்கும் தகுதியில்லாம தான் இருக்கேன்.. இந்த கேடுகெட்டவன் மேல உங்களுக்கு ஏன் காதல் வரணும்.?" என்றவனின் உள்ளம் ரணத்தை தோற்றுவித்திருந்தது.

மாயாவின் விழிகளில் ஈரம் படர்ந்தாலும் மறுமொழி உதிக்கும் திரணியின்றி அமைதி காத்திட, வருணே "நீ எடுத்த முடிவ சரிதான் மாயா.. தப்புனு சொல்ல எனக்கு தகுதியே இல்லை" என்றவளிடம் 'இப்படி எல்லாம் பேசாத' என்றுரைக்க தான் பெண்ணவளின் மனது உந்தியது. ஆனாலும் எடுத்த முடிவில் உறுதியாக தான் நிற்கிறாள்.

கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பியவன் என்ன நினைத்தானோ திரும்பி வந்து பெண்ணவளின் அனுமதியும் கோராமல் அவளை அணைத்து கொண்டான் இறுக்கமாக. இது தான் கடைசி அணைப்போ.? என்று மாயாவும் அவனை விலக்காமல் நின்றிருக்க, அவளின் பிறைநெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விலகினான்.

"என் வாழ்க்கைல வந்தது நீயும் லீலாவும் மட்டும் தான்.. இனி யாரும் வர மாட்டாங்க.. நீயும் விலகிட்டேனு நான் இன்னொரு பொண்ணை தேடி போய்ருவேனு மட்டும் நினைச்சராத.. கண்டிப்பா அந்த தப்பை செய்ய மாட்டேன்.. தியா உன்கிட்ட இருக்கறது தான் அவளுக்கும் நல்லது.. அவளை நல்லா பார்த்துக்கோ அது போதும்" என்று நா தழுதழுக்க உரைத்தான்.


பின்பு "ப்ளீஸ் மாயா இப்ப நடிக்க சம்மதம் சொன்ன படத்துல இருந்து விலகாத.. கடைசியா உன் கூட சேர்ந்து ஒரு படம் மட்டும் பண்ணிக்கறேன்.. ப்ளீஸ் மாயா.. முடியாதுனு சொல்லிராத.. ஒரு நண்பனா நினைச்சு என் கூட இந்த ஒரு படம் மட்டும் பண்ணு.. ப்ளீஸ்" என்று கெஞ்சியவனின் குரல் என்னமோ செய்ததில் சரியென்று தலையை அசைத்து விட்டாள்.

ஆனாலும் அவனின் வார்த்தைகள் தான் அவளுள் ஓடி கொண்டே இருந்தது. நெஞ்சமும் பாறையானது. அவனுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டேன்.. இப்போது அந்த கனவு அனைத்தும் கானல் நீராய் மாறி இருந்தது.

விம்மி வெடித்து கதறினாள். அவளின் வாழ்வே முடிந்தது போலிருந்தது அந்நிமிடத்தில். தியாவின் முகம் மனக்கண்ணில் தோன்றியதும் 'எனக்கு என் பொண்ணு இருக்கா.. இனி அவளுக்காக மட்டும் வாழணும்' என்று தீர்மானமும் எடுத்ததில் கலங்கிய விழிகளும் கண்ணீரை நிறுத்தி கொண்டது.

அவளவனுடன் செலவிட போகும் நாட்களும் இருக்கின்றது. அந்நாட்களை பொக்கிஷமாக சேமித்து கொள்ள தயாராகவும் மாறினாள். மீராவிடம் கூறி இயக்குனரிடம் படத்தில் நடிக்க சம்மதம் என்றுரைத்திட, அவரும் மகிழ்ந்து படிப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கலாம் என்று மற்றவர்களுடன் சேர்ந்து கலந்தோசித்து விட்டு கூறுவதாக கூறி வைத்தார்.

வருணுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. அவனின் மனது முழுவதும் லீலா தான். 'ஏன்டி விட்டுட்டு போன.?' என்று கத்த வேண்டும் போலிருந்தது. அதற்கும் துணிவின்றி அமைதி காக்கிறான் கோழையாக.!


இவன் இப்படியே இருக்கட்டும்.. அப்படி என்ன தான் நடந்துச்சுனு நம்ம பார்த்துட்டு வந்தரலாம்.. வாங்க வாங்க சீக்கிரம் போலாம்.

வருணும் லீலாவும் காதலர்கள் என்று இவன் வெளியில் கூறிய சமயம் பலருக்கு அதிர்ச்சி தான். அவர்களை விட வருணின் அன்னையான சுசிலாவுக்கு தான் பேரதிர்ச்சி.

முதலில் வருணின் குடும்பத்தை பார்த்தரலாம். அப்பா நக்கீரன்.. இவரும் சினிமாத்துறையில் இருப்பவர் தான். இவர் காதலித்து கரம் பிடித்தவர் தான் தங்கமயில். இவர் தான் வருணை பெற்ற அன்னை. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக வருணின் மூன்றாவது வயதிலே பிரித்தனர். அவன் அன்னையிடம் தான் வளர்ந்தான்.

அவரும் உடல்நிலை சரியில்லாமல் மாண்டு போக, அதன் பின்பு நக்கீரனிடம் வந்தான் வருண்..இவர் தங்கமயிலை பிரிந்ததுமே சுசிலாவை திருமணம் செய்திருக்க, வருண் இவர்களிடம் வந்தபோதே ராம்பிரபும் சுபவர்ஷினியும் பிறந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால் வருண் மட்டும் தனியாக இருப்பான். அவனின் தந்தையும் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் படிப்பில் மட்டும் கவனமாக இருந்தான். அச்சமயத்தில் படத்தில் நடிக்க வருணுக்கு வாய்ப்பு கிடைக்க, அதை கெட்டியாக பிடித்து கொண்டான்.

அன்றிலிருந்து அவனின் தனிமையும் நீங்கியது. சுசிலாவும் இவனை கவனித்து கொள்ள தொடங்கி இருக்க, ராம்பிரபுவும் சுபவர்ஷினியும் கூட அண்ணா அண்ணா என்று அவனின் பின்னே சுற்றினார்கள்.

இவர்களின் திடீர் மாற்றம் வருணுக்கு திகைப்பை தான் தந்தது. இருந்ததும் எதையும் யோசிக்காமல் அவர்களுடன் இணைந்து கொண்டான். சில வருடங்களில் நக்கீரனும் இறைவனடி சேர்ந்தார்.


வருண் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது சுசிலா தான். அவனும் தன் அன்னை அவர் என்று அனைத்து முடிவுகளையும் அவரிடம் விட்டு விட்டிருந்தான். அது தான் அவனின் வாழ்வையே சுழன்றடிக்க காத்திருக்கிறது என்று தெரியாமல்.!

'தன்னிடம் கூட கூறாமல் வருணே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறான்.. அப்படியென்றால் இந்த வீட்டில் எனக்கு என்ன மரியாதை.?' என்று சுசிலா செய்த ஆர்ப்பாட்டங்கள் சொல்லில் அடங்காதவை.

ஆனாலும் வருண் சமாளித்து சம்மதமும் வாங்கி விட்டான். படத்தின் வெற்றி விழாவிற்கு அனைவரும் வர, மறுத்தால் அதுவும் சந்தேகத்தில் எழும் என்பதற்காக மாயாவும் வந்தாள்.

அவளிடம் "அக்கா சாரிக்கா.. உங்ககிட்ட மறைக்கணும்னு இல்லை.. அவங்களை பிடிச்சுச்சு.. சோ ஓக்கே சொல்லிட்டேன்" என்று இத்தனை நாட்கள் மறைத்ததற்கு மன்னிப்பு கேட்டாள் லீலா.

இவளிடம் கோவப்பட்டால் வருணுக்கு தன் மேல் காதல் வந்து விடுமா என்ன.? அவர்கள் பிடித்திருக்கிறது என்னும் போது தன்னால் எதை மாற்றிட இயலும்.?

நிதர்சனததை உணர்ந்து மாயாவும் "இதுல என்ன இருக்கு.? எனிவே வாழ்த்துகள்" என்று கை குடுத்தவள் அதோடு விலகி நின்று விட்டாள். லீலாவையும் வருணையும் தான் விடாமல் மீடியா ஆட்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் பிடித்து அதையும் இணையத்தில் வெளியிட்டனர்.

மாயாவிற்கு உள்ளம் வலித்தது. அவள் ஆசைப்பட்டது வருணை மட்டும் தான். ஆனால் அவன் வேறொருத்தி உடன் நெருக்கமாக நிற்பதை அவளால் பார்க்கவே முடியவில்லை. பாதியில் எழுந்து சென்றாலும் வதந்திகள் பரவ கூடும். அதற்கும் இவள் இடம் குடுக்க நினைக்கவில்லை.

எப்படியோ வெற்றி விழா முடியும்வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சிரித்த முகத்துடனே இருந்தவள் முடிந்ததும் உடனே அனைவருக்கும் கையசைத்து விட்டு கிளம்பினாள். வீடு வரும் வரைக்கும் சாதாரணமாக தான் இருந்தாள். அவளின் அறைக்குள் நுழைந்ததும் விடாமல் கண்ணீர் வடிந்திட, அதோடு தன் காதலையும் அழிக்க முயன்றாள்.

வருணை சூழ்ந்து கொண்டு பல கேள்விகள். அனைத்திற்கும் பொறுமையுடன் பதிலளித்தான். அதுவும் "நீங்க மாயாவை கல்யாணம் பண்ணிக்கறது பெட்டர்" என்று வந்த வார்த்தையில் கடுப்புற்றவன் "இது என் வாழ்க்கைங்க.. யாரை கல்யாணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. என் சாய்ஸ் லீலாவா இருக்கும்போது அதைய எப்படிங்க விட முடியும்.? என் ரசிகர்கள்னு சொல்ல எனக்கு பெருமை தான்..

அதற்காக பிடிக்காத வாழ்க்கையை வாழ முடியுமா.? மாயா எனக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான்.. இப்படி பேசி பேசி என் லீலாவை கஷ்டப்பட வெக்காதீங்க" என்று தன்மையுடனே எச்சரித்தான்.

இதை பலர் ஏற்றனர். சிலர் திமிரு என்றனர். கலவையான விமர்சனங்களுடனே இவர்களின் திருமணமும் பிரமாண்டமாக நடைபெற, அதில் நடிகர்கள், நடிகைகள் என்று அனைவரும் கலந்து கொண்டனர்.

மாயாவும் வந்தாள். இப்போது அவளின் முகம் தெளிவாக இருந்தது. தன்னை வேண்டாம் என்றவன் தனக்கும் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாள். லீலாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் மனநிறைவும் கொண்டாள்.

ரசிகர்களை போலவே தான் சுசிலாவும் சுபவர்ஷினியும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர். இவர்களுக்கும் மாயாவை தான் பிடித்திருந்தது. அதுவும் திரையுலகில் முன்னணியாக இருப்பவள். ஆனால் லீலா அப்படி இல்லையே என்று.!

வருணின் பேச்சை மீற முடியாமல் உள்ளுக்குள் கடுப்புடனும் வெளியில் செயற்கையான சிரிப்பை ஒட்ட வைத்து நின்றிருந்தனர். மாயாவிடம் இவர்கள் பேச முயன்ற போது அவளோ கையசைத்து கிளம்புகிறேன் என்று விட்டு கிளம்பினாள்.

மாயா வருணை காதலிக்கிறாள் போலும் அதனால் தான் வந்ததும் அவள் கிளம்பி விட்டாள் என்றும் மாயாவை ஏமாற்றி விட்டு தான் லீலாவை கரம் பிடித்திருக்கிறான் என்றும் வதந்திகள் உலாவியது.

இவர்கள் திருமணம் முடிந்து ஒரு மாத காலமும் முடிவடைந்து விட்டது. ஆனாலும் வருண் லீலாவை திருமணம் செய்தது பிடிக்காத பல ரசிகர்கள் லீலாவின் மேல் தான் வன்மத்தை கொட்டினர்.

அந்நேரம் அவள் கலங்கி நின்ற போதெல்லாம் தோள் குடுத்து துணையாக நின்றது வருண் தான். அவனும் பல முறை ரசிகர்களிடம் எச்சரித்து விட்டான் என் மனைவியை தவறாக பேசாதீர்கள் என்று.! கேட்க மாட்டேன் என்கிறார்களே.?

கடைசியில் லீலாவை தான் சமூக வலைதளங்களை பார்க்காதே என்றிட, "நீங்க என்னைய கல்யாணம் பண்ணுனதுல இருந்து நிம்மதியே இல்லாம போய்ருச்சுல.?" என்று மனம் தாளாமல் கேட்டவளை முறைத்து "நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்.. அடுத்தவன் சொல்றதை எல்லாம் நீதான் கேட்டு கேட்டு வருத்தப்பட்டுட்டு இருக்க.. எனக்கு உன்னைய பிடிச்சது..

அதனால உன்கிட்ட காதலையும் சொல்லி சம்மதம் வாங்குனேன்.. இதுல எப்படி எனக்கு நிம்மதி இல்லாம போகும்.? எப்பவும் எனக்கு நீ மட்டும் தான் பட்டு" என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

நடிகர்களை திருமணம் செய்து தினமும் ஒவ்வொரு விமர்சனங்களையும் ஏற்று அது தன்னை பாதிக்காத வகையில் வாழ்வது அவ்வளவு எளிதான காரியமா என்ன.? முதலில் லீலா தடுமாறினாள். பின்பு இது தான் தன் வாழ்க்கை முறை என்று ஏற்றும் கொண்டாள்.

'நீ வருணுக்கு பொருத்தமே இல்லை' என்று வரும் கருத்துக்களில் இவள் துவண்டு போவது மட்டும் உண்மை. ஆனாலும் வருணின் காதலில் மூழ்கி அதை மறந்து விடவும் முயல்வாள். இவர்களின் வாழ்வும் இப்படியே பலவித எதிர்மறை கருத்துக்களுடனே சென்று கொண்டிருக்க, எதிர்பாராத சந்தோசமும் இவர்களை வந்தடைந்து அளவில்லாத ஆனந்தத்தை தந்தது.



தொடரும்..

Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 14



இருவரின் காதலுக்கு சாட்சியாக லீலாவும் கருவுற, அதையறிந்த வருண் சந்தோஷத்தில் குதித்தான். பெண்ணவளை அணைத்து இதழும் பதித்து தன் மகிழ்ச்சியை அவளுக்கும் கடத்தினான்.

இச்செய்தியும் அனைவரையும் சென்றடைய, பலர் வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்ததுமே வருணும் லீலாவும் தனியாக தான் இருக்கிறார்கள். இப்போது அவளை பார்த்து கொள்ள ஆட்கள் வேண்டும் என்பதற்காக அவளை அவளின் பிறந்தகத்திற்கு அனுப்ப வருண் முடிவு செய்திட, சுசிலா அதை மறுத்தார்.

"நாங்க இருக்கோம்ல.? இப்பவே ஏன் அவளை அம்மா வீட்டுக்கு அனுப்பணும்.? வளைகாப்பு முடிஞ்சதும் போனா போதும்.. நீ அவளை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வா" என்ற அன்னையின் பேச்சை இவன் நம்பினான் ஆனால் இவர் தான் தெளிந்த நீரோடையாக செல்லும் அவர்களின் வாழ்க்கையில் கல்லெறிய போகிறார் என்பதை அறிந்திடாமல்.!

வருணும் மனைவியுடன் வீட்டிற்கு சென்றான். அந்நேரம் அவன் நடித்து கொண்டிருக்கும் ஒரு படமும் முடிவுறும் தருவாயில் இருக்க, அந்த படத்தை முடித்து விட்டு மனைவியின் பேறுகாலம் முழுவதும் அவளுடனே இருக்க வேண்டும் என்ற முடிவு.

அதனால் அவ்வப்போது அவன் வெளியில் தங்கவும் நேரிட்டது. மனைவியுடன் தன் அன்னை இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அவனும் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

லீலாவும் நம்பினாள். ஆனால் அவர்களின் உண்மையான குணம் தெரிய வந்தபோது அதிர்ந்தாள். வருண் இருக்கும்போது பாசமாக பார்த்து கொள்வதை போலவும், அவன் இல்லாவிட்டால் இவளை பேச்சாலே குத்திக் கொலையாக கொன்றார். இதில் சுபவர்ஷினியும் கூட்டு.

இதை வருணிடம் கூறலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் அவனின் படமும் முடிவுறும் நிலையில் இருக்கிறது. இச்சமயத்தில் இதை கூறி அவனின் நிம்மதியை கெடுக்க வேண்டுமா.? என்று நினைத்து அமைதி காத்தாள்.

வருண் இல்லாவிட்டால் அறையை விட்டு வெளியில் வருவதையே தவித்தாள். அவளை பார்க்க அவளின் சொந்தங்கள் வந்தால் மட்டுமே வெளியில் வருவாள். இல்லையென்றால் அறையில் மட்டுமே அவளின் வாசம்.

இவள் அமைதியாக இருந்தாலும் சுசிலா அமைதியாக இருக்கவில்லை. அவள் குடிக்கும் பாலில் உப்பை கலந்து கொடுப்பதும் உண்ணும் உணவில் காரத்தை அதிகப்படுத்துவதுமாக அவரின் கொடுமைகள் அரங்கேறியது.

"ஏன் இப்படி பண்றீங்க.?" என்று லீலாவும் நேரடியாகவே அவரிடம் கேட்டிட, "என் பையனை வளைச்சு போட்டு எங்ககூட இல்லாம பண்ணிட்டியே படுபாவி.. அவன் என் பேச்சை தட்டவே மாட்டான்.. ஆனா உன்னைய கல்யாணம் பண்ணுனதுல இருந்து என் கூட பேசறதையே விட்டுட்டான்.. நீதான் என்னமோ சொல்லி குடுத்து என் பையனை மாத்தி வெச்சுருக்கணும்.. உண்மையை சொல்லு உன் வயித்துல இருக்கற குழந்தை யாரோடது.?" என்று கேட்டு பெண்ணவளை அதிர செய்தார்.

காதுகளை மூடிக் கொண்டு "இப்படி எல்லாம் பேசாதீங்க" என்றிட, "அப்படித்தான்டி பேசுவேன்.. இது தான் உண்மையாச்சே.. என் பையனை என்ன பண்ணுன.? உண்மையாவே இது எங்க வீட்டு வாரிசா.?" என்று கேட்டு அவளை மரிக்க செய்தார்.

அழுகையுடன் அறைக்கு லீலா ஓடிட, அவர் பேசியதை இவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. வேறு ஏதாவது பேசி இருந்தால் கூட திருப்பி பேசி இருப்பாள். ஆனால் அவர் இவளின் கற்பையே சந்தேகப்பட்டு அல்லவா பேசினார்.. எப்படி அவளால் பதிலுரைக்க முடியும்.?

வருண் வந்ததும் இங்கு இருக்க முடியாது என்று கூறி தனியாக சென்று விட வேண்டும்.. இங்கிருந்தால் தான் பிரச்சனை என்ற முடிவுடன் வருணின் வருகைக்காக இவள் காத்திருந்தாள்.

வருணும் வந்தான். வந்ததுமே "என்னால இங்க இருக்க முடியாது வருண்.. நம்ம தனியா போய்ரலாம்.. உங்க அம்மா ரொம்ப கேவலமா பேசறாங்க" என்று அழுகையுடன் கூறியதும் "நிறுத்துடி சும்மா என் அம்மாவையே குறை சொல்லாத" என்று குரலை உயர்த்தி அவளை திகைப்படைய செய்தான் வருண்.

"வருண்" என்றவளுக்கு வேறு வார்த்தையே வராமல் போய் விட, "என் அம்மா என்ன பண்ணுனாங்க லீலா.. குழந்தைக்கு நல்லதுனு நினைச்சு சொல்றதை கூட நீ ஏத்துக்க மாட்டியா.? நல்லது சொன்னா அது உனக்கு தப்பா தெரியுதா.? அதற்காக இங்கிருந்து போலாம்னு சொல்றது எல்லாம் அநியாயம்" என்றான் கோவத்துடன்.

வருணுக்கு அழைத்து 'லீலா தான் எங்களை தவறாக பேசுகிறாள்.. அவளுக்கு நல்லது தான் சொன்னோம்' என்று சுசிலாவும் சுபவர்ஷினியும் அழுது லீலாவின் மேல் தான் தவறு என்பதை போல் வருணை நம்ப வைத்திருந்தனர். கூடுதலாக 'நீ வந்ததும் வீட்டை விட்டு போய் விடலாம் என்றும் கூறுவாள் பாரு' என்றதற்கு 'லீலா அப்படி கூற மாட்ட.. நீங்க சும்மா சொல்லாதீங்கமா' என்று மனைவியை விட்டு குடுக்காமல் பேசி இருந்தான்.

ஆனால் வந்ததும் லீலாவும் சுசிலா கூறியதையே கூறியதில் இவனின் நம்பிக்கை பொய்த்து போனது. அதில் வந்த கோவத்தில் தான் வருணும் இப்படி பேசுவது.

"ப்ளீஸ் வருண்.. நீங்களும் என்னையவே தப்பா நினைக்காதீங்க.. என்னால இங்க இருக்க முடியல.. நம்ம போய்ரலாம்" என்று இவள் அவனுக்கு புரிய வைக்க முயன்றதற்கு "உன்கிட்ட சண்டை போடணும்னு நான் நினைக்கல லீலா.. உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா நீ கிளம்பு.. நான் இங்க தான் இருப்பேன்.. என் அம்மாவை தப்பா பேசறதை கேட்டும் உன் பின்னாடியே வருவேனு நினைச்சீயா.? உன் மேல வெச்ச காதலுக்கு மதிப்பே இல்லைனு நீ நிரூபிச்சுட்ட" என்று வார்த்தைகளால் அவளின் மனதை காயப்படுத்தினான்.

அதோடு லீலாவும் வாயை திறக்கவில்லை. 'என் காதல் உண்மையென்றால் நான் இங்கு தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறாயா.? சரி இருக்கிறேன்.. உனக்காக உன் மேல வைத்த காதலுக்காக உன் அன்னையின் பேச்சையும் தாங்கி கொண்டு இங்கயே இருக்கிறேன்' என்று நினைத்து அமைதியானாள்.

வருண் இருப்பதால் சுசிலாவும் அவளை நன்றாக பார்த்துக் கொள்வதை போல் தான் நடித்தார். அதை வருணும் நம்பி மனைவியை தான் குற்றம் சுமர்த்தும் பார்வை பார்ப்பான்.

மறுபடியும் படப்பிடிப்பு என்று வருண் கிளம்பிட, சுசிலாவும் கொடுமையும் தொடங்கியது. இதில் ராம்பிரபுவின் பார்வை வேறு. விடாமல் தன்னை தொடர்ந்த அவனின் பார்வையில் இவளின் உள்ளம் நடுங்கிட, வெளியில் வருவதையே தவித்தாள்.

இதற்கும் 'மகனிடம் எங்களை பார்க்கவே உன் மனைவிக்கு பிடிக்கவில்லை போலும்.. வெளியில் வரவே யோசிக்கிறாள்.. அவளின் விருப்பப்படியே நீங்கள் தனியாக சென்று விடுங்கள்.. குழந்தை ஆரோக்கியமாக பிறந்தால் போதும்' என்று லீலாவின் மேல் மறையாத கோவத்தை ஏற்படுத்தினார்.

வருணும் அன்னையை தான் நம்பினான். லீலாவிடம் சண்டையும் இட்டான். அவளோ அவர்கள் செய்வதை எல்லாம் கூறி 'என்னை நம்புங்கள்' என்று அழுக, 'நீ திருந்தவே மாட்ட.. போறதுனா போய் தொலை' என்று விட்டான். அவனிடம் இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்து விட்டாள்.

இவன் இப்படி மாறி விட்டானே.? என்று உள்ளம் குமைந்தாள். அவனிடம் இனி பேச போவதே இல்லை என்று முடிவெடுத்ததற்கு பதிலாக இவன் வந்தால் வரட்டும் என்று நினைத்து அவள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். வீட்டினுள் நடக்கும் எதுவும் வெளியில் தெரிய கூடாது என்று இவள் நினைத்தது தான் அவள் செய்த மிகப்பெரிய தவறு.

வருணும் நம்பவில்லை. சுசிலாவின் கொடுமையும் தீரவில்லை. ராம்பிரபுவின் பார்வையிலும் மாற்றமில்லை. அவன் இவளை காணும் போதெல்லாம் விழுங்குவதை போலவே பார்த்து வைக்க, தனியாக இருக்கவே பயந்தாள்.

இதை வருணிடம் கூறினாலும் நம்புவானா.? தன்மேல் தான் பழியை சுமர்த்தி இன்னும் வார்த்தையை விடுவானே.? அதை கேட்க தனக்கு தெம்பில்லை என்று நினைத்து அவனிடம் கூற நினைத்த நினைப்பை கை விட்டாள்.

யாரும் இல்லாத சமயத்தில் அண்ணனின் மனைவி என்றும் பாராமல் ராம்பிரபு லீலாவின் அறைக்குள் நுழைந்திருக்க, அவனை கண்டு விதிர்விதிர்த்து போனவளுக்கு பயத்தில் மயக்கமே வந்து விட்டது.

'அதுவும் நல்லது' என்று நினைத்து அவன் பெண்ணவளை நெருங்கிய சமயம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட, 'யாரது.?' என்ற யோசனையுடன் அவ்வறையை விட்டு வெளியேறி கதவையும் திறந்திட, வெளியில் நின்றவளை கண்டு 'நீயா.?' என்று கேட்டு முணுமுணுத்தான் திகைப்புடன்.!

நின்றிருந்தது மீரா தான். மாயா தான் அவளை அனுப்பி விட்டிருந்தாள். இவனை எதிர்பார்க்காமல் மீரா பயந்து நடுங்கிட, அதற்குள் வேலையாள் வரும் அரவம் உணர்ந்து அகன்றிருந்தான் ராம் பிரபு.

அவனை கண்ட பயத்தில் வீட்டில் யாருமில்லை என்று கூறியதையும் காதில் வாங்காமல் வேகவேகமாக ஓடி இருந்தாள் மீரா. ஏனென்றால் ராம் பிரபுவால் பாதிக்கப்பட்ட பெண்களுள் இவளும் ஒருவள் ஆயிற்றே.

ராம்பிரபுவிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தவளை காப்பாற்றியது மாயா தான். அதிலிருந்து அவளை தன் உதவியாளராகவும் நியமித்து தன்னுடன் வைத்தும் கொண்டாள். மாயாவினால் தான் இப்போது மீரா உயிருடன் இருப்பதும்.!

வீட்டிற்கு வந்த வருணின் முகம் உயிரற்று இருந்தது. அவனை கண்டதும் அனைத்தும் மறந்தவளாக ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டு "வருண்.. வருண் உன்.. தம்பி.. உன் தம்பி..." என்று முழுவதும் கூற முடியாமல் திணறிட, அவனோ அவளின் பதட்டத்தை உணராமல் "உண்மையாவே இது என் குழந்தையா.?" என்று கேட்டதில் அசைவற்று போனாள் பெண்ணவள்.



தொடரும்..

Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 
Status
Not open for further replies.
Top