ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

வேலையில் இருந்தவனை அழைப்பு மேல் அழைப்பு விடுத்து, "பொண்ணு உன்ன பாக்கணும்னு அங்க கோர்ட்லயே காத்துருக்குது மூத்தவனே, ஒரு அஞ்சு நிமிஷந்தேன் ஓரெட்டு போய் பாத்துட்டு வந்துடுய்யா" என வாசுகி நச்சரித்ததில் எரிச்சலோடு கிளம்பியவனுக்கு வரதன் எண்ணிலிருந்து வந்த மரகதவல்லியின் ஃபோட்டோ சாந்தபடுத்துவதாக இருந்தது.

மீண்டும் அவனே அன்னைக்கு அழைத்து, "பொண்ணுக்கு பேரென்ன?" என்றிருந்தான்.

"நம்ம மீனாட்சி ஆத்தா பேருதேன். மரகதவல்லி வீட்ல பாப்பான்னு கூப்பிடுதாக" என அவளை பற்றி இன்னும் நாலு வார்த்தை அவர் சொல்வதற்குள் வைத்தவன், பைக்கை எடுக்க வெளியேறவும், அவன் சொந்த வேலையாக செல்கிறான் என ஸ்டேஷனே புரிந்து கொண்டது.

"மரகதவல்லி" என மீண்டும் அவள்‌ முகத்தை பார்த்து சொல்லிக் கொண்டவன், போனை சட்டை பையில் போட்டுவிட்டு கிக்கரை உதைத்து இதோ இங்கு அவள் முன் வந்து நிற்கிறான். அவள் என்னவென்றால் போலீசை கண்ட திருடன் போல் விழித்து நிற்கிறாள்.

மரகதவல்லி, 'நிஜமாவே நேர்ல வந்துட்டாரா? இல்ல கனவா?' என கண்ணை கசக்கிவிட்டு பார்த்தவள், அவன் அங்கேயே நிற்பது தெரியவும், 'ஆத்தி நெஜமே தான்' எச்சிலை விழுங்கி கொண்டு எழுந்து நின்றாள்.

"மரகதவல்லி தானா உன் ஃபுல் நேம்?" என அதட்டலாக தான் ஆரம்பித்தான் மகிழ். அவளின் கண்களின் வழி அவனால் வேறொருவளை அல்லவா பார்க்க முடிகிறது, மேலும் அவள் முகத்தில் வந்து போகும் பாவனையிலேயே தன்னை கண்டு அரண்டு நிற்கிறாள் எனவும் புரிந்து விட்டது அவனுக்கு.

'என்ன நம்ம பேரு கூட தெரியாத மாதிரி கேக்குறாரு?' என்ற யோசனையில், "ஙே" என அவள் இன்னமும் விழிக்க,

அவன் அம்மாவிற்கு அவள் முன் நின்றே அழைத்தான், அந்த பக்கம் அவர் எடுத்ததும், "ம்மா பொண்ணு பேர் மரகதவல்லி தானே?" என கேட்க.

"எத்தன தடவையா கேப்ப? ஆமாய்யா. பொண்ணு போட்டோவ அவுக அப்பாட்ட வாங்கி அனுப்ப சொன்னேனே வரதன அவேன் அனுப்பலயோ?" என்றவர், "வரதா மூத்தவனுக்கு பொண்ணு ஃபோட்டவ அனுப்பினியா இல்லியா நீ? கூடவே பேரையும் எழுதி அனுப்பு" என்றார் அங்குமிருந்தவனிடம்.

"ம்ச் ம்மா, ஃபோட்டோ வந்தது உன் இம்சை தாங்க முடியாம பொண்ண பாக்க நேர்ல வந்தா, அந்த பொண்ணு பேய கண்டமாதிரி முழிக்குறா" என்றான்.

"அது நீ போலீஸ் உடுப்புல போனனாளாயா இருக்கும்யா. இல்லனா மாப்ளயே நேர்ல வந்து நிக்கவும் பதட்டத்துல அப்டி நிக்குமாட்டும் இருக்கும். நீ மொல்லாமா பேசப்பு, படபடன்னு நிக்காத"

"இந்த பொண்ணுக்கு காது கேக்குமானே தெரியல, நா பேர கேட்டா கூட பதில் சொல்ல காணும். சத்தமா பேசியே பதில் சொல்லல நீ மொல்லமா வேற பேச சொல்ற?"

"ஏங்க சம்பந்தி உங்க புள்ள ரொம்ப பயந்த சுபாவமோ? என் மகன் போய் பேசியும் அமைதியா நிக்குதாம்" வாசுகி அங்கு யாரிடமோ பேசுவது கேட்க, இங்கு இவன் தன்னெதிரில் நின்றவளை தான் பார்த்திருந்தான்.

அவன் பேசுவதை கேட்டு இன்னும் விழி விரித்திருந்தாள், 'அப்போ இவருக்கு என்ன அடையாளம் தெரியலையா? என்ன மறந்துட்டாரா நிஜமாவே? நா மட்டுந்தான் இத்தன வருஷமா இவர பத்தி நினைச்சு பயந்துட்ருந்தேனா? இல்ல போட்டு வாங்க பாக்றாரா? மீனாட்சி எந்த ஆங்கில்ல இவரு என்ன அப்ரோச் பண்றாருன்னு காமிச்சு தாங்களேன் ப்ளீஸ். நானும் அலர்ட் ஆகிப்பேன்ல?'. என அவள் நினைத்துக் கொண்டிருக்கையில் தான் அவன் வாசுகியிடம் பேசுவதே அவள் கவனத்திற்கு வந்தது.

"காது கேக்குமான்னு தெரியல" என்றெல்லாம் அவன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு, 'இந்த நக்கல் மட்டும் இன்னும் குறையல போல' என எண்ணிக்கொண்டு மூக்கை சுருக்கி பார்த்திருந்தாள். அப்போது அவள் மேசை மேலிருந்த போன் அதிர்ந்து ஒளிரவும், அம்மா எண்ணை பார்த்து விட்டு எடுத்தாள். இனி வேறு வழியில்லை யாரை பார்க்க பயந்து வீட்டிற்கு செல்லாமல் நின்றாளோ அவனே அவள் முன் வந்து நின்றிருக்க, இனி அவர்களை தவிர்த்து என்ன பயன், என்ற முடிவில் அம்மா அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"ஹலோ ம்மா" என்ற இவளை அதற்கு மேல் பேசவிடாமல், "அறிவுகெட்ட கழுத, நா அவ்வளவு சொல்லியும் அங்க உக்காந்துட்டு அழிச்சாட்டியம் பண்ணிட்டல்ல? நீ வீட்டுக்கு வா வச்சுக்குறேன். எல்லாரும் இங்க வந்து காத்துகடந்தா நீ அங்க உக்காந்துட்டு போனயும் எடுக்க மாட்டேனுட்டன்னு தான், மாப்ளைய அங்க அனுப்பிருக்கோம். அவர்ட்டையும் மூஞ்ச தூக்கிட்டு நிக்றியாம். என்ன முடிவுல இருக்க? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்றியா இல்ல நாங்க லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போகவா?" என அவர் பொரிந்து தள்ளவும்.

"லூசம்மா ஃபோன வை" என கடுப்பாகி வைத்துவிட்டாள்.

அவன் இன்னும் வாசுகியிடம் பேசிக் கொண்டு தானிருந்தான், "சம்பந்தியம்மாட்ட பேசிட்டேன் மூத்தவனே, பொண்ணுக்கு போனு போட போயிருக்காக. நீயும் பிள்ளைய பயப்படுத்தாம பேசு. வக்கீல் புள்ளனாலும் பொம்பள புள்ள‌ பாத்தியா நீ டிவிலலாம் வாரத பாத்து பயந்துருக்குமாட்டு இருக்கும். நீ பொறுமையா பேசி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிபுடு. மத்தத நா பாத்துகிடுதேன்" என்றார். சம்மதம் அவளிடம் கேட்க சொல்லாமல் இவனை சொல்லிவிட சொல்கிறார் அவர்.

"சரிம்மா, பேசி‌பாக்றேன் எனக்கு ஒத்து வருமான்னு" என்றான் இவனும் கெத்தாக.

"அதெல்லாம் வரும். நீ என்னத்தையாது சொல்லி காரியத்த கெடுத்துறாத. அம்மா உன்னைய கெஞ்சி கேட்டுகிடுதேன், இந்த புள்ளைய எப்டியாது கட்டிகிடணும் நீயி" அதற்குள் அகிலா இவளிடம் பேசி முடித்து வாசுகி முன் சென்று விட்டார் போலும், "என்ன மதினி பேசிட்டீகளா? அப்பச்சரி இனி அவுக பேசிகட்டும்" என அவரிடம் சொல்லிவிட்டு, "எய்யா பாத்து பேசு. அம்மா வைக்கேன்" என்றுவிட்டார்.

"ம்ம்" என வைத்துவிட்டு இவளை பார்த்து இரு புருவமும் உயர்த்தி, "ஆர்டர் வந்துடுச்சா? இனினாலும் பேசலாமா?" என கேட்க,

பயம் தான், படபடப்பு தான், தொண்டை வரை வார்த்தைகள் அடைத்து கொண்டு நிற்க, தலையை மட்டும் அசைத்தாள்.

"ஜீவானந்தம் சார் ஜுனியர் தானே?" என்றதும் தான், 'ஆமால்ல இவர் தான் அன்னைக்கே நம்மள பாத்துட்டாருல்ல? கல்யாணம், மாப்ளன்னு குழப்பி விட்டதுல மைண்ட்ல ஒரு மண்ணும் தங்க மாட்டேங்குது' என அவளை அவளே மானாவாரியாக திட்டிக்கொண்டாள்.

"எதாது தப்பு பண்ணிட்டியா நீ?" என்றான் அவளையே கூர்ந்து பார்த்து. அதற்கு மட்டும் வேகமாக, "இல்ல இல்ல‌ ஏன் அப்படி கேக்கறீங்க?" என்றாள்.

"அப்போ போலீஸ‌ பாத்து இவ்வளவு நெர்வஸ் ஏன்? ரொம்ப பயப்டுற நீ?"

"இல்ல திடீருன்னு நீங்க வந்து நிக்கவும் பயந்துட்டேன்"

"ஓ அப்டி? ரைட். உன் ஃபுல் நேமே மரகதவல்லி தானான்னு கேட்டேனே?"

"ம்ம்"

"சரி ஏன் மேரேஜ் வேணாம் உனக்கு?" என அடுத்த கேள்வி கேட்க,

"வேணாமா?" என்றாள் அதிர்ந்து,

"உனக்கு வேணாம் தான?"

"நா அப்படி எப்ப சொன்னேன்?"

"பின்ன பொண்ணு பாக்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க, போன எடுக்காம நீ இங்க உக்காந்துருக்கியே? என்ன வேற பாக்கணும்னு சொன்னியாம்?யாரையும் லவ் பண்றியா?" அவளை கூர்மையாக அளந்தது அவன் பார்வை. அவளுக்கு திக் திக் நிமிடங்கள் தான். பதில் சொல்ல தாமதபடுத்தினால் கண்ணால் பார்த்தே உண்மையை வாங்கி விடுவான் போலும். அதற்காகவே பதில் கூறிக்கொண்டிருந்தாள்.

"இல்ல. உங்கள மேரேஜ் பண்ணிக்க பயமா இருந்தது அதான் வீட்டுக்கு போகல"

"ஏன் நா போலீஸ்காரன்றதாலயா?"

"அதும் ஒரு காரணம். இப்படியே இருந்து பழகிட்டேனா அதனால கல்யாணம்னு சட்டுன்னு ஏத்துக்க பயமா இருந்தது" சமாளிப்பாக கூறினாள்.

"அப்ப கன்னியாஸ்திரியா போ போறியா?"

"ஹான்?" என்றாள் அவன் கேட்பதை புரிய முயன்று.

"எப்படியும் யாரையாவது மேரேஜ் பண்ணிக்க தானே போற? இல்ல அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்னு காவி கட்டி போ போறியான்னு கேட்டேன்?"

"அதுக்கு?"

"அதுக்கு என்னையே பண்ணிக்கோ. எனக்கு நீ ஓ.கே தான். நாம கல்யாணம் பண்ணிக்லாம் ஓ.கேவா. ஒரு லாயர் மாறி நடந்துக்கணும். ஆட்ட களவாண்ட திருடி மாறி நடக்க கூடாது புரியுதா?"

கோவம் வந்தது தான் ஆனாலும் பல்லை கடித்து பொருத்து தலையை எல்லா பக்கமும் உருட்ட, "வேறெதுவும் சொல்லணுமா?" என்றான். அவள் இல்லை என வேகமாக தலை அசைக்க, "எனக்கு சொல்லணும். சொல்லட்டா?" அவன் கேள்வியே அவளை நடுங்கச்‌ செய்தது‌.

"என்ன சொல்லணும்?" என்றாள் பயத்தை காட்டாமல், ஆனால் அனைத்தையும் அவள் கண்ணில் படித்தான் அவன்.

"எனக்கு ஒரு லவ்வர் இருந்தா, அவ பேர் மந்தாகினி. எட்டு வருஷமாச்சு ப்ரேக்கப் ஆகி. இப்ப அந்த பொண்ணு சீன்லயே இல்லனாலும் உங்கிட்ட சொல்லிடலாம்னு தோணுச்சு. அதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. பட் எனக்கு பாஸ்ட் உண்டு அது உனக்கு ஓ.கே தானே?" ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் முகத்தை தான் ஆராய்ந்தான். அவள் கண்கள் அவனை வசமிழக்க செய்து கொண்டிருந்தது.

'இல்லன்னு சொன்னா விட்ருவாறோ?' என நினைத்தாலும், "ஓகே தான்" என்றவள் குனிந்து மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். அவன் தெரிந்து அவளை பேச வைக்க முயல்கிறானா இல்லை உண்மையிலேயே தன்னை தெரியவில்லையா என்ற குழப்பத்தில் அவளால் எந்த பதிலையும் வாய்விட்டு கூற முடியவில்லை.

"உனக்கு அப்படி எதுவும் இல்லையா?"

நிமிரவே இல்லை அவள், குனிந்து அழுத்தமாக நின்று, "இல்ல" என தலையையும் ஆட்டி கூறிவிட்டாள்.

"குட். மேரேஜ்கு ரெடி ஆகிடுவ தான?"

இப்போது நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், "என்ன பிடிச்சுருக்கா உங்களுக்கு?" என்றாள் குழப்பத்துடன்.

"எஸ்" என்றவன் குனிந்து மேசையை கடந்து அவள் முகமருகே வந்தவன், "அன்னைக்கு க்ரீன் சேரீல பாத்தப்பவே பிடிச்சது, இப்ப இவ்ளோ கிட்டத்துல பாக்றப்போ இந்த கண்கள ரொம்ப பிடிச்சுருக்கு. இன்னும் பல எக்ஸ்ப்ரசன்ஸ இந்த ஐஸ் எப்டி காட்டும்னு பாக்கணும்னு இருக்கு. பாக்கலாம் சீக்கிரமே" என்றவன் பின்னால் நகர்ந்து நன்கு நிமிர்ந்து நின்று, "பை" என்க, அதிர்ந்து நின்றவளுக்கு தான் மொழி மறந்துவிட்டிருந்தது.

அவன் கிளம்ப போகையில் தான் உள்ளே வந்தாள் வைஷ்ணவி, அவளும் இவனை கண்டு அரண்டு விழிக்க, அவளையும் ஊடுருவும் பார்வை பார்த்தவன், அவ்வாறு பார்த்தவாறே கடந்து சென்றான்.

'மரகதவல்லி அதிர்ந்து நின்றதிலிருந்த அர்த்தம் அவனுக்கு புரிந்திருந்தது, ஆனால் வைஷ்ணவியும் அதே போல் ஏன் அதிர்ந்து நிற்க வேண்டும்?' யோசனையோடு வந்து வண்டியை கிளப்பிச்‌ சென்று விட்டான். அவன் செல்வதை அலுவலக வாசல் வந்து இரு பெண்களுமே பார்த்து நின்றனர்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6

"இவர் எதுக்குடி இந்நேரம் வந்துட்டு போறாரு? சார பாக்க வந்தாரா? புது கேஸ் விஷயமாவா?" என்றாள் வைஷ்ணவி.

"இல்ல என்ன பொண்ணு பாத்துட்டு போறாரு" என்றவள் திரும்பி நடந்து சென்று அனைத்தையும் எடுத்து வைக்க துவங்கினாள் வீட்டிற்கு கிளம்புவதற்காக.

"கடவுளே என்னடி இவ்ளோ அசால்டா சொல்ற? அசிஸ்டென்ட் கமிஷனரயா மேரேஜ் பண்ணிக்க போற நீ?"

"ம்ம் வீட்ல அவரதான் பாத்துருக்காங்க, நீ ஏன் இவ்ளோ ஷாக்காகுற?"

"ரெண்டு நாள் முன்ன நீ அதுக்கு தான் என்ன பாத்தாரா? எதும் சொன்னாரானான்னுலாம் கேட்டியா? நேர்லயே வந்து சொல்லிட்டு போய்ட்டாரு போல அதான். எனிவே கங்கிராட்ஸ்டி"

"தேங்க்ஸ் வைஷு. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்றதுக்கு பாரு"

"உனக்கு தெரியாததா வீட்டு சிட்யூவேஷன் தம்பியோட டெத். அதும் போக மாப்ள கிடைக்கணுமே. கிடைக்கட்டும் பாப்போம்" என்கவும், இருவரும் பேசிக்கொண்டே கிளம்பி வெளியே வந்தனர், எதிரே வந்த ஜீவானந்தத்திடமும் சொல்லிவிட்டு அவரவர் வண்டியை எடுத்து கிளம்பினர்.

இவள் வீட்டுக்கு வரும்போதும் மகிழனின் குடும்பம் அங்குதானிருந்தது. வாசலில் கிடந்த செருப்புகளின் எண்ணிக்கையிலேயே மொத்த குடும்பமும் உள்ளிருப்பது தெரிந்தது. அவனது குடும்பத்தில் அம்மா, அப்பா, அவனுக்கு இரண்டு தம்பிகள் இருப்பது வரை அவளுக்கு தெரியும். ஆனால் இங்கிருக்கும் செருப்புகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் ஒரு ஊரே வந்திருக்கும் போலிருக்கிறதே என நினைத்து கொண்டே தான் உள்ளே போனாள்.

வந்திருந்த ஆட்களால் வீடே நிறைந்திருந்தது, "பொண்ணு வந்தாச்சு" என்றாள் முன்னறையில் நின்று பிள்ளைக்கு உணவு ஊட்டிக் கொண்டருந்த விசாலாட்சி, "வாங்கக்கா. உங்கள பாத்துட்டு தான் கிளம்புறதுன்னு இம்புட்டு நேரமு இருந்துட்டோம். அலுத்து களைச்சு வரும்போதே எம்புட்டு அழகா இருக்கீக. எங்கத்தான் குடுத்து வச்சுவருதேன்" என்று வேறு சொல்ல, இவளுக்கு தான் என்ன மறுமொழி கூறுவது என திணற வேண்டியிருந்தது.

"அடடே வாத்தா. உள்ள‌ வா" என அவள் வீட்டிலிருந்து அவளை வரவேற்கும் அத்தனை நபர்களையும் பார்த்து பொதுவாக தலையசைத்தாள்.

"போய் மொகங்காலு கழுவிட்டு வா கண்ணு, பூ வைக்கணும்ல" என்ற வாசுகியை அவளுக்கு அடையாளம் தெரிந்தது. அவர் ஃபோட்டோவை அவன் அனுப்பி பார்த்திருக்கிறாள், எட்டு வருடத்திற்கு பிறகும் அவர் இவள் நினைவில் இருக்கிறாள் என்றால் அவனையும் அவன் சார்ந்தவர்களையும் அந்தளவிற்கு மனதில் இருத்தி வைத்திருக்கிறாளோ!

"ஏத்தா சூடு போதுமா பாரு, பிள்ளைக்கு வெதுவெதுப்பாவும் கொஞ்சம் குடுக்கணும்ல" என அகிலா ஷீலாவிடம் பேசிக் கொண்டிருக்க,

"அத்த தான் எப்பயும் சாப்பாடெல்லாம் பாத்துப்பாங்கம்மா. நல்லா பாதுக்குவாங்க அதனால இதுலலாம் எங்களுக்கு கொஞ்சம் கவனம் கம்மிதேன்" என ஷீலாவும் பதில் சொல்ல இவளை கண்டுகொள்ளவில்லை அவர்.

அவள் அப்பாவை தேட, அவர் இவரை விட பிஸியாக பேச்சுவார்த்தையில் இருந்தார் ஆண்கள் குழுவுடன். விஸ்வாசம் படத்தில், "தூக்குதுரைய அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன்ல வச்சமாறி இல்ல, ஸ்டேஷன அரெஸ்ட் பண்ணி தூக்குதுரை வீட்ல வச்சமாறி இருக்கு" என சொல்லுவது போல், இவள் வீட்டிற்கு அவர்கள் வந்ததுபோல் இல்லை, இவள் குடும்பம் தான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது அங்கிருந்த சூழ்நிலை.

"என்னடா கண்ணு திடீர்னு இம்புட்டு கூட்டத்த பாத்ததும் பயமா இருக்கோ. பயந்துக்காத கண்ணு எல்லாம் நம்ம சொந்தங்கதேன். பொறுமையா நீ யாரு யாரு என்ன முறைன்னு தெரிஞ்சுக்கோ. இப்போ போய் முகங்கழுவணும்னா கழுவிட்டு வா" என இன்னொரு பெண்மணி சொல்லவும், அதற்கு மேல் 'பே' என பார்த்து நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.

கை கால் முகம் அலம்பி, வேறொரு புடவைக்கு அவள் கை போகையில் தன்னால் அந்த பச்சைநிற புடவையை எடுத்திருந்தது அவள் கை, அதையே உடுத்திக்கொண்டு, லேசான முகத்திருத்தமும், கண்ணிற்கு மையும் இட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

"ஏத்தா கண்மணி நாத்தனாரு நீதேன், போயி கைய புடிச்சு கூட்டியா" என ஒரு பெண்ணை அனுப்ப, அந்த கண்மணி சிரித்துக் கொண்டே வந்து இவள் கையை பிடித்துக் கொண்டாள்.

"நாந்தேன் உங்களுக்கு மூணாது முடிச்சு போடணும், ஷீலாக்கா, விசாலாட்சி ரெண்டு பேருக்கும் கூட நாந்தேன் போட்டேன். ஆனா ரெண்டு பேரும் இரண்டாயிரம் பட்ட எடுத்து குடுத்து ஏமாத்திபுட்டாக, நீங்களாது இந்த நாத்தனார நல்லா கவனிக்கணும் சொல்லி போட்டேன்" என வளவளத்துக் கொண்டு வந்தாள்‌ அந்த கண்மணி.

"ஆமா உன் அண்ணன்ட்ட சொல்லுட்டி ஒன்னுக்கு ரெண்டு லத்தி வச்சுருப்பியான் நல்லா கவனிச்சுவிடுவியான்" என்றார் வாசுகி.

"ரொம்ப அழகா இருக்கீக" என அவளின் அருகில் வந்தாள் ஷீலா, பூவிருந்த தட்டுடன்.

"விளக்கேத்து விசாலா, சாமி கும்பிட்டிட்டு பூ வைக்கட்டும்" என அகிலா சொல்லவும் விசாலாட்சி விளக்கேத்தினாள்.

மரகதவல்லிக்கு, 'திக்கும் திக்கும் திக் ப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்கன்ன கதையா இங்க மதுரையும் மதுரையும் திக் ப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க போல' என நினைத்து கொண்டாள்.

"சாமிய விழுந்து கும்பிட்டுக்க கண்ணு" என்ற வாசுகியின் குரலில், சின்னதாக இருந்த பூஜையறையின் முன் விழுந்தெழுந்தாள்.

"கண்ணு கண்ணுன்னு கல்யாணம் முடிஞ்சு மொத வருஷம் வர கொஞ்சுவாங்க, அப்றம் நாம புள்ளைய பெத்து அவங்க கைல குடுத்துட்டு வேலைக்கு போயிடுவோமா, அப்றம் இந்த கழனிய களைய இடுப்பு வளையுதாட்டி அந்த சாணிய ஒழுங்கா வரட்டி தட்ட தெரியுதாட்டினுவாங்க, எல்லாத்துக்கும் ரெடியாவே வாங்கக்கா" என ஷீலா சொல்லவும்,

"பேச சொன்னா உன் வக்கீல் உத்தியோகத்த புடிங்கிக்குற அளவுக்கு பேசுவாளுவ. நீ என்னத்தா இம்புட்டு அமைதியா இருக்க? இததேன் என் பையனும் சொன்னியான் போல. கோர்ட்ட மாட்டுனா மட்டுந்தேன் பேசுவியோ? நீ ரொம்ப அமைதியோத்தா?" என்றார் மோவாயில் கை வைத்து அதிசயித்து வாசுகி.

"அதெல்லாம் நல்லா பேசுவா மதினி. எல்லாரையும் வந்து பாரு வழுக்கை பாறைன்னு நிப்பா, பழகுற வர மட்டுந்தேன் இந்த நல்ல புள்ள மூஞ்சு" அகிலா சொல்ல,

'என்ன பெத்த தாயா நீ?' என அவள் உருட்டி முறைக்க,

"பேசணும் மதினி அப்பத்தேன் இந்த ஆம்பளைங்கள சமாளிக்க முடியும். குடும்பத்த தாங்கி நடத்த முடியும்" என்றார் வாசுகியும்.

இதற்குள் அவளின் முக பாவனைகள் விதவித ஃபோட்டோவாக பதிவாகி மகிழனின் கைபேசிக்கு அரசுவின் கைபேசியில் இருந்து பறந்து கொண்டிருந்தது. அதில் அந்த பச்சை நிற புடவையை மட்டும் பார்த்தே உதட்டை சுழித்து சிரிப்பை மீசைக்கடியில் மறைத்தான் மகிழன், நிற்கும் இடம் கருதி.

"சார், இங்க ஒரு ஃபோன் கடக்குது" என்ற சொக்கலிங்கத்தின் குரலில் நிமிர்ந்தவன், போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு, "பேக் பண்ணுங்க சொக்" என்றுவிட்டு அவனும் சுற்றி பார்வையால் அந்த இடத்தை அலசினான்‌. மறுபடியும் ஒரு கொலை அதே பள்ளி சீருடை, அதே வயது பையன், அதே பாணியில் ஒரு கொலை‌. அவனை அதில் கவனம் செலுத்த விடாமல் மெஸேஜ் வந்ததற்கான அதிர்வு அவன் மொபைலில் வந்து வந்து அடங்க, மொத்தமாக அணைத்து வைத்தான்.

அங்கு கண்மணி மரகதவல்லிக்கு தலை நிறைய நிறைய மணக்கும் மல்லிகையை சூடி விட்டாள். பெரியவர்கள் எல்லாம் திருநீறு வைத்துவிட, பூ வைத்து மகிழனின் பொண்டாட்டியாக அறிவித்து தன் வீட்டு பெண்ணாக்கிக் கொண்டனர், வாசுகி பரஞ்சோதி தம்பதியினர்.

அவர்கள் கிளம்பும் பொழுது மணி எட்டை கடந்திருந்தது. வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தனர் அகிலாவும் முத்துராமனும். கிளம்பும்போதும் இவளை கன்னத்தை தடவி, கைகளை பிடித்தென கொஞ்சி கொண்டாடிவிட்டு தான் சென்றனர்.

அவனுக்கு முன் இரு தம்பிகளுக்கும் திருமணம் முடிந்து குழந்தை வேறு இருக்கிறது என்பதெல்லாம் அவளுக்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை, இப்போது அதுவும் சேர்ந்து அவளை அவ்வளவு அலைக்கழித்தது‌.

"ரொம்ப கஷ்டப்பட்ருப்பாருல்ல? யார்டையும் எதையும் ஷேர் பண்ற பழக்கமும் கிடையாதே. எத்தன பேர் இவர கிண்டலா, நக்கலா பாத்துருப்பாங்க, பேசிருப்பாங்க. ம்ச் எல்லாம் என்னால தான். நா ஒரு லூசு, கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம். இத்தன வருஷம் பயமாது மிச்சமாகியிருக்கும். பேசாம இப்பவே சாரி கேட்ருவோமா?" என தனியாக இவள் வாய் விட்டே பேசிக் கொண்டிருக்க,

"நல்ல மனுஷமக்க பாத்தீகளா? எம்புட்டு உரிமையா அவுக வீடுமானிக்கு நடந்துகிட்டாக" என்றவாறே வந்து மரகதவல்லி அருகே அமர்ந்த அகிலா, "உன் ஓரகத்தி ரெண்டு பிள்ளைகளும் அம்புட்டு நல்லமாறி தெரியுமா? ஷீலா பேங்க்ல வேலை செய்து, அந்த விசாலா நர்ஸாம். நா கூட படிக்காத பிள்ளைகன்னு நினைச்சு தொலைச்சுட்டேன். ஆனா குடும்பத்துக்கு ஏத்த புள்ளைக. நீயும் அங்க அவங்களோட இப்படி ஒத்து போயிடணும் பாப்பா. மாப்ள கொஞ்சம் முசுடு தானாம், ஆனா நல்ல குணசாலியாம். அதையும் அந்த மதினியே சொன்னாக. இங்க துடுக்கு தனமா நடந்துக்குறது மாதிரி நடக்காம இனினாலும் பொறுப்ப வளத்துக்க பாரு. இப்டி வேணும்னு சண்டிதனம் பண்ணி நீ வராம இருந்தும், நீ வார‌வர காத்திருந்து பாத்துட்டு போறாக பாரு. அந்த நல்ல மனுசங்கள புரிஞ்சுகிட்டு வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்க பாரு" என சிரித்துக் கொண்டே அவளிடம் நிதானமாகவே பேசினார்.

மரகதவல்லி அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டாள். சொந்த வீட்டில் தானே துடுக்கு தனமாகவோ, தனக்கு பிடித்த‌ விதமாகவும் பேசிக்கொள்ள முடியும். அவ்வாறெனில் இது என் வீடென்றால் இனி மிச்ச வாழ்க்கை மொத்தமும் வாழப்போகும் அந்த வீடு என் சொந்த வீடில்லையா? அங்கு நான் நினைத்ததை பேசாமல் வார்த்தைகளுக்கு வண்ணம் பூசி தான் பேச வேண்டுமென்றால் அங்கு என் இயல்பு தொலைகிறது என்று தானே அர்த்தம். இது ஏன் இந்த அம்மாக்களுக்கு புரிவதில்லை' என அவள் யோசனையில் அவரையே பார்த்திருந்தாள்.

ஆனால் உண்மை அவள் அங்கு சென்ற பிறகு நடப்பில் அவளே புரிந்து கொள்வாள். அளவாக பேசவும் யோசித்து பேசவும் சொல்லும் மாமியார் வீடு அவளுக்கு அமையவில்லை, அவள் அங்கு அவளாகவே இருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்வாள். ஆனால் எல்லாருக்கும் அப்படி அமைந்துவிடாது என்பதால் சொல்லப்படும் அம்மாக்களின் கருத்து அது என்பதையும் சேர்த்து புரிந்து கொள்வாள்.

"என்னடி இன்னுமு கல்யாணத்துல இருந்து எப்டி தப்பிக்கலாம்னு தான் யோசிக்கிறியா?" என அகிலாவின் குரல் உயரவும்.

"ம்மா நா வேணாம்னு சொன்னாலும் இனி அந்த ஏசிபி விட மாட்டார். அதனால தைரியமா நீ கல்யாண வேலைய பாரு, ஆனா அவங்க கூட சேர்ந்துட்டு நா நீ பெத்த புள்ளன்னு மறந்துடுற பாத்தியா அத மட்டும் நியாபகம் வச்சுக்கோ போதும்" என்க,

"கழுத போடி" என்றவர் கணவருடன் கல்யாண வேலைகளை பற்றி பேச ஆரம்பித்தார்.

இந்த கல்யாண அலப்பறை எதுவுமின்றி கமிஷனர் ஏற்பாடு செய்திருந்த அவசர சந்திப்பில் அமர்ந்திருந்தான் மகிழ்நன் பாண்டியன். மூன்றாவதாக அதே பள்ளி அதே வகுப்பை சேர்ந்த பையனும் காணாமல் போயிருக்க, தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருந்தது.

"நீங்க இந்த கேஸ‌ ரொம்ப அசால்டா டீல் பண்றீங்கன்னு தோணுது பாண்டியன். இல்லனா இந்நேரம் வர ஒரு க்ளு கூட பிடிக்காம இருந்துருக்க மாட்டீங்க? யாருக்கு ஃபேவர் பண்ண பாக்றீங்க?" என நேராகவே அவனை சாடிக் கொண்டிருந்தார் கமிஷனர்.

"எனக்கு இதுவரை க்ளு கிடைக்கல சார். விசாரிச்சுட்டு தான் இருக்கேன். டீம் வேலை பாத்துட்டு‌‌தான் இருக்காங்க. புடிச்சுடலாம்" என நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தவனை நம்பாமல் தான் பார்த்தார் கமிஷனர்.

அதில் மெலிதாக சிரித்தவன், "நம்புங்க சார். கேஸ முடிச்சு தர வேண்டியது என் பொறுப்பு" என்ற உத்தரவாதத்துடன் எழுந்து சல்யூட் வைத்து கிளம்பி விட்டான்.

வெளியே, இன்று மாலையில் கண்டெடுத்த பிரேதத்தின் போட்டோக்களை வைத்து நின்ற சொக்குவிடம் வந்து அதை வாங்கி பார்த்தவன், "அடாப்ஸி ரிப்போர்ட்டும் வரட்டும் சொக்கு. இப்ப வீட்டுக்கு போலாம். செம‌‌ டயர்டா இருக்கு" என காருக்கு வர, பரத் வண்டியை எடுத்தான். அதன் பின்னரே வருங்கால மனைவியின் நிழல்படங்களை பார்வையிட்டவாறு வந்தவன், குவாட்ரஸில் அவன் வீட்டின் முன் இறங்கி கொண்டு இவர்களுக்கு திரும்பாமலே கையசைத்து விடை கொடுத்து விட்டு, அவளின் எண்ணிற்கு டயல் செய்தவாறு, வீட்டை திறந்து உள்ளே சென்று, ஸ்பீக்கரில் போட்டு கட்டிலில் போட்டு விட்டு சட்டையை கழற்ற துவங்க, அழைப்பை ஏற்று, "ஹலோ மேகி ஹியர்" என்றது ஒரு அதிகார குரல் அந்த பக்கம். அந்த குரல் அவன் வீட்டின் அமைதியில் அதிர்ந்து தான் ஒலித்தது.

"மேகியா? அப்போ மரகதவல்லி இல்லையா நீ?" என்ற இவன் குரலில், எழுதி கொண்டிருந்ததை போட்டுவிட்டு அடித்துபிடித்து எழுந்து நின்றாள் மரகதவல்லி.

"மரகதவல்லி?" என்ற அவன் அழைப்பே அவளுக்குள் ஊடுருவி செல்வதுபோலிருக்க, சிலிர்த்து நடுங்கியது அவள் உடல்,

"அது அலைஸ் நேம்" என்றாள் திக்கி திணறி, சற்று முன்னிருந்த அதிகார குரல் காணாமல் சென்றிருந்தது, முழுவதும் மென்மையான பயந்த குரல், அது இவனுக்கானது என்பதில் அவனுக்குள்ளும் இன்ப பெருக்கம் தான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7

"லாயர் மேடம். உங்களுக்கு மொத்தமா எத்தன பேருன்னு லிஸ்ட் போட்டு குடுத்திடுங்க, நா மொத மனப்பாடம் பண்ணிடுறேன் அப்றமா நாம மத்தத பேசி முடிவு பண்ணிப்போம் சரியா" என்றான் நக்கலாக.

'கூட ரெண்டு பேர சொல்லி குழப்பிவிட்டா என்ன பண்ணுவாராம்' என அவள் நினைத்து நிற்க,

"பதில் சொல்லு மரகதம். எனக்கு தெரிய வேணாமா என் பொண்டாட்டியின் பல பெயர்கள்" பொடி வைத்து பேசுகிறானோ என்று தான் எண்ணினாள்.

"நா ஒன்னும் பொய் சொல்லல. மரகதவல்லி தான் என் பேரு. மேகி பெட் நேம் மாதிரி"

"ஓ அப்ப பாப்பான்னு உங்கப்பா உன் நம்பர அனுப்பிருக்காரே அது எந்த பாப்பா?"

"அது வீட்ல கூப்பிடுறது"

"சர்தான், இதுல நா எத சொல்லி கூப்பிடணும்?"

"அது உங்க இஷ்டம் தாங்க" அமைதியாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"என் இஷ்டம் போல எப்டி வேணா கூப்பிட்டுக்கலாமா அப்போ?" அவன் குதர்க்கமாகத்தான் பேசுவேன் என பேசிக்கொண்டிருந்தான்.

"ஆமாங்க" கடுப்பில் தலையை சுவற்றில் முட்டிக் கொண்டு பதில் மட்டும் நல்ல பிள்ளையாக கொடுத்தாள்.

"அப்ப மந்தாகினின்னு கூப்டட்டா? என் பழைய காதலி பேரு" என்றதும் திக்கென்றது அவளுக்கு.

அவளுக்குள் மறுபடியும் போராட்டம். கண்டுபிடித்துவிட்டானோ? கல்யாணத்தை நிறுத்திவிடுவானோ என பதட்டபட ஆரம்பித்தாள். கல்யாணம் வேண்டாம் என நினைத்ததும் அவள், பின் அவனுடன் வேண்டாம் என்றதும் அவள், இப்போது அவன் அவளை வேண்டாம் என்றுவிடுவானோ என பயப்படுவதும் அவளே! இது தான் பெண்ணின் மன ஆழம் எனப்படுவது போலும்.

அவள் எடுத்துக் கொண்ட அந்த அரை நிமிட அமைதியை அவனும் பல்லை கடித்து பொறுமையாக உள்வாங்கினான். கடந்த எட்டு ஆண்டுகளாக செய்யாத ஒன்றை இன்று மாலை, இவளை பார்த்துச்‌ சென்றபிறகு செய்திருந்தான். அதில் அவன் பழைய காதலி மந்தாகினியில் துவங்கி தற்போது மனைவியாக போகும் மரகதவல்லி வரை மொத்த தகவலையும் திரட்டியிருந்தான். அதற்கு தான் இவ்வளவு நேரமும் அவளை வறுத்தெடுத்து கொண்டிருப்பதும்.

"மரகதவல்லி" என்றான் அழுத்தமாக.

"இப்டியே கூப்பிடுங்க. பழைய காதலிலாம் நமக்குள்ள வரமாட்டாங்கன்னு சொன்னீங்க தானே? சும்மா கிண்டலா கூட இனி அப்டிலாம் பழச இழுக்க கூடாது நீங்க" வேகமாக கூறிவிட்டாள். அவனுக்கு உண்மை தெரிந்திருந்தாலும் அவள் அதை பேச விரும்பவில்லை என சொல்லிவிட்டால் அவன் பேசமாட்டான் என்ற நம்பிக்கையில் கூறிவிட்டாள்.

"சரி பேசல. வேற என்ன பேசலாம்? உனக்கு காக்கி ட்ரஸ் பிடிக்குமா கருப்பு ட்ரஸ் பிடிக்குமா சொல்லு?" என உடனே வேறு பேச்சிற்கும் சென்றுவிட இவளுக்கு தான் ஆயாசமாக இருந்தது.

"இனி ரெண்டும் பிடிக்கும்" என்றுவிட்டாள் அவளும் அவன் போக்கிற்கே.

"எஸ்கேப்பாகுற ராஸ்கல்?" என்றவனுக்கும் மெலிதான சிரிப்பு முகத்தில் உறைந்திருந்தது.

"தூங்கணும்" என்றாள் கெஞ்சலுடன் சுருக்கமாக.

"குட்நைட் மரகதம்" என சிரிப்புடன் சொல்லி வைத்துவிட்டான்.

"மரகதமா?" என போனை காதிலிருந்து எடுத்து பார்த்தவள் அவன் வைத்துவிட்டான் என தெரிந்ததும், "சரியான கேடி போலீஸ்" என்றவள் போனை வைத்து விட்டு கட்டிலில் விழுந்தாள். அவனுடனான வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்கும், நன்கு பார்த்து கொள்வான், அவளை சுதந்திரமாக செயல்பட விடுவான், அவளை ரசிப்பான், ஆராதிப்பான், ரசிக்க வைப்பான், என எந்த விதத்திலும் அதிலெல்லாம் அவளுக்கு சந்தேகமில்லை. அவனை அவளுக்கு நன்கு தெரியும். அவள் பிரச்சினை எல்லாம் அவள்‌தான், மறுபடியும் எதுவும் சொதப்பாமல் அவனை கஷ்டபடுத்தாமல் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் வேண்டும் இவளுக்கு.

அதைவிட பழைய விஷயங்கள் மறுபடியும் அவர்களுக்கு நடுவில் முளைத்து பிரச்சினையாகாமல் இருக்க வேண்டும், இதையெல்லாம் யோசித்துக் கொண்டே தூங்க முடியாமல் பிரண்டு கொண்டிருந்தாள். எப்படியோ தூங்குவதற்கு மணி பன்னிரெண்டாகியிருந்தது.

அங்கு அவனுக்கு அதிகாலை மூன்று மணியளவில் போன் வந்தது, "சொல்லுங்க சொக்?" என்றான் எழுந்தமர்ந்து அலுப்பை விடுவித்தவாறு.

"சார் எம்.எல்.ஏ விஜயம் சூசைட் பண்ணிட்டாராம், இப்பதான் தகவல் வந்தது"

"ஃபைவ் மினிட்ஸ் சொக்கு"

"ஓ.கே சார், நா பரத்த வர‌ சொல்லிடுறேன்" என வைக்க, இவன் அவன் வருங்கால மனைவிக்கு அழைத்தான், முதல் அழைப்பில் எடுக்கவில்லை அவள்.

இவன் அழைத்து கொண்டே எழுந்து சென்று பல்லை துலக்கி, முகம் கழுவ நல்ல தூக்கத்தில், "ஹலோ" என்றது மறுமுனை. அவனுக்கு அந்த குரலை கேட்க அவ்வளவு பிடித்தது. ஒருவித உணர்ச்சி குவியலை ஒருநிமிடம் உணர்ந்து திரும்பினான். தூங்கும் முன் அவள் குரலை கேட்டுவிட்டு தூங்கியிருக்க விடிந்ததும் கூட அவள் குரலை கேக்க எண்ணியே அழைத்து விட்டான்.

"குட்மார்னிங் மரகதம்" என்றவனின் குரலை கேட்டும் அவளால் தெளிய முடியவில்லை, தூங்கியதே தாமதமாக தான். தூங்கிய பிறகு கனவிலும் அவன் தான் வந்தான், பாதி விடியலில் போனிலும் அவன்தான் என்பதால், அவளுக்கு வித்தியாசமாக தெரியவில்லை.

"பதில் சொல்லுடி"

"என்ன சொல்லணும்"

"குட்மார்னிங் சொல்லு"

"அதுக்குள்ள விடிஞ்சுருச்சா?" என்றாள் விழிக்க முடியாமல்.

"எனக்கு விடிஞ்சுருச்சு. நா எந்துச்சுட்டேன்னு உனக்கு சொல்ல வேணாமா?"

"சொல்லுங்க" என்றாள் இன்னுமே உளறாலாக.

"போடி தூங்கு மூஞ்சு. நா கிளம்புறேன் பை" என வைக்க, அவள் காதிலிருந்து போன் நழுவி மெத்தையில் விழுவது கூட தெரியாமல் மீண்டும் தூங்கியிருந்தாள்.

இவனும் சிரித்துக் கொண்டே ஒரு அவசர குளியலுடன், டிசர்டும் காக்கி பேண்டுமாக கிளம்பி வந்தான். வெளியே சொக்குவும், பிரபுவும் தயாராக நின்றனர்.

"என்ன ரீசன்னு எதும் தகவல் கிடைச்சதா?" என கேட்டவாறு அவன் வண்டியில் ஏறி அமர, மற்ற இருவரும் கூட ஏறிக் கொண்டனர்.

"அவருக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்லையாம் சார். ஸ்டொமக் கேன்சர்னு சொல்றாங்க. அது வயிறு ரொம்ப வலிக்குமாம், அது தாங்க முடியாம தான் சூசைட்‌ பண்ணிட்டாருன்னு சொல்றாங்கன்னு குரு சொல்றாரு, அவர்தான் இன்னைக்கு ஸ்டேஷன் ட்யூட்டில இருந்தாரு உடனே ஸ்பாட்டுக்கு போயிட்டாரு"

"ம்ம்" என நாடியை தேய்த்து‌ விட்டவன், "அந்த தொடர் கொலைய பத்தி என்ன நினைக்கிறீங்க சொக்கு?" என்றான் திடீரென்று. எப்போதும் இப்படி கேட்டு அவன் மனதில் தோன்றிய பதில்களோடு ஒப்பிட்டு பார்ப்பது அவன் வழக்கம்.

"சைகோ கொலை தான் சார். ஒரே பேட்டர்ன்ல ஒரே ஏஜ் க்ரூப் பசங்கள தூக்குறான் கில்லர்"

"ரைட். ஏன் ஒரே ஸ்கூல் ஒரே க்ளாஸ்?"

"அதான் தெரியல சார். ரேண்டமா தானே செய்யணும்?"

"ம்ம் மாட்டிப்போம்னு தெரிஞ்சு செய்றானா? இல்ல மாட்டிக்கணும்னு வேணும்னு செய்றானா? இல்ல வேறெதையாவது பெருசா செய்றதுக்கு இப்படி கொலைகள் பண்ணி நம்மள டைவர்ட் பண்றானா?" என்றான் அடுத்தடுத்த கேள்வியாக. பாதி தூக்கத்தில் எழுந்து வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பரத்திற்கு தலை கிறுகிறுத்துவிட்டது. சொக்கு அவன் கேள்வியை ரிவைண்ட் மோடில் அவனுக்குள் சொல்லி பார்த்துக் கொண்டிருந்தான். எம்.எல்.ஏ வீடு வந்திருந்தது.

"யோசிச்சு வைங்க பதில் கிடைச்சா சொல்லுங்க சொக்" என அவன் இறங்கி கொண்டு, அந்நேரமே பிரஸ் மக்கள் வந்திருக்க கண்டு, "செம ஸ்பீடு வொர்கர்ஸ்" என தம்ஸப் காட்டிவிட்டு சென்றான்.

உள்ளே நுழைந்ததும் இரண்டாம் அறையில் எம்.எல்.ஏ தூக்கில் தொங்கிய சேலை மாட்டியவாறே இருக்க, எம்.எல்.ஏவை மட்டும் கீழே இறக்கி போட்டிருந்தனர். கழுத்து அறுபட்டு நாக்கும் கடிக்க பட்டிருந்தது, பார்த்ததுமே சூசைட் தான் என்றிருந்தது அவனுக்கு. அதற்கு மேல அவன் அவரை பற்றி சிந்திக்கவில்லை.

"ஜி.ஹச்கு ஃபோன் பண்ணியாச்சா?"

"இதோ சார்" என ஒரு கான்ஸ்டபிள் வெளியேற, ஃபாரன்சிக் துறை அடுத்து வந்தது, அவர்களும் வேறெந்த தடையங்களும் கைரேகைகளும்‌ கிடைக்கவில்லை என அவர்கள் வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டனர்.

"இங்க யார்‌யார் தங்கிருக்காங்க? முதல்ல பாத்தது யாரு? அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் எங்க இருக்கு?" என்ற அவனது வரிசையான கேள்விக்கும் அங்கிருந்து வந்த பதில்களில் அவனுக்கு சந்தேகம் வரவில்லை. இனி மருத்துவ அறிக்கை மட்டுமே ஆராய வேண்டிய மிச்சம், என வெளியே வந்து ஊடக துறைக்கும் அதையே பதிலாக கூறிவிட்டு அடுத்ததாக மருத்துவமனை கிளம்பினான்.

செல்லும் வழியில், "சார் நீங்க அப்ப கேட்டீங்களே சைகோ கில்லர்? அது ஏன் ஒரு பொண்ணா இருக்க கூடாது?" என்றான் சொக்கு .

"ஏன் பசங்களயா கடத்துறதுனாலயா சொக்கு? அப்டினாலும் அங்க செக்ஸுவல் அப்யூஸ் எதுவும் இல்லையே?"

"அந்த பசங்களால பாதிக்கப்பட்ட பொண்ணு கடத்தி கொள்ளலாமே? இவனுங்களும் எல்லாம் ஃப்ரண்ட்ஸ் தானே? ஒன்னா சேந்து ரேப்பெதுவும் பண்ணிருந்தா?"

"கில்லர் யூஸ் பண்ற ஆர்ட்ஃபிஸியல் நெகத்தோட அழுத்தம் ஒரு ஜென்னுக்குரியதுன்னு ரிப்போர்ட் சொல்லுது. சரி இதையும் மைண்ட்ல வச்சுக்கலாம் சொக்" என்கவும், அவன் வருங்கால மனைவியிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

மணி காலை ஏழு கடந்திருந்தது. அவள் பெயரை ஃப்ராட் என்றே சேமித்திருந்தான். இதை அவள் பார்த்தாள் என்ன பாவனையெல்லாம் காட்டுவாள் என நினைத்ததும் தோன்றிய குறும்பு சிரிப்புடன் அழைப்பை ஏற்றான்.

"மரகதம்"

"மூணு மணிக்கு கால் பண்ணிருந்தீங்களா? ஏன்? என்னாச்சு?" என்றாள் பதட்டமாக.

"குட் மார்னிங் சொல்ல கூப்டேன்" என்றான் நிதானமாக. கேட்டும் கேட்காமல் இருந்தனர் பரத், சொக்கலிங்கம் இருவரும்.

எழுந்த வேகத்தில் போன் அவள் வயிற்றின் அடியில் கடப்பது தெரிந்து, இங்கெப்படி வந்தது என்ற யோசனையில் எடுத்து பார்த்திருந்து, பின் வைஷ்ணவிக்கு அழைப்பெடுக்க வந்தபோது, மூன்று மணியளவில் இவனிடம் பேசியதாக காட்டியது கால் ஹிஸ்டரி, 'எதுக்கு இந்நேரம் கூப்டுருக்காரு? எதும் ப்ராப்ளமோ? நம்மள திட்டிருப்பாறோ? தூக்கத்துல எதும் உளறிட்டமோ?' என்றெல்லாம் சிந்தித்து குழம்பி அவனுக்கு அழைத்து கேட்டாள், அவன் பதிலில் நறுக்கென்று அவளுக்கு அவளே கொட்டிக் கொண்டாள், அவள் தானே அழைத்து கேட்டது‌ அவ்வாறெனில் அது அவள் தவறு தானே, அதனால் கொட்டிக் கொண்டாள்.

"மரகதம் மரகதம் மரகதம்" என அவன் ஏலம் விட,

"பாதி தூக்கத்தில் எழுந்து என்ன பண்ணீங்க?" என்றாள்.

"நியூஸ் பாருடி, ஏன் எந்திச்சேன்னு தெரியும். நா அப்றம் பேசுறேன் கொஞ்சம் பிஸி மரகதம்" என வைத்துவிட்டு மருத்துவமனைக்குள் சென்றான். முதல் நாள் மருத்துவர் தந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், இரு கொலைகளும் ஒன்று போல் நடந்திருப்பதை குறிப்பிட்டிருக்க, இந்த மாணவன் உடலில் கூட ட்ரக் எடுத்ததன் விளைவு உண்டென இருக்க, அதைப்பற்றி கேட்க வந்திருந்தான்.

"டாக்டர் இந்த செகெண்ட் கேஸ், ரஞ்சித் ஃபேஸ்ல டார்க் மார்க்ஸ் இருக்குமாம் அது போறதுக்காக ஸ்கீன் டீர்ட்மெண்ட் எடுத்து அதுக்கான டேப்லெட்ஸ் எடுத்துட்ருந்தானாம், சோ எந்த ட்ரக்ஸ்னு நீங்க டிஃப்ரன்சியேட் பண்ணனும் இல்லையா?"

"அந்த பையன் உடம்புல இருந்தது மெடிக்கல் ட்ரக்ஸ் இல்ல அப்டினா நேமோட மென்ஷன் பண்ணிருப்பேன். அவன் ரெகுலரா எடுத்துட்டது நேச்சுரல் ப்ராடெக்ட் போதை பொருள்"

"லைக் கஞ்சா இலை மாதிரி?" என்றான் மகிழ்.

"எக்ஸாக்ட்லி"

"ஃபர்ஸ்ட் கேஸ் ஆனந்த உடம்புல இருந்தது?"

"அது இன்ஜெக்டேட் ட்ரக்ஸ்" என்றார் டாக்டர்.

"ஓ.கே வேறெதுவும் சிமிலாரிட்டீஸ்?"

"ரெண்டு பேரும் ஹிப்ல ஒரே மாதிரி ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் டேட்டூ போட்ருக்காங்க. க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா இருக்க வாய்ப்பதிகம்"

"ஃபைன் டாக்டர். இப்போ எம்.எல்.ஏ அடாப்ஸி ஸ்டார்ட் பண்ணிடுங்க, ஈவ்னிங் குள்ள ரிப்போர்ட் கிடைச்சா கேஸ க்ளோஸ் பண்ணிடுவேன்" என எழுந்து கொள்ள, மருத்துவரும் விடை கொடுத்தார். அடுத்து அவன் ஸ்டேஷன் செல்லும் முன் வேறொரு ஆக்ஸ்டெண்ட் கேஸ் அவனை வரவழைத்துக் கொண்டது. அவன் வாழ்க்கை இப்படி தான் ஓட்டம் ஓட்டமென ஓடிக்கொண்டிருந்தது.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8

அவன் கவலை அவனுக்கு என்ற ரீதியில் அவனுக்கு தடபுடலாக கல்யாண ஏற்பாட்டிலிருந்தனர் அவன் வீட்டினர். மரகதவல்லியின் ஜாதகத்தை வாங்கி வந்திருக்க, இருவருக்கும் இனி பொருத்தம் பார்க்கும் எண்ணமில்லை என்றாலும் கல்யாண தேதி குறிக்கவும் மீனாட்சி பாதத்தில் அவர்கள் ஜாதகத்தை வைத்து வாங்கவும் வாங்கி வந்திருந்தார் வாசுகி.

"ஏட்டி நா இன்னைக்கு வெளில போணும்னு சொல்லிட்டுருக்கேன் ரெண்டு பேரும் நீட்டி நெளிச்சுட்ருக்கீக?" என திட்டிக் கொண்டே அடுப்படிக்குள் நுழைய அங்கு சமையலில் நின்றனர் மருமகள்கள் இருவரும்.

"மதியத்துக்கு எடுத்துட்டு போவோம்த்த அப்பதேன் அங்கன கோயில்ல உக்காந்து சாப்பாட முடிச்சு பொறுமையா வரலாம். இல்லாட்டி அடிச்சுபுடிச்சு ஓடியாரணும்" என ஷீலா சொல்லவும்,

"ஆமாத்தே உங்க புள்ளைக ரெண்டு பேரும் இன்னைக்கு வீட்லதேன் இருக்காகலாம். புள்ளைகள வச்சுக்கோங்கனாலும் கேக்க மாட்டேங்காக நீங்க ஒருக்கா சொல்லி பாருங்க" என விசாலாட்சி ரகசியமாக சொல்லவும்,

"பேங்க் லீவு வரதேன் வீட்டுல இருக்கியான் சரி, இந்த மருந்து டப்பா பைய தூக்கிட்டு திரியிறவனுக்கு என்ன லீவாம்?" என்றார் அவர்.

"அலுப்பா இருக்காம்த்தே"

"இருக்கும் இருக்கும் வெயில்ல அலையிதான்ல அதனால ஒருநா வீட்ல இருக்கட்டும்.‌ ஆனா கேளுங்கட்டி பிள்ளைகள இவனுகள நம்பி விட்டுட்டு போனாதேன் நமக்கு அங்கன போன சோலிய நிம்மதியா பாக்க முடியாது, அதனால நாம கூட கூட்டிட்டு போறதுதேன் உத்தமம். சீக்கிரம் வேலைய பாருங்க கிளம்புவோம்" என்றவர் பிள்ளைகளை தயார்படுத்த செல்ல,

"நா அவுகள குறையா சொல்லுதேன்னு மகன விட்டுகுடுக்காம ரெஸ்ட் எடுக்கட்டும்னு போறத பாத்தீங்களாக்கா? இதே நாம விட்டுக்குடுக்காம பேசுனா பொறுப்பில்லாத பையன்றுப்பாக" என்றாள் விசாலாட்சி.

"நானும் மாமியாராக்கும்னு அப்பப்ப அளவுகளும் காட்டணும்ல விசாலா?" என சிரித்தாள் ஷீலா.

பிறகு மூவருமாக கிளம்பி ஜோசியரிடம் செல்ல, அவர் பொருத்தம் பார்க்கும் முன்னரே தடுத்தார் வாசுகி, "நீங்க பொருந்தல அதுதிதுன்னு எதும் சொல்லிப்புடாதீக. என்னனோ இப்பதேன் என் புள்ளைக்கு இந்த புள்ளன்னு தெகைஞ்சு வந்துருக்கு, அது எப்படியாவது பொருந்தி போக வச்சுருவா அந்த மீனாட்சி. நீங்க தேதி மட்டும் குறிச்சு குடுத்தா போதும்" என வேகமாக சொல்ல, அவர் விழித்தார்.

"தப்பா எடுத்துக்காதீங்க, எங்க அத்தானுக்கு பிறகு ரெண்டு தம்பீக அந்த தம்பி பொண்டாட்டி தான் நாங்க ரெண்டு பேரும். அத்தானுக்கு முப்பத்தி மூணு ஆகிப்போச்சு இதும் அமையாம போயிட கூடாதுன்னு பயத்துல அத்த அப்படி சொல்லுதாக. குடும்ப ஜோசியர்ட்ட போனா உள்ளத அப்படியே சொல்லிடுவாருன்னு தான் விசாரிச்சு இவ்வளவு தூரம் வந்துருக்கோம்" என விளக்கினாள் ஷீலா.

"நீங்க பயப்டுற அளவுக்குலாம் ஒன்னுமில்ல. லவ் பண்ணிட்டாங்களோ? அதான பொருத்தம் பாக்காம முடிக்கீங்க?" என்றார் அவர்.

"லவ்வா அவனா? நல்லா பண்ணியான். அப்டி பண்ணிருந்தா நா ஏன் வருஷ கணக்கா பொண்ணு தேடி அலையுதேன்?" என நொடித்தார் வாசுகி.

"சும்மா இருங்கத்த நீங்க பேசுறது உங்க மூத்தவர மட்டுமில்ல அசிஸ்டென்ட் கமிஷனரா இருக்குறவரயும் சேத்து" என அவர் கையை பிடித்தாள் விசாலாட்சி.

"பையன் ஜாதகத்துக்கும் சரி பொண்ணு ஜாதகத்துக்கும் சரி லவ் மேரேஜ்னு தான் இருக்கு. அரேன்ஜ் மேரேஜ்கு நீங்க எவ்வளவு முயற்சி எடுத்தாலும் கூடி வராது" என்றார் ஜோசியர்.

"என்ன சாமி சொல்லுதீக? இவுக ஜாதகம் பொருந்தாதா அப்போம்?"

"நல்லா பொருந்துது. ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணாங்கன்னா அறுபது வயசுலயும் அன்யோன்யமா மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டாவே வாழ்வாங்க"

"ஆனா அவங்கதேன் லவ்வே பண்ணலையே. நாங்க பாத்துல்ல சேத்து வச்சுருக்கோம்" என வாசுகி சந்தேகமாக சொல்ல.

"அப்ப தட்டிதேன் போவும். காதல் கல்யாணந்தா இந்த ஜாதகங்களுக்குன்னு கட்டம் சொல்லுது"

"உம்ம நம்பி வந்தோம்ல எங்கள சொல்லணும், ஏய் எந்திரிங்கட்டி போவோம்" என எழுந்துவிட்டார் வாசுகி.

"அத்த ப்ளீஸ்" என்றாள் ஷீலா.

"என்னடி ப்ளீல்? தட்டி போவும்னு வாய வைக்காரு என்ன ப்ளீச்சுங்குறேன், ஜாதகத்த வாங்கிட்டு வந்து சேருங்க நா வெளில நிக்கேன்" என பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.

"சாரிங்கய்யா" என்றாள் விசாலாட்சி.

"நீங்க என்ன சொன்னாலும் சரி. நா கணிச்சது தப்பாகாது. வேற எங்க வேணா போய் கேளுங்க. இவங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணாதான் அது கல்யாணத்துல முடியும். உங்க மூலமா தான் அவங்க சேந்துருக்காங்கன்னா அது கல்யாணத்துல முடியுறது சந்தேகம் தான். அப்படி கல்யாணம் வரை வருதுன்னா இனி ஆடி கடந்து அதுக்கு அடுத்த மாசம் ஆவணில மூணு முகூர்த்தம் இருக்கு, எது தோதுபடும்னு பாத்து வைங்க. ஆவணி 11 ரொம்ப நல்லாருக்கும்" என்றவர் ஜாதகத்தை வணங்கி குடுக்க இருவரும் வாங்கி கொண்டு எழுந்து வெளியே வந்தனர்.

அங்கு, "ஆமாங்க இந்த ஜோசியகாரனுக்கு கூறே இல்லையாட்டமிருக்கு. உளறுதியான். யார் சொன்னான்னு இவன்ட்ட அனுப்பிருக்கீக? வேற யாருட்டயாது கேட்போம், தெரிஞ்சாளு இருந்தா சொல்லுங்க கையோட கேட்டுட்டு வாறோம், இல்லனா எனக்கு மனசே ஆறாது" என அங்கு பரஞ்சோதியை வறுத்துக் கொண்டிருந்தார் வாசுகி.

"சரி வையி நா வேற யாரு இருக்கான்னு கேட்டுட்டு ட்ரைவருட்ட சொல்லிருதேன். அவேன் கூட்டி போவியான்" என வைத்தார் பரஞ்சோதி.

"அத்த எதுக்கு இங்கன நின்னுட்டு சத்தம் போட்டுட்ருக்கீக? அவுக காதுல விழுந்தா என்ன நெனப்பாக?" என்றாள் ஷீலா.

"கேக்கட்டும் ப்ராடு பைய. நம்ம பேச்ச கேட்டாதேன் வேற யாரும் வந்து இவன்ட்ட ஏமாற மாட்டாக"

"ஐயோ வாங்கத்த காருக்கு போவோம்" என்ற இருவரும் இடுப்பில் அவரவர் பிள்ளையை இடுக்கி கொண்டு அவரையும் இழுத்துக் கொண்டு காருக்கு விரைந்தனர்.

பரஞ்சோதி பத்து நிமிடத்தில் அழைத்து இன்னொரு இடத்தை சொல்ல, அங்கு சென்றால் அவன் இரண்டு ஜாதகத்தையும் நா பொருந்த வைத்து தருகிறேன், சின்ன பரிகாரம் செய்தால் போதும் பத்தாயிரம் தான் ஆகும். அமோகமாக நான் அவர்களை வாழ வைக்கிறேன் என்க, "நீ என்னடா அவங்கள வாழ வைக்க போற? மனசுல பெரிய பருப்புன்னு நினப்போ? தலைய திருப்பிருவேன் பாத்துக்கோ இனி இந்த தொழில நீ பாக்கவே கூடாது. கண்காணாம ஓடி போயிரு சொல்லிபுட்டேன், இல்ல என் புள்ளைட்ட சொல்லி களி திங்க வச்சுபுடுவேன்" என வெளுத்து வாங்கிவிட்டார். அவரை அங்கிருந்து கிளப்பி கூட்டி கொண்டு வருவதற்குள் தான் போதும் போதுமென்றாகிவிட்டனர் ஷீலா விசாலாட்சி இருவரும்.

அடுத்ததாக மீனாட்சி அம்மன் கோவில் போக முடிவெடுத்து வர, நடை திறக்க நான்கு மணியாகும் என்பதால் சாப்பாட்டை முடித்துக்கொள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்தனர், "அத்த நாம மொத போன ஜோசியர் ரொம்ப நல்லா பாப்பாருன்னு எங்கப்பாவே சொல்லுவாக, எனக்கென்னவோ அவர் சொன்னது பொய்யாருக்காதுன்னுதேன் தோணுது" என ஆரம்பித்தாள் ஷீலா‌.

"எவடி இவ, அப்ப என் புள்ளைக்கு இந்த புள்ளையும் சேராதுங்குறியா?"

"இல்லத்த நா சொல்லுதத கேளுங்க, காதலிச்சு சேரணும் அம்புட்டுதானே? இவுக ரெண்டு பேரையும் காதலிக்க சொல்லுவோம் அப்றம் கல்யாணத்த முடிச்சு வைப்போம்"

"இவனுக்கு கல்யாணத்த முடிக்கவே நா முழி பிதுங்கி திரியிறேன். இதுல காதலிக்க வைக்க நா எங்குட்டுடி போறது? இருக்க கடுப்புல ஒன்னிய
என்னதையாவது பேசிபோடுவேன் கம்முன்னு இரு சொல்லிட்டேன்"

"அத்த கோவபடாதீக. அத்தானுக்கு பொண்ண புடிச்சுருக்குன்னுதேன் நினைக்கிறேன், இல்லனா நாம என்ன சொன்னாலும் நேர்ல பாக்க போயிருக்க மாட்டாக, நமக்கு அது அனுபவமே உண்டு. அதனால இப்ப என்ன செய்யுதோம்னா ரெண்டு பேரையும் லவ்வு பண்ண வைக்குதோம்" என்றாள் அழுத்தமாக.

"அதெப்புடிட்டி நாம பண்ண வைக்குறது?"

"அவங்க சந்திக்குறதுக்கு சூழ்நிலைய ஏற்படுத்துவோங்குறேன்"

"அதேன் எப்புடிங்குறேன். நிசமா அவுக லவ் பண்ணிட்டா கல்யாணம் நல்லபடியா நடந்துருமா?"

"அந்த ஜோசியகாரர் அப்படி தானே சொன்னாரு அதுக்காக ட்ரை பண்ணி பாப்போம். மத்தது அந்த மீனாட்சி பாடு"

"இப்ப இங்க ரெண்டு பேத்தையும் கிளம்பி வர வைப்போமா?" என்றாள் விசாலாட்சி.

"ம்ம் ஆமா. மீனாட்சி அம்மன்ட்ட இருந்தே ஆரம்பிக்கலாம்" என குதூகலமானாள் ஷீலாவும்.

"காலம் போன காலத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணுதேன்னு நா பொலம்பிட்ருக்கேன் இவளுக இப்பதான் துள்ளி விளையாடுதாளுக சின்ன புள்ளைகளாட்டம்"

"மொத மூத்தவருக்கு ஃபோன போடுங்க"

"வள்ளுன்னு விழுவாண்டி அவேன்"

"சரி அப்ப மொத மூத்த மருமகளுக்கு கூப்பிடுங்க" என்றாள் விசாலாட்சி.

உடனே வாயெல்லாம் பல்லாக, அவளுக்கு அழைத்தார், அவளோ அங்கு அவர் மகனிடம் தான் மாட்டிக்கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.

ஆக்ஸிடென்ட் ஆன இடத்தில் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு ஸ்டேஷன் சென்று அங்கு சில வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்ப மணி மதியம் மூன்றை கடந்திருக்க, ஓய்வு கிடைத்ததும் அழைத்து விட்டான் அவளுக்கு வம்பிழுக்கவே, "மரகதம்" என ஆரம்பிக்க,

"சொல்லுங்க" என்றாள் பவ்யமாக.

"என்ன அடக்கம், ஒரு வக்கீல் பொண்டாட்டி இப்டி அமைய குடுத்து வச்சுருக்கணும்ல நானு?"

"தேங்க்ஸ்ங்க"

"நக்கல்டி ராஸ்கல் உனக்கு"

"இல்லங்க"

"சரி சாப்டியா?"

"ம்ம் டூக்கு லஞ்ச் டைம்"

"சாப்பிடறதுக்கு முன்ன புருஷன் சாப்ட்டானான்னு கேட்டியா?"

தலையில் கை வைத்து நொந்து கொண்டவள், "சாரி சாப்டீங்களா?"

"சாரிலாம் சாப்பிடறதில்ல, சாரி கட்டின பொண்டாட்டிய சாப்பிடுற யோசனையில தான் இருக்கேன்"

கண்ணை இறுக மூடி வாயை கை கொண்டே கப்பென்று மூடிக்கொண்டாள்.

"என்ன சத்தத்தயே காணும்? சரி சாப்பாடு வாங்கிட்டு வீட்டுக்கு வா. நா லொகேஷன் அனுப்புறேன். இனி இப்டி கேக்க மறக்க கூடாது புரியுதா?" என சொல்லிக் கொண்டிருக்கையில் தான் இவள் படபடத்திருக்க, வாசுகி எண்ணிலிருந்து போன் வந்தது. முதல் நாள் தான் அனைவரின் எண்ணையும் கொடுத்து வாங்கி சென்றிருந்தனர்.

"அத்த கூப்புடுறாங்க" என்றாள் தப்பிக்க வேண்டி.

"எந்த அத்த? யாரா இருந்தாலும் அப்றமா பேசுறேன்னு சொல்லிட்டு. எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா, பசிக்குதுடி" என்றான் குரலை உயர்த்தி.

"உங்கம்மா கூப்பிடுறாங்க"

"எதுக்காம் இந்நேரம்?"

"தெரியலையே"

"கான்ஃபரன்ஸ்ல போடு, நா இருக்கேன்னு சொல்லாத" என்கவும், அவன் அம்மா தானே என்ற நினைப்பில் அழைப்பை இணைத்து விட்டாள்.

"என்ன கண்ணு செய்யித வேலையா இருக்கியோ? ஃபோனும் பிஸி பிஸின்னு வந்தது"

"ஆமாத்த கொஞ்சம் வேலை தான்"

"சரித்தா இனி வீட்டுக்கு கிளம்புத நேரந்தானே? அப்டியே கிளம்பி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வாரியா? நா என் மவன வந்து கூப்பிட்டுகிட சொல்லுதேன். உங்க ஜாதகத்த சாமி பாதத்துல வச்சு வாங்க வந்தோம் இங்க ஜோசியகாரன் என்னென்னமோ"

"அத்த சும்மா இருங்க, வர மட்டும் சொல்லுங்க" என்ற ஷீலாவின் குரலும் இருவருக்கும் கேட்டது. ஜோசியர் எதையாவது சொல்லியிருக்க கூடும் என இருவரும் நினைத்துக் கொண்டனர், அதற்காக இருவரையும் கோவிலுக்கு வர சொல்லுகிறார் என்பதும் புரிந்தது.

அவளுக்கு மறுக்க தோன்றவில்லை, கல்யாணம் எந்த தடையுமின்றி நடக்க வேண்டும் என்று தானே அவள் உள்மனம் போராடுகிறது, அதனால் உடனே ஒத்துக் கொண்டாள்.

"நா வரேன்த்த, ஸ்கூட்டில நானே வந்துடுவேன்"

"இல்லத்தா மொத மொத கோவிலுக்கு வாரீக, ரெண்டு பேரும் சேந்து வாங்களேன்"

"அவருக்கு டைம் எப்டின்னு தெரியலத்த, நா வந்து கோவிலுக்கு வெளில வெயிட் பண்றேன் அவர் வரவும் சேந்து வரோம்" என அவள் சொல்லிக் கொண்டிருக்க, அதற்குள் அங்கு அவனது அழைப்பை துண்டித்து மீண்டும் அழைத்திருக்க அது வெயிட்டிங்கில் வந்து கொண்டிருந்தது.

'சரியான டகால்டி என்னலாம் பேசுறாரு இவர நம்பி தனியா போய்ட்டாலும்' என முனங்கி கொண்டே, "நீங்க உங்க பையன்ட்ட பேசுங்கத்த, எனக்கு இன்னொரு கால் வருது நா பேசிட்டு அப்படியே கிளம்பி வரேன்" என அவரை சமாளித்து வைத்துவிட்டாள்.

"நீ சாப்பாட்டோட இங்க வரியா இல்ல நா இப்ப அங்க வரட்டா?" என்றவனின் மெஸேஜில், "கடவுளே படுத்துறாரே" என மேசையில் படுத்தே விட்டாள். அவளின் கூச்ச உணர்வுகள் அவளுக்கு பெரிது தானே, இடைவெளி விடாமல் அவளை வம்பிழுத்தாள் அவளுக்கு அது படுத்துவதாக தானே தோன்றும். படுத்திதான் எடுத்தான் அந்த காவல்காரன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9

நிச்சயமாக அவன் வீடு செல்லும் தைரியமில்லை அவளிடம் அதனால் அடுத்து என்ன சொல்லி தப்பிக்கலாம் என்ற யோசனையில் அவள் போனையே பார்த்திருக்க, அவளுக்கு மெசேஜை அனுப்பிவிட்டு குளிக்க சென்றுவிட்டான் மகிழ்.

இங்கு ஷீலா வாசுகியைப் போட்டு உலுக்கி கொண்டிருந்தாள், "அத்தே அடுத்து அத்தானுக்கு கூப்பட்டு சொல்லுங்க"

"அவேன் வருவாம்னே எனக்கு நம்பிக்கையில்ல" என்றார் நொடிப்புடன்.

"ஃபோனே போடாம இப்டி பேசுனீகன்னா என்னன்னு கல்யாணம் கட்டி வைப்பீக"

"கல்யாணந்தாம்டி பண்ணி வைக்க முடியும், லவ்வு சவ்வுலாம் அவேம்ல பண்ணிகிடணும், அதையும் நாமளே செய்ய வச்சா நாளைக்கு என்னன்னு குடும்ப நடத்திவியான்?"

"இப்டியே பேசிட்டு நில்லுங்க அப்போ. அந்த ஜோசியர் வேற வாய விட்டுட்டாரு, அப்றம் நாமதான் கடைசிவர பதக்கு பதக்குன்னு உக்காந்திருக்கணும் சொல்லிட்டேன்"

"ஏட்டி ஏன் நீயும் இப்படி பேசுத?"

"பின்ன நா என்ன சொல்லணும்னு நினைக்கீக? பையனுக்கு ஃபோன போட இம்புட்டு பயப்படுதீக"

"மருமகள‌ விட்டே கூப்பிட சொல்லிட்டா என்ன?" என்றார் வேகமாக.

"இதெல்லாம் எதிர்பாக்க கூடாது. என் வேலை எப்டி என்னன்னு தெரியும்ல நீ என்ன கல்யாணதுக்கு முன்னயே அங்க வா இங்க வான்னு கூப்பிடுற' இப்டிலாம் பேசி அந்த பொண்ணயே அத்தான வேணாம்னு சொல்ல வச்சுருவாங்க பரவால்லையா?" என்றாள் விசாலாட்சி.

"ஏட்டி ஷீலா இவ என்னட்டி இப்டி அபசகுணமாவே பேசிட்டு போறா?"

"நீங்க அத்தானுக்கு கூப்ட்டு பொறுமையா சொல்லி பாருங்கத்தே" என்றாள் மீண்டும் விசாலாட்சியே.

"ஒருநாளும் இல்லாத திருநாளா இருக்குன்னு என்னியத்தான் வைவியான்" எனப் புலம்பிக் கொண்டே தான் அவனுக்கு அழைத்தார்.

குளித்து முடித்து வந்திருந்தவன், உணவிற்கு ஆர்டர் செய்துவிட்டு, "வரமாட்டேன்னு சொல்லாம சொல்றல்ல? பாத்துக்குறேன்டி உன்ன" என அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருக்க, அவன் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லும்மா" என்றான் தலையை துண்டால் துவட்டியவாறு.

"என்னையா செய்ற?"

"இப்பதான் வீட்டுக்கு வந்தேன்மா, சாப்பிட போறேன்"

"நேரத்த பாத்தியா மூத்தவனே? இம்புட்டு நேரங்கழிச்சா சாப்புடுவ? காலா காலத்துல கல்யாணங்கட்டியிருந்தா இப்டி கஷ்டபட வேணாமுல்ல?"

"ஏன் கல்யாணம் கட்டியிருந்தா வேலைக்கே போகாம சாப்ட்டு சாப்ட்டு வீட்லயே தூங்குவேணா? எனக்கிங்க நேரமில்லம்மா. நீ இப்ப எதுக்கு கூப்பிட்ட?" என பேசவும்,

"சிடுசிடுன்னே நிக்கியான்" என புலம்பியவர், "அது கொஞ்ச நேரம் கிடைக்குமா உனக்குன்னு கேக்கதேன் கூப்புட்டேன்"

"கோயிலுக்கு தானே, வரேன். உன் மருமக போன போட்டு இப்ப தான் கூப்புட்டா கண்டிப்பா வரணும்னு வேற சொல்றாம்மா. சும்மா எங்கிட்ட இப்டி அதிகப்பிரசங்கித்தனமா நடக்க கூடாதுன்னு சொல்லி வைம்மா"

அங்கு வாசுகிக்கு முகமெல்லாம் பல்லாகி விட்டிருந்தது, "மருமக கூப்பிட்டு பேசுச்சாப்பா, தங்கமான புள்ள, நா சொன்னேன்னுதேன் பேசிருக்கா. பொண்ணு பாத்தன்னைக்கு நீதேன் பேசவே மாட்டேங்குறான்னு சொன்ன? அதேன் நல்லா பிரியா பேசுன்னு சொல்லிட்டு வந்தேன், அவுக அப்பா அம்மாவும் அன்னைக்கே சொல்லிட்டு இருந்தாக அதேன் பேசிருக்கா போலய்யா. நீ அதையும் இதையும் பேசி மறுபடியும் அந்த புள்ளைய பேசவிடாம பண்ணிபோடாத. பேசி புழங்கி இருந்தாதேன் உங்களுக்குள்ள அன்னியோன்யம் வரும்"

"அவள குறைச்சு பேச சொல்லுன்னு சொன்னதுக்கு நீ அதிகமா பேசுறம்மா"

"உனக்குதேன் யாரும் பேசிற கூடாது, சும்மா விறைப்பா திரியாம கலகலன்னு அன்பா அந்த புள்ளைட்ட நாலு வார்த்தை பேசி கூட்டிட்டு வாய்யா. நாங்க கோவிலு கிட்டதேன் சாப்பிட்டிட்டு நிக்கோம்" என்றார்.

"கலகலன்னு தான பேசிடுறேன். வை எனக்கு சாப்பாடு வந்திருச்சு" என கூறி வைத்துவிட்டான்.

"ஏட்டி அந்த புள்ளையே அவன வர‌ சொல்லி பேசிருக்கும் போல. ஆனா அந்த புள்ள‌ பேச்ச கேட்டு இவனும் கிளம்புதியான் பாரு, அதுதேன் எனக்கு ஆக திருப்தியாட்டும் இருக்கு. வீஞ்சிட்டே திரியுறவன இந்த புள்ள கைக்குள்ள கொண்டு வந்துரும்னு இப்பதேன் நம்பிக்கையே வருது" என அவர் சந்தோஷமாக சொல்ல,

"அப்ப உங்க மூத்த மருமக விவரந்தேன்னு சொல்லுங்கத்த"

"பின்ன உங்கள மாதிரியா இருக்க சொல்லுத? வரதன உனக்கு உன் முந்தானைல முடிக்க முடியுதா? அந்த அரசு பயல ஒழுங்கா நாலு காசு சேக்க சொல்ல முடியுதா உன் தொங்கச்சியால?"

"உடனே உங்க வண்டிய எங்க பக்கம் திருப்பிடுங்க. பாக்கோமே நாங்களும் உங்க மூத்த மருமக உங்க மூத்தவர எப்டி முந்தானைல முடிய போறாகன்னு" என சிலுப்ப,

"போட்டி சிலுப்புதா பெரிய இவா. ஆமா பொண்ணுட்ட சொல்லிட்டோமே அவுக அம்மா அப்பாட்டா சொல்லாம விட்டா மரியாதையா இருக்காதுல்ல?" என அவர் யோசிக்க

"ஆமால்ல ஒரு ஃபோன போட்டு சொல்லிருங்கத்த" என்றாள் ஷீலா வேகமாக.

"மொத அவுகட்ட பேசிட்டுதேன் மருமககிட்டயே பேசிருக்கணும். வயசு புள்ளைக நீங்க சொன்னீகன்னு நானும் விவரமில்லாம இருக்க பாத்தேன்" என புலம்பிக் கொண்டே அகிலா எண்ணிற்கு அழைத்தார்.

"சொல்லுங்க மதினி, உங்க ஃபோனதேன் எதிர்பாத்துட்டே இருந்தேன். தேதி குறிச்சுட்டீகளா?" என்றார் அகிலா எடுத்ததும்.

"பத்தமடை ஜோசியர் ரொம்ப விஷேசம்னு அவர்ட்டதேன் வந்தோம் மதினி"

"ஆமா கேள்வி பட்டுருக்கேன், என்ன தேதி குடுத்தாரு?"

"அவரு ஒரு குண்ட‌ தூக்கி போட்டாரு மதினி"

"எத்தே அதெல்லாம் சொன்னீகன்னா பதட்டபட மாட்டாகாளா? சொல்ல வேண்டியத மட்டும் சொல்லலாம்ல?" என ஷீலா கடிந்து கொள்ள,

"ஏம்ட்டி அவுகளுக்கு தெரிஞ்சா இப்ப என்ன?"

"என்னன்னு சொல்லுங்க மதினி எனக்கு படபடன்னு வருது. இருந்து இருந்து இப்பதேன் அவளுக்கு கல்யாணம் கூடி வந்துருக்குன்னு ஆயாசமா இருக்கேன், அவரு என்னத்த சொன்னாரு. பொருந்தல்லன்னுட்டாரோ?" என அங்கு படபடத்தார் அகிலா,

"மதினி எதுக்கு‌ இம்புட்டு படபடக்கீக‌? அந்த ஜோசியரு சொல்லுறது பூராவும் பொய்யுங்கேன். என் புள்ளைக்கு காதல் கலியாணந்தேன் ஆகுங்காரு. முப்பத்தி மூணு வயசு வரை கல்யாணம் பண்ணாதவன அப்புடி சொன்னா எனக்கு எம்புட்டு கோவம் வரும் அதேன் நல்லா திட்டி போட்டு வந்துட்டேன்"

"இப்ப என்ன மதினி செய்ய" அகிலாவிற்கு இன்னும் பதட்டமாக தான் இருந்தது.

"அதேன் தெரியல. ஜோசியகாரனுவ‌ எல்லாம் ஏமாத்த தான் செய்றானுவ, ரெண்டு இடத்துல பாத்துட்டோம் ஒன்னும் சரியா வரல. அதேன் கோயிலுக்காது போவோம்னு கிளம்பி மீனாட்சிய பாக்க வந்தமா, இங்க வந்ததுந்தேன் என் மருமகளுக ரெண்டு பேருக்கும் புது யோசனையா, என் புள்ளையையும் உங்க பொண்ணையும்" என அவர் முடிக்கும் முன்பே அவரிடமிருந்து போனை பிடிங்கிய ஷீலா முறைத்துப் பார்த்தாள்.

"ஏட்டி பேசிட்ருக்கேன்ல? பாதில புடிங்கிட்டு என்ன பார்வை பாக்குறவ?" என அவளிடமிருந்து போனை அவர் திரும்ப வாங்கிக் கொள்ள,

"இன்னும் எதாச்சும் உளற மிச்சமிருக்காக்கும்? அதேன் அம்புட்டையும் சொல்லிட்டீகளே? அந்த பெரியம்மா என்ன நினைப்பாகன்னு யோசிக்கீகளா?"

"என்னத்த சொல்லிட்டேன் இப்ப? பொண்ண பெத்தவுகளுக்கும் விஷயத்த தெளிவா சொன்னாத்தான நீங்க ப்ளானு பண்ணுறதுலாம் சுலுவா முடியும்?"

"இனி‌ முடிஞ்சாப்புலதேன். போங்கத்த உங்கள ஆட்டைல சேத்துகிட்டு ராணுவ ரகசியம் பேசுனாத்தேன் விளங்கும்"

"ஏட்டி என்ன ஓவரா வாய் நீளுது"

"ஆமா செய்றதெல்லாம் நீங்க செஞ்சுட்டு சண்டைய மட்டும் எங்கட்ட கட்டுங்க"

"ஹலோ அலோ அல்லோ" என அகிலா அந்தப் பக்கம் கத்தித் தொண்டையே வறண்ட நிலைக்குச்‌ சென்றிருந்தார்.

"இந்த ஷீலாதேன் போன புடிங்கிட்டா மதினி"

"என்னைய இங்க வச்சுட்டே மாமியாரும் மருமகளும் என்ன சண்டைல இருக்கீக?" என்றார் அகிலா அங்கு கொஞ்சம் சத்தமாகவே.

"அது எதையும் சொல்லாம மறைச்சு செய்யணுங்காளுக" என வாசுகி சொல்லிக் கொண்டிருக்க, ஷீலாவும் விசாலாட்சியும் பாவமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ச்ச ரெண்டும் தங்கமான பிள்ளைகளாச்சே மதினி"

"சில நேரம் சின்ன புள்ளைகன்னு புத்திய‌ காட்டிருவாளுவ"

"சரி இப்ப என்ன சொல்லுதுக புள்ளைக"

"என் மவனையும் உங்க மவளையும் லவ்வு பண்ண வைக்கணுமாம்"

"ஏத்தே இதெப்புடி செய்யிறது? ரெண்டும் என்ன விடல புள்ளைகளா?"

"இததேன் நானும் கேட்டுட்டுக்கிடக்கேன். ஜோசியரு லவ் பண்ணாதேன் கல்யாணம் முடியும் இல்லன்னா தடைபட்டு போவும் வாய விட்டுபோட்டாரு. அதனால இந்த புள்ளைக இப்படி சொல்லுதுக"

"அப்டியே சொல்லிட்டாரா?"

"ஆமாங்குறேன், போவே கூறுகெட்ட ஜோசியருன்னு திட்டிபோட்டுதேன் வந்துருக்கேன் நானு"

"அவரு நல்லா பாப்பாருன்னு கேள்வி பட்ருக்கேன் மதினி"

"இப்டிதான் ஊர ஏமாத்தி வச்சுருக்கியான் போல. எதாது நம்புற மாறி இருக்கா பாருங்க. ரெண்டு பிள்ளைகளையும் கல்யாணதுக்கு ஒத்துக்க வைக்கவே நாம அரும்பாடு படுதோம்னு அவனுக்கு என்ன தெரியும். அதுலையும் என் மவேன் இருக்கானே, கடஞ்செடுத்த நல்லவன், பக்கத்து வீட்டு பையன் லவ் பண்ணதுக்கே அவுக அப்பாட்ட சொல்லி, உங்க புள்ளைக்கு புத்தி சொல்லி வளக்க மாட்டீகளான்னு கேட்டு பெரிய சண்டையாகிபோச்சு. இதுல இவேன் லவ்வு பண்ணித்தான் கலியாணம் கட்டுவானாம் என்னைக்குங்கேன் நானு" அவர் போக்கில் அவர் பேசிக்கொண்டிருக்க,

"கோயிலுக்கு போய்ட்டே பேசலாந்தே மணி நாலு கடந்துட்டு" என அவரை நகர்த்திக் கொண்டு வந்து காரில் ஏற்றி கோவில் கிளம்பினர்.

"எனக்கு என்ன சொல்லனே தெரியல மதினி, கல்யாணம் நல்லபடியா நடக்கும்ல?"

"அதெல்லாம் மீனாட்சி ஆத்தா நடத்தி வைப்பா நா அவளத்தேன் நம்பி இருக்கேன், இப்ப அத சொல்லத்தேன் ஃபோனே போட்டேன். என் மகன உங்க மகள கூட்டிட்டு கோவிலுக்கு வான்னு சொல்லிருக்கேன்"

"ரெண்டு பேரும் சேர்ந்தா?" என அவர் அதிர,

"ஏன் மதினி, பயப்டாதீக என் மகேன் ரொம்ப நல்ல பையன்" என்றார் வாசுகி.

"மதினி என் பொண்ணு துடுக்கா எதையாது பேசுவா, என்னத்தையாது சொல்லி மாப்ளைய டென்ஷனாக்கிடுவா"

"இவந்தான் நிறைய பேசுவான்னு நா பயந்துட்ருக்கேன். ஆனா புள்ள பேசுனா பேசட்டும், அவனும் யாருக்காது அடங்கித்தானே இருந்தாகணும்"

"இருங்க மதினி அவளுக்கு ஃபோன போட்டு கொஞ்சம் அமைதியா மாப்ள கூட போய்ட்டு வாடின்னு சொல்லிட்டு வரேன்" என சொல்லிவிட்டு வேகமாக வைத்தார்.

"அவங்களும் பொண்ணுட்ட பேசுறாங்களாம். இப்டி எல்லாத்தையும் சொல்லிட்டு செஞ்சாத்தேன் பிரச்சினை இல்லாம இருக்கும்" என வாசுகி பெருமையாகவும் சொல்லிக்கொள்ள, மருமகள்கள் இருவரும் மீண்டும் பாவமாக பார்த்துக் கொண்டனர்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top