ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 71

Sugumari

New member
கஜனோ பெருமூச்சுடன், "சரி அத விடு, நடந்ததை எப்போவுமே மாத்த முடியாது. ஆனா நடக்க போறத சீராக்க முடியும். அடுத்து என்னடா செய்ய போற?" என்று கேட்க,

கண்களை மூடி திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, "எனக்கு ஒரு வேலை எடுத்து தர முடியுமா?" என்று கேட்டான்.

"என்ன பேசிட்டு இருக்க? லாவண்யா ஸ்டோர்ஸ பார்த்துக்கிறது யாரு?" என்று கேட்க,

"என்னால எதையும் பார்த்துக்க முடியாது. மனசுக்கு நிம்மதி தேவைப்படுது, தனிமை தேவைப்படுது. நான் யாரையும் பார்க்கவோ, பேசவோ விரும்பல. இப்போகூட உங்கள பார்க்கிறேன்னா, என் மேல நீங்க ஒருத்தர் தான் நம்பிக்கை வச்சு இருந்தீங்க என்கிறதுக்காக தான்..." என்றான்.

கஜனும், "சரி, எங்களோட ஃபேக்டரிய பார்த்துக்கிறியா?" என்று கேட்க, "எனக்கு எதையும் பார்த்துக்க முடியாது. அந்தளவு எனக்கு மனநிலையும் இல்லை. ப்ளஸ்டூ வரைக்கும் தான் படிச்சு இருக்கேன், காலேஜ் ட்ராப் அவுட்." என்று கனத்த மனதுடன் சொன்னவன்,

"படிக்கிறது எவ்ளோ அவசியம்னு இப்போ புரியுது. ராகவியை படிக்க வச்சிடுங்க, நீங்க படிக்க வச்சிடுவீங்கனு நம்பிக்கை இருக்கு." என்றான்.

நொறுங்கிப் போய் பேசிக் கொண்டு இருந்தான். அந்த நிலையிலும் ராகவியைப் பற்றித் தான் மீண்டும் மீண்டும் பேசினான். அவள் கல்வியைப் பற்றி பேசினான். அவள் மீது அவன் வைத்து இருக்கும் நேசம் பற்றி, இப்போது இக்கணம் கஜனுக்கு புரிந்தது.

கஜன் அவனையே இமைக்காமல் பார்த்து இருக்க, இப்போது கஜனின் விழிகளைப் பார்த்தவன், "ஏதாவது ரெஸ்டாரெண்ட், இல்லன்னா ஏதாவது சூப்பர் மார்க்கெட்ல வேலை எடுத்து தர முடியுமா? இந்த ஊர்ல வேணாம், பக்கத்து ஊர் எங்கேயாவது..." என்று கேட்டான்.

அவன் பேச பேச கஜனின் இதயம் அழுத்தமாகி போனது. அவ்வளவு இலகுவாக அவனை இந்த வலியில் இருந்து மீட்க முடியாது என்று தோன்றியது. அவனை பார்த்துக் கொண்டு தனது அலைபேசியை எடுத்தவன், விஜய்க்கு அழைத்து இருந்தான்.

அவனும் அலைபேசியை எடுத்து இருக்க, "விஜய், பக்கத்து ஊர்ல இருக்கிற பார்வதி ஸ்டோர்ஸ் ஓனர தெரியும்ல?" என்று கேட்க, "ஆமா அண்ணன்..." என்றான்.

"ஒருத்தருக்கு வேலை ஒன்னு அவசரமா வேணும். ஓனர்கிட்ட பேசி வை, நான் இப்பவே நேர்ல பார்க்கிறேன்." என்று சொல்ல, "ஓகே" என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான் விஜய்.

இப்போது அர்ஜூனைப் பார்த்தவனோ, "கிளம்பலாம், வா." என்று சொல்ல அவனும் சென்றான்.

எதுவுமே பேசவில்லை, மௌனம் தான்.

"நான் எங்க இருக்கேன்னு யாருக்கும் தெரிய வேணாம்." என்றான்.

"ம்ம்..." என்று கஜனும் சொல்ல, சற்று நேரத்தில் அவனை சூப்பர் மார்க்கெட் முதலாளியிடம் தெரிந்த பையன் என்று அறிமுகப்படுத்தி இருந்தான் கஜன்.

கஜனை நன்கு தெரிந்த முதலாளியான செல்வமும், "சரி தம்பி." என்று சொல்ல, கஜனே அவனுக்கு தங்கவும் வீடு பார்த்து கொடுத்தான்.

அன்று முழுவதும் அவனுடன் தான் இருந்தான். அவன் எதுவுமே பேசவில்லை. கஜனும் தொந்தரவு செய்யவில்லை.

"எதுவா இருந்தாலும் கால் பண்ணு அர்ஜுன், ஐ ஆம் தேர் ஃபார் யூ." என்று சொல்ல, அவனை ஏறிட்டுப் பார்த்த அர்ஜுனோ, "சாரி!" என்றான்.

"எதுக்கு?" என்று கஜன் கேட்க, "எல்லாத்துக்கும்..." என்றான் விரக்தியாக புன்னகைத்தபடி.

அவனை அணைத்து விடுவித்த கஜனோ, "உன் மனசு மாறணும்னு ஆசைப்படுறேன்." என்று சொல்லிக் கொண்டு அவன் கையில் பணத்தைத் திணித்தவன், "சம்பளம் கிடைச்சதும் கொடுத்துடு." என்று சொல்ல,

அதனை பார்த்துக் கொண்டு, "என்னை நல்லாவே புரிஞ்சு வச்சு இருக்கீங்க, சம்பளம் வந்ததும் கண்டிப்பா கொடுத்துவேன். ஆனா நான் வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கதான் ஆசைப்படுறேன்." என்றான்.

அவன் கன்னத்தைத் தட்டிய கஜனும் கிளம்பி இருக்க, அர்ஜுனோ தனது அறைக் கதவை அடைத்து விட்டு, சிறிது நேரம் கண் மூடி நின்றான்.

அவனுக்கு தேவையான மன அமைதி இந்த தனிமையில் தான் கிடைக்கும் என்று தோன்றியது.

தன்னையே மொத்தமாக தனிமைப்படுத்திக் கொண்டான். அவனை நம்பாத யாரும் அவனுக்கு இக்கணம் தேவை இல்லை என்றுதான் தோன்றியது.


***

கஜன் வீட்டுக்கு வந்த சமயம், அவனை நோக்கி வேகமாக வந்த ராகவி, "அர்ஜுன் ஜெயில்ல இருந்து வந்துட்டாராம்..." என்றாள்.

"ஓஹ்..." என்றான் அவன் தெரியாத குரலில்.

"எங்க போய்ட்டாருன்னு யாருக்கும் தெரியல அண்ணா..." என்று அழுகையுடன் சொன்னாள்.

அவனுக்கு அவள் அழுவதைப் பார்க்க அழுத்தமாக இருந்தது.

ஆனால் அர்ஜுனைப் பற்றி இப்போது சொன்னால் அது அர்ஜுனுக்கு செய்யும் துரோகமாகி விடும். "சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம் ராகவி." என்று சொல்லி அவள் தலையை வருடி விட்டு உள்ளே வந்தவனோ, குளிக்க சென்று இருந்தான்.

குளித்துவிட்டு வந்தவனோ அங்கே கை, கால்களை அடித்து விளையாடிக் கொண்டு இருந்த, தனது குழந்தையான யாழினியை தூக்கிக் கொண்டு, "என்ன குட்டி செய்யுறீங்க?" என்று கொஞ்ச ஆரம்பித்துவிட,

இப்போது உள்ளே வந்த பல்லவியோ, "அர்ஜுனை பத்தி உங்களுக்கு நிஜமா எதுவும் தெரியாதா?" என்று கேட்டாள்.

அந்த கேள்வியில் அவன் விழிகள் சட்டென அவள் விழிகளை சந்திக்க முடியாமல் விலக, "அவன் நல்லா இருக்கானான்னு மட்டும் சொல்லுங்க, வேற எதுவும் சொல்ல வேணாம். உண்மையாவே அர்ஜுனை பத்தி தெரியலன்னா உங்களால இப்படி நிம்மதியா யாழினி கூட விளையாடிட்டு இருக்க முடியாது. சோ உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு." என்று சொன்னாள்.

அவனை எவ்வளவு ஆழமாக அவள் புரிந்து வைத்து இருக்கின்றாள்.

அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்து, "உடலளவில் நல்லா இருக்கான். மனசுளவுல நல்லா ஆகணும்..." என்று சொல்ல, பல்லவியோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியேறப் போக, "யார்கிட்டயும் சொல்லிடாதே..." என்றான்.

ஆமோதிப்பாக தலையாட்டி விட்டு, "எங்களை மன்னிப்பானா?" என்று கேட்டாள்.

"தெரியல..." என்று அவன் பதில் சொல்ல, ஒரு பெருமூச்சுடன் அவளும் வெளியேறி இருந்தாள்.

ராகவியோ அழுகையுடன் அமர்ந்து அறைக்குள் படுத்து இருந்தாள்.

அறைக் கதவு தட்டப்பட்டது.

கண்ணீரை துடைத்துக் கொண்டே, எழுந்து சென்று கதவை திறந்தாள்.

கஜன் தான் நின்று இருந்தான்.

அவனை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள்.

அவள் முன்னே கையை நீட்டினான்...

அதில் அவளது தாலி இருந்தது...

"தூக்கி மொத்தமா எறியட்டுமா? இல்ல வேணுமா?" என்று கேட்டான்...

சட்டென கையை நீட்டி, அதனை எடுத்துக் கொண்டே, "வாழ்க்கை முழுக்க வேணும் அண்ணா" என்றாள்.

ஒரு மெல்லிய விரக்தி புன்னகையுடன், கையை நீட்டி, அவள் தலையை வருடியவனோ, "அழாம தூங்கு" என்று சொல்லி விட்டு, செல்ல, கதவை தாழிட்டு விட்டு, அதில் சாய்ந்து நின்றவளோ, கையில் இருந்த தாலியைப் பார்த்தாள்.

மீண்டும் அவள் அவனுக்கு வைத்தியசாலையில் வைத்து பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வர, தன் மீதே ஆத்திரம் வந்தது...

அழுகையும் வந்தது...

அழுகையுடன் தாலியை மீண்டும் அணிந்து கொண்டவள், கதவு நிலையில் சாய்ந்து கண் மூடி நின்று கொண்டாள்.

இதே சமயம், கஜனிடம் விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்ட ஜீவிதனும் ஒரு நிம்மதியுடன் வீட்டுக்கு கிளம்பி இருந்தான்.

பார்த்தீபன் அவனுக்கு அழைத்து, "எங்கடா அவன்?" என்று கேட்டான்.

"நல்லா இருக்கான் மாமா, யாரையும் பார்க்க முடியாதுனு தனியா இருக்கணும்னு சொல்றான். அவனுக்கு எதும் ஆகாது, அவனுக்கான ஸ்பேஸை கொஞ்சம் கொடுக்கலாமே... தொந்தரவு பண்ணுனா, ரொம்ப தூரம் போயிடுவானோனு பயமா இருக்கு." என்று சொல்ல, பார்த்தீபனுக்கு மனசே கேட்கவில்லை.

பார்க்க வேண்டும், அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் பிழை அவர்களிடத்தில் தானே? பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். தொந்தரவு செய்தால் கண் காணாத இடத்துக்கு சென்று விட்டால், என்ன செய்வது என்று பதட்டம் தோன்றியது. அவனுக்காக விலகி நின்றுவிட முடிவெடுத்து இருந்தார்கள்.

"சரிப்பா." என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

ஜீப்பை பார்க் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த ஜீவிதனும், வழக்கம் போல நேத்ராவைப் பார்த்தும் பார்க்காமல் உள்ளே நுழையப் போனான். அவளுடன் அன்று பேசிய பின்னர் அவளை அவன் எதிர்கொள்வது இல்லை.

இன்று, "ஜீவிதன்!" என்று அவளே அழைக்க, திரும்பிப் பார்த்தான்.

"கேஸ் என்னாச்சு?" என்று விசாரித்தாள்.


உணர்ச்சியற்ற பார்வையுடன் எல்லாமே சொன்னவன் வீட்டினுள் நுழைய, அவன் பாராமுகம் அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
பாவம் அர்ஜூன் 😥 சீக்கிரம் அவன் மன காயங்கள் ஆற வேண்டும்
 
Top