நிலவு 71
அன்று முழுவதும் நேத்ராவுக்கு ஜீவிதனின் எண்ணம் தான். திருமணம் என்று பெயர் மட்டும்தான். அவளை எந்த இடத்திலும் அவன் கட்டுப்படுத்தவே இல்லை. அவளுக்கான எல்லா சுதந்திரமும் அவளுக்கு கிடைத்து இருந்தது. அவள் அவளாக தான் இருந்தாள். தன்னுடன் வாழ சொல்லிக் கூட அவன் கேட்கவில்லை. தோன்றும் போது வாழலாம் என்று இருந்தான். அவளும் அவனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதும் இல்லை.
அவள் அவனிடம் பேரம் பேசியது எந்த பெரிய தவறு என்று இக்கணம் புரிந்தது. தன்னை நினைத்தே எரிச்சலாகி விட்டது. தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள்.
***
இதே கணம், அர்ஜுனை வெளியே எடுக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து இருந்தான் ஜீவிதன்.
அவனுக்கு அழைத்த பார்த்தீபனோ, "அர்ஜுன் எப்போ வெளியே வர்றான்?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு இருந்தான்.
ஜீவிதன், "சீக்கிரம்..." என்று சொன்னானே தவிர, எப்போது என்று சொல்லவில்லை.
ஜீவிதனுக்கோ அர்ஜுனுக்கு, தான் அடித்த அடிதான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. தவறு செய்யாதவனை அப்படி போட்டு அடித்து இருக்கின்றானே?
அந்த குற்ற உணர்வினாலேயே அர்ஜுன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவன் எப்போது வெளியே வருகின்றான் என்று யாருக்கும் சொல்லவில்லை. அன்று அவனுக்கு விடுதலை. அர்ஜுனைத் தேடி சென்றான் ஜீவிதன்.
"நீ கிளம்பலாம் அர்ஜுன்..." என்று சொல்ல, அவனும் கையெழுத்தைப் போட்டுவிட்டு வெளியே வந்தான். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை.
"எங்க போக போற?" என்று கேட்டான்.
பதில் சொல்லவில்லை, நடந்தே சென்றான்.
"அர்ஜுன்..." என்று அழைக்க, திரும்பிக் கூட பார்க்கவில்லை. தளர்ந்த நடையுடன் சென்றான்.
அவனை ஓடிச் சென்று மறித்த ஜீவிதனோ, "எங்கடா போக போற? நானே கொண்டு விடுறேன்." என்று சொல்ல, "எங்கேயோ சார்..." என்றான்.
"சாரா?" என்று கேட்க, அவனை ஏறிட்டுப் பார்க்காமல் அவன் நடந்தான்.
அப்படி அவன்தான் அழைக்க சொன்னான். ஆனால் இன்று அதே வார்த்தையில் மொத்தமாக தள்ளி வைத்து விட்டான். ஜீவிதனுக்கு மனமே கேட்கவில்லை.
அவனைப் பார்க்க பார்க்க ஏதோ ஒன்று அழுத்தும் உணர்வு. மீண்டும் அவன் அருகே வந்தவன் அவனை அணைத்துக் கொண்டு, "மன்னிச்சுடுடா..." என்றான்.
சின்ன வார்த்தை கூட அவன் பேசவில்லை. உணர்ச்சியற்ற பார்வை மட்டும். பதிலுக்கு கூட அணைக்கவில்லை.
"நான் போகட்டுமா சார்?" என்று கேட்டான்.
சட்டென விலகி நின்றவனோ, "ஏதாவது பேசுடா... ஒருமாதிரி இருக்கு..." என்று சொல்ல, "என்னை கொஞ்சம் தனியா விடுங்க, அது போதும்..." என்று சொன்னவனோ நடந்து செல்ல, ஜீவிதனுக்கு அவனை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.
தன்னிடமே இந்தளவு விலகலைக் காட்டுபவன், அடுத்தவர்களிடம் இன்னும் விலகிதான் நிற்க போகின்றான். அவனை எப்படி இயல்பாக மாற்றுவது என்றே தெரியாத நிலைதான்.
வேறு வழி இல்லாமல் அவன் அழைத்தது என்னவோ கஜனுக்கு தான். அவனும் அலைபேசியை எடுக்க, "இன்னைக்கு அர்ஜுன் வெளியே வர்றான்..." என்று சொன்னதுமே, "ஓஹ்... சொல்லவே இல்லையே ஜீவி?" என்றான் அவன்.
"சொல்ல வேணாம்னு அவன்தான் அண்ணா சொன்னான். ஒழுங்கா பேச மாட்டேங்குறான். மொத்தமா நொறுங்கி போய்ட்டான், அவனை எப்படி சரி பண்ணுறதுனு தெரியல..." என்று சொல்ல,
"மாமாகிட்ட சொன்னியா?" என்று கேட்க, "இல்ல, அவனுக்கு யாரையுமே பார்க்க பிடிக்கல. மனசுளவுல டவுனா இருக்கான், ஏதாவது பண்ணிடுவானோனு பயமா இருக்கு..." என்று சொல்ல, சட்டென கஜனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
"அவன் எங்க போறான்னு கொஞ்சம் வாட்ச் பண்ணி சொல்லு, நான் இதோ வந்திடுறேன்." என்று சொல்லிவிட்டு வைத்தவன், ஹாஸ்பிடலில் இருந்து அடுத்த கணமே கிளம்பி விட்டான்.
ஜீவிதனும் தனக்கு கீழே வேலை செய்யும் போலீஸ்காரனிடம் அர்ஜுனை பின்தொடர சொல்லி இருந்தான்.
அர்ஜுனோ நீண்ட நேரம் நடந்து சென்றான். உறவுகளே வேண்டாம் என்று தோன்றியது. யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. மனம் மரத்துப் போய் விட்டது. தற்கொலை செய்யும் அளவுக்கு அவனுக்கு துணிவு இல்லை போலும். நடுவெயிலில் வியர்வை வழிய நடந்தான். காரை தவிர அவன் எதிலும் பயணம் செய்தது இல்லை. பிறந்ததில் இருந்தே சொகுசாகவே வாழ்ந்து பழகியவன்.
இன்று முற்றும் துறந்த மனநிலை. இந்த உலகத்தில் அனாதை போல நிற்கும் உணர்வு. அங்கே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதனை பார்த்துக் கொண்டு அங்கிருந்த சீமெந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். விளையாடுவதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான். அடி வாங்கியதால் இன்னுமே மேனி வலித்தது. மனம் அதனை விட அதிகமாக வலித்தது.
பைரவி கையால் முதல் முறை அறை வாங்கியதையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அதில் நியாயம் இருந்தது. இப்போது செருப்பால் அடித்து இருக்கின்றாள்.இதில் எந்த நியாயமும் இல்லையே?
ராகவி அவனை காமுகன் என்று அல்லவா சொல்லி விட்டாள்! அவன் காமுகன் தான், ஆனால் அவளிடம் மட்டுமே... அவளை தவிர எந்த பெண்ணையும் அவன் உடல் தீண்ட நினைத்தது கூட இல்லை... எந்த பெரிய பழியை தூக்கி அவன் மீது போட்டு விட்டாள்? சின்ன விசாரணை கூட அவனிடம் இல்லாமல் என்னவெல்லாம் பேசி விட்டாள்? அங்கே விளையாடுபவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
ஒரு பையன் அடித்த பந்து சரியாக அவனை நோக்கி பறந்து வந்தது. அவன் முகத்தில் குறி பார்த்து வேகமாக வந்தது. பழைய அர்ஜுன் என்றால், எட்டிப் பிடித்து இருப்பான். ஆனால் இப்போது அந்த பந்தை பிடித்து தடுக்கவும் தோன்றவில்லை, தலையை நகர்த்தி தன்னை காக்கவும் தோன்றவில்லை. அப்படியே அமர்ந்து இருந்தான்.
சட்டென ஒரு வலிய நரம்போடிய கரம் நீண்டு, அவன் முகத்தில் பட இருந்த பந்தை எட்டிப் பிடித்து இருந்தது. கண்களை மூடி திறந்த அர்ஜுன், விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தான்.
ஆறடிக்கும் அதிகமாக உயரத்தில் கஜன்தான் நின்று இருந்தான்.
அர்ஜுனை ஒரு கணம் பார்த்துவிட்டு, "கவனமா விளையாடுங்கடா..." என்றபடி பந்தை சிறுவர்களை நோக்கி எறிந்த கஜனோ, அவன் அருகே அமர்ந்து கொண்டான்.
அர்ஜுன் பார்வையை முன்னே திருப்பிக் கொண்டான், கஜனைப் பார்க்கவில்லை. கஜன் எதுவுமே பேசவில்லை.
அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, "உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டான்.
பதில் சொல்லவில்லை.
"சொல்லுடா..." என்றான் கஜன்.
"எதுவுமே வேணாம்." என்று பதில் வந்தது.
அடுத்தவர்கள் போல கஜனை அவனால் ஏனோ தள்ளி வைக்க தோன்றவில்லை. யாருமே நம்பாத நேரத்தில் அவன்மேல் நம்பிக்கையுடன் பேசிய ஒரே ஜீவன் அவன். அர்ஜுன் அதிகமாக வெறுத்த ஒருவன் அவன். நினைத்து இருந்தால் ஹாஸ்பிடலில் வைத்து அவனை என்ன வேண்டும் என்றாலும் கஜன் செய்து இருக்கலாம். எந்த பகையையும் வன்மத்தையும் கஜன் இதுவரை அர்ஜுனிடம் காட்டியதே இல்லை.
அவனுக்கு இன்றுவரை நல்லது தான் செய்து இருக்கின்றான், செய்து கொண்டும் இருக்கின்றான். இப்போது கூட தேடி வந்து இருக்கின்றான். அந்த பந்து அவன் முகத்தில் படாமல் காப்பாற்றி இருக்கின்றான். இதற்கு மேல் எப்படி அவனிடம் வெறுப்பைக் காட்ட முடியும்?
"அடுத்து என்ன பண்ண போற?" என்று கஜன் கேட்க, "தெரியல..." என்று பதில் வந்தது.
"மனசு விட்டு பேசுறதுன்னா பேசுடா..." என்றான்.
அவனை இப்போது திரும்பிப் பார்த்த அர்ஜுனோ, "செத்துடலாம் போல இருக்கு..." என்றான்.
எத்தனை வலிகள் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவன் வாயில் இருந்து வரும்?
கஜன் அவனையே பார்த்து இருக்க, "ஆனா தைரியம் இல்லாம இருக்கு..." என்று சேர்த்து சொன்னான்.
பேசும் போதே அர்ஜுனின் கண்கள் கலங்கி விட்டன.
அவனையே பார்த்து இருந்த கஜனோ, "ராகவி விஷயத்துல உன் மேல அவ்ளோ ஆத்திரம் இருக்கு, ஆனா..." என்று ஆரம்பிக்க, "செத்த பாம்பை எதுக்கு அடிக்கணும்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்டு விட்டான்.
கஜனோ பெருமூச்சுடன் முன்னால் திரும்பிக் கொள்ள, "ராகவியை நான் கல்யாணம் பண்ணுன முறை தப்புதான். ஆனா அவளை எப்பவுமே நான் ஏமாத்தணும், துரோகம் பண்ணணும்னு நினச்சது இல்லை. வாழ்க்கை முழுக்க அவ கூட தான் வாழ யோசிச்சேன். நான் அவளுக்கு கொடுத்த கஷ்டத்தை மட்டும் அன்னைக்கு சொன்னவ, என் கூட அவ சந்தோஷமா வாழ்ந்ததையே மொத்தமா மறந்துட்டா, அதுதான் ரொம்ப வலிக்குது.
எனக்கு அம்மா அடிச்சத விட அவ பேசுனது தான் ரொம்ப வலிக்குது..." என்று சொல்லிக் கொண்டு முன்னால் திரும்பியவன், "ஏன்னா எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்." என்று தழுதழுத்த குரலில் முடித்து இருக்க, அவனைப் பக்கவாட்டாக திரும்பி ஆச்சரியமாக பார்த்தான் கஜன்.
"எனக்கு என்னோட அம்மாவை ரொம்ப பிடிக்கும். அதே போல ராகவியையும் பிடிக்கும். ஆனா ரெண்டு பேர்கிட்டயும் நான் மொத்தமா தோத்துட்டேன். என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாம..." என்று ஆரம்பித்தவன் பேச முடியாமல் தடுமாறி, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்ள, கஜன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, இறுக அணைத்துக் கொண்டான்.
ஆத்மார்த்தமான அணைப்பு!
அர்ஜுனுக்கு அந்த கணம் தேவையான அணைப்பு. அடக்கி வைத்து இருந்த அத்தனை வலிகளையும் சேர்த்து விம்மி வெடித்து அழுதான். அவன் வாழ்க்கையில் இப்படி மனம் வருந்தி அழுததே கிடையாது. அவ்வளவு உறுதியானவன், இப்போது அழுதான். வாய் விட்டு அழுதான். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான். கஜனுக்கே அவன் அழுகை மனதைப் பிசைய வைத்து விட்டது. அர்ஜுன் என்றாலே அவன் பார்த்த விம்பம் வேறு.
எவ்வளவு கம்பீரம், எவ்வளவு திமிர், எவ்வளவு தலைக்கனம் உடையவன் அவன். இன்று எதுவும் அவனிடம் இல்லை, அவன் நொறுங்கிப் போன மனதைத் தவிர. அவன் மனம் எப்படி வலிக்கும் என்று கஜனுக்கு புரிந்தது. செய்யாத பாரதூரமாக தவறுக்காக பழியை ஏற்று இருக்கின்றான். தண்டனையை அனுபவித்து இருக்கின்றான். தூற்றுதல்களைத் தாங்கி இருக்கின்றான். இத்தனை தாண்டியும் அவன் திடமாக இருப்பதே ஆச்சரியம் தான்.
அவன் முதுகை வருடிக் கொடுத்தான். சட்டென நிதானத்துக்கு வந்தவன் அவனை விட்டு விலகி கண்களைத் துடைத்துக் கொண்டு, முன்னால் திரும்பி அமர்ந்து கொண்டான். ஒரு பெருமூச்சுடன் மேலும் பேசினான். மனதில் இருப்பதை எல்லாம் பேசினான்.
"ஆனா இன்னொரு பக்கம் யோசிச்சா இது எனக்கு தேவையான ஒரு தண்டனைதான். ராகவிக்கு நான் செஞ்ச பாவத்துக்கு இதுல தண்டனை கிடைச்சு இருக்குனு நினச்சுக்கிறேன்." என்று சொன்னவன் கஜனைப் பக்கவாட்டாக திரும்பி ஆழ்ந்து பார்த்து, "ராகவியையும் முழுசா தப்பு சொல்ல முடியாது. நான் அவகிட்ட மனசால நெருங்க ட்ரை பண்ணுனதே இல்லை. அவ விஷயத்தில அவகிட்ட மன்னிப்பு கேட்டது கூட இல்ல.
நான் அரெஸ்ட் ஆக ரெண்டு நாள் முன்னாடி கூட மோசமா நடந்துக்கிட்டேன். மோசமா பேசி இருக்கேன். அவ மனச பத்தி யோசிக்காம வார்த்தைகளை விட்டு இருக்கேன். அப்புறம் எப்படி அவளுக்கு என் மேல நம்பிக்கை வரும்? ஆனா என்னோட பேச்சு மட்டும்தான் அப்படி இருக்கும்னு அவளுக்கு புரியல. நான் புரிய வச்சு இருக்கணும். அவ சின்ன பொண்ணு தானே? அந்த விஷயத்துல ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.
இப்போ கூட அவ பக்கம் நியாயம் இருக்குன்னு நானே காரணம் தேடி என்னை சமாதானப்படுத்திக்கிறேன். இப்போவும் அவளை டீப்பா லவ் பண்ணுறேன்னு தோணுது, இல்லன்னா அவ பக்கம் இருக்கிற நியாயத்தை நான் இப்படி தேடிட்டு இருக்க மாட்டேனே. ஆனாலும் என்னால முடியல, வலிக்குது. யாருமே வேணாம்னு தோனுது. என்னை யாருமே புரிஞ்சுக்கலைனு தோனுது.
அவ உங்க தங்கச்சியாவே இருக்கட்டும். என் பொண்டாட்டியா அவளால சந்தோஷமா இருக்க முடியாது. என்னாலயும் அவ என்னை பார்த்து சொன்ன வார்த்தை எல்லாம் மறந்துட்டு வாழ முடியாது, உறுத்திட்டே இருக்கும். அந்த உறுத்தல் கோபமா கூட மாறலாம். அப்ப ரெண்டு பேரோட வாழ்க்கையும் மொத்தமாக சிதைஞ்சிடும்.
உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணி கர்ப்பம் ஆக்கிட்டு, விட்டு போறேன்னு மட்டும் நினைக்காதீங்க. எனக்கு அவளை இப்போவும் பிடிக்கும் தான், ஆனா என்னால நிஜமா சேர்ந்து வாழ முடியாது. எனக்கு அந்த மனநிலை இல்லை. சேர்ந்து வாழ்ந்தா அது ரெண்டு பேருக்குமே நரகமா இருக்கும். உங்களால என்னை புரிஞ்சுக்க முடியுதா?" என்று கேட்டான்.
தன்னை நம்பிய ஒரே ஜீவனும் தன்னை தப்பாக நினைத்து விடக் கூடாது என்று தவிக்கின்றான். அவனையே பார்த்துக் கொண்டு இருந்த கஜனோ, "ம்ம்... புரியுது." என்றான்.
"உங்க அப்பா சொல்ற போல நான் சின்ன பையன்தான். என்னால உங்கள போல மெச்சுர்ட்டா யோசிக்க முடியல. அடுத்தவங்களை பெருந்தன்மையா அரவணைச்சுக்க தெரியல. சில்லறை தனமா நடந்து இருக்கேன். எல்லாருமே உங்க பக்கம் நிற்கிற நேரம் கோபப்பட்டு இருக்கேன். என் பக்கம் யாருமே இல்லன்னு நினைச்சு இருக்கேன். ஆனா என் பக்கம் நிக்கிற போல நான் நடந்துக்கலையே...
அப்போ எனக்கு எதுவுமே புரியல, இப்போ நிறையவே புரியுது. உச்சந்தலைல அடிச்சு இந்த வாழ்க்கை எனக்கு பாடம் கத்து கொடுத்து இருக்கு." என்றான்.
மனம் வருந்தி, மனம் திருந்தி பேசுகின்றான். அவனை இதற்கு மேல் எப்படி தண்டிக்க முடியும்? நிலையான மனநிலையில் அவன் இல்லை. வலியில் உழன்று கொண்டு இருக்கின்றான். யாரும் நம்பவில்லை என்கின்ற வலி மற்றும் ஏமாற்றத்துடன் சேர்த்து, ராகவியின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் தேடிக்கொண்டு இருக்கின்றான். அவனுக்காக மட்டும் அல்லாமல் அவளுக்காகவும் யோசிக்கிறான். அவளை இப்போதும் காதலித்துக் கொண்டு இருக்கின்றான். அவளை அவனால் வெறுக்கவே முடியவில்லை.
அவன் தோளில் கையைப் போட்ட கஜனோ, "ம்ம்..." என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.
"உங்க தங்கச்சி வாழ்க்கையை மொத்தமா சீரழிச்சுட்டேன்ல...?" என்றான்.
"என்ன இப்படி எல்லாம் பேசுற?" என்று கேட்டான் கஜன்.
"நான் வருத்தப்படுவேன்னு நீங்க சொல்லாம இருக்கலாம், ஆனா உண்மையும் அதானே? படிச்சிட்டு இருந்த பொண்ண மிரட்டி, கல்யாணம் பண்ணி, கர்ப்பமாக்கி, இப்போ வாழ முடியாதுனு சொல்லிட்டு இருக்கேன். எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல. உங்க தங்கச்சியா என்னால அவளை திருப்பி கொடுக்க முடியல. என் குழந்தையோட தான் திரும்ப கொடுக்கிறேன். என்னை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு." என்று சொன்னவனோ எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு,
"அவ குழந்தைக்கு என்னை போல ஒரு அப்பா தேவல, உங்கள போல ஒரு மாமா போதும். அவ ஆசைப்பட்டா இன்னொரு கல்யாணம் கூட பண்ணி வச்சிடுங்க. அவ வாழ்க்கைல நான் குறுக்க வரவே மாட்டேன். வந்தனாவுக்கு நடந்த விஷயத்துக்கு நானும் ஏதோ ஒரு வகைல காரணம். என்னை ஜெயில்ல போடணும்னு அந்த பொண்ண நாசமாக்கிட்டான். ராகவிக்கு பண்ணுன தப்புக்கு ஏதோ ஒரு ரூபத்துல நான் தண்டனை நான் அனுபவிச்சேன். அந்த பொண்ணு எந்த தப்புமே பண்ணலயே?
எத்தனையோ தடவை ராகவியை மிரட்டி காரியம் சாதிக்கிறதுக்காக வந்தனா பத்தி கொச்சையா பேசி இருக்கேன். அப்போ அந்த வார்த்தையோட வீரியம் எல்லாம் எனக்கு தெரியல. ஆனா வார்த்தைகளுக்கு எவ்ளோ சக்தி இருக்குல்ல...” என்றவன் விழிகள் கலங்க கஜனைப் பார்த்துக் கொண்டு,
"என் குழந்தை மேல சத்தியமா சொல்றேன், நான் மட்டும் நிதானத்துல இருந்திருந்தா கண்டிப்பா அந்த பொண்ணுக்கு அப்படி நடந்து இருக்க விடமாட்டேன்." என்று சொல்லும் போதே, அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, சட்டென துடைத்துக் கொண்டான்.
மனசு தடுமாறி குற்ற உணர்வுடன் வருந்திப் பேசிக் கொண்டு இருப்பவனுடன் என்ன பேசிவிட முடியும்?