அந்த கடற்கரை மணலில் குதிரை நின்றதும் லியோ இறங்கிக்கொள்ள, யாழ்மொழியும் இறங்கிக்கொண்டாள்.
"இங்க யாருமே இல்ல, நான் உன்னை என்ன வேணா பண்ணலாம். அப்படியே யாராவது இருந்தாலும் என்னை கேள்வி கேக்கவே முடியாது. எந்த தைரியத்துல என்னை நம்பி வந்த?" என்று அவன் கழுகுப்பார்வையோடுக் கேட்க, அவளோ புன்னகையோடு பார்த்தாள்.
"அன்றிரவு தனியாக தங்களிடம் நான் சிக்கிக்கொண்ட போது கூட தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம், அன்று என்னை கடத்திய போதும் என்னை காப்பாற்றாமல் அவர்களின் ஆசைக்கு துணை சென்றிருக்கலாம். ஆனால், விளைவை அறிந்தும் என்னை காப்பாற்றினீர்கள். அப்போதே அனைத்தும் புரிந்துவிட்டது" என்ற யாழின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அத்தனை ரம்மியமான பொழுது அது. ஓசையோடு பாய்ந்து வரும் கடலலைகளின் நீர்த்துளிகள் மேனியில் பட்டுத் தெறிக்க, உடனே தன் பார்வையைத் திருப்பிக்கொண்டவள், "அது... தங்களின் மனதைக் கவர்ந்தவர்கள் யாராவது உண்டா? அதாவது தாங்கள் யாரையாவது காதல்..." என்று ஒரு பக்கம் ஆர்வம் இன்னொரு புறம் தயக்கத்தோடு கேட்டுவிட்டாள்.
விழிகளை சுருக்கி அவளைப் பார்த்தவன், "காதலா... நெவர்! அது என் வாழ்க்கையில இருந்து எப்போவோ போயிருச்சு" என்று சொல்ல, "தாங்கள் சொல்வதைப் பார்த்தால் யாரையோ காதலித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. யார் அவள்? ஏன்... ஏன் இந்த பிரிவு?" மனதில் காரணமே இல்லாமல் எழுந்த பொறாமையை மறைத்துக்கொண்டு கேட்டாள் அவள்.
"தட்ஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்" என்று லியோ ஒற்றை விரலை நீட்டி அழுத்தமாக சொல்ல, அவனைப் புருவ முடிச்சுகளோடு பார்த்தவளுக்கு அவன் சொன்னது சுத்தமாகப் புரியவில்லை.
அவளின் பார்வையிலேயே அதைப் புரிந்துக்கொண்டவன், "ஓ காட்! உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே எனக்கு தெரியல" என்று கடுப்பாக சொல்லிவிட்டு, "என்னோட தனிப்பட்ட வாழ்க்கை உனக்கு தேவையே இல்லாதது" என்று முறைத்தவாறு சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கினாள் யாழ்மொழி.
"பரவாயில்லை அதிகாரி, என்னிடம் எப்போது சொல்ல தோன்றுகிறதோ அப்போது சொல்லுங்கள். ஆனால், இப்போது யார் மீதும் எந்த பிரியமும் இல்லை அப்படிதானே?" என்று மனதிற்குள் எழுந்த ஆர்வத்தோடுக் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டினான் லியோ.
"இதுவரை தங்களைத் தவிர எந்த ஆண்மகனின் ஸ்பரிசத்தையும் நான் உணர்ந்தது கிடையாது. அரண்மனையிலேயே கூட்டுக்குள் இருக்கும் கிளி போல வளர்ந்துவிட்டேன். இதுவரை யாரையும் காதலித்ததில்லை, பார்க்கலாம். என் ராஜகுமாரன் எங்கு இருக்கிறானோ, எப்போது வருவானோ?" என்று ஓரக்கண்ணால் அவனையே பார்த்தவாறு அடக்கப்பட்ட புன்னகையோடு அவள் சொல்ல, அவனோ அவளின் வார்த்தைகளை காதிலும் வாங்கவில்லை.
"நேரமாச்சு, என் கார் இருந்த இடத்துலயே என்னை கொண்டு போய் இறக்கி விடு!" என்று அவன் சொல்ல, "அவ்வளவுதானா?" என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அவனைப் பார்த்தவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை.
அவள் குதிரையில் ஏறியதும் அவனும் ஏறிக்கொள்ள, இருவரும் மீண்டும் அவனுடைய கார் நின்ற இடத்தை நோக்கிச் சென்றனர்.
இவர்கள் காருக்கு அருகே வர, அங்கு காரில் சாய்ந்தவாறு நின்றுக்கொண்டிருந்த ஜேம்ஸோ தன்னை நோக்கி குதிரையில் வரும் உயரதிகாரியை அதிர்ந்துப் பார்க்க, அவனோ முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டவில்லை.
லியோவோ குதிரையிலிருந்து இறங்கி, "ஜேம்ஸ், எப்போ வந்த? ஆஸ் யூஷுவல் கார் நின்னுருச்சு. என்னன்னு பாரு" என்று சாதாரணமாக சொல்லிக்கொண்டு காரில் சென்று அமர்ந்துக்கொள்ள, நாவால் இதழை ஈரமாக்கியவாறு திருதிருவென விழித்தவாறு குதிரையில் அமர்ந்திருந்த யாழ்மொழிக்கு அவனின் செயலில் சப்பென்று இருந்தது.
"அதிகாரி, இன்றைய நாள் வீணாகிவிட்டது. ஆனால் நாளை இவ்வாறு நடக்காது. நாளையும் இதே இடத்தில் சந்திக்கலாம், தங்களுக்காக இடங்களை கேட்டு அறிந்துக்கொண்டு வருகிறேன்" என்று யாழ்மொழி கத்திச் சொல்ல, ஜேம்ஸ்ஸோ இருவரையும் மாறி மாறி அதிர்ச்சியாகப் பார்த்தான்.
விழிகளை மட்டும் உயர்த்தி முன்னே இருந்த பெரிய கண்ணாடி வழியே தன்னவளைப் பார்த்துவிட்டு மீண்டும் ஜேம்ஸ் காருக்குள் வைத்திருந்த காகிதங்களை எதுவுமே தெரியாதது போல் பார்வையிட ஆரம்பித்தான் லியோ.
அன்றிரவு, யாழ்மொழி லியோவைப் பற்றி யோசித்தவாறு ஆடைகளை மடித்து வைக்க, அவளை முறைத்துப் பார்த்தவாறு அவளோடு இணைந்து வேலை சேய்துக்கொண்டிருந்தாள் ராதா.
"ராதா, பாவம் அவர்! ஊரை சுற்றிக் காண்பிக்க சொல்லி கேட்டார் ஆனால் அரண்மனைக்குள்ளேயே இருந்த எனக்கு அவரை அழைத்துச் செல்ல ஒரு இடம் கூட தெரியவில்லை. உனக்கு நம் தேசத்திலேயே சுற்றிக் காண்பிக்க ஏதாவது இடங்கள் தெரியுமா?" என்று யாழ்மொழி கேட்க, மற்றவளுக்கு பிபி உச்சகட்டத்தில் எகிறியது.
"அப்போது நீ அந்த வெள்ளையனைப் பார்க்க வெளியில் சென்றிருக்கிறாய், குதிரையில் அவனோடு ஊரில் திரிந்திருக்கிறாய் அப்படிதானே!" என்று பத்தாவது முறையாக மீண்டும் அதே கேள்வியை ராதா கோபமாகக் கேட்க, தன் தோழியின் கோபத்தை புரியாமல் பார்த்தாள் மற்றவள்.
"நான் அரண்மனைக்கு வந்ததுமே அனைத்தையும் கூறிவிட்டேன், மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக்கொண்டிருக்கிறாய். இப்போது என்னதான் நேர்ந்து விட்டது ராதா?" என்று யாழ் சாதாரணமாகக் கேட்க, "என்ன... என்ன கேட்கிறாய்! என்ன நேர்ந்து விட்டதென்று அலட்சியமாகக் கேட்கிறாயா? எதுவும் உனக்கு நேர்ந்து விடக் கூடாதென்றுதான் இத்தனை கோபப்படுகிறேன். முட்டாள்! காதல் உன் கண்களை பறித்துவிட்டதா? இது தவறு யாழ்!" என்று படபடவென பொரிந்துக்கொண்டே போனாள் அவளின் தோழி.
யாழ்மொழியோ அவளை அதிர்ச்சியாகப் பார்த்தவள், "காதலா? அப்.. அப்படியெல்லாம் இல்லை ராதா, எனக்கு உதவி செய்தாரே என்ற எண்ணத்தில்தான்..." என்று சமாளிக்க முயற்சிக்க, "உன் கண்களே காட்டிக் கொடுக்கிறது யாழ், உன்னையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றாதே!" என்று கத்தினாள் ராதா.
சரியாக இவர்களைக் குறுக்கிடுவது போல் யாழ்மொழியைத் தேடி வந்த இந்திரசேனா, "ராதா, எதற்கு இத்தனை கோபம்? இவள் யாரை ஏமாற்றுகிறாள்?" என்று கேட்க, ராதாவோ தன் தோழியைப் பார்த்தாள் என்றால், யாமொழியோ 'சொல்லாதே' என்பது போல் விழிகளால் எச்சரிக்கை செய்தாள்.
"அது... யாழ் அடிக்கடி அரண்மனையிலிருந்து வெளியே செல்கிறாள் அல்லவா! அதைதான் அரசரை ஏமாற்றுகிறாய் என சொல்லி திட்டிக்கொண்டிருந்தேன். வேறொன்றும் இல்லை" என்று ராதா உண்மையை மறைத்து சமாளிக்க, 'ஊஃப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்ட யாழ்மொழியோ வராத புன்னகையை வரவழைத்தவாறு இந்திராவைப் பார்த்தாள்.
"அட! இதற்காகத்தான் திட்டிக்கொண்டிருந்தாயா, என்ன ராதா நீ! அவளை அழைத்துக்கொண்டு செல்வதே நான்தான். யாழ் மீது எந்த தவறும் இல்லை. அவள் ஒன்றும் அறியாதவள், வேண்டுமானால் உன் கோபத்தை என்னிடம் தீர்த்துக்கொள்ளலாம்" என்று இந்திரா குறும்பாக சொல்ல, "அய்யோ இளவரசி, என்ன செல்கிறீர்கள்! தங்ளை திட்டுவதா, அவ்வளவுதான்" என்று பயத்தோடு சொன்னாள் அவள்.
யாழ்மொழிக்கு இந்திராவிடம் தான் செய்யும் காரியங்களை மறைக்கவே ஒரு மாதிரியாக இருந்தது.
அவளுடைய முகம் இறுகிப் போயிருக்க, இந்திராவோ அதையெல்லாமே கண்டுகொள்ளவில்லை. அவள் பாட்டிற்கு பணிப்பெண்கள் உறங்கும் படுக்கையில் அமர்ந்துக்கொள்ள, மற்ற இரு பெண்களும் பதறிவிட்டனர்.
"இளவரசி, என்ன காரியம் செய்கிறீர்கள்? இந்த அறைக்குள் தாங்கள் வந்ததே அதிர்ச்சி என்றால் இப்படி செய்வது பேரதிர்ச்சியாக அல்லவா இருக்கிறது! இது மட்டும் அரசருக்கு தெரிந்தால் நிச்சயமாக தங்களின் மீது கோபப்படுவார். வேண்டாம் இளவரசி, தயவு செய்து எங்களை சங்கடப்படுத்த வேண்டாம்" என்று யாழ்மொழி பதற்றமாக சொல்ல, இந்திராவோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.
"தாங்கள் என் அறைக்கு வரலாம், ஆனால் உங்களின் அறைக்கு நான் வரக் கூடாதா, இது என்ன நியாயம்? பரவாயில்லை இருக்கட்டும், யாழ் நாளை காலை தயாராக இரு, நாம் சந்தைக்கு செல்லலாம்" என்று சத்தமாக பேச்சை ஆரம்பித்து ஹஸ்கி குரலில் நிறுத்த, அவளோ ஓரக்கண்ணால் ராதாவைதான் பார்த்தாள்.
'அவளே செல்லவில்லை என்றாலும் இவர்கள் விட மாட்டார்கள் போலும்!' என்று உள்ளுக்குள் திட்டியவாறு ராதா அமைதியாக நிற்க, புன்னகையோடு யாழ்மொழி தலையசைத்ததும் அந்த அறையிலிருந்து வெளியேறினாள் இந்திரா.
அவள் சென்றதும் தோழியின் புறம் திரும்பியவள், "ராதா அது... நான்..." என்று ஏதோ சொல்ல வர, அவள் பேசுவதை கை நீட்டி தடுத்த மற்றவள், "நீ வெளியில் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த வெள்ளையனை காதலிப்பதாக மட்டும் என் எதிரே வந்து நின்றுவிடாதே! நானே அதை அரசரிடம் கூறிவிடுவேன்" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு மிரட்டிவிட்டு சென்றுவிட்டாள் மற்றவள்.
அடுத்தநாள் விடிய, இருந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இந்திராவோடு சந்தைக்கு செல்ல தயாரானாள் யாழ்மொழி.
"யாழ், ரகசிய வழியால் இப்போது செல்ல முடியாது. அரண்மனை வாயிலாலேயே வெளியில் செல்லலாம். யார் அழைத்தாலும் திரும்பி கூட பார்க்காதே! புரிகிறதா?" என்று சொல்லிக்கொண்டே இந்திரா யாழ்மொழியை அழைத்துக்கொண்டு செல்லப் போக, திடீரென அவர்களின் எதிரே வந்து நின்றனர் சில காவலர்கள்.
"இளவரசி, அரசர் தங்களை அழைத்து வரும்படி கட்டளை இட்டிருக்கிறார். தங்களை சந்திக்க இளவரசர் நந்தன் வந்திருப்பதாக தகவல் சொல்லச் சொன்னார்" என்று காவலர்களில் ஒருவன் சொல்ல, முதலில் அதிர்ச்சி பின் யோசனைக்குத் தாவி மௌனமாக நின்றிருந்தாள் இந்திரா.
யாழ்மொழியோ இந்திராவையே பார்த்தபடி நின்றிருக்க, "யாழ், நீ சென்று வீராவை சந்தித்து நடப்பதை சொல்! இன்று இதற்கு நான் ஒரு முடிவை காண வேண்டும்" என்று விட்டு இந்திரசேனா காவலர்களோடு தந்தையை காணச் செல்ல, யாழ்மொழிக்கு அய்யோ என்றிருந்தது.
அரண்மனையிலிருந்து வெளியேறி சந்தையை நோக்கிச் சென்றவள், அங்கிருந்த பழக்கடைக்கு சென்று பழங்களை வாங்குவது போல் வீராவைத் தேட, அவனோ அந்த இடத்திலேயே இருப்பதாகத் தெரியவில்லை.
'என்ன இது, வழமையாக இங்குதானே சுற்றிக்கொண்டிருப்பான். இப்போது ஆளையே காணவில்லையே!' என்று சுற்றி முற்றி தேடியவாறு யாழ்மொழி அந்த சந்தைக்குள் அலைய, அப்போது சரியாக அவளுடைய காதில் விழுந்தது வீராவின் குரல்.
"இப்போ எல்லாம் நம்ம நாட்டோட வளத்து மேல நமக்கே உரிமை இல்லாம போயிரும் போல! அந்த வெள்ளைக்காரனுங்க அதிகமே எல்லாத்தையும் நம்மகிட்ட இருந்து சுரண்டுறானுங்க. இதை விடக் கூடாது. இந்த தடவை அவனுங்களோட இடத்துக்குள்ளயே நுழைஞ்சு ஏதாச்சும் பண்ணணும்" என்று அவன் கத்திக்கொண்டிருக்க, ,"ஆனா வீரா, ஏற்கனவே நம்ம ஆளுங்கள்ல நிறைய பேர் இறந்துட்டாங்க. இந்த நிலைமையில உள்ள போறது எனக்கு சரியா படல. நம்ம எல்லாருக்கும் குடும்பம் இருக்கு" என்று தயக்கமாக சொன்னான் பாலா.
வீராவோ அவனை சில கணங்கள் வெறித்துப் பார்த்தான்.
"யார் என் கூட வர்றீங்களோ இல்லையோ நான் போகத்தான் போறேன். அந்த ஆங்கிலேய உயரதிகாரி லியோ வந்ததுக்கு அப்பறம் இன்னும் எல்லாமே நமக்கு சிரமமாகிட்டு. நாம அமைதியா இருக்கோம்னு அவனுங்க தலைகால் புரியாம ஆடுறானுங்க. என் உயிரே போனாலும் பரவாயில்ல, அவன கொல்ல போறேன். அப்போதான் நம்மள குறைச்சு மதிப்பிட மாட்டாங்க" என்று ஆத்திரத்தில் வீரா வெடிக்க, யாழ்மொழிக்கு சர்வமும் அடங்கிவிட்டது.
"கடவுளே!" என்று அவள் கத்திய கத்தில் வீராவும் அவனோடு இருந்தவர்களும் ஒருசேர குடிசையின் வாயிலை திரும்பிப் பார்த்தனர்.
சந்தேகமாக புருவங்களை நெறித்தவாறு வீரா வேகமாகச் சென்றவன் வாசலில் நின்றிருந்தவளை ஒருகணம் அதிர்ந்துப் பார்த்துவிட்டு பின் உடனே முகபாவனையை மாற்றி புன்னகைக்க, அவளோ அவனை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அட, என் இளவரசியோட தூதுப்புறா வந்திருக்கா. ஏதாச்சும் தகவல் சொல்லி அனுப்பினாளா? இல்லன்னா ஒளிஞ்சிருந்து என் கூட விளையாடுறாளா? ஆமா.. இந்திரா எங்க?" என்று அவன் ஆர்வமாகக் கேட்க, "இளவரசி அரண்மனையில் இருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதற்காக இளவரசர் நந்தன் வந்திருக்கிறார்" என்றாள் யாழ்மொழி உணர்ச்சியற்ற குரலில்.
அதைக் கேட்டதும் வீராவின் முகம் இறுக, "ஓ... அந்த இளவரசர் நந்தனுக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு என் இந்திராவ பார்க்க வந்துட்டே இருக்காரே" என்று கேலியாக சொல்ல, யாழ்மொழியோ எதுவும் பேசவில்லை.
"நீயும் புரட்சியாளர்களில் ஒருவன் என்று எனக்கு இப்போதுதான் தெரியும். ஆனால்..." என்று யாழ் தயக்கமாக இழுக்க, அவனோ புரியாமல் பார்த்தான்.
"என்ன ஆனா?" என்று அவன் கேட்டதும், "யாரையும் காயப்படுத்தக் கூடாது அல்லவா! என்னதான் அவர்கள் நம் நாட்டை கைப்பற்றியிருந்தாலும் நாமும் அவர்களை காயப்படுத்தினால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்காதே!" என்று தயங்கித் தயங்கி பேசினாள் அவள்.
வீராவோ விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தவன், "அரண்மனையிலயே வளர்ந்த உனக்கு எங்க கஷ்டத்த உணர முடியாது யாழ், உன்னை நான் காயப்படுத்தணும்னு சொல்லல. ஆனா... அந்த வெள்ளைக்காரனுங்க எங்கள அடிமைப்படுத்தி பண்ற கொடுமைகள நீ கண்ணால பார்த்திருக்கியான்னு கூட தெரியல. அமைதியா இருக்க இருக்க எங்கள அடிச்சிட்டே இருக்காங்க. அவனுங்களுக்கு பயம்னா என்னன்னு காமிக்கணும். இதை பத்தி இந்திராகிட்ட சொல்லாத, நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று சொல்லி முடித்தான்.
அவனுடைய வார்த்தைகளிலிருந்த வலியை அவள் உணராமல் இல்லை.
எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு அவள் நகர்ந்துச் செல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு திரும்பிப் பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அவனுடைய சகாக்களோ அவனைதான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, தலையை சொரிந்து அசடுவழிந்தவாறு வீரா குடிசைக்குள் நுழைந்தான் என்றால், வீரா பேசியதையே யோசித்தவாறு சென்றுக்கொண்டிருந்தவளின் பின்னால் ஹார்ன் சத்தம் கேட்டது.
உடனே மொத்த சிந்தனையும் கலைய யாழ்மொழி திரும்பிப் பார்க்க, அவளை மோதுவது போல் ஆங்கிலேயர்களின் கார் அவளை நோக்கி வரவும் பயத்தில் விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.
யாழ்மொழியோ பயத்தில் விழிகளை மூடிக்கொள்ள, சிறிய இடைவெளியில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து இறங்கினான் வில்லியம்.
"ஆர் யூ அஃப்ரைட் ஆஃப் மீ, ஹாஹாஹா..." என்று கேட்டு அவன் பேய் போல் சிரிக்க, பட்டென விழிகளைத் திறந்தவள் அவனை அங்கு எதிர்பார்க்காது அதிர்ந்துப் பார்த்தாள்.
"என்னை பார்த்து பயப்படுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றுக்கொண்டே அவளை அவன் நெருங்க, எச்சிலை விழுங்கியவாறு இரண்டடி பின்னே நகர்ந்தாள் அவள்.
அதைப் பார்த்து நக்கலாக சிரித்தவன், "அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவேன்னு நினைச்சியா, வாய்ப்பு வரும் வரைக்கும் காத்திருக்கேன், வந்ததும் உடனே பிடிச்சிக்குவேன், என்ட் ஐ கான்ட் வெயிட் டூ ஹேவ் யூ. கவுன்ட் யூவர் டேய்ஸ் யாழ்மொழி" என்று ஆங்கிலத்தில் ஏளனப் புன்னகையோடு பேசிவிட்டு மீண்டும் காரில் ஏறி பறந்திருக்க, பெண்ணவளோ பெக்கபெக்கவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
"அவன் என் பெயரை சொன்னது மட்டும்தான் எனக்கு புரிந்தது, அதுவும் சரியான உச்சரிப்பே இல்லை. ஏதேதோ உளறிவிட்டு செல்கிறான். சரியான மடையனாக இருப்பான் போல!" என்று அவள் பாட்டிற்கு திட்டிவிட்டு அரண்மனையை நோக்கிச் செல்ல, அதேநேரம் இங்கு நந்த இளவரசனின் முன் இறுகிய முகமாக நின்றிருந்தாள் இந்திரா.
"திருமணத்தை மேலும் தாமதப்படுத்த வேண்டாம். புரோகிதரை இன்றே வரவழைத்து நல்ல முகூர்த்த நாளை கேட்டு திருமண வேலைகளை ஆரம்பித்து விடலாம் இளவசர் நந்தன்" என்று அரசர் வேந்தன் சொல்ல, "என் யோசனையும் அதுவே, இந்திராவை கரம் பிடிக்க நானும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று வருங்கால மனைவியை ரசித்தபடி சொன்னான் அவன்.
ஆனால், அவனின் பார்வையை உணர்ந்தும் நிமிர்ந்தே பார்க்கவில்லை இந்திரசேனா. அவளுடைய முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. அதை நந்த இளவரசனும் கவனிக்காமலில்லை.
"என்ன நடந்தது இந்திரா, உன் முகமே சரியில்லை" என்று அவன் அவளை கூர்ந்துப் பார்த்தபடிக் கேட்க, அப்போதுதான் மகளின் முகத்தை உற்றுப் பார்த்தார் வேந்தன்.
"இந்திரா..." என்று அவர் அழைத்ததும் நிமிர்ந்த பெண்ணவளின் விழிகள் இரண்டும் கலங்கிப் போயிருக்க, இரு ஆண்களுக்கும் ஒருகணம் எதுவுமே புரியவில்லை.
"இந்..." என்று நந்த இளவரசன் ஏதோ சொல்ல வர, அவனைக் குறுக்கிட்டு, "என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை" என்றாள் அவள் பட்டென்று.
அவள் சொன்னதை கிரகிக்கவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடிக்க, வேந்தனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.
வேகமாக எழுந்தவர், "இந்திரா..." என்று கோபம் அதிர்ச்சி என கலந்து சத்தமிட, தந்தையை திடுக்கிட்டுப் பார்த்தவளுக்கு பயத்தில் கைக்கால்கள் நடுங்கத் தொடங்கின.
மின்னல் வேகத்தில் மகளை நெருங்கி அவர் பார்த்த பார்வையில் கீழுதட்டைக் கடித்து கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்த இந்திராவுக்கு நா எழவில்லை.
"உண்மைய சொல் இந்திரா, எதற்கு சம்மதமில்லை என்கிறாய்? யாராவது உன்னை குழப்பி விட்டார்களா, எதற்கு இந்த திருமணத்தில் உனக்கு உடன்பாடு இல்லை சொல்!" என்று அவர் அடித்தொண்டையிலிருந்து கத்த, "அது... அது வந்து தந்தையே, யாரும் இதற்கு காரணம் இல்லை. நான்தான்... எல்லாமே என்னால்தான். என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அவள்.
"அரசரே சற்று பொறுங்கள், இந்திரசேனாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன்" என்ற நந்தன் இந்திராவின் எதிரே வந்து நின்று அவளின் விழிகளை நேருக்கு நேராகப் பார்க்க, அவனின் பார்வையை எதிர்க்க முடியாமல் பார்வையை திருப்பிக்கொண்டாள் பெண்ணவள்.
"நீ சம்மதம் சொன்னதால்தானே அரசர் இந்த திருமணத்தை முடிவு செய்தார், இப்போது வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? பதில் சொல் இந்திரா, என்னை பிடிக்கவில்லையா, இல்லையென்றால், திருமணமே பிடிக்கவில்லையா?" என்று அவன் இறுகிய குரலில் கேட்க, "உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள் இளவரசே, தங்களை பிடிக்காமல் இல்லை. நான் மனதை பறி கொடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக நம் திருமணம் நடந்திருக்கும்" என்றவளின் வார்த்தைகளில் இரு ஆண்களும் திகைத்துப் போய்விட்டனர்.
"இந்திரா..." என்ற வேந்தனின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, தந்தையை பார்க்க சங்கடப்பட்டு அந்த இடத்தை விட்டு தன் அறையை நோக்கி ஓடினாள் அவள்.
அவளை நோக்கி செல்லப் போன அரசரை தடுத்த நந்தன், "இதற்குப் பிறகு பேசி பயனில்லை, நான் வருகிறேன்" என்றுவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேறி இருக்க, இடிந்துப் போய் அப்படியே இருக்கையில் அமர்ந்த வேந்தனுக்கு மகளின் வார்த்தைகளில் ஆசையெல்லாம் நிராசையான உணர்வு.
யாழ் அரண்மனைக்குள் நுழையும் போதே எல்லோரும் பரபரப்பாக தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, அதை புருவ முடிச்சுகளோடு பார்த்தவாறு வராண்டாவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்றி இழுத்தாள் ராதா.
"யாழ், எங்கு சென்றிருந்தாய், அரண்மனையில் நடப்பது உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று தோழி பதற்றமாகக் கேட்க, "என்ன நடந்தது?" என்று புரியாமல் கேட்டாள் யாழ்மொழி.
"இளவரசி திருமணத்தை நிறுத்தி விட்டார்களாம் அவர்கள் யாரையோ காதலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால்... இளவரசியுடன் அதிகம் இருப்பது நீதான், அவர்களைப் பற்றி உனக்கு தெரியாமல் இருக்காது. உண்மையை சொல் யாழ், யார் அது? அவர்கள் காதலிப்பது நிஜம்தானா?"
என்று ராதா கோபமாகக் கேட்க, யாழ்மொழிக்கு கிட்டத்தட்ட தலையே சுற்றி விட்டது.
"என்ன சொல்கிறாய் ராதா, கடவுளே! என்ன காரியம் செய்துவிட்டார்கள். நான் இப்போதே இளவரசியை சந்திக்க வேண்டும்" என்று யாழ் ராதாவின் அழைப்பைக் கூட காதில் வாங்காமல் வேகமாக இந்திரசேனாவின் அறையை நோக்கி செல்ல, அவளோ ஜன்னல் வழியே வானத்தை வெறித்தபடி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.
"இளவரசி..." என்ற யாழ்மொழியின் குரலில் வேகமாகத் திரும்பியவள் ஓடிச் சென்று அவளை அணைத்து கதறியழ, "ஏன் இவ்வாறு செய்தீர்கள், விளைவு தெரிந்துமா தங்களால் உண்மையை சொல்ல முடிந்தது?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் மற்றவள்.
"தந்தையை பற்றி அறிந்துதான் நான் யாரென்று சொல்லவில்லை யாழ், அவன் யாரென்று தெரிந்தால் நிச்சயமாக அவனை கொன்றே விடுவார். ஏதோ ஒரு தைரியத்தில் தான் காதலிப்பதை சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது அவரை எப்படி சந்திப்பது என்று தெரியவில்லை. இதையெல்லாம் விட இனி என்னால் அரண்மனையை விட்டு வெளியிலேயே செல்ல முடியாது. கண்டிப்பாக தந்தை பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பார்" என்று இந்திரா கண்ணீரோடு பேசிக்கொண்டே போக, யாழ்மொழிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"இளவரசி, நான் வீராவை சந்தித்தேன்" என்றவள் தான் பார்த்ததையும் அவனோடு பேசியது மொத்தத்தையும் கூறி முடிக்க, ஒருகணம் அதிர்ந்தவள் பின் யோசனையோடு தரையை வெறித்தாள்.
"வீராவை பற்றி நான் நன்கு அறிவேன், அவன் நினைத்ததை முடிக்காமல் விட மாட்டான். அதுமட்டும் இல்லாமல், இதிலிருக்கும் ஆபத்தையும் அவன் அறியாமல் இல்லை. ஆனால், எனக்கு பயமாக இருக்கிறது யாழ், அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நான் என்ன செய்வேன்?"
என்று தன்னவனின் உயிரை நினைத்து அவள் பதற்றமாக சொல்ல, ஆனால் யாழ்மொழியின் சிந்தனையோ லியோவிற்கு ஏதாவது நேர்ந்திடுமோ என்ற யோசனையைதான் தத்தெடுத்திருந்தது.
அன்று முழுக்க அவளால் எதிலும் முழுதாக ஈடுபட முடியவில்லை. வீராவை பற்றி இந்திரா சொல்லி அறிந்துக்கொண்டவளுக்கு லியோவை இழந்து விடுவோமோ என்ற பயம் மனதிலிருக்கும் காதலை உணர வைக்க ஆரம்பித்தது.
"அவன் நம் நாட்டை கைப்பற்றி இருக்கும் அதிகாரி, அவனுக்கு என்ன நேர்ந்தால் உனக்கென்ன?" என்று மூளை கேள்வி கேட்க, "இல்லை, அவருக்கு எதுவும் நேர நான் விட மாட்டேன், ஏனென்றால் நா.. நான்..." என்று துடித்த மனதிற்கு அந்த துடிப்பிற்கான காரணம் புரியத் தொடங்கியது.
அந்த நொடி யாழ்மொழி தன்னை நினைத்தே அதிர்ச்சியில் உறைந்துப் போய் விட, அதிர்ச்சி ஆச்சரியம் பயம் தன்னை நினைத்தே கோபம், காதல் என பல விதமான உணர்ச்சிகள் அவளை சூழந்துக்கொண்டன.
"யாழ், அப்படி என்ன யோசனை? வெளியில் சென்று வந்ததிலிருந்து உன் முகமே சரியில்லை. ஏதாவது பிரச்சனையா என்ன?" என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கியவள் தோழியின் தோளைப் பற்றி தன் பக்கம் திருப்ப, விழிகள் கலங்க நின்றிருந்தாள் அவள்.
"என்ன நேர்ந்தது யாழ், எதற்காக அழுகிறாய்? இப்போதே காரணத்தை சொல்ல போகிறாயா இல்லையா?" என்று ராதா காட்டமாகக் கேட்க, "எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ராதா, நான் தவறு செய்கிறேன் புரிகிறது ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறதே!" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை வலி.
"என்ன! என்ன சொல்கிறாய் நீ? எனக்கு எதுவுமே புரியவில்லை" என்று மற்றவள் பதற்றமாகக் கேட்க, "அது... நான்... நான் காதலிக்கிறேன் ராதா" என்று திக்கித்திணறி அவள் சொல்லி முடிக்க, அதிர்ந்து விழித்த ராதா பின் உடனே முகபாவனையை மாற்றிக்கொண்டாள்.
"ஓஹோ.. இதுதான் சங்கதியா! இதற்கு ஏன் இத்தனை தயக்கம் யாழ்மொழி? நீ காதலிப்பது எனக்குமே ஆச்சரியம்தான். ஆனால் நமக்கென்று எந்த உறவு இருக்கிறது? நாம் தான் நம் வாழ்க்கையை தேடிப் போக வேண்டும். இருந்தாலும் கள்ளி, என்னிடமே மறைத்து விட்டாயே! சரி சொல், யார் அது? நம் அரண்மனையிலா இல்லை.. வெளியிலா?" என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டி குறும்பாகக் கேட்டாள் அவள்.
"அது ராதா.. அரண்மனையில்தான்" என்று யாழ்மொழி பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொள்ள, "அட நிஜமாகவா! யார் அது, என் கண்களுக்கு இந்த காதல் ஜோடிகள் சிக்கவே இல்லையே. சீக்கிரம் யாரென்று சொல்" என்ற மற்றவளுக்கு அத்தனை ஆர்வம்.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள், "ஆம் அரண்மனையில்தான், அதுவும் ஆங்கிலேய அரண்மனையில். நம்ம ஊருக்கு வந்திருக்கும் உயரதிகாரியை தான் ராதா" என்று சொல்லி முடிக்க, இதயம் துடிப்பது ஒரு நொடி நின்றுப் போளவளாக உறைந்துப் போய் நின்றிருந்தாள் அவளின் தோழி.
"யாழ்..." என்றவளின் குரல் அதிர்ச்சி குறையாமல் ஒலிக்க, தன்னை சுதாகரித்த மறுகணம் கொஞ்சமும் யோசிக்காமல் தோழியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் ராதா.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காதவளாய் யாழ்மொழி கன்னத்தைப் பொத்திக்கொண்டு திகைத்துப் பார்க்க, "எத்தனை பெரிய தவறை செய்திருக்கிறாய் என்று புரிகிறதா யாழ்? நம்மை அடிமைப்படுத்திருக்கும் ஒரு ஆங்கிலேயனை காதலிக்கிறாய். இது மட்டும் அரசருக்கு தெரிந்தால் உன்னை கொல்வது உறுதியோ இல்லையோ ஊர் மக்கள் உன்னை கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள். ச்சீ... எனக்கே இதை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது" என்று அவளோ அருவருக்கும் குரலில் பேசினாள்.
யாழ்மொழி இந்த எதிர்வினையை கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. இதயம் அவளின் வார்த்தைகளில் சுக்கு நூறாக உடைய, "ராதா, என்.. என்னை மன்னித்து விடு! எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை மீறி காதலித்து விட்டேன். உண்மையை சொல்லப்போனால் நான் காதலிப்பது அவருக்கே தெரியாது. இன்று சந்தைக்கு சென்ற போது புரட்சியாளர்கள் அவரை கொல்லப் போவதாக திட்டம் தீட்டியதை நான் அறிந்தேன், அவருக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம என் காதலை எனக்கு உணர்த்திவிட்டது. எனக்.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை"
என்று தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டே அவள் தன் மனதிலுள்ளதை சொல்லி முடிக்க, அதேநேரம் ஆங்கிலேய அரண்மனை வளாகத்துக்குள் தனி ஆளாக நுழைந்தான் வீரா.
அவனுடைய கரத்தில் கூரிய நீண்ட வாள் இருக்க, அந்த கும்மிருட்டில் மெல்ல பதுங்கிச் சென்று அரண்மனையை சுற்றி காவலுக்கு நின்றிருந்த அதிகாரிகளின் வாயைப் பொத்தி தாக்கினான் அவன்.
ஆனால் முணங்கல் சத்தமும் சிறு சலசலப்பு சத்தமும் தூரமாக நின்றிருந்த அதிகாரிகளின் காதில் விழ, "ஹேய் ஆர் யூ, சம்வன் இஸ் ஹியர்" என்று கத்திக்கொண்டே அவர்கள் வர, உடனே அரண்மனையை சுற்றி ஒரு இடத்தில் பதுங்கிக்கொண்டான் வீரா.
"இங்கேயே இருந்தா கண்டிப்பா மாட்டிப்போம், செத்தாலும் பரவாயில்ல ஆனா சாகுறதுக்கு முன்னாடி அந்த அதிகாரிய கொன்னதா தான் நான் இருக்கணும்" என்று தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டவன் வேகமாக யார் கண்ணிலும் சிக்காமல் திறந்திருந்த பெரிய ஜன்னல் வழியே அரண்மனைக்குள் நுழைந்துக்கொண்டான்.
அவன் நுழைந்த அறையிலோ சிறு விளக்கு மட்டும் எரிய, சுற்றி பல புத்தகங்களும் கோப்புகளும் அடுக்கப்பட்டிருந்தன.
"இதென்ன அறைன்னு கூட தெரியலயே! இம்புட்டு பெருசா இருக்கு" என்று யோசித்துக்கொண்டே சுற்றி முற்றி பார்த்தவனின் விழிகளில் அப்போதுதான் மேசையில் உறங்கிக்கொண்டிருந்த லியொ தென்பட்டான்.
அவனைப் பார்த்ததும் வீராவின் விழிகள் மின்ன, "மீன் தானா வந்து வலையில சிக்கிருச்சு" என்றவாறு வாளின் பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல அவனை நோக்கி ஒவ்வொரு அடியாக முன் வைத்து சென்றான்.
அவனை நோக்கி இவன் வாளை ஓங்கும் அதேநேரம் மறுகணம் அதிகாரிகள் தரையில் கிடப்பதைப் பார்த்து மற்ற அதிகாரிகளோ எச்சரிக்கை செய்யவென உடனே எச்சரிக்கை ஒலியை எழுப்பினர்.
இரண்டு காட்சிகளுக்கான நேரமும் ஒரே சமயத்தில் இடம்பெற, பட்டென்று விழிகளைத் திறந்த லியோ தன்னை நோக்கி வரும் வாளை பார்த்துவிட்டு மின்னல் வேகத்தில் எழுந்து மேசை மீதிருந்த துப்பாக்கியை தட்டியெடுத்து வீராவை குறி வைத்து சுட்டான்.
அந்த புல்லட் வீராவின் தோளிலேயே பாய்ந்திருக்க, ஆக்ரோஷமாக அவனை நோக்கி வந்தவன், "ஹவ் டேர் யூ ட்ரை டூ கில் மீ! இனிமே நீ வாழ்க்கை பூரா எங்க சிறையிலதான்" என்று அடித்தொண்டையிலிருந்து கத்திக்கொண்டு அவனை அடிக்க, பற்களைக் கடித்து வலியை பொறுத்தவாறு கால்களை ஊன்றி நின்றுக்கொண்டான் வீரா.
ஆனால், அதுவம் சில நிமிடங்கள்தான். விழிகள் சிவக்க அவனைப் பார்த்த வீராவுக்கு வலியின் உச்சகட்டத்தில் விழிகள் சொருகி மயக்கம் வர அப்படியே தொப்பென்று தரையில் விழுந்தான்.
மொத்த அதிகாரிகளும் லியோவின் அறைக்குள் பதற்றமாக நுழைய, "இதுதான் நீங்க பாதுகாக்குற லட்சணமா, ஜஸ்ட் ஒரு சாதாரண அடிமை அரண்மனைக்குள்ள நுழைஞ்சிருக்கான். அது கூட தெரியாம நீங்க எல்லாம் என்ன வேலை பார்க்குறீங்க" என்று கோபத்தில் தரையை நோக்கி புல்லட்களை இறக்கினான் லியோ.
மொத்தப் பேரும் எச்சிலை விழுங்கியவாறு நிற்க, அடுத்து அவன் பார்த்த பார்வையில் அதற்கு மேல் அங்கு நிற்பார்களா அவர்கள்!
உடனே வீராவை தூக்கிக்கொண்டு அதிகாரிகள் சென்றுவிட, "டேம்ன் இட்!" என்று கோப மூச்சுகளை விட்டவாறு நின்றிருந்தான் அவன்.
'இரவு முழுக்க கொஞ்சமும் உறக்கமில்லை. ஒருவேளை வீரா சென்றிருப்பானா, அவருக்கு ஏதாவது... அய்யோ கடவுளே! நினைக்கும் போதே மனம் பதறுகிறதே' என்று தனக்குள் புலம்பியவாறு இருந்தவளுக்கு இப்போதே சந்தைக்கு செல்ல வேண்டுமென்று மனம் துடித்தது.
இப்போதே செல்லலாம் என வெளியில் செல்ல தயாராக சென்றவளின் முன் வந்து நின்ற தோழி ஒருத்தி, "இளவரசி இந்திரசேனாவை அமைச்சரவைக்கு அழைப்பதாக தகவல் சொல்ல வேண்டும். எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது யாழ், முடிந்தால் நீ சென்று அவர்களிடம் தகவலை சொல்வாயா?" என்று கெஞ்சலாகக் கேட்க, அவளால் மறுக்க முடியவில்லை.
"ம்ம்.." என்றுவிட்டு உடனே இந்திராவை அரண்மனை முழுக்க தேடி அலைந்தவள், கடைசியாக தோட்டத்து பக்கம் செல்ல, அங்கிருக்கும் பெரிய ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அவள்.
"இளவரசி..." என்ற யாழ்மொழியின் பதற்றமான குரலில் விருட்டென நிமிர்ந்துப் பார்த்தவள், அவளை கேள்வியாக நோக்க, "என்ன யோசனை இளவரசி?" என்று எதற்கென்று அறிந்தே கேட்டாள் யாழ்மொழி.
"எனக்கு வேறு யாரைப் பற்றி யோசனை இருக்கப் போகிறது யாழ், வீராவைப் பற்றிய கவலைதான். அரண்மனையிலிருந்து வெளியில் செல்லவும் முடியவில்லை, நான் காதலிப்பதைப் பற்றி தெரிந்து கொண்டதலிருந்து தந்தையின் கவனம் முழுக்க என் மீதுதான்" என்று தழுதழுத்த குரலில் அவள் சொல்ல, அவளின் நிலையைப் பற்றி யாழ் அறியாமலில்லை.
"இளவரசி, தாங்கள் இப்படி வீராவைப் பற்றி யோசித்துக்கொண்டு இருப்பதில் எந்த பயனுமில்லை. சந்தைக்கு சென்றால் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்து விடப் போகிறது" என்று யாழ் சொல்ல, தோழியை ஆர்வமாகப் பார்த்தாள் இந்திரா.
"எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்வாயா? வீரா பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா என்று மட்டும் எனக்கு தெரிந்தால் போதும். முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே" என்று அவள் விழிகளை சுருக்கிக் கேட்க, யாழ்மொழிக்கும் உள்ளுக்குள் தன்னவன் பற்றிய அதே ஏக்கம் அல்லவா!
"தாங்கள் கேட்டு முடியாது என்று மறுக்கவா போகிறேன் இளவரசி" என்று வரவழைக்கப்பட்ட புன்னகையோடு சொன்னவள், "தங்களை அமைச்சரவைக்கு அழைப்பதாக தகவல் வந்திருக்கிறது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
இந்திராவோ கேள்வியாக புருவத்தை நெறித்தவள், தன் தந்தையை தேடிச் செல்ல, யாழ்மொழியோ அரண்மனையிலிருந்து வெளியேறி சந்தைக்குச் சென்றாள்.
இவள் சந்தைக்குள் நுழையும் போதே அங்கு பரபரப்பாக இருக்க, சில மக்கள் கூட்டத்திற்கு நடுவே தரையில் அமர்ந்து நெஞ்சில் அடித்து அழுதுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
"போச்சு போச்சு... எல்லா போச்சு... என் ஒரே புள்ளய பறி கொடுத்துட்டேனே, அவன் உயிரோட இருக்கானா செத்துட்டானான்னு கூட தெரியலயே! அப்போவே இதெல்லாம் வேணாம்னு தலையார அடிச்சுக்கிட்டேனே, என் பேச்ச மதிக்காம இவனுங்களுக்காக போய் அவன் அனுபவிக்கிறான். ஆனா அவங்கள எதிர்த்து என் புள்ளய கூட்டிட்டு வர ஒருத்தனும் முன் வரல"
என்ற அவரின் கதறலை புரியாமல் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் வீராவின் தோழன் பாலா கண்ணில் சிக்க, அவன் முன்னே சென்று நின்றாள்.
அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவனோ யாழ்மொழியை புரியாமல் பார்க்க, "வீராவுக்கு என்ன நேர்ந்தது?" என்று தீர்க்கமான பார்வையோடுக் கேட்டாள் அவள்.
"அது... நேத்து ராத்திரி அந்த உயரதிகாரிய கொல்ல போறேன்னு போனவன் இன்னும் வீடு திரும்பல, அரண்மனைக்கு பக்கத்துல வேல பாக்குற நம்ம ஆளுங்க வீராவ சுட்டுக் கொன்னதா சொல்றாங்க. அந்த வெள்ளகாரனுங்கள எதிர்த்து நிக்கவும் பயமா இருக்கு. இது நடக்குதுன்னு ஒன்னுமே புரியல"
என்று அவன் நண்பனை இழந்த வலியோடு சொல்லிக்கொண்டே போக, யாழ்மொழிக்கு லியோவுக்கு எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதியை விட இப்போது வீராவைப் பற்றிய செய்தி இதயத்தை சுக்கு நூறாக உடைத்தது.
இதயம் படுவேகமாகத் துடிக்க, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு குடிசைக்கு அருகே சென்று நின்றவளுக்கு விழிகளிலிருந்து கண்ணீர் விடாமல் ஓடியது.
"இதை என்னாலயே தாங்க முடியவில்லை என்றால் இளவரசி எப்படி தாங்கிக் கொள்வார்கள்?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டவள், ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் அரண்மனையை நோக்கிச் சென்றாள்.
அதேநேரம் தன் தந்தையை சந்திக்கச் சென்ற இந்திராவுக்கு தந்தையின் பாரா முகம் மனதைப் பிசைந்தது.
"தந்தையே, இதுவரை அமைச்சரவைக்கு என்னை அழைத்ததே கிடையாது. இன்று என்ன புதிதாக என்னை..." என்று அவள் கேள்வியோடு இழுக்க, "என் பதவியிலிருந்து நான் விலக முடிவு செய்திருக்கிறேன். எனக்குப் பிறகு இந்த அரசாட்சி உனக்கும் உன்னை மணக்கப் போகும் ஆடவனுக்கும் உரியது. இப்போது புரிந்திருக்குமே!" என்றார் வேந்தன் அழுத்தமாக.
அதைக் கேட்ட இந்திராவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
"நா.. நான் காதலித்தது ஒரு குற்றமா என்ன! நான் மணக்கப் போகும் ஆடவன் என் விருப்பமாக இருக்கக் கூடாதா?" என்று அவள் ஏக்கத்தோடுக் கேட்க, "தாராளமாக இருக்கலாம். ஆனால் அவனும் ஒரு அரச பரம்பரையை சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அவ்வளவே!" என்ற வேந்தனின் வார்த்தைகளில் அவளின் முகமோ இருண்டுப் போனது.
அவளின் முகப்பாவனையை வைத்தே அவளின் மனதை அறிந்துக்கொண்டவருக்கு இதழ்கள் ஏளனமாக புன்னகைக்க, "உன் முகமே உன் காதலனைப் பற்றி சொல்லாமல் சொல்கிறது. யார் அவன்?" என்று கேட்க, அவளோ உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு தரையைப் பார்த்திருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை.
"யாரெனத் தெரிந்தால் நான் கொன்றுவிடுவேன் என்ற பயமோ! இதற்குமேல் ஒரு வார்த்தைப் பேசாதே, ஆட்சியை பொறுப்பெடுக்க தயாராக இரு! இந்த நாட்டின் அரசனாக அவன் உன்னை மணக்கட்டும்" என்று அழுத்தமாக சொன்னவர் அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் தன் தந்தையை விழிகளில் நீரோடு பார்த்தவள் கனத்த மனதோடு தனது அறைக்குத் திரும்பினாள்.
இவள் அறைக்குள் நுழையும் போதே அங்கு இவளுக்காக காத்திருப்பது போல் நின்றிருந்தாள் யாழ்மொழி.
"யாழ், அதற்குள் வந்துவிட்டாயா?" என்று ஆச்சரியக் குரலில் கேட்டவள், வேகமாக தோழியின் அருகே நெருங்கி "சந்தைக்கு சென்றாய் அல்லவா! வீராவை சந்தித்தாயா, அவன் நலம்தானே? எந்த பிரச்சனையும் இல்லையே, சொல்!" என்று பதற்றம் பயம் கலந்த குரலில் கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டாள் மற்றவள்.
"நான் பயத்தில் இறந்தே விடுவேன் போல, எதற்காக அமைதியாக இருக்கிறாய்? சீக்கிரம் கூறு யாழ்" என்ற இந்திராவின் குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிய, விழிகளை அழுந்து மூடித் திறந்தவள், "இளவரசி..." என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
அவளோ தோழியின் பதிலை ஆர்வமாகப் பார்த்திருக்க, "நேற்றிரவு வீரா..." என்று ஆரம்பித்தவள் நடந்ததையும் கேள்விப்பட்டதையும் சொல்லி முடிக்க, ஒருகணம் தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் கூட வந்தது இந்திராவுக்கு.
விழிகளிலிருந்து கடகடவென கண்ணீர் அருவியாய் கொட்ட, உறைந்துப் போய் நின்றிருந்தவளுக்கு மூச்சு விடக் கூட சிரமமாகத்தான் இருந்தது.
"வீ.. வீரா! இல்லை அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பே இல்லை. நான் நம்ப மாட்டேன். அவன் என்னவன், அவனில்லாத வாழ்க்கையை நான் எப்படி? அய்யோ கடவுளே... என் வீராவை என்னிடமே கொடுத்துவிடு!" என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் விழுந்தவள் தலையில் அடித்துக்கொண்டு கதறியழ, யாழ்மொழியும் அழுத வண்ணமாக இந்திராவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், "நான் நம்ப மாட்டேன் யாழ், என் வீராவுக்கு எதுவும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை, என் உள்மனம் அவன் இல்லை என்பதையே ஏற்க மறுக்கிறது. நிச்சயமாக ஆங்கிலேய சிறைச்சாலையில்தான் அவன் உயிருடன் இருக்க வேண்டும். யாரிடம் சென்று எப்படி உதவி கேட்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்வேன், கடவுளே..." என்று தலையைத் தாங்கிக்கொண்டு பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருக்க, அதேநேரம் "ஆஆ..." என்று வலியில் கதறிக்கொண்டிருந்தான் வீரா.
இந்திரா நினைத்தது போல் உயிரோடுதான் இருந்தான் அவன், ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஆங்கிலேய கொடுமையால் வலியை அனுபவித்துக்கொண்டு.
அந்த ஆங்கிலேய சிறைச்சாலையில் தலை கீழாக தொங்கவிடப்பட்டு அவன் கிடக்க, வில்லியமோ கையிலிருந்த சவுக்கால் அவனை அடித்து துன்புறுத்திக்கொண்டிருந்தான்.
இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தவாறு லியோ இருக்கையில் கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருக்க, ஏற்கனவே தோளில் புல்லட் இறங்கிய வலியோடு சேர்த்து சவுக்கு அடியும் வீராவின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுக்கொண்டிருந்தது.
"ஹவ் டேர் யூ! என்னையே கொல்ல என் இடத்துக்கு வந்திருக்கான். இவனுக்கு கொடுக்குற வலியில வேற எந்த அடிமையும் இங்க வரக் கூடாது" என்று லியோ உச்சகட்ட கோபத்தில் பற்களைக் கடிக்க, "என்னை அடிச்சு கொன்னாலும் பரவாயில்ல, உங்களுக்கு பயப்படுவேன்னு நினைச்சீங்களாடா? ஆங்கிலேயர் ஒழிக! ஆங்கிலேயர் ஒழிக!" என்று வலியை பொறுத்துக்கொண்டு அந்த நிலையிலும் கத்தினான் வீரா.
வில்லியமோ அவன் கத்த கத்த அதற்கு மேல் சவுக்கால் மேலும் அடித்து துன்புறுத்த, அவனின் விழிகளில் இல்லாத பயத்தை ஆச்சரியத்தோடு பார்த்தான் லியோ.
"வில்லியம் ஸ்டாப்!" என்று கத்தியவன் வீராவை கூர்மையாக பார்த்தபடி அவனருகே சென்று நிற்க, வலியால் அரை மயக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தான் அவன்.
"இன்ட்ரஸ்ட்டிங்! உன் தைரியத்த பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. உனக்கு ஒரு ஆஃபர்.. ஐ மீன் வாய்ப்பு கொடுக்குறேன். என்னை கொல்ல வந்தது தப்புதான்னு ஒத்துக்கிட்டு ஒரு மன்னிப்பு கேளு, விட்டுடுறேன்" என்று லியோ சொல்ல, "சார்..." என்று கத்தினான் வில்லியம்.
"ஐ நோ வாட் ஐ அம் டூயிங்" என்று அழுத்தமாக சொன்னவன், மீண்டும் வீராவின் புறம் திரும்பி "மன்னிப்பு கேளு!" என்று சொல்ல, அவனோ ஏளனமாகப் புன்னகைத்தான்.
"மன்னிப்பா.. உங்ககிட்ட நானா! ஹாஹாஹா... அதுக்கு என்னை அடிச்சு கொல்லுங்க. சிரிச்சுட்டே செத்து போவேன்" என்று வீரா சொன்ன விதத்தில் லியோவுக்கு கோபம் தலைக்கேறினாலும் ஒருபக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
"எல்லாரும் பேளாஸுக்கு போங்க, இவனுக்கு சாப்பாடு தண்ணீன்னு எதுவுமே கொடுக்க கூடாது" என்று அவனை கட்டி தொங்க விட்டிருந்த கயிற்றை அறுத்துவிட்டு லியோ அங்கிருந்து சென்றிருக்க, தரையில் விழுந்தவன் மீண்டும் சுயநினைவை இழந்து அப்படியே விழிகளை மூடிக்கொண்டான்.
அன்றிரவு,
அறை ஜன்னல் வழியே நிலவை வலி நிறைந்த பார்வையோடு வெறித்திருந்த யாழ்மொழிக்கு இந்திராவின் கதறல்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துக்கொண்டிருந்தது.
'இளவரசி சொன்னது போல் வீரா உயிரோடு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை எப்படி தெரிந்துக்கொள்வது? எப்படியாவது இளவரசிக்காக வீராவை காப்பாற்றியாக வேண்டும்'
என்று தீவிர யோசனையில் இருந்தவளுக்கு திடீரென லியோவின் முகம்தான் மனக்கண் முன் விம்பமாக தோன்றி மறைந்தது.
'அதிகாரியா...' என்று தனக்குள் அதிர்ச்சியாக கேட்டுக்கொண்டவளுக்கு லியோவை தவிர வேறு வழியே இல்லை என்று மட்டும் தோன்றியது.
அடுத்தநாள் அவனை சந்திப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டே உறக்கத்தை தழுவியவள் காலையில் வெகு விரைவாகவே எழுந்திருக்க, ராதாவோ தோழியை கண்டும் காணாதது போல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
அவளின் பாரா முகத்தை முகத்தை பார்த்த யாழ்மொழிக்கு மனம் வலியில் துடித்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக தன் வேலைகளை முடித்துவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேறினாள்.
அதிகமாக லியோவை சந்திக்கும் சந்தைக்கு பக்கத்திலுள்ள வயலுக்கு சென்றவள் அந்த காலை வெயிலில் அவனுக்காகக் காத்திருந்து நின்றுக்கொண்டிருக்க, அவனோ வந்தபாடில்லை.
போவோரும் வருவோரும் அவளையே ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு செல்ல, கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக நின்றுக்கொண்டிருந்தவளுக்கு இதற்குமேல் அவன் வருவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
'ஒருவேளை இன்று அவர் வர மாட்டாரோ, இங்கேயே நின்று நேரத்தை வீணாக்கியதுதான் மிச்சம், நேரம் கடக்கக் கடக்க எங்கு வீராவுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் வேறு என்னை வாட்டி எடுக்கிறதே!'
என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் தளர்ந்த நடையாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல, பின்னால் கார் ஹார்ன் சத்தம் விடாமல் கேட்டது.
வேகமாக திரும்பிப் பார்த்தவள் அவளை மோதுவது போல் வந்து நின்ற காரைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக சந்தோஷத்தில் புன்னகைக்க, கார் ஜன்னல் வழியே அவளை எட்டிப் பார்த்த லியோவிற்கு திகைப்பாக இருந்தது.
"எப்போவும் பயப்படுவ, இன்னைக்கு என்ன அதிசயமா சிரிக்குற" என்று கேட்டுக்கொண்டே அவன் காரிலிருந்து இறங்க, "தங்களை காணத்தான் ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருந்தேன்" என்றவளை பார்த்தவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
"எனக்காகவா! வாட் அ சர்ப்ரைஸ் யாழ், சரி என்ன விஷயம்?" என்று அவன் காரில் ஒற்றைக் காலை மடக்கியவாறுக் கேட்க, "வேறு எங்கேயாவது சென்று பேசலாமா அதிகாரி" என சுற்றி முற்றி சங்கடத்தோடு பார்த்தவாறு சொன்னாள் அவள்.
அவனும் அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் அவளுக்காக கார் கதவைத் திறக்க, கைகளைப் பிசைந்தவாறு அதிலேறி யாழ்மொழி அமர்ந்ததும் அந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் காரை செலுத்தினான் லியோ.
யாழ்மொழி எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்க, அவளின் பாவனைகளை அவன் கவனிக்காமலில்லை.
ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக காரை செலுத்தியவன் அந்த ஆற்றுக்கு பக்கத்தில் காரை கொண்டு சென்று நிறுத்த, காரிலிருந்து இறங்கி படிகளில் சென்று அவள் அமர்ந்ததும் காரில் சாய்ந்து நின்றுக்கொண்டான் லியோ.
சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
ஆற்றில் நீராடும் அன்னங்களை ரசித்துப் பார்த்தவாறு இருந்த யாழ்மொழியின் மனதில் ஏனென்று தெரியாத ஒரு ஏக்கம்.
அதைப் பார்த்தவாறு, "இந்த தேச மக்களுக்கு சுதந்திரம் என்பது கனவாகவே போய்விடுமோ தெரியவில்லை" என்று வலி நிறைந்த வார்த்தைளை அவள் கொட்ட, "கனவ நினைக்கலாம், முடிஞ்சா முயற்சி பண்ணுங்க" என்றான் லியோ ஏளனமாக.
அவனைத் திரும்பி விரக்திப் புன்னகையோடு பார்த்தவள், "அதிகாரமும் பலமும் தங்களிடம் இருக்கும் தைரியமோ! எத்தனை காலத்திற்கு என்று பார்க்கலாம், போகும் போது எதைதான் கொண்டு செல்ல போகிறோம்" என்று சிறு சிரிப்போடு சொல்ல, "இருக்குறப்போ ராஜ வாழ்க்கை வாழுறோமே, தட் இஸ் ஐ வோன்ட்" என்று அழுத்தமாக வந்தன அவனின் வார்த்தைகள்.
"பிறரின் வலி தங்களுக்கு இன்பமா! என்ன ஒரு மிருகத்தனம்" என்று அவள் கோபத்தோடு சொல்ல, "ஓ காட்! இப்போ எல்லாம் என்மேல இருக்குற பயமே போச்சு உனக்கு. முன்னாடி எல்லாம் திணறுவ, இப்போ எங்கள எதிர்த்தே கேள்வி கேக்குற. என் முன்னாடி வார்த்தைகளால புரட்சி பண்ற ஒரு பொண்ண இப்போதான் பார்க்குறேன்" என்றவனோ பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு அவள் பக்கத்தில் வந்து நின்றுக்கொண்டான்.
அவனை அண்ணாந்துப் பார்த்தவள், "பக்கத்தில் அமரலாமே" என்று கேட்க, சிறிதுநேரம் யோசித்தவன் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, "நான் யாருன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
"இதில் என்ன இருக்கிறது? ஓஹோ.. இப்போது புரிகிறது. என்னை போன்ற பணிப்பெண்ணின் பக்கத்தில் உயரதிகாரி அமருவது தங்களுக்கு சிறு அவமானம்தான்" என்று யாழ்மொழி சொல்ல, "ரொம்பதான் தைரியம்! உன் காதலன் உன்னை என் கூட பார்த்தா தப்பா நினைக்க மாட்டானா?" என்று விழிகளை சுருக்கிக் கேட்டான் லியோ.
அதில் மெல்லிய புன்னகை சிந்தியவள், "தங்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன் அதிகாரி. நான் இதுவரை எந்த ஆணையும் காதலித்ததில்லை. அன்று தங்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவ்வாறு கூறிவிட்டேன்" என்று சொல்லி முடிக்க, "வாட்?" என்று அவளை விழி விரித்துப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் தன்னை மீறிய ஒரு இதம் பரவிய உணர்வு.
"நிஜமாதான் சொல்றியா" என்று லியோ மீண்டும் கேட்க, அவளோ அதே சிரிப்போடு தலையாட்டி வைக்க, அவனையும் மீறி அவனின் இறுகிய இதழ்களில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது.
ஆனால் சட்டென யாழ்மொழியின் முகம் இறுக, கைகளைப் பிசைந்தவாறு அவனெதிரே எழுந்து நின்றாள்.
"நான் காதலிக்கவில்லை, ஆனால் இளவரசி இந்திரசேனா ஒருவனை காதலிக்கிறார்கள். அவனோ அவர்களின் ஆட்சி அந்தஸ்த்திற்கு ஈடே இல்லாத சந்தையில் வேலைப் பார்க்கும் சாதாரண ஒருவன்" என்று திக்கித்திணறி சொல்லி முடிக்க, "ப்ரின்சஸ் ஒரு சாதரண ஒருத்தனா காதலிக்கிறாங்களா! இட்ஸ் இன்ட்ரஸ்ட்டிங்" என்று நாடியை நீவி விட்டவாறு சொன்னான் லியோ.
"அவன்... அவன் வேறு யாருமல்ல. தாங்கள் கைது செய்து வைத்திருக்கும் வீரா" என்று யாழ் சொல்லி முடித்த மறுகணம், அதிர்ந்துப் போய் அவளைப் பார்த்தவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.
அவன் பற்களை நரநரவென்று கடிக்கும் சத்தம் அவளுடைய காதிற்கே கேட்க, யாழ்மொழியின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.
"நா.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்..." என்று தடுமாற ஆரம்பித்தவளின் இரு தோள்களைப் பற்றி தன் அருகே இழுத்தவன், அவள் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து "இப்போ எல்லாமே புரியுது, கொஞ்சம் நல்லா பேசினதும் உனக்காக எல்லாமே பண்ணுவேன்னு நினைச்சிருக்க, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
பெண்ணவளுக்கோ அவனின் கோப விழிகளை இத்தனை அருகே பார்த்து மூச்சு விடவே பயமாக இருந்தது.
"நா.. அது... அப்படி எல்லாம் இல்லை. நீங்கள்..." என்றவளின் வார்த்தைகள் தந்தியடிக்க, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு அவளை இழுத்துக்கொண்டு சென்று பின்சீட்டின் கார் கதவைத் திறந்து தள்ளிவிட்டவன் தானும் உள்ளே ஏறிக்கொண்டான்.
அவளோ பயந்தபடி கார் கதவை திறக்க முயற்சிக்க, அவளை இருக்கையோடு சாற்றியவன், "என்னை கொல்ல வந்தவன அவ்வளவு சீக்கிரம் விட்டுருவேன்னு நினைச்சியா, அவன கொன்னு இங்க நாய தூக்கி போடுற மாதிரி தூக்கி போட்டாதான் இந்த புவர் இந்தியன் பீபளுக்கு எங்க மேல பயம் இருக்கும்" என்றான் பற்களைக் கடித்தபடி.
அதை புறங்கையால் துடைத்தவள், "பிறக்கும் போதே தாயை இழந்துவிட்டேன், பத்து வயதில் அமைச்சராக அரசரிடம் வேலைப் பார்த்த என் தந்தையை எதிரி நாட்டு மன்னர் படுகொலை செய்ய அவரையும் அப்போதே இழந்துவிட்டேன். சிறுவயதிலிருந்து அரண்மனையில்தான். பாசத்திற்காக ஏங்கிய எனக்கு எல்லாமுமாக மாறிப் போனது இளவரசி இந்திரசேனா.
தங்களின் தகுதியையும் மறந்து எனக்கு பாசத்தை கொட்டிய இளவரசியின் கண்ணீரை என்னால் தாங்க முடியவில்லை. இதுவரை அவர்களுக்காக நான் எதையும் செய்ததில்லை. அவர்களின் காதலையாவது மீட்டிக்கொடுக்க வழி இருக்காதா என ஏங்குகிறேன் அதிகாரி" என்று திக்கித்திணறி அழுத வண்ணமாய் பேசி முடிக்க, அவளையே உறைந்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.
யாழ்மொழியோ அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டு, "தயவு செய்து அவன் செய்த தவறை மன்னித்து விடுங்கள், இல்லை அவனை கொலை செய்யதான் போகிறீர்கள் என்றால், இளவரசிக்காக அந்த தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். வீராவின் தவறுக்காக என்னை கொலை செய்யுங்கள்" என்று கதறியழுத வண்ணமாக கெஞ்ச, இதை ஆடவனோ சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
'பாசம் காட்டிய இளவரசியின் காதலுக்காக இவள் தன் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து விட்டாளா!' என்ற கேள்வி அவனை அதிர வைக்க, ஸ்தம்பித்துப் போய் வார்த்தைகள் இன்றி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.
அதுவும் சில கணங்கள்தான்.
உடனே முகபாவனையை மாற்றியவன் இறுகிய முகமாக, "கெட் டவுன், கார்லயிருந்து இறங்கு" என்று அடித்தொண்டையிலிருந்து கத்த, அவளுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை.
அவனை அதிர்ந்துப் போய் அவள் பார்த்துக்கொண்டிருக்க, "இறங்குன்னு சொன்னேன்" என்று மீண்டும் கத்தியவன் கார் கதவைத் திறந்து அவளை காரிலிருந்து வெளியே தள்ளிவிட, தரையில் விழப் போய் கால்களை ஊன்றி நின்றுக்கொண்டாள் யாழ்மொழி.
அவனோ அதன் பிறகு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
முன்சீட்டில் வந்தமர்ந்தவன் அவளை விழிகள் சிவக்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, புழுதி பறக்க மின்னல் வேகத்தில் காரை செலுத்த, போகும் அவனை மிரண்டுப் போய் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
இருந்த ஒரு வழியும் கை விட்டு போன உணர்வு.. ஏமாந்த நிலையில் கலங்கிய விழிகளை அழுந்தத் துடைத்தவள் தளர்ந்த நடையாக அரண்மனையை நோக்கிச் செல்ல, இங்கு லியோவோ மொத்த வேகத்தோடு காரை செலுத்திச் சென்று ஆங்கில சிறைச்சாலையின் முன் நிறுத்தினான்.
"சார்..." என்று வாசலிலிருந்த சில அதிகாரிகள் அவனைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, யாரையும் கண்டுகொள்ளாமல் வேக நடையிட்டு உள்ளே சென்றவன் வீராவை அடைத்து வைத்திருந்த சிறையை நெருங்க, அங்கு அவனின் கதறல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
வீராவின் மேலிருந்த தன் மொத்த கோபத்தையும் பழி தீர்த்துக்கொள்வதற்காக வில்லியம் அவனை அடித்து துன்புறுத்த, வலியில் கதறித் துடித்தான் வீரா.
ஏற்கனவே உணவும் நீரும் இல்லாமல் சோர்ந்துப் போயிருந்த அவனுக்கு வலியில் கத்துவதற்கு கூட உடலில் தெம்பில்லை.
"வில்லியம்..." என்ற லியோவின் கர்ஜனையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவன் அவனின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் முகத்திலேயே அப்பட்டமாகத் தெரிந்தது.
"சார்... நீங்களா! நீங்க எப்படி.." என்று அவன் தடுமாற, "என்னோட பர்மிஷன் இல்லாம எந்த தைரியத்துல நீ இந்த மாதிரி பண்ணுவ?" என்று லியோ கத்த, உடனே கையிலிருந்த தடியை பதறியபடி தூக்கிப் போட்டான் வில்லியம்.
"சார், இவன் நம்மளோட கைதி, உங்ககிட்ட மன்னிப்பு கேக்க வைக்கணும்னு உங்களுக்காகதான் சார் நான்..." என்று அவன் ஏதோ சொல்ல வர, அடுத்து லியோ பார்த்த பார்வையில் அவனோ கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
அவனை தீப்பார்வைப் பார்த்தவன் வீராவின் அருகே சென்று அவனின் கைக்கால்களை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட, விழிகளைக் கூட திறக்க திராணியின்றி முயன்று நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.
"சார் என்ன பண்றீங்க, அவன் உங்கள கொல்ல வந்திருக்கான். நமக்கு எதிரா புரட்சி பண்றவன் அவன். வீ ஷுட் நொட் லெட் ஹிம் கோ" என்று உயரதிகாரியின் செயலில் உண்டான அதிர்ச்சியில் வில்லியம் பதற்றமாகக் கத்த, "திஸ் இஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வீராவை தூக்கி நிறுத்தினான் லியோ.
"ஆஃபீசர்ஸ்..." என்ற அவனின் கத்தலில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சில அதிகாரிகள் வேகமாக ஓடி வந்து வீராவை பிடித்துக்கொள்ள, "அவனோட இடத்துக்கு கொண்டு போய் விட்டுருங்க" என்று லியோ சொன்னதும் மற்றவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டது.
"நோ சார், நீங்க இப்படி பண்ண கூடாது. அவன கொல்லணும், இப்போவே கொல்ல..." என்று மீண்டும் வில்லியம் கோபமாகக் கத்த, அவனே எதிர்பார்க்காதது போல் அவனை நோக்கி தன் துப்பாக்கியை குறி வைத்தான் லியோ.
"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின... உன் தலை சிதறிடும்" என்று ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி நிதானமாக அவன் சொல்ல, அதிகாரிகளோ வீராவை தாங்கிப் பிடித்த வண்ணம் அழைத்துச் சென்றனர்.
பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவன் அதற்குமேல் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
அவனிடமிருந்து பார்வையைத் திருப்பி போகும் வீராவை வெறித்துப் பார்த்திருந்த லியோ திடீரென என்ன நினைத்தானோ, "வெயிட்!" என்று குரல் கொடுத்துவிட்டு அவர்களின் அருகே செல்ல, வீராவோ உடல் முழுக்க காயத்தோடு அவனை கேள்வியாகப் பார்த்தான்.
"எல்லாமே யாழ்மொழிக்காக தான். மைன்ட் இட்" என்று அமைதியான குரலில் அழுத்தமாக சொல்லி அந்த இடத்தை விட்டு அவன் நகர்ந்திருக்க, வீராவுக்கு எதுவுமே புரியவில்லை.
ஆனால் யாழ்மொழியின் பெயரை அவன் குறிப்பிட்டது மட்டும் அவன் மூளைக்கு உரைத்திருக்க, அதற்குமேல் யோசிக்க முடியாமல் முழு மயக்கத்திற்கு சென்று விழிகளை மூடிக்கொண்டான் அவன்.
அதிகாரிகளோ அவனைத் தாங்கிய வண்ணம் அழைத்துச் செல்ல, வீராவை உயிருடன் விட்டதை வில்லியமால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கோபத்தில் காலை தரையில் உதைத்துவிட்டு அவன் அங்கிருந்து வெளியேற, சிறைச்சாலையிலிருந்து ஆங்கிலேய அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் லியோ.
இவனைப் பார்த்ததும் ஜேம்ஸ் ஏதோ சொல்ல வர, அதைக் குறுக்கிட்டு "என்னோட பர்மிஷன் இல்லாம யாரும் ஆஃபீஸ் ரூமுக்கு வரக் கூடாது" என்று கட்டளைப் பிறப்பித்தவாறு ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினான் அவன்.
ஏனென்று தெரியாத கோபம் அவனுக்குள்.
"இல்ல.. நான் அவளுக்காக இது எதையும் பண்ணல. அவளுக்காக பண்ற அளவுக்கு ஷீ இஸ் நத்திங் டூ மீ" என்று வாய்விட்டே கத்தியவனுக்கு, 'பின்ன எதுக்காக உன்ன கொல்ல வந்தவன விட்ட?' என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இல்லை.
"அந்த யாழ்மொழி யாரு, அவ எனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. அப்படி இருக்குறப்போ அவளோட அழுகைய ஏன் என்னால தாங்கிக்க முடியல, அவளோட வலிய ஏன் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியல. அவ தண்டைய அனுபவிக்குறேன்னு சொன்னப்போ ஏன் எனக்குள்ள வலிச்சது? ஏன்... ஏன்.. ஏன்..."
என்று தனக்குத்தானே அதை கேட்டு பைத்தியம் பிடித்தவன் போல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்த லியோவுக்கு பதில் தெரிந்தும் அதை ஏற்க மறுத்தது மனம்.
ஒருகட்டத்திற்கு மேல் தலை வெடிப்பது போலிருக்க, அறையிலிருந்த மொத்த பொருட்களையும் தூக்கியெறிந்தவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு தனக்குள் ஒரு முடிவெடுத்துக்கொண்டான்.
"அந்த தப்ப மட்டும் பண்ணவே மாட்டேன்" என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வர, "சார்..." என்று அழைத்து கதவைத் தட்டினான் ஜேம்ஸ்.
வேகமாக சென்று லியோ கதவைத் திறக்க, கலைந்த முடி கசங்கிய சட்டை என நின்றிருந்தவனின் கோலத்தை அதிர்ச்சியாகப் பார்த்தவனுக்கு அடுத்து அறை இருந்த கோலத்தைப் பார்த்து பேரதிர்ச்சியாக இருந்தது.
"சார்..." அவனின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "சீக்கிரம் என்ன விஷயம்னு சொல்லிட்டு போ!" என்று முகத்திற்கு அடித்தாற் போல கத்தியவனின் கோபத்திற்கு பயந்தே கடிதத்தை அவனிடம் நீட்டினான் ஜேம்ஸ்.
கடிதத்தின் உறையிலிருந்த பெயரைப் பார்த்தவனின் முகத்தில் இத்தனை நேரமிருந்த கடுமை மறைந்து மென்மை குடிகொண்டது.
காரணம், சாட்சாத் அவனுடைய பழைய காதலியேதான்.
வேகமாக பிரித்த அந்த கடிதத்தை முழுதாக வாசித்தவனின் இதழ்கள் தன்னையும் அறியாமல் புன்னகையில் லேசாக விரிய, உடனே அவளுக்கான பதில் கடிதத்தை அத்தருணமே எழுதினான்.
ஊர் சந்தைக்கு அருகே கொண்டு சென்று காரில் இருந்து வீராவை அதிகாரிகள் இறக்கிவிட, தூரத்திலிருந்து அதைக் கண்டுகொண்ட பாலாவுக்கு அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷமாக இருந்தது.
"வீரா..." என்று கத்திக்கொண்டு அவன் தோழனை நோக்கி ஓட, அப்போதுதான் அவன் ஓடும் திசையைப் பார்த்த மற்றவர்களுக்கும் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
"ஏம்மா, உன் புள்ள சாகல, உயிரோடதான் வந்திருக்கான். சீக்கிரம் வா.." என்ற ஒருத்தியின் குரலில் பதறியடித்துக்கொண்டு வந்த வீராவின் தாய் வைதேகிக்கு மகனிருந்த தோற்றத்தைப் பார்த்ததும் பெற்ற மனம் பற்றியெறிந்தது
மொத்த ஊர் மக்களும் அவரை தேற்றி வீராவுக்கான உதவிகளை செய்ய, அன்றிரவு அரண்மனை தோட்டத்திலிருந்த குளத்திற்கு அருகே அமர்ந்து அழுது கரைந்தாள் யாழ்மொழி.
வீராவை எப்படி காப்பாற்றுவது என்றே தெரியவில்லை அவளுக்கு. எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி அவள் முகத்தை மூடி அழுது கரைய, இத்தனை நேரம் அறையிலிருந்த ராதா தோழியை காணாமல் அவளைத் தேடி வந்தாள்.
யாழ்மொழியின் காதலைப் பற்றி தெரிந்ததிலிருந்து அவளுடன் பேசுவதற்கு மனமே இல்லை அவளுக்கு.
தூரத்திலிருந்து சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அறைக்கே திரும்பிச் சென்றிருக்க, அழுது அழுது அந்த குளத்திற்கு அருகிலேயே உறங்கிப் போயிருந்தாள் யாழ்மொழி.
அடுத்தநாள் விடிந்ததும், "யாழ்... யாழ்மொழி எழுந்திரு!" என்ற இந்திரசேனாவின் குரல் காதில் விழ, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவளின் முன்னே புன்னகையோடு அமர்ந்திருந்தாள் இந்திரா.
தூக்கத்திலிருந்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்து தன் முன்னே இருந்தவளை யாழ்மொழி பதற்றமாகப் பார்க்க, தோழியை தாவி அணைத்துக்கொண்டாள் இந்திரா.
"யாழ், என.. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இது கனவா நினைவா என்று கூட தெரியவில்லை" என்று அவள் படபடவென பேசிக்கொண்டே போக, ஏற்கனவே தூக்கக் கலக்கத்தில் இருந்தவளுக்கு அவள் பேசுவதை கிரகிக்கவே சற்று நேரம் எடுத்தது.
"இளவரசி, என்ன கூறுகிறீர்கள்? எனக்கு எதுவுமே புரியவில்லை" என்று விழிகளை கசக்கியவாறு யாழ் கேட்க, "வீராவை ஆங்கிலேயர்கள் விடுதலை செய்து விட்டார்களாம், அரண்மனை காவலாளிகள் பேசிக்கொள்வதைக் கேட்டேன். இதுவரை கைது செய்த எவரையும் விட்டதில்லை, முதல் தடவையாக வீராவை விட்டிருக்கிறார்கள் என்றால் எல்லாம் அந்த கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும்" என்ற இந்திராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
"என்ன.. நிஜமாகவா? என்னால் நம்பவே முடியவில்லை இளவரசி" என்ற யாழ்மொழியின் குரல் குறையாத அதிர்ச்சியோடு வெளிப்பட, "ஆமாம் யாழ், எனக்கும் அதே ஆச்சரியம்தான். எனக்கு இப்போதே வீராவைப் பார்க்க மனம் துடிக்கிறது. இன்று தயாராக இரு, சந்தைக்கு செல்லலாம்" என்ற இந்திரா மீண்டும் அவளை சந்தோஷத்தில் அணைத்துவிட்டு அரண்மனையை நோக்கிச் சென்றாள்.
ஆனால், அசையாது அதே இடத்தில் அமர்ந்திருந்தவளுக்கு அந்த ஒருவனின் முகம்தான் மனக்கண் முன் தோன்றி மறைய, "எனக்கும் தங்களை காண வேண்டும் அதிகாரி" என்றவளின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்துக்கொண்டன.
அன்று மதிய வேளை, இந்திராவோடு யாழ்மொழியும் சந்தைக்கு செல்ல, இரு பெண்களின் விழிகளும் தன்னவர்களை தேடி அலைபாய்ந்தன.
"அதோ.. வீராவின் தோழன். வா அவரிடம் சென்று கேட்கலாம்" என்ற இந்திரா யாழ்மொழியின் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்று பாலாவின் முன்னே நிற்க, குனிந்து அழுகிய காய்கறிகளை ஒதுக்கிக்கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தான்.
மறுகணம் இளவரசி இந்திராவைப் பார்த்ததும் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, "வீரா..." என்று மட்டும் சொன்னவள் கைகளைப் பிசைந்தவாறு தயக்கத்தோடு பார்த்தாள்.
ஆனால், அவளின் மனதைப் படித்தவன் போல், "வீராவ பார்க்கணுமா இளவரசி, வாங்க நானே உங்கள அவன் குடிசைக்கு கூட்டிட்டு போறேன்" என்று பணிவும் பதற்றமும் கலந்து பேசிவிட்டு முன்னே செல்ல, இரு பெண்களும் அவன் பின்னாலேயே சென்றனர்.
நெருங்கி கட்டப்பட்டிருந்த குடிசைகளுக்கு நடுவே அவர்களை அழைத்துச் சென்றவன், "உள்ளதான் இருக்கான், வாங்க" என்றுகொண்டு ஒரு குடிசைக்குள் நுழைய, உறங்கிக்கொண்டிருந்த வீராவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனின் தாய் வைதேகியோ இந்திரசேனாவை பார்த்ததும் பதற்றமாக எழுந்து நின்றார்.
"இளவரசி நீங்களா..." என்றவருடைய குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, இதழில் விரலை வைத்து சத்தம் போடாதே என்பது போல் சைகை செய்தவள் மெல்ல வீராவின் அருகே சென்று அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
இதைப் பார்த்த வைதேகிக்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிட, விழி விரித்து அவர் பாலாவை பார்க்க, அவனோ தலையை சொரிந்தவாறு அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.
யாழ்மொழியும் அவர்களின் தனிமை கருதி குடிசையிலிருந்து வெளியேற, அதற்குமேல் பெரியவர் அங்கு நிற்பாரா என்ன!
பக்கத்திலிருந்த விசிறியை எடுத்து அவனுக்கு அவள் விசிறிவிட, புருவ முடிச்சுகளோடு மெல்ல விழிகளைத் திறந்தவனோ பக்கத்திலிருந்த தன்னவளைப் பார்த்துவிட்டு பதறியபடி எழ முயன்றான்.
"வேண்டாம் வீரா, எதற்கு இந்த பதட்டம்?" என்று அவள் அவனைப் பிடித்து மீண்டும் படுக்கையில் சரிக்க, "இந்திரா நீ எப்படி இங்க.. இது மட்டும் யாருக்காச்சு தெரிஞ்சதுன்னா உனக்குதான் பிரச்சனையாகும்" என்றான் வீரா பதற்றமாக.
"இது போன்ற ஒரு குடிசையில் வைத்து எனக்கு முத்தமிடும் போது தெரியவில்லையா என்ன?" என்று இரு புருவங்களை ஏற்றி இறக்கி அவள் பதிலுக்குக் கேட்க, திருதிருவென விழித்தவனிடத்தில் அதற்கான பதிலே இல்லை.
அப்போதுதான் அவனின் உடலிலிருந்த காயங்கள் அவள் விழிகளுக்குத் தெரிய, "மிகவும் வலிக்கின்றதா?" என்று கேட்டுக்கொண்டே அவனின் மேனியை இந்திரா மெல்ல வருட, இப்போது வலியையும் தாண்டி அவனுடைய உடல் உணர்ச்சிகளால் சூடேறியது.
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், "இப்போ இல்ல" என்று தன்னவளையே ரசித்த வண்ணம் சொல்ல, அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவளுக்கு முகம் குப்பென்று சிவந்தது.
தன்னவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தவன், அவளை தன்னை நோக்கி இழுக்க, அவன் மேல் சரிந்து அவன் மார்பில் கரத்தை வைத்திருந்தவளோ அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
அவனோ அவளிள் இதழ்களைப் பார்த்து, "என்னோட மருந்தே நீதான் இந்திரா, உனக்கு ஆட்சேபனை இல்லன்னா..." என்று குறும்பாக இழுக்க, அடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் அவனின் இதழை சிறை செய்தவள் அவனின் காயங்களுக்கு முழு மருந்தாகவே மாறிப் போனாள்.
வீராவும் அவளின் பின்னந்தலையைப் பற்றி தன்னோடு அழுத்த, உணர்ச்சிகளின் பிடியில் அவனின் மார்பில் பதிந்திருந்த அவளுடைய கரங்களோ நகத்தால் அவனிடத்தில் காதல் தடையங்களைப் பதித்தது.
இருவரும் ஒருவரையொருவர் பிரிய மனமின்றி இதழை சுவைத்துக்கொண்டே போக, அப்போதுதான் லியோ இறுதியாக சொன்ன வார்த்தைகள் அவனுக்கு சட்டென ஞாபகத்திற்கு வந்தன.
பட்டென்று விழிகளைத் திறந்த வீரா உடனே இந்திராவை தன்னிடமிருந்து விலக்கி எழுந்தமர, "என்ன நடந்தது வீரா, என்ன யோசனை?" என்று பதற்றமாகக் கேட்டாள் அவள்.
"இல்ல... அந்த உயரதிகாரி என்னை சிறையிலிருந்து வெளியில அனுப்புறப்போ ஒன்னு சொன்னான். அது உள்ளுக்குள்ளயே சுத்திட்டு இருக்கு இந்திரா" என்று வீரா சொல்ல, இந்திரசேனாவோ கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
"எல்லாமே யாழ்மொழிக்காகதான்னு அழுத்தம் திருத்தமா சொன்னான். இதுல எனக்கு என்ன சந்தேகம்னா யாழுக்கும் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கும் என்ன சம்பந்தம்? இதை பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?" என்று அவன் யோசனையோடுக் கேட்க, அவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கும் அதே அதிர்ச்சிதான்.
"என்ன... அந்த அதிகாரி யாழ்மொழிக்காக தங்களை விடுவித்தானா? அது.. அது எப்படி? சத்தியமாக இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது வீரா. இதுவரை ஆங்கிலேயர்களைப் பற்றி அவள் என்னிடம் பேசியது கூட இல்லை" என்று பதற்றமாக சொன்ன இந்திரசேனாவுக்கு தன் தோழி தன்னிடம் எதையாவது மறைக்கின்றாளா என்ற சந்தேகம் உள்ளுக்குள் எழ, வீராவுக்கும் எதுவுமே புரியவில்லை.
"இதை பத்தி யாழ்கிட்ட பேசு, ஏதாச்சும் தெரியலாம். ஆமா... யாழ்மொழி கூடதானே வந்த, அவ எங்க?" என்று வீரா வாசலை எட்டிப் பார்த்தவாறுக் கேட்க, இங்கு யாழோ லியோ இருக்கின்றானா என சந்தையில் தேடி அலைந்துக்கொண்டிருந்தவள் வரி வசுலிக்க வந்த ஜேம்ஸைப் பார்த்ததும் அவனை நோக்கி ஓடினாள்.
திடுதிப்பென தன்னெதிரே மூச்சு வாங்கியவாறு வந்து நின்றவளை அவன் மிரட்சியோடுப் பார்க்க, "அதிகாரி எங்கே, அவரை நான் சந்திக்க வேண்டும்" என்றவள் அவன் பின்னே ஆர்வமாகத் தேடினாள்.
அவள் எதைத் தேடுகிறாள் என்பதை உணர்ந்தவனின் இதழ்கள் மெல்ல புன்னகைக்க, "ஹீ இஸ் நொட் ஹியர்" என்று சொல்லிக்கொண்டே சைகையால் அவர் இல்லை என்பது போல காண்பித்தான்.
அதைப் புரிந்துக்கொண்டவள், "ஓ... அப்படியா! நாளைக்கு அவரை சந்திக்க காட்டுக்கு பக்கத்திலிருக்கும் குளத்திற்கு அருகே நான் காத்திருப்பேன் என்ற தகவலை தெரியப்படுத்த முடியுமா?" என்று ஆர்வமாகக் கேட்க, ஜேம்ஸிற்கு அவளின் மொழி கொஞ்சமும் புரியவில்லை.
"சாரி.. ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்" என்று ஜேம்ஸ் சொல்ல, அவனின் முகபாவனையை வைத்து அவனுக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்டவள், நெற்றியை நீவி விட்டவாறு தன்னை சுற்றி ஒருதரம் பார்த்தாள்.
அப்போதுதான் அவளுடைய விழிகளில் ஒரு சிறுபெண் வெள்ளை சுண்ணாம்புக் கல்லால் தரையில் வரைந்துக்கொண்டிருப்பது தென்பட, உடனே ஓடிச்சென்று அதையெடுத்தவள் தன் முந்தானையில் ஒரு சிறு துண்டைக் கிழித்த அதில் வரைய ஆரம்பித்தாள்.
ஜேம்ஸ்ஸோ அவளின் செயலை சிறு அதிர்ச்சியோடும் புரியாமலும் பார்த்துக்கொண்டு நிற்க, புன்னகையோடு அதை நீட்டியவள், "இதை அவரிடம் கொடுத்தால் போதும், அவரே புரிந்துக்கொள்வார்" என்று சொல்ல, அதை வாங்கிப் பார்த்தவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று சுத்தமாகப் புரியவில்லை.
புரியாமல் விழித்தவாறு ஜேம்ஸ் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, "யாழ், என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்?" என்ற இந்திரசேனாவின் குரலில் பதற்றமாகத் திரும்பிப் பார்த்தாள் மற்றவள்.
"இளவரசி..." என்று அழைத்த யாழ்ழொழிக்கு இந்திராவின் எதிர்பார்க்காத வருகையில் உள்ளுக்குள் பக்கென்று இருந்தாலும் முயன்று முகபாவனையை மாற்றி புன்னகைக்க, "முன்னே செல்..." என்று அழுத்தமாக சொல்லிவிட்டு பின்னால் நடந்தாள் இந்திரா.
இருவரும் பின் வழியாக அரண்மனைக்குள் நுழைய, தன் அறைக்கு செல்லப் போன யாழின் கரத்தை பற்றி நிறுத்தினாள் இந்திரா.
"நீ என்னிடம் எதையாவது மறைக்கின்றாயா?" என்று கூரிய பார்வையோடு அவள் கேட்க, "இல்.. இல்லை இளவரசி, ஏன் இந்த கேள்வி?" என்று தடுமாற்றத்தோடு கேட்ட யாழ்மொழிக்கு இந்திராவிடம் மறைப்பதை நினைத்து குற்றவுணர்ச்சி இல்லாமல் இல்லை.
"ஒன்றும் இல்லை" என்று யோசனையோடு சொல்லிவிட்டு இந்திரசேனா அங்கிருந்து சென்றுவிட, 'ஊஃப்ப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்டவள் தான் செல்ல வேண்டிய திசையை நோக்கித் திரும்ப, அவளெதிரே முறைத்தவாறு நின்றிருந்தாள் ராதா.
அவளைப் பார்த்ததுமே யாழ்மொழியின் முகம் மலர, "ராதா..." என்று அழைத்துக்கொண்டு அவள் அருகில் செல்ல, "உன் உயிருக்கு உயிரான இளவரசியிடமே மறைக்கின்றாயே யாழ், இது தவறில்லையா என்ன! ஒருவேளை தெரிந்தால் அவர்களே உன்னை அரண்மனையை விட்டு வெளியில் துரத்திவிடுவார்கள் என்ற பயமா?" என்று நக்கல் தோனியில் கேட்டாள் ராதா.
அவளின் வார்த்தைகளைக் கேட்டு சட்டென நின்றவள், "என் மீதுள்ள கோபம் இன்னும் குறையவில்லையா? அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் நான், காதலித்ததா தவறு? சொல்லப்போனால் நான் காதலிப்பது கூட அதிகாரிக்கு தெரியாது" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல, ஏளனமாக வளைந்தன ராதாவின் இதழ்கள்.
"தெரிந்தால் உன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியத்தான் போகிறான். அந்த ஆங்கிலேயர்களே அப்படிப்பட்டவர்கள் தான். உன் வாழ்க்கையை நீயே நாசமாக்கப் போகிறாய்" என்று கோபத்தில் பொரிந்துக்கொண்டே போனவள், "ஒருவேளை... ஒருவேளை இதை குறித்து அரசர் கேட்டால் நான் எதையும் மறைக்கப் போவதில்லை, ஞாபகம் வைத்துக் கொள்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
போகும் தன் தோழியை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தன் காதலின் விளைவு தெரிந்தாலும் வேறு வழித் தெரியவில்லை.
மனதில் தன்னவனாக நினைத்துவிட்டாள். அவள் பழகிய முதல் ஆண்மகனும் அவனே.. அவள் உணர்ந்த முதல் காதலும் அவனே..
அப்படி இருக்கையில் இப்போது மறந்து விட வேண்டும் என்றால் அந்த பெண்ணவளால் எப்படி முடியும்?
அன்றைய நாள் முழுக்க அவள் யோசனையில் கடக்க, இங்கு வேலைகளை முடித்துவிட்டு அரண்மனைக்கு வந்த ஜேம்ஸ் லியோவின் ஆஃபீஸ் அறைக்குள் நுழைய, அவனோ வேலையில் மூழ்கியிருந்தான்.
"சார், டெக்ஸ் கலெக்ட் பண்ணியாச்சு. ஆனா சில பேரால கொடுக்க முடியல. நாளைக்கு ஒருநாள் டைம் கொடுத்திருக்கேன், அப்போவும் கொடுக்கலன்னா அர்ரெஸ்ட் பண்ணிடுவோம்" என்று அவன் சொல்லிக்கொண்டே போக, விழிகளை நிமிர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்த லியோ, "கொடுக்க முடியலன்னா விடு, அர்ரெஸ்ட் எல்லாம் எதுக்கு? அதுவும் இந்த விஷயத்துக்கு. ஜஸ்ட் லீவ் தட்" என்றான் சாதாரணமாக.
அவன் சொன்னதைக் கேட்டவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
"சார்..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் அழைத்தவன், "நீங்கதானே வரி கட்டுறது ரொம்ப இம்பார்டென்ட், கொடுக்கலன்னா அர்ரெஸ்ட் பண்ண சொன்னீங்க. இப்போ வரைக்கும் அதைதான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இப்போ திடீர்னு..." என்று புரியாமல் கேள்வியாக இழுக்க, ஒரு பெருமூச்சோடு கையிலிருந்த ஃபைலை மேசையில் தூக்கிப் போட்டவன், "இப்போ வேணாம்னு சொல்றேன். டூ வாட் ஐ சே" என்றான் அழுத்தமாக.
தலைகால் புரியாமல் எல்லா பக்கமும் தலையாட்டியவன் பின்னரே ஞாபகம் வந்தவனாக உடனே பாக்கெட்டிலிருந்த சிறு முந்தானையின் துண்டை அவனிடம் நீட்ட, அவனை கேள்வியாகப் பார்த்தான் லியோ.
"பேளஸ்ல இருக்குற அந்த பொண்ணு கொடுத்துச்சு சார்" என்று அடக்கப்பட்ட சிரிப்போடு சொல்லி அதை மேசையில் வைத்துவிட்டு செல்ல, வேகமாக அதையெடுத்துப் பார்த்த லியோவின் இதழ்கள் மென்மையாகப் புன்னகைத்தன.
அந்த சிறு துணியில் யாழ் வரைந்திருந்த குளமும் சூரியன் உச்சியிலிருப்பது போலான காட்சியையும் சிரிப்போடு பார்த்தவனின் இதழ்கள், "ரெண்டு ட்ரோயிங்ல எங்க எப்போ வரணும்னு மொத்தத்தையும் சொல்லியிருக்கா" என்று தன்னவளை நினைத்து முணுமுணுக்க, அவனையும் மீறி அவளைக் காண எதிர்பார்த்துக் காத்திருந்தான் லியோ.
அடுத்தநாள்,
சூரியன் உச்சியிலிருக்கும் பகல் வேளையில் அந்த குளக்கரையில் தன்னவனுக்காக காத்திருந்து யாழ் அமர்ந்திருக்க, லியோவோ வந்தபாடில்லை.
'நான் இத்தனை தூரம் எதிர்பார்த்திருக்க கூடாது, என் தவறுதான். சாதாரண பணிப்பெண் என் பேச்சைக் கேட்டு அத்தனை பெரிய உயரதிகாரி வருவாரா என்ன!' என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டவள் விழிகளிலிருந்து கசிந்த கண்ணீரைத் துடைத்தவாறு எழப் போக, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. எனக்காக ரொம்ப நேரமா காத்திருக்கியோ.." என்ற லியோவின் குரலில் பின்னாலிருந்து கேட்டது.
உடனே திரும்பிப் பார்த்தவளின் முகமும் விழிகளும் சந்தோஷத்தில் மின்ன, அவனோ அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்துக்கொண்டான்.
ஆனால் யாழ்மொழியின் பார்வையோ அவனை விட்டு விலகவே இல்லை.
புன்னகையோடு அவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, "ஸ்டாப் இட்! என்னையே எதுக்கு இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்க இடியட்" என்று கத்தினான் லியோ.
அதில் நடப்புக்கு வந்தவள், "ஹிஹிஹி... எனக்காக நான் சொன்னதற்காக இங்கு தாங்கள் வந்திருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது அதிகாரி. தாங்கள் எனக்கு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள், எத்தனை ஆயிரம் கோடி வருடம் நான் சேவை செய்தாலும் தாங்கள் செய்த உதவிக்கு ஈடாகாது" என்று சந்தோஷமும் தயக்கமும் விழிகளில் கண்ணீரோடும் பேசி முடிக்க, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் அவன்.
"லுக், நான் ஒன்னும் உனக்காக பண்ணல. அவன் என்கிட்ட மன்னிப்பு கேட்டு கெஞ்சினான் அதான் விட்டேன். என்ட் வன் மோர் திங் நீ வரைஞ்சிருந்த ரெண்டு பொம்மை படத்தை வச்சு ஒன்னும் நான் இங்க வரல. ஆஃபீசர் ஒருத்தர மீட் பண்ணணும். இங்க பக்கத்துல தான். அதான் வந்தேன். புரிஞ்சதா?" என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக அவன் பேசிக்கொண்டே போக, பாதி புரிந்தும் புரியாமலும் பாவமாக தலையாட்டி வைத்தாள் யாழ்மொழி.
அப்போதுதான் குளத்திற்கு அந்த புறமாக நீராடிக்கொண்டிருந்த அன்னங்கள் தென்பட, அதிலிருந்த இரு அன்னங்களைப் பார்த்த யாழ்மொழியின் விழிகள் சட்டென கலங்க இதழ்கள் புன்னகைத்தன.