ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

லிசா பள்ளத்தாக்கு - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 6


சத்தம் கேட்ட திசையில் திரும்பிய கௌதம்மிற்கு ஒருநொடி இதயம் நின்று தான் போனது.

கெளதம் நின்ற இடத்திலிருந்து சுமார் 50அடி தூரத்தில் ஒரு உருவம் காட்டிற்குள் இருந்து வந்து கொண்டிருந்தது. சட்டென சுதாகரித்த கெளதம் மறுபுறம் நகர்ந்து அங்கிருந்த பெரிய மரம் ஒன்றின் பின்னால் ஒளிந்து கொண்டான். தற்போது அங்கு வந்தது ஒரு ஆணின் உருவம் தான் என்றும் அது நிச்சயம் ஒரு மனிதன்தான் என்றும் கௌதம்மிற்கு விளங்கிற்று.

அந்த உருவமும் யாருக்கோ மறைந்து பதுங்கி பதுங்கி செல்வது போலவே கௌதம்மிற்கு புலப்பட்டது. எப்படியாவது அந்த உருவத்தின் முகத்தினை பார்த்துவிட வேண்டும் என்று கௌதமும் காட்டிற்குள் ஒளிந்தவாறே அவ்வுருவத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

"ஒருவேளை இதுதான் அவங்க அண்ணனோ?"

"அண்ணன் எதுக்கு இப்பிடி பதுங்கி பதுங்கி வரான்?"

"இது வேற யாரோவா தான் இருக்கணும்....."

"வேற ஆளுக்கு இந்த காட்டுக்குள்ள இந்த நேரத்தில என்ன வேலை?" இப்படி பல கேள்விகள் மீண்டும் கௌதமின் தலைக்குள் நாட்டியமாட, கவனத்தை சிதறவிடாது வந்தவனை கண்ணிமைக்காது கண்காணித்தபடி இருந்தான் கெளதம்.

கெளதம் ஒரு மரத்தின் பின்னிருந்து அவ்வுருவத்தை கண்காணித்துக்கொண்டிருந்ததை போல அந்த உருவமும் ஒரு மரத்தின் பின்னர் பதுங்கியிருந்து அந்த மர்ம வீட்டையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது கௌதம்மிற்கு விளங்கியது.

"நம்ம இவன பார்த்திட்டிருக்கம்? அவன் யார பார்த்திட்டிருக்கான்?" கேள்விக்கான விடையும் குழப்பத்துடன் விரைவில் கிடைத்தது கௌதம்மிற்கு.

திடீரென வீட்டின் பின் வாசல் வழியே வெளிவந்தது இன்னொரு உருவம். அந்த இருட்டினுள் அது ஒரு பெண் என்பது மட்டுமே கௌதம்மால் உறுதியாக நம்பக்கூடியதாக இருந்தது. நிச்சயம் அது மோனாலிசா தான் என்பதை ஊகித்துக்கொண்ட கெளதம் நடப்பதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வெளியே வந்த அந்தப்பெண்ணை கண்டதும் மரத்தின் பின்னே பதுங்கியிருந்தவனும் அவளருகே சென்று ஏதோ அவசர அவசரமாக இருவரும் பேசுவது கௌதம்மிற்கு விளங்கியது.

அவர்கள் பேசுவதை செவிமெடுக்க சிறிது தூரம் அருகில் செல்ல எண்ணிய கெளதம் அங்கே செல்வதற்கான மறைவான பாதையை தேடினான். அப்படியே மீண்டும் அங்கே பார்த்தவனுக்கு தூக்கிவாரி போட்டது. சில வினாடிகள் முன்னே அங்கே பேசிக்கொண்டிருந்த அந்த இருவரும் அப்போது அங்கே இல்லை.

"என்ன நடந்திச்சு? எங்கே அவர்கள்?....... ஒரு வேளை என்னை பார்த்துட்டாங்களோ......." சந்தேகங்கள் வலுக்க திணறியவனுக்கு பின்னால் ஏதோ ஒரு சத்தம்.....

திரும்ப எத்தணித்தவன் .......தலையில் ஏதோ பலமாக தாக்க......" ஆ............"

வீட்டினுள் கெளதம் வெளியிலே போய் சிறிது நேரம் ஆகியிருந்ததால் நேத்ரா புலம்பத்தொடங்கியிருந்தாள். அந்த குழப்பத்தினை சமாளிக்க மனோகரியை அனுப்பியிருந்தாள் சாரா.

வெளியிலேயே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த சாராவுக்கு காட்டுக்குள் பின் வழியில் தன் அண்ணன் ராபர்ட் வருகிறான் என்பது புரிந்தது. அவள் எதிர்பார்த்த மாதிரியே அங்கே வந்திருந்தான் ராபர்ட். ஆர்னோல்ட் மாதிரி ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருந்த ராபர்ட்டிற்கு சித்தி தான் எல்லாம். ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை என்பது அவனுக்கு பொருந்தும்.

"சாரா கதவ திற......"

"என்ன அண்ணா இந்த வழில வாற?"

"என்னடி தெரியாத மாதிரி கேட்கிற? இந்த வழில என்ன? அதுசரி இந்நேரத்துக்கு தூங்காம என்ன பண்ற? சித்தி எங்க? யார் அந்த ராஸ்கல்? வீடு வரைக்கும் வந்து நோட்டம் விடுறான்? சித்திய கூப்பிடு.... அவனுக்கு சமாதியை கட்டிட வேண்டியதுதான்... நம்ம ரகசியம் வெளிய தெரிஞ்சிடும்......" என்று கோபத்துடன் நான்ஸ்டாப்பாக அலறினான்.

"அண்ணா இங்க நிலைமையே வேற, கொஞ்சம் பொறுமையா இரு........" என்று சாரா கூறிக்கொண்டிருக்க, மனோகரியும் சமையலறைக்கு வந்து சேர்ந்தாள்.

"என்ன ஆச்சு?" என்று கேட்ட ராபர்ட் குடித்திருந்தது சாராவிற்கு தெரியும்.

ராபர்ட்டிற்கு அங்கு நடந்ததை கூறிய சாரா சித்தியின் பிளானையும் கூறினாள்.

"அட்ராசக்க..... ஆடு அதுவா வந்து சிக்கியிருக்கா... கூறு போட்டுட வேண்டியதுதானா...."

"அண்ணா நீ யாரை பத்தி கேட்டா?" என்று தயக்கத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள் சாரா.

"வீட்டுக்கு வந்ததுல ஒருத்தன் தான் அங்க பதுங்கிட்டிருந்தான், தலைல ஒண்ணு போட்டு அந்த ஷெட்ல கைய கட்டி போட்டிருக்கேன்."

"நிச்சயமா அவன்தானே......" என்று சந்தேகத்தை மனோகரி எழுப்ப,

"நம்ம வீட்டை சுத்தி வேற யாரு நிக்கப்போறா......" என்று சூடாக, மனோகரி வேறு எதுவும் கேட்கவில்லை.

"சரி டா, சீக்கிரம் முன்னாடி போய் சொன்னபடி உன்னோட வேலைய காட்டு....." என்று மனோகரி கூற ராபர்ட்டும் அந்த நாடகத்தில் பங்கெடுக்க சென்றான்.



"அண்ணா அவரு போய் ரொம்ப நேரமாச்சு, நீங்க போய் பார்த்திட்டு வாங்கண்ணா......"

"சரி சரி பயப்படாத நேத்ரா, நான் போய் பார்கிறேன்.." என்று சித்தார்த் கூறினாலும் தான் திவ்யாவையும் நேத்ராவையும் அவ்விடம் விட்டு வெளியேறுவது புத்திசாலித்தனம் அன்று என்பது சித்தார்த்துக்கு தெரியும்.

"பயப்படாதீங்கம்மா, தம்பி வந்திடும்மா......" என்று மீண்டும் அங்கே வந்து மனோகரி சமாதானப்படுத்தி கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தான் ராபர்ட்.

"ஆ.... இந்தா என் மவன் வந்துட்டான்... இனி பிரச்சினையில்ல....."

"அம்மா, இவங்க கூட வந்தவர் வண்டிகிட்ட போறாரு, என்னய டூல்ஸ எடுத்துக்கிட்டு வர சொன்னாரு. சீக்கிரம் வண்டிய சரி பண்ணிடலாம்......" என்று ராபர்ட் கூற நேத்ராவின் முகத்தில் நிம்மதி ஏற்பட்டது.

" ராபர்ட் நில்லு......."

"என்ன சித்தி?....."

"நீ இப்போ என்ன சொல்ல போறா?......

"......." முழித்தான் ராபர்ட்.

"அவங்கள்ல ஒருத்தன இங்க அடிச்சு போட்டுட்ட..... அந்த ஆள காணோம்னு தான் உள்ள எல்லாரும் பேசிட்டிருக்காங்க.... நம்மள்ல சின்ன சந்தேகம் வந்துட்டாலும் அது ஆபத்தா போய்டும்......"

"இப்போ என்ன பண்ண சொல்ற?"

"நீ உள்ள போய் உங்க கூட வந்தவர வண்டிகிட்ட போக சொல்லிட்டேன்னு, டூல்ஸ் எடுத்துக்கிட்டு நீயும் போக போறேன்னு சொல்லு......."

"என்ன நான் போகவா? அப்போ யாரு இங்க அவங்கள பார்த்துக்கிறது?"

"ஐயோ ராபர்ட், தடிமாடு மாதிரி வளர்த்திருக்கியே தவிர தலைக்குள்ள ஏதாவது இருக்கா?"

“……………………………........" மீண்டும் எதுவும் புரியாமல் விழித்தான் ராபர்ட்

"நீ ஏற்கனவே ஒருத்தன காலி பண்ணிட்டே... இன்னும் அங்க ஆம்பள ஒருத்தன் தான்.... அவனயும் உன் கூட வண்டிகிட்ட கூட்டி போய் செஞ்சிடு...... இங்க மத்த பொம்பளைங்கள நானும் சாராவும் பார்த்துக்குறோம்..... விடியிறதுக்குள்ள கிடைக்கிறத சுருட்டிட்டு கிளம்பிடுவோ ம்......"

"சாராவா? அவள் இதுக்கு ஒத்துக்கிட்டாளா?"

"என்னமோ தெரியல, வழமையா நம்ம தொழில கேவலமா பேசுறவ, எல்லாத்தையும் கடவுள் பார்த்துகிட்டு இருக்கார்னு சொல்றவ இன்னைக்கு ரொம்பவே ஒத்துப்போறாள்.
இந்த ஐடியாவையும் அவள் தான் சொன்னாள் "

"இது அவளோட ஐடியாவாச்சே? ஏதாவது ஏடாகூடமாச்சுன்னா?"

"ஐடியா மட்டும்தான் அவள் போடுவாள், வேற எதுவும் அந்த நாயி செய்யாது. அவளை நான் பார்த்துக்கிறேன்."

"ஜாக்கிரதை சித்தி!"

"டேய், நீயே இப்பிடி யோசிக்கும்போது நான் யோசிக்காமலா இருப்பன். அந்த சிறுக்கி மேல ஒரு கண்ணு வச்சிருக்கேன்.
ஏதாவது ஏடாகூடமா பண்ணினா அவளுக்கும் முடிவு கட்டிட வேண்டியதுதான். "

"நல்ல ஐடியா தான்...... எதுக்கும் நீயும் ஜாக்கிரதையா இரு " சிறிது நேரத்திற்கு முன் மனோகரி, சாராவிற்கு தெரியாமல் சொன்னதை சரியாக செய்து முடித்தான் ராபர்ட்.


யாரையும் யோசிக்க விடாமல் செயலில் இறங்கிய ராபர்ட் வண்டியை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்களை உள்ளே சென்று எடுத்துக்கொண்டிருந்தான்.

பின்னாலே மனோகரியும் மகனுக்கு உதவுவது போல உள்ளே சென்றார்.

மனோகரி உள்ளே சென்றவுடன் சாராவும் காபியுடன் அங்கு வந்துவிட்டாள். சாரா அங்கே நின்றபடியால் நேத்ராவாலோ திவ்யாவாலோ வெளிப்படையாக எதுவும் பேசமுடியவில்லை. சாராவோ தனது திட்டத்தை நிறைவேற்றவே அங்கு வந்திருந்தாள்.

"அக்கா, யோசிக்காதீங்க, அண்ணா சீக்கிரம் வண்டிய ரெடி பண்ணிடும். இதுவே பகல் நேரம்னா இன்னும் ரெண்டு பேரை உதவிக்கு கூப்பிட்டிருக்கலாம். அப்பிடீன்னா வேலை சட்டுன்னு முடிஞ்சிடும். இந்த ராத்திரில அண்ணா தனிய தானே..... இருந்தாலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா முடிச்சிடும்....." என்று தூண்டிலை போட்டாள்.

சித்தார்த்துக்கு சாராவின் பேச்சில் இருந்த விஷம் சிறிது விளங்கியது.

"அண்ணா அவரும் போயிருக்கார், நீங்களும் போனா சீக்கிரம் வேலைய முடிச்சிடலாம்...." என்று அவசரப்பட்டாள் நேத்ரா.

"அப்பிடீன்னா எல்லாரும் போவமே, சீக்கிரமா முடிஞ்சா சீக்கிரமா கிளம்பிடலாம்...." என்று திவ்யா சொல்ல, சுதாகரித்த சாரா "அக்கா நீங்க வெயிட் பண்ணுவீங்க, இந்த சின்ன பையன் எதுக்கு வெயிட் பண்ணனும். நீங்க இங்க இருந்து ரெஸ்ட் எடுங்க, வண்டி ரெடி ஆகினதும் நீங்க போகலாம்." என்று யாரையும் பேச விடாமல் முடிவுகளை எடுத்தாள் சாரா.

"ராபர்ட் அந்த வண்டில வந்தது யாருன்னு நினைக்கிற?" மனோகரி அறைக்குள் ரகசியமாக கேட்டாள்.

"லிசாவா இருக்குமோ?"

"அத நினைச்சா தான்டா கொஞ்சம் பயமா இருக்கு....."

"நீ வேற சித்தி, யாரோ ஒரு பொண்ண வண்டில கூட்டி வந்திருக்காங்க, இருட்டுல முகம் தெரிச்சிருக்காது."

"அப்போ எப்புடிடா சரியா இந்த வீட்டை வந்தாங்க?"

"இங்க என்ன நூறு வீடா இருக்கு, இருக்கிறதே ஒரு வீடுதான்....."

"வீட்டில எதோ வெளிச்சம் தெரிஞ்சுதாமே......"

"நம்ம எத்தனை பேய்க்கதை கட்டிவிட்டிருப்போம். இன்னைக்கு நமக்கு இவங்க சொல்றாங்க, அந்த இந்த கதைல கவனத்தை விடாம இரு சித்தி. எதுக்கும் பயமில்லை..... வெளிநாட்டு பார்ட்டி..... பயந்து கோட்ட விட்டுடாத....."

"சரி சரி நான் இந்த பொண்டுகள பார்த்துக்கிறேன்..... டேய் இவங்க நம்ம மூஞ்சியெல்லாம் பார்த்துட்டாங்களே ரிஸ்க் இல்லையா?"

"மூஞ்சி தெரிஞ்சா தான் என்ன? நம்ம இனி ஒரு மாசத்துக்கு இங்க வர போறதில்ல, நம்ம மூஞ்சிய அடையாளம் காட்ட எந்த ஸ்டேஷன்லயும் நம்ம போட்டோ இல்ல, நம்ம ஒரு ஆளுங்க இருக்கோம்னு கூட இங்க எந்த ஆதாரமும் இல்ல. பயத்த விடு....."

"சந்தேகம் வந்திடுச்சின்னா அவனை முடிச்சிடு....."

"அட்ராசக்க, அதெல்லாம் பக்காவா பண்ணிடுவன். நீ ஜாக்கிரதை.... நீயும் அதே போல செய்.... விடிஞ்சா நியூஸ் ல அமானுஷ்ய பெண் உருவம், கொள்ளை அப்பிடீன்னு மட்டும் தான் சொல்லணும். இந்த வீட்டில யாரும் இருந்ததுக்கான அடையாளமே இருந்திட கூடாது. க்ளீன் பண்ணிடு......"

"சரிடா, வழமையா நம்ம நாடகம் நடத்துவோம், இன்னைக்கு அதுவா நடக்குது.... நீயும் கவனமா இருந்துக்கோ.... எந்த சந்தேகமும் வந்திட கூடாது.....

"சரி, நீ கீழ போ.... " என்று ராபர்ட் கூற, தெளிவான திட்டத்துடன் கீழே சென்றாள் மனோகரி.

மனோகரியை கீழே அனுப்பிவிட்டு சில வண்டி திருத்தும் சாவிகளை எடுத்தவன் கத்தி ஒன்றையும் எடுத்து இடுப்பினுள் சொருகி கொண்டான்.

கீழே வந்த ராபர்ட் நேரே சித்தார்த் அருகே சென்று "கிளம்புவமா?" என்றான்.

"நானும் வரணுமா?" என்று சித்தார்த் வினவ, "உங்களையும் கூட்டி வர சொல்லி உங்க தம்பி சொன்னாரு, நீங்களும் வந்தா சீக்கிரமா காரியத்தை முடிச்சிடலாம். இங்க அம்மாவும் சாராவும் இவங்கள பார்த்துப்பாங்க....." என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான் ராபர்ட்.

திவ்யாவும் போகுமாறு கண்ணசைக்க அரை மனதுடன் ராபர்ட்டை பின் தொடர்ந்தான் சித்தார்த்.

ராபர்ட் வெளியே சென்ற பின்னர் தான் அவ்விடத்தில் சாரா இல்லை என்பதை உணர்ந்த மனோகரி, திவ்யாவையும் நேத்ராவையும் அங்கே உட்கார சொல்லிவிட்டு மாடிப்படியில் ஏறி சென்று சாராவின் அறைக்குள் நுழைந்தாள். அங்கேயும் சாராவை காணாது "இந்த நேரத்துல எங்க இந்த சனியன காணல, சீக்கிரம் வேலைய முடிக்கணுமே....." என்று மனதிற்குள் புலம்பியபடி சாராவை தேடிக்கொண்டிருந்தாள்.

அந்த வீடு பிரிட்டிஷ் காலத்து வீடு என்பதால் வீட்டினுள்ளேயே பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.

"நேத்ரா...... நேத்ரா......" அருகிலிருந்தவளையே ரகசியமாக அழைத்தாள் திவ்யா.

"சொல்லுங்க அக்கா........."

"நம்ம தப்பு பண்ணிட்டமோ......"

"ஏன் அப்பிடி பேசுறீங்க அக்கா?"

"நம்மளும் சித்துவோட போயிருக்கணுமோ......"

"நானும் அப்பிடி யோசிச்சன்.... நீங்க எதுவும் சொல்லாம இருக்க, ஒன்னும் பேசி குழப்பிட கூடாதுன்னு விட்டுட்டேன்....."

"நேத்ரா நீ ஒன்னும் சொல்லலன்னு நானும் இருந்துட்டேன்....."

"கெளதம் நம்மள ரொம்ப நேரம் தனியா விடமாட்டான்...."

"ஹ்ம்ம்....... உனக்கு இங்க ஏதாவது தப்பா பீல் ஆகுதா? ஓப்பனா சொல்லு......" என்று திவ்யா ரகசியமாக கேட்க, அதுவரை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தவள் திவ்யாவிடம் தன் உள்ளுணர்வை கொட்டி விட்டாள் .

"ஆமாக்கா.....இங்க ஏதோ சரியில்ல, அந்தம்மாவையும் இப்போ வந்தவனயும் பார்த்தா பிரச்சன இல்லன்னு தான் தோணுது. ஆனா அந்த பொண்ணுல தான் ஏதோ விஷயம் இருக்கு....."

"என்ன விஷயம் இருக்கும்?"

"தெரியல அக்கா, நம்ம கூட வண்டில வரும்போது அம்மாஞ்சி மாதிரி உம்முன்னு இருந்தா, இங்க என்னடான்னா வாய தொறந்தா மூடுறாளே இல்ல. அதுதான் புரியல...."

"எனக்கும் அதே டவுட் தான்..... சரி அப்புறம் எப்பிடி இங்கயே இருப்போம்னு முடிவெடுத்த?"

"அதுவா அக்கா, நான் எது பேசினாலும் அதுக்கு ஆப்போசிட்டாத்தான் எப்பவும் நடக்கும்னு கெளதம் அடிக்கடி சொல்லுவான். அவன் சொல்ற போல நான் சொன்னதுக்கு அப்போசிட்டாதான் எப்பவும் நடந்திருக்கு. அந்த ஒரு குருட்டு நம்பிக்கைலையும் கெளதம் மேல இருக்கிற நம்பிக்கையும் தான்க்கா....."

நேத்ராவுடன் பேசிக்கொண்டிருந்தது திவ்யாவிற்கு சிறிது தெம்பினை கொடுத்தாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மனோகரி சாராவினை காணாது தேடிக்கொண்டிருந்ததால் சிறிது அவகாசம் இவர்களுக்கு கிடைத்திருந்தது.

திடீரென நேத்ராவின் கையை அழுத்திப்பிடித்த திவ்யாவின் முகம் பயத்தில் உறைந்தது.....

"என்னக்கா.....என்னாச்சு?" என்று நேத்ரா பதறியதில் அத்விக்கின் தூக்கமும் கலைந்துவிட்டது.

"அக்கா அவளோட பேரு......." என்று சொல்ல தொடங்கிய நேத்ராவிற்கு தொண்டை அடைத்தது.

"என்ன...... பேருக்கு என்ன? மோனாலிசான்னு தானே அவ சொன்னாள்......."

"ஆமா அப்பிடித்தான் அவள் சொன்னாள்...... ஆனா அவங்கண்ணன் இங்க சாரான்னு அவளை கூப்பிட்டானே....."

"ஆமால்ல......அப்பிடித்தான் கூப்பிட்டான். ஒரு வேளை சாரா வீட்டு பேரா இருக்கும்னு நினைக்கிறேன்......" என்று பயத்தை வெளிக்காட்டாமல் சமாளிக்க பார்த்தாள் திவ்யா.

"இல்லக்கா இன்னைக்கு ஈவினிங் சொன்ன நியூஸ்ல லிசா பள்ளத்தாக்குன்னும் அந்த அமானுஷ்ய பொண்ணோட பேரு லிசான்னும் சொன்னதா ஞாபகம்......."

"அப்பிடீன்னா......" வாயை பிளந்தாள் திவ்யா.

"நம்ம கூட வண்டில வந்ததும் இங்க இருக்கிறதும் ஒரே பொண்ணு இல்ல......" என்று கூறிய நேத்ராவிற்கு பயத்தில் வேர்த்து கொட்டியது.

ராபர்ட் வண்டி நிற்கும் இடத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருந்ததால் சித்தார்த்தை எதுவும் செய்யாமல் வீண் பேச்சுக்களையும் பேசாமல் காட்டுப்பாதையில் சித்தார்த்துடன் சென்று கொண்டிருந்தான்.

"உங்க பேரு ராபர்ட் தானே?" சித்தார்த்தின் கேள்விகளை ராபர்ட்டினால் தவிர்க்க முடியவில்லை.

"ஆமா."

"இந்த காட்டுக்குள்ள ஏன் இருக்கிறீங்க?"

"சார், எங்க பரம்பரைய சேர்ந்தவங்க வெள்ளைகாரங்ககிட்ட இருந்த ரப்பர் தோட்டத்தை பாதுகாக்கிற வேலைய பார்த்துக்கிட்டாங்க. அதுக்கு அன்பளிப்பா இந்த வீடு கொடுத்தாங்க. அவங்க திரும்பி போனதுக்கப்புறம் நாங்க பரம்பரை பரம்பரையா இங்கயே தோட்டம் செஞ்சு வாரோம்......"

"இந்த காட்ட பத்தி ஏதேதோ நியூஸ் வருதே......"

"அப்பிடி ஒன்னும் இல்லையே......"

"நான் என்ன நியூஸ்ன்னு கூட சொல்லல..... அதுக்குள்ளே இல்ல என்கிறீங்க......"

"என்ன பேய் பூதம்னு தானே, நானும் கேள்விப்பட்டிருக்கேன் சார்...." ராபர்டுக்கு பதில் சொல்வதற்கு வெறுப்பாக இருந்தது. சாரா தன்னிடம் ஓவராக வாய குடுத்து மாட்டிக்காத என்று சொன்னது நினைவிற்கு வந்தது.

"அப்போ அதெல்லாம் உண்மையில்லையா?"

"இந்த காலத்துல போய் இதெல்லாம் நம்புறீங்களா சார்..... அதெல்லாம் ஒண்ணும் இங்கயில்ல...." என்று சொல்லவும் அவர்கள் மெயின் ரோடினை வந்தடைந்திருந்தனர். அங்கிருந்து சிறிது தூரத்தில் சித்தார்த்தின் ப்ராடோவும் நின்று கொண்டிருந்தது.

ரோட்டிற்கு ஏறியவுடன் அவ்வளவு தூரமும் மரங்களை தாண்டி நிலவொளியும் இல்லாதிருந்த படியால் ராபர்டின் முகத்தினை பார்க்கமுடியவில்லை. வீட்டில் ராபர்ட்டினை பார்த்ததுமே எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு சித்தார்த்துக்கு ஏற்பட்டிருந்தது. யாரிடமும் வெளிக்காட்டவில்லை. ஆனால் இப்போது நிலவொளியில் தெரிந்த முகத்தினை மீண்டும் பார்த்தவுடன் ராபர்ட்டினை எங்கு பார்த்திருக்கிறான் என்பது விளங்கிற்று..... உடனே சற்றே அவசரப்பட்ட சித்தார்த்...... "டேய்..... நீ அந்த நியூஸ்ல வந்தவன் தானே.... பக்கத்து ஊர்க்காரன்..... "...... என்று ராபர்ட் தோளை பிடித்து திருப்ப.......



"அடியேய்..... எங்கடி போய்ட்டு ஆடி அசைஞ்சு வர......." என்று கொல்லைப்புறத்திலிருந்து வந்த சாராவை பார்த்து மனோகரி கொக்கரித்தாள்.

"எதுக்கு இப்போ கத்துற..... அதான் வந்துட்டேன்ல்ல...... வா சீக்கிரம் வேலைய முடிக்கலாம்."

"எப்பிடி பண்றது?"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..... "

"பெரிய இவ மாதிரி பேசாத, நீ அந்த சின்ன பொண்ண பார்த்துக்கோ..... நான் அந்த மற்ற பொண்ணையும் சின்ன பையனையும் சொருவிடுறேன்....."

"என்ன சொல்ற......." என்று சாரா அதிர்ச்சியாக, தன் முந்தானையில் மறைத்து வைத்திருந்த கத்தியினை காட்டினாள் மனோகரி.

"நீ பேசாம நான் பண்றதுக்கு ஒத்துழைச்சின்னா போதும்..... ரெண்டு சிறுக்கிங்க கழுத்துலயும் இருக்கிறத எடுத்தாலே ஒரு வருசத்துக்கு பிரச்சினையில்ல......" என்று மனோகரி முன் செல்ல, தைரியத்தை வரவழைத்த சாராவும் வேறொரு திட்டத்துடன் அவளின் சித்தியை பின் தொடர்ந்தார்.



சில நிமிடங்களுக்கு முன்



"ஆங்........ம்ம்......." மெதுவாக கண்களை திறந்த கௌதம்மிற்கு கண்கள் திறந்தும் எதுவும் புலப்படவில்லை. தனது கைகள் பின்னாலே கட்டப்பட்டு இருந்தது அவனுக்கு விளங்கியது. பழைய பொருட்களை போட்டு வைக்கும் ஒரு பாழடைந்த அறையினுள் தான் அடைபட்டுள்ளேன் என்பது அவனுக்கு விளங்கிற்று.....

அந்த அறையின் கதவு மெதுவாக திறக்கப்பட.........

"யார் நீ? யார் நீ?....."
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 7



"யார் நீ?"..... என்று அதட்டும் தொனியில் கெளதம் குரலை உயர்த்த, எதிரே கதவிற்கு வெளியே இருந்து யாரோ பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது....

பூட்டும் உடைந்து கீழே விழ மயிரிழையில் உயிர் தப்பியது போல உள்ளே நுழைந்தான் இளைஞன் ஒருவன்.

"அண்ணா சத்தம் போடாதீங்க, அவங்களுக்கு கேட்டிட போகுது....." என்று வந்தவன் கெஞ்ச கௌதம்மிற்கு யாரிவன்? ஏன் தன்னிடம் வந்து கெஞ்சுகிறான் என்று ஒன்றுமே புரியவில்லை.

"யாரு தம்பி நீ? நீ எப்பிடி இங்க?"

"அண்ணா முதல்ல உங்க கையில போட்டிருக்கிற கட்ட அவுத்துடுறேன்....." என்று சொன்னவன் சொன்னது போல கௌதம்மின் கையினை விடுவித்தான்.

கௌதம்மிற்கு அந்த இளைஞன் தன்னிடம் ஏதோ சொல்ல முற்படுகிறான் என்பது விளங்கிற்று. அத்துடன் அங்கு நடக்கின்ற மர்மங்களும் விடை தெரிய வேண்டியிருந்தது.

"இப்ப சொல்லு யாரு நீ? எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ற?" என்று கேட்க நடந்தவற்றை சொல்ல தொடங்கினான் அவ்விளைஞன்.

" அண்ணா,என்னோட பேரு ரமேஷ். நான் பக்கத்தில இருக்கிற பாரதிபுரம்கிற ஊர்ல ஒரு ஜெராக்ஸ் கடை வச்சிருக்கேன். எனக்கு சொந்தபந்தங்கன்னு யாருமே கிடையாது. நான் ஒரு பொண்ண உயிருக்குயிரான லவ் பண்றன். அவளோட எப்பிடியாவது........." என்று தன் புராணம் பாடிக்கொண்டிருக்கும் போது இடை மறித்தான் கெளதம்.

"வெயிட் வெயிட்..... ரமேஷ் இப்போ எதுக்கு உன் கதைல்லாம் என்கிட்ட சொல்லிட்டிருக்க.... நான் என் பேமிலிய காப்பாத்தணும், அவங்களே ஆபத்துல இருக்காங்க....." என்றவாறே அவ்விடம் விட்டு நகர்ந்து வெளியே செல்ல முனைந்தான் கெளதம்.

"உங்க பேமிலிய காப்பாத்தணும்னா நான் சொல்ல போறதும் உங்களுக்கு தெரியணும்....." ரமேஷின் பதில் கௌதம்மை திரும்ப வந்து என்ன என்று கேட்க வைத்தது.

"என்ன சொல்ல போற? இந்த வீட்டில இருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா? சொல்லு......" என்று ரமேஷின் சட்டையை பிடித்து உலுக்கினான் கெளதம்.

"அண்ணா நீங்க நினைக்கிற போல இங்க எந்த அமானுஷ்யமும் இல்ல..... எல்லாமே அந்த ரெண்டு பேரோட சதி வேலைகள் தான்......"

"எந்த ரெண்டு பேரோட?"

"மனோகரியும் ராபர்ட்டும் தான்...."

"அம்மாவும் பையனும் சேர்ந்து என்ன பண்றாங்க?"

"அவங்க அம்மாவும் பையனுமே இல்ல, மனோகரி ராபர்ட்டோடதும் சாராவோடதும் சித்தி, அவங்க அப்பாவோட ரெண்டாவது சம்சாரம்."

"சாரா வா?"

"அவளத்தான் நான் லவ் பண்றன் அண்ணா..... ரொம்ப தங்கமான பொண்ணு......"

"ஏய் சாரான்னு அங்க யாருமே இல்லையே, மோனாலிசான்னு தான் ஒரு பொண்ணு இருந்திச்சு....."

"அண்ணா இப்பிடி கேட்டிங்கன்னா உங்களுக்கு எல்லாமே குழம்பிடும், என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றன்...." என்று ரமேஷ் சொல்ல ஆர்வத்துடன் கௌதமும் தலையசைத்தான்.

"அண்ணா இந்த வீட்டில மோனாலிசா, ராபர்ட், சாரான்னு 3 பேரும் அவங்க சித்தி மனோகரியும் தான் இருந்து வந்தாங்க. 5 வருசத்துக்கு முன்னாடி மூத்த பொண்ணு மோனலிசா இங்க நடந்த ஆக்சிடெண்ட்ல இறந்துட்டா. அந்தப்பொண்ணுதான் இந்த குடும்பத்துக்கு அப்பா ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கிச்சு....லிசாவோட சாவுக்கு அப்புறம் முரடனா இருந்த ராபர்ட்டுக்கு பணத்தாசை காட்டி மனோகரி நிறைய திருட்டு வேலைங்கள செய்ய வச்சா.... ஒரு கட்டத்துல மனோகரி கண்டுபிடிச்சதுதான் இந்த பேய் நாடகம். ராத்திரில தனியா வாறவங்கள பயமுறுத்தி பணம் பறிக்கிறது.... வாகனங்களை பஞ்சராக்கி அந்த நேரத்துல கொள்ளையடிக்கிறதுன்னு காலம் போய்கிட்டிருக்கு. இப்போ சாரா வளர்ந்து மோனலிசா போல இருக்கிறதால அவளையே பேய் மாதிரி செட் பண்ணி பயமுறுத்தி கொள்ளையடிக்கிறாங்க. சாராக்கு இதுல துளி கூட விருப்பமில்லைன்னாலும் தப்பிக்க வழியில்லாம எல்லாத்துக்கும் ஒத்துக்கிறா......"

"ஓ..... இதுதான் நடந்துச்சா? அந்த ட்ராப்ல தான் நாங்களும் மாட்டிகிட்டோமா?"

"அதான் இல்ல, இவங்க ஒரு தடவை கொள்ளை அடிச்சிட்டா அதுக்கப்புறம் 10,15 நாள் வெளியூர் போய்டுவாங்க..... இங்க இருக்க மாட்டாங்க. அப்பிடீன்னா தான் போலீஸ் வந்தாலும் சந்தேகம் எதுவும் வராதுன்னு.... இன்னைக்கு இவங்க எந்த பிளானும் பண்ணல. ராபர்ட் வெளியூர் போய்ட்டான், நடுராத்திரி சாராவ கூட்டிகிட்டு தூர இடத்துக்கு போய்டுவோம்னு தான் நாங்க பிளான் பண்ணினோம். என்ன சந்திச்சிட்டு வீட்டில போய் அக்காவோட ஞாபகமா வச்சிருக்கிற அவளோட கைச்செயினை எடுத்து வாரேன்னு கிளம்பி போன சாராவ தான் நீங்க வழியில பார்த்து லிப்ட் குடுத்திருக்கிறீங்க......சட்டுன்னு என்ன பண்றதுன்னு தெரியாம தன்னோட அக்கா பேர உங்ககிட்ட சொல்லியிருக்கா. ஆனா நீங்க மறுபடியும் தன்னோட வீட்டுக்கு வருவீங்கன்னு அவள் எதிர்பார்க்கல......"

"அப்போ அப்பிடீன்னா அந்த ரெண்டு கட்டைல வேலி கம்பி சுத்தி வண்டிய யாரோ பஞ்சராக்கினது யாரு?"

"என்ன அண்ணா சொல்றீங்க? உங்க வண்டி தானா பஞ்சராச்சுன்னு நாங்க நினைச்சுக்கிட்டிருக்கோம்...."

"ஹேய்.... உண்மைய சொல்லு, இது யாரோட வேலை?"

"நிஜமாத்தான் சொல்றேன். இன்னைக்கு அவங்க எந்த சம்பவமுமே செய்ய இருக்கல, ராபர்ட் வெளியூர் போய்ட்டான், இதுதான் நம்ம எஸ்கேப் ஆகிறதுக்கு சரியான டைம்ன்னு தான் சாரா சொன்னாள்......"

ஏதோ யோசித்த கெளதம் "சரி சீக்கிரம் வீட்டுக்கு போவம்....." என்றபடி கிளம்பினான்.

"இல்ல அண்ணா, வீட்டில சாரா இருக்கிறாள், அவள் பார்த்துப்பாள். ராபர்ட் உங்கண்ணன கூட்டிட்டு வண்டிகிட்ட போயிருக்கான். அவன தனியா சமாளிக்கிறது கஷ்டம். சீக்கிரம் அங்க போவம்." என்று கூறினான் ரமேஷ்.

"அந்த ராபர்ட் நான் பார்த்துக்கிறேன். நீ வீட்டுக்கு போ....." என்று சொன்ன கௌதம்மிற்கு மெயின் ரோட்டிற்கு போவதற்கான குறுகிய தூர பாதையினை ரமேஷ் காட்ட அவ்வழி விரைந்தான்.



தற்போது.......

அந்த வீட்டிலிருந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்ட நேத்ராவும் திவ்யாவும் அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஓசை ஏதும் எழுப்பாமல் அத்விக்கின் வாயை பொத்தியபடி கிளம்பினர்.

"எங்க போறீங்க? என்ன அவசரம்? பொறுமையா வண்டி ரெடி ஆகினதும் போலாமே......" என்று மனோகரின் குரல் அழைக்க இருவரும் அவ்விடத்திலேயே அசையாமல் நின்றனர்.

"அக்கா இப்ப என்ன பண்றது?" என்று நேத்ரா ரகசியமாக கேட்க, எதுவும் சொல்வதறியாமல் முழித்தாள் திவ்யா.

இவர்களின் கதையை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் அருகில் வந்தாள் மனோகரி. பின்னாலே பதற்றத்துடன் வந்து கொண்டிருந்தாள் சாரா. தனது சுயநலத்தால் அப்பாவி மனிதர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்றும் அவர்களை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்றும் அவளது நெஞ்சம் பதறிக்கொண்டிருந்தது. மனோகரி திவ்யாவின் அருகில் செல்ல வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கும் சரியாக அணைந்தது. ஏற்கனவே பயம் சூழ்ந்து இருந்த இடத்தில் இருளும் கூட்டு சேர்ந்தது. மனோகரியும் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்த எண்ணி "சாரா அந்த விளக்கு அணைஞ்சிட்டு பாரு, கொஞ்சம் எண்ணெய் ஊத்தி விடு...." என்று கூறுவது போல் தன் மாராப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவின் கையை இருட்டினுள் ஆறுதல் கூறுவது போல பற்றினாள். பின்னர் மறு கையிலிருந்த கத்தியை கொண்டு திவ்யாவின் கழுத்தை குறி பார்த்து ஓங்கி குத்தினாள்.

" ஐயோ......................................................................... அம்மா......................................................................." என்ற அழுகுரல் வேதனையில் துடித்தது........

அந்த காரிருளினுள் என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு உருவம் ஒன்று அங்கே சரிந்து விழுந்தது மாத்திரமே தெரிந்தது. அவ்விடத்தில் உயிருடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து தான் போயினர்.

கூக்குரல் கேட்டு விரைந்த ரமேஷ் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டினை அடித்துக்கொண்டு முன் வாசலை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். டார்ச் லைட் வெளிச்சம் வந்த பின்னர் தான் அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது மனோகரி என்று அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தது. அருகே ரத்தம் தோய்ந்த முகத்துடன் சாராவும் அதிர்ச்சியில் மூர்ச்சையாகி நின்றிருந்தாள். சாரா தான் தக்க சமயத்தில் சித்தியின் கதையை முடித்திருக்கிறாள் என்று புரிந்து கொண்ட ரமேஷ் அப்படியே சாராவை தாங்கிக்கொள்ள, ரமேஷ் யாரென்று அறியாதவர்கள் மனோகரின் உயிரற்ற உடலை பார்த்து நடுங்கிய வண்ணம் இருந்தனர்.

"அக்கா இங்க நடக்கிறது எதுவும் உங்களுக்கு புரியாது, சீக்கிரம் இங்க இருந்து கிளம்புங்க. கெளதம் அண்ணா எல்லாத்தயும் விலாவாரியா சொல்லுவார்." என்று ரமேஷ் சாராவை அங்கிருந்த கதிரையில் இருக்க வைத்துவிட்டு திவ்யாவையும் நேத்ராவையும் பார்த்து கூறினான்.

கௌதம்மின் பெயரை கேட்டதும் சுயநினைவிற்கு வந்த நேத்ரா "கெளதம்...... அவர எப்பிடி....?" என்று இழுக்க,

"அதுக்கெல்லாம் நேரமில்ல அக்கா, ப்ளீஸ் இங்க இருந்து போய்டுங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்றன்." என்றான்.

"ரமேஷ் நம்மளும் போய்டலாம்...." என்று குறுக்கிட்டாள் சாரா.

"நம்ம போலாம் சாரா, அதுக்கு முன்னாடி இங்க......" என்று சொல்ல முற்பட்டவனை தடுத்த சாரா "இங்க இருந்து எல்லாரும் போய்டுங்க......" என்று அடித்தொடையிலிருந்து கத்த ரமேஷும் பயந்துதான் போனான்.

எதிர்த்து எதுவும் பேசாத ரமேஷ் சாராவையும் அழைத்துக்கொண்டு திவ்யா, நேத்ரா, அத்விக்குடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.



"டேய்..... நீ அந்த நியூஸ்ல வந்தவன் தானே.... பக்கத்து ஊர்க்காரன்..... "...... என்று ராபர்ட் தோளை பிடித்து சித்தார்த் திருப்ப....... சித்தார்த்தை குத்துவதற்கு கத்தியை ஓங்கியவனுக்கு சித்தார்த்துக்கு பின்னால் இருட்டில் ஒரு உருவம் ஓடி வருவது தெரிந்தது. கத்தியை ஓங்கிய கை அப்படியே இருக்க மாரு கையால் சித்தார்த் முகத்தில் குத்து விட்ட ராபர்ட் பின்னால் ஓடி வந்தது கெளதம் என்பது தெரிந்து அதிர்ச்சிக்குள்ளானான். "இவன் எப்பிடி அந்த ரூம்ல இருந்து தப்பிச்சான்?" என்று யோசிக்காமல் "இவனையும் இப்பவே முடிச்சிடுறன்" என்று எண்ணி கௌதம்மையும் தாக்க தயாரானான்.

ஆறரை அடி உயரமும் கட்டுமஸ்தான உடலையும் கொண்ட ராபர்ட்டை பார்த்தால் யாரும் அரண்டுதான் போவார்கள். அதனால் தான் அவன் விட்ட ஒரு குத்திலேயே மயக்கம் போட்டிருந்தான் சித்தார்த். ஆனால் எதிரில் வருவது சிங்கம் என்று ராபர்ட் தெரிந்திருக்கவில்லை. தன் அண்ணனை தாக்கியதை கொண்ட கெளதம் வெறி கொண்ட சிங்கம் போல ராபர்ட் முன் வந்து, வந்த வேகத்திலேயே தன இரு கால்களையும் மடித்து இரு முழங்கால்களும் சேர்த்து ராபர்டின் நெஞ்சின் மேல் இறங்கினான். இதை சற்றும் எதிர்பாராத ராபர்ட் கௌதம்மின் தாக்குதலால் பத்தடி தூரம் தூக்கி வீசப்பட்டான். ராபர்ட் சுதாகரிப்பதற்கு கூட நேரமில்லாமல் அவனது முகத்தை கௌதமின் இரும்புக்கரங்கள் பதம் பார்த்தன. சிறிது நேரத்தில் மூச்சிழந்து மயங்கிப்போனான் ராபர்ட். அப்போதுதான் கௌதமின் ஆத்திரமும் சிறிது அடங்கியது. உடனே அருகில் அரை மயக்கத்தில் இருந்த சித்தார்த்தை தூக்கி வண்டியிலிருந்து வாட்டர் பாட்டலில் இருந்து சிறிது தண்ணீரை குடிக்க கொடுத்து தெளிவடைய செய்தான்.

சித்தார்த்தும் எழுந்து கொள்ள சரியாக ரமேஷ், சாரா, திவ்யா, நேதாராவும் அத்விக்குடன் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். திவ்யாவும் நேத்ராவும் தத்தம் கணவர்களை ஓடிச்சென்று கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தனர்.

"சித்து உனக்கொண்ணும் ஆகலேயே?" பாசத்துடன் கேட்ட திவ்யாவிற்கு, "இவன் இருக்கும் போது எனக்கு என்னடி ஆகப்போகுது" என்று கௌதமை பற்றி பெருமிதமாக கூறினான் சித்தார்த்.

நேத்ராவும் கௌதமை கட்டி அணைத்தவள் விடவே இல்லை. "ஐ லவ் யூ கெளதம்" என்று அழுதபடியே சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த அணைப்பு அப்போது கௌதம்மிற்கும் தேவைப்பட்டதால் அவனும் அவள் பிடியிலிருந்து விலகவுமில்லை.

"அண்ணா ராபர்ட் எங்கண்ணா?" என்று ரமேஷ் நால்வரையும் மீண்டும் அங்கு கொண்டு வந்தான்.

ராபர்ட் விழுந்து கிடந்த திசையை நோக்கி கையை காட்டினான் கெளதம். அந்த பக்கம் சென்ற ரமேஷ் "அண்ணா, இங்க யாரும் இல்ல...." என்று பதற்றத்துடன் நா தழும்பு கூறினான்.
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 8 (இறுதி அத்தியாயம்)

சட்டென ராபர்ட் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்த கெளதம், அங்கு வடிந்திருத்த ரத்த சொட்டுகள் மூலம் அவன் ரோட்டின் எதிர்ப்பக்கத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நுழைந்துவிட்டான் என்று விளங்கிக்கொண்டான். தானும் அங்கு நுழைய முற்பட்டவனை தடுத்தனர் அங்கிருந்தோர் எல்லோரும்.

"அண்ணா, அடிபட்டது ஒரு பாம்பு, இப்ப விட்டோம்னா அத பிடிக்கவும் முடியாது, நம்மளையும் அது சும்மா விடாது. அவன போலீஸ் கிட்ட ஒப்படைச்சா தான் எல்லாருக்கும் நிம்மதி." என்று கூறியவாறே பள்ளத்தாக்கினுள் இறங்கினான் கெளதம், கூடவே ரமேஷும் சாராவும்.

அந்த பள்ளத்தாக்கு மனிதர்களின் வாடையே அறிந்திராத பகுதி. ஒவ்வொரு எட்டும் வைத்து இறங்கி போக போக ஏன் இங்கே அவனை தொடர்ந்து வந்தோம் என்று கௌதம்மிற்கும் தோன்றியது.

" இங்க ராபர்ட்ட தேடுறது கடல்ல ஊசிய போட்டு தேடுற போலதான், நம்ம திரும்புவம்." என்று கெளதம் சொல்லவும் அந்த கூக்குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

"ஐயோ..........."

குரல் கேட்ட இடம் நோக்கி விரைந்தான் கெளதம். அங்கு அவன் கண்ட காட்சியை அவனால் நம்ப முடியவில்லை. அங்கே மெயின் ரோட்டில் தான் அவர்களது வண்டியை பஞ்சராக்கிய அந்த வேலி சுற்றிய கட்டை இருந்தது. ஒரு கட்டை ராபர்டின் முகத்தையும் மற்றயது அவனது வயிற்றையும் கிழித்திருந்தது.

"என்ன அண்ணா ஆச்சு?" பயத்தில் உறைந்திருந்த சாரா கேட்டாள்.

சில வினாடிகள் மேலும் கீழும் பார்த்த கெளதம், " இந்த ரெண்டு கட்டைகளையும் நான் தான் மேலருந்து கீழ தூக்கி போட்டிருந்தன். இவன் இப்போ தப்பிச்சு போகும் போது இது மேல விழுந்திருக்கான், இது சரிவான பாதை எங்க இருந்து விழுந்தானோ தெரியல. அவன் செய்த பாவம்......."

"எங்க அக்காக்கு பண்ணின கொடுமைக்கு கடைசியா அவ இறந்து போன இடத்திலேயே இவனோட கதையும் முடிஞ்சு....." என்று கோபத்துடன் சொன்னாள் சாரா.

நிலைமையை புரிந்து கொண்ட கெளதம் சீக்கிரம் அவ்விடம் விட்டு ரமேஷ் மற்றும் சாராவுடன் நகர்ந்தான்.

கெளதம் ரோட்டிற்கு வந்து நடந்தவற்றை தன் சொந்தங்களிடம் கூற ஒவ்வொருவரும் தமக்கு நடந்தவற்றையும் கூறினர். அன்றைய இரவு எப்படி ஒரு வாழ்க்கையில் மறக்க முடியாத இரவாக மாறியதென்பது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது.

தாம் பெரியதொரு கண்டத்திலிருந்து விடுபட்டதை எண்ணியிருந்தவர்கள் அங்கு தமக்கு உதவிய ரமேஷையும் சாராவையும் மறந்தே விட்டனர். கௌதமை தவிர.

"அண்ணா, அப்போ நாங்க கிளம்புறோம்......" என்று ரமேஷ் கௌதமை பார்த்து கூறினான். அருகிலே அடுத்து என்ன செய்வதென்பது அறியாது நிற்கும் பதின்ம வயது பெண் சாரா, அவளை இந்த நரக வாழ்க்கையிலிருந்து கூடி சென்று வாழ நினைக்கும் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன்...... இவர்கள் செய்த உதவிக்கு எப்படி கைமாறு செய்வது..... கெளதம் யோசித்திருந்தான்.

"நீங்க எங்க போக போறீங்க?"

"எங்கன்னு தெரியல அண்ணா.... ஆனா போகணும்...." என்று ரமேஷ் சொல்லும் போது சொல்லும் சாராவின் கண்கள் குளமாகின.

"நீ என் கூட வா, ரெண்டு பேருக்கும் என்ன தேவையோ அத செஞ்சு தரேன். இனி உங்க லைஃப்க்கு நான் பொறுப்பு." என்று கூற ரமேஷ், சாரா மட்டுமல்ல திவ்யாவும் நேத்ராவும் கூட இதை எதிர்பார்க்கவில்லைதான். கெளதம் சித்தார்த்தினை பார்க்க, இதுவரை தம்பியின் முடிவினை நம்பியவன் இப்போது மறுப்பானா? ஆம் என்பது போல தலையசைத்தான்.

"அண்ணா, நாங்க வந்தா உங்களுக்கு தான் வீண் சிரமம்....." என்ற ரமேஷை இடைமறித்த சித்தார்த், "தம்பி , கெளதம் முடிவெடுத்தான்னா அது சரியாத்தான் இருக்கும். நீங்க எங்க கூட வந்துடுங்க......" என்று சொல்ல ரமேஷும் சாராவும் கை கூப்பி கண்ணீரினால் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் அந்த வழியால் சென்ற வண்டியின் உதவி மூலம் பக்கத்திலிருந்த மெக்கானிக்கின் உதவியை பெற்று வண்டியை சரி செய்துகொண்டு அவ்விடம் விட்டு கிளம்ப சூரியனும் உதித்திருந்தது. அதுவரை அங்கு வந்தவர்கள் யாரிடமும் யாரும் எதுவும் கூறவில்லை. ராபர்ட்டின் உடல் இருக்கும் பள்ளத்தாக்கோ மனோகரின் உடல் கிடக்கும் அந்த காட்டிலுள்ள வீடோ யாரும் வேறு மனிதர்களுக்கு தெரியாதது. அங்கே இவர்கள் வசித்தது கூட யாருக்கும் தெரியாது. ஆகவே எந்த பிரச்சனையும் எதிர்காலத்தில் வராது என்பதை கெளதம் குடும்பத்தினருக்கும் விளக்கியிருந்தான்.

அன்றைய நாள் பிளைட்டினை தவற விட்டதாலும் ரமேஷுக்கும் சாராவுக்கும் உதவிகள் செய்ய வேண்டி இருந்ததாலும் சித்தார்த் இரு வாரம் மேலும் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை செய்ய கௌதமிற்கு ஒத்துழைத்தான்.

ரமேஷிற்கு ஒரு ஜெராக்ஸ் கடை வைத்துக்கொடுத்த கெளதம் சாராவினை அவளுக்கு பிடித்த மாதிரி கம்ப்யூட்டர் படிக்க வைத்தான்.

சித்தார்த் பயணமாகும் நாளும் வந்தது. அன்று சித்தார்த்தையும் திவ்யாவையும் அத்விக்கையும் வழியனுப்ப கெளதம் நேத்ரா மட்டுமல்ல ரமேஷ், சாராவும் வந்திருந்தனர். ஏர்போர்ட் நுழைவாயிலில் எல்லோரும் சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்க மெதுவாக கெளதம் அருகில் வந்த சித்தார்த் " இன்னும் ஆறு மாசத்துல விசா ப்ரோஸஸ் முடிஞ்சிடும், கிளம்புறதுக்கு ரெடி ஆகு....." என்று சொன்னான்.

"இல்ல அண்ணா இப்ப வரல, அப்புறம் அத பத்தி யோசிக்கலாம்...." என்று பொறுமையாக சொன்னான் கெளதம். கௌதமின் இந்தப்பதில் சித்தார்த்துக்கு கோபத்தை உண்டாக்கினாலும் அதை வெளிக்காட்டாமல் "உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும், என் கூட வா...." என்று சொல்லி விட்டு குடும்பத்தாரை விட்டு தள்ளி சென்றான் சித்தார்த். புரிந்து கொண்ட கௌதமும் சித்தார்த் பின்னாலேயே தொடர்ந்து சென்றான். திவ்யாவோ நேத்ராவோ ரமேஷ், சாராவுடனான தங்களது வெட்டி கதைகளில் இதை கவனித்திருக்கவில்லை.

"என்ன அண்ணா சொல்லு......"

"சொல்றேண்ணா, ஏன் நான் இவ்வளவு தூரம் அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறேன்னு சொல்றதுக்கு முன்னாடி இன்னொரு விஷயமும் சொல்றேன்......" என்று தனக்கு தெரிந்த ரகசியங்களை சொல்ல ஆயத்தமானான் கெளதம். சித்தார்த்தும் ஆம் என்பது போல தலையசைத்து காத்திருந்தான்.

"அண்ணா அன்னைக்கு நைட் என்ன நடந்துச்சின்னு ஒருவருக்கும் முழுசா தெரியாது, என்ன தவிர......"

"இல்லையே எங்களுக்கும் தெரியுமே........" என்றவனை இடை மறித்த கெளதம் "கொஞ்சம் பொறுமையா சொல்ல வரத கேளு....." என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

அன்னைக்கு அங்க நடந்த எல்லாமே நம்மளால நடந்திச்சுன்னு தான் நம்ம எல்லோருமே நம்பினோம். ஆனா அப்பிடி இல்ல, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒண்ணு அன்னைக்கு அங்க இருந்திச்சு."

"என்னடா இப்பிடி குண்ட தூக்கி போடுற......?"

"ஆமாண்ணா, அன்னைக்கு நம்ம வண்டில ஏறினது சாரா தான், ஆனா அங்க கட்டைல கம்பிவேலி சுத்தி நம்ம வண்டி டயர பஞ்சராக்கினது ராபர்ட் இல்ல. ஏன்னா அவன் அன்னைக்கு வெளியூர் போயிருந்தான், அதேபோல கம்பிவேலி சுத்தின கட்டைங்க ராபர்ட் என்ன அடைச்சு வச்சிருந்த ரூம்ல இருந்திச்சு.

அப்புறம் அந்த வீட்டில எந்த விளக்குமே அந்த நேரத்துல ஏத்தி இருக்கல, ஆனா நமக்கு அந்த வீட்டுக்கு எதோ ஒரு விளக்கு வெளிச்சம் தான் வழி காட்டிச்சு. அதுவும் நம்ம அந்த வீட்டுக்கு பக்கத்தில போனதும் காணாம போச்சு. உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ஆமா, நம்ம கூட அந்த வெளிச்சம் எங்கன்னு பேசினோமே?"

"நம்ம அன்னைக்கு அங்க போகணும்னு தான் இதெல்லாம் நடந்திருக்கு. இதையெல்லாம் விட இன்னொரு முக்கியமான விஷயம்......மனோகரியையும் ராபர்ட்டையும் யாரு கொன்னாங்கன்னு தெரியுமா?"

"ஆமா, மனோகரிய சாரா குத்தி கொன்னா....ராபர்ட் அந்த பள்ளத்தாக்கில் விழுந்து ..........ஆமா.....அந்த கம்பிவேலி தானே குத்திச்சு......"

"இல்ல.....அன்னைக்கு மனோகரிய சாரா எதுவும் செய்யல.... அந்த நேரம் சரியா விளக்கு அணைஞ்சிருக்கு. அங்க இருந்த யாருகிட்டயும் கத்தி இல்ல, மனோகரிய தவிர.....ரமேஷ் போய் லைட் அடிச்சு பார்க்கும் போது மனோகரி கழுத்த யாரோ அறுத்து கொலை பண்ணி இருக்காங்க... இத நீ எப்பிடி வேணா எடுத்துக்கலாம். அதே போல நான் அந்த கம்பி வேலிய தூக்கி கீழ போடல, யாரோ ராபர்ட்ட அந்த கம்பி வேலியால அடிச்சு கொன்னிருக்காங்க. நான் யாரும் எதுவும் யோசிக்க வேணாமேன்னு கம்பி வேலிய நான் தான் கீழ தூக்கி போட்டதா பொய் சொன்னேன்......"

எல்லாவற்றையும் கேட்டு வெலவெலத்துப்போன சித்தார்த் "அப்பிடீன்னா யாரு இதெல்லாம் செய்த?" என்று கேட்டான்.

"டேய் கெளதம் என்னால உன்ன புரிஞ்சிக்கவே முடியல, நீ முன்ன மாதிரி இல்ல. அன்னைக்கு ராத்திரி நடந்த சம்பவத்துக்கப்புறம் ரொம்பவே மாறிட்ட....." சித்தார்த் தனது இத்தனை நாள் சந்தேகத்தை கேட்டு விடுவதென்று முடிவெடுத்து விட்டான்.

"இல்ல அண்ணா, நான் அப்பிடியே தான் இருக்கேன்....." என்று சமாளிக்க முயன்றான் கெளதம்.

"உன்ன பத்தி முழுசா தெரிஞ்சவன் இங்க நான்தான்.... என்ன ஏமாத்தலாம்னு பார்க்காத..... ரமேஷ், சாராவ எதுக்கு இவ்வளவு தூரம் தாங்கிக்கிற? அன்னைக்கு எங்களுக்கு அவங்க ஹெல்ப் பண்ணினாங்க, அவங்களுக்கும் நம்ம ஹெல்ப் பண்ணினோம். அதோட முடிஞ்சுது. வேணும்னா எதாவது கொஞ்ச பண உதவி செஞ்சிருக்கலாம். அத விட்டுட்டு அவங்க ரெண்டு பேரையும் கூட்டி வந்து இவ்வளவு தூரம் யாரும் பார்த்துக்க மாட்டாங்க...... இப்போ இந்த நாட்ட விட்டு வரலன்னு சொல்றதுக்கு அவங்க தான் காரணமுன்னு எனக்கு தெரியும். சொல்லு...... இதில ஏதோ ஒரு விஷயம் இருக்கு. என்னான்னு சொல்லு......" என்று கண்டிப்பான குரலில் கேட்டான் சித்தார்த்.

"இனிமே சொல்ல போறது என்னோட அனுமானங்களை ஊகமும் தான். சாராவ சின்ன வயசில இருந்து வளர்த்து வந்தது அவளோட அக்கா மோனாலிசா தான். சித்தி கூட சேர்ந்துக்கிட்டு ராபர்ட்டும் லிசாவ கொடுமை படுத்திட்டு இருந்திருக்காங்க. அவள்தான் வேலைக்கு போய் சாராவ நல்லபடியா பார்த்துக்கிட்ட. அந்த நேரத்தில தான் ஒரு ஆக்சிடென்ட்ல அவள் இறந்துட்டாள். அவளோட பாடி கிடைச்சது ராபர்ட் இறந்து கிடந்த அதே இடத்துலதான்.

என்னோட தியரி என்னன்னா...... தன்னோட தங்கச்சிக்கு ஹெல்ப் பண்ண நினைச்ச லிசா அதே நேரம் அவளை கொடுமை படுத்தினவங்களையும் பழி வாங்கிட்டா........."

"அப்போ லிஷாவோட ஆத்மா தான் இவ்வளவும் செய்துச்சுன்னு சொல்றியா? சரி அதுக்கு நம்மள ஏன் இதுக்குள்ள இழுத்து விடணும்?" என்று குழப்பத்துடன் கேட்டான் சித்தார்த்.

"நீ இப்போ கேட்டதுக்கும் முன்னாடி கேட்டியே ஏன் நான் இவ்வளவு தூரம் சாராவ பார்த்துக்கிறேன்னு...... அதையும் சொல்றேன் கேளு......

அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் காலேஜில படிச்சிக்கிட்டிருக்கும் போது நேத்ரா கூட அவ பிரெண்டு கல்யாணத்துக்கு மதுரைக்கு போனேன். உன்கிட்ட காலேஜ் கல்ச்சுரல்ன்னு பொய் சொல்லிட்டு. நைட் திரும்ப வரும்போது நேத்ரா தான் வேண்டிய ஓட்டுறதா சொன்னா.... யாருமில்லாத ரோட்ல திடீர்னு வண்டி ஸ்பீட் கண்ட்ரோல் இல்லாம எதிலையோ மோத நேத்ரா மயங்கிட்டாள். நான் வேண்டிய எடுத்துக்கிட்டு போய்ட்டேன். நேத்ராவுக்கு தலைல அடிபட்டதால அந்த அதிர்ச்சியில நடந்தது எதுவுமே ஞாபகமில்லை. நானும் அத பத்தி யாருகிட்டயும் வாய் தொறக்கல. அடுத்த நாள் தான் அந்த இடத்துல நடந்த ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணு இறந்துட்டதாவும் அடிச்ச வண்டி நிக்காம போய்ட்டதாவும் நியூஸ்ல படிச்சேன். அன்னைக்கு நாங்க போன வண்டில ஒரு பொண்ணுதான் அடிபட்டிச்சுன்னு அப்போதான் எனக்கு தெரிஞ்சிச்சு.... 2 நாள் ஹாஸ்டல் போய் அழுதுகிட்டே இருந்தேன். போலீஸ்ல போய் சொல்லிடலாம்னு நினைச்சேன்.... ஆனா நான் சொன்னா, வண்டிய ஓட்டி போன நேத்ராவுக்கு தான் பிரச்சனை வரும். அத விட அவளுக்கு அன்னைக்கு ஆக்சிடென்ட் நடந்தது கூட தெரியாது. அண்ணா அந்த வலி நரகம். அந்த பொண்ணுதான் லிசா. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அந்த இடத்தில நடக்கிற அமானுஷ்யம்ன்னு வார நியூஸ் எல்லாம் படிச்சிட்டு தான் இருக்கேன்.

என்னால ஒரு பொண்ணு இறந்திடுச்சு. அதுக்கு என்னன்னு பிராயசித்தம் செய்ய போறேன்னு ஒவ்வொரு நாளும் அந்த கடவுள்கிட்ட கேட்டுக்கிட்டிருந்தேன். அவ மகள் போல வளர்த்த சாராவ நான் இப்போ விட்டு வருவன்னு நினைக்கிறியா? சொல்லுண்ணா....." என்று உணர்ச்சி மிகுதியில் கூறிய கௌதமின் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்தது.

"இவ்வளவு நாளா ஏண்டா என்கிட்டே இத சொல்லல......."

"சொன்னா நீயும் கவலைப்படுவ.... உன்னையும் கவலைப்பட வச்சு என்ன செய்ய? ஆனா இப்போ நான் செய்த தப்புக்கு கடவுளோ லிசாவோட ஆத்மாவோ ஒரு வழிய காட்டியிருக்கு. சாராவ என்னோட தங்கச்சி மாதிரி பார்த்துக்கொள்ள வேணாமா?"

"உன்னோடன்னு சொல்லாத, நம்ம தங்கச்சி அவ.....அவளை நல்ல படியா பார்த்துக்கோடா......" என்று சொன்ன சித்தார்த்தும் கண் கலங்கினான்.

"இப்போ புரியுது. நம்ம ஏன் இதில சிக்கினோம்னு.... எங்க தொடங்கினதுக்கு எங்க முடிவு கிடைச்சிருக்கு பார்த்தியா.....டேய் இந்த விஷயம் சாராவுக்கு......"

"இது எனக்கு, இப்போ உனக்கு தெரியும். வேற யாருக்கும் தெரியாது. எப்பவும் தெரிய வராது....."

"சித்தார்த் சித்தார்த் நம்ம பிளைட் பத்தி அனௌன்ஸ் பன்றாங்க, சீக்கிரம் வா. டைம் ஆகிட்டுது...." என்று தூரத்திலிருந்து கூப்பிட்டாள் திவ்யா.

சித்தார்த்தும் கௌதமும் மீண்டு அங்கே செல்ல, அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் வந்த டையாளத்தை கண்ட திவ்யா " இந்த அண்ணன் தம்பி பாசத்துக்கு அளவே இல்லையா.....இந்தா கௌதமும் சீக்கிரமே அங்க வந்திடுவான். அதுக்குள்ளே பிரிஞ்சிருக்க ஏலாதோ? " என்று கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

"கெளதம் ஒண்ணும் அங்க வந்து கஷ்டப்பட தேவையில்லை. அவன் இங்கயே இருக்கட்டும். நம்ம குடும்பத்தில இப்போ புதுசா ரெண்டு பேர் வந்திருக்காங்க. அவங்களோட ஒண்ணா இருக்கட்டும். நான் அடிக்கடி இங்க வந்து போவன்." என்று சொல்ல திவ்யாவிற்கு ஆச்சர்யம் ஏற்பட தற்போது சாராவின் கண்கள் கலங்கியிருந்தது.

விபரம் எதுவும் முழுதாக அறியாத நேத்ரா "கடவுளே வெளிநாட்டுக்கு போக வேணாம்னு நான் எத்தனையோ தடவ சொல்லியும் கேட்காத கெளதம் இப்போ இப்பிடி மாறிடுச்சே. நன்றி கடவுளே..." என மனதிற்குள் சொல்ல , மறுபுறம் சாராவும் தனக்கு இப்படி ஒரு நல்ல சொந்தம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னாள்.

இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்த அந்த தாய்மையுள்ளம் கொண்ட அமானுஷ்யமும் சாராவின் வாழ்க்கை கண்டு துயில் செல்ல ஆயத்தமானது.



முற்றும்.​
 
Status
Not open for further replies.
Top