ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

லிசா பள்ளத்தாக்கு - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 1

நேரம்: மாலை 6.30

மதுரையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மந்த கதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கியிருக்க இரு விழிகள் மாத்திரம் பேருந்து ஜன்னலினூடே இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தது. இடைப்பட்ட நகர்களை எல்லாம் வியப்புடன் பார்த்த அந்தக்கண்கள் "கல்வராயன்" மலைக்காடுகளை பேருந்து அண்மித்ததும் இனம் புரியாத மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. தான் பிறந்து வளர்ந்த இடத்தை அடைந்ததும் இவ்வகையான உவகை வருவது சாமானியர்களுக்கே உரித்தான இயல்புதானே! அந்தியூர் சந்தியில் அவ்விளம்பெண் இறங்குகையில் பேருந்திலிருந்து சாரதி முதற்கொண்டு பேருந்தை சடுதியாக நிறுத்தியதில் தூக்கம் கலைந்த சிலர் வரை அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை. அங்கே ஒரு பெண் தனியாக இறங்குகிறாள் என்றால் மற்றவர்களின் பார்வையும் நியாயம்தானே!

அவள் இறங்கும் நேரத்திற்கெல்லாம் ஆதவனும் காட்டிற்குள் ஒளிந்துகொள்ள ஆளரவமே அற்ற அந்த காட்டு பாதையில் மனதில் சிறு பயமுமின்றி கடந்த கால நினைவுகளில் மூழ்கியவளாய் தனது பயணப்பொதியை தோளில் சுமந்துகொண்டு நடை பயணத்தை தொடர்ந்தாள் அந்த சிங்கப்பெண். பனிப்புகார் எதிரே இரண்டு மூன்று அடி தூரத்திற்கப்பால் எல்லாவற்றையும் மறைத்துவிட பாதையின் ஒரு பக்கம் நூறடி ஆழமான பள்ளத்தாக்கும் சூழ்ந்து கொள்ள, இவை எதையும் சட்டை செய்யாமல் வந்தவளுக்கு தனக்கு நேரப்போகும் ஆபத்து புரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில நொடிகளில் எதிர் திசையில் ஏதோ ஒன்றை உற்றுப்பார்த்தவள் தனது வேகத்தை துரிதப்படுத்தினாள். நாளொன்றுக்கு ஓரிரு வாகனங்களே அந்தக்காட்டு பகுதியை கடந்து செல்லும். அப்படி சென்ற ஓர் வாகனம் இன்று அவள் பாதையை கடக்கும் போது சென்றது. இல்லை இல்லை அவள் கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து அவளை மோதித்தள்ளி பள்ளத்தாக்கினுள் தூக்கியெறிந்தது. தூக்கியெறியப்பட்டவளின் கண்கள் இறுதி மூச்சிருக்கும் வரை மூடவில்லை, சில நிமிடங்களுக்கு முன்னர் ஆயிரம் கனவுகளுடன் குதூகலித்த அந்தக்கண்கள் நிராசைகளின் பிரதிபலிப்பாக அந்தப்பள்ளத்தாக்கினுள் ஏக்கத்துடன் துயில் கொள்ள எத்தணித்தது, கண்களை மூடாமல்..........




5 வருடங்களுக்கு பிறகு,

ஈரோடு நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்.....



"உள்நாட்டு செய்திகள்....... கல்வராயன் மலைக்காடுகளூடாக திருவண்ணாமலை அரூர் நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு இரவு வேளையில் ஓர் அமானுஷ்ய பெண் உருவம் தென்படுவதாக ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின்றன. அவ்வுருவம் சில வருடங்களின் முன்னர் அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த "லிசா" என்ற பெண்ணின் உருவம் என்றும் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். லிசா இறந்து கிடந்த பிரதேசத்தை எல்லோரும் "லிசா பள்ளத்தாக்கு" என்றே அழைக்கின்றனர். கடந்த ஆறு மாதத்தில் மாத்திரம் இவ்வழியில் ஏழு விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிகின்றது. அந்தப்பகுதியை கடக்கும் போது மர்மமான முறையில் தான் செலுத்திக்கொண்டிருந்த வாகனம் பஞ்சர் ஆனதாக நாமக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தெரிவித்திருந்தார். அதேவேளை அப்பகுதியில் இரவு வேளையில் ஒரு மர்மமான பெண் உருவம் ஒன்று உலாவுவதை தான் பார்த்ததாக அருகிலுள்ள ஊரை சேர்ந்த நடேசன் என்ற வாலிபர் தெரிவித்துள்ளார். உள்ளூர் போலீசாரும் இரவு வேளையில் அங்கே செல்ல பயப்படுவதால் பொதுவாக இரவு வேளையில் அவ்வழியில் பிரயாணிப்பதை தவிர்க்குமாறு அருகிலுள்ள முல்லையூர் கிராமத்தின் ஊர் தலைவரினால் அறிவுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு புறம் இருக்க 'இது எல்லாம் கட்டுக்கதை, பேய் என்று சொல்லி மக்களை மடையர் ஆக்குகின்றனர்' என்று சொல்லிக்கொண்டும் ஒரு முற்போக்கு சிந்தனையுடைய கூட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்புகின்றது. உண்மையில் லிசா பள்ளத்தாக்கின் பயங்கரம் உண்மைதானா? யாரிந்த "லிசா"? இடை வேளைக்கு பின்னர் பார்க்கலாம்"

தொலைக்காட்சியை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த நேத்ராவிற்கும் திவ்யாவிற்கும் ஏசி குளிரிலும் வியர்க்க தொடங்கியது.

அருகிலிருந்த சித்தார்த்தும் கௌதமும் இவர்கள் இருவரையும் பார்த்தபடி சிரிப்பையும் அடக்க முடியாமல் அடக்கி கொண்டிருந்தனர். கௌதமிற்கு சில நிமிடங்களின் பின்னர் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் பெரிய சத்தமாக சிரித்தே விட்டான்.

"நேத்ரா சத்தியமா என்னால முடியல்லடி......" என்று சொன்னபடி கெளதம் மீண்டும் சிரிக்க சித்தார்த்தும் அவனுடன் துணைக்கு இணைந்து கொண்டான்.

"உங்களுக்கு எல்லாமே விளையாட்டுதான்..........., கெளதம் இப்ப நீ ஏன் பல்ல காட்டி கொண்டிருக்கிறாய்?" என்று திவ்யா இருவரிலும் பாய்ந்தாள்.

திவ்யாவின் கோபம் கண்டு சிரிப்பை அடக்கிக்கொண்ட கௌதமோ " ஸாரி அண்ணி, இதெல்லாமா நீங்க நம்புவீங்க?"

"கெளதம் கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புறம், கண்ணுக்கு தெரியுதுன்னு சொல்ற விஷயத்த நம்பாம இருந்தாலும் பொய்ன்னு சொல்லிட முடியாது. இல்லையா?"

"ஆஆஆஆஆ...... அவன் டிவி சேனல்காரன் தன்னோட நிகழ்ச்சிக்கு டீ ஆர் பி ரேட்டிங் வரணும்னு ஏதேதோ அடிச்சு விடுறான். அத போயி நம்பிகிட்டு...."

"டேய் கெளதம், டீ வில எப்பிடி சொல்றான்னு பார்த்தியா? அமானுஷ்யம்..... நடந்தது என்ன? அப்பிடி இப்பிடீன்னு ஒரு ஹாரர் மூவி பார்க்குற பீலிங் குடுப்பான். அத கேட்டா யாரா இருந்தாலும் பயம் வரும் தான்.... பட் இந்த பயம் கொஞ்சம் ஓவர் தான்!" என்று சித்தார்த் கூறி விட்டு மீண்டும் இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர். இப்போது அவர்களுடன் திவ்யாவும் இணைந்து கொண்டாள்.

ஆனால் நேத்ராவோ இன்னும் இயல்புநிலைக்கு திரும்பாமல் பேயறைந்தவள் போல விழித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கவனித்த சித்தார்த்தும் கௌதமிற்கு கண்களால் சைகை செய்ய கௌதமும் "அவளை விடுங்கண்ணா, இது சரிப்பட்டுவர ரெண்டு நாள் ஆகும். அந்த டீவிய ஆஃப் பண்ணிவிடுங்க." என்று சொல்ல சித்தார்த்தும் ரிமோட்டில் சிவப்பு பட்டனை அழுத்திவிட்டான்.

"நேத்ரா ரிலாக்ஸ், எனக்கும் பயமாத்தான் இருந்திச்சு. மைண்ட வேற எதிலாச்சும் கொண்டு போனா அத மறந்துடலாம்." என்று திவ்யா கூற 'ஆம்' என்றபடி தலையசைத்தாள் நேத்ரா.

"டேய் கெளதம், நேத்ரா இவ்வளவு அப்செட் ஆவாள்னு தெரிஞ்சும் ஏன்டா இந்த ப்ரோக்ராம போட்ட?" என்று சிறிது கோபத்துடனே கேட்டான் சித்தார்த்.

"இல்லண்ணா, என்ன பயமுறுத்துறதில இவனுக்கு ஒரு சந்தோஷம்" என்று நேத்ராவும் கூற, தனக்கெதிராக வாக்குகள் அதிகமாவதை உணர்ந்த கெளதம் சரணடைந்துவிட்டான்.

"ஸாரி ஸாரி..... மன்னிச்சுக்கோங்க. வேற ஏதாச்சும் டொபிக் மாத்துவமா?" என்று கெளதம் கூற எல்லோரும் ஆம் என தலையசைக்க "சித்தப்பா எனக்கு பேய் கதை சொல்றீங்களா?" என நான்கு வயது அத்விக் குட்டி மழலை ததும்ப கேட்ட படி அங்கே வர சிரிப்பொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது.

"என்னப்பா எல்லாரும் சிரிச்சிட்டிருக்கீங்க? என்னன்னு எனக்கும் சொல்லலாம்ல...." என்று சொல்லியபடி சித்தார்த்தினதும் கௌதம்மினதும் சித்தி கையில் தேநீர் கோப்பையுடன் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

சித்திக்கு நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக கெளதம் விபரிக்க எதுவும் புரியாமல் அத்விக்கும் முழித்துக்கொண்டிருந்தான்.

சித்தார்த்தும் கௌதமும் கூடப்பிறந்த சகோதரர்கள். சித்தார்த் கௌதம்மை விட மூன்று வயது மூத்தவன். மாமாவின் மகளான திவ்யாவை மணமுடித்துக்கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டான். கௌதம்மிற்கு திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. காதல் திருமணம், நேத்ரா. இருவரும் ஒரு பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்கள். சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசம் கொண்டவர்கள். நவீன கால ராமன் இலட்சுமணன் என்றும் சொல்லலாம். விடுமுறையைக்கழிக்க சொந்த ஊருக்கு வந்த சித்தார்த் கௌதம்மையும் சில நாட்களில் கனடா அழைத்துச்செல்லும் திட்டத்தில் தான் வந்திருக்கிறான்.

"சித்தி என்ன இன்னும் சித்தப்பாவ காணல....." சித்தார்த் கேட்க,

"சாய்ங்காலத்துக்குள்ள வந்துடுறேன்னுதான் சொன்னார், ஏதோ மீட்டிங் லேட் ஆகிட்டுதாம். இப்போ வந்துடுவாரு."

"அண்ணன் வாரான்னு தெரியும், அந்த நேரத்துலதான் நீங்க டெல்லிக்கு போகணுமா? இப்ப இந்தா நாளைக்கு காலைல பிளைட்ட வச்சிட்டு இங்க வந்திருக்கான்." கெளதம் சித்தியுடன் செல்லமாக கோபிக்க,

"டெல்லிக்கு போக வேண்டிய கட்டாயம், உனக்கும் பாரதியோட நிலைமை தெரியும் தானேப்பா... உங்கண்ணன பார்க்குறதுக்காகதான் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தோம், வந்த உடனே எமேஜேன்ஸின்னு போய்ட்டாரு. இப்ப வந்துடுவாருப்பா. கோவிச்சிக்காத." என்று சித்தி கௌதம்மை சமாதானப்படுத்தினாள்.

"சித்தி நீங்க வேற, இவனோட பேச்ச பெரிசா எடுத்துக்கிட்டு..... நான் எவ்வளவு நேரமானாலும் சித்தப்பாவை பார்த்திட்டு தான் கிளம்புவன்." என்று சித்தார்த் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

சித்தியின் செல்லப்பிள்ளை கெளதம் சித்தியுடன் இவ்வாறு செல்லமாக கோபித்து கொள்வது அவர்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.

கடைசியாக சித்தப்பா வந்து சேர சாயங்காலமாகிவிட்டது, வந்தவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு டிபனையும் வேகமாக உள்ளே தள்ளிவிட்டு சித்தி சித்தப்பாவிடம் விடைபெற்று கிளம்பும் போது மணி ஏழாகியிருந்தது.

இரவு வேளையில் வாகன நெரிசல் இல்லாதிருந்தாலும் அதிகாலை ஆறு மணிக்கு பிளைட்டை பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தபடியால் கௌதமுக்கு சிறிது டென்ஷனாகவே இருந்தது. எதற்கும் அவசரப்படுபவனாக இருந்த கெளதம் டென்ஷன் ஆகியிருப்பான் என்று சித்தார்த்துக்கு தெரிந்திருந்தது. கெளதம் வண்டியை ஓட்டிய வேகத்திலிருந்து திவ்யாவிற்கும் நேத்ராவிற்கும் கூட கௌதம்மின் மனநிலை விளங்கிற்று. காற்றாய் பறந்த வண்டி அடுத்த நாற்பத்தைந்து நிமிடத்தில் சேலத்தை வந்தடைந்திருந்தது. அங்கு ஒரு பெட்ரோல் பங்கில் டேங்கை புல் செய்து விட்டு மீண்டும் தொடங்கியது பயணம்.

"டேய் கெளதம், இப்பதான் எட்டு மணி. நீ போற ஸ்பீடுக்கு பன்னிரெண்டு மணிக்கே ஏர்போர்ட்டுக்கு போய்டலாம் போல இருக்கு. அவ்வளவு ஏர்லியா போய் என்னடா பண்றது. கொஞ்சம் மெதுவா போடா." ஈரோடிலிருந்து சேலம் வரை இருந்த அமைதியை கலைத்தான் சித்தார்த்.

"யெஸ் கெளதம், அண்ணா சொல்றதுதான் சரி. அத்விக் கூட பயந்து போய்ட்டான். கொஞ்சம் மெதுவாத்தான் போயேன்." நேத்ராவும் தன் பங்குக்கு சொல்ல திவ்யாவும் ஆம் என்பதுபோல வேகமாக தலையாட்டினாள்.

நேரத்தை சரி பார்த்துக்கொண்டு கௌதமும் வண்டியின் வேகத்தை குறைத்துக்கொண்டான்.

"இல்லண்ணா, எல்லாம் சித்தப்பால இருந்த கோபத்திலதான்......."

"டேய் அவர் என்னடா பண்ணினார் உனக்கு......?"

"எங்களை விட வேற என்ன அர்ஜென்ட் வேலை?"

"ஏதோ முக்கியமான மீட்டிங்காம், என்னன்னு நானும் கேட்கல. என்ன இருந்தாலும் என்னையும் அத்விக்கையும் பார்க்கணும்னுதான் அவசரமா டெல்லில இருந்து வந்திருக்காங்க. கொஞ்சம் லேட் ஆகிட்டு. அதுக்காக கோப படுறதாடா?"

"நான் சித்தி வீட்ட கோபப்படலயே, என்னோட டென்ஷன் அவங்களுக்கு தெரியுமா?"

"உனக்கென்னடா டென்ஷன்?"

"உன்னையும் அண்ணியையும் அத்விக்கையும் டைமுக்கு ஏர்போர்ட்ல கொண்டு விடணும். நானூறு கிலோமீட்டர் ட்ராவல் பண்ணணுமே, அத பத்தி அவங்க கொஞ்சமாச்சும் யோசிச்சாங்களா?"

"எனக்கு விளங்குதுடா, நீ இப்போ வேகமா போயி வேற ஏதாவது ஆச்சுன்னா, என்ன பண்றது? உனக்குத்தான் சித்தப்பாவ பத்தி தெரியும்தானே. மத்தவங்கள பற்றி யோசிக்க மாட்டாரு. நமக்கிருக்கிற ஒரே சொந்தம் அவங்கதான். என்ன இருந்தாலும் அவங்கள நான் விட்டு கொடுக்க மாட்டன்டா"

"உனக்கு எப்பிடித்தான் இவ்வளவு பொறுமைல்லாம் இருக்குதோ?"

கௌதம்மை பற்றி நன்கு அறிந்த சித்தார்த் தக்க சமயம் பார்த்து இந்த உரையாடல் மூலம் கௌதம்மை சமாதானப்படுத்தி விட்டான். அதன் பின்னர் சிறிது தூரத்திற்கு சிரிப்பு சத்தங்களால் நிரம்பியிருந்தது அந்த லேண்ட் ரோவர்.

திரும்ப கௌதம்மின் நிம்மதியை கெடுக்கும் விதமாக அடுத்த நிகழ்வும் நிகழ்ந்திருந்தது.

சேலத்திலிருந்து ஏறத்தாழ நாற்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மேட்டுப்பட்டி எனும் ஊரை அவர்கள் கடக்கும் போது இவர்கள் சென்ற பாதையில் பல வாகனங்கள் வரிசையில் நிற்பது தெரிந்தது. உடனடியாக தொலைவிலேயே வண்டியை நிறுத்திய கெளதம் வண்டியை விட்டு இறங்கி அங்கு என்ன நடந்ததென விசாரிக்க சென்றான். கூட்டமாக இருந்த இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் பதற்றத்துடன் அவர்களது வண்டி நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தான் கெளதம்.

"டேய் என்னாச்சுடா? ஏன் இவ்வளவு டிராபிக்?"

"அண்ணா, முன்னால ஒரு ஆக்ஸிடெண்ட். பஸ் ஒண்ணும் கார் ஒண்ணும் நேருக்கு நேர மோதியிருக்கு. பஸ் நடுவுல நிக்கிறதால வாகனம் ஒண்ணும் மூவ் ஆகேலாம நிக்குது. கிரேன் கொண்டு வந்துதான் ரிமூவ் பண்ணுவாங்களாம். மூணு நாலு மணித்தியாலம் ஆகும்னு சொல்றாங்க." என்று பதறினான் கெளதம்.

"இப்ப என்னங்க பண்றது?" பதற்றத்துடன் இப்போது கேட்டது திவ்யா. ஏனெனில் இப்போது எல்லோருக்கும் எப்படி அந்த இடத்தை கடந்து செல்வதென்ற பதற்றம் தொற்றியிருந்தது, அத்விக்கை தவிர.

எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்க கெளதம் அங்கிருந்த ஊராரிடம் ஏதோ கதைத்துவிட்டு வேகமாக வந்தான்.

"அண்ணா, நம்ம வேற வழில போறதுதான் இருக்கிற ஒரே வழி. நம்ம வந்த வழிலேயே திரும்ப கொஞ்ச தூரம் போனா அயோத்யாபட்டினம்ன்னு ஒரு ஜங்க்ஷன் வருமாம். அங்க ரைட் எடுத்து அந்த ரூட்ல போனா திருவண்ணாமலை ,திண்டிவனம் போட்டு போயிடலாம். அதுதான் ஒரே வழி. மற்ற வழியெல்லாம் தலைய சுத்தி மூக்க தொடுறமாதிரி."

"அப்பிடீன்னா அதிலயே போய்டலாமேடா."

"கெளதம், இந்த ராத்திரி நேரத்துல தெரியாத ரூட்ல போகணுமா?" பதற்றத்துடன் கேட்டாள் நேத்ரா.

"நமக்கு வேற சாய்ஸ் இல்ல நேத்ரா....." கூறியது கெளதம்,

"நேத்ரா ஒண்ணும் ஒர்ரி பண்ணாத, கூகிள் மேப்ல இல்லாத ரூட்டா?" என்று சித்தார்த்தும் சமாதானம் செய்தான்.

இருந்தாலும் நேத்ராவிற்கு ஏதோ ஒரு பயம் சூழ்ந்திருந்தது.

"ஹ்ம்ம்...... டைம வேஸ்ட் பண்ணாம கிளம்புவம்." என்று கெளதம் சொல்ல அனைவரும் அதை ஆமோதிக்க வண்டியும் அயோத்யாபட்டினம் சந்தியில் திரும்பி கல்வராயன் மலைக்காடுகளை நோக்கி அங்கே இவர்களுக்கு காத்திருக்கும் பயங்கரத்தை பற்றி தெரியாமல் பயணிக்க தொடங்கியது.
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 2



அயோத்யாபட்டினம் சந்தியில் திரும்பி சிறிது நேரத்திற்கெல்லாம் பாதையில் எந்த வாகனங்களுமில்லை. ஆங்காங்கே சில சிறிய உணவகங்கள் மாத்திரமே திறந்திருந்தன. அதிலும் பல மூடப்பட்டு கொண்டிருந்தது. மின்மினிப்பூச்சிகளை காண்பது போலவே சில வீடுகளில் வெளிச்சம் கண்ணில் பட்டது.

கௌதம்மிற்கு அன்று பயணம் தொடங்கியதிலிருந்து பல தடங்கல்கள் ஏற்பட்டதை நினைத்து ஒரு மாதிரி நெருடலாகவே இருந்தது. பின்னால் அமர்ந்திருந்த நேத்ராவும் அண்ணியும் அத்விக்கும் தூங்கிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அண்ணனுடன் பேச்சு கொடுத்தான் கெளதம்.

"அண்ணா, ஏதோ மனசே சரியில்லாம இருக்கு!"

"தெரியுதுடா, நீ முன்ன மாதிரி இல்ல, சாஸ்திர சம்பிரதாயம் எல்லாத்தையும் கிண்டலடிச்சிட்டே இருப்பா, இப்ப என்னடான்னா போன வழில ஒரு ஆக்சிடென்ட் ஆனதால மனச போட்டு குழப்பிட்டிருக்கா. நல்ல தமாஷ்தான் போ!" என்று சொல்லிவிட்டு மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினான் சித்தார்த்.

சித்தார்த்தின் பேச்சு கௌதம்மின் தளர்வை போக்கியது போல இருந்தது.

"நான் அப்பிடியேதாண்ணா இருக்கிறன், உங்களை பாதுகாப்பா கொண்டு போய் சேர்த்திடணும்னு தான்........" என்று சொல்லி கொண்டிருக்கும் போது இடைமறித்த சித்தார்த் "அதெல்லாம் நம்ம போய்டலாம். இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? இப்ப வண்டிய நிறுத்து. நான் கொஞ்ச தூரம் ட்ரைவ் பண்றன்." என்று கொஞ்சம் காட்டமாகவே கூறிய சித்தார்த் ஓட்டுனரின் இருக்கையை பறித்துக்கொண்டான்.

வழமையாக இளங்குருளை போல எதற்கும் அஞ்சாமல் துள்ளித்திரியும் கெளதம் இன்று கொஞ்சம் ஓவராகவே பயப்படுவது சித்தார்த்துக்கும் ஒரு நெருடலைக்கொடுத்தது.

சித்தார்த்தின் பார்வையில் மட்டுமல்ல, நிஜமாகவே பயமறியா சிங்கம்தான் கெளதம். வாழ்க்கையில் அவன் எப்போதும் நிலை தடுமாறியதில்லை. எதற்கும் பயந்ததில்லை. கர்ணனுக்கு கவச குண்டலம் போல கௌதம்மிற்கு தைரியம் என்றும் அவனை விட்டு போனதில்லை. தாய் தந்தையை இழந்து சித்தார்த்தும் கௌதமும் தனித்த போது கௌதம்மிற்கு வயது வெறும் பதினெட்டுத்தான். உடைந்து போன அண்ணனுக்கு நம்பிக்கை கொடுத்து தானே பகுதி நேர வேலைக்கு போய் அண்ணனையும் படிக்க வைத்து தானும் படித்து இன்று வரை அந்தக்குடும்பத்தின் ஆணி வேராக இருந்திருக்கிறான்.

இப்படி இருந்தவன் இன்று இப்படி பதறுவதற்கும் காரணம் இல்லாமலில்லை. சித்தப்பாவின் தாமதம், பஸ் ஆக்சிடென்ட் மாத்திரம் முற்போக்குவாதியான கௌதம்மின் நிலையை மாற்றி விடாது. அவனது உள்ளுணர்வு அவனுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தது. இவ்வாறான எச்சரிக்கை உணர்வு கௌதம்மின் வாழ்க்கையில் முன்னொரு தரமும் நிகழ்ந்திருக்கின்றது. அன்று கல்லூரிக்கு புறப்பட்டதிலிருந்து கௌதம்மிற்கு எல்லாமே அபசகுணமாகவே இருந்தது. கல்லூரிக்கு செல்லும்போது எதிரே கண்ட ஒரு விபத்து, விபத்து நடந்த இடத்தில் தலை விரிகோலமாக நின்ற ஒரு பெண், கல்லூரி வளாகத்தில் காய்ந்து போயிருந்த அத்தி மரம் இப்படி பல நிகழ்வுகள் அன்றைய நாளை கேள்விக்குள்ளாக்கியது. இவற்றையெல்லாம் வேறு நாட்களில் கண்டிருந்தாலும் கூட அன்று அவனுக்கு நெஞ்சம் படபடத்தது. என்னவென்று புரியாத ஏதோ ஒரு மாயை அவனை பிடித்துக்கொண்டது. யாரிடமும் சொல்ல முடியவில்லை, இல்லை, எப்படி சொல்வதென்று புரியவில்லை. அன்று முழுதும் நீடித்திருந்த அந்த உள்ளுணர்வு அன்றிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆம், கௌதம்மின் பெற்றோர் சென்ற கார் ஒரு பஸ்சுடன் மோதி தாயும் தந்தையும் பலியாகிய செய்தியை கேட்ட பிறகே முடிவுக்கு வந்தது.

இவ்வாறான நிகழ்வுக்கு பலரும் பல பெயர் வைத்தாலும் கெளதம் இதை தனக்கு கிடைத்த எச்சரிக்கையாகவே எண்ணியிருந்தான்.

அப்படியான ஓர் இனம் புரியாத உள்ளுணர்வு இன்றும் அவனை ஆட்டி படைத்துக்கொண்டிருந்தது. பழைய நினைவுகளையும் மீட்டி பார்த்துக்கொண்டிருந்த கெளதம், இந்த விடயத்தை முன்னரும் சித்தார்த்திடம் கூறவில்லை, இப்பொழுதும் கூறி சித்தார்த்தை பயமுறுத்தும் எண்ணம் இல்லை.

'என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என்று தனக்கு தானே தைரியமூட்டிக்கொண்டிருந்தான்.

நேரமும் தூரமும் செல்ல செல்ல ஆங்காங்கே தென்பட்ட சிறு சிறு வீடுகளையோ மனிதர்களையோ காண கிடைக்கவில்லை. பாதையும் குறுகலாகிக்கொண்டே மின்விளக்குகளும் இல்லாமல் வெறிச்சோடிப்போயிருந்தது.

"என்ன கெளதம், இந்த பாதையில போனா ஊர் போய் சேர்ந்திடலாமா?" தூக்கத்திலிருந்து கண்விழித்த திவ்யா அந்த காட்டின் கோலத்தை பார்த்துவிட்டு கௌதம்மை சீண்டினாள்.

திடீரென தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு தடுமாறிக்கொண்டே "அதெல்லாம் போயிடலாம் அண்ணி" என்று சமாளித்தான்.

"திவ்யா, அவனே பயந்து போயிருக்கான். நீ வேற அவன பயமுறுத்திகிட்டு....." என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சித்தார்த்.

அண்ணனின் நக்கல் பேச்சு தம்பிக்கு கோபத்தை உண்டாக்கிற்று. "பயமா? எனக்கா? என்ன பயமுறுத்துற அளவுக்கு இங்க எதுவும் இல்ல. இந்த உலகத்துலயே எதுவும் இல்ல."

"ஆமா, அப்பிடி பயப்பட்டாலும் வெளிய காட்டிக்கமாட்டாரு. அப்பிடித்தானே டார்லிங்?" என்று தன் பங்குக்கு நேத்ராவும் கிண்டலடிக்க,

"என்னோட தம்பி எதுக்கும் பயப்படமாட்டான்." சித்தார்த் தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுக்க,

"ஷ்ஷப்பா...... இந்த அண்ணன் தம்பி பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு. தம்பிய கிண்டலடிச்சா உங்களால பொறுத்து கொள்ள முடியாதே?" திவ்யா இப்போது இருவரையும் கலாய்க்க தொடங்கினாள்.

"ஆமாக்கா, எனக்கும் இதே தொல்லைதான். எங்கண்ணா அப்பிடி, எனக்கு அண்ணாதான் எல்லாமே, அவருக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும்னு ஒவ்வொரு நாளும் இதே புராணம்தான்." நேத்ரா சொல்ல சொல்ல சித்தார்த்துக்கு தன் தம்பியை எண்ணி பெருமிதமாக இருந்தது.

"அண்ணா, இவள் இப்பிடித்தான், எதுக்கோ கற்பூர வாசனை தெரியுமான்னு சொல்லுவாங்களே, அதுபோலதான்." என்று கெளதம் சொல்ல சகோதரர்கள் இருவரும் வாய்விட்டு சிரிக்க, நேத்ரா செல்லமாக முறைத்துக்கொண்டாள்.

சித்தார்த் தனது செல்போனில் நேரத்தை பார்த்த போதுதான் அந்த இடத்தில் சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டான்.

"சித்து அங்க பாரு!!!!!!" திவ்யாவின் பதற்றமான குரலில் திடுக்கிட்ட அனைவரும் திவ்யா கை காட்டிய திசையில் பாதையில் தொலைவில் ஒரு உருவம் அசைந்து கொண்டிருப்பதை கண்டனர்.

தன்னையறியாமல் சித்தார்த்தின் கால் பிரேக்கை அழுத்த வண்டியின் வேகம் சடுதியாக குறைந்தது, இருந்தாலும் வண்டியை நிறுத்தவில்லை.

"என்ன அது!!!!!" பயத்தில் நடுங்கியபடி கேட்டாள் நேத்ரா.

சித்தார்த் எதுவும் பேசாமலிருக்க கெளதம் கையை அசைத்து மெதுவாக வண்டியை செலுத்துமாறு சைகை காட்டினான். இப்படியான தருணங்களில் தம்பி பேச்சை தட்டாத அண்ணன் கௌதம்மை பின்தொடர்ந்தான்.

"யாரும் பயப்பட வேணாம், அது ஒரு பொண்ணுதான்." கெளதம் கூறிய பின்னர்தான் அனைவரும் உற்றுப்பார்க்க, கெளதம் கூறியது உண்மை என விளங்கியது.

"இந்த நேரத்துல, இந்தக்காட்டுக்குள்ள இந்தப்பொண்ணு தனியா எங்க போகுது?" என்று கூறியபடி வண்டியின் வேகத்தை மெதுவாக கூட்டினான் சித்தார்த்.

"தெரியல அண்ணா, இங்க சில வீடுகள் இருக்கிறத பார்த்தன், இந்த இடத்து பொண்ணாத்தான் இருக்கும்."

"வீடா? இங்கயா? எனக்கு எதுவுமே தெரியலையே கெளதம்?" திவ்யா சந்தேகக்குரலில் கேட்க,

"அண்ணி சும்மா பார்க்ககுள்ள தெரியல, எந்த வீட்டிலேயும் ஆட்கள் இருக்கிறது போலவும் தெரியல. ஒண்ணு ரெண்டு வீட்டை பார்த்தன், அவ்வளவுதான்."

"எனக்கென்னமோ பேய்படங்கள்ல வாற மாதிரியே இருக்கு." என்று நேத்ரா சொல்லவும் இவர்களது வண்டி அந்தப்பெண்ணை கடந்து செல்லவும் சரியாக இருந்தது.

வண்டியில் விழித்திருந்த எட்டு கண்களும் அந்தப்பெண்ணையே உற்றுப்பார்த்தன.

மஞ்சள் நிற சல்வார் அணிந்து அருகில் ஒரு வாகனம் செல்வதைக்கூட பார்க்காமல் நேராக பார்வையை செலுத்தி சென்றவளுக்கு வயது இருபது கூட ஆகியிருக்காது. வண்டியின் ஹெட் லைட் அவள் மீது பட்ட நேரத்தில் வேறு எதையும் கவனிக்க முடியவில்லை.

கடைசியாக நேத்ரா சொன்ன வார்த்தைகள் எல்லோருக்கும் நினைவுக்கு வர நேத்ராவை தவிர எல்லோரும் சிரித்துவிட்டனர்.

"நேத்ரா இதுதானா உன்னோட படங்கள்ல வாற பேய்? பார்க்கவே காமெடியா இருக்கு?"

"ஆமால்ல, பேய்ன்னா வெள்ளை புடவை கட்டி தலை நிறைய மல்லிகைப்பூ வச்சுத்தான் இருக்கும்?" என்று அண்ணனும் தம்பியும் மாறி மாறி நேத்ராவை கலைத்தனர்.

"சித்து, சிரிக்காதீங்க. அவள் ஏதோ பயத்தில சொல்லிட்டாள்." திவ்யா சித்தார்த்தை கண்டிக்க சித்தார்த்தும் அமைதியானான்.

தொடர்ந்த திவ்யா "நமக்கே இந்த காட்டுக்குள்ள வண்டில போக பயமா இருக்கே, அவளுக்கும் பயமாத்தானே இருக்கும்?"

"இல்ல அண்ணி, அவளை பார்த்தா இந்த இடத்து ஆள் மாதிரித்தான் தெரியுது. பழக்கமான இடம்னா பயமில்லைத்தானே."

"ஒருவேளை பழக்கமான இடமா இல்லாட்டி?"

குறுக்கிட்ட சித்தார்த் "இப்ப என்ன சொல்ல வர திவ்யா?"

"நம்ம வண்டில இடமிருக்குத்தானே, அவளை போக வேண்டிய இடத்துல ட்ராப் பண்ணினா என்ன?" திவ்யா நேத்ராவின் தலையில் இடியை போட்டாள்.

பதறிய நேத்ராவும் "என்ன அக்கா சொல்றீங்க? நம்ம வண்டிலயா? எனக்கென்னமோ பயமா இருக்கு? வேணாம்." என்று சொல்ல கௌதம்மும் " ஆமா அண்ணி, நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? நமக்கு இதுக்கெல்லாம் நேரமும் இல்லை." என்று தன் கருத்தை சொன்னான்.

"இதுதான் நம்மட நாட்டுக்கும் பாஃரினுக்கும் இருக்கிற டிஃபரென்ட். இன்னொரு சக மனுஷனுக்கு ஹெல்ப் பண்றதுக்கு இவ்வளவு யோசிக்கிறம்......" என்று சலித்தபடி சொன்னாள் திவ்யா.

திவ்யாவின் இந்த வார்த்தைகள் கௌதம்மிற்கும் சித்தார்த்துக்கும் கோபத்தை உண்டாக்கியது. திவ்யா எதற்கெடுத்தாலும் சொந்த நாட்டை குறைவாகவும் வெளிநாடுகளை உயர்வாகவும் ஒப்பிட்டு பேசுவது சகோதரர்கள் இருவருக்கும் எப்பொழுதும் பிடித்ததில்லை.

"சரி கெளதம், அந்த பொண்ண ட்ராப் பண்ணிட்டு போவம்." சித்தார்த்தின் குரலில் கோபம் தெரிந்ததால் நேத்ரா எதுவும் மறுப்பு கூறவில்லை.

அந்தப்பெண்ணை தாண்டிய பின் பாதையில் ஒரு திருப்பம் இருந்ததால் சித்தார்த் அப்படியே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தப்பெண்ணுக்காக காத்திருந்தான்.

வினாடிகள் நிமிடமாகியும் அவளைக்காணாமல் இருக்க, ஏற்கனவே பயந்திருந்த நேத்ராவோ "நான் சொல்றத கேளுங்க அண்ணா, எனக்கென்னமோ இது சரியா படல."

நேத்ராவின் பயத்திற்கு சிறு புன்முறுவலுடன் "சின்ன பிள்ளை மாதிரி இருட்ட பார்த்தெல்லாம் பயப்பட கூடாது நேத்ரா."

நேரமாக ஆக திவ்யாவிற்கும் ஏன் தேவையில்லாமல் வாயை கொடுத்தோம் என்று ஆனது.

"சித்தார்த் நேத்ரா ரொம்ப பயப்படுறா, நாம கிளம்புவம். டோன்ட் வேஸ்ட் டைம் ஹியர்."

"ஓஹோ.... உங்க வெளிநாட்டுல இப்பிடித்தான் பயப்படுவாங்களோ...." என்று விட்டு சித்தார்த் சிரிக்க, சைட் மிரரில் பின்னாலே பார்த்துக்கொண்டிருந்த கௌதமோ "அதோ அந்த பொண்ணு" என்று சொல்ல எல்லோரின் பார்வையும் பின்னே சென்றது.

மெதுமெதுவாக வந்தவள் வண்டி ஒன்று தனக்காக காத்திருப்பதை பொருட்படுத்தாமல் நேரே பார்த்தபடி நடந்து சென்றாள்.

அவள் தம்மை திரும்பி கூட பார்க்காதது எல்லோருக்கும் வியப்பையும் கூடவே பயத்தையும் உண்டாக்கியிருந்தது. இருந்தாலும் யாரும் வெளிக்காட்டவில்லை.

வண்டியை மெதுவாக சித்தார்த் எடுக்க தன் பக்க கண்ணாடியை கீழிறக்கிய கெளதம் அவளருகே வண்டி சென்றதும் " ஏன்மா பொண்ணு, இந்த நேரத்துல எங்க போறா?" என்று குரலெழுப்பினான்.

எந்தவொரு மாற்றமும் இல்லை, உள்ளே திவ்யாவிற்கு நேத்ராவிற்கும் கிலி பிடித்தது.

"கெளதம் பேசாம விடு" என்று திவ்யா சொல்லி முடிப்பதற்குள் சித்தார்த் ஹார்னை அடித்தான்.

ஹார்ன் சத்தம் கேட்டதும் நடப்பதை நிறுத்திவிட்டு அவ்விடமே நின்றாள் அவள்.

"ஏம்மா பொண்ணு, இந்த இடத்துல உனக்கென்ன வேலை?" இப்பொது கெளதம் கேட்டதற்கு பலன் இருந்தது.

"நான் என்னோட வீட்ட போய்கிட்டிருக்கன்!" நிலத்தை பார்த்த படி பதில் வந்தது.

"இங்கதான் உன்னோட வீடா?" சித்தார்த் கேட்டான்.

ஆம் என்பது போல் அவள் தலை மட்டும் அசைந்தது.

"சரி, வண்டில ஏறும்மா, போற வழில விட்டுர்றோம்" கெளதம் கேட்க மறுப்பேதும் கூறாமல் வண்டியின் பின் கதவைத்திறந்து உள்ளே ஏறினாள் அவள்.

பின்னாலே ஏறியவள் அங்கே இருந்த திவ்யாவையும் நேத்ராவையும் சிறிது நேரம் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் பார்வை ஏதோ ஒருவித கோபத்தை வெளிப்படுத்தியதை இருவரும் உணர்ந்தனர்.

'எவ்வளவு பெரிய மடத்தனம் செய்து விட்டோம்' என்று திவ்யாவும் மனதிற்குள் புலம்ப, நேத்ராவோ பயத்தில் உறைந்தே போய்விட்டாள்.

நேத்ராவும் திவ்யாவும் வந்தவளுக்கு தாராளமாக இடம் விட்டு தள்ளியிருந்தனர். அத்விக் முன்னமே நித்திரையிலேயே கௌதம்மின் மடிக்கு இடமாற்றப்பட்டிருந்தான்.

லேண்ட் ரோவர் மீண்டும் வேகமெடுத்தது. வண்டியினுள் எதுவும் பேசாமல் இருந்தவளை பார்க்க கௌதம்மிற்கும் சித்தார்த்துக்கும் கூட ஏதோ போலத்தான் இருந்தது.

சில நிமிட அமைதியை குலைக்கும் விதமாக கெளதம் பேச்சு கொடுக்க தொடங்கினான்.

"உன்னோட பேரு என்னம்மா?"

“மோனா”

"இந்த நேரத்தில எங்க போயிட்டு வர?"

"டௌனுக்கு போயிட்டு வரேன்"

"இந்த நேரத்துலயா? வீட்டுல எதுவும் சொல்ல மாட்டாங்களா?"

"இல்ல, எதுவும் சொல்ல மாட்டாங்க." சாராவின் உறுதி மிகுந்த பதில்கள் அனைவருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ணியது.

"வீட்ல யாரெல்லாம் இருக்காங்கம்மா?" இது சித்தார்த்,

"நானும் அம்மாவும் அண்ணாவும்"

"அண்ணா என்ன பண்றாரு?"

"மெக்கானிக்"

வர வர வார்த்தைகளின் அளவு குறைந்தபடியே செல்வது அண்ணன் தம்பி இருவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது.

சில நிமிடங்களிலெல்லாம் வண்டி மலைக்காடுகளுக்குள் நுழைந்திருந்தது. சுற்றிலும் காடுகள் மட்டுமே நிறைந்திருந்த இடத்தில் வண்டியை நிறுத்தக்கோரினாள் சாரா.

இதனை சற்றும் எதிர்பார்க்காத கௌதமும் சித்தார்த்தும் எதுவும் புரியாமல் விழித்தனர்.

"ஏன்மா இங்க நிறுத்த சொல்ற?" ஆச்சர்யத்துடன் கேள்வியெழுப்பினான் சித்தார்த்.

"என்னோட வீடு இங்கதான் இருக்கு."

இப்போது திவ்யாவிற்கு நேத்ராவிற்கும் நடுக்கம் பிடித்திருந்தது.

"இங்கயா?........................." நடுக்கத்தை மறைத்தபடி கேட்டாள் திவ்யா.

சித்தார்த் வண்டியை நிறுத்தியிருக்க கீழே இறங்க முற்பட்டவளை இடைமறித்த கெளதம் "இங்க வெறும் காடுதானேம்மா இருக்கு, வீடு இருக்கிற போல தெரியலையே......" என்று தனது சந்தேகத்தை வினவினான்.

"இங்க இருந்து பார்த்தா என்னோட வீடு தெரியாது. அது மலையடிவாரத்துல இருக்கு. இங்க இருந்து காட்டில குறுக்கு பாதையால நான் போய்டுவன். இன்னுமொரு 5 கிலோமீட்டர் தூரம் இந்த பாதையில போனீங்கன்னா அப்போ என்னோட வீடு உங்களுக்கு தெரியும்." என்று கூறிய படியே வண்டியை விட்டு இறங்கி காட்டை நோக்கி நடக்க தொடங்கினாள் அப்பெண்.

வண்டியிலிருந்த அனைவரும் பேயறைந்ததைப்போல விழித்துக்கொண்டிருந்தனர்.
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 3



சில வினாடிகள் அனைவரும் அப்பெண்ணையே கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கியவளோ சில அடி தூரம் சென்று விட்டு அப்படியே பாதையிலிருந்து விலகி காட்டுக்குள் புகுந்துவிட்டாள், இல்லை மாயமாகி விட்டாள் என்பதுதான் வண்டியிலிருந்தவர்களின் எண்ணம்.

"சித்தார்த் அவள் எங்கே?" உள்ளிருந்த பயத்தையும் மௌனத்தையும் உடைத்துக்கொண்டு திவ்யாவின் உதடுகள் வழியே தட்டு தடுமாறி வார்த்தைகள் வந்து விழுந்தன.

"தெரியல திவ்யா......." சித்தார்த்தின் உதடுகளும் நடனமாடின.

"மறைஞ்சிட்டாளா?"

"தெரியல"

........................................................

"அண்ணி, அவள் காட்டுக்குள்ள போய்ட்டாள், அங்கதானே அவளோட வீடுன்னு சொன்னாள்." உணர்ச்சிகளை மறைத்த கெளதம் அண்ணியை சமாதானம் செய்ய முயன்றான்.

"அங்கதான் எந்த வழியுமே இல்லையே கெளதம். அப்புறம் எப்பிடி போறது?"

"அண்ணி, காட்டுக்குள்ள ஒத்தையடி பாதை நிறைய இருக்கும். அது பழக்கப்பட்டவங்களுக்கு தான் தெரியும். பனி மூட்டத்துக்குள்ள மறைஞ்ச மாதிரி தெரியுது. வேணும்னா நான் போய் செக் பண்ணி பார்க்கவா அண்ணி?"

"டேய் கெளதம், உனக்கென்ன புத்தி கேட்டு போச்சா? பேசாம இரு." சித்தார்த் கௌதமை கண்டித்தான்.

"ஓகே, அப்புறம் எதுக்கு வண்டி இங்கயே நிக்குது. கிளம்பலாம் தானே?" கெளதம் வண்டி அங்கேயே அசையாமல் நிற்பதை சித்தார்த்துக்கு நினைவு படுத்தினான்.

ஒருவாறாக இயல்புநிலைக்கு வந்த சித்தார்த்தும் அக்ஸலரேட்டரில் காலை வைத்து அமுக்கினான்.

வண்டி கிளம்பியதுதான் தாமதம் பின்னாலிருந்த நேத்ரா பிரம்மை பிடித்தவள் போல அலறினாள்,

" ஆ.............. கெளதம்......................" நேத்ராவின் கூக்குரல் கௌதமை கூட ஒருகணம் கிலி கொள்ள வைத்துவிட்டது.

"நேத்ரா என்னாச்சு?" ஒரே குரலில் திவ்யாவும் கௌதமும் துடிதுடித்து போயினர்.

"கெளதம் அங்க பாருங்க...." என்று கூறிய நேத்ராவின் கண்களில் பயம் மாத்திரமில்லை, கண்ணீரும் நிரம்பியிருந்தது.

நேத்ரா சொன்ன திசையை ஏற்கனவே நோட்டம் விட்டிருந்த சித்தார்த்தும் நடுக்கத்தை வெளிக்காட்டாமல் பம்மிக்கொண்டிருந்தான்.

வண்டியின் ஹெட் லைட் வெளிச்சத்தில் எதிரே இருந்த பாழடைந்து போயிருந்த பெயர்ப்பலகை "கல்வராயன் மலைக்காடுகள் உங்களை வரவேற்கின்றது" என்று இவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது.

"கெளதம் இந்த போரெஸ்ட் பத்தி தானே இன்னைக்கு சாயங்காலம் நியூஸ்ல சொன்னாங்க.........." திவ்யாவிற்கு நாவறண்டு தொண்டைக்குழி அடைத்தது.

"ஆமா திவ்யா" பதில் சித்தார்த்திடமிருந்து வந்தது.

"ஐயோ கடவுளே......." என்று பதறிய திவ்யாவின் அருகில் நேத்ராவோ உணர்ச்சிகளற்ற கல்லாகி போயிருந்தாள்.

நேத்ராவின் கூக்குரல் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்த ஆத்விக்கும் அழுகையை நிறுத்தவில்லை.

"கல்வராயன் மலைக்காடுகளூடாக திருவண்ணாமலை அரூர் நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு இரவு வேளையில் ஓர் அமானுஷ்ய பெண் உருவம் தென்படுவதாக ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின்றன..........................." எல்லோருடைய எண்ணங்களும் சாயங்காலம் சித்தி வீட்டில் கேட்ட செய்தி அறிவிப்பை அசைபோட்டுக்கொண்டிருந்தது. கெளதம் மாத்திரம் ஆத்விக்கை சமாதானப்படுத்துவதில் மும்முரமாயிருந்தான்.

"அண்ணா வண்டிய எடு, நேரமாகிட்டு......"

"டேய் என்னடா எதுவுமே நடக்காதது போல பிகேவ் பண்ற, ஈவினிங் நியூஸ்ல இந்த இடத்த பத்தித்தான் சொல்லியிருக்காங்க. அமானுஷ்ய பெண் உருவம் அது இதுன்னு......."

"நிறுத்துண்ணா, அத தான் அப்பவே மூட நம்பிக்கைன்னு கலாய்ச்சிட்டிருந்தமே, இப்போ என்ன ஆச்சு? நம்ம கூட வந்தவ ஒரு பொண்ணுதானே? பயந்திட்டு இருந்தா எல்லாமே அமானுஷ்யம் தான், சரி, நீங்க சொல்றபடிதான் இருந்தாலும் நமக்கு எதுவும் ஆகலேயே?"

"என்னங்க கெளதம் சொல்றதும் சரிதான், வீணா பயந்து என்ன ஆக போகுது? இதுவும் ஒரு எஸ்பீரியன்ஸ்ன்னு எடுத்துக்க வேண்டியதுதான். ஆத்விக்கும் ரொம்ப பயந்துட்டான். நாம புறப்படலாம்." திவ்யாவும் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச கௌதம்மிற்கும் ஆறுதலாக இருந்தது.

"அண்ணா, அண்ணியே தைரியமா இருக்காங்க, புறப்படுவோம்ன்னா......" என்று கெளதம் கூற சித்தார்த்தும் வண்டியை நகர்த்தினான்.

சில நிமிடங்களுக்கு எல்லோரும் அமைதியாகி ஆத்விக்கை சமாதானம் செய்வது போலவும் எதற்கும் பயப்படாதது போலவும் மற்றையவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தனர், கெளதம் உட்பட.

சித்தார்த்திற்கும் என்னவோபோல இருந்ததால் வண்டியும் மெதுவாகத்தான் சென்றது. பாதையும் சுற்றி வளைந்து மலைகளை சுற்றி கொண்டிருந்ததால் தூரமும் நகரவில்லை.

'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது' என்ற ஆறுதல் மட்டுமே அவனுக்கு அப்போது சிறிதளவு நிம்மதியை கொடுத்தது.

ஆனால் அந்த நிம்மதியும் அதிக நேரம் நீடிக்கவில்லை.

"டிஷ்ஷ்ஷ்..............................ஷ்ஷ்ஷ்ஷ்........................."

இப்படி ஒரு சத்தம் கேட்டதுதான் தாமதம் வண்டி வீதியின் ஒருபக்கமாக இழுத்துச்செல்லப்பட்டது. கண நேரத்தில் சுதாகரித்த சித்தார்த்தும் வண்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பிரேக்கினை அழுத்தினான். இதற்குள் திவ்யாவும் நேத்ராவும் கூப்பாடு போடத்தொடங்கிவிட்டனர்.

"ஐயோ காப்பாத்துங்க........" திவ்யா அலறினாள்.

என்ன நடக்கின்றதென்பதை ஊகிக்க கூட நேரமில்லாத கௌதமோ ஆத்விக்கை இறுக்கி அணைத்தபடி சீட்டின் கீழே குனிந்துவிட்டான்.

வண்டி மெதுவாக சென்றிருந்தாலும் மழை பெய்து ரோட் சிறிது ஈரமாக இருந்ததால் வண்டியை கட்டுப்படுத்தி நிறுத்தவே சித்தார்த்துக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. வண்டி நின்றதும் திவ்யாவின் கூக்குரலும் நின்றது.

"சித்தார்த் என்னாச்சு?" பதறினாள் திவ்யா.

"அண்ணா என்னாச்சுண்ணா?" நேத்ராவும் தன பங்குக்கு பதறி கிலி பிடிக்க வைத்தாள்.

கௌதமோ ஏதோ புரிந்தது போல தன் பக்க கண்ணாடியை இறக்கி விட்டு கீழே எதையோ பார்த்தான்.

சித்தார்த் எந்தக்கேள்விக்கும் பதிலளிக்காமல் கௌதம்மை கை காட்டிவிட்டு பெருமூச்சு விட்டான்.

"என்ன கெளதம் என்னாச்சு? சீக்கிரம் சொல்லு, எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு."

"அண்ணி முன் பக்க டயர் பஞ்சராகிட்டுது. அதனாடிதான் வண்டி கண்ட்ரோல் இல்லாம போயிருக்கு."

"என்ன கெளதம் சொல்ற? முன்னாடி டயரா? அது போன மாசம் தானே புதுசா போட்டது? அதுக்குள்ளே எப்பிடி பஞ்சராகும்?" என்று நேத்ரா கேட்டுக்கொண்டிருக்க வண்டியை விட்டு கீழே இறங்கினான் கெளதம்.

கெளதமை தொடர்ந்து சித்தார்த்தும் கீழே இறங்க பெண்கள் இருவருக்கும் கீழே இறங்கும் எண்ணம் துளியுமில்லை.

கீழே இறங்கி தனது செல்போனில் உள்ள டார்ச்சை ஆன் செய்து வண்டியின் நாலு டயர்களையும் பார்த்தவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

அங்கே பஞ்சராகியிருந்தது மொத்தம் இரண்டு டயர்கள். ஒரு டயர் என்றால் ஸ்டெப்னி டயரை மாற்றிவிட்டு சென்று விடலாம். ஆனால் அதுகூட இந்த காட்டுக்குள் அந்த இருட்டுக்குள் கடினம்தான். ஆனால் இரண்டு டயர்களை எப்படி மாற்றுவது? என்ற யோசனைகள் கௌதமை சூழ்ந்து கொண்டது.

"கெளதம் என்னடா?"

"அண்ணா பின்னாடி ஒரு டயரும் பஞ்சராகியிருக்கு....."

"என்னடா சொல்ற? ரெண்டு டயரா?"

"ஆமாண்ணா"

"ஓஹ் ஷிட், இப்ப என்னடா பண்ற? மணி வேற 12 ஆகிடுச்சு......." என்று சித்தார்த் சொல்ல செல்போனில் நேரத்தை பார்த்த கௌதமிற்கு அடுத்த அதிர்ச்சியும் அங்கே காத்திருந்தது.

செல்போனில் சிக்னல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாத கெளதம் "நீ டென்ஷன் ஆகாதண்ணா..... ரிலாக்ஸ்சா இரு." ஆறுதல் கூறினான்.

இதற்கிடையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வண்டியை விட்டு கீழே இறங்கிய திவ்யாவும் புலம்ப தொடங்கினாள்.

"கெளதம் வண்டியோட கண்டிஷன பார்த்து வைக்கிறதில்லையா? இப்போ பாரு எப்பிடி மாட்டியிருக்கோம்னு...."

"அதான் நேத்ரா சொன்னாளே, டயர் புதுசா போட்டதுன்னு. இத விட வேற என்ன பண்றது? எல்லாம் நம்மளோட நேரம்...." சலித்துக்கொண்டான் சித்தார்த்.

"இல்லண்ணா, புதுசா போட்டது மத்த பக்கம், பஞ்சராகினது பழைய டயர் தான், தப்பு என்மேலதான்.... நேத்ரா தெரியாம பேசுறாள்." தனது பிழையை ஒத்துக்கொண்டான் கெளதம்.

இதைக்கேட்டு கொண்டிருந்த நேத்ரா எதையோ சொல்ல வாயெடுக்க, எதுவும் பேச வேண்டாமென்று கண்களால் சைகை காட்டினான் கெளதம்.

பின்னர் சித்தார்த் செல்போனை பார்க்க, அதில் சிக்னல் இல்லாததை கவனித்து சொல்ல மீண்டும் அனைவருக்குள்ளும் பயம் தொற்றிக்கொள்ள எல்லோரும் தத்தமது போன்களை எடுத்து பார்த்தபடி புலம்பிக்கொண்டிருந்தனர்.

ஆனால் கெளதம் மாத்திரம் சுற்றுமுற்றிலும் பார்த்தபடி வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்.

"அண்ணா, நீ இங்கயே இரு. நான் பின்னாடி கொஞ்ச தூரம் போய் சிக்னல் கிடைக்குதான்னு பார்த்திட்டு வரேன்."

"கெளதம் உனக்கென்ன பைத்தியமா? இந்த இருட்டுக்குள்ள எங்க போற?" நேத்ரா கடுமையான குரலில் எச்சரித்தாள்.

"ஆமா இங்கயே உக்கார்ந்து புலம்பிட்டு இருந்தா அப்பிடியே இருக்க வேண்டியதுதான். என்னோட போன்ல டார்ச் இருக்கு. கொஞ்ச தூரம் போய் பார்த்திட்டு வந்திடுறேன்."

"இல்ல கெளதம் அது வந்து......."

நேத்ரா ஏதோ சொல்ல வர சித்தார்த் இடைமறித்து " நேத்ரா பயப்படாத, அவனுக்கு எதுவும் ஆகாது, வேணும்னா நானும் கூட போய்ட்டு வரன்." சமாதானப்படுத்தினார்.

"அண்ணா நீ அவங்க கூட இரு, நான் சீக்கிரமா வந்துடுறேன்." என்று சொன்ன படி வேகமாக நடக்க தொடங்கினான் கெளதம்.

கெளதம் அங்கே சொன்னது உண்மையுமில்லை, அவன் சிக்னல் தேடிப்போகவுமில்லை. ஏனெனில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவனது செல்போனில் சிக்னல் இல்லை என்பது அவனுக்கு தெரியும். ஆத்விக்கிற்கு செல்போனில் கார்ட்டூன் காட்ட முற்பட்டபோது சிக்னல் இல்லை என்பதை தெரிந்து கொண்டிருந்தான் கெளதம்.

கௌதம்மின் எண்ணம் எல்லாம் புதிதாக வாங்கி போடப்பட்ட டயர்கள் இரண்டும் எவ்வாறு பஞ்சராகின? என்றும், அந்த பஞ்சராகிய டயர்களை அவன் மட்டுமே பார்த்திருந்ததால் அது ஏதோ ஆணி குத்தியோ கல்லு கிழித்தோ பஞ்சராகவில்லை என்று தெரிந்திருந்தது. அதனால் தான் சித்தார்த்தை டயரை பார்க்கவிடாமல் தானே முந்திக்கொண்டு பார்த்துவிட்டு டார்ச்சையும் அணைத்துவிட்டிருந்தான். மேலும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதாவது காரணம் சொன்னால்தான் அவர்கள் மேற்கொண்டு எதையும் யோசித்து பயம்கொள்ள மாட்டார்கள் என்றுதான் பஞ்சரானது பழைய டயர்கள் என்றும் பொய் சொல்லியிருந்தான் கெளதம்.

இப்போது அவன் சென்று கொண்டிருப்பது எப்படி வண்டி பஞ்சரானதென்பதை அறியத்தான். கண்களை ஈட்டி போல தீட்டியபடி வந்த வழியெங்கும் படர்ந்து சென்றான் கெளதம். யோசிக்க தொடங்கினால் பயம் தொற்றிக்கொள்ளும், பிறகு அங்கிருந்து அசைவதற்கே திராணியிருக்காது. ஏதாவது சந்தேகமெழுந்தால் உடனடியாக சந்தேகத்தை தீர்த்துவிடவேண்டும் இல்லாவிடில் அதுவே மனதில் பாரமாகிவிடும் என்ற தனது வாழ்க்கை தத்துவங்களை முன்னிறுத்தி எதை தேடுகிறோம் என்று தெரியாமல் வெறி பிடித்தவன் போல தேடிய படி ஊர்ந்து சென்றான் கெளதம்.

அவனது தேடலுக்கும் விடை கிடைக்கத்தான் செய்தது.
 
Status
Not open for further replies.
Top