அத்தியாயம் 5
"சாரா.....சாரா.... சீக்கிரம் எந்திரி......"
"என்ன சித்தி இந்த நேரத்துல........" என்று கண்ணை கசக்கியபடி எழ முற்பட்டாள் அங்கு நித்திரையிலிருந்த பெண்.
"சாரா...... வீட்டுக்கு ஆட்கள் வந்திருக்காங்க...... என்னான்னு ஒண்ணுமே புரியலடி...."
"என்ன ஆட்களா? இந்த நேரத்திலயா? என்ன சித்தி புதுசா ஏதோ சொல்றீங்க? இது அண்ணனோட வேலையா? இன்னைக்கு அப்பிடி ஒண்ணும்.........." என்று சாரா சொல்லிக்கொண்டிருக்க இடைமறித்த மனோகரி,
"அடியே, விஷயமே புரியாம பேசாத, அவங்க வண்டி பஞ்சராம், உங்க அண்ணன் மெக்கானிக்ன்னு தான் இங்க வந்திருக்காங்க. அது எப்பிடி தெரியும்னு கேட்டா........ வரும் போது ஒரு பொண்ணுக்கு லிஃப்ட்டு குடுத்தாங்களாம்........" மனோகரி சொல்ல சொல்ல சாராவின் முகம் பயத்தில் உறைந்து போனது.
"என்ன சித்தி சொல்றீங்க?........."
"அதான் எனக்கும் ஒன்னும் புரியல......."
"ஒருவேளை இது அண்ணனோட வேலையா இருக்குமோ?"
"அவன் இன்னைக்கு காளி கூட வெளியூருக்கு போயிருக்கான். இங்க எப்பிடி? அதுவும் இல்லாம தனியா அவனுக்கு தொழில் செய்ய தெரியாதுடி......."
"பெரிய தொழில்.... குலத்தொழில்......." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் சாரா. மனோகரியும் அதை கவனிக்க தவறவில்லை.
"சாரா, இப்ப என்ன பண்றதுன்னு யோசி, உன்னோட புலம்பல கேட்கிறதுக்கு இப்ப நேரமில்லை. மாட்டினா எல்லோருக்குமே ஜெயில்தான்... ஞாபகம் வச்சுக்கோ....." என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினாள் மனோகரி.
சித்தியின் பேச்சையும் தனது நிலையையும் நினைத்துக்கொண்ட சாரா, சிறிது நேரம் ஆழ்ந்த யோசனைக்கு சென்றாள்.
"சீக்கிரம் ஏதாவது சொல்லுடி....."
"சித்தி, அவங்க ஒரு பொண்ணுக்கு தானே லிஃப்ட் குடுத்தேன்னு சொன்னாங்க."
"ஆமா, ஏதோ ஒரு பொண்ணு இல்ல, இந்த வீட்டு பொண்ணாம், நீ இங்க இருக்கிறேன்னா அந்த பொண்ணு யாரு?"
"யாருன்னு உனக்கு தெரியாதா?"
"என்னடி சொல்ல வர?" என்று சொன்ன மனோகரிக்கு வேர்த்துக்கொட்டியது.
"ஆமா, அது லிசாவாத்தான் இருக்கும்."
"சும்மா எனக்கு பீதிய கிளப்பாத......."
"சித்தி எப்பிடி யோசிச்சாலும் வேற எதுவும் தோணுதில்ல, இந்த வீட்டு பொண்ணுங்க நானும் அக்காவும் தான். நான் இங்க இருக்கேன், இந்த நாடு ராத்திரி ல ஒரு பொண்ணு சரியா இந்த வீட்டுக்கு வழி காட்டியிருக்குன்னா...... வேற யாருக்கு இந்த இடம் தெரியும்?" சாரா சொல்ல சொல்ல மனோகரிக்கு தூக்கிவாரிப்போட்டது.
"என்னடி சொல்ற?"
"சித்தி எத்தனையோ தடவ அவள இந்த இடங்கள்ல நைட்ல போறவங்க பார்த்ததா நியூஸ் வந்திருக்கு தானே......."
"சாரா அது நீதானே, நம்மளோட செட் அப். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"சித்தி நான் அவள போல நைட்ல வெள்ள சாரி உடுத்திட்டு நிக்கிறது, நம்ம செய்ற தொழில் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அப்பிடி இல்லாத நாள்ல கூட சில நேரம் நியூஸ் வந்திச்சு. அத உன்கிட்ட அண்ணனும் சொல்லி இருக்காது."
"என்ன சாரா, இப்ப புதுசு புதுசா என்னென்னமோ சொல்ற?"
"ஆமா சித்தி, நான் சொல்றபடி செய்யுங்க."
"என்ன செய்ய?"
"அவங்க எத்தன பேர் வந்திருக்காங்க?
மனோகரி வந்தவர்களை பற்றிய விளக்கமெல்லாம் சாராவிற்கு கொடுக்க, சாரா ஏதோ ஒரு திட்டம் தீட்டினாள்.
"நீ சொல்றத பார்த்தா நல்ல செழிப்பான ஆட்கள் போலதான் தெரியுது. இன்னைக்கு நமக்கு வேலை இருக்கு." என்று சொன்னவள் மெதுவாக அந்த அறையை விட்டு செல்ல எத்தனித்தாள்.
"எங்கடி போற?"
"நான் போகல, சித்தி நீதான் போக போற......"
"போயி......."
"அவங்ககிட்ட போய் என் பொண்ணு தூங்கிட்டு இருந்தா, எழுப்பி கூட்டி வாரேன்னு சொல்லு, நான் வந்து மிச்சத்த பார்த்துக்கிறேன்."
"சாரா உனக்கு புத்தி குழம்பிடுச்சா? அவங்க உன்ன பார்த்தா வண்டில லிஃப்டு கொடுத்த பொண்ணு நீயில்லன்னு தெரிஞ்சிடுமே."
"சித்தி 5 வருஷத்துக்கு முன்னாடி லிசா எப்பிடி இருந்தான்னு தெரியுமா?"
"அந்தக்கழுதை எப்பிடி இருந்தா எனக்கென்ன?"
"ஐயோ, இப்ப நான் இருக்கிற போலதான் அவளும் இருந்தா. இப்ப இங்க வந்திருக்கிறவங்க என்னை அடையாளம் கண்டுபிடிக்கலன்னா அவங்க வண்டில வந்தது லிசாவே தான்." என்று சாரா கூற மனோகரிக்கு மீண்டும் கிலி பிடித்தது.
"அதுக்கப்புறம் என்ன செய்ற?"
"சித்தி இப்ப எதுவும் சொல்ல முடியாது, அந்த நேரம் பிளான் பண்ணுவம். அண்ணா எப்ப வருவான்?"
"தெரியலையே... அவனும் சீக்கிரம் வந்து தொலைக்க மாட்டேங்கிறான்."
மெதுவாக மாடிப்படிக்கட்டின் மேலே நின்று வந்தவர்களை நோட்டமிட்டாள் சாரா.
"சாரா, அவங்க சொல்லும் போது ஏதோ வெளிச்சத்தை பார்த்து தான் இங்க வந்ததா சொன்னாங்க. உன்னோட அறையில எதாவது விளக்கு ஏத்தியிருந்தியா?" என்று மனோகரி மீண்டும் கிலி பிடிக்க வைக்க,
"சித்தி இதெல்லாம் யாரு செஞ்சிருப்பான்னு உங்களுக்கு தெரியுதுதானே...... இந்த நாடு ராத்திரில நான் எதுக்கு விளக்கு வைக்க போறன்?" என்று தனக்குள் இருந்த பயத்தையும் சிறிது வெளிக்காட்டினாள் சாரா.
"என்ன சித்தார்த், மேல போன அந்த அம்மாவையும் காணோம், வெளிய போன அவங்க பையனையும் காணோம், நம்ம கூட வந்த அந்த பொண்ணையும் காணோம்......" என்று அங்கு நிலவிய அமைதியை தனது சந்தேகத்தால் குலைத்தாள் திவ்யா.
"எனக்கும் இதே சந்தேகம் தான்....." என்று சித்தார்த்தும் தன் பங்கிற்கு கூற, ஏற்கனவே பயத்தை வெளிக்காட்டாமலிருந்த நேத்ராவும் கௌதம்மின் பதிலை எதிர்பார்த்து அவன் பக்கம் திரும்பினர்.
கௌதம்மிற்கும் அதே சந்தேகம் வலுப்பெற்றிருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் பதிலொன்றை தயார் செய்ய தொடங்கினான்.
"அதோ அந்தம்மாவே வந்துட்டாங்க." என்று கெளதம் கூற அனைவரினதும் பார்வை மாடிப்படிக்கட்டு நோக்கி திரும்பியது.
"ஆன்ட்டி கொஞ்ச நேரம் காணாம போய்ட்டிங்க, நாங்க இந்த இருட்டில ஒருத்தர மாத்தி ஒருத்தர பார்த்திட்டு இருக்கோம்......" என்று கெளதம் சாதாரணமாக கேள்வியை எழுப்பியிருந்தாலும் அவன் மனது படபடத்துக்கொண்டு இருந்தது.
"இல்ல தம்பி, பொண்ண கூட்டிட்டு வரலாமுன்னு போனன், அவள் நல்ல தூக்கம்......"
"எதுக்கு ஆன்ட்டி அவங்கள சிரமப்படுத்திகிட்டு........." என்று திவ்யா கூற, படிக்கட்டு வழியே இறங்கி வந்தாள் சாரா.
அங்கே வந்தவள் அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அங்கிருந்தவர்களை பார்த்து புன்னகைக்க மறக்கவில்லை.
சாராவை கண்டதும் அங்கிருந்த நால்வருக்கும் மனதிற்குள் எதோ ஒரு சந்தேகம் வந்திருந்தாலும் அது என்னவென்று சொல்ல யாருக்கும் தெரியவில்லை.
"உங்கண்ணனுக்காக தான் காத்திட்டு இருக்காங்க, இன்னைக்கின்னு பார்த்து இன்னும் அவன காணல." மனோகரி சலித்தவாறே பேசி சமாளிக்க, தொடர்ந்தாள் சாரா.
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கண்ணா, அண்ணா சீக்கிரமே வந்திடும், அவன் நிச்சயம் உங்க வண்டிய சரி செய்திடுவான்." என்று நம்பிக்கை கூறினாள்.
"லிசா, இவங்களுக்கு சாப்பிட ஏதாவது ரெடி பண்ணுமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ஆன்ட்டி." என்று இடைமறித்த திவ்யாவை இடைநிறுத்திய சித்தார்த் "லிசாவா? வண்டில வரும்போது வேற பேர் சொன்னீங்களே..........." என்று கேட்க, சட்டென சுதாகரித்த சாரா "மோனாலிசா தான் என் பேரு, மோனான்னு சொல்லிருப்பன்." என்று சிரித்தாள்.
சாரா சிரித்துக்கொண்டே " நான் காபி போட்டு எடுத்து வாறன், அதுக்குள்ளே அண்ணாவும் வந்திடுவான்." என்று கேசுவலாக கூறிவிட்டு அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்தாள். கூடவே முழித்துக்கொண்டிருந்த மனோகரியும் சிரித்து மழுப்பியபடி நகர்ந்துவிட்டாள்.
"கெளதம் நம்ம வண்டில வந்த பொண்ணுதானா இந்தப்பொண்ணு?" நீண்ட நேரத்தின் பின் நேத்ராவின் குரல் ஒலித்தது.
"ஆமா அதே சந்தேகம் தான் எனக்கும்......" என்று திவ்யாவும் இணைந்து கொண்டாள்.
ஆனால் தற்போது கெளதம் குழம்பி போயிருந்தான். தான் மனதில் வைத்திருந்த கேள்விகள் எல்லாம் இன்னும் இன்னும் சிக்கலில் சிக்கியிருந்தது அவனுக்கு விளங்கியது.
"அதே பொண்ணுதான், நம்ம வண்டில வரும்போது நிறைய மேக்கப் போட்டிருந்திச்சு, இப்போ மேக்கப் இல்லாம இருக்குது. அவ்வளவுதான்...." என்று சித்தார்த் சமாதானப்படுத்தினான். சித்தார்த் கூறியது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் உண்மையென்று யாராலும் நம்ப முடியவில்லை.
"அண்ணி, நேத்ரா வீணா தேவையில்லாத விஷயங்களை யோசிக்காம இருங்க, அவங்க அண்ணன் வந்ததும் நம்ம வேலைய முடிச்சிட்டு கிளம்புவம்." என்று அவர்கள் கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கெளதம்.
இவ்வாறு கூறிவிட்டு கெளதம் எழுந்து வாசல் கதவை நோக்கி எட்டு வைக்க தொடங்கினான்.
"கெளதம் எங்க போற?" கேட்டது நேத்ரா.
"கொஞ்சம் இருடி....... அடக்க முடியல, வெளிய போயிட்டு வாரன்....."
"உள்ள வாஷ்ரூம் இருக்கும். அங்க போடா......"
"வாஷ்ரூம்..... எது.....இந்த வீட்டையோ?..... அத இந்த இருட்டுக்குள்ள தேடி போறத விட வெளில காட்டுக்குள்ள நிம்மதியா போய்ட்டு வந்திடலாம்."
"டேய்.... பயமாயிருக்குடா....." என்று நேத்ரா கூற சித்தார்த் நக்கலாக சிரிக்க, திவ்யாவின் கை சித்தார்த்தின் தலையில் கொட்டியது.
"அவளோட பயம் ஞாயம் தானே.... கெளதம் இப்போ வெளில போகணுமா?
"நீங்க வேற அண்ணி...."
"சும்மா எதுக்கெடுத்தாலும் பயந்து சாகாதீங்க." என்று அண்ணன் தம்பிக்கு ஆதரவளித்தான்.
"ஒண்ணுக்கு போறதுக்கு கூட அண்ணனோட தயவு தேவையா இருக்கு. நேத்ரா நீ அப்பிடியே பயந்திட்டு இரு, 5 நிமிசத்தில வந்திடுறன்." என்று கூறி கதவைத்திறந்து வெளியே சென்றவனின் நோக்கம் வேறொன்றாக இருந்தது.
உள்ளே சமையல்கட்டில் இருந்தவாறே சாரா வெளியே நோட்டமிட்டபடி இருக்க மனோகரியோ ராபர்ட்டினது வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
"என்னடி மோனான்னு பேர் சொல்றாங்க? அவள யாரும் அப்பிடி கூப்பிட்றதில்லயே, லிசான்னு எல்லோரும் கூப்பிடுவாங்க. அவ கூட தன்னோட பேர லிசான்னு தான் சொல்லுவாள்......"
"இப்ப அவங்க வண்டில அக்காவோட ஆவி வந்தது உனக்கு பிரச்சனை இல்ல, பேர் மாறி சொன்னதுதான் பிரச்சனையா இருக்கு....."
"நீ வேற ஆவி, அது இதுன்னுகிட்டு...... அத பத்தி பேசினாலே உடம்பெல்லாம் நடுங்குது....."
"பயமிருக்குல்ல, மூடிட்டு அடுத்து என்ன செய்றதுன்னு யோசி....."
"அந்த ரெண்டு பொண்ணுங்க கழுத்துல மினுங்கிறத பார்த்தியாடி..... 20 பவுண் தேறும்...."
"பார்த்திட்டியா? உனக்கு நல்ல வேட்டை தான் போ......."
"நானாடி அவங்கள இங்க வர சொன்னன், பொறி வச்சு எவ்வளவு பிளான் பண்ணினாலும் இப்பிடி மாட்டினதில்ல, உன்னோட கொக்காட புண்ணியத்துல இன்னைக்கு கிடைச்சிருக்கு..... ராபர்ட் வரட்டும்......."
"ஏதோ பண்ணி தொலைங்க......."
"ரொம்ப சலிச்சிக்காதடி.... பாரு கடைசில யாரு நமக்கு ஆவியா வந்து உதவியிருக்கான்னு....."
"சித்தி...... அவ உனக்கு முன்னால வரணும், அப்ப இருக்கு உனக்கு கச்சேரி......"
"உன் வாய வச்சிட்டு சும்மா இருடி, வந்து தொலைச்சிடப்போறா......"
வீட்டுக்கு வெளியே வந்த கெளதம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெதுவாக வீட்டை சுற்றி வர காலடி எடுத்து வைத்தான். அந்த வீட்டின் மர்மத்தை அறியும் ஆவல் ஒரு புறமும் முன்னெச்சரிக்கையாக இருந்து தன் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடனும் எதை தேடுகின்றோம் என்று புரியாமலும் அங்கே பூனை போல ஓசை எதுவும் எழுப்பாமல் மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தான் கெளதம்.
கௌதம்மின் விழிகள் எதையோ தேடிக்கொண்டிருந்தாலும் அவனது மனசாட்சிக்கும் அவனுக்கும் ஒரு உரையாடல் நிகழ்ந்த வண்ணமே இருந்தது.
"நம்ம வண்டில கூட்டி வந்த பொண்ணு மாதிரி இல்லையே இங்க இருக்கிற பொண்ணு....."
"ஆமா, அந்த பொண்ணு ஒரு வார்த்தை பேசல, சிரிக்கல, இந்த பொண்ணு ரொம்ப பேசுறா....."
"அவங்க ரெண்டு பேரும் எதையோ மறைக்கிறாங்க....."
"அவங்க அண்ணன் இந்நேரத்துக்கு எங்க போனான்?"
"எல்லாருமே ரொம்ப பயந்து போயிருக்காங்க......"
"நேத்ரா ரொம்ப பயப்படுறா..... பதற்றமாவே இருக்கிறாள்.........ஏன் பதற்றம்?" இவ்வாறு தனக்குத்தானே மனதிற்குள் உரையாடியவனுக்கு தான் இப்போது வீட்டின் பின் புறத்தில் இருக்கிறோம் என்பது புரிந்தது.
அங்கே இருந்த ஒற்றையடிப்பாதை அவனது கால்களை அவ்வழியே செல்ல தூண்டியது.
அந்த வழியே சிறிது தூரம் சென்றவன் திரும்பலாம் என்று எத்தனித்த போது அந்தக்கும்மிருட்டிலும் பாதையோரம் வெள்ளையாக ஏதோ ஒன்று தெரிந்தது. அருகே சென்று பார்த்தவனுக்கு அது மல்லிகை பூச்சரம் என்று தெரிந்தது. இதற்கு முதல் வண்டியிலிருந்து இறங்கிய பெண்ணின் தலையில் அந்த மல்லிகைப்பூ இருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.
"ஓ.... இந்த பாதையால தான் அவள் வந்திருக்கிறாள் போல....." என்று மனதில் எண்ணிக்கொண்டு இரண்டு அடி வைத்தவனுக்கு காட்டினுள் ஏதோ சலசலப்பு கேட்டது
சத்தம் கேட்ட திசை நோக்கி பார்த்தவனுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது.