ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய் -கதை திரி
 
Last edited by a moderator:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

முன்னோட்டம்

சில உணர்வுகளை வார்த்தைகளில் கோடி கொண்டும் விவரிக்க முடியாது.அத்தகைய நிலையில் தான் இருந்தான்,அவன்.

அவனே எண்ணிப் பார்த்திரா அளவு மாற்றங்கள் அவள் அவனின் வாழ்க்கையில் வந்த பின்னர்.

அவளைப் பிடித்திருக்கின்றதா என்று சத்தியமாய் தெரியவில்லை,அவனுக்கு.ஆனால்,அவளின்றி அவனுக்குள் உண்டாகிடும் வெறுமையோ அவள் மீது அவனுக்கு நேசம் இருப்பதாய் கதை கூறிப் போகின்றதே.

பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டவனின் செவிகளில் விழுந்தது,அவளின் பாதச்சத்தம்.

இறுகியிருந்த மனம் இளகிட ஒட்டியிருந்த அதரங்கள் விலகிட தெற்றுப் பல் தெரிந்திட கன்னம் இலேசாய் குழிய அவனிதழோரமாய் சிறு புன்னகை.

●●●●●●●●

"எனக்குத் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல.." பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்பியவளுக்கு அப்படியொரு கோபம்.

"இங்க பாரு இவ்ளோ நாள் உன்னோட இஷ்டத்துக்கு விட்டாச்சு..இப்போ அதெல்லாம் சரிப்பட்டு வராது..மரியாதயா கல்யாணத்துக்கு ஒத்துக்க..அவ்ளோ தான்.."

"அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ"

"அம்மா நொம்மான்னு என்ன சொன்னாலும் மாப்ள வீட்டுக்காரங்க வரத்தான் செய்வாங்க..பேசாம ரெடியாகற வழிய பாரு.."அவளுக்கு பதில் பேச இடம் கொடுத்திடாமல் அவர் கதவை அடித்து சாற்றி விட்டு செல்ல தலையில் கை வைத்து அமர்ந்தவளின் மனதில் பலவித எண்ணங்கள் சுழன்றடித்தன.

●●●●●●●●

"லவ்வா..அது எப்டி இருக்கும்னு கேக்கறியா..? ஜஸ்ட் அவங்க கண்ண பாத்தாலே போதும்..அப்போ வர்ர ஃபீலே அப்டியே இங்க தொடும்.." தன்னை நெஞ்சை சுட்டிக்காட்டியவனின் செயலில் தோழனின் இதழ்களில் மெச்சுதலான முறுவல்.

"அப்டின்னா புரில.." வேண்டுமென்றே மீண்டும் கேட்டவனின் விளையாட்டு அறியாது தனக்குள் மூழ்கியிருந்தான்,அவன்.

"அப்டியே உசுர டச் பண்ணும்னு வச்சிக்கோயேன்.." இலேசாய் ஒற்றைக் கண் சுருக்கி பக்கமாய் இதழ் வளைத்து ஒன்றன் மீதொன்றை அழுத்தி கீழுதட்டின் ஒரு ஓரத்தை பற்களால் கடித்த படி கூறியவனின் முகத்தில் கொஞ்சம் சிவப்பு வேறு.

"வெக்கப்பட்றியா..?"

"ச்சே..ச்சே..வெக்கம்லாம் இல்லடா வெண்ண.." தோழனின் முதுகில் சுரீரென்று அடியுடன் அவன் கூறிட அப்பட்டமான பொய்யில் இதழ் சுளித்தான்,தோழனவன்.


உயிர்த்தொடும்.

2024.08.20
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 01

உயிர் தளர்ந்து உருவிழந்து போய் கிடக்கும் உணர்வுகளின் இருப்பிடம் மனமென்று ஆன பின் மீண்டும் காயங்கள் வலிக்குமா என்ன..?

உடைந்து போன மனங்கள் இறுகிப் போய் கிடக்கையில் அங்கு கண்ணீருக்கும் வேலை இருப்பதில்லை.
அவளும் அப்படித் தான் இருக்கிறாள்,இத்தனை நாட்களாய்.

இயல்பாய் அவளின் நாட்கள் நகர்ந்தாலும் அவளே அறியாமல் அவளுக்குள் ஒரு இறுக்கமும் அழுத்தமும் மறைந்து கிடப்பதை அடிக்கடி மனம் கூறிக் கொண்டிருக்கும்.

வலியைத் தந்திட வழிகளா..?
காயம் தந்த மொழிகளா..?
ஏதோ ஒன்று அவளை இறுக்கியே வைத்திருக்க அதில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாலும் அதில் கொஞ்சமும் வெற்றியில்லை,இப்பொழுதெல்லாம்.

புன்னகைக்கிறாள்..
மனம் நிறைய சிரிக்கிறாள்..
வம்புக்கென்றே வாயடிக்கிறாள்..
மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாள்..
இருப்பினும் மனதில் ஒரு வெற்றிடம்.ம்ஹும்..
இல்லை..இல்லை..
மனம் முழுக்க வெற்றிடம் தான்.

இப்போதும் யாருடனும் இயல்பாய் ஒன்றிப் போய் மகிழந்திட முடியாத தன்னிலையை எண்ணி நொந்து கொண்டவளுக்கு அவனின்றி நாட்கள் நகர்வேனா என்றது.

அவள் தான் காதலித்தாள்.அவனுக்கு அவள் மீது ஈர்ப்பு இருந்ததா என்று கூட அவளுக்குத் தெரியாது.இருந்தாலும் கண்ணுக்கெட்டும் தூரத்தில் அவனைக் கண்டு கொண்டிருந்தவளுக்கு அவனில்லாத தனிமையை வெறுமையை உண்டு பண்ணிட மறக்கவில்லை.

"என்ன நீங்க கவனிச்சிகிட்டதுக்காக லவ் வந்துச்சுனா அது லவ்வே இல்ல..ஐ ஹோப் யூ வில் அன்டர்ஸ்டான்ட்.." கண்ரீக்குரலில் ஒலித்த வார்த்தைகள் அவ்வப்போது மனதில் ஓடி மறையும்,இப்போது போல்.

தன்னாலே ஆழப் பெருமூச்சொன்று விடுபட எழுந்து கொண்டவளின் கரத்தில் மிதமான சூட்டில் காபியைக் கொண்ட ஒரு காபி கப்.

நா விரல்கள் கைப்பிடியினுள் நுழைந்நு அழுந்தப் பற்றியிருக்க பெருவிரலோ இதழ்கள் தொட்டு மீளும் மேல் விளிம்பை பெருவிரலின் நுனி உரசி மீண்ட வண்ணம் இருந்தது.

மெதுவாய் தடவி மீண்ட அந்த உரசலில் பல நூறு அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் போலும்.

பாதங்கள் தரையில் பதிந்திட யன்னலின் அருகில் வந்தவளோ இலக்கின்றி பார்வையை மேய விட பாதை புரியாது போகும் தன் வாழ்க்கையை எண்ணி உண்டாகிடும் சலிப்பை தடுக்கும் வழி தெரியவில்லை.

இருபுறமும் தலையாட்டி நிமிர்ந்தவளுக்கு தூரத்தில் தெரியும் இருட்டைப் போல் தன் வாழ்வும் ஆகி விட்டது போன்ற பிரம்மை.

தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டாலும் மனதில் ஒரு வித அழுத்தம் இருந்து கொண்டே தான் இருந்தது.

"என்னடா இது இன்னிக்கி இப்டி இருக்கு..?"மௌனமாய் தனக்குள் அரற்றிய படி குறுக்கும் நெடுக்கும் நடந்தவளின் மனதில் என்றுமில்லாத படபடப்பு படையெடுத்து கிளம்பியிருந்தது.

"லவ்வு இந்த தண்டக்கருமாந்தரம் வந்தா இப்டி தான் போல.." மனதுக்குள் அவன் மீதான காதலை திட்டித் தீர்த்தாலும் இதழோரமாய் மட்டும் சிறு புன்னகை.

அவனின் மனம் புரியாவிடினும் பையனின் மீது அளப்பறிய நேசம் அவளுக்கு.அதனாலோ என்னவோ தன்னை விட்டு அவன் விலகி நிற்க முயன்றிட அதற்கு இடம் கொடுத்து தானும் தள்ளி நின்றாலும் இன்னும் இருக்கும் காதலில் மாற்றமில்லை..
மாற்றமேயில்லை..

போதாதற்கு இன்னும் அவனிடம் தன் மனதைத் திறந்து மடை திறக்க காத்திருக்கும் வெள்ளம் போல் உள்ளுக்குள் அடைந்து கிடந்து அவளை வதம் செய்யும் அவன் மீதான நேசத்தைப் பற்றி இதுவரை ஒருமுறை கூட ஒருவார்த்தையாவது உரைத்தது கிடையாது.திண்ணக்கம் பிடித்த மனமோ வார்த்தைகளை உதிர்த்திடவும் விடாது.

அவன் மீதான காதலை அவனாகவே புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்த்து காத்துக் கிடக்கிறது,ஆழ்மனம்.
அந்த வார்த்தையின்றிய புரிந்துணர்வு பேரழகு தான்.இல்லாமல் இல்லை..

உணர்ந்து கொள்ளுதல் அழகென்றால்,உரையின்றி உணர்ந்து புரிதல் பேரழகு தானே..
அந்த பேரண்டத்தின் பேரழகை தான் அவனிடம் எதிர்ப்பார்த்து தொலைக்கிறது,பாவையின் நேசம் கொண்ட நெஞ்சம்.

யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு தன் மனம் புரியாது போக அழைப்பெடுத்திருந்தாள்,பாவப்பட்ட தோழிக்கு.

சண்டித்தனம் செய்து கொண்டிருந்த உறக்கத்தை இழுத்துப் பிடித்து அப்போது தான் உறங்க முயன்றவளை அலைபேசி சத்தம் கலைத்திட பெருமூச்சு விட்டவாறே எழுந்தமர்ந்தாள்,தோழியவள்.

திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும் சிறிது பதற்றம் தொற்றிக் கொண்டாலும் உள்ளுக்கு பெரும் பீதி.
உயிர்த்தோழியைப் பற்றி நன்றாகத் தெரியும் தானே.

"ஹலோ.." அழைப்பு ஏற்கப்பட தோழியின் செவியில் வந்து மோதிற்று,பெண்ணவளின் குரல்.

"ஹலோ சொல்லுடி.."

"என்னடி கொட்டாவி விட்ற..தூங்கிட்டு இருந்தியா.."

"ம்ம்.."

"சரி அப்போ தூங்கு நா அப்றமா பேசறேன்.."

"அதான் விடாம ஃபோன் அடிச்சி எழுப்பி விட்டுட்டல..விஷயத்த சொல்லு.."

"அது என்னன்னா.."

"என்னன்னா.."

"என்னன்னா.."

"என்னன்னு சொன்னாத்தான் எனக்கு புரியும்..சொல்லித் தொல.."

"போடி இவ்ளோ சலிச்சிக்க வேணா.."ரோஷத்தோடு முணுமுணுத்தவளைக் கண்டு தோழிக்குத் தான் தணிந்து போக வேண்டிய நிலை.

"சாரி..சாரி..என்னன்னு சொல்லுடி.." அலைபேசியை காதில் வைத்த படி நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்,
காலை நீட்டியவாறு.

"என்னன்னு சொல்லத் தெரில தாமர..ஒரு மாதிரி மனசு படபடன்னு இருக்கு..எல்லாமே வெறுத்துப் போச்சு.."

"இரு இரு..நீ சுத்தி வளச்சு எங்க வர்ரன்னு தெர்யும்..இப்போ உனக்கு உள் ஆள பாக்கனும் தான.."

"ம்ம்ம்ம்ம்ம்.."

"இப்டி சோகமான வாய்ஸ்ல சொல்லாத..இன்னும் பத்து நிமிஷத்துல நா அங்க வந்துருவேன்..அப்றமா போலாம்.." என்று ஒப்புதல் அளிக்கும் முன்னரே துண்டிக்கப்பட்டிருந்தது,அழைப்பு.

சிறிது நேரத்திற்கு பிறகு,

"இப்போ பத்து மணி ஆயிடுச்சு..இன்னும் இருப்பாரா தாமர.." வாடிய முகத்துடன் விழிகள் சுழல கேட்ட தோழியின் தலையில் நான்கு குட்டு வைக்க வேண்டும் இருந்தது,தாமரை நாச்சியாளுக்கு.

"இருடி இரு..பதறாத..உன் ஆளு உள்ளத் தான் இருக்காரு..ஐயாவோட எடுபுடி கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணியாச்சு..அது தான் நைட் டைம்னும் பாக்காம இப்டி ஆஃபீஸ் வாசல்ல நின்னுட்டு இருக்கோம்..கொஞ்சம் பதட்டப்படாம இரு..உன்னோட ரோபோ வந்துருவாரு" பாதங்கள் நில்லாமல் எம்பிப் பணிந்திட அங்குமிங்கும் தலையைத் திருப்பி பையனின் தரிசனத்துக்காக ஆர்வம் மேலோங்க தன்னை மறந்திருந்தவளின் காதல் தோழியை வியப்பூட்டியது.

"லவ் பண்றியா அவர..?"

"ஆமா அதுல என்ன டவுட்..?" விழிகள் வேறிடம் இருக்க கேள்விக்கு மட்டும் சரியாய் பதில் வந்தது.

"உன்னால எப்டிடி லவ் பண்ண முடிது இப்டி..?" அனுதினம் தன்னை பிரமிப்பில் ஆழ்த்திடும் காதல் குறித்து கேட்டிட உதடு பிதுக்கி பதில் சொன்னவளின் கவனம் நிச்சயம் தோழியிடம் இல்லை.

"உன் லவ்வ பாத்தா எனக்கே லவ்வு வந்துரும்..நீ மட்டும் என்ன இப்டி லவ் பண்ணி இருந்த கண்டிப்பா எப்போவோ நான் உன்ன லவ் பண்ணி இருப்பேன் செல்லம்.."

"நல்ல வேள நீ ஆம்பளயா பொறக்கல.." பொய்யான முறைப்புடன் சொல்லிக் கொண்டு நிமிர்ந்தவளின் விழிகளில் பட்டென்று மின்னல் கீற்று.

பிளந்த இதழ்கள் மூட மறுத்திட முத்தமிட்டு விலகிய இமைகள் மீண்டும் தொட்டுக் கொள்ள மறந்திட இமைக்காமல் அவள் பார்வை படிந்து இருந்தது,அவன் மீது தான்.

நாளொன்றில் தவறாது அவனை கள்ளத்தனமாய் இரண்டு தடவையாவது பார்த்து விட்டாலும் ஒவ்வொரு முறையும் பையனின் ஆறடி உருவம் அவளின் கருவிழிகளுக்குள் அடங்கிப் போகையில் மனதுக்குள் இனம் புரியா பரவசமொன்று கிளை விரித்திட சற்றும் மறந்து போவதில்லை என்பது சத்தியமான உண்மை.

"அடியேய் இப்டி பே பேன்னு பாக்காதடி.." தன்னிலை இழந்து அவனை இரசித்துக்கொண்டிருப்பவளின் கரத்தை கிள்ளி விட்ட தாமரைக்கு தோழியைப் பார்க்கையில் ஒரு புறம் கோபமென்றால் மறுபுறம் அவளின் ஒருதலைக் காதலை எண்ணி சிறு வலி மனதோரத்தில்.

"அடியேய்.." தோழியின் வேகமான உலுக்கலில் தன்னிலை மீண்டவளுக்கோ பையன் தம்மை நோக்கி வருவது புரிந்திட பாவையவளுக்கு கரங்களும் கால்களும் நடுங்கத் தொடங்கிற்று.

"ஐயோ ரோபோ வருதே.." தன்னை மீறி விளைந்த பயத்தால் இதழ்கள் பிதற்ற அடுத்த கணமே வண்டியில் ஏறி கிளப்பியிருந்தாள்,ஓட்டிக் கொண்டு வந்திருந்த ஸ்கூட்டியை.

"வேகமா போடி.." பையன் தம்மை நெருங்குவது புரிய பயத்தில் பின்னே ஏறியிருந்த தாமரை அவளின் தோளைப் பிடித்து அழுத்த சிட்டென பறந்திருந்தாள்,பையனின் கையில் சிக்காது.

பதினைந்து நிமிட பயணம்.பாவையவளின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிக் கொண்டனர்,இருவரும்.

"தாமர வீட்ல சொல்லிரு..இன்னிக்கி இங்க தங்கிக்கலாம்.."

"ம்ம்..அதான் இப்போ வீட்டுக்கு அப்பா வந்துருப்பாரு..நா மட்டும் லேட்டா போனேன்னு வை..கதம் கதம் தான்.." அலட்டலுடன் சொல்லியவளின் விழிகளோ சுற்றும் முற்றும் அலசி ஆராய்ந்திற்று.

சத்தம் செய்யாது கதவைத் திறந்த பாவையின் பின்னே தோழியின் பாதங்கள் மெதுவாய் எட்டு வைத்திட இருவரும் அறைக்குள் நுழைந்த பின்னரே விடுபட்டது,ஆசுவாசப் பெருமூச்சு.

பத்து நிமிடங்களில் குளித்து விட்டு வந்த பின் சாவகாசமாக கட்டிலில் அமர்ந்து கொண்டாலும் பாவையின் விழிகளில் ஏதோ சிறு கலக்கம்.

"அடியேய் என்னடி ஆச்சு..? எதுக்கு இப்டி டல்லா இருக்க..?"

"தெரில தாமர..ஆனா எனக்கு அவர பாக்கணும் போல இருக்கு.." தலை தாழ்த்தி சொன்னவளுக்கும் தோழியை அதிகம் தொந்தரவு செய்கிறோமோ என்கின்ற குற்ற உணர்ச்சி.

"ஆமா போயும் போயும் உனக்கு எப்டிடி உன் ரோபோ மேல இவ்ளோ லவ்வு வந்துது..? இப்டி லவ் பண்றது நீதான்னா சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க.."

"தெரிலியே..எப்பவுமே வெறப்பா கல்லு திண்ணவன் மாதிரி சுத்திட்டு இருக்காருல..அதுதான் ரீசனா இருக்கும் போல..நமக்கு தான் ரகட் பாய்ஸ் புடிக்கும்ல.."

"அம்மாடி உன் ஆளு ஒன்னும் ரகட் பாய் இல்ல மா..ஆன்டி ஹீரோ.."

"ஆன்டி ஹீரோன்னா வாய்லயே போடுவேன்..அவரு ரகட் பாய் மட்டுந்தான் ஆன்டி ஹீரோ கெடயாது..அதுவும் அந்த ரகட் பாய்குள்ள ஒரு செம லவர் பாய் உம் இருக்கு..ஆனா என்ன கொஞ்சமும் அத காட்டிக்காம சுத்திகிட்டு நம்மளயும் டென்ஷன் படுத்துறதே வேலயா போச்சு.."

"மேடம் அவரு ஒன்னும் உங்கள லவ் பண்ணல..நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க.."

"பரவால..ஆனா நா லவ் பண்றேன்ல.." விழிகள் மின்னக் கூறியவளை எந்த ரகத்தில் கொண்டு சேர்த்திட என்று தெரியாமல் தலையில் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை தோழிக்கு.

"உன்னெல்லாம் திருத்த முடியாது டி..வேணாம் வேணாம்னு சொல்லி தொறத்தி விட்றவரு பின்னால சுத்தற..நீ ஹர்ட் ஆகாம இருந்தா சரி தான்.."

தோழியின் மீதான அக்கறையில் தாமரை எடுத்தியம்பிட அதை புரிந்து கொண்டு ஆமோதிப்பாய் தலையசைத்தவளின் மனமோ அவன் தன்னை நிச்சயம் காயப்படுத்த மாட்டான் என தீவிரமாய் வாதிட அதைத் தன் தோழியிடம் கூறவுமே செய்தாள்,பாவையவள்.

"இல்லடி அவரால யாரயும் ஹர்ட் பண்ண முடியாது..அதுவும் என்ன கண்டிப்பா ஹர்ட் பண்ண மாட்டாரு.."

"இங்க பாருடி..நாம லவ் பண்றோம்னு தெரிஞ்சும் அவாய்ட் பண்றாங்கன்னா என்ன அர்த்தம்னு உனக்கு புரியாம இருக்காதே..ஒன்னு அவங்களுக்கு நாம தேவயில்லாம இருக்கனும்..இல்ல அவங்க மனசுல வேற ஒருத்தங்க இருக்கனும்..உன் ஆளுக்கு ரெண்டும் இருக்கு..பாத்து நடந்துக்க..அப்றம் உன்ன ஏதாச்சும் சொல்லி எனக்கு அவரு மேல கோவம் வந்துரப் போகுது.."

"அடியேய் நீ எதுக்கு அவரு மேல கோவப்படனும்..? நீ பெருசா அதப் பத்தி அலட்டிகிட்டு யோசிச்சிகிட்டு இருக்காத..எல்லாம் கண்டிப்பா ஒரு நாள் மாறும்..ஏன் மிஸ்டர்.ரோபோவும் மாறத் தான் போறாரு..வெய்ட் அன்ட் சீ.." அசைக்க முடியா நம்பிக்கையில் சொன்னவளின் நம்பிக்கையின் காரணம் அவளும் அந்த கடவுளும் மட்டுமே அறிந்ததாய்.

●●●●●●●

மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த காலைப்பொழுது அது.

அந்த அதிகாலையிலேயே விழிப்புத் தட்டியிருந்தது,அவளுக்கு.

அருகே வைக்கப்பட்டிருந்த அலைபேசியில் நேரத்தைப் பார்த்தவளோ சலிப்புடன் எழுந்து கொண்டாலும் அடுத்தடுத்த வேலைகளில் சுறுசுறுப்புடனே மூழ்கிப் போனவளுக்கு நேரம் கரைந்து போனது போல் இருந்தது,வேலைகளை முடித்து விட்டு நேரத்தைப் பார்க்கையில்.

சமயலறைக்குள் நுழைந்து தனக்கும் தாய்க்கும் காபி கலக்கிக் கொண்டிருக்கும் போதே எழுந்து வந்திருந்தார்,அவளின் தாயார்.

"அபி என்னம்மா இது இவ்ளோ சீக்கிரமா இன்னிக்கும் எழுந்துருக்க..?" சிறு அதட்டலுடன் கேட்டவருக்கோ முன்பைப் போல் மகள் இல்லாதது பெரும் மகிழ்ச்சியே.

"பழகிருச்சுல.."

"ம்ம்..சக்தி எப்போ வர்ரானாம்..?"

"இன்னிக்கி சாயந்தரம் வந்துர்ரேன்னு சொன்னாரு.." என்றவளின் குரலில் அவனுக்கான தேடல் நிரம்பியோடிற்று.

"உன்னோட நல்ல காலம்..உனக்கு சக்தி மாதிரி ஒரு நல்ல பையன் அமஞ்சான்.." பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்த படி அவர் கூறிட அவளுக்கோ தாயின் வார்த்தைகளில் இருக்கும் உள்ளர்த்தம்.

நடந்தது அனைத்தும் நிழற்படம் போல் ஓடிய நெடுமூச்செறிந்தவளுக்கு தன் வாழ்க்கையில் மட்டும் ஏன் அப்படி என்கின்ற எண்ணம் இன்னுமே நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்.

ஏனோ அவற்றையெல்லாம் நினைக்கும் போதே விழிகள் கலங்க முயல்வது போல் இருந்திட இமை சிமிட்டி தன்னை அடக்கிக் கொண்டவளோ அடுத்த கணம் வெளியேறி இருந்தாள்,சமயலறையில் இருந்து.

உயிர்த்தொடும்.

2024.08.20
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 02


தாயின் வார்த்தைகள் வலிக்க வைத்திட அறைக்குள் நுழைந்திட்டவளுக்கு விழிகளில் நீர் ததும்பி வழிந்தது.

அவளுக்குத் தெரியும்,வீட்டினரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் செய்த செயல் அத்தனை உவப்பானதல்ல என்பது.அவள் தரப்பில் நியாயம் இருந்தாலும் அதை எடுத்துரைப்பதற்கும் ஒரு முறை இருந்ததே.

மொத்தமாய் அவனை நொருக்கிய படி அவளின் நியாயத்தை கூறிட அவனிதழோரம் உண்டாகிய கசந்த முறுவல் இன்னும் அவளுக்கு நினைவில் இருக்கத் தான் செய்கிறது.

ஏற்கனவே மனம் நொந்து போயிருந்தவளை தாய் அந்த சந்தர்ப்பதில் மொத்தமாய் குழப்பி விட்டிருக்க மொத்தமாய் வெடித்து விட்டாள்,அவனிடம்.

எரிமலையென சீற்றம் வெடித்துக் கிளம்பியிருக்க பேசி விட்டவளுக்கு பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்கின்ற சிந்தனை எழாமல் இருந்திருக்கும் போலும்.

இதோ,அன்று பேசிய வார்த்தைகளுக்கான விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.மனம் முழுக்க மண்டிக் கிடக்கிறது,குற்றவுணர்ச்சி.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திட்டவளை அலைபேசி சத்தம் கலைத்திட விழிகளை துடைத்துக் கொண்டு எழுந்தவளுக்கு திரையில் மிளிர்ந்த அவனின் பெயரைக் கண்டதும் உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசுவாசம்.

அதே நேரம்,

"இன்னிக்கி நல்லா சாப்டனும்..ரோபோ இன்னிக்க செம்மயா வச்சி செய்யப் போறாரு.."

"அவரு திட்றதுகும் நீ சாப்பட்றதுகும் என்னடி சம்பந்தம்..?" தோழியின் முணுமுணுப்பு தாளாமல் கேட்டால்,தாமரை.

"அவரு திட்டுனா நா ஸ்ட்ரெஸ் ஆகிருவேன்..சாப்டாம போன இன்னும் ஸ்ட்ரெஸ் ஆகிருவேன்..ஸோ ஏதாச்சும் ஒன்னால வர்ர ஸ்ட்ரெஸ்ஸ கம்மி பண்ணனும்ல அதான்.."

"கடவுளே.."தலையில் அடித்துக் கொண்டவளுக்கோ தூரத்தில் தம்மை நோக்கி வந்து கொண்டிருந்த பையனை கண்டதும் தூக்கி வாரிப் போட்டது.

"அடியேய் உன் ஆளுடி.." என்றிட உப்பியிருந்த கன்னங்களுடன் விழிகள் விரிய எட்டிப் பார்த்தவளுக்கு பையனின் காரைக் கண்டதும் பயம் பீறிட்டு எழ சாப்பிட்ட தட்டை அப்படியே வைத்து விட்டு ஓடி விட்டிருந்தாள்,உள்ளே.

"இவ எதுக்கு சாப்பாட்ட பாதில வச்சிட்டு போறா.." உணவருந்தும் அறையில் இருந்து தடதடவென ஓடியவளின் பாதச்சத்தங்கள் தந்த எரிச்சலில் வாசலுக்கு வந்தவருக்கு அங்கே வந்து கொண்டிருந்தவனைக் கண்டதும் முகத்தில் சிறு புன்னகை.

அழைப்பு மணியை அழுத்தும் நோக்கில் வந்த பையனுக்கு அதற்கான தேவை இல்லாமலே போய் விட அவனை வரவேற்றிட வந்த அவளின் தாயாரைக் கண்டு கடமைக்கென சிறு புன்னகை சிந்தினான்,பையன்.

கண நேரப் புன்னகை தான்.அவர் மீண்டும் இமை சிமிட்டுவதற்குள் அது தொலைந்து போயிருந்தது.

"வாங்க தம்பி..உள்ள வாங்க.."

"இல்ல ஆன்டி..அரசி எங்க..?"

"அவ இப்போ தான் தம்பி உள்ள போனா..இருங்க வர சொல்றேன்.." என்றவரோ அவனை வற்புறுத்தி உள்ளை அழைத்து அமர வைத்து விட்டு பாவையவளின் பெயரை இருமுறை கத்தி அவளை கூப்பிட்டவாறு பையனுக்கு காஃபி கலக்க சமயலறைக்குள் நுழைந்திட தாயின் அழைப்புச் சத்ததில் பெண்ணவளின் உயிர் வரை நடுக்கம்.

"ஆத்தா மாரியாத்தா..என்ன காப்பாத்தாத்தா.." கைகளை மேலே உயர்த்தி கடவுளிடம் பார்த்தை போட்டு விட்டு கீழிறங்கிச் சென்றிட அங்கு அவளுக்காக வேண்டி காத்துக் கொண்டிருந்தான்,பையன்.விழிகளில் கரை காணா காதல் குடி கொண்டிருந்தது என்றால் அது நிச்சயம் உண்மையில்லை.

அவனாவது..
காதலை கண்களில் கசிய விடுவதாவது..
அப்படி நடந்தால் அவளுக்கு மயக்கம் அல்லவா வந்திருக்கும்.

ஒற்றை சோபாவில் சட்டமாய் சரிந்தமர்ந்து கைப்பிடியில் முழங்கை ஊன்றி அதே கரத்தின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் தாடையை நீவிய படி கூர்ப்பார்வையால் அவளின் மொத்த தைரியத்தை கூறு போட்டவாறு அமர்ந்து இருந்தவளின் முகத்தில் அப்படி இறுக்கம்.

நீள் விழிகளில் புலப்பட்ட உணர்வற்ற பாவமும் அழுந்த ஒட்டிக் கொண்டிருந்த இதழ்களுக்கு நிகரான அழுத்தத்தை தந்திட்ட தாடையும் அவளை வெகுவாய் பயமுறுத்தின.அவனின் விழிகளில் கோபத்தை கண்டிருந்தாலும் அவள் இத்தனை பயந்திருக்க மாட்டாளோ என்னவோ..?

"கம்.." அவன் உதிர்த்த தனி வார்த்தை கிளப்பிய பயத்தின் அதிர்வலைகளில் பேயறைந்தது போல் ஆனது,அவள் முகம்.

"கம் க்விக்.." அவளைப் பார்த்து அழுத்தமாய் இதழசைக்க இருந்த பத்து அடி தூரத்தை ஓடியே தாண்டி அவனருகில் வந்து நின்றாள்,பாவையவள்.

"சிட் டவுன்.."

"ஐயோ ரொம்போ கோவமா பாக்கறாரே.." மனதுக்குள் மருகியவளோ மறுவார்த்தை பேசாது அமர்ந்து கொண்டிட விழிகளோ அவனின் முகத்தை அலசி பையனின் ஆழ்மனதை படிக்க முயன்றினும் முயற்சியோ முற்றிலும் தோல்வியைத் தழுவியது.

"ம்ம்..நேத்து எதுக்கு அங்க வந்த..?"

"............."

"கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.."

"சு..சும்ம தான்.." மெதுவாய் இதழசைத்தவளின் பார்வை நிலத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

"இங்க பாரு அரசி..ரொம்ப பொறுமயா இருக்கேன்னு என்ன பத்தி தப்பா எடப் போட்டுடாத..இதுக்கப்றம் இப்டி ஏதாச்சும் நடந்ததுன்னா நா மனுஷனாவே இருக்க மாட்டேன்..நீ ஆரம்பத்துல என் கிட்ட என்ன சொன்னன்னு உனக்கு மறந்து இருக்காதுன்னு தோணுது..புரிதுல.."

"ஐயோ இந்த ரோபோ வேற.."

"என்ன பதில் சொல்லாம முழிச்சுட்டு இருக்க..திரும்ப திரும்ப சொல்ல வக்காத..இந்த ஒலகம் அழிஞ்சாலும் இதுக்கப்றமா உன்ன லவ் பண்ண மாட்டேன்..அப்டி லவ் பண்ணுவேன்னு ஏதாச்சும் எண்ணம் இருந்தா இப்போவோ அழிச்சுக்க..எப்பவுமே என்னோட லவ் அபிக்கு மட்டுந்தான்..காட் இட்.." சீறியவனின் வார்த்தைகை பெரிதாய் உள்ளெடுத்துக் கொள்ளவில்லை,பாவையவள்.

இருப்பினும் அவன் கடைசியாக கூறியது அவளின் முகத்தை கடுகடுக்க வைத்திட பற்களை நறநறத்தவளின் முகத்தில் தாண்வமாடிய கோபத்தைக் கண்டு அவனின் முறைப்பு இன்னும் கூடியது.

அவளை திட்ட மீண்டும் வார்த்தைகள் எழுந்தாலும் அதை அடக்கிக் கொண்டவன் அவளைப் பார்த்தி இன்னுமே ஓரக்கண்ணால் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்,பாவ்யவள்.

"எவ்ளோ சொன்னாலும் அடங்க மாட்டியா நீ..?" அவன் இறுக்கத்தை கூட்டி கேட்டிட பதில் சொல்லாது இருந்தவளை எந்த ரகத்தில் கொண்டு சேர்ப்பிக்கவென்று சத்தியமாய் தெரியவில்லை,பையனுக்கு.

மீண்டும் ஏதோ திட்ட வாயெடுக்கும் முன்னர் அவளின் தாயார் காஃபி டம்ளருடன் வந்திட நொடியில் தன்னை இயல்பாக்கி அவருடன் பேச்சுக் கொடுத்தவனின் செயலில் அவள் வியப்பது எத்தனையாவது தடவையென்று அவளுக்கே தெரியவில்லை.

"காரியாக்காரன்.." இதழ்களுக்குள்ளால் முணுமுணுத்து விட்டு தன்னறைக்குச் செல்ல அங்கு பாவையவளின் வருகைக்காக அளவுக்கு மீறிய பதட்டத்துடன் நகத்தை கடித்த படி இருந்தாள்,தோழி.

"அடியேய்..என்னடி ஆச்சு..? ஏதாச்சும் திட்டுனாரா..? உங்கம்மா வேற கீழ இருந்தாங்களோ..? என்ன இன்னிக்கும் அதே திட்டு தான்.."

"தாமர இருடி..வந்ததும் வாசலுக்கு ஓடி வந்து மூச்சு விடாம கேள்வி கேக்கற அளவு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல..ஒரு சப்ப மேட்டர் தான்..என்ன எப்பவும் மாதிரி தான்..அதே டயலாக்..என்ன இன்னிக்கி கோவம் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சு..அவ்ளோ தான்.."

"திரும்ப கேக்கறேன்னு தப்பா நெனக்காதடி..இப்டி ஒரு லவ் உனக்கு தேவ தானா..?" தோழி சீறிடுவாள் என்பது தெரிந்தும் கேட்டவளுக்கு முறைப்பைத்தான் அள்ளி வழங்க முடிந்தது,பாவையவளால்.

"இப்டி கேக்காத தாமர..அப்றம் கடுப்பாயிரப் போறேன்..ம்ம் இப்டி இரு வல் கண்டிப்பா தேவயாவதுங்குறதுனால தான் இன்னும் அப்டியே இருக்கேன்.."கோபத்தை அடக்கிய குரலில் கூறினாலும் அவளின் வார்த்தைளில் அத்தனை சூடு.

தாமரைக்கும் தான் கேட்டது சற்று அதிகப்படியாக தோன்றிடவே மன்னிப்புக் கேட்டிட அவளின் தோளைத் தட்டி விட்டு கடந்து சென்றவளுக்குத் தெரியாதே இத்தனை நேரம் அவர்களின் உரையாடலை பையன் மறைந்திருந்து செவிமடுத்ததை.

அறைக்குள் இருந்த குளியலறைக்குள் நுழைந்தவளுக்கோ இன்னும் கோபம் அடங்க மறுத்தது.

முன்பென்றால் அவனுக்கு இருந்த முன்னால் காதல் கதையை பெரிய விடயமாக எடுத்துக் கொண்டதேயில்லை,அவள்.

ஆனால்,ஒவ்வொரு முறையும் பையன் தன் மனதில் தனது முன்னால் காதலிக்குத் தான் இடம் இருக்கிறது கூறிட இப்பொழுது யாரென்றே தெரியாத அந்தப் பெண்ணின் மீது பாவையவளுக்கு கட்டுங்கடங்காத ஆத்திரம்.

"இந்த மனுஷன் சொல்லி சொல்லியே நமக்கு அந்த பொண்ணு மேல வன்மம் வந்துடப் போகுது.." முகத்தில் நீரை அடித்து கழுவிய படி யோசித்தவளுக்கு தன் காதல் தெரிந்தும் அதை புரிந்து கொள்ள முயலாமல் இருக்கிறானே என எண்ணிட தன்னாலே விடுபட்டது,பெருமூச்சொன்று.

●●●●●●●●

இருள் மெல்ல மெல்ல கவிழத் துவங்கி இருந்த நேரம் அது.

பணி நேரம் முடிவடைய அலுவலக ஊழியர்கள் கலைந்து செல்வதை தன்னறையில் இருந்து கண்ணாடித் தடுப்பின் ஊடு பார்த்தவனுக்கு நேரமாவது தெரிந்தாலும் ஏனோ வீட்டுக்குச் செல்ல மனமில்லை.

மனதில் வெறுமை சூழ்ந்து அலைக்கழித்திக அவனின் உணர்வுகளை அவனாலே புரிந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் தான் என்ன..?

"மச்சான் இன்னும் வீட்டுக்கு போகாம என்னடா பண்ற..?" தினமும் நடப்பது என்று தெரிந்தாலும் இந்த கேள்வியை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை,அரவிந்த்.

பையனின் உயிர்த்தோழன்.பால்ய வயதில் இருந்து இருவருக்கும் இருந்த நெருங்கிய பழக்கம் இருக்க வருடங்கள் கடந்திட இருவரின் நட்பின் பிடியும் இறுகித் தான் போனது,இருவரும் சேர்ந்தே தொழில் தொடங்கிடும் அளவு.

"காரணம் தெரிஞ்சும் ஏன்டா கேள்வி கேக்கற..?" சலிப்புடன் கேட்டவனின் குரலில் இருந்த பேதத்தை உணராமல் இல்லை,தோழனவனும்.

"தெனமும் கேக்குறானேன்னு ரோஷம் வந்தாவது சீக்கிரம் வீட்டுக்கு போயிட மாட்டியாங்குற நப்பாசைல தான் கேக்கறேன்.."

"என்ன ஆனாலும் நா வீட்டுக்கு சீக்கிரம் போக மாட்டேன்னு உனக்கு தெரியாதா..? எதுக்காக நா சீக்கிரமா வீட்டுக்கு போகனும்..? உன் வீட்ல மாதிரி எனக்காக யாராச்சும் காத்துகிட்டு இருப்பாங்களா என்ன..?" எத்தனை முயன்று மறைக்க முடியாது போன விரக்தியின் சாயல் வார்த்தைகளில் தென்பட தோழனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று புரியவில்லை,அரவிந்துக்கும்.

சடுதியாய் அமைதியாகிப் போனாலும் "லவ் பண்ற பொண்ண வேணான்னுட்டு இருக்கேன்னு கொஞ்சமாச்சும் யோசிக்கிறானா பாரு.." எனவும் யோசிக்கத் தான் செய்தான்.அவனுக்கு தோழனின் வாழ்வு முக்கியம்.

"சரி விடு எதுவும் பேசல..அப்டியே வெளில சாப்டு்டு நாம வீட்டுக்கு போலாம்.." என்று கூறிய படி தோழனை எழுப்பி கிளப்பி உணவகத்துக்கு வந்தைடயும் போது பதினைந்து நிமிடங்கள் கழிந்து போயிருந்தன.

உணவகத்தில் அமர்ந்து பொதுவான கதை பேசிய படி உண்டு கொண்டிருக்க தன்னிச்சையாய் சுற்றத்தை மேய்ந்த அரவிந்தின் விழிகள் மூலையில் இருந்த மேசையில் அமர்ந்து இருந்தவனைக் கண்டதும் தெறித்து விரிந்தன.

"ஆத்தாடி இவன் இங்க என்ன பண்றான்..?" மனசாட்சி அவனுக்கு மட்டும் கேட்கும் படி குரல் எழுப்பிட தட்டி அடக்கியவனின் விழிகள் தோழனை ஆராய்ந்தது.

உணவை மென்று விழுங்கிய படி விழிகளாலே தோழனிடம் பையன் என்னவென்று விழிகளால் கேட்டிட மறுப்பாய் தலையசைத்தவனை கொஞ்சமும் சந்தேகப்படவில்லை,அவன்.

உயிர்த்தோழன் என்பதால் அரவிந்த் மீது அலாதி நம்பிக்கை இருக்கவே பொதுவாகவே எல்லாவற்றையும் தீர்க்கமாய் ஆராய்ந்து முடிவெடுப்பவன் தோழனின் விடயத்தில் அந்த பழக்கத்தை விலக்கி வைத்து விடுவது வாடிக்கை தான்.

"கடவுளே இவன நம்மாளு கண்ல காட்டிறாத சாமி.." மானசீகமாய் கடவுளிடம் வேண்டுதல் வைத்த படி உணவை மென்று விழுங்கினாலும் புதியவன் அவ்விடத்தில் இருந்து கிளம்பும் வரை உள்ளுக்குள் திக் திக் நிமிடங்கள் தான்.

அரவிந்த கண்டு மிரண்ட புதியவனோ இருவரும் வந்திருப்பதை அறியாது சிறு துளி பயமின்றி அவ்விடத்தில் இருந்து கிளம்பி வெளியேறிச் சென்றவனிம் ஒரு பார்வையை வைத்து தோழனிடம் இயல்பாய் தன்னைக் காட்டிக் கொள்ள வெகுவாய் சிரமப்பட்டு போனான்,அரவிந்த வர்மன்.

"ஹப்பாடா பொய்ட்டான்.." நிம்மதியாய் சுவாசித்த படி தோழனைப் பார்த்திட பையனோ புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்,தோழனை.

"என்னாச்சு எதுக்கு ஒரு மாதிரி நர்வஸா இருக்க..?" சட்டென விழிகளை அலையவிட்டு அலசிய படி கேட்டவனோ தோழனின் விடயத்தில் சற்று பலவீனமானவன் தான்.

"ஒன்னுல்லடா.." பையனை அமைதிப்படுத்திய தோழனுக்கு அடி வயிற்றில் கலவரப்பந்து உருளாமல் இல்லை.

தான் செய்து வைத்திருக்கும் திருகுதாளத்தை பையன் தெரிந்து கொள்ளும் சமயம் அவனின் ஆடிடப் போகும் ருத்ரதாண்டவத்தை பற்றி எண்ணுகையிலேயே தொண்டைக்குழி வற்றி வரண்டு போயிற்று.

"சாமி நீ தான் என்ன காப்பாத்தனும்.." மௌனமாய் அரற்றிக் கொண்டு உணவில் கவனமானவனின் முகம் சிந்தனையை தத்தெடுத்துக் கொண்டது,அழைப்பு வர திரையில் மிளிர்ந்த எண்ணைக் கண்டதும்.

உயிர்த்தொடும்.

2024.08.20
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 03

"உன் சோகம் ஒரு மேகம்..
நான் சொன்னால் அது போகும்..
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.."
தனக்கு பிடித்த பாடலின் வரிகளை முணுமுணுத்தவாறு அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்,பாவை.

துப்பட்டாவை ஒரு முறை சரி பார்த்து விட்டு கீழிறங்கி வந்தவளுக்கு இன்று பையனை காணச் செல்ல என்ன காரணம் கூறுவது என்று ஒரே குழப்பம்.

"நேத்து தான் அந்த திட்டு திட்டுனார்ல..இன்னிக்கி போய்த் தான் ஆகனுமா..?" மனசாட்சி ரோஷம் கொண்டு குரல் கொடுத்திட சற்றும் பொருட்படுத்தாமல் "ஆம்" என்று அதை அடக்கி வைத்தவளுக்கு அதுவொன்றும் புதிதான விடயம் அல்லவே.

"சரி ஏதாச்சும் பண்ணலாம்.." தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு பையை தோளில் மாட்டிய கிளம்பியவளின் நடையில் தானாய் ஒரு துள்ளல்.

ஏனென்று தெரியவில்லை.பையனை காதலிக்கத் துவங்கியது முதல் அவள் வாழ்க்கை முழுக்க வண்ணமாகி விட்ட உணர்வு தான்,அவளுக்குள்.

காதல் வந்த பின் அவனும் அழகாய்த் தெரிந்தான்..
அவனோடு சேர்த்து அவளைச் சூழ்ந்திருக்கும் மொத்த உலகமும் அழகாகி நின்றது..

சில நேரங்களில் பையன் காட்டிடும் புறக்கணிப்புக்களில் நொந்து போய் விட ஆற்றாமை ஒட்டிக் கொண்டாலும் ஏனோ அவனின் நினைவுகளில் இளைப்பாறுகையில் வந்த ஆற்றாமை மொத்தமும் வெருண்டோடாமல் இல்லை.ஆனால், என்ன அவன் அருகாமை இல்லாத வெறுமை மட்டும் துளியும் அகன்றபாடில்லை.

நினைவுகளுடனேயே பேரூந்து நிறுத்தத்துக்கு வந்தவளுக்கு கால்கள் வலியெடுத்திட எதையும் பாராது அமர்ந்து கொண்டாள்,அங்கிருந்த இருக்கையில்.இதழ்களோ தனக்கு பிடித்த பாடலை மெதுவாய் இசைத்துக் கொண்டிருக்க சரேலென தன்னைக் கடந்து சென்ற வண்டியைக் கண்டதும் விழிகளில் மின்னலேறிற்று.

பின்னே மின்னல் வர காரணம்,மின்னல் வேகத்தில் கடந்து சென்ற பையனின் கார் அல்லவா...?

"அட நம்ம ரோபோ இவ்ளோ ஸ்பீடா எங்க போகுது..?" நாடி தட்டி யோசித்தவளுக்கு விடை கிஞ்சிற்றும் தெரியாது போக கலைந்து மீண்டாள்,சிந்தையில் இருந்து.

சில நிமிடங்கள் கடந்திட பேரூந்தும் வந்து சேர்ந்தது.யன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டவளுக்கு முகத்தில் மோதிய மென்காற்று சிறு இதத்தை பரப்பிட இதழ்களில் மெல்லிய முறுவல்.

அதே முறுவலுடன் தரிப்பிடத்தில் இறங்கியவளோ பையனின் அலுவலகத்தை நோக்கி நடையைக் கட்டிட முகத்தில் அத்தனை மினுமினுப்பு.

பெரிய கட்டடத்தின் நுழைவாயிலின் அருகே நின்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார்,காவலாளி.

"உனக்கு எத்தன தடவ தான் மா சொல்றது..இங்க வராதன்னு கேக்க மாட்டியா..?" தலையில் அடித்துக் கொண்டே அவர் கடிய அவை எங்கே அவளின் செவியில் நுழைந்தது..?
நுழைவாயிலில் இருந்த இடுக்குகளின் ஊடு உள்ளே எட்டிப் பார்த்திட முயன்று கொண்டிருந்தாளே.

"இந்தா மா பொண்ணு.."

"ஆ..என்ன தாத்தா..?"

"யாரு யாரு உனக்கு தாத்தா..எப்டி நீ என்ன பாத்து நீ தாத்தான்னு சொல்லலாம்.." அவரின் வயதை கூட்டி விட்ட கோபம் அவருக்கு.

"ஆமா நீங்க தாத்தா தான.."

"சும்மா வம்பு வளக்காத மா..மரியாதயா எடத்த காலி பண்ணு.."

"இங்க பாருங்க தாத்தா.." என்றவளின் செவிகளில் ஹாரன் சத்தம் கேட்டிட உடல் அதிர்ந்து அடங்கியது.

அவள் பையன் உள்ளே இருப்பான் என நினைத்து வாயாடிக் கொண்டிருக்க வழமைக்கு மாறாய் அவன் தன்னை விட தாமதமாக வந்து சேர்வான் என்று துளியும் எதிர்பார்த்திடவில்லை.

விழிகள் விரிந்திட பயத்தில் வியர்க்கத் துவங்கிட அப்படியே அவனைப் பாராது ஓடி விடப் பார்த்தவளின் முன்னே வந்து தரித்தன,பையனின் பாதங்கள்.

இப்போதும் விழிகளில் அனல்,முன்பை விட அதிகமாகவே நிறைந்து வழிந்தது.

"கார்ல ஏறு.." அடிக்குரலில் சீறியவனோ இதுவே பாதையென்று இல்லா விட்டால் தரதரவென அவளை இழுத்துச் சென்று காருக்குள் தள்ளி கதவை அடித்துச் சாற்றியிருப்பான் என்பது சர்வ நிச்சயம்.

அவனின் குரலில் நடுங்கியவளோ அப்படியே பம்மிக் கொண்டு வண்டியில் ஏறிட அவளை முறைத்து பார்த்த வண்ணமே தானும் உள்ளேறி வண்டியைக் கிளப்பினான்,பையன்.

பையன் வண்டியை செலுத்திட்ட வேகமே சொன்னது,அவனின் மனதுக்குள் தீயென கனன்று கொண்டிருக்கும் கோபத்தின் அளவை.

பாதையில் வண்டி சென்றே வேகமே அவளுக்கு பயத்தைக் கொடுத்திட நெஞ்சாங்கூட்டில் கரத்தை வைத்து விழிகளை இறுகப் பொத்தி இருக்கைப் பட்டியை இறுக்கமாய் பற்றிக் கொண்டு மூலையில் ஒண்டிப் போய் இருந்தவளின் மீது அவனின் பார்வை படியவேயில்லை.

வேகத்தைக் குறைக்கும் படி கூறிட மனம் வாதிட்டாலும் அதற்கும் அவன் மீதான பயம் தடைக்கல்லாய்.

அதிவேகத்தில் சென்ற வண்டி ஒரு ஆள் அரவமற்ற இடத்தில் நிற்க வண்டி தரித்ததும் தான் மூச்சே வந்தது,பாவையவளுக்கு.

"எறங்கி வெளில வா.." அவள் தன் பயத்தை களையும் முன்னமே வார்த்தைகளில் சினம் தேக்கி உதிர்த்து விட்டு பையன் இறங்கி விட பாவையவளுக்கோ இதயம் தடதடத்தது,பயத்தின் மிகுதியில்.

விழிகளை மூடி தன்னை சமப்படுத்திக் கொள்ள அவள் முயலும் சமயமே கதவு திறக்கப்பட்டு அவளின் கரம் பையனால் இறுக்கமாய் பிடிக்கப்பட அவனின் செயலை சுதாரித்தவளோ பட்டென இறங்கிக் கொண்டிட அவனுக்கோ இழுக்கும் வேலை மிச்சமானது.

தன் முன்னே தலை தாழ்ந்து நின்றிருந்தவளை அழுத்தமாய் பார்த்திட அவனின் பார்வையால் உள்ளுக்குள் ஊறிய நடுக்கத்தை மறைத்த படி நின்றிருந்தாள்,பாவையவள்.

"ஆர் யூ மேட்..? பைத்தியமா நீ..? நேத்து அவ்ளோ தெளிவா சொல்லியும் இன்னிக்கி இப்டி பாக்க வந்துருக்க..? கொஞ்சமாச்சும் புத்தி இல்லயா..? பைத்தியமா நீ..?" அதீத கோபத்தில் அந்த நிசப்தமான இடம் அதிர கர்ஜித்தவனுக்கோ தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

தன்னை ஒரு பெண் ஒரு தலையாய் காதலிப்பதற்காக இத்தனை தூரம் கோபாவேசம் அடைந்திடும் ரகம் இல்லை,பையன்.இருப்பினும் தன் இயல்பை மீறி கோபத்தை கொட்டித் தீர்க்கிறான் என்றால் நிச்சயம் அதன் பின் வலிதாகும் காரணம் இருப்பது உறுதி தான்.ஆனால்,அது என்ன காரணமென்று அவனாய் மொழிந்தால் தான் உண்டு.

"இங்க பாரு அரசி..சின்ன பொண்ணு நீ..லவ்வு யெழவுன்னு பைத்தியம் மாதிரி பின்னால சுத்திட்டு இருக்க..நீ லவ் பண்றது எனக்கு தெரியாதுன்னு நெனச்சிகிட்டு இருக்கியா..? நீ என்ன எப்போ பாக்க வர்ரங்குறதுல இருந்து எல்லாம் எனக்கு தெர்யும்..இதுக்கப்றம் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்..செவுல பேத்துருவேன் பாத்துக்க.." பின் காதோரமாய் விரல் நுழைத்து சிகையைக் கோதி தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற படி பையன் பேசிட அவளுக்கு அவன் மீது பயம் இருந்தாலும் அவனின் திட்டுக்களை எல்லாம் தலையில் ஏற்றுக் கொள்வதில்லை,பாவையின் மனது.

அவளுக்கே தன்னை நினைத்து ஆச்சரியம் தான்.அவன் மீது அத்தனை பயம் இருந்தும் ஏன் அவனின் வார்த்தைகளை தான் அலட்டிக் கொள்வதில்லை என்பது குறித்து.

"நீ என்ன தான் ட்ரை பண்ணாலும் உன் மேல என்னோட பார்வ கூட படாது..உன்ன மாதிரி பொண்ணுங்கள எல்லாம் எனக்கு சாதாரணமாவே கொஞ்சமும் புடிக்காது..இப்போ நீ எனக்கு புடிக்காத ஒவ்வொன்னா பண்ணி இரிடேட் பண்ணிட்டு இருக்க..கொலவெறி தான் வருது உன் மேல.."

"நெஜமா தான் சொல்றேன்..ஐ ஜஸ்ட் ஹேட் யூ அ லாட்..ரொம்ப வெறுக்குறேன் உன்ன..உன்ன மாதிரி யாரும் இனிமே என்னோட லைஃப்ல வந்துரக் கூடாதுன்னு நா கடவுள் கிட்ட வேண்டிக்கற அளவுக்கு உன்ன நா வெறுக்குறேன்...ஐ ஹேட் யூ..ஐ ஜஸ்ட் ஹேட் யூ அ லாட்.." சொன்னவனின் குரலில் இருந்த உண்மைத் தன்மை அவளை அடியோடு அசைத்திட நொந்து போனவளோ இன்னும் தாழ்த்திய தலையை நிமிர்த்திடவேயில்லை.

எங்கே அவனின் விழிகளை ஏறிட்டுப் பார்த்து அதில் தன் மீதான வெறுப்பு புலப்பட்டால் உடைந்து சிதறி விடுவோமோ என்கின்ற பயம் அவள் மனதுக்குள்.

"அதுவும் இல்லாம நீ முன்னாடி ஒரு பையன லவ் பண்ணி இருக்க..அத என் கிட்ட சொன்னதும் நீ தான்..இப்போ திடீர்னு அவன் இல்லன்னு ஆனதுக்கப்றம் என் மேல லவ் வந்துருக்குறத நா என்னன்னு எடுத்துக்க..நீ அவன உண்மயா தான் லவ் பண்ணியிருக்க..அதப் புரிஞ்சிக்காம அவன் உன்ன விட்டுட்டு போனதுல உன் மேல தப்பு இல்லன்னாலும் எப்டி என் மேல இவ்ளோ சீக்கிரமா எப்டி லவ் வரும்..? நெனச்சு பாக்கும் போதே காமெடியா தோணல.." பையன் எள்ளலாய் தொனியில் கேட்டிட அவளுக்கு அவனின் கேள்விக்கு சொல்லி பதில் எதுவும் இல்லை,கைவசம்.

"நா சொல்றது புரியுதா இல்லயா..? நல்லா கேட்டுக்கோ அரசி..இந்த ஒலகம் அழிஞ்சாலும் இதுக்கப்றம் நா உன்ன லவ் பண்ண மாட்டேன்...உன்ன இல்ல நா வேற எந்தப் பொண்ணயும் லவ் பண்ண மாட்டேன்..அபிக்கு மட்டுந்தான் என்னோட மனசுல எடம் இருக்கும்.." ஏனோ இறுதியை அவன் அழுத்திக் கூறிய விதத்தில் அவளுக்குள் சுருக்கென்று தைக்க விழிகள் கலங்குவது போல் இருந்தது.

முன்பு பேசியது எல்லாம் காதல் கொண்டவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஏனோ அவன் மனதில் அவன் முன்னால் காதலிக்கு மட்டுந்தான் இடம் இருப்பதாய் கூறியதும் அவளின் மீது வெறுப்பிருப்பதாய் வார்த்தைகளால் ஒப்புவித்ததும் அவளை ஆழமாகவே கீறி விட்டது.

எந்த காதல் கொண்ட நெஞ்சம் தாங்கும்,தான் சுமக்கும் நெஞ்சம் இன்னொரு பெயரை சுமந்து கொண்டிருப்பதை.அவள் நிலையும் அப்படித் தானே.

அப்படியே பையனின் சட்டையை பிடித்து உலுக்கிடும் ஆவேசம் உள்ளுக்குள் கொந்தளித்துப் பீறிட்டாலும் மனதில் சிறு வலியும்.இத்தனை நாட்கள் திட்டுக்களுடன் கடந்து விடும் பையன் தன்னை வெறுத்தாய் கூறியது அவளை அடியோடு சரித்துப் போட்டது.

"இந்த மனுஷன் நம்ம லவ்வ புரிஞ்சிக்க மாட்டாரு.." தனக்குள் நினைத்து மருகியவளோ இமைகளை சிமிட்டிட அவனோ அவளை ஆராயவே இல்லை.பேச வேண்டியதை பேசி விட்டு வண்டியில் ஏறிக் கொண்டு ஹாரனை அழுத்திட அவளுக்கு அவனுடன் செல்ல மனமேயில்லை என்பது மறுக்க இயலாத உண்மை.

பையனுக்கோ இருந்த கடுப்பு ஏகத்துக்கும் ஏறித் தொலைத்திட மீண்டும் இறங்கி வந்து அவளை அழைத்திட அவளோ மறுப்பாய் தலையசைத்திட அவனுக்கு சுர்ரென ஏறியது.

"அரசி..பைத்தியமா ஒனக்கு..? வந்து வண்டிற ஏறு.." அதிரும் விதமாய் கத்தியவனின் பார்வையே தாமிருந்த இடத்தை அலசிட கண்ணுக்கெட்டும் தூரம் வரை அவ்விடத்தில் மனிதர்கள் சாயல் இருந்திடவில்லை.

"நீங்க போங்க பாஸ்..நா வர்ரேன்.." உடைந்த குரலில் உச்சரித்தவளுக்கு அழுகை வரும் போல் இருந்திட அதை பையனின் முன் காட்டக் கூடாது என்று அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்,வெகு சிரமப்பட்டு.

"என்ன சீன் க்ரியேட் பண்றியா..?"

"................."

"அரசி சின்னப் புள்ளத் தனமா அடம் புடிச்சிட்டு இருக்காத..வா வந்து ஏறு..ஆஃபீஸ்கு வேற டைம் ஆகுது.."

"நீங்க போங்க நா அப்றமா வர்ரேன்.." சிறுக சிறுக உண்டாகிய தைரியத்தோடு அவள் எடுத்தியம்ப பையனுக்கோ பொறுமையின் உச்ச கட்டம்.

"இங்க பாரு அரசி..ஆள் நடமாட்டம் இல்லாத எடம்..ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா என்ன பண்றது..? வந்து வண்டில ஏறு சின்னப் புள்ள மாதிரி நடந்துக்காம.." அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கூறியும் அவள் அசையாதிருக்க அதன் பின் அவனும் கெஞ்சவில்லை.

வண்டியில் ஏறிட விருட்டென கிளப்பிச் சென்ற வண்டி சத்தத்தை கேட்டவளின் இதழ்களில் கசந்த முறுவலொன்று.

அவனின் வார்த்தைகள் வலிக்கிறது.ஆனால்,அவன் மீது வெறுப்புத் தான் துளியும் உண்டாகியபாடில்லை.

பையனைப் பற்றி தெரிந்து தான் காதல் செய்ததே.இதை விட நடந்தாலும் அதிசயிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிந்தாலும் மனம் மட்டும் வலித்துத் தொலைக்கிறதே.

"மானங்கெட்ட கன்றாவி மனசு.." தன்னையே திட்டிக் கொண்டவளின் விரல்களோ கண்ணீரின் ஈரத்தை தனக்குள் இழுத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் விழியோரம்,சிறு ஈரம்.

"லவ்வே பண்ணக் கூடாதுடா சாமி..இனிமே அந்த மனுஷன் முன்னாடி நிக்கவே கூடாது.." தனக்குள் வீர சபதம் எடுத்தவளை பார்த்து எக்காளமிட்டு கொக்கரித்து சிரித்தது,அவளின் மனசாட்சி.

அவளைப் பற்றி அவளின் மனசாட்சிக்கு தெரியாதா என்ன..?

அதே நேரம்,

உணவு மேசையில் உணவருந்திக் கொண்டிருந்த அனைவரிடத்திலும் ஒரு கனத்த அமைதி.

உடன் இருந்த அனைவரையும் நோட்டமிட்டவாறு உணவை விழுங்கிய தமிழுக்கோ இப்பொழுதெல்லாம் வீட்டில் இருக்க மனம் விரும்புவதேயில்லை.

"தமிழ் என்ன யோசன..? தட்ட பாத்து சாப்டு.." கண்டிப்புடன் கூறிய தந்தைக்கு அசட்டுப் புன்னகையை
பதிலாகக் கொடுத்தவனோ தங்கையை பார்த்திட அவளோ அண்ணன்காரனை கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.

"என்ன இவ இவ்ளோ யோசனயோட சாப்டுடு இருக்கா..?" மனதுக்குள் எண்ணிக் கொண்டாலும் தாய் தந்தையரின் முன் கேட்டிடும் தைரியம் இல்லை,ஆணவனுக்கு.

அனைவரின் உணவை முடித்துக் கொண்டு எழுந்து சென்றிட தங்கையை பின் தொடர்ந்து எட்டு வைத்தவனுக்கு அவளின் நடையில் இருக்கும் தொய்வும் தளர்வும் புரியத்தான் செய்தது.

"யாழினி என்னாச்சு எதுக்கு டல்லா இருக்க..?" தங்கையை வழி மறித்து நின்ற படி கேட்டிட அவளுக்கோ தொண்டை அடைத்திற்று.

உயிர்த்தொடும்.

2024.08.21
 
Last edited:
Status
Not open for further replies.
Top