ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யார் அவள்? - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 8 - கூட்டுக்களவாணிகள்



"அப்புறம் என்னாச்சு?" கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நேரத்தைப்பார்த்தபடி கார்த்திக் நீலமலைக்காட்டு பங்களாவில் நடந்ததை அறிய ஆவலானான்.

எதிரிலிருந்த ராதிகாவும் அவனது ஆர்வத்துக்கு தீனி போட்டு கொண்டிருந்தாள்.

"அதுக்கப்புறம் எல்லாமே நாங்க பிளான் பண்ணினது போலவே நடந்துச்சு, மாணிக்கத்த ரெண்டு மாசம் அவரோட ஊருக்கு விக்ரம் பேசி அனுப்பிட்டான். மாதேஷ் தலை கால் புரியாத போதைல இருந்ததால அந்த நெக்லஸ எடுக்கிறதும் எங்களுக்கு கஷ்டமா இருக்கல. அடுத்த நாள் நெக்லஸ காணம்னு சொன்னதும் நாங்களும் எதுவுமே தெரியாத மாதிரி சேர்ந்து தேடினோம். அப்புறமா மாணிக்கத்தையும் காணோம்...... மாணிக்கம்தான் நெக்லஸ எடுத்திட்டு ஓடிட்டான்னு திருட்டு பழிய மாணிக்கம் மேல போட மாதேஸும் நம்பிட்டான். நாங்க எதிர் பார்த்தது போலவே அவனும் போலீசுக்கு போகல. எல்லாமே ஒரு மாசத்துக்கு பிரச்சனை இல்லாம போச்சுது. நெக்லஸையும் ரகசியமா பதுக்கி வச்சிருந்தோம். அப்புறமா ஒரு நாள் தான் திரும்ப பிரச்சனை தொடங்கிச்சு....."

"திரும்ப என்ன பிரச்சன?" கார்த்திக்கின் மனதில் தனக்கு முன்னாலிருப்பவள் ஒரு 'கொள்ளைக்காரியா?' என்பது போல் இருந்தது.

"மாதேஷ் அவங்க அப்பாவோட செல்வாக்க பயன்படுத்தி லோக்கல் ரவுடிங்ககிட்ட மாணிக்கத்தோட போட்டோவ கொடுத்து தேட சொல்லியிருந்தான். இந்த விஷயமே எங்களுக்கு தெரியல. அப்புறமா ஒரு மூணு வாரத்துக்கப்புறமாத்தான் லோக்கல் ரவுடி எல்லாருமே மாணிக்கத்த தேடிக்கிட்டிருக்கிற விஷயம் விக்ரமோட காதுக்கு எட்டிச்சு. ஊர்ல இருந்து வந்த மாணிக்கத்த அர்ஜுன் ரகசியமா ஒரு ஹோட்டல்ல தங்க வச்சிருந்தான். அப்போதான் மாணிக்கத்துக்கு விஷயமே தெரிஞ்சிருக்கு. நெக்லஸ திரும்ப கொடுத்திட சொல்லி மாணிக்கம் நச்சரிச்சின்னு இருந்தார். அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டியும் பார்த்தாரு. மாதேஷ்கிட்ட தான் எடுத்ததா சொல்லி சரணடையிறேன்னு கூட சொல்லி பார்த்தாரு. நாங்க எல்லாருமே கூட அப்போ பயந்திருந்தோம், ஸோ மாணிக்கம் சொல்ற படி சரணடைய வைக்கலாம்னு முடிவெடுத்தோம். ஏன்னா மாதேஸ்க்கு உண்மை தெரிஞ்சா நாங்க ஒருவரும் உயிரோட இருக்க முடியாது......."

"நெக்லஸ திரும்ப கொடுத்திடீங்களா? மாணிக்கத்துக்கு என்ன ஆச்சு?" நெஞ்சம் படபடக்க, மாணிக்கத்துக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதை பதைப்பில் கேட்டான் கார்த்திக்.

"இல்ல சார், மாணிக்கத்த விக்ரம் கொன்னுட்டான்!!!!!!!!!!!!................." ரகசியத்தை போட்டுடைத்தாள் ராதிகா.

அதிர்ச்சியில் மூர்ச்சையாகிப்போன கார்த்திக்கின் கண்களும் கலங்கிவிட்டன மாணிக்கத்தின் முடிவு கேட்டு.

"ஏன் கொலை பண்ணினான்?" குரல் தழுதழுக்க சந்தேகத்தை கேட்டான் கார்த்திக்.

"ஒரு வாரமா மாணிக்கத்தை ஒவ்வொரு ஹோட்டலா ஷிஃப்ட் பண்ணிட்டே இருந்தோம். கைக்கு கிடைச்ச பொக்கிஷத்த விட்டு கொடுக்க விக்ரமுக்கு மனசே வரல. விக்ரம் எங்க எல்லாரையும் குழப்பி, ஆசையைக்காட்டி அவனோட முடிவுக்கு ஒத்துக்க வச்சிட்டான்."

"அவனோட ஆசைன்னா?"

"மாணிக்கத்த கொலை பண்ணிட்டா, மாணிக்கம் நெக்லஸ திருடிட்டு தலை மறைவாகின மாதிரியே இருக்கும். கொஞ்சம் நாள் போனா எல்லாமே ஆறிப்போயிடும். எப்பவும் பயந்துகிட்டே இருக்க தேவையில்லை, அப்பிடி இப்பிடின்னு ஏதேதோ சொல்லி பிரைன் வாஷ் பண்ணிட்டான்."

"அப்பிடீன்னா நீங்களும் கொலை பண்ண ஒத்துக்கிட்டீங்க?......................."

தலையைக்குனிந்து கொண்டிருந்தவள் "சார் நான் ஒத்துக்காம இருந்திருந்தா என்னையும் விக்ரம் கொலை பண்ணியிருப்பான். என்னோட நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க சார். அப்போதான் உங்களுக்கு புரியும்." என்று சொல்லியபடியே கண்ணை கசக்கினாள்.

"கொலை பண்ணீட்டு......... எப்பிடி பாடிய டிஸ்போஸ் பண்ணினீங்க?"

"அது தெரியல சார், கொலை பண்ண போறதா பிளான் போட்டது மட்டும்தான் எனக்கும் மனீஷாவுக்கும் தெரியும். பண்ணினது எல்லாமே விக்ரமும் அர்ஜுனும் ராகுலும்தான். எங்ககிட்ட எதுவுமே அப்புறம் சொல்லல, நாங்களும் கேட்கல."

"சரி அந்த நெக்லஸ் இப்ப எங்க இருக்கு?"

"அது வந்து சார்........."

"..........."

"கார்த்திக் சார் எனக்கு அப்பா கூட பேசணும், உங்க செல்போன கொஞ்சம் தருவீங்களா?"

எந்த நேரத்தில் என்ன சொல்ல வேண்டும், என்ன கேட்க வேண்டும் அதை எப்படி கேட்க வேண்டும் என ராதிகாவிற்கு நன்கு தெரிந்திருந்தது. அது கார்த்திக்கிற்கு புரியாமலில்லை. ஆனால் தற்போது ஒரு தொலைபேசி அழைப்பிற்காக அந்த விலைமதிப்பில்லா ஆபரணத்தின் இருப்பிடம் அறியாமல் விடுவது முட்டாள்த்தனம் என்பதையும் புரிந்து வைத்திருந்தான்.

"இன்னும் கொஞ்ச நேரத்தில இங்கயே நேர்ல வந்துடுவாங்க, அப்புறமா பேசிக்கலாமே?"

"இல்ல சார் எனக்கு பழசெல்லாம் கதைக்கும் போது என்னவோ மாதிரி இருக்கு, ஒரு ரெண்டு நிமிஷம் அவரோட குரல கேட்டாலே போதும். ப்ளீஸ்...."

"இப்போ பார்த்தீங்களா யாரு நம்பலன்னு, அவங்க இங்க வந்திட்டிருக்காங்கன்னு நான் சொன்னதில உங்களுக்கு நம்பிக்கை இல்ல. இட்ஸ் ஓகே. இந்தாங்க..... சீக்கிரம் பேசிட்டு கொடுங்க." என்று சொல்லிவிட்டு அவனது செல்போனை எடுத்துக்கொடுத்தான்.

செல்போனில் நம்பர்களை தட்டிய ராதிகா பேசத்தொடங்கினாள்.

"ஹலோ அப்பா, நான் ராதிகா பேசுறன்."

"........................................................................"

"ஹாஸ்ப்பிட்டல்லதான் இருக்கிறன், சீக்கிரம் வாங்கப்பா. உங்கள பார்க்கணும் போல இருக்கு"

மறுமுனையில் மீண்டும் பதில் வர கார்த்திக் ராதிகா பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"சார் அப்பா கூட பேசுறீங்களா?" என்று ராதிகா கேட்க கார்த்திக்கும் போனை வாங்கி காதில் வைத்தான்.

எதிர் முனையில் "ஹலோ இன்ஸ்பெக்டர், நான் மனோகர், ராதிகாவோட அப்பா. பொள்ளாச்சிக்கு கிட்ட வந்துட்டேன்."

"ஓகே சார், நேர்ல வாங்க நிறைய பேச வேண்டி இருக்கு."

"ஓகே இன்ஸ்பெக்டர், சீக்கிரம் வந்துடுறேன்." என்றபடி அழைப்பைத்தாண்டித்தார் மனோகர்.

"இப்ப ஓகேயா? கேஸ் பத்தி கதைக்கலாமா?"

"நிச்சயமா இன்ஸ்பெக்டர்." ராதிகாவின் முகத்தில் நிம்மதி எட்டிப்பார்த்தது.

"சொல்லுங்க அந்த நெக்லஸ் இப்ப எங்க இருக்கு?"

"நீலமலைக்காட்டிலதான் சார் இருக்கு."

"அந்த பங்களாவுல அப்பிடி எதுவும் கிடைச்சதா எங்க டீம் ஒண்ணும் சொல்லலையே!"

"பங்களாவுல இருக்குன்னு யாரு சொன்னா......"

"அப்போ!..........."

"அந்த பங்களாவுக்கு வடக்கு பக்கமா இருக்கிற காட்டுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமா போனா ஒரு நாவல் மரமொன்னு வரும் அதுக்கு பக்கத்திலேயே ஒரு கிணறும் இருக்கும். ரெண்டுக்கும் நடுவில மண்ணுக்குள்ள புதைச்சு வச்சிருக்கோம்."

"எவ்வளவு ஆழத்தில?"

"கிட்டத்தட்ட இரண்டடி ஆழமிருக்கும்"

‘இரண்டடி ஆழமானால் ஆயுதங்கள் வேண்டும். என்ன செய்யலாம்?’ என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான் கார்த்திக்.

"சார் அந்த நெக்லஸ எடுத்து எனக்கு தந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு ஷேர் தாறன். இது அப்பாக்கு தெரிய வேணாம். நமக்குள்ள இருக்கட்டும்." ராதிகாவிடமிருந்து வந்த இந்தச்சொற்கள் கார்த்திக்கிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.

"மிஸ் ராதிகா, என்ன பார்த்தா உங்களுக்கு எப்பிடி தெரியுது. ஏன் ஷேர் குடுத்து மத்தவங்கள கொன்னது பத்தாதா? நானும் சாகணுமா? ஒரு பொண்ணு தற்காப்புக்காக ஒரு கொலை பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கு ஹெல்ப் பண்றன், அதுக்குரிய விலைய நான் சொல்லுவன். நியாயமா பார்த்தா அந்த விஷாலி ஒரு அப்பாவி. தன்னோட அப்பாவ கொன்னவங்கள பழி வாங்கியிருக்கா. பணத்தக்காட்டின உடனே நாய் மாதிரி நீங்க சொல்றதெல்லாம் செய்யுற ஆள்னு என்ன நினைச்சீங்களா? ஏதோ எனக்கும் அவசர பணத்தேவை இருக்கிறதால தப்பிச்சீங்க. இல்லைன்னா கம்பிதான் எண்ணியிருக்கணும். நியாயமா அந்த நெக்லஸ் யாருக்கு பொய் சேரணுமோ அவங்களுக்கு போய் சேரும். இனி கதைக்கிறத யோசிச்சு கதைக்கணும். அண்டர்ஸ்டாண்ட்?" கார்த்திக் தனது நேர்மையை கேலியாக்கியதாக எண்ணியவன் கோபக்கனலில் கொதித்துக்கொண்டிருந்தான்.

கார்த்திக்கின் பதிலில் நிலை குலைந்து போன ராதிகா கூனிக்குறுகிப்போனாள்.

"சாரி சார்................"

........................................................

"எக்ஸ்கியூஸ் மீ தம்பி, உள்ள வரலாமா?" என்று கேட்டபடி அறை வாசலில் வந்து நின்றார் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி.

"ஹ்ம்ம், வாங்க அண்ண, டெட் பாடியெல்லாம் வந்திடிச்சா?"

"ஆமா தம்பி, எல்லாத்தையும் மார்ச்சுவரில தான் வச்சிருக்கு. ராகுல்ங்கிற பையனோட பேரன்ட்ஸ் வந்திருக்காங்க தம்பி. அதான் உங்ககிட்ட சொல்லிடலாம்னு வந்தன் தம்பி."

"ஓகே, அவங்ககிட்ட போட்டோ காமிச்சு கான்பெர்ம் பண்ணிக்கிட்டிங்களா?"

"அதுக்குத்தான் தம்பி, போட்டோஸ வாங்கிட்டு போலாம்னு வந்தன்"

கிருஷ்ணமூர்த்தி பிரிண்ட் போட்டு கொடுத்த போட்டோக்களினை தான் வைத்திருப்பது கார்த்திக்கிற்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

"ச்சா..... இத மறந்துட்டனே, சரி அவங்க எங்க இருக்காங்க?"

"கீழ டாக்டரோட ரூம்லதான் வெயிட் பண்ண சொல்லியிருக்கன் தம்பி."

"வாங்க கீழ போலாம், அவங்ககிட்ட பக்குவமா விசயத்த சொல்லணும். அதோட இன்னொரு முக்கியமான விஷயம்........" என்று சொல்லிக்கொண்டே ராதிகா இருந்த அறையை விட்டு வெளியேறினர் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கும் ஹெட் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தியும்.



- தொடரும்-​
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 9 - மாஸ்டர் மைண்ட்



பொள்ளாச்சியை ஆதவன் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புச்செய்ய ஆரம்பித்திருந்ததால் ஹாஸ்பிட்டல் ஹாரிடோரிலுள்ள மின் விளக்குகள் அணைக்கப்பட்டு சூரிய ஒளி படர்ந்திருந்தது. இரவு முழுவதும் வெறிச்சோடிப்போயிருந்த ஹாஸ்பிட்டல் அப்போது சிறிது சன நடமாட்டத்தையும் காணத்தொடங்கியிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே கார்த்திக் டாக்டரின் ரூம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் அவன் கண்கள் பார்த்துச்சென்றாலும் அவனது எண்ணங்கள் முழுவதும் ராதிகாவின் வாக்கு மூலங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தது.

'எவ்வளவு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சிருக்காள். இவளுக்கு உதவலாமா?’

தன்னோட உயிரை பாதுகாக்கிறதுக்காகதானே அந்த விஷாலியை கொலை பண்ணியிருக்காள். அப்போ இவளுக்கு உதவி பண்றதொன்னும் பாவம் இல்ல.’

‘ஆனா ஒரு நெக்லஸுக்காக ஒரு நல்ல மனுசன கொலை பண்ணியிருக்காளே, இவள் அந்தக்கொலையை பண்ணலாட்டியும் இவளுக்கும் அதில பங்கிருக்குத்தானே. ஏதோ நெக்லஸ திருடினதுதான் தான் செய்த தப்புண்ணும் அந்தக்கொலைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரியும் சொல்றாளே. யாராவது புதுசா அவளை பார்த்தா இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு தானே யோசிப்பாங்க. சட்டத்துக்கு முன்னாடி இவள நிறுத்தினா நிச்சயம் ஆயுள் தண்டனைதான்.’

‘இவள ஜெயில்ல போட்டு என்ன ஆகப்போகுது? போன உசிரெல்லாம் வரவா போகுது. இனியா குட்டியாவது சந்தோசமா இருக்கட்டும்.’ என்று தனது மனசாட்சியுடன் சிறு உரையாடலை மேற்கொண்டிருந்தான் கார்த்திக்.

"என்ன தம்பி ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னீங்க?" என்ற கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி கார்த்திக்கிற்கு தன் கடமையை உணர்த்தியது.

"ஆமா மறந்துட்டேன், உடனே தாமோதரனுக்கு கால் பண்ணுங்க, அங்க கெஸ்ட் ஹவுஸுக்கு வடக்கு பக்கமா ஒரு கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற நாவல் மரத்துக்கும் கிணத்துக்கும் இடைல இருக்கிற மண்ண தோண்டி பார்க்கச்சொல்லுங்க."

"ஏன் தம்பி உள்ள என்ன இருக்கு?"

"தெரியல, தோண்ட சொல்லுங்க ஏதாவது கிடைக்கும்."

"சொல்லிடுறேன் தம்பி."

"அண்ணே தாமோதரன் நம்பிக்கையான ஆள் தானே?"

"நிச்சயமா நம்பலாம்."

"ஓகே, அங்க எது கிடைச்சாலும் என்கிட்டே சொல்ல சொல்லுங்க, மீடியாக்கு தெரிய வேணாம்."

"அப்படியே சொல்லிடுறேன்."

பேசிக்கொண்டே இருவரும் டாக்டர் சித்ரலேகாவின் அறையினுள் நுழைந்தனர். உள்ளே வந்திருந்தவர்கள் டாக்டர் பரந்தாமனும் அவரது மனைவியும் என்று உறுதிப்படுத்திய பின்னர் அவர்களது மகன் ராகுல் கொலைசெய்யப்பட்டுவிட்டான் என்கிற உண்மையை கார்த்திக் அவர்களிடத்தில் கூறினான். மரணச்செய்தியை சற்றும் எதிர்பாராத ராகுலின் அம்மாவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பே நின்றுவிட்டது. ராகுலின் அம்மாவை ராகுலின் பிணத்தைக்காட்டுவதற்காக கான்ஸ்டாபில் கிருஷ்ணமூர்த்தி மார்ச்சுவரி நோக்கி அழைத்துச்செல்ல டாக்டர் பரந்தாமனுக்கு நடந்தவற்றை விளக்கி கொண்டிருந்தான் கார்த்திக்.

பெற்றோருக்கு பிள்ளை இறந்த விடயத்தை சொல்லுவதென்பது எவ்வளவு கடினமானதென்று கார்த்திக்கிற்கு அப்போதுதான் விளங்கியது. ராகுலின் அப்பாவை ஒருவாறு சமாதானப்படுத்தி கொண்டிருக்கும்போது மற்றுமொரு தம்பதியினரும் உள்ளே வந்து தம்மை விக்ரமின் பெற்றோர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ராதிகாவின் தாய் தந்தையரும் மனிஷாவின் தகப்பனும் ஒன்றாக வந்து சேர்ந்தனர்.

கார்த்திக்கும் ராதிகாவின் தந்தை மனோகரிடம் "சார் உங்க பொண்ணு மேல பத்திரமா இருக்கிறா, கொஞ்சம் இங்க வெயிட் பண்ணுங்க சார். இவங்களோட பேசிட்டு வந்திடுறன்" என்று கூறியதும் பதற்றம் குறைந்தவராக அங்கிருந்த சோபாவில் மனைவியுடன் சென்றமர்ந்தார்.

விக்ரமின் பெற்றோருக்கும் மனீஷாவின் தகப்பனுக்கும் அவர்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தியை சொல்லி முடிப்பதற்குள் கார்த்திக்கிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. கார்த்திக் தான் கொலைகாரன் போலவும் கொலைகாரனை இப்போது கண் முன் கொண்டுவரா விட்டால் கார்த்திக்கை கம்பி எண்ண வைத்துவிடுவதாகவும் தங்களது கவலையை கோபமாக மாற்றிக்கொண்டிருந்தார்கள் இண்டஸ்ட்ரியலிஸ்ட் சண்முகவடிவேலும் ஜட்ஜ் நாராயணசுவாமியும். முன்பு சமாதானமாக காணப்பட்ட டாக்டர் பரந்தாமன் கூட சற்று கோபத்தையும் இயலாமையும் காட்டிக்கொண்டிருந்தார். ஒரு புறம் தாய்மாரின் அழுகுரலும் சேர்ந்துகொண்டது. ராதிகாவின் தாய் கிருஷ்ணவேணியும் தந்தை மனோகரும் கூட மற்றவர்களுடன் கவலையை பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் கார்த்திக் இயலுமானவரை நடந்த விடயங்களை அவர்களுக்கு விளக்க முனைந்து கொண்டிருந்தார்.

நடந்து கொண்டிருந்த களேபரத்தில் கார்த்திக் கையில் வைத்திருந்த போட்டோக்களை மேசை மீது போட்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தியும் ஒவ்வொருவராக மார்ச்சுவரிக்கு அழைத்து சென்று பிணங்களை அடையாளம் காட்ட சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்.



"ஐயோ........ராதிகாம்மா..............ஐயோ................................."

அழுதுகொண்டிருந்தவர்களின் அழுகுரல் சிறிது ஓய்ந்த போது அந்த விசாலமான அறையே அதிரும்படி கேட்ட குரல் கேட்டு இன்ஸ்பெக்டர் கார்த்திக் விக்கித்துப்போனான்.

"ராதிகா என்ன விட்டு போய்ட்டியேம்மா.......கடவுளே....... ஏன் இப்பிடியொரு நிலமை......." அது கிருஷ்ணவேணியின் குரல்தான். முதலில் அதிர வைத்த குரல் மனோகரினுடையதென்றும் கார்த்திக்கிற்கு விளங்கிற்று.

சற்று குழப்பத்துடன் அவர்களிருவரருகே சென்ற கார்த்திக் ஒன்றும் விளங்காதவனாய் "சார் உங்க பொண்ணு உயிரோட இருக்கிறா. மேலதான் வச்சிருக்கம். ஏன் இப்ப வீணா டென்ஷன் ஆகுறீங்க?" என்று கேட்டான்.

இதைக்கேட்ட மனோகரும் குழப்பத்துடன் "அப்பிடீன்னா இது என்ன?" என்றபடி மேசையிலிருந்து எடுத்த ஒரு போட்டோவினைக்காட்டினார்.

குழப்பத்தின் உச்சியிலிருந்து கார்த்திக் அந்த போட்டோவை கையில் வாங்கிப்பார்த்தான்.

அது.......... விஷாலியின் போட்டோதான்..........

"சார் இது விஷாலியோட போட்டோ தானே..................." சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தினான் கார்த்திக்.

"யோவ்.........இதுதான்யா என்னோட பொண்ணு ராதிகா!!!!" என்று விட்டு போட்டோவினை முகத்தோடு வைத்து அழத்தொடங்கினார்.

கார்த்திக்கிற்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப்போனது………வியர்த்துக்கொட்டியது. 'என்ன இறந்து போனது ராதிகாவா? அப்படீன்னா இவ்வளவு நேரமும் நான் விசாரிச்சுக்கிட்டிருந்தது..........”

"சார் அப்பிடீன்னா இது?" தனது செல்போனில் ராதிகாவுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த போட்டோவை காட்ட அதை பார்க்காமல் அழுதுகொண்டிருந்தார் மனோகர்.

"இன்ஸ்பெக்டர் அந்த போட்டோவ கொஞ்சம் காட்டுறீங்களா?" இண்டஸ்ட்ரியலிஸ்ட் சண்முகவடிவேலின் குரல் கேட்டு திரும்பினான் கார்த்திக்.

போனை அவர் பக்கம் திருப்பியதும் "இது எங்க வீட்டில வேலை பார்த்த மாணிக்கத்தோட பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு......." என்று குண்டை தூக்கி போட்டார்.

"ஆர் யூ சுவர்?"

"யெஸ், இந்தப்பொண்ணுக்கு லாஸ்ட் இயர் வரைக்கும் நான் தான் ஸ்பான்சர் பண்ணிட்டிருந்தன். லாஸ்ட் இயர் கூட ஏதோ பாஃரின் காலேஜ்ல ஸ்காலார்சிப் கிடைச்சிருக்கிறதா வந்து மீட் பண்ணிட்டு போனாள்....."

"ஷிட் ஷிட் ஷிட்…........" என்று வாய்க்கு வந்தபடி தன்னைத்தானே திட்டியபடி மேலே ஓடினான் கார்த்திக்.

மின்னலென விரைந்து சென்றவனுக்கு காலியான அறை மாத்திரமே அங்கு கிடைத்தது. பின்னாலே எதுவும் புரியாமலே ஓடி வந்த கிருஷ்ணமூர்த்தியும் "என்ன தம்பி என்ன ஆச்சு?" என்று புரியாமல் விழித்தார்.

"அண்ணே ஏமாந்துட்டம்..... ஏமாத்திட்டா......"

"என்ன தம்பி சொல்றீங்க? ஒண்ணுமே புரியலையே!"

"அண்ணே இங்க உயிரோட இருந்தது ராதிகா இல்ல, அவள் தான் விஷாலி. இங்க அத்தனை கொலையும் செய்தது அவள்தான். விக்ரம்,ராதிகா,மனிஷா,ராகுல்னு அத்தனை பேரையும் பிளான் பண்ணி கொன்னிருக்காள். ராகுலை லவ் பண்ற மாதிரி நடிச்சு அர்ஜுனோட ஹெல்ப்போட யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி...... மாஸ்டர் பிளான்......." என்று தனது முட்டாள்தனத்தை நொந்தபடி விஷாலியின் புத்திசாலித்தனத்தை வியந்து கொண்டிருந்தான்.

"இப்போ என்ன தம்பி பண்றது?"

"எல்லா செக் போஸ்ட்டையும் அலர்ட் பன்னுங்கண்ணா, அவள் அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது."

"தம்பி அதுக்கு மேலிடத்தில் பெர்மிஷன் வாங்கணும். என்னன்னு சொல்றது? கையில கிடைச்ச குற்றவாளிய விட்டுட்டோமுன்னா?"

"அதுக்கெல்லாம் நேரமில்ல, ஏதாவது செய்தாகணும்?......"

"வேற ஏதாவது மிஸ் பண்றோமா தம்பி?"

"இப்பதான் ஞாபகம் வருது, அவள் யார்கூடயோ போன்ல பேசினா.... அந்த நம்பர ட்ரேஸ் பண்ணலாம்."

"அவகிட்டத்தான் போனே இருக்கலையே தம்பி.... அப்புறம் எப்பிடி......"

"என்னோட போன்லதான் பேசினா, நான்தான் குடுத்தன்...." என்று கூறும்போதே கார்த்திக்கிற்கு தான் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளோம் என புரிந்தது.

"என்ன தம்பி, இப்பிடி இருந்திருக்கீங்க? சரி தம்பி அங்க ஏதோ தோண்டி பார்க்க சொன்னீங்க? அது என்ன?"

"அது ஒரு நெக்லஸ்னு சொன்னாள், ஐம்பது லட்சம் பெறுமதியானது."

"நிச்சயம் அதுவும் பொய்யாத்தான் இருக்கும் தம்பி, இப்பிடி ஏமாளியா இருந்திருக்கீங்களே!"

உடனடியாக தாமோதரனுக்கு அழைப்பை போட்ட கார்த்திக்கிற்கு தாமோதரன் சொன்ன விடயம் எரிகிற எண்ணெயில் பெட்ரோல் ஊற்றியது போல இருந்தது.

"சார் இங்க நீங்க சொன்ன இடத்துல ஒரு எலும்புக்கூடுதான் கிடைச்சிருக்கு. போரென்சிக் ஆட்களுக்கு சொல்லிட்டேன். செக் பண்ணியிருக்காங்க" இதுதான் தாமோதரன் சொன்ன செய்தி.

"தாமோதரன் நம்பிக்கையான ஆள்னு சொன்னீங்களே......" என்று பரிதாபமாய் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து கேட்டான் கார்த்திக்.

"நம்பிக்கையானவன்தான், எலும்புக்கூட்ட கண்டதும் பயந்திருப்பான் தம்பி. தம்பி இப்போ என்ன பண்ணலாம்? விஷயத்த மறைக்கவும் ஏலாது. வந்திருக்கிறவங்க எல்லாரும் பெரிய இடம். நிச்சயம் விஷயம் கமிஷ்னர் வரைக்கும் போய்டும்." கிருஷ்ணமூர்த்தி சொல்ல சொல்ல கார்த்திக் செய்வதறியாது பிரம்மை பிடித்தவன் போலானான். கண்களின் ஓரம் கண்ணீர்துளியும் எட்டிப்பார்த்தது.

கிருஷ்ணமூர்த்தியும் ராதிகா..... இல்லை இல்லை விஷாலி கால் செய்த நம்பரை ட்ரேஸ் செய்ய முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.



சில மணித்துளிகளின் முன்னர்

ஹாஸ்ப்பிட்டலில் ராகுலின் பெற்றோருக்கு நடந்தவற்றை கார்த்திக் விளக்கி கொண்டிருந்த வேளையில் மெதுவாக வெளியே வந்த விஷாலிக்காக அங்கு காத்துக்கொண்டிருந்தது மாருதி கார் ஒன்று. யாரும் சந்தேகிக்காத வண்ணம் அக்காரினுள் விஷாலியும் மெதுவாக ஏற உள்ளிருந்த வாலிபன் விஷாலியைக்கண்டதும் பெருமூச்சு விட்டான்.

"தாங்க் கோட், எங்க உன்ன பார்க்கேலாம போய்டுமோன்னு பயந்துட்டேன் விஷாலி." என்று சொல்லியபடி காரை நகர்த்தினான் அர்ஜுன்.

"எதுக்கு வீணா பயந்த? நான் போலீஸ் நீலமலைக்காட்டுக்கு வந்தப்பவே ஒரு பிளான் போட்டுட்டன். அதுக்கு தேவைப்பட்டாலும்ன்னு தான் ராதிகாவோட டிரஸ்ஸ நான் மாத்தி போட்டுக்கிட்டன். பட் அவளுக்கு என்னோட ட்ரெஸ்ஸ போடுறதுக்குள்ள போலீஸ் அங்க வந்திட்டாங்க. கடைசில அது ஒண்ணுக்கும் யூஸ் ஆகல."

"நீ பேசாம என்கூடவே வந்திருக்கலாம் விஷாலி, நீயில்லாம நான் ரொம்ப பயந்துட்டேன்."

"அர்ஜுன் நீ சொன்னது போல ராதிகாவோட பாடியையும் கிணத்துல போட்டுட்டு உன்கூட நான் வந்திருந்தா அங்க வந்த போலிஸுக்கு எதுவும் கிடைச்சிருக்காது. அப்பிடீன்னா உடனே சுத்தி புல்லா சேர்ச் பண்ண தொடங்கியிருப்பாங்க. மத்த மத்த ஸ்டேஷனுக்கு இன்போர்மேசன் போயிருக்கும். நம்ம நிச்சயமா மாட்டியிருப்பம். போலீஸ் வந்த நேரம் நான் உயிரோடயும் ராதிகா பாடியாவும் கிடைச்சதில வந்த கூமுட்டைங்க காட்டுக்குள்ள தேடலை. அதனாடிதான் உனக்கு டைம் கிடைச்சுது."

"ஷப்பா........ இவ்வளவெல்லாம் நான் யோசிக்கல, நீ புத்திசாலின்னு ஒத்துக்கிறன்." என்று சொன்னபடி அர்ஜுன் சிரிக்க விஷாலியும் 'சரி அர்ஜுன் இப்போ என்ன பிளான்?" என்று கேட்டால்.

"இன்னுமொரு இருபது நிமிசத்துல தமிழ்நாடு பார்டர தாண்டிடலாம்...... நமக்கு டைம் இருக்குல்ல?" என்று சந்தேகத்தொனியில் கேட்டான் அர்ஜுன்.

"டோன்ட் வொரி, தாராளமா இருக்கு. நான் ராதிகா இல்லைன்னு கண்டுபிடிக்கவே அவனுங்களுக்கு வன் அவர் எடுக்கும்."

"ஓகே, கேரளால பாலக்காட்டில என்னோட பிரெண்ட் ஒருத்தன் இருக்கிறான், அவன் நம்ம மும்பை போறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்து வச்சிருப்பான். அங்க கொஞ்ச நாள் ஸ்டே பண்ணிட்டு அப்பிடியே லண்டன்தான். சிம்பிள்......"

"அந்த போட் மாத்திரம் ரிப்பேர் ஆகியிருக்கலன்னா இன்னைக்கே போயிருக்க வேண்டியது, அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து......" என்று அலுத்துக்கொண்டாள் விஷாலி.

"எல்லாம் நல்லதுக்குன்னு யோசிச்சுக்கோ விஷாலி, இந்தியால கொஞ்ச லாஸ்ட்டா கொஞ்ச நாள் சந்தோசமா இருந்திட்டு போவமே."

“யெஸ் எல்லாமே நல்லதுக்குத்தான் அர்ஜுன். எல்லாமே பத்திரமா இருக்குதானே அர்ஜுன்?"

"உனக்கு பக்கத்தில இருக்கிற பாக்சிலதான் இருக்கு, நீயே செக் பண்ணிக்கோ"

விஷாலி அருகிலிருந்த பாக்ஸை திறந்ததும் ஐந்து உயிரை காவு வாங்கிய நெக்லஸ் மின்னிக்கொண்டிருந்தது. விஷாலி எதிர்பார்த்த வேறொரு பொருளும் அதில்தான் இருந்தது. அதைப்பார்த்ததும் விஷாலியின் முகத்திலும் பூரிப்பு தெரிந்தது.



- தொடரும்-​
 
Status
Not open for further replies.
Top