அத்தியாயம் 7 - பெண்ணாசை
"யார் அவர்? அவர் இப்போ எங்க?" என்று புருவத்தை உயர்த்தி நீலமலைக்காட்டில் நடந்த ரகசியத்தை கேட்க தயாரானான் கார்த்திக்.
"மாணிக்கம் ரொம்பகாலமா விக்ரமோட வீட்டில வேலை செய்து வந்தவர், இன் பாஃக்ட் மாணிக்கத்துக்கு சின்ன வயசா இருக்கும் போதே அங்க வேலைக்கு சேர்ந்துட்டார். முழுப்பெயர் மாணிக்கராஜா. அவருக்கும் விக்ரமோட அப்பா சண்முகவடிவேலுக்கும் ஒரே வயசுதான். சண்முகவடிவேல் கூடவே வளர்ந்தபடியா அவருக்கு மாணிக்கத்த ரொம்ப பிடிக்கும். விசுவாசத்துக்கு இன்னொரு பெயர் மாணிக்கம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பார்."
"ஓகே மிஸ், அதெல்லாம் சரி, இந்த கொலைகளுக்கும் மாணிக்கத்துக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுங்க?" கார்த்திக் கதை கேட்க பொறுமையில்லாதவனாக இருந்தது ராதிகாவிற்கும் புரிந்தது.
"அதத்தான் சொல்ல வரன் சார், விக்ரமோட அப்பாட இந்த சிநேகிதம் விக்ரமோட அம்மா மஞ்சுளாதேவிக்கோ விக்ரமுக்கோ கொஞ்சம் கூட பிடிக்கல, அதாவது ஒரு வேலைக்காரன வீட்டில ஒருத்தனா பார்க்கிறது பிடிக்கல. இத தெரிஞ்சுக்கிட்ட விக்ரமோட அப்பா மாணிக்கத்த தான் புதுசா வாங்கின நீலமலைக்காடு பங்களாவுக்கு அனுப்பி அங்கேயே இருந்து அந்த பங்களாவ பார்த்துக்கொள்ளும்படி சொல்லியிருந்தார்"
"அப்புறம்?......."
ராதிகாவும் கார்த்திக்கின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தாள்.
"கார்த்திக் சார் நான் இப்ப இந்த ரகசியத்தை உங்ககிட்ட சொன்னா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு எப்பிடி நம்புறது? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு உங்க போலீஸ் புத்திய காட்டீட்டிங்கன்னா?"
"மிஸ் உங்களுக்கு வேற ஆப்சன் இல்ல, என்கிட்ட சொல்லாட்டி கோட்ல வக்கீல் முன்னாடி சொல்ல வேண்டி வரும். பரவால்லயா?"
"அதுக்கில்ல சார், நான் சொல்லப்போற விஷயம் செத்துப்போன என்னோட பிரெண்ட்ஸுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும், எங்க பேரண்ட்ஸ் யாருக்கும் தெரியாது. அதான்......." என்றபடி இழுத்தாள்.
தனக்கு அந்த ரகசியம் தெரிந்தால் மாத்திரமே ராதிகாவின் அப்பாவிடமிருந்து கிருஷ்ணமூர்த்தி சொன்னபடி ஏதாவது கறக்கலாம் என்ற விடயத்தில் தெளிவு பெற்றிருந்தான் கார்த்திக். எனவே தனக்கு கிடைக்கப்போகும் துருப்புசீட்டை அடைய சில பொய்களை சொல்லத்தயங்கவில்லை கார்த்திக்.
"நீ என்ன முழுசா நம்பலாம்மா, இந்தக்கொலைகள அர்ஜுன்தான் செய்தான்னு நிரூபிக்கிறது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமில்ல. ஆனா அதெல்லாம் உன்னோட கைலதான் இருக்கு. நீ செய்த குற்றத்துக்கும் ஒரு விலை இருக்கு."
"நான் உங்கள நம்புறேன் சார், ஆனா நீங்கதான் நான் சொல்றத நம்பாம இன்னமும் என்னோட கைல விலங்கு மாட்டியிருக்கீங்க. நான் வாஷ் ரூமுக்கு போகணும். அடலீஸ்ட் அதுக்காச்சும் விலங்க கழட்டி விடலாமே."
தற்போது ராதிகா தன்னை முழுவதுமாக நம்புவதே தனக்கு அவசியம் என கண நேரத்தில் முடிவெடுத்த கார்த்திக் ராதிகாவின் கை விலங்கை திறந்து விட்டான்.
கை விலங்கிலிருந்து விடுபட்டதும் ராதிகா உடனடியாக வாஷ் ரூமுக்குள் சென்றாள்.
'ச்சா.... ஒரு பொண்ணுகிட்ட எப்பிடி விசாரணை பண்ணனும்னு கூட நமக்கு தெரியலையே, அவளும் பொம்பள போலீஸ்னா கேட்டிருப்பா, ஒரு ஆம்பளைகிட்ட எப்படி கேட்பா? நம்மதான் புரிஞ்சு நடந்திருக்கணும்' என்று தனது அசண்டையீனத்தை நினைத்து நொந்து கொண்டான் கார்த்திக்.
சிறிது நேரத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது.
"தேங்க்ஸ் கார்த்திக் சார், உங்களோட லைஃபே இந்த கேஸ் மூலமா மாறப்போகுது. நான் எல்லாத்தயும் சொல்லிடுறன்".
"சொல்லுங்க"
"இது மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சு, அப்போ நானும் விக்ரமும் பர்ஸ்ட் இயர் காலேஜ்ல படிச்சிட்டிருந்தோம். அப்ப வந்த பர்ஸ்ட் செமெஸ்டர் ஹாலிடேய்ஸ்ல முதல் தடவையா நாங்க நீலமலைக்காட்டில இருக்கிற விக்ரமோட பங்களாவுக்கு போனோம்."
"நாங்கன்னா யாரு யாரு?"
"நான், விக்ரம், அர்ஜுன்,ராகுல்,மனீஷா, மாதேஷ் அண்ட் ரீமா."
"யாரு மாதேஷ் & ரீமா?" கார்த்திக் ஆர்வமிகுதியில் புருவத்தை உயர்த்தினான்.
"மாதேஷ் அண்ட் ரீமா லவ்வர்ஸ். எங்களோட சீனியர்ஸ். மாதேஷ் தமிழ்நாடு ஹோம் மினிஸ்டர் ரங்கராஜோட பையன். ரீமா எம் எல் ஏ பழனியப்பனோட பொண்ணு. விக்ரமுக்கு மாதேஷ முன்னாடியே பழக்கம். அதனாடி அவங்களையும் கூட்டிகிட்டு போனோம்."
"அந்த டைம் மாணிக்கமும் அங்கதான் இருந்தாரா?"
"ஆமா, அவர் அங்கதான் இருந்தார்."
"சரி, அப்புறம்......."
"வழமையைப்போல நல்லா என்ஜாய் பண்ணினோம்......"
"வெயிட் வெயிட் வெயிட் ..... நீங்க அங்க என்ஜாய் பண்ணினதெல்லாம் நான் கேட்கல, அதுக்கு எனக்கு நேரமும் இல்ல. என்ன ப்ரோப்ளம் நடந்துச்சு. அத மட்டும் சொல்லுங்க..."
"சொல்றன் சார்."
மூன்று வருடங்களுக்கு முன்னர், நீலமலைக்காடு
"பிரெண்ட்ஸ் என்னையும் ரீமாவையும் இப்பிடி ஒரு இடத்துக்கு கூட்டி வந்து இவ்வளவு சந்தோசப்படுத்தின விக்ரமுக்கு தாங்க்ஸ் சொல்லி அவன வெளியாளாக்க நான் விரும்பல. அவன் என்னோட கூடப்பிறக்காத தம்பி. இ லவ் யூடா விக்ரம்." போதையில் எதையோ உளறிக்கொண்டிருந்தான் மாதேஷ்.
விக்ரமும் மாதேஷின் தோளுடன் தோள் கொடுக்க மீண்டும் ஆட்டம் பாட்டம் தொடங்கியது.
அனைத்து குடிமகன்களுக்கு குடிமகள்களுக்கும் ஓடி ஓடி பணிவிடை செய்து கொண்டிருந்தார் வேலைக்காரர் மாணிக்கம்.
சில மணி நேரம் தொடர்ந்த குடியும் கும்மாளத்தையும் தற்காலிகமாக இடை நிறுத்திய மாதேஷ் ரீமாவை தன்னருகே அழைத்து அணைத்துக்கொண்டான்.
"ரீமாவுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமுன்னு அடுத்த வாரம் வர்ற அவளோட பேர்த் டேக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருந்தன். ஆனா அத இன்னைக்கு குடுக்கிறதா முடிவு பண்ணிட்டன். பிகாஸ் டுடே இஸ் த ஹப்பியஸ்ட் டே இன் மை லைஃ ப்." என்று கூறிய படி உள்ளே தனது அறையினுள் சென்று ஒரு சிறிய பாக்ஸினை கொண்டு வந்தான் மாதேஷ்.
அனைவரின் கண்களும் அகலமாக விரிய உள்ளேயிருந்து ஒரு வைர நெக்லஸை எடுத்த மாதேஷ் அதனை ரீமாவின் கழுத்தினில் போட்டு விட்டான்.
இரத்தினக்கற்கள் பதித்த அந்த நெக்லஸினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா.
ஆனந்தக்கண்ணீர் சொரிந்து கொண்டிருந்த ரீமாவினை ஆரத்தழுவிக்கொண்டிருந்தான் மாதேஷ். இருவரும் "ஐ லவ் யூ", "உனக்காக எது வேணுமுன்னாலும் செய்வன்டி செல்லம்", "நீயில்லாம நானில்லை" போன்ற சினிமா வசனங்களை தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரின் அந்நியோன்னியத்தையும் குலைக்கும் விதமாக அர்ஜுன் முந்திரிக்கொட்டை மாதிரி அந்த கேள்வியைக்கேட்டான்.
"மாதேஸ்ண்ணா இந்த நெக்லஸ் ஒரு அஞ்சு லட்சம் வருமா?"
காதல் மயக்கத்தில் இருந்த மாதேஷ் அர்ஜுன் குரல் கேட்டு திரும்பி "என்ன அஞ்சு லட்சமா? என்னோட டார்லிங்க்கு வெறும் அஞ்சு லட்சமா? இதில இருக்கிற ஒரு ரத்தினக்கல்லோட பெறுமதியை அஞ்சு லட்சத்தை தாண்டிடும்டா முட்டாள்" என்று அர்ஜுன் மீது வெறுப்பை உமிழ்ந்தான் மாதேஷ்.
"அப்பிடீன்னா இது எவ்வளவு வரும்?" ஆர்வ மிகுதியில் விக்ரம் வாயை தொறந்தான்.
"இதோட விலை அறுபது லட்சம்" விலையை சொன்னவுடன் நண்பர்கள் மத்தியில் ஒரு நிசப்தம்........
சில வினாடிகள் நீடித்த அமைதியை அர்ஜுனின் குரல் மீண்டும் குலைத்தது.
"ரீமா அக்கா நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க." என்று கூற ரீமாவும் பதிலுக்கு 'ஆம்' என்பது போல தலையசைத்தாள்.
இங்கு நடப்பதையெல்லாம் ஒரு மூலையில் நின்றபடியே நோட்டமிட்டுக்கொண்டிருந்தார் மாணிக்கம்.
நண்பர்கள் எல்லோரினதும் வஞ்சப்புகழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஓய அன்றைய தின கேளிக்கை கொண்டாட்டங்களும் முடிவுக்கு வந்தன. அடுத்த நாள் ஊருக்கு புறப்பட வேண்டியிருந்ததால் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கும்மாளத்தை முடித்துக்கொண்டனர் விக்ரமும் சகாக்களும்.
அனைவரும் தம் படுக்கைக்கு சென்ற பின்னரும் அவ்விடத்திலேயே அசையாமல் இருந்தாள் ராதிகா. விக்ரமுக்கும் ராதிகாவின் எண்ணம் என்னவாகவிருக்கும் என்று ஓரளவுக்கு விளங்கியிருந்தது.
"ராதிகா.......... என்ன யோசனை?" என்று சிரித்தபடியே கேட்டான் விக்ரம்.
முறைத்துப்பார்த்த ராதிகாவும் "விக்கி உனக்கு தெரியாதா?" என்று உறுமினாள்.
"சரிடி செல்லம், கோபிக்காத.... சீக்கிரமே உனக்கும் ஒரு நெக்லஸ் வாங்கித்தாறன். ஓகேயா?"
"எனக்கு நீ நெக்லஸ்ல்லாம் வாங்கித்தர தேவையில்லை...."
"அடடா, நான்தான் வீணா வாய குடுத்திட்டானா?" என்றபடி சிரிக்கத்தொடங்கினான் விக்ரம்.
"சிரிக்காத விக்கி, நான் சீரியசா கதைக்கிறன்" என்று மீண்டும் எரிந்து விழுந்தாள் ராதிகா.
"நெக்லஸும் வேணாம்கிற, சிரிக்கவும் வேணாம்னா, அப்ப என்னதான் வேணும்?"
"நெக்லஸ் வாங்கித்தர வேணாம்னு தான் சொன்னன், நெக்லஸே வேணாம்னு சொல்லல விக்கி."
"புரியல."
"எனக்கு அந்த நெக்லஸ் தான் வேணும்!!!!!"
"ராதிகா உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா? அத எப்பிடிடி ரீமா குடுப்பாள்? இல்ல, அத வாங்கத்தான் என்கிட்ட பணமிருக்கா? அறுபது லட்சமாம்..... " என்று வாயைப்பிளந்தான் விக்ரம்.
"உன்ன யாரு வாங்க சொன்னா, நீ எடுத்திடு.... சிம்பிள்...."
"களவெடுக்க சொல்றியா?"
"ஹேய் நீ ஒண்ணும் உத்தமன் மாதிரி என்கிட்ட நடிக்காத. நீயும் ராகுலும் அர்ஜுனும் சேர்ந்து அங்கிள் கிட்ட இருந்து பணம் எடுத்தது, ராகுலோட பழைய கேர்ள் பிரெண்ட் அனிதாவோட செயின எடுத்ததெல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா?"
"சரி சரி, எல்லாத்துலயும் உனக்கும் பங்கு கொடுத்தத மறந்துடாத....... எல்லாம் ஓகே. முன்ன செய்ததெல்லாம் சின்ன சின்ன திருட்டு. பிடிபட்டிருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு செய்தது.. இது ரிஸ்க் அதிகம்டி."
"விக்கி உனக்கு அந்த நெக்லஸ் மேல ஆசை இல்லைன்னு மட்டும் சொல்லிடாத. அந்த நெக்லஸ மாதேஷ் எடுத்ததும் உன்னோட ரியாக்சன் என்னன்னு நானும் பார்த்தன். அது மட்டும் எங்ககிட்ட இருந்தா எவ்வளவு கெத்துன்னு தெரியுமா?" விக்ரமின் ஆசையை தூண்டினாள் ராதிகா.
"நீ சொல்றது எனக்கு புரியுது, தனியா எப்பிடி செய்றதுன்னு.........."
"தனியா இல்ல விக்கி, அதுதான் ரிஸ்க். கூட இருந்தவங்க எல்லாருக்கும் பங்கு இருந்தாத்தான் நமக்கு சேஃப்."
ராதிகா சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட விக்ரம் நள்ளிரவில் ரகசிய கூட்டத்தை கூட்டி அனைவரையும் கூட்டுகளவாணியாக்கினான்.
திட்டத்தைக்கேட்டு பயந்த அர்ஜுன் "மாட்டிக்கிட்டா நிச்சயம் ஜெயில்தான். அதோட இந்த நெக்லஸ வெளியில போடவும் முடியாது. போட்டா மாட்டிடுவம். இங்க வச்சு காணாம போனா அது நம்ம எடுத்ததுன்னு தெளிவா தெரிஞ்சிடும். ஸோ இப்ப எடுக்க வேணாம். தேவைன்னா பிறகு பார்த்துக்கலாம்." பயத்தை வெளிக்காட்டாமல் களவை பிற்போட ஐடியா கொடுத்தான்.
"அர்ஜுன் சொல்றதிலயும் பாயிண்ட் இருக்கு. இப்ப அவசரப்பட வேணாம்னு எனக்கும் தோணுது." அர்ஜூனுடன் துணைக்கு ராகுலும் இணைந்தான்.
"இல்லடா, முன்னாடி அந்த நெக்லஸ பார்த்தப்ப எனக்கும் அது எனக்கு சொந்தமாயிருக்கணும்னு தோணிச்சு. இப்போ ராதிகா சொன்னதுக்கப்புறம் அத விட்டு போக மனமில்ல. இன்னைக்கு விட்டா இனி சான்ஸ் கிடைக்காது. இப்போ எடுத்து எங்கயாவது மறைவா வச்சிடலாம். இன்னும் ஒரு வருஷத்துல மாதேஷ் அண்ட் ரீமாவுக்கு காலேஜ் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் அவங்கள பார்க்கவே போறதில்ல. அப்புறம் நம்ம ஆட்சிதான்."
"நாளைக்கு என்னடா பதில் சொல்லுவ?" இது பயத்தில் பேச்சு மூச்சற்று இருந்த மனீஷாவின் குரல்.
"அதான் மாணிக்கம் இருக்காருல்ல......" என்று சொல்லி விட்டு கபடச்சிரிப்பு சிரித்தான் விக்ரம்.
"டேய் விக்கி அவர் பாவம்டா, போலீஸ்கிட்ட மாதேஷ் போய்ட்டா நம்ம மாட்டிக்குவம்" அர்ஜுனுக்கு மனம் கேட்கவில்லை.
"அடேய் அரசியல் தெரியாம இருக்கிறியேடா, இந்த அறுபது லட்சம் எங்கேயிருந்து வந்திச்சு, அவ்வளவும் அவனோட அப்பா ஊழல் செய்து வந்த பணம். அதனால நிச்சயமா போலீஸ்ல கேஸ் போட மாட்டான். என்ன சொல்ற ராதிகா?"
"எனக்கும் இந்த சான்ஸ விட விருப்பமில்ல, அதேபோல இந்த விஷயம் எங்களுக்குள்ள மாத்திரம்தான் இருக்கணும். இது சக்ஸஸ் ஆச்சுன்னா எல்லாருக்கும் ஷேர் இருக்கு. மாணிக்கம் மேல இப்ப பழிய போட்டுட்டு அப்புறமா அவருக்கும் ஏதாவது செட்டில் பண்ணிடலாம்."
"அப்பிடீன்னா உடனடியா மாணிக்கத்த தலைமறைவாக சொல்லிடனும்." என்று மனீஷாவும் தன் பங்குக்கு ஐடியா கொடுத்தாள்.
குறுக்கிட்ட விக்ரமோ "மாணிக்கம் அப்பாவுக்கு ரொம்ப விசுவாசமான ஆளு, அதோட நேர்மை, உழைப்பு அப்பிடி இப்பிடீன்னு பிதற்றுற கேஸ். ஸோ அவர்க்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்துக்கணும். தெரிஞ்சா எல்லா பிளானும் சொதப்பிடும்." என்று கூற,
"விக்கி சொல்றதும் சரிதான், அப்பிடீன்னா மாணிக்கத்திட்ட வேற ஏதாவது சொல்லி ஊருக்கு அனுப்பிடனும்." என்று ராதிகா கூற,
"அதுவும் நைட்டோட நைட் அனுப்பிடனும், நாளைக்கு அந்தாள் இங்க இருந்த தடம் இருக்க கூடாது. அத நான் பார்த்துக்கிறன்." என்று விக்ரமும் தீர்வொன்றை கூற, மேலும் எதுவித சிக்கல்களும் இல்லாதது போல அனைவரும் அடுத்து திருட்டொன்றுக்கும் மறுநாள் நாடகம் ஒன்றிற்கும் தயாராகினர்.
- தொடரும்-