ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யார் அவள்? - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

Member
Wonderland writer
யார் அவள்?

அத்தியாயம் 1 - இரு ரேகைகள்



ஆகஸ்ட் 22,

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி

கோயம்புத்தூர் நகர போலீஸ் கன்ட்ரோல் ரூம் அமைதியாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு பணியிலிருந்த கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டர் பரமசிவம் அன்றைய நாள் நாளிதழை கையில் வைத்தபடி சொப்பன வாசலில் மிதந்துகொண்டிருந்தார்.

"ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்......" தொலை பேசி அலறல் கேட்டு திடுக்கிட்டெழுந்தவர் தனது ஹெட் போனில் உள்ள மைக்கை ஆன் செய்துவிட்டு பேசத்தொடங்கினார்.

“கோயம்புத்தூர் போலீஸ் கன்ட்ரோல் ரூம், யார் பேசுறீங்க?"

“சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!" எதிர் முனையில் ஒரு பெண் உயிர்ப்பயத்தில் கதறிய கதறலில் பரமசிவத்திற்கு வியர்த்து ஒழுகியது. கணப்பொழுதில் சுதாகரித்த பரமசிவம் "யாரும்மா பேசுறீங்க? எங்க இருந்து பேசுறீங்க? பயப்படாதீங்கம்மா."

"என் பேரு ராதிகா, என்னோட பிரெண்ட்ஸ யாரோ கொலை பண்ணிட்டாங்க. இப்ப என்ன துரத்துறாங்க. சீக்கிரமா வந்து காப்பாத்துங்க சார்!"

"எங்க இருக்கீங்கம்மா இப்ப?

"பொள்ளாச்சில இருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சோலையாற்றைக்கடந்து போட்ல வரணும். கேரளா போர்டர்ல இருக்கிற நீலமலைக்காடு. சீக்கிரம் வாங்க சார்"

அடுத்ததாக பரமசிவம் ஏதோ கேட்கப்போக ஒரு பெரும் அலறல் சத்தம் மாத்திரமே கேட்டது. அத்துடன் அழைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.



ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி

பொள்ளாச்சி நகருக்கு ஒதுக்குபுறமாக இருந்த இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் பெண்ணொருத்தி சோகமே உருவானவளாய் யாரையோ எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தாள். கண்களின் ஓரம் வழிந்து காய்ந்து போயிருந்த கண்ணீரும் வாரி முடியாத கூந்தலும் அவளது சோகத்தை வெளிக்காட்டின. அவள் பெயர் ஆனந்தி, வயது முப்பதை அண்மித்திருந்தது. வீட்டிற்கு அருகிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை பராமரிப்பாளராக பணி புரிகிறாள். கணவனது பெயர் கார்த்திக். பொலிஸ் இன்ஸ்பெக்டர். காவல்துறையில் மீதமுள்ள ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். சம்பளத்தை தவிர வேறு எதையும் கை நீட்டி வாங்கியது கிடையாது. நேர்மையான போலீஸ் என்றவுடன் நமது தமிழ் சினிமா நாயகர்கள் போல எண்ண வேண்டாம் நேர்மை எவ்வாறு போலீசிற்கு ஒத்துவராதோ அதேபோல இவரது இளகிய மனமும் ஒத்து வராது. பல கனவுகளுடன் போலீஸ் வேலைக்கு வந்தவருக்கு தற்போது இந்த வேலையில் ஏன் இருக்கிறோம் என்று எண்ணுமளவுக்கு அவமானங்கள். டிபார்ட்மென்டில் தனது பெயருக்கும் ஒரு மரியாதை கிடைக்கவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில்தான் தனது மூன்று வயது மகள் இனியாவிற்கு இதயத்தில் கோளாறு என்பது தெரிய வந்திருக்கிறது. சிறுகச்சேமித்த பணமும் தங்கையின் திருமணத்திற்கு கொடுத்தாச்சு. மகளை காப்பாற்ற வேண்டுமானால் மூன்று மாதத்திற்குள் 10 லட்ச ரூபாய் அறுவை சிகிச்சைக்கு கட்டியாக வேண்டும். உதவி செய்யவும் யாருமில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தான் கார்த்திக்.

வெளியே பைக் சத்தம் கேட்டதும் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றாள் ஆனந்தி. கார்த்திக்கிற்க்காக காத்திருந்தவள் அவன் உள்ளே வருவதைக்கண்டதும் "டாக்டர் என்ன சொன்னாரு?" என்று கேட்டுக்கொண்டே கார்த்திக்கினது கையிலிருந்த பைலை வாங்கிப்பார்த்தாள்.

"ஹெல்த்ல இம்ப்ரூவ்மன்ட் இருக்குதாம், ஆனா எப்பிடியோ சர்ஜரி பண்ணித்தான் ஆகோணும்னு சொல்லிட்டார்"

இதைக்கேட்ட ஆனந்திக்கு அழுகையை அடக்க முடியவில்லை. வாய் விட்டு கதறியே விட்டாள்.

"ஏய் உள்ள குழந்தை இருக்கிறாள், அழாத" என்று ஆனந்தியை சமாதானமாக்கி விட்டு தனது கண்ணீரையும் துடைத்துக்கொண்டான் கார்த்திக்.

"பணத்துக்கு என்னங்க பண்றது?"

"கடவுள் பாத்துப்பான் ஆனந்தி"

"இந்தக்கதையெல்லாம் வேணாம், எப்பிடியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. இல்லைனா நானும் என்னோட பொண்ணும் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குவோம்"

ஆனந்தி இவ்வாறு கூறியது கார்த்திக்கிற்கு கோபத்தை வரவழைத்தது.

"அப்பிடி பணம் வேணும்னா ஏன் நேர்மையான போலீஸ்காரன்தான் வேணும்னு தேடி கல்யாணம் பண்ணினீங்க. ஊர்ல எத்தனையோ போலீஸ்காரன் வசதியா இருக்கிறானே"

"எனக்கு இப்ப பொண்ணோட உசுருதான் முக்கியம், யாரோட கைய காலையாவது புடிச்சு பணத்தைக்கொண்டு வாங்க, உங்க டிபார்ட்மென்ட்ல எல்லாரும் வசதியாத்தானே இருக்கிறாங்க, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ பணத்தோட திரும்பி வாங்க." என்று கத்திவிட்டு அறையினுள் சென்று கதவடைத்தாள் ஆனந்தி.

கனத்த இதயத்துடன் அங்கிருந்த கதிரையில் அமர்ந்த கார்த்திக்கின் செல்போன் சிணுங்கத்தொடங்கியது. செல்போனில் மேலதிகாரியின் பெயரைப்பார்த்ததும் அவரிடம் பண உதவி கேட்டதை நினைத்துக்கொண்டு போனை காதில் வைத்தான் கார்த்திக்.

"குட் ஈவினிங் சார்"

"குட் ஈவினிங் கார்த்திக். நீங்க...."

இடைமறித்த கார்த்திக் "சார் அந்தப்பணம் கேட்டிருந்தனே......" என இழுத்தான்.

"இங்க பாருங்க கார்த்திக், டிபார்ட்மென்ட்ல யாரும் அவ்வளவு பணம் உங்களுக்கு கொடுக்க மாட்டாங்க. அதோட என்ன நம்பிக்கைல உங்களுக்கு பணம் கொடுக்கிற? உங்களோட மாத சம்பளத்துல திரும்பி தந்துடுவீங்கன்னா? போலீஸ்ல இருந்திட்டு புழைக்க தெரியாத ஆளா இருந்திருக்கீங்க. அது உங்களோட தப்பு. கொஞ்சம் புத்தியோட வேலை செய்திருந்தா இன்னைக்கு இந்த நிலமை வந்திருக்காது. என்னால வேற எதுவும் பண்ண முடியாது" எஸ்.பி ராஜசேகரின் குரலில் கோபம் கொப்பளித்தது.

"ஓகே சார்" பயந்து கொண்டே பதிலளித்தான் கார்த்திக்.

"கார்த்திக் உடனடியா பொள்ளாச்சி ஹாஸ்ப்பிட்டலுக்கு போங்க, அங்க ஒரு பொண்ண அட்மிட் பண்ணியிருக்காங்க. சுய நினைவில்ல, யாருன்னே தெரியல. போய் அத கொஞ்சம் விசாரியுங்க"

"சார் இப்ப வீட்ல நிலமை சரியில்ல......"

"வீட்ட இருந்து பொம்பிளை புள்ளைங்க மாதிரி அழுதிட்டு இருக்க போறீங்களா? உங்களோட கஷ்டம் தெரிஞ்சுதான் உங்கள போக சொல்றன். அந்தப்பொண்ண பார்த்தா வசதியான பொண்ணு மாதிரி தெரியுதாம், அதோட இன்னொரு பொண்ணோட டெட் பாடியும் கண்டுபிடிச்சிருக்காங்க. புழைக்குற வழியப்பாருங்க. உங்க பொண்ண பற்றி மறந்துடாதீங்க" என்று சொல்லிவிட்டு அழைப்பைத்துண்டித்தார் ராஜ சேகர்.

அடுத்த சில நிமிடங்கள் ஆனந்தி கூறியதும் ராஜசேகர் கூறியதும் கார்த்திக்கின் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. தன்னுடைய விதியை நினைந்து நொந்து கொள்வதா? இல்லை, ராஜசேகர் கூறியது போல தான் புழைக்கத்தெரியாதவனா? என்றெல்லாம் எண்ணி மனம் வருந்தினான் கார்த்திக். கடைசியாக, காவல்துறையில் பணிக்கு சேர்ந்து கடந்த பத்து வருடங்களாக மனசாட்சிக்கு விரோதமாக நடக்காமல் பணி புரிந்ததற்கு பலனாக தன்னுடைய மகளை பறிகொடுக்க மாட்டேன் என்றும் இது கடவுள் தனக்கு கொடுத்திருக்கும் சந்தர்ப்பம் என்றும் முடிவெடுத்தவனாய் பொள்ளாச்சி அரச மருத்துவமனை நோக்கி டூ வீலரை செலுத்தினான்.



பொள்ளாச்சி அரச மருத்துவமனை, நேரம் மாலை 6.00 மணி

அன்று விடுமுறைதினம் என்பதால் மருத்துவமனையில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. மருத்துவமனைக்குள் நுழைந்த கார்த்திக்கினை பார்த்ததும் ஹெட் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி கார்த்திக்கினை நோக்கி விரைந்தார்.

"குட் ஈவினிங் சார், நீங்கதான் இந்த கேஸ ஹாண்டில் பண்ண போறதா சொன்னாங்க. நீங்க இப்ப இருக்கிற நிலைமைக்கு ........" என்று மெதுவாக இழுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"அண்ணன் நம்ம உழைச்சாத்தான் நம்ம சாப்பிடலாம், யோசிக்கிறதால எதுவும் நடக்கபோறல்ல. எல்லாம் கடவுள்ட கைலதான் இருக்கு. கேஸ பற்றி சொல்லுங்க." என்று வெறுப்புடன் கூறினான் கார்த்திக்.

கிருஷ்ணமூர்த்தியும் கார்த்திக்கும் ஐந்து வருடங்களாக ஒன்றாக பணிபுரிகின்றனர். தான் கிருஷ்ணமூர்த்திக்கு மேலதிகாரியாக இருந்தாலும் தனது சொந்த அண்ணா போலதான் கார்த்திக் பழகுவான். கார்த்திக்கினது இந்தக்குணத்தாலேயே அவனது ஸ்டேஷனில் வேலை செய்யும் எல்லோருக்கும் அவனைப்பிடித்திருந்தது. கிருஷ்ணமூர்த்தியும் கார்த்திக்கின் நிலமையைக்கண்டு வருந்தாத நாளில்லை.

"தம்பி இன்னைக்கு காலைல ஒன்பது மணி போல கண்ட்ரோல் ரூம்ல இருந்து நம்ம ஸ்டேஷனுக்கு கால் வந்திச்சு. யாரோ ஒரு பொண்ணு கால் பண்ணி தன்ன யாரோ கொலை பண்ண துரத்துறதா சொல்லியிருக்கா. இங்கயிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சோலையாத்துக்கு அந்தப்பக்கம் இருக்கிற நீலமலைக்காட்டில இருந்து பேசியிருக்குது அந்தப்பொண்ணு. உடனடியா நானும் தாமோதரனும் கிளம்பினோம். இடையில ஓடுற ஆற்றை கடக்கிறதுதான் பெரும்பாடா போச்சு. பொண்ணு சொன்ன லொகேஷனுக்கு போனா அது ஒரு கெஸ்ட் ஹவுஸ், சுத்தி மூணு பக்கமும் காடு, ஒரு பக்கம் ஆறு. நாங்க போய் போட்ல இருந்து கீழ கால வைக்கும் போதே யாரோ அலறுற சத்தம் கேட்டுச்சு, ஓடிப்போய் அந்த கெஸ்ட் ஹவுஸ திறந்து போனா அங்க மேல ஒரு ரூம்ல ரெண்டு பொண்ணுங்க விழுந்து பேச்சு மூச்சில்லாம இருந்துதுங்க. கிட்ட போயி பார்த்தா அதில ஒரு பொண்ணு நெஞ்சிலயும் கழுத்திலயும் கத்தியால யாரோ குத்தியிருந்தாங்க, மற்ற பொண்ணு பேச்சு மூச்சில்லாம மயங்கி கிடந்துச்சு. உடனடியா ரெண்டு பொண்ணுங்களையும் இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டம். ஆனா அதில அந்த கத்தி குத்து வாங்கின பொண்ணு இறந்திடுச்சு, மற்ற பொண்ணுக்கு சுயநினைவு திரும்பல. தாமோதரன் திரும்ப நம்ம டீமையும் பொரென்சிக் டீமையும் கூட்டிகிட்டு அங்க போயிருக்கிறான். அந்தப்பொண்ணு கண் முழிச்சாதான் என்ன நடந்திருக்கும்னு தெரியவரும் தம்பி"

"அண்ண, கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணின பொண்ணு அவளோட பேர் சொல்லலையா?"

"சொல்லியிருக்கா தம்பி. ராதிகாவாம்"

"இந்தப்பொண்ணுங்க யாருன்னு தெரிஞ்சுதா?"

"இந்தப்பொண்ணுங்க யாருன்னே தெரியல. கண்ட்ரோல் ரூமுக்கு வந்த கால்ல பேசின பொண்ணு தன்னோட பிரெண்ட்ஸ யாரோ கொலை பண்ணிட்டதா சொல்லியிருக்கா, ஆனா இங்க ஒரு பொண்ணுதான் செத்து போய் கிடந்தது. அந்த கெஸ்ட் ஹவுஸ்ல வேற சில பேரும் இருந்த போல தெரியுது. ஆனா இப்ப ஒருவரும் இல்ல. அந்தக்காட்டுக்குள்ள கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதே வெளில யாருக்கும் தெரியல"

"ஆனா அந்த இடத்துக்கு எப்பிடி போயிருப்பாங்க?"

"போட்ல தான் போகலாம். அவங்களுக்கு சொந்தமான போட்ல போயிருக்காங்க. அந்த போட் அங்க என்ஜின் ரிப்பேர் ஆகி நிக்குது. தாமோதரன் செக் பண்ணி சொன்னான்."

"அப்போ வேற ஏதாவது வழியிருக்கா?"

"இல்ல தம்பி, மற்ற எல்லா பக்கமும் காடுதான் அதுக்கப்புறம் கேரளா பார்டர். இன்னொரு விஷயம் தம்பி அந்த கொலையெல்லாம் இங்க சுயநினைவில்லாம இருக்கிற பொண்ணுதான் செய்திருக்கு. அவளுக்கு பக்கத்திலதான் கத்தியும் இருந்திச்சு. கைரேகை எடுத்திருக்காங்க. ரிசல்ட் வந்திச்சுன்னா கேஸ முடிச்சுடலாம்.”

"ஆனா மற்ற பிரெண்ட்ஸுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிச்சாகணுமே!"

“இதுல கூட யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல. அந்தப்பொண்ணு எல்லாத்தயும் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும். நீங்க ஆக வேண்டியத பாருங்க."

கிருஷ்ணமூர்த்தி கூறியதன் அர்த்தம் கார்த்திக்கிற்கு விளங்கியது. தன் மீது கொண்டுள்ள அக்கறையில்தான் அவ்வாறு கூறுகின்றார் என்பதை விளங்கிக்கொண்ட கார்த்திக்கும் இரண்டு மனதுடன் தலையசைத்து கிருஷ்ணமூர்த்தியை ஸ்டேஷனுக்கு செல்லுமாறு கூறிவிட்டு சிரேஷ்ட வைத்தியரின் அறையை நோக்கி நகர்ந்தான்.

சிரேஷ்ட வைத்தியர் சித்ரலேகாவிடம் தன்னை அறிமுகப்படுத்திய கார்த்திக் இறந்த பெண்ணின் உடலைப்பார்க்க அனுமதி பெற்று பிணவறை நோக்கி டாக்டரையும் அழைத்து சென்றான்.

இறந்த பெண்ணின் உடலில் நெஞ்சிலும் கழுத்திலும் ஆழமான கத்திக்குத்து காயங்கள் தென்பட்டன. ஜீன்சும் ஸ்கின்னியும் அவள் அணிந்திருந்தது கார்த்திக்கிற்கு கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியது சாதாரணமானதுதான்.

"என்ன இன்ஸ்பெக்டர் ஒண்ணுமே பேசாம நிக்கிறீங்க?" டாக்டரின் குரல் கேட்டு கார்த்திக்கும் "இல்ல டாக்டர், இந்தப்பொண்ணோட டிரஸ் ஏதாவது ரிமூவ் பண்ணினீங்களா?"

"இல்லையே, ஏன் கேட்குறீங்க?"

"இல்ல, அவ்வளவு குளிரான இடத்துல இப்பிடி ட்ரெஸ் பண்ணிருக்கே அதான் கேட்டன்?"

"இந்தக்காலத்து பொண்ணுங்களுக்கு குளிர விட ஸ்டைல் தான் முக்கியம் போல.........."

"மற்ற பொண்ணோட கண்டிஷன் என்ன டாக்டர்?"

"இங்க கொண்டு வரும் போது மயக்கத்துலதான் இருந்தா, ரொம்ப பயந்திருக்கான்னு நினைக்கிறன். அட்மிட் ஆகி கொஞ்ச நேரத்துக்கப்புறம் கண் முழிச்சா பட் தான் யாருன்னே தெரியாத மாதிரி பிஹேவ் பண்ணினா. அப்புறம் நாங்க டிஸ்டர்ப் பண்ணல. இப்பவும் அரை மயக்கத்துலதான் இருக்கிறா"

"எதனால இப்படி ஆகும் டாக்டர்?"

"அங்க ஒரு கொலை நடந்திருக்கு. அந்த அதிர்ச்சிலயும் இப்பிடி ஆகலாம். பட் எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும். மற்றபடி அந்தப்பொண்ணுக்கு வேறெந்த பிரச்சனையும் இல்ல இன்ஸ்பெக்டர்" கதைத்துக்கொண்டே இருவரும் அந்தப்பெண்ணின் வார்டிற்கு வந்தடைந்தனர். அங்கே மயக்கத்திலிருந்து பெண்ணை அருகே சென்று பார்வையிட்டான் கார்த்திக். ஜீன்சும் டீ ஷர்ட்டும் அணிந்திருந்த அந்தப்பெண்ணின் இடது கை மணிக்கட்டில் கட்டு போடப்பட்டிருந்தது.

"கையில என்ன காயம் டாக்டர்?"

"அதுவா, இந்தப்பொண்ணுட கையிலயும் ஒரு கத்தி வெட்டின காயம் இருந்திச்சு, சின்ன காயம்தான்"

அவள் கையிலிருந்த காயத்தை மாத்திரமல்ல, ரோலெக்ஸ் மணிக்கூடு, கோல்ட் செயின் என்று எல்லாவற்றையும் நோட்டம் விட்டிருந்தான் கார்த்திக். ராஜசேகருக்கு ஏன் அவள் வசதியானவள் என்று தகவல் போயுள்ளது என்றும் கார்த்திக்கிற்கு விளங்கியது.

அவள் இருந்த வார்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிய கார்த்திக்கிடம் டாக்டர் உரையாடலை தொடங்கினார்.

"இன்ஸ்பெக்டர் உங்க பொண்ணுக்கு இப்ப ஓகேயா?"

"இல்ல டாக்டர், இன்னும் சர்ஜரி பண்ணல....... உங்களுக்கு எப்பிடி தெரியும் டாக்டர்?"

"டாக்டர் ஜீவானந்தம் என்னோட பிரெண்ட்தான், என்னோட பையனுக்கும் ஹார்ட்ல ப்ரோப்ளம் இருந்துச்சு. ஜீவானந்தம் தான் சர்ஜரி செய்தார். அவர்கூட டூ வீக்ஸ் முன்னாடி பேசிக்கிட்டிருக்கும் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பொண்ணுக்கும் அதே ப்ரொப்ளம் இருக்குனு சொன்னார். உங்க பேர கேட்டதும் அது நீங்கதான்னு விளங்கிச்சு.அதான் கேட்டன் இன்ஸ்பெக்டர்"

"ஓ..... உங்க பையன் எப்பிடி இருக்கிறான் டாக்டர்?"

"ஹீ இஸ் காம்ப்லீட்லி ஆல்ரைட். சீக்கிரமா சர்ஜரி பண்ணிடுங்க. லேட் பண்றது அட்வைசபில் இல்ல"

"யெஸ் டாக்டர்"

கதைத்துக்கொண்டே இருவரும் சித்ரலேகாவின் அறையை வந்தடைந்திருந்தனர்.

"டாக்டர் இந்தப்பொண்ணுதான் கொலை செய்திருக்கும்னு ஸ்பாட்ல இருந்த போலீஸ் சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?"

"போலீஸ் மாதிரி என்னால சந்தேகப்பட முடியாது இன்ஸ்பெக்டர். கத்தில இருக்கிற கைரேகையும் இந்தப்பொண்ணோட கைரேகையும் ஒண்ணான்னு செக் பண்ணி பார்த்து நீங்க கண்டுபிடியுங்க, பட் அவ கொலையாளியாவே இருந்தாலும் இந்த ஹாஸ்பிடல்ல இருக்கும் மட்டும் அவள் என்னோட பேஷண்ட். அவ்வளவுதான்."

"சரி டாக்டர், நான் ஸ்டேஷனுக்கு கிளம்புறன், இங்க கான்ஸ்டபிள் ரெண்டு பேர் காவலுக்கு நிப்பாங்க. அந்தப்பொண்ணு முழிச்சதும் இன்போர்ம் பண்ணுங்க."

"ஓகே இன்ஸ்பெக்டர்" என்று சித்ரலேகாவும் கூற விடைபெற்று சென்றான் கார்த்திக்.

ஒரு பாதி தூரம் பைக்கில் சென்று விட்ட கார்த்திக்கிற்கு தனது கால்ச்சட்டை பைக்குள் இருந்து செல்போன் அதிருவது விளங்கி வண்டியை ஓரங்கட்டினான்.

"ஹலோ கிருஷ்ணமூர்த்தி நான் டிரைவ் பண்ணிட்டிருக்கன், சீக்கிரம் சொல்லுங்க"

"தம்பி அந்த கத்தில இருந்த கைரேகை அந்தப்பொண்ணோடதுதானாம்......"

"ஓ……, அப்ப நீங்க சந்தேகப்பட்டது சரிதான்."

"ஆனா பிரச்சனை என்னன்னா அந்தக்கத்தில வேற ஒரு கை ரேகையும் கிடைச்சிருக்கு தம்பி."

"இன்னொரு ரேகையா?"

"ஆமா தம்பி இன்னொரு ரேகையும் இருக்கு, அதில செத்துப்போன பொண்ணோட ரத்தக்கறையும் இருக்குதுனு சொன்னாங்க."

"வேற யாரோடதும் பிளட் இருந்த மாதிரி ஏதாவது......"

"இல்லையாம், ஒருத்தரோட பிளட் தான் இந்தக்கத்தில இருந்துச்சாம்."

"வேற ஏதாச்சும் டீடெயில்ஸ்?"

"இன்னொரு முக்கியமான விஷயம், ஆத்துக்கு இந்தப்பக்கம் அவங்களோட போட் பார்க் பண்ணியிருந்த இடத்தை தாமோதரன் கண்டுபிடிச்சிருக்கிறான், அங்க ஒரு பஜுரோ வண்டியும் நிக்குதாம். கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன். அதுலதான் யாரோ வந்திருக்காங்க. நேற்று சாயுங்காலமா அந்த வண்டி போனத ஏரியா பையன் ஒருத்தன் பார்த்திருக்கிறான். வண்டிக்குள்ள அஞ்சு அல்லது ஆறு பேர் இருந்திருப்பாங்கன்னு சொல்றானாம்"

அந்தப்பையன்கிட்ட இருந்து வேற ஏதும் டீடெயில் எடுக்கலாமான்னு பார்க்க சொல்லுங்க அண்ணே"

"சரி தம்பி, நான் பார்த்துக்கிறன்"

கர்நாடகா வண்டி தமிழ்நாடு கேரளா பார்டரில் ஏன் நிற்கிறது? வண்டியிலிருந்தவர்கள் எங்கே? யார் அந்த ராதிகா? இறந்த பெண் யார்? ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்கும் பெண் யார்? என ஆயிரம் கேள்விகள் கார்த்திக்கின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்க குழப்பத்துடன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

பைக் ஸ்டார்ட் ஆனதுதான் தாமதம் செல்போன் மீண்டும் சிணுங்கியது. லாண்ட் லைன் நம்பரை பார்த்ததும் எடுத்து காதில் வைத்தான் கார்த்திக்.

"ஹலோ இன்ஸ்பெக்டர் கார்த்திக்" எதிர் முனையில் டாக்டர் சித்ரலேகாவின் குரல்.

"யெஸ் ஸ்பீக்கிங்"

"நான் டாக்டர் சித்ரலேகா, அந்தப்பொண்ணு கண் முழிச்சிட்டாள். பேரு ராதிகாவாம்."

"என்ன!....... ராதிகாவா!?...... டாக்டர் நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்திடுறன்." என்று கூறிவிட்டு போனை வைத்தவன் மின்னல் வேகத்தில் மருத்துவமனை நோக்கி பறந்தான்.



-தொடரும்-​
 

Mathithan

Member
Wonderland writer
அத்தியாயம் 2 - ஒரு கதை சொல்லட்டுமா சார்!



பொள்ளாச்சி அரச மருத்துவமனை, நேரம் இரவு 7.00 மணி

மனதில் எழுந்த கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விடைதேடி விரைந்து மருத்துவமனை வந்த கார்த்திக் நேரே டாக்டரை சந்திக்க அவரது அறைக்கு சென்றான். அங்கு கார்த்திக்கிற்காக காத்துக்கொண்டிருந்த டாக்டர் சித்ரலேகா கார்த்திக்கின் முகத்தில் தென்பட்ட குழப்பங்கள் புரியாதவராக " இன்ஸ்பெக்டர் லேப்ல டெஸ்ட் ரிசல்ட் தந்திட்டாங்களா?" என்றார்.

"ஆமா டாக்டர், அந்த கத்தில இருக்கிறது இங்க இருக்கிற அந்த ராதிகாவோட கை ரேகைதானாம்."

"ஓகே, அப்பிடின்னா உங்க முகத்தில ஏன் இந்தக்குழப்பம் இன்ஸ்பெக்டர்?"

"இல்ல டாக்டர் கத்தில இன்னொரு கை ரேகையும் இருக்குதாம், இன்னொன்னு இந்த ரெண்டு பொண்ணுங்க மட்டுமில்ல அந்த நீலமலைக்காட்டுக்கு இவங்களோட வேற சில பெரும் போயிருக்கிறதா இன்போர்மேசன் கிடைச்சிருக்கு. அதோட கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்ல ஒரு வண்டியும் கிடைச்சிருக்கு. ஸோ குழப்பத்துக்கு நிறைய ரீசன் இருக்கு டாக்டர்"

"ஓ அப்பிடின்னா இது ஏதோ பெரிய கேஸ் போலதான் தெரியுது. சரி நீங்க அந்த பொண்ணுகிட்ட ஏதாவது விசாரிக்கணுமுன்னா இப்ப விசாரிக்கலாம், பட் இப்ப ஹாஸ்பிடல்ல இருந்து ரிலீஸ் பண்ணமாட்டம்."

"ஏன் டாக்டர், நீங்கதான் அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னீங்களே!"

"அது சரி இன்ஸ்பெக்டர், ஆனா எங்களுக்குன்னு ஒரு ப்ரொசீஜர் இருக்கு. மயக்கத்துல இருந்து முழிச்சவங்கள டுவல்வ் அவர் ஆப்செர்வசன்ல வச்சிருந்திட்டுத்தான் ரிலீஸ் பண்ணலாம். மோர்னிங் தாராளமா நீங்க கூட்டிட்டு போகலாம்"

"ஓகே டாக்டர், அதுவும் ஒரு விதத்துல நல்லதுதான். ஸ்டேஷனுக்கு கூட்டி போய்ட்டா பொண்ணுங்கள விசாரிக்கிறப்போ கட்டாயம் ஒரு லேடி போலீஸ் கூட இருக்கணும். பொள்ளாச்சில இருக்கிற போலீஸ் பூரா இப்ப தேர்தல் பிரச்சாரத்துக்குத்தான் பாதுகாப்புக்கு போயிருக்கு. பேசாம நான் இங்க இருந்தே விசாரணைய பண்ணிடலாம்."

கார்த்திக் வெறுப்பின் உச்சத்தில் கூறிய வார்த்தைகள் சித்ரலேகாவிற்கு சிரிப்பை வரவழைத்திருந்தாலும் வெளியிலே காட்டிக்கொள்ளாமல் இருவரும் ராதிகா இருந்த வார்டை நோக்கி நடந்தனர். அங்கே வாசலில் காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள் இருவரும் கார்த்திக்கை கண்டதும் கார்த்திக்கிடம் ஏதோ பேச முயல்வதுபோல் கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

"என்ன விஷயம் தங்கவேல், சொல்லுங்க" என்று கார்த்திக் வினவ,

"சார் இன்னைக்கு டவுன் ஹால்ல நடக்குற ஆளும்கட்சிட கூட்டத்துக்கு நம்ம ஸ்டேஷன்ல இருந்தும் நாலு பேர பாதுகாப்புக்கு போக சொல்லியிருந்தாங்க, ஆனா இப்ப ரெண்டு பேர்தான் போயிருக்காங்க."

"ஏன் மிச்ச ஆட்கள் எங்க?"

"தாமோதரன், மணி, சிவா, ராம் இவங்க நாலு பெரும் நீலமலைக்காட்டுக்கு போயிருக்காங்க. ஏ.சி. சார் கோபப்பட்டு கிருஷ்ணமூர்த்திக்கு திட்டியிருக்காரு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல சார்"

அசிஸ்ட்டண்ட் கமிஷனர் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பதிலேயே தனக்கு எந்தளவுக்கு டிபார்ட்மெண்டில் மதிப்புள்ளது என்பதை புரிந்து கொண்ட கார்த்திக் பீறிட்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு “தங்க வேல் நீங்க ரெண்டு பெரும் உடனே கிளம்புங்க. நாங்க என்ன வேலையில்லாம ஸ்டேஷன்ல தூங்கிட்டு இருக்கோம்னு நினைக்கிறாங்க போல....." என்று கூறினான்.

"இங்க காவலுக்கு இருக்கணுமே சார்"

"அதெல்லாம் நான் பாத்துக்கிறன், இந்த ஒரு பொண்ணுதானே, கிருஷ்ணமூர்த்தி ஸ்டேஷன்ல இருக்கட்டும். கைய நீட்டி காசு வாங்கியிருப்பாங்க. டைம்க்கு போகலேன்னா அவங்களுக்கு கோபம் வந்திடும். நீங்க கிளம்புங்க" என்று கூறிவிட்டு மனசிற்குள் அசிஸ்டன்ட் கமிஷனருக்கு திட்டிக்கொண்டே அறைக்குள் நுழைய முற்பட்டான் கார்த்திக்.

"சார் அந்தப்பொண்ணு கையில விலங்கு போட்டிருக்கம் சார், இந்தாங்க சாவி" என்று சாவியை கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டு நடையைக்கட்டினர் இருவரும்.

உள்ளே கட்டிலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் பேரழகி ஒருத்தி. முன்னர் வந்திருந்த நேரம் மயக்கத்திலிருந்தவளின் உடை, அணிகலன்களை மாத்திரமே அதிகம் அவதானித்திருந்த கார்த்திக்கிற்கு இவள்தானா அவள் என்று சந்தேகமே ஏற்பட்டுவிட்டது. சாந்தமான முகத்தில் ஆங்காங்கே பதற்றங்களும் தென்பட்டன.

கார்த்திக்கிற்கும் "இவள் கொலை செய்திருப்பாளா? இந்தக்கைகள் கத்தியால் ஒரு உயிரை எடுக்கக்கூடியதா?" என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழுந்துகொண்டிருந்தன.

"இப்ப எப்பிடியிருக்கும்மா?" சித்ரலேகாவின் குரல் கேட்டு தன்னிலை உணர்ந்தான் கார்த்திக்.

"இப்ப பரவால்ல டாக்டர்"

அவள் குரல் கூட அழகாகத்தான் இருந்தது.

"இவர்தான் இன்ஸ்பெக்டர் கார்த்திக், இவர்தான் உங்கள இன்வெஸ்டிகேட் பண்ணப்போற போலீஸ் ஆபிஸர்." என்று கூறி கார்த்திக்கிடம் ராதிகாவை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார் சித்ரலேகா.

"நான் இன்ஸ்பெக்டர் கார்த்திக், உங்களோட கேஸ நான்தான் டீல் பண்றன். மிஸ் நீங்க எவ்வளவுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குறீங்களோ அவ்வளவுக்கு உங்களுக்கு நல்லது. ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிச்சா எங்க டிரீட்மென்ட் வேற மாதிரி இருக்கும். உங்களுக்கு புரியும்னு நினைக்குறன்."

எதிரே இருந்தவளின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை, எந்தப்பதிலும் இல்லை. இது கார்த்திக்கிற்கு கோபத்தை உண்டாக்கியது.

"மிஸ் நீங்கதான் அந்தப்பொண்ண கொலை செஞ்சிருக்கீங்கன்னு தெரியும். உங்களோட கைரேகைதான் அந்த கத்தியில கிடைச்சிருக்கு. நீங்க எதுவும் பேசாம இருந்தா உங்களுக்குத்தான் நஷ்டம். நீங்க வந்த வண்டியையும் கண்டுபிடிச்சாச்சு. பெங்களூர்ல போலீஸ்க்கு இன்போர்மேசன் கொடுத்தாச்சு. நீங்க ஆறு பேர் போனத ஒரு பையன் பார்த்திருக்கிறான். சோ நீங்க உண்மைய சொல்லித்தான் ஆகணும்."

கார்த்திக்கின் மிரட்டல் தொனியைக்கேட்டவள் பயம் கொண்டவளாய் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் துளியை துடைத்த படி ஆம் என்பது போல தலையசைத்தாள்.

தனது மிரட்டலுக்கு பலன் கிடைத்துவிட்டதை உணர்ந்த கார்த்திக்கும் “ம்..... சொல்லுங்க, நீங்க யாரு? உங்க பெரு என்ன? உங்க கூட வந்தவங்கெல்லாம் யாரு? அவங்கெல்லாம் எங்க? ஏன் அந்த பொண்ண கொலை பண்ணீங்க?" என்று கேள்விக்கணைகளை தொடுத்தான்.

"கார்த்திக் சார் நான் எல்லா உண்மைகளையும் உங்ககிட்ட சொல்லிடுறேன், உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?"

"அத அப்புறம் பார்க்கலாம், நீங்க யாருன்னு முதல் சொல்லுங்க"

சிறிது நேர அமைதிக்கு பின்னர் பதில் சொல்லத்தொடங்கினாள் ராதிகா.

"என்னோட பேரு ராதிகா, அப்பா மனோகர். பெங்களூர்ல "வின்சாப்ட்" என்கிற சாப்ட்வேர் கம்பெனியோட எம்.டி."

"ம்ம்ம்.... உங்க கூட வந்தவங்கெல்லாம் யாரு?"

"ஒருத்தன் என்னோட லவ்வர், பேரு விக்ரம், சண் இண்டஸ்ட்ரீஸ் ஓனர் சண்முகவடிவேலோட ஒரே பையன். அதோட எங்களோட காலேஜ் பிரெண்ட்ஸ் ராகுலும் அர்ஜுனும் மனீஷாவும் வந்தாங்க."

"ராகுல், அர்ஜுன், மனீஷா இவங்கெல்லாம் யாரு?"

"ராகுல் டாக்டர் பரந்தாமனோட பையன். மனீஷா ஜட்ஜ் நாராயணஸ்வாமியோட பொண்ணு. அர்ஜுனோட அப்பா போஸ்ட் ஆபிஸ்ல வேலை செய்றார். அர்ஜுனுக்கு சின்ன வயசில இருந்து விக்ரம்தான் ஸ்பான்சர் பண்ணிகிட்டு இருக்கான். நாங்க எல்லாரும் சென்னை அண்ணா யூனிவெர்சிட்டில பைனல் இயர் படிச்சுக்கிட்டிருக்கம்"

"ம்..... அப்போ எல்லாருமே பெரிய இடம்தான்... அந்த மனிஷாங்கிற பொண்ணத்தானா நீங்க குத்தி கொலை பண்ணினீங்க?"

"சார் உண்மை என்னன்னு தெரியாம நீங்கபாட்டுக்கு எதுவும் முடிவெடுக்காதீங்க" என்று கூறிவிட்டு கண்கலங்கினாள் ராதிகா.

ராதிகா அப்படிக்கூறியது கார்த்திக்கிற்கு சிறிது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் கடமையிலிருந்து விலகாதவனாய் “உண்மைய நீங்க சொன்னாத்தானே தெரியும். மனீஷாவை ஏன் கொன்னீங்க? இல்ல இல்ல மனிஷா ஏன் இறந்து போனா? இப்பிடிக்கேட்டா ஓகேவா?" என்று கேட்டு மீண்டும் மீண்டும் குடைந்தான் கார்த்திக்.

"சார் நான் மனிஷாவ கொலை பண்ணல......" இம்முறை கொஞ்சம் கோபத்துடனே கூறினாள் ராதிகா.

"மிஸ் ராதிகா, நீங்க இங்க குரல உயர்த்தி பேசுறதால நீங்க பண்ணின கொலை இல்லன்னு ஆகிடாது. கிரைம் சீன்ல கிடைச்ச கத்தில உங்க கைரேகைதான் இருக்குது. மனிஷாவ அந்தக்கத்தியாலதான் குத்தி கொலை பண்ணியிருக்காங்க. சோ கிளியரா நீங்கதான் கொலை பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது. போலீஸ ஏமாத்தலாம்னு மாத்திரம் நினைக்காதீங்க." என்று தாம் கண்டுபிடித்தவற்றை சற்று மாற்றங்களுடன் கூறினான் கார்த்திக்.

"சார் நான் சொல்ல வாராத கொஞ்சம் கேட்டுட்டு அதுக்கப்புறம் முடிவெடுங்க ப்ளீஸ். அங்க செத்துக்கிடந்த பொண்ணு மனீஷாவே இல்ல!!!!!"

"என்ன!!!!? அப்போ அது யாரு?"

"அவ பெரு விஷாலி, ராகுலோட காதலி"

"முன்னாடி கேட்டப்போ ஏன் அவ பேர சொல்லல?"

"நான் முன்னாடி சொன்னவங்க எல்லாரும் என்னோடதும் விக்ரமோடதும் பிரெண்ட்ஸ். நாங்க எல்லாரும் ஒவ்வொரு வருசமும் காலேஜ் எக்ஸாம் முடிஞ்சதுக்கப்புறம் ஒரு வீக்கெண்ட் விக்ரமோட கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து ஹாலிடேய என்ஜாய் பண்ணுவம். ஆனா விஷாலி யாருன்னே எங்களுக்கு தெரியாது. லாஸ்ட் மினிட்லதான் ராகுல் விஷாலிய கோயம்புத்தூர்ல வச்சு தன்னோட கேர்ள் பிரெண்ட்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தினான். கடைசி நேரம்கிறதால விஷாலியும் கூட வாரத எங்களால அவொய்ட் பண்ண முடியல. அவ வந்தது எங்க ஒருவருக்குமே உடன்பாடில்ல, ராகுலத்தவிர."

"ராதிகா இன்னும் கொஞ்சம் நம்புற மாதிரி கதை சொல்லுங்க.... "என்று ராதிகா சொன்னதை நம்பாதவன் போல பாசாங்கு செய்தான் கார்த்திக்.

"சார் நான் உங்ககிட்ட பொய் சொல்ற நிலைமையில இல்ல......" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார்த்திக்கின் செல் போன் சிணுங்கியது.

போனில் கிருஷ்ணமூர்த்தியின் பெயரைக்கண்டதும் அறையிலிருந்து வெளியில் வந்து செல்போனை காதில் வைத்தான்.

"அண்ண, ஏதாவது இன்போர்மேசன் கிடைச்சுதா?"

"அத கேட்கத்தான் நானும் போன் பண்ணினன் தம்பி. தாமோதரன் இன்னும் சேர்ச் பண்ணிட்டுதான் இருக்கிறான். இதுவரைக்கும் எதுவும் கிடைக்கலயாம். அந்த பொண்ணு ஏதாவது சொன்னாளா தம்பி?"

"இப்பதான் கொஞ்ச கொஞ்சமா வாய் திறக்கிறாள், அவ கூட போனவங்கட டீடெயில்ஸ் தந்திருக்கிறாள். உங்க போனுக்கு மெசேஜ்ல போட்டு விடுறன். அவ குடுத்த டீடெயில்ஸ் உண்மையானதான்னு செக் பண்ணிட்டு அவங்க அப்பா அம்மாக்கு இன்போர்ம் பண்ணிடுங்க. எல்லாருமே பெங்களூர்ல பெரிய இடம்தான் அண்ண."

"சரி தம்பி, நான் செக் பண்ணிடுறன். ஆனா என்னன்னு இன்போர்ம் பண்றது? உங்க பசங்க செத்து போய்ட்டாங்கன்னா?"

"நமக்கு வேற பாடியும் கிடைக்கல, கத்தில வேற ஆட்கள்ட பிளட்டும் கிடைக்கல.பாடி கிடைக்குற வரைக்கும் நாம எதையும் கன்போர்ம் பண்ண ஏலாது. உங்க பசங்களுக்கு இங்க ஒரு பிரச்சனை. உடனே கிளம்பி வாங்கன்னு சொல்லுங்க"

"அப்பிடியே சொல்லிடுறன் தம்பி. அப்ப அந்த செத்துப்போன பொண்ணு அதுல யாருன்னும் மெசேஜ்ல போட்டுடுங்க தம்பி"

"இல்ல அண்ண, அதுல சின்ன குழப்பம் இருக்கு. நீங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியே இன்போர்ம் பண்ணிடுங்க"

"ஓகே தம்பி, இன்னொரு விஷயம்....."

"என்ன சொல்லுங்க அண்ண"

"இல்ல எல்லாரும் பெரிய இடம்னு சொல்றீங்க, பணம் அதிகமானாலே இப்பிடித்தான் தம்பி. ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு கெஸ்ட் ஹவுஸ வாங்குவானுகள். அங்க வந்து பிரெண்ட்ஸ் கூட குடியும் கும்மாளமுமா இருப்பானுகள். ஏதாவது சின்ன பிரச்சனைல போதைல ஒருத்தன் மற்றவன போட்டு தள்ளிடுவான். இதுதான் நடந்திருக்கும். ஹாஸ்பிடல்ல இருக்கிற பொண்ணுகிட்டயோ அவ அப்பாகிட்டயோ ஒரு டீல் பேசினா எல்லாத்தயும் சுமூகமா முடிச்சுடலாம். வேற அதிகாரிங்கன்னா அப்பிடித்தான் செய்திருப்பாங்க. உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராதுன்னு தெரியும் தம்பி. இருந்தாலும் ஏதோ மனசு கேட்கல, சொல்லிட்டன். நீங்க யோசிச்சு பாருங்க தம்பி."

"ம்ம்ம்.... நான் பார்த்துக்கிறேன் அண்ண" என்று பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்தான் கார்த்திக்.

இதுவரை காலமும் கார்த்திக்கிடம் யாரும் இவ்வாறு கதைத்ததில்லை. அதுவே அவனுக்கு பெருமிதமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று தனக்கு கீழே வேலை செய்பவர் தன்னையே லஞ்சம் வாங்குமாறு வெளிப்படையாக கூறியது பெரியதொரு அவமானமென கருதினான் கார்த்திக். இதுவே கிருஷ்ணமூர்த்தியாக இல்லாமல் வேறு யாராவது கூறியிருந்தால் கார்த்திக்கின் கோர முகத்தை இன்று பார்த்திருப்பார்கள்.

சிறிது நேரம் நிதானமாக அங்கேயிருந்த பெஞ்சில் அமர்ந்து யோசித்த கார்த்திக்கிற்கு தன்னுடைய நன்மைக்காகவே கிருஷ்ணமூர்த்தி அவ்வாறு கூறியுள்ளார் என்பதும் தனக்கும் இதைவிட்டால் தனது செல்ல மகளை காப்பாற்ற வேறு வழியுமில்லை என்பதுவுமே நிதர்சனம் என புரிந்தது.

தன் மகளை நினைத்தவுடன் ஏற்பட்ட இறுக்கமான மனநிலையை இலகுவாக்கிக்கொண்டு எதுவாயிருந்தாலும் நீலமலைக்காட்டினுள்ளே அதற்கு முந்தைய தினம் என்ன நடந்தது எனும் உண்மையை அறிந்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தனக்கு தானே சொல்லியபடி ராதிகாவின் வார்டுக்குள் நுழைந்தான் கார்த்திக்.

உள்ளே ராதிகாவும் எதையோ யோசித்துக்கொண்டு கார்த்திக் அவ்விடம் வந்தது கூட தெரியாதவள் போல கையில் விலங்குடன் அமர்ந்திருந்தாள்.

"மிஸ் ராதிகா உங்களுக்கு என்கிட்ட இருந்து ஏதாவது உதவி வேணும்னு நினைச்சீங்கன்னா என்கிட்ட நீலமலைக்காட்டுக்குள்ள என்ன நடந்ததுங்கிற உண்மைய சொல்லித்தான் ஆகணும், உங்களுக்கு வேற சாய்ஸ் இல்ல."

ராதிகாவும் ஆம் என்பது போல மெதுவாக தலையாட்டினாள். கார்த்திக்கும் ராதிகாவிடம் அவள் நம்புமாறு பேச்சுக்கொடுத்து உண்மையை அறிந்துவிட வேணும் என்று மனதிற்குள் திட்டம் போட்டிருந்தான்.

"மிஸ் ராதிகா உங்க பேரண்ட்ஸுக்கும் உங்க பிரெண்ட்ஸோட பேரண்ட்ஸுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல இன்போர்மேசன் போய்டும், விடியிறதுக்கு முன்னாடி எல்லாரும் இங்க வந்துடுவாங்க. எப்பிடியும் அவங்க கமிஷ்னர் கூடத்தான் வருவாங்க. ஒண்ணு நீங்க என்கிட்ட உண்மைய சொல்லுங்க, இல்ல கமிஷ்னர் அண்ட் மனீஷாட பேரண்ட்ஸ்கிட்ட. இது கர்நாடகா இல்ல தமிழ் நாடுன்னு மறந்துடாதீங்க." என்று ஏதோவெல்லாம் சொல்லி எப்பிடியாவது உண்மையை அறிந்து விடமுனைந்தான் கார்த்திக்.

கார்த்திக் இவ்வாறெல்லாம் உண்மையை அறிய முற்பட காரணமில்லாமலில்லை. தன்னிடம் எதுவும் கூறாமல் ராதிகா அவளது பெற்றோரிடம் உண்மையை கூறிவிட்டால் அவர்களின் அந்தஸ்த்துக்கும் வசதிக்கும் அவர்கள் இலகுவாக போலீசில் மேல் மட்டத்தில் கதைத்தோ பணத்தை வாரி இறைத்தோ இந்த நிகழ்வையே மறைத்துவிடுவார்கள். போதாததற்கு அவளுடைய நண்பர்களுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. எனவே தான் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி உண்மையை தெரிந்துகொள்வதுதான் என்று கார்த்திக்கிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இவ்வாறான மனசாட்சிக்கு புறம்பான செயலை எந்நாளும் அவன் செய்திராவிட்டாலும் இன்று அவன் அவ்வாறு செய்வதற்கு வெட்கப்படவில்லை, காரணம் இனியா……

"சார் நான் எனக்கு தெரிஞ்ச விஷயத்த உங்ககிட்ட சொல்றன். எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்புறன். உங்கள நம்பலாமா?"

"நிச்சயமா நம்பலாம். நம்பலானா உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னு இப்ப சொல்லுங்க"

"இல்ல சார், அத நான் நேரம் வரும் போது கேட்கிறன்."

"ம்..... சொல்லுங்க, அந்த நீலமலைக்காட்டில என்ன நடந்துச்சு......" ராதிகா தன்னை முழுவதுமாக நம்பி விட்டாள் என்று உணர்ந்த கார்த்திக் தனது ஆட்டத்தை தொடங்கி நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்தான்.

எதிரே கட்டிலில் அமர்ந்திருந்த ராதிகாவோ நீலமலைக்காட்டில் நடந்த பயங்கரத்தை சொல்வதற்கு ஆயத்தமானாள்.



- தொடரும்-​
 
Status
Not open for further replies.
Top