மான்விழியில் வீழ்ந்தேனடி!
மான்விழி - 01
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்ற திருவள்ளுவரின் வரிகள் அந்த பிரமாண்டமான வளாகத்தில் ஆங்காங்கே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் இருந்த அந்த மிகப் பெரிய பிரபலமான “நலமுடன்” மருத்துவமனை அன்று மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. காரணம் சித்தார்த் அபிமன்யு. புதிய முதலாளியின் வரவாலும், தொடர் கட்டளைகளாலாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை பரப்பரப்புடன் இயங்கி கொண்டிருந்தார்கள்.
அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் அதன் உரிமையாளருமான டாக்டர் மகேந்திரனின் தவப்புதல்வன் தான் சித்தார்த் அபிமன்யூ. அன்று தான் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் வெளிநாட்டிலிருந்து வந்து தன் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தான். திருமணமாகி கனடாவில் செட்டிலாகி விட்ட தன்னுடைய தமக்கை பவிஷ்காவுடன் தங்கி மருத்துவத்தில் முதுகலை முடித்து அங்கேயே மருத்துவராகி தன் மாமா செல்வாவின் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தவனை கட்டாயப்படுத்தி வரவழைத்திருந்தார் மகேந்திரன்.
சமீபமாக அவர்கள் மருத்துவமனை மிகவும் பிரபலமாகி விட, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வர ஆரம்பித்து விட்டனர். எனவே மருத்துவமனையை விரிவாக்கவும் நிர்வகிக்கவும் தன்னால் மட்டும் முடியாது என்பதால் தன் ஒரே மகனான சித்தார்த் அபிமன்யூவை தனக்கு உடல் நலமில்லை என்று காரணம் சொல்லி வரவழைத்தோடு, மருத்துவமனையின் மொத்த பொறுப்பையும் அவன் தலையில் கட்டிவிட்டார்.
அவனுக்கு என்னவோ அக்காவுடன் கனடாவில் செட்டிலாகி விட தான் ஆசை. அதற்கு காரணம் தமக்கையின் மேல் கொண்ட பாசம் எல்லாம் இல்லை. எலிசாவின் மீது கொண்ட தீரா காதல் தான் காரணம். அவன் படித்த யுனிவர்சிட்டியில் அவனுக்கு ஜூனியராக வந்து சேர்ந்தவளின் அழகையும் வாளிப்பான இளமையையும் கண்டு மையல் உற்றாலும் அவள் மீதான ஈர்ப்பை கடந்து விடத் தான் எண்ணினான். ஆனால் எலிசாவும் சித்தார்த் அபிமன்யூவின் ஆளுமையான தோற்றத்திலும் வசிகரமான பார்வையிலும் கவரப்பட்டிருந்தாள்.
அவளாகவே அவனிடம் வந்த பேசி நட்பை வளர்த்துக் கொண்டாள். நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் கனடாவில் சுற்றாத இடமில்லை. சித்தார்த் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டதற்கு சில வருடங்கள் லிவ் இங்கில் இருந்து பழகி பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டாள் எலிசா. எப்படியோ அவள் சொன்ன கால நேரமும் முடிந்து விட, அவளும் திருமணத்திற்கு ஒத்து கொண்டாள். அவள் சொன்ன ஒரே கண்டிஷன், அவனும் கனடாவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது தான்.
எலிசாவின் கண்டிஷனில் அதிர்ந்தாலும், அவனுக்குமே வெளிநாட்டு வாழ்க்கை முறை பிடித்து தான் போயிருந்தது. கூடவே பவிஷ்காவும் இங்கேயே இருப்பதால் அவனும் கனடாவில் செட்டிலாகி விட்டால் என்ன? என்றே தோன்றியது. அவன் தந்தை மகேந்திரனுடன் போனில் பேசும் போது தான் வெளிநாட்டிலேயே செட்டிலாக விரும்புவதாக கூறவும் அங்கே பலத்த மெளனம் நிலவியது. அடுத்த மாதமே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனை அவசரமாக வரவழைத்தவர், மருத்துவமனையின் மொத்த பொறுப்பையும் அவன் பெயருக்கு மாற்றியிருந்தார்.
“அப்பா, என்ன இது? என்னால எல்லாம் இங்கேயே தங்கி இந்த பொறுப்பை எல்லாம் பார்த்துக்க முடியாது” என்று எகிறினான் மகன்.
“சரிப்பா, ஓரே ஒரு முறை நம்ம மருத்துவமனைக்கு சென்று சுத்தி பார்த்திட்டு வந்து என் கிட்ட உன் முடிவை சொல்லு” என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டார் மகேந்திரன்.
மருத்துவமனையை சுற்றி பார்த்தால் மட்டும் என் முடிவு மாறிடுமா என்ன? என்று எள்ளலாக நினைத்துக் கொண்டு நலமுடன் மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு இடமாக நோட்டமிட்டான்.
அந்த மருத்துவமனையில் அளவுக்கு அதிகமான கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தாதியர்களும் செவிலியர்களும் தடுமாறிக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் இல்லை. அவசர சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளியின் உறவினரை அழைத்தான்.
“இங்கே தான் கூட்டமா இருக்கே, வேறே மருத்துவமனைக்கு போகலாம் இல்ல? ஏன் இவ்வளவு நேரம் காத்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
“சார் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு இந்த மருத்துவமனையை விட்டால் வேறே கதி இல்ல சார். ஏன்னா இங்கே தான் பீஸூம் கம்மி, சீக்கிரம் குணமாயிடும். அப்படியே பணம் கட்ட முடியலைனாலும் ஆஸ்பத்திரி முதலாளிகிட்ட வேண்டி கேட்டுகிட்டா அவரே இலவசமாக மருத்துவம் பார்க்க சொல்லிடுவாரு” என்றார் அந்த நபர்.
யோசனையுடன் மருத்துவமனையை கண்காணித்தபடி வலம் வந்தான். நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் பல்வேறு இடைநிலை கடைநிலை ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தந்தைக்கு பிறகு அவர் இல்லாமல் இந்த மருத்துவமனையை மூடினால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடும்.
மேலும் மருத்துவமனையில் பல்வேறு நவீன மாற்றங்களை செய்தால் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று யோசித்தபடி தந்தையின் சேர்மன் அறைக்குள் நுழைந்து ஒரு ஊழியரை அழைத்து அவனையும் அறியாமல் அனைவருக்கும் கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தான்.
அதன்படி ஒட்டு மொத்த மருத்துவமனை ஊழியர்களும் அங்கே கூடியிருக்க, அனைவருக்கும் புது புது ஆணைகளை பிறப்பித்தான். ஷிப்ட் முறையை அறிமுகம் செய்து மேலும் பல செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தேவையிருப்பதால் தெரிந்தவர்களை பரிந்துரைக்குமாறு சொல்லி, அவன் பார்த்து கவனித்த சிலரின் தவறுகளையும் சுட்டிக் காட்டினான்.
ஆளுமையும் அதிகாரமுமான அவன் பேச்சில் மொத்த ஊழியர்களும் ஸ்தம்பித்து போய் புது முதலாளி ஆணையிட்ட வேலையை ஒரு வித பரபரப்புடன் செய்து கொண்டிருந்தனர். அன்று இரவு பத்து மணிக்கு மேலாகியும் அவன் மருத்துவமனையிலேயே இருக்கவும் மகேந்திரன் அவனுக்கு அழைத்தார்.
“என்ன சித்து? மருத்துவமனையை சுத்தி பார்த்திட்டு வந்து உன்னோட பதிலை சொல்றதா சொல்லிட்டு போனே? இன்னும் வீட்டுக்கு வரல? போனும் இல்ல, எங்கே இருக்கே?” என்றார் மகேந்திரன் ஒன்றுமே தெரியாதது போல
“அப்பா, உங்களுக்கு நான் எங்கே இருக்கேன்னு தெரியாது இல்ல? இதை என்னை நம்ப சொல்றீங்களா? நீங்க எவ்வளவு பெரிய ராஜதந்திரினு எனக்கு தெரியும்” என்றான் சித்தார்த் அபிமன்யூ அழுத்தமான குரலில்.
மகனின் பேச்சில் புன்முறுவல் பூத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சித்து சொல்றே? எனக்கு புரியலை?” என்றார் மகேந்திரன்.
“எங்கே அடிச்சா உங்க மகன் விழுவான்னு தெரிஞ்சு தானே என்னை இங்கே அனுப்பி வச்சீங்க. நான் உங்க மேல வச்ச பாசத்தை பயன்படுத்தி இந்தியா வர வச்சிட்டீங்க. மருத்துவமனையை காட்டி என்னை எமோஷனலாக்கி உங்க வலையில் சிக்க வச்சிட்டீங்க. வாட் எவர் யு வாண்ட், யு டன் ஆல்ரெடி (whatever you want, you done already)” என்றான் அழுத்தமான குரலில்.
“யு மீன், நீ ஆஸ்பிட்டல் நிர்வாகத்தை பார்த்துக்க போறீயா?” என்றார் மகேந்திரன் ஆவலுடன்.
“எஸ், பட் ஐ ஹேட் யு டாடி (yes, but I hate you daddy)” என்று போனை வைத்து விட்டான் சித்தார்த் அபிமன்யு.
தந்தையை வெறுப்பதாக பேச்சுக்கு சொன்னாலும் தந்தையின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான் சித்தார்த் அபிமன்யூ. அவன் அன்னை இறந்த பிறகு மருத்துவமனையையும் பார்த்துக் கொண்டு தன் மகளையும் மகனையும் தனி மனிதனாக வளர்த்து ஆளாக்கியவர் மகேந்திரன். கருணை உள்ளத்தோடு அவர் செய்யும் உதவிகளை நேரில் பார்த்து வளர்ந்தவன், இப்போது தந்தை உருவாக்கி வைத்திருந்த மருத்துவ சாம்ராஜ்யத்தை சட்டென உதறிவிட முடியாது அல்லவா? எனவே தான் அவர் தந்திரம் புரிந்தாலும் அவர் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுத்து விட்டான் தனயன்.
அதன் பிறகு மருத்துவமனை மொத்தமும் சித்தார்த் அபிமன்யூவின் கட்டுபாட்டில் வந்தது. புதிய செவிலியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு, மேல்நாட்டு பாணியில் அவர்களுக்கு பயிற்சியும் வழங்கி திறம்பட நிர்வாகம் செய்ய தொடங்கிவிட்டான்.
மகன் பொறுப்பேற்றுக் கொண்டதால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டார் மகேந்திரன். அவன் வீட்டுக்கு வந்த போது, “சித்து, நான் நம்ம சொந்த ஊரான தருமபுரிக்கு போய்ட்டு வரட்டுமா? ரொம்ப நாளாச்சு பழைய உறவுகளையும் நண்பர்களையும் பார்த்து” என்றார் ஆசையாக.
அவரை ஒரு முறை பார்த்து விட்டு, “சரி போயிட்டு வாங்க” என்று சொல்லி கிளம்பி சென்று விட்டான் சித்தார்த்.
சித்தார்த் கிளம்பி சென்று கிட்ட தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகி போனதால் எலிசா தொடர்ந்து அவனுக்கு போன் செய்து கொண்டிருந்தாள். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்து வந்தவன் போனை எடுத்து பார்த்தான். எலிசாவிடம் இருந்து பதினைந்துக்கும் மேல் தவறவிட்ட அழைப்புகள்.
அவசரமாக எலிசாவிற்கு போன் செய்தான். “என்ன சித்து, இந்தியா போனதிலிருந்து ஒரு போன் கூட இல்ல? மறந்துட்டியா?” என்று கொஞ்சும் ஆங்கிலத்தில் கேட்டாள் எலிசா.
“நோ வே, நான் எப்படி உன்னை மறக்க முடியும் ஹனி? வந்த இடத்தில் அப்பா என்னை சிக்கலில் மாட்டி விட்டுட்டார்” என்று நடந்தது அனைத்தையும் கூறினான் சித்தார்த் அபிமன்யூ.
“அப்போ நீ எனக்கு பிராமிஸ் பண்ண மாதிரி கல்யாணம் செய்து கனடாவில் செட்டில் ஆக போவதில்லையா?” என்று அழ தொடங்கினாள் எலிசா.
“ஹே, பேபி. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ… இந்த ஹாஸ்பிட்டல் அப்பாவோட 25 வருட உழைப்பு , எத்தனை பேர் வேலை செய்யறாங்க தெரியுமா?” என்று மருத்துவமனையின் மொத்த விவரங்களையும் அடுக்கி கொண்டே சென்றான்.
“ஹோ, அத்தனை பெரிசா உங்க ஆஸ்பிட்டல்? சூப்பர் சித்து. அப்போ கல்யாணம் பண்ணி என்னையும் அங்கே கூட்டிட்டு போயிடு. இரண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்” என்றாள் எலிசா உற்சாகமாக.
“நிஜமாவா சொல்றே ஹனி? உன்னை எப்படி கன்வின்ஸ் பண்றதுனு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தேன். இப்போ பார்த்து அப்பா ஊருக்கு போயிருக்காரு. அவர் வந்ததும் நம்ம விஷயம் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறேன். லவ் யூ ஹனி, ஐ மிஸ் யூ” என்றான்.
அந்த முனையில் அவள் தன் முத்தங்களை வாரி வழங்கி கொண்டு, “லவ் யூ டூ சித்து, உன்னோட போனுக்காக காத்திட்டு இருக்கேன்” என்று சொல்லி போனை வைத்தாள் எலிசா.
தன்னுடைய பெரிய பிரச்சனை தானாகவே சரியானதில் பெருமூச்செறிந்தபடி வாகாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த் அபிமன்யூ. விசிலடித்தபடி, எலிசாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.
அந்த நேரம் அவன் தந்தை மகேந்திரனிடமிருந்து போன் வந்தது. “சொல்லுங்க அப்பா, நானே உங்களுக்கு போன் செய்யலாமா? வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான் உற்சாகமாக.
“என்ன சித்து, ரொம்ப சந்தோஷமா இருக்கே போலிருக்கு. என்ன விஷயம் சொல்லு” என்றார் மகேந்திரனும் மகனின் உற்சாகத்தில் கலந்து கொள்ளும் ஆவலில்.
“நான் அதை நேரில் சொல்றேன்பா, நீங்க எதுக்கு போன் செய்தீங்க? அதை முதலில் சொல்லுங்க” என்றான் சித்தார்த்.
“அதுவந்துப்பா என்னோட பால்ய நண்பன் சிவக்குமாரோட பொண்ணு நேத்ராவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்திருக்காங்க. இருந்து கல்யாணத்தை பார்த்துட்டு தான் போகணும்னு சொல்லிட்டான்” என்றார்
“அதுக்கென்ன, தாராளமா இருந்து பார்த்திட்டு வாங்க” என்றான் சித்தார்த்.
“கல்யாண பொண்ணுக்கு எதாவது பரிசு கொடுக்கலாம்னு பார்த்தேன், ஆனா சிவா பரிசு எல்லாம் வேண்டாம் அதுக்கு பதிலா என் பொண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தா போதும்னு சொல்றான். மாப்பிள்ளை சென்னையில தான் டாக்சி ஓட்டிட்டு இருக்காராம். பொண்ணுக்கும் சென்னையில வேலை வாங்கி கொடுத்திட்ட செளகரியமா இருக்கும்னு சொல்றான்” என்றார் மகேந்திரன்.
“சரி தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வேலை வாங்கி கொடுங்க” என்றான் சித்தார்த் விட்டேற்றியாக.
“அதில்ல சித்து, அந்த பொண்ணு டிப்ளமா நர்சிங் தான் படிச்சிருக்கா, அதான் நம்ம மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்துக்கலாம்னு…” என்று சொல்லி முடிப்பதற்குள் இடையிட்டான் சித்தார்த் அபிமன்யூ.
“அப்பா நம்ம மருத்துமனையில் எல்லாரும் பிஎஸ்சி படிச்ச நர்ஸ் தான் இருக்கணும்னு ஆல்ரெடி ஸ்டிரிட்டா சொல்லிட்டேன். இன்டர்வியூ இல்லாமல் சிபாரிசில் எல்லாம் வேலை தர முடியாது. வேணும்னா அந்த பொண்ணை முறையா வந்து இன்டர்வியூ அட்டென்ட் பண்ண சொல்லுங்க, கொஞ்சமாவது ஒத்து வருவாளானு பார்த்திட்டு என் முடிவை சொல்றேன்” என்றான் சித்தார்த் அபிமன்யூ.
மகன் இந்த பதிலைதான் கூறுவான் என்று முன்பே தெரிந்ததால், சிவக்குமார் தனக்கு எத்தனை முக்கியமான நண்பன் என்று விவரித்து கொண்டே சென்றார் மகேந்திரன்.
“போதும் போதும் உங்க புராணம். இப்போ என்ன அந்த சிவக்குமார் தான் நீங்க மருத்துவம் படிக்க பணஉதவி செஞ்சார், அதுவும் அவங்க வீட்டை அடமானம் வைத்து, அதனால நீங்க அவருக்கு கடமை பட்டிருக்கீங்க, அதானே? அதைத்தான் சின்ன வயசில இருந்து காது செவிடாகும் வரைக்கும் சொல்லி இருக்கீங்களே. மறுபடியும் சொல்ல தேவை இல்லை” என்று சிடுசிடுத்தான்.
மறுமுனையில் தந்தையிடம் மெளனமே பதிலாக இருக்கவும், தலையை உதறிக் கொண்டு, “ஓகே ஓகே, இப்போ என்ன? அந்த பெண்ணுக்கு நம்ம மருத்துவமனையில் நர்சிங் போஸ்ட் கன்பார்ம் பண்ண சொல்லிடறேன், போதுமா?” என்றான் அலுத்துக் கொண்டு.
“போதாது” என்றார் மகேந்திரன் இப்போது வாயை திறந்து.
“போதாதா? வேறென்ன செய்யணும்?” என்றான் பற்களை கடித்துக் கொண்டு
“அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை எடுத்துக்கிட்டு நீயும் தருமபுரிக்கு வா. கல்யாணத்துல சிவா கேட்ட மாதிரி வேலைக்கான ஆர்டரை அவன் பொண்ணுகிட்ட கொடுத்தா சந்தோஷப்படுவான்” என்றார் மகேந்திரன்.
“வாட்?” என்று இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் சித்தார்த் அபிமன்யூ.
“நான் ஒரு வெளிநாட்டில் எம்டி படித்த டாக்டர், அது மட்டுமில்லாமல் தற்போது நலமுடன் மருத்துவமனையின் சேர்மன். ஒரு சாதாரண டிப்ளமா நர்சிங் படித்த பெண்ணை என் மருத்துவமனையில் வேலையில் சேர்த்துக் கொள்ள கூட யோசிக்கிறவன், நான் அவளுக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை எடுத்துக் கொண்டு… நானே நேரில் வரணுமா? முடியாது. வேணும்னா மின்னஞ்சல் அனுப்புறேன், அதை பிரிண்ட் எடுத்து உங்க நண்பர் கிட்ட கொடுங்க” என்றான் ஆத்திரமாக.
“இது நல்லா இருக்காது. அது மட்டுமில்லாமல் சிவா உன்னை பார்க்கணும்னு சொன்னான். கண்டிப்பாக நீதான் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை எடுத்திட்டு வரணும்” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
சற்று முன்பு இருந்த மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போயிருந்தது. அந்த முகம் தெரியாத டிப்ளமா நர்சிங் படித்த பெண்ணின் மேல் ஆத்திரமாக வந்தது சித்தார்த் அபிமன்யுவுக்கு.
(தொடரும்)
Attachments
Last edited: