ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 1

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"

அதிகாலை சுப்ரபாதம் இனிதாக அந்நாளை துவங்கி இருக்க, அவ்வீட்டு மக்களும் ஒவ்வொருவராக எழுந்து கொள்ளத் துவங்கினர். அன்றைய ஓட்டத்தை காலை ஐந்து மணிக்கே துவங்கியிருந்தது பரஞ்சோதி பாண்டியன் இல்லம்.

வாசுகி, அந்த வீட்டின் தலைவி, பின்வாசல் தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆறு மாடுகளுக்கும் கழனித் தண்ணீரைக் கலக்கி வைத்துவிட்டு, கோழிகள் கூட்டையும் திறந்து விட்டு அதற்கும் தீனிகள் போட்டு விட்டு, ஓராள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் இரண்டு டாபர்மேன்களையும் அதன் சங்கிலியை விடுத்து சுதந்திரமாக்கிவிட்டு, வீட்டை ஓர வழியில் சுற்றிக் கொண்டு முன் வாசல் வந்து விளக்குமாறை கையிலெடுத்து ரெண்டுத் தட்டுத் தட்ட,

"வந்துட்டேன் அத்த கொண்டாங்க இங்குட்டு. தினமு நா வாரதுக்குள்ள இத கையில தூக்கிறணுமோ உங்களுக்கு? எப்படியும் வந்து தூப்பேன்னு தெரியும்ல?" என்றாள் தற்போதைய அந்த வீட்டின் மூத்த மருமகள் ஷீலா.

"குமரிய தெனமு பாட்டா பாடியா நா எழுப்ப முடியும்? டான்னு நேரத்துக்கு முழிப்பு வர வேணாம்? இம்புட்டுக்கும் நா சுப்ரபாதத்த போட்டு வேற எழுப்பி விடுதேனாக்கும் உங்கள. இல்லனா ஒம்போது மணி ஆனாலும் அக்காளும் தங்கச்சியும் எந்திச்சு வர‌மாட்டீகட்டி" என்றவர் வரட்டியாக காய வைத்திருந்த சாணியை ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி எடுத்துக்கொண்டு கரைக்க,

"எங்கள எதாச்சும் சொல்லலனா உங்களுக்கு பொழுது விடியாதே?" என்றவளும் சேலையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு வாசலை பெருக்கத் துவங்கினாள்.

"ஆமான்டி தினமு உங்கள ஏசிட்டுதேன் அந்த நாள தொடங்கணும்னு மருதமலைக்கு வேண்டிருக்கேன்" என்றவர் அடுத்து அவள் வாசலில் தண்ணீரைத் தெளிக்க ஏதுவாக வைத்து விட்டு வீட்டினுள் செல்லப் போக,

"எக்கா இந்தாக்கா போன மாச பால் காசு" எனக் கூப்பிட்டுக் கொண்டே ஷீலாவையும், முன் கேட்டையும் தாண்டி உள்ளே வந்தார் நாச்சிமுத்து.

"ஏலே என்ன அதிசயமாட்ருக்கு காலங்காத்தாலயே ரூவாய கொண்டு நீட்டுத? கேட்டாலும் குடுக்க மாட்டியே நீயி?" என சந்தேகமாகவே வாங்கியவர் அதை எண்ணிக்கொண்டே கேட்க.

"மூத்தவன விட்டு மிரட்டவிட்டுட்டு இப்படி வேற கேளுக்கா நீ. நா தரேம்னு சொல்லியும் அவன்ட்ட சொல்லி குடுத்துட்டல்ல நீயி?"

"போலே நா எதுக்குலே உன்ன சொல்லி குடுக்க போறேன்? ஆவாதுன்ற காரியம் மட்டுந்தேன் அவங்காதுக்கு கொண்டு போவேன், புள்ள குட்டிக்காரன் நீ உன்னபோய் சொல்லிக் குடுப்பேனா? உனக்காக இல்லனாலும் உன் பொண்டாட்டிக்காக பாக்கணும்ல? நா சொல்லி குடுக்கலலே"

"அப்ப யாருக்கா சொல்லிக் குடுத்துருப்பா?"

"அதையும் அவனயே விசாரிக்க சொல்லுதேன். நீ கொஞ்சம் பொறு மொத வீட்டுக்கு பால கறந்துக்குறேன், அப்றம் நீ போ. என் இளைய மருமகளுக்கு இன்னும் விடியலயாட்டமிருக்கு" என சொம்பை எடுக்க அடுப்பாங்கரைச் செல்ல,

அவர் பின்னோடே அப்போது தான் எழுந்து வேகமாக தலையை கொண்டையிட்டவாறு நுழைந்த விசாலாட்சி, "நா வாரேன் நீங்க எடுத்துட்டீக அத்த" என அவர் கையிலிருந்த சொம்பை வாங்கிக் கொண்டு பின் வாசல் நடந்தாள்.

"வாழ வந்து மூணு வருஷம் ஓடி போச்சு இன்னும் பொறுப்பு வர க்காணும் ரெண்டு பேருக்கும், பாதிநாளு நா தொடங்கி வச்சுதேன் விடியணும் போல" எனத் திட்டிக் கொண்டு காலை உணவிற்கு அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினார்.

"ஏத்தா உனக்கு தெரியுமா மகிழுட்ட யாரு சொல்லிகுடுத்ததுன்னு?" எனக் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஷீலாவிடம் நாச்சிமுத்து கேட்க.

"அவர் வீட்டுப் பக்கம் வந்தே மூணு நாள் ஆகுது. இதுல பால் காசு வரலன்னு ஸ்டேஷன் தேடி போய் சொல்றளவுக்கு இங்க யாருக்கு பெரியப்பு நேரம்? இல்ல இத மெனக்கெட்டு அவரத் தேடிப் போய் சொன்னா சும்மா விட்ருவாரா அவரும்?"

"அதுவுஞ்சரித்தேன் எப்ப என்ன ரோசனைல இருக்கியான்னு யார் கண்டா?"

"நீங்க எங்கன பெரியப்பு பாத்தீக அவுகள?"

"மதுரை பஸ்‌ ஸ்டாண்டுலதேன். வண்டிய ஓரங்கட்டிட்டு வார‌ போறவுக வண்டிய நிறுத்தி பேப்பர்கள கேட்டிட்டுருந்தியான், நம்ம மருமகனாச்சேன்னு போய் ரெண்டு வார்த்தை பேசுனதுக்கு பிடிபிடின்னு பிடிச்சுட்டான்னா பாத்துக்கோத்தா, மூணு மாசமா பால் காசு தரல பின்ன என்ன மாமன் மருமகனுட்டான்த்தா என்னைய பாத்து?"

"அப்ப நீங்களாத்தேன் போய் மாட்டிருக்கீக இங்க யாரும் சொல்லல, உங்க வாய புடுங்கியே உங்கள‌ மிரட்டி விட்ருக்காக"

"அப்டித்தேன் இருக்குமோத்தா?"

"ஆமாங்குறேன்"

"ஏலேய் வந்த வேலைய விட்டுபோட்டு நின்னு என்ன புரணிங்கேன். வீட்டுவீட்டுக்கு காலைல நீ கொண்டாற பாலுக்கு காத்துகிடக்குறவுகளுக்கு சாயங்காலந்தேன் கொண்டு சேப்பியாட்டம் இருக்கு. போ போயி பால கற" என வாசுகி வந்தவர் முத்துவை விரட்டிவிட்டு,

"உனக்கென்னட்டி ஆடி அசஞ்சு எழுந்து வரவே சூரியன் மேலறிட்டான், இன்னும் வாசல்லயே குடி‌ இருந்தனா எப்ப சமையல் முடிய புள்ளையையும் புருஷனுக்கும் எப்ப சாப்பாடு குடுப்ப? நீ என்னன்னு கிளம்பி வேலைக்கு போவ?" என்கவும்,

"வந்துட்டு தான் இருக்கேன்த்த, புலம்பாதீக" என விளக்குமாறு, வாளி, கோலமாவு டப்பா மூன்றையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.

அந்நேரம் தான் கையில் அன்றைய தினத்தந்தியுடன் வேகமாக வந்தார் பரஞ்சோதி பாண்டியன் அந்த வீட்டின் தலைவர். உள்ளே செல்லத் திரும்பிய வாசுகி அப்படியே நின்று, "என்னங்க காட்டுக்கு போன வேகத்துல திரும்ப‌ வந்துட்டீக? அதுக்குள்ள மல்லி எல்லாம் பறிச்சு சந்தைக்கு அனுப்பியாச்சா?" என்றார் வியந்து. இல்லாமல் வீடு திரும்பும் ஆள் அல்லவே அவர் கணவர். காலை ஐந்து மணிக்கு செல்பவர் ஏழு முதல் எட்டு மணிக்குள் தான் பறித்த மல்லியை சந்தைக்கு ஏற்றிவிட்டு வீடு திரும்புவார். மீண்டும் பத்து மணிக்கு மேல் வாழை, தென்னந்தோப்பு சென்று அங்கு நடக்கும் வேலைகளைப் பார்ப்பது அவரின் வழக்கம்.

"யாருடி இவ, செத்த தள்ளு, விவசாய கடன் தள்ளுபடி பத்தி பேப்பர்ல போட்ருக்கான், இந்த வரதன எங்க இன்னும் எந்திக்கலையோ? பொழுது விடிஞ்சு எம்புட்டு நேரமாவுது இன்னும் என்னட்டி தூக்கமா அவனுக்கு? எதாது விவசாய செய்தி வந்தா இவனா வாயத் துறந்து சொல்லுதானா? பேங்குல ஈ வோட்டிட்டு வருவானாட்டமிருக்கு!" என பொரிந்து தள்ள.

"காபிய போட்டு எழுப்பி விடத்தான் அவன் பொண்டாட்டி போயிருக்கா. உங்களுக்கு அவசரமனா நீங்களே சத்தங்குடுங்களேன்" என்றுவிட்டு அடுப்பங்கரை சென்றுவிட்டார் வாசுகி.

"ஏலே வரதா? எந்துச்சுட்டியா இல்லையா?" என அறை வாயிலில் நின்று குரல் கொடுத்தார் பரஞ்சோதி.

"மாமா இருங்க நா எழுப்பியாறேன். உங்க சத்தத்துல பாப்பா முழிச்சுட்டான்னா ஒரு வேலையும் செய்ய‌ விட மாட்டா" என வேகமாக வந்தாள் ஷீலா.

"மூத்தவனுக்கு பொண்ணு பாருங்கன்னு சொன்னா அத விட்டுட்டு மத்த எல்லா வேலையும் செய்வாரு இந்த மனுஷன். திருமங்கலத்துல ஒரு புள்ள இருக்குன்னு அந்த கனகம் சொன்னான்னு அட்ரஸ கொண்டு ராவுக்கே குடுத்துட்டேன். பாரு காட்டுக்கு போய்ட்டு வந்து அங்க கிளம்புவாருன்னு பாத்தா பேங்க்கு போணும்னு வந்து நிக்காரு அந்த பேங்குக்கு போனா நாளும் சோலியும் கெட்டு நாள் பூரா அங்க தான் உக்கார வச்சுருவானுங்கன்னு தெரிய வேணாம்?" என்றார் பொடுபொடுவென.

சிரிப்பை அடக்கிக் கொண்டுத் தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி. அவர் திட்டும் வேலையில் தான் அவர் இரண்டாவது மகன் அதிக சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். அவர் நினைத்து புலம்பும் மூத்த மகனுக்கு இளையவர்கள் இருவரின் திருமணத்திற்கும் முன்பிருந்தே ஏழெட்டு வருடங்களாக பொண்ணு பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒன்னும் முடிவுக்கு தான் வந்தபாடாக காணும். ஊரில் இல்லாத ஜோசியர்கள் ஆரம்பித்து கோவில் பரிகாரங்கள் வரை அனைத்தும் செய்தாயிற்று வரன் மட்டும் கூடி வர மாட்டேன் என்கிறது.

"ஜாதக பொருத்தம் பாத்துட்டீகளாத்தே?" என விசாலாட்சிக் கேட்க,

"நக்கலாடி உனக்கு? இந்த வீட்டுக்குள்ள தான இருக்க நீயும்? உனக்கு தெரியாமத்தேன் நா மட்டுமா போய் பாக்கேனாக்கும்?" அவர் கணவர் மேலுள்ள கடுப்பைக் காட்ட, வெளியே கணவரும் வரதபாண்டியனும் பேசுவது கேட்டது. மாமியாரும் ரெண்டு மருமகள்களும் அவ்வளவு நெருக்கம். எதையும் சொல்லாமல் செய்யும் வழக்கம் மூவருக்குமில்லை. செல்லுமிடத்தில் வேலை இடத்தில் நடந்ததைக் கூட இப்படி சேர்ந்து சமைக்கும் பொழுதுகளில் பகிர்ந்து கொள்வது அவர்களின் இயல்பாகியிருந்தது.

"அப்ப நேரா பொண்ணு தான் பாக்க போறோமா?" என்றாள் விசாலாட்சி.

"யாருக்கு பொண்ணு பாக்க போறோம்?" எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்து வெங்காயத்தை அரிய ஆரம்பித்தாள் ஷீலா.

அவளை முறைத்துப் பார்த்த வாசுகி, "உங்களுக்குலாம் என் புள்ள வாழ்க்கை அவ்வளவு இளக்காரமா தெரியுதுல்லட்டி. அவனும் புள்ளையும் குட்டியுமா இதே வீட்ல வாழத்தாம்டி போறான், அந்நேரம் வயிறு எரியாம இருங்கடி போதும்" என்றவருக்கு கண்ணே கலங்கி விட்டது.

"என்னத்தே இப்படி பேச்சிட்டீக? அத்தான் நல்லா இருக்கக் கூடாதுன்னு நாங்க நினப்போமா?" என்றாள் ஷீலா பதறிக்கொண்டு.

"நானும் எப்பையும் போல தான் த்தே கிண்டல் பண்ணேன் நீங்க இன்னைக்கு சட்டுன்னு கோவ‌பட்டுட்டீக" என்ற விசாலாட்சி முகமும் அரண்டு போயிருந்தது.

"என் பையன் வாழ்க்கை நீங்கலாம் கிண்டல் பண்ற அளவுல தானே இருக்கு" என்றார் வாசுகி அதற்கும்.

இரு பெண்களுக்கும் அவர்கள் மாமியாரை நன்கு தெரியும், மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் கள்ளமில்லாதவர் என்று. அதட்டுவதென்றாலும் சரி புகழ்வதென்றாலும் சரி முகத்திற்கு நேராக பேசத்தான் தெரியும் அவருக்கு. அதனாலேயே அவரோடு எளிதாக ஒன்றி விட்டிருந்தனர் மருமகள்கள் இருவரும். அவர் ஏசினாலும் பேசினாலும் அந்த நிமிடத்திற்கு மட்டும் தான், அடுத்து அவரே வந்து பேசிக் கொள்வார்.

இதற்கு முன்னரும் இதைப் போல் மூத்த மகனின் திருமணத்தைப் பற்றி பேசிப் புலம்புவார் தான், இவர்கள் எதும் கிண்டலாக சொன்னாலும், "போங்கட்டி என் மூத்த மருமக வரட்டும் அப்றம் இருக்குட்டி உங்க ரெண்டு பேருக்கும். அவள எப்டி கொண்டாறேன்னு மட்டும் பாருங்க" என பதில் பேசி சென்றுவிடுவார், இன்று அவரின் எதிர்பார்ப்பு நடக்காமலே போய்விடுமோ என்ற பயத்தில் தான் இந்த அழுகையும் கோபமும்.

"சாரித்த. அத்தானுக்கு இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணத்த முடிக்கிறோம். முப்பத்து மூணு ஒற்றபடை தான கண்டிப்பா அமஞ்சுரும்" என்றாள் ஷீலா.

"இனி ஜாதகம்லாம் பாக்றதா இல்ல, அவனையும் கேக்றதா இல்ல, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு தான் அவனுக்கு சொல்லணும். தட்டி தட்டி போவுது இனி வெளிலயே சொல்லாமதேன் செய்யணும்" என அவரும் சொல்ல.

"கண்டிப்பா த்தே. நானும் என் பேங்க்ல கூட வேலைபாக்றவங்க சைடெல்லாம் சொல்லி வச்சுட்டேன். இந்த வருஷம் எதாது அமையும் பாருங்களேன்" என அழுத்திச் சொன்னாள் ஷீலா.

"நானும் ஹாஸ்பிடல்ல எங்கூட வேலை பாக்குறவங்கட்டலாம் சொல்லி வச்சுட்டேன்த்தே" என்றாள் விசாலாட்சியும். இரு பெண்களின் வீட்டு வலசலில் கூட அத்தனை ஜாதகம் பொருத்தம் பார்த்தாயிற்று. பத்து பொருத்தம் பொருந்தி வந்தாலும் கூட அவன் உத்தியோத்தை கேட்டதும் வேண்டாம் என்று விடுவர். மீதி ஒன்றிரண்டு சரி என வருவதை மகன் உள்ளே புகுந்து கெடுத்து விடுவான். இப்படி தான் போய்க்கொண்டிருக்கிறது வரும் வரனெல்லாம்.

"சரி‌சரி இப்ப வேலையப் பாருங்க. உங்க மாமாவும் இனி சாப்ட்டு தான் கிளம்புவாக போல, நானாது காட்டுக்கு போய்‌ பாக்கணும் இல்லனா ஏச்சு புடுவாளுக" என்ற வாசுகி தோசை சுட துவங்கினார். இட்லி, தோசை இருவகை சட்னி, உளுந்த வடை என காலை உணவும், சாதம் வத்தல் குழம்பு, பீன்ஸ் கேரட் பொரியல் மதியத்திற்கும் தயாராகியது. பாத்திரம் விளக்கி எடுக்க மட்டுமே, சாணம் அள்ள வரும் செல்வி பார்த்து செல்வாள். மற்ற வேலைகளை இந்த மூன்று பெண்களும் பார்த்து விடுவர்.

காலை வேலை பரபரப்பாக முடியவும், "விசாலா போய் உன் புருஷனயும் எழுப்பு, அவனா ஒருநாளும் எந்திக்க மாட்டியான், தொழில் பண்ணுதேன்னு சொல்லிட்டே திரியுறானே தவிர வீட்டுக்கு ஒரு வருமானத்த காணும்" என்க, விசாலாட்சி அவள் கணவன் அரசுவை எழுப்பச் சென்றாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2

இது தான் பரஞ்சோதி பாண்டியனின்‌ குடும்பம். அவரின் இல்லத்தரசி வாசுகி. மூத்த மகனுக்கு திருமணம் கைகூடி வராமல் போக, இளைய பிள்ளைகளுக்கு வரன் தானே தேடி வர, அவர்களின் வயதும் ஏறுவதால், முடித்து வைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தது.

மூத்தவனுக்கு பின் இரண்டு வருட இடைவெளியில் பிறந்தவர்கள் தான் இரட்டையர்கள் வரதபாண்டியனும், அரசபாண்டியனும். வரதன் அரசு வங்கியில் மேனேஜராக இருக்கிறான். அரசு மெடிக்கல் ரெப்பாக இருக்கிறான்.

இரட்டையர்கள் என்பதால் திருமணத்தையும் ஒன்று போல் முடித்து விட்டார்கள். வரதனுக்கு வரன் கூடி வர, அதேவேளை அரசு நர்ஸ் உத்யோகம் பார்த்த விசாலாட்சியை காதலித்ததும் இரு திருமணமும் ஒன்றாக நடக்க மற்றொரு காரணம். ஷீலாவும் ப்ரைவேட் பேங்கில் தான் கணக்கு பிரிவில் வேலையில் இருக்கிறாள்.

தம்பிகளின் திருமணம் முடிந்த பின்னர் தான் இன்னுமே வீட்டிற்கு கூட வராமல் ஒதுங்கிக் கொண்டான் மூத்தவன். இப்போதும் அவன் பதவிக்கென கொடுத்த குவாட்ரஸ் கிரௌண்டில் தான் காலை பயிற்சியாக ஓடிக்கொண்டிருக்கிறான்.

அவன் மகிழ்நன் பாண்டியன், காவல்துறையில் மதுரையின் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கிறான். மதுரையின் மொத்த கன்ட்ரோலும் இப்போது அவன் கையில் தான். வேலை வேலை என அதிலேயே இருப்பதால் கடந்த மூன்று வருடத்தில் மதுரைக்கு அவனும் அவனுக்கு மதுரையும் என முழுமையாக நெருங்கி இருந்தனர்.

ஓட்டத்தை முடித்து அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தவன் குளித்துவிட்டு சாப்பிட மேகியை சுடு நீரில் போட எடுத்த சமயம் அழைப்பு மணி அடித்தது.

எடுத்த மேகி பாக்கெட்டை மீண்டும் மளிகைக்கென இருக்கும் பாக்ஸில் இட்டு மூடியவன், "திறந்து தான் இருக்கு சொக்கு உள்ள வாங்க" என குரல் கொடுத்துவிட்டு வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான். அவனுக்கு அது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் வந்த எதார்த்தம் அது.

"குட்மார்னிங் சார்" என்றபடி சாப்பாட்டைக் கொண்டு அவன் முன் வைத்தான் சொக்கலிங்கம்.

"சொன்னாலும் கேக்க மாட்றீங்க?"

"உப்புமாவ நிறைய கிண்டிட்டு திண்ணுன்னு சாவடிக்குறா சார் என் பொண்டாட்டி அதான் உங்களுக்கும் அதுல பங்காக்கிட்டேன்" என எடுத்து வைக்க, சின்ன முறைப்போடே சாப்பிடத் துவங்கினான் மகிழ். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லி எடுத்து வருவான். ஐந்து வருடமாக இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் தான் வேலையில் இருக்கிறார்கள், தூங்கும் நேரம் தவிர்த்து மற்றைய பொழுதுகள் இருவருக்கும் ஒன்றாக தான் கழியும். சொக்கலிங்கம் அவனின் கீழ் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்ப, சொக்கு தன் வீட்டிற்கு ஓடிச்சென்று காலிடப்பாவை கொடுத்துவிட்டு மனைவியிடம் அவசரம் முத்தம் பதித்து விடைபெற்று வந்தான்.

அங்கு பரத் மட்டுமே நிற்க, "சார எங்க?" என்றான் இவன்.

"அந்த பார்க்குல" என ரோட்டைக் கடந்து எதிரிலிருந்த பார்க்கைக் காட்ட, அங்கு விரைந்தான் சொக்கு.

இவன் சென்றபோது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு நின்ற மாணவியை அவன் கைத்தடம் பதிய அறைந்து கொண்டிருந்தான் மகிழ்.

"சார்" என இவன் சென்று பிடிக்கும் முன் நடந்திருந்தது, "ஸ்கூல் பொண்ணு சார்" என்றும் சொல்ல.

"ஸ்கூல் பொண்ணுக்கு காலங்காத்தால புதருக்குள்ள என்ன வேலை சொக்கு?"

"சார்" என்றவன் திரும்பி அந்த பெண்ணையும் அருகில் நடுங்கி கொண்டு நின்றவனையும் பார்த்தான். அருகில் நின்றவன் ஏற்கனவே நான்கு வாங்கிவிட்டான் போலும் உதடு கிழிந்து கன்னம் வீங்கவே துவங்கியிருந்தது.

"உன் அப்பா நம்பர் குடு" எனக் கேட்க படபடவென ஒப்பித்திருந்தாள் அந்த பெண். அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் அப்பா வந்துவிட்டார். இவனை அறியாதோர் இல்லையே மதுரையில். நடுங்கிவிட்டது அவருக்கும்.

"பொண்ணு டென்த் படிக்கிறானா கூடுதல் கவனம் வைக்கணும் ஒழுங்கா படிக்றாளான்னு, ஸ்பெஷல் க்ளாஸ்னு சொன்னதும் அனுப்பி வச்சா இதோ இந்த புதருக்குள்ள தான் ஸ்பெஷல் கிளாஸ் படிச்சுட்டுருக்கா உங்க பொண்ணு" என்றதும் பிள்ளையை திரும்பி அப்படி முறைத்தார் அவர். அவரின் நம்பிக்கையை அல்லவா உடைத்திருக்கிறாள், கூடுதலாக அவமானமும்.

"கூட்டிட்டுப் போங்க" என்றவன், "இங்க பாரு. லவ் பண்றவன் பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு பேசுவான், ஏமாத்த நினைக்றவன் தான் இப்டி புதருக்குள்ள‌க் கூட்டிட்டு போவான். இன்னுமு அறிவில்லாம சூசைட் அதிதுன்னு ட்ரை பண்ணா நட்டம் உனக்கு தான். வருஷ திதிய குடுத்துட்டு அடுத்த வேலையைப் பாக்க போயிடுவாங்க உன் பேரண்ட்ஸ். இப்டி ஒன்னுத்துக்கும் ஆகாம உயிரவிட யோசிக்குற நீ வீட்டுக்கும் நாட்டுக்கும் பாரம் தான்னு நானும் கேஸ இழுத்து மூடிருவேன், நீ சூசைட் பண்றது கூட வேஸ்டா தான் போகும். படிச்சமா வாழ்க்கைல செட்டில் ஆனமான்னு இருக்கணும் புரியுதா?" என மிரட்டவும் பயத்தில் நடுங்கிக் கொண்டே வேகமாக தலை அசைத்தாள் அவள்.

அவர்கள் சென்றதும், "நீ உண்மையா லவ் பண்ணி கூட இங்க உக்காந்து பேசிட்டு இருந்துருக்கலாம். ஆனா இன்னைக்கு உங்கூட வந்து உன் முன்னேற்றத்த கெடுத்துட்டு நாளைக்கு நீ கீழ இருப்ப இல்லாம நல்லா இருந்தாலும் உன்ன கலட்டிவிட்டுட்டு நல்லா செட்டிலான ஒரு வழுக்கைக்கு வாழ்க்கை குடுத்துட்டு போயிருவாங்க புரியுதா. ஒழுங்கா உன் வாழ்க்கைய எப்டி நல்லா வாழ்றதுன்னு மட்டும் பாரு. பொண்ணுங்க பின்ன சுத்தி நாசமா போகாத போ. இனி இந்தப் பக்கம் உன்ன நா பாக்கக் கூடாது" என்றதும் விட்டால் போதுமென ஓடிவிட்டான் அவன்.

வாயைப் பிளந்து பார்த்து நின்ற சொக்கலிங்கத்தை, "போலாமா சொக்கு?" எனக் கேட்டுவிட்டு காரை நோக்கி நடக்க,

"இப்படி லவ்வர்ஸா பிரிச்சுவிட்டா இவருக்கு எப்டி கல்யாணம் நடக்கும்? அதான் இன்னுமு இப்டியே சுத்துறாரு" என புலம்பிக் கொண்டே பின் தொடர்ந்தான் சொக்கு. மகிழுக்கான காரிலேயே இருவரும் ஏறிக்கொண்டனர்.

"கோர்ட்டுக்கு போங்க பரத்" என்றான் ஓட்டுநரிடம்.

"இன்னைக்கு ஜட்ஜ்மெண்ட் சார். நீங்க வந்தா இத வச்சு கேஸ வேறபக்கம் திருப்ப பாப்பாங்க" என்றான் சொக்கலிங்கம்.

"நா நேரடியா இன்வால்வ் ஆகிருக்கேன்னு தெரியணும் சொக்கு. இல்லனா அந்த பிள்ளையோட பேரண்ட்ஸ்கு தேவையில்லாத தொல்லை குடுத்துட்டே இருப்பானுங்க" என்றதும், சரிதான் என அமைதியாகிவிட்டான் சொக்கு.

"லாயர் ஜீவானந்தம் தானே?"

"இல்ல சார் அவர் ஜுனியர் தான் ஆரம்பத்துல இருந்து பாத்துக்குறாங்க. பேரு மரகதவல்லி"

"கேஸ் முடிஞ்சுருமா இல்லையா?" என்றான் சட்டென்று மூண்டு விட்ட கோவத்தில்.

"சார் அவங்க பேச்சுல தான் மூணே வாய்தால கேஸ் ஜட்ஜுமெண்டுக்கு வந்துட்டு" என்றான் சொக்குவும் நிதானமாக.

பள்ளிக்குச் சென்ற பெண்ணைக் கற்பழித்து கொன்ற வழக்கிற்கு தான் அன்று தீர்ப்பு. நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது. இவனது தலையீட்டால் தான் அன்று கேஸ் ஃபைலாகியதும். இதற்குள் அத்தனை கெஞ்சல், பணம், நகை பைசல், அவன் குடும்பத்தை வைத்து மிரட்டல் என அதிகம் கடந்துவிட்டான்.

எதற்கும் அசராமல் தானே இறங்கி அதில் சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்தான். பெரிய நகைக் கடையின் மகனும், அவன் நண்பனும் தான் சிக்கி இருந்தனர். இன்று தான் அவர்களுக்கு தீர்ப்பு.

கோர்ட் வாசல் வந்திறங்கவுமே சுற்றி வளைத்தனர் ப்ரஸ் மக்கள். இப்படி ஒரு குற்றத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பென்பது அதிசயமான விஷயம் அல்லவா? அதனால் அவரவர் சேனலின் டிஆர்பியை ஏற்றிக் கொள்ள அங்கேயே பலியாகக் கிடந்தனர்.

"சார் ஜட்ஜ்மெண்ட் என்ன வரும்னு நினைக்றீங்க?" என ஆரம்பித்தார் ஒரு நிருபர்.

"அத தெரிஞ்சுக்க தானே நானும்‌ வந்துருக்கேன்"

"மேல் முறையீடு பண்ண போறதா பாதிக்கபட்ட தரப்புல சொல்றாங்களே?"

"இன்னைக்கு இங்க ஜட்ஜ்மெண்ட் அவ்ளோதான். மேல்முறையீடு செஞ்சு அவங்கள நிரபராதி நிரூப்பிக்க முடிஞ்சா செய்யட்டுமே" என்றான் பிடி கொடுக்காமல். அவனிடமிருந்து ஒரு வார்த்தையை அவர்களுக்கு சாதகமாக அவர்களால் பிடுங்கிவிடவே முடியாது. இவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என அனைவரும் தெறித்து ஓட, இவன் நின்று நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் எதிர்பாராத விதத்தில் பதிலைக் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவர்களாக கேள்வி இன்றி விலகிச் செல்ல வேண்டிய நிலை வரும்வரை விடவும்மாட்டான்.

"உங்களுக்கும் நிறைய மிரட்டல் வந்ததா சொல்றாங்களே சார்?"

"போலீஸ்காரன் அதுக்கெல்லாம் பயந்தா வேலைக்காகுமா சொல்லுங்க?"

"சார் ரெண்டு நாள் முன்ன ஹைவேல ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு ஜி.ஹெச்ல இருக்கில்லையா? அது யாரோடது? எப்டி என்ன நடந்ததுன்னு எதும் தகவல் தெரிஞ்சதா சார்?"

"என்னைய விட அதிக நேரம் அங்கேயே இருக்குறது நீங்க தான். உங்களுக்கே தெரியலனா எனக்கும் இன்னும் தெரியவரலன்னு தான் அர்த்தம். அடாப்ஸி போயிட்ருக்கு. டாக்டர் இன்னும் ரிப்போர்ட் தரல"

"நீங்க இவ்வளவு ஸ்டிரிக்டா இருந்தும் தொடர்ந்து தப்பு நடந்துட்டே இருக்குறத பத்தி என்ன நினைக்றீங்க?"

"இன்னும் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கணும் போலன்னு தான் நினைக்கிறேன். பாக்கலாம் இனியும் இதுமாதிரி தப்புகள் நடக்காம இருக்க என்ன செய்றதுன்னு டிஸ்கஸ் பண்ணிடலாம்" அவன் அதை ஒத்துக்கொண்ட பாங்கு அவர்களை வாயடைக்க வைத்தது.

"ரெண்டு நாள் முன்ன நடந்திருந்தது ஒரு சைகோ கொலை மாறி இருக்குன்னு சொல்லிருந்தீங்க? அப்போ அது இனியும் தொடருமா?"

"நோ ஐடியா. அது சைகோ கொலைன்னு யூகமா தான் சொல்லப்பட்டிருந்தது. கன்பார்ம்மா என்னன்னு டாக்டர் ரிப்போர்ட் தான் சொல்லணும், இல்ல மறுபடியும் அதே போல ஒரு கொலை நடக்கணும்"

"சார் நம்ம கேஸ் ஓபன் பண்ணிட்டாங்க" என சொக்கலிங்கம் வந்து சொல்லவும்.

"பை கையிஸ்" என கையசைத்துக் கிளம்பி விட்டான்.

ஜீவானந்தம் தான் அன்று வாதாடினார், எல்லாம் முடிவாகிய நிலையில் சாட்சிகளின் உறுதி மட்டுமே அன்று இருந்தது. இவனும் தானாவே முன் சென்று சாட்சியாக சில விஷயங்களை சொல்லிவிட, குற்றவாளிகள் இருவருக்கும் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையுடன் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

கைசட்டையை மேலேற்றிக் கொண்டு அவன் வெளியே வர, ஜீவானந்தமும் அவனைப் பார்த்து சிரித்தபடி வந்தார்.

"நீங்களே வருவீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல மகிழ்" என்றார் அவனுக்கு கையை நீட்டிக் குலுக்கி.

"ஜட்ஜ்மெண்ட் தெரிஞ்சுக்க தான் வந்தேன். பட் நீங்க நிறைய ஸ்டடி பண்ணிருக்கீங்கன்னு உங்க ஆஸ்பெக்ட்ஸ் சொன்னதால நானும் அத சாட்சியா வந்து கன்பார்ம் பண்ணேன்"

"எஸ் ஃபுல் வொர்க்கும் என் ஜுனியரோடது தான்"

"குட். தேங்க்யூ. வாய்தா வாய்தான்னு இழுக்காம சீக்கிரம் முடிச்சதுக்கும் விலை போகாததுக்கும்னு அவங்கட்ட சொல்லிடுங்க"

"மகிழ் அவ என்னமாதிரி. நீ என்ன நம்புற மாதிரி அவளையும் நம்பலாம்"

"ஜுனியர விட்டு குடுப்பீங்களா நீங்க? ஏன் இன்னைக்கு அவங்க ஆஜர் ஆகல?" என்றான் சந்தேகமாக.

"ஜட்ஜ்மெண்ட் வர அவ வருவா, அவ மட்டுமில்ல என் ஜுனியர் யார் வந்தாலும் ஃபைனல் ஜட்ஜ்மெண்ட்கு எப்பவும் நாந்தான் வருவேன் மகிழ், ப்ரஸ்லாம் அவளுக்கு இன்னும் பழகல சோ இன்னைக்கு கூட நாந்தான் பதில் சொல்லணும்" இருவரும் பேசிக்கொண்டே வண்டி நிறுத்தம் வந்திருந்தனர்.

அந்த நகைக் கடையை சார்ந்தவர்கள் இவர்கள் இருவரையும் தீயாக முறைத்து நின்றனர். அவர்கள் வீட்டு பெண்கள் சாபமிட்டனர். சம்பந்தபட்டப் பெண்ணை சார்ந்த குடும்பம் இவர்களிடம் ஓடி வந்து காலில் விழுந்து நன்றி உரைத்தது. பரத்தும், சொக்கலிங்கமும் தான் அனைவரையும் தடுத்து பிடித்தனர். ப்ரஸ் மக்கள் ஜீவானந்தத்தைப் பார்க்கத் திரண்டு அவர்களும் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

"கவனம் சார். வெளில போய் வரும் போதும் கவனமா இருங்க" என முறைத்து நின்றவர்களை ஒரு கண் காண்பித்து மகிழ் சொல்ல.

"பாதுகாப்பு குடுக்க மாட்டீங்களா மகிழ் நீங்க?"

"ம்ம் டபுளா குடுத்துடலாம்" எனத் தலையசைத்து தனது வண்டியில் ஏறிக்கொண்டான்‌ மகிழ்.

அப்போது ஸ்கூட்டியில் மரகதவல்லி உள்ளே வர, "அவதான் மரகதவல்லி என் ஜுனியர்" என ஜீவானந்தம் காட்ட, அந்த திசையில் திரும்பிப் பார்த்தான்.

பச்சை நிற புடவையில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தவளைப் பார்த்தவாறே பரத்திற்கு வண்டியை எடுக்க கையை அசைக்க, அவன் காரை கிளப்பி இருந்தான். அந்த பச்சை நிற புடவையில் இருந்து கண்ணை சிரமப்பட்டு அகற்றி ஜீவானந்ததிற்கு விடை கொடுத்தான் மகிழ்நன் பாண்டியன். நீதிமன்றத்தின் வாசலைத் தாண்டும் போது மீண்டும் திரும்பிப் பார்க்கத் தவறவில்லை அவன். வெகு வருடத்திற்கு பிறகு ஒரு பெண்ணை அவனாகவே திரும்பி பார்த்திருக்கிறான். அதை செய்ய வைத்த பெருமை அவளுக்கு மட்டுமே.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் 3

அந்தப் பச்சைப் புடவையிலிருந்து பார்வையை எடுக்க கஷ்டமாக தான் இருந்தது மகிழ்நன் பாண்டியனுக்கு. அவளைப் பார்த்த நொடியில் ஏனோ மறந்திருந்த அவனின் முன்னால் காதலி மந்தாகினியே ஒரு நொடி கண்முன் வந்து சென்றிருக்க, அதே நினைப்பில் இந்த மரகதவல்லியை தன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்தான்.

இதைப் பரத்தும், சொக்கலிங்கமும் கூட கவனித்து சிரித்துக் கொண்டனர். அவன் குற்றவாளி என சந்தேகப்படும் நபரை கூட இத்தன நிமிடங்கள் கூடுதலாக பார்த்ததில்லையே என நினைத்த பரத் அவனுக்காக மெதுவாகவே காரை நகர்த்தினான்.

"கமிஷனர் ஆபிஸ் போங்க பரத்" என்றான் மகிழ் சாலையில் கார் நகர துவங்கியதும்.

அந்நேரம் அரசு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வர, "ஸ்லோ பண்ணுங்க, ஜிஹச்ல இருந்து கால். அந்த ஹைவே கேஸ் ரிப்போர்ட் ரெடினா அங்க போயிட்டு கமிஷனர் பாக்க போவோம்" என்றவன் அழைப்பை ஏற்கவும், பரத் இடம் பார்த்து மார்க்கெட்டை ஒட்டி ஓரங்கட்டினான்.

இப்படிப்பட்ட நேரத்தில் சொக்கலிங்கம் இறங்கி அந்த இடத்தை ஒரு சுற்று சுற்றி வந்துவிடுவான், அதனால் அவன் இறங்கிக் கொள்ள, பரத்தும் காரை ஒட்டிய நடைபாதையில் நோ பார்க்கிங்கில் நின்ற வண்டிகளின் எண்களை குறித்து, டிபார்ட்மெண்ட்டிற்கு அனுப்பத் துவங்கினான்.

மகிழ் இருவரையும் ஒரு நொடி கவனித்தவன், "சொல்லுங்க டாக்டர்" என பேச ஆரம்பிக்க,

"சார் உங்க கெஸ் சரிதான் சைகோதனமான தாக்குதல் தான் நடந்திருக்கு. இறந்த பையனுக்கு பதினெட்டு பத்தொன்பது வயசிருக்கலாம். டார்ச்சர் பண்ணி கொன்றுக்காங்க"

"செக்ஸ்வல் அப்யூஸ்? இல்ல ஆர்கன்ஸ் திருட்டு இந்த மாதிரி எதும் மோட்டிவ்?"

"உடம்பு முழுக்க காயமிருக்கு. செக்ஸ்வல் டார்ச்சர்னு எதும் பண்ணமாதிரி இல்ல. நல்லா அடிச்சுருக்காங்க. கைரேகை எதுவும் கிடைக்க கூடாதுன்னு கேர்ஃபுல்லா செஞ்சுருக்காங்க. வேற எந்த ப்ளட்க்ரூப்பும் விக்டிம்ல ஆட் ஆகல. பட் பையன் உடம்புல ட்ரக் அடிக்ட் சிம்டம்ஸும் இருக்கு"

"ஓ! எத வச்சு கில்லர் சைகோவா இருக்கலாம்னு சொன்னீங்க அப்போ?"

"நார்மல் மனுஷங்க பண்ண டார்ச்சரா இல்ல இது, நிச்சயம் கில்லர் நார்மல் மன கண்டிஷன்ல இல்ல. விக்டிமோட உடம்பு முழுக்க அவ்ளோ நக கீறல், நகத்தால கீறியே தோல உரிச்சுருக்காங்க"

"ஓ.கே நீங்க ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க பாத்துக்கலாம்" என முடித்துக் கொண்டு, அவன் அந்த கேஸ் பத்திய யோசனையில் இருக்க, அலங்காநல்லூர் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் லைனில் வந்தார்.

"சொல்லுங்க நந்தன்" என்றான், இவர் ஏன் இந்நேரம் கூப்பிடுகிறார் என்ற யோசனையுடன்.

"சார் அந்த ஹைவே கேஸ் பத்தி எதாது டீடெயில் கிடைச்சா சொல்ல சொன்னீங்களே. இங்க ஒருத்தங்க அவங்க பையன காணும்னு கம்ப்ளைண்ட் குடுத்துட்டுப் போயிருக்காங்க"

"டீடெயில்ஸ் எனக்கு வாட்ஸப் பண்ணுங்க. எப்ப இருந்து காணும்னு கேட்டீங்களா?"

"இப்ப ரெண்டு மணிநேரமா தான் காணுமாம்"

"அப்ப இது அந்த ஹவேல கிடைச்ச டெட்பாடி சம்பந்தப்பட்டதா இருக்க வாய்ப்பில்லையே நந்தன்?"

"ஆனா சார். அங்க கிடைச்ச அந்த பையனோட டெட்பாடி பக்கத்துல கிடைச்ச அதே ஸ்கூல் யூனிபார்ம் தான் இவங்களும் காணாம போன அவங்க பையன் போட்ருந்ததா சொல்றாங்க"

"இறந்த பையன அவங்களுக்கு தெரியுமான்னு கேட்டீங்களா?"

"இல்லையே சார்?"

"ம்ச் என்ன நந்தன் நீங்க? அந்த பையன் இறந்து ரெண்டு நாள் ஆச்சு, ரெண்டு நாள் முன்ன எதும் கேஸ் ஃபைல் ஆகிருக்கான்னு இன்னொருக்கா செக் பண்ணிப்பாருங்க. அதே ஸ்கூல் சேந்த பையன் தான் இவனுங்குறதால இந்த பையனோட பேரண்ட்ஸ் அடிச்சு புடிச்சு வந்து கம்ப்ளைண்ட் குடுத்தாங்களான்னு விசாரிங்க. அப்றம் இப்ப காணாம போன பையன சீக்கிரம் கண்டுபுடிக்க‌ பாருங்க. உங்க ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர எனக்குப் பேச சொல்லுங்க" படபடவென்று கட்டளை இட்டுவிட்டு போனை வைத்தான். பின் சொக்கலிங்கத்திற்கு ஒரு கால் கொடுக்கவும் அவன் வந்து ஏறிக்கொள்ள அவனைப் பார்த்த பரத்தும் வந்து ஏறிக் கொண்டான்.

அடுத்ததாக அவனுக்கு அவன் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது, அழைப்பை ஏற்று "சொல்லும்மா" என்றவன் பரத்திடம், "கமிஷனர் ஆபிஸ் போங்க பரத்" என்றுவிட்டு அம்மாவிடம் பேச ஆரம்பித்தான்.

"எய்யா வேலையா இருக்கியா?" என்றவரின் குதூகலமான குரலிலேயே அடுத்து வரப்போவதை அறிந்துவிட்டான்‌.

அதனால் அவனே முந்திக்கொண்டு, "ஆமாம்மா. டிவி ந்யூஸ் பாக்ற தான? நா எவ்ளோ பிஸியா இருக்கேன்னு தெரியும்ல? சோ பொண்ணு பாக்கலாம் வர முடியாது, வேற எதாதுன்னா பேசு சீக்கிரம். எனக்கு நேரமில்ல" என்றுவிட,

"அதேன் தெரியுமே உனக்கு நேரமே இருக்காதுன்னு. நேரமிருந்திருந்தா இந்நேரம் ரெண்டு புள்ளையோட இருந்துருக்க மாட்டியா நீயி?"

"ம்மா நா அப்றம் பொறுமையா உன் கதைய கேக்கட்டா?"

"மூத்தவனே உடனே கோச்சுகிட்டு போன வச்சுபோடாத. நா சங்கதிய சொல்லி முடிச்சுடுதேன். நீ வரமாட்டன்னுதேன் நாங்களே போய் பொண்ணப் பாத்துட்டு வந்திரலாம்னு இருக்கோம். பொண்ணுக்கும் இதே மதுரதேன் ஊரு. வக்கீலா இருக்குதாம். அதேன் உங்க ரெண்டு பேருக்கும் வேலைலயே ரொம்ப பொருத்தம் கோர்ட் கேஸுன்னு அங்கனயே குடும்ப நடத்திக்கட்டும்னு முடிவு பண்ணிட்டோம். நாங்க ஒருக்கா நேர்ல போய் பாத்துட்டு வந்துட்டு உனக்கு பேசுதேன் சரியாப்பு. நேரா நேரத்துக்கு சாப்பிடு மகிழு. வீட்டுக்கு ஒரெட்டு வாயா" என்றார் முடிக்கும்போது பாசமாக‌.

"இன்னைக்கு நைட் வர பாக்றேன்மா" என்றவன், பொண்ணுப் பார்ப்பதைப் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை, போக வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார்கள் எனத் தெரியுமே அவனுக்கு அதனால் அதைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் தன்னிடம் மொத்தமாக வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான். வக்கீல் பொண்ணு என்றதும் சற்றுமுன் பார்த்தவள் கண்ணுக்கு முன் வந்து சென்றாள் தான். முயன்று அதைக் கடந்தான்.

"ராவுக்கு வா, அம்மா உனக்கு பிடிச்சுதா சமைச்சு வைக்கேன் வீட்டுக்கே வந்து சாப்பிடு" என்றார் வாசுகி.

"சரிம்மா, நீ இப்ப காட்டுலயா நிக்ற?" சுற்றியடிக்கும் காற்று சத்தத்தில் கேட்க,

"ஆமா அப்பா பேங்க் வரப் போயிருக்காக, அதேன் பிள்ளைக ரெண்டையும் கூட்டிட்டு நா காட்டுக்கு வந்தேன். ஆனா அவுக போனதும் நல்லதுக்குதேன் போல. அங்கதேன் உனக்கு பொண்டாட்டி அமையணும்னு இருந்துருக்கு‌ பாரேன்" அவர் மீண்டும் அதற்கே வந்து நிற்க.

"ஏன் பேங்க் வேலைய வரதன பாக்க சொல்ல வேண்டியது தான? அவேன் அங்க தான இருக்கான். இவுக எதுக்கு அலையிறாக?" இவன் திசைதிருப்பிக் கொண்டேயிருந்தான்.

"அவேன் அம்புட்டு பொறுப்பா இருந்தா உங்கப்பா ஏன்டா இங்குட்டும் அங்கிட்டும் அல்லாட போறாக? வீட்டுக்கு தேவையான விஷயத்த கூட கேள்விபட்டா வந்து சொல்லமாட்டுகியான். நம்ம வீடுதேன்ற நினைப்பு இருக்குமோ என்னவோ போ" என்றார் சடவாக.

அவருக்குத் தெரியும் மூத்தப் பிள்ளைக்கும் கடைசிப் பிள்ளைக்கும் இருக்கும் குடும்ப பாசம், நடுவில் பிறந்தவனுக்கு கொஞ்சம் கம்மி தான் என்று. எங்கும் எதிலும் காசு தான் முதன்மை என பேச கூடியவன் அவன் என்பதும். ஆனாலும் அதுவும் தன் பிள்ளையாகிற்றே எனப் பொறுத்துப் போய்விடுவார் வாசுகி. எப்போதாவது இப்படி ஆற்றாமையில் புலம்பி விடுவதும் நடக்கும்.

"நீங்களும் அவன கண்டிக்காதீங்க, என்னையும் பேச விட்றாதீங்க. அதிக சம்பளம் வாங்குற திமிர நீங்க தான் அவனுக்கு குடுக்கீங்க, அப்றம் புலம்பி என்னத்துக்கு?"

"என்ன சம்பாதிச்சு என்ன செய்ய? அம்புட்டையும் எங்கட்டயா குடுக்கியான் அவன் குடும்பத்துக்கு தானே சேக்கான் அப்றம் என்னத்த எங்கட்ட திமிரு காட்ட முடியும் அவனால? சும்மா பவுசு காட்டுவியான் காட்டிட்டு போறான் போட்டும் விடு"

"சரிம்மா பாத்துக்கோ. நா கமிஷனர பாக்க வந்துருக்கேன். வீட்டுக்கு வந்து பேசுறேன்" என வைக்க, கமிஷனர் அலுவலகம் வந்திருந்தது, அவன் கமிஷனரைப் பார்க்கச் செல்ல, மற்ற இருவரும் அங்கிருக்கும் மற்ற வேலைகளை முடிக்கச் சென்றனர்.

"பொண்ணு பாக்கப் போறோம்னு சொல்லிருக்கேன். எதாது ஆசையா பேசிருக்கியானான்னு பாரு‌? வயசு தாண்டி போச்சுன்னா இப்படித்தேன் மழுமட்டையா போவும் எல்லாம்" எனப் புலம்பிக் கொண்டே தோப்பைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த பேத்திகளிடம் கவனம் வைத்தார் வாசுகி. இப்போதே பலத் திட்டமிடல்களை சந்தோஷமாக வகுக்கத் துவங்கி இருந்தார்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4

மரகதவல்லி வண்டியை நிறுத்தி அலுவலகம் நுழைய போகையில் தான் ஜீவானந்தம் ப்ரஸ் முன் நிற்பதை பார்த்தாள், எங்கு அவளிடம் எதையும் கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் அந்த திசையே திரும்பாமல் விறுவிறுவென நடந்து அவர்களுக்கு என்று இருக்கும் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டாள். அது ஜீவானந்தத்தின் நீதிமன்ற அலுவலகம். இவளோடு சேர்த்து அவர் ஜுனியர் நான்கு பேரும் அங்கு தான் வேலையில் இருந்தனர்.

"ஹாய்" என இவள் உள்ளே நுழைந்ததும் சொல்ல,

"இவ்ளோ லேட்டா வர்ற?" என்றாள் வைஷ்ணவி.

"வேணும்னே கேஸ் முடிஞ்சுருக்கும்னு கணக்கு பண்ணி‌தான் வந்திருக்கா" என்றான் மதன்.

"ஆமா தெரிஞ்சு தான்டா லேட்டா வந்தேன். அப்படி இருந்தும் இந்த ப்ரஸ் இன்னும் போகல பாரு" என்றவள் அவளிடத்தில் அமர்ந்து தண்ணீரை எடுத்து பருக.

"அவ்வளவு தைரியமா பெரிய கேஸ் எடுத்து வாதாடிட்டு இந்த ப்ரஸ பாத்து பயப்டுற நீ? உங்கப்பாட்ட எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்ல?" என்றான் தர்ஷன்.

"ம்ம்கூம் அங்கெல்லாம் பேசி‌பேசி டயர்டாகி ஒன்னுதுக்கும் வேலைக்கு ஆகாமத்தான் இங்க இவங்கட்டருந்து எஸ்கேப் ஆகிட்ருக்கேன்" என்றவள், ஒரு ஃபைல் கட்டை எடுத்து குறிப்பெடுக்கத் துவங்கிவிட ஜீவானந்தம் உள்ளே வந்தார்.

"மேகி, கேஸ் சக்ஸஸ். சூப்பர்ப் வொர்க். அசிஸ்டென்ட் கமிஷனரே வந்து சாட்சி சொல்லவும் எந்த டிலேவும் இல்லாம தீர்ப்பாகிடுச்சு" என்கவும், பஞ்சதந்திரம் படம்‌ வந்ததிலிருந்து இவள் மரகதவல்லி என்பதை விட மேகி என அழைக்கப்பட்டதே அதிகம். அதுவே சுருக்கப் பெயராகவும் நிரந்தரமாகிவிட்டிருந்தது.

"ஆமா சார் நா என்டர் ஆகும் போது பேட்டி குடுத்துட்டுருந்தார், என்ன கெத்து இல்லையா‌ சார் அவர். பேச்சுல கூட யாராலையும் டேக் ஃபார் கிராண்டட்டா அவர எடுத்திட முடியாது" என மதன் சொல்லவும்.

"ம்ம் ரொம்ப ஆளுமையான ஆளுப்பா அந்த ஏசிபி. எவனனாலும் வந்து பாருன்னு நிக்கறாரு" என்றாள் வைஷ்ணவி.

எதற்கும் பதில் சொல்லாமல் இயல்பு போல் காட்டிக்கொண்டு நிற்க முயன்றாள் மரகதவல்லி.

"நா உன்ன இன்ட்ரோ பண்ண நினைச்சேன். பட் அவர் கிளம்பிட்டார்‌ சோ தூரத்துல இருந்தே காமிச்சேன் பாத்துட்டு, வாழ்த்துக்கள் சொல்ல சொல்லிட்டு போய்ட்டார்"

"என்ன காட்னீங்களா?" என இதற்கு மட்டுமே அவள் அதிர்ந்து கேட்க,

"ஆமா மேகி. நீதானே இந்த கேஸ் ஃபுல்லா வொர்க் பண்ண. லாஸ்ட் டைம்ல ஏன் ஆஜர் ஆகலன்னு சந்தேகமா கேட்டாரு. அதான் உன்ன பத்தி பெருமையா சொல்லிட்ருந்தேன் கரெக்ட்டா நீயும் அப்பதான் வந்த. இவதான்னு காமிச்சேன்"

'கொஞ்சம் லேட்டா வந்துருக்கலாம்ல குரங்கே' என மனதிற்குள் அவளை அவளே திட்டியவள், "அவர் என்னப் பாத்துட்டு எதும் சொல்லலியா சார்?" என படபடக்க.

"உன்ன பாத்துட்டு என்ன சொல்லணும்? உன்ன தான் அவருக்கு தெரியாதே?"

"கரெக்ட் சார். கேஸ் நோட்ஸ் எடுத்துட்ருந்த குழப்பத்துல கேட்டுட்டேன் வேற ஒன்னுமில்ல சார்" என்றுவிட்டாள்.‌ மற்றவர்களும் அவளை வித்தியாசமாக பார்ப்பதால் சட்டென்று உளறுவதை நிறுத்திக் கொண்டாள்.

"சரி, அந்த பாய்ஸன் கேஸ்கு இன்னைக்கு தான் வாய்தா. மதன் நீ ரெடி தானே?" என அவரும் கேஸ் பக்கம் கவனத்தைத் திருப்பிக் கொள்ள,

"ரெடி தான் சார். கண்டிப்பா இந்த டைம் ஜட்ஜ்மெண்ட் வாங்கிடலாம்" என மதன் சொல்ல,

"ஒன்னும் அவசரமில்ல இன்னும் ரெண்டு வாய்தா போனாலும் போட்டும் விடு" என்றுவிட்டு அவர்‌ உள்ளே செல்ல, தர்ஷனும் வைஷ்ணவியும் சில கேஸ் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு அவர் பின் சென்றுவிட்டனர்.

இவள் எழுத எடுத்தப் பக்கத்தை அப்படியே வைத்துவிட்டு அமர்ந்து விட்டாள். 'அவனுக்கு பயந்து தானே அப்பா பெயரைச் சொல்லி ப்ரஸில் கூட தலையை காட்டாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள். இன்று அவனே பார்த்தானாமே. நிஜமாகவே நம்மள அடையாளம் தெரியலையா. நேருக்கு நேர் இதுவர ஒருதட கூட பாத்ததில்லனாலும், என்ன கண்டிப்பா அவருக்கு தெரிஞ்சுருக்கணுமே?இல்ல மறந்துட்டாரா? எதுக்கு பாத்துட்டும் பேசாம போனார்? ஒருவேள திரும்ப வருவாரோ?' என்ற சிந்தனையோட்டத்திலேயே அன்றைய நாள் கழிந்து விட்டது அவளுக்கு. வீடு வரும்வரை கூட எங்கேனும் நின்று வழிமறித்து விடுவானோ என்ற பயமிருந்தது அவளுக்கு. முன்பு ஒருமையில் அழைத்ததும் இப்போது அவன் பதவிக்குரிய மரியாதையாகவும் மாற்றி மாற்றி பிதற்றிக் கொண்டிருந்தாள்.

ஆசுவாசமாக அவள் வீட்டிற்குள் நுழையும்போதே முத்துராமன், (அவளின் அப்பா) பிடித்தமர்த்திவிட்டார், பக்கத்தில் முகமெங்கும் சிரிப்புடன் அமர்ந்திருந்த தாயையும் பார்த்ததுமே புரிந்தது அவளின் திருமண விஷயம் என்று. வேறெதுவும் தற்போது அவர்களை இவ்வளவு மகிழ்விக்கப் போவதில்லை என அவளும் அறிவாளே!

ஆனாலும், "என்னப்பா?" என்றாள் ஒன்றும் தெரியாதவளாக.

"உனக்கு ஒரு வரன் வந்துருக்கு பாப்பா. பையன் போலீஸ். உன் உத்தியோகத்த புரிஞ்சுக்குற தைரியமான ஆள் தானே கேட்ட நா அத மாதிரியே பாத்திருக்கேன். இந்ததட உனக்கு ஏத்தப் பையன் தான், ஒன்னுல கூட மிஸ்ஸாகல" என்றார் அவள் அப்பா பூரிப்புடன்.

"மொத என் ஏஜ் சொல்லிட்டீங்களா? மாப்ள ஏஜ் என்ன?" கடைசி வந்த ரெண்டு சம்பந்தமும் இவள் வயதினாலேயே தட்டிச் சென்றிருந்தது‌.

"உன்னோடது இருபத்தெட்டுன்னும் சொல்லிட்டேன். பையனுக்கு முப்பத்தி மூணு அதனால ரொம்ப பொருத்தம்னு பையனோட அப்பாவும் சொல்லிட்டாரு"

"அவங்க ஏன் இவ்ளோ லேட்டா மேரேஜ் பண்றாங்களாம்?"

"போலீஸ் உத்தியோகம்னு பொண்ணு குடுக்க யோசிச்சுருக்காங்க. இங்க நீதான் தைரியமான புள்ளையாச்சே அதான் நா தைரியமா சரி சொல்லிட்டு வந்துட்டேன்"

'வேறென்ன சொல்லித் தப்பிக்கலாம்' என அவள் யோசித்திருக்க, "பையன் யாருன்னு சொன்னா நீ இன்னும் சந்தோஷ படுவ" என்றார் அம்மா.

"ஏன் என்னவா இருக்காங்க?"

"அசிஸ்டென்ட் கமிஷனரா அதும் மதுரைலயே. இனி விளக்கிச் சொல்ல வேணாமே உனக்கு? நீதான் அவர அடிக்கடி பாத்துருப்பியே" என்றதும் பட்டென்று எழுந்தே விட்டாள்.

'காலையில் பார்த்ததை வைத்து எனக்கின்னும் திருமணம் ஆகவில்லை என்றறிந்து இவ்வாறு செய்கிறானோ?' என்றெல்லாம் அவள் யோசனை சென்று கொண்டிருந்தது.

"என்னம்மா?" என அவள் அப்பா சிரிக்கவும் தான் இயல்புக்கு வந்தாள்.

"இந்தா வரேன்ப்பா" என அடுத்த நொடி அவளறைக்குள் ஓடியும் விட்டாள்.

'காலைல இருந்து அவர் நினைப்பாவே இருக்கனால அப்பா இப்படிலாம் சொல்றமாறி இருக்கு. மொத குளிச்சு நல்லா தெளிவாகணும்' என பேசிக்கொண்டே மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.

அதே மாலை வேலை அங்கு மகிழ் வீட்டில், ஒவ்வொருவராக வேலை முடித்து வரத் துவங்கியிருந்தனர்.

"என்னத்தே முகம் பளிச்சுன்னு இருக்கு. அத்தான் வந்துட்டாகளா? இல்ல வாரேன்ருக்காகளா?" என வீட்டினுள் நுழையும் போதே கேட்டாள் ஷீலா.

மாமியாரும் இரு பேத்திகளும் நொறுக்கு தீனி செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஷீலா சத்தத்தில், தீக்ஷிதா, "அம்மா" என ஓடிச்சென்று அவள் காலை கட்டிக் கொண்டாள். இரண்டு வயது தீக்ஷிதா வரதன் ஷீலா தம்பதியருக்கு. ஒன்றரை வயது தர்ஷிதா, அரசு விசாலாட்சி தம்பதியருக்கு. இரு பிள்ளைகளுமே வாசுகி வசம் தான் நாள் முழுவதும்.

"என் தங்கம் இன்னைக்கு என்ன செஞ்சாங்க? பெரியப்பா வந்துருக்காங்களா?" என அவளிடமும் கேட்க. அவளின் மழலைப் பேச்சோடே அவர்கள் அறைக்குள் சென்று அவளிடம் பேசிக் கொண்டே குளித்து உடை மாற்றி வெளியே வந்தாள். அந்நேரம் விசாலாட்சியும் வேலை முடிந்து வர, மாலை சிற்றுண்டியாக டீயுடன் ரவா லட்டும் ஆளுக்கு இரண்டாக உள்ளே இறங்கியது.

"மூத்தவன் நைட்டுக்கு வரானாம். அதனால உங்க மாமாவ கறி வாங்கியாற சொல்லிருக்கேன். இட்லியும் கறிக் குழம்பும் வச்சுக்குவோம். பிள்ளைகளுக்கு மட்டும் உரப்பில்லாம சட்னி வச்சுக்கலாம்" என்க.

"சரித்த" என கேட்டுக் கொண்டனர்.

"நாள கழிச்சு ஒரு முக்கியமான வேலை இருக்கு. ரெண்டு பேரும் லீவு போட்டுக்கோங்கட்டி"

"என்ன விஷயம்த்த?" என்றாள் விசாலாட்சி.

"பொண்ணு பாக்க போறோமா?" என்றாள் ஷீலா உடனேயே.

"அப்ப மாமா போய் விசாரிச்சு பாத்துட்டு வந்துட்டாங்களா?" என்றாள் விசாலாட்சி அடுத்து ஆர்வமாக.

"அதான அத்த சொல்லி ஒரு விஷயம் நடக்காம போயிடுமா? இதுக்கு தானே காலைல எங்கள கூட திட்டிபுட்டீக?" என ஷீலாவும் அவரை வம்பிழுக்க,

"ஆமா நா திட்டுனதுல அர அடி குறைஞ்சுட்டா இவ. நல்ல விஷயம் சொல்ல வந்தா பொறுமையா கேளுங்கடி மொத"

"சரி சொல்லுங்க. பொண்ணு யாரு என்ன பண்ணுதாகளாம்?"

"இவுக பேங்க் போனாகல்ல? அங்க நம்ம கடையம் பெரியப்பாவ பாத்துருக்காக. உங்களுக்கு அவரு மாமா முறை. அவர நியாபகம் இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்? உங்க கல்யாணத்துக்கு ரெண்டு ரெண்டு பவுனுல செயினெடுத்து போட்டாரு"

"செயினெடுத்து போடலனா மறந்து போவாமாக்கும் நாங்க? அவர் ஊர்லயுந்தேன் போன வருஷம் போய் ஒரு பொண்ண பாத்துட்டு, அவுக போலீஸ் உத்தியோகத்த பத்தி பேச, நீங்க பதிலு பேசன்னு சண்டைய போட்டுட்டு வந்தோமே? அந்த மாமா தான?" என்றாள் ஷீலா கிண்டலாக.

"எல்லாத்தையும் நீட்டி முழக்குவா இவா. அவருதேன் போதுமா. இங்க எதோ விஷயமா வந்தாராம். வீட்டுக்கு வர நேரமில்லன்னு உங்க மாமாக்கு போன போட்டுருக்காக, இவுகளும் பேங்க்ல நிக்கேன்னு சொல்ல, அங்க வந்து பாக்க வந்துருக்காக. அப்ப தற்செயலா அங்க வந்த அவரோட சிநேகிதரோட இவர் பேசப்போக, அவர் பொண்ணுக்கு மாப்ள அமைய தாமசமாகுதுன்னு சொல்லிருக்காரு, இந்த பெரியப்பாவும் நம்ம மகிழ பத்தி சொல்லன்னு, அங்கனயே பேச்சுவார்த்தைய வளர்த்துட்டாகளாம். எனக்கும் அங்க இருந்தே உங்க மாமா போனப் போட்டு தாக்கல் சொல்லவும் எனக்கு அம்புட்டு சந்தோஷம். இது கண்டிப்பா முடிஞ்சுரும்னு அப்பவே தோணிருச்சு. மூத்தவனுக்கும் போன போட்டு அப்பவே சொல்லிட்டேன். வீட்டுக்கு வந்ததும் நாள் பாத்துட்டு வெள்ளிக்கிழமை போலாம்னு பொண்ணு வீட்டுக்கும் தாக்கல் சொல்லியாச்சு" அவ்வளவு பூரிப்பாக அவர் சொல்லிக்கொண்டிருக்க, மருமகள்கள் இருவரும் அதைச் சிரிப்புடன் பார்த்திருந்தனர்.

"ரூபாய முடிஞ்சு வைங்கத்தே. மீனாட்சி முன்னுக்கதேன் கல்யாணம்னு வேண்டிக்கோங்க. இது கண்டிப்பா தகைஞ்சு வரணும்"

"ஆமா புடவை நகைன்னு எம்புட்டு வேலை கடக்கு. மறுபடியும் நம்ம வீட்ல ஒரு விஷேஷம்னா நல்லாருக்கும்ல?" என்றாள் விசாலாட்சி.

"மொத பொண்ண பாத்து பூ வச்சுட்டு வரணும்ட்டி. அது நல்லபடியா முடியணும். பொண்ணும் நம்ம மகிழுக்கு ஏத்தாப்புல இருந்துறனும். ஆத்தா மீனாட்சி நீதேன் துணையா இருந்து இத நடத்தி தரனும்" என வாசுகி வேண்டிக்கொள்ள, மருமகள்கள் இருவரும் வெள்ளியன்று என்ன புடவை உடுத்துவது என்ற பேச்சில் இறங்கினர்.

அங்கு மரகதவல்லி வீட்டில் இரவு உணவின் போது மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் முத்துராமன்.

"வெள்ளிக்கிழமை பொண்ணுப் பாக்க வாராக பாப்பா. சம்பிரதாயதுக்கு தான் எல்லாம். ஆனா பூ வச்சுட்டு போறமாதிரிதேன் வாராக‌. அதனால தயாராகிக்கோ பாப்பா. ரெண்டு மாசத்துல கல்யாணத்த முடிச்சுறணும்னு இருக்கேன்"

"ப்பா ப்ளீஸ் எனக்கு இது சரிபட்டு வரும்னு தோணல, இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நானே சொல்றேன் அப்றம் மேரேஜ் பத்தி பேசலாம்"

"ஏது? இப்படிதான்டி இருபத்திரண்டு வயசுல இருந்தே சொல்லிட்ருக்க நீ. மாஸ்டர் பண்ணணும், ஜீனியரா சேரணும், தனியா ஒரு கேஸ் எடுத்து நடத்தணும். என் வேலைய டிஸ்டர்ப் பண்ணாத மாப்ள வேணும். இப்படி நீ அடுகிட்டே போனதும் போதும் நாங்க கேட்டுட்டு இருந்தது போதும். ஒழுங்கா வெள்ளிக்கிழமை ரெடியாகிரு இல்ல பூ வைக்றத கேன்சல் பண்ணி அன்னைக்கே கல்யாணத்த வைக்க வேண்டி இருக்கும்" என மிரட்டலில் இறங்கிவிட்டார் அகிலா.

"ம்மா இதான் லாஸ்ட் இனி வாய்தா கேக்க மாட்டேன்"

"உனக்கு தந்த வாய்பெல்லாம் காலாவதி ஆகிப்போச்சு. நா இங்க இருக்க வேணாம்னா வெளில போயிடுறேன் உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன்னு அடுத்த வசனத்த படிச்சு வேலை பாக்குற திமிருல பேசிட்ருந்தனா, எங்களை யாரும் தேடாதீர்கள் நாங்கள் காணாமல் போக காரணமே எங்கள் பெண் தான்னு லெட்டர் எழுதிவச்சுட்டு நானும் உங்கப்பாவும் காணாம போயிருவோம் பாத்துக்கோ அப்றம் நிஜமாவே நீ வாய்தா தான் வாங்கிட்ருக்கணும்" என அவளுக்கும் சேர்த்து பேசிவிட்டார்.

அவளுக்கு திருமணம் முடிக்க கூடாதென்ற எண்ணமெல்லாம் இல்லை. அவன் ஒருவனைக் கண்டு தான் பயந்தாள். தன்னை திருமணம் செய்ய விடமாட்டான் என நம்பியே இத்தனை வருடங்களை கடத்தி கொண்டு வந்துவிட்டாள். அவனும் திருமணம் முடிக்காமல் இருக்கிறானே என்பதும் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது. அதற்காக இப்போது அவனைக் கட்டிக் கொள்ளும் தைரியமும் இல்லை. மற்ற எல்லாரையும் எளிதாக கடந்துவிடுபவளால், கண்ணுக்கு முன் கூட வராத அவன் மீது மட்டும் ஏனோ கொள்ளை பயம் உண்டு.

வெள்ளியன்று இவள், "காலைல ஒரு கேஸ் ஹியரிங் இருக்கும்மா அத மட்டும் முடிச்சுட்டு அவங்க நாலு மணிக்கு தானே வர்றாங்க அதுக்கு முன்ன வந்துடுறேன்" என ஓடியேவிட்டாள். எப்படி தப்பிப்பது என ஒரு வழியும் கிட்டவில்லை. எப்படியும் அவனிடம் சிக்கிக்கொள்வோம் என அவளுக்கு உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருக்க, அதை தள்ளிப்போடவாது செய்யலாம் என்றே இவ்வாறு செய்து கொண்டிருந்தாள். அங்கு அவன் யாருக்கு வந்த விருந்தோ என ஒரு கொலை குற்றவாளியை குனிய வைத்து கும்மிக் கொண்டிருக்கிறான் என இவளுக்கு யார் எடுத்து சொல்வது.

மாலை மணி ஐந்தாகியும் நீதிமன்றத்திலேயே அவள் அமர்ந்திருக்க, அவள் அப்பாவும் அம்மாவும் மாற்றி மாற்றி அழைக்கும் அழைப்பெல்லாம் தவறிய அழைப்புகளின் எண்ணிக்கையில் சேர்ந்து கொண்டிருந்தது.

அடுத்த பத்து நிமிடங்கள் கடந்திருக்க அவள் முன் நிழலாடியதால் நிமிர்ந்துப் பார்க்க, அங்கு அவளை ஆராய்ச்சி பார்வைப் பார்த்துக் கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தான் மகிழ்நன் பாண்டியன். அதிர்ந்து விரிந்த அவளின் கண்கள் அவனுக்கு பல கதைகள் சொன்னது, அதையும் அவள் முக உணர்வுகளையும் உள்வாங்கியது அவன் மொய்க்கும் பார்வை.
 
Last edited:
Status
Not open for further replies.
Top