மூச்சு - 3
இவள் கத்தியது தள்ளி இருந்த ஆயா காதில் விழுந்து திரும்பியதும் அவர் பார்த்தது நெற்றியில் இரத்தம் வந்து கொண்டிருந்த அவளை தான்….
"பாவி.. பாவி… கட்டைல போறவனே… என்ன காரியம்டா பண்ணிருக்க…" என அந்த தள்ளாத வயதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளிடம் ஓடினார்.
புடவையின் முந்தியை கிழித்து அவள் நெற்றியில் கட்டியவர் "நீ வா பொண்ணே நம்ம வீட்டுக்கு போவோம்.. கொஞ்சம் தப்பிருந்தா கண்ணுல பட்டுருக்கும், நல்ல வேலை அப்படி ஒன்னும் ஆகல.. வீட்டுக்கு வா மருந்து போடுறேன்.. இந்த கிறுக்கு பிடிச்சவன் இங்கயே கிடக்கட்டும்.. அப்ப தான் புத்தி வரும்.... அட… இந்த போக்கத்த பயலுக்கு அப்படியே புத்தி கித்தி வந்துட்டாலும்.." என வசைபாடி கொண்டே அவளை கை பிடித்து அழைத்து சென்றார்.
அவளுக்கும் ஆயா சொன்னவுடன் வேறேதும் தோன்றாமல் இத்தனை நேரம் அவனை "கண்ணின் இமை போல் காப்பேன்" என்ற உறுதி எல்லாம் காற்றோடு கலந்தது போல் அனைத்தையும் மறந்து, இங்கிருந்து போனால் போதுமென்பது போல் அவனை திரும்பியும் பாராமல் அவரோடு சென்றாள்..
அவள் நகர்ந்து அந்த தெருமுனையில் திரும்பும் முன் அவர்களை தலையை இட வளமாக ஆட்டியவாரு திரும்பி பார்த்தான். பிறகு எப்போதும் போல் தனது வெறிக்கும் வேலையை செவ்வனவே செய்தான்.
சிந்தாதிரிபேட்டை கூவாற்றோரம் சேரி குடிசை இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். வழி எல்லாம் சிறுவர் சிறுமியர் விளையாண்டு கொண்டும் ரோட்டிலேயே ஒரு சிலர் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டும் நடுவில் அங்கிருப்போருக்கு கட்டண பொது கழிப்பிடம் இருந்தும் சிலர் வெளியிலேயே அசிங்கம் செய்திருப்பதை பார்த்தவள் அந்த இடத்தின் ஒவ்வாமையில் வாந்தி வருவது போல் இருந்தது..
இது போன்று அவள் பார்த்து என்ன? கேள்வி கூட பட்டிறாதவளால் இந்த இடத்தில் அவளால் பொருந்த முடியும் என்று சிறிதளவு கூட தோன்றவில்லை..
எப்படியோ எல்லாவற்றையும் கடந்து அவள் குடிசைக்கு போன போது கரண்ட் இல்லை. ஆயாவே இருட்டில் தட்டு தடுமாறி குடிசையின் பூட்டை திறந்து உள்ளே சென்றார்.
கையை வைத்து காற்றை தடவிக் கொண்டே சென்றவர் செவுற்றில் மாட்டி வைத்திருந்த சிம்லி விளக்கை எடுத்து கீழே வைத்து உட்கார்ந்து கொண்டு அதன் கண்ணாடியை கழட்டி விளக்கேற்றி எழுந்து மீண்டும் செவுற்றிலே மாட்டி விட்டு திரும்பும் வரையிலும் அவள் உள்ளே வராமல் அங்கிருந்தே சுற்றி சுற்றி எல்லாத்தையும் பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் இன்னும் உள்ளே வராததை கவனித்து "ஏ.. பொண்ணே!! அங்கேயே என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க… உள்ள வா.." என்று அதட்டவும்.. வேறு வழியின்றி உள்ளே வந்தவள் "ஆ.. ஆயா…" என அழைக்க…
வேக வேகமாக அரிசியை கழுவி வைத்து விரகடுப்பை பற்ற வைக்க மூலையில் தார் பாய் போட்டு மூடி வைத்த கட்டையை எடுத்து வந்து அடுப்பை பற்ற வைத்து கொண்டிருந்தவரிடம் இவள் "ஆயா.." என அழைத்ததை கேட்டு தலையை திருப்பாமலே "இன்னாமா…" என கேட்க.
ஏற்கனவே கரண்ட் இல்லாததால் உள்ளே நுழைந்தவுடன் காற்றில்லாமல் அவள் உடம்பு முழுவதும் தொப்பலாக மாற அதில் அவர் செய்வதை எல்லாம் பார்த்து கொண்டிருந்தவள் அவர் அடுப்பை பற்ற வைத்தால் இன்னும் வேகுமே என நினைத்து "ஆயா கரண்ட் எப்ப வரும்…" என கேட்டவளிடம்
'என்ன? கரண்ட்டா??..' என மனதில் நினைத்தவர் அதை வெளியே அவளிடம் கேட்கவும் செய்ய..
துப்பட்டாவால் வேர்வையை துடைத்து கொண்டே "ஆமா ஆயா.. ரொம்ப புழுக்கமா இருக்கு. கரண்ட் வேற கட் ஆயிடுச்சுல.. அதான் எப்ப வரும்னு.." என இழுத்தவளிடம்
ஏற்கனவே பசியில் இருந்ததால் வேக வேகமாக சமையலை செய்து கொண்டிருப்பவரிடம் இவ்வாறு இவள் கேட்க "ஹ்ம்ம்… வரும்… ஆனா வராது…" என பட காமெடி போல அவரும் இழுத்து சொல்ல.. இவளோ அவர் சொல்வதை கேட்டு திகைத்து பார்த்தவள் "அப்படினா…??"
எரிச்சலாக "கரண்ட் கம்பெனிய எங்க அப்பா தான் வச்சு நடத்துறாரு, நான் இப்ப ஒரு வார்த்தை போய் சொன்னா போதும் உடனே போட்ருவாரு.." என இவள் வந்ததிலிருந்து கேள்வியாக கேட்பதை பார்த்து அவர் கடுப்போடு கூற..
'எதே கரெண்ட் கம்பெனிய அப்பா வச்சு நடத்துறாரா..' இந்த ஆயா தெரிஞ்சு பேசுதா இல்ல தெரியாம பேசுதா.. என அவர் முகத்தை இவள் நோட்டம் விட மெல்லிய சிம்லி வெளிச்சத்தில் முகத்தை சரியாக பார்க்க முடியாமல் அவரையே கூர்ந்து பார்க்க..
"என்ன? என் முகத்துல எப்ப கரண்ட் வரும்னு ஏதாவது எங்க அப்பா சொன்னாரா" என ஆயா படக்கென்று திரும்பி அவளை பார்த்து கேட்க, அவர் திடீரென திரும்பியதில் பயந்தவள்..
அவரின் கேலி செய்யும் பாவனையை கண்டு கொண்டாள். 'அப்ப ஆயா இவளோ நேரம் நம்மளை கலாய்ச்சுதா..' என தனக்குத்தானே கேட்டு கொண்டவளை பார்த்தவர்.
"நான் என்னா கொள்ளை கொள்ளையாவா சம்பாதிக்குற.. கரண்ட்லாம் இங்க இழுத்து விட.. நீ இங்க வரும்போது எங்கயாவது லைட் எரியுறதை பார்த்தியா? இல்லைல.. அப்புறம் இங்க மட்டும் எப்படி இருக்கும். ஏதோ எங்க வயித்த கழ்வறதுக்கு ஏத்த மாதிரி தான் சம்பாதிக்குறே.. உனக்கு கரண்ட் வேணும்னா உம்புருசன் அதான் அங்க கோயிலாண்ட உக்காந்துர்கானே கிறுக்கு பய.. அவனை சம்பாதிக்க சொல்லி தண்ணி, கரண்ட்னு எல்லாத்தையும் இங்க வர வைக்க சொல்லுடி ஆத்தா.. என்னால இது தான் முடியும்.." என அவளின் கேள்வியில் பசி இன்னும் காதை அடைக்க வெறுப்போடு கத்தினார்.
அவர் கூறியதில் "புருஷனா" என திகைப்போடு நிற்க.
திகைத்த. முகத்தை பார்த்து "இங்கலாம் நாங்க பொழுது போகுறதுக்கு முன்னாடியே சமைச்சு வச்சு, செய்ய வேண்டிய வேலைய அப்பயே முடிச்சுடுவோம். அதுனால எங்களுக்கு இங்க கரண்ட்டு இல்லாதது பெருசா தெரில.. இதுக்கு பொறவு நீயும் அப்படியே பழகிக்கோ.." என்றவர் இந்த பொங்கலுக்கு ரேஷனில் கொடுத்த புது இலவச சேலையை அவள் கையில் திணித்தார்..
"பின்னாடி போய் குளிச்சிட்டு, அந்த அறைல துணிய மாத்திக்க.." என வேக வேகமாக அவளிடம் சொல்லிவிட்டு சமையலை பார்க்க சென்றார்.
அவர் சொன்னவுடன் தான் தன்னுடல் கச கசப்பை உணர்ந்து அவர் கை காட்டிய வழியில் சென்றாள்.. அவள் செல்வதை பார்த்ததும் "அங்க இன்னொரு மண்ணெண்ணெய் விளக்கு இருக்கு பாரு.. அதை எடுத்து ஏத்திகிட்டு போ.." என்றார்..
அவரின் சொல்லுகிணங்க அந்த விளக்கை எடுத்து நின்று கொண்டு கண்ணாடியை கழட்ட பார்த்து அதை கழட்ட தெரியாமல் வேகமாக இழுக்கவும் அவள் இழுத்த வேகத்தில் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது..
சத்தம் கேட்டு "எம்மா.. பொண்ணே கழட்ட தெரியலனா என்னாண்ட குடுக்க வேண்டிதான.. இப்ப பாரு உடைஞ்சு போச்சு.." என்றவர் அவளின் பாவமான முகத்தை பார்த்து "சரி கொண்டா.." வாங்கி வேறு கண்ணாடி ஒன்றை மாட்டி விளக்கை ஏத்தி கையில் கொடுத்து பின்னாடி வந்து குளிக்குமிடம் காட்டிவிட்டு சென்றார்.
சிம்லி விளக்கால் போதிய வெளிச்சம் இருந்தாலும் அந்த இடத்தில் ஏதாவது பூச்சி அல்லது விஷப் பூச்சி வந்தால் கூட தெரியாது.. அந்த அளவு பாதுகாப்பு இல்லாத இடத்தை சுற்றி முற்றி ஆராய்ந்தவள், ஒரு வித பயத்துடன் குளித்து விட்டு புடவையை சுற்றி கொண்டு அறக்க பறக்க உள்ளே ஓடி வந்தாள்..
புடவையை கட்டி முடித்தவளுக்கு காற்று இல்லாததாலும், ஆயா சமைப்பதாலும் குளித்து விட்டு வந்தும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது..
வேர்வையை புடவையின் முனைப்பால் துடைத்து கொண்டே "ஆயா இப்ப யாருக்காக சமைக்கிறிங்க.. இல்ல.. ஒரே வெக்கையா இருக்கு." என அவரின் நிலை அறியாது கேட்க..
அவளை ஒரு தரம் பார்த்தவர் "ஏண்டி பொண்ணே!… நீ சாப்ட்டியே நாங்க சாப்பிட வேணாமா… செம்ம பசி… அங்கேயே எப்போதும் சாப்பிட்ருவேன். இன்னைக்கு முடியாததால இப்போ வந்து செய்றேன்.. " என்றார்..
அவர் கூறியதன் உண்மையை உணர்ந்தவள் சங்கடத்துடன் நெளிந்தாள். அவர் எப்பொழுதும் பசி தாங்காதவர். தினமும் கொண்டு வந்த சாப்பாட்டை அந்த பிச்சைக்கும் கொடுத்து தானும் நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்.. இன்று அதற்கு வாய்ப்பில்லாமல் போகவே.. அவசர அவசரமாக ஒரு குழம்பை வைத்து விட்டு சப்பாட்டை வடித்து டிபன் பாக்சில் அடைத்துக் கொண்டு…
அந்த கொலை பசியிலும் "பொண்ணே!.. நான் அவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன். நீ உள்ள பூட்டிகிட்டு பத்திரமா இரு. நான் இதோ குடுத்துட்டு ஓடியாந்துறேன்." என வேகமாக சொல்லிக்கொண்டே அவளுடைய பதிலை எதிர்பாராமல் வேக வேகமாக நடந்தார்.
அவர் தன்னிடம் பேசியதற்கும் அவரின் செயலுக்கும் முரண்பாட்டை உணர்ந்தவள் மேலும் யோசிக்கும் முன்னர் தூக்கம் கண்களை சுழற்ற கதவை தாள் போட்டுவிட்டு தன் கட்டையை கட்டாந்தரையில் சாய்த்தாள்.
சாய்த்தவளின் கனவில் என்றும் வருவது போல் இன்றும் அந்த மூச்சு காற்று வந்து அவளை இம்சத்தது.
மூச்சுக்கு சொந்தக்காரன் யாரோ?...
வாழ்வு தொடரும்...