ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ப்ரவினிகாவின் "உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு" கதை திரி

Status
Not open for further replies.

ப்ரவினிகா

New member
Wonderland writer
உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு


துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

என காலை வேலையில் பக்கத்தில் இருந்த சிறிய கோவிலில் கந்தர் சஷ்டி கவசம் ஓடியது.

அதன் சத்தம் எதிரில் இருந்த வீட்டை சுற்றிலும் உள்ள மரங்களும் செடி கொடிகளும் உள்ள தோட்டத்தின் நடுவே உள்ள பெரிய வீட்டின் மாடியில் ஓரமாய் இருந்த சிறிய இருட்டு ரூமில் சின்ன ஜன்னலின் வழியே அவள் செவியை தீண்டியது அந்த பாடல்.

அதிகாலை 5.30 மணிக்கே அந்த சத்தம் தன் காதுகளையடையவும் தினமும் எப்பொழுதும் தான் காலை எழுந்தவுடன் சொல்லும் அதே கந்த சஷ்டி கவசம் தன் காதுகளை தீண்டியவுடன் மயக்கத்திலிருந்தவள் தன் கண்களை மூடிய நிலையிலேயே முருகனை வேண்ட ஆரம்பித்தாள்.

எப்பொழுதும் போல் தான் இருக்கும் சூழலை மறந்து அரை மயக்க நிலையிலும் "முருகா இந்த உலகத்துல எல்லாரையும் காப்பாத்துப்பா.. " என மனதில் நினைத்து கொண்டு கண் திறவாமலே தனக்கென்று வேண்டாமல் உலகத்தில் உள்ள எல்லாருக்காகவும் முருகனை வேண்டியவள் கண்ணை மெல்ல திறக்க முயன்றாள்…

பூட்டிய கும்மிருட்டு அறையில் வந்த மெல்லிய வெளிச்சத்தில் தட்டு தடுமாறி மெல்ல எழுந்து ஓரடி வைத்தவள் தலை மீண்டும் சுழலுவது போல் இருக்க ஒரு நிமிடம் சுவரை பற்றி அசையாமல் நின்று தன்னை நிதானப்படுத்தி கொண்டு மீண்டும் அந்த கதவை நோக்கி சென்றாள்.. அது குளியலறையுடன் கூடிய கழிவறை அங்கு தன் காலை கடனை முடித்துவிட்டு வெளியில் வந்து மீண்டும் சுவற்றை பற்றிக்கொண்டே வந்து மூளையில் இருந்த தண்ணீர் கேனில் இருந்து தண்ணீர் குடித்து விட்டு பக்கத்தில் வந்து மீண்டும் சரிந்தாள்..

இவர்களிடம் கத்தினாலும் ஒரு பிரயோஜனமுமில்லை என்றறிந்து கத்தி இருக்கும் தெம்பையும் போக்குவதை விட அமைதியாக இருப்பதே மேல் என்று படுத்து கொண்டாள்..

இரண்டு நாள் முன்பு காலை அவளை கடத்தி கொண்டு வந்து அடைத்து வைத்ததில் இருந்து அவளுக்கு சாப்பிட ஒன்றும் தராமல் ஒரத்தில் ஒரு தண்ணீர் கேன் மட்டும் வைத்துவிட்டு சென்றனர். வந்த அன்று அதுவும் குடிக்காமல் தான் இருந்தாள்.. ஆனால் போக போக சாப்பிடாமல் வெறும் வயிரோடு இருக்க முடியாமல் அவதிப்பட்டவள் நேற்றிலிருந்து அந்த தண்ணீரை மட்டுமே குடித்து வயிற்றை நிரப்பினாள். அதன் விளைவால் உடலிலிருந்த சக்தியெல்லாம் வற்றி அறை மயக்கத்துடன் படுத்திருந்தாள்..

வந்த பொழுது கத்தி எவ்வளவோ ஆர்ப்பாட்டம் பண்ணியும் எதற்கு அவளை இங்கு கொண்டு வந்தார்கள் என்பதை மட்டும் சொல்லவேயில்லை..

மனம் இரண்டு நாள் முன்பு நடந்ததை நினைத்து பார்த்தது.

அங்கு கருப்பு போர்வையை போர்த்திக்கொண்டு முடி எல்லாம் சாம்பல் நிறத்துடன் கன்னத்தில் ஏதோ அடி பட்டு அந்த பெரிய புண்ணின் மேல் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது.

மங்கிய தோற்றத்துடன் இரண்டு கையிளும் சொறி சிரங்கு படை என ஒன்றுவிடாமல் அத்தனையும் வந்து பார்க்கவே கோராமையாக இருந்தது அவரின் தோற்றம். அந்த சிரங்கின் மேல் நீர் வடிந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு வயதானவர் போன்று தோற்றமளித்தார்.

அந்த உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும் அது அவருக்கு உரைக்குதோ இல்லையா என பார்ப்பவர்கள் கூட அவரை பார்த்து பரிதாபடுவார்கள். ஆனால் அவர் அந்த உணர்வே இல்லாதது போல் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவருக்கு சாப்பாடே போவோர் வருவோர் தான் அவருக்கு பாவம் பார்த்து சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டு போவார்கள். யாரும் காசு கொடுத்தால் கூட அவர் வாங்க மாட்டார். யாரும் எதுவும் கொடுக்காத நேரத்தில் அந்த சிறிய கோவிலின் பிரசாதம் தான் அவரின் சாப்பாடு.

அந்த பிளாட்பாரத்திலேயே உட்காருவதும் உறங்குவதுமாக தான் இருப்பார். பலர் அவரை முதியோரில்லத்தில் சேர்த்து விடுகிறோம் என்று கூறியும் வர மறுத்துவிட்டார். அதனால் அங்கு இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் அவரை நன்கு தெரியும்..

அவர் உட்கார்ந்திருந்த எதிர் பக்கத்தில் இருந்த வீட்டை சுற்றிலும் மா, பலா, வாழை போன்ற மரங்களுடனும் காய்கறி செடிகள் மற்றும் வித விதமான பூ செடிகளுடன் கூடிய தோட்டம் அழகாக காட்சி அளித்து கண்ணை பறித்தது அந்த வீடு.

இரண்டு டாடா சுமோ வேகமாக அந்த வீட்டின் போர்டிகோவிற்குள் வந்து நின்றது. அதிலிருந்து நான்கு ஐந்து பேர் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு இறங்கினர்.

"ஏய் யாருடா நீங்களாம். எதுக்கு டா எங்களை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க" என்று கத்தினாள் மதுர வாணி.

"இரு மா.. சும்மா கத்தாத... உன்ன தூக்கிட்டு வந்ததுல இருந்து நீ கத்துறதுலயே காது வலிக்குது" என்றான் ஒருவன்.

"ஏன் டா எங்களை தூக்கிட்டு வந்துருக்கீங்க. பின்ன கத்தாம உங்ககிட்ட சிரிச்சு பேச சொல்றிங்களா" என்று மீண்டும் கத்தினாள். கண்ணு கட்ட பட்டிருப்பதால் கண்ணு வலி வேறு அதிகமா இருந்தது அந்த கடுப்பு அவளுக்கு.

"உன்கூட வந்தவன் கூட சைலெண்ட்டா இருக்கான். நீ தான் கத்திகிட்டே இருக்க. கொஞ்சம் அமைதியாயிரு. எங்க பாஸ் இப்ப வந்துருவாரு" என்றான்.

அப்பொழுது தான் கூட வந்தவன் அமைதியாக இருப்பதை நினைவு கூர்ந்தாள். அவனுக்கு என்ன ஆனதோ என்ற பயம் வந்து "கமலேஷ் எங்க டா இருக்க. என்ன ஆச்சு எனக்கு கண்ண கட்டுன மாதிரி உனக்கு வாய கட்டிடங்களாடா. என்னனு ஏதாவது சொல்லுடா. எனக்கு பயமா இருக்கு" என்று பயத்தில் கண்களின் கண்ணீர் அவள் கண்களில் கட்டி இருந்த துணியிலும் நனைய பயத்தில் அவனுக்கு என்ன ஆனதோ என நினைத்து ஒரு வித தடுமாற்றத்துடனேயே வார்த்தைகள் வந்தது.

ஆனால் அவள் இவ்வளவு கத்தியும் அவள் கூறுவதை காதில் வாங்கிக்கொண்டு கால் மேல் காலை போட்டுகொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து அவளையே கண்கள் சிவக்க ரௌத்திரமாக பார்த்து கொண்டு இருந்தான் கமலேஷ்.

மெல்ல அங்கிருந்தவனிடம் கண்ணை காட்டினான். அவர்கள் புரிந்தது என்பது போல் தலையசைத்து இவளை இழுத்துக்கொண்டு மாடியில் இருக்கும் சிறிய அறையில் தள்ளி கதவை பூட்டி விட்டு சென்றனர்..

தப்பிக்கும் மார்க்கத்தை சுற்றி முற்றி தேடியும் ஒரு பலனும் கிடைக்காது போகவே இவள் கத்தி கத்தி ஓய்ந்து போனது தான் மிச்சம்.

இன்று அந்த கோவில் வாசலிலேயே "அய்யா... அம்மா…. பிச்சை போடுங்கய்யா…" இரண்டு பேர் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

சிறிய கோவிலாக இருந்தாலும் பழமையான கோவில் ஆதலால் மதியம் 12 மணிக்கு நடை சாத்தும் முன் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தனர். சற்று தள்ளி இருந்தா அந்த பெரியவர் கையிலும் ஒரு இலையை கொடுத்துவிட்டு சென்றனர்.
அதை சாப்பிடாமல் எங்கோ வெறித்து கொண்டிருந்தார்.

பூட்டி இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே இருவர் நுழைந்தனர். மயக்கத்தில் படுத்திருந்தவளின் மீது ஜக்கில் இருக்கும் தண்ணியை சடார் என்று ஊற்றினான்.

திடிரென்று தன் மீது தண்ணீர் ஊற்றவும் பதறி அடித்து கொண்டு எழுந்தவளை "என்ன ஏது" என்று உணரும் முன் அவள் கையை ஆளுக்கு ஒருவர் பற்றி எழுப்பி நடக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் வேகத்துக்கு அவளால் நடக்க முடியாது போகவும் தடுமாறியவளை ஈவு இரக்கம் பார்க்காமல் தர தரவென்று படியில் இழுத்து கொண்டு வந்து ஹாலில் நடு நாயகமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அவன் முன்பு போட்டனர்.

இழுத்து கொண்டு வந்து போடவும் தலையை தரையில் வைத்து படுத்த மாதிரி இருந்தவளை ஷூ காலால் அவள் உச்சி தலையை தட்டி "வெல்கம் மிஸ். மமமமதுர….வாணி….. எப்படி இருக்கீங்க...." என அவள் பெயரை நன்கு இழுத்து எகத்தாளமாகவும், மிகுந்த நக்கலாகவும் அவனுக்கே உரிய கம்பிரக் குரலில் கேட்க..

ஒன்றும் புரியா நிலையில் தலை கவிழ்ந்திருந்தவள் அவன் ஷூ காலால் தட்டி வெகு நக்கலாக அவள் பெயரை உச்சரித்து அவன் கேட்ட விதத்தில் மயக்க நிலையில் தலையை நிமிர்த்த முடியாமல் மெதுவாக தலை தூக்கி பார்த்தாள்..

அந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கண்களில் சீற்றத்துடன் முகத்தில் மெல்லிய ஆணவ சிரிப்பு படர சிரித்தான்.

அவனை பார்த்த அதிர்ச்சியில் இவனா அவன் இத்தனை நாள் அம்மாஞ்சி போலவே தன்னையே சுற்றிக்கொண்டு கண்களில் ஒரு சிறிய சோடா புட்டி போட்டு மங்கிய கலரில் ஒரு சட்டை பேண்டை அணிந்து பார்க்கவே வெகுளியாக "மதுரா.. மதுரா" என சுற்றியவனின் தோற்றமும் ஒருங்கே கொண்டு வந்தாள். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

"மதுரா என்னை என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா.." என முதல் முதலாக சட்டையை திருகி கொண்டே தரையை பார்ப்பதும் அவளை பார்ப்பதுமாக அவன் கேட்ட பொழுது "போடா லூசு" என அவனை திட்டியது இப்பொழுது தன் நினைவடுக்கில் வந்தது. நடந்த பிரச்சனையில் அவளோடு வரும்படி அவன் கூறிய போது அவனை காதலிக்கவில்லை என்றாலும் இவன் மூலம் தன்னை முதலில் காப்பாற்றிக்கொண்டு வெளியே போய் எங்காவது வாழலாம் என்றெண்ணித் தானே அவனோடு வந்தாள்.

ஆனால் இப்பொழுது தனக்கு முன்னே கம்பிர தோற்றத்தோடு இருக்கும் இவனையும் அவனையுயும் ஒப்புமை படுத்தி பார்த்தவளுக்கு மீண்டும் மயக்கமே வந்தது.

அவள் நிலையை அறிந்தவன் மீண்டும் அவள் முகத்தில் தண்ணீரை எடுத்து ஊத்தினான்.

அதில் சிறிது தெளிந்தவள் "ஏ..ஏன் இ... இப்படி" என தடுமாறி கேட்டவளை "ஏன் உனக்கு தெரியாதா.." என்று இவள் கேள்விக்கு மறு கேள்வி கேட்டவனை பார்த்து இவள் விரக்தியில் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்..

"அதுக்கு நான் என்ன பண்ணேன். என்னை ஏன் இப்படி?.." என வலியிலும் மயக்கத்தோடும் பேசியவளின் சொல்லுக்கு பதிலலிக்காது….

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? உனக்கு இப்போ கலியாணம்.." என கேள்வியும் அவனே கேட்டு பதிலையும் அவனே சொல்லவும் புரியாமல் பார்த்தாள்.

"என்னடா எல்லாரும் கல்யாணம் தான சொல்வாங்க இவன் என்ன கலியாணம் சொல்றனேன்னு பார்க்குறியா.. தோ.. இப்ப அதுக்கான அர்த்தம் புரியும் பாரு." என்றவன் அடியாளை நோக்கி

"கூட்டிட்டு வாங்கடா அவன. இவளுக்கு அவன் தான் மேட்ச்ச்ச்ச்சா இருப்பான்" என்று குரூரமாக உரைத்தான்..

வெளியே சென்றவர்கள் சிறிது நேரத்தில் "தோ.. தோ.. ச்சு.. ச்சு.." என மாடு ஓட்டுவது போல் ஒருவனை குச்சியால் ஓட்டி கொண்டு வந்தனர்.
கையை பிடித்து கூட்டி வராமல் குச்சியால் அவனை இருவர் தள்ளி கொண்டே வந்தனர்.

சத்தம் வந்த திசையை நோக்கி மெல்ல தன் பார்வையை திருப்பினாள்.

ஏற்கனவே அவனையும் அவன் வார்த்தைகளையும் நம்பி வந்து ஏமாந்தவள் இப்பொழுது தலையை உயர்த்தி எதிரில் இருப்பவனை பார்த்தவுடன் முழுமையாக பார்த்தவுடன் வாழ்க்கையில் பலமாக தோற்ற உணர்வு.

அவன் உடம்பில் பல்வேறு இடத்தில் இருந்து இரத்தமும், சீழும், தண்ணீருமாக கசிந்து கொண்டு பார்க்கவே கொடுமையாக இருந்தது..

உடனே அவன் கையில் தாலியை பிடிவாதமாக திணித்தனர். கூடவே என்ன செய்ய வேண்டும் எப்படி கட்ட வேண்டும் என்று அவனுக்கு பாடம் எடுத்தனர்..

இவளால் எதிர்க்க முடியா நிலையில் நிறுத்தி அவளை நன்றாக பழிவாங்கினான். அன்ன ஆகாரமின்றி முழுவதுமாக தொய்ந்திருந்தவள் அவன் தாலி கட்டுவதை கூட எதிர்க்க முடியா நிலையில் இருந்தாள்..

அவன் கையை தூக்கியவுடன் அதில் தெரிந்த புண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் உதிர்க்கவும்...

திரும்பி கமலேஷை ஒரு முறை பார்த்து "நான் உன்னை எவ்ளோ நம்புனேன். என்ன இப்படி நீ ஏமாத்துவனு நான் நெனச்சு கூட பார்க்கல கமலேஷ்." என்ற குரலில் வலி வேதனை ஏமாற்றம் தோல்வி என்ற எல்லா உணர்வும் கலந்திருந்தது.

கண்ணில் வேதனையுடன் முன்பு எல்லா உறவுகளும் இருந்தது. இப்பொழுது ஒரு உறவு கூட நிலைக்காமல் இவனை மட்டுமே நம்பி வந்தாள். இவன் மேல் காதல் இருக்கிறதா என்று கேட்டால் கூட அவளுக்கு தெரியாது. இருந்த அணைத்து உறவுகளும் பொய்த்து போன நிலைமையில் இவன் தன்னை பாதுகாப்பான் என்று இவனை நம்பி வந்தால் இவனும் பொய்த்து போய் கடைசியில் அவன் அவளை எழவே முடியாத அளவுக்கு அவளை அடிக்க பார்க்கிறான்.

கடைசி முயற்சியாக திரும்பி கமலேஷை பார்த்து "நீ லவ் பண்றன்னு என்னை சுத்தி சுத்தி வந்ததுலாம் பொய்யா கமலேஷ்" என்று உதடு துடிக்க அவனை பார்த்து நடுங்கும் குரலில் கேட்டாள்.

திரும்பி அவளை நிதானமாக பார்த்து கண்களில் அனல் பறக்க "உன் கையை இங்க கொடு" என்றான் சம்மந்தமே இல்லாமல்

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன கேட்கிறான் என்று அவனை பார்த்தாள். ஆனால் கை மட்டும் அவள் நினைப்பதற்கு மாறாக அவனிடம் நீண்டது.

அவள் கையை இடது கையில் வைத்துக்கொண்டு எதிரில் நின்றிருந்த அந்த பிச்சைக்காரனின் கையையும் குச்சியால் தூக்கி அவளிடம் காட்டி "இப்ப ரெண்டு கையும் எவ்ளோ அழ்காகா…... மேட்சா.. இருக்குல்ல.." என்றான்.

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து அவள் கண்களும் முகமும் அதிர்ச்சியை காட்டி கொண்டிருக்கும் போதே

உடனே "கட்ட சொல்லுடா தாலியை" என்று கர்ஜிக்கும் குரலில் அவளிடம் இருந்து பார்வையை தீர்ப்பாமலே பிச்சைக்காரன் பக்கத்தில் இருந்தவனிடம் உத்தரவிட்டான்..

அவளின் கண்கள் அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு கமலேஷ் கண்களையே பார்த்திருக்க பக்கத்தில் இருந்தவர்களின் வழிகாட்டுதளின் பேரில் மதுரவாணியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் அந்த பிச்சைக்காரன்..

அவள் கண்களின் கண்ணீர் எதிரில் நின்று தாலி கட்டியவனின் புண்ணில் பட்டு தெறித்தது..

அன்பான வாசக செல்வங்களே,

மீண்டும் வந்துவிட்டேன். இனிமேல் கதை வாரத்தில் இரண்டு பதிவுடன் உங்களை வந்து சேரும்.. தாங்கள் படித்துவிட்டு நிறை குறை எதுவாயினும் கூறுமாறு கேட்டு கொள்கிறேன் நண்பர்களே..

பிரியமுடன்
ப்ரவினிகா..

கருத்து திரி

 

ப்ரவினிகா

New member
Wonderland writer
வாழ்வு 2

அவன் தாலி கட்டும் போதே எதிரில் இருந்தவனின் மூச்சு காற்று அவள் மீது பட்டதும் மெதுவாக திரும்பி அவன் கண்களை பார்த்தாள்..

ஏற்கனவே சாப்பிடாதது வேறு இப்பொழுது அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சியாக அவள் வாழ்வே சூனியமாகி விட்டதை உணர்ந்ததும் இதற்கு மேல் என்னால் தாள முடியாது என்று அவன் மூன்று முடிச்சிட்ட அடுத்த நொடி அவன் கண்களை பார்த்துக்கொண்டே மயங்கி சரிந்தாள்.

அவன் வாயில் எச்சி ஒழுக முகம் முழுவதும் தாடி மறைத்து முகமே வெளியே தெரியாத அளவு இருண்டு கிடக்க தன் காலடியில் விழுந்தவளையே வெறித்தான்.

அவன் ஆட்களிடம் திரும்பிய கமலேஷ் "இந்த கழிசடைங்களை வெளியே தூக்கி கடாசுடா.. " என்றவன் அவ்வளவு தான் தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து சென்றான். தன்னை நம்பி வந்தவளை இப்படி படுகுழியில் தள்ளி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட ஆரம்பித்தான்.

அவனின் பீம்பாய்ஸ்களும் அசால்ட்டாக இருவரையும் தோளில் தூக்கி போட்டு கொண்டு அவன் உட்கார்ந்திருந்த அதே பிளாட்பாரத்தில் போட்டுவிட்டு சென்றனர்.

பிச்சை உட்கார்ந்து கொண்டும் மதுரா அவன் பக்கத்தில் மயங்கிய நிலையிலும் இருந்தாள். கதிரவன் அன்று பார்த்து அவர்கள் மீது அவருக்கு எவ்வளவு பாசம் இருக்குமென்று தன் செயல் மூலமாக நொடிக்கொருதரம் அவர் பாசத்தின் அளவை தீவிரமாக காண்பித்து கொண்டிருந்தார். சற்றும் அவர் பாசத்தை குறைத்து கொண்டு தன் நிலையில் இருந்து அவர் கிழிறங்குவதாக இல்லை…. அவரின் அதீத பாசத்தின் விளைவால் அவள் நிலை இன்னும் மோசமாகி கொண்டே சென்றதே ஒழிய பக்கத்தில் இருந்த பிச்சையும் அவளை திரும்பியும் பாராது அதே இலக்கின்றி வெறித்தலை எங்கோ தொடர்ந்து கொண்டிருந்தான்.

சாய்ங்காலம் 4 மணி அளவில் அந்த கோவிலில் பூ விற்ப்பவர் அங்கு வந்து வந்தார். அவன் பக்கத்தில் ஒரு பெண் மயங்கியிருப்பதை பார்த்து பதறி அவனிடம் வந்து கேட்டதற்கு,.. அவரிடம் மட்டுமே எப்பொழுதாவது பேசுவான். இன்றும் அதே போல் "பே.. பபா.. பே.....ப.. ப.... பா.." என்று கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொன்னான்.

அவன் பேசியதில் ஒன்றும் புரியாதவர் "அட போடா.. கிறுக்கு பய மவனே... உங்கிட்ட கேட்டேன் பார்.." என்றவர் சுற்றி முற்றி பார்த்துவிட்டு எதிரில் இருந்த அந்த வீட்டின் வாட்ச்மேனை கூப்பிட்டு விஷயத்தை கேட்டார்..

வாட்ச்மேன் கூறிய பதிலில் ஒரு கணம் ஆடி போனவர் "இது என்னடா கூத்தா இருக்கு.. விளங்காத பயலுக.. குறங்கு கிட்ட பூ மாலையை கொடுத்த மாதிரி.. கிளியாட்டம் இருக்குற பொண்ணை கொண்டு போய் இந்த பிச்சைக்காரன் தலையில கட்டி வச்சுருக்காங்க.. என்ன தான் கொடுமைகாரங்களா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா..." என்றவர் மேலும் அவர்களை தன் சென்னை பாஷையில் சிறப்பாக புகழ்ந்து தள்ளி கொண்டே..

தான் எப்பொழுதும் பூ கடை முடிந்து வீடு செல்ல இரவு தாமதமாகும் என்பதால் இரவு சாப்பாட்டை அவர் இங்கேயே கொண்டு வந்து சாப்பிட்டு போவார்.. அதை எடுத்து கொண்டு அவளிடம் விரைந்தவர்.

அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.. ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு மெல்ல கண் விழித்து சுற்றிலும் பார்த்து விட்டு மெல்ல எழுந்தமர்ந்தவள் தன் நிலை புரியவும் மேலும் அழ போனவளை "இந்தா புள்ள… உன்னை பார்த்தாவே தெரியுது நீ சாப்பிடாம சோர்வா இருக்குறது. முதல்ல இதை சாப்புடு… சும்மா சும்மா மூக்கை உறிஞ்சுகிட்டு கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டே இருந்தா எல்லாம் ஆச்சா.. எல்லாத்தையும் சமாளிச்சு புத்திசாலித்தனமா மேல வந்து பொழப்ப நடத்துற வழிய பாரு." என்று ஒரு அதட்டல் போடவும் வந்த அழுகையும் பயத்தில் உள்ளே ஓடியது.

"ஹ்ம்ம்.. இந்தா பிடி சோத்தை அள்ளி வாயில வை.." என்று சாப்பாடு டப்பாவை கையில் திணித்து விட்டு வியாபார நேரத்தில் கோவிலுக்கு மக்கள் வரும் முன் பூ கட்டசென்றார்.

அவர் கொடுத்து விட்டு சென்றதை இரண்டு நாள் சாப்பிடாத பசியில் ஒரு வாய் எடுத்து வைத்தவள் பாட்டியின் கை மணத்தில் அந்த கார குழம்பின் சுவையும் சேர்ந்து அவளை ஒரு பருக்கை மிச்சம் வைக்காமல் சாப்பிட வைத்தது.

கை கழுவி விட்டு வந்து அங்கேயே அமர்ந்தவளால் வயிறு நிறைந்ததும் அடுத்து என்ன என்று யோசிக்க வைத்தது. மெல்ல திரும்பி அவனை பார்த்தாள்.

பார்க்க ஐம்பது வயது போல் தோற்றமளித்தான். அவன் சாம்பல் நிறத் தலையும், தாடி முழுவதும் அடர்ந்த முகம் கை கால் என தன் பார்வையை ஒட்டியவளால் முழுதாக ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாமல் அடி வயிற்றில் ஏதோ செய்து சாப்பிட்ட அனைத்தும் வாய் வழியாகவே யூ டர்ன் எடுத்து திரும்புவது போல் இருந்தது.

வேக வேகமாக தன் பார்வையை திருப்பி கொண்டாள். ஒரு நிமிடம் கூட இவனை முழுதாக பார்க்க முடியவில்லையே இவனோடு நாம் எப்படி காலத்தை தள்ளுவோம். முதலில் இது ஒரு கல்யாணம்... தான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?.. என்ன? என்று ஒரு பக்கம் யோசித்தாள்.

மறு பக்கம் அவன் கட்டிய தாலி அவள் கண் முன்னே அவள் மார்பில் தொங்கி இது தான் அவளுடைய அடையாளம் என காட்ட அதை பார்த்ததும் உடலில் ஒரு சிலிர்ப்பு. இது பழிவாங்க நடந்ததோ அல்லது அவளை படுகுழியில் தள்ள வேண்டும் என்று முடிவெடுத்து நடந்ததோ எதுவாயினும் அவள் கழுத்தில் தாலி என்ற ஒன்று ஏறிவிட்ட பின்பு அதை அவளால் கழட்ட முடியும் என்று எண்ணத்திற்கே செல்ல முடியவில்லை.

அன்பே உருவான அவள் அன்னை தாலிக்கு கொடுக்கும் மதிப்பை பார்த்திருக்கிறாள். செவ்வாய், வெள்ளி என்று தன் கணவருக்காக விரதமிருப்பார். வருடா வருடம் மஹாலக்ஷ்மி நோன்பில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை வர வைத்து வீட்டில் பூஜை செய்து தட்டில் சுமங்கலி பொருட்களோடு ஜாக்கெட் பிட்டு, பிரசாதம் என கொடுத்து அன்று வீடே அமர்க்களப்படும்.

அவரையே பார்த்து வளர்ந்தவளுக்கு தாலியின் மகத்துவமும், அதற்கான புனிதத்துவமும் நன்கு தெரிந்ததால் கையில் பிடித்திருந்த தாலியை இறுக பிடித்துக்கொண்டாள் 'இதை ஒரு பொழுதும் பிரியமாட்டேன்' என்பது போல் அவள் பற்றவும் அதற்கேற்ற போல் கோவிலின் பூஜை மணியோசை ஒளித்தது.

ஏதோ தோன்றவும் திரும்பி அவனை பார்த்தாள். பிச்சை மதுராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். இவளால் அவன் பார்வையை தாங்கி அவனை பார்க்க முடியாமல் இவள் தான் தன் பார்வையை திருப்பி கொண்டாள். அதில் ஏனோ அவளை அறியாமல் மிக மிக மெல்லியதாக உடலில் ஓர் சிலிர்ப்பு தோன்றி மறைந்தது.

அவனின் யோசனையிலேயே இருந்தவள் தன்னை அறியாமல் சரிந்து படுத்து தூங்க ஆரம்பித்திருந்தாள். இரவு கோவிலை மூடும் நேரம் வந்ததும் வியாபாரத்தை முடித்து கொண்டு இவர்களை நோக்கி வந்தவர் "இந்தா புள்ள உம் பேரென்ன?" என்றார்.

இரவு நேர காற்று சில்லென்று வீசவும் ஏற்கனவே தன்னை சுற்றி நன்றாக போர்த்தியது போல் போட்டிருந்த சுடிதார் துப்பட்டாவை காற்றின் விளைவால் நன்கு இழுத்து இரண்டு கால்களையும் குறுக்கி கொண்டு கைகள் இரண்டையும் கால்களின் நடுவே விட்டு படுத்திருந்தாள். அதை பார்ப்பதற்கு தனக்கென எந்த ஆதரவும் பாதுகாப்பும் இல்லாதவர்கள் தன்னுள் ஒடுங்கி தன்னை குறுக்கி கொண்டு படுத்திருப்பார்களே அதை ஒத்து இருந்தது. அதை ஒத்து என்ன??.. சமீப காலமாக அவளின் உண்மை நிலையும் அதுதானே!!…

அவர் திடீரென கேட்கவும் ஏற்கனவே தான் கடத்த பட்டிருந்த இரண்டு நாளின் பயத்தின் அளவை விட இன்றைய நாளில் ஏற்பட்ட அதிகப்படியான அதிர்ச்சியின் தாக்கத்தில் இருந்து முழுதாக இன்னும் வெளிவராதவளால் அவரின் இயல்பான குரலே அவளுக்கு குரல் உயர்த்தி மிரட்டுவது போல் தோன்றவும் உடல் முழுவதும் ஒரு நொடி தூக்கி போட்டது.

அதை பார்த்த அவருக்கே பாவமாக தோன்றவும் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடி கொடுத்தவர் "வா அம்மு எங்வூட்டுக்கு போவோம். எவ்ளோ நேரம் இங்கயே உக்காந்திருப்ப… எங்குடிசை இங்க பக்கந்தா இருக்கு. நான் மட்டும் தான் அங்க இருக்கேன்.. எங்கூட அங்க வந்து தங்கிக்கோ.. எனக்கும் துணையா இருக்கும். எழுந்து ஓடியா போவோம்.." என அவள் கையை பிடிக்கவும் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவர் "அட அந்த கிறுக்கு பயலையும் சேர்த்து தான் மா. உன்னை மட்டும் எப்படி கூப்பிடுவேன். இத்தனை நாள் ஆம்பிளை தானேன்னு அவனை கண்டுக்காமல் வெறும் சோறு மட்டும் இந்த கோயில்ல இருந்து வாங்கி கொடுத்தேன்... இப்ப தான் எம்பேத்தி நீ வந்துட்டியே உனக்காக அவனையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போறேன்.. சரியாமா…" என்று அவள் கையை பிடித்து அழைத்தார்.

அதன் பிறகு ஆயாவே அவனிடமும் திரும்பி "எலே கிறுக்கு பயலே வாடா போவோம்.. இனிமேட்டு நீ இங்கயே குடித்தன இருக்க வேணாம்.. எங்கூட வா.." என அவனை ஒரு குலுக்கு குலுக்கி கையை பிடித்து இழுத்தார்.

அவனோ அவரின் குலுக்கல், இழுத்தல் எல்லாம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல் மரம் மாதிரியே அமர்ந்திருந்தான்.

அவர் பல விதமாக அவரை அழைத்து பார்த்து உலுக்கியும் பார்த்துவிட்டார். அப்பொழுதும் அவன் எழுந்திரிக்கவில்லை. கடைசியாக அவரின் தொல்லை தாங்காமல் அவர் கையை ஒரு உதறு உதறிவிட்டான்.

அதில் நிலைகொள்ளாமல் அமர்ந்த நிலையிலேயே கீழே விழ போனவரை மதுராவே தாங்கி பிடித்தாள்.. அவள் பிடித்ததால் ஓரளவு தன்னை நிலை படுத்தி கொண்டு அவன் தள்ளி விட்டதில் கோபம் கொண்டவர்.

ஆவேசமாக "அட கிறுக்கு பைத்திய கூமுட்ட…. உன்ன போய் கூப்புட்ட ம்பாத்தியா என்னய அங்க கீழ கிடைக்குற செருப்பாலேயே அடிக்கணும்டா.. உன்னைய ஆள வச்சு குண்டு கட்டா தூக்கிட்டு போயிருக்கணும்.. அதை விட்டுட்டு உங்கிட்ட பேச்சு வார்த்தை நடத்துனது தப்பா போச்சு.. போடா முள்ளங்கி, முடிச்சவிக்கி, கேப்மாரி…." என சரமாரியாக அவனை வசை பாட தொடங்கியவர் இவளிடம் திரும்பி

"எம்மா பொண்ணே!.. உம் புருசனை நீயே கூப்பிட்டு வா போவோம். என்னால அவனாண்ட பட முடியாதுடா சாமி.. சரியான லூசுப்பய…." என அவன் தள்ளி விட்டதன் கோபம் குறையாமல் கையை ஊன்றி தள்ளாடிக்கொண்டே எழுந்து சென்றார்..

அவன் ஆயாவிடம் பண்ணதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவள் இவனை வைத்து எப்படி நான் வாழ முடியும்.. இப்படி இருக்கானே… என் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிவிட்டானே.. சரியான பைத்தியம்.. இவனோடான தன் வாழ்க்கையை நினைத்து கழிவிறக்கத்தில் கண்ணீர் விட்டவள் நேரம் ஆக ஆக கழிவிறக்கம் கோபமாக உருமாறி இதற்கு காரணமானவனை நினைத்து அவன் மீது கோபமும் கூடவே வெறியும் தோன்றியது.

எப்படியாவது அவன் முன் தான் வீழ கூடாது. அவன் நினைப்பை தான் பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியோடு அதையே மனதில் மீண்டும் மீண்டும் உருபோட்டு கொண்டிருந்தவளின் கண் முன் ஆயாவை தள்ளிவிடுவதை கண்டவள் அவரை தாங்கினாள்.

பிறகு ஆயாவே அவனை அழைத்து வரும் பொறுப்பை மதுராவிடமே விட்டுச் சென்றதும்.. அவர் கூறிய "உன் புருஷன்" என்ற வார்த்தை அவளை பெரிதும் தாக்கியது. பின்னே இது நாள் வரை கல்யாணம், புருஷன் என்ற வார்த்தையை பற்றி எல்லாம் எண்ணாதவள் ஆயிற்றே.. அவளுக்கு திருமணம் அதுவும் கிழவனுடன் திருமணத்தை செய்து வைக்க போவதாக அவளுக்கு அறிவிப்பு மட்டுமே வரவும்.. அங்கிருப்பவர்கள் கண்ணில் எப்படியோ மண்ணை தூவி விட்டு அறக்க பறக்க அந்த இரவு நேரத்தில் கமலேஷோடு தப்பித்து வேறெங்காவது போகலாம் என்றெண்ணினாலே… கடைசியில் கிழவனிடமிருந்து தப்பித்து மனநிலை சரியில்லாதவனிடம் அதே தாலியை வாங்கும் படி ஆயிற்றே!! என்று எல்லாவற்றையும் நினைத்து நினைத்து பார்த்து மீண்டும் முளைக்க இருந்த கேவலை வாய் பொத்தி அடக்கினாள். எத்தனை நேரம் தான் அழுது கொண்டே இருப்பது 'ஆயா சொன்ன மாதிரி இவன் தான் என் புருஷன் அதை மனதில் நன்றாக பதிய வைத்து கொள்ள வேண்டும்' என தனக்குள் உழன்று கொண்டிருந்தவள் ஆயாவின் புலம்பல் காதில் விழ அவனை திரும்பி பார்த்தாள்..

இரண்டு காலையும் நீட்டி தலையை சுவற்றில் சாய்த்து எதிரே வெறித்து கொண்டிருந்தவனின் மீது பார்வையை செலுத்தியவள்… அவன் இருந்த தோற்றத்தை பார்த்ததும் பரிதாபட்டு அவனிடம் எப்படி பேசுவது என்று தடுமாறினாள். ஒருமையில் அழைப்பதா அல்லது அவள் அம்மா அழைப்பது போல் "வாங்க போங்க" என்று அழைப்பதா என்று உள்ளுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள் 'ஹு..ஹ்ம்ம்… எப்படி அழைத்தாலும் இந்த பைத்தியத்துக்கு தெரிய போகிறதா?.. என்ன?...' என்றெண்ணியவள் உடனே 'ஹு.. ஹ்ம்ம்.. பொது வெளியில் நாமே அவனை இப்படி அழைத்தாள் மற்றவர்களும் அவனை அப்படி தானே அழைப்பார்கள்' என்று தோன்றி 'முதலில் அவனை மரியாதையாக அழைப்பதில் இருந்து தொடங்குவோம் நம் வாழ்க்கையின் போராட்டத்தை' என்று நினைத்து குணிந்து தாலியை பார்த்துவிட்டு "ங்க" போட்டே அழைப்போம் என்ற முடிவோடு…

"என்னங்க…"என்றவாறு அவன் புண்ணின் மீது எந்த ஒரு முகச் சுழிப்பும் இல்லாமல் அவன் கையை தொட வந்தாள்.

தொட வந்தது தான் தெரியும் அதன் பிறகு "அம்ம்மாஆஆஆஆ…" என்ற கதறல் தான் அங்கு ஒலித்தது.

ஆம் அவள் கையை பற்ற வரும் சிறு இடைவெளியில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவள் நெற்றியில் அடித்திருந்தான்.

இவ்வளவு நேரம் அவனை எப்படி அழைப்பது என்று பட்டிமன்றமெல்லாம் நடத்தி அதில் எடுத்த உறுதிப் பிரமானம் அனைத்தும் காற்றில் கரைந்த கற்பூரமாக வலி மற்றும் அதிர்ச்சியில் "ப்ப்ப்போடா லூசுசுஉஉஉஉஉஉ…" என்று அழுதுக் கொண்டே திட்டினாள்..

வாழ்வு தொடரும்...

வணக்கம் நண்பர்களே,
உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு 2 ஆம் அத்தியாயம் பதிந்துவிட்டேன்.. இனிமேல் கரெக்டா பதிவு வரும் பிரிண்ட்ஸ்.. உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு யூடி போடாததுக்கு என்னை மன்னிச்சுடுங்கப்பா.. மறக்காம உங்க கருத்து எதுவா இருந்தாலும் சொல்லிட்டு போங்கப்பா..

கருத்து திரி

 
Status
Not open for further replies.
Top