பேரன்பின் பிறவி நீ!!!
அத்தியாயம் - 1
அந்திவானம், புதிதாகத் திருமணமான மணப்பெணின் குங்குமக் கன்னமாக அழகாய்ச் சிவந்திருக்க. ஒருவாரமாக விடாமல் பெய்த மழையால் சாலை எங்கும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பது கூடப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகத் தான் இருந்தது அவ்வூர் மக்களுக்கு.
இருக்காத பின்னே, ரோட்டோரம் தண்ணீர் செல்வதற்காக வைத்திருந்த கால்வாய்கள் எல்லாம் இன்று தானே தங்களுடைய பணியைச் சரிவரச் செய்கிறது. இதுவரையில் அந்தக் கால்வாய்களில் எல்லாம் கிழிந்த கட்சி மீட்டிங் போஸ்டர்களும், கல்யாணப் போஸ்டர்களுமாக மண்டிக் கிடக்க, தண்ணீர் எங்கே அதில் செல்வது. அதுவும் கால்வாய்களில் தண்ணீர் செல்லும் அளவிற்கு மழையும் வருவதில்லை அழகூரில்.
ஆனால், என்னவொரு ஆச்சரியம். இருபது வருடங்களுக்குப் பிறகு இன்று தான் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது அந்தக் கால்வாய்களில் எல்லாம். இது குளம் தானா?? தண்ணீரே இல்லையே… என்று புலம்பிய மக்களுக்கு 'நான் குளம் தான் மக்களே நம்புங்கள்' என்று கூறும் விதமாக எல்லாக் குளங்களும் நிரம்பி வழிந்தன இந்த ஒரு வார மழையில்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் தான் அழகூர். பெயர் மட்டுமில்லை அந்த ஊரின் இயற்கை காட்சிகளும், தன்னலமில்லா வெள்ளந்தி மனிதர்களும் கொள்ளை அழகு தான் அழகூரில்.
மழை நின்ற குஷியில் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாடம் வேலையைக் காண மகிழ்ச்சியாக ஆயத்தமாக... இங்கோ! கேரள பாணியில் செம்மண் நிற ஓடுகள் கொண்டு கட்டப்பட்ட பெரிய வீட்டில், தன் அறையில் அமர்ந்து நகங்களைக் கடித்தவாறு வீட்டில் நடக்கும் ஆரவாரங்களை அறவே வெறுத்தவளாகத் தன் அத்தை மகன் சந்தோஷிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் அழகி எனும் மதியழகி.
மதியழகி.. பெயரை போலவே அந்த நிலவினை போன்று அழகிய வதனத்தை உடையவள். பட்டுபோன்ற மேனி, ஐந்தடிக்கும் குறைவான உயரம். 'ஷார்ட் கேர்ள்ஸ் ஆர் கியூட்' என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு வலம் வருப்பவளுக்கு, தன் அத்தை மகனான சந்தோஷ் மட்டுமே இந்த மொத்த அழகூரிலும் உயரமானவன் என்ற கர்வமும் உண்டு. அவள் கன்னங்களில் முத்துப்போல் இருக்கும் பருக்களும் கூட அழகாக தான் இருக்கும் .
'உனக்கு என்னப்பா பிம்பிள்ஸ் இருந்தா கூட சாய்பல்லவி மாதிரி அழகா தான் இருக்க' என்று கூறும் தோழிகளிடம் எல்லாம் 'ஆய்லி சென்சிடிவ் அக்னே ப்ரோன் ஸ்கின் (oily sensitive acne prone skin) உங்களுக்கு எல்லாம் இருந்தா அப்போ தெரியும்டி. பிம்பிள் வந்து தர வலியும், வேதனையும். அப்போ சாய்பல்லவி மாதிரி இருந்தா என்ன... அனுபமா மாதிரி இருந்தா என்ன.. பிம்பிள் இல்லாம இருந்தால் போதும்னு தான் தோணும்' என்று கூறி அவர்களின் வாயை அடைத்து விடுவாள்.
என்ஜினீயரிங் படிப்பை மூடித்துவிட்டுக் கேம்பஸ் இன்டெர்வியூவில் தேர்வாகிய கம்பனியில் இருந்து கால் லெட்டர் வருவதற்காகக் காத்துகொண்டிருக்கும் சேட்டைகள் நிறைந்த சுட்டிப்பெண் தான் நம் நாயகி மதியழகி.
தானே இன்னும் சிறு பெண் அதற்குள் தனக்கு எதற்குத் திருமணம் என்று மனதிற்குள் புலம்பியவள். அதனையே வாய்மொழியாகத் தன் மச்சான் சந்தோஷிடமும் கூறினாள்.
"டேய் சந்தோ! நானே காலேஜ் முடிச்சு இப்போ கொஞ்சம் மாசம் தானேடா ஆகுது. அதுக்குள்ள எனக்கு எதுக்கு இந்தக் கல்யாணம் எல்லாம். எருமை கடா வயசாகுற நீயே இன்னும் கல்யாணம் பண்ணாம யங் ஆஹ் சிங்கிளா ஊர் சுற்றும் போது நா மட்டும் கல்யாணம் பண்ணி ஆண்டி ஆகனுமா??" என்று எண்ணெயில் பட்ட தண்ணீராய் அழகி பொரிய.
அவளையே மென்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ்,
"ஹே!! ச்சில்... குட்டா ச்சில்... இப்போ என்ன வெறும் பெண் பார்க்க மட்டும் தானே வராங்க.. அதுக்குள்ள ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற. உன்கூடப் பேசுனா வரவனே 'என்னை விட்டுவிடுமா தாயி'னு சொல்லி மண்டைய பிச்சிக்கிட்டு ஓடிடுவான். அப்புறம் என்ன.. பிரோப்ளேம் சால்வ்ட் . சோ.. நீ ஃபிரீயா இரு. உன் விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காதுடா குட்டா. இல்லை நான் தான் அப்படி நடக்க விட்டுவிடுவேனா..." என்றான் அவளை இயல்பாக்கும் விதமாக.
சந்தோஷின் குட்டா எனும் அழைப்பில் வெகுண்டெழுந்தவள், " டேய் சந்தோ! குட்டா... மட்டும் சொல்லாதே. அப்புறம் கயல் மேட்டரை வீட்ல போட்டுக் கொடுத்துடுவேன் ஜாக்கிரதை" என்று சந்தோஷின் காதல் விவகாரத்தை வீட்டில் தெரியப்படுத்தி விடுவதாக அழகி மிரட்டவும் பதறியது போல் பாசாங்கு செய்தவன்.
அவளை நோக்கி தன் கைகளைக் கூப்பியவாறு, "அம்மா புண்ணியவதியே!! தயவு செய்து அந்த நல்ல காரியத்தை நீயே உன் பெரியம்மா, பெரியப்பாவிடம் சொல்லிடுமா. உன் அக்காவை நம்பிக்கிட்டிருந்தா கடைசியில் எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடக்குறது கூட சந்தேகம் தான். அவ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டா. எங்களை பத்தி வீட்ல அவளும் சொல்லமாட்டா, நம்மையும் சொல்ல விட மாட்டா.
அவ இருக்கட்டும் அவளை விடு. ஆனா, இங்க நம்ம வீட்ல பாரேன்... பையனுக்கு 28 வயசு ஆச்சே அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப் பேரக்குழந்தைகளை பார்ப்பதை விட்டுவிட்டு. கல்யாணம் வேண்டாம்னு அடம் பண்ணுறவளை வம்படி பண்ணி கட்டிவைக்க பார்கிறாங்களே இதை எல்லாம் எங்க போய் சொல்லுறது. கால கொடுமை கதிரவா" என்று நெற்றியில் ஒற்றைக் கையால் அடித்தவாறு புலம்பியவனை கண்டு முறைத்தவள். திடுமென அவளின் குட்டி மூலையில் தோன்றிய ஐடியாவை செயல்ப்படுத்தும் விதமாக அவனை பார்த்து சிரித்துக்கொண்டே.
"ஹே சந்தோ! ஒரு டீல் பேசிப்போமா?? நீ எனக்கு இந்த பொண்ணுப்பார்க்கும் மேட்டரை நிறுத்த ஒரு ஐடியா கொடு. அதுக்கு பதிலா, கயல் அக்காவையும் உன்னையும்... உங்க லவ் மேட்டரை வீட்லச் சொல்லி சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு சரியா. என்ன இந்த டீல்ல உனக்கு சம்மதம் தானே??" என்று எதையோ பெரிதாகவொரு ஐடியாவை கண்டிப்பிடித்தது போல அவள் பெருமையாக பேசுவதை பார்த்த சந்தோஷிற்கு சிரிப்பு தான் வந்தது முதலில்.
"அடேய் குட்டா.. குட்டாவை குட்டான்னு சொல்லாம பின்ன குல்பினா சொல்ல முடியும். உனக்கு இப்போ கல்யாணம் செய்துகிறதுல என்ன தான் பிரச்சனை அதை சொல்லு. இப்போ தானே காலேஜ் முடிச்சோம் அதுக்குள்ள கல்யாணமான்னு நீ யோசிக்குறது எனக்கு புரியுது தான்டா குட்டா.
ஆனா பாரேன், இந்த வரனுக்கு முன்னமே மூணு வீட்ல உன்னை எங்கேயோ பார்த்து பிடிச்சு போய் பெண் கேட்டு வந்தவர்களிடம் எல்லாம், மாமா... நீ பையனை பார்த்து பிடிச்சி இருக்குன்னு சொன்ன பிறகு தான் கல்யாணத்தை பற்றி பேசலாம்னு திட்டவட்டமாக சொல்லவும் சரி.. சரி.. என்று சந்தோசமாக கூறிவிட்டு போனவர்கள் எல்லாம். ரெண்டே நாளில் திரும்ப போன் பண்ணி, இந்த சம்பந்தம் சரி வராது சாரின்னு சொல்லிட்டாங்க.
எங்களுக்கு முதல்ல எதுவுமே விளங்கலை, அவர்களாகவே தான் வந்து பொண்ணு கேட்டாங்க. பிறகு அவங்களே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நாங்களும் முதல்ல இதை பெருசா எடுத்துக்களை குட்டா. ஆனா, அடுத்த ரெண்டு முறையும் இதே மாதிரி நடக்கவும் சந்தேகப்பட்டு மாமா போய் விசாரணை பண்ணதுல யாரோ அவங்களை மிரட்டி உன்னை வேண்டாம்னு சொல்ல வச்சி இருக்காங்கன்னு தெரிய வந்துச்சு.
ஆனா, அவங்க யாரு? எதுக்காக இப்படி பண்ணுறாங்கன்ற காரணத்தை மட்டும் இன்னமும் எங்களால கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ஒரு வேளை நம்ம தொழில் போட்டிக்காரங்க யாரும் பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறாங்களோன்னு ஒரு முடிவுக்கும் வர முடியல குட்டா. நம்ம ஆளுங்க போட்டினு வந்தாலும், அதை தொழில்ல தான் காட்டுவாங்களே தவிர இப்படி வீட்டு பெண்பிள்ளை விஷயத்தில் பிரச்சனை பண்ண மாட்டாங்க.
உனக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் முடிச்சிட்டா மாமா கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க. அதான் இவ்வளவு அவசரமும். யாரோ எதற்கோ செய்கின்ற செயல்களால் உனக்கு எந்த வித கேட்ட பேரும் வந்துவிட கூடாதுனு மாமா நினைக்கிறாங்கடா.
அவங்களையும் தப்பு சொல்ல முடியாதே. உன் நல்லத்துக்காக தானே அவரும் யோசிக்குறார். எதுக்கும் நீயும் யோசிச்சுப்பாரு குட்டா. உனக்கு உண்மையா இந்த மாப்பிளையை பிடிக்கலைனா சொல்லு நிச்சயமாக நாங்க யாரும் உன்னை கட்டாய படுத்தவே மாட்டோம். உன் சந்தோசம் எங்களுக்கு முக்கியம்டா" என்று மிக நீண்ட விளக்கவுரையை சந்தோஷ் கூறி முடிக்கவும்.
அவன் கையில் செம்பு நிறைய தண்ணீரை கொண்டுவந்து கொடுத்த அழகி, "மன்னிக்கவும் பாஸ், இப்போ கோலி சோடா எதுவும் கிடைக்கல. அதுனால சோம்பு தண்ணிய அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. பட் லெக்சர் அருமை" என்றாள் சிரித்துக்கொண்டே. அவன் கூறிய எதுவும் மண்டையில் ஏறாதவளாய்.
" அடியே பக்கி.. நா இம்புட்டு நேரம் சொன்ன எதுவும் உன் தகர டப்பா மண்டையில ஏறவே இல்லையா" என்று அழகியின் தலையில் தட்டியவாறே சந்தோஷ் கேட்க.
சரியாக அதே நேரம் அழகியை அலங்காரம் பண்ணுவதற்காக அங்கு வந்த கயல்விழியின் கண்களின் இந்த காட்சி பட. நேரே சந்தோஷின் பின்புறம் வந்து நின்று அவனின் தலையில் நறுக்கென்று குட்டியவள்.
"அறிவிருக்கா மாமா உனக்கு. அழகி புள்ளைய தானே பொண்ணு பார்க்க வராக. இப்பயும் அவளை இப்படி அடிச்சி கொடுமை பண்ணுறீங்களே. நம்ம கல்யாணத்துக்கு போறவும் இதே மாதிரி என்னைய அடிக்க மாட்டீங்கன்னு என்ன... நிச்சயம். நீங்க இப்போ அவளை அடிச்சதுக்காக... அவ கிட்ட மன்னிப்பு கேட்காட்டி. நம்ம வீட்லையே கல்யாணத்தைப் பற்றி பேசி முடிவெடுத்தாலும் நா வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆமா… மும்பைல பெரிய கம்ப்யூட்டர் கம்பனியில் வேலை பார்க்கிறேன்னு பந்தா காட்டினா மட்டும் பத்தாது மாமா. கொஞ்சமாச்சும் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்..." என்று நுனியும் தெரியாமல் அடியும் புரியாமல் கயல் பேசிக்கொண்டே செல்ல.
அவள் கூறிய ‘கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லிடுவேன்’ என்ற வாக்கியத்திலையே அதிர்ந்தவன்.
'ஒரு லூசையே சமாளிக்க முடியாது. இதுல இன்னொரு லூசும் வந்து ஜாய்ண்ட் அடிச்சி இருக்கே. என்ன பண்ணப் போறேனோ' என்று மனதோடு புலம்பியபடியே,
கயலை நோக்கி " வா புஜ்ஜி... நீ வேற விஷயம் தெரியாம வார்த்தையை விடாதே" என்றான் சிறு எரிச்சல் குரலில்.
“என்ன!! நானா மாமா விஷயம்னு தெரியாம வார்த்தையை விடுறேன். நல்லா இருக்கு உங்க கதை. நா தான் என் ரெண்டு கண்ணால பார்த்தேனே . நீங்க நம்ம அழகி தலைல அடிச்சத்தை.” என்றாள் கயலும் சிலுப்பிக்கொண்டு.
"நல்லா பார்த்தப்போ… உன் தொங்கச்சிக்கு.. இப்போ கல்யாணம் வேண்டாமாம். அதுக்கு பதிலா நம்மளை கல்யாணம் பண்ணிக்க சொல்லுறா. அதான், இம்புட்டு நல்ல ஐடியாவை தந்ததால செல்லமா அவ தலைல தட்டுனேன்.என்ன சொல்லுற புஜ்ஜி.. இப்படியே ஓடிடுவோமா" என்றான் சந்தோஷ். கயலை பார்த்து உல்லாசமாக சிரித்தவாறு.
அவன் கூறியதில் முன் பாதியை மட்டும் கருத்தில் கொண்டவளாய்,
"அடியாத்தி.. இங்க பாரு புள்ள.. உன்னை மாப்பிளை வீட்ல பொண்ணு கேட்டு வரவுமே, எங்க எல்லாருக்கும் இந்த சம்பந்தத்தில் முழு திருப்தி தெரியுமா. பையன் பேரு கதிர். சொந்தமா டெக்ஸ்டைல் கடை வச்சி இருக்காங்களாம். திருச்சில மட்டுமே நாலு கடை இருக்காம் அவங்களுக்கு. அப்புறம் புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணினு மொத்தம் பத்து டெக்ஸ்டைல் கடை இருக்காம் அழகி. நா மாப்பிளை போட்டோ கூட பாத்தேன் அம்புட்டு அழகா இருக்காக தெரியுமா. ஒங்க மச்சான் மாதிரிலாம் முசுடு போல தெரியல. பார்க்கவும் நல்ல குணமான ஆளா தான் புள்ள தெரியுறாரு..."
காயலின் 'முசுடு' என்ற வார்த்தையை வெகுண்டெழுந்த சந்தோஷ், "ஹே.. யாரடி முசுடுன்னு சொன்ன.." என்று குரலை உயர்த்தி அவன் கேட்டாலும். அவன் குரலில் கோபம் இல்லை.. வம்பிலுக்கும் நோக்கம் மட்டுமே இருந்தது.
தன்னவனை பற்றி அறியதவளா கயல். அவன் தன்னை வம்பிழுக்க தான் இப்படி கேட்கிறான் என்பதை புரிந்துக்கொண்டவள். அவனுக்கு பதில் அளிக்காமல். அழகியை நோக்கி,
"அழகி! இப்போ அவர்கிட்ட பேசி பாரு .. பிடிச்சாக்க மேற்கொண்டு பேசுவோம். இல்லாட்டி அடுத்த வரனை பார்க்க வேண்டியது தான் சரியா? இதுக்கு போய் இப்படி டல்லா இருக்கலாமா புள்ள. பாரு புது புடவைல செமையா இருக்க. மாப்பிள்ளை வீட்ல வந்து போனதுக்கு அப்பறம்.. நாம வீடியோ பண்ணலாம்.." என்று குதூகலமாக கூறியவளை வெற்றுப் பார்வை பார்த்த அழகி.
"வீடியோ தானே.. அது தராளமா பண்ணலாம் கயலு. ஆனா, இப்போ நீங்க எனக்கு இதுல உதவி பண்ண மாட்டீங்கன்னு தெளிவா புரிஞ்சுப்போச்சு. நானே என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கிறேன். நீங்க உங்க லவ்ஸ் வேலையை பாருங்க" என கூறிவிட்டு, தன் அறையை நோக்கி சென்றாள் அழகி.
*************
"பையன் பொண்ணுகிட்ட ஏதோ தனியா பேசனுமாம்" கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் குரல் எழுப்ப
அழகியின் தந்தை வேலுசாமி அழகியை நோக்கி, " தாயி..கதிர் தம்பிய மேல் தளத்துக்கு அழைச்சிட்டு போய் பேசுடா" என்றார் மகிழ்வாக.
வேலுசாமி… அழகூரின் முக்கிய பெரும்புள்ளிகளின் ஒருவர். ஊரின் நலனிற்காக பல நலத்திட்டங்களை தன் சொந்த செலவிலேயே செய்து வருபவர் என்பதால் அழகூர் மக்களிடம் அவருக்கென்று தனி மதிப்பு எப்போதும் உண்டு.
"பொண்ணு அம்சமா இருக்கா.. ஆனா என்ன ஒசரம் தான் கம்மியா இருக்கு"மாப்பிள்ளையின் அத்தைகளில் ஒருத்தர் கூற.
"அண்ணி! நம்ம கதிரும் ஒன்னும் அம்புட்டு ஒசரம் இல்லையே. அதனால ஜோடி பொருத்தம் அழகா தான் இருக்கு" என்று கூறி அந்த பெண்ணின் வாயை அடைத்தார் மற்றோரு பெண்மணி.
இங்கே இப்படி இருக்க, மேலே தன் அறைக்கு கதிரை அழைத்து சென்ற அழகி, எப்படி அவனிடம் இந்த ஏற்பாட்டை நிறுத்த உதவி கேட்பது என்று யோசித்தவாறு நின்றாள்.
அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளிடம் பேசவேண்டும் என்ற ஆவலில் 'அழகி' என்றழைத்து அவளை நோக்கி ஒரேட்டு எடுத்து வைக்கவும், அவனின் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.
ஃபோனில் பதட்டதுடன் பேசியவன். அழகியை நோக்கி, " சாரி அழகி.. ஒரு அவரசர வேலை. இப்போ நா அங்க போய் ஆகணும். உன்கிட்ட நிறைய பேசணும் போல இருக்கு. ஆனா.. இப்போ முடியாது. நா அப்புறம் உன்கிட்ட பேசுறேன். பை.." என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.
அவர்கள் இருவரும் இவ்வளவு விரைவாக திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்காத வேலுசாமி, கதிர் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டு அவசரமாக "என்ன தம்பி.. என்ன ஆச்சு. ஏன் இவ்வளவு பதட்டம்" என்றார் எதுவோ சரியில்லை என்ற உணர்வில்.
" திருச்சி கடைல ஃபயர் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சாங்க. நாங்க இப்போ அங்க இருந்தே ஆகணும். அதனால வேறொரு நாள் இந்த பங்க்ஷனை வச்சுக்கலாம்" என்றவன் அழகியின் வீட்டிலிருந்து, தன்னுடைய குடும்பத்தினருடன் விடைபெற்றான்.
'அப்பாடா.. அப்போ இனி கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாண பேச்சை எடுக்கமாட்டாங்க சந்தோசம்' என்றெண்ணியவள், 'முருகா...பாவம் அவங்க கடைக்கு எதுவும் பெருசா ஆகியிருக்க கூடாது' என்றும் வேண்டிக்கொண்டாள்.
வீட்டில் அனைவரும் கலவரத்துடன் இருக்க, அழகியின் முகத்தில் மட்டும் நிம்மதி பரவுவதை கண்ட சந்தோஷ் அவளிடம் வந்தான்.
"என்ன குட்டா.. நீ நினைச்ச மாதிரியே மாப்பிள்ளையை ஓட வச்சிட்டப் போல"
"ஹே சந்தோ.. ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் பாவம் அவங்க. ரொம்ப பெரிய பிரச்சனையா இருக்குமோ" என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
"தெரியலையே குட்டா... நா விசாரிச்சு சொல்லுறேன்" என்று சந்தோ கூறிக்கொண்டு இருக்கையிலேயே 'ஐயோ.. மாரியம்மா தாயி.. இந்த புள்ள இப்படி அதிர்ஷ்டம் இல்லமா வந்து பொறந்திருக்கே' என்று அழகியின் ஆயா மரகததின் குரல் திண்ணையிலிருந்து கேட்க. மொத்த குடும்பமும் அங்கே கூடியது.
"இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி ஒப்பாரி வைக்கிற ஆத்தா" என்றபடி அங்கே வந்தார் வேலூசாமியின் அண்ணனும், கயலின் தந்தையுமாகிய சரவணன்.
"சரவணா... என்னப்பா இப்படி கேக்குற..இதுக்கு முன்ன நம்ம அழகிக்கு சம்பந்தம் பேச வந்தவங்க வேண்டாம்னு சொல்லிபுட்டாக. இப்போ பாரு பொண்ணு பாக்க வந்ததுக்கே அவங்க கடை தீயில போயிடுச்சு. இப்படியே நடந்தா நம்ம புள்ளைக்கு ராசி இல்லைன்னு சொல்லிபுடுவானுங்களே இந்த ஊரு பயலுவ" என்று மரகதம் அவர் பாட்டிற்கு புலம்ப,
" அப்படி யாராச்சும் எம்புள்ளைய ஓரு வார்த்தை கொறைச்சு பேசட்டும். அப்பறம் இருக்கு பேசுரவைங்களுக்கு" என்றார் சரவணன்.
"மாமா சொல்லுறது சரி தான். நம்ம அழகிய பத்தி அப்படி இப்படினு எவனாவது பேசிடுவானா என்ன? இல்ல நாங்க தான் அப்படி பேச விட்டிடுவோமா அம்மாச்சி. நாம இதை பற்றியே பேசிக்கிட்டு இருக்கிறது அழகிக்கு தான் மனசு கஷ்டப்படும்" என்று சரவணனை பார்த்துக் கூறிய சந்தோஷை முறைத்துக்கொண்டு சென்றார் சரவணன்.
'நம்ம மாமனாருக்கு நம்ம மேல ரொம்ப பாசம் போல.. ரொமான்டிக் லுக் எல்லாம் விட்டுட்டு போறாரு' என்று தனக்குள்ளையே கிண்டலாக பேசிக்கொண்டிருந்த சந்தோஷின் பார்வையில்,
சற்று தள்ளி நின்று மாப்பிளை வீட்டினருக்காக வாங்கி வைத்த பலகாரங்களை எல்லாம் 'எனக்கு சோறு தான் முக்கியம்' என்று அழகி சாப்பிட்டுக் கொண்டிருப்பது பட .
'இதுயெல்லாம் எங்க திருந்த போகுது… சரியான சொத்துமூட்டை... இங்க இவ்வளவு அமளி துமலி நடக்குது. எதையும் கண்டுக்காம மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்காளே" என்று தலையில் அடித்துக்கொண்டான் சந்தோஷ்.
***********************************
அழகூர் தெற்கு, அந்த மச்சுவீட்டின் பெரிய அறையிலுள்ள ராட்ச நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பெரிய உருவத்திற்கு சொந்தக்காரன் தன் கையிலிருந்த அலைபேசியின் திரையில் தெரிந்த புகைப்படத்தை கைகளால் தடவியவாறு, "மதி... மதியழகி..." என்று ரசித்து கூறினான். அவன் ராஜன்.
வடக்கு அழகூரில் அழகியின் தந்தை வேலுசாமி எப்படியோ. அதே போல் தெற்கு அழகூரில் ராஜனின் தந்தை மாணிக்கம்.
'நீங்க நல்லவனா.. இல்லை கெட்டவனா..' என்று நாம் கேள்வி கேட்கும் வகையில் இருப்பவன். மொத்தத்தில் புரியாத புதிர் தான் இந்த ராஜன்.
"நீ எனக்கு தான்டி. அழகினு உன் பேரை சொன்னாலே செம கிக்காகுது தெரியுமா . இன்னும் கொஞ்சம் நாளு தான். என் வேலை முடிஞ்சதும். உன்னை துக்குறேன், தாலி கட்டி குடும்பம் நடத்துறேன். அதுக்கு நடுவில் எவன் வந்தாலும் அவன் காலி. அது உன் அப்பனா இருந்தாலும் தான் .
உன் அப்பன் அந்த வேலுசாமி மண்டைய நல்லா பிச்சிகட்டும். எப்படி முன்ன வந்த மூணு சம்பந்தமும் விட்டுப் போச்சு.. இப்போ வந்த இந்த சம்பந்தமும் ஏன் இப்படி ஆச்சுன்னு. இவங்கனு இல்ல ..இன்னும் எத்தனை பேரை உன் அப்பன் உனக்கு பார்த்தாலும். உன் கழுத்துல தாலி கட்டபோறது இந்த ராஜன் தாண்டி என் அழகியே... " என்றபடி திரையில் தெரிந்த அழகியின் உருவத்தில் இதழ் பதித்தான் ராஜன்.