ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதிரு என்னுயிரே..

Status
Not open for further replies.

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 01
பரபரப்பான காலை நேரமது, மணி எட்டை நெருங்கிக்கொண்டு இருந்தது. டி, எஸ் கம்பெனி உரிமையாளர்களான தினகரன் மற்றும் சுந்தரத்தின் வீட்டில் எப்போதும் போல அன்றும் சுந்தரத்தின் ஒரே மகளான ஜனனியை நித்திரையில் இருந்து எழுப்பும் பொருட்டு,“ ஜனனி எழுந்திரிடி, காலேஜ்க்கு டைம் ஆச்சு.” என்று சொல்லியபடி ஜனனியின் அறைக்குள் நுழைந்தார் அவளது தாயான வாணி.
ஜனனியோ, வாணி அழைத்தது கூட காதுகளுக்கு கேட்காமல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு, ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியிருந்தாள்.
வாணி அவள் அருகில் சென்று போர்வையை அவளிடம் இருந்து விலக்கியவர் , “ ஏய்! எவ்வளவு நேரம்டி தூங்குவ? இன்னைக்கு டான்ஸ் ப்ரக்ட்டிஸ் வேற இருக்கு என்று சொன்னியே, எழுந்திரிடி “ என்று சொல்லி ஜனனியின் காதுக்குள் கத்தினார்.
ஜனனியும் அவர் போட்ட சத்தத்தில் எழுந்து உட்கார்ந்து , அவிழ்ந்து கிடந்த அவளது தலை முடியை கோதி முடிந்து கொண்டவள், “ அம்மா எதுக்கு காதுல வந்து கத்துறீங்க? ஸ்ப்பா..ஒவ்வொரு நாள் காலைலயும் இதே வம்பா போச்சு உங்ககூட.” என்று கண்களை திறந்தும் திறக்காமல் அரை தூக்கத்தில் புலம்பினாள்.
வாணியோ, “ ஏன் டி சொல்ல மாட்ட? காலைல நேரத்துக்கு வந்து எழுப்பினாலும் கத்துற, எழுப்பாட்டியும் கத்துற. உனக்கும் உங்க அப்பாக்கும் என்னை ஏதும் சொல்லாட்டி அந்த நாளே விடியாதே. “ என்று சொன்னவர், அவள் அறையில் அங்கும் இங்குமாக கீழே சிதறி கிடந்த உடைகளை அலுமாரியினுள் எடுத்து வைத்துக்கொண்டே, “ எழு கழுதை வயசாகுது, இன்னும் உன்னோட ரூமை உனக்கு சுத்தமா வச்சுக்க தெரியல என்று திட்டிக்கொண்டார்.
ஜனனி தூங்கி வழிந்து கொண்டே, “ அம்மா ப்ளீஸ், உங்க புராணத்தை ஆரம்பிக்காதீங்க.ஏற்கனவே நான் ரொம்ப....“ என்று எதோ சொல்ல வந்து வார்த்தையை முழுங்க, அதை எல்லாம் கண்டுகொள்ளாத வாணி, “ தூங்கி வழியாதடி. டான்ஸ் ப்ரக்ட்டிஸ் இருக்கு என்று எதோ சொல்லிட்டு இருந்தியே போகலையா? “ என்று கேட்டார்.
ஜனனி ஏதோ நினைவு வந்தாற் போல் கண்களை திறந்து நேரத்தை பார்த்தவள், “ ஐயோ! டைம் ஆயிடிச்சே. “ என்றபடி கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்து, “ இத தானே நீங்க முதல்ல சொல்லிருக்கணுமா.. “ என்றவாறு அவளது துவாயை எடுத்துக் கொண்டு குளியல் அறையினுள் புகுந்து கொண்டாள்.
வாணியோ, “ இதை தானேடி சொல்லி கத்திட்டு இருந்தேன். “ என்ற படி அவளது அறையை சுத்தம் செய்து வைத்தவர், சமையல்அறை நோக்கி சென்றார்.
இதே சமயம் அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஹாலில் அமர்ந்து கொண்டு டிவியில் வியாபார செய்திகளை பார்த்து, அதை பற்றி கலந்துரையாடல் நடத்திக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைவர்களான தினகரன் மற்றும் சுந்தரம்,வாணி ஜனனியின் அறையில் இருந்து கீழே இறங்கி வருவதை கவனித்துவிட்டு , “ ஜனனி எழும்பியாச்சா? “ என்று கேட்டனர்
வாணியோ, “ஆமா, இப்போதான் சத்தம் போட்டு எழுப்பிட்டு வந்தேன். “ என்று சொல்ல, “ நீ கத்துற சத்தம் தான் இங்க வரைக்கும் கேட்டிச்சே. அவ கூட காலைல சண்டை போடாத என்று உனக்கு எத்தனை தரம் சொல்லிருக்கேன்? “ என்று தன் செல்ல மகளுக்காக பரிந்து பேசினார் சுந்தரம்.
வாணி சுந்தரத்தை முறைத்து பார்த்து , “ அப்பாக்கும் பொண்ணுக்கும் இதே வேலையா போச்சு. இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து என்னை பாடா படுத்துறீங்க. “ என்று சொன்னவர் சமையல் அறையினுள் புகுந்து கொண்டார்.
தினகரனோ, “ காலைலயே உங்க செல்ல சண்டைகளை தொடங்கிருவீங்களே!” என்று சொல்லி கண்ணாடியை துடைத்து அணிந்து கொண்டு தொலைக்காட்சியை பார்க்க தொடங்கிவிட்டார்.
அப்போது, “ வீடு ரொம்ப அமைதியா இருக்குல!அண்ணா சீக்கிரமா களம்பிட்டான் போல“என்றபடி கனிக்கா மாடிப்படிகளில் இருந்து இறங்கி வர, “ஆமா நேற்று நைட் சொல்லிட்டு இருந்தான் ஏதோ மீட்டிங் இருக்கு நேரத்துக்கு போகணும்னு.” என்றவாறு அவளின் பின்னால் வந்தான் அவளின் அண்ணன் கனிஷ்டன்.
தினகரனோ அவரது இரட்டை பிள்ளைகள் இருவரையும் பார்த்து, “ குட் மோர்னிங். “என்று சொல்ல இருவரும் தினகரன் மற்றும் சுந்தரத்தின் இரு பக்கத்திலும் அமர்ந்தவர்கள், சோம்பல் முறித்துக்கொண்டே காலை வணக்கத்தை சொல்லிக்கொண்டார்கள்.
இவர்களில் சத்தம் கேட்டு சமையல் அறையில் நின்ற கௌரி, “ வாணி, கேஸ்ல குழம்பு வச்சிருக்கேன்,கொஞ்சம் பார்த்துக்கோ நான் பசங்களுக்கு காபியையும் பாலயும் கொடுத்துட்டு வந்துடுறேன். “ என்றவர் இரு கப்களை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தார்.
கனிக்கா மற்றும் கனிஷ்டன் கௌரியிடம், “குட்மோர்னிங்மா” என்று ஒருசேர சொல்ல, அவர் கையில் வைத்திருந்த பாலை கனிஷ்டனுக்கும், காபியை கனிக்காவிற்கும் கொடுத்து ,அவர்கள் இருவரின் தலையையும் கோதி விட்டவர்,“ சீக்கிரம் குடிச்சுட்டு போய் ரெடி ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்,டைம் ஆச்சு “ என்றவர் அவரது வேலைகளை பார்க்க சென்றுவிட்டார்.
கனிக்கா காபியை குடித்துக்கொண்டே, “ மாமா, ஜனனி இன்னும் எழுந்திரிச்சு வரலையா? “ என்று கேட்க, “ அவ எப்போ டைம்கு ரெடி ஆகிருக்கா? அவ லேட்டா ரெடி ஆகிட்டு,கடைசில நம்மளால தான் அவ காலேஜ் போக லேட் ஆனா மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணுவா. இதுதானே வழமை. “ என்றான் கனிஷ்டன்.
தினகரனோ இதை கேட்டு புன்னகைத்துக் கொள்ள, “ என்னோட பொண்ண ஏதும் சொல்லாம உங்க யாராலயும் இருக்க முடியாதே. “ என்று சொன்ன சுந்தரமும் சிரித்துக்கொண்டார்.
தினகரன் மற்றும் சுந்தர் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.சிறு வயதில் இருந்தே உற்ற தோழர்கள். இருவருக்கும் படிப்பதற்கு வசதி வாய்ப்புக்கள் இருக்கவில்லை என்றாலும் சிறு வயதில் இருந்தே கிடைக்கும் வேலைகளை செய்து சிறுக சிறுக பணம் சேர்க்க தொடங்கினர்.
இளம் வயதை எட்டியதும் சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்து, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், ஹோல் சேல் கடைகள், உணவகங்கள் என சிறிது சிறிதாக வியாபாரங்களை ஆரம்பித்து இன்று டி. எஸ் கம்பெனி என்ற பெயரில் எல்லா வியாபாரங்களையும் உள்ளடக்கியதான ஒரு கம்பெனியை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.
தினகரனின் தங்கை தான் வாணி. தங்கள் நட்பை தொடரும் விதமாக வாணியை சுந்தரத்துக்கு திருமணம் செய்து வைத்தார் அவர்.
இடை நடுவில் தினகரன் அவரது மாமன் மகளான கௌரியின் மேல் சிறுவயதில் இருந்தே காதல் கொண்டிருக்க, வாணி மற்றும் சுந்தரத்தின் திருமணத்தை தொடர்ந்து தினகரன் மற்றும் கௌரியின் திருமணமும் நடந்து முடிந்தது.
நால்வரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ தொடங்கியவர்கள் இன்றுவரை ஒற்றுமையாக அவர்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 2

குளித்து முடித்து வந்த ஜனனி, வாணி அடுக்கி வைத்திருந்த உடைகளை மீண்டும் கலைத்து, அதிலிருந்து ஒரு ஜீன்ஸ் மற்றும் கிராப் டாப்பை எடுத்து அணிந்தவள் , தலை முடியை கோதி பன் கொண்டை போட்டு அவளது தோள்பையையும் மாட்டிக் கொண்டு குடுகுடுவேன மாடிப்படிகள் இறங்கி வந்தாள்.

இருபத்திரெண்டு வயது நிரம்பிய பெண்ணவள் ஜனனி குறையும் இன்றி நிறையும் இன்றி நடுநிலையான அழகை கொண்டிருப்பவள். எந்த உடை அணிந்தாலும் அது அவளுக்கு கச்சிதமாக பொருந்தும். ஆனால் அவள் அதிகம் விரும்பி அணிவது என்னவோ மார்டன் உடைகளைத்தான்.

சுந்தரம் ஹாலில் டைன்னிங் டேபிளில் இருந்து சாப்பிடுக்கொண்டு இருந்தவர் ஜனனி வருவதை பார்த்தவுடன் , “ வாம்மா, உக்காரு சாப்பிடலாம். “ என்றார்.

ஜனனியோ, “அப்பா, அதுக்கு எல்லாம் நேரம் இல்லை. டான்ஸ் ப்ரக்டிஸ்க்கு டைம் ஆச்சு.“ என்றவள், சாப்பிடுவதற்காக வந்து கொண்டிருந்த கனிஷ்டனை பார்த்து, “ டேய்! காலேஜ்க்கு நேரமாச்சுடா. என்ன கொண்டு ட்ரோப் பண்ணிடு. “ என்றாள்.

கனிஷ்டனோ, “ அட போடி, செம்ம பசியில இருக்கேன். சாப்பிட்டுட்டு வேணா உன்னை கொண்டு காலேஜ்ல விடுறேன். “ என்று சொல்லி அங்கு அமர்ந்து கொண்டவன், “ அத்தை, சாப்பாட எடுத்து வைங்க. “ என்றான்.

வாணியும் அவனுக்கு பரிமாற ஆயத்தம் ஆக, பக்கத்தில் நின்ற கௌரியோ, “ஏன்டா, அவதான் காலேஜ்க்கு லேட் ஆகுது என்றால! அவளை கொண்டு விட்டுட்டு வந்து சாப்பிடேன்டா. “ என்றார்.

அவனோ, “ காலேஜ் போகணும் என்று அவ்வளவு அக்கறை இருக்குறவ நேரத்துக்கு எழும்பி ரெடியாகி இருக்கணும். இப்படி கடைசி நேரத்துல வந்து அவசர படுத்தினா நான் என்ன பண்றது? “ என்று கேட்டான்.

ஜனனியோ, “ அதெல்லாம் தெரியாது, என்ன காலேஜ்ல ட்ரோப் பண்ணிட்டு வந்து நீ கொட்டிக்கோ. “ என்றவள் சாப்பிட அமர்ந்திருந்தவனின் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.

கனிஷ்டனோ, “ ஏய்! கையை விடுடி, ஒவ்வொரு நாளும் உன்கூட இதே தொல்லையா போச்சு. “ என்று சொல்லிக்கொண்டே ஜனனியுடன் இழுபட்டு செல்ல, வாணியோ, “ சாப்பிட உக்கார்ந்த புள்ளைய இழுத்துட்டு போறா பாரு. “ என்று சொல்லி ஜனனிக்கு திட்டிக் கொண்டார்.

தினகரன் மற்றும் சுந்தரம் உணவருந்திக் கொண்டே நடப்பதை பார்த்து சிரிக்க, “ சும்மா பிள்ளையை திட்டாத வாணி, சின்ன பொண்ணு அவ. “ என்றார் கௌரி.

வாணியோ, “ இப்படி செல்லம் கொடுத்தே மூணு பேரும் அவளை கெடுத்து வச்சிருக்கீங்க. நாளைக்கு கல்யாணம் நடந்தா இவ எப்படி குடும்பம் நடத்துவா? “என்று கேட்டார்.

தினகரனோ, “ ஏம்மா, கல்யாணம் பண்ணி அவ வேற வீட்டுக்கு போக போற மாதிரி பேசிட்டு இருக்க. நம்ம வீட்டுல நம்ம கூடத்தானே இருக்க போறா. நாங்களே அவளை கவனிச்சுப்பம். “ என்று சொல்ல, கௌரியும், “ அதானே என்னோட மருமகளை நான் பார்த்துப்பேன். “ என்றார்.

வாணி வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்டு , “ என்னவோ பண்ணுங்க. “ என்றவர் சமையல் அறையினுள் நுழைந்து கொண்டார்.

மறுபக்கம் கனிஷ்டன் ஜனனியை பைக்கில் எற்றிக் கொண்டு வந்து காலேஜில் விட்டவன், “ இனியாவது டைமுக்கு ரெடியாகுடி, என்ன போட்டு படுத்தாத. இதுக்குள்ள பைக்ல தான் கொண்டு விடணும் கார் வேணாம் என்று அதுக்கொரு சண்டை. “ என்றான்.

ஜனனியோ, “ பின்ன கார்ல வந்தா ட்ராபிக்ல மாட்டிக்கிட்டு யாரு அவஸ்த்தை படுறது. பைக் என்றா புகுந்து புறப்பட்டு வந்துடலாம். “ என்றவள், “ சரி நான் கிளம்புறேன். ஈவினிங் கால் பண்றேன் வந்து பிக் அப் பண்ணிக்கோ. “ என்றவள் ஓட்டமும் நடையுமாக கல்லூரி வளாகத்தினுள் புகுந்தாள்.

காலேஜ்களிற்கு இடையிலான நடன போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, அந்த நடன போட்டியில் ஜனனி படிக்கும் பெண்கள் காலேஜை முன்னிலை படுத்தி அவளும் இன்னும் சில மாணவிகளும் போட்டியில் பங்குபேற தெரிவு செய்யப்பட்டு இருந்தனர்.

அதற்கான பயிற்சி காலேஜின் மண்டபத்தில் நடந்து கொண்டிருக்க, மூச்சு வாங்கிய படியே ஓடி வந்து மண்டபத்தினுள் புகுந்தாள் ஜனனி.

அங்கு ஏற்கவனே பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க, “ ஐயோ! போச்சு. இந்த சரணித் பய என்ன வச்சு செய்ய போறான். “ என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, “வந்ததே லேட்டு, இதுக்குள்ள வாசல்ல நின்னுட்டு என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க மேடம்? “ என்று கணீர் குரல் ஒன்று அங்கே கேட்டது அவளுக்கு.

ஜனனியோ கண்களை மூடி திறந்தவள் , “ ஐயோ போச்சு. “ என்ற படி நிமிர்ந்து பார்க்க, கைகளை கட்டிக்கொண்டு, விட்டால் வெடித்து விடும் என்பது போல இறுக்கமான டிஷிர்ட் ஒன்றை அணிந்து கொண்டு நின்றிருந்தான் டான்ஸ் மாஸ்டர் சரணித்.

அவளோ, “ சர..”என்று ஆரம்பித்து அவளை சுற்றி இருக்கும் சக மாணவிகளை பார்த்தவள், “மாஸ்டர், அது வந்து நான் கரெக்ட் டைம்க்கு ரெடி ஆகிட்டேன். மாமா லேட் பண்ணிட்டார் கொண்டு விடுறதுக்கு. “ என்று சொல்லி தலையை சொறிந்து கொண்டாள்.

சரணித்தோ “ ப்ரக்டிஸ் ஸ்ட்ராட் பண்ணதுல இருந்து இந்த டயலாக்ல ஒரு வார்த்தை மாறாம அப்படியே சொல்லிட்டு இருக்க. இது பொய்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.“ என்று சொல்லி அவளை மேலும் கிளுமாக பார்த்தவன், “ இனி லேட்டா வந்த டீம விட்டு தூக்கிடுவேன், கோ அண்ட் ஜோயின் வித் யுவர் டீம்.” என்றான்.

ஜனனியோ, “நீங்களும் ஒரு மாசமா இதையே தான் சொல்லிட்டு இருக்கீங்க மாஸ்டர். “ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், தோள்பையை கீழே போட்டு விட்டு அவளது நடன குழுவோடு இணைந்து கொண்டு அன்றைய நாளுக்கான பயிற்சியை ஆரம்பித்தாள்.

போட்டிகள் நெருங்கிக் கொண்டு இருந்ததால் பயிற்சியை கடுமையாக நடத்திய சரணித் அனைவரையும் ஒரு வழி பண்ணியிருந்தான்.

பதினோரு மணியளவில் பயிற்சிகளை முடித்தவன், “ ஒகே கைஸ். டுடே ப்ரக்டிஸ முடிச்சிக்கலாம். எல்லாரும் கிளாஸ் போங்க. நாளைக்கு ஷார்ப்பா ஏழு மணிக்கு எல்லாரும் இங்க இருக்கணும்.” என்று சொல்லி ஜனனியை அழுத்தமாக பார்த்தவன், “நாளைக்கு ஏழு மணிக்கு இருக்கணும். “என்று மீண்டும் சொல்லி அங்கிருந்து சென்றான்.

அந்த நடன குழுவில் இருந்த ஜனனி உட்பட நான்கு பெண்களும் சரணித் அங்கிருந்து சென்றவுடன்,ஸ்டேஜிலே கால்களையும், கைகளையும் நீட்டி படுத்தவர்கள் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, அவரவர் வகுப்புக்களுக்கு சென்றனர்.

ஜனனி கொமெர்ஸ் டிபார்ட்மென்டில் அவளது வகுப்புக்கு செல்ல, அங்கு கணக்கியல் ஆசிரியரான குமார் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

ஜனனியோ, “எக்ஸ்கியூஸ்மீ சார் “ என்று கேட்டு வகுப்பினுள் நுழைய, “ கிளாஸ்க்கு வாற நேரமா இது. இரண்டு பொஷன் நடத்தி முடிஞ்ச அப்புறம் வாற, உனக்கு என்ன புரிய போகுது? “ என்று கேட்டார்.

ஜனனியோ, “ டான்ஸ் ப்ரக்ட்டிஸ் சார், அதுதான். “ என்று சொல்ல, “ ஒவ்வொரு நாளும் இதையே சொல்லுற. இங்க இருக்குற மற்ற கேர்ள்ஸ் யாருமே போகல நீ மட்டும்தான், எப்போ என்ன டான்ஸ் கம்பிடிஷன் வச்சாலும் முதல் ஆளா ஓடுற. நீ எங்கயாசும் போய் என்னவோ பண்ணு , ஆனா எனக்கு மார்க்ஸ் குறைய கூடாது.” என்று சொல்லி அவளுக்கு திட்டியவர், அவளை உள்ளே போகும்படி சைகை செய்தார்

ஜனனியும் அவளது ஆருயிர் தோழியான ஹரிணி பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டவள், “ இந்த சொட்டை தலையனுக்கு வேற வேலை இல்ல. எப்போ பாரு மார்க்ஸ் மார்க்ஸ் என்று உசிரை வாங்குது. “ என்றாள்.

ஹரிணியோ, “ சரி, சரி அமைதியா இரு. நீ பேசுறத பார்த்தா அதுக்கு வேற திட்டுவாரு. “ என்று இரகசியமாக சொன்னவள், தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜனனியிடம் கொடுத்தாள்.

இடைவேளை நேரத்தில் ஹரிணி எடுத்து வந்த உணவை ஜனனியுடன் பகிர்ந்து கொண்டவள், “ எக்கோனாமிக்ஸ் அசைமென்ட் முடிச்சிட்டியாடி? “ என்று கேட்டாள்.

ஜனனியோ விழிகளை விரித்துக் கொண்டு தலையில் கையை வைத்தவள், “ அச்சச்சோ, மறந்துட்டேன்டி. “ என்றாள்.

ஹரிணியோ, “ நைட் அத்தனை தடவை கால் பண்ணி சொன்னனே உன்கிட்ட. அப்படி இருந்தும் மறந்துட்டு வந்திருக்க. இன்னைக்கு சார்கிட்ட வாங்கி கட்டிக்க போற. “ என்றாள்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, “ ஹேய், சார் இன்னைக்கு ரெட் கலர் ஷர்ட், பிளாக் கலர் பான்ட்ல செம்மையை இருக்காரு. இன்னைக்கு முழுக்க அவரை சைட் அடிச்சிட்டே இருக்கலாம். “ என்றாள் சகானா.

அப்போது வெளியில் இருந்து வகுப்புக்குள் நுழைந்த அந்த வகுப்பு மாணவி ஒருத்தி, “ சார் வந்துட்டு இருக்காரு. “என்று சொல்லி அவளது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஜனனி மற்றும் ஹரிணி ஓடிச்சென்று கைகளை கழுவியவர்கள் வந்து அவர்கள் இருக்கையில் அமரவும் அவர்களது எக்கனாமிக்ஸ் ஆசிரியர் துருவன் வகுப்புக்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.



 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 03

கம்பீரமான தோற்றமும், பார்ப்பவர்களை உடன் கவர்ந்து விடும் அழகையும் கொண்டிருப்பவன் துருவன். பெண்கள் கல்லூரி ப்ரோபஸரான அவன் பின்னால் பெண்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு சுற்றினாலும் எப்போதும் அவர்கள் அவனை நெருங்க அவன் இடம் கொடுத்தது இல்லை.

சுட்டெரிக்கும் அவன் பார்வையாலயே அனைவரையும் அவனில் இருந்து பத்தடி விலகி நிற்க செய்வான். அவனது நடத்தையாலே அந்த கல்லூரியில் அவனுக்கேன்று தனி மரியாதையும், விசிறிகள் பட்டாளமும் இருந்தது.

அப்படி பட்ட துருவன் எகனாமிக்ஸ் பாடத்திற்காக வகுப்பைறைக்குள் நுழைந்தவன், மரியாதை நிமிர்த்தம் எழுந்து நின்ற அனைவரையும் அமர சொல்லி விட்டு, “ அசைமெண்ட்ஸ சப்மிட் பண்றதுக்கு லாஸ்ட் டேட் இன்னைக்குத்தான். ஸோ எல்லாரும் அசைமெண்ட்ஸ கொண்டு சப்மிட் பண்ணுங்க. “ என்று சொல்லி அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

பெண்கள் அனைவரும் அடித்து பிடித்துக் கொண்டு, அவனிடம் அசைமெண்ட்ஸை கொடுக்க, ஜனனி மட்டும் திரு திருவென முழித்த படி அமர்ந்திருந்தாள்.

அவனின் கைகளுக்கு கிடைத்த அனைத்து அசைமெண்ட்ஸையும் சேகரித்து மேசையில் அடுக்கிய துருவன் , எழுந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு, “ யாராவது அசைமெண்ட் முடிக்காம இருக்கீங்களா? அப்படி இருந்தா நீங்களே எழுந்து நில்லுங்க. நானா கண்டு பிடிச்சா தண்டனை பெருசா இருக்கும். “ என்றான்.

ஹரிணியோ, “ஜனனி எழுந்திரிடி. கண்டு பிடிச்சா பிரச்சனை ஆயிடும் “ என்று சொல்ல, அவளும், “ இன்னைக்கு நம்ம செத்தம். “ என்று நினைத்துக்கொண்டே மெதுவாக எழுந்து நின்று , சுற்றிமுற்றி வகுப்பறையை பார்த்துக்கொண்டாள்.

துருவனோ , “ எதுக்கு கிளாஸ சுற்றி பார்க்குற? வழமை போல நீ மட்டும் தான் வேர்க் முடிக்கல, கிளாஸ்ல இருக்குற அத்தனை பேரும் சொல்ற வேலையை முடிச்சுட்டு வரும் போது உனக்கு மட்டும் என்ன? “ என்று ஆசிரியர்களுக்கே உரித்தான தொனியில் கேட்டான்.

ஜனனி தலைமுடியை காதின் பின் ஒதுக்கி கொண்டே , “ முக்காவாசி பொண்ணுக உனக்கு ஐஸ் வச்சு கரெக்ட் பண்றதுக்காக நீ சொன்னத எல்லாம் செய்றாளுக, நான் எதுக்கு அதை பண்ணனும்? “ என்று முணுமுணுக்க, அவளது வாயின் அசைவை கண்டு கொண்ட துருவன், “ இப்போ என்ன சொன்ன?“ என்று கேட்டான்.

ஜனனியோ, “ ஒன்னுமில்லையே “ என்று கைகளை விரித்துக் காட்டி பதிலளிக்க, “முதல்ல மரியாதை கொடுத்து பழகு.நான் உன்னோட ப்ரோபெஸ்ர் அதை மறந்துடாத.” என்றவன், அவனது போனை எடுத்து நேரத்தை பார்த்துவிட்டு, “ போய் கிரௌண்ட சுத்தி பத்து ரவுண்ட் ஓடிட்டு வந்து உன்னோட அசைமெண்ட முடிச்சு கொடு. “என்றான்.

ஜனனி வெளியில் எட்டி பார்த்தவள், “ சார் கோடை வெயில் பல்ல காட்டி சிரிக்குது. இந்த வெயில்ல எப்படி சார் கிரௌண்ல ஓட முடியும்? “ என்று கேட்க, “ டூ வாட் ஐ செ. “ என்று கண்டிப்பாக சொன்னான் துருவன் .

ஜனனியும் வேறு வழியின்றி, தோள் பையில் வைத்திருந்த தொப்பியை எடுத்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேற, அவளை தடுத்து அவள் கையில் வைத்திருந்த தொப்பியை பறித்த துருவ், “ இப்போ போ. “ என்றான்.

ஜனனி வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து செல்ல, ஹரிணியை தவிர வகுப்பு மாணவிகள் அனைவரும் அவளை பார்த்து சிரிக்க தொடங்கினர் .இதை பார்த்து எரிச்சல் அடைந்த துருவன் மேசையில் ஓங்கி தட்டியதில் அந்த வகுப்பறையே குண்டூசி விழுந்தால் கேட்க்கும் அளவிற்கு அமைதியானது.

மனதினுள் புலம்பிக்கொண்டே கிரௌண்ஸிற்கு சென்று வேண்டாவெறுப்பாக ஓடிக்கொண்டிருந்த ஜனனி மேலே நிமிர்ந்து அவளது வகுப்பை பார்த்தவள், “ பாவி பய, நான் நிம்மதியா இருக்கவே விட மாட்டான்.“ என்று நினைத்துகக்கொண்டாள்.

அந்த நேரத்தில் ஆர்ட்ஸ் டிபார்ட்மென்டில் இருந்து கேன்டீனுக்கு வந்துகொண்டிருந்த சரணித், ஜனனி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து , “ ஏய் அடிக்குற வெயில்ல எதுக்கு ஓடிக்கிட்டு இருக்க? என்ன வேண்டுதல்?“ என்று கிரௌண்டை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வலைகளை பிடித்து நின்றபடி நக்கலாக கேட்டான்.

ஜனனி சரணித்தின் குரல் கேட்டு திரும்பியவள், “ ஆஹ்.. வேண்டுதலாம்ல வேண்டுதல், அஸைமெண்ட் கொடுக்கல, அந்த துருவன் பனிஷ்மென்ட் கொடுத்துட்டான் . “ என்று மூச்சு வாங்கிக்கொண்டே பதிலளித்தாள்.

சரணித், “ ஓஹ், என்னால பண்ண முடியாததை அவன் பண்றான்.“என்றவன் வேறு ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

ஜனனியோ, “அவன்பாட்டுக்கு பேசிட்டு போறான்..வாத்தி எல்லாருமே லூசாத்தான் இருப்பாங்க போல. “ என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் மீண்டும் ஓட தொடங்கினாள்.

பத்து ரவுண்கள் ஓடி முடித்த பின்னர் களைப்பாக வந்து அங்கிருந்த மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தவள், “இனி போய் அஸைமெண்ட் வேற முடிச்சு கொடுக்கணுமே. “ என்று சொல்லி அலுத்துக்கொள்ள, “ இந்தா முதல்ல தண்ணிய குடி. “ என்று சொல்லி அவள் முன் தண்ணீர் போத்தலுடன் வந்து நின்றான் சரணித்.

அவளோ மூச்சு வாங்கியபடி அமர்ந்திருக்க, தண்ணீர் போத்தலின் மூடியை திறந்து அவளின் கையில் திணித்தவன், “சீக்கிரம் கிளாஸ்க்கு போ “என்று சொல்லி அங்கிருந்து சென்றான்.

ஜனனியோ, தண்ணீரை ஒரே முடலில் குடித்து முடித்தவள், “ரொம்ப பசிக்குது.ஏதாச்சும்.....“ என்று இழுக்க , சிறிது தூரம் சென்றிருந்த சரணித் அவளது வகுப்பறையை பார்த்துக்கொண்டே , “கிளாஸ்க்கு போ, பசி எல்லாம் பறந்து போய்டும் “என்றபடி சென்றான்.

ஜனனியோ, “வாங்கித்தர மாட்ட எண்டா அத சொல்லிட்டு போ எதுக்கு கிளாஸ்ஸ நியாபக படுத்துற... “என்று சொல்லிக் கொண்டே அவளது வகுப்பறறை பார்க்க அங்கே துருவன் நின்று அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.

ஜனனியோ, “அச்ச்சோ போச்சு.. பேசியே நம்மள சாவடிக்க போறான். “என்று நினைத்தவள் ஒரு கணம் கூட தாமதிக்காமல் குடு குடுவென்று அவளது வகுப்பறையை நோக்கி ஓடினாள்.

ஜனனி இளைத்துக் கொண்டு வந்து துருவன் முன் நிற்க,கைகளை கட்டி ஜனனியை முறைத்தவன், “ பனிஷ்மென்ட் கொடுத்துத்தான் உன்னை அனுப்பினேன். லவ் பண்ணிட்டு வர சொல்லி அனுப்பல. உன்னோட லவ் ட்ராமா எல்லாம் வெளியில வச்சுக்கோ.” என்று கோபமாக அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னான்.

இதை கேட்டு ஜனனிக்கு கோபம் வந்தாலும் அதை காட்டிக் கொள்ள முடியாததால் கண்கள் குளமாகி போனது. அவள் கண்கள் கலங்குவதை பார்த்த துருவன் ,நெற்றியை நீவியபடி “ இப்போதான் சொன்னன். இங்க ட்ராமா எல்லாம் போடாதனு . “ என்றவன் அவளை எரிச்சலாக பார்த்து வகுப்பினுள் நுழைய, திரும்பி நின்று கண்களால் வழிந்த நீரை துடைத்த ஜனனி,வகுப்பறையினுள் சென்று அவளது அசைமெண்டை எழுத தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கான வகுப்புக்களும் நிறைவடைய, அனைத்து மாணவிகளும் வகுப்பில் இருந்து கலைய தொடங்கினர்.

துருவன் அங்கேயே அவனது இருக்கையில் அமர்ந்தவன் , ஜனனி அவளது வேலையை முடிக்கும் வரை காத்திருந்து அவளிடம் அசைமெண்டை வாங்கி விட்டே அங்கிருந்து சென்றான்.

ஜனனி சோர்ந்த முகத்துடனே வெளியே வந்தவள் அவளுக்காக காத்திருந்த ஹரிணியின் அருகில் சென்று, “ சரிடி, போகலாம். “ என்று சோர்வான குரலில் சொன்னாள்.

ஹரிணியோ ஜனனியை கூர்ந்து கவனித்துக்கொண்டே, அவளது ஸ்கூட்டியை எடுத்தவள்“ நான் ட்ரோப் பண்ணவா இல்ல கனிஷ் வந்து பிக்அப் பண்ணிப்பாரா? “என்று கேட்டாள்.

ஜனனியோ, “ இருடி போன் பண்ணி கேட்டுடுறேன். “ என்றபடி, கனிஷ்டனிற்கு அழைத்து கேட்க, அவனோ, “வேலையா இருக்கன் . முடிய லேட் ஆகும் நீ ஹரிணி கூட வீட்டுக்கு போய்டு.“ என்றான்.

ஜனனியும் ஹரிணியுடன் செல்ல ஆயத்தமாக, ஹரிணியோ, “ இப்போ கொஞ்ச நாளா நீ பண்றது எதுவும் சரியா படல..அது மட்டும் இல்ல கொஞ்ச நேரத்துக்கு ஜாலியா பேசுற அப்புறம் அப்படியே டவுன் ஆகி ஏதோ ஒரு யோசனைல போயிடுற என்னதான் உன்னோட பிரச்சனை? “ என வினவினாலும் அவளுக்கும் சில விஷயங்கள் மனதை துளைத்துக் கொண்டே இருந்தது.

ஜனனியோ, “அதெல்லாம் ஒன்னும் இல்லடி. நான் நார்மலாத்தான் இருக்கேன். “என்று சொல்லி சிரிக்க,ஹரிணியோ, மெலிதாக புன்னகைத்தவள், “நான் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்து உன்கூடவே இருக்கேன். நீ நார்மலா இருக்கியா இல்லையானு கூட எனக்கு தெரியாதா?“ என்று கேட்க, ஜனனிதான் மௌணித்து போனாள்.

மீண்டும் பேச ஆரம்பித்த ஹரிணி, “இதெல்லாம் எங்க இருந்து ஆரம்பிச்சுதுனு எனக்கு தெரியும்.ஒரு விஷயத நல்லா தெரிஞ்சுக்கோ சரணித் ஜஸ்ட் உன்னோட டான்ஸ் மாஸ்டர் அவளவுதான்.” என்றாள்.

ஜனனியோ, “ஹேய் நீயுமா!” என்று ஆரம்பிக்க, “நான் உன்னை தப்பா சொல்லல ஜனனி. ஆனா அவன் தப்பானவன் அதனால அவன்கிட்ட இருந்து விலகி இருந்துக்கோனு சொல்றன். “ என்று சொல்லி பெருமூச்சு விட்ட ஹரிணி, “ இதை பத்தி இனி ஏதும் பேச வேணாம்.வீட்டுக்கு போகலாம் வண்டில ஏறு. “ என்று சொல்லி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, ஜனனியும் எதுவும் பேச முடியாதவளாக அவளுடன் ஏறிக்கொண்டாள்.

வழமையாக சிரித்து பேசி கலகலப்பாக செல்லும் அவர்களது பயணம் இன்று அமைதியாகவே சென்று கொண்டிருந்தது.

 

Amutha novels

Well-known member
Wonderland writer
த்தியாயம் 04

கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஹரிணியின் ஸ்கூட்டி நேராக ஜனனியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. பைக்கில் இருந்து இறங்கிய ஜனனிக்கு ஹரிணியிடம் மனம் விட்டு சிறிது நேரம் பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்ற “உள்ள வா.” என்று ஹரிணியை அழைத்தாள்.

ஆனால் ஹரிணியோ கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ,“இல்லடி லேட் ஆச்சு நான் களம்புறேன் “என்று சொல்லி ஸ்கூட்டியை நகர்த்த ,வீட்டின் வெளியே நின்று மரங்களுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்த கௌரி ” என்னம்மா வீட்டுக்கு வந்துட்டு வாசலோட போற உள்ள வாமா.” என்றழைத்தார்.

ஹரிணியும் அவரின் வார்த்தையை மறுக்க முடியாதவளாக ஜனனியுடன் உள்நுழைய, கையில் வைத்திருந்த வாளியை கீழே வைத்த கௌரி, “உள்ள போய் பேசிட்டு இருங்க காபி எடுத்துட்டு வாறன் ”என்றபடி அவர்களுடனே வீட்டினுள் நுழைந்தார்.

ஜனனி ஹரிணியை அழைத்துக்கொண்டு நேராக பேல்கனியை நோக்கி சென்றவள்,சிறிது நேர அமைதிக்கு பின்னர் அவளின் மௌனம் கலைத்து “ஹரிணி, அதுவந்து நான் ஒன்னு சொல்லணும்.. அதுவந்து... சரணி... த்“ என்று இழுக்க, ஹரிணி கைகளை கட்டிக்கொண்டு அவள் சொல்ல போவதை கேட்க ஆயத்தமாக நின்றிருந்தாள்.

இடையில் நுழைந்த கௌரி, “இந்தாங்க காபி எடுத்துக்கோங்க. “என்று சொல்லி காபி கப்பை நீட்ட,அவரிடம் இருந்து அதை வாங்கிக்கொண்ட இருவரும் அவர் எப்போது அங்கிருந்து செல்வார் என்பதை போன்று அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் அவர்களது மன ஓட்டத்தை அறியாத கௌரி வழமை போல் இருவரிடமும் பேச ஆரம்பிக்க,ஜனனி மற்றும் ஹரிணியும் மரியாதை நிமிர்த்தம் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு தலையசைத்து நின்றனர்.

அந்த சமயத்தில்,“கௌரி... கௌரி... “ என்ற தினகரனின் குரல் கௌரியின் காதை எட்ட , “இதோ வந்ததும் ஆரம்பிச்சுட்டார்.நான் இல்லாம ஒரு வேல ஓடாதே இவருக்கு. நிம்மதியா பேச கூட விடமாட்டாரு “ என்று பொரிந்து கொண்டே , தினகரனை பார்க்க ஓடிச்சென்றார் கௌரி.

அவர் சென்றதும் ஜனனி கண்களை மூடி தன்னை ஆசுவாசபடுத்தியவள்,“ இங்க பாரு ஹரிணி நீ இன்னுமே சரணித்த தப்பா நினைச்சுட்டு இருக்க. நீங்க நினைக்குற மாதிரி அவன் கெட்டவன் எல்லாம் இல்ல.... “என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ என்ன ஹரிணி உன்னோட ப்ரென்ட் யாருக்கோ கேரக்டர் செர்டிபிகேட் கொடுக்குற மாதிரி தெரியுது. “ என்ற ஒரு கணீர் குரல் கோபம் கலந்த தொனியில் கேட்டது.

திரும்பி பார்த்த ஹரிணி,அங்கே ஆறடி உயரத்தில் நின்றிருந்த தினகரன் மற்றும் கௌரியின் மூத்த மகனான துருவனை பார்த்து,“துருவ்.. ச்சீ…சார்…”என்று இழுத்து எச்சிலை முழுங்க, ஜனனியோ அவனை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள்.

ஜனனியை முறைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்த துருவன், “ ஹரிணி உன்னோட ப்ரெண்டுக்கு தான் மூளைல சரக்கு இல்ல,கண்ட கண்ட நாய்க்கு எல்லாம் செர்டிபிகேட் கொடுத்துட்டு இருக்கா.உனக்கு என்னாச்சு? எல்லாமே தெரிஞ்சும் இவ சொல்றத எல்லாம் கேட்டுட்டு இருக்க?“ என்று கேட்க, “ஏய்!.. “ என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி துருவனை நோக்கி திரும்பிய ஜனனியின் விரலை எட்டி பிடித்து முறுக்கிய துருவன், “இன்னொரு முறை என்கிட்ட கைய நீட்டி பேசுற வேல வச்சுக்கிட்ட அப்புறம் பொண்ணுனுலாம் பார்க்க மாட்டேன். “ என்றபடி அவளது கையை உதறித்தள்ளினான்.

ஜனனி “ஆ…” என்றபடி அவளது ஆள்காட்டி பிடித்து நீவிக்கொள்ள , ஹரிணியோ அங்கு என்ன செய்வது என்று அறியாத நிலைமையில் நின்றிருந்தாள்.

மீண்டும் ஹரிணியின் பக்கம் திரும்பிய துருவன், “அவ எப்படியோ போய்ட்டு போறா எனக்கு அத பத்தி கவலை இல்ல. எனக்கு கனிக்கா எப்படியோ அத மாதிரித்தான் நீயும்,அந்த உரிமைலதான் சொல்றன் இனியும் இவ சொல்றது எல்லாம் கேட்டுட்டு உன்னோட மரியாதைய நீயே கெடுத்துக்காத. “ என்றவன், அங்கிருந்த மேசையில் வைக்கப்படிருந்த அவளது தோள்பையை எடுத்து அவளிடம் கொடுத்து, “டைம் ஆச்சு நீ வீட்டுக்கு போ. “என்றான்.

ஹரிணியோ ஜனனிக்காக பாவப்பட்டாலும், இப்போது சரணித்தை பற்றி அவள் சொன்னதை ஏற்க முடியவில்லை, அதனால் ஜனனியை பார்க்காமலே துருவன் கொடுத்த அவளது தோள்பையை வாங்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஜனனி சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. தன் நண்பி எப்போதும் அவள் பக்கம் தான் என்ற அபரித நம்பிக்கையில் இருந்தவளுக்கு ஹரிணியின் இந்த செயல் பெரும் வலியாக இருந்தது.

அவள் மனதிலோ, “ நான் என்ன சொல்ல நினைக்குற என்றத யாருமே காது கொடுத்து கேட்க தயாரா இல்லல! “ என்று நினைத்தவளுக்கு அழுகை மட்டுமே வந்தது.

துருவனோ ஹரிணி செல்வதை பார்த்திருந்தவன் , “இது ஒரு நல்ல பொண்ணுக்கு அழகு, சொன்ன உடனே புரிஞ்சிகிட்டா. ஆனா இன்னும் சில ஜென்மங்களும் எது சொன்னாலும் ஏறாது.”என்றபடி அவன் கையில் இருந்த காபியை குடித்துக்கொண்டே கூலாக அங்கிருந்து சென்றான்.

ஜனனிக்கோ துருவனின் மேல்தான் கோபம் அனைத்தும் திரும்பியது. “எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி கூலா போறான் பாரு. “என்று மனதிற்குள் திட்டியவள் அவனை முறைத்துக்கொண்டே அவளது அறைக்குள் சென்று கதவை பெரும் சத்தத்துடன் அடைத்துக்கொண்டாள்.

துருவனோ அவள் கதவை அடைத்த சத்தத்தில் திரும்பியவன், “கோபம் வருதோ, வரத்தானே வேணும்.என்னையா வெறுப்பேத்தி பார்க்குற?இன்னும் இருக்குடி உனக்கு...“என்று முணுமுணுத்து விட்டு , “அத்தை…” என்று அழைத்துக்கொண்டே வாணியை தேடிச் சென்றான்.

ஜனனியோ கதவை அடைத்து விட்டு நேராக சென்று கட்டிலில் குதித்தவள், தலையணையை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து இருந்தாள்.

அவள் எண்ணங்கள் அனைத்தும் துருவனை சுற்றியே இருந்தது. “சரியான முன்கோபக்காரன்டா நீ, எதையுமே நிதானமா யோசிச்சு பண்ண முடியாதுல உன்னால எல்லாத்துலயும் அவசரபுத்தி . நீ மட்டும் தான் சரி என்ற அகங்காரம் உனக்கு. “ என்று அவனை குறைசொல்லியவள் கண் முன்னே சில நினைவலைகள் வந்து செல்ல, “ஆ....”என்று தலையை பிடித்துக்கொண்டு எழுந்து, “என்னால முடியல.. “என்றபடி மீண்டும் அழதொடங்கிவிட்டாள்.



















 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 05

ஹரிணியோ வீட்டிற்கு சென்று, “ஸப்பா... என்ன வெயிலு.வேர்த்து கொட்டுது. “என்று சொல்லி உள்ளே நுழைய, ஹாலினுள் போனை பார்த்தபடி அமர்ந்திருந்த அவளது அம்மாவான சிவகாமி, “இப்போதான் உனக்கு போன் போடலாம்னு போன எடுத்தன் நீயே வந்துட்ட. ஏன் லேட்டு? “என்று கேட்டார்.

ஹரிணியோ ,”ஜனனி வீட்டுக்கு போய்ட்டு வாறன்மா. “ என்றவள் பையை கழற்றி சோபாவில் போட்டு விட்டு “ போய் குளிச்சுட்டு வாறன். எனக்கு ஏதும் ஸ்னாக்ஸ் எடுத்து வைங்கம்மா. “என்றபடி அவள் அறையினுள் புகுந்தாள்.

சிவகாமியோ, “பாவம் புள்ள பசில வந்திருக்கு.” என்று சொல்லியபடி , ஹரிணிக்கு பிடித்தமான வாழைக்காய் பஜ்ஜி செய்வதற்க்காக சென்றுவிட்டார்.

ஷவரை திறந்து நின்றிருந்த ஹரிணி, “ஜனனிக்கு ஏதோ ஆயிடிச்சு. இல்லனா சரணித் தப்பான ஆளுனு தெரிஞ்சும் அவன் கூடபழகுவாளா? ஒரு வேளை அவன் ஏதாச்சும் சொல்லி ஜனனிய மிரட்டுறானோ? “ என தனக்குள்ளே பேசிக்கொண்டே குளித்து முடித்தவள், வெளியே வந்து அவளது தந்தையின் மாலையிடப்பட்ட புகைப்படத்திற்கு விளக்கை ஏற்றி வணங்கிவிட்டு, “ஒருவேளை சரணித் பழிவாங்க ஜனனிய யூஸ் பண்றானா? இல்லாட்டி எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு நம்ம படிக்குற காலேஜ்லயே ப்ரோபஸரா ஜோயின் பண்ணனும்?.. “என்று பல கேள்விகளை தன்னுள் எழுப்பியபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.

சிவகாமியோ, “ஹரிணி இந்தாம்மா பஜ்ஜி, சுட சுட இருக்கு சாப்பிடு. “ என்று சொல்லி அவள் முன்னே தட்டை நீட்ட,ஹரிணியோ சிவகாமியின் வார்த்தைகள் எதுவும் அவள் காதில் கேட்காததை போல் எங்கோ பார்த்து கடந்த கால நிகழ்வுகளை தன்னுள் ஒட்டிபார்த்துக்கொண்டு இருந்தாள்.

சிவகாமியோ, “என்னடி பேய் அடிச்சத போல இருக்க? “ என்று கேட்டு ஹரிணியை உலுக்க நினைவுகளில் இருந்து மீண்ட அவள், “ஆஹ்....அதெல்லாம் ஒன்னும் இல்லமா... நாளைக்கு யூனிட் எக்ஸாம் இருக்கு அதை பற்றி யோசிச்சிடு இருந்தேன். “என்றாள்.

சிவகாமியோ, “ஆஹ் எக்ஸாமா?சரி சரி.. இந்தா இதை சாப்பிட்டுட்டு போய் படி. நான் இரவுக்கு சாதம் வடிச்சுட்டு உன்னை கூப்பிடுறேன். “என்று அப்பாவி தனமாக சொன்னவர், கையில் வைத்திருந்த தட்டை அவளிடம் கொடுத்து விட்டு சென்றார்.

ஹரிணி அவள் அம்மாவை பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், அவளது யோசனைகள் அனைத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு , “இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல நாளைக்கு எக்ஸாமுக்கு ப்ரேப்பயர் பண்ணனும் . “என்றபடி சிவகாமி கொடுத்த பஜ்ஜியை வாயில் போட்டுக்கொண்டே, கணக்கியல் யூனிட் எக்ஸாமிற்க்காக படிப்பதற்கு தயாரானாள்.

இடையில், “ ஜனனிக்கு இதை நியாபகபடுத்தணுமே!”என்ற எண்ணம் வர, போனை எடுத்து ஜனனிக்கு அழைத்தாள் அவள்.

ஜனனியோ அழுதபடி தூங்கியிருக்க, ஹரிணியின் அழைப்பே அவளை விழிக்க செய்தது. தட்டி தடவி அவள் எறிந்த போனை எடுத்தவள், “இவ எதுக்கு இப்போ கால் பண்றா? அதுதான் அவன் சொல்றத கேட்டுட்டு அப்படியே போய்ட்டாளே . “ என்று தனக்குள் சொல்லி சற்று யோசித்து விட்டே அழைப்பை எடுத்தாள்.

மறுபுறம் இருந்த ஹரிணியோ, “நாளைக்கு அக்கௌன்ஸ் யூனிட் எக்ஸாம் இருக்கு. படிச்சுட்டு வந்துடு அத சொல்லத்தான் எடுத்தேன். “என்று சொல்லி வேறு ஏதும் சொல்லாமல் அழைப்பை துண்டிக்க, “ஆமா இப்போ அந்த சொட்ட தல வைக்குற எக்ஸாம்க்கு படிக்குற ஒண்ணுதான் கேடு. “ என்று சொல்லிக்கொண்ட ஜனனி வேண்டாவெறுப்பாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

மறுபக்கம், கனிஷ்டன் மற்றும் கனிக்கா அப்போதுதான் அவர்களது வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்தவர்கள்,ஹாலில் அமர்ந்து டிவியில் சன் மியூசிக் பார்த்துக்கொண்டிருந்த துருவனின் இரு பக்கத்திலும் ஓடி வந்து அமர்ந்து அவனுடன் ஒட்டிக்கொண்டார்கள்.

துருவன் அவர்கள் இருவர் தோள் மீதும் கை போட்டவன், “என்ன டுடே ஹேவி வேர்க் போல, ரொம்ப டையேர்ட் ஆஹ் இருக்கீங்க? “ என்று கேட்க, “ஆமா துருவ், நாளைக்கு நம்ம கார்மெண்ட்ஸ்ல நிறைய ஆர்டர்ஸ் எக்ஸ்ப்போர்ட் பண்ண வேண்டி இருக்கு. எல்லாமே லாஸ்ட் டைம்ல வந்த ஆர்டர்ஸ் அது மட்டும் இல்ல, நம்ம பெங்களூர் ப்ராஞ் ரெஸ்டாரெண்ட்ல ப்ரோபிட் ஒழுங்கா இல்ல... ஸோ கொஞ்சம் வேர்க்பிரஷர் தான். “என்று பதிலளித்தான் கனிஷ்டன்.

கனிக்காவும் தலையை வேகமாக ஆட்டி கனிஷ்டன் சொன்னதை ஆமோதிக்க,துருவனோ, “ ரொம்ப பிரஷர் ஏத்திக்க வேணாம். ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளுங்க. “என்றான்.

ஹாலில் இவர்கள் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்ததை சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த கௌரி, “வந்ததும் அப்படி என்னதான் பேசிப்பீங்களோ? “ முதல்ல போய் குளிச்சுட்டு வாங்க இரண்டு பேரும் “ என்று குரல் கொடுக்க, அவர்கள் இருவரும்அதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதை பார்த்த வாணி வாயை மூடி சிரிக்க, “ நம்ம பேச்சுக்கு இங்க எங்க மரியாதை இருக்கு அவங்க அண்ணன் சொல்றது தான் வேத வாக்கு அவங்களுக்கு. “என்று சலித்துக் கொண்டார் கௌரி.

துருவன் என்னதான் பல முகங்களை கொண்டவனாக மற்றவர் கண்களுக்கு தெரிந்தாலும்,கனிக்கா மற்றும் கனிஷ்டன் மீது அலாதி பிரியம் கொண்டவன்.

சகோதர பாசத்தில் அவனை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவன்.

சில சமயத்தில் தினகரன் மற்றும் கௌரியின் பேச்சையே கேட்க்காமல் சண்டை செய்பவன், கனிஷ்டன் மற்றும் கனிக்காவிடம் அடங்கி போய்விடுவான். இதனாலயே அவர்களது இரட்டை பிள்ளைகளை வைத்தே மூத்த மகனிடம் காரியம் சாதித்து விடுவார்கள் தினகரன் மற்றும் கௌரி.

கனிஷ்டன் மற்றும் கனிக்காவும், துருவனின் பேச்சுக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டவர்கள். எது செய்வதாக இருந்தாலும் அவனிடமே முதல் அனுமதியை வேண்டி நிற்பார்கள்.

இவர்களின் இந்த பிணைப்பு இன்று நேற்றல்ல சிறு பராயத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டிருந்தது.


 
Status
Not open for further replies.
Top