ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய்-கதை திரி
 
Last edited by a moderator:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 1

°ஒரு பிரிவு பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது?°

____________________________________

மாலை நான்கு மணி.

அடித்து சாய்க்கும் குளிர் காற்றால், கருமை பூசிக்கொண்ட மேகங்கள் வானத்தை சிறை பிடித்திருக்க, அந்தி செம்மை துறந்து மை பூசிக்கொண்டது.

காற்றும் சற்று வேகமெடுத்தது.

கடற்கரை சாலையோரம் உள்ள அந்த நவீன குளம்பியகத்தில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்திருந்தவனின் முகத்தில் கொஞ்சமும் இலகுத் தன்மை என்பதே இல்லை. அப்படியொரு இறுக்கம், அழுத்தம்.

முன்பு எப்போதும் இத்தனை கடிமை இல்லை அவனிடத்தில். கோபம் அதிகம் வரும். முரடன் தான். ஆனால், வசீகர முகத்தில் நிலையாய் தேங்கி நிற்கும் சிறு புன்னகை.

இன்று முழுதாய் சிரிக்கவே தெரியாதவனாக... சிரிப்பினையே மறந்தவனாக தோற்றம் கொண்டுள்ளான்.

அவன் ருத்விக். காத்திருக்கிறான். அவனின் காத்திருப்பும் இன்றோடு முற்றுப்பெறுகிறது. முற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவே இந்த சந்திப்பு.

முன்பென்றால் சூழல் கொஞ்சம் மாற்றம் கொண்டதுமே, தான் காத்திருக்கும் நபருக்கு அழைத்து, "வரவேண்டாம்... மழையில் மாட்டிக்கொண்டால் உனக்கு ஒத்துக்கொள்ளாது" என்று சொல்லியிருப்பான்.

கொண்ட அக்கறையும் காணாமல் போய்விட்டதோ? அவன் மட்டுமே அறிவான். அறிந்து வைத்துள்ளான் என்பதும் அவன் கொண்ட ரகசியமே!

'உனக்காக நொடி நொடியாய் ஜென்மம் முழுக்கக் காத்திருப்பேன்' என்று அவன் காதலாய் பிதற்றிய நாட்கள் யாவும் வீண் என்றானது. இந்த நேர காத்திருப்பும் வீண் எனும் வரையறைக்குள் ஆட்படவே போராடுகிறது.

நொடிக்கு ஒரு தரம் மேசையின் மீதிருந்த தன்னுடைய அலைப்பேசியை எடுத்து மணியை பார்த்துக்கொண்டான்.

'திடீரென காலநிலை கொண்ட மாற்றத்தால் தாமதமாகிறதோ?' சிந்தித்தவன், 'எந்நேரமாகினாலும் வந்துவிடு' என்று புலனம் வழி தகவல் அனுப்பி வைத்தான்.

காதலாய் கசிந்துருகிய நாட்களில் நேரும் காத்திருப்பெல்லாம் இனிய படபடப்புடன் கழியும். அதே படபடப்பு இப்போதும். ஆனால் இந்த படபடப்பின் அர்த்தம் வேறு.

சொல்ல வந்திருப்பதை காயப்படுத்தாது சொல்லி செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவனிடம்.

'காயம்.' நிச்சயம் தன் வார்த்தைகள் கொடுக்கும். விரக்தியாய் முறுவலித்தான்.

'காயத்தின் ரணம் கொடுக்கும் வலியை ஏற்க எப்படியாகினும் திடம் கொடுத்திடு... அவளின் திடத்தினை என்னுடைய வார்த்தைகள் எப்போதும் உருகுலைத்திடக் கூடாது' என பிரார்த்தித்துக் கொண்டான்.

பூந்தூறலாய் மேகம் மண்ணில் தரை இறங்கியது.

காண்ணாடி தடுப்பின் வழியே வெளியே பார்த்தான்.

அவள் தான். வந்துவிட்டாள். தன்னுடைய இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, கண்ணாடியில் தன் முகம் காண்கிறாள். மென் சாரல் துளிகளால் முன்னுச்சி கேசம் நீர் படிந்து சிலுப்பிக்கொண்டிருக்க, மெல்ல காதோரம் ஒதுக்கி, புடவை தலைப்பால் முகத்தை ஒற்றி, தலைக்கு மேல் ஒற்றை கையை வைத்து மழை நீரை தடுத்தவளாக, மற்றொரு கையால் புடவையை தூக்கி பிடித்து நவீன குளம்பியகத்தினுள் நுழைந்தாள்.

அவள் இமையாள். ருத்விக்கின் ஆதியும், அந்தமும் அவளே. சிறிது நேரத்தில் ஆதியும் அந்தமும் முற்றுப்பெற உள்ளது.

இமைக்க மறந்து விழிகள் விரித்து அவளையே பார்த்திருந்தான். இனி எப்போதும் இப்படி பார்க்க முடியாது என்பதால் அகத்தில் ததும்ப ததும்ப அவளின் பிம்பத்தை நிறைத்துக் கொண்டான்.

இனி எப்போதும் அவனுக்கு அவள் கிடைக்கப்போவதில்லை. அதற்கு காரணமும் அவனே!

'பிடித்திருப்பதால் கிடைக்க வேண்டுமென்றில்லை. கிடைக்காது என்பதால் கூட அதிகமாக பிடித்திருக்கலாம்.'

நெஞ்சுக்குள் பெரும் ஓலம்.

வலது கையின் பெருவிரலால் இதயத்தில் அழுத்திக் கொண்டான்.

அவள் அருகே வர பார்வையை திசைமாற்றிக் கொண்டான்.

"சாரிப்பா... காற்று இப்படி அடிக்கும் எதிர்பார்க்கல. நடுவில் தூறல் வேற. லேட்டாகிருச்சு" எனக்கூறிக்கொண்டே அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர முற்பட்டவளை கை நீட்டி தடுத்திருந்தான் ருத்விக்.

"சிட்..." தனக்கு எதிர் இருக்கையை காண்பித்தான்.

விலகலை காட்டிடத் துவங்கிவிட்டான். அவளால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவனுக்கு எதிரே அமர்ந்தவள், அவனை ஆராய்வாக ரசித்திட்டாள்.

'இத்தனை மாதங்கள் ஏன் பேசவில்லை? முகத்தில் என்ன புதிதாய் இறுக்கம்?' என உள்ளுக்குள் கேள்விகள் அணிவகுத்தாலும் கேட்டிடாது, பல மாதங்கள் பார்க்க தவமிருந்த தன்னவனின் முகத்தை ரசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வை அவனை அசைத்துப் பார்த்தது.

மெல்ல தன்னை மீட்டுக்கொண்டான்.

"என்னப்பா இத்தனை நாளா ஒரு மெசேஜ் இல்லை?"

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

என்ன பேச வேண்டும்... எப்படி சொல்ல வேண்டும்? எல்லாம் வரிவரியாய் மனப்பாடம் செய்துகொண்டு வந்திருந்தான். யாவும் அவள் முகம் பார்த்ததும் மொழி மறந்தவனாய் மனதில் காணாமல் போயிருந்தது.

"மெசேஜ் பண்ணமாட்டிங்களா? உங்கக்கிட்டேர்ந்து கால் வராதான்னு மொபைல் கையிலே வச்சிக்கிட்டு சுத்தின நாட்கள், கடந்து சென்ற மாதங்கள்" என்றாள்.

இரவு முழுக்க நீளும் பேச்சுக்கள்... பகல் முழுவதும் தொடர்ந்த குறுந்தகவல்கள் யாவும் சட்டென்று ஒரு நாள் ருத்விக்கிடமிருந்து நின்று போயிருந்தது.

இவளது அழைப்புகள் யாவும் எடுக்கப்படாமலும், தகவல்கள் யாவும் பார்க்கப்படாமலும் உயிர் துறந்திருந்தது.

"ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறதால் சைட் பலமா இருக்கே?"

உள்ளுக்குள் யோசனையாக இருந்தவனின் பார்வை இமையாள் மீதே. அதை அவன் உணரவில்லை. மனதில் தான் ஒரு யுத்தமே நிகழ்த்திக் கொண்டிருக்கிறானே!

அவளின் கேள்வியில் சடுதியில் மீண்டான்.

"எப்படி இருக்க ருது?"

"ம்ம்ம்... நாட் பேட் (Not Bad)." தொண்டையை செறுமிக் கொண்டான்.

"போஸ்டிங் எங்கே இப்போ?"

அவன் பதில் சொல்லவில்லை.

"சட்டுன்னு காணாமல் போயிட்டிங்க! ஆனால், நம்பிக்கை இருந்துச்சு... என்கிட்ட வருவீங்கன்னு" என்ற இமையாள், அவனின் அமைதியில் பெரும் குழப்பம் கொண்டாள்.

"என்னாச்சு ருது?"

"எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு இமையாள்!"

அவன் சொல்லியதை செவிகள் கிரகித்ததும்,இமையாளின் இதயத் துடிப்பு அதிகரித்தது. கண்கள் நிலைக்குற்றி அவனின் நுனி மூக்கில் நிலைத்தது.

நெஞ்சத்தை தானே நீவிக்கொண்டவளாக மேசை மீது கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த நீரினை எடுத்துப் பருகி ஆசுவாசப்படுத்தினாள். தன் மனதையும் நடுங்கும் உடலையும்.

"பொய் சொல்லாதீங்க ருது. இத்தனை மாதம் கழித்து சந்திக்கிறோம். இப்படியா பயம் காட்டுவீங்க?"

அவள் நம்பாததில் அவன் உணர்ந்ததெல்லாம் அவன்மீது, அவனுடைய காதல் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையே!

உள்ளுக்குள் சில்லு சில்லாய் நொறுங்கிக் கொண்டிருந்தான். மனதின் ஓலம் விழிகளில் பிரதிபலித்துவிடாமல் காக்க பெரும்பாடுப்பட்டான்.

பக்கமில்லை... பேசிக்கொள்ளவில்லை... இருப்பினும் காதலெனும் பந்தம் இருவருக்குள்ளும் ஆழமாக வேர்பிடித்து... பிரிவென்பதையே உணரவிடமால் வைத்திருந்தது.

இன்று அவன்/அவள் பேசவில்லையா? அழைக்கவில்லையா? தகவல் அனுப்பவில்லையா? ஏதேனும் காரணமிருக்கும். தன்னைப்போல் இருவருக்குள்ளும் அப்படியொரு புரிந்துணர்வு.

அதுவே பல மாதங்கள் அவன் இருக்கின்றானா இல்லையா என்று தெரியாமல் இருந்தபோதும் இமையாளை ருதுவின் மீது கொண்ட காதலில் ஆட்டம் கொள்ளச்செய்யாது, நம்பிக்கையாக அவனுக்காக அவனின் ஒற்றை அழைப்பிற்காகக் காத்திருக்கச் செய்தது.

இமையாள் மீது முதலில் காதல் கொண்டு மனதை வெளிப்படுத்தியது ருத்விக் தான்.

பார்த்த கணம் காதலென்றில்லை. சாலையில் மழையில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நனையும் ரோஜாவாக நடந்து செல்பவளை பார்த்ததும் சிறு பிடித்தம். கண்ணுக்கு விருந்தாய் அமையும் அழகின் மீது ஏற்படும் பிடித்தம் போன்றது. அதன் பின்னர் தற்செயலாக அவளை பல இடங்களில் அவனால் பார்க்க நேர்ந்தது. கவனிக்கத் தொடங்கினான். அவளைப்பற்றி மெல்ல மெல்ல யாவும் அறிந்துகொண்டான். ஈர்ப்பு என்பதை கடந்து மனம் காதலென்ற வரையறைக்குள் அடி வைத்திடவும், அவளிடம் சென்று சொல்லிவிட்டான்.

காதலை சொல்லுவதற்காக இமையாளை நேருக்கு நேர் சந்தித்து ருது பேசியது. அதன் பின்னர் இமையாளின் பின்னால் கூட அவன் சென்றது கிடையாது.

தற்செயலாக பார்க்க நேர்ந்தாலும், இதழ் விரிந்ததோ எனுமளவில் புன்னகைத்து கண் சிமிட்டி கடந்திடுவான்.

இமையாளே ஒருமுறை ருதுவை நிறுத்தி,

"உண்மையாவே நீங்க என்னை லவ் பண்றீங்களா?" எனக் கேட்க...

அதற்கு ருது புன்னகைத்தானே தவிர பதில் சொல்லாது மௌனமாக அவளை பார்த்திருந்தான்.

அவனது பார்வையில் அவள் தடுமாற,

"அதிலென்ன டவுட் உனக்கு?" எனக் கேட்டிருந்தான்.

"லவ்வை சொல்லிட்டு ரொம்பவே அமைதியா இருக்கீங்க. பேசவே ட்ரை பண்ணலையே?" என்றாள்.

"மனசுக்கு தோணுச்சு... மிச்ச வாழ்க்கை உன்னோடுன்னு. அடைச்சு வசிக்க முடியல. உன்கிட்ட சொல்லிட்டேன். மனசு லேசாகிடுச்சு. எனக்கு பிடிச்ச மாதிரி உனக்கும் பிடிக்கணும் அவசியமில்லை. பிடிச்சிருந்தால் நீயே வந்து பேசுவன்னு தெரியும்" என்று நிறுத்திய ருது "இப்போ போல" என்றான்.

ருது சொல்வதையே மெல்லிய அதிர்வோடு கேட்டுக் கொண்டிருந்த இமையாள், அவன் இறுதியாக சொன்னதில் சுயம் மீண்டு...

"அப்படியெல்லாம் இல்லை" என படபடக்கும் இதயத்தோடு வேகமாக திரும்பிச் சென்றுவிட்டாள்.

அவளின் இதழோரப் புன்னகையை அவனால் உணர முடிந்தது.

அடுத்த பத்து நாட்களில் அவளே அவனை காதலிப்பதாக அவன் முன் நின்று கொண்டிருந்தாள்.

எட்ட நின்றே மனதால் பக்கம் வர வைத்திருந்தான்.

"வெல்" என்ற ருது, "இந்த இயரோட ஸ்டடிஸ் முடிஞ்சிடும். நெக்ஸ்ட் ஐபிஸ் பாஸ் பண்ணனும். ட்ரீம் அப்படின்னு இல்லை. கொஞ்சம் முரட்டு சுபாவம். கோவம் நிறைய வரும். அதுக்கு போலீஸ் ஜாப் தான் பெர்ஃபெக்ட் தோணுச்சு. சோ, ட்ரை பண்ணலான்னு" என்றவன், "எக்ஸாம் எழுதுறவரை இங்க இருப்பேன். பாஸ் பண்ணிட்டால் ட்ரெயினிங் பீரியட் எந்த ஸ்டேட் போடுறாங்க தெரியாது. மேக்சிமம் டூ இயர்ஸ் இருக்கும். அப்புறம் தான் போஸ்டிங். அதுவும் இந்தியாவுல எங்க போடுவாங்கன்னு சொல்ல முடியாது" என்றான்.

இமையாளுக்கு என்ன கேட்க வேண்டுமென்றே தெரியவில்லை.

"இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறியா?" எனக் கேட்டவன், "நீ என்னை விரும்புறன்னு தெரியுற வரை என்னைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உனக்கில்லை. ஆனால் இப்போ எல்லாம் தெரியனுமே" என்றதோடு, "இப்போ கரியர் பில்ட் பண்றது ரொம்பவே முக்கியம். கால் பண்ணல, மெசேஜ் பண்ணலன்னு சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் ஆர்கியூ பன்ற இம்மெட்சூயோர்ட் லவ்வர்ஸா நாம் இருக்க வேண்டாம். நான் இப்படித்தான்னு உனக்கு முதலிலே என்னைப்பற்றி தெரிவது நல்லது. நான் எங்கயிருந்தாலும் எனக்கானவள் நீ மட்டுந்தான்னு என்னைவிட நீ அதிகம் நம்பனும். அப்போ தான் நம் காதலுக்கே ஒரு அர்த்தமிருக்கும்" என்றான்.

அவன் மீதான வியப்பு அவளுக்கு கூடியது.

அது முதல் மனதால் மட்டுமே நெருக்கம் காண்பித்து காதலுக்கு புது இலக்கணம் ஒன்றை காட்டினான் ருத்விக்.

பயிற்சியில் சேர்வதற்கு முன்பு ஓரிரு முறை இமையாளுடன் வெளியில் சென்றிருப்பான். அதுவும் கோவில் மட்டுமே! இரவில் பேச அவளாக அழைத்தால், அவளுக்கும் ஆசை இருக்குமேயென அவளுக்காக மட்டுமே அவள் பேசும்வரை பேசிடுவான். இமையாளும் அவனின் படிப்பின் மதிப்பறிந்து பல ஆசைகளை விட்டுக்கொடுத்திடுவாள்.

தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்காக ஆந்திரா செல்லவிருக்கிறான் என்ற போதே, முதல் முறையாக தன்னவளின் கையினை இறுகப்பற்றியிருந்தான்.

"இருந்திடுவல?"

ஒற்றை வார்த்தையில் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை இமையாள் வெளியேற்றிட, அவளின் பின்னந்தலையில் உள்ளங்கை வைத்து, அவளின் நெற்றி தன் மார்பில் முட்டிட அழுத்தினான்.

"ட்ரெயினிங் முடிந்ததும் கல்யாணம். அதுக்குமேல முடியாது" என்று சொல்லிச் சென்றவன், பயிற்சி காலங்களில் கூட தினமும் ஓரிரு வார்த்தைகள் பேசியபடி இருந்தவன், பயிற்சியின் இறுதியில் மொத்தமாக காணாமல் போயிருந்தவன், இன்று தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று வந்து நிற்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைவிட, நம்பவே முடியவில்லை.

அவளுக்காக அவன் கொண்டிருந்த ஏக்கம், தவிப்பு யாவற்றையும் அவன் சொல்லாவிட்டாலும் அவள் உணர்ந்திருந்தாளே! அதனாலே அவன் வாய்மொழியாக கேட்ட பின்பும், நம்பாது இருக்கிறாள்.

'தன்னுடைய ருது... அவனால் தனக்கு சிறு வலியையும் கொடுத்திட முடியாதே!'

ஆறு மாதங்களுக்கு முன்பு...

"பயிற்சியின் இறுதி கடினமாக இருப்பதால் அழைத்து பேச முடியவில்லை" என்று ஒரு தகவல் அனுப்பியிருந்தான். அது உண்மையும் கூட.

ஐந்து மாதங்களுக்கு முன்பு...

"போஸ்டிங் போட்டாச்சு. உடனே அங்கு வர முடியவில்லை" என அனுப்பியிருந்தான். அன்று அழைத்து அவளிடம் சில நிமிடங்கள் பேசியும் இருந்தான்.

ஆனால் அதன் பின்னர் ருதுவிற்காக இமையளின் காத்திருப்பின் அளவு நீண்டது.

ஒருமுறை அவன் பயிற்சி எடுத்த அகாடமிக்கு அழைத்துக்கூட விசாரித்திருந்தாள். தகவல் அளித்திட முடியாதென நிர்தாட்சண்யமாக மறுத்திருந்தனர்.

அதன் பின்னர் அவனுக்காக, அவனிடமிருந்து ஒற்றை அழைப்பு வந்துவிடாதா என அவள் ஏங்கிய இரவுகளின் நீளம் அதிகம்.

நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று அழைத்தவன், அவள் கொண்ட உவகையை கருத்தில் கூட கொள்ளாது, பார்க்க வேண்டுமென இடம், நேரம் சொல்லி வைத்திருந்தான்.

"வேலைப்பளு காரணமாக பேச முடியாது இருந்துவிட்டேன்" என்று காரணம் சொல்லி தன்னுடைய கையினை பற்றிக்கொள்வான், "ஐ லவ் யூ லேஷஸ்" என்று காதலாக உருகுவான் என பல கனவுகளோடு தன்னவனை எதிர்நோக்கி வந்தவள் நிச்சயம் அவனிடமிருந்து வந்த இப்படியானப் பேச்சுக்களை ரசிக்கவில்லை.

"பொய்யாவே இருந்தாலும் நீங்க சொல்லும்போது வலிக்குது ருது."

இமையாளின் உடைந்த குரலில் ருது உடைந்துப்போனான்.

"பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை இமையாள்."

எப்போதும் 'ஐ லேஷஸ்' என்று குரலிலே உருகுபவன், இன்று இமையாள் என்பதில் கொடுத்த அழுத்தம் அவளை நடுங்கச் செய்தது.

வலிக்க வலி கொடுக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற இருக்கிறது என்பதை அவளின் ஆழ் மனம் வலியுறுத்தியது.

கலங்கிய கண்கள் கரை உடைக்க சட்டென்று கன்னத்தை துடைத்திருந்தாள்.

ஐந்து வருட நேசம்... ஐந்து நொடிகளில் கானலாக்கியிருந்தான்.

"மேரேஜ் ஆகி ஃபைவ் மன்த்ஸ் ஆகுது. நவ், ஷீ இஸ் பிரெக்னென்ட்." தொண்டை அடைத்த போதும், சிறு பிசிறின்றி சொல்லியிருந்தான்.

"ருது." கடினப்பட்டு அவளின் பூவிதழ்கள் வறண்டு ஒலித்தது.

"நான் ஏதும் தப்பு பண்ணிட்டனா ருது? அதுக்காக பொய் சொல்றீங்களா?"

இமையாளுக்கு அவனால் தன்னைத்தாண்டி ஒரு பெண்ணை பார்வையால் கூட தீண்டிட முடியாதென்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.

'எதுக்குடி இத்தனை நம்பிக்கை?' உள்ளே மருகினான்.

"பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை இமையாள்." முன்பைவிட அதீத அழுத்தமாகவும், அடர்த்தியாகவும் மொழிந்தான்.

"நிஜமாவா?"

அவனுக்கு அய்யோ என்றானது.

அவனது பார்வையில் என்ன கண்டாளோ?

"ஹேப்பி மேரிட் லைஃப்" என்று இருக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.

"அழகான காதலை காட்டியதுக்கு நன்றி" என்று நடந்தவள்,

திரும்பி அவனை ஏறிட்டாள்.

இமையாள் எழுந்தது முதல் ருது அவளை அசையாது பார்த்திருந்தான். இந்நொடியும்.

"நீங்க சொல்றது உண்மையாவே இருக்கட்டும்" என்றவள், தன் இடது பக்க நெஞ்சத்தில் உள்ளங்கை வைத்து தேய்த்தவளாக... "இங்க பொய் சொல்றீங்கன்னு தோணுது" என்றுவிட்டு கன்னம் உருண்ட நீரோடு விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

மழையில் நனைந்தபடி செல்லும் அவளின் உருவத்தை வெறிக்க பார்த்திருந்தான். கண்ணாடி தடுப்பைத் தாண்டி, மழை நீருக்குள் ஊடுருவியவளை அவனின் கண்கள் காண தவித்தது. முடியவில்லை. கலங்களாய் சிதறிப்போனாள்.

இருக்கையில் பின் தலை சாய்த்து இமைகளை மூடியவனின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

இமையாள் ஏன் இப்படியென்றோ, என்னை ஏமாற்றிவிட்டிர்கள் என்றோ, அவனின் சட்டடையை பிடித்து உளுக்கியிருந்தாலோ அவனுக்கு இத்தனை வலி ஏற்பட்டிருக்காதோ?

மொத்தமாக நிலைகுலைந்து தவித்தான்.

காதலை சொல்லியதும் அவனே! காதலை உடைத்ததும் அவனே!
காதலின் வலியை சுமக்க இருப்பவனும் அவனே!

ருது திருமணம் ஆகிவிட்டது என்பதையே நம்ப முடியவில்லை. இதில் அவன் மணம் செய்துகொண்ட பெண் தாய்மை அடைந்துள்ளாள் என்பதை முற்றிலும் ஏற்கவே முடியவில்லை.

ருதுவின் முன்பு தைரியமாகக் காட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

ஆனால் அவளால் நிலைகொள்ள முடியவில்லை. அவளின் கைகளில் நடுக்கம். வண்டியில் பிரதிபலித்திட, எதிரே வந்த வாகனத்தை கவனியாது அதனுள்ளே விட்டிருந்தாள்.

மழைநீரில் குருதி கலந்து ஓடியது.

"லேஷஸ்" என்கிற ருதுவின் ஓலம் காற்றெங்கும் பரவியது.


'யாரை நீ அதிகம் தேடுகிறாயோ அவர்களின் தேடல் நீயாக இருக்கமாட்டாய்.' நிதர்சனம்.
 

Attachments

  • 20240706_203025.jpg
    20240706_203025.jpg
    653.1 KB · Views: 0
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 2

நினைவுகள் அழகானது...
உதட்டில் சிரிப்பினைத் தோற்றுவிக்கும் மறுகணம், கண்களில் கண்ணீரை பரிசளித்துவிடும்.
புன்னகையும், அழுகையும் ஒருங்கே எழும்பும் தருணங்கள் அழகானது தானே! ஆதலால், நினைவுகள் என்றும் அழகானது தான்.

________________________

நான்கு வருடங்களுக்குப் பிறகு...

காலை நேர பரபரப்பிலும் வீடு அத்தனை அமைதியாக இருந்தது.

காலை நேர ஓட்டத்திற்கு சென்ற இனியன் வீட்டிற்குள் நுழைந்ததும், முகத்தை துணியால் துடைத்தவனாக கூடத்து நீளவிருக்கையில் சற்று தளர்வாக அமர்ந்தான்.

"என்னத்துக்கு இப்படி காலையிலே வியர்க்க விறுவிறுக்க ஓடனும். இப்படி சோர்ந்து உட்காரனும்?" என்று கேட்டபடி வந்த தீபா மகனின் முன்பு தேநீர் கோப்பையை வைத்தார்.

"அம்மா..." இழுவையாக அன்னையை ஏறிட்டான் இனியன்.

"என்னடா... இது ஜாகிங். உடற்பயிற்சி. உடலுக்கு நல்லது. அதுதானே?" எனக் கேட்ட தீபா, "உடம்புல சதை இருந்தாலும் பரவாயில்லை. நீயே அங்கங்கே எலும்பு வீங்கி இருக்க. கன்னத்துலையாவது புடிச்சி இழுக்க கொஞ்சம் சதை இருக்கா? நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா உன் பொண்டாட்டி உன்னை எப்படிடா கொஞ்சுவா? கட்டிபிடிச்சா அவளுக்கு பாறையை கட்டிக்கிட்ட மாதிரி இருக்காது? உனக்கெதுக்கு இந்த ஓட்டம், உடற்பயிற்சிலாம்?" என்றார்.

நொடியில் அவனது சிக்ஸ் பேக் தேகத்தை கலாய்த்துவிட்டாரே!

இனியன் முறைத்துக்கொண்டு இருக்க...

'ஓவரா சீண்டிட்டமோ?' என நினைத்தவர், "அடுப்புல வேலையிருக்கு கண்ணா" என்று நழுவ பார்த்தார்.

"இதையும் கொண்டு போங்க. எனக்கு ப்ரேக்பாஸ்ட் ப்ரூட் சாலட் போதும்" என்று தேநீர் கோப்பையை காட்டியவன், வேகமாக எழுந்துச் சென்றான்.

"இவனை டாக்டருக்கு படிக்க வச்சது தப்பாப்போச்சு" என்று புலம்பியவராக தீபா சமையலறைக்குள் செல்ல, அவரை பார்த்து இருபக்கமும் தலையாட்டிவிட்டு மாடியேறுவதை தொடர்ந்த இனியன், முதல் தளம் வந்ததும்... தனது அறைக்கு நேரெதிரே இருந்த அறையின் கதவு பாதி திறந்திருக்க தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

"வாங்கண்ணா!"

இமையாள் வரவேற்றிட... இனியன் மெத்தையில் அமர்ந்தான்.

"ஸ்கூல் கிளம்பிட்டியாடா?"

"ம்ம்ம்..."

ஒற்றை வார்த்தை தான் அவளிடம். கடந்து சென்ற வருடங்களில். கேட்டதற்கு பதில் வரும்.

காரணம் தெரிந்தும் காட்டிக்கொள்ளாது தங்கையின் கவலைக்கு, காவலனாக துணை நிற்கின்றான்.

தங்கையின் காதல் முற்று பெற்ற காரணமறிந்து துடித்தவன், தன் கண் முன்பே ரத்த கரையோடு நின்றிருப்பவனை திட்டவும் முடியாது தவித்து நின்ற தருணம் அத்தனை கொடுமையானது.

அந்த விபத்திற்கு சில மணி நேரம் வரை பட்டாம்பூச்சியாய் துள்ளி திரிந்த தங்கை சிறகின்றி இருக்கும் இந்த சில வருடங்களில்... அண்ணாக அவள் நிலையின் மீது இனியன் கொண்ட கவலை அதிகம்.

வெளிக்காட்டிக்கொள்ளாது நடமாடவே தன்னை இறுக்கமாக்கிக் கொண்டான் இனியன்.

"வரவர சுத்தமா பேசறதே இல்லை!"

"அப்படிலாம் இல்லைண்ணா!"

"நீ ஏன் சடனா இப்படி மாறுன?" தெரிந்து கொண்டே வினவினான். அவளாக மனதில் உள்ளவற்றை கொட்டி கவிழ்த்திட்டால் சாதாரணமாகிவிடுவாள் என்று எண்ணினான்.

செய்து கொண்டிருந்ததை விடுத்து இனியனை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தவள்...

"உங்களுக்கு நிஜமா தெரியாதா?" எனக் கேட்டாள். கூர்மையாக.

இனியன் தடுமாறினான்.

"இமயா!"

"என்னால தான் நீங்க ரெண்டு பேரும் பிரண்ட் ஆனிங்கன்னாலும்... அவங்களுக்கு என்னைவிட உங்களைத்தான் அதிகம் பிடிக்கும்" என்றாள்.

இனியனிடம் கனத்த மௌனம்.

"எனக்காக நீங்க உங்களோட ஃபிரண்டை ஒதுக்க வேண்டாம்."

பல மாதங்களுக்கு பிறகு நீண்டு பேசுகிறாள்.

"அவன்கிட்ட பேசனும்ன்னா அவன் எங்கிருக்கான்னு தெரியனுமே!" இனியனிடம் ஆழ்ந்த பெருமூச்சு.

அந்நொடி இமையளின் பார்வைக்கான பொருள் இனியனுக்கு விளங்கவில்லை.

'பொய் சொல்லுகிறேன் என நினைக்கின்றாளோ!' அவனின் மனம் அலறியது.

"என்னைவிட அவங்க உங்களுக்கு முக்கியமில்லை நினைக்கிறேன்" என்றாள்.

இனியனின் விழிகளில் அலைப்புறுதல்.

"எனக்கு என்னவோ கொஞ்ச நாளில் அவங்களை பார்ப்பேன்னு தோணுது" என்றவள், தன்னுடைய பையை எடுத்து தோளில் மாட்டியவளாக அறையை விட்டு வெளியேற...

"நீ உன் வாழ்க்கையை பார்க்கலாமே!" என்றான்.

நின்று திரும்பியவள் அடுத்து என்ன என்று பார்த்தாள்.

"அவன் நல்லாதானே இருக்கான்!"

"இப்போ தான் அவங்க இருக்க இடமே தெரியாது சொன்னீங்க?" அவளிடம் ஒருவித ஆராயும் தன்மை.

'அடேய் இனியா நீயே மாட்டிப்ப போலயே! வாய் வச்சிட்டு சும்மா இருடா.' உள்ளுக்குள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டான்.

"அவன் லைஃப் பார்த்துகிட்டு போயிட்டான். நீ உன் லைஃப் பார்க்கலாமில்லையா?"

"ஹான்..." என்றவள், மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, "சரி பையன் பாருங்க" என்றாள்.

இமையாளின் பதிலில் இனியன் அதிர்ந்தான். நியாயத்திற்கு அவன் மகிழ்ந்திருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக அவளை திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி தீபாவும் அவரின் கணவர் சுரேந்தரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். நடுவில் இனியனின் தலையும் உருளும். இனியாளுக்கு எடுத்து சொல்லென்று. அப்போதெல்லாம் இனியனிடம் மௌனம் மட்டுமே!

அவனால் நண்பனை விட்டுக்கொடுத்திட முடியாது. அதே நேரம் தங்கைக்கு மேலும் ரணம் கொடுத்திட முடியாது.

இமையாள் ருதுவை மறக்க வேண்டுமென நினைக்கும் இனியன், இமையாளின் காதல் ஆழம் உணர்ந்து தன் தங்கைக்கு சரியான பொருத்தம் ருது மட்டுமே என்றும் நினைக்கிறான். இரண்டில் ஒன்று மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது. அவனுக்கும் தெரியும்.

இனியனால் நண்பனை மலையிறக்க முடியவில்லை. தங்கையின் மனதை மாற்ற முயற்சிக்கிறான்.

"நல்ல பையனா பாருங்கண்ணா! சைக்காலஜியில் மாஸ்டர் முடிச்சிருக்கணும். ஐபிஎஸ் பாஸ் பண்ணியிருக்கணும். என் அண்ணனுக்கு அந்த பையன் க்ளோஸ் ஃபிரண்டா இருக்கணும். அப்படியொரு பையன் பாருங்க. நாளைக்கே கல்யாணம் செய்துக்கொள்கிறேன்" என்று இனியனின் தலையில் சத்தமின்றி இடியை இறக்கியவள், கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவளாக சென்றுவிட்டாள்.

"இதுக்கு நீ ருதுவைத்தான் கட்டிப்பேன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்" என்று முணுமுணுத்துக்கொண்ட இனியன்,

'அப்போ அவனுக்கு கல்யாணம் ஆனதை இவள் இன்னும் நம்பலையா?' என்று உள்ளுக்குள் அதிர்ந்தான்.

"என்னால இதுக்கு மேல முடியாதுடா. எங்கடா இருக்க. அடேய் ருது" என்று ருதுவின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைத்தான்.

ருது இமையாளிடம் தன் காதலை சொல்லியதுமே இனியனை சந்தித்து தன் மனதை வெளிப்படுத்தி நண்பனாகிக் கொண்டான்.

ருதுவின் பேச்சில் முதலில் கோபம் எழுந்தாலும், அவனின் பக்குவம் இனியனை நிதானிக்க வைத்தது. யோசிக்க வைத்தது. அவனை கவனிக்க வைத்தது.

"இமையாள் எனக்கு வேணுன்னா... அதில் நீங்களும் அடக்கம். லெட்ஸ் பீ பிரண்ட்ஸ்" என்று நீட்டியவனின் கரத்தை ஏனோ இனியனால் நிராகரிக்க முடியவில்லை. பற்றிக்கொள்ளத்தான் தோன்றியது. அந்த பற்றல் இத்தனை இறுக்கமாகும் என்று அவனே அன்று எதிர்பார்த்திருக்கமாட்டான்.

தங்கையை விட... அவளின் வலியை விட... நண்பன் முக்கியமாக இருக்கின்றானே!

எட்ட நின்று காதலை அன்பு வழி மட்டுமே காட்டிய ருதுவின் மீது இனியனுக்கு அதீத மதிப்பு. அது அவனை தன் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் கர்வம் கொள்ள வைத்தது.

ருதுவிற்கு இமையாள் தான் தன்னுடைய காலம் முழுமைக்கும் என்கிற அதீத காதல். அதனை மறைத்து செய்வதில் துளி விருப்பமும் இல்லை. காதலை பெற்றோரிடம் காதலென்று சொல்லிட முடியாது. பெற்றோரின் மனநிலை காதல் என்பதில் மட்டும் எப்படி மாற்றம் கொள்ளுமென யாராலும் கணித்திட முடியாது. அதற்காகவே தனக்கு இணையான வயதுடைய, தன்னவளின் தமையனுக்கு தன்னை புரியுமென்று இமையாளிடம் காதலை சொல்லிய சில நிமிடங்களில் இனியனிடமும் சொல்லியிருந்தான்.

அதில் தொடங்கிய அவர்களின் நட்பு இமையாள் என்பவளுக்காக மட்டுமில்லாது, இரு ஆண்களுக்காகவே ஆழ வளர்ந்தது.

ருது பயிற்சிக்கு சென்ற பின்னர், இமையாளுடன் பேசிய பொழுதுகளில் இனியனுடனும் பேசிக்கொண்டு தான் இருந்தான்.

இமையாளை எப்படித் தவிர்த்தானோ அதேபோல் இனியனையும் ருது தவிர்க்கவே செய்தான்.

சொல்லப்போனால் இமையாளை விட இனியனை அதிகம் விலக்கி வைத்தானென்றே சொல்லலாம்.

இனியனை கொண்டு இமையாளை மீண்டும் தன் வாழ்வில் இணைத்திட முயன்றிடுவோமோ என்பதற்காகவே இமையாளை காட்டிலும் நண்பனை அதிகம் தள்ளி வைத்தான்.

இமையாளை சந்தித்து பேசிவிட்டு இனியனுடன் பேச இருந்த ருதுவிற்கு தன்னவளை ரத்த வெள்ளத்தில் பார்ப்போமென்ற எண்ணம் சிறிதுமில்லை.

கண்ணீரோடு மழை நீரில் கரைந்து தன் பார்வையிலிருந்து மறைந்தவளை பார்த்துக்கொண்டே இனியனுக்கு அழைத்த ருது, அவனது கல்லூரியில் சந்திப்பதாக சொல்லி கிளம்பிவர, சில நொடிகளில் அவன் கண்டது கூட்டத்திற்கு நடுவே ரத்தம் மழைநீரோடு கலந்து ஓட நடு சாலையில் மயங்கிக் கிடந்த தன்னவளைத்தான்.

அவளுக்கு வலிக்கும் என்று தவித்தவன், அந்நொடி மனம் சுமக்க முடியா வலியில் துடித்திட்டான்.

இனியன் மேல் படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தவன், அரை உயிராய் சுவற்றில் சாய்ந்து சிகிச்சை அறையையே பார்த்தபடி நின்றிருந்தான்.

ருதுவால் அதிக நேரம் அங்கிருக்க முடியாது. அவன் மீது பெரும் பாரம் ஒன்றுள்ளது. அது அவனின் வாழ்நாள் முழுக்க தொடரக்கூடியது. அவனால் விட்டுவிடவும் முடியாது.

இமையாளுக்கு ஒன்றுமில்லையென தெரிந்தால் போதும். உயிரை பிடித்துக்கொண்டு சிலையாகியிருந்தான்.

பிரிக்க முடியா இதழ்களை பிரித்து, குரலேயின்றி இனியனுக்கு தகவல் கொடுக்க... அடுத்த ஐந்து நிமிடங்களில் அதிக படபடப்போடு இனியன் ஓடிவர... தாவி அணைத்திருந்தான் ருது.

அணைப்பில் அப்படியொரு அழுத்தம்.

நண்பனின் தோள் குலுங்குவதில் அழுகிறான் என்பதை உணர்ந்த இனியன், தன்னுடைய கவலையை ஒதுக்கியவனாக ருதுவை தேற்றினான். ஆறுதலாய் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

"என்னாச்சுடா? நீயேன் சடனா காணாமல் போயிட்ட? இப்போ இங்க எப்படி?"

ருது மெல்ல தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு விலக இனியன் கேள்விகளை அடுக்கினான்.

ஒரு கால் மடக்கி பின்னால் சுவற்றில் வைத்தவனாக, மடக்கிய கால் தொடையில் கையினை வைத்து சுவற்றில் சாய்ந்து நின்ற ருது தலையை பின்னால் அழுத்தி முகத்தை மேலுயர்த்தி... கண்களை மூடினான்.

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனியா" என்றான். ருதுவின் கண்ணிலிருந்து கண்ணீர் இறங்கி வந்து செவிமடலைத் தொட்டது.

தங்கையை ஏமாற்றிவிட்டான் என்று நொடியில் எழுந்த கோபம், ருதுவின் கண்ணீரில் காணமல் போனது.

"ருது..." இனியன் அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.

"நானே பேசணும், அவளைப்பற்றி தெரிஞ்சிக்கணும் கேட்டால், நீ ரிப்ளை பண்ணிடாத" என்ற ருதுவின் முகத்தை ஏறிட்ட இனியனுக்கு அந்த முகத்தில் தெரிந்ததெல்லாம் நண்பன் கொண்ட வலி, சோகம். அப்பட்டமாய் காட்டிக்கொடுத்த வருத்தத்தில் இனியன் கனத்துப்போனான்.

'ஏதோ உள்ளது.' இனியனால் நினைக்க மட்டுமே முடிந்தது. அந்த சூழலில் இனியனால் அடுத்து என்ன என்று யோசித்து கேட்டிடவும் முடியவில்லை.

"வலிக்குதுடா" என்ற ருதுவின் குரல் அடைத்து வெளிவந்தது.

ருதுவின் சட்டை முழுக்க இமையாளின் குருதி. இன்னும் ஈரம் காயாது அவனின் நெஞ்சத்தின் ஈரத்தை முற்றிலும் வற்ற வைத்திருந்தது.

இனியன் எழுந்து வந்து ருதுவின் தோளில் கை வைத்திட...

இனியனை இறுகக் கட்டிக்கொண்டு சில நொடிகள் அழுத்தமாக நின்ற ருது,

"பார்த்துக்கோ... முடிஞ்சா நல்ல லைஃப் அமைச்சுக்கொடு" என்று சொல்லிவிட்டு திரும்பியும் பாராது சென்றிருந்தான்.

ருதுவின் திருமண விஷயம் இனியனே எதிர்பாராதது. தன் நண்பனைப்போல் காதலுக்கு மரியாதை கொடுத்து யாரும் காதலித்திருக்கமாட்டார்கள் என்று இனியனே அவனது காதலில் பலமுறை வியந்து பார்த்திருக்கிறான்.

தங்கையை காட்டிலும் நண்பன் இன்றியமையாதவனாகியது அக்குணத்தில் தான்.

அன்று, அந்நாள், எல்லாம் துறந்து சென்ற ருதுவின் பின் பிம்பம் கானலாய். ஏனோ எல்லாம் காற்றாகியிருந்தது.

அடுத்து ருதுவின் எண்ணம் சூழாது தடையாக இமையாளின் நிலை இனியனை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.

இமையாள் வீட்டிற்கு வரவே கிட்டத்தட்ட ஒரு மாதமாகியது. சாதாரணமாக எழுந்து நடமாடிட ஆறு மாதங்களுக்கும் மேலானது.

உடல் நிலையோடு மனமும் பாதிக்கப்பட்ட நிலையில்... இனியனால் தங்கையை விட்டு நண்பனை ஆராய முடியாதுபோனது.

எல்லாம் சரியாகி ருதுவை தேட, அவன் பல மடங்கு தூரம் சென்றிருந்தான்.

ருதுவின் சமூக வலைதள கணக்குகள் யாவும் மூடப்பட்டிருந்தது. அலைப்பேசி எண் மாற்றப்பட்டிருந்து. இனியனுக்கு நண்பனை தொடர்புகொள்ள இருந்த ஒரேவழி மின்னஞ்சல் மட்டுமே!

பதில் வராத போதும், மின்னஞ்சல் முகவரி வழக்கத்தில் இருக்கிறதா என்பது தெரியாத போதும்... பல முடியாத தருணங்களில், தன்னுடைய குமுறல்களை புலம்பலாகக் கொட்டி அனுப்பிடுவான். இதுவரை அவற்றிற்கெல்லாம் பதில் வராதபோதும் இனியன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறான்.

நொடிகளில் மீட்டிப்பார்த்த நினைவுகளிலிருந்து வெளிவந்த இனியன் தலையை இருபக்கமும் ஆட்டியபடி எழுந்து தனதறை சென்று மருத்துவமனை செல்ல கிளம்பித் தயாராகி வந்தான்.

"நீ கேட்ட சாலட்." தீபா அவன் முன் மேசையில் வைத்தார்.

சுரேந்தரும் அருகில் வந்தமர்ந்தார்.

'பலே திட்டம் போலவே!' நினைத்தாலும் பழக்கலவையில் கண்ணாக இருந்தான்.

"இதெல்லாம் சாப்பிட்டால் எப்படி காணும். இந்த வயசில் தான் நல்லா சாப்பிட முடியும்" என்ற சுரேந்தர் பேச வந்ததை பேச முடியாது தயங்கிட...

"என்ன பேசணும் நேரடியா பேசுங்கப்பா!" என்றிருந்தான் இனியன்.

"அது இனியா..." என்று சுரேந்தர் தீபாவை பார்த்திட...

"நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. எப்டியாவது அவளை சம்மதிக்க வை இனியா" என்றார் தீபா.

இனியன் அமைதியாக இருக்க, அவன் முன் பையனின் புகைப்படம் மற்றும் விவரங்களை முன் வைத்தார்.

"இருபத்தியேழு வயசாகுது இனியா அவளுக்கு உனக்கு முப்பத்தி ஒன்னு. அவளுக்கு முடிக்காமல் பண்ணிகம்மாட்டன்னு நீயும் பிடிவாதமா இருக்க. ஊருல இருக்க எல்லாரும் பொண்ணை கட்டிக்கொடுக்கிற எண்ணமில்லையான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் போனால் வர வரனும் வராது. அவளுக்கு முடிச்சிட்டு உனக்கு முடிக்க வேண்டாமா?" என்று ஒரே மூச்சில் பேசி முடித்து தவிப்பாய் மகனின் முகம் பார்த்தபடி இருந்தார் சுரேந்தர்.

இனியனிடம் பதில் தான் இல்லை.

திருமணம் ஆகிவிட்டது என்று ருது சொல்லியதை நம்புவதா? இல்லை அவன் சொல்வது பொய். எதற்கோ பொய் சொல்கிறான் என்று இன்னமும் அவன் நினைவாகவே இருக்கும் தங்கையின் கூற்றை நம்புவதா? எதுவும் தெரியாது நடுவில் குழம்புபவன் இனியன் தான்.

"ஈவ்வினிங் இமயா வரட்டும்மா பேசுறேன்" என்று எழுந்துவிட்டான்.

மருத்துவமனை வந்தவன் தான் பார்க்க வேண்டிய நோயாளிகளை பார்த்து முடித்து இருக்கையில் சற்று ஓய்வாக அமர்ந்த நொடி அதுவரை பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தவை யாவும் முன்னால் முந்தியது.

"நாலு வருஷம் ஆச்சுடா. இன்னமும் ஒருத்தி உன்னையவே நம்பிட்டு இருக்காள். நீ சொன்னது பொய்யா, உண்மையான்னு கூட தெரிஞ்சிக்க முடியல. விட்டுட்டு வலி கொடுக்கவா காதலிச்ச? இதுதான் நான் உனக்கு அனுப்பும் கடைசி தகவல். நண்பனுக்காகன்னு இதுவரை நான் பார்த்தது போதும். இனி அவளுக்காக யோசிக்கப்போறேன்" என்று ருதுவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த இனியனிடம் பெரும் ஆயாசம்.

கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.

ருதுவுடன் சிரித்து பேசி சுற்றிய நிகழ்வுகள் கண்ணில் வலம் வர, பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்திருந்தான்.

நேரத்தை பார்த்தான். இமையாளுக்கு பள்ளி விடும் நேரம். சிறிது நேரத்தில் பள்ளியின் வாயிலில் அவளுக்காகக் காத்திருந்தான்.

"ட்யூட்டி முடிஞ்சுதா?"

அண்ணனை கண்டதும் அவனருகில் வந்தவள் கேட்டபடி காரிலேறி அமர்ந்தாள்.

"வெளியில் எங்கும் போகலாமா?"

கேட்டவனை என்ன என்பதைப்போல் பார்த்தாள்.

"கொஞ்சம் பேசணும்!" இனியன்.

"பீச் போகலாம்."

"அந்த காபி ஷாப் வேண்டாமே!"

"எனக்கு அங்கதான் போகணும்."

"இன்னமும் எத்தனை நாளுக்கு அவன் ஞாபகம் வரும்போதெல்லாம் அங்கவே போய் உட்கார்ந்திருக்கபோற இமயா?" இனியனிடம் அத்தனை காட்டம். தங்கையிடம் என்றுமே அதிர்ந்து பேசிடாதவன்... இன்று வெடித்திருந்தான்.

இனியும் முடியவே முடியாது எனும் இனியனின் மொத்த அழுத்தமும் கோபமாக வெளியில் வந்தது.

"அவன் தான் நீ வேணான்னு போயிட்டானே! இன்னமும் ஏன் இப்படி உருகுற. நீயும் நிம்மதியில்லாமல், உன்னை சுற்றுயிருக்கவங்களை நிம்மதியா இருக்க விடாமல் படுத்தி வைக்கிற" என்றவன் ஸ்டியரிங்கில் உள்ளங்கை வைத்து விடாது தட்டினான்.

"மூளைக்கு புரிகிற சிலது மனசுக்கு புரியாதுண்ணா. புரிஞ்சாலும் மனசு ஏத்துக்க எத்தனை வலி அனுபவிக்கும் தெரியுமா? அவங்க சொன்னது உண்மையாவே இருக்கட்டும். ஆனால் நேசிக்கிறது என்னை மட்டுமே நேசித்த என் ருதுவைத்தான்" என்றவள், குலுங்கி அழுதிட வெறித்து பார்த்தான் இனியன்.

"தொலைஞ்சுப்போயிடணும் போலிருக்குண்ணா!" தொண்டை கிழிய கத்தியிருந்தாள்.

'தொலைந்துப்போதல் என்பது இருத்தலிலிருந்து மொத்தமாக வெளியேறுவது.'



கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 3

எதையும் தொலைக்கவில்லை...
ஆனால், தேடுகிறேன்.
எனக்கில்லை என்று தெரிந்த பின்பும்...
ஏனோ, உனக்காகத் தவிக்கிறேன்.

_______________________

"தொலைஞ்சிப்போயிடனும் போலிருக்குண்ணா."

அப்படியொரு வலி அந்த வார்த்தைகளில்.

அதிர்ந்து பேசியறியாத தங்கையின் தொண்டை அடைத்து வெளிவந்த கத்தலில் இனியன் ஸ்தம்பித்துப்போனான்.

"இமயா!"

"முடியலண்ணா... முடியல... என்ன பண்ணட்டும் நான்." இமையாளின் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென வழிய, இனியனின் இதயத்தில் கனத்தின் அளவு கூடிக்கொண்டே போனது.

காலம் எதையும் ஆற்றுப்படுத்தும். இதுவே இயற்கையின் நியதி. நிதர்சனம்.

இங்கு இமையாளின் காயத்தின் வலியை அந்த காலத்தாலும் வடுவாக்கிட முடியவில்லை.

அன்று மருத்துவமனையில் கண் விழித்து இமையாள் ருதுவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், தங்கையின் கண்களில் கண்ட வலி இன்றும் கொஞ்சமும் குறையாது அவனால் காண முடிகிறதே!

அண்ணனாக நொறுங்கிவிட்டான்.

நண்பனின் செயலுக்கு பின்னால் வலுவான காரணம் இருக்குமென்றாலும், முதல் முறையாக ருதுவின் மீது அத்தனை கோபம் கொண்டான் இனியன்.

"அவனை வெறுக்கவே மாட்டியாடாம்மா?" ஆயசமாகக் கேட்டிருந்தான்.

"அணு அணுவாய் காதலிச்சிருக்கேன்... காதலிக்கிறேன். எப்படி வெறுக்க முடியும்?" அழுகையில் வினவியவளின் குரலில் வலியைத் தாண்டிய ஒன்று.

"அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இந்த ஒரு காரணம் போதாதா?"

"வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தும், முடியாதே... எல்லாவற்றிற்கும் நடுவில் நாம் கொண்ட அன்பு வாழ்ந்துட்டே தான் இருக்கும்" என்ற தங்கையின் கண்ணீரை அவனால் கண்கொண்டு பார்த்திட முடியவில்லை.

இந்த நான்கு வருடங்களில் இமையாளின் சோகத்தை கண்டிருக்கிறான்... ஆழ்ந்த அமைதியை உணர்ந்திருக்கிறான்... ஒருபோதும் இப்படி வெடித்து வெம்பி அழுவதை பார்த்ததே இல்லை. இன்று மொத்தமாகக் காட்டுகிறாள்.

நான்கு வருடங்களாக அழுத்தி வைத்த யாவற்றையும் இக்கணம் வெளி காண்பிக்கிறாள்.

பார்க்கும் அவனே நொறுங்கிப் போகிறான்.

இந்த காதலுக்கு விட்டுச்சென்ற தன் நண்பன் கொஞ்சமும் தகுதி இல்லாதவன் என்றே அந்நொடி இனியனுக்குத் தோன்றுகிறது.

நண்பனின் பக்கம் நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கட்டுமே... காதலில் வலியோ, சுகமோ பக்கமிருந்து வாழ்ந்து பார்ப்பதுதானே அக்காதலுக்கு காதலர்களாக அவர்கள் செய்யும் நியாயமாகும்.

"அவன் உனக்கு வேணாம் டா. உன்னை இப்படி அழ வைக்கிற காதல் வேணுமா என்ன? மறக்க ட்ரை பண்ணேன்."

சொல்லிய இனியனின் முகம் பார்த்த இமையாள், உள்ளங்கையால் முகம் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

"அவங்க போயிட்டாங்க... அதுக்காக இன்னொருத்தன் என் காதல் ஆகிட முடியாதுண்ணா. அவங்க போனப்பிறகும்... இனி அவங்க எனக்கு இல்லவே இல்லைங்கிற இந்த நிலையில் கூட அவங்க மட்டுமே என் காதல். வேறு யாரும் வேணாம் என்பதே என் காதல். அவங்க என்னை விட்டு போனதுக்கும், மறந்திருப்பதற்கும், திரும்பி வரவேப்போறதில்லை என்பதற்கு காரணம் நிறைய இருக்கலாம். ஆனால் நான் அவங்க மட்டும் தான் என் நினைவுன்னு மறக்காம இருக்க ஒரே காரணம்... எனக்கு அவங்களை மட்டும் தான் பிடிக்கும். அவங்க இருக்க இடத்தில் இன்னொருத்தரை வைக்கவே முடியாதுங்கிறது தான் நிஜம். நினைப்பையே ஒதுக்கி வைக்க முடியாதுங்கிறப்போ... எப்படிண்ணா மறக்க முடியும்?" அழவில்லை, வார்த்தை தடுமாறவில்லை. குரலில் தழுதழுப்பு இல்லை. அத்தனை நிதானமாக தன் உள்ளத்து உணர்வை ஆழமான வார்த்தைகளால் பகிர்ந்திருந்தாள்.

"இமயா...!"

"அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. உண்மையாவே இருக்கட்டும். என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல. அவ்வளவு தான். அவங்க மனைவி, குழந்தைன்னு நல்லாயிருக்கட்டும். என் காதலை எங்க அவங்க விட்டுட்டு போனாங்களோ! அந்த இடத்திலே நானும் என் காதலும் இந்த நொடிவரை தேங்கி நின்னுட்டோம். நான் கடைசிவரை நேசிச்சிட்டே இருக்கிறது என் காதலான ருதுவை மட்டும் தான். யாரோ ஒரு பெண்ணோட ருத்விக்கை இல்லை."

இதற்கு மேலும் இனியனால் அவனை மறந்திடு என மீண்டும் ஒருமுறை சொல்லிட முடியுமா என்ன?

"அப்போ இப்படியே இருக்கப்போறியா?"

"பையன் மட்டும் தான் காதலுக்காக கடைசிவரை தனியா இருக்கணுமா? பொண்ணு இருக்கக்கூடாதா? நாங்கலாம் தாஜ்மஹால் கட்டினா ஏத்துக்க மாட்டிங்களா?" இனியனை இலகுவாக்கிட அவள் சாதரணம் போல் பேசினாலும், அதிலும் மெல்லிய சோகம் இழையோடியது.

"என்னோட வலிக்கு பின்னால் அவங்க வாழ்க்கை அழகா இருக்கும்ன்னா... அதையும் நான் ஏத்துகிறேன் ண்ணா!"

என்ன மாதிரியான அன்பு இது. இனியனுக்கு மலைப்பாக இருந்தது.

'இத்தனை காதல் தன் நண்பனுக்கு கொடுத்து வைக்கவில்லையே!' ஆதங்கமாக எண்ணிக்கொண்டான்.

இருவருமே எந்தவொரு இடத்திலும் ருது வேண்டுமென்றே விட்டுச் சென்றிருப்பானென நினைக்கவில்லை. 'அந்த இடத்தில் தான் ருதுவின் உண்மையான அன்பு வென்று நிற்கிறது.'

"ஒரு ப்ரொபோஸல் வந்திருக்குடா. அப்பா எப்படியும் முடிக்கணும் நினைக்கிறார்."

"அவங்களை கடந்து வர முடியலண்ணா!" மென் குரலில் மொழிந்தாள்.

"நீ முயற்சிக்கலன்னு சொல்லு" என்ற இனியன், "விட்டு வேணான்னு போறதுக்கா காதலிச்சான். இதுவரை தோணல... ஆனால் இப்போ தோணுது. அவனை அடிக்கணும். ஒரு அடியாவது அடிக்கணும்" என்று கோபமாகக் கூறிய இனியனின் வார்த்தையில் இமையாளுக்கு புன்னகை எட்டிப்பார்த்தது.

'உன்னால் அவரை அடிக்க முடியுமா?' எனும் பாவனை அது.

"அடிக்க முடியாது நினைக்கிறியா?"

"பர்ஸ்ட் அடிங்க... அப்புறம் நம்புறேன்" என்றாள். மெல்லிய இதழ் விரிப்போடு.

"சரி இப்போ அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்லட்டும்?"

"நான் பேசிக்கிறேன். வீட்டுக்கு போங்க" என்றாள்.

"பீச்சுக்கு போகவே இல்லையே?"

"பேச வேண்டியதுலாம் பேசிட்டிங்கதானே?"

இனியனின் தலை ஆமென்பதாக ஆடியது.

"எப்போ என்னால கடந்திட முடியும்ன்னு தோணுதோ... அப்போ நிச்சயம் நீங்க சொல்றதை செய்யுறேன்" என்றவளை இம்முறை கூர்மையாக நோக்கியது இனியனின் விழிகள்.

"நம்பிக்கையில்லை" என்று உதடு சுளித்தவன் வண்டியை கிளப்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இருவரையும் எதிர்பார்த்து தீபா வாயில் படியிலேயே ஆர்வமாக நின்றிருந்தார்.

"இப்போ அம்மா கேட்பாங்க. நீயே சொல்லிக்கோ இமயா? அவங்க எதிர்பார்ப்பை என்னால் இனியும் முறியடிக்க முடியாது" என்றவன், காரிலிருந்து இறங்கி விடுவிடுவென உள்ளே நுழைந்தான்.

பேசிட்டியா எனும் விதமாக தீபா இனியனின் முகம் காண,

"இமயாவே பேசுறேன் சொல்லிட்டாம்மா" என்று சென்றுவிட்டான்.

"அப்பா வந்தாச்சாம்மா?"

"வர நேரம் தான்" என தீபா சொல்லும்போதே சுரேந்தர் வந்து சேர்ந்தார்.

"என்ன அம்மாவும், பொண்ணும் வெளியவே நிக்கிறீங்க?" என்ற சுரேந்தரோடு பெண்கள் இருவரும் உள்ளே நுழைய...

"இப்போவே பேசிடறேன்" என்றாள் இமயா.

"என்னடி கல்யாணத்துக்கு முடியாது சொல்லப்போறியா?" அதட்டி கேட்டபடி தீபா முன்வர, சுரேந்தர் மனைவியை கைக்காட்டி தடுத்தார்.

"என்னன்னு முதலில் பேசட்டும் தீபா!"

இருவரும் இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

கீழே சத்தம் கேட்டு இனியனும் வந்திருந்தான்.

"எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. இப்போன்னு இல்லை... எப்பவுமே எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்று திடமாக மொழிந்தாள்.

பெற்றவர்கள் இருவருக்கும் அதிர்வு. தீபா முகத்தில் காட்டினார் என்றால், சுரேந்தர் உள்ளுக்குள் ஓடிய நடுக்கத்தை லாவகமாக மறைத்துக்கொண்டார்.

"காரணம் ஏதுமிருக்கா?" சுரேந்தர் தன்மையாகவேக் கேட்டார். அவருக்கு மகளின் மனம் முழுவதுமாக தெரிய வேண்டியிருந்தது.

இனியனை பக்கவாட்டக திரும்பிப் பார்த்த இமையாள், கண்களை அழுந்த மூடி திறந்தாள்.

"நான் ஒருத்தரை லவ் பண்ணேன். இப்பவும் பன்றேன்" என்றாள். இருவரையும் நேர்கொண்டு பார்த்தவளாக.

"என்னடி சொல்ற? லவ்வா?" என்று வேகமாக எழுந்து வந்து இமையாளின் தோளில் ஒன்று வைத்தார் தீபா.

"ம்மா" என்ற இனியன் தங்கையை இழுத்து தன் தோள் வளைவில் நிறுத்திக்கொண்டான்.

"லவ் பன்றன்னு தானே சொன்னாள். இதென்ன கை நீட்டுற பழக்கம்" என்று அன்னையை அடக்கினான்.

"சரிம்மா... யாருன்னு சொல்லு. பேசி பார்க்கிறேன்" என்றார் சுரேந்தர்.

அவருக்கு மகளின் திருமணம் நல்ல முறையில் அவள் விரும்பும்படி நடந்தால் அதுவே போதுமென்று இருந்தது. திருமணம் வேண்டாமென மறுத்துக் கொண்டிருந்தவள், காதலிக்கிறேன் என்றது ஒருவகையில் நிம்மதி கொண்டு அவரை ஏற்கத்தான் வைத்தது.

"பேசி பிரயோஜனம் இல்லைப்பா" என்ற இமையாள், "அவங்களுக்கு நாலு வருஷத்துக்கு முன்னவே கல்யாணம் ஆகிடுச்சு" என்றாள்.

"அப்போ கல்யாணம் ஆனவனையாடி விரும்புற?" என்று தீபா அவளின் முதுகில் கை வைக்க...

"ம்மா... இனியொருமுறை கை வச்சிங்க... நான் மனுஷனா இருக்கமாட்டேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தான் இனியன்.

"நான் லவ் பண்ண ஆரம்பிச்சப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆகல" என்றவள், "என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ். எனக்கு எதுவும் வேண்டாம்" என்று மடங்கி தரையில் அமர்ந்தவள், உடல் குலுங்க கையினால் முகம் மூடி அழுதாள்.

"இமயா." சட்டென்று கீழே அமர்ந்து தங்கையை நெஞ்சில் தாங்கியிருந்தான் இனியன்.

தங்கையின் அழுகை அவனுக்கும் வலி கொடுத்தது. இருவரின் நிலை பெற்றவர்களின் மனம் கனக்க வைத்தது.

"நாலு வருஷமாச்சுன்னு சொல்ற. இன்னும்மா உன்னால் வெளிவர முடியல?" தீபா ஆதங்கமாக வினவினார்.

"நீங்க லவ் மேரேஜ் தானம்மா... சப்போஸ் உங்களுக்கு அப்பா கிடைக்காமல் போயிருந்தால்?" அதற்கு மேல் கேட்காது இமையாள் வார்த்தையை நிறுத்திவிட... இத்தனை வருடங்கள் காதலாக வாழ்ந்த அவருக்கு மகளின் வலி ஒரு நொடியில் புரிந்தது.

அடுத்து அங்கு யாராலும் ஒன்றும் பேச முடியவில்லை.

ஆழ்ந்த அமைதி.

சில நிமிடங்களில் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்த இமையாள்...

"அண்ணாக்கு மேரேஜ் பண்ணுங்க" என்றாள்.

"முடியாது." இனியன் பட்டென்று மறுத்திருந்தான்.

"அண்ணா ப்ளீஸ்..."

"முடியாதுடா... உன்னை இப்படியே விட்டுட்டு, நான் மட்டும் எப்படிடா? நீ உடைஞ்சு உட்கார்ந்திருக்கும்... ம்ப்ச், என்னை சந்தோஷமா இருக்கு சொல்றியா? முடியுமா என்னால?" என்றான்.

பிள்ளைகளின் அன்பில் மகிழ்வதா, துக்கம் கொள்வதா என்று தெரியாது பெரியவர்கள் தவித்து பார்த்திருந்தனர்.

இனியனுக்கு தன்மீதே ஆத்திரமாக வந்தது. தங்கையின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமென்று.

காதலிக்கிறேன் என்று வந்தபோது, பொறுப்பான அண்ணனாக தவறென்று எடுத்து சொல்லாது, அவனும் அல்லவா ருதுவின் குணத்தில் கவரப்பட்டு அக்காதலுக்கு துணையாக நின்றான். அன்று இமையாளுக்கு அண்ணனாக மட்டும் அவன் நடந்து கொண்டிருந்தால், இன்று இந்நிலை வந்திருக்காதோ என முதல்முறையாக குற்றவுணர்விற்கு ஆட்பட்டான்.

"கொஞ்சநாள் போகட்டும் தீபா" என்று எழுந்த சுரேந்தர், பிள்ளைகளின் தோற்றம் காண முடியாது, தளர்ந்த நடையுடன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டார்.

பிள்ளைகளைத் தேற்றும் வழி தெரியாது தாயாய் தவித்து நின்றார் தீபா.

______________________________

"எங்க அவன்?"

கோபமாக உள்ளே நுழைந்த மனிதர், அங்கு தன்னை கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவர்களுக்கு சிறு தலையசைப்பை கொடுக்க வேண்டுமென்பது கூட கருத்தில் இல்லாது, "இருக்கானா?" எனக் கேட்டுக்கொண்டே, தடுப்பை தள்ளிவிட்டு அறைக்குள் நுழைந்தார்.

மேசையின் மீதிருந்த அலைப்பேசியில்...

'ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.

எனக்கு ராஜாவா நான்...
எனக்கு ராஜாவா நான்...' என்று ஒலித்துக் கொண்டிருக்க, இருந்த கடுப்பில் அலைப்பேசியை எடுத்து பாடலை அணைத்திருந்தார்.

இருக்கையில் பின் சாய்ந்து, கண்களை மூடி, இரு கால்களையும் தூக்கி மேசை மீது ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஆட்டியபடி உல்லாசமாக பாடல் கேட்டுக் கொண்டிருந்தவன், சட்டென்று ஒலி அமிழ்ந்ததில் கண்களை திறந்தபடி, எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.

தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருப்பவரை...

"எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்" என்று பாடியபடி நெருங்கி...

"ஹே ரகிட ரகிட ரகிட" என அப்பாடலில் தோளினை ஆட்டுவதைப்போல் ஆட்டினான்.

அவரின் கண்களில் அனல் கூடியது. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.

"ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ" என்று ஊ என்ற எழுத்தை அவரின் காதில் ஊதி பாடலின் வரியை முடித்தே பாடுவதை நிறுத்தி மேசையில் குதித்து அமர்ந்தான் ருத்விக்.

"திமிருடா உனக்கு. ரொம்பவே கூடிப்போச்சு" என்றவர் அவன் அருகில் தொப்பியை கழட்டி மேசை மீது வைத்தவராக முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

"திட்டுறதுக்குதானே அவ்வளவு கோபமா வந்தீங்க?" என்றவனிடம் அப்படியொரு நக்கல்.

"கிண்டலா பன்ற நீ" என்று அவனின் தொடையில் தட்டியவர், "உன் முகத்தை பார்த்து... நீ பண்ணுற சேட்டைக்கு பிறகும் கோபமா இருக்க முடியுமா என்ன?" எனக் கேட்டார்.

"நான் சேட்டை பண்றனா? ஒரு பொறுப்பான போலீஸ்காரனை பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க நீங்க?" என்றவனிடம் அடக்கப்பட்ட சிரிப்பு. பக்கென அவரும் சிரித்துவிட்டார்.

"அவனை எதுக்குடா போட்டுத்தள்ளுன. சின்ன பையன் டா. இன்னும் பதினேழு வயசு கூட ஆகல" என்றார்.

அவர் பீகார் மாநிலத்தின் டிஜிபி. திருவேங்கடம். தமிழர். அதனாலேயே தமிழன் என்று ருத்விக்கின் மீது தனிப்பட்ட விருப்பம் அவருக்கு. அது அவனது கடமை தவறாத நேர்மையில் மேலும் அதிகரித்தது. அவன் எது செய்தாலும் சரியாக இருக்குமென்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மிக எளிதாகவே அவரிடம் ருத்விக் ஏற்படுத்தியிருந்தான்.

"க்ரைம் ப்ராஞ் டிசி மாதிரியாடா நடந்துக்கிற?"

"வேறெப்படி நடந்துக்குறேன்?" என்ற ருத்விக், தான் அமர்ந்திருந்த நிலையில் மாற்றமில்லாது எட்டி மேசை இழுவையை திறந்து சில புகைப்படங்களை எடுத்து அவர் முன்னே போட்டான்.

பார்த்ததும் மனிதர் ஆடிவிட்டார். கண்கொண்டு பார்த்திட முடியாது, கையை வைத்து படங்களை மறைத்துக்கொண்டார்.

"நீங்க சொன்ன சின்னப்பையன் பண்ண வேலை தான் இது" என்ற ருத்விக்,

"கண்டுபிடிச்சு கூட்டி வரும்போது, ஜெயிலில் தானே போடப்போறீங்க? போடுங்க, எனக்கு இன்னும் பதினேழு வயசு ஆகவே ரெண்டு வாரம் இருக்கு. ஜூவைனைல் பிரிசனில் தான் போடுவாங்க. அங்கிருந்து ஈஸியா வெளிவந்திடுவேன்னு அசால்ட்டா சொல்லி சிரிக்கிறான்" என கை முஷ்டிகளை இறுக்கி மடக்கினான்.

"இந்த போட்டோவில் இருக்க பொண்ணுக்கு வயசு பன்னெண்டு தான். பதினேழு வயசு பையன் செய்யுற காரியமா இது. அதான் போட்டுத் தள்ளிட்டேன். அவன் சொன்ன மாதிரி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் கொண்டு போய் விட்டால், இவன் திருந்தாமல் நாலு பேரை சேர்த்து கெடுப்பான். அந்த சின்னப்பொண்ணு தனக்கு நடந்த கொடுமை என்னன்னு தெரியாமலே அரை உயிரா ஹாஸ்பிடலில் கிடக்கிறாள். மீடியாவுக்கு தெரிஞ்சால் உயிரோட இருக்க பொண்ணை வார்த்தையாலே சுடுகாட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு கமுக்கமா வச்சி அவனை தேடிப்போனால், கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாமல் இனியும் இதுபோல் செய்வேன் என்பதைப்போல் பார்க்கிறான். ஒரு நொடி அந்த குட்டிப்பொண்ணு கண்ணு முன்னாடி வந்து நின்னாள். அவனை சுட்டுட்டேன்." சாதரணமாக தோள் குலுக்கினான்.

"மீடியாவுக்கு இப்போ நீ சுட்டது தெரிஞ்சிடுச்சே. இனி நோண்டி விஷயம் என்னன்னு கண்டுப்பிடிச்சு அந்தப்பொண்ணை விசாரிக்கரன்னு கொடுமை பண்ணத்தானே போறாங்க" எனக்கேட்ட வேங்கடத்தை பார்த்து அர்த்தமாக சிரித்த ருத்விக்...

"நீங்க பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்தப்போவே தெரியுது... பையன் பெரிய இடம்னு. எலெக்ஷன் டைம் வேற, இந்த நியூஸை அவனுங்களே மூடி மறைச்சிடுவானுங்க. சிங்கில் வோர்ட் லீக் ஆகாது" என்றான்.

"பக்கா பிளான்... ஹ்ம்ம்" என்ற வேங்கடம், "நீ சுட்ட புல்லட்டுக்கு கணக்கு சொல்லணுமே?" என்றார்.

"சொல்லிடலாமே! பட் நான் சொல்ற வரை அவனுங்க என்னை விட்டு வைப்பானுங்களா என்ன? என்னை திரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி உங்களுக்கு ஓலை வந்திருக்குமே" என்று தன்னுடைய நக்கல் தொனி கொஞ்சமும் மாற்றாது கேட்டிருந்தான்.

"அடேய்" என்ற வேங்கடம், "என்னால சத்தியமா உன்னோட முடியலடா" என்று புலம்பினார்.

"கண்டிப்பா இந்த முறை உன்னை திரான்ஸ்ஃபர் பண்ணியே ஆகணும் ருத்விக். எப்பவும் ஒருத்தன் கிட்டவேவாடா மோதுவா... அவன் ஆளுங்கட்சி ஆளுடா. அவனோட அக்கா பையன், நீ சுட்டது. உன்னை இங்க இருக்கவே விடக்கூடாதுன்னு சி.எம்'கிட்ட மல்லுக்கு நிக்கிறான். அவனால் கட்சிக்கு நிறைய நிதி வருதுன்னு முதல்வர் என்னை டீல் பண்ண சொல்லிட்டார்" என்றார் விளக்கமாக.

"திரான்ஸ்ஃபர் தானே கொடுங்க. நாலு வருஷமா இங்கவே இருந்து போர் அடிச்சிப்போச்சு. வேறெங்கும் போவோம்" என்றான். சோம்பல் முறித்தபடி.

அடுத்த நொடி வேங்கடம் சொல்லிய ஊரின் பெயரில் போகவே முடியாதென தர்க்கம் செய்யத் தொடங்கியிருந்தான் ருத்விக்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 4

"இப்போ முடிவா என்ன தான் சொல்றீங்க?"

இடையில் கை குற்றி முறைப்போடு கேட்டான் ருத்விக்.

"கண்டிப்பா நீ அங்குதான் போயாகனும் ருது." திருவேங்கடம் அழுத்தமாக சொல்ல, அவனுக்கு ஆயாசமாக வந்தது. இருபக்க இடையிலும் கைகளைக் குற்றி தலையை இடவலமாக ஆட்டினான். கீழ் பற்களால் மேலுதட்டை கடித்தபடி.

"வேற பிளேஸ் பிக்ஸ் பண்ணுங்க. என்னால் அங்க போக முடியாது."

"அடேய்... நீ தமிழன் தானே! தமிழ்நாட்டுக்கு போக இவ்ளோ அடம் பிடிக்கிற?"

"அச்சோ... ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க" என்று நெற்றியை தேய்த்துக்கொண்ட ருத்விக், "நான் போக முடியாது சொன்னா என்ன பண்ணுவீங்க?" எனக் கேட்டான்.

"நீ அந்த பையனை போட்டுட்டேன்னு, உன் மேல விசாரணை கமிஷன் வைக்க சொல்லி நம்ம ஆளுங்களே உனக்கு எதிரா குதிச்சிட்டு இருக்கானுங்க. மனித உரிமை துறையிடம் மாட்டின, உன்னை மொத்தமா காலி பண்ணிட நம்ம ஆளுங்களே உனக்கு எதிரா சாட்சி சொல்லுவானுங்க. அரசியல் விளையாட்டுக்காக நீ பண்ண காரியம் வெளிய தெரியாம இருக்கு. இதை நீ ஃபேஸ் பண்றன்னு கெத்தா முன்னாடி நின்னன்னு வை... கண்டிப்பா டி புரமோட் பண்ண அதிக வாய்ப்பிருக்கு. பதவு கீழிறங்கிறது எத்தனை பெரிய கரும்புள்ளின்னு உனக்கு நான் விளக்கி சொல்ல வேண்டியதில்லை" என்று அனைத்து பக்கங்கலிருந்தும் தெளிவாக எடுத்துக் கூறியவர், "இப்போ நீயே முடிவு பண்ணிக்கோ" என்றார்.

"மொத்தமா கார்னர் பண்றீங்க?" என்ற ருது, "அதென்ன நீங்க நினைச்சால் இடத்தை மாற்ற முடியாது?" எனக் கேட்டான். புருவ தூக்கலோடு.

வேங்கடம் தடுமாறினார். லாவகமாக மறைத்துக் கொண்டார்.

"இது சி.எம் ஆர்டர். மத்ததுன்னா நான் சேன்ஜ் பண்ணியிருப்பேன். அவரோட ஆர்டரை நான் எப்படி கேன்சல் செய்து சேன்ஜ் பன்றது?" என்றார். கையை விரித்தவராக.

ருது யோசனைக்கு செல்ல...

"இப்போ போயேன் டா. அங்கு உனக்கு செட் ஆகலன்னா... நீயே உனக்கு வேறிடம் மாற்றல் வாங்கிக்கோ" என்றார்.

"ம்ம்ம்... குட் ஐடியா" என்ற ருது,

"எப்போ கிளம்பணும்?" என வினவினான்.

"நீ இப்போவே கிளம்பிட்டாலும் ஓகே தான். எனக்கு நிம்மதி. அந்த அரசியல்வாதியை சமாளிச்சிடுவேன்" என்றவரை ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்தான் ருது.

"என்னடா அப்படி பாக்குற?" என்றவர், "உன் வயிசுல உனக்கு மேல வெறப்பா சுத்தினவன்டா நான். ரத்தம் சூடு குறைஞ்சால் தன்னால எல்லாம் புரியும்" என்றார்.

"ஒருத்தனுக்கு பணிந்து போற நிலை வந்தால், அடுத்த நொடி இந்த காக்கியை கழட்டிடுவேன்" என்று நெஞ்சை நிமிர்த்தி திமிராக மொழிந்தவனை கண்கள் மின்ன பார்த்தார் திருவேங்கடம்.

இது... இதுதான் அவருக்கு அவனிடம் ரொம்ப பிடித்தது. போட்டிருக்கும் ஆடைக்கும், கொண்டிருக்கும் நட்சத்திரத்திற்கு உண்மையாக இருக்கின்றானே! அவனுடன் பழகியதற்கே பெருமையாக உணர்கிறார்.

"ஆர்டர் மெயில் பண்ணிடுங்க. கிளம்புறேன்" என்றவனிடம், "ஏன் தமிழ்நாட்டுக்கு போகமாட்டேன்னு இவ்வளவு அடம்?" எனக் கேட்டார்.

ருது கடந்த ஐந்து மாதங்களாகத்தான் துணை ஆணையர். அதற்கு முன்பு வரை உதவி ஆணையர் மட்டுமே. போன வருடமே அவனுக்கு மாற்றலுடன் கூடிய உயர் பதவி வாய்ப்பு அவனது திறமைக்காகவே கிடைத்தது. மாற்றல் தமிழ்நாட்டில் என்றதுமே உயர் பதவி வேண்டாமென மாற்றலையும் மறுத்துவிட்டான். அதற்கு முன்பும் அப்படித்தான். அப்போதெல்லாம் வேங்கடம் காரணம் கேட்டதில்லை. இன்று கேட்கிறார்.

சில நொடிகள் அவரையே ஆழ்ந்து நோக்கினான்.

அவனது மிக குறைந்த நலம் விரும்பிகளில் அவரும் ஒருவர். பல பெரும் புள்ளிகளை நேரடியாக மோதி, நான்கு வருடங்களில் எதிலும் சிக்கிக்கொள்ளாது இருக்க பெரும் காரணம் அவர். அவருடைய பதவி. அவன் தைரியமாக அனைத்தையும் செய்கிறானென்றால் அதற்கு துணையாக அவர் இருந்ததே காரணம். அவர் பதவியால் தான் பல எதிராளிகள் ருதுவை நெருங்கவே அஞ்சினர். ருதுவால் நேர்மையாக அனைத்தையும் செய்ய முடிந்ததென்றால் அதில் அவருக்கு நிறையவே பங்குண்டு. அவனுக்கு அவர் அரண் போல்.

"தேஷ் அம்மா அங்கு தான் இருக்கிறாள்."

ருதுவின் முன் வாழ்க்கை எதுவும் வேங்கடத்திற்கு தெரியாது. அவன் இங்கு வந்தபோது, அவனது கையில் மூன்று வாரங்களே ஆன ருத்தேஷ்.

ருதுவை பார்த்ததும் தமிழனென்கிற நெருக்கம் ஒன்றே அவனை பிடிக்க காரணமாக அமைந்திட, காவலர் குடியிருப்பு பகுதியில் தன்னுடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்த வீட்டை அவனுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்.

ருது பிஞ்சு குழந்தையை வைத்துக்கொண்டு அல்லாடுவதைக் கண்டு வேங்கடத்தின் மனைவி அம்பிகா, தானாகவே அவனுக்கு பல உதவிகள் செய்தார். ஆரம்பத்தில் தெரியாத பலவற்றை அம்பிகாவிடமிருந்து கற்றுக்கொண்ட ருது, தானே அனைத்தும் தேஷிற்கு செய்ய பழகிக்கொண்டான்.

ருது வேலைக்கு செல்லும் நேரங்களில் தேஷ்ஷின் முழு பொறுப்பு அம்பிகா தான். வேங்கடம், அம்பிகாவிற்கு ஒரே பெண். அப்போது அவள் பள்ளியின் இறுதியில் இருந்தாள். அவளும் குழந்தையோடு ஒன்றிவிட, ருதுவை அவர்கள் தங்கள் மகனாகவே பார்க்கத் துவங்கியிருந்தனர்.

அவன் வேண்டாமென்று வந்த குடும்ப சூழல் இங்கு வேங்கடத்தால் தானாகவே அமைந்தது.

அத்தனை பிணைப்போடு இருந்தும், வேங்கடம் ருதுவிடம் அவனது கடந்த காலத்தைப்பற்றி இதுவரை கேட்டதே கிடையாது.

தேஷின் அம்மாவிற்கு என்ன ஆனதென்றும் கேட்டதில்லை.

இன்று ஒரே கேள்வியில் மொத்தமும் தெரிந்துகொள்ள கேட்டுவிட்டார்.

ஆனால் அவனோ விடாகண்டனாக பதில் சொல்லியிருந்தான்.

"உன் அம்மா கேட்பாள். அவகிட்டவும் இதையே சொல்றியான்னு பார்ப்போம்" என்று தொப்பியை எடுத்து தலையில் வைத்தவராக வேங்கடம் எழுந்துகொள்ள...

"அம்மாவுக்கு தெரியாது யார் சொன்னாங்க" என்று அவரை அதிர வைத்தான்.

"நீங்க தெரிஞ்சிக்க நினைக்கல அவ்வளவு தான்" என்றவன், "அம்மாவுக்கு நான் இங்கு வந்த சில மாதங்களிலே எல்லாம் தெரியும்" என்றான்.

வேங்கடம் அதிர்ந்து நின்றார். ஒருபோதும் அம்பிகா இதனை அவரிடம் சொன்னதில்லை.

"என்னோட பெர்சனல் விஷயம். என்னைமீறி உங்களுக்கு தெரியக்கூடாது நினைச்சிருப்பாங்க" என்றான். அவரின் அதிர்வு கண்டு.

வேங்கடம், அம்பிகா... பார்த்ததும் தெரிந்துவிடும்... ஆதர்ஷ தம்பதிகள் என்று. எங்கு தன்னால் அவர்களுக்கு கசப்பு வந்துவிடுமோ என்று விளக்கம் கொடுத்தான்.

வேங்கடம் மென்மையாக புன்னகைத்தார்.

"எனக்கு அவளை புரியும். உன்னையும் தெரியும்" என்றவர் சென்றுவிட்டார்.

ருதுவின் முகத்தில் விரிந்ததோ எனும் புன்னகை.

கிளம்புவது என்று முடிவாகிவிட்டது. தன் மனம் மீண்டும் கொம்பில் ஏறுவதற்குள் இங்கிருந்து கிளம்பிவிடுவோம் என நினைத்தவன், தன் பொறுப்பிலிருக்கும் வழக்குகள் யாவற்றையும் வரிசை படுத்தினான்.

அனைத்தும் முடித்து வைத்திருந்தான்.

ருது சிறு வழக்கென்றாலும் அதிக மெனக்கெடல் செய்து முடித்த பின்பே ஓய்வான். அதுவே அவனது வளர்ச்சிக்கு பெரும் பலம். அவனது எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலுக்கும் காரணம்.

நிலுவையில் இருப்பது தற்போது அவன் செய்த என்கவுண்டர் தான். அதனை வெளியில் தெரியவிடாமல் செய்யவே தனது பணியிடை மாற்றமென்று தெரிந்தவனுக்கு, இது வழக்கில் சேராதென ஒதுக்கி வைத்தான்.

என்ன தான் பெரும் புள்ளியின் மகனென்றாலும், அவனது வழக்கை வைத்து ருதுவை தாக்க முயன்றால், அவர்களுக்குத்தான் அது பெரும் ஆப்பாக முடியும். அதற்காகவே அதனை மறைத்து, ருதுவை இங்கிருந்து மொத்தமாக அனுப்புகின்றனர். அவர்களின் எண்ணம் அறியாதவனா ருத்விக். வழக்கம்போல் அதரம் விரியா புன்னகை. தனக்குள் மட்டும்.

தனக்கு கீழ்... தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறைகளின் நிலுவை வழக்குகளை அந்தந்த அதிகாரிகளிடம் விரைந்து முடிக்குமாறு கோப்புகளை ஒப்படைத்து, இங்கிருந்து பணியில் விலகுவதாக அவனது உயர் அதிகாரியான வேங்கடத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியவன், தன்னுடைய அலுவலக அதிகாரிகளிடம் பணி நிமித்தமாகவும், தனது மாற்றல் குறித்தும் பேசி முடித்து அனைத்தும் ஓய்ந்தவனாக இருக்கையில் கண் மூடி அமர்ந்தான்.

ஏதோ இதம்.
ஏதோ வலி.
ஏதோ மின்னல்.
ஏதோ தவிப்பு.
ஏதோ குளுமை.
ஏதோ ஜூவாலை.

இதயத்தில் கூர்மையாய் பாய்ந்த உணர்வு. ஆழமாய் வேர் பிடித்திருக்கும் கடந்த காலத்தை நொடியில் விழித்திரையில் காட்சிப்படுத்தி மறைந்திட பட்டென்று கண் திறந்தான்.

"லேஷஸ்." மென்மையாய் அவனது உதடுகள் உச்சரித்தின.

மறுநொடி எடுத்து வைத்திருந்த தன்னுடைய பொருட்களை சிறு அட்டை பெட்டியில் அடுக்கி... அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டான்.

_________________________
 
Status
Not open for further replies.
Top