ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

கனகா கூறிய செய்தியில் அதிர்ந்து போன இன்னிலா, "ஏன் கனகாம்மா பொய் சொல்றீங்க. நீங்க ஞாயித்துக்கிழமை நைட்டு எட்டரை மணிக்கு வந்தீங்க தான." என்று பரிதாபத்துடன் வினவ,

"ஐயா! நீங்க அடிச்சதுல இந்தப் பிள்ளைக்கு மண்டைக்கோளாறு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் என்னை மாட்டி விடுது. இனிம்மா... நான் எப்ப வீட்டுக்கு வந்தேன். திருப்பதி போறேன்னு சொல்லிட்டுப் போனேன் தான." என்று கனகா குழம்பியபடி பேச,

"திருப்பதி போறேன்னு சொல்லிட்டுத் தான் போனீங்க. ஆனா, சீக்கிரமே வந்துட்டேன்னு சொன்னீங்களே. சார் சத்தியமா வந்தாங்க சார்." என்றாள் ஆதரவற்ற தொனியில்.

"இதுல யார் சொல்றது உண்மைன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க." என்று இடுப்பில் கை வைத்து இருவரையும் தீயாய் முறைத்த ஈஷ்யுகனிடம்,

"ஐயா... நிஜமாவே நான் வீட்டுக்குப் போகலைங்கய்யா. எட்டரை மணிக்குப் போய் சாப்பாடு செஞ்சு எப்போ இவங்க சாப்புடுறது சொல்லுங்க." என்று தனது பக்க வாதத்தை வைத்தவர், "இனி கண்ணு, பயத்துல பேசுதுய்யா." என்றார்.

"இல்ல இல்ல... நான் ஏன் பொய் சொல்லணும்." என்ற இன்னிலாவிற்கு தனது பக்க நியாயத்தைக் கூற கூட ஆற்றல் இல்லை.

உடலில் பல இடங்களில் வீங்கி கன்றிப் போய் விண் விண்ணென்ற வலியைக் கிளப்பியது. ஆகாரமற்ற உடம்பில் பேசுவதற்கு கூடத் தெம்பு இல்லை. அடி வயிறு வேறு கொடூரமாக வலித்தது. எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஆவதற்கான அறிகுறிகள் வேறு. இதில் எங்கிருந்து பேசுவது... வாழ்க்கையே சிறைச்சாலையில் முடிந்து விடும் என்ற முடிவில் தொய்ந்து அமர்ந்து விட்டாள்.

அந்நேரம் மிதிலேஷ் உள்ளே வந்து ஈஷ்யுகனின் காதில் ஏதோ ஓதிட, ஈஷ்யுகன் கண்ணைக் காட்டியதும் அவன் வெளியில் சென்றான். கழுத்தைத் தேய்த்து ஏதோ யோசித்தவன், சுருண்டிருந்த பாவையைப் பார்த்து, "ஏய் எந்திரி" என்றான்.

அடுத்து என்ன செய்யப் போகிறானோ என்ற அச்சம் அதிகமாக, இனி என்னவானாலும் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற விரக்தியே எழுந்தது அவளுக்கு.

தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவளின் கன்னம் பற்றி திருப்பி அவனைப் பார்க்க வைத்தான்.

சோர்வும் பசி மயக்கமும் வலியின் வீரியமும் ஒரு சேர தாக்கினாலும் அதில் மரண பயமே எஞ்சி நின்றது.

"நீ சொல்றது உண்மையா?" விழி இடுங்க அவன் கேட்டதில், கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

"என் அப்பா, அம்மா மேல சத்தியமா உண்மை தான் சார். ஆனா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். விட்டுருங்க சார். என்னை ஜெயில்ல போட்டுடுங்க. இதுக்கு மேல அடிச்சா செத்துடுவேன். இங்கேயே செத்து நீங்க என்னை வீடியோ எடுத்துப் போட்டு செத்தும் அசிங்கப்படுறதுக்கு ஜெயிலுக்குப் போற வரை உசுரைக் கைல பிடிச்சுக்குறேன்." என்றவளின் வார்த்தைகளில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அழுத்தம் அதிகம் தெரிந்தது.

"நீ எங்க சாகணும்ன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்." சற்றும் அவளது அழுத்தத்திற்குக் குறைவில்லாமல் கூறியவன், திரும்பி கனகாவைப் பார்த்தான்.

"என்ன திடீர்ன்னு திருப்பதிக்கு விசிட்?" சட்டென அவன் கேள்வி கேட்டதும் விழித்தவர் "வேண்டுதலுங்கய்யா." என்றார் தயக்கமாக.

"என்ன வேண்டுதல்? என் தங்கச்சிக்கு விஷம் வைக்கிற வேண்டுதலா?" என்றவனின் கேள்வியில் ஆத்திரம் மின்னியது.

அவரோ திகைத்து "ஐயா... என்னைப் போய் சந்தேகப்படுறீங்களே நிம்மிம்மா என் பொண்ணு மாதிரி!" என்றிட,

"பொண்ணு மாதிரின்னா, அவள் சொத்துல பங்கு கேட்பீங்களோ?" மீண்டும் ஒரு நக்கல் வினா.

"அய்யயோ இல்லைங்கய்யா." என்று வேகமாக பதறும் போதே வெளியில் சென்ற மிதிலன் மீண்டும் வந்தான். அவன் கையில் இப்போது இரும்பு ராட் இருந்தது.

அதனைக் கண்டு உயிரே போய் விட்டது இன்னிலாவிற்கு.

"கனகாம்மா... இந்தக் கம்பில அடிச்சா அதுவும் மிதிலன் அடிக்கிற ஃபோர்ஸ்க்கு நீங்க வெறும் மூணு அடிக்கு மட்டும் தான் உயிரோட இருப்பீங்க. நாலாவது அடில பேச்சு மூச்சு இருக்காது. சோ முதல் அடியிலேயே உண்மையைச் சொல்லிட்டா வயசான காலத்துல எலும்பு உடையாம தப்பிக்கலாம்." என்றான் அசட்டையாக.

கனகாவிற்கு அடி வாங்காமலேயே உடல் வலித்த உணர்வு. பயம் மெல்ல மெல்ல அவரைத் தாக்க, "ஐயா நான் எந்த உண்மையை சொல்லணும். எனக்குப் புரியலைங்கய்யா. நான் எதையும் மறைக்கல" என்று அழுது மன்றாடி, "பதினஞ்சு வருஷமா நீங்க போட்ட சோத்தை சாப்பிட்டு இருக்கேன். உங்களுக்கு துரோகம் பண்ணுனா அது எனக்கே துரோகம் பண்ணிக்கிட்ட மாதிரிங்கய்யா." என்று கேவினார்.

"மிதிலன் டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டார்ட் பண்ணு." என்றதில், அவன் ஓங்கி ஒரு அடி அடிக்க, கனகாவிற்கு கிறுகிறுவென வந்து விட்டது. அவரை அடித்த அடியில் பயந்து இன்னிலா மடங்கி அமர்ந்து காலைக் குறுக்கிக்கொள்ள, மிதிலன் அடுத்த அடியை இன்னும் பலம் கூட்டி அடித்தான்.

கனகா வலியில் கதறி துடிக்க, இன்னிலாவால் அதனைக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை.

"சார் வேணாம் சார்" என்று நிமிர்ந்து ஆடவனிடம் பேசத் தொடங்க, "உனக்கு ஒரு அடி குடுக்க சொல்லவா." என்று அடிக்குரலில் சீறினான் ஈஷ்யுகன்.

'அடிக்க வரும்போதே அல்பாயுசில் போய்டுவேனே' என்ற மிரட்சியுடன் வாயை மூடிக்கொண்டவளது மனம் கனகாவிற்காக மன்றாடியது.

மூன்றாவது அடிக்கு கையை ஓங்கும் போது கனகா, "ஐயா வேணாம்... அடிக்காதீங்க. நான் உண்மையை சொல்லிடுறேன்" என்று நடுங்கிக்கொண்டு பதறியவர், "விஷம் வச்சது நான் தான். என்னை விட்டுடுங்க. தெரியாம பண்ணிட்டேன்." என்று ஈஷ்யுகனின் காலில் விழுக, அவன் புழுவைப் போல அவரைத் தள்ளி விட்டான்.

"துரோகி... உன்னை அம்மா ஸ்தானத்துல பார்த்த பொண்ணுக்கு விஷம் வச்சுருக்கியே. ச்சீ... நீ எல்லாம் ஒரு பொம்பள." என்று அருவருப்பாய் முகத்தைச் சுளித்தவன், "எதுக்காக இப்படி செஞ்ச?" என்று சீறினான்.

கனகாவிற்கு நெஞ்சில் கடும் வலி ஏற்பட, "சங்கர நாராயணன் ஐயா தான், அவரு சொல்லி தான் நான்..." என்று பேச இயலாமல் மூச்சு வாங்கியவர், "எப்படினாலும் நிம்மியையும் இவளையும் கொலைப் பண்ண தான் போறாங்க. பண்ணிடுவாங்க" என்று கூறியபடியே அடங்கிப்போனது அவரது இத்தனை வருட ஆட்டமும்.

கனகாவைப் பற்றி அறிந்து அதிர்ந்து போன இன்னிலாவிற்கு, அவர் துடித்து இறந்ததை நேரில் கண்டதில் மயக்கமே வரும் போல இருந்தது.

ஆனாலும் மயங்காமல் வீம்பாகக் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டாள். தன் மீது தவறு இல்லையென இப்போதாவது ஈஷ்யுகனுக்குப் புரிந்திருக்கும் என்றாலும், இன்னும் பயம் அகலவில்லை பேதைக்கு.

மயங்கியதும், அவன் சொன்னது போன்றே வீடியோ எடுத்து விட்டால்? அந்நினைவே அவளுக்கு பயத்தீயை மூட்டியது.

ஈஷ்யுகனோ ஆத்திரம் அடங்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். 'பெத்த மகளைக் கொலை செய்யச் சொல்லி இருக்கிறானே அந்த நாராயண மூர்த்தி. எல்லாம் அதிகாரத் திமிர். மொத்தமா அடக்குறேன்.' என்று மனதினுள் வீசிக்கொண்டிருந்தப் புயலை அடக்க வழி இன்றி "மிதிலேஷ்" என்று கர்ஜித்தவன், "மினிஸ்டரைப் பார்க்க ஏற்பாடு பண்ணு" என்றான்.

மிதிலேஷ் உடனடியாக அங்கிருந்து விரைய, அடுத்ததாக தன்னை என்ன செய்யப் போகிறான்... என்ற பீதியில் அவன் முகத்தை அரண்டு பார்த்திருந்தப் பெண்ணைக் கண்டு முதன் முறை அவனுள் ஒரு குற்ற உணர்வு!

இதுவரை தவறிழைக்காத யாரையும் இப்படி துன்புறுத்தியது இல்லையே. அவள் அப்பாவி என்று ஒரு மனம் கூக்குரலிட்டது தான், ஆனால், இவ்வுலகத்தில் நிறம் மாறும் மனிதனின் பண்பை நன்கு அறிந்தவனுக்கு, இவளையும் நம்பத் தோன்றவில்லை.

விளைவு, அவனது அதிகபட்ச சினத்தின் வீரியத்தில் உடலிலும் மனதிலும் பெரும் அடிகளை வாங்கிக்கொண்டாள்.

"எந்திரி..." இம்முறை சற்று மென்மையாக அவன் அவளது கையைப் பிடிக்க, அவளுக்கு அது கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது.

"சார்... இப்பவும் நீங்க என்னை நம்பலைன்னா, என்னை ஜெயில்ல போட்டுடுங்க சார். ப்ளீஸ் வீடியோ எதுவும் எடுத்துடாதீங்க. அப்பாவுக்கு எதுவும் தெரிய வேணாம் சார். ப்ளீஸ்." என்று கெஞ்சத் தொடங்க, ஈஷ்யுகனின் முகம் இறுகிப் போனது.

"முதல்ல எந்திரி" என்றவனின் கைப்பற்றி எழப்போனவள், எழ இயலாமல் மீண்டும் கீழே விழப்போக, அவளது இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான் ஆடவன்.

"ஸ்... ஆ..." எனத் துடித்துப் பின்னால் நகர்ந்தவளுக்கு உடலில் எங்கு தொட்டாலும் வலித்தது. அவனது பெல்ட் கொடுத்த வீக்கங்கள் உடலெங்கும் பதம் பார்த்திருந்து.

செய்யாத தவறுக்காக வலியில் துடிப்பவளைப் பார்த்தவனுக்கு தன் மீதே சினம் மிகுந்தது. அந்த வலிக்குக் காரணமானவனே அதனை சரி செய்யவும் எத்தனிக்க, "ஹாஸ்பிடல் போகலாம்." என்றான்.

அதில் கண்களை விரித்தவள், "அப்போ என்னை நம்புறீங்களா. நிம்மி... நிம்மிக்கு நிஜமா நான் விஷம் வைக்கலைன்னு நம்புறீங்க தான்." எனப் பரிதாபமாகக் கேட்க,

"ம்ம். முதல்லயே தெளிவா சொல்ல வேண்டியது தான். அப்பவே இந்த ஜந்துவை விசாரிச்சு இருப்பேன்." என்று கனகாவைக் கை நீட்டிப் பேசியவன், "சாரி..." என்றிட, அவளுக்கு அதெல்லாம் கருத்தில் பதியவில்லை.

"நா... நான் ஊருக்குப் போறேன் சார். ஹாஸ்பிடல் எல்லாம் வேணாம். அப்பா வேற என்னைக் காணோம்ன்னு பதறி இருப்பாரு. என்னை விடுங்க சார்" என்றதும்,


"ஏய்... இவ்ளோ காயத்தோட ட்ராவல் பண்ணப் போறியா?" ஈஷ்யுகன் கேட்டதில்,

"ப... பரவாயில்லை சார். நான் போயிடுறேன். போற வழில காயத்துக்கு மருந்துப் போட்டுக்குறேன்." என்று ஒரு அடி எடுத்து வைத்தவளுக்கு வயிற்றில் சுளீரென வலி எடுக்க, மடங்கி அமர்ந்து விட்டாள்.

அதில் தன்னிச்சையாக அவனும் அதே போல் மடங்கி அவளருகில் அமர்ந்து விட, "என்னடி ஆச்சு?" என்று குரலில் ஒரு பதற்றத்தை ஏற்றுக் கேட்க,

"ஒ... ஒன்னும் இல்ல. எங்க எங்கயோ வலிக்குது. என்னை விடுங்க சார்" என்று மீண்டும் அதே வரிகளில் நின்றதில்,

"பைத்தியம். உன்னால நடக்கவே முடியல. இதுல என்னமோ ஊருக்கு நடந்தே போற மாதிரி விடுங்க விடுங்கன்னு புலம்பிட்டு இருக்க. உன்னை இப்ப எங்கயும் விட முடியாது." என்றவன், அவளைக் கைகளில் அள்ளிக்கொள்ள, அவளுக்கு வெடவெடத்து விட்டது.

அதில் மயங்கியே விட்டாள். 'இவ்ளோ நேரம் கோபத்துல அடிச்சப்ப மயங்காம, புருஞ்சு பேசித் தூக்குறப்ப மயங்குறா. என்ன பொண்ணோ' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனுக்கு இதயத்தில் ஒரு வித வலி கனன்று கொண்டே இருந்தது.

சில மணி நேரம் கழித்துக் கண் விழித்த இன்னிலாவிற்கு முதலில் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அதன் பிறகே இருக்கும் மருத்துவமனையில் இருப்பது புரிந்து படக்கென எழ முயன்றாள்.

கையில் ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் சுருக்கென வலிக்க, "ஆ..." என வலியில் கத்தியதில், அத்தனை நேரமும் சோபாவில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்த ஈஷ்யுகன் பட்டெனக் கண்ணைத் திறந்து அவளருகில் சென்றான்.

"இடியட் எதுக்கு எந்திரிக்கிற. டேக் ரெஸ்ட்." என்று மீண்டும் அவளைப் படுக்க வைக்க, "நான்... நான் எப்படி இங்க வந்தேன்." என்றாள் மருண்ட விழிகளுடன்.

அதற்கு பதில் கூறாதவனாக, "உன்னைப் படுன்னு சொன்னேன்." என்று அதட்டியதில், "அப்பா என்னைப் பார்க்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு சார். நான் போகணும்" என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட,

"ஊஃப் உனக்கு சென்ஸ் இருக்கா இல்லையா. இப்படி உடம்பு முழுக்க அடியோட உன் அப்பாவைப் பார்க்கப் போறியா? என்ன ஆச்சுன்னு கேட்டா என்ன சொல்லுவ. நான் அடிச்சேன்னு சொல்லி என்னை வயலன்ஸ்ல உள்ள போடுவியா?" என்றான் புருவம் உயர்த்தி.

"ஐயோ இல்ல சார். நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். என்னை விட்டீங்கன்னா போதும். இதுக்கு அப்பறம் நீங்க இருக்குற திசைப்பக்கம் கூட நான் வரமாட்டேன்." என்று பதறினாள்.

"ஏன் சொல்ல மாட்ட? நியாயமா இந்நேரம் நீ என்மேல போலீஸ் கம்பளைண்ட் தான குடுக்கணும்?" கையைக்கட்டிக்கொண்டு அவன் எதிர்கேள்விக் கேட்க,

"கம்பளைண்ட் குடுத்து எந்த பிரயோஜனமும் இல்லையே சார். நீங்க ஈஸியா வெளில வந்துடுவீங்க. பணம் இருக்கு செல்வாக்கு இருக்கு. ஆனா எனக்கு அப்படி இல்ல. எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க வாழ்க்கையும் இதனால கேள்விக்குறியாகிடக் கூடாது." என்று மெல்லிய குரலில் கூறியவனை அழுத்தமாக ஏறிட்டவன், "அப்போ எனக்கு எந்த தண்டனையும் தர மாட்டியா?" என்றான் கூர்பார்வையுடன்.

"தண்டனையா? உங்களைத் தண்டிக்கிற அளவு எனக்குப் பலம் இல்லை சார். என்னை விடுங்களேன்." அவள் மன்றாட,

"முதுகெலும்பு இல்லாத கோழை. நான் உன்னை வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணிருந்தா கூட, இப்படி தான் போராட முடியாதுன்னு போயிருப்பியா?" என்றான் அடிக்குரலில்.

"ஆமா போராட முடியாது. செத்துருப்பேன்." அவள் உடனடியாய் பதில் கூற,

"உன்னை பெல்டால அடிச்சு இருக்கக் கூடாது. பெரிய பாறையா தூக்கித் தலையில போட்டு இருக்கணும்." என சீறினான்.

"வேற என்ன செய்ய சொல்றீங்க சார். இதுக்காக நான் போராடுனா எனக்கு என்ன கிடைக்கும்? ஒரு ரெண்டு நாளைக்கு சோசியல் மீடியால 'ஜஸ்டைஸ் பார் இன்னிலா'ன்னு போஸ்டும் ரீல்ஸ்ஸும் வரும். உயிரோட இருந்தாலும் சாகத் தூண்டுவாங்க. செத்தாலும் குழில தோண்டி போட்டோ எடுப்பாங்க. என் குடும்பமே கன்டென்ட் ஆகும். என் போட்டோ வைரல் ஆகும்.

என்னை தங்கச்சி மாதிரின்னு எனக்கு நீதி கேட்டு போஸ்ட் போடுறவன் கூட என் வீடியோவை பத்தாயிரம் தடவை பார்த்திருப்பான்.

இன்னும் கொஞ்சம் போய், அந்த பொண்ணு ஏன் வெளியூருக்கு வேலைக்குப் போச்சு. ஏன் பிஜில தனியா தங்குச்சுன்னு பேசிப் பேசி கடைசில என் கேரக்டர் சரி இல்லாததுனால தான் இந்த நிலைமைன்னு பிரேம் பண்ணி, எனக்கு ஏத்துன மெழுகுவர்த்தியை அணைச்சு உள்ள வச்சுடுவாங்க.

ஆக மொத்தம், தப்புப் பண்ணவங்களுக்கு இதனால ஒரு பாதிப்பும் இல்ல. அவங்களை எங்கையாவது ரீல்ஸா போட்டு, போஸ்ட்டா போட்டு, சோசியல் மீடியால கண்டிச்சுப் பார்த்து இருக்கீங்களா. இல்ல அவங்க போட்டோ தான் வெளில வந்துருக்கா. வராது! இப்படி எதுக்குமே யூஸ் ஆகாத போராட்டத்துல நான் கலந்துக்கிட்டு என்ன சாதிக்கப் போறேன்.

இதுக்கு ஒண்ணுமே சொல்லாம சத்தமில்லாத செத்துட்டா, கொஞ்ச நாள் ஏன் செத்தேன்னு தெரிய நோண்டுவாங்க, ஒரு அளவுக்கு மேல கேஸை நடத்த என் அப்பாவுக்குத் தெம்பு இருக்காது. சோ விட்டுடுவாரு. அப்படியே நான் மறக்கப்பட்டுடுவேன்" என்று நீளமாய் பேசி முடித்தாள் இன்னிலா.

இதுவரையில் தன்னிடம் இரு வார்த்தைக்கு மேல் பேசிடாத பாவையின் கூற்றில் இருந்த உண்மை சுட்டது அவனுக்கு.

உண்மையில் இப்போதிருக்கும் போராட்டங்கள் அனைத்தும் பிரயோஜனமில்லாததாகத் தானே இருக்கிறது. இப்போதிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு புறமிருக்க, பாதிக்கப்பட்டாலும் கூட அப்பெண் உலகில் வாழத் தகுதி இல்லாத உயிரினமாக மாற்றி விடுகிறது சமூக வலைத்தளங்கள்.

தன்னையும் அவள் அப்படிப்பட்ட தர்ட்ரேட் பொறுக்கியாக நினைத்து விட்டாளோ? என உணர்ந்தவன், இயல்புக்கு மீறி அவளிடம் விளக்கமளித்தான்.

"இங்க பாரு இன்னிலா. உன்னை மிரட்டத் தான் அப்படி சொன்னேன். மத்தபடி எந்தப் பொண்ணோட சுண்டு விரலையும் நான் தொட்டதும் இல்லை. யாரோட அந்தரங்கத்தையும் படம் பிடிச்சு ரசிச்சதும் இல்லை. நீ உண்மையை சொல்லலைன்னாலும் வேற விதமா டார்ச்சர் பண்ணிருப்பேனே தவிர்த்து, உன்னை வன்புணர்வு செய்ற அளவு நான் சேடிஸ்ட் இல்லை. முதல் தடவை உங்கிட்ட என் கணிப்பு தோத்துப் போய்டுச்சு. நான் என் தோல்வியை ஒத்துக்குறேன். ஐ ஆம் சாரி.

நீ சொன்னது தான் இப்போ இருக்குற சமூகம். ஐ அக்ரீ, ஆனா அதுக்காக போராடுறதை விட்டுட்டா, பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு போராடுற குணமே இல்லாம போய்டும்." என்றான் உணர்ச்சித் துடைத்த முகத்துடன்.

அவள் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் தலையைக் குனிந்து அமர்ந்திருக்க, "சரி சொல்லு. இப்ப எனக்கு என்ன தண்டனை தருவ?" என்றான் மீண்டும்.

அதில் நிமிர்ந்தவள், "நீங்க தான் வீடியோ எடுக்கலையே" என முணுமுணுத்திட, "அது மட்டும் தான் அபியூஸா?" என்றான் கடைப்பார்வையில் அவளைத் துளைத்து.

அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. "இப்போ தண்டனை எதுவும் தோணல சார்." என்று உள்ளே சென்ற குரலில் கூறிட, "ஓகே தோணுனா சொல்லு. என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துப்பேன்" என உறுதியுடன் கூறியவனின் கண்களில் இருந்த உண்மைத்தன்மை அவளைத் திகைக்க வைக்க, இருந்தும் பயம் அகலாதவள், "அப்பா?" என்றாள் கேள்வியாக.

"உன் அப்பாவை ஊருக்கு அனுப்பியாச்சு. ஆபிஸ்ல இருந்து வேலை விஷயமா நீ வெளியூர் போயிருக்கன்னு சொல்லியாச்சு. நீ கால் பண்ணிப் பேசிக்க" என்று அவளது அலைபேசியை நீட்டினான்.

அதனை வாங்கி உடனடியாக தந்தையிடம் பேசி, அவரை ஆறுதல் படுத்திய பிறகே அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

"நிம்மி இப்போ எப்படி இருக்கா?" மென்குரலில் இன்னிலா வினவ, "இன்னும் க்ரிக்டிகல் தான்." என்றவன் மீண்டும் சோபாவிற்கு சென்று பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.

எண்ணங்கள் நிமிஷாவைச் சுற்றியே வலம் வந்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6

சங்கர நாராயணன் - வைதேகி தம்பதியரின் புதல்வி. மூத்தவன் ஜீவித். சங்கர நாராயணனுக்கு அரசியல் செல்வாக்கும் பண பலமும் ஒரு போதை. கடந்த பதினைந்து வருடங்களாய் ஆளுங்கட்சியில் அமைச்சர் பதவியைத் தக்க வைத்திருப்பவர். வைதேகி இருந்த வரையிலும் தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த குடும்பம், அவர் இறப்பிற்குப் பின் கல்லெறிந்த நீரோடையாய் கலங்கிப் போனது.

சங்கர நாராயணனின் அழுக்கு மனம் மெல்ல மெல்ல வெளியில் வந்த நேரம் அது தான். அதனால் பாதிப்படைந்தது நிமிஷாவும் ஜீவித்தும் மட்டுமல்ல. ஈஷ்யுகனும் தான்.

சிறு வயதிலிருந்து நண்பர்கள் ஆதலால், அவர்களுக்குள் இருந்த நட்பு விரிசல் அடையவில்லை. மாறாக விருட்சம் கண்டது. நிமிஷாவிற்கும் ஈஷ்யுகனின் மீது கொள்ளைப் பிரியம்.

சங்கர நாராயணனுக்கோ அவருக்கு அடுத்து மகனை அரசியல் வாரிசாக்கத் திட்டம் பிறந்தது. அதன் நிமித்தம் ஜீவித்திடம் பேசிட, அவன் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், இங்கிருந்தால் தன்னை அரசியல்வாதி ஆக்கிவிடுவார் என்ற வெறுப்பில் தற்காலிகமாக வெளிநாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டதில் நிமிஷா தான் மறுத்தாள்.

"நீ ஏன்ண்ணா வெளிநாட்டுக்கு ஓடணும். உனக்குப் பிடிக்கலைன்னு நேரடியா சொல்ல வேண்டியது தான." என்று தமையனிடம் வினவ, ஜீவித் விரக்திப் புன்னகைப் பூத்தான்.

"சொன்னாக் கேக்குற ஆளா அவரு. உனக்கே தெரியும் எப்படியும் அவர் நினைச்சதை தான் சாதிக்கப் பார்ப்பாருன்னு. ஏற்கனவே ஊரை அடிச்சு கோடி கோடியா சம்பாரிச்சு வச்சு இருக்காரு. கட்சி ஆளுங்க எல்லாரும் அவருக்குத் தான் சப்போர்ட்." என்றதில், அவள் முகம் வருத்தத்தில் மிதந்தது.

"எனக்கும் இவர் கூட இருக்கவே பிடிக்கலைண்ணா. அதுவும் அவரு இப்ப ஸ்டார்ட் பண்ணப் போற ப்ராஜக்ட் சுத்தமாய்ப் பிடிக்கலை. அம்மா தத்து எடுத்து இருந்த கிராமத்தை அழிச்சு, பெரிய அளவுல தீம் பார்க் கட்டப் போறாராம். அம்மா செஞ்ச நல்லக் காரியத்தை எல்லாம் இவர் பாவமாக்குறாரு அண்ணா. அங்க இருக்குற மக்களோட நிலைமையை யோசிச்சுப் பாரு. அவங்களுக்கு கண்டிப்பா நியாயமா எதுவும் செய்ய மாட்டாரு." என்றாள் தவிப்பாக.

"இப்போ தெரியுதா நான் ஏன் இங்க இருந்து ஓட நினைக்கிறேன்னு. இங்க இருந்தா, அடிச்சு மிரட்டிக் கூட, என்னை ஒத்துக்க வைப்பாரு. அவர் செய்ற பாவத்துல எனக்கும் பங்கு கிடைக்கணுமா நிம்மி?" எனத் தங்கையை ஆதங்கத்துடன் பார்த்தவனிடம் என்ன சமாதானம் சொல்வது?

"அதுக்காக என்னை விட்டுட்டுப் போறேன்னு சொல்றியே?" கண் கலங்க அவள் அவனைப் பார்க்க, "கொஞ்ச நாளைக்குத் தானடா. நான் என்ன அங்கேயேவா இருக்கப் போறேன். நம்ம அப்பாவை முதல்ல ஜெயில்ல போட என்ன வழின்னு யோசிக்கலாம். அந்த வழி கிடைச்சதும் நானே வரேன்.

அதான் ஈஷா இருக்கானே. அவன் இருக்குற தைரியத்துல தான நான் இந்த முடிவுக்கே ஒத்துக்கிட்டேன்." என்றவன் அத்தனை நேரம் அமைதியாக அருகில் நின்று கொண்டிருந்த நண்பனைக் கண்டான்.

ஈஷ்யுகனோ, "அந்த ஆளோட அரசியல் சாக்கடைல சிக்கிடாத ஜீவி. எலெக்ஷன் வரைக்கும் நீ இங்க இருந்து போறது பெட்டர்." என்றவன் நிமிஷாவிடம், "நீ என்கூட வந்து இரு நிம்மி." என்றழைத்தான்.

"எனக்கு நீங்க வேற ஜீவிண்ணா வேற இல்லைண்ணா. இன்னும் நம்மளைப் பிரிக்கிற மாதிரி என்ன சம்பவம் வேணும்ன்னாலும் நடக்கட்டுமே. ஆனா என்னைப் பொறுத்தவரை நீங்க என்கூட மட்டும் தான் பிறக்கல.ஜீவி அண்ணாவும் வெளிநாட்டுக்குப் போயிட்டு வரட்டும் அப்பறம் நம்ம மூணு பேரும் ஒன்னாவே இருக்கலாம்.

ஏற்கனவே அந்த ஆளு கோபத்துல பொரிஞ்சுட்டு இருக்காரு. நான் கண்டிப்பா வீட்டை விட்டு வந்துடுவேன். ஆனா, உங்க வீட்டுக்கு வந்தா, அது உங்க மேல இன்னும் கோபத்தை ஏற்படுத்தும். உங்களைப் பாரபட்சமில்லாம களங்கப்படுத்துவான் அந்த ஆளு. ஏற்கனவே நீங்க உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருக்குறது போதாதா?" என்றாள் ஆற்றாமை தாளாமல்.

"நீங்க ரெண்டு பேரும் என்கூடவே இருந்தா, என்னோட உடைஞ்ச மனசும் கொஞ்சம் சரி ஆகுமே நிம்மி." என ஈஷ்யுகன் கூறிட, அம்முகத்தில் ஒரு உணர்வும் தான் இல்லை. அனைத்தையையும் தான் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தானே!

"அந்த ஆளு என்னை நெருங்குறதுக்கு முன்னாடி, நானே கொன்னுடுவேன். யூ நோ அபவுட் மீ." என்று அழுத்தத்துடன் உரைத்தாலும், அவளுக்குத்தான் அவனே இப்போது தான் பெரும் இடரில் இருந்து மீண்டு வந்திருக்கிறான். தனக்கு உதவப்போய் இன்னும் இன்னும் காயங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டாம் என்று தனியாக தங்குவதாக முடிவெடுத்தாள்.

பதினைந்து வருடங்களாக கனகா தான் ஈஷ்யுகனின் வீட்டில் சமையல் வேலைப் பார்த்தார். அவனுக்கு இருக்கும் வசதிக்கு பெரிய பெரிய செஃப் பை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம். ஆனால், கனகாவை வேலைக்கு அமர்த்தியது அவனது தாய் சாரதா. அதனாலேயோ என்னவோ கனகாவைக் கண் மூடித்தனமாக நம்பி, நிமிஷாவின் வீட்டிற்கும் வேலைக்கு அனுப்பினான். இப்போது சாரதா உயிருடன் இல்லையென்றாலும், அவர் இருந்தபொழுது வேலைக்கு அமர்த்திய யாரையும் இதுவரையிலும் அவன் மாற்றவில்லை.

அவர் சொல்லி விட்டு சென்ற சொல்லைக் காப்பாற்றவே, சங்கர நாராயணன் விஷயத்திலும் கூட இந்தளவு பொறுமை காக்கிறான். இல்லையென்றால், எப்போதோ அவருக்கு திவசம் நடத்தி இருப்பான். ஆனால், இப்போது தங்கையல்லவா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

கண்ணை மூடிப் படுத்திருந்த இன்னிலாவிற்கும் உடல் வலி தாங்க இயலவில்லை. அதை விட மனவலி அவளது உயிரைத் துளைத்து எடுத்தது. தன் மீதிருந்த பழி போய்விட்டது தான், ஆனால், நிமிஷா?

பாரபட்சமின்றி அன்பை மழையாகப் பொழிந்தவள்! சில நாட்களுக்கு முன் அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை கசப்புடன் எண்ணியது மனது.

ஈஷ்யுகன் அபார்ட்மெண்டில் இருந்து சென்ற பிறகு, நிமிஷாவை முறைத்தாள் இன்னிலா.

அதில் நிமிஷா சிரித்து, "உனக்கு கோபப்படவே தெரியல இனி" என்று குறும்பாய் நகைக்க,

"உனக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்குல்ல. அவர் உன் அண்ணன்னு ஏன் சொல்லவே இல்ல நிம்மி." என மூச்சிரைத்தாள்.

அத்தனை நேரம் குறும்பாய் இருந்த அவளது முகம் சட்டென மாறிப் போக, "இதுவரை என் ஸ்டேட்டஸ் பார்த்து என்கூட பழகுனவங்க தான் அதிகம் இனி. நீ மட்டும் தான், எனக்கே எனக்காக என் கூட ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிட்ட. முதல்ல எல்லாம் என் லைஃப்ல ஜீவி அண்ணா, ஈஷா அண்ணா தவிர யாரையும் மனசுக்கு நெருக்கமா நினைச்சது இல்லை. ஆனா, நீ இப்ப என் பேமிலில ஒருத்தி மாதிரி ஆகிட்ட.

ஈஷா அண்ணாவுக்கு கண்ணு மண்ணு தெரியாம கோபம் வரும் தான். ஆனா ரொம்ப நல்லவரு இனி." என்றவள், தந்தை இருந்தும் தான் அனாதையாகி விட்டதை மேலோட்டமாகக் கூறி விட்டு, "ஜீவி அண்ணா வரவும், நாங்க ரெண்டு பேரும் ஈஷா அண்ணா வீட்டுக்கே போறதா இருக்கோம் இனி. அதுக்குள்ள எங்க அப்பாவை எப்படியாவது பிடிச்சு ஜெயில்ல போடணும். ஆனா அது தான் ரொம்பக் கஷ்டமான காரியமா இருக்கு. பாவம் ஈஷா அண்ணா அந்த ஆளுனால ரொம்ப அனுபவிச்சுட்டாரு.

தப்புப் பண்ணவங்க ஒருத்தரை விடாம, தண்டிக்கிறவரால எப்படி என் அப்பா மேல இருக்குற கோபத்தை அடக்கிக்கிட்டு இருக்க முடியுதோ தெரியல. ப்ச்..." என வெகுவாய் வருந்தினாள்.

இன்னிலாவிற்கும் கவலையாக இருந்தாலும் அவள் பேசும் ஒன்றுமே புரியவில்லை. "உங்க அப்பாவால சார் ஏன் கஷ்டப்பட்டார் நிம்மி? எனக்குப் புரியல" எனக் கேட்க, அந்நேரம் அவளது அலைபேசி அழைத்தது.

ஜீவித் தான் வீடியோ காலில் இணைந்தான். "அண்ணா தான், வா உன்னையும் இன்ட்ரோ கொடுக்குறேன்" என்றவாறே அழைப்பை ஏற்றவள், "அண்ணா எப்படி இருக்க. ஒரு வாரமா போனே இல்லை" என்று போலியாய் கோபம் கொண்டாள்.

"கொஞ்சம் வேலைடா. எப்படி இருக்க?" என்று விசாரித்து விட்டு, இன்னிலாவிடமும் பேசினான்.

"உன் குக்கிங் பத்தி தான்மா போன் பேசும் போதெல்லாம் பேசிக்கிட்டே இருப்பா நிம்மி. நான் வந்ததும் எனக்கும் ஸ்பெஷலா செஞ்சுத் தரணும்" என்று அன்புக்கட்டளைக் கொடுக்க, "நீங்க வாங்கண்ணா விருந்தே வச்சு அசத்திடுறேன்." என்றாள் கண் சிமிட்டி.

அவனும் புன்னகைத்து விட்டு, "ஈஷாகிட்டவா வேலை பாக்குற. உனக்கு எவ்ளோ இரும்பு மனசு" என்று கிண்டலடிக்க,

"போங்க அண்ணா. இரும்பும் இல்ல பித்தளையும் இல்ல. நானே அவருகிட்ட இருந்து எப்படி எஸ்கேப் ஆகுறதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்." என்று பரிதாபமாய் கூறியதில், அங்கு சிரிப்பலை எழுந்தது.

தோழியுடனான மகிழ்வான நினைவுகள் இப்போது கண்ணீரைக் கொடுக்க, அவள் மீண்டும் வந்து விட வேண்டுமென்ற வேண்டுதலிலேயே நேரத்தை நகர்த்தினாள்.

தான் உடன் இருந்தும், அவளுக்கு நேர்ந்த விபரீதத்தை தடுக்க இயலவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது. இருப்பினும் எப்படியும் அவள் பிழைத்து வந்து விடுவாள் என்ற திடமாக நம்பிக் கொண்டிருந்தவளுக்கு இடியாய் வந்தது அந்த செய்தி.

சிகிச்சை பலனின்றி நிமிஷா உயிரழந்தாள். இன்னிலா இருந்த அதே மருத்துவமனையில் தான் நிமிஷாவும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.

விவரம் அறிந்து ஈஷ்யுகன் பரிதவிப்புடன் ஐசியூவிற்கு சென்றிட, அங்கோ அசைவின்றி படுத்திருந்த தங்கையைக் கண்டவனுக்கு நெஞ்சம் குமுறியது. விழிகள் நீரால் நிறைந்திருக்க, வாழ்க்கையில் தனக்குப் பிடித்தமான இரண்டாவது உயிரைக் கண் முன்னே இழந்து இருக்கிறான்.

ஊரிலிருக்கும் அத்தனை பேரின் கண்ணிலும் விரல் விட்டு ஆட்டுபவனுக்கு, இப்பொழுது வரை அமைச்சருக்கு எதிராக ஒரு முயற்சியும் எடுக்க இயலவில்லை என்னும் போது எழுந்த ஆத்திரத்தை அடக்க இயலவில்லை.

கண்கள் நெருப்பாய் ஜொலிக்க, தங்கையைக் காண பதறித் துடித்து அங்கு வந்து சேர்ந்தான் ஜீவித்.

"நிம்மி... நிம்மி..." என அழுது கரைந்து அவளை உலுக்கிய ஜீவித்திற்கு மனம் ஆறவில்லை. மூவரும் சேர்ந்து ஒன்றாக வாழலாம் என்ற அவளது ஆசை நிராசையாகி விட்டதை எண்ணி உடைந்துப் போனவனுக்கு, தங்கையின் இழப்பை ஏற்க இயலவில்லை.

நிமிஷாவையே கண்ணசைக்காமல் வெறித்திருந்த ஈஷ்யுகனைத் தள்ளி விட்ட ஜீவித், "எப்படிடா எப்படிடா இப்படி நடக்க விட்ட. உன்னை நம்பி தானடா விட்டுட்டுப் போனேன். உன் தங்கச்சியா இருந்தா இப்படி விட்டுருப்பியாடா" என்று வெறித்தனமாய் கத்தியதில் திகைத்த ஈஷ்யுகன், "ஜீவி" என்றான் அதட்டலாக.

"என் முன்னாடி நிக்காதடா. அவளை சாக விட்டுட்டியே. இனிமே எனக்குன்னு யாருடா இருக்கா. என் அப்பன் பேச்சையாவது கேட்டு இருப்பேன். அந்த ஆளு செய்றது பாவம் அது இதுன்னு என்னை நல்லவனா யோசிக்க வச்சது நீ தான. இப்ப என் தங்கச்சி போய்ட்டாடா. எல்லாம் உன்னால தான." என்று மீண்டும் மீண்டும் தள்ளி விட, நண்பனின் கூற்றில் ஈஷ்யுகன் தான் அதிர்ந்து போனான்.

தோழியின் இறப்பை எண்ணி நெக்குருகிப் போன இன்னிலாவிற்கு முற்றிலும் அவள் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தன்னலமில்லா நட்பைக் காட்டியவள், வஞ்சத்தின் பிடியில் வீழ்ந்து விட்டதில் கண்ணீர் வழிந்தோடியது.

வெண்பிளாண்ட்டைக் கழற்றி விட்டவள், ஐசியூ நோக்கிச் செல்ல, அப்போது தான் ஜீவித் தள்ளி விட்டதில் அவள் மீது இடித்து நின்ற ஈஷ்யுகனைப் பிடித்தாள்.

"சார் பார்த்து..." என்றிட, அவனோ "என்ன பேசுறன்னு தெரிஞ்சு பேசு ஜீவி. நீ இப்போ எமோஷனலா இருக்க. உன் அப்பா பிளான் பண்ணி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்." என்றதில், "அவன் கூட இருந்துருந்தா கூட அவள் உயிரோடவாவது இருந்துருப்பாடா" என்ற நண்பனின் கூற்றில் உறைந்து போனான் ஆடவன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7

இன்னிலாவோ உயிரற்றவளாய் படுத்திருக்கும் தோழியை எண்ணிக் கலங்குவதா, அல்லது ஜீவித்தின் புரிதலின்மையைக் களைவதா எனப் புரியாமல் நிற்க, ஆணவனின் மேனி தளர்வதை உணர்ந்தவள், அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் அவளே அறியாமல்.

அதன் பிறகான நிகழ்வுகள் அதிவேகமாக நடந்தேறியது. பிரேத பரிசோதனைக்காக நிமிஷாவின் உடல் அனுப்பப்பட, ஜீவித் இறுகிய முகத்துடன் காணப்பட்டான். ஈஷ்யுகனின் முகமோ எப்போதும் போல உணர்வுகளை துடைத்தெறியப்பட்டிருக்க, இன்னிலாவிற்கு உடல் சோர்வு ஒரு புறமும், ஏற்பட்ட திடீர் இழப்பு ஒரு புறமும் அதிர்ச்சிகளின் தாக்குதல் ஒரு புறமும் அவளை அழுத்த அவளால் அமரக் கூட இயலவில்லை.

அத்தனை நேரமும் எங்கோ இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்த ஈஷ்யுகன், "நீ உன் ரூம்க்குப் போய் ரெஸ்ட் எடு." என்றான்.

"இல்ல சார். கடைசியா அவளை ஒரு தடவைப் பார்க்கணும்." என்றவளுக்கு கண்ணீர் முட்டி நிற்க, "இப்ப பார்க்க முடியாது. இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு. நீ போ!" என்ற போதும், அவள் வலியைப் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

பிரேத பரிசோதனை முடிந்து, நிமிஷாவை வெள்ளைத் துணியில் சுற்றி அவளது உடலை ஜீவித்திடம் ஒப்படைக்க, அவன் அழுது அரற்றினான்.

நான்கு கார்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக மருத்துவமனை வாசலில் நின்றது. உள்ளே இருந்து கட்சி ஆட்கள் இறங்க, வெள்ளை வேட்டி சட்டையில் கசங்கிய முகத்துடன் இறங்கினார் சங்கர நாராயணன்.

அவ்வப்பொழுது கண்ணாடியைக் கழற்றி கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

மகளைக் கண்டதும், வாயைப் பொத்தி உடல் குலுங்க ஒரு மூச்சு அழுதவரை சுற்றிக்கொண்டது மீடியா.

"சார் உங்க பொண்ணு ஏன் உங்க கூட இல்லாம, தனியா தங்கி இருந்தாங்க." என்று ஒரு நிருபர் கேட்க,

சங்கர நாராயணனோ தொண்டையை செருமிக்கொண்டு, "எனக்கு எப்பவுமே என் பசங்களை பணத்தாசைப் பிடிச்சவங்களா வளர்க்க விருப்பம் இருந்தது இல்லை. அவங்க வாழ்க்கையை அவங்க தான் வாழனும். அதுவும் என் நிழல் இல்லாம தனியா வாழப் பழகி, வாழ்க்கைல முன்னுக்கு வரணும். அதுனால தான், என் பையன் வெளிநாட்டுலயும் என் பொண்ணு வேற வீட்லயும் இருந்தாங்க. ஆனா... என் பொண்ணை யாரோ அநியாயமா கொன்னுட்டாங்க." என்னும் போதே அவரது தொண்டை அடைத்தது.

போதும். என் பொண்ணை பறிகொடுத்ததோட போதும். என் பையனாவது என் கூடவே என் அரசியல் வாரிசா என்கூட இருக்கணும். அது மக்கள் கைல தான் இருக்கு. என்... என்னால பேச முடியல ப்ளீஸ்..." என்று தேவையானதை பேசி விட்டவர் அதற்கு மேல் பேசவே இயலாதது போல காட்டிக்கொள்ள, இன்னிலா திகைத்து வாயில் கை வைத்தாள்.

"என்ன சார் இது. இவரு இவ்ளோ பச்சையா பொய் சொல்றாரு." என்று அதிர,

ஈஷ்யுகன் அப்போதும் கூர்விழிகளால் சங்கர நாராயணனை ஊடுருவினான்.

"பாலிடிக்ஸ்! தி மோஸ்ட் டேஞ்சரஸ் திங்க். பொணத்தைக் கூட பிரச்சார கண்டெண்ட்டா மாத்த வைக்கும்" என்று சங்கர நாராயணனின் மேல் இருந்த பார்வையை மாற்றாது உரைக்க, இன்னிலாவிற்கு தான் இதை எல்லாம் பார்த்தாலே பயம் நெஞ்சைக் கவ்வியது.

அங்கேயே நிமிஷாவின் உடல் மின் தகனம் செய்யப்பட, எல்லாமே அவசரகதியில் நிகழ்ந்தது போல இருந்தது இன்னிலாவிற்கு.

அப்போதும் ஈஷ்யுகனிடம் ஒரு மாற்றமும் இல்லை. 'இவரு என்ன... ஒரு ரியாக்ஷனும் குடுக்க மாட்டுறாரு.' என்ற எண்ணம் தோன்றிட, "சார்" என அழைத்தாள்.

"ம்ம்"

"அழணும்ன்னு தோணுனா அழுங்க சார். மனசுலயே வச்சுக்கிட்டா ரொம்ப அழுத்தும்." என்று வருந்திக் கூற,

"அழுதா செத்தவ திரும்ப வருவாளா? இல்ல ஜீவி தான் புருஞ்சுப்பானா?" அவன் கேள்வியில் ஒரு வெறுமையை உணர்ந்தவள், "நம்ம மனசுல இருக்குற பாரம் குறையும் சார்" என்றாள்.

"அழமாட்டேன். பாரம் குறைஞ்சுட்டா. கோபமும் குறையும். வெறியும் குறையும்." என்றவனைப் பாவமாகப் பார்த்தவளுக்கு இனி அடுத்து என்ன என்ற மலைப்பு தான் அதிகம் இருந்தது.

இனியும் இங்கு வேலை செய்ய இயலாது அவளால். நிமிஷாவின் ஞாபகம் குத்திக் கிளறி விடும்.

அவளது உடல்நிலை சற்றுத் தேறவே இரு நாட்கள் பிடித்தது. ஓரளவு உடல் வலியும் மட்டுப்பட்டிருந்தது.

அந்த இரு நாட்களும் அவளை விட்டு ஈஷ்யுகன் நகரவே இல்லை.

"சார் நான் ஊருக்குப் போகட்டா. என்னை ரிலீவ் பண்ணிடுங்க சார் வேலைல இருந்து" என்று மெலிதாய் கூற, போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஈஷ்யுகன் நிமிர்ந்து "ஏன்?" என்று புருவம் சுருக்கினான்.

"என்னால இனிமே இந்த ஊர்ல இருக்க முடியாது சார். ப்ளீஸ்" என அவள் கெஞ்ச, "கனகா சொன்னதை முழுசா கேட்டியா. உன் உயிருக்கும் ஆபத்து இருக்குன்னு சொல்லிருந்தாள்." என்றான் முறைப்பாக.

"என்னை யாரு சார் கொல்லப் போறா. பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லையே." வெகு குழப்பத்துடன் வந்த தொனியில் அவனது இறுக்கம் சற்று தளர்ந்தது.

"பிரயோஜனம் இருக்கு. நிம்மி இறப்புல சம்பந்தப்பட்ட கனகா இப்ப உயிரோட இல்லை. நீ மட்டும் தான் இருக்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் மூலமா உண்மை வெளில வந்துடக் கூடாதுன்னு கூட உன்னை கொலைப் பண்ண முயற்சிக்கலாம்." என்றான் சிந்தித்து.

"இப்படி கூடவா நடக்கும்." என நொந்தவள், "நான் ஊருக்குப் போய் சேஃபா இருந்துருக்குறேன் சார்" என சொன்னதையே சொல்ல, அவனது பொறுமை முற்றிலும் குறைந்தது.

"அப்போ கிளம்புடி. போய் நீயும் சாவு. போ. ஜஸ்ட் அவுட்" என்று சீறி கர்ஜித்தான் ஆடவன்.

அவளுக்கு மேனி நடுங்கி விட்டது. பயத்தில் அரண்டு நின்றிருந்தவளை நோக்கி முன்னால் வந்தவன், "தேவை இல்லாம இந்த பிரச்சனைல நீ நுழைஞ்சுட்ட. உன்னைக் காவு வாங்காம விட மாட்டான் அந்த சங்கர நாராயணன். அது உனக்குப் புரியுதா இல்லையா?" என்றான் கோபத்துடன்.

"இப்... இப்போ நான் என்ன தான் சார் செய்றது?" ஒன்றும் புரியாத நிலையில் அவள் கேட்க, ஒரு கணம் யோசித்தவன், "இந்த பிரச்சனை முடியிற வரை, நீ என்கூடவே இரு." என்றான்.

"உங்க கூடவா?" அதிர்ந்து கேட்டவளிடம், "ம்ம் என் வீட்ல இரு." என்றான் இயல்பாக.

மீண்டும் அவனிடம் திட்டு வாங்கும் அளவு உடம்பில் தெம்பு இல்லாத காரணத்தால், "வே... வேணாம் சார். நான் ஹாஸ்டல் எங்கயாவது இருந்துக்குறேன்." என்று மறுக்க, அவன் பார்வையால் அவளைத் துளைத்தான்.

"உன்கூட ரொமான்ஸ் பண்ற ஐடியா எனக்கு இப்போ வரை இல்ல." என்றான் ஒரு மாதிரியாக.

"ஹான்?" அவள் திகைத்து விழித்ததில், "உன்னை ஃபோர்ஸ் பண்ணி ரேப் பண்ற அளவு மைண்ட்செட்டும் இல்ல. சோ, உன் பாதுகாப்புக்கு நீ என் வீட்ல தான் இருந்தாகணும். அப்படி இல்லன்னா சொல்லு, நேரா உன்னை சங்கர நாராயணன்கிட்ட கொண்டு போய் விடுறேன். அவன் உன்னைக் கொன்னு தருவான். உன் பாடியை ஊருக்கு அனுப்பிடுறேன்" என்று அசட்டையாய் தோளைக் குலுக்க, அவளுக்கோ வியர்த்து வழிந்தது.

அவன் பேசிய பேச்சிலேயே நெஞ்சு அடைத்து விட, இதில் பாடியை பார்சல் செய்யும் அளவு யோசித்து விட்டானே என்ற பதைபதைப்பில், "அய்யயோ அதுக்கு இல்ல சார். நீங்க தப்பா நடந்துப்பீங்கன்னு சொல்லல" என்று வேகமாக மறுத்தாள்.

"ஓகே தென்?" முற்றிலும் இறுக்கம் தளர்ந்தவனின் கண்களில் லேசான குறும்பு படர்ந்தது.

"அது... அது... என்ன இருந்தாலும் ஒரு பேச்சுலர் பையன் இருக்குற வீட்ல ஒரு பேச்சுலர் பொண்ணு எப்படி இருக்க முடியும். யாராவது தப்பா பேசுவாங்க." என்றதும் அவன் சுற்றி முற்றி பார்த்தான்.

"இங்க நம்ம ரெண்டு பேரைத் தவிர யாருமே இல்லையே" இதழ் மீறி துடித்தப் புன்னகையை தனக்குள் அடக்கிக்கொண்டான் ஈஷ்யுகன்.

"இப்போ இல்ல சார். நான் உங்க வீட்ல இருக்கும் போது சொல்றேன்." என்றதில்,

"அதைப் பேசும் போது பார்த்துக்கலாம். ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். அபார்ட்மெண்ட்க்குப் போய் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வீட்டுக்குப் போகலாம்." என்று அவனே திட்டமிட்டுக் கூற, அவளோ செய்வதறியாமல் நின்றாள்.

இன்னும் பேந்தப் பேந்த விழித்தவளைப் பொறுமை இழந்து பார்த்தவன், "இப்போ என்ன?" என்றான் அதட்டலாக.

"நான் வரல சார்..." கிட்டத்தட்ட கெஞ்சியவளைக் கண்டு அவனுள் இருக்கும் ஈகோ தலைதூக்கியது.

"ஓகே ஃபைன்." என்றவன் விறுவிறுவென வெளியில் சென்று விட, 'என்ன இவரு ஒன்னும் சொல்லாம போய்ட்டாரு. இப்ப என்ன செய்றதுன்னு தெரியலையே...' என நொந்து கட்டிலில் அமர்ந்தாள்.

மாலை டிஸ்சார்ஜ் என்றவன், இரவு வரை கூட வரவில்லை.

சரியாக எட்டு மணி அளவில் கதவு திறக்கப்பட்டதில் ஆடவன் தான் வந்து விட்டானென ஆர்வமாய் நிமிர, அங்கோ அவளது மொத்தக் குடும்பமும் நின்றிருந்தது.

அவளது தாய் நீலவேணியும் பசுபதியும் பதறி அவளிடம் வந்து நலம் விசாரிக்க, நீலவேணியோ "படிக்கட்டுல இறங்கும் போது பார்த்து கவனமா இறங்குறது இல்லையா இனி. பாரு எப்படி அடிபட்டு இருக்குனு." என்று முகத்தில் இருந்த காயத்தை வருடிக் கொடுத்திட, அவளுக்கோ பெரும் குழப்பம்.

"படிக்கட்டுல இருந்தா?" என்று புரியாமல் அமர்ந்திருக்க, அவளது சின்ன தங்கை தேன்மொழி, "நீ படிக்கட்டுல உருண்டு கீழ விழுந்ததுக்கு கோவில்ல உருண்டுருந்தா புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்க்கா" என்று அந்நிலையிலும் வார, "நான் படிக்கட்டுல இருந்து உருண்டேன்னு உங்களுக்கு யாரு சொன்னா?" என்றாள் தலையை சொறிந்து.

"மாப்பிள்ளை தான் சொன்னாரு..." என்ற பசுபதியின் கூற்றில், "மாப்பிள்ளையா? அது யாருப்பா." என்றாள் ஒன்றும் விளங்காமல்.

அவளது பெரிய தங்கை அமிர்தா, "அக்காவுக்கு குசும்பைப் பார்த்தீங்களாப்பா. ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறா. நீ சென்னைக்கு வேலைக்கு வரேன்னு ஒத்தக் கால்ல நிக்கும் போதே நாங்க உசார் ஆகி இருக்கணும்." என்றிட, பாவம் இன்னிலாவிற்கு 'நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்ற குழப்பம் தான் இருந்தது.

"ஐயோ நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியிற மாதிரி பேசுங்க." என்றிட, அந்நேரம் உள்ளே நுழைந்த ஈஷ்யுகனைக் கை காட்டிய தந்தை,

"நீ இவரை விரும்புறியாமேமா. 'நீ கீழ விழுந்ததும் மனசே சரி இல்ல. உடனே எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க'ன்னு மதியம் மாப்பிள்ளை வந்து சொன்னாரும்மா. எனக்கு ஒண்ணுமே புரியல. அப்பறம் தான் இவரைப் பத்தி தெரிஞ்சுது. இவ்ளோ பெரிய மனுஷன் நம்ம வீட்டுக்கு வந்து பேசும் போது எப்படி மறுக்கிறது. நம்ம சொந்தக்காரங்ககிட்டயும் கலந்து பேசிட்டு, நானும் ஒத்துக்கிட்டேன். உனக்கும் பிடிச்சு இருக்கே. அதுக்கு மேல நாங்க என்ன சொல்ல" என்று விளக்கமளிக்க, இன்னிலாவிற்கு தலை சுற்றியது.

'என்னது விரும்புனேனா?' வார்த்தைக் கூட வெளியில் வராமல் தொண்டைக்குள்ளேயே நின்று கொள்ள திகிலுடன் ஈஷ்யுகனைப் பார்த்தாள்.

அவனோ பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து எகத்தாளமாக அவளைப் பார்த்திருக்க, அவன் சொன்னதெல்லாம் பொய்யென்று கூட வாதிட இயலவில்லை அவளால். அவன் மீதிருந்த பயம் அவளைப் பேச விடவில்லை.

நீலவேணியோ "ரெண்டு நாள்ல, இங்கயே சிம்பிளா கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளை சொன்னாரு. அதான் எங்களையும் கையோட கூட்டிட்டு வந்துட்டாரு" என்றதும் தேன்மொழி, "அக்கா நாங்க பிளைட்ல வந்தோம் தெரியுமா?" என்று குதூகலித்தாள்.

"அது மாமாவோட சொந்த ப்ளைட்டாமே?" அமிர்தா வியப்பாய் கூறிட, "அது பிரைவேட் ஜெட்..." என்று முணுமுணுத்தாள் இன்னிலா.

அவனிடம் இத்தனை மாதங்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவளுக்கு, அது கூடவா தெரியாமல் இருக்கும். ஆனால், எதற்காக இதெல்லாம் செய்கிறான் என்று தான் புரியவில்லை.

தொண்டையைச் செருமிய ஈஷ்யுகன், "அங்கிள் நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க, இங்க சில ப்ரொசீஜர் இருக்கு. நான் முடிச்சு இவளைக் கூட்டிட்டு வரேன்." என்றதில் அவர் தயங்க,

அந்நேரம் மிதிலேஷ் உள்ளே வந்ததில், "மிதிலேஷ் இவங்களைக் கூட்டிட்டுப் போ" என்று உத்தரவிட்டான். அவர்களும் கிளம்பி விட, இன்னிலாவிற்கு படபடப்பாகி விட்டது.

"எதுக்கு சார் இப்படிப் பொய் சொன்னீங்க. கல்யாணம் அது இதுன்னு சொல்லி வச்சிருக்கீங்க. நான் எப்ப சார் உங்களை விரும்புறேன்னு சொன்னேன்." என்றாள் பரிதாபமாக.

"நீ எப்போ சொன்ன?" எனத் தோளைக் குலுக்கியவன், "என்கூட வரமாட்டேன்னு அடம்பிடிச்ச. அதான் உன்னை வரவைக்கப் பொய் சொன்னேன்." என்று அசட்டையுடன் கூற, 'இதுக்காகவா இத்தனை வேலை பார்த்திருக்கிறான்?' என்று அயர்ந்து விட்டாள்.

"ஐயோ சார்... ஆபீஸ்லயே என்னைத் திட்டிக்கிட்டே இருப்பீங்க. இதுல வீட்டுக்கு வந்தா, அங்கேயும் திட்டிகிட்டே இருப்பீங்கன்னு பயந்து தான் நான் வரலைன்னு சொன்னேன். அதுக்குள்ள இவ்ளோ பெரிய பிரச்சனைப் பண்ணிட்டீங்களே" என்று பரிதவித்தவளைக் கண்டு இம்முறை சிறு புன்னகை எழுந்தது அவனுக்கு.

"நீ திட்டுற மாதிரி நடந்துக்குற. சரி இனிமே உன்னைத் திட்ட மாட்டேன். ஓகே வா?" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை மென்மை.

ஆனால், அம்மென்மை அவளுக்கு உறைக்கவில்லை. "நீங்க திட்டுனாக் கூட பரவாயில்ல. இப்ப கல்யாணம் அது இதுன்னு பேசி வச்சுருக்கீங்களே சார். ப்ளீஸ் கல்யாணம்லாம் வேணாம் சார். நான் உங்களை விரும்பலாம் இல்லை." என்று வேகமாகக் கூறியதில் அவன் முகத்தில் மீண்டும் ஒரு கடினத்தன்மைக் குடியேறியது.

"வெல்! நானும் உன்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கல. அதுக்கு நீ வொர்த்தும் இல்ல. நிம்மியோட கேஸ் ஒரு முடிவுக்கு வரணும்ன்னா, உன்னோட வாக்குமூலமும் முக்கியம். அவளோட நீ சில மாசம் இருந்துருக்க. சோ கோர்ட்ல உன்னையும் விசாரிப்பாங்க. சங்கர நாராயணன் உன்னைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவனுக்கு ஆதரவாவே ஆதாரத்தை தயார் பண்ணலாம்." என்றதும் அவள் பதறி "சார் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல" என்று தடுக்க,"ம்ம்" என்று கையை நீட்டி அவளை நிறுத்தினான்.

"தென், நீ எதுக்கு பூமிக்கு பாரமா இருக்கணும்ன்னு கொலையும் பண்ணலாம். எனக்குத் தெரிஞ்சு இரண்டாவது ஆப்ஷனை தான் அவன் யூஸ் பண்ணுவான்.

நான் உன்னை ப்ரொடெக்ட் பண்ண ட்ரை பண்ணேன் நீ கோ ஆபரேட் பண்ணல. இப்போ எனக்குத் தேவை நீ உயிரோட இருக்கணும். எக்ஸ்சாக்ட்டா அன்னைக்கு என்ன நடத்துச்சோ அதை கோர்ட்ல சொல்லணும். அதுக்கு நீ என் கண்ணு முன்னாடியே இருக்கணும். தட்ஸ் இட். அதுக்கு இதை விட்டா வேற வழி இல்ல." என்றதில் அவள் பேச்சிழந்து அவனைப் பார்த்து விட்டு, ஏதோ சொல்ல வந்ததில் அவனே தடுத்தான் மீண்டும்.

"வெய்ட். உன் பேமிலிக்கு மட்டும் தான் இது நிஜ கல்யாணம். நமக்கு இல்ல. இந்தப் பிரச்சனை முடியிற வரை இது ஜஸ்ட் நமக்குள்ள ஒரு கான்டராக்ட் மேரேஜ் மாதிரி தான். விச் மீன்ஸ், நமக்குள்ள எந்த ரியல் ரிலேஷன்ஷிப்பும் இருக்காது. சங்கர நாராயணனுக்கு தண்டனைக் கிடைக்கவும் நீ உன் வழியைப் பார்த்துட்டுக் கிளம்பிடலாம். நான் டிவோர்ஸ் கொடுத்துடுவேன். மீன் டைம், நான் தவறா உன்னை தண்டிச்சதுக்கு நீ எனக்கு குடுக்க வேண்டிய தண்டனையையும் நிறைவேத்திக்கலாம். உனக்கு யோசிக்கவும் டைம் இருக்கும்" என்று அவளை யோசிக்கவே விடாதவாறு அவன் மடக்கிட, அவளோ திக்பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8

இன்னிலா அதிர்வில் இருந்து வெளியில் வரவே வெகு நேரம் பிடித்தது. கல்யாணம் என்றதையே ஏற்க இயலவில்லை. இதில் ஒப்பந்தத் திருமணம் என்கிறானே! மறுத்தால் அந்த சங்கரநாராயணிடம் அனுப்பி வைத்து விடுவானோ? இவனுக்கு அந்த அமைச்சரே பரவாயில்லை. உயிர் பயம் காட்டாமல் விஷம் வைத்து முடித்து விடுவான். இவனோ நொடிக்கு நொடிக்கு இதயத்தை நிறுத்தச் செய்வானே என்ற அச்சம் துளிர்த்தது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றவன், துரிதமாக திருமண வேலைகளைப் பார்க்க, அவளால் ஓடவும் இயலவில்லை ஒளியவும் இயலவில்லை.

அவனிடம் பேச முற்பட முனைந்தாலும் வீட்டினரை மீறி அவனைக் காண தயக்கமாக இருந்தது.

இதில் அமிர்தாவும் தேன்மொழியும் வேறு தமக்கையைக் கிண்டலடித்தனர்.

"தேனு, அக்காவோட முகத்துல ஒரு தேஜஸ் தெரியுதுல..." என அமிர்தா தமக்கையின் முகத்தை ஆராய,

"ஆமா அமிர்தா, எல்லாம் மாம்ஸ் பத்தின நினைப்பு தான். அதுவும் மேடம் ஜெட்டுக்குலாம் ஓனர் ஆகப் போறாங்க." என்று கேலி புரிய, இன்னிலா தான், 'தேஜஸா? அவனோட பஞ்சிங்ல என் மூஞ்சி பஞ்சராகி இருக்கு. இவளுங்க வேற. இதெல்லாம் அந்த சிடுமூஞ்சி சின்னப்பன் கேட்டால், அடிக்க பெல்ட்டை கழட்டிடுவான்.' என்று பதறும் போதே,

"ஹே கேர்ள்ஸ்! என்ன என் ஸ்வீட்மூனை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க?" என்ற கம்பீரக் குரலில் மூவரும் திரும்ப, அங்கு புன்னகை முகத்துடன் ஈஷ்யுகன் நின்றிருந்தான்.

'ஆத்தாடி இவன் முறைச்சாலே வாயில கெட்ட வார்த்தை வரும். வில்லங்கமா சிரிக்க வேற செய்றானே' எனப் பதறியது இன்னிலாவிற்கு.

தேன்மொழி தான், "அதென்ன மாமா ஸ்வீட்மூன்?" என அதிமுக்கிய கேள்வியைக் கேட்க,

"உன் அக்கா பேர் தான். இனி மீன்ஸ் ஸ்வீட், நிலா மீன்ஸ் மூன்." என கண் சிமிட்டிக் கூறியதில், "ஓஹோ அக்காவோட செல்லப் பேரா..." எனத் துள்ளியவள், "அக்கா நீ மாமாவுக்கு என்ன செல்லப் பேர் வச்சு இருக்க?" என்று கேட்டாள் ஆர்வமாக.

"ஹான் செல்லப்பேரா? அதெல்லாம் எதுவும் இல்ல" படபடப்புடன் அவள் மறுக்க, "என்னக்கா நீ... மாமாவை நீ தான் முதல்ல விரும்பி இருக்க. அப்போ செல்லப்பேர் கூட யோசிக்கலையா. வேஸ்ட்டு நீ" என்று தேன்மொழி சலித்தாள்.

ஈஷ்யுகன், நாக்கால் கன்னத்தை எத்தி, "வெரி அன்ரொமேன்டிக் லவர்." எனப் போலியாய் வருந்திட,

அமிர்தா தான், "மாமா இப்பக் கூட உங்களுக்கு ஆப்ஷன் இருக்கு. இவளைக் கழட்டி விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. என்ன மேஜர் ஆக தான் இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. இருந்தாலும் பரவாயில்ல. எனக்காக வெய்ட் பண்ண மாட்டீங்களா?" என்றிட,

தேன்மொழியோ "ஏன் நீ மட்டும் தான் இருக்கியா. நானும் தான் இருக்கேன்" என்று சண்டைக்கு வந்தாள்.

ஈஷ்யுகன் தான் "ஹே வெய்ட் வெய்ட் உங்க மூணு பேரையும் கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்ததில், இன்னிலாவிற்கு வந்ததே கோபம்.

"தேனு... உன் மாமாவுக்குச் செல்லப்பேருன்னு யோசிக்கல ஆனா பட்டப்பேர் இருக்கு" என்றாள் வேகமாக.

"என்னதுக்கா?" எனத் தங்கைகள் இருவரும் ஆர்வமாகிக் கேட்க, ஈஷ்யுகனும் ஓரக்கண்ணால் பார்த்தான்.

இன்னிலா "சிடுமூஞ்சி சின்னப்பன்..." என்றதில் இரு பெண்களும் வெடித்துச் சிரித்தனர்.

ஈஷ்யுகன் பல்லிடுக்கில் எழுந்த கோபத்தை அடக்கிட, அமிர்தா தான், "போ அக்கா... மாமா எவ்ளோ ஜாலியா பேசுறாங்க. எவ்ளோ பாசமா இருக்காங்க. அவங்களைப் போய் சிடுமூஞ்சின்னு சொல்ற. உனக்கு கண்ண செக் பண்ணனும்ன்னு நினைக்கிறேன்." என்று ஈஷ்யுகனுக்கு கொடி பிடிக்க, தேன்மொழியும் அதனை வழிமொழிந்தாள்.

அதில் அவன் கேலியாய் புன்னகைத்ததில், "நீ ஒரு நாள் ஆபிஸ்ல வந்து பாரு." என்று முனகினாள்.

தேன்மொழியோ, "நீ ஒழுங்கா வேலைப் பார்த்திருக்க மாட்ட. அதான் மாமா லைட்டா திட்டிருப்பாங்க. நீயும் பயந்து பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிருப்ப. நாங்கள்லாம் மாம்ஸ எள்ளுன்னா எண்ணையா நிப்போம்." என்றதில், இன்னிலாவிற்கு 'அடி துரோகிங்களா' என்றிருந்தது.

ஈஷ்யுகன் உதட்டை மடித்து எழுந்தச் சிரிப்பை அடக்கிட, தங்கைகளுக்குக் கும்பிடு போட்டவள், "நீங்க ரெண்டு பேருமே கூட கல்யாணம் பண்ணிக்கோங்க. என்னை ஆளை விடுங்க" என நகர்ந்து, அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கதவை அடைக்கப் போக, விருட்டென உள்ளே புகுந்து கதவை அடைத்தான் ஆடவன்.

அவனை எதிர்பாராமல் திகைத்து நின்றவள், "என்... என்ன சார்?" என்று விழிக்க, இடுப்பில் கை வைத்தபடி அவளை நோக்கி அவன் நடக்க, அவளது கால்களோ தன்னிச்சையாகப் பின்னால் நகர்ந்தது.

"என்னாச்சு சார்..." எச்சிலை விழுங்கியபடி அவள் திணற, நெற்றியை ஒற்றை விரலால் நீவிக் கொண்டவன், "அது என்ன பேர் சொன்ன...? ம்ம் சிடுமூஞ்சி சின்னப்பனா?" என்று முறைத்தபடி கேட்டதில் அவளுக்கு நடுங்கி விட்டது.

"அது... அது... சும்... சும்மா சார். நீங்க மூணு பேரையும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்கள்ல அதான்..." என்று தடுமாற,

"அதுக்கு... வேற செல்லப்பேர் வைக்கலாம் நான் வச்ச மாதிரி... என்னைக் கிண்டல் பண்ற மாதிரி பேர் வைப்பியா?" என்றவன் இப்போது சட்டையில் கைப்பகுதியை மேலே தூக்கி விட்டான்.

அவளுக்கு சர்வமும் ஆட்டம் காண, அடித்து விடுவானோ என்ற அச்சம் எழுந்தது.

"சா... சாரி சார். இனிமே இப்படி சொல்ல மாட்டேன். ப்ளீஸ் அடிச்சுடாதீங்க. ஏற்கனவே இன்னும் கன்னம் பழுத்து வலிக்குது." என்று இரு கன்னத்தையும் பிடித்து அரண்டவளைக் கண்டு நடையை நிறுத்தி விட்டான்.

சடுதியில் அவன் முகம் பாறையாகி விட்டது. கன்னத்தைப் பிடித்திருந்த அவளது கைகளை எடுத்து விட்டவன், இரு கன்னத்தையும் மெல்லப் பற்றினான்.

இன்னிலா உறைந்து அவனைப் பார்க்க, மென்மையிலும் மென்மையாய் பாவையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனைத் தள்ளி விட வேண்டுமெனக் கூட தோன்றாமல், எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றும் புரியாமல் அவள் மலைத்திட, அவளது கண்களை ஆழப் பார்த்தவன், சரிந்து மற்றொரு கன்னத்திலும் முத்தமிட, தானாய் அவளது விழிகள் மூடிக் கொண்டது.

அடி வயிற்றில் ஏதேதோ உணர்வுகள் கிளர்த்தெழ, இன்னதென்று விளக்க இயலா நிலையில் நிலைகுலைந்திருந்தாள் இன்னிலா.

"ஐ செட் சாரி. இனிமே உங்கிட்ட எந்த நிலமைலயும் கை நீட்ட மாட்டேன். யூ கேன் ட்ரஸ்ட் மீ." என்று வார்த்தைகளுக்கும் வலிக்கும் படி பேசிட, இன்னும் அதிர்வில் இருந்து மீளாதவள், ஈரமான கன்னத்தைத் துடைத்துக் கொண்டு, 'சாரி இப்படியா சொல்லுவாங்க' என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.

அது புரிந்தவன் போல, "நான் ஆல்ரெடி ரெண்டு தடவை சாரி கேட்டுட்டேன். நீ காதுல வாங்குன மாதிரி தெரியல. அதான் நீ ஞாபகம் வச்சுக்குற மாதிரி சாரி சொன்னேன். நீ தண்டனையையும் இப்படி நான் ஞாபகம் வச்சுக்குற மாதிரி கொடுத்துட்டா, நான் பிளசண்ட்டா அக்செப்ட் பண்ணிப்பேன்..." என்று கீழ்க்கண்ணால் குறும்பை வீச, திணறிப் போனாள் பாவை.

'இப்படியா? இதுக்கு பேர் தண்டனையா?' என்று விழித்தவள், அவனை நோக்க இயலாமல் தலையைத் தாழ்த்தி விட்டு, "அக்ரீமெண்ட் மேரேஜ்ன்னு தான சொன்னீங்க." என்றாள் முணுமுணுப்புடன்.

"ஸ்ஸீ... நமக்கு மட்டும் தான் இது அக்ரீமெண்ட் மேரேஜ். உன் பேமிலிக்கும், மத்தவங்களுக்கும் இல்ல. எல்லாரும் பார்க்கும் போது நம்ம ஒரு ரொமான்ட்டிக் கப்பிளா தான் இருக்கணும். அப்போ தான் சங்கரநாராயணன் உன்னை நெருங்கப் பயப்படுவான்." என்று தீர்க்கமாய் கூற, "ரொமான்ட்டிக் கப்பிளாவா?" என வாயைப் பிளந்தாள் இன்னிலா.

"ம்ம். எஸ். அண்ட் அக்ரீமெண்ட் மேரேஜ்ன்னு நினைச்சு உன் வீட்ல நான் பேசப் போகல. முதல்ல, என் வீட்ல உன்னை வந்து இருக்க சொன்னேன். நீ மறுத்த. சோ, கல்யாணம் பண்ணுனா என்கூட தான இருந்தாகணும்ன்னு உன் வீட்ல பேசுனேன். தென் நீ தான் கல்யாணம் வேணாம்ன்னு முரண்டு பிடிச்ச, சோ இதை அக்ரிமெண்ட் மேரேஜா சேஞ்ச் பண்ணிட்டேன். தட்ஸ் இட். இனி எதுனாலும் நான் சொல்றதை முதல்லயே கேட்டுட்டா, விஷயங்கள் வில்லங்கமாகாம இருக்கும்.

அண்ட் பொது இடத்துல, ஐ மீன் நம்ம ரூமைத் தாண்டி வெளில வரும் போது உன் கண்ணுல காதல் கொட்டணும். அதை உன் வீட்ல இருக்குறவங்க முதல்ல நம்பனும். அப்போ தான் எல்லாரும் நம்புவாங்க. காட் இட்." என்று அதிகாரமாய் கூறியதில், "எனக்கு ஒரு டவுட்டு சார்" என்றாள் மெதுவாக.

"முதல்ல இந்த சார ரீ - பிளேஸ் பண்ணிட்டு டவுட்டு கேளு" அவன் கடினமாய் கூறியதில், "வேற எப்படி கூப்பிட...?" எனக் கேட்டாள் புரியாமல்.

"நான் உனக்கு எவ்ளோ அழகா 'ஸ்வீட்மூன்'னு பேர் வச்சேன். இதை உங்கிட்ட கேட்டுட்டா வச்சேன். அதே மாதிரி நீயும் ஒரு பேர் வை." என்றான் அவளை ரசித்தபடி.

சட்டென 'சிடுமூஞ்சி சின்னப்பன்' என்கிற பெயர் நினைவு வந்திட, இன்னிலாவை மீறி அவள் அதரங்கள் மெல்லப் புன்னகைத்து விட்டது.

"ஏய்..." என அவள் இதழ்களை இரு விரல் கொண்டு பிடித்தவன், "நீ என்ன யோசிக்கிறன்னு புரியுது. என்னை நல்லாப் பாருடி. நீ வச்ச பேருக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா." என்று கேட்டு விட்டு, பின்னால் நகன்று கையை விரித்துக் காட்ட, அவனது விரல் பட்ட இதழ்கள் கூசிப் போனது.

அதே கூச்சத்துடன் சட்டை விளம்பர மாடல் போல தன் முன் நின்றவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் இன்னிலா.

'என்கிட்ட மோத நினைக்காதே...' என்ற மிரட்டல் தெறிக்கும் அழுத்த விழிகள். அடர்ந்தப் புருவம். நெற்றியில் படர்ந்திருந்த கேசத்தை அவ்வப்பொழுது பின்னால் வாரிக் கொள்ளும் மேனரிஸம் பேரழகு.

கஞ்சத்தனமாய் சிரித்து வைக்கும் இதழ்கள். பேசியே ஒருத்தரை அவனுக்கு அடிபணிய வைக்கும் மந்திரக் குரல்.

ஆறடி உயரத்தில், வசீகரிக்கும் தோற்றம் கொண்டவன். கோபத்தை மட்டும் குறைத்தால், சாக்லேட் பாய் பட்டமே கொடுத்து விடலாம்.

அவனுடன் வேலை செய்த இத்தனை மாதங்களில் ஒரு முறை கூட அவன் முகத்தை அரை நொடிக்கு மேலே பார்த்தது இல்லை. இப்போதோ இரு நிமிடங்களுக்கு மேலாக, அந்த முகத்தில் இருந்த பார்வையை அகற்ற இயலாமல் சுயமிழந்து நின்றாள் இன்னிலா.

ஆணவனின் இதழோரம் கர்வ நகை உருவெடுக்க, "இவ்ளோ நேரம் என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்ததுல இருந்து எனக்கு என்ன பேர் செலக்ட் பண்ணுன?" இரு புருவதையும் உயர்த்தி அவன் கேட்டதுமே நிகழ்வுக்கு வந்தாள்.

'இப்படியா 'பே'ன்னு பார்த்து வைப்ப...' என்று கண்களைக் கண்டித்தவளுக்கு காரணமின்றி கன்னங்கள் சிவப்பைத் தத்தெடுத்தது.

"பே... பேர்... என்ன வைக்க. ஒண்ணும் தோணலையே." தட்டுத் தடுமாறி உரைத்ததில்,

"சரி விடு. நான் உன் தங்கச்சிங்ககிட்டயே செலக்ட் பண்ணிக் குடுக்க சொல்றேன். நீ வேஸ்ட்டு." என்று திரும்பப் போக, சட்டென ஒரு வித பொறாமை உணர்வுத் தூண்டப்பட்டதில் "இல்ல இல்ல நானே சொல்றேன்." என்று நிறுத்தினாள்.

"சரி சொல்லு" முகிழ்ந்தப் புன்னகையை அடக்கிக்கொண்டு ஈஷ்யுகன் கேட்டதில், சற்று நேரம் கண்களை அங்கும் இங்கும் அலையவிட்டு சிந்தித்தவள், "யுகின்னு கூப்பிடவா?" எனக் கேட்டாள் குரலெழும்பாமல்.

ஒரு கணம் அதிர்ந்து போன ஆடவனிடம் எந்த வித எதிர்வினையும் இல்லை. மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தவளுக்கு அவனது இறுகிய முகத்தைக் கண்டு வெளிறி விட்டது.

"பிடிக்கலைன்னா வேணாம்." அவள் வேகமாய் பதறிட,

"என் அம்மா என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க." என்றவனின் ஆழ்குரலில் என்ன இருந்ததென்று புரியவில்லை அவளுக்கு.

"அப்போ வேற பேர் யோசிக்கவா?" என்று இன்னிலா கேட்டதில்,

"ஏன்? கால் மீ யுகி. ஐ லைக் தட்." என இயல்பாகிட, அவள் முகம் பூவாய் மலர்ந்தது.

"சரி இப்போ கேளு." என்றவன் அவளது முக அசைவுகளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.

"என்ன கேட்க?" தலையை சொறிந்தவளைக் கண்டு, லேசாய் முறுவலித்தவன், "ஏதோ டவுட்டுன்னு கேட்டியே?" என்றதில், பாவம் அவளுக்குத் தான் என்ன கேட்க வந்தோமென்றே மறந்து விட்டது.

பின் நினைவு வந்தவளாக, "ஹான்... நம்ம லவபிள் கப்பிளா இருக்குறதுக்கும் அந்த மினிஸ்டரை பிடிச்சுக் குடுக்குறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு சா..." சார் என்று அழைக்க வந்தவள், "யு... யுகி" எனத் திக்கித் திணறி கூறிட, தேவையின்றி ஒரு வித நாணம் அவளை ஆக்கிரமித்தது.

அவனோ புதிதாய் தனக்குள் எழுந்த உணர்வலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "என் வைஃப் மேல கை வைக்கிறதுக்கு எவனுக்கும் தைரியம் இருக்காது ஸ்வீட்மூன். சோ, உனக்குப் பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இந்தக் கண்ணுல லவ்ஸை வழிய விடு. அப்ப தான் உன் உயிர் தப்பிக்கும்." என்றவனின் பார்வையில் மறைந்திருந்தக் குறும்பை அறிந்திராதவள், தலையை ஆட்டி வைத்தாள் மையமாக.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9

ஈஷ்யுகன் - இன்னிலாவின் திருமணத்தை வீட்டிலேயே நடத்த முடிவெடுத்து, அனைத்தும் ஏற்பாடு செய்தான்.

தங்கையின் இழப்பை ஏற்க இயலாமல் ஜீவித் தவித்தபடி, வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.

நேரம் கடந்த பிறகே, ஈஷ்யுகனின் மீது கொண்ட கோபமே உறைத்தது அவனுக்கு.

"ச்சே! அவனுக்கும் இது கஷ்டம் தான. நமக்கு அப்பன் சரி இல்லைன்னா அவன் என்ன பண்ணுவான்." என்று நொந்து கொண்டவன், நண்பனுக்கு போன் செய்தான்.

ஒரே ரிங்கில் எடுத்து விட்ட ஈஷ்யுகன் அவனது அழைப்பிற்காக காத்திருந்தான் போலும். எப்போதும் சண்டை வந்தால், இப்படித்தான் ஜீவித் முதலில் வார்த்தையை விட்டு விடுவான். பின் அவனே போன் செய்து சமாதானம் செய்வான். இந்த முறையும் அதே போல எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஈஷ்யுகனை ஏமாற்றாமல் அழைத்திருந்தான் ஜீவித்.

இருவரும் சில நொடிகள் அமைதி காக்க, ஈஷ்யுகனே "கிளம்பி வீட்டுக்கு வா" என்றிட, கண்ணில் நீரோடு "சாரி மச்சான்" என்றான் ஜீவித்.

"டேய் லூசு. உன் சாரியை நீ தானா வச்சுக்கோ. எனக்கு நாளைக்குக் கல்யாணம்." என்று குண்டைப் போட, "டேய் சோகத்துல மூளை குழம்பிடுச்சா உனக்கு" என அதிர்வாய் கேட்டான் ஜீவித்.

"அதெல்லாம் இல்ல. உண்மையாவே மேரேஜ் தான்." என்றதும்,

"என்னடா உளறுற. பொண்ணு யாரு? கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு மாடர்ன் சந்நியாசியா தானடா பேசுவ. என்ன இந்த திடீர் முடிவு. கல்யாணம்ன்னா அதுக்கு பொண்ணு வேணும் மச்சி. தனியா தாலி கட்டிக்க முடியாது" என்றான் குழம்பி.

"அடப்பாவி. இப்ப உனக்குத் தான் மூளைக் குழம்பிடுச்சு. நீ நேர்ல வா சொல்றேன்." என்றதும் அடித்துப் பிடித்துக் கிளம்பினான் ஜீவித்.

அங்கு இன்னிலாவும் அவள் குடும்பமும் இருப்பதைக் கண்டு இன்னும் குழம்பி, "நீ என்னம்மா இங்க. உன்னை வீட்டுக்கு வர வச்சே வேலை வாங்கி டார்ச்சர் பண்றானா?" எனக் கேட்டதில், அவளுக்கு தான் அசூசையாக இருந்தது.

பதில் பேசாமல் நெளிந்து கொண்டு நின்றவளின் தோளில் கையைப் போட்ட ஈஷ்யுகன், "ஆபிஸ்லயே ஒழுங்கா வேலை பார்க்க மாட்டா. இதுல வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து வேலை வாங்கிட்டாலும்..." என சலித்துக் கொண்டவன், "ஷீ இஸ் மை கேர்ள் ஜீவி. நாளைக்கு எனக்கும் இவளுக்கும் தான் கல்யாணம்" என்றதில், ஜீவித் சில நொடிகள் அதிர்ச்சியிலேயே நின்றான்.

இன்னிலாவிற்கு அவன் தோளில் கையைப் போட்டது குறுகுறுக்க, நெளிந்து அதனை எடுத்து விட முயன்றாள். அதற்கு இம்மியளவும் இடம் தராதவன், அவள் நகர இயலாத அளவு, தோள்பட்டையை இறுக்கிப் பிடிக்க, சற்று வலித்தது.

"யுகி..." வாய்க்குள் முணுமுணுத்து பாவமாக அவனைப் பார்க்க, "ஒழுங்கா நில்லு. இப்ப அவன் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு நம்பனும்..." என்று பற்களைக் கடித்து அதீத சினத்துடன் கூறியதில் மிரண்டவள், சட்டென முயற்சியை கைவிட்டாள்.

"ஸ்வீட்மூன் இவனை உனக்கு இன்ட்ரோ குடுக்கத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்" என்று கனிவுடன் பேசியவனை வாயைப் பிளந்து பார்த்தாள்.

பின் எச்சிலை விழுங்கி கொண்டு அவளும் நடிக்க வேண்டியதாகிப் போயிற்று.

"அண்ணாவை எனக்குத் தெரியுமே யுகி." என்று சிறு முறுவலுடன் கூற, ஜீவித் இன்னுமாக அதிர்ந்தான்.

"என்னது யுகியா?" என வியப்பு பரவ கேட்க, "இவ்ளோ டீப் லவ்வாடா ஈஷா. அம்மாவைத் தவிர யாரையும் இந்த பேரை கூப்பிட விட மாட்டியே" என்றவன், "எப்படியோ நீ கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியே அதுவே போதும். நிம்மி இருந்திருந்தா இந்நேரம்..." எனப் பேச வந்தவனுக்கு தொண்டை அடைத்தது.

அது ஈஷ்யுகனையும் தாக்கியதோ என்னவோ அவனது முகத்தில் இருந்த மலர்ச்சி முற்றிலும் காணாமல் போனது.

இன்னிலாவிற்கோ வேறு சில யோசனைகள். 'நம்ம நடிக்கவே இல்ல. அதுக்குள்ள லவ்வுன்னு நம்பிட்டாங்க. அப்படி நம்பனும்ன்னு தான் இவர் அந்த பேரை கூப்பிட சொல்லிருப்பாரோ. இருக்கும்' என அவளாக முடிவெடுத்துக் கொண்டவளுக்கு, சட்டென மனதில் ஒரு ஏமாற்றம் சூழ்ந்தது.

ஏன்? எதற்கு? என்ன விதமான மனநிலை என்று சுத்தமாக தெரியவில்லை அவளுக்கு. ஆனால் என்னவோ செய்தது.

முயன்று அதனை ஒதுக்கியவள், "யுகி கொஞ்சம் தலைவலிக்குது. நான் ரூம்க்கு போறேன்" என்று அவன் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று விட, தங்கையின் கவலையில் இருந்து மீண்டு, தன்னவளைக் கண்டான்.

பின், ஜீவித்திடம் சங்கர நாராயணனுக்கு எதிராக ஆதாரம் திரட்ட திட்டமிட, "என் தங்கச்சியைக் கொன்னுட்டு, ஒன்னும் தெரியாதவன் மாதிரி வேஷம் போடுறான் அந்த ஆளு. அவனை சும்மா விட கூடாது ஈஷா." என்றவனை அமைதியாக்கினான் ஈஷா.

"கண்டிப்பா விடக் கூடாது. நீ தான் இதுல முழுக்க முழுக்க இறங்கணும். நான் உன்னை கைட் பண்றேன்" என்றதும், "என்ன பண்ணனும்ன்னு சொல்லு ஈஷா நான் அதை பண்றேன்" என்று நண்பனின் பேச்சைக் கேட்கலானான்.

ஜீவித் காலையில் வருவதாகக் கூறிவிட்டு சென்று விட, ஈஷ்யுகன் இன்னிலாவைத் தேடிச் சென்றான்.

கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவளுக்கு அனைத்துமே 'ப்ளாங்கா'க இருப்பது போலொரு பிரம்மை. திடீரென அவள் நெற்றியில் யாரோ கை வைப்பதை உணர்ந்து விருட்டென எழுந்தவள், அங்கு ஈஷ்யுகன் நிற்பதைக் கண்ட பிறகே ஆசுவாசமானாள்.

"ஏன் இவ்ளோ பதற்றம்?" அவன் கேட்டதில்,

"டக்குனு தொடவும். யாரோன்னு..." என அவனைப் பாராமல் பதில் சொல்ல, "இங்க யார் வர முடியும் என்னைத்தவிர." என்றவன், பின் தலை சரித்து "அப்போ நானா இருந்தா தொட்டுக்கலாம். ரைட்?" என்றான் அவளறியாத புன்னகையுடன்.

"ஹான்... இல்ல இல்ல அப்படி இல்ல..." என்று படபடத்தவளைக் கண்டு, கன்னக்குழி விழுக புன்னகைத்தவன், "ஈஸி மூன்... தலைவலி எப்படி இருக்கு. டேப்லட் வேணுமா?" எனக் கேட்டான் அக்கறையுடன்.

"இல்ல. இப்ப பரவாயில்ல." என்றதும், மீண்டும் அவள் நெற்றியில் கை வைத்தவன், "லேசா சுடுற மாதிரி இருக்கே. ஆர் யூ ஆல்ரைட்?" என்றான் கேள்வியாக.

"ம்ம் நல்லா தான் இருக்கேன்." என்று தலையாட்டியவளிடம், "ஓகே டேக் ரெஸ்ட்." என்றவன் எழுந்து இயல்பாய் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டுச் செல்ல, அவள் தான் வெகுநேரமாய் அந்த முத்தத்தில் இருந்து வெளிவர இயலாமல் அமர்ந்திருந்தாள்.

மறுநாள், சந்தனத்தில் அரக்கு நிறம் தோய்த்த பட்டுப் புடவை பாந்தமாய் உடலில் பொருத்திக்கொள்ள, மணப்பெண் அலங்காரத்தில் மிளிர்ந்தாள் இன்னிலா.

"வாவ் அக்கா... நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க தெரியுமா?" என்று அமிர்தா நெட்டி முறிக்க, தேன்மொழி "எல்லாம் மாமா வாங்கி குடுத்த, புடவையும் நகையும் தான் அக்காவை அழகா காட்டுது அமி." என்று அப்போதும் ஈஷ்யுகனையே உயர்த்திப் பேசினாள்.

அவளுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கும் பிடித்த நிறத்தில் பாடவை தாவணியும் மெல்லிய நகைகளையும் வாங்கிக் கொடுத்திருந்தான்.

பசுபதி, மகளுக்காக சேர்த்து வைத்திருந்த பத்து சவரன் நகையை கையோடு எடுத்து வந்திருக்க, அதை அவனிடம் கொடுத்ததில், வாங்க மறுத்தான்.

"என் பொண்டாட்டிக்கு நானே எல்லாம் வாங்கி குடுக்க முடியும் மாமா. இதை தேன்மொழிக்கும் அமிர்தாவுக்கும் வச்சுக்கோங்க." என்று முடிவாய் கூறிட, பின் அவனை வற்புறுத்தியும் கூட பயனில்லாமல் போனது.

இன்னிலா தான், எதையும் ஏற்க இயலாமல் தவித்தாள். தனக்கு வாங்கியது போக, தங்கைகளுக்கும் சேர்த்து செய்தவனை என்ன சொல்லி தடுப்பது என்று தெரியவில்லை.

ஓரளவு முகத்தில் இருந்த காயங்கள் மட்டுப்பட்டிருந்தது. ஆனாலும் உடலில் பல இடங்கள் இன்னும் கன்றிப் போயே இருக்க, தினமும் அதற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தாள்.

மணப்பெண் அலங்காரத்தில் தயாராகி இருந்தவளைக் காண வந்த ஈஷ்யுகனும், பட்டு வேஷ்டி சட்டையில் ஒளிர, அவனை ஒரு கணம் வியந்து பார்த்தவள், சட்டென பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.

அவனும் அவளைக் கண்டு திகைக்கவே செய்தான். எப்போதும் சிறு பெண்ணாய் தெரிபவள், இன்று பேரழகியாய் காட்சியளிக்க, தனக்கு உரிமையாகப்போகும் பாவையின் மீதான பார்வையை ஆழமாகப் பதித்தான்.

"கிளம்பிட்டியா?" எப்போதும் வரும் கம்பீரமின்றி மென்மையாக அவன் வினவ, "ம்ம்" எனத் தலையாட்டினாள்.

ட்ரெஸிங் டேபிளின் அருகில் இருந்த ஆயின்மெண்ட்டைப் பார்த்தவன், "மருந்து போட்டியா, இப்போ காயம் கொஞ்சம் ஆறி இருக்கா?" எனக் கேட்ட போது, ஈஷ்யுகனின் குரலில் லேசாய் வருத்தம் தெரிந்தது.

அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், "பரவாயில்ல..." என்று தலையை உருட்டி விட்டுப் பின்,

"நா... நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்." என்றாள் தயக்கமாக.

"என்ன வேணாலும் கேளு ஸ்வீட்மூன். வேற ஏதாவது வேணுமா?" என்று அவன் ஆர்வமாய் வினவ,

"அதில்ல... நான்... கல்யாணம் முடிஞ்சு எப்பவும் போல உங்க ஆபிஸ்ல வேலை பார்க்கட்டா. நான் அஞ்சு வருஷம் கழிச்சு தங்கச்சிங்க படிப்பு முடிஞ்சதும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேன். இப்போ... இது நிரந்தரமும் இல்லைல... அதான்..." என்றதில், சட்டென மூண்ட கோபத்துடன் கையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவன்,

"இதை தான் கேட்க வந்தியாக்கும்" என முறைத்தான்.

"அது மட்டும் இல்ல... என்னை அடிச்சதுக்கு பதிலா, இதெல்லாம் வாங்கிக் குடுத்து என்னை சங்கடப்படுத்தாதீங்க யுகி." என்றிட, அவன் கண்ணை சுருக்கி இன்னும் தீவிரமாய் முறைத்து விட்டு, பதில் பேசாமல் வெளியில் சென்று விட்டான்.

அது அவளை இன்னுமாக சங்கடப்படுத்தியது. திருமண நேரமும் நெருங்கி விட, மனதினுள் இருவருக்குமே நிமிஷாவின் நினைவு வாட்டியது.

அதில் இருவரின் முகமும் வாடிப்போய் இருக்க, ஜீவித் தான், "ஏன்டா கல்யாணத்து அன்னைக்குக் கூட சிரிக்கக் கூடாதுன்னு ஏதாவது வேண்டுதல் வச்சுருக்கியா. நீ இப்படி இருந்தா நிம்மிக்கு பிடிக்காதுடா." என்று தோழனை அரவணைக்க, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன்படுத்திக்கொண்டான் ஈஷ்யுகன்.

நன்முறையில் திருமணம் அரங்கேற, திருமணப்பதிவும் அங்கேயே நிகழ்ந்தது.

அனைத்துமே மடமடவென நடக்க, இன்னிலா குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

"சோ ஹேப்பிடா..." என ஜீவித் நண்பனை அணைத்துக் கொள்ள, "எனக்கு ஹேப்பி... உன் அப்பனைக் கொன்னா தான்" என்றான் விழிகள் சிவக்க.

"இந்த நேரத்துல ஏன்டா அந்த ஆளை பத்தி நினைச்சுட்டு இருக்க. பக்கத்துல இருக்குற உன் புது பொண்டாட்டியை நினைச்சுக்க." என்றதும் சட்டென கோபம் வடிந்து அருகில் நின்றிருந்தவளைக் கண்டான்.

அழகுப் பதுமையாய், தங்கைகளிடம் முணுமுணுவெனப் பேசிக்கொண்டிருந்தாள் இன்னிலா. அவர்கள் ஏதோ கேலி செய்து சிரிக்க, அதற்கு லேசாய் வெட்கம் கொண்டு சிவந்த பாவையின் வதனம் ஆடவனுக்கு ரசனையைக் கொடுத்தது.

அவளது கரத்தை தனது உள்ளங்கைக்குள் அடக்கிக்கொண்டவனை, சட்டென திரும்பிப் பார்த்து விழித்தாள்.

ஈஷ்யுகனோ குறும்பாய் கண் சிமிட்டி, "நீ ஏன் பிடிக்காத பொண்டாட்டி மாதிரி இவ்ளோ தள்ளி நிக்கிற. கம் க்ளோஸர்." என்று தோளும் தோளும் இடிப்பது போல ஒன்றி நிற்க, தங்கைகள் அதற்கு நமுட்டு நகை புரிந்ததில், இன்னிலாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

இப்போதைக்கு மறுக்கவும் வழியில்லை. அதனால் அமைதியாய் நின்று கொண்டாள்.

"என்னம்மா... ஆபிஸ்ல இவனைப் பார்த்தாலே பயந்து ஓடுவ. போன்ல கூட இவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்ன்னு புலம்புவ. அப்பறம் எப்படி காதல்ல விழுந்த?" என்று ஜீவித் ஆச்சர்யமாய் கேட்க, 'இப்படி போட்டு உடைத்து விட்டானே' என்ற பதற்றத்தில் அவள் திணறினாள்.

"என்கிட்ட இருந்து தப்பிக்கிறதா? அதுக்கு சான்ஸ் இல்லையே" என்று உதட்டைப் பிதுக்கிய ஈஷ்யுகன், "எல்லார்கிட்டயும் நீ என்னை ராட்சசன் மாதிரி ஃப்ரேம் பண்ணிருக்கியா ஸ்வீட்மூன். டூ பேட்" எனத் தலையை சிலுப்பிக்கொள்ள, தேன்மொழி தான், "இதுக்கு தான் சொன்னோம். இவளைக் கழட்டி விடுங்கன்னு. இவளுக்கு லவ்வு ஒரு கேடு" என்று கேலி செய்தாள்.

"ராட்சசன் தான..." என வாய்க்குள் சொல்லிக்கொண்ட இன்னிலாவின் காதோரம் குனிந்தவன், "எஸ்... ராட்சசன் தான். உன்னை இரட்சிக்கும் ராட்சசன்!!!" எனக் கூறி தலையைக் கோதி கொள்ள, அவன் எந்த அர்த்தத்தில் கூறுகிறானென்றே புரிந்து கொள்ள இயலாமல் திருதிருவென விழித்தாள் இன்னிலா.







 
Status
Not open for further replies.
Top