அத்தியாயம் 2
“ஈஷ் க்ரூப் ஆப் கம்பெனீஸ்” என்ற பெரும் நிறுவனத்தில் பலதரப்பட்ட வியாபாரங்களை நடத்தி வருகிறான் ஈஷ்யுகன். ஆறு மாதங்களுக்கு முன்பு, தனக்கு உதவியாளராக இருந்த மிதிலனுக்கு ஏற்பட்ட விபத்தில் அவன் மூன்று மாதங்கள் வேலைக்கு வர இயலாமல் போனது.
அதனால், தற்காலிகமாக தேர்தெடுக்கப்பட்டவள் தான் இன்னிலா. அவளது வேலை பிடித்து விட்டால், இவ்வேலையில் தொடரலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தான். எப்படியும் முன்போல மிதிலன், சுறுசுறுப்பாக நடமாட ஆறு மாதங்களாவது பிடிக்கும்.
முதலில் எம். டி இண்டெர்வியூ செஷனை வீடியோ வழியே கலந்து கொண்டதில் வெற்றி பெற்றவளை, வேலையை உறுதிபடுத்த நேரில் வரச் சொன்னார்கள்.
சேர்மன் விருப்பம் தெரிவித்து விட்டால், அப்பொழுதே வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்றதில், அவளும் படபடப்புடன் ஈஷ்யுகனின் அலுவலகத்திற்கு வந்தாள்.
‘அய்யய்யயோ... கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ. இவ்ளோ பெரிய பில்டிங்க்கா இருக்கே.’ என்று அந்த பிரம்மாண்ட அலுவலகத்தைக் கண்டு வெளிறினாள்.
‘சரி பில்டிங்கை நம்மளா தூக்கி சுமக்கப் போறோம்.’ என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டவள், உள்ளே சென்றாள்.
ரிசப்ஷன் பெண்மணியிடம் விசாரிக்க, அவள் அமரச் சொன்னதும் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்தவள், உள்வடிவமைப்புகளில் கவரப்பட்டு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின் உள்ளே செல்ல சொன்னதும், கால்கள் பின்னிக்கொள்ள மெல்ல நடையிட்டு சேர்மன் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே சென்றதும் தான் தாமதம், “உன்னை என்ன பொண்ணு பார்க்க வர்றாங்களா ஆடி அசைஞ்சு நடந்து வர்ற. இங்க இருக்கற ரிசப்ஷன்ல இருந்து என் ரூம்க்கு வர்றதுக்கு உனக்கு நாலு நிமிஷம் தேவைப்படுதா? இடியட்.” என்று வசைபாடினான் ஈஷ்யுகன்.
வீட்டினர் கூட அவளை அதட்டிப் பேசி பழக்கமில்லை. பள்ளி, கல்லூரிகளில் கூட ஆசிரியர்களுக்கு செல்லப்பெண் இவள். இங்கோ, வந்ததும் வராததுமாக வேலைக்கு சேரும் முன்னே இந்த திட்டு திட்டுகிறாரே என எச்சிலை விழுங்கியவள், “சா... சாரி சார்.” என்றாள் மெல்லமாக.
“வாசல்ல இருந்து இங்க வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் வேணும்” பல்லைக்கடித்து அவன் இன்னும் சீற, அதன் பிறகே அவன் கொடுத்த அதிர்ச்சியில் இன்னும் தான் கதவு பக்கத்திலேயே நிற்பது உணர்ந்து விறுவிறுவென முன்னால் சென்றாள்.
“சிட்” எரிச்சலை தனக்குள் தேக்கியபடி ஈஷ்யுகன் கூற, பட்டென அமர்ந்து விட்டவள், தன்னுடைய பைலை கைகள் நடுங்க அவனிடம் கொடுத்தாள்.
அதனை வாங்கி மேஜை மீது தூக்கி எறிந்தவன், “இதை வச்சு ஊறுகாய் கூட போட முடியாது. எனக்கு தேவை... எனக்கு நேர்மையா இருக்கணும். உண்மையா இருக்கணும். சுறுசுறுப்பா வேலை செய்யணும். ஸ்லோ மோஷன்ல சீரியல் ஹீரோயின் மாதிரி நடந்துக்க கூடாது புரிஞ்சுதா?” என்று கட் அண்ட் ரைட்டாக பேசிட,
‘இவரு நிறைய சீரியல் பாப்பாரோ’ என்ற கற்பனை வளர்ந்தது அவளுக்கு.
அவளையே அரை நொடிக்கும் அதிகமாக அழுத்தப் பார்வை பார்த்தவன், “வாட்? என்ன நினைச்சியோ சொல்லிடு” எனக் கேட்டபடி கையைக் கட்டிக்கொண்டு பின்னால் சாய்ந்தான்.
“ஹான்... நான் நான் ஒன்னும் நினைக்கலையே” என்று அவள் பதற,
“லுக்... உனக்கு இங்க பேச்சு சுதந்திரம் நிறையவே இருக்கும். ஆனா அதை மூடி மறைச்சு என்கிட்ட நடிக்க கூடாது. ஐ டோன்ட் லைக் தட். ஸ்பீக் அவுட்” என்றான்.
“இல்ல... நீங்க நிறைய சீரியல் பாப்பீங்களோன்னு…” என்று தட்டு தடுமாறி இன்னிலா பேசியதில், “வாட்?” என்று முகத்தை சுருக்கினான்.
“நீங்க தான் சீரியல் ஹீரோயின் மாதிரி பண்ணாதன்னு சொன்னீங்க அதான்” என்று விளக்கம் வேறு கொடுக்க, அவளை மேலும் கீழுமாகப் பார்த்து முறைத்தவன்,
“ரொம்ப முக்கியம். முதல்ல ஒரு நோட் பேட் எடுத்து நான் சொல்றதை கடகடன்னு எழுது. இதான் உனக்கு பர்ஸ்ட் டெஸ்ட்.” என்றவன், தமிழும் ஆங்கிலமும் கலந்து ஒரு வியாபாரத்திற்கான அடிப்படை தேவைகளை கூறிட, அவளுக்கோ வேகம் போதவில்லை.
“சார் கொஞ்சம் நிறுத்தி…” என்று பயத்துடன் கூறியதில், “நான் உனக்கு ஸ்கூல்ல டிக்டேஷனா சொல்லிட்டு இருக்கேன். நிறுத்தி நிதானமா சொல்ல... டைப்பிங் ஸ்பீடா வருமா?’ என்று கர்ஜிக்க, “வரும் சார்” என்றவளுக்கு அழுகையே வரும் போல இருந்தது.
“அப்போ டைப் பண்ணு” என்று அவன் மடிக்கணினியை கொடுக்க, அதிலும் அவன் பேசும் வேகத்திற்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும், அவளும் அதிவேகத்துடன் டைப் செய்து ஓரளவு அந்த டெஸ்ட்டில் பாஸ் செய்திருந்தாள்.
“ம்ம்... நாளைல இருந்து வேலைக்கு வந்து சேரு. ஷார்ப் அட் 9. மத்த வேலை விவரத்தை எம். டி உனக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவாரு. நல்லா கேட்டுக்கோ. நாளைக்கு இப்படி திருதிருன்னு முழிச்சுட்டு உட்காந்துருக்கக் கூடாது. காட் இட்.” என்று அதிகாரத்துடன் கூற வேகமாகத் தலையாட்டியவள், வெளியில் வந்த பிறகே அத்தனை நேரமும் இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டாள்.
‘ஆத்தாடி... தினமும் இவருகிட்ட திட்டு வாங்கிக்கிட்டே தான் வேலை பாக்கணுமா?’ எனக் கண் கலங்கிட, பேசாம ஊருக்கே ஓடிடலாமா? என்று கூட எண்ணி விட்டாள்.
பின் நல்ல சம்பளத்தை ஏன் விட வேண்டும். நன்றாக வேலை செய்தால் திட்டவா போகிறார் என்ற சுய நம்பிக்கை எழ, மனதை உறுதி படுத்திக் கொண்டாள்.
ஆனால் அது மறுநாள் காலை வரை மட்டுமே. ஒன்பது மணிக்கு ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டதில், அவளை வறுத்து எடுத்து விட்டான்.
“முதல் நாளே கரெக்ட் டைம்க்கு வராம எங்க போய் சுத்திட்டு வர்ற?” என்றவனின் கேள்வியில் அவள் விழிகள் கலங்கி விட்டது.
“பிஜி இங்க இருந்து ரொம்ப தூரம் சார். அப்படியும் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்பிட்டேன். ஆனாலும் லேட் ஆகிடுச்சு. நாளைல இருந்து இப்படி நடக்காது சார் சாரி.” என்று அழுவது போல கூற,
“தூரம்ன்னு நேத்தே தெரியலையா? ஆபிசுக்கு பக்கத்துல பிஜி இருக்கும் ஆர் ஷேரிங் அபார்ட்மெண்ட் கூட இருக்கும். ரிசப்ஷன்ல விசாரிச்சு இடத்தை மாத்து. நாளைக்கே!” என்று கண்டிப்பாய் கூறியதில், சரியென தலையசைத்தாள்.
பின், வேலைகள் ஜரூராய் நடைபெற, அவன் செல்ல வேண்டிய அனைத்து இடத்திற்கும் இவளும் செல்ல வேண்டிய நிலை. பல நேரம் அவனிடம் திட்டு வாங்கியே பொழுது கரைந்தது. மாலை ஆறு மணிக்கு கணினி முன்பு அமர்ந்திருந்தவளை கிளம்ப சொன்னவன், “ஷார்ப் 6 க்கு என்கிட்ட சொல்லிட்டு நீ கிளம்பலாம்.” என்று விட, தப்பித்தோம் பிழைத்தோமென ஓடி விட்டாள்.
மறக்காமல் ரிசப்ஷனில் அருகிலிருக்கும் பிஜி பற்றி விசாரிக்க, அந்த ரிசப்ஷன் பெண்மணி சுனைனாவோ
“இங்க பக்கத்துல பிஜி இல்ல மேம். ஒர்க் பண்ற பொண்ணுங்க ஷேரிங் அபார்ட்மெண்ட் எடுத்து தான் தங்கி இருக்காங்க. அந்த மாதிரி வேகண்ட் இருக்கான்னு விசாரிக்கிறேன்.” என்றதும், “ஆனா அது ரெண்ட் அதிகமா வருமே” என்றாள் பரிதாபமாக.
“உங்களுக்கு சேலரி டெர்ம்ஸ் பத்தி எச். ஆர் தெளிவா சொல்லலையா மேம்.” என்றதில், அவள் “சொன்னாங்க. ஆனா எனக்குப் பாதி புரியல” என்றதும், சுனைனா சிரித்தாள்.
“வெளியூர்ல இருந்து இங்க ஒர்க் பண்ண வர்றவங்களுக்கு கம்பெனியே ரெண்ட் அலவன்ஸ் அஞ்சாயிரம் குடுத்துடும். நம்ம அதுக்குள்ள விசாரிக்கலாம்” என்றவள் சொன்னதோடு நில்லாமல் போனில் யாரிடமோ பேசி விட்டு வைத்தாள்.
“இங்க இருந்து பைவ் மினிட்ஸ்ல ஒரு அபார்ட்மெண்ட் இருக்கு. அங்க இப்போதைக்கு ஒரு பொண்ணு மட்டும் தான் தங்கி இருக்காங்களாம். ரெண்ட் பத்தி அவங்ககிட்ட தான் பேசணும்.” என்றதும் சரியென தலைசாய்த்தாள்.
இப்போதே பார்த்து விடுவது மேல் என எண்ணி, அந்த அபார்ட்மென்டிற்குச் சென்றாள். நல்லதொரு சூழ்நிலையையும் தோட்டம் பார்க் பிளே கிரவுண்ட் என பிஜிக்கு இது பரவாயில்லை என்றே தோன்ற வைத்தது.
சுனைனா சொன்ன வீட்டின் காலிங் பெல்லை அழுத்திய இன்னிலா, பதில் வராமல் போனதில் மீண்டும் அழுத்த, அதில் படக்கென ஒரு பெண் கதவை திறந்தாள்.
அவள் கண்களில் தூக்கம் வழிந்தது. கொட்டாவி விட்டபடி “யாரு?” என அப்பெண் கேட்க,
“ஹாய் நான் இன்னிலா. ஷேரிங் அபார்ட்மெண்ட்க்கு விசாரிக்க வந்தேன். சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றாள் பாவமாக.
அதில் தான் உறக்கம் கலைத்தவள், “நோ இசியூஸ். ஐ ஆம் நிமிஷா. உள்ள வாங்க.” என்றவள்,
“எங்க வேலை பாக்குறீங்க?” எனக் கேட்க, அவள் வேலை பார்க்கும் இடத்தைக் கூறியதும், “ஓஹோ…” என சிந்தித்து விட்டு “சரி அப்போ நீங்க இங்கயே வந்துடுங்க. உங்க ப்ரூப் குடுக்கணும். மன்த்லி சிக்ஸ் தவுசண்ட் ஷேரிங் ஓகே வா.” என்றதும் “சரி” என்றாள்.
“எப்போ இருந்து வரலாம்?” இன்னிலா கேட்டதும், “இப்ப கூட பிஜில போய் உங்க திங்க்ஸ எடுத்துட்டு வரலாம். உங்க ரூம் க்ளீன் பண்ணி தான் இருக்கு.” என்றாள் நிமிஷா.
“தேங்க்ஸ் நிமிஷா. நாளைக்கும் லேட்டா போய் சார்கிட்ட திட்டு வாங்குவேனோன்னு பயந்துட்டே இருந்தேன்” என்றவளின் படபடப்பைக் கண்டு லேசாய் புன்னகைத்த நிமிஷா, வேறெதுவும் பேசவில்லை.
இரவோடு இரவாக பிஜிக்கு சென்று காலி செய்து விட்டு நிமிஷாவின் வீட்டிற்கு வந்து விட்டவள், பத்து மணி அளவில் தான் கட்டிலில் பொத்தென விழுந்தாள். வீட்டிற்கும் அழைத்து விவரம் கூறி விட்டவளுக்கு, மறுநாள் திட்டு வாங்காமல் வேலை செய்ய வேண்டுமே என்ற பயமே அதிகரித்தது.
சீக்கிரமே கிளம்பி அறையை விட்டு வெளியில் வந்தவள், நிமிஷா இன்னும் வெளியில் வராததைக் கண்டு, அவள் அறைக்கதவை தட்டினாள்.
கதவை திறந்த நிமிஷா “என்ன?” எனக் கேட்க,
“இல்ல நான் கிளம்பிட்டேன் அதான் சொல்லிட்டுப் போக கூப்பிட்டேன்” என்று வெகுளியாய் கூற,
“இங்க பாரு இன்னிலா. நீ எங்க வேணாலும் போ, எப்ப வேணாலும் வா. அதை என்கிட்ட சொல்லிட்டு போக நான் என்ன உன் அம்மாவா அப்பாவா? டோன்ட் டிஸ்டர்ப் மீ.” என முகத்தில் அடித்தவாறு கூறி விட, இன்னிலாவின் முகம் சுணங்கிப் போனது.
“சாரி…” என்றவள் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அடுக்களைக்கு செல்ல, அங்கு கனகா தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.
“நீங்க?’ என அவரிடம் விசாரிக்க, “நான் தான் நிம்மிக்கு தினமும் சமைச்சு வைச்சுட்டுப் போவேன் கண்ணு. உனக்கு வேணும்ன்னா சொல்லு. சேர்த்து சமைச்சு வச்சுடுறேன்.” என்றவர் அவளை பற்றி விசாரித்தார்.
எடுத்ததுமே அக்கறையாக பேசியவரை மிகவும் பிடித்துப் போனது இன்னிலாவிற்கு. “சரிம்மா. நாளைல இருந்து செய்ங்க. நான் எவ்ளோ குடுக்கணும்ன்னு சொல்லுங்க குடுத்துடுறேன்.” என்று தலையாட்டியவளிடம்,
“இன்னைக்கே சட்னி நிறைய தான் செஞ்சுருக்கேன். தோசை ஊத்துறேன் சாப்பிடுறியாய்யா” எனக் கேட்டதில் அவளுக்கு தாயின் நினைவு வந்தது.
வெறும் வயிற்றோடு வெளியில் அனுப்பியதே இல்லை அவர். இப்போது கூட ஒண்ணுமில்லை, கூழோ கஞ்சியோ சொந்த ஊரில் தாயின் அண்மையில் குடித்துக் கொள்ளலாம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அதனை அடக்கி வைத்தவள், ஐந்து வருடத்தில் பணம் சேமித்து தங்கைகளின் படிப்பிற்கும் அவர்களின் திருமணத்திற்கும் பணம் சேமிக்க வேண்டும் என்று தன்னை அடக்கிக்கொண்டு, “இல்ல வேணாம்மா. லேட் ஆகிடுச்சு. நான் கேன்டீன்ல சாப்ட்டுக்குறேன்.” என்றவள், எட்டே முக்கால் மணிக்கே அலுவலகத்திற்கு வந்திருந்தாள்.
ஈஷ்யுகனின் டேபிளுக்கு சற்று தள்ளி ஒரே அறையிலேயே அவளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்க, அறைக்குள் நுழைந்ததும், அவனது மேஜையை சரி செய்து ஒழுங்கு படுத்தியவள் தன்னுடைய மேஜையையும் சரி செய்திருக்க, சரியாக அடுத்த பத்து நிமிடத்தில் ஈஷ்யுகன் வந்திருந்தான்.
அவனைக் கண்டதும் எழுந்து “குட் மார்னிங் சார்” என்றவளை விசித்திரமாகப் பார்த்தவன், “ம்ம்... பிஜி மாறியாச்சு போல” எனக் கேட்க, “ஆமா சார். இங்க பக்கத்துலயே வந்துட்டேன்.” என்றதும், “குட்” என்றவன் வேலையில் மூழ்கினான்.
அவன் சொன்ன குட் என்ற வார்த்தையே பெரிய விருதைக் கொடுத்தது போல இருந்தது போலும்.
மகிழ்வுடன் அன்றைய வேலையை ஆரம்பித்தவளுக்கு, வந்து சேர்ந்தது அடுத்தடுத்த திட்டுக்கள்.
க்ளையன்ட்டுடன் 11 மணிக்கு மீட்டிங் ஏற்பாடு செய்தது அவள் தான். மறதியாக, 11.30 என்று விட்டாள்.
அவ்வளவு தான் ஈஷ்யுகனின் கோபத்தீ கொளுந்து விட்டு எரிந்தது.
“நினைப்ப எங்க வச்சுட்டு வேலை செய்ற. ஒரு மீட்டிங்கை சரியா அரேஞ்ச் பண்ண முடியாதா உன்னால. உன்னை எல்லாம் யாரு பெர்சனல் செக்கரட்டரி கோர்ஸ் படிக்க சொன்னது? பல்ல இளிச்சுட்டு எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு போயிருக்க வேண்டியது தான. இங்க வந்து என் உயிரை வாங்கிட்டு இருக்க. இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இன்னொரு தடவை கண்டமேனிக்கு வேலை பார்த்துட்டு இருந்த, நீ வீட்லயே உட்கார வேண்டியது தான்.” என்று சரமாரியாகத் திட்டுத் தீர்த்தான்.
தெரியாமல் செய்த பிழைக்கு இந்த வசவுகள் அதிகமாகத் தெரிந்தாலும், வாடிக்கையாளர்கள் அவன் மீது காட்டிய அதிருப்தியின் எதிரொளிப்பு என்று புரிந்து அமைதியாக நின்றாள்.
கண்ணில் இருந்து போலபோலவெனக் கண்ணீர் வேறு கொட்டியது.
“சாரி சார். இனிமே இப்படி நடக்காது.” என்று அழுகுரலில் கூற, “நடந்தா நீ நடந்தே வீட்டுக்குப் போக வேண்டியது தான்.” என்று சீறி விட்டே நகர்ந்தான்.
அழுது அழுது முகமே வீங்கிப் போய் இருந்தது அவளுக்கு. அதனை ஒரு பொருட்டாகவே எண்ணாதவன், அன்று முழுதும் வேலைகளை அள்ளி வீசி அவளை தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தான்.
கண் சிவந்து முகம் வீங்கி வீட்டிற்கு வந்த பெண்ணவளைக் கண்டு நிமிஷா தான் அதிர்ந்து போனாள். காலையில் அவளிடம் காட்டிய கடுமையே நிமிஷாவை சற்று வருத்தம் கொள்ள வைத்தது. குடும்பத்தைப் பிரிந்து வேலைக்காக வந்திருப்பவளிடம் தான் அத்தனை கடுமையாகப் பேசி இருக்கக்கூடாதோ என்ற குற்ற உணர்வை கனகா பெரியதாக்கி இருந்தார்.
“நல்ல பொண்ணா இருக்காய்யா. நான் கூட நீ தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குன்னு இன்னொரு பொண்ணை வீட்ல தங்க வைக்கப்போறேன்னு சொன்னப்பா, படபடப்பா இருந்துச்சு. இப்ப உனக்கு துணைக்கு அந்தப் பொண்ணு இருக்குறது மனசுக்கு நிம்மதியா இருக்கு.” என்று கூறியதும், அவள் வந்ததும் ஸ்னேகமாகவேனும் சிறு வார்த்தைப் பேசி வைத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து கொண்டவள், இன்னிலா வந்து நின்ற கோலத்தைக் கண்டு பதறினாள்.
“ஹே இன்னிலா என்னாச்சு உனக்கு?” என்றதும் தான் தாமதம், தேம்பி தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.
“என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா? யாரும் வம்பு பண்ணுனாங்களா” என அடுக்கடுக்காய் நிமிஷா கேள்வி கேட்க, “இல்ல... என் சார் திட்டிட்டாரு” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
அதில் என்னவோ அவளுக்கு சிரிப்பே வர, “எதுக்கு திட்டுனாரு உங்க சார் உன்னை?” எனக் கேட்டாள் சுவாரஸ்யமாக.
இன்னிலா நடந்ததைக் கூறியதும், “விடு இன்னிலா. இந்த பாஸுங்களே இப்படி தான். என்னவோ அவங்க பெர்பக்ட்டா இருக்குற மாதிரி தான்” என்று நமுட்டு சிரிப்புடன் கூறிட,
“ஆமா நிமிஷா. அவரு ரொம்ப தான் திட்டுறாரு. இப்ப தான் வேலைக்கு சேர்ந்துருக்கேன். பொறுமையா சொல்லிக்குடுத்தா என்னவாம். எப்பப் பாரு முகத்தை சிடுசிடுன்னே வச்சிருக்காரு. சிடுமூஞ்சி சின்னப்பனா இருப்பாரு போல.” என்று ஈஷ்யுகனை சரமாரியாக வாரிட, நிமிஷா வாய் விட்டே சிரித்து விட்டாள்.
“இதை மட்டும் உன் சிடுமூஞ்சி சின்னப்பன் கேட்டு இருக்கணுமாம்.” என்றதும் பதறி விட்டவள், “அய்யயோ அவ்ளோ தான்…” என் கதை முடிஞ்சுது. என்று வெளிறினாள்.
அவளது முழியில் மேலும் சிரிப்பே வர, “இனிமே வேலைல கவனமா இரு இன்னிலா. திட்டு விழாம இருக்கும்” என்று அக்கறையாக அறிவுரை கூற, “நான் என்ன வேணும்ன்னேவா பண்றேன். அவரைப் பார்த்தாலே ஆட்டோமேடிக்கா கை கால் எல்லாம் நடுங்குது. எல்லாம் மறந்தும் போயிடுது பயத்துல.” என்றாள் பாவமாக.
சிரிப்பை அடக்கிய நிமிஷா, “கால் மீ நிம்மி.” என்றிட, அதில் தோழமையுடன் புன்னகைத்தவள், “என்னையும் இனின்னே கூப்டு நிம்மி.” என்றாள்.
“சரி உன் அழுகாச்சி காவியத்தை மூட்டைக் கட்டி வச்சுட்டு வா சாப்பிடலாம்” என்று அவளை எழுப்ப, இன்னிலாவும் முகம் கழுவ அறைக்குச் சென்றாள்.
நிமிஷா தான் அவள் சென்ற திசையையே வெறித்திருந்தாள். தனிமையையே பல மாதங்களாகப் பழகி இருந்தவளுக்கு இன்னிலாவின் வரவு ஒரு விதத்தில் மனதை அமைதிபடுத்தியது. அவளது அப்பாவி தோற்றமும் பேச்சில் தெளிக்கும் வெகுளித்தனமும் அல்டரா மாடர்ன் சுற்றுச்சூழலில் வளர்ந்த நிமிஷாவிற்கு புதுமையாக இருந்தது.
தினமும் வீட்டினருக்கு பேசி விட்டே படுக்க செல்லும் அவளது பழக்கமும் நிமிஷாவை சற்று ஏங்கவும் வைத்தது. அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் தோழிகளாகவே மாறி விட்டனர்.
நிமிஷாவும் வீட்டைப் பிரிந்தே பல மாதங்கள் வாழ்ந்திருப்பதால், அவளது வலி புரிந்தது. ஆனால், அவளை போல அன்பான பெற்றோர்கள் தான் தனக்கு அமையவில்லையே என்ற வேதனையும் உடன் எழுந்தது.
ஆனால், தமையன் அப்படி இல்லையே. மிகவும் அன்பானவன். விதியின் சதியோ என்னவோ அவனும் தன்னுடன் இருக்கவில்லை. தன் மீது உயிரையே வைத்திருக்கும் தமையன் மீண்டும் அவளிடம் வருவதற்காகவே நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள் நிமிஷா.
நாட்கள் நகர்ந்தாலும், ஈஷ்யுகனிடம் இன்னிலா வாங்கும் வசவுகள் மட்டும் நிற்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் எழும் போது இன்னைக்கு சார்கிட்ட திட்டு வாங்கவே கூடாது என்று வைராக்கியத்தோடு தான் எழுவாள்.
ஆனா அது அவனைப் பார்த்ததும் பயத்தில் மறந்தே விடும். அன்றும் அதே போல, வைராக்கியத்தோடு அலுவலகத்திற்கு கிளம்பியவளுக்கு சத்திய சோதனையாக அமைந்து விட்டது பாவம்.
காற்று வீசும்