ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
காதல் வானிலே

அத்தியாயம் 1

பறப்பது போன்ற வேகத்தில் ‘கருப்பு குதிரை’ என அவனால் அழைக்கப்படும் ‘ஜீப்’ வாகனத்தில் நெடுஞ்சாலையில வந்துக் கொண்டிருந்தான்.

வெளியில் வெயில் மாலையானாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நெடுஞ்சாலை கானல் நீரில் கண்ணாடி சாலையை போல் தெரிந்தது.

மருந்துக்கு கூட ஒரு மரமும் இல்லை. வண்டியின் முன் கண்ணாடியில் அறைந்த வெயில் அவனது உடலை சுட்டது.

தொடர்ந்த வேலை அலைச்சலில் இந்த வெயில் வேறு அவனது கடுப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரே மூச்சில் கோயம்புத்தூரை சென்று அடைந்து விடலாம் போல அவனுக்கு தோன்ற,

வண்டியில் இருந்த குளிர்சாதன வசதியையும், வண்டியின் வேகத்தையும் சற்று அதிகப்படுத்தினான்.

அவனின் இரு கன்னங்களும் சில்லென்று ஆகியதும் தான் அவனது பரபரப்பு சற்றுக் குறைந்தது.

யோசனை முழுதும் அன்றைய நாளின் மதுமிதாவின் செயலிலேயே நின்றது.

“இரிட்டேடிங் டெவில்” அவளை திட்டிக் கொண்டே
ஸ்டியரிங்கை ஒரு கையால் அழுத்தி குத்தினான். ஒரு நொடி யோசனைக்கு பிறகு, ஸ்டியரிங்கை தடவி மானசீகமாக அவனது கறுப்பு குதிரையிடம் மன்னிப்புக் கேட்டான்.

அதுவும் அவனை சுமந்து செல்லும் பெருமையில், சாலையில் வழுக்கிக் கொண்டு பறந்தது.

தன்னந்தனியாக, வெறும் யோசனைகளின் துணையோடு அவன் பயணம் அமைந்தது.

இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஆகும் என்று சலித்துக் கொண்டே கூகுள் மேப்பை பார்க்க, வலது புறம் திரும்பியும், நேராக செல்வதுமாய் இரண்டு புறங்களிலும் கோயம்புத்தூரை காட்டியதில் அவனுக்கு எரிச்சல் வந்தது. வாயில் வந்த அத்தனை ஆங்கில ‘நல்ல’ வார்த்தைகளால் கூகுளை அர்ச்சித்தான்.

அம்மாவின் ஞாபகம் சட்டென்று வந்தது.

“பொறுமையா ஒரு விஷயத்தையும் யோசிக்க மாட்டியா. எல்லாத்திலேயும் ஈஸி கோயிங். உனக்கு கண் முன்னாடி எல்லாமே க்ளியரா தெரியனும். கடிவாளம் போட்ட குதிரை மாதிரி அதில் போனும். இல்ல”

“மா. தேவையில்லாம நம்ம நேரத்தை வீணாக்க கூடாது. இதான் வழின்னு முன்னாடியே தீர்மானிச்சிட்டா எந்த பிரச்சினையும் இல்ல. ஆல்டர்னேட்டிவ்ஸ் எல்லாத்திலேயும் இருந்தா
அது வெரி போர் மா. குழம்பி குழம்பி டைம் தான் வேஸ்ட் ஆகும்.”

“ ஆப்ஷன் இருந்தா தான்டா எல்லாத்திலேயும் நல்லதை தேர்ந்தெடுக்க முடியும்”

“மா போதும். அடுத்து நீங்க எங்க வந்து நிப்பீங்கன்னு தெரியும்.”

காலையில் அம்மாவுக்கும், மகனுக்கும் நடந்த உரையாடல் கண்முன் வந்தது.

ஒரு வேளை ஆப்ஷன் இருந்திருந்தால், அம்மாவின் வாழ்க்கை இப்போது ஒரு ராஜ வாழ்க்கையாக இருந்திருக்குமோ?. நினைக்கும் போதே பற்றிக் கொண்டு வந்தது. அவனது தகப்பன் மட்டும் இந்நேரம் எதிரில் இருந்தால் அவனது வண்டியில் ஏற்றி கொன்று விட்டு கடந்திருப்பா‌ன்‌.

ஏதேதோ யோசனையில் வலது புறம் வண்டியை திருப்பியிருந்தான்.

ஐந்து நிமிடம் கடந்த பினபு தான் அவன் வேறு பாதையில் சென்றதே புரிந்தது.

சட்டென்று மாறத் தொடங்கியிருந்தது சூழல்.

கடுமையான வெயிலின் தாக்கம் இப்போது குறைந்திருந்தது.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுகள் அங்கங்கு இருந்தன. சிறிய கிராமங்களை கடந்து சென்றது அவனது குதிரை.

கிராம வழிகள் என்றால் குண்டும் குழியுமாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு ஆச்சர்யம் தான்.

வழி ஓரளவு நன்றாகவே இருந்தது.

அரசுப்பேருந்துகள் அவ்வப்போது அவனை முந்தின.

இரண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து இருந்ததால் மாலை மங்கியது போல் இருந்தது.

கண்ணாடியை சிறிது இறக்கியதும்,
சில்லென்ற காற்று அவனது முகத்தில் மோதியது. குளிர்சாதன வசதியை நிறுத்தினான். ஏ ஆர் ரகுமானையும், ஹாரிஸையும் மாற்றி மாற்றி, ஸ்டீரியோவில் ஒலிக்க விட்டு, இசைக்கு தகுந்த மாதிரி தலையை அசைத்துக் கொண்டு லேசாக விசிலில் பாட ஆரம்பித்தான்.

30 கி.மீ தூரத்தில் அனைத்துமே மாறி, அவனின் மனநிலையும் அமைதியாகியது.

வாழ்க்கை எப்போதும் இப்படிதான், எந்த நொடியில் எது எப்படி மாறும் என்று தெரியாது.

கிராம வழி என்பதால் வேகத்தை குறைத்திருந்தான்‌.

அவசரமில்லாமல் சென்றாலும் மாலைக்குள் கோயம்புத்தூரை அடைந்து விடலாம் என்று இப்போது தோன்ற ஆரம்பித்தது.

சூழல் தான் எதையும் தீர்மானிக்கிறது. சற்று முன்பு பறக்கும் வேகத்தில் தான், அங்கு சென்று அடைய முடியும் என்று தோன்றியது, இப்போது அப்படியே அது தலைகீழாக மாறியிருந்தது.

இன்றைய பிஸினஸ் மீட்டில் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு முடிக்க வேண்டும். அதன் பின் நண்பன் தரும் இரவு விருந்தில் கலந்துக் கொள்ள வேண்டும். அவனின் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் பார்ட்டி அது.

மனம் வரப்போகும் இரவை நினைத்து சற்று குதூகலம் அடைந்தது. ‘அட, இத்தனை நேரம் ஏன் இந்த மகிழ்ச்சி வரவில்லை’- யோசித்தான்.

மூளை முழுதும் ஏதாவது ஆக்கிரமித்திருந்தால் மகிழ்ச்சி என்ற ஹார்மோன் எட்டிக் கூட பார்க்காது. ஆனால் அவன் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி சுரப்பி சுரந்ததே இல்லை.


காடுகளை போல் அடர்ந்த மரங்களும், விவசாய நிலங்களும் மாறி மாறி வந்துக் கொண்டிருக்க, மாலை நேரம் என்பதால் பறவைகளின் ஒலி அவனின் ஸ்டீரியோவை மீறி கேட்டது.

சட்டென்று பாடலை நிறுத்தி விட்டு இயற்கையான பறவைகளின் ஒலியை ரசிக்க ஆரம்பித்தான்.

ஏனோ நினைவுகள் பின்னோக்கி சென்றன.

கல்லூரி முடித்ததும், தாத்தா வலுக்கட்டாயமாக அவரது நிறுவன பொறுப்பை அவனிடமும், அவனது மாமாவின் மகளான மதுமிதாவிடமும் ஒப்படைத்திருந்தார்.

ஐந்து வருடங்கள் முடிந்த பின், இருவரின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் இரு பங்காக பிரிக்கப்படும். அதுவரை தாத்தாவின் மேற்பார்வையில் இருவரும் நிறுவனங்களை நடத்த வேண்டும் என்பது அவரின் அன்புக் கட்டளை.

நினைவுத் தெரிந்தது முதல் தாத்தாவின் கரம் தான் அவனை தாங்கிப் பிடித்தது‌. அவன் அம்மாவையும் தான்.

தகப்பனின் ஸ்தானத்தில் தாத்தாவும், மாமாவும் அவனருகே இரு தூண்களாய் நின்றனர்.

அம்மாவை ஒரு இளவரசியைப் போல பார்த்துக் கொண்டார்கள் என்றாலும், இள வயதில் தன்னைப் பெற்றுக் கொண்டு தனி மரமாய் நினறவருக்கு இன்னொரு வாழ்க்கையை தரவேண்டும் என்று யாருமே யோசிக்கவில்லை.

அவரது வாழ்க்கை சபிக்கப்பட்ட வரம்….

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத சூழ்நிலை. அப்பா வீட்டில் வந்து தங்கியதால், எந்த உரிமையையும் உண்மையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே பட்டும் படாமல் அவனும் அந்த வீட்டில் வளர்ந்தான்‌.

அவனது உலகம் அம்மாவும், தாத்தாவும் தான். அம்மாவுக்காய் எதுவும் செய்யக் கூடியவன்.

நிறுவனம் பிரிக்கப்பட்ட உடன் தாத்தாவையும், அம்மாவையும் தனியே அழைத்துச் சென்று விடவேண்டும் என்பது தான் அவனின் ஆசை.

சொல்லப்போனால், ஒருவேளை அவரின் நிறுவன பொறுப்பை ஏற்காவிடில் இந்நேரம் ஏதாவது ஒரு வேலையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அவர்களை தனியே அழைத்துச் சென்றிருப்பான்.

அம்மா சொல்வது போல் கடிவாளமிடப்பட்ட குதிரையை போல் தான் அவன் வாழ்க்கை.

பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.

அதே நேரம் கோயம்புத்தூரை அடைந்திருந்தான்.

விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் “கிராண்ட் ஸ்டே” பலகை அவனை வரவேற்றது.

மதுமிதா மட்டும் சொதப்பாமல் இருந்திருந்தால் விமானத்தில் நேற்றே சுலபமாக வந்திருக்கலாம். மீண்டும் அவளை நினைத்தால் அவனது உடலும், மனமும் எரிய ஆரம்பிக்கும். இந்நேரத்தில் அது தேவையில்லை என்று தனது அறைக்கு வந்திருந்தான்.

அவசரமாக தன்‌ உடையை மாற்றி, ஃபார்மல் உடையணிந்து அதே வளாகத்தில் உள்ள மீட்டிங் அறையை நோக்கி சென்றான்.

ஏற்கனவே தயாரித்திருந்த அவனது நிறுவன தயாரிப்புகள் பற்றிய ‘பிரசண்டேஷன் வீடியோ’ அங்கிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.

ஃப்யூஷன் உடைகள், பாரம்பரிய துணி வகைகளில் தயாரிக்கப்பட்டதே அவனது ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு காரணம். அம்மாவின் கைவண்ணத்தில் உருவான புதிய வடிவமைப்புகள், கண்களை உறுத்தாத வண்ணத்தில் இருந்ததால் அந்த வெளிநாட்டு நிறுவனம் உடனடியாக அவனை பாராட்டி ஒப்பந்தத்திற்கு தலையாட்டினார்கள்.

வந்த வேலை முடிந்ததும் தான் அவனது முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்றியது. மணியை பார்த்ததும் மீண்டும் பரபரப்பு அவனை சூழ, அறைக்கு சென்று தளர்த்திய ‘டையை’ கழட்டி வார்ட்ரோப் ஹேங்கரில் மாட்டி, ஒரு டிசைனர் சட்டையையும், அதற்கு ஏற்றார் போல் ஒரு ஃபேன்டையும் அணிந்து, ஷேட் கிளாஸையும் கண்களுக்குஅணிந்து கிளம்பினான்.

சிறிது நேர பயணத்தில் அவனது நண்பனின் பார்ட்டி நடக்கும் அறையை அடைந்தான். நட்சத்திர விடுதியின் மேல் மாடியில் நடந்த பார்ட்டி அது.

அனைவரிடமும் ஒரு அரை இஞ்ச் அளவு புன்னகையுடன் கைகுலுக்கினான்‌. பரஸ்பர அறிமுகங்களில் அனைவரும் ஓரளவு செட்டில் ஆகியிருந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. பெண்களில் சிலர் திருமணமானதில் அதிக ஜொலிப்பாக இருந்தார்கள். திருமணம் ஆகாதவர்களின் ஒட்டுமொத்த பார்வையும் அவனின் மேல் அடிக்கடி படிந்து விலகியது.

இரவு விருந்து களைகட்ட ஆரம்பிக்க, அவனது நண்பர்களின் குழாம் அவனை சுற்றிலும் அமர்ந்திருந்த நேரத்தில் அலைபேசி ஒலித்தது.

“க்ராண்ட் பா” என ஒளிர்ந்த திரையை பார்த்ததும், அவசரமாக வெளியில் வந்தான். வராந்தாவை ஒட்டி ரூஃப் டாப்பின் இன்னொரு பகுதி வந்தது. சிறிய மேஜைகளை சுற்றி உணவு உண்பவர்கள் அமர்ந்திருந்தார்கள்‌.

“தாத்தா, கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணேன், நீங்களும் அம்மாவும் எடுக்கவே இல்லை. எல்லாம் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சது தாத்தா”

“ஆமாப்பா. ஒரு வேலையா அம்மா வெளியே போயிருந்தாங்க.. நானும் உன் கால் வந்ததை அட்டெண்ட் பண்ண முடியல. அம்மா உன் வாய்ஸ் நோட் கேட்டுட்டு விஷயத்தை வந்ததும் சொன்னாங்க.. சந்தோஷம் பா. எப்ப திரும்ப வர்ற நீ”

பேச வேண்டியதை சுருக்கமாக பேசும் கலை அவரிடம் இருந்து தான், தனக்கு வந்ததை தாத்தா மீண்டும் நிரூபித்ததை நினைத்து ஒரு குறுஞ்சிரிப்பு வந்தது.

கூடவே அங்கு கலகலவென சத்தமாக பெண்கள் சிரிக்கும் சத்தம் அவனை பேச விடாமல் செய்தது.

மீண்டும் “தாத்தா” என்று அழைக்கும் போதே ஒரு வெடிச் சிரிப்பு சத்தம். அவனால் பேசமுடியவில்லை.

நகரலாம் என்று பின்பக்கம் திரும்பினால் அங்கு ஏதோ ஒரு சிறிய விருந்துக்காக ஒரு கூட்டம் அந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

“ தாத்தா, கொஞ்ச நேரத்தில் பேசறேன் “ என்று சொல்லிக் கொண்டு அவர்களுக்கு வழிவிட்டு உள் அறைக்கு நகர்ந்தான்.

அங்கு போடப்பட்டிருந்த ஒரு மேஜையை சுற்றி ஆறு இளம்பெண்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்த காட்சி தான் அவனுக்கு தெரிந்தது.

அப்போது தான் கல்லூரி முடித்த பெண்கள் என்று பார்த்ததும் தெரிந்தது.

அவன் அவர்களையே பார்ப்பதை அந்த குழுவில் இருந்த ஒருத்தி பார்த்து அனைவரிடமும் கிசுகிசுத்தாள். அவர்களை கடுப்புடன் பார்த்திருந்த அவனுக்கு, அவர்களின் கிசுகிசுப்பு இன்னும் எரிச்சலை உண்டாக்கியது.

“ஏய் அங்க பாருங்கடி. செம ஹேண்ட்ஸம்” என ஒருத்தி சொல்ல, மற்றவர்களும் ‘வாவ்’ என்று சொல்ல, அங்கு சலசலப்பு எழுந்தது.

“ச்ச மேனர்ஸ்னா என்னன்னே தெரியாத கும்பல். இதுங்களுக்கு வேற இடமே கிடைக்கல போல” என்று தனக்குள் முனங்கி விட்டு வாசல் வழியை பார்த்தான். இன்னும் அவர்கள் வரிசையாக வந்துக் கொண்டிருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் அங்கேயே நிற்க வேண்டியதாயிற்று.

ஒவ்வொரு பெண்ணும் அவனின் உயரம், நிறம், அவனது வேலை என்னவாயிருக்கும், அங்கு இருக்கும் பெண்களில் யாருக்கு அவன் சரியாக இருப்பான் என்று ஒரு அலசலை செய்ய, அவனுக்கு நேரே போய் அவர்களை திட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவனுக்கு ஏற்கனவே பெண்கள் மேல் இருக்கும் வெறுப்பில் இந்த இளம்பெண்கள் பக்கம் பார்க்கக் கூட வேண்டாம் என்பது போல் தோன்றியது. . வேறு பக்கம் தலையை திருப்பினான். இருந்தும் அந்த அரட்டையும் சத்தமும் அவர்களின் பக்கம் நோட்டமிட வைத்தது.

அவனது பெயரை ஒவ்வொருவரும் இதுவாக இருக்கும் என்று கற்பனையை சொல்ல, அவனுக்கு நேர் எதிரில் இருந்த பெண், “முசுடு” என்று முணுமுணுத்தாள். அதே நேரத்தில் அவன் அந்த பக்கம் திரும்ப, அவனுக்கு அது நன்றாகவே புரிந்தது.

சட்டென தலைக்கு கோபம் ஏறியது.

“பெரிய ஆணழகன்னு நினைப்பு, கொஞ்சமாச்சும் நகராறாரானு பாரு. இங்க வந்து சீன் போட்டுட்டு” என்று பக்கத்தில் இருந்த பெண்ணிடம் அவள் மீண்டும் முணுமுணுத்து சிரித்தது அவள் வாயசைவில் நன்றாக அவனுக்கு புரிந்தது.

ஓங்கி ஒரு குட்டு அவளின் தலையில் வைப்போமா என்று பரபரத்தது கை. ‘என்னைப் பற்றி தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேசுவாளா’ என்று உள்ளுக்குள் ஓடியது.

அதற்குள் கூட்டம் கிடைத்த இடங்களை ஆக்கிரமித்திருக்க, இவர்களை புறந்தள்ளி விட்டு அவன் நண்பர்கள் இருக்கும் அறையை நோக்கிச் சென்றான்.

மீண்டும் அவர்களிடம் ஐக்கியமாகி, இரவு உணவை முடித்து தன் இருப்பிடத்திற்கு திரும்ப பார்க்கிங் நோக்கி நடந்தான்.

அப்போது, “வந்துட்டேன் கா, எந்த ஹாஸ்பிட்டல், இப்ப எப்படி இருக்கு” என்றுக் கேட்டுக் கொண்டே அவன் மேல் வேகமாக வந்து மோதினாள்‌ தாரிணி.

கோபத்தின் உச்சத்திற்கு சென்றவன், “அறிவில்ல உனக்கு, எருமை மாதிரி வந்து மோதற, ஒரு ஆம்பள கிடைச்சிறக் கூடாதே உங்களுக்கெல்லாம்” என்று அவளிடம் எகிற, அவளின் கண்கள் இன்னும் பயத்தில் விரிந்தது.

“சாரிங்க” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் அவளின் அழகான வண்ண நிறத்திலான தோளில் மாட்டியிருந்த பையைத் துழாவினாள்.

அவனுக்கு எரிச்சலில் முகம் சிவந்தது.

தாரிணி சாவி கிடைத்ததில், கிட்டத்தட்ட ஓடிச் சென்று பார்க்கிங் ஓரத்தில் நிறுத்தியிருந்த வண்டியை எடுக்கச் சென்றாள்.

பின்னாலேயே “இவளை” என்று அழுத்தி உதட்டை கடித்துக் கொண்டு சென்றவனை, தோளில் தட்டி திருப்பினான் வைபவ்.

“அவசரமா கிளம்பின, இங்க என்னடா பண்ற” அவன் கேட்டதும்,

“வண்டியை எடுக்கத்தான்டா வந்தேன், அதுக்குள்ள ஒரு இடியட் என்னை இடிச்சிட்டு ஓடுது” என்று சலித்துக் கொண்டான்.

வைபவ் அவனை சமாதானப்படுத்தி பேசிக் கொண்டே அவன் கார் நின்றுக் கொண்டிருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தான்.

அதற்குள் அந்த பெண்களின் பேச்சுக்களை நண்பனிடம் சொல்லி திட்டிக் கொண்டே வந்தவன், “இதுங்களை சொல்லி பிரயோஜனமில்லை. இவளுங்க அப்பா, அண்ணன், மாமான்னு எவனாச்சும் ஓடாத் தேஞ்சு சம்பாதிச்சு கொடுப்பாங்க. அந்த காசை வெட்கமே இல்லாம கொண்டு வந்து ஓசியில் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு, கொழுப்பெடுத்து திரியுதுங்க” என்று அவன் சொன்ன வார்த்தைகள் தாரிணியின் காதில் விழுந்தது.

அவளுக்கு வியர்த்துக் கொட்டி படபடப்பாக்கியது. ஏற்கனவே வந்த தகவல் அவளை அதிர்ச்சியாக்கியதில் இவனின் பேச்சும் இன்னும் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அவசரத்தில் அவளின் வண்டியை எடுத்தவளுக்கு அங்கு இருந்த காரின் மீது உரசியது தெரியவில்லை.

ஆனால் அவனுக்கு அந்த சத்தம் தெளிவாகவே கேட்டது. சட்டென திரும்பி அவனின் காரையும் அதில் உரசிவிட்டு வண்டியை எடுத்தவளையும் பார்த்தவனுக்கு ரத்த அழுத்தம் நாளங்களை புடைக்கும் அளவுக்கு அதிகமாகியது‌.

“ஏய் ஏய் அறிவில்ல. இது என்ன டூ வீலர் பார்க்கிங் கா, இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க. படிச்சவ தானே. சுத்தமா மண்டையில் எதுவுமில்லையா? உன்னை….” என்று கண்ணை விரித்து, நாக்கைத் துருத்திக் கொண்டு வந்தவனை பார்த்து பயந்து கண்ணை இறுக்கி மூடினாள்.

ஆனால் மருத்துவமனை செல்லும் அவசரத்தில் கண்களை திறந்து மீண்டும் “சாரிங்க” என சொல்லி விட்டு வண்டியை நகர்த்தினாள்.

“இவ என்னடா லூசா. நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் . சாரி சொல்லிட்டு போறா” என மீண்டும் குரலுயர்த்தியவனை ஒரு நொடி ஆழமாக பார்த்து பெருமூச்சு விட்டு வாயை மெதுவாக அசைத்து ‘போய்யா’ என்று சொல்லிவிட்டு சென்றவளை அதிர்ச்சியுடன் அடக்கமுடியாத கோபத்துடன் பார்த்தான்.

பின்பு வேகமாக அவளின் பின் செல்ல முயன்றவனை, “டேய் அகரா” என்று அழைத்து இழுத்துப் பிடித்தான்‌ வைபவ்.

அந்த அவசரத்திலும் அவளுக்கு அது நன்றாக காதில் விழ, ‘அகரா வா. ஒருவேளை அகராதின்னு பேர் வச்சிருப்பாங்களோ, இருக்கும் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள். .
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2


சென்னைக்கு வந்து அம்மா தெய்வநாயகியைப் பார்த்ததும் தான், அகரனுக்கு நிம்மதியாக இருந்தது.

தாத்தாவும் அவனை வரவேற்று, கட்டித் தழுவினார்.

“என்ன முறிச்சிட்டார்னு இப்ப இந்த வரவேற்பு” மதுமிதாவின் அலட்சிய வார்த்தைகள் அவனுக்கு மூக்கு நுனியை சிவக்க வைத்தது‌.

“அது ஒன்னுமில்ல மது. உங்க தாத்தாவுக்கு அவன் ஒரு துரும்பை அசைச்சாலும், மலையை அசைச்ச மாதிரி தான் இருக்கும்” - ஆண்டாள், மதுவின் அம்மா வெடுக்கென பேசியதும்,

“அடங்கவே மாட்டீங்களா இரண்டு பேரும்.. மருமகனே.. வாழ்த்துகள்.. கைகொடு..” என அவனின் கைகளைப் பற்றி குலுக்கி விட்டு, முதுகில் தட்டிக் கொடுத்தார் அவனின் மாமா பாண்டியன்.

மதுமிதாவின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை செலுத்தி விட்டு, “ நீங்க எல்லாரும் அம்மாவை தான் பாராட்டனும். அவங்க ச்சூஸ் பண்ண கலர்ஸூம், டிசைனும் தான் அந்த க்ளையண்ட சைன் பண்ண வச்சது” என அகரன் சொல்ல,

“தாத்தா.‌ நான் ச்சூஸ் பண்ண ப்ரைட் கலர்ஸ் டிசைன்ஸ் கொண்டு போயிருந்தா லைஃப் டைம்க்கு நமக்கு அவங்க அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருப்பாங்க. இந்த முறையும் அகரன் தோத்துட்டான்.” என மது வெறுப்பை உமிழ்ந்தாள்.

தாத்தா மருதனின் கண் பார்வையில் அனைவரும் அமைதியாகினர். அவர் கண்ணசைவில் அகரனை உள் அறைக்கு அழைத்தார்.

அவருக்கு பின்னே, பாண்டியன், தெய்வ நாயகி, அகரன் மூவரும் சென்றனர்.

“பலியாடுக பின்னாடியே போகுதுங்க. நம்ம முன்னாடி பேசிட்டா அப்படியே தேவ ரகசியம் நமக்கும் தெரிஞ்சுரும் பாரு” - ஆண்டாள், மதுமிதாவின் காதில் கூறினாள்.

“போய் ஒழியட்டும் மா. இந்த வருஷத்தோட அஞ்சு வருஷம் முடியப் போகுது. அதுக்குள்ள இந்த அகரன் எதுக்கும் தகுதியில்லன்னு நிரூபிச்சிட்டு, இதுங்களை வீட்டை விட்டு துரத்தறேன் பாரும்மா” .

“அப்படி மட்டும் பண்ணிட்டன்னா, இந்த ஒண்ட வந்த பிடாரிங்களை மொத்தமா ஒழிச்சிடலாம்”

இருவரின் கண்களிலும் பொறாமையும், வெறுப்பும் மாறி மாறி ஒளிர்ந்தது.

தாத்தாவின் அறையில் இருந்த மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அகரா, இந்த வருஷம் அஞ்சாவது வருஷம். உங்களுக்கு இந்த சொத்துக்களை பிரிச்சுக் கொடுக்க நான் சொன்ன கெடு முடியுது, ஆனா அதுக்கு முன்ன உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்” என்று தாத்தா கூறியதும், அதை ஆமோதித்து தெய்வநாயகியும், பாண்டியனும் தலையாட்டினார்கள்.

“தாத்தா, மன்னிச்சுக்கோங்க. நான் பலமுறை சொன்னது தான். மதுவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” மெதுவாக, அதே சமயம் அழுத்தமாக சொன்னான்.

“மருமகனே. மது கொஞ்சம் துடுக்குதான். ஆனா கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும். அதுவுமில்லாம சொத்து வெளிய ஏன் போகனும். உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டு பிரிச்சிட்டா கூட, நமக்குள்ள தான் இருக்கும். தாத்தா கொஞ்சம் கொஞ்சமா கட்டின சாம்ராஜ்ஜியம் இது. அனாவசியமா எவனோ ஒருத்தன் வந்து அனுபவிக்கனுமா? யோசிச்சு பாரு”

“மாமா, நீங்க ரெண்டு பேரும் இதே வார்த்தையை தானே இருபத்தேழு வருஷங்களுக்கு முன்ன எங்க அம்மாக்கு சொல்லி அந்தாளை கல்யாணம் பண்ணி வச்சீங்க. அப்ப இருந்த பணத்தையெல்லாம் தூக்கிட்டு ஓடினவரால தானே நானும், அம்மாவும் இவ்ளோ பேச்சு வாங்க வேண்டியிருக்கு”

“மருமகனே, ஒரு தடவை தப்பு பண்ணா அதே தப்பு தான் திரும்பவும் நடக்கும்னு சொல்ல முடியுமா? அதுவுமில்லாம மது என் பொண்ணு. என் பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டா.”

“மாமா. அவளுக்கு என் பெயரை எங்கயாச்சும் பார்த்தாக் கூட குமட்டிட்டு வரும். அவளுக்கும், எனக்கும் எப்படி சரியா வரும். அதுவுமில்லாம அத்தைக்கு என்னையும், அம்மாவையும் பிடிக்காது. இது தேவையில்லாம காலத்துக்கும் எங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம்”

“அதெல்லாம் கல்யாணம் ஆகி உங்களுக்குன்னு குழந்தை பொறந்துட்டா எல்லாம் சரியாகிடும்.”

“இதே தான் மாமா, நான் பொறந்ததும் எல்லாம் சரியாகிரும்னு அம்மாக்கு சொல்லியிருப்பீங்க. ஆனா, நான் பொறந்து இதோ இவ்ளோ பெரியவனாகியும் எதுவும் சரியாகல. “

“மருமகனே..”

“விடு பாண்டியா. இதுக்கு மேல இதை பத்தி பேசி ஆகப் போறதில்ல. அகரா, உனக்கும் மதுவுக்கும் கல்யாணம் நடந்தே ஆகனும்” மருதன் சொல்லி முடிக்கும் முன் அகரன்,

“தாத்தா” என்று அலறினான்.

“பயப்படாத அகரா. உன் விருப்பத்தை நான் எப்பவும் மதிப்பேன். உனக்கு பிடிச்ச மாதிரி வேற ஒரு பொண்ணு பாத்து, மதுக்கு தகுதியான ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்றது உறுதி. “

பாண்டியன் ஏமாற்றத்துடன் தந்தையை பார்த்தார்.

தெய்வ நாயகியும் அண்ணனையும், தந்தையையும் தவிப்புடன் பார்த்தார்.

“தாத்தா, என்‌ மனசில் இருக்கிறதை சொல்லிடறேன். நான் கல்யாணம் பண்றது பெருசில்ல. ஆனா, இந்த சின்ன வயசா, கல்யாணம் ஆகாத பெண்ணா கல்யாணம் பண்றதில எனக்கு விருப்பமில்லை. ஒரு விடோ இல்ல டைவர்ஸியா, குழந்தையோட இருக்க பொண்ணா கூட பாருங்க நான் கட்டிக்கறேன். மன்னிச்சிருங்க.”

அத்தனை பேரும் அதிர்ந்து போய்‌ அகரனைப் பார்த்தனர்.

தாத்தாவைப் போல் பேரனும் பிடிவாதக்காரன் என்பதால் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை.

“மருமகனே, ஏற்கனவே எதாவது அந்த மாதிரி பொண்ணு பாத்து லவ் கிவ் னு இருக்கா?”

“மாமா. என்னைப் போய் இப்படி கேட்கறீங்க. பொண்ணுங்கனாவே எனக்குப் பிடிக்காது. “

“அதானே மருமகனே எனக்கு சந்தேகம். ஒன்னு நீ லவ் னு இப்படி எதாவது பொண்ண பாத்திருக்கனும். இல்ல, இப்படி சொன்னா நாங்க கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்னு சொல்றியா? “

“மாமா. நிச்சயமா இல்ல. தாத்தா உறுதியா கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னதால இந்த நிமிஷம் நான் எடுத்த முடிவு. அம்மாவை இத்தனை வருஷமா இப்படி பாக்கறேன் இல்ல, அதான் அவங்க மாதிரி அவங்க நிலைமைல இருக்கற ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணிச்சு”

“தம்பி, இது என்ன பைத்தியக்காரத்தனம். என் நிலைமை வேற, அதுக்காக நீ அப்படி ஒரு‌ பொண்ண பாத்து தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்ன இருக்கு? அதுவும் அந்த மாதிரி இருக்க பொண்ணுங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா? நமக்குத் தெரியாது. என்னப்பா இது?” - தெய்வா கேட்டதும், தாத்தா அகரனையே பார்த்தார்.

“அம்மா. நான் சும்மா சொல்லல. அப்படி ஒரு பொண்ணை பார்த்தா, நிச்சயம் நான் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணுவேன். அவளுக்கு நிச்சயம் ஒரு நல்ல வாழ்க்கையை என்னால் தர முடியும்”

அனைவரும் அமைதியாக இருந்ததை பார்த்து விட்டு, வெளியில் வந்தான் அகரன். வாசலில் நின்றிருந்த ஆண்டாளும், மதுவும் அதிர்ந்து பின்வாங்கினார்கள்.

“ மது, பிள்ளையார் கதை தெரியுமா? அம்மா போலவே பொண்ணு வேணும்னு முச்சந்திக்கு முச்சந்தி உட்காந்து பாத்துட்டு இருக்காராமா! இன்னும் கல்யாணமே ஆகாம? “ ஆண்டாள் பரிகாச புன்னகையுடன் கூறினாள்.

“அப்படியில்லமா? ஒரு வேளை சாரால குழந்தையை பெத்துக்க முடியாதோ என்னமோ! அதான் ஏற்கனவே குழந்தை இருக்க பொண்ணா பார்த்து ஊருக்கு தியாகியா காமிச்சுக்கலாம்னு நினைக்கிறார் போல! “

இருவரும் சத்தமாக சிரிக்க, தாத்தா அங்கு வந்தார்.

இருவரும் மெதுவாக நழுவினர். அகரன் அவர்களை சுட்டெரித்து விடுவது போல் பார்த்து விட்டு அங்கு இருந்து நகர்ந்தான்.

“தெய்வா, என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. என் பேரனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணனும். அது அவன் கேட்ட‌ மாதிரி பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை.” சொல்லிவிட்டு ஊன்று கோலை ஊன்றி தன் அறைக்கு நகர்ந்தார்.

“அண்ணே, எனக்கு ஒன்னும் பிடிபடலை. எப்படி அவன் கேட்ட மாதிரி பொண்ணா போய்‌ பார்க்கறது. மேட்ரி‌மோனில போட்டாக்கூட வர்றவங்க அவனோட நல்ல மனசை புரிஞ்சுக்காம, அண்ணி, மது மாதிரி பேசிட்டா என்னால தாங்க முடியாதுண்ணே”

“அந்த ரெண்டு பிசாசுங்களையும் ஒழிச்சுக் கட்டனும் மா. நீ விடு. நா பார்த்துக்கறேன். மருமகன் பிடிவாதம் தான் நமக்குத் தெரிஞ்சது ஆச்சே. அவனுக்காக ஒரு பொண்ணு பொறக்காமயா இருப்பா”

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சா நல்லது தாண்ணே” தெய்வ நாயகி தன் அம்மாவின் படத்தை பார்த்து வணங்கி விட்டு அகன்றார்.

*****
‘மருதன் டெக்ஸ்’ பெயர் பலகையைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன், அங்கிருக்கும் வரவேற்பறையில் ஒரு இளம்பெண் அமர்ந்திருப்பதை பார்த்தான்.

அவள் பக்கம் திரும்பக்கூட செய்யாமல், கடந்து உள்ளே நுழைந்தவன் ரிசப்ஷனிஸ்ட்டை அலைபேசியில் அழைத்தான்.

“ யார் அது, அங்க உட்காந்திருக்கறது.”

“சார், அது வந்து.. ஒரு பொண்ணு வேலைக் கேட்டு வந்திருக்கு. மது மேம் வெயிட் பண்ண சொன்னாங்க” அவள் முடிக்கும் முன்,

“வாட் நான்செனஸ். இங்க என்ன ரூல்ஸ்ன்னு அவ மறந்தாலும் நீங்க மறக்கக் கூடாது இல்ல. இங்க நாப்பது வயசு குறைவான பெண்களுக்கு இடம் இல்லைன்னு தெரியும் இல்ல. மதுக்கும் ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்க்கும் சம்மந்தமில்ல, நான் சொல்றது தான் இங்க கேட்டாகனும்”

“சார் மன்னிச்சிருங்க. இதோ அனுப்பிடறேன்.”

வரவேற்பறையில் இருந்த பெண்ணை, செக்யூரிட்டிகள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

தயாரிப்பு பிரிவில் இருந்தவர்களை, சந்திக்க அங்கு வந்தவனை மதுமிதா கோபத்தோடு பார்த்தாள்.

“ நீ என்ன பெரிய மன்மதன்னு நினைச்சிட்டு இருக்கியா. வயசுப் பொண்ணு வேலைக்கு வந்தா, கற்பு போயிடும்னு பயப்படறியா. ஓவரா இல்ல உன் சீனு.” அத்தனை பேர் முன்பும் அவள் கேட்டதும் அனைவரும் தலைக்குனிந்து வேலையை பார்க்க துவங்கினர்.

ஆனால் இதையெல்லாம் இத்தனை வருஷமாக பார்த்து வந்த அகரனுக்கு இது புதிதில்லை.

அவளை ஓர் பார்வை பார்த்துவிட்டு அவன் அறைக்குச் சென்றான்.

“அகரன் நில்லு” கத்திக் கொண்டே அவன் பின் சென்றாள் மது.

“அகரா. என்ன திமிர் உனக்கு” அறைக்குள் நுழைந்து தன் காலால் பட்டென்று அறைந்து சாத்திவிட்டு கதவின் முன் நின்றாள் மது.

அவளருகே எழுந்து வந்து நின்றவன் கதவின் முன் இருக்கும் ஸ்லைடர் ஸ்க்ரீன் முழுதும் இழுத்து விட்டு, அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். வலியில் கன்றியது மதுவின் கழுத்து. இருகைகளாலும் அவன் கையை பிடித்து இழுக்க முயற்சி செய்தாள். முடியவில்லை. உடும்பு பிடியாக இருந்தது அவனது பிடி.

“எத்தனை முறை சொல்லியிருக்கேன். எதுனாலும் என் ரூமுக்கு வந்து பேசு.வர்க்கர்ஸ் முன்னாடி பேசாதன்னு. கேட்க மாட்டியா? தாத்தாக்காக தான் பொறுமையா இருக்கேன். நீ சீண்டிட்டே இருக்கறதுக்கு நான் இன்னும் சின்ன பையன் இல்ல. “ பல்லை கடித்து அவன் பேசியதைப் பார்த்து மதுவுக்கு பயம் அடைத்தது. ஏற்கனவே தொண்டையை அழுத்தியிருந்தவனால் மூச்சுத் திணறியவளுக்கு பயம் இன்னும் அதிகமாகியது.

“உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு. இங்க நடந்தது எதையும் தாத்தாக்கிட்ட சொல்லனும்னு நினைக்காத.நீ சொன்னாலும் அவர் நம்ப மாட்டார்” இளக்கார சிரிப்புடன் அவள் கழுத்திலிருந்து கையை எடுத்தான் அகரன்.

கழுத்தை நீவி பலமுறை இருமினாள்.

“லுக், கவுண்ட் யுவர் டேஸ். இந்த ஆஃபிஸ் ல இருந்தும், வீட்டில் இருந்தும் உன்னையும் உங்க அம்மாவையும் விரட்டறனா இல்லையான்னு பாரு”

“போடி “ அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அவன் இடத்தில் போய் அமர்ந்தான். படாரென்று கதவை திறந்து சாத்திவிட்டு அவள் கேபினுக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டாள் மது.

இருக்கும் வேலையை அவசரமாக முடித்து விட்டு, வெளியில் வந்தான் அகரன்.

நேராக காரை எடுத்துக் கொண்டு கடற்கரையை நோக்கி செலுத்தினான். காலை 11 மணி நேரத்தில் வெயில் அதிகமாக இல்லாததால் கால்கள் மணலில் சுடவில்லை.

அப்படியே நின்று, தூரத்தில் இருந்து வரும் அலையையும், கடல் தொட்டுக் கொண்டிருக்கும் கரையையும் மாற்றி மாற்றி பார்த்தான். மனம் லேசானது போல் இருந்தது.

எப்போது அவன்‌ மனம் புழுங்கினாலும் அவன் தேடி ஓடி வருவது கடலைத்தான்.

அவன் அசிங்கப்பட்டதை, அவமானப்படுத்தப்பட்டதை, கஷ்டப்பட்டதை அத்தனையும் இந்த கடலின் கரையில் கொண்டு வந்து அலைகளில் ஒப்படைத்து விட்டுக் கிளம்புவது தான் அவன் வழக்கம்.

மெதுவாக கடலின் ஓரம் வெறுங்கால்களுடன் அலையில் நடந்து வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகின் அருகில் நின்றான்.

சிறு வயதில் மதுமிதாவும், அவள் அம்மாவும் அவனை மிகக் கேவலமாக பேசும் போதெல்லாம் அவன் தேடுவது அம்மாவைத்தான். ஆனால் இவன் அழுவதை பார்த்து அம்மாவும் அழுது புலம்புவதை பார்க்க சகிக்காமல், அத்தனையும் கடல் மாதாவிடம் ஒப்படைப்பதை வழக்கமாக்கி கொண்டான்.

ஏதேதோ யோசனையில் அந்த படகின் மீது சாய்ந்து நின்றவனின் கையில் ஏதோ தட்டுப்பட்டது.
படகின் உள்ளிருந்து எட்டிப்பார்த்த தலைகள் அவனைக் கண்டதும் பயந்து பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டன.

“அறிவில்ல உனக்கு. லவ்வர்ஸ் இருக்கற இடத்தில் அசிங்கமா வந்து எட்டிப் பார்க்கற”

உள்ளிருந்த கல்லூரி‌மாணவி போன்ற தோற்றமுடையவள் அவனிடம் குரலை உயர்த்த,

“ஏய் உனக்கு அறிவில்ல, படிக்கிற வயசுல இப்படி பண்றியே அசிங்கமா இல்ல.” அகரன் கோபமாக கேட்டான்.

“அய்யே வந்துட்டார் பெரிய போலீஸ்… அறிவுரை சொல்றதுக்கு. பூமர் அங்கிள் நகருங்க” என அவளின் காதலனை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள் அந்த பெண்.

“எவ்வளவு திமிர் இந்த பொண்ணுக்கு. நான் அங்கிளா? அதுவும் பூமர் அங்கிளா? இருடி, உனக்கு ஒரு டெரர் ஆளு தான் மாப்பிள்ளையா வாய்க்க போறான். அப்ப தெரியும் உனக்கு. நானே என் கவலைக்கு இங்க வந்தா, ஏற்கனவே காத்திட்டு இருக்க பிசாசுங்க என் தலை மேல் ஏறி டிங் டிங்குனு ஆடுதுங்க” என தன் நிலையை நொந்துக் கொண்டு, வெளியில் வந்து காரை எடுத்தான்.
பலவித யோசனைகளில் மூளை சூடு ஏறி இருந்தது.

“ச்ச காலையில் யார் முகத்தில் முழிச்சேன் தெரியல. இன்னிக்கு எல்லா பிரச்சனையும் ரவுண்ட் கட்டி அடிக்குது”

எரிச்சலுடன் வண்டியை பின்னுக்கு எடுத்து பின் வேகமாக சாலைக்கு செலுத்தினான்.
கடற்கரையிலிருந்து திரும்பி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சன்னிதிக்கு எதிரில் கொண்டு வந்து நிறுத்தினான்.

அவன் சிறு வயதில் தன் தாயுடன் அடிக்கடி வரும் கோவில் இது.

ஏனோ உள்ளே போக பிடிக்கவில்லை.


வெளியில் இருந்து பார்த்து விட்டு, அடுத்த தெரு வரைக்கும் நடந்து வந்து ஒரு இளநீர் வாங்கி குடித்தான்.

அப்போதும் மண்டைக்குள் யாரோ அடுப்பெரிப்பது போல் இருந்தது.

மீண்டும் வந்து தன் கறுப்பு ஜீப்பை எடுத்துக் கொண்டு வேகமாக அந்த சாலையை கடந்தான். மதிய நேரம் என்பதால் சாலையில் கூட்டம் அதிகமில்லை.

சிறிது வேகமாக அந்த வீதிகளில் வண்டியை செலுத்தியவன், ஒரு திருப்பத்தில் வளையவும், அங்கே ஒரு பெண் எதிரில் வருவதையும் பார்த்து நிறுத்துவதற்குள், வண்டி அவளின மீது மோதி நின்றது. இறங்கி காரின் சக்கரத்திற்கு அருகில் கிடந்தவளை பார்த்த போது குழம்பினான்.

'யார் இது? எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே' என்று யோசிப்பதற்குள் கூட்டம் கூட ஆரம்பித்தது. அவள் முகம் முழுதும் தலையில் இருந்து வடிந்த ரத்தம் நிறைந்திருந்தது.

காவல் துறையினர் வருவதற்குள், கூட்டத்தினரை சமாதானப்படுத்தி அவளை அப்படியே இரு கைகளில் தூக்கி பின் சீட்டில் வைத்து அருகில் உள்ள‌‌ மருத்துவமனைக்கு ஓட்டினான்.

மருத்துவமனை வந்ததும் வேகமாக ஸ்ட்ரெக்ச்சர் கொண்டு வர சொல்லி அவளை அவசரப்பிரவில் சேர்த்தான்.

காவல் துறையினருக்கு சொல்லலாமா, வைபவ்வை அழைத்து என்ன‌ செய்வது என்று கேட்போமா? யோசித்துக் கொண்டே அம்மாவை அழைத்தான்.

“அம்மா நான் ஒரு ஆக்ஸிடென்ட் பண்ணிட்டேன் மா. அந்த பொண்ண ஐசியூவில் வச்சிருக்காங்க மா. வி.என் ஹாஸ்பிட்டலுக்கு உடனே வாங்க” மனம் பதறினாலும்

நிதானமாக விஷயத்தை சொல்லி விட்டு வைத்தான்.

தெய்வநாயகிக்கோ தாங்க முடியவில்லை. பாண்டியனை அழைத்துக் கொண்டு அடுத்த 15 நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.

“என்ன தங்கம்..என்ன ஆச்சு, ஆக்ஸிடென்ட் நீயா பண்ண? கடவுளே, ஏன்‌ என் பையனை இப்படி சோதிக்கற” மேலே கைகூப்பி கேட்டார் தெய்வ நாயகி.

“ஆமாமா. தப்பு அந்த பொண்ணு மேலயும் தான். ஃபோன்ல பேசிட்டே வந்தா. நானும் வளைவில் கொஞ்சம் டென்ஷன்ல வேகமா திருப்பிட்டேன்”

“என்ன மருமகனே பாத்து ஓட்டக்கூடாதா? இப்ப அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கு?”

“டாக்டர்ஸ் பாத்துட்டு இருக்காங்க மாமா. நீங்க கொஞ்சம் அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு இன்ஃபார்ம் பண்ணிருங்க. நான் அவங்க வரதுக்குள்ள இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன்”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். டாக்டர் வெளிய வந்தா என்னன்னு கேளு” பாண்டியன் அவனின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

அதே நேரத்தில் மருத்துவரும் வெளியே வர, “டாக்டர், எப்படி இருக்கா அந்த பொண்ணு. எதுவும் பிரச்சினை இல்லையே?”

“மிஸ்டர் அகரன். பெரிய பிரச்சினை எதுவும் இல்ல. தலையில் அடிபட்டும் பெரிய இன்ஜூரி இல்ல. ப்ளீடிங் நின்னுருச்சு. ஆனா கால்ல தான் , ஃபெமூர் போன்ல ப்ராக்ச்சர். நடக்கறது சிரமம். அதுக்கான டீரிட்மெண்ட் ஆரம்பிச்சிருக்கோம். நினைவு திரும்ப கொஞ்ச நேரம் ஆகலாம். ஒன்னும் பயமில்லை.”

“தாங்க்யூ டாக்டர். இப்ப பாக்க முடியுமா? “

“இல்ல ட்ரீட்மெண்ட் முடிய டைம் ஆகும். நீங்க சிஸ்டர் சொன்னதும் போய் பாருங்க”

“ஓகே டாக்டர்” என்று சொல்லிவிட்டு அவசரப்பிரிவின் கதவின் வழி இருவரும் பார்த்தனர்.

வாடிய மலரைப் போல் படுத்திருந்தாள் அந்த இளம்பெண். ஒரு நிமிடம் அவளின் மேல் பரிதாபம் வந்தது அகரனுக்கு.

அடுத்த நிமிடமே, "ச்ச இந்த பொண்ணுக்கு அறிவே கிடையாதா? ஃபோன்ல பேசிட்டேவா ரோட்ல திரும்புவாங்க. திமிரு இதுங்களுக்கெல்லாம்.” அவன்‌ வாய் முணுமுணுக்க, தெய்வா அவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தார்.

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 3


“என்னடா இப்படி அடிப்பட்டு இருக்கா இந்த பொண்ணு. இவ யாரு என்னன்னு எதாவது தெரிஞ்சதா” - தெய்வா கேட்க,

“ஷிட், அவசரத்தில கீழ விழுந்த அவளோட ஹேண்ட் பேக்கையோ, செல்ஃபோனயோ எடுக்கலை மா. ப்ளீடிங் இருக்கவே அப்படியே அவளை தூக்கிட்டு வந்துட்டேன் மா. இந்நேரம் அதெல்லாம் அங்க இருக்குமா என்னன்னு தெரியல. அவ கண் விழிச்சா தான் தெரியும். அவங்க வீட்டுக்கு எப்படிம்மா இன்ஃபார்ம் பண்றது?.”

“அவ கண் விழிக்கற வரைக்கும் நாம பாத்துக்கலாம் அகரா. என்ன செலவாகுதோ அதை அப்படியே கொடுத்திடலாம். நீ மாமாவுக்கு கால் பண்ணி எதுக்கும் அந்த லொக்கேஷனை சொல்லி அங்க விசாரிக்க சொல்லு. நல்ல மனுஷங்க யாராச்சும் அவ பொருட்களை எடுத்து வச்சிருந்து இருக்கலாம்.”

“காட் இட் மா. இப்பவே இன்ஃபார்ம் பண்றேன்”

“அழகா இருக்கா இந்த பொண்ணு. பாவம். யாரு என்னன்னு தெரியல”

“மா. அழகான இடத்தில தான் ஆபத்து இருக்கும். பை தி வே, அப்படியொன்னும் உங்களை விட அழகில்ல”

“போடா… உனக்கு எப்பவும் குறும்பு தான். எனக்கு 50 வயசுக்கு கிட்ட ஆகப்போகுது. அழகோ, இளமையோ என்ன பெருசா தெரியப்போகுது.”

“ஆஹான்… ஆனா எனக்கு நீங்க அழகு தான். எப்பவும்”

“அப்ப உன் தியரி படி ஆபத்து என்கிட்ட இருக்கனுமே”

“நோ மா. இது வேற. நான் சொல்றது இந்த வயசுப் பொண்ணுங்களை மா.
நம்ம மது மாதிரி. ”

“சரி சரி.. நீ மாமாவுக்கு கால் பண்ணு”

“டன் மா” என்று நகர்ந்தவனை பார்த்துப் பெருமையாகவும் அதே நேரம் வருத்தமாகவும் இருந்தது தெய்வாவிற்கு.

‘இப்படியே இருந்தா இவனுக்கு எந்த பெண்ணை பார்த்து, எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது’ - தாயின் உள்ளம் பரிதவித்தது.

நிமிடங்கள் கடந்த பின், “மா. நான் ஆபிஸ்க்கு போய்ட்டு வந்திடறேன்‌. மாமா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவார். எதாவது லீகல் பிரச்சினைனா எனக்கு கால் பண்ண சொல்லுங்க. நீங்களும் அப்பப்ப எனக்கு இங்க நிலவரத்தை அப்டேட் பண்ணுங்க”

“சரிப்பா... சாயந்திரம் வண்டியை கொண்டு போய் ஒரு பூஜையை போட்டுட்டு வந்திடலாம். தாத்தா அனேகமா இந்த வண்டியை மாத்த சொல்லுவார்னு நினைக்கிறேன்.”

“கமான் மா. இதெல்லாம் இந்த சென்ட்ச்யூவரில நம்பிட்டு. அந்த பொண்ணு மேல் தான் தப்பு. அதுமில்லாம என் ஜீப்பை நான் நிச்சயமா மாத்த மாட்டேன்”

“சரி அதை அப்புறமா பாத்துக்கலாம். நீ பாத்து பத்திரமா போயிட்டு வா”

வெளியில் வந்தவன் அவனது வண்டியை சுற்றி வந்து பார்த்தான். முன்பக்கத்தில் அவளது ரத்தத்துளிகள் சிறிது இருக்கவே, ஒரு நிமிடம் அவளுக்காக பரிதாபப்பட்டான்.

நேராக எடுத்து போய் ‘வாட்டர் வாஷ்க்கு’ வண்டியை கொடுத்து விட்டு அவனது மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான். அவர் விசாரித்த வரையில் அங்கு எந்த கைப்பையும், அலைபேசியும் இருக்கவில்லை.

அவன் மனம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தகவலை எப்படி தெரிவிப்பது என்ற கவலையிலே இருந்தது.

அலுவலகத்திலும் வேலை ஓடவில்லை. ஆனாலும் அவன்‌ அன்றாட அலுவல்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காத பழக்கத்தில் தன்னை நிதானப்படுத்தி அவன் வேலைகளை முடிக்க ஆரம்பித்தான்.

தொடர்ந்த அலுவலக சந்திப்புகளில் கொஞ்சம் அன்று மதியம் நடந்ததை மறக்க முடிந்தது.

மாலையில் மருத்துவமனைக்கு கிளம்பும் நேரத்தில், “உனக்கு எந்த கில்ட்டி ஃபீலும் இல்லையா. ஆக்ஸிடென்ட் பண்ணிட்டு வெளியில் வேற தைரியமா சுத்திட்டு இருக்க. அப்பாவால தான் இன்னிக்கு உனக்கு ஜெயில் கிடைக்காம இருக்கு. இதுவும் உனக்கு நாங்க போட்ட பிச்சை தான்” என்று சொல்லிவிட்டு அவன் எங்கு மீண்டும் கழுத்தை பிடித்து விடுவானோ என்று அவசரமாக நகர்ந்தாள் மது.

அவள் சொல்லியதும் எண்ணம் முழுக்க அந்த பெண்ணை சுற்றியே வந்தது. 'எனக்கா குற்ற உணர்வு இல்லை. அப்படி இல்லாமல் தான் நான் இப்படி கிடந்து அல்லாடுகிறேனா' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

நேராக மருத்துவமனைக்கு வந்தவன், அவசரப்பிரிவு பகுதிக்கு வர அங்கே அவனது அம்மாவும், மாமாவும் இல்லாததைக் கண்டு குழப்பமடைந்து, அருகே விசாரித்தான். அவளை வேறு அறைக்கு மாற்றியதாக தெரிவித்தார்‌ செவிலி. அந்த பெண் இருந்த அறை நோக்கி சென்றான்.

உள்ளே இருவரும் அந்த பெண்ணின் அருகில் நின்றிருந்தனர். அவள் இன்னும் கண் விழிக்கவில்லை‌. அவளின் சிறிய உடலில் இடுப்பு பகுதியில் இருந்து பெரிய கட்டாக போடப்பட்டு இருந்தது. அந்த காலை தூக்கி மேலே ஒரு ஸ்டாண்டில் மாட்டியிருக்க, தலையிலும் ஒரு கட்டு போடப்பட்டு இருந்தது. அவள் முகம் வேறு சோர்ந்து இருந்தது.


இன்னும் அருகில் வந்து அவளை பார்த்தான்.

“இப்ப தான் பா அலோ பண்ணாங்க இந்த பொண்ண பாக்க. இன்னும் இவ கண்ணு விழிக்கல. “

“மா. எவ்ளோ நேரம் ஆகும்னு சொன்னாங்களா? “

“தெரியல பா. டாக்டர் நினைவுத்திரும்பிடும்னு தான் சொன்னார்.”

அவளின் முகத்தை மீண்டும் பார்க்கும்போது, ஏதோ பொறி தட்டியது.

மீண்டும் நன்றாக பார்த்தான். உடனே அவன் அலைபேசியில் அவள் முகத்தை புகைப்படம் எடுத்து வைபவிற்கு அனுப்பினான். வெளியில் வந்து அவனுக்கு அழைத்தான்.

“டேய் வைபவ், உனக்கு ஒரு பொண்ணு ஃபோட்டோ அனுப்பியிருக்கிறேன் பாரு. அவளை நாம அன்னிக்கு கோயம்புத்தூர்ல பார்க்கிங்ல பார்த்தோம் இல்ல. அவ தானே. கொஞ்சம் கன்ஃபார்ம் பண்ணு”

“ஏன்டா என்ன ஆச்சு. லைன்ல இரு பாக்கறேன்… டேய்.. அவதாண்டா, அன்னிக்கு உன்கிட்ட சாரி கூட‌ கேட்டாளே. அந்த பொண்ண நான் அடுத்த நாளும் பாத்தேன். மலர் ஹாஸ்பிட்டல்ல இருந்து வெளியே அவசரமா வந்தா. நான் என் வைஃப்ப செக் அப்க்கு கூட்டிட்டு போயிருந்தப்ப பாத்தேன். அதே படபடப்போட அங்க இங்க ஃபோன் பேசிட்டே அலைஞ்சிட்டு இருந்தா டா. இப்ப என்னடா கட்டு போட்டுட்டு படுத்துட்டு இருக்கா“

“எனக்கும் டக்னு ஸ்டிரைக் ஆகல. அதான் உனக்கு அனுப்பினேன். அவளை நான் தான்டா ஆக்ஸிடென்ட் பண்ணிட்டேன்”

“என்னடா சொல்ற.. நீயா? எப்படி “

“டேய் அந்த விளக்கம்லாம் அப்புறமா சொல்றேன். அவ யாரு என்னன்னு தெரியல. அவங்க வீட்டுக்கு எப்படி இதை சொல்றதுன்னும் தெரியல. நீ மொதல்ல அந்த ஸ்டார் ஹோட்டல்க்கு அன்னிக்கு அந்த ரூஃப் டாப் கார்னர் டேபிள்ள யார் புக் பண்ணியிருந்தாங்கன்னு விசாரிச்சு அவங்களுக்கு கால் பண்ணி இந்த ஃபோட்டோ காமிச்சு கேளு. அதே போல அந்த ஹாஸ்பிட்டல்க்கும் கால் பண்ணி கேளு.”

“ஓகே டா. நான் விசாரிச்சிட்டு சொல்றேன்.”

“டேய் மண்டை காயுது. இதே யோசிச்சு என்னால எதிலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல.உடனே விசாரிச்சு சொல்லு.”

“ஓகே டா.. நாளைக்கு மார்னிங் உனக்கு அப்டேட் பண்றேன்”

அவனுக்கு குழப்பம் அதிகமானது. ‘யார் இந்த பெண், எதற்காக நம்‌ வழியில் அடிக்கடி குறுக்கிடுகிறாள். மிஞ்சி போனால் 22 அல்லது 23 வயது தான் இருக்கும். கோயம்புத்தூரில் இருந்து இரண்டு மூன்று நாட்களில் சென்னை வர வேண்டிய அவசியம்.. ஒரு வேளை நம்மைப் போல் இவளும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் போய் திரும்பி வந்திருப்பாளோ..? ‘ கேள்வி மேல் கேள்வி தனக்குள் கேட்டுக் கொண்டான்.

இரவு அம்மாவையும், மாமாவையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு அவன் அங்கேயே இருந்தான்.

‘முசுடு…. பெரிய ஆணழகன்னு நினைப்பு. சாரி…போய்யா…’ அவளின் வார்த்தைகள் உள்ளுக்குள் கேட்டபடி இருந்தன.

‘மண்டைக்குள் உட்கார்ந்து பிராய்ந்து கொண்டு இருப்பவளுக்கு, காவல் வேறு நான்.. நிச்சயமா நான் வேணும்னே அந்த ஆக்ஸிடென்ட் பண்ணல. கில்ட்டி கான்ஷியஸ்ல தான் இப்போ இவளுக்காக இங்க இருக்கேன். எப்படியும் நாளைக்குள்ள இவ, யாரு, என்னனனு தகவல் தெரிஞ்சிடும். அவ அப்பா, அம்மா கிட்ட தகவல் சொல்லிட்டா, அவங்க கேட்கிற பணத்தை கொடுத்திட்டா எல்லாம் அதோட முடிஞ்சிடும். அதுக்கு மேல நான் தலையை பிய்ச்சுக்க தேவை இருக்காது’ அப்படியே யோசித்துக் கொண்டிருந்தவனிடம் வந்த தலைமை செவிலி,

“நீங்க வேணா வீட்டுக்கு போய்ட்டு வாங்க. நாங்க பாத்துக்கறோம். எதாவது எமர்ஜென்சினா கால் பண்றேன். “

“ தாங்க்யூ சிஸ்டர். கண்டிப்பா எதாவதுன்னா கால் பண்ணுங்க. என் நம்பர் இருக்கு இல்ல”

“இருக்கு சார். யார்னு தெரியாத ஒரு பொண்ணுக்காக குடும்பமே இங்க வந்து இருக்கீங்க. இந்த நைட் நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப்படாம போய்ட்டு காலைல வாங்க”

மீண்டும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

வீட்டில் மதுவும், அவன் அத்தையும் பெரிய கலவரத்தை உண்டு செய்து இருந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்த போதே,

“நல்லா விசாரிங்க உங்க பையனை. குடிச்சிட்டு வண்டி ஓட்டினார் போல, அதான் ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. அந்த பொண்ணுக்கு எதாவது ஆனா என்ன பண்ணுவீங்க, ஒரு வேளை அவ உயிருக்கு ஆபத்துன்னா, நேர்மை, நீதி,நியாயம்னு பேசறவங்க அப்போ நியாயமா போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஒத்துக்கனும்.”

ஆண்டாள் விஷமாக பேச,

“அண்ணி, என்ன அகரனைப் பத்தி இப்படி பேசறீங்க, அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை”

“மா.. இருங்க. தாத்தா நான் வேணும்னே அந்த ஆக்ஸிடென்ட் பண்ணல. ஒருவேளை அவளுக்கு எதாவது ஆனா நான் அதுக்கு முழு பொறுப்பு ஏத்துக்கறேன்” தாத்தாவிடம் அவன் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்றான்.

இரவு விடிந்த போது அவனுக்கும் அந்த விடியல் பல செய்திகளை சொல்ல காத்திருந்தது.

வைபவிடமிருந்து அழைப்பு வந்தது.

“அகரா. அந்த பொண்ணு அன்னிக்கு வந்திருந்தப்ப டேபிள் புக் பண்ணது அவ ஃப்ரெண்ட் லாவண்யா. அவங்க பிஎஸ்ஜில ஒன்னா படிச்சிருக்காங்க. ஹாஸ்டல் மேட்டாம். அவளுக்கு ஃபேமிலி எங்கேயோ நார்த் இண்டியால இருக்காங்க போல. அவளை பாக்க யாருமே வந்ததில்லை யாம். இவ தான் லீவ்ல ஊருக்கு போயிருக்கா.”

“என்னடா இப்படி சொல்ற.. ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சியா? எதாவது அவங்களை பத்தி தகவல் தெரிஞ்சதா. “

“இருடா. அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்தது ஒரு சின்ன குழந்தை டா. அவளுக்கு அக்கா பையன் போல. அவங்க வகேஷனுக்கு வந்திருந்தாங்க போல. வந்த இடத்தில் தான் அந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கு. டிஸ்சார்ஜ் ஆகி இரண்டு நாள் முன்னாடியே போயிட்டு இருக்காங்க. அவங்க அட்ரஸூம் இங்க லோக்கல் டிராவல் ஏஜெண்ட்டோது தான் கொடுத்திருக்காங்க. அவங்க கொடுத்த அந்த ஃபோன் நம்பர் ரீச் ஆகல. எனக்கு தெரிஞ்சு அது அந்த பொண்ணுதா இருக்கலாம். பொண்ணு பேரு பவதாரிணி. அன்னிக்கு அவ எடுத்துட்டு வந்த ஸ்கூட்டி நம்பர் சிசிடிவில பாத்து என்கொயர் பண்ணா, அது அவ ஃப்ரெண்ட்டோடதாம் . அன்னிக்கு ஹாஸ்பிட்டல் போகனும்னு எடுத்துட்டு போய்ருக்கா. இதுக்கு மேல அவளைப் பத்தி அவ ப்ரெண்ட்ஸ்க்கு வேற எதுவும் தெரியல.”

“பவதாரிணினா அந்த பொண்ணு தமிழ் பொண்ணா தான் இருக்கனும் இல்லையா. அப்புறம் நார்த்ல செட்டில் ஆனவங்களா இருப்பாங்களா? டேய் அவ படிச்ச காலேஜ்ல விசாரிச்சியா. எதாவது ஆதார், அட்ரஸ் ப்ரூஃப் கொடுத்திருப்பா இல்ல. இவ இன்னும் கண்ணு முழிக்கல போல. ஹாஸ்பிட்டல்ல இருந்து எந்த தகவலும் இன்னும் இல்லை..எனனடா இவ மாய மோகினியா. ஒன்னுமே புரியல “

“நீ கவலைப்படாதடா.எந்த மோகினியா இருந்தாலும் அவ யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன். ரொம்ப சிபிசிஐடி மாதிரிலாம் யோசிக்காத. “

“ம்மம் ‌ போடா.. இவனே.. உனக்கு நடந்தா தெரியும். எல்லாம். எனக்கு அவ யாருன்னு தெரிஞ்சு அவளை உரியவங்க கிட்ட ஒப்படைச்சா போதும். இனிமே அலும்னி மீட் அது இதுன்னு எதாவது ஏற்பாடு பண்ணீங்க அவ்வளவு தான்‌.” பல்லைக் கடித்து கொண்டே பேசினான்.

“டேய்.. இந்த முறை கோயம்புத்தூர்ல மீட் பண்ணலாம்னு எல்லாம் சஜஸ்ட் பண்ணாங்க டா. நிறைய பேர் செனனைல இருந்து இங்க வந்து செட்டில் ஆயிட்டோம். சோ, மேக்ஸிமம் நம்பர் ஆஃப் ஒப்பனீயனுக்கு சரின்னு சொன்னோம். எல்லாம் ஒரு ஜாலிக்கு தானேடா.. இதோட எத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ணுவோம்னு தெரியல டா”

“ஆமா என்ன ஜாலி வேண்டி கிடக்கு” சலித்தான்.


“என்னடா.. இப்படி சொல்லிட்ட. நமக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா நம்ம ஃப்ரெண்ட்ஸ் யார் அந்த ஃபீல்ட்ல இருக்காங்கன்னு பாத்து ஹெல்ப் கேட்கலாம். வீட்ல ஒரு கல்யாணம்னா கூட நம்ம சர்க்கிள்லயே பாக்கலாம். உனக்கு ஒன்னு தெரியுமா? உன்னையே எத்தனை பேர் விசாரிச்சாங்க தெரியுமா”?

“என்னையா? எதுக்குடா?”

“ஏன்னா, நம்ம பேட்ச்ல எலிஜிபிள் பேச்சிலர்ஸ்ல நீதான் நம்பர் ஒன். நம்ம கிளாஸ்மேட்ஸ் இல்லாம, அவங்க ஃபேமிலில இருக்க பொண்ணுங்களுக்கும் உன்னை பாக்கலாம்னு….”

“ஆங்… ஆமா ஒவ்வொருத்தரையா வர சொல்லு. எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்கறேன். ஒரு நாள் கூட வாழ மாட்டாளுங்க எவளும் என் கூட”

“ஏண்டா.. இப்படி சொல்ற..என்னிக்கா இருந்தாலும் எப்படியும் ஒரு பொண்ண தான்டா கல்யாணம் பண்ணிக்க போற..டேய்… இரு..‌‌ இரு….எதாவது வானவில் வாழ்க்கைக்கு மாறிட்டியா??? வெளிநாட்டுலலாம் படிச்சவன்..... இல்ல நீ.. “.


ஒரு நிமிடம் யோசித்தவன், “அடிங்க.. நேர்ல மாட்டின அவ்ளோதான். நான் ஒன்னும் அப்படி கிடையாது. பொண்ணுங்களை பிடிக்காதுன்னு தான் சொன்னேன்.அதுக்காக பையனை பாப்பேன்னு அர்த்தம் இல்ல.. நீ வெட்டி பேச்சு பேசாம நான் சொன்னதை செய் போய்” .. அலைபேசியை வைத்துவிட்டு,

“வந்துட்டானுங்க டிசைன் டிசைனா நம்ம உயிர வாங்குறதுக்கு. எல்லாம் அந்த பொண்ண சொல்லனும். தேவையா எனக்கு…. ஏய்.. பவதாரிணி….உனக்கு விழ வேற எந்த வண்டியும் கிடைக்கலையா” அவளை நினைத்ததும் சலிப்பு வந்தது. அவளது புகைப்படத்தை பார்த்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தான்.


தெய்வநாயகியை மருத்துவமனைக்கு செல்ல சொல்லிவிட்டு, நேரே அலுவலகத்துக்கு சென்றான்.

அவன் ரிசப்ஷனை கடக்கும் போதே அவனுக்கு ஒரு கிளையண்ட் அழைப்பு வர அவசரமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து பேச ஆரம்பித்தான். அவர் சொல்லும் குறிப்புகளை
குறிக்க அங்கிருந்த மேஜைக்கு வந்து ஒரு காகிதத்தில் குறிப்புகளை எழுதினான்.

பேசி முடித்து விட்டு, அந்த மேஜையின் மேல் அவன்‌ அலைபேசியை வைத்து விட்டு காகிதத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அருகில் இருந்த வரவேற்பாளர் அவன் நிற்பதால் அவளும் எழுந்து நின்றிருந்தாள்.

அவன் அலைபேசியில் காலையில் அவன்‌ பார்த்த அந்த புகைப்படம் அப்படியே இருந்தது. வரவேற்பாளருக்கு ஒரு சந்தேகம்.

“சார் இந்த ஃபோட்டோல இருக்கிறது…”

“ஏன் உங்களுக்கு தெரிஞ்சவங்களா..” அவளின் முகபாவத்தை தீவிரமாக கண்காணித்தான்.

“சார் இப்படி கொடுங்க .. நல்லா பாக்கறேன். சார்… இந்த பொண்ணு நேத்து நம்ம ஆஃபிஸ்க்கு வேலை கேட்டு வந்த பொண்ணு சார்..”

“மை காட்.. என்ன இந்த சுத்தல்ல விடறா இவ.. யாருடா இவ…” சத்தமாகவே மனதில் இருப்பதை பேசினான். வரவேற்பாளர் குழப்பமாக அவனை பார்த்தாள்.

“சார்.. நீங்க கூட வெளிய அனுப்ப சொன்னீங்க இல்ல.”

“ஆமா. அந்த பொண்ணு திரும்பி உட்காந்துட்டு இருந்ததால நான் சரியா கவனிக்கல.. சிசிடிவில அந்த டைம்ம பாருங்க.. “

“இதோ ஒரு நிமிஷம் சார்”

“கமான்… அவ யாருன்னு தெரிஞ்சிட்டா போதும்… “

“சார் இங்க பாருங்க” - அவள் காண்பித்ததும் இன்னும் தெளிவாக தெரிந்தது அதே பெண் தான் என்று.

“அவ ஃபைல்… ரெசியூம் எதாவது கொடுத்திருந்தாளா.‌பாருங்க”

“சார்.. கொடுத்தாங்க.. ஆனா அதை மேம் டேபிளுக்கு அனுப்பினேன்‌. அவங்க தான் வெயிட் பண்ண சொன்னாங்க..”

“ஓஓஓ.. இட்ஸ் ஓகே. ஹெச் ஆர்ல எதாவது கொடுத்திருக்காங்களானு கேட்டுட்டு எனக்கு கூப்பிடுங்க..”

நேரே மதுமிதாவின் அறைக்கு சென்றான்.

அவள் அறையில் இல்லை. அவள் கேபினில் மேஜையில் இருந்த ஃபைல்களை பார்த்தான்.

அதே நேரம் உள்ளே நுழைந்த மதுமிதா, “ஹேய்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க.. என் பெர்மிஷன் இல்லாம என் டேபிள்ள… “

“ப்ச்.. நேத்து இங்க வேலைக் கேட்டு ஒரு பொண்ணு வந்திருந்தா இல்ல.. அவ ரெசியூம் எதாவது தந்திருந்தாளா? “

“ஓஹ்.. நீயே அவளை வேலைக்கு எடுக்க வேண்டாம்னு அனுப்புவ. இப்ப வந்து அவ ரெசியூமை கேட்பியா? “

“இருக்கா இல்லையா?”

“அதெல்லாம் அப்போவே டிஸ்போஸ் பண்ணியாச்சு. போய் கார்பேஜ் அவுட்லெட்ல பாரு. உனக்கு கிடைக்கும்.. முடிஞ்சா நீயும் அங்கேயே இருந்துக்க”.

இளக்காரமாக பதில் வந்தது மதுவிடமிருந்து.

வந்த சலிப்பில் ஒரு பெருமூச்சு விட்டு வெளியில் வந்தான்.

அவர்கள் அலுவலகத்தில் கழிவுகளை மொத்தமாக ஒரு இடத்தில் சேகரித்து வாரம் ஒருமுறை வெளியேற்றுவார்கள்.
அதில் போய் தேட முடியாது. இந்நேரம் குவியல் குவியலாக வெட்டுப்பட்ட துணிகள் அதன் மேல் விழுந்திருக்கும்..

இந்நேரம் அதை எடுத்து செல்பவர்கள் எடுத்திருக்கலாம்..

பவதாரிணியின் எந்த பக்கமும் இன்னும் விளங்கவில்லை. அவளின் முகம் மீண்டும் மீண்டும் அவன் கண்முன் வந்து சென்றது.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4

“சவிதா, ஹெச் ஆர் ல செக் பண்ணீங்களா? அவ ரெஸ்யூம் காப்பி எதாவது இருக்கானு. அதெப்படி அவ கரெக்டா நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வந்திருக்கா? இங்க யாரோ சொல்லித்தான் வந்திருக்கா! கேட்டுட்டு உடனே கூப்பிடுங்க”

தொலைபேசியை வைத்து விட்டு நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

இன்று அனுப்ப வேண்டிய டிசைன் மாதிரிகள் அவன் மேஜையில் இருந்தன. அதில் மனம் லயிக்க வில்லை. இருந்தும் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே இருந்தான்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

“கம் இன் “ சொல்லிவிட்டு அசிரத்தையாக கதவை பார்த்தான்.

“கலா அக்கா..‌ வாங்க. சவிதா கூப்பிட்டு விஷயத்தை சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்த பொண்ண பார்த்திருக்கீங்களா? “ அவன் அலைபேசியில் இருந்த படத்தை காண்பித்தான்.

“சார்.. இந்த பொண்ண இதுக்கு முன்ன நான் பார்த்தது இல்ல. நேத்து காலைல இங்க வந்திருந்தா, அப்பத்தான் தெரியும்.. அப்ப நம்ம ரூல்ஸ் சொல்லி இங்க வேலை கிடைக்காதுன்னு சொன்னேன். அப்ப இங்க இருக்க எம்.டி ய பாக்கனும் அப்டின்னு கேட்டா.

அப்ப நீங்க இல்ல, மது மேம்க்கு இன்பார்ம் பண்ணேன். அவங்க வெயிட் பண்ண சொல்ல சொன்னாங்க. அவ ரெஸ்யூம் காப்பி எதுவும் இல்ல. எப்படியும் அவளுக்கு இங்க வேலை கிடைக்காதுன்னு நினைச்சு அவ கொண்டு வந்த ரெஸ்யூமை மது மேம் கிட்டயே கொடுக்க சொன்னேன். அவ டிரஸ் டிசைன் நல்லா பண்ணுவேன்னு
சொன்னா. ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன்னு சொனனா. வேற எதுவும் அவளை பத்தி தெரியல சார்.”

“சரிங்க கா.. நீங்க போங்க.. நான் பார்த்துக்கறேன்.”

கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

அப்படியே கண்ணை இறுக்கி மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். ஓரிரு நிமிடங்களில் தூக்கம் அவன் கண்களை தழுவியது.

ஒரு சிறிய நந்தவனம். அதில் அழகான பூக்களுக்கு நடுவே அவளும் ஒரு பூவாய் மெல்ல நிமிர்ந்து சிரித்தாள் பவதாரிணி.

அழகான மஞ்சள் நிற சேலையில் விரிந்த கூந்தலுடன் அமர்ந்திருந்தாள். இரு கைகளை நீட்டி அவனை வாவென்று அழைத்தாள்.
மெல்ல போய் அவளின் கைப்பற்றி தூக்கினான்.

அவள் எழுந்திரிக்கும் போது, அவன் மார்பில் அவள் தலை இடித்தது.

தடுமாறிய அவள்,
அவனது திரண்டிருந்த இரு தோள்களை தன் சிறிய கைகளால் பற்றி, நிமிர்ந்து அவன் கண்ணைப் பார்த்தாள்.

நான்கு கண்களுக்குள் மின்னல்கள் இடம் மாறின.

அவளின் ஈர இதழ்கள், இளம் வண்ண ரோஜாவோ என்று நினைக்கும் படி இருந்தது. மெல்ல ஒற்றை விரலால் அதை நீவினான்.

இதழ்கள் மெல்ல பிரிந்தது. அவன் அவளின் மென்னிதழ்களை நோக்கி குனிய, மெல்ல காற்று வீசியதில் அவளின் தோளில் இருந்து சேலை முந்தானை அவளின் முகத்தை மூடியது. அதன்‌மேல் அகரனின் இதழ்கள் குவிந்தன.

உடலின் ஒவ்வொரு அணுவிலும் பட்டாம் பூச்சிகள் பறந்தன. இதுவரை நினைத்துக் கூட பார்க்காத உணர்வு. அவளை மொத்தமாக அள்ளியெடுக்க ஆசை வந்தது. அவளை தன்னோடு இறுக அணைத்து இடையை பற்றியதும், காற்றோடு அவள் கரைந்து போக, அவளின் உடை மட்டும் அவன்‌ கைகளில்.

அதை எடுத்துக் கொண்டு இங்குமங்குமாக அலைகிறான். ‘பவதா’ ‘பவதா’ என்று அழைக்க அவளை எங்கும் காணவில்லை. அவளின் உடையை இறுக்கி அணைத்தபடி மண்டியிட்டு அமர்கிறான். கண்களில் தாரையாக நீர் வழிகிறது.

அலைபேசி அழைத்ததும் பதறி கண் விழித்தான். அது கனவு என்று அப்போது தான் தெரிந்தது.

‘ச்ச என்ன இது. இருக்கற குழப்பத்தில் இப்படி‌யொரு கனவு.. பகல் கனவு தானே, பலிக்குமா என்ன? ‘ தனக்குள் பேசிக் கொண்டே அலைபேசியை பார்த்தான்.

தெய்வா தான் அழைத்திருந்தார். “அம்மா சொல்லுங்க. என்ன ஆச்சு” ‘கடவுளே, இப்போதாவது எதாவது நல்ல விஷயம் காதில் கேட்கனும்.’ மனம் மன்றாடியது‌ ..

“அகரா, இந்த பொண்ணு கண்விழிச்சிட்டா. ஆனா ரொம்ப வீக்கா இருக்கா. பேசக்கூட அவளால் முடியல. அதனால அவகிட்ட எதுவும் கேட்கல. நீ எப்ப வர?”

“மா.. உடனே வரேன்.” அலைபேசியை அணைத்து சாவியை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியேறினான்.

மனம் இருபுறமும் அலை பாய்ந்தது. இன்னும் அந்த கனவின் தாக்கம் அவனை படுத்தியது. எந்த உணர்வு தனக்கு வரவே கூடாது என்று நினைத்தானோ, அந்த நினைவில் இன்று உடல் அலைக்கழித்தது.

இது என்ன மாயம்? காதலா, காமமா எதுவென்று பிரித்து அறிய‌ முடியாத சூழல்.
கூடவே அவளை பத்திரமாக அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணமும்..

உணர்வுகளுக்கு இடையில் ஊசலாட்டம் நிகழ்ந்துக் கொண்டிருக்க ஒருவழியாக மருத்துவமனையை அடைந்திருந்தான்.

அவள் இருந்த அறை வாசலில் கால்கள் ஒரு கணம் தயங்கி நின்றது.

எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

‘ச்ச யாரென்றே தெரியாத ஒரு பெண் மேல் இந்த உணர்வு வருவது எவ்வளவு அசிங்கம். அவள் யாரோ? இன்று அவளைப் பற்றி தெரிந்து விட்டால் ஒரு பறவையை போல பறந்துப்‌ போகப் போகிறாள். அதன்பின் அவளுக்கும், எனக்கும் எந்தவொரு சம்பந்தமில்லை. அகரா.. இத்தனை நாட்கள் இருந்த விரதம் இன்று கலையக்கூடாது. அமைதியாக இரு… ‘ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே ஆழப் பெருமூச்சு எடுத்து உள்ளே நுழைந்தான்.

சோர்வாகப் படுத்திருந்து அவளின் கண்கள் மூடிய நிலையிலும், அலைபாய்ந்து கொண்டு இருந்தது அவள் இமைகளின் அசைவில் தெரிந்தது.

தெய்வா அருகில் அமர்ந்திருந்தார்.

“ம்மா ‌‌… என்ன எதாவது சொன்னாளா?” அவன் குரல் கேட்டதும் மெல்ல இமை பிரிந்து அவனை நோக்கினாள்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களை மூடி மூடி திறந்தாள்.

“ஹேய் இட்ஸ் ஓகே. நீ ரொம்ப வீக்கா இருக்க. கண்ணை மூடிக்க. ஒரு இன்பர்மேஷன் மட்டும் வேணும். உன் பேரண்ட்ஸ் எங்க இருக்காங்கன்னு சொல்ல முடியுமா? அவங்களுக்கு இன்பார்ம் பண்ணனும்” அகரன் கேட்டதும்,

“ம்ம்” மெதுவாக அவளின் குரல் கேட்டது.

“பொறுமையா பதில் சொல்லுமா, ஒன்னும் அவசரமில்ல.” தெய்வா சொன்னதும், அவனுக்கு பொறுமை இழந்தது.

“இல்ல.. எனக்கு என்ன ஆச்சு” தட்டுத்தடுமாறி கேட்டாள்.

பார்க்கவே பாவமாக இருந்தது. இருந்தும் உடனே கட்டுப்படுத்தி தன்‌முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டான்.

“உனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் மா. கால்ல ப்ராக்ச்சர். வேற ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல. உன் பேர் என்னம்மா?”

‘பவதா’ என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை மென்று முழுங்கினான்.

“பவதாரணி” - மிக மெதுவாக சொன்னாள். இப்போது மீண்டும் இமைகளை பிரித்து இருவரையும் பார்த்தவளின் கண்களில் ஆச்சர்யம் தோன்றி மறைந்தது.

அதை கண்டுக் கொண்டவன், அவளை ஏற்கனவே தெரியும் என்று வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“பவதாரிணி… எங்க இருக்கு உன் வீடு.. ஆக்ஸிடென்ட்ல உன்‌ பேக், ஃபோன் எல்லாம் காணாம போச்சு மா. அதான் உன்னை பத்தி எதுவும் தெரியாம இரண்டு நாளா வெயிட் பண்ணோம்” தெய்வா பொறுமையாக விளக்க,

“இங்க எப்படி
…. யாரு.. சேர்த்தாங்க.. நீங்க…?” முடியாமல் பேசினாள்.

“நான் தெய்வ நாயகி.இது என் பையன் அகரன். இவன் கார்ல
தான் நீ அடிபட்ட. இவன்தான் உன்னை இங்க கொண்டு வந்து சேர்த்தான். டாக்டர் உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க. தலையில் ஒரு சின்ன காயம். கட்டுப் போட்டு இருக்காங்க.. ஆனா நடக்கத்தான் கொஞ்சம் நாளாகும். நேத்தில இருந்து உனக்கு கான்ஷியஸ் வரலைன்னு கொஞ்சம் பயந்துட்டோம்.. ” அவள் மனதில் இருக்கும் கேள்விக்கு பதில் தந்தார் தெய்வா.

“ம்ம்.. வலி அதிகமா இருக்கு..”

“ஆமாம்மா அடி அதிகம் இல்ல. அப்படிதான் இருக்கும். உன்னை காணாம உன் பேரண்டஸ் தேடியிருப்பாங்க இல்ல. அவங்க நம்பர் சொல்ல முடியுமா? “

ஆர்வமாக அவள் சொல்லப் போகும் விஷயத்துக்காக அவளையே பார்த்தான்.

அதற்குள் அவனின் அலைபேசி அழைத்தது, அதை நிறுத்தியும் தொடர் அழைப்புகள் வரவே வேறு வழியில்லாமல் வெளியே வந்தான்.

பவதாரிணியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அப்பா, அம்மான்னு யாரும் இல்ல. நான் பொறந்ததும் இறந்திட்டாங்க. மாமா தான் வளர்த்தார். அவருக்கும் உடம்பு சரியில்லாம போய்டுச்சு. திடீர்னு பேரலைஸ்டு ஆகிட்டார். அதான் சிகிச்சைக்காக ஸ்ரீலங்கால இருக்கார்.”

அவள் சொன்னதும், தெய்வாவிற்கு அவள் மேல் பரிதாபம் வந்தது.

“ஓ.. வேற யாரும் ரிலேஷன்ஸ் இங்க இல்லையா மா”

“இல்லையே. நான் இங்க தனியா தான் ஹாஸ்டல்ல இருக்கேன்”

அதற்குள் அவளுக்கு மயக்கம் போல் வரவே, கண்களை இழுத்து மூடி மூடித் திறந்தாள்.

“அகரா.. சிஸ்டர் .. “ பதறி தெய்வா அழைக்கவே, வெளியில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் வேகமாக உள்ளே நுழைந்தான்.

அவனுக்கு பின்பாகவே செவிலி வந்தார்.

அவளை பரிசோதித்து, “ரொம்ப வீக்கா இருக்காங்க இல்ல. ஹெவி‌டோஸ் மருந்து, அதான் மயக்கமா இருக்கு போல. ரெஸ்ட் எடுத்தா சரியாயிரும். நீங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க கொஞ்ச நேரத்துக்கு” செவிலி சொன்னதும், அகரனுக்கு எப்படியாவது அவளிடம் எல்லா விவரங்களையும் வாங்கி விடலாமென்று இருந்த உற்சாகம் வடிந்தது.

இருவரும் வெளியில் வந்து அமர்ந்தனர்.

“அம்மா.. என்ன சொன்னா மா.. எதாவது”

“பாவம் பா .. அவளுக்கு யாருமே இல்லையாம். அப்பா, அம்மா இறந்திட்டாங்களாம். ஹாஸ்டல்ல இருந்திருக்கா போல.. கடவுள் ஏன் இவ்ளோ சோதிக்கறார்?”

“ஓ.. என்னம்மா ஒன்னும் புரிய மாட்டேங்குது. இவளை தேடி யாருமே எந்த கம்ப்ளையண்ட்டும் கொடுக்கல மா.‌ மாமா டிஐஜி செல்வகுமார்ட்ட விசாரிச்சு சொன்னார்மா. அப்பவே எனக்கு டவுட் வந்துச்சு. இப்ப நீங்க சொன்னதும் தான் புரியுது‌.. யாராவது இருந்திருந்தா தானே தேடியிருப்பாங்க“ அன்று அவளிடம் தான் எவ்வளவு கடுப்பாக பேசினோம் என்று நினைத்து தன்னையே ஒரு நிமிடம் திட்டிக் கொண்டான்.

மனம் கனத்து போனது.

மதியம் வரை இருவரும் அவளுக்காக அங்கு காத்திருக்க, அவளுக்கு மீண்டும் விழிப்பு வந்ததாக செவிலி சொல்ல, அவர்கள் மீண்டும் அவளை பார்க்க உள்ளே வந்தனர்.

“எப்படிம்மா இருக்க. திடீர்னு மயங்கிட்ட. அதான் நாங்க வெளிய காத்திட்டு இருந்தோம்..” தெய்வா பரிவாக சொல்ல,

“இப்ப பரவால்ல. ரொம்ப டயர்டா இருக்கு. வலி வேற ரொம்ப இருக்கு.. நீங்க ஏன் இவ்ளோ நேரமா?...”

“அது பரவால்ல மா. நீ படுத்துக்க. நல்லா ரெஸ்ட் எடும்மா.. சரியாகிரும்.” தெய்வா சொல்லி முடிக்கும் முன்,

ஏதோ ஞாபகம் வந்தவனாக,” உன் அக்கா தங்கைன்னு யாரும்” என வைபவ் சொன்ன விஷயத்தை வைத்து அவளிடம் கேட்டான்.

“அக்கா… அப்படி யாரும் இல்ல. நாங்க இருந்த பக்கத்து வீட்டு அண்ணா, அக்கா தான் இருக்காங்க. இப்பக்கூட இங்க வக்கேஷனுக்கு கோயம்புத்தூர் வந்திருந்தாங்க”

“ஓ நீ கோயம்புத்தூரா.. அப்ப இங்க எப்படி வந்த?” தெய்வா கேட்க, அகரனுக்கு அதை தெரிந்துக் கொள்ள ஆர்வம்.

“இங்க…. இங்க வேலைத் தேடி தான் வந்தேன். என் ப்ரெண்ட் தான் ஒரு கம்பெனியை சொன்னா. அங்க வேலைக் கேட்டு கிடைக்கலன்னு தான் அடுத்த கம்பெனிக்கு இன்டர்வ்யூ அட்டெண்ட் பண்ண பேசிட்டே வந்தேன், இவர் காரை பாக்கல. மோதிட்டேன். “

அகரனுக்கு சட்டென ஏதோ ஒரு பிரியம் அவள் மேல் தோன்றியது. ‘தான் அடிபட்டோம் என்று சொல்கிறாள். மற்றவர்கள் யாராவது இருந்தால் இந்நேரம் நாம் தான் அவள் மேல் வண்டியை ஏற்றி விட்டோம் என்று சொல்வார்கள்’.


“அச்சோ, இங்க தெரியாத ஊர்ல எப்படி சமாளிப்ப. இந்த நிலைமைல யார் உதவியும் இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டம் இல்ல. இப்ப டிஸ்சார்ஜ் ஆனா நீ எங்க போவ” தெய்வா உண்மையான அக்கறையில் கேட்டார்.

“இல்ல பரவால்ல. என்னை ஹாஸ்டல்ல விட்டுடுங்க நான் சமாளிச்சுப்பேன்”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“இல்ல அது சரியா வராது. நீ எங்களோட வா. கால் சரியானதும் நீ ஹாஸ்டல் போய்க்க. டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லியிருக்கார்..”

“இல்ல… பரவால்ல. உங்களுக்கு ஏற்கனவே ரொம்ப சிரமம். இப்ப இதெல்லாம் வேண்டாம்.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. பாவம் யாருமில்லாம எங்க போவ.. நாங்க சொல்றபடி செய் நீ… ”
தெய்வாவின் கண்டிப்பான பேச்சிற்கு முன் அவளுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.


வேறு வழியில்லாமல் அவள் தலையாட்டி வைத்தாள்.

“அகரா நீ ஆஃபிஸ் போய்ட்டு ஈவ்னிங் வேணா வா.. நான் பார்த்துக்கறேன்.”

“சரிம்மா .. “ என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு கிளம்பினான்.

அவளால் அந்த பார்வையை தாங்க முடியவில்லை‌.. கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

மனம் அன்று கோவையில் அகரனை சந்தித்திலேயே நின்றது.

‘இத்தனை இறுக்கமான ஒரு ஆளா.. பார்க்கும் போதே பயமாகத்தான் இருக்கு.. ஆனால் இரும்புக்குள்ளும் ஒரு சின்ன இதயம் இருக்கும் போல… அன்னிக்கு ஏகத்துக்கும் கிண்டல் செய்தும் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்’ - அகரனை பற்றி யோசித்துக் கொண்டே தெய்வாவை அவள் ஏறிட்டு பார்த்தாள்.

அழகான சிறு பூக்கள் போட்ட ரோஜா வண்ண லினன் புடவையில், கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு சோஃபாவில் சாய்ந்தமர்ந்து இருந்தார் தெய்வா.

‘அழகாக இருக்கிறார். வயதும் அதிகமாக இருக்காது. ஆனால் இத்த‌‌னை பிரியமான அம்மாவுக்கு ஏன் சிடுமூஞ்சி போல் ஒரு பையன். ஒரு வேளை அவரின் அப்பாவைப் போல் இருப்பாரோ? பணத்துக்கும் குறைவில்லை என்று தோன்றுகிறது’ அவள் சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.

தெய்வ நாயகி நிமிர்ந்து அவளைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு மீண்டும் தன் புத்தகத்தில் ஆழ்ந்தார்.

பிறந்ததில் இருந்து அம்மாவைப் பார்த்தேயிராத, அவளுக்கு ஏதோ தெய்வ நாயகி ஒரு அம்மாவைப் போல் தெரிந்தார்..

‘வேண்டாம்.. இவருக்கும் எனக்கும் என்ன பிணைப்பு இருக்கப் போகிறது.. கால் சரியானதும் நாம் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு போய் விடப்போகிறோம். எதற்கு இந்த பாசமெல்லாம்’

தன்னை சுற்றி ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டாள். இருந்தும் தாயைத் தேடும் கன்று போல் அவ்வப்போது அவளை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

தெய்வநாயகிக்கும் அவள் பார்ப்பது தெரிந்தது.

‘பாவம் சின்னப்பெண். நாம்‌ யாரென்றுத் தெரியாமல், எப்படி வீட்டுக்கு வருவது என்று பயப்படுகிறாள் போல, பெற்றோர் இல்லாத பெண், அவள் இருக்கும் வரை நன்றாகப் பார்த்து அனுப்ப வேண்டும்’ தாயின் உள்ளம் ஒரு மகளைப் போல் அவளை யோசித்தது.

அலுவலகத்திற்கு வந்ததும் ஒரு பக்கம் அகரனுக்கு இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்ததை நினைத்து நிம்மதியானது போல் தெரிந்தாலும், அவளை ஒரே வீட்டில் வைத்துக் கொண்டு தனக்கு வந்த கனவை நினைத்து பார்த்து எப்படி அங்கு இருக்கப் போகிறோம்? என்று குழப்பமும் ஒரு பக்கம் அவனை அழுத்தியது.

எந்த சூழலிலும் தனித்து தைரியமாக எதிர்க்கொள்பவன், முதல் முறையாக ஒரு சிறு பெண்ணிடம் வீழ்ந்து விடுவோமோ என்று பயப்பட்டான்.

ஆனால் இதைப்பற்றி யாரிடம் பகிர்ந்துக் கொள்வது என்றும் புரியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று அவன் வேலைகளில் மூழ்கிப் போனவன், இரவு கிளம்பும் முன் தெய்வா வீட்டிற்கு வந்துவிட்டதையும், மருத்துவமனையில் பவதாரிணிக்கு ஒன்றும் பிரச்சினையில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

தெய்வ நாயகி தாத்தாவிடம் பவதாரிணியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

பாண்டியன், “நீ எடுத்தது சரியான முடிவு தான்மா. அந்த பொண்ணு பாக்கவே பாவமா இருந்துச்சு. சின்ன வயசில பெத்தவங்களை இழந்துட்டு நிக்கத் தடுமாறி வேலையைத் தேடி தன்னைப் பாத்துக்கனும்னு நினைக்கிறா பாரு.. அவளுக்கு சரியாகற வரைக்கும் இங்கேயே இருந்துட்டு போகட்டும்”

“ஆமாம்மா. நீ சரியாத்தான் யோசிப்ப. பார்த்துக்க.” தாத்தா அவர் அறைக்குச் சென்றார்.

“ஏற்கனவே இந்த வீட்டுக்கு சம்பந்தமில்லாதவங்க நிறைய பேர் இங்க பெர்மணெண்டா இடம் பிடிச்சிட்டு இருக்காங்க. இதுல யாருமில்லாதவளை, அதுவும் யாருன்னே தெரியாத ஒருத்தியைக் கொண்டு வந்து இங்க வச்சிட்டு எல்லார் உயிரையும் எடுக்கப் போறாங்க” ஆண்டாள் கடுகடுவென பேசினாள்.

“மா. இவங்க பண்ண ஆக்ஸிடெண்ட்க்கு அந்த பொண்ணு வாயை அடைக்க இப்படியெல்லாம் நடிக்கிறாங்க. ஏற்கனவே அவ ட்ரீட்மெண்ட்க்கு இங்க இருந்து தான் பணம் போயிருக்கும். இப்ப அவளையும் கூட்டிட்டு வந்து வச்சிட்டு, எல்லாத்தையும் தான, தர்மம் பண்ணட்டும். “ - மது அவள் பங்குக்கு இருவரையும் பேசினாள்.

“ஏய்.. என்ன வாய்.. அம்மாவுக்கும், பொண்ணுக்கும். உள்ள போங்க. எங்க அப்பா வீட்டு சொத்தை எடுத்து தான தர்மம் பண்றோம். உங்களுக்கு எங்க எரியுது?” பாண்டியன் அதட்டினார்.

அகரன் தன் கையை முறுக்கி அவன் கழுத்திற்கு கொண்டு போய் தடவிக் கொண்டே மதுவை பார்த்தான். அவள் அவனை பார்த்து, எச்சில் விழுங்கி அப்படியே நழுவினாள்.

தெய்வ நாயகி அகரனை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தார்.

“அகரா.. அந்த பொண்ணு வந்ததும் அவுட் ஹவுஸ்ல தங்க வச்சிடலாம். நம்ம கௌரி அவளை பாத்துப்பா. இங்க இருந்தா இவங்க வாய்ல அகப்பட்டு அந்த பொண்ணு பாடுபடும்.”

“ஆமாம்மா, அதான் நானும் சொல்ல நினைச்சேன். நான் அவளோட ட்ரீட்மெண்ட்க்கு நம்ம‌ பணத்தில் இருந்து தான் கொடுத்தேன். கம்பெனில இருந்து எதுவும் எடுக்கல”.

“தெரியும்பா. அண்ணி வழக்கம்போல நம்மளை பேசறாங்க. அதை மனசில வச்சுக்காத”

“அம்மா. இப்ப நாமளும் அவங்களை நம்பி இல்ல. இன்னும் நம்மளை இவ்வளோ பேசறாங்க. நீங்க ஏன் அமைதியா போகனும்மா.. “

“எல்லாமே தாத்தாக்காக, மாமாக்காக தான் பா. நாம எதிர்த்துக் கேள்வி கேட்டா, மாமாக்கு நிம்மதியில்லாம போய்டும்”

“இதுக்கு எப்போ விடிவுகாலம்னு தெரியல மா”.

“எல்லாருக்கும் ஒரு காலம் வரும் பா. அதுவரைக்கும் பொறுமை தான் அவசியம்”

“என்னமோ போங்க. நீங்க மொதல்ல சாப்பிடுங்க. ரெண்டு நாளா உங்களை அலைய வச்சதில ரொம்ப டயர்டா இருக்கீங்க”

“நீயும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பா” என்று அவனுக்கு பரிமாறி விட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டார் தெய்வ நாயகி.

இரவு அறைக்கு வந்து உடை மாற்றி ஜன்னல் அருகே நின்றான் அகரன். கீழே தோட்டத்தில் நிலவொளியில் மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கின. சில பூக்கள் கீழே விழுந்து தரை முழுக்க பாய் விரித்தது போல் இருந்தது.

அதன் மேல் மஞ்சள் நிற உடையில் பூக்களோடு பூக்களாக பவதாரிணி படுத்து இருப்பதை போல் அவனுக்கு தோன்றியது. உடனே தலையை சிலுப்பி, திரையை இழுத்து விட்டு வந்து படுக்கையில் சாய்ந்தான்.
 
Status
Not open for further replies.
Top